தீ எனும் தொல்படிமம் - கடலூர் சீனு

(1)

சிறு வயதில் நான் வாசித்த இப்போதும் அச்சில் கிடைக்கும் முக்கியமான நூல்களில் ஒன்று ஸெஹால் எழுதிய மனிதன் எங்கணம் பேராற்றல் மிக்கவன் ஆனான் எனும் நூல். மனிதன் மரம் விட்டு இறங்கி இரண்டு கால்களால் நடை பயின்ற நாள் தொட்டு, அவன் சந்திரனில் இறங்கி  காலடி பதித்த நாள் வரை அவனது வளர்ச்சியை கட்டம் கட்டமாக விவரிக்கும் மானுடவியல் நூல் அது. அவனது வளர்ச்சிக் கட்டங்களில் முக்கியமானது நெருப்பை அவன் பயன்படுத்த கற்றுக்கொண்ட காலம். உலகின் அனைத்து உயிர்களும் இயற்கை அதற்கு இட்ட வரையறைக்குள் வாழ்ந்து முடிய, மனிதன் மட்டுமே இயற்கையை தனக்கு பணி செய்ய மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனாக அந்த கட்டம் முதல் உருமாறுகிறான் என்று அந்த நூல் சொன்னது.

சமீபத்தில் லி பெர்க்கர் எனும் மானுடவியல் ஆய்வாளர் ஆப்ரிக்கா ஜோகன்ஸ்பர்க் இல் ரெய்சிங் ஸ்டார் குகையில் கண்டு பிடித்த ஹோமோ நலேடி எனும் ஹோமோ இனம் குறித்து வாசிக்க கிடைத்தது. ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நம்மை விட பல்லாயிரம் வருடம் முன்னரே முறையாக நீத்தார் வழிபாடு செய்த அந்த இனத்தின் மூளை சற்றே பெரிய தக்காளியின் அளவு மட்டுமே கொண்டது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வு மற்றும் மேலுலக வாழ்வு சார்ந்த அறிதல் உண்டு என்பவை அளித்த ஆச்சர்யத்தை தாண்டிய வியப்பை அளித்தது, அவர்கள் நெருப்பின் பயன்பாட்டை அறிந்தவர்கள் என்பது. எனில் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய நாம் நெருப்பை வசப்படுத்தக் 'கண்டுபிடித்து' இயற்கையை வென்ற ஆசாமிகள் இல்லை. நெருப்புதான் ஹோமோ சேபியன்ஸ்ன் ஆழத்திலிருந்து பயன்படுத்தச் சொல்லி 'தன்னை'  வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது என்பதே அதன் பொருள். 

உண்மையில் இன்றைய ஹோமோ சேபியன் ஆகிய நமது தனி மனித ஆழம் என்பதும் மானுட சாரம் என்பதும் 'நம்முடன்'  மட்டுமே துவங்கி முடிந்து போகும் ஒன்றல்ல, மானுட ஆழம் என்பதின் வேர் நம்மையும் தாண்டி, நமக்கும் முந்தய பல்லாயிரம் வருடத்துக்கு முன்பான ஹோமோ நலேடி போன்ற பல்வேறு உயிர்குலத்துடன் பிணைந்தது. எனில் ஹோமோ நலேடிகள் கொண்ட ஆழம் அதன் வேர் எதனுடன் பிணைந்தது? 

ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் நமது கடந்த 5000 வருட கலாச்சாரம் வழியே தனி மனித ஆழம் மானுட சாரம் நோக்கிய பயணத்துக்கு இரண்டு பாதைகளை செப்பனிட்டு வைத்திருக்கிறோம். ஒன்று அறிவின் பாதை. மற்றது உணர்வின் பாதை. உணர்வின் பாதையில் மிக உன்னதமானது இசை. ஒரு மிக சிறந்த, மிக சிறிய மாத்திரையில் அமைந்த ஒரு வயலின் தீற்றல் நம்மை மெய் மறக்க செய்து, ஆழத்துடன் சாராம்சத்துன் 'தன்மையம்' ஆகி விடும் நிலையை நமக்கு அளிக்க வல்லது. அறிவின் பாதையில் அந்த அடுக்கில் உயரத்தில் இருப்பது தத்துவம். உணர்வு என்பதின் நேர் எதிர் துருவம். ஆழம் நோக்கிய ஒவ்வொன்றையும் புறவயமாக, பொதுவாக, பரிசோதிக்க தக்க வகையில், நிரூபணமாக, பொய்பிக்க தக்க வகையில் ஆன்டி தீஸிஸ்கான இடத்தை விட்டு, துல்லிய வறையரைகளாக முன்வைப்பது அது.

மூன்றாவது பாதை ஒன்றும் உண்டு. கலைகள். குறிப்பாக இலக்கியம். இலக்கியம் உணர்வு அறிவு இரண்டையும், வில்லாகவும் அதன் நாண் என்றும் கொண்டது. தேர்ந்த படைப்பாளி மொழியை அம்பாக்கி குறி வைத்து எய்தான் எனில் அது சென்று தைக்கும் ஆழம், மேற்சொன்ன இரண்டாலும் தொட இயலாத தனித்துவமான ஒன்றாக இருக்கும். இலக்கியக் கலையின் இடம் அதுதான்.

பேரிலக்கியங்கள் அறிவு உணர்வு கச்சிதமாக முயங்கிய பிரத்யேக மொழி வெளி கொண்டு, மொழிக்கும் அப்பால் இலங்கும் சாராம்சமான ஒன்றை தொட்டுவிடும் வல்லமை கொண்டவை. இதில் இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்தாலும் கவிதைகள் தனித்ததொரு பிரத்யேக கலை வடிவம். அதன் அறிவுத் தளம் அர்த்தங்களால் ஆன ஒன்று அல்ல. அர்த்த மயக்கங்களால் ஆன ஒன்று, நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எனும் கவிதை வரி சிறந்த உதாரணம். அதன் உணர்வு தளம் பெரிதும் தூய இசைக்கு அருகே நிற்பது. மொழியோ ஒரே சமயத்தில் குழந்தையின் மழலை, மந்திரத்தின் தீவிரம் இரண்டும் முயங்கியது. இது அனைத்தும் மானுட உணர்வு தளம், கற்பனை சாத்தியம், ஆழம் இவற்ருடன் வினை புரியும் படிமங்கள் உடன் பிசிறின்றி முயங்கி அமைவது.

புற விரிவில் இருந்து அக சாராம்ச ஆழம் நோக்கி இயங்கும் இலக்கியக் கலைக்குள், பருண்மையில் இருந்து நுண்மை நோக்கி இயங்கும் கவிதை வகைமைக்குள் அதன் உடலின் உயிர்க்கூறான படிமங்கள் இரண்டு நிலைகளில் காணக் கிடைக்கிறது. ஒன்று நவீன படிமம், மற்றது தொல் படிமம். ரயில் செல்போன் என நவீன படிமங்கள் பற்பல, புறத்தில் இருந்து அகத்தில் இறங்கி அது புரியும் வினைகள் கொண்ட கவிதைகள் அடையும் ஆழம் ஒரு வகை எனில், மானுடனுக்கும் முன்பாக தோன்றி, மானுடம் தோன்றும்போதே அதன் உள்ளுரையாக அமைந்து போனவை தொல் படிமங்கள். உதாரணம் பஞ்ச பூத வடிவங்கள். ஆத்மீக இலக்கியங்களான வேதங்கள் முதல்  இன்றைய நவீன கவிதை வரை, இந்த தொல் படிமங்கள் மிகச் சரியாக வந்து விழுந்த கவிதைகள் கொள்ளும் ஆழம் அபாரமானது. உதாரணம் யுவன் சந்திரசேகர் எழுதிய கீழ்கண்ட இந்தக் கவிதை.

ஜ்வாலையின் நாட்டியம்

ஜ்வாலையின் நாட்டியம் அழைக்கிறது என்னை 


எனக்கோ

பேழைக்குள் நெளியும் பாம்பும் மரணத்தின் குறியீடு. 


நெருப்பின் செயல் திறனும் பௌதீகப் பயன்பாடும் போதுமென்று விலகும்போதும் 


தானாய்ப் பிறந்து சுடர்கிறது 

உள்ளே ஒரு கணப்பு.

கவிதை சொல்லியின் பார்வைக் கோணத்தில் வெளிப்படும் இந்த கவிதையில் முதலில் ஒரு வசீகர அழைப்பு, அடுத்து உயிர் பயம், அடுத்து தீர்மானம் என்ற, ஸ்தூலத்தில் இருந்து சூக்ஷுமத்துக்கு எனும் ஆர்க் வழியே கவிதை சொல்லி அடையும் இறுதிப் புள்ளியின் உணர்வு நிலை வாசகனுக்கு கடத்தப்படுகிறது.

குரு நித்ய சைதன்ய யதி ரிக் வேதம் முதல் துவங்கித் தொடரும் நெருப்பு எனும் தொல் படிமத்தை மானுட அக ஆழத்தில் இருந்து எழுந்து போத மனம் வழியே வெளியே விரியும் ஒன்றாக கட்டுரை ஒன்றினில் குறிப்பிடுகிறார். புறத்திலிருந்து விரிந்து இத்தகு தொல் படிமங்கள் கலைகள் வழியே மீண்டும் அகத்துக்கு திரும்பும் ஒரு முழுமை வட்டம் குறித்து வேறொரு கட்டுரையில் பேசுகிறார். 

அதே போல இயற்கை ஆற்றல்கள், பாம்புகள் போன்ற நச்சு உயிர்கள் மீதான மனித பயமே அவனது வணங்கும் கலாச்சாரத்தின் தோற்றுவாய் எனும் மேலை சிந்தனையின்  பார்வையையும் யதி மறுக்கிறார். உதாணமாக பாம்பு குறித்த பயம் என்பதை மனிதன் மரம் விட்டு இறங்கி நிலம் தொட்ட காலம் முதலே அவனுள் பதிந்த ஒன்றுதான் என்றாலும், அவன் பாம்பை வணங்கிய காரணம் அது நகரும் போது நதி போலும், எழுந்து பத்தி விரிக்கும் போது, நின்றெரியும் சுடர் போலும் தோற்றம் தருவது. நீர் நெருப்பு எனும் இந்த தொல் படிமங்கள் கொண்ட வேறொரு தோற்றம் என்றே பாம்புகள் வணங்கப்பெற்றன என்கிறார் யதி.

மேற்கண்ட கவிதையில் நெருப்பின் நடனம் என்பது வசீகரம் கொண்டு அழைக்கிறது. அது பாம்பு போல பீதி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பின் செயல் திறனும் பௌதீக பயன்பாடும் போதும் என்று தீர்மானம் செய்து கவி சொல்லி விலகினாலும், அவரது முயற்சி அனுமதி இன்றியே புற வயமான அந்த ஜுவாலையின் நடனம் அவரது அகத்துக்குள் சுடர்கிறது.

இதில் ஜுவாலை எனும் பதம் மிக்க வசீகரம் கொண்டது, வசீகரிக்கும் நீல நிற நெருப்பே பெரும்பாலும் ஜுவாலை எனும் சொல்லுடன் இணைந்த படிமமாக இருக்கிறது. இந்த வசீகரம், போத மனதின் தீர்மானம், அபோத மனதின் பயம் இவற்றைக் கடந்து, ஆழத்தில் சென்று சுடர் பொருத்துகிறது. 'சுயம்ப்ரகாசம்' எனும் நிலை மேல் எழுந்த அழகிய அபூர்வ கவிதைகளில் ஒன்று இக் கவிதை.

(2)

அக்னி எனும் ஸ்தூலத்திலிருந்து 'அக்னித்துவம்' எனும் சூக்ஷுமத்துக்கு சென்றதே பண்டைய வேத கால ரிஷிகளின் முதற் பெரும் அறிதல் என்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.

//மண்ணை மீறி விண்ணில் உளமெழுந்த அறவோர், திசையழிந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் ஒளியே மண்ணில் தீ என்று உறைகிறது என்று உணர்ந்தனர். தீ உறையாத பரு என மண்ணில் எதுவும் இல்லை. பச்சைப் பசுங் குருத்திலும், மென் மலரிதழிலும், குளிர்ச்சுனை நீரிலும், தாய் முலைப்பாலிலும் தீ உறைகிறது.//

கொற்றவை நாவலில் ஜெயமோகன் எழுதிய மேற்கண்ட வரிகள் தீ எனும் தொல்படிமம் குறித்த உன்னதப் பார்வை என்று சொல்லலாம். மனிதனில் கண்ணில் ஒளியாக, மூச்சில் பிரணனாக, வயிற்றில் பசியாக, பீஜத்தில் காமமாக எரிவதும் நெருப்பே. இப்படி சர்வமும் என வியாபித்திருக்கும் அந்த பெரு நெருப்புக்கு ரிஷிகள் இட்ட பெயர் வைஸ்வாநரன் என்கிறார் குரு நித்யா.

அது பெரு நெருப்பு எனில் பெரும் பசியும் கூடத்தான். எதையும் அது உண்ணும். உண்ணுதலே அதன் பணியும் இருப்பும். 

தீண்டும் அனைத்தையும் தாவியேறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடி கோடி இதழ் விரித்து எங்கும் விரியும் முடிவற்ற நாக்கு அது என்கிறது கொற்றவை நாவலின் வரிகள். அந்தப் பெரும்பசிக்கு உலகே அன்னம் எனில் மானுடனும் அந்தப் பசிக்குப் பிடி அன்னமே. அந்தப் நெருப்பு எனும் பெரும்பசிக்கும் அதற்கு ஆகுதியும் அன்னமும் என்றாகும் மானுடம் குறித்த கவிதை என்றே யுவன் சந்திர சேகரின் கீழ்கண்ட கவிதையை சொல்வேன்.

பாடுபொருள்

அடுத்த முறை வாய்ப்புக் கிடைக்கும்போது நெருப்பைப் பாடாதே உஷ்ணத்தைப் பாடு.

பார்க்க முடிந்த நெருப்பின் பார்க்கவியலாத வெம்மையில்தான் கருகக் கிடைக்கிறது எப்போதும், இல்லையா. 

பகலும் இரவும் குழம்பி நொதித்த உன் அன்றாடத்தின் தகன மேடையில் தடையற்று நீ பொசுங்கவேண்டி நா உயர்த்தி எழுகிறதே ஜ்வாலை, 

ஆதிக் குகைகளில் பதனமுற்று கைமாறிக் கைமாறி கைபடாமல் கைமாறி உன் கையறுநிலைமேல் வந்து சேரும் வெம் புலம் அது. 

சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது 

இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில்.

நெருப்பிலிருந்து உஷ்ணத்துக்கு, பார்க்க முடிந்த நெருப்பில் இருந்து பார்க்க இயலா அதன் வெம்மைக்கு எனும் வரிகளில், அக்னியில் இருந்து அக்னித்துவதுக்கு நகர்ந்த அந்த ரிஷிகளின் தொடர்ச்சி இங்கே நிகழ்ந்து விடுகிறது.

பார்க்க முடிந்த நெருப்பு அல்ல, பார்க்க இயலா அதன் வெம்மைதான் பஸ்பமாக்குகிறது அனைத்தையும். பகலும் இரவும் குழம்பிய அன்றாடத்தில் நொதித்தவனின் தகன மேடை மேல் வந்து அமர்ந்தது ஜுவாலை. மானுடனுக்கும் முன்னர் தோன்றி, கை மாறி கை மாறி கை படாமலே இன்று வரை வந்திருக்கும் அந்த ஜுவாலை.

சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது 

இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில்.   சாம்பல் பூத்த எலும்பு, கனலும் உஷ்ணப் பூ, திறவாத நாள் ஒன்றின் முடிவற்ற தாழ்வாரம் எனும் விரிகளில் நிகழும் ஆர்க் வழியே இக் கவிதை கிளர்த்தும் கற்பனையும் சென்று தொடும் ஆழமும் தனித்துவம் கொண்டது. 

அன்றைய வேத கால ஆத்மீக இலக்கியங்கள்  தொட்டு, இன்றைய இந்த நவீன கவிதைகள் வரை அதில் தொழிற்படும் தீ எனும் தொல் படிமம் இயங்கும் விதம், பல்லாயிரம் ஆண்டுகளாக மொழியில் இலங்கும்  அதன் அறுபடா தொடர்ச்சி குறித்து அறிய மிகச்சிறந்த கவிதைகள் என யுவனின் மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் சொல்வேன்.

[எம் . யுவன் கவிதை நூல்களின் தொகுப்பாக காலச்சுவடு வெளியிட்ட தீராப் பகல் தொகுப்பில் இருந்து மேற்கண்ட இரு கவிதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.]

***

தீராப் பகல் கவிதை தொகுப்பு வாங்க
***
Share:

தன்னை நிறுவுதலின் வழி - பாபு பிரித்விராஜ்

வகுப்பில் அழிக்காமல் விட்டுப்போன கரும்பலகையில் கணக்குப்பாடத்தின் முன் ஒரு காட்சிப்பொருளாய் எப்போதும் நின்றிருக்கிறேன்.

நேற்றும் புரியவில்லை,

இன்றும் புரியவில்லை.

அப்போதும் இரு இறக்கை எனக்கிருந்தது

கரும்பலகை முழுதும் வெள்ளையாகும் வரை காத்திருக்கும் காகம் போல் நினைத்துக்கொள்வேன்.

அவரவர்க்கான உலகமிது.

நானென்னை நிறுவிக்கொள்வதே முக்கியம்.

காலத்தை நினைத்தவுடன் அழிக்க இயல்வதில்லை அது நம்மை எல்லாவற்றிலும் காட்சிப் பொருளாய் கொண்டு வைக்கிறது.

ஒரு பெரிய ராட்டினத்தை கீழிருந்து அனைவரும் பார்ப்பது போல.

அதில் நாம் நம்மை நிறுவிக்கொள்ள குதூகலிக்கிறோம்,

நமது முறை வரும்போது கையசைக்கிறோம்.


யுவன் சந்திரசேகரின் இக்கவிதை என்னுடைய உலகத்தை சுழல வைக்கிறது. எல்லாவற்றையும் அவதானித்து அதற்கு ஒரு வாழ்வை தன்னிலிருந்து அளிக்கிறது இக்கவிதை 

சுவர்ப்பல்லி கீழ் விழுந்தால் நீள அகலத்திலும் மட்டுமேயான அவரது வீட்டினில் உள்ள மலை மிக ஆபத்தானதாகவும் பெரும் பள்ளத்தாக்காகவும் மாறிவிடும். நல்ல மன நிலையில் வீட்டிலுள்ளோர் இருக்கும் நேரமனைத்தும் வியந்தபடியே இருப்பது கடிகாரத்தின் சிறப்பே. கரப்பான் பூச்சியின் காமம் கவியின் நாணத்தை காட்டிச் செல்கிறது. தன்னுலகை இம்மாதிரி தொடர்ச்சிகளின் வழியே கண்டு கொள்வதே யுவன் சந்திரசேகரின் இக்கவிதை.

வட்டமாக கரையிருப்பினும் 

இளைப்பாற மட்டுமே இயலும்

நடுப்பாறையில்.

இக்கரையும் அக்கரையுமே தொடங்கி முடிக்கிறது நதியை.பின்னொரு முறை இந்தக்கவிதை கூறுவதைப்போல நுழைந்து மீண்டு அருவியென நிறுவிக்கொள்ளவும் செய்கிறது

நதி.


தீராப்பகல் தொகுப்பிலுள்ள யுவன் சந்திரசேகர் கவிதை,

  என் உலகம்

நீள அகலங்களில்

மட்டும்

உறைந்த மலையொன்று

தொங்குகிறது என்

வீட்டுச் சுவரில் திரியும்

பல்லியின் அருகே.

நேரம்  தப்பி வீடு திரும்பும்

என்னை

வியந்து வரவேற்கும்

சுவர்க் கடிகாரம்.

இணையைத் துரத்திக்

களிக்கிறது கரப்பான்பூச்சி

நான் இருப்பதன் 

கூச்சம் அற்று.

அவரவர் உலகத்தின் 

காட்சிப் பொருளாய்

நுழைந்து மீண்டு

என்னுடைய உலகத்தை

நிறுவவும்

நேர்கிறது எனக்கு.

***

இன்னொரு கவிதை,

சங்கிலி

அது ஒரு பறவையின் கதை.

இலக்கின்றிப் பறத்தலின்

கதையாக இருந்தது. அதேவேளை,

புலப்படாப் பரப்பைத்

திறந்து வைத்த காற்றின்

கதையாகவும் இருந்தது. ஆமாம்,

அப்படித்தான் இருந்தது,

சீறிவந்த அம்பு தைக்கும் வரை.

அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்

பாய்ந்து

வேடனின் கதையானது.

அவன் பசியின் கதையானது.

குருதி வழிய உயிர் நீங்கியபோது

முடிந்துபோன வாழ்வின் கதையானது.

அப்புறம் ஒரு முழு வாழ்வு

கதையாக மட்டும் மீந்து போனது.


பின்னர்

இதைச் சொல்லும் என் கதையானது

ஏந்தி வரும் தாளின்

கதை ஆனது.

இப்போது

வாசிக்கும் உன் கதைபோலவே

தோன்றவில்லை?!

ஓலைச்சுவடி எனும் மின்னிதழில் யுவன் சந்திரசேகரின் இக்கவிதையை வாசித்திருந்தேன். மிக மெல்லிய தங்கசங்கிலி அணிந்து கொண்டது போன்று எடையற்றதாய் இக்கவிதையிருந்தது. நேரடியாக சொல்லிச் சென்றிடினும் சங்கிலியின் பின்னல் போல் முன்னும் பின்னும் பயணிக்கிறது. காரண காரிய உலகை யதார்த்தமாக முன் வைக்கிறது.  தத்துவ தரிசனங்களையும் அது குறித்த யோசனைகளையும் இந்த சங்கிலி கவிதை உடைத்துச் செல்கிறது. இந்த வாழ்வின் தொடர்ச்சிக்கோ, முடிவுக்கோ இதன் அர்த்தம், அர்த்தமற்ற நிகழ்வுகளுக்கோ விடைதான் நாமா? அல்லது வினா நாமா? பழைய விவாதமேயாயினும் நவீனக் கவிதையின் அனுபவம் நமக்கு புதிதாக ஒன்றை உணர்த்தி விடாதா எனும் ஏக்கமே மீண்டுமீண்டும் இதைப் படிக்கத்தூண்டியது.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

தீராப் பகல் கவிதை தொகுப்பு வாங்க

***

Share:

முதல் குழந்தையின் சொல் - அஸ்லான்

பங்களிப்பு


இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.

எம்.யுவனின் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்துகிறது. எப்போது வாசித்தாலும் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்தி விடத்தான் செய்கிறது. கவிதையின் பணியே அதுதானே. காலத்தை இல்லாமலாக்கும் மாயமாக்கும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கவிதையும் அதைத்தான் செய்கிறது. இந்தக் கவிதை நேரடியாகவே அதைச் சொல்லிவிடுகிறது. 

எம்.யுவனின் இன்னொரு கவிதை விலாசம். ஒரு நாள் குழந்தைகளுடன் அமர்ந்து வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். முதலாமவர் காதில் ஒரு வார்த்தை சொல்ல அடுத்தவர் அதே வார்த்தையை அடுத்துள்ளவர் காதில் சொல்ல வேண்டும். இப்படியே ஒவ்வொருவராக அந்தச் சொல்லை அல்லது வாக்கியத்தை பரிமாறி கடைசி நபரிடம் வரும்போது அவர் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். முதல் நபர் சொன்னதிலிருந்து எவ்வளவு வித்தியாசத்துடன் அது அமைகிறது என்பதே அந்த வேடிக்கை விளையாட்டு. எம்.யுவனின் இந்த கவிதையை படியுங்களேன்.

விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.

இதில் கடைசி குழந்தை எப்படி சொல்கிறது பார்த்தீர்களா. ஒவ்வொரு தடவை இந்தக் கவிதையைப் படிக்கும்போதும் எனக்கு குழந்தைகள் கைமாற்றி விளையாடும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அழகான கவிதை. 

***
***
Share:

எம்.யுவன் கவிதைகள் - மதார்

யுவன் சந்திரசேகர் முதன்முதலில் எனக்கு அறிமுகமாகியது 'ஒளிவிலகல்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாகத்தான். முதன்முதலில் நான் வாசித்த அவரது கவிதைத் தொகுப்பு முதல் 74 கவிதைகள். கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்கிற அவரது முன்னுரை வரியை முதலில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நவீன கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த பிறகு அந்த வரி விளங்க ஆரம்பித்தது. தமிழ் நவீன கவிதையில் தேவதச்சன், அபி, யுவன் சந்திரசேகர், சுகுமாரன் ஆகியவர்கள் கவிதைகளின் வடிவம், கூறுமுறை ஆகியவற்றில் மிகவும் நுட்பமானவர்கள். சொல்லி வைத்தாற்போலவே அவர்கள் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் மற்ற கவிஞர்களுடன் ஒப்பிடுகையில் குறைவானவை, ஆனால் தரம் மிக்கவை. நான் எழுதிய பழைய கவிதை ஒன்றைப் போலவே புதிய கவிதையும் எழுதப்பட்டுள்ளது எனில் அதை ஏன் வெளியிட வேண்டும் ஆகவே புதிய ஒன்றுக்காக காத்திருப்பேன் என்பதால் எனது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாகத் தெரிகின்றன என்ற தொணியில் கவிஞர் சுகுமாரனின் முன்னுரை வரி ஒன்று உண்டு. வெளிப்பட்டே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும்போதே என் கவிதை எழுதப்படுகிறது என்று நேர்ப்பேச்சில் கவிஞர் அபி ஒருமுறை கூறியுள்ளார். அதே போல கவிஞர் தேவதச்சனும் என் கவிதைகள் என்பவை என் டயரி குறிப்புகளே என குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் யுவன் குறிப்பிட்ட  

கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்ற வரியை பொருத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உரைநடை எழுத்திலும் யுவனின் பங்களிப்பு அதிகம். யுவனின் முதல் தொகுப்பான முதல் 74 கவிதைகள் வெளியான போது அவர் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளில் யுவன் உரைநடையை நோக்கி நடந்து செல்லும் தடத்தைக் காண முடிகிறது. கவிதை, உரைநடை இரண்டையும் ஒரு கவிஞன் ஒருசேர எழுதிச் செல்வது சவாலானது. கவிதையில் வார்த்தை வார்த்தையாகச் சிந்தித்தால் உரைநடையில் வாக்கியம் வாக்கியமாக சிந்திக்க வேண்டி வரும். தேவதச்சனுக்கும் அபிக்கும் கவிதையே வெளிப்பாட்டு மொழி. யுவனுக்கும் சுகுமாரனுக்கும் கவிதை, உரைநடை இரண்டும். அது ஒவ்வொரு படைப்பாளிகளையும் பொருத்தது. அந்த வகையில் எம்.யுவன் இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பைச் செய்தவர் ஆகிறார். 

பங்களிப்பு

இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்

சென்ற முறை சிப்பி.

அதற்கு முன்னால் சோழி

பாலிதீன் பைகளில்

செதில் கலந்த மணலும்,

கரைக்கோயில் குங்குமமும்

கொண்டு வந்ததுண்டு.

ஒரு முறைகூட

கடலின் பரிதவிப்பை

பரிவை ஆறுதலை

கொண்டு வர முடிந்ததில்லை.

சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு

பாதியாகிச்

செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே

தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தொலைந்ததின் ரூபம்

நிறம் மனம் எதுவும்

ஞாபகமில்லை.

மழையில் நனைந்த பறவையின்

ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்

மனதுக்கு

தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.

எனக்கோ பயமாயிருக்கிறது

தேடியது கிடைத்தபின்னும்

கிடைத்தது அறியாமல்

தேடித் தொலைப்பேனோ என்று.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

யுவனின் மொழிபெயர்ப்பு - மதார்

யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்து தமிழில் வெளியான ஜென் கவிதைகள் தொகுப்பு - 'பெயரற்ற யாத்ரீகன்'. முதல் பதிப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. முதல் தடவை படித்தபோது பெரும் உற்சாகம் அளித்த கவிதைகள். பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பதிப்பை இரண்டாவது முறை படிக்கையிலும் அதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. இந்த நூலை முண்டந்துறை காடுகளின் ஆழ்ந்த அமைதிக்குள் வைத்து ஒருமுறையும், அவசரகதியில் இயங்கும் எனது அலுவலகத்தில் வைத்து ஒருமுறையும் போன மாதத்தில் படித்தேன். எங்கு வைத்து படித்தாலும் ஆழ்ந்த அமைதிக்குள் கொண்டு வந்துவிடும் மாய நூல். யுவனின் அட்டகாசமான மொழிபெயர்ப்பு. சமீபத்தில் வேரா பவ்லோவா என்ற பெண் கவிஞரின் ஒரு கவிதையை படித்தேன். 

I walk the tightrope.

A kid on each arm

for balance. 

ஒரு நல்ல கவிதை நாம் படித்து முடிக்கும் முன்பே நமக்கு உணர்த்தப்பட்டுவிடும் என்பார்கள். அந்த வகையில் பவ்லோவாவின் இந்தக் கவிதை நல்ல கவிதையாகப் பட்டது. சரி மூன்று வரிதானே சும்மா மொழிபெயர்த்து பார்ப்போம் என்ற குருட்டு ஆசையில் முயன்றேன். இயலவில்லை. கவிதை மொழிபெயர்ப்பில் கவிதைக்குள் அந்த உயிரைக் கொண்டு வந்துவிடுவது பெரும் பணி. அதற்கு அந்தக் கவிஞனின் கவிதையை அப்படியே அல்லாமல் அதே நேரத்தில் அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பவன் தன் கவிதையாக அதை உயிருடன் எழுதிவிடுவது ஒரு வழி. ஒரு கவிஞன் கவிதையை மொழிபெயர்ப்பு செய்யும்போது கவிதையில் நிகழும் அதிசயம் அதுதான். சமீபத்தில் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு கவிதைகள் சிறந்த வாசிப்பு உணர்வை அளிப்பவையாக உள்ளன. யுவன் ஒரு கவிஞர் என்பதால் பெயரற்ற யாத்ரீகன் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது. அதுவும் மற்ற கவிதைகளை விட ஜென், ஹைக்கூ போன்ற சிறிய வடிவங்களை மொழிபெயர்க்கும்போது ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. ஒரு சொல் சற்றே இடறினாலும், மொத்த கவிதையும் "சூளை செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது" போலாகிவிடும். அதை யுவன் இந்த தொகுப்பில் அட்டகாசமாகச் செய்துள்ளார். உதாரணத்துக்கு 

இரவு முழுவதும்

தூங்க முடியவில்லை

என் படுக்கையில்

நிலா வெளிச்சம் கிடந்ததால்.

எங்கிருந்தோ ஒரு

குரல் அழைப்பதைக்

கேட்டுக்கொண்டிருந்தேன், தொடர்ந்து.

ஆமோதிக்கிற மாதிரி 

பதிலளிக்கவில்லை எதுவும். 

இந்தக் கவிதையில் 'எதுவும்' என்ற ஒரு தனிச் சொல் எதையோ செய்துவிடுகிறது கவிதையில். அதை சேர்க்காதிருந்தால் கவிதையில் எதுவோ குறைந்திருக்கும். அதைச் சரியாகக் கண்டுணர்ந்து 'எதுவும்' என்ற சொல்லை வைக்கிறார் யுவன் அல்லது போகிறபோக்கில் தன்னுணர்ந்தும் வைத்திருக்கலாம். யுவனின் மொழிபெயர்ப்பு திறனுக்கு இன்னொரு உதாரணம்

உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு? 

அது, வண்ணத்துப் பூச்சி. 


      - மோரிடக்கோ

என்ற கவிதை. இதே கவிதையை யுவனைத் தவிர்த்து இரண்டு பேர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள் (வேறு யாரும் கூட செய்திருக்கலாம்) 

சி.மணியின் மொழிபெயர்ப்பு

கிளைக்குத் திரும்பும்

விழுந்த சருகா?

பட்டுப் பூச்சி.


தி.லீலாவதியின் மொழிபெயர்ப்பு

வீழ்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறதா?

வண்ணத்துப் பூச்சி! 

இதில் மரத்திலிருந்து விழுகின்ற மலரை  வீழும் மலர் என்கிறார். யுவன் அழகாக உதிர்ந்த மலர் என்கிறார். கிளைக்குத் திரும்புவதை திரும்புகிறதோ கிளைக்கு? என்கிறார். இறுதியில் 'அது' என்ற தனிச்சொல்லும் அதன் அருகில் இடப்பட்ட காற்புள்ளியும் கவிதையை எங்கேயோ கொண்டு சென்றுவிடுகிறது. ஒரு நல்ல கவிதையில் ஒரு சொல் கூட வீணாக வைக்கப்படுவதில்லை. (பித்து நிலை கவிதைகளுக்கு இது பொருந்தா) 

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு வகைகளில் முக்கியமான வரவு யுவன் மொழிபெயர்த்த 'பெயரற்ற யாத்ரீகன்'. செப்டம்பரில் இந்த நூல் குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வை திருநெல்வேலியில் நடத்தினோம். இந்த நூலை வாசித்து வந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலுமே ஒரு பிரமிப்பை, மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. யுவனின் இலக்கிய உலகம், இலக்கிய பார்வை, மொழிபெயர்ப்பில் அவர் செய்யும் மாயம், இன்னும் பிற விஷயங்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டோம். 2023 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் யுவன் சந்திர சேகர் சாருக்கு இனிய அன்பும், வாழ்த்துகளும்.. 

***

***
Share:

வேழம்: மூன்று சங்கக் கவிதைகள் - கடலூர் சீனு

1

நான் யானைகள் குறித்து எழுதியவை அனைத்தையும் வாசித்திருந்த நண்பர் ஒருவர் எனக்கு யானைகள் மீதான ஈடுபாடு என்பது ஜெயமோகன் ஆக்கங்கள் வழியே உருவான ஒன்றா என வினவியிருந்தார்.

அன்றைய பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் போலவே எனக்கும் முதன் முதலாக யானைகள் மீதான பிரியம் என்பது பிள்ளையார் சிலை வழியே உருவானதுதான். அடுத்ததாக வலிமையாக வந்து விழுந்த விதை, புகை மூட்டமான பாலியத்தில் திருக்கடையூர் கோயில் வளாகத்தில் நான் கண்ட மிக மிக குட்டியான யானைக் கன்று. அம்மா யானையை விட்டுப் பிரித்த குட்டியாக இருக்க கூடும்  மொத்தமே மூன்றரை அடி உயரம்தான் இருந்தது. ஒயர் கூடை ஒன்றை எற்றி எறிவதும், ஓடிச் சென்று அதை தூக்கி வீசுவதும் என விளையாடிக்கொண்டு இருந்தது. நானும் அதனுடன் சென்று விளையாட ஓடினேன். அது விளையாட்டுத் தனமாக என்னை முட்டி எறிந்து விடும் என்று பாகனும அப்பாவும் என்னை அதன் அருகே விட வில்லை. கோயில் முடித்து திரும்பும் போது, சந்தன வண்ணப் பசு ஒன்றிடம் ப்ரும்மாண்ட கருப்பு மை உருண்டை போல அண்டி நின்று அதன் மடியில்  பால் குடித்துக்கொண்டு இருந்தது அந்தக் குட்டி யானை.

கொஞ்சம் வளர்ந்த பிறகு கண்ட  திருவாரூர் திருவிழா ஒன்றில்  நன்கு அலங்கரிக்கப்பட்டு, பொன் வண்ண அம்பாரியில் வைத்திருந்த கடவுள் சிலையை சுமந்த, தந்தங்கள் வளர்ந்து, முழுத்து, முனை சுருட்டிய துதிக்கை மெல்ல இடம் வலம் அசைய நடந்து வந்த வேழம். அதன் இணையற்ற கம்பீரம். 

மறக்க முடியாதவள் செங்கமலம். விளையாட்டுப் பிள்ளை. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சில வருடம் இருந்தவள். வீதி உலா போகும் போதெல்லாம் எங்கள் கடைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பவன் ஓட்டலுக்கு வருவாள். அவள் வருவது என்பது ஓட்டல் முதலாளிக்கு மிகுந்த மகிழ்வு அளிக்கும் ஒன்று. அவர் கையால் சுட்டு அடுக்கி எடுத்து வந்து தோசைகளை மடித்து மடித்து அவளுக்கு ஊட்டி விடுவார். உணவு முடிந்து இறுதியாக ஓட்டல் பக்கத்திலேயே இருக்கும் பழனி பெட்டிக் கடையில், பழனி பாட்டிலை திறக்க, அவளே கடலை மிட்டாய் உருண்டைகளை துதிக்கை விட்டு எடுத்துக் கொள்வாள். இந்த தொடர் நிகழ்வில் ஒரு நாள், கடலை மிட்டாய் பாட்டிலை திறக்க சற்றே தாமதம். அவள் துதிக்கை கொண்டு விளையாட்டாக அடிக்க, கடையே ஆடி விட்டது. பழனினிக்கு அன்று ஏதோ எரிச்சல். துதிக்கையிலேயே சுளீர் என்று ஒரு அடி போட்டார். அவள் துதிக்கையை எடுத்துக்கொண்டு பின்னடி வைத்து விலகினாள். அவ்வளவுதான். அதன் பிறகு அவள் அந்த ஓட்டல் பக்கமே வருவதையே நிறுத்தி விட்டாள். முதலாளி உணவுகளுடன் அவள் இருக்கும் இடம் போய் சமாதானம் செய்து பார்த்தார். பழனி வெல்ல உருண்டைகளுடன் சென்று அவளைப் போய் பார்த்தார். அவள் துதிக்கையை வீசி பழனியை அருகே வராதே என்று சொல்லி விட்டாள். இறுதிவரை அவள் சமாதானம் அடையவே இல்லை.அப்படி ஒரு கோவம் வீம்பு அவளுக்கு.

வேறொரு கோயிலில் நான் கண்ட முதியவள். முற்ற முழுதான மூப்பு. கண் தெரியாது. பிரிந்த பிரம்புக் கூடை போல எலும்புகள் தெரியும் மண் வண்ண உடல். துவண்டு ஓய்ந்து கிடக்கும் காதுகள் கேட்காது. மரணம் வேண்டி காத்து நிற்கிறாள். அவள் சரிந்து விடாது அவளை இரும்பு கழிகள் கொண்ட சட்டகத்தில் தொட்டில் செய்து அதில் பொதிந்து நிறுத்தி வைத்திருந்தார்கள். அவள் வலது பக்கம் நாற்காலி போட்டு பாகன் அமர்ந்திருக்க, அவள் துதிக்கை நுனி அவனது இடது பாதத்தை சுழற்றிப் பிடித்திருந்தது. அந்தப் பிடியில் எழுந்த என்னை விட்டுப் போய்விடாதே எனும் இறைஞ்சல்.

அனைத்துக்கும் மேலாக திருச்சியில் என் பாட்டி வீட்டு மாடியில் நின்று நான் கண்ட கோயில் யானை ஒன்றின் இறுதி ஊர்வலம். க்ரேன் இணைந்த திறந்த நிலை ட்ரக்கில் முழுக்க முழுக்க பூ மலைக்குள் புதைந்திருந்தாள் துளசி. இரு பக்கமும் மக்கள் பெண்கள் குழந்தைகள் திரள். பெண்கள் எல்லோரும் கண்ணீர் விட்டழ அவள் இறுதி ஊர்வலம் போனாள். அவளது விழுந்து கிடந்த செயல் நின்ற துதிக்கை இப்போதும் என் காய்ச்சல் கனவுகளில் வருவது. இப்படி பல பத்து சித்திரங்களுக்குப் பிறகே எனக்கு ஜெயமோகன் உலகமும் அவரது யானைகளும் அறிமுகம் ஆனது.இதுவரை நான் கண்ட யானைகள் வழியே எனக்குள் இருந்த யானைக்கு அல்லது யானைமை க்கு முகம் தந்தவர் ஜெயமோகன்.

2

ஒரு அன்னை தனது மடியில் இருத்தி, தன் குழந்தைக்கு நிலா காட்டி அதோ நிலா என்றபடி சோறூட்டுகிறாள். உண்மையில் அந்த நிலா முற்ற முழுதாக புறத்தில்தான் இருக்கிறதா? நமது ஐம்புலன் வழியே அன்னை சொல்லிய நிலா எனும் (ஒலி) மொழி வழியேதான் அது நம்முள் அனுபவம் பெறுகிறதா? 

இந்திய மரபு, நாம் அறிவது அனைத்தும் நமது முன் அறிவின் துணை கொண்டே நிகழ்கிறது என்று சொல்கிறது. முற்ற முழுதான புறவயம் என்ற எதுவும் இங்கு இல்லை. இங்கு உள்ள புறம் அனைத்தும் நாணயத்தின் ஒரு பகுதி மட்டுமே, அதன் மற்றொரு பகுதி நமது அகம் பிணைந்தது. அகமும் புறமும் ஒரே நாணயத்தின் இரு பகுதியாக இங்கே இருக்கிறது.

நனவு, கனவு, ஆழ் நிலை இந்த மூன்றும் சித்தம் என்பதன் மேல் நிகழ்வது. இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவாக பொதிந்த நிலவையே, இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவில் எழும் நிலா எனும் (ஒலி) மொழி கொண்டு, புற வயமாக வெளியே இருக்கும் நிலா எனும் (ஒலி) மொழி வழியே, மேலே தூரத்தில் இருக்கும் நிலா வாக அறிகிறோம். 

சித்தம், ஆழ் நிலை, கனவு நிலை, நனவு நிலை, சுயம், ஞான இந்திரியங்கள்,  கர்ம இந்திரியங்கள், நான், அது, நாமம், ரூபம், பொருள், எண்ணிக்கை, இடம், வெளி என்று விரியும் தொடரில் ஒரே நேர்கோட்டில் பிரிவின்றி பொருந்தி அமைந்தவை அகமும் புறமும். 

இதில் பேரிலக்கியவாதிகளின் பணி என்பது வெளியில் உள்ளவற்றை மொழி வழியே வாசகனின் நனவு நிலை கனவு நிலை கடந்து அவனது ஆழ் நிலைக்குள் கடத்துவது. கூடவே அவனது ஆழ் நிலையின் சித்திரங்களை மொழி வழியே அவனது கனவு நிலை,  நனவு நிலை கடந்து அவனது பிரத்யேக கற்பனை 'வெளியில்' வைத்து அவனுக்கே துலக்கிக் காட்டுவது. 

அந்த வகையில் ஜெயமோகனின் யானைகள் வாசகனின் நனவு கடந்து கனவு கடந்து அவனது ஆழத்துக்குள் அடி எடுத்து வைத்து இறங்கி செல்வது. அதே போல வாசகனின் ஆழ் கனவில் இருந்து அவன் கனவுநிலை நனவு நிலையை கிழித்து அவனது பிரத்யேக கற்பனை வெளிக்குள் எழுந்து வருவது.

அந்த வகையில் ஜெயமோகனின் நனவு நிலை கனவு நிலை தாண்டி அவரது ஆழத்தில் உறைபவர் சங்க கால தமிழ் நிலத்தின் பெரும் கவிஞன்  கபிலர் என்று  ஒவ்வொரு முறையும் கபிலர் கவிதையை கடக்கும் போதும் எனக்குத் தோன்றும். அகம் புறம் எனும் தமிழ் நிலத்தின் முதல் தத்துவ போதத்தைக் கவிதைகளில் அள்ளி வந்த கவிஞன்.

3

சங்க இலக்கியங்கள் ஏட்டில் இருந்து அச்சுக்கு மாறிய காலம், பின்னர் எழுந்த உரை மரபுக் காலம், இவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால் சங்கக் கவிதைகளுக்கு நிகழ்ந்தது எல்லாம் அதன் போதாத காலம்தான். சங்க இலக்கியம் மொத்தத்தையும் ஈரல் குடல் குந்தாணி என கழற்றி போட்ட  எத்தனை எத்தனை ஆய்வுகள். முனைவர் சாரதாம்பாள் கிரேக்க செவ்வியல் மரபுடன் சங்க இலக்கியங்களை ஒப்பு நோக்கி நிகழ்த்திய ஆய்வு, தமிழ்நாட்டு பறவைகள் நூல், எட்கர் தர்ட்சன் எழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதிகளை மொழியாக்கம் செய்த க. ரத்னம் அவர்கள் யானைகளின் நடத்தையை சங்க இலக்கிய யானைகளின் நடத்தைகளுடன் ஒப்பு நோக்கி எழுதிய சங்க இலக்கியத்தில் யானைகள் எனும் சிறிய நூல், இப்படி பட்ட நல்ல நூல்கள் ஒரு இருபது சதவீதத்தை கழித்து விட்டால், எஞ்சிய எண்பது சதவீதமும் பிணக்கூராய்வு அறிக்கை எனும் வகைமைக்குள் மட்டுமே வரும். 

இவற்றையெல்லாம் கடந்து சங்கக் கவிதைகள் உயிருடன் இருக்கக் காரணம், அதில் இலங்கும் கபிலர் போன்ற பெரும் கவிகளின் ஆக்கம்தான். இணையம் இக்காலத்தில் அளிக்கும் வசதி மிகப் பெரிது. Tamilvu போன்ற தளங்களில் நுழைந்து, தேடு எனும் கட்டதுக்குள் வேழம் என தட்டினால் மட்டுமே போதும், சங்க இலக்கியத்தில் வேழம் என்ற சொல் பயின்று வரும் எல்லா பாடல்களையும் அது கொண்டு வந்து விடுகிறது. யானைகளில் ஆணுக்கு வேழம் என்றும் பெண்ணுக்கு பிடி என்றும் பெயரிட்டு குறைந்தது ஒரு 20 பெயர்கள் வரை யானைகளுக்கு சங்க இலக்கியங்களில் உண்டு. பெயரைத் தட்டி சங்க கால யானைகள் என்னென்ன செய்தன என்று வாசிப்பது சுவையான அனுபவம்.

அரசர்கள் யானைப்படை வைத்திருந்திருக்கிறார்கள். அவை கோட்டை கதவுகளை உடைகின்றன. எதிரிகளை துவம்சம் செய்கின்றன. வேலைக்கு தேவையான யானைகளை குழி தோண்டி பிடிக்கிறார்கள். தந்தம் வேண்டி புலி வசம் கடி பட்ட யானையைத் தேடித் துரத்தி வேட்டையாடுகிறார்கள். புலவர்களுக்கு பரிசாக யானைகள் கிடைக்கிறது. இத்யாதி இத்யாதி என நீளும் இவை எல்லாம் தகவல்கள். இவற்றை கடந்து கலை என உயரும் சித்திரங்கள் பற்பல உண்டு. 

வரனுறல் அறியாச் சோலையை ஊடறுத்து தனது பிடியைக் காணச் செல்கிறது ஓர் வேழம். அதன் வழியில் ஒரு புலி குறுக்கிடுகிறது. அதை கொம்பால் குத்திக் கிழித்து தூர எறிந்து விட்டு நடக்கிறது வேழம். இந்த குருதி வாடையுடன் தனது காதற்பிடியை காணச் செல்ல அது விரும்ப வில்லை. எனவே போகும் வழியில் வீழும் அருவியில் தனது கொம்புகளை அது கழுவிக் கொள்கிறது. எழுதியவர் வேறு யார் கபிலர்தான். இப்படி சங்க இலக்கியம் காட்டும் பல நூறு யானை குறித்த சித்திரங்களை அடிப்படையில் மூன்று வகைமையில் அடக்கலாம். முதலாவது யானையின் ஆளுமையை மனிதனில் ஏற்றிக் காட்டும் சித்திரம். இரண்டாவது தனது இயல்பில்  யானையும் மனிதனும் சந்தித்துக் கொள்ளும் சித்திரம். மூன்றாவது மனித அம்சத்தை யானைகளில் ஏற்றிக் காட்டும் சித்திரம்.

முதல் வகைமையில் மிகச்சிறந்த உதாரணம் கீழே, ஜெயமோகன் அவர்களுக்கு பிடித்த கவிதையும் கூட.


நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 

ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 


கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

    

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே.


(உரை)


இரவு. நிலவும் இல்லாது போன இருள். 

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று,  //தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;//

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின், //ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்//

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள், //அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.//

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே. //கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.//

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி, //கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருடுவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!//

இந்த கவிதையை அழகாக்கும் விஷயங்கள் மூன்று. ஓவியம் போல உறைந்த வீடு நோக்கி காதலன் யானை போல வருகிறான். எப்படிப்பட்ட யானை என்றால் சிறிய தலை கொண்ட யானை. பொதுவாக ஆங்கிலத்தில் பாடி பில்டர் எனப்படும் ஆணழகர் பலரை காணும் போது அவர்கள் உடலைவிட அவர்களின் தலை மிக சிறியதாக தெரியும். இந்த உடல் வழிப்பட்ட 'ஆல்ஃபா மேல்' தனம்தான் இங்கே யானையுடன் ஒப்பிடப் படுகிறது. இரண்டாவது அழகு இருளுக்குள் நடந்து வரும் யானை என்பது. அத்தனை பெரிய உருவம், அத்தனை ஆற்றல் கொண்ட, எடை கொண்ட உயிர், இருளுக்குள் இருளாக ஒரு சிறிய ஒலி கூட எழுப்பாமல் நகரும் வல்லமை கொண்டது. காதலன் அப்படித்தான் வருகிறான். மூன்றாவதும் இணையற்றதுமான அழகு, மேலும் கீழும் பாகன் அற்ற யானை என்பது. உண்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் அந்த வேழம் பழக்கி எடுத்த வேழமா? அல்லது காட்டுயிர் வேழமா? தெரியாது. வந்துகொண்டிருக்கும் காதலனும் இப்போது இப்படிப்பட்டவன்தான்.

இரண்டாவது வகைமையில் எனக்குப் பிடித்த கவிதை கீழே,


முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் நாள்

அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.


(உரை)

முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி, முன் நாள் இனியதாகி - முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி, பின் நாள் - பிற்காலத்தில், அவர் தினை மேய்தந்தாங்கு - அவர்களுடைய தினையை மேய்ந்தாற் போல, அவர் நகை விளையாட்டு - தலைவர் நம்மோடு முன்பு நகைத்து விளையாடியது, பகையாகின்று - இப்போது பகைமையையுடையதாகின்றது.

முழந்தாள் எனில் முழவு போன்ற கால். சங்க இலக்கியத்தில் முழவு பல்வேறு சித்திரங்களுக்கு உபமானமாக பயின்று வரும். முழவு என்ன வடிவம் கொண்டதோ அந்த வடிவில் கால்களைக் கொண்ட பிடி. அதன் குட்டி, குறத்தி பிள்ளைகளுடன் சுற்றி ஆடி விளையாடுகிறது. குறி (குறில்) இறை எனில் பிஞ்சு கை (கொண்ட குழந்தை). யானை குட்டியின் குட்டி துதிக்கையும் அந்த பிஞ்சு கை போன்றதே. அவர்கள் கூடி விளையாடுகிறார்கள். இது முன்னர். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். பழைய படியே அந்த யானைகள் அவர்களுடன் விளையாட ஓடுகிறது. இப்போது அந்த யானைகள் அவர்களின் வயலை பாழ் படுத்துவதாக சொல்லி அவர்களால் விரட்டியடிக்கப்படுகிறது. நாம் என்ற நிலை நழுவி நாம் அவை எனும் பிரிவினை நிலை நிலவுடைமை வழியே உருவாகி வரும் சித்திரத்தை உணர்ச்சிகள் பொங்கும் வண்ணம் அளிக்கும் கவிதை. 

மூன்றாவது வகைமையில் பல கவிதைகள் உண்டு. இந்த வகைமையில் உச்சம் வேழத்தில் தந்தைமை எழும் கணங்களை எழுதிய கவிதைகள் என்று சொல்லலாம். சங்க இலக்கியம் நெடுக யானைக்கும் புலிக்கும் ஆகாத நிலையே காணக் கிடைக்கிறது. புலியுடன் பொருதி பலம் குன்றிய வேழத்தை அதன் தந்தம் வேண்டி வேட்டுவர் வேட்டையாடுகிறார்கள். புலியால் காயம்பட்ட வேழம் மூங்கிகள் உரசுவுது போலும் ஒலியில் தனது வலியை பிடிக்கு தெரிவிக்கிறது. செம்மலர் பூத்து செறிந்த கிளையை (புலியோ என மயங்கி) புலியை தாக்குவது போல தாக்கி உடைக்கிறது. இன்னும் பல ஆனால் அதே வேழம் தனது கன்றுக்கு புலியால் ஆபத்து எனில் எடுக்கும் ரௌத்ர உருவமே வேறு.  உதாரணம் கீழ்கண்ட அகநானூறு 347 ஆவது கவிதையின் பின்பாதி


மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,  

ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி

வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்,

கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி

கை தலை வைத்த மையல் விதுப்பொடு,

கெடு மகப் பெண்டிரின் தேரும்  

நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

மழை இல்லாது மூங்கிலும் காய்ந்து போன காடு. (நீர் வேண்டி யானைகள் கொள்ளும் தவிப்பு சங்க கவிதைகள் நெடுக காண கிடைக்கிறது.) அங்கே யானைக் குடும்பத்தை தாக்க வருகிறது புலி. யானைகள் நீரின்றி அது கொண்ட விடாய் அமையாது. புலிக்கு நீருக்கு பதில் குருதியே போதும், எனில் அந்தப் புலி எந்த அளவு குருதி தாகம் கொண்டிருக்கும் என்று யூகிக்க முடியும். அப்படிப்பட்ட புலி அந்த யானைக் குடும்பத்தின் வழியில் குறுக்கிடுகிறது. உச்ச ஆக்ரோஷத்தில் வேழம் எழுப்பும் பிளிறலில் அதன் பிடியே பயந்து போய் குட்டியை விட்டு விட்டு ஓடி விடுகிறது.

பின்னர் சூழல் அமைதி கொண்டதும், தொலைந்த தன் குழந்தையை தலையில் கை வைத்தபடி பதறியபடி தேடிக் கொண்டு ஓடும் தாய் போல, அந்தப் பிடி துதிக்கையை உயர்த்தி தலையில் வைத்தபடி, பதற்றத்துடன் தனது குட்டியைத் தேடி ஓடுகிறது.

(ஒண் கேழ் வயப் புலி = அடர் வண்ணமும் வலிமையும் கொண்ட புலி.

குவவு அடி = பனை மரத்தின் அடி போல உறுதியான கால். இங்கே மற்றொரு நுண் விவரணையும் சங்கக் கவிதைகளில் உண்டு. பெரும்பாலும் பிடி யானையின் யின் கால்கள் மட்டுமே முழவு உடன் ஒப்புவமை செய்யப் படுகிறது. வேழத்தின் கால்களுக்கு வேறு)

மற்றொரு கவிதையில் வரும் வேழம், தூரத்தில் எழும் புலியின் உறுமல் கேட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் தன் குட்டி பயந்து விழித்து விடலாகாது என, அது தனது நான்கு கால்களுக்கு இடையே பாதுகாப்பாக அமையும் வண்ணம் சென்று நின்று கொள்கிறது.

மானுட நாடகத் தருணம் அனைத்தையும் யானைகளுக்குள் வைத்து நிகழ்த்திப்பார்த்த பலப் பல சித்திரங்கள் சங்க இலக்கியப் பரப்பெங்கும் விரிந்து கிடக்கிறது. சற்றே ஆர்வம் இருந்தால் போதும் ஜெயமோகன் வாசகர்கள் எவரும் அந்த உலகின் தீவிரத்துக்குள் எளிதில் நுழைந்து விட முடியும். அங்கே கபிலர் போன்றோரில் ஜெயமோகனையும் கண்டுகொள்ள முடியும்.

***

Share:

த்யான மந்திரமாகும் சொற்கள் - இராயகிரி சங்கர்

சமீபத்தில் வாசித்து மலைத்துப்போன கவிதைத் தொகுப்பு பெயரற்ற யாத்ரீகன்- ஜென் கவிதைகளின் தொகை நூல் (தமிழில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்தது).  நடுவயதின் தடுமாற்றத்திற்கு அக்கவிதைகள் ஊன்றுகோல் என்றாயின. சலிப்பின் துயர் நீக்கின. மங்கிய பார்வைத்திறனை கூர்மையாக்கும் நுட்பத்தினை அளித்தன. மீண்டும் மீண்டும் வாசித்த போதும் தீராத விருந்து அக்கவிதைகள்.  

கவிதை வாசகனாக ஒட்டுமொத்த கவிதைகளையும் இரு பிரிவுகளாக வகைப்படுத்துகிறேன். ஒன்று பெரும்பான்மையான எண்ணிக்கையில் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளவை. உரத்த சிந்தனையை வார்த்தைகளுக்குள் உறையச் செய்பவை, புகைமூட்டத்தின் நடுவே மந்தகாச சிரிப்பினை அளிப்பவை. சொற்களின் விளையாட்டாய் ஒன்றை ஒன்று வரவேற்றும் திரை மறைவில் பரஸ்பரம் நிராகரித்தும் பாவனை கொள்பவை. புதிர்வட்டப்பாதையில்  எதிர்கொள்பவரை கணக்கில் கொள்ளாமல் பயணிப்பவை. ஆழமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் வானுக்கும் மண்ணுக்கும் சீறித் தணிபவை. ஏக தேசத்தில் அகச்சிடுக்குகள் என்கிற விஸ்தார சொற்வெளியில் நீந்திக் கிடப்பவை. இக்கவிதைகள் எளிதில் நம்மோடு நட்பு கொள்பவையாகவும் இருக்கின்றன. யாவற்றின் மீது ஒட்டுறவு கொள்ள விரும்பாத கடுமை காண்பிப்பவையாகவும் அதே சமயத்தில் அமைந்து விடுகின்றன. காதலனுக்கு ஒரு முகமும் தமையனுக்கு வேறு முகமும்அந்நியனுக்கு உணர்ச்சிகள் ஏதும் வழங்காத முகத்தையும்  காட்டிச் செல்லும்    கன்னியைப் போல. 

இரண்டாம் வகையிலான கவிதைகள் அரூபத்தீண்டல்களை அளிப்பவை. அவை இருக்கின்றன. ஆனால் கட்புலனாவதில்லை. காட்சிப்படுத்துவதன் மூலம் அவற்றின் இருப்பை நிறுவ முடியாது. மனித வாழ்வின் பல்வேறு கோலங்களை மட்டும் அவை பொருட்படுத்துவதில்லை. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அக்கவிதைகளில் தட்டுப்படும். இயற்கையின் ஒரு துமியே மனிதன். ஆனால் அவற்றின் கனத்தை அவை கொண்டிருப்பதில்லை. அதிகாலையிலோ பின்னிரவிலோ தனிமையில் இருக்கும் போது வந்து தீண்டும் தென்றலைப்போல , குழந்தையின் முகத்தை காணும் போது ஏற்படும் உளக்கிளர்ச்சி போல, இயற்கையின் முன் பூரித்து திகைத்து நிற்கும் மனத்தைப் போல. இவ்வகை கவிதைகளுக்கு வியாக்கியானங்களை துல்லியமாக வழங்கிட முடியாது. அவரவர் மனோதர்மத்திற்கு இயைந்த சில அர்த்தப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம். அவற்றை அனைவரும் ஆமோதிிக்கும் வண்ணம் எழுப்பிக்காட்டிவிட முடியாத கையறுநிலையும் நிழலென உடன்வரும். சங்கக் கவிதைகளுக்கு இச்சாயல் உண்டு. நவீன கவிதைகளில் பிரமிள், சி.மணி, பசுவய்யா, தேவதேவன், தேவதச்சன்,எம்.யுவன்  போன்றோரின் கவிதைகளில் சில இவ்வகையில் அமைந்துள்ளன. மொழியின் உச்சபட்ச பதம் கவிதையில் எனில் கவிதையின் உச்சக்கட்ட மௌனம் இவ்வகைக் கவிதைகளில்தான் என்பேன். 

சமகாலத்தில் நையப் புடைக்கப்படும் ஒரு இலக்கிய வடிவம் என்றால் அது கவிதைதான். ஒருபுறம் கவிதை என்கிற வஸ்துவை தன் வாழ்நாளில் ஒரு முறையும் எதிர்கொண்டிராத கவிஞர்கள் எழுதிக் குவிப்பவை. எதிர்நிலையாக அரசியல் ஆதாயங்களை உத்தேசித்து லட்சிய வேகத்தில் கூக்குரலில் ரௌத்தரம் கொள்பவை. இரண்டாயிரத்திற்கு பிறகு மற்றுமொரு புதிய போக்கு உருவாகி வந்துள்ளது. அவை எளிய சொற்களின் வாயிலாக கவித்துவத்தை கட்டியெழுப்ப முயல்பவை. உரைநடையை தன்னியல்பில் கொண்டிருப்பவை. மேற்குறிப்பிட்ட மூன்று ரகங்களுமே தமிழ்க்கவிதையை மலினப்படுத்துகின்றன. ஆனால் அவைதான் அதிகமாக உற்பத்தியாகவும் செய்கின்றன. நான்கு சொற்களில் கவிதை என்கிற பிண்டத்தை முன்வைக்க எளிதாக சாத்தியப்படுகிறது. சங்கங்கள் அமைத்து தரப்படுத்தி தொகுத்த பெருமை கொண்டுள்ள தமிழ் மொழியில்தான் இன்று கவிதை என்கிற பெயரில் மொழி மாசுக்கள் கட்டற்று குவிந்துள்ளன. இக்கருதுகோளே கவிதை என்கிற உன்னதத்தை கழிசடையாக்கி சீந்துவாரற்ற நிலைக்கு தள்ளிவைத்துள்ளது.  

இப்பகைப்புலத்தில் தான் பெயரற்ற யாத்ரீகன் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் இன்று நமக்கு அந்நியந்தான். அதன் அர்த்தப்பாடுகள் நம் பொதுப்புத்தியில் இன்னதென்று எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத மாயங்களாகிவிட்டன. மகாயான பௌத்தம் அளித்த கொடையே ஜென் என்கிறார் இக்கவிதைகளை மொழிபெயர்த்த யுவன் சந்திரசேகர். தமிழில் கவிதைகளில் மட்டுமின்றி ஜென் மனோ நிலையை புனைவு வெளிக்குள்ளும் கொண்டு வந்தவர் என்கிற பெருமையை யுவன் சந்திர சேகருக்கே அளிக்க முடியும். அவரின் படைப்பிலக்கிய வெளிப்பாட்டின் ஆதார லயம் ஜென் மனவெளிதான். ஏற்பும் நிராகரிப்பும் தாண்டிய மூன்றாவது ஒரு நிலை உண்டு என்கிற பார்வை யுவனின் உலகம். அது கிளியை கிளி என்றும் சொல்லலாம் என்றுதான் சொல்ல விழைகிறது. 

ஜென் கவிதைகள் எளிய சொற்களைக் கொண்டிருக்கின்றன என்ற போதும் அந்த எளிய சொற்கள் அள்ள முயல்வது இப்பிரபஞ்சத்தை. அந்த விஸ்வ ரூபத் தரிசனந்தான் அவற்றை வாசிக்கும் போது நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக் கோணங்களில் பழகிப்போன அகவிழிகள் மேலும் விரிவு கொள்கின்றன. சொற்களை சிலைத்து நிற்கவைக்கும் கவிதை மனத்தை சிதைத்து பறக்கும் எழுச்சித் தருணங்களை வந்தடைகிறோம்.  

மலைச்சிகரத்தின் உச்சியில் 

முடிவின்மை விரிந்திருக்கிறது 

எல்லாத் திசைகளிலும் தனது 

நள்ளிரவுப் பரணிலிருந்து எட்டிப் 

பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த 

குளத்தில் தெரியும் தன் 

பிம்பத்தை வியக்கிறது. 

நடுநடுங்கியவாறு,  

நிலவை நோக்கிக் 

காதற்பாடல் இசைக்கிறேன்.                                   

                                                                                                                                    -ஹான் ஷான். 

மலைச்சிகரத்தின் உச்சியில் முடிவின்மை விரிந்திருக்கிறது எல்லாத் திசைகளிலும் என்கிற முதல் மூன்றுவரிகளே இக்கவிதையின் விதை. ஒட்டுமொத்தத்ததையும் அள்ள விழையும் பார்வைக்கோணம். சமதளத்தில் புதையுண்டு சிறைப்படும் வாழ்க்கை விதிக்கப்பட்டவனுக்கு ஏற்படும் உயரப்பறத்தல் அனுபவம். மொழி உந்தித்தள்ள எடைமிகுந்த பிரக்ஞை மேலெழும்புகிறது. சிகரத்தை அடைந்து இயற்கையின் விநோதத்தை கண்டறிகிறது.எந்த ஒன்றின் சிகரத்திலும் நாம் அடையக் கூடியது அடைய முடியாமை என்னும் அசாத்தியப்பாடுகளைத்தான். வெல்லவே முடியாத இயற்கையைத்தான். திகைத்து அரற்றி மண்டியிட வைக்கும் வல்லமைதான் சிகரங்கள் கொண்டிருக்கின்றன என்கிற போதம். 

கவிதை எழுதும் மனத்தையும் கவிதை வாசிக்கும் மனத்தையும் மின்னலென கணநேர ஒளிரிடலில் சந்திக்கச் செய்யும் சாகசம் ஜென் கவிதைகளின் அதிரூபம். 

அவன் 

வனத்தில் நுழையும்போது 

புற்கள் நசுங்குவதில்லை. 

நீரில் இறங்குகையில் 

சிற்றலையும் எழுவதில்லை 

என்கிற கவிதையில் அவன் என்கிற ஆகிருதி நாம் வாசித்து முடித்ததும் சூரிய ரச்மி பட்டதும் கரைந்தோடும் பனிமூட்டத்தைப் போல காற்றில் மறைகிறது. ஆனாலும் அக்கவிதை நம் மனதில் வலுவான தீண்டலை எழுப்பிவிடத்தான் செய்கிறது.  

இயற்கையின் மடியில் மனித மனம் கொள்ளும் பித்துநிலையை ஜென் கவிதைகள் ஓவியத்தீற்றல் கொண்டு உறைய வைக்கின்றன. அவற்றில் பித்தேறியதன் மன அலைவு துருத்தித் தெரிவதில்லை. ஆயினும் காணுந்தோறும் அவ்வோவியத்தின் பித்தேறிய கரங்கள் நம்மைத் தழுவி மயக்கமூட்டுகின்றன. 

இலையுதிர் காலத்தில் 

மீண்டும் நிலவைப் பார்ப்பேன் என 

நம்புகிறேன்தான், என்றாலும் 

இந்த முன்னிரவில் 

அது இருக்கும்போது 

எப்படித் துாங்குவேன்?                     

                                                                                                                    - எய்ஹெய் டோகென். 

கவிதையை நெருங்கி அறிய ஆர்வம் கொள்ளும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இத்தொகுப்பே சரியான திறப்பாக இருக்கும். கவிதையின் அதிக பட்ச சாத்தியங்களை அறியக் கிடைக்கும்  தொகை நுாலாக அமைய வாய்ப்புக்கள் இத்தொகுப்பில் அதிகம். உண்மையில் கவிதை எழுத விரும்புகிறவர்களை கட்டாயம் இத்தொகுப்பினை வாசிக்கப் பணிக்கலாம். கவிதை என்னும் மாயம் மிக எளிதாக கைக்குள் சிக்கும் அபூர்வம் இக்கவிதைகளின் ஊடாக கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தை வழங்கலாம். 

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

பெயரற்ற யாத்ரிகன் நூல் வாங்க...

***

Share:

கவிதையின் சாரம் - அரவிந்தர் (தமிழில் சியாம்)

கவிதையின் இயல்பென்பது என்ன? அதன் இன்றியமையா விதி என்ன? அதிலிருந்து நாம் அடையக்கூடிய உச்ச பட்ச ஆற்றல் என்ன? மனிதன் தனது உச்சங்களையும், ஆழங்களையும், விரிவுகளையும் துழாவி இந்த இசைக்கருவியிலிருந்து அவனடையும் இசையென்பதென்ன? அது மந்திரமென மாற எப்படி சாத்தியப்படுகிறது? கவிதைப்படைத்தலை போன்ற ஆழமான, அறிவிற்கு சிக்காத, ஒன்றை விளக்கி நமது ஆற்றலை வீணடிக்க வேண்டியதில்லை. எண்ணிலா நரம்புகள் கொண்ட சரஸ்வதியின் யாழை பகுத்தாய்வது குறுகிய, பொருளற்ற ஒரு களியாடல் மட்டுமே. ஆனால் நமக்கு உள்ளுணர்வின் தேவை உள்ளது. நமது தேடலைத் தெளிவுபடுத்த சில விவரிப்புகள் தேவை. வரையறைகளால் அல்ல விவரிப்புகளால் நாம் அந்தத் தேடலைத் தொடர வேண்டும். கவிதையின் இன்றியமையாதவற்றைக் குறித்த தேடல் இயலாததல்ல. அதே நேரத்தில் அது பொருளற்றதும் அல்ல.

இங்கு இரண்டு பிழைகள் உள்ளன. ஒன்று சாமானிய கல்லா மனம்(ordinary uninstructed mind) செய்வது. மற்றொன்று அதிகம் கற்ற விமர்சகர் அல்லது மிகுந்த அறிவு விழிப்பு கொண்ட கலைஞர் செய்வது. சாமானிய மனதிற்கு கவிதை என்பது கற்பனை இன்பம், செவி இன்பம், மற்றும் ஒரு வித பொழுது போக்கு மட்டுமே. கவிதையென்பது அது தான் என்றால் அதன் இலக்கையும், ஆன்மாவையும், தன்னறத்தையும்(deeper law) ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அழகான, இனிமையான, இன்னொலி கொண்ட ஒன்று இதற்கு போதும். அனக்ரியான்(Anacreon) அல்லது மிம்னேர்மஸ் (Mimnermus) பாடல்கள் ஈடிபஸின்(Oedipus) கவித்தன்மை அளவிற்கு நிறைவளிக்கக்கூடியவையே. நிச்சியமாக நாம் இன்பம் என்பதை கவிதையிலிருந்து ஏதிர்பார்க்கலாம், மற்ற கலைகளிலிருந்து எதிர்பார்பது போலவே. ஆனால் புறவய இன்பமும், ஏன் அகவய கற்பனை இனபமும் கூட அடிப்படையானவை தான். அறிவாற்றலுக்கு இணையாக கற்பனையும் செவியும் பண்படவேண்டியவை தான். ஆனால ஒரு கட்டத்தில் அவை தங்களது உச்ச நிலையையும் கடந்து செல்ல வேண்டும். அந்நிலையில் அவை அவற்றைக் கடந்த ஒன்றிற்கு துணைநிற்கும். அவ்வாறு இல்லையெனில் அவை மந்திரங்களின் உயர் நிலையை நோக்கி செல்ல முடியாது. 

அறிவாற்றலும் கற்பனையும் செவியும், கவி இன்பத்தின் உண்மையான அல்லது குறைந்த பட்சம் உயர்ந்த பெறுநர்கள் அல்ல. அவை கவிதையின் தடங்களும் கருவிகளும் மட்டுமே. கவிதையை படைப்பவை அல்ல. கவிதையை உண்மையாக படைப்பதும் பெற்றுக்கொள்வதும் ஆன்மா தான். மற்றவை (அறிவாற்றல், கற்பனை, செவி) எவ்வளவு விரைவாகவும் வெளிப்படையாகவும் கவிதையை கடத்துகின்றனவோ அவ்வளவு குறைவாக அவை தங்களின் நிறைவிற்காக கவிதையை கோருபவை. சொல் எவ்வளவு நேரடியாக ஆன்மாவை அடைந்து கரைகிறதோ அந்த அளவிற்கு கவிதை சிறந்தது. எப்போது கருவிகளுக்கு இன்பமளித்து அது ஆன்மாவின் ஆழ்ந்த இன்பமாக மாறவில்லையோ அப்போது கவிதை தனது பணியை அல்லது உயர் பணியை ஆற்றவில்லை என்றே பொருள். ஒரு தெய்வீக ஆனந்தம்1-ஆக்கப்பூர்வமான, வெளிப்படுத்திக்கிற, கட்டமைக்கக்கூடிய, இப்படி சொல்லலாம் பிரபஞ்ச ஆன்மா இப்பிரபஞ்சத்தின் ஒத்திசைந்த வடிவங்களாக மாறும்பொழுது தன் பெரும் ஆற்றல் வெளிப்படுகையில் உணர்ந்த ஆனந்தத்தின் ஒரு தலைகீழ் பிரதிபலிப்பு. ஆன்மீக மெய்மை, உயிர், ஆற்றல், உணர்வுகள் எல்லாம் ஒரு மூலமுதல் படைப்பாற்றல்கொண்ட பார்வையாக மாறுகையில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தையே கவிஞனின் ஆன்மா உணர்கிறது. அவன் கவிதையில் மானுட எல்லைகளை கடக்கையில், அவன் அதை பெறத் தயாரானவர்களுள் அதை நிரப்புகையில் அவ்வானந்தத்தை உணர்கிறான். இது ஒரு உயர் கடவுள் போன்ற(god like)  பொழுதுபோக்கு அல்ல. இது ஒரு படைப்பாற்றல் கொண்ட, ஒளிமிக்க ஆற்றல். 

மற்றொரு பக்கம் விமர்சகரோ, அறிவு விழிப்பு கொண்ட கலைஞனோ கவிதையை குறையற்ற அல்லது நேர்த்தியான ஒரு உக்தி என்றே பார்க்கிறான். நிச்சியமாக எல்லா கலைகளிலும் நல்ல உக்தியே கட்சித்தின் முதல் படி. ஆனால் அதில் இன்னும் பல படிகள் உள்ளன. நீங்கள் தேடுவதை நெருங்குவதற்கு முன்னால், ஒரு உலகமே அதற்கிடையில் இருக்கிறது. தீவிர திறன்பெற்ற ஆன்மாவை குறையுற்ற செயல்படுத்துதல் கூட நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் கவிதையை படைப்பதிலிருந்து தடுக்க முடியாது. உக்தி இன்றியமையாதது எனினும் வேறு கலைவடிவங்களை ஒப்பிடுகையில் கவிதையில் உக்தியின் பங்கு சிறியதே. அதற்கு முதல் காரணம் கவிதையின் கருவியான இசைந்த சொல்(rhythmic word). அது முழுக்கவே நுட்பமான பருவடிவற்ற கூறுகளால் ஆனது. இசைந்த சொல் நுட்பமான கூறு கொண்டது, அதன் சந்தம்-பருவடிவற்ற ஒன்று. பிறகு அதன் பொருள் அல்லது எண்ணம். அதன் சந்தம் மற்றும் பொருள் இணைந்தும், தனித்தனியாகவும் ஆன்மா கொண்டது, அது ஆன்மீக ஆற்றல். அதுவே மிக முக்கியமானது. இதன் சிறுபகுதி உக்திக்கு கட்டுப்பட்டு பிறந்தாலும், அக்கணமே பறத்தலின் முதற்கணமே இதன் ஆற்றல் இயந்திரதத்தனமான கட்டுமானங்களை மீறி பறக்கிறது. இந்த மொழி வடிவம் சொல்லிலடங்காமைக்கு  அண்மையிலுள்ள ஒன்றை தன் உச்சியில் சுமக்கிறது.

கவிதை அதன் வடிவை அதுவே நிர்ணயிக்கிறது. அதன் வடிவு வெளியிலிருந்து, அதன் மேல் திணிக்கப்படுவதில்லை. உக்தி மீது பெரும் கவலை  கொண்டுள்ள பிற கலைஞர்களை போல் அல்லாமல் கவிஞன் கவிதையைப் படைக்கிறான். சந்தேகமின்றி அவன் உக்தியை கைகொள்ள வேண்டும். ஆனால் படைப்புத் தருணத்தின் உச்சத்தில் அறிவாற்றல் ஒரு படி கீழானது அல்லது வெளிப்படாத ஒன்றாக உள்ளது. அவனது சிறந்த  படைப்புத் தருணங்களில் அவன் உத்திகளை மறக்க அனுமதிக்கப்படுகிறான். சந்தத்தின், மொழி நடையின் கட்சிதம் அவனது ஆன்மாவின் தன்னியல்பான வடிவாக வெளிப்படுகிறது. பிரபஞ்ச ஆன்மா கூட இந்தப் பிரபஞ்ச ஒழுங்கை தனக்குள்ளிருக்கும் நித்திய சொல்லின் ஆற்றல் கொண்டே படைத்தான். அதன் ஆழ்மன இயல்பிலிருக்கும் ஆன்மீக தூண்டுதலின் சலனம் பிற படைப்புக்களை மேற்கொள்ள அனுமதித்தான்.  இதுவே உயர் மொழி, உச்ச கவித்துவ வெளிப்பாடு (Supreme Poetic Utterance). அது அவனது கவிதையில் நித்தியமானது. அதில் கொஞ்சம் போதும், அவனது மற்ற படைப்புக்களை தெளிவின்மையிலிருந்து மீட்க. ஸவல்பம் அப்யஷ்ய தர்மஸ்ய!

இதுவே கவிஞனின் இசைந்த சொல்லை சுய தரிசனம் அல்லது உலக தரிசனத்தின் வெளிப்பாட்டிற்கான மனிதருக்கு சாத்தியப்பட்ட உயர் மொழியென ஆக்குகிறது. ஒன்றை கவனிக்க வேண்டும், ஆழ்ந்த அனுபவங்களை, முழுதும் விளக்கிவிட முடியாத ஆன்மீக கருத்துக்களை வெறும் அறிவு சார்ந்த விளக்கமாக மட்டுமின்றி, வெளிப்படுத்த முயலும்போது தன்னிச்சையாகவே இசைந்த வடிவங்களை அது பயன்படுத்துகிறது. அம்முறை கவிதையின் பண்பு. ஆனால் கவிதை இப்பார்வையையும், வெளிபாட்டையும் எல்லா அனுபவங்களுக்கும், மிக புறவயமான அனுபவம் என்றால் கூட பயன்படுத்துகிறது. ஆகையால் இயல்பிலேயே கவிதை ஒரு பொருளை அதன் புறத் தோற்றங்கள் கடந்து வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நாம் கவிதையின் விளக்கமுடியா ரகசியத்தை அல்ல அதன் அடிப்படைக் கூறுகளை காணலாம். சாதாரண பேச்சில், மொழி எல்லைகளுக்கு உட்பட்ட நடைமுறை தொடர்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயந்திரங்கள் வாழ்வுக்கு பயனளிப்பவை. ஆனால் அவற்றுக்கு உயிரென ஒன்றில்லை. நாம் சொற்களையும் அவ்வாறே பார்க்கிறோம், கருத்துக்களைப் பரிமாறும் சின்னங்களாக. நாம் சொற்களை உயிர்ப்பியுள்ளதாக மாற்ற நினைக்கையில்,  நமது குரலின் ஒலி வேறுபாடுகளின் மூலம், நாம் நம்மிடமிருந்து அதற்கு ஆற்றலை அளிக்க வேண்டியுள்ளது. நமது உணர்ச்சிகளின் மூலம் சொற்களுக்கு அவற்றின் தன்னியல்பில் இல்லாத ஒன்றை சேர்க்கிறோம். ஆனால், நான் நினைக்கிறன், மொழியின் வரலாற்றில் பின்னோக்கி பார்த்தால் அல்லது அதன் தோற்றுவாயையே பார்த்தால் மனித பேச்சின் நிலை இவ்வாறல்ல என்பதை உணர முடியும். சொற்கள் துடிப்புள்ள உயிர் கொண்டவையாக இருந்தது மட்டுமின்றி, அவற்றின் மேல் அவற்றை பேசுபவனின் கவனம், இன்று அதிநவீன அறிவாற்றல் கொண்ட நம்மைவிட கூடுதல். இது ஆதி மொழியின் இயல்பிலிருந்து வந்தது. அது உணர்வுகள், விரிந்த வரையறையற்ற மனப் பதிவுகளை வெளிப்படுத்துவதில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. நாம் இன்று அதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை. அறிவுசார் துல்லியம் என்பது அதன் இரண்டாம் பட்ச கவனமாகவே இருந்தது. அறிவு பரிணாம வளர்ச்சி அடைகையில் அத்துடன் இணைந்து இதுவும் முதன்மையானதாக மாறியுள்ளது. ஒரு ஒலி எப்படி ஒரு நிலையான கருத்தின் வெளிப்பாடாக மாறியது என்பதன் காரணம், அவ்வொலிக்கும் அறிவுக்கும் இருக்கும் தன்னியல்பான தொடர்பில் இல்லை. மனிதர்கள் ஒரு ஒலிக்கும் ஒரு கருத்துக்கும் உள்ள தொடர்பை அவர்களே ஏற்றுக்கொண்டால் அவ்வொலி அக்கருத்தை வெளிப்படுத்தத்தான் செய்யும். ஆனால் உண்மையான காரணம் என்பது ஒரு ஒலி மனித ஆன்மாவில், உயிரில் அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மையில் உள்ளது. ஒரு உதாரணம் நான் சொல்வதை நன்கு விளக்கும். ஓநாய் என்ற ஒரு சொல், அதன் தோற்றுவாய் நமது மனதில் இல்லை. அச்சொல் நமது அறிவாற்றலில் ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்துகிறது, அதன் பிறகு மற்றவற்றை நாம் செய்து கொள்ள வேண்டும்.  “கிழிப்பவன்” என்ற பொருள் கொண்ட 'वृक' (vrk) என்ற சமஸ்கிருத சொல். இச்சொல்லும் அப்படியே, அறிவாற்றலுக்கு ஒரு பொருளை உணர்த்துகிறது. ஆனால் உண்மையில் அது ஓநாய்க்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. அது மட்டுமின்றி அவ்வெளிப்பாடு கிழித்தலுடன் தொடர்பு கொண்ட ஒரு ஒலியுடனேயே நிகழ்ந்துள்ளது. இத்தன்மை ஆதி மொழிக்கு உயிர்த்துடிப்பு அளித்துள்ளது. ஒரு நோக்கில் மொழி தனது இயல்பான கவி விசையை இழந்துள்ளது. மற்றொரு நோக்கில் துல்லியத்தையும், தெளிவையும், பயன்பாட்டுத் தன்மையையும் அடைந்துள்ளது.     

தற்போது கவிதை திரும்பி செல்கிறது, அதன் மூலமுதலை மீட்கிறது, ஆனால் வேறொரு வழியில். படிமங்களின் மீது கவனம் செலுத்துவது மூலமும் ஒலிக்குண்டான உயிரின்மீதும், ஆற்றல்மீதும், உளப் பதிவுகள் மீதும் கவனம் செலுத்துவதின் மூலமும் கவிதை இம்மீட்பை செய்கிறது. கவிதை இதனுடன் அறிவாற்றல் அளிக்கும் சிந்தனையையும் இணைத்துக்கொள்கிறது. கவிதை, சொல்லின் அறிவார்ந்த மதிப்பை மட்டுமின்றி, அதன் உணர்வாற்றலை மட்டுமின்றி இவற்றின் மூலம் இவற்றைக் கடந்த ஆன்மாவையும் கொண்டு வருகிறது. ஆதலால் கவிதை என்பது சொல்லின் எல்லைக்குட்பட்ட அறிவார்ந்த பொருட்களுக்கு அப்பால் உள்ள எண்ணற்ற பொருட்களின் ஒரு குறிப்பு. ஆதிமொழி போல  மனிதனின் உயிர்-ஆன்மாவை(life-soul) வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, தற்போதைய பேச்சு போல அறிவாற்றலின் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, அவனது உயர்ந்த பரந்தபட்ட ஆன்மாவின் அனுபவங்களை, தரிசனங்களை, கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒன்றாக கவிதை உள்ளது. அவற்றை நமது மனம்-ஆன்மா(life-soul) மற்றும் அறிவாற்றலுக்கு உண்மையாக்குகிறது. அத்துடன் சொல்லின் மூலம் ஆன்மாவின் கதவுகளை திறக்கிறது. 

உரைநடை, மொழியை அதன் நடைமுறை பேச்சு பயன்பாட்டிலிருந்து மேலே உயர்த்துகிறது. ஆனால் அது பெரும் முயற்சியை செய்யாததால் கவிதையிலிருந்து வேறுபடுகிறது. உரைநடை சொல்லின் அறிவுசார் மதிப்பின் மீது தனது உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது. அது நடைமுறை பேச்சு பயன்படுத்தாத இசைவில்(rhythms) கவனம் செலுத்துகிறது அதன் நோக்கம் நடையில் ஒத்திசைவு. அறிவாற்றலை நிறைவிப்பதற்காக சொற்களை இணக்கமாகவும் ஒளிமிக்கதாகவும் இணைக்கிறது. அது நுட்பமற்ற நடைமுறையைவிட்டு துல்லியமான, நுட்பமான, நெகிழ்வான வெளிப்பாட்டை முயற்சிக்கிறது. இதன் முதல் நோக்கமே மொழியின் நிறைவு. உரைநடை இந்நிறைவைக் கடந்து, மொழியின் பல்வேறு கூறுகளின் மூலமும் சொல்லாட்சிகளின் மூலமும் தனது அறிவார்ந்த முறையீட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்த முதல் தடையை மீறி, அது உறுதியான ஒத்திசைவை(rhythm) அனுமதிக்கலாம், நேரடியாக உணர்வுகளைத் தூண்டலாம், தெளிவான அழகியல் நோக்கை வலியுறுத்தலாம். மேலோட்டமாக பார்க்கையில் கவிதைக்கு மிக நெருக்கமாக இருக்கும் அளவுக்கு படிமங்களை பயன்படுத்தலாம். ஆனால் அது அவற்றை அலங்காரத்திற்காக பயன்படுத்துகிறது. அல்லது தான் விளக்கும் சிந்தனைக்கு வலுவான அறிவுசார் பார்வையை சேர்க்கவே அதை பயன்படுத்துகிறது. அதே போல், உரைநடை எப்போதும் அதன் முக்கிய, நேயரும் மதிப்பிடுபவருமான அறிவாற்றல் மீதே கவனம் செலுத்துகிறது. தர்க்கமும் ரசனையும் அறிவாற்றலின் இரு ஆற்றல்கள். அவை உரைநடையாளனுக்கு முழுமுதற் கடவுள்கள். ஆனால் கவிஞனுக்கு அவை வெறும் சிறு தெய்வங்களே.

மிக வலுவான இசைவின் சமநிலையை அடைந்தால்(rhythmic balance), படிமங்களை தரிசனங்களுக்காக மட்டுமே பயன்படுத்தினால், தன்னை மொழியின் இன்னும் வன்மையான மூச்சுக்காற்றுக்கு ஒப்பளித்தால், உரைநடை தனது எல்லைகளை கடந்து கவிதையின் எல்லைக்குள் செல்லும். அது கவித்துவ உரைநடையாகும், அல்லது கவிதையே உரைநடையின் வடிவங்களை மாறுவேடமாக பயன்படுத்துவதாக தோன்றும். நிறைவு, ஊக்கம், அறிவார்ந்த ஒளி மற்றும் மிக்க கவனத்துடன் தூண்டப்பட்ட அழகியல் நிறைவு அதன் இயல்பான, சரியான ஆற்றலாக இருக்கும். ஆனால் ஒரு கவிஞனின் தனிச் சுதந்திரம் என்பது இதைக் கடந்து சென்று இன்னும் தீவிரமான ஒளியூட்டக்கூடிய மொழியை கண்டடைவதே. அந்த உத்வேகம் கொண்டச்  சொல், உச்ச தவிர்க்க இயலா வெளிப்பாடு(supreme inevitable utterance). அங்கு உன்னத ஒத்திசைந்த இயக்கமும்(divine rhythmic movement) நமது ஆன்மாவிலிருந்து ஊற்றெடுக்கும் முடிவின்மையும், அறிவின் ஆழமும் சந்திக்கிறது. அவன் ஒவ்வொரு முறையும் அதை கண்டடைய முடியாமல் போகலாம், ஆனால் அதற்கான அவனுடைய தேடல் என்பது விதிக்கப்பட்டது. அல்லது குறைந்தபட்சம் அது, அவனது வெளிப்பாட்டின் உயர்நிலை. அவன் அதை கண்டடைந்தது மட்டுமல்லாமல் அதில் ஆன்மாவின் புலப்பட்ட ஆழ்ந்த உண்மையை சேர்ப்பான் எனில், அவன் உரைப்பது மந்திரமாகிறது. 

தேடலிலோ கண்டடைதலிலோ எவ்வாறெனினும், கவிதையின் ஒத்திசைவும் நடையும் நம்மிலிருந்து ஆன்மா தன்னை வெளிப்படுத்த துடிக்கும் தரிசனத்தால் உண்டான ஆன்மீக பரவசத்தின் வெளிப்பாடு. அந்த தரிசனம் இயற்கையில் உள்ள எதைக்குறித்தும், கடவுள், மனிதன், பிற உயிர்கள், என்று எதைக் குறித்தும் இருக்கலாம். அது விசையும் வினையும், உணர்வுசார் அழகு, சிந்தனையின் உண்மைநிலை, உணர்ச்சி, வலி மற்றும் இன்பம், இம்மை மறுமை என்று எவற்றின் தரிசனமாகவும் இருக்கலாம். காண்பது ஆன்மா என்பது மட்டும் போதும். கண்ணும், புலனும், மனமும், அறிவும், அதன் கருவிகள் என்று இருத்தல் வேண்டும். அப்போது நாம் உண்மையான உயர் கவிதையை பெறுகிறோம். மாறாக நாம் அடைவது, அறிவார்ந்த, கற்பனை சார்ந்த, உணர்வு சார்ந்த பரவசம் என்றாலோ அவற்றுடன் உயர் ஆன்மீக பரவசம் இணையவில்லை என்றாலோ அல்லது அவை போதிய அளவு ஆன்மாவில் கரையவில்லை என்றாலோ நாம் கீழ்நிலை கவிதையையே பெறுகிறோம். கவிதையே நம்மில் உள்ள உயர்வற்றவைக்கு தான் என்றால், வெறும் அறிவுக்குத்தான் என்றால் நாம் கவிதையின் உண்மையான எல்லைக்கு வெளியில் செல்வோம், உரைநடையின் எல்லைக்குள் செல்கிறோம் அல்லது உரைநடை கவிதையின் வெளிப்புற ஆடைகளின் மூலம் மாறுவேடமிடுகிறது. நல்ல வாக்கிய வடிவம், கட்சிதமான  கவர்ச்சியான உத்வேகமான வெளிப்பாடு போன்ற உரைநடையின் மேலோட்டமான கூறுகளினால் தான் அந்த படைப்பு உரைநடையிலிருந்து வேறுபடுகிறது. அது கொஞ்சம் கூட அல்லது போதிய அளவு கவிதையின் சாரத்தை கொண்டிருக்கவில்லை.                                                     

மொழி வெளிப்படுத்துக்கூடிய எல்லாவற்றிலும் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று, புறவயமானது அல்லது துணைபுரிவது. மற்றொன்று, உண்மையானது அல்லது ஆன்மிகமானது. உதாரணமாக, சிந்தனையில் அறிவார்ந்த கருத்து மற்றும் ஆன்மக் கருத்து உள்ளன. அறிவு, அறிவார்ந்த கருத்தை தெளிவுபடுத்தவும் துல்லியமாக்கவும் செய்கிறது. அறிவைக் கடந்த ஆன்மக் கருத்து நம்மை, வெளிப்படுத்தப்பட்ட விஷயத்தின் உண்மைக்கு அணுக்கமாக அல்லது இணையாக கொண்டுசெல்கிறது. அதற்கிணையாக, உணர்வுகளில்(emotions) கவிஞன் தேடுவது வெறும் உணர்வுகளை அல்ல, உணர்வுகளின் ஆன்மாவை. அதில் உள்ள ஆனந்தத்திற்காக நம்மிலும் உலகிலும் உள்ள ஆன்மா உணர்வுப்பூர்வமான அனுபவங்களை விரும்புகிறது அல்லது ஏற்கிறது. கவிஞன் வாழ்க்கையின் உண்மையை அல்லது இயற்கையின் உண்மையை தனது மொழியில் உருவகிக்கிறான். இந்த பெரும் உண்மைக்காகவே, ஆனந்தத்திற்காகவே, அழகிற்காகவே அவன் தேடுகிறான், உண்மை ஆகிய அழகு, உண்மையின் அழகு, ஆதலால் அது நித்தியானந்தம். ஏனெனில் இத்தேடல் ஆன்மாவின் ஆழ்ந்த உண்மைகளை கண்டடைதலின் மூலம் நமக்கு ஆன்மாவின் ஆனந்தத்தை அளிக்கிறது. அடங்கிய, மிதமான உரைநடையின் மொழி இதை எப்பொழுதாவது மட்டும் குறிப்புணர்த்துகிறது. ஆனால் கவிதையின் மேலெழுந்த, துணிந்த பாணி அதை அணுக்கமாக, உயிர்புள்ளதாக்குகிறது. பாணியால் முடியாதவற்றை, கவிதை உயர்ந்த சந்தத்தால் [ஒத்திசைவால்](cadences) தனது சிறகுகளில் கொண்டு வருகிறது. இதுவே, கவித்துவ இயக்கத்தின், கவித்துவ மொழியின் அடையாளமான தீவிரத்தின் காரணம். இது சொல்லின் பின்னாலுள்ள ஆன்மிக தரிசனத்தின் உந்துதலால் வருகிறது. இது, புற மற்றும் அக உலகங்களில் உள்ள வடிவம் மற்றும் பெயர் மாயத் தீவுகளுக்கு மத்தியில் நிகழும் சுய கண்டடைதல் பயணத்தின் ஒரு ஆன்மிக பரவசம்.

ஆசிரியர் குறிப்பு:

ஆனந்தம் என்பது இந்திய ஆன்மிக அனுபவ மொழியின் படி, முடிவின்மை(infinite) தன்னிலும் தன் படைப்பிலும் உணரும் இன்றியமையா ஆனந்தம். முடிவின்மை சுயத்தின் ஆனந்தத்தால் எல்லாம் இருக்கின்றன. சுயத்தின் ஆனந்தத்திற்காகவே எல்லாம் உருவாக்கப்பட்டன.

***

மூலம் ஸ்ரீ அரவிந்தர் - ‘The Future Poetry’ தொகுப்பிலிருந்து

அரவிந்தர் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

ஜென் என்னும் வாழ்வு - கலை கார்ல் மார்க்ஸ்

இக்யு ஸோஜன்
ஜென் கவிதைகள் இயல்பாய் இயற்கையோடு ஒன்றிச் செல்லும் வாழ்வு எனப்படலாம்.

இப்படைப்பின் ஜென் கவிதைகளை வாசிக்கும் பொழுது நீரில் மிதக்கும் தக்கவை போல ஏதோ ஒரு உணர்வு என்னை மயக்கியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதே உணர்வு. எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகள்.  சில கவிதைகளை வாசிக்கையில் எனக்கானதாய் எண்ணிடத் தோன்றுகிறது. வாசிப்பவர்களை பொறுத்து அவரவர் எண்ணக் கீற்றுகளுக்கு ஒப்ப, அவரவர் வாழ்கைக்கு ஒப்புமை கொள்ளலாம்.  வாசித்தவற்றில் எனக்காய் பிடித்தவை பல, அவற்றில் சில.. 

எல்லாம் இழந்து விட்டாலும் இருப்பதைக் கொண்டு இன்புற்று இரு என்பதாக அமைகின்றது இத்தவிதை,

"பண்ணை வீட்டின்

கூரை எரிந்து விட்டது

இனி, என்னால் 

பார்க்க முடியும்

நிலவை"

                                                                                                                  - மிஸுட்டா மஸாஹிடெ

                                                                                                                                    ஜப்பான் 

(1657-1723)

இவ்வுலகில் வாழும் பொழுதுகளில் எதை நோக்கியோ ஓடிக் கொண்டே இருக்கின்றோம். முடிவானது என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை குறிப்பதாய்  இக்கவிதை,

"உண்கிறோம்,  கழிக்கிறோம்

உறங்குகிறோம், விழிக்கிறோம் - 

இது தான் நம் உலகம் - இதன் பிறகு

நாம் செய்ய வேண்டியதெல்லாம் 

ஒன்றுதான்,

இறப்பது"

            - இக்யு ஸோஜன்

வாழ்க்கையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கவிதையாக,

"இறுதியில் 

இந்தச் சாலையில் தான்

வந்து போவேன் நான் என 

நன்றாகத் தெரியும்

ஆனால்,

இன்றுதான் 

அந்த நாள் என்று

எனக்குத் தெரியாது 

நேற்று


- நாரிஹிரா (ஜப்பான் 825-880)

நமது அன்றாட வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். எல்லாம் நன்மைக்கானது என்ற எண்ணத்தோடு வாழ்தல் என்பதை பறைசாற்றுகிறது - 

இக்கவிதை,

"உனது மரணகாலம்

நெருங்குகிறது நீ 

இறந்து விடுகிறாய் 

என்றால் மிக நல்லது!


உனது மரணகாலம் 

நெருங்குகிறது நீ

இறக்காதிருக்கிறாய்

என்றால் - மிக மிக நல்லது"

ஸெங்காய் கிபன்

நாரிஹிரா 

உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றது. இந்த உலகம் முழுவதும் உடலுறவில் கட்டுண்டு கிடக்கிறது. அதுவே உலகை இயக்குகிறது என்பதை சுட்டுகிறது இந்த கவிதை,

எட்டங்குல நீளம் அது 

உறுதியானது 

என் 

செல்லப்பொருள் 

இரவில்

தனித்திருக்கும் போது

முழுக்க தழுவி கொள்கிறேன் - அதை வெகுகாலமாயிற்று அழகான பெண் ஒருத்தி அதை 

தொட்டு. என் கோவணத்துக்குள்

கிடக்கிறது ஒரு 

முழுப் பிரபஞ்சம்"

- இக்யு ஸோஜன்

வாழ்க்கையின் அத்தனை நிதர்சனங்களையும், இயற்கையின் அத்தனை உன்னதங்களையும் அப்பட்டமாய் அம்பலப்படுத்துகின்றன இந்த தொகுப்பில் உள்ள அத்தனை ஜென் கவிதைகளும்.

***

Share:

புன்னகைக்கும் கவிஞர்கள் - மதார்

சமீபத்தில் மரணம் குறித்த இரண்டு ஜென் கவிதைகளைப் படித்தேன். 

இரண்டு

அல்லது மூன்று

நூற்றாண்டுகள் வசிக்க

எண்ணியிருந்தேன், இருந்தும்,

இதோ என்னிடம்

வருகிறது மரணம், வெறும்

எண்பத்தைந்து வயதே நிரம்பிய

குழந்தையிடம்.


                               - ஹனபுஸா இக்கீய்

இன்னொரு கவிதை மோரியா ஸென் ஆன் என்பவர் எழுதியது,

நான் இறந்த பின்

ஏதேனுமொரு விடுதியில்

ஒயின் பீப்பாய்க்கு அடியில்

புதையுங்கள் என்னை.

ஒருவேளை, அதிர்ஷ்டவசமாய்,

மதுப் பீப்பாய் லேசாகக்

கசியக் கூடும். 

முதல் கவிதை மரணம் வரும்போது அதை அந்தக் கவிஞன் எப்படி பார்க்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கவிதையில் மரணித்தபிறகு எனக்கு இதைச் செய்யுங்கள் என்று கவிஞன் கூறுகிறான். இரண்டு கவிஞர்களுமே மரணத்தை ஒரு புன்னகையுடன் கவிதையில் எதிர்கொள்கிறார்கள். முதலாமவர் மரணம் நெருங்கி வருகையில் அதனருகில் ஒரு குழந்தையாக, ஒரு சிறிய பூவாக மாறிவிடுகிறார். குழந்தைகள் இறந்தால் சொர்க்கத்துக்குத் தான் போவார்கள் என்று ஒரு கூற்று உண்டு. அதன்படி கவிதையின் வழி கவிஞர் தான் செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார். இரண்டாமவர் உண்மையில் இறக்கவே விரும்பவில்லை. அவர் இந்த உலகின் இன்பங்களில் .நிறைபவர். தனக்கு மரணம் வந்துவிடக் கூடாது என்பதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறாரோ என்னவோ. இந்த இரண்டு கவிதைகளையும் நண்பர் ஒருவருக்கு படித்துக் காட்டினேன். அவர் இருவரில் இரண்டாமவரே சிறந்தவர், அவர் மரணத்தைத் தாண்டியும் தன் கனவைக் கண்டுவிடுகிறார் என்றார். ஆனால் இருவரில் வயது முதிர்ந்த மரணத்தின் கையை பிடித்துப் போகும் அந்த குழந்தையையே எனக்கு பிடித்திருந்தது. இரண்டாமவர் ஒயின் பீப்பாய்க்கடியில் புதையுங்கள் என்றாலும் அவருக்கு மரணிப்பதில் சிறு சஞ்சலம் தெரிகிறது. ஆனால் இருவருமே புன்னகைக்கிறார்கள் கவிதையில்.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இந்த வருடம் மழைக் குறைவு - விக்ரமாதித்யன்

குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை

உடைப்பவளை எனக்குத் தெரியும்

கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு

வந்தால் புன்னகைப்பாள்

தூறல் நாட்களில் மரச்சாலை வழியே

குடை பிடித்துப் போகும் அவளை

ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்

அடிக்கும் பட்டறைக்காரன்

லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்

நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்

உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்

அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்

எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்

பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்

அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே

குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த

அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்

பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்

அவளோ புன்னகை மிளிர

எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்

அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு

அன்பளிப்பாகக் கொடுத்தான்

இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே

அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்

அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்

எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன. 


 - யவனிகா ஸ்ரீராம்

(சிற்றகல் தொகைநூல், பக்கம் 271)

“இலக்கியம் நுட்பமானது கவித்துவம் நுட்பத்திலும் நுட்பமானது. இலக்கியம் ஒரு மொழிவழிக்கலை. கவித்துவமோ மொழிசார்ந்து வாழ்வின் நுட்பத்திலும் நுட்பங்களைத் தொட்டு உணர்த்துவது.”

- பூமா ஈஸ்வரமூர்த்தி

 (அதே நூலின் தொகுப்பாசிரியர் உரையில்)

நுண்ணிதும் நுண்ணிதான விஷயம். அறியப்படாத உலகம், அறியப்படாத வாழ்க்கை, அறியப்படாத மனிதர்கள் – நமது தமிழ்க்கவிதையிலேயே.

மனத்தடையின்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல விகற்பமில்லாமலும் விளங்குகிறது.

நாடகம் போலக் காட்சிகள் மாறுகின்றன. 

அவன்,

இவர்கள்

அவன்


அவளது சகஜபாவம்.

இவர்களது ஸ்திதி

அவனது வெள்ளந்தி மனசு.


அவன் பொறுப்பற்றுத் திரிவதாய் ஏசும் அவன்

புன்னகை மிளிர அறிமுகப்படுத்தும் அவள்

அவர்களின் அந்நியோன்யம்

அவ்வளவும் காட்சிகளாக.


“எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன”

இதுதான் கவிமனம்.

உண்மையான நவீனகவிதை.

நவீனமாகவும் இருக்கிறது; கவிதையாகவும் இருக்கிறது.


யவனிகா

விஷயமுள்ள கவிஞன் தான்;

வித்தகமான கவிஞனும் கூட


இப்படி ஒரு ஏழெட்டு பேர் இருக்கிறார்கள் 

என்பது தான் இன்றைய கவிதைச் சூழலில் ஆறுதலே.

(கூடு தமிழ் ஸ்டுடியோ இணையதளம்)

***

யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

கடல் சூழ்ந்த கவிஞன் - கமலதேவி


நான் வண்ணத்துப்பூச்சியாகிவிட்டேன்

கடந்தகாலம்

இரண்டு சிறகுகளாக வளர்ந்து

என் தோளில் அசைகிறது

நான் எழுதுகிறேன்

வானம் சிறுகுழந்தையாகி

என்னெதிரே துள்ளித்துள்ளி இறங்குகிறது

நல்ல வேளை

நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாகியிருக்கிறேன்

நன்றி கடந்த காலமே

இனி என் உண்ணாவிரதம்

ஒரு புன்னகையால் முடியும்

      - ஜெ. பிரான்சிஸ் கிருபா


ஆழ்மனதுடன் கொண்ட உறவால் தான் நாம் கவிதையை நெருக்கமாக உணர்கிறோம். காலகாலமாக  மானசீகமான ஒரு உணர்வுக்கடத்தல் கவிதை வழியே தொடர்ந்து வருகிறது. கவிதை மனிதஉணர்வுகளின் மொழிவடிவம் என்பதாலேயே கவிதை மற்ற இலக்கியவடிவங்களை விட மனதிற்கு நெருக்கமாகிறது.

நம்முடைய ஆழ்மனம் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள் நம் மூளையில் அச்சம்,குரோதம்,காமம்,வன்மம் மற்றும் அன்பு போன்ற உணர்வுகளால் உருவானது. அவற்றை சுற்றியுள்ள இயற்கையுடன் இணைத்து மனித மனம் மொழி என்னும் படிமங்களின் தொகுப்பாகிறது.

அந்த தொகுப்பில் உள்ள கூட்டு மனதின் ஆழ்மனப்படிமங்கள் தொடர்ந்து கவிதையில் வேறொன்றாக மாறிக்கொண்டிருக்கும் போது ஒரு கவியின் கவியுலகு விரிந்து கொண்டே செல்கிறது. 

கவிஞன் தன்னுடைய ஆழ்மனப்படிமங்களை சோழிகளைப்போல உருட்டி விளையாடுகிறான் அல்லது தன்னை அப்படியே அதற்கு ஒப்புக்கொடுக்கிறான்.

நம் ஆதி ஆழ்மனப்படிமங்களான  கடல்,கடவுள்,பறவையின் சிறகு,மழை,ஔி,அலைகள் போன்ற படிமங்கள்  மறுபடி மறுபடி வேறுவேறாக கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் வெளிப்படுகின்றன.

பொதுவாக ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் உணர்வுபூர்வமானவை. கடலின் ஆக்ரோசமும்,மீண்டும் மீண்டும் கரைக்கு வந்து திரும்பும் தவிப்பும்,ஏமாற் றமும்,ஆழ்ந்த மௌனமும் கொண்ட கவிதைகள் இவை.

கவிஞர் தன் கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே வகையான படிமங்களை வெவ்வேறு வெளிச்சத்தில் திருப்பிக்காட்டுகிறார். அதன் மூலம் அவரால் தனக்கென தனித்த அழகு கொண்ட உலகை உருவாக்கிவிட முடிகிறது.

‘கடலின் பெரும் கவலைகளை 

மேஜை மீதிருந்து மென்குரலில்

காற்றோடு புலம்பியிருந்த வெண்சங்கை

தூவானம் தெறித்திருக்கும் ஜன்னலருகே

இடம் மாற்றி வைத்தேன்…..

…..கிசுகிசுப்பான குரலில்

கதையாடத் தொடங்கியது அது’

என்ற தன் கவிதையில் வரும் சங்கைப்போலவே ப்ரான்ஸில் கிருபா தன் ஆழ்மனம் என்ற சங்கை வாழ்க்கை காற்றுக்கு திறந்து வைத்திருக்கிறார். மொழி அந்த சங்கை ஓயாது மீட்டிக்கொண்டே இருக்க அனுமதித்திருக்கிறார். ‘ப்ரான்சிஸ் கிருபா கவிதைகள்’ என்ற முழுத்தொகுப்பை வாசித்து முடித்ததும் அவர் தன்னிச்சையாக மீட்டப்படும்  ஓயாத ஒரு பெரும் சங்கு என்று தோன்றியது. கிட்டத்தட்ட கவிஞர்கள் அனைவருமே அப்படித்தானோ என்னவோ.

‘கடலுக்கு பெயர் வைக்க வேண்டும்

இல்லை கடலே போதுமா’ 

என்று புறவயமாக கேட்பதில் இருந்து,

‘இரண்டே இரண்டு விழிகளால் அழுது

எப்படி இந்தக் கடலை

கண்ணீராக வெளியற்ற முடியும்’ 

என்று தன்னையே கடலாக உணரும் கவிதை வரை இவரின் கவிதைகளில் கடல் வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது.

‘ஔிரும் சமுத்திர சிற்பம் நீ’

 என்று ஓயாது தழும்பும் ஒன்றை நிலையான சிற்பமாக்குகிறார்.

பரந்து விரிந்த ‘நீர் கொழுத்த கடல்’ ஒரு கவிதையில் ஒரு சொட்டாக வற்றுகிறது.

‘நீரெனினும்

காய்ந்துபோக அஞ்சி

கோடையை வென்று எஞ்சும்

ஒரு சொட்டு வைரம்

உன் அன்பு’

இவர் கவிதையின் அத்தனை பெரிய கடல், கண்கள் காணாத உள்நீரோட்டங்கள் கொண்டு கடினமான வைரமாக ஆகும் போது அதன் ஓயாத அலைகளை ஔியாகி வைக்கிறது.

பின் சட்டென அந்த ஒரு சொட்டு கடல் வானமாகி விரிகிறது. அதே கடலில் ஒரு மரக்கலம் கடவுள் அளித்த பரிசாகிறது. அந்த மரக்கலம் தான் அவரின் படைப்புலகம்.

கடல் கொண்ட ஊழி அழிவிற்குப்பின் தன் மரக்கலத்திலிருந்து தன் உலகை படைக்கிறான் கவிஞன். மனதின் அலையடங்கிய கரையில் அமர்ந்து தன் உலகை முடைகிறான். ஆனால் எப்போதும் அவன் மனதின் ஒரு கால் கடலிலேயே ஊன்றியிருக்கிறது. அது அவ்வப்போது அவனை கடருக்குள் இழுத்து கொள்கிறது.

‘தனக்கென முடைந்திருந்த மரப்படகை

எனக்கென பரிசாகக்கொடுத்தார் கடவுள்’

அங்கிருந்து அவன் ஆணையிடும் போது பயமுறுத்தம் அலைகள் அசையாத கற்பாறைகளாகின்றன.

மிகுந்த நெகிழ்தன்மை மிகுந்த ஒன்று பரான்சிஸ் கிருபாவின் கவிதையில் மிகக்கடினமான கற்பாறையாக மாறி பின் ஔிவிடும் வைரமாகிறது. அதை நோக்கியே சலிக்காமல் கரைகளை நோக்கி வந்து வந்து செல்கின்றன கவிஞரின் ஓயாத அலைகள். 

முழுத்தொகுப்பை வாசித்தப்பின் கடலே அவரின் கவிதா ரூபமாக மனதிற்குள் நிற்கிறது. 

ப்ரான்சிஸ் கிருபாவின் கடல் எதை நோக்கி ஓயாது அலையடிக்கிறது. எதை நோக்கி இத்தனை தொலைவு பயணப்படுகிறது.  அல்லது எதை தன் கவிதையின் வெளிச்சத்தில் வைத்து சலிக்காமல்  மறுபடி மறுபடி பார்க்கிறது.

‘கடலின் மடியில்

ஒரு குஞ்சு புயல்

சிறகென அலைகளை

பூட்டிக்கொண்டு

கரை வரை வந்து

ஏமாந்து திரும்பும்

முகம்

யார் முகம்?’

என்று அவரே கேட்டுக்கொள்ளும் அந்த முகம் என்பது என்ன?

‘நீரில் மேயும் மீன்கள்

நிலத்தில் தியானிக்கும் மலைகள்

ஆழத்தில் தூங்கும் பவளங்கள்

கடலை மயக்கும் ஆறுகள்

கூடி அழைக்கின்றன

காலையில் தவழும் கைக்குழந்தையை

விளையாடக்கூட பழகாத பிள்ளை

சும்மா சும்மா பார்க்கிறது அம்மா முகத்தை

அவள் கண்ணில் சங்கமிக்கின்றன

எல்லாக்கடல்களும்’

என்று இந்த மெசியாவின் காயங்களை ஆற்றும் ஒன்று இந்த புவியிலேயே உள்ள ஒன்றுதான். ஆனால் அது அவனுக்கு ஒரு குச்சியில் கட்டப்பட்டு எட்டி எட்டி காட்டப்படுகிறது. அல்லது இந்த மெசியா தான் தட்டிய இடத்தில் திறக்காத அதை வேறெங்கிருந்தும் பெறாமல் தன் காயங்களையே தன்னை மறைக்க அணிந்து கொண்டு தள்ளி தள்ளி செல்கிறான்.

இவனுக்கு உள்ளங்காலில் தைத்த ஒரு முத்தம் உடைமரமென வளர்கிறது உடலெங்கும். அந்த உடை மரத்தை முறித்து அவன் ஒரு வேய்ங்குழல் செய்கிறான். அவனுடைய ராகம் அவனிடமில்லாததால் அவன் மூச்சுகாற்றில் அந்த குழல் தானே பற்றி எரிந்து கரிகிறது.

‘முழுநிலவில்

வெயிலடிக்கும் இரவில்

நான் மட்டும் விழித்திருக்கிறேன்

தன் சிறகில் நிற்கும் பறவை

அந்தரத்தில் உறைகிறது

என்னருகே

ஒரு ராகத்தில் தூங்குகிறாள் மீரா

உச்சி முதல் பாதம் வரை

அந்தப்பாடலை பார்க்கிறேன்

கேட்க முடியவில்லை

கண்ணனில்லையோ நான்’

கவிஞரின் இந்த தாபமே இறுதி முத்தத்திற்கு ஊழியென்று பெயர் வைக்கிறது.

காட்டுத்தீ தின்று அழிக்கும் ஒரு அடர்ந்த காடு இந்தக்கவிதைகளில் உள்ளது. தீயின் வெம்மையில் வெடித்து சிதறுகின்றன மொழியின் கிளைகள். பச்சை மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்டை இதில் காண முடிகிறது. தீ தீயை உண்டு பெருந்தீயாகும் அழகை கொண்டவை இந்தக்கவிதைகள். எரிவது வரை எரிந்து முடித்தப்பின் அது, 

‘ஒரு துண்டு பூமி

இரண்டு துண்டு வானம்

சிறு கீற்று நிலவு

சில துளிகள் சூரியன்

ஒரு பிடி நட்சத்திரம்

ஒரு கிண்ணம் பகல்

ஒரு கிண்ணிப்பெட்டி இருள்

மரக்கூந்தல் காற்றே

நூலளவு பசும் ஓடை

குடையளவு மேகம்

ஒரு கொத்து மழை

குட்டியாய் ஒரு சாத்தான்

உடல் நிறைய உயிர்

மனம் புதைய காதல்

குருதி நனைய உள்ளொளி

இறவாத முத்தம்

என் உலகளவு எனக்கன்பு’


என்று மெல்லத்தணிகிறது. ஆனால் அந்தக்காட்டு தீயின் ஆதிதுளி பொறிகள் அவருக்கு கிடைக்காத இந்த சின்னஞ்சிறியவைகளே.

பசியும்,காதலும்,தனிமையும்,தனிமையின் மன தத்தளிப்பும்,தன்னில் உறையும் யாவற்றின் மீதான அன்புமே கிருபவை கொளுத்தி எரிந்து தீய்க்கும் பொறிகள்.  கவிதைகளில் அந்தத்தீப்பொறிகள் கொளுந்துவிடுகின்றன. பொறியாகி நிற்பதும் பேருருவாகி நிற்பதும் ஒன்றே. தானே எரித்து முடித்தப்பின் தன்னில் புதைத்து வைத்த விதைகளால் மீண்டும் வேறொரு காடு துளிர்க்கிறது. உயிர்த்தெழும் காட்டிற்கு ஈரமாய் இருப்பது இந்த மெசியாவின் நினைவு என்னும் குருதி. 

‘உளி விலகும் தருணம்தான்

நெருக்கத்தை இரண்டாகப்பிளக்க

தூரம் பாரம் அழுத்துகிறது.

மேலும் இது…..

நான் விரும்பி ஏற்கும் காயம்’ 

மறக்க முடியாதவற்றின் கவிதைகள். இவை தழும்பை கீறிப்பார்க்கும் தருணங்கள்.

காயங்களும் ஒரு மெசியாவின் காயங்களாக இருப்பதால் ஏற்ற சிலுவையின் பாரத்தை காலத்தால் எளிதில் கடந்து செல்ல முடியாது என்று தோன்றுகிறது. விரும்பி ஏற்கும் காயத்தின் ஈரம் காய்வதில்லை.

***

ஜெ. பிரான்சிஸ் கிருபா தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

தன்னை நிறுவுதலின் வழி - பாபு பிரித்விராஜ்

வகுப்பில் அழிக்காமல் விட்டுப்போன கரும்பலகையில் கணக்குப்பாடத்தின் முன் ஒரு காட்சிப்பொருளாய் எப்போதும்  நின்றிருக்கிறேன். நேற்றும் புரியவில்லை...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (3) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (2) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (122) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (16) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (4) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (11) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (3) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (2) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (122) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (16) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (4) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (11) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive