கலாப்ரியாவின் கவியுலகு - பாலாஜி ராஜூ

கவிஞர் கலாப்ரியா தன்னுடைய கவிதைகளுக்கான கச்சாப் பொருட்களை தன்னைச் சுற்றி வாழும் அன்றாட மனிதர்களின் எளிய வாழ்விலிருந்தே பெற்றுக்கொள்கிறார். புறச்சூழலையும் அதன் இயக்கங்களையும் கூரிய நிலையில் காட்சிப்படுத்தி வாசகனிடம் அளிக்கிறார். அகவயமான உணர்வு வெளிப்பாடுகளால் நிறைந்த, வாசகனிடம் பூடக மொழியில் உரையாடும் பெரும்பாலான நவீனக் கவிதைகளிலிருந்தும், கவிஞர்களிடமிருந்தும் அவருடைய கவிதைகளும், கவியாளுமையும் தனித்து நிலைகொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மண்ணின், மனிதர்களின் இயல்புகளைப் பேசினாலும், கவிதைகள் மட்டுமே தன்னுடைய இயல்புகளால் வாசகனில் தீண்டும் பிரத்யேகமான புள்ளிகள் அவருடைய கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன. 

மனிதர்கள்:

இந்தக் கவிதை வாழ்வின் இரண்டு ஆதாரமான உண்மைகளைத் தொடுகிறது. ஒன்று துயரங்களிலிருந்து மீண்டெழுந்து வாழ்வைத் தொடர எத்தனிக்கும் ஒரு பெண்ணின் பிம்பம், அது உலகளாவியது. இரண்டு காலம் துக்கங்களுக்கெல்லாம் கருணையுடன் காத்துக்கொண்டிருப்பதில்லை, தொடர்ந்து வாழ்தல் மட்டுமே எதிலிருந்தும் மீள ஒரே பாதை எனும் உக்கிரமான உண்மை.

"சீக்கிரம் போங்கலே - யாராச்சும் வந்துரப் போறாக - எழவு கேக்கதுக்கு" என்ற வரிகளில் சமூகம் இழப்பை எதிர்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மேல் நிகழ்த்தும் வன்முறையை உணரமுடிகிறது. போட்டோக் கண்ணாடியில் முகம் பார்த்து வெறும் நெற்றியை அழுந்தத் துடைக்கும் அந்தப் பெண்ணின் செயலில் ஒளிந்துள்ளது இந்தக் கவிதையின் சூட்சுமம்.

உயிர்த்தெழுதல்

பிடிவாதம் பிடிக்கும்

செத்துப்போன

கணவனின் ஜாடையிலான

சின்னவளுக்கு

எவர்சில்வர் தட்டை

எடுத்துக் கொடுத்து – 

பெரியவனையும்

அவசரப் படுத்துவாள்


"சீக்கிரம் போங்கலே

யாராச்சும் வந்துரப் போறாக

எழவு கேக்கதுக்கு – "


வீட்டைப்பூட்டித்

தெருவில் இறங்கியவள்

திரும்பி வந்து

நெற்றில் பொட்டு வைத்து

விட்டோமா என்று

போட்டோக் கண்ணாடியில்

பார்த்து

வெறும் நெற்றியை

அழுந்தத்துடைத்து

மறுபடி கிளம்புவாள்


டவுண்

டீக்கடைகளுக்கு தானே

பால் எடுத்துக் கொண்டு

பதினேழாம் நாள்.

இந்தக் கவிதையில் உள்ள தாழ்வான உத்திரம் இயல்பான ஒரு படிமமாக மாறுகிறது. இளம்பிராயத்தில் உலகில் எல்லாமே பெரிதாகக் காட்சியளித்து ஒரு வியப்பை ஏற்படுத்தி நம்மை உயிர்ப்பாக வைத்திருக்கிறது. நாம் வயதடைகையில் வாழும் சூழல் சுருங்கத் தொடங்குகிறது, உலகியல் சலிக்கிறது. 

தந்தை தூக்கிட்டிகொள்ளும் உத்திரம் அவர் இளமையில் அண்ணாந்து பார்த்து வளர்ந்த ஒன்றுதான். வீட்டின் மனிதர்களுக்கு வெவ்வேறாகப் பரிணமிக்கும் உத்திரம், தந்தைக்கு முற்றிலும் வேறொன்றாக மாறுகிறது. கவிதை நம் உலகில் உள்ள உத்திரத்தையும், அதை நோக்கிய நம் அணுகுமுறையையும் கேள்வி கேட்கிறது.

கறுப்பேறிப்போன

உத்திரம்,

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும் உயரத்தில்.


காலேஜ் படிக்கும் அண்ணன்

அதில் அவ்வப்போது

திருக்குறள்,

பொன்மொழிகள் – 

சினிமாப் பாட்டின்

நல்வரிகள் – என

எழுதியெழுதி அழிப்பான்

எழுதுவான்.


படிப்பை நிறுத்திவிட்டு

பழையபேட்டை மில்லில்

வேலை பார்க்கும் அண்ணன்

பாஸிங்ஷோ சிகரெட்டும்

தலைகொடுத்தான் தம்பி

விளம்பரம் ஒட்டிய

வெட்டும்புலி தீப்பெட்டியும்

உத்திரத்தின்

கடைசி இடைவெளியில்

(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே

பத்திரப்படுத்தி வந்த

தாத்தாவின் – பல

தல புராணங்கள்

சிவ ஞானபோதம்

கைவல்ய நவநீதம்


சைவக்குரவர் சரித்திரங்கள்

பலவற்றை,

வெள்ளையடிக்கச் சொன்ன

எரிச்சலில் – பெரிய அண்ணன்

வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி

விளக்கு மாடத்தில்

அடைத்ததுபோக

உத்திர இடைவெளிகளில்

ஒன்றில் தவிர

அனைத்திலும்

அடைத்து வைத்திருப்பாள்

அவன் அம்மா.


முதல்பிள்ளையை

பெற்றெடுத்துப் போனபின்

வரவே வராத அக்கா

வந்தால் – 

தொட்டில் கட்ட

தோதுவாய் – அதை

விட்டு வைத்திருப்பதாயும்

கூறுவாள்.


நின்றால் எட்டிவிடும்

உயரம்

என்று

சம்மணமிட்டு

காலைக் கயிற்றால் பிணைத்து – 

இதில்

தூக்கு மாட்டித்தான்

செத்துப் போனார்

சினேகிதனின்

அப்பா.

***

புறச்சூழல்: 

இந்தக் கவிதையில் இருப்பவை சில காட்சிகள், மனிதன் உட்பட சில உயிர்களின் இயல்பான எதிர்வினைகள். நாம் மனதில் வரித்துக்கொள்ளும் காட்சிகளின் இனிமையும், கவிதை வரிகளின் எளிமையுமே இதை மறக்க இயலாத வாசிப்பனுபவமாக மாற்றுகிறது. 

வாசகன் எளிய கவிதை போன்று தோற்றமளிக்கும் கவிதைகளைக் குறைத்துமதிப்பிட வாய்ப்பிருக்கிறது, ஆனால் அங்குதான் ஒரு கவிஞனின் மேதமை ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைத் தமிழில் பல கவிஞர்களின் கவிதைகளிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். அந்த வரிசையில் 'பாதை' கவிதை இயல்பாகச் சென்று அமர்கிறது.

பாதை ('தீர்த்த யாத்திரை' தொகுப்பு, 1974)

குடிசையோரம் ரயிலோடும்

கொட்டில் காளை

தொடை சிலிர்க்கும்

அம்மணச் சிறுமியோ,

புதிய விசிலூதி

ரயிலைக் கூப்பிடுவாள்.


தூசிக்குப் பயந்து

வாயும் கண்ணும்

மூடிக் கிடக்கிற,

களத்து மேட்டுத் தொட்டில்

பிள்ளைகளின் கனவெல்லாம்

வண்ணாத்திப் பூச்சி


ஊமைத் தவளையை விழுங்கி

நெளியமாட்டாமல், வரப்போரம்

தவிக்கும் சாரைக்காய்

பள்ளிப் பையன்

கல்லைத் தேடுவான் அவன்

பையும் தூக்குச் சட்டியும்

பாதையோரம் தவமிருக்கும்.

***

விலங்குகள்:

மனிதர்களின் உலகைத் தாண்டி நிலத்தின், அங்கு வாழும் விலங்குகளின் சித்திரங்களையும் அவருடைய கவிதைகளில் பரவலாகக் காண முடிகிறது. நகரில் ஊடாடும் பன்றி, இலக்கில்லாமல் அலையும் நொண்டித் தெரு நாய், தாம்புக் கயிற்றை அவிழ்த்துக்கொண்ட வண்டிக் காளை, பாம்பு, காக்கை, பூனை, ஆடு, புறா, ஈக்கள் என அவருடைய கவிதைகளின் மூலம் நெல்லை மற்றும் தென்மாவட்டங்களையும், அதைச் சுற்றிய நிலப்பகுதிகளின் பண்புகளையும் குறித்த ஒரு துல்லியமான புரிதலை வாசகனால் வளர்த்துக்கொள்ள இயலும்.

நிழலை மட்டுமே தேடி ('தீர்த்த யாத்திரை' தொகுப்பு, 1974)

கழுத்துக்கயிறு சகதியில்

குளித்து வீதியில் கோலமிட

மிக அவசரமான நகரவீதியில்

மாட்டு வண்டியின்

காளையொன்று தப்பித்து

தனித்து ஓடியது வேகமாய்

சில கார்கள் வளைந்து விலகின

மிரட்சி தொத்த,

சில லாரிகள் வளைந்து விலகின


காலில் மிதிபடும் கயிறு

கழுத்தை இழுக்க

தாள இடைவெளியுடன்

காளை கொம்பசைக்க

பயந்து போயொரு

சைக்கிள் வாத்திச்சி

கேரியர் நோட்டுகளுடன்

கீழே விழுந்தாள்.


இன்னொரு கிழவன் ஏசினான்.

"யாரோ சிறுவன்

தன்னைத் தள்ளியதாய்"


சிலர் விரட்ட

சிலர் மிரள

காயடித்த வண்டிக்காளை

எதிர்வந்த பசுவுக்காய்

ஏனோ நின்றது.

***

'அவளின் பார்வைகள்' ('வெள்ளம்' தொகுப்பு, 1973) 

கவிதை தன்னில் மிகச் சரியான முறையில் காட்சிப்படுத்தும் ஒரு பிம்பம், நம்முடைய உணர்வுகளின் வீச்சிற்கு மிக நெருக்கமாக அமைந்துவிடுகையில் அந்தப் பிம்பமும், வரிகளும் ஏற்படுத்தும் கிளர்ச்சி என்றும் உடனிருப்பது. இந்தக் கவிதையில் காலாப்ரியா அந்த மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார், அவருடைய தொடக்காலக் கவிதைகளில் ஒன்று இது.

காயங்களுடன்,

கதறலுடன் ஓடி

ஒளியுமொரு பன்றியைத்

தேடிக் கொத்தும்

பசியற்ற காக்கைகள்

***

கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பது 'கலாப்ரியா கவிதைகள்' தொகுப்பிலிருந்து, சந்தியா பதிப்பகம்.

கலாப்ரியா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

பூத்த மலர் கேட்பது இசை - மதார்

பூவை அணுகும் வண்டு பூவின் இசையைக் கேட்கலாம். பிரதீப் கென்னடியின் இந்த கவிதையில் பூத்த மலர் இசையைக் கேட்கிறது. 'பூத்த மலர் கேட்பது இசை' என்ற வரியை ஒரு கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுத முடியும். பித்து நிலை கவிதையை அணுகும் கருவி. பூத்த பித்து கேட்பதும் கவிதையைத் தான். 

தளும்புகிறது

கடல்

மடையில்லா பெருநதி

ஓடம்

பூத்த மலர் கேட்பது

இசை

எல்லாம் என்

குழல் விழுந்த துளை

வானின் நட்சத்ரங்கள்  முடிவுறாத கோலத்தின் புள்ளிகள் என்கிறார் பிரதீப் கென்னடி. 

புள்ளி இட்ட கோலம்

இரவில் என் நெஞ்சின்

முடிகளை கோதி பார்த்து

சிலவற்றை புடுங்கிப்பார்த்து

திரும்பி படுத்த மகள்

வானத்து நட்சத்திரங்களை

புள்ளிகளாக பாவித்து

கோலமிட்டு முடிக்க முயன்று

முடியுமுன்னே மீண்டும்

என் மாரின் மயிர்களுக்கு திரும்பினாள்


அவள் வரைந்த

அந்தரத்து கோலத்தை

நான் தொடர்ந்தேன்

அம்மாவைபோலவே

இறைவனின் புள்ளிகள் அழகானவை

அவளைபோலவே

இறைவனின் கோலநோட்டு முடிவதில்லை

அவனுடைய ஒரு வாசல்தான்

இங்கே ஒரு வெளி

ஒரு வாசலின் கோலமும்

இன்னொரு வாசலின் கோலமும்

ஒரு கோலத்தின் இரு புள்ளிகள்

மகாகோலம்

மகாபுள்ளிகள்

மகாஅரிசி

மகாஎரும்பு

மகாஅம்மா

மகாஇரவு

மகாமாரும் சிறியமகளும்

'அவனுடைய ஒரு வாசல் தான் இங்கே ஒரு வெளி' என்ற வரி கவிதைக்கு புதிய திறப்பை தருகிறது. இரண்டு வெளிகள் - வானம் ஒரு வெளி, பூமி ஒரு வெளி. வானவெளி முழுக்க விண்மீன் கோலங்கள். பூமியிலோ ஆங்காங்கே மட்டும். அதுவும் அன்னை மனது வைத்தால். ஒரு புது உரையாடலையும் கவிதைக்குள்ளேயே இந்த கவிதை திறக்கிறது. தந்தை - மகள், இறைவன் - தாய், விண்மீன் கோலம் - மாவு கோலம், வானம் - பூமி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் பேசிக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதையில். தந்தை மகளின் உரையாடல் கவிதையில் நேரடியாக சொல்லப்படுகிறது. அதைத் தவிர்த்து மற்ற உரையாடல்களை வாசிப்பில் விரித்தெடுக்கும் சாத்தியம் இந்தக் கவிதையில் உள்ளது. 

இடைவிட்டும் விடாத ஆடல்

காற்றின் நிலத்தில்

உந்தி தத்தி

ஒன்றென பறக்கும்

ஜோடி பட்டாம்பூச்சிகள்


ஒன்றின் நடனத்தை

மற்றொன்று தொடர்கிறது

சட்டென்று இரண்டாவதை

நடிக்கிறது முதலாவது


இனைய முயலும்

இரண்டு இசை

கருவிகள் அவை

இணைய முடியாததன்

சூட்சமம் இசை 


ஆடிமுன் அமர்ந்து

முடியாது ஆடும்

ஆடல் அவை 

கவிதைக்குள் ஏதாவது ஒரு உயிர் அல்லது பொருள் இரண்டாக வரும்போது, கவிதை அதைக் கொண்டே நிகழ்ந்து விடுகிறது. அதன் சாத்தியங்கள் பல. பிரதீப் கென்னடியின் இந்தக் கவிதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளின் நிகழ்த்துக் கலை சொல்லப்படுகிறது. ஒன்றின் நடனத்தை மற்றொன்று தொடர்கிறது, சட்டென்று இரண்டாவதை நடிக்கிறது முதலாவது என்கிற வரிகள் அழகானவை. மேலும் அவை ஒரு பாடலின் இணைய முயலும் இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளின் இசையாகின்றன. ஒரு நல்ல கவிதையில் இசையைக் கேட்கலாம்  என்ற தேவதேவனின் கூற்று நினைவில் வருகிறது. 

நொண்டி அடிக்க 

அழைக்கிறாள் என் மகள்

இரண்டு கால்களை

தூக்கி செல்கிறேன் நான்

மேலே உள்ள வரிகள் பிரதீப் கென்னடியின் ஒரு கவிதையின் முடிவில் வருபவை. இரண்டு கால்களையும் விளையாட்டுச் சாமானாக தூக்கிக் கொண்டு ஓடும் ப்ரதீப் கென்னடியின் மகள் கவிதையாகத்தான் இருக்க முடியும்.

***

பிரதீப் கென்னடி வலைப்பக்கம்

Share:

கவிதைகள் கொண்டு விஷ்ணுபுரம் சேர்தல் - கடலூர் சீனு

1

வெறும் ஒற்றைத் துடுப்புடன் படகைச் செலுத்திக்கொண்டிருந்தவன் அதனையும் இழந்தேன்.

சுற்றிலும் பரந்து கிடக்கும் விரிந்த நீர்ப்பரப்பை

முதல்முறையாகப் பார்த்தேன். (கோ யுன்)

எளிய கவிதைதான் எனினும் இரண்டு நிலைகளில் இது எனக்களித்த உணர்வு அலாதியானது. இரண்டுமே என் சொந்த வாழ்வில் இருந்து எழுந்தது. 

முதல் நிலை என் புற வாழ்வு சார்ந்தது. அப்போது என் பதின்வயதின் இறுதியில் இருந்தேன். மெல்ல சரியும் குடும்பம், தொழில், பொருளாதாரம், பெருகும் கடன், நோயுற்று நலிந்துகொண்டிருந்த அப்பா, அந்த நிலையிலும் சரிவு மட்டுமே கொண்டு வரும் எந்தக் கீழ்மையும் எங்களை தீண்டாமல் காவல் நின்றார் அப்பா. எதுவுமே புரியாத, எவருமே துணையற்ற அந்த வயதில் அந்த சூழலில் அதில் நிலைக்க கடக்க  என் அப்பா மட்டுமே எங்கள் குடும்பத்தின் ஒரே பற்றுக் கோலாக இருந்தார். அவர் இறந்த மறு கணமே, நாங்கள் சரிந்து கொண்டிருக்கும் பாதாளத்தின் மௌன அழைப்பு எங்கள் குடும்பத்துக்கு முதன் முறையாக செவியில் விழுந்தது. எங்களை துரும்பாக்கி அலைக்கழிக்கப் போகும் கீழ்மையின் கடலை இதுவரை அவ்விதமே அங்கே இருந்து அதுவரை என் கண்ணில் படாத அந்தக் கடலை முதன் முறையாகக் கண்டேன். 

இரண்டாம் நிலை என் அக வாழ்வு சார்ந்தது. அனாதைத் தனத்துடன் அத்து அலைந்த நாட்களில் என் துயர்கள் சார்ந்து பகல் கனவுகள் பல கொண்டிருந்தேன். அதில் ஒன்று கடலூர் சீனு எனும் தேர்வு செய்யப்பட்ட ஆத்மா ஒன்று ஆத்மீக உயர் நிலை எய்தவே இத்தகு லௌகீக துயர்களில் விழுந்து புரள்கிறது என்பதும். ஜிட்டு ஓஷோ என  தனி மனித ஆத்மீக தவிப்பை நிரந்தரமாக  காயடிக்கும் ஆற்றல் கொண்ட எல்லா குப்பைகளையும் வாசித்து தள்ளினேன். தமிழ் நாட்டில் தேடி தேடி சரியாக ஆத்மீக வேடம் அணிந்து திரியும் எல்லா அய்யோக்கியர்களிடமும் முழு மடையானாக சென்று சிக்கினேன். ஒவ்வொருவரும் என்னை வைத்து தான் அதுவரை அறிந்திராத எது எதையோ பரிசோதித்து பார்த்தனர். உடலாலும் உள்ளத்தாலும் இனி சீர் செய்யவே இயலா கோணல் கொண்டவன் எனும் நிலைக்கு அவர்கள் என் மேல் பிரயோகித்து பார்த்த பரிசோதனைகள் தள்ளிச் சென்றது.

என்னை நானே சீரழித்துக்கொள்ளும் நிலை, ஒரு பௌர்ணமியின் போது விருபாஷா குகை அருகே அமர்ந்து வானையும் அடிவார அருணை பேராலயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னை விட்டுப் போனது. இப்போதும் அதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு நிலை. ஒரு கணம் அல்லது கோடானு கோடி யுகம் தன் உள்ளே பொதிந்த ஒரு கணம் அது. வாழ்நாள் முழுக்க தலைக்கு மேல் மேகங்கள் மட்டுமே அறிந்த ஒருவன், முதன் முறையாக வானம் கண்ட கணம். அணுவிலும் அணுவாக இயங்கும் ஒவ்வொரு துகளுக்கு இடையிலும் வியாபித்திருக்கும் அந்த வானத்தை உணர்ந்த கணம். எனக்கு மிகமிக அருகே என்றும் வாழும் ரமண நிலை எனும் இருப்பை முதன் முறையாக உணர்ந்த கணம். எப்படியோ மீண்டு வந்து இந்த துடுப்பைப் பற்றிக்கொண்டு விட்டேன். மீண்டும் அந்த வானை  விரி கடலைக் காண கையில் உள்ள இந்த ஒற்றைத் துடுப்பை நான் வீசி எறிய வேண்டும். ஆம் ஒரே ஒரு கணம் எனினும் கடல் கண்டவன் நான். அது எனக்கு இயற்கை அளித்த ஆனந்தம். இந்த ஒற்றைத் துடுப்பை எப்போது விடுவேன் தெரியவில்லை . அதுவே எனக்கான துயர். 

2

சகோதரத்துவம்  (ஆக்டேவியா பாஸ்)

நானொரு மனிதன்.

சிறிதே எனது வாழ்வு.

இவ்விரவோ மிகப் பெரியது.

ஆயினும் நான்

அண்ணாந்து பார்க்கிறேன்.

என்னவென்று புரியாமலே

நட்சத்திரங்கள் எழுதுவதை;


நானுமே கூட எழுதப்பட்டவன்தான்.

இதோ இக்கணத்தில்

எவரோ என்னை உச்சரிக்கிறார்கள்.

சிறு வயதில் விடுமுறைக்கு சென்ற சித்தி வீட்டில்தான் முதன் முதலாக அந்த தின்பண்டத்தின் பெயரை கேட்டேன். "தேன் குழல் சாப்டுரியா" சித்தி கேட்ட மறு கணமே, உள்ளே தேன் வண்ணம், தேன் வாசம், தேன் ருசி எல்லாம் எழ, அந்தக் தேன் எந்தக் குழலில் நிறைக்கப்பட்டிருக்கும் எனும் ஆவலும் உந்த உம் உம் என மண்டையாட்டினேன். வந்த பண்டத்தைக் கண்டு கடும் ஏமாற்றத்தில் கண்ணீர் மல்கினேன்.

சில வருடம் முன்னர் ஈரோடு கிருஷ்ணன் இதுவரை நான் கேள்விப்பட்டிராத பழம் ஒன்றின் பெயரை சொல்லி அதன் ஜூஸ் சாப்பிடலாமா என கேட்டார். நான் எப்போதும் போல ஈரோட்டாரை சந்தேகமே படாமல் அந்த வினோத பெயர் கொண்ட பழத்தின் ஜூஸ் நோக்கி ஏழு கடல் ஏழு மலை தாண்டி பயணித்தேன். இறுதியில் என்  கைக்கு வந்தது அந்த பகுதியில் மட்டும் அந்த வினோத பெயரில் புழங்கும் தர்பூசணி பழத்தின் ஜூஸ். 

இப்படி சமீபத்தில் அஜி குடும்பத்துடன் ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு முடிக்க அமர்ந்திருக்கயில், புதுச்சேரி மணி மாறன் மெனு பார்த்து நான் அதுவரை கேள்விப்பட்டிராத வினோத பெயர் கொண்ட உணவு ஒன்றை எனக்கென ஆர்டர் செய்தார். நீண்ட காத்திருப்புக்கு பின் வந்தது. கொண்டைக் கடலை குருமா உடன் சோலா பூரி.

நான் வழக்கம் போல அசடு வழிவது வெளியே தெரியா வண்ணம் பூரிக்குள் குனிந்து கொண்டேன். அப்போதுதான் அஜி நீலம் குறித்து எழுப்பிய ஏதோ ஒரு கேள்வி என் காதில் விழ, நான் உத்வேகம் கொண்டு, "அஜி விஷ்ணுபுரத்தில்  சாருகேசி நடனம் ஆடிக்கிட்டு இருக்கும்போது திருவடி அவளை கொல்ல போவான், அப்போ சாருகேசி அந்த அத்தியாயத்தில் என்னவா இருக்காளோ அதுதான் வெண்முரசு நீலத்தில் பல அத்யாயமா விரிஞ்சிருக்கு" என்றேன். அருணாக்கா இடை மறித்து அது சாருகேசி இல்லை லலிதாங்கி என்றார்கள்.  அஜி புன்னகையுடன் "இவ்ளோ இலக்கியத் தீவிரவாதியா இருக்கீங்களே ரெண்டு பேரும். நான் இப்போ பேசிக்கிட்டு இருக்குறது நீலம் நாவல் பத்தி இல்ல. நீலம் பதிப்பகம் பத்தி" என்று சொல்ல, நான் முகத்தில் குருமா வழிய மீண்டும் பூரிக்குள் தலைபுதைத்துக் கொண்டேன்.

ஒரு வாசகனின் வாழ்நாளெல்லாம் தொடரும் பண்பு ஒரு இலக்கியப் பிரதிக்கு உண்டு என்று நான் விஷ்ணுபுரம் வாசிப்பதற்கு முன்பாக எவரேனும் சொல்லி இருந்தால் அன்று நான் அதை நம்பி இருக்க மாட்டேன். இன்று சொல்வேன் ஒரு உயர் இலக்கியப் பிரதி எழுதப்படுவதே அதன் பொருட்டுதான். அப்படி தனதேயான ஒரு பெரும் இலக்கியப் பிரதியை அடைந்த வாசகனை ஒரு வகையில் ஈடேற்றம் கண்டவன் என்றே சொல்லிவிடலாம்.

சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் இருப்பினும், அகத்தாலும் புறத்தாலும் பெரிய (அப்படி நான் நெடுநாட்கள் நம்பிய) கொந்தளிப்புக்குப் பிறகே விஷ்ணுபுரத்துக்கு வந்து சேர்ந்தேன். இதுகாறும் என் சொந்த வாழ்வு வழியே நான் கொண்டிருந்த அகந்தையை ஒரே வீச்சில் துடைத்து எறிந்தது விஷ்ணுபுரம். முடிவிலி முன் என் இருப்பை ஒரு துரும்பாக்கி நிறுத்திக் காட்டி என்னை நோக்கி நகைத்தது. என் தவிப்புகள் அனைத்தையும் சிறு கூழாங்கல் என்றாக்கும் பெரு மலையை எனக்குக் சுட்டிக் காட்டியது. பிரதிக்குள் பிரதியாக வரும் நீலகேசி அடிகள் எழுதிய தச பிரச்ன மாலிகா நூலில் வரும் நூறு நூறு கேள்விகளில் ஒரே ஒரு கேள்வி என்னுள் அவ்வாறே எழுந்து என்னை அலைக்கழித்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்? அனைத்து எல்லைகளிலும் என் அகந்தையின் எல்லையை சுட்டிக் காட்டியது விஷ்ணுபுரம். அகந்தைக்கு வெளியிலான என் துயர்களுக்கான முகத்தை எனக்கு அளித்தது விஷ்ணுபுரம். 

இன்று வரை என்னைத் தொடும் வாழ்வுத் தருணமோ, இலக்கியத் தருணமோ அதை விரித்துப் பொருள் கொள்ளும் முதல் வகைமையை என் உடன் நின்று விஷ்ணுபுரம் நாவலே அளிக்கிறது. 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தனிமனித யத்தனம் உள்ளிட்டு அரசு நடவடிக்கை வரை தென்னிந்தியப் பண்பாட்டை கட்டி எழுப்பிய அனைத்துக் கூறுகளையும் வேறொரு முறையில் கட்டி எழுப்பி பரிசீலித்த அந்த நாவல், (பாரத பண்பாட்டில் மகாபாரதம் போலவே) அந்த புனைவுப் பண்பாட்டின் விளைகனிக் காவியம் போலவே தன்னை பாவனையாக முன் வைத்தது. ஒரே நேரத்தில் அப்புனைவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது இருப்பை எவரோ எழுதும் காவியத்தின் கதாபாத்திரம் ஒன்றாகவோ, எவரோ காணும் கனவு ஒன்றின் நிலையாகவோ உணரும். அந்த வகையில் விஷ்ணுபுரம் நாவல் குறித்து ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத இந்த அயல் கவி ஆக்டேவியா பாஸ் எழுதி இருப்பது விஷ்ணுபுரம் நாவலில் வரும் பாத்திரம் ஒன்றின் தன்னுரையைத்தான்.

3

அச்சம்: (கலீல் கிப்ரான்)

கடலுக்குள் புகுமுன்.

அச்சத்தால்

நதி நடுங்குமென

சொல்லப்படுகிறது.


தான் பயணித்து வந்த பாதையை

அது திரும்பிப் பார்க்கிறது. 


மலை முகடுகளின்றும்

வனங்கள் ஊர்களை

கடந்துவந்த திருகலான

நெடிய தூரமது.


தன் எதிரில்

அந்நதி காண்கிறது

விரிந்த பெருங்கடலினை.


அதற்குள் நுழைவதென்பது

எப்போதைக்குமாக மறைந்து போவதன்றி வேறில்லை


ஆனால் அதைத் தவிர வழியேதுமில்லை. 

அந்நதி திரும்பிப் போகவியலாது.

யாருமே திரும்பிச் செல்லமுடியாது.


அப்படித் திரும்பிச் செல்வதென்பது

வாழ்வில் சாத்தியமுமில்லை.


ஆழியுள் புகுவதிலுள்ள

ஆபத்தை அந்நதி ஏற்கத்தான் வேண்டும். 


ஏனெனில் அதன் பிறகுதான்

அச்சம் மறையும்.


ஏனெனில் அங்கேதான்

நதி அறியவியலும்


கடலுள் நுழைவதென்பது காணாமல் போவதல்ல 

மாறாக

கடலாகவே ஆகிவிடுவது.

வாழ்வென இது வரை நாம் கொண்ட அத்தனைக்கும், இந்த நிலத்தின் இந்தப் பண்பாட்டின் பின்புலத்தில் நின்று, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, ஆத்மீக ரீதியாக அவற்றின் பெறுமதி என்ன என விசாரிக்கும் இந்த விஷ்ணுபுரம் நாவலை, பெரும் ஆத்மீக தவிப்புகளின் அலைக்கழிப்புகளின் கலைச் சித்தரிப்பு என்று சொல்லலாம். இசையால் ஆத்மீக இடரில் விழும் திருவடி தொட்டு, பிங்கலன் தொடர்ந்து, மிருகநயனி அருகே மதம் கொண்டு நிற்கும் அங்காரகன் யானை வரை  பலப் பல தவிப்புகள். வென்றவர் சோலை பைத்தியம் நீலி போல வெகு சிலரே. வீழ்த்தவரே பலர். விஷ்ணுபுரம் நாவலை ஆத்மீக வீழ்ச்சிகளின் கலைச் சித்தரிப்பாகவும் வாசிக்க முடியும். எண்ணுகையில் இதோ இக்கணம் கூட அஜித மகா பாதரின் தோல்வித் தருணம் உள்ளே எழுந்து கனக்கிறது.அகத்தால் புறத்தால் அத்தனை நெடிய பயணம் செய்து அங்கு வந்து சேர்கிறான் அஜிதன். இன்னும் ஒரு எட்டு எடுத்து வைத்திருந்தால், அல்லது வலியப் பற்றி இருக்கும் தனது பிடியை விட்டிருந்தால் அவன் ஈடேற்றம் கொண்டிருப்பான். அத்தனை தியானத்துக்குப் பிறகும், தத்துவார்த்த அறிவுக்குப் பிறகும் அவனால் அந்தப் பிடியை விட இயலாமல் செய்வது எது? பயமா? என்னவிதமான பயம் அது? அஜிதனின் அந்த தருணத்துக்கான கவிதையே கலீல் கிப்ரான் எழுதிய இந்தக் கவிதை என்று எனக்குத் தோன்றியது. ஒருவேளை அன்று அஜிதனுக்கு அவனது குருவின் அருகாமை இருந்திருந்தால் அவர் கலீல் சொன்ன இதையே சொல்லி இருப்பார்.

4

இரண்டு தலைக்கன்று : (லாரா கில்பின்)

நாளை பண்ணைச் சிறுவர்கள் இயற்கையின் இந்தப் பிறழ்வைக்

கண்ணுறும்போது


காகிதத்தில் சுற்றி

இதன் உடலை

அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்வார்கள்.


ஆனால் இன்றிரவு

அது உயிருடனிருக்கிறது

 தனது தாயுடன். 


இது கச்சிதமான கோடைகால

மாலைப் பொழுது.


வடபுலத்தில்

பழத்தோட்டத்தின் மேலாக நிலவு எழ 

புல்வெளியில் காற்று அலைகிறது.


அக்கன்று வானத்தை ஏறிட்டுப்பார்க்கிறது 

அங்கே ஒளிர்கிறது வழக்கத்தைக் காட்டிலும் இரட்டிப்பு எண்ணிக்கையிலான

நட்சத்திரங்கள்.

உலகமெங்கும் எல்லா பண்பாட்டிலும் முன்னர் எப்போதோ நிகழ்ந்த, அதே போல இனி வரப்போகின்ற பிரளய அழிவு குறித்த கதைகள் உண்டு. இந்தத் தன்மையை தனது மூன்றாம் பகுதியில் மிக வலிமையான சித்திரங்கள் வழியே நிகர் வாழ்வு அனுபவமாக்கி வாசக ஆழுள்ளதை தீண்டுகிறது விஷ்ணுபுரம். மெல்ல மெல்லத் துவங்கி பெரு மழை வெள்ளத்தில் அந்த விண் தொடும் ஆலய நகரின் அழிவுடன் முடியும் இந்த மூன்றாம் பகுதியில் அவ்வழிவுகள் குறித்த சித்தரிப்பு கடும் குளிர் நிலவும் சூழலுடன் துவங்கும். அப்டிக் கடும் குளிர் நாளொன்றில் லட்சுமி வளர்க்கும் பசு ஒன்று விசித்திரக் கன்று ஒன்று ஈனும். அந்தப் பிறப்பில் இருந்தே விஷ்ணுபுரத்தின் பிரளயம் துவங்கும். பிறந்த அந்த கன்று ஏழு கால்கள் கொண்டு எழ முயன்று நான்கு கால்களால் நிற்கும். முன்னால் இரண்டு கால்கள் இடையே மூன்றாம் கால் ஒன்று அந்தரத்தில் ஊசல் ஆடும். பின்னால் இரண்டு கால்களுக்கு இரு புறமும் வேறு வளர்ச்சி குன்றிய இரண்டு கால்கள் தொங்கும். அனைத்துக்கும் மேல் அந்த கன்றுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒரு தலை கொண்டு தனது தாயையும் மற்றொரு தலை கொண்டு லட்சுமியையும் அந்தக் கன்று பார்க்கும். 

விஷ்ணுபுரம் நாவல் லட்சுமியின் நோக்கு நிலையில் நின்று இந்த அமானுஷ்யத்தை சித்தரித்துக் காட்டுகிறது என்றால், மேற்கண்ட லாரா வின் கவிதை அதே அமானுஷ்யத்தை அந்தக் கன்றின் நோக்கு நிலையில் நின்று சித்தரித்துக் காட்டுகிறது எனலாம்.

5

துளியும் கடலும்: (கபீர்.)

அவனைத் தேடப் போய் 

என்னைத் தொலைத்தேன்.


துளி கடலுள் கலந்தது.

அதனை இப்போது யார் காணவியலும்?


அவனைத் தேடித் தேடி 

நான் காணாது போனேன். 


கடல் துளியுள் நிறைந்தது. 

அதனை

இப்போது யார் காணவியலும்?

விஷ்ணுபுரம் நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைகிறது. அதைக் கொண்டாடும் முகமாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஷ்ணுபுரம் நாவலை புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய என்னை கேட்டுக் கொண்டார்கள். ஸூம் செயலியில் தினம் மூன்று மணி நேரம் என நாவலின் மூன்று பகுதிகளையும் மூன்று நாட்கள் அறிமுகம் செய்து பேசினேன். 

கேள்வி பதில் நேரத்தில் திருவண்ணாமலை சுவாமிஜி "விஷ்ணுபுரம் வந்து நீண்ட காலம் ஆகி விட்டது. பிறகு வெண்முரசு எனும் பெரும் நாவல் சாதனையும் நிகழ்ந்து விட்டது. இன்னும் உங்களுக்கு உள்ளே விஷ்ணுபுரம் அதே தாக்கத்தைத்தான் தருகிறதா? விஷ்ணுபுரம் வெண்முரசு இந்த இரண்டு நாவலில் ஒன்று என்றால் இப்போது நீங்கள் எதை சொல்வீர்கள்?" என்று வினவினார்.

நான் சொன்னேன்  ''இரண்டும் வெவ்வேறு தனிதன்மைகள் கொண்டது. ஆகவே அந்த தனித்தன்மை அடிப்படையில் இப்போதும் நான் விஷ்ணுபுரம் நாவலையே சொல்வேன்" என்றேன். 

சுவாமிஜி எதிர்பார்த்த வாத பிரதிவாத கதியை என் பதில் இல்லாமல் செய்து விட்டதால்  " நழுவலா பதில் சொல்லிட்டீங்க" என்றார். அப்படி இல்லை என்று சொல்லி நான் விளக்கினேன். விஷ்ணுபுரம் உருவாக்கிக்காட்டும் இன்ஃபினிட்டி முடிவிலி என்பதன் தனித்தன்மை முற்றிலும் வேறு. உதாரணமாக வெண்முரசு நிகழும் காலம் வேறு விஷ்ணுபுரம் நிகழும் காலம் வேறு. விஷ்ணுபுரம் கைகொண்ட வடிவ ஒழுங்கில் அதன் ஸ்ரீ பாத திருவிழாவுக்குள்  பாணர்கள் பல்வேறு இடங்களில் பாடுவதாக அந்த விழாவின் வெவ்வேறு நாட்களின் இரவுகளுக்குள் மொத்த வெண்முரசையும் பொறுத்திவிட முடியும். விஷ்ணுபுரம் பாவித்துக் காட்டும் முடிவிலி அத்தகையது என்றேன். 

இன்று மேற்கண்ட கவிதை துணை கொண்டு மேற்கண்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்றால் அந்த பதில் இப்படி இருக்கும்.

வாசகனை துளி என்றாகி அந்த துளி கடலில் கரையும் அனுபவத்தை அளிப்பது வெண்முரசு.

வாசகனை துளி என்றாகி, அந்தக் துளிக்குள் கடல் வந்து நிறையும் அனுபவத்தை அளிப்பது விஷ்ணுபுரம்.

***

கட்டுரைக்கான கவிதைகள், தமிழினி வெளியீடாக ”நீரின் திறவுகோல்” எனும் தலைப்பில்,  கவிஞர் க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்த பிற மொழிக் கவிதைகள் தொகுப்பில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

தாழ்துணை - கணேஷ் பாபு

வீணாவைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். என்னுடன் பள்ளியில் படித்தவள். கல்லூரி, வேலை, வெளிநாடு என்று ஊரிலிருந்து அகன்று விட்ட வாழ்க்கைப் பயணத்தில் அரிதாகவே கூடப் படித்தவர்களை சந்திக்க இயல்கிறது. அதிலும், உடன்படித்த பெண்களைப் பார்ப்பது முற்றிலும் இயலாத காரியம். இப்படி எப்போதாவது தெருவில் சந்திக்கும் சந்தர்ப்பங்களைத்தான் வாழ்க்கை ஏற்படுத்தித் தருகிறது. நகராட்சி அலுவலகத்தில் ஒரு வேலையாகப் போயிருந்தபோது எதிரே வந்தாள். இருவருக்குமே ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்திருந்தது. நீ என்று அழைப்பதா, நீங்கள் என்று அழைப்பதா என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது, அவளே என்னிடம் பேசத் துவங்கிவிட்டாள். 

உடன்படித்தவர்கள், ஆசிரியர்கள், திருமணம், தற்போதைய வாழ்க்கை என ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பதினைந்து வருடங்களைக் பேச்சில் பதிவுசெய்திருந்தோம். ஐந்து நிமிடத்தில் சொல்லி முடிக்கக்கூடிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்றும் தோன்றியது. இதற்குத்தான் இத்தனை பிரயாசைகளா? 

பேச்சின் முடிவில், “எதற்கு இங்கு வந்திருக்கிறாய்”? என்று கேட்டேன். சென்ற வாரம் அவளது தந்தை மறைந்து விட்டதாகவும் அவருக்கான இறப்புச் சான்றிதழ் கேட்டு இங்கு வந்திருப்பதாகவும் சொன்னாள். பேசிக்கொண்டிருந்த போதே அவளது முகம் மாறியிருந்தது. ஒரு வாரம் அழுத அழுகையின் மிச்சங்கள் மீண்டும் புதிதாக எழுவதற்கான தடயங்கள் அவளது முகத்தில் தென்பட்டன. அலுவலக வளாகத்தில் இருந்த தேநீர் கடைக்கு அவளை அழைத்து வந்தேன். 

வீணா மிகவும் துணிச்சலான பெண். துயரத்தின் அழுத்தத்தினால் வீட்டிலேயே அவளால் முடங்கியிருக்க முடியவில்லை. அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று யோசிக்கத் துவங்கிவிட்டாள். அவளது அம்மாவிற்குத்தான் இன்னும் துக்கத்திலிருந்து வெளிவர இயலவில்லை. துயரத்தின் எடை அவரை அழுத்திச் சிதைத்துவிட்டிருந்தது. இஞ்சினியராக இருந்த அப்பா, மாரடைப்பினால் திடீரென இறந்துவிட்டதால் அவரது தொழில் முடங்கிப் போனது. இனிமேல், வீணாதான் மெல்ல மெல்ல அதைக் கட்டி மேலெழுப்ப வேண்டும். அவளும் இஞ்சினியர் என்பதால் அவளால் அது இயல்வதுதான். இன்சூரன்ஸ் போன்ற சில விஷயங்களுக்காக தந்தையின் இறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதால் நகராட்சி அலுவலகத்துக்கு வந்திருக்கிறாள். 

ஆனாலும், ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக அலுவலர்கள் தன்னை இழுத்தடிப்பதாகச் சொன்னாள். அக்கறையின்மை என்ற அழியாத கறைபடிந்த அலுவலர்கள் முன், துக்கத்தில் இருக்கும் ஒரு பெண் சிறு புள்ளியெனத் தென்பட்டிருக்கிறாள். இன்னும் மணமாகவில்லை. உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அற்ற குளத்து அறுநீர் பறவைகள் போன்ற உறவுகள். ஆகையால், வீணாதான் அனைத்துக்கும் அலைய வேண்டும். 

நான் உடனே எங்கள் வகுப்புத் தோழன் சதீஸுக்கு போன் செய்து அவனை வரவழைத்தேன். அவன், தான் ஒரு வக்கீல் என்று சொல்லித் திரிகிறான். ஆனால், அவன் கோர்ட்டுக்குப் போய் யாரும் பார்த்ததில்லை. ஆனாலும், ஒரு இக்கட்டு என்று வந்தபின்னர்தான் அவனது தொடர்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. “ஆரம்பத்திலேயே என்னிடம் வந்திருக்கலாம், ஒரே ஊரில் இருந்துகொண்டு ஏன் எங்கள் யாருக்கும் தகவல் கொடுக்கவில்லை” என்றவன், அடுத்த சில மணிநேரங்களில் வேலையை முடித்துக் கொடுத்தான். 

சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின்னர், வீணா எங்களிடம் விடைபெற்று தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றாள். சதீஸ் சொன்னான், “நல்லவேளையாக இவள் ஒருத்தியாவது அவளது அம்மாவுக்குத் துணைநிற்கிறாள். இவளும் இல்லையென்றால் அவளது அம்மாவுக்கு யார் துணை”.

இந்தச் சம்பவம் தேவதச்சனின் ஒரு கவிதையை எனக்கு நினைவூட்டியது. ஒரு கவிதையின் அர்த்தத்தைக் கண்ணெதிரே தூலமாக நிஜ வாழ்வில் பார்க்கும்போது அந்தக் கவிதை ஒரு மனிதனுக்குள் சாகாவரம் பெற்று விடுகிறது. 

பல வருடங்கள் கழித்து நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். நவீன கவிதை வாசகர் அவர். நவீன கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கவிதைகளின் வடிவம் நோக்கிப் பேச்சு நகர்ந்தது. “கவிதைகள் தங்களுக்கான திட்டமிட்ட வடிவத்திலேயே நிலை கொள்ள வேண்டுமென்பதில்லை. பல்வேறு வடிவங்களை முயன்று பார்க்கக்கூடிய இன்றைய பின்நவீனத்துவ காலத்தில் கவிதைகள் மட்டும் ஏன் நிலைத்த வடிவங்களில் இருக்கின்றன”, என்றார். 

“நான் ஒரு கதை சொல்லட்டுமா?”, என்றேன்.

“கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது எதற்கு கதை”?, என்றார்.

“பொறுமையாகக் கேளுங்கள்” என்றபடி இக்கதையைச் சொன்னேன்.

“கணவன் மனைவி மகள் என்று ஒரு அழகிய சிறு குடும்பம் அது. கணவனும் மனைவியும் காதலின் கதகதப்பில் இனிது வாழ்க்கை நடத்துபவர்கள். “காதலர் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்” என்பதுபோல. வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் மனைவிக்கு தடுமாற்றம் ஏற்படும்போது உற்ற துணையாகக் கணவர் இருப்பார். ஒரு நாள் எதிர்பாராமல் அவர் இறந்து விடுகிறார். மனைவிக்கு உலகமே இருளில் அமிழ்ந்துவிடுகிறது. ஆனாலும், பிழைப்பின் அழைப்பு தாளமுடியாமல் பிரிவின் துயரில் இருந்து மெல்ல வெளியேறி வருகிறார். மகளையும் வளர்ந்தெடுக்கும் பொறுப்பும் அவரிடம் வந்துவிட்டது. ஏதோ ஒரு முக்கியமான காரியத்துக்கென அரசு அலுவலகத்துக்கு தன் மகளையும் கூட்டிச் செல்கிறார் அந்த அம்மா. இதற்கு முன் இது போன்ற இடங்களுக்கு அவர் வந்ததில்லை என்பது அவரது உடல்மொழியிலேயே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. 

அலுவலர் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டத்துடன் பதிலளிக்கிறாள். அவர் சில ஆவணங்களைக் கேட்கவும் தன்னுடைய பையில் இருந்து அவற்றை வெளியே எடுக்கிறாள். வழக்கம்போல அவை நழுவி தரையில் விழுகின்றன. ஆனால் இப்போது அவளின் வலது பக்கம் யாரும் இல்லை என்பதோடு கதை முடிகிறது”, என்றேன். 

“சிறுகதை நன்றாக இருக்கிறது”, என்றார் நண்பர்.

“இது ஒரு கவிதை”, என்றேன். 

“அப்படியா”? என்று வியப்புடன் கேட்டார்.

“கவிதைகள் குறிப்பிட்ட சில வடிவங்களில் தேங்கிவிட்டதாக யார் சொன்னார்கள்? சிறுகதைகளைப் போலவே கவிதைகளிலும் பல வடிவங்களைக் கவிஞர்கள் முயன்று பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்டதொரு கவிதைதான் இது. தேவதச்சன் எழுதியது. இதற்குள் ஒரு சிறுகதையும் இருக்கிறது, கவிதையும் இருக்கிறது”, என்றேன். 

“யாராலும் தீர்த்துவிட முடியாத மாபெரும் துயரமும் இருக்கிறது” என்றார் நண்பர். “அதிலும் வலது பக்கம் யாருமில்லை என்ற வரியிலிருந்து கவிஞர் சரியான பக்கத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்”, என்று முடித்தார். 

என் தோழி வீணாவின் அம்மாவும் இந்தக் கவிதையில் வரும் அம்மாவும் வேறுவேறல்ல. ஒவ்வொரு வினாடியும் எத்தனைப் பதட்டத்தை அவர்களுக்கு அளிக்கிறது என்பதைப் பிறரால் ஊகிக்கவும் முடியாது. ஒரு வினாடி முள் நகரும்போது ஒட்டுமொத்த எதிர்காலமும் நகரும் வலியை வேறு எவரால் புரிந்துகொள்ள முடியும்? 

அவளது வலதுபக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்

எதிரில் இருக்கும் அதிகாரியோ தேநீரை

ஒவ்வொரு மடக்காகச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்

                                        

அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம்

அப்பாவுடையது

ஆறுமாதத்திற்கு முன் இறந்துபோனவரின் எச்சம் அது

அதன் ஒரு வினாடி முள் நகரும்போது

எதிர்காலம் எல்லாமும் நகர்ந்துவிடுகிறது


அம்மா பதட்டத்துடன் பேசுகிறாள்

சில ஆவணங்களைக் காட்டுவதற்கு

பாலிதீன் பையிலிருந்து அவற்றை வெளியே எடுக்கிறாள்

வழக்கம்போல அவை நழுவி தரையில் விழுகின்றன

அம்மாவின் வலதுபக்கம் யாருமில்லை

-தேவதச்சன்

***

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

(நன்றி சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் அச்சிதழ்)

***
Share:

ஒளியில் தெரிவது - பாலா கருப்பசாமி

வழக்கமாக மேடைப் பேச்சில் திக்கித் திணறும் நான் சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தேவதேவனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டின்போது என்னை மறந்து பேசிக் கொண்டிருந்தேன். ஒருங்கிணைப்பாளர் கூப்பிட்டு ‘சார் நேரமாகுது’ என்றபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அந்தப் பேச்சு எனக்கு முன்பு பேசிய தேவதேவனின் ‘ஆளுமை’ பற்றியது. யாராவது கவிதை எழுத என்ன செய்யவேண்டுமென்று தேவதேவனிடம் கேட்டால் அவரது பதில் ‘நீ கவிஞராக வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும்.

இந்த பதில் எளிமையான ஒன்று போலத் தோன்றும். அப்படியல்ல. கவிஞன் என்றால் முழுநேரக் கவிஞன். சதா அவன் கவிதா மனோபாவத்தில் தோய்ந்து கிடப்பது. பார்க்கும் அனைத்தையும் கவிஞனாகப் பார்ப்பது. அப்படியான ஒருவர் எழுதுவது குறித்து சந்தேகமே படவேண்டியதில்லை. அவை கவிதையாகத்தான் இருக்கும். ஒரு சிலருக்கு அந்தக் கவிஞரின் கவிதைகளில் சிறந்தவை, இவை தேறாதவை என்று பிரிக்க இடமிருக்கலாம். அதனால் ஒன்றும் கவிஞருக்குப் பிரச்சினையில்லை. எல்லாப் பூக்களும் கூந்தல் ஏறுவதில்லை.

ஆக, ஆளுமை தான் கவிதையை உருவாக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. இது குறித்து நான் ஏற்கெனவே சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை படைப்பாளி வேறு, படைப்பு வேறு. மேலும் நான் பார்த்தவரை கவிஞர்கள் கவிதைக்கான தருணம் நிகழும்போதே (சிலருக்கு மனவொருங்கைப் பொறுத்து தன் முயற்சியாலும் அது அமையக்கூடும்) கவிதைகளைப் படைக்கிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். சாமானியர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. வேண்டுமானால் தன்னுணர்வு-கூருணர்வு அதிகமுள்ள சாமானியர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். இது எல்லா நேரங்களிலும் பொருந்துவதில்லை. இப்படிப் பிரித்துக் கொள்வது ஒரு வசதிக்காகத்தானே தவிர இது வரையறையல்ல. பாரதி, பிரமிள், தேவதேவன் இம்மூவரும் ஆளுமையும் எழுத்தும் பிளவுபடாதவர்கள். இவர்களுக்கு மேற்கண்ட விதி பொருந்தாது. நிற்க.

அடுத்ததாக இன்னொன்றையும் விவாதிக்க வேண்டியுள்ளது. ஒரு கவிஞரின் ஒரேயொரு கவிதையை மட்டும் வாசித்து விமர்சிப்பது முறையான, முழுமையான விமர்சனமாகாது. விமர்சிப்பவருக்கும் வாசகருக்கும் எழுத்தாளரின் `தொனி` பிடிபட வேண்டும். அதாவது படைப்பாளியின் படைப்பு மனோபாவம். ஒரு தொகுப்பை அல்லது கவிஞரின் அனைத்து கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கும்போது அவரது மனம் இயங்கும் தளம் நமக்குப் பிடிபடும். சொல்லப்போனால் அதைக் கண்டடைவதுதான் விமர்சகரின் முதன்மையான பணி. அப்போது மிகச் சாதாரணமாகத் தோன்றிய அல்லது கவிதையே இல்லை என்று நினைத்த ஒன்றுகூட அழகுடன் மிளிரத் தொடங்கும். இது மிகவும் சிக்கலானது. இப்படி சாதாரண பார்வைக்கு புலப்படாத கவிதைகளை எடுத்து அதைச் சிறப்பித்து எழுதத் தொடங்கினால், அதையே சாக்காக வைத்து குப்பன் சுப்பன் கவிதைகளுக்கும் இதையே சகட்டுமேனிக்கு மதிப்புரை எழுதத் தொடங்கிவிடுவார்கள்.

சிலநேரம் ஒரு தனிக் கவிதை மெச்சத்தக்கதாக நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதைக் கொண்டாடவும் செய்யலாம். ஆனால் அது அந்தக் கவிஞரின் மொத்தத் தொகுப்புக்கான விமர்சனமல்ல. கொண்டுகூட்டுப் பொருள்கொள்ளலைப் போல இதைக் கோர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் தேவதேவன் கவிதைகளை நாம் அணுக வேண்டும். 

கவிஞர் தேவதேவனை பலமுறை சந்தித்திருக்கிறேன். பௌதீகமாய் அவர் இங்கே இருந்தாலும், அவர் மனம் வேறோர் இடத்தில் உலவிக் கொண்டிருப்பதை ஒருசில நிமிடங்களில் ஒருவர் உணர்ந்துகொள்ளலாம். இதனாலேயே அவரால் எல்லாவற்றையும் மன்னித்துவிட முடிகிறது.

படைப்பு மனநிலை பிடிகிடைத்தாலும், முன்பு சொன்னதுபோல சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒரு கவிதை அந்தப் படைப்பு மனநிலையின் பிரகாசத்தில் ஒளிர்ந்தாலும், அங்கும் அந்தப் படைப்பாளியின் படைப்புகளை வகைப்படுத்தவும், வெளிப்பாட்டுச் சிறப்புகளைப் பற்றி பேசவும் வேண்டியுள்ளது. உதாரணமாக,

எப்போதும் பொழிந்துகொண்டிருக்க முடியுமா?

எப்போதும் பொங்கிவர முடியுமா?

ஆட்கள் வரவில்லையெனில்

குளக்கரைப் படிக்கட்டுகளுக்கும்கூட

நனையும் பேறில்லை

***

உச்சிவானிற் திளைக்கும் முழுநிலவாய்

மத்தியான நதியில் ஒரு நீராடல்

கூடத்தின் வழுவழுப்பான தரையில்

பாய் தலையணையற்ற ஒரு துயில்

***

முகவரி எழுதிக் கொள்கிறீர்களா?

எறும்புகள் குவித்த துளிமணல் குவியலோரம்

அவனது வீடு.

***

முதல் கவிதை காய்ந்து போய்க்கிடக்கும் குளத்தங்கரைப் படிக்கட்டுக்குக் கிடைக்கும் தாகசாந்தி பற்றிச் சொல்கிறது. எப்போதும் மழை பொழிந்து கொண்டிருக்க முடியாது; குளமும் பொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆட்கள் குளித்துக் கரையேற படிக்கட்டுகள் அந்தப் பாதங்களை முத்தங்களால் மொத்தியிருக்கும், மீன் குஞ்சுகளைப் போல. அந்தப் படிக்கட்டுகளின் தகிப்பை, வெக்கையை உணர்ந்து அந்த உணர்வுகதியை கவிதைக்குள் கொண்டுவருவதால் இங்கே கவியுள்ளத்தைக் காண்கிறோம். தேவதேவன் பேசும் காதல்களும் கூட முதிர்ந்த அன்பிலிருந்து விளைந்தவை.

இதே பார்வையில் மூன்றாவது கவிதை வாசிக்க மனதை நெகிழச் செய்யும். எத்தனை எறும்புகளின் கடும் உழைப்பு அது. அளவில் பெரிதென்பதால் எறும்புப் புற்றைவிட தன் வீடு பெரிதாகிவிடுமா. காணாததைக் கண்டு கவிஞனால் மட்டுமே நெகிழவும், கூத்த்டாடவும், கண்ணீர் உகுக்கவும் முடியும். இரண்டாவது கவிதையை விளக்கிச் சொல்வது சற்று அபத்தமாய் இருக்கும். மத்தியான வெயில்களில் ஏன் வான்கோ வேகு வேகுவென்று கேன்வாஸைத் தூக்கிக் கொண்டு அலைந்தான்?

தேவதேவன் கூட சமூக/அரசியல் கவிதை எழுதியிருக்கிறார். ஆனால் அது மிகச் சன்னமாக ஒலிக்கிறது.

அது என்னவாகவும் இருக்கட்டும்

அனைத்திற்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு

என்னை எத்தனையோ மனிதர்களிடமிருந்து

பிரிப்பது தவிர வேறொன்றும் செய்யவில்லை

எனது பூணூல்.


கொங்குதேர் வாழ்க்கையில் ஏற்கெனவே பலராலும் பேசப்பட்ட தேவதேவனது பிரபலமான கவிதைகள் உள்ளன. அவை குறித்து திரும்பவும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். 

காலவெளி


என் கண்ணுக்கெட்டிய தூரத்தில்

சுமார் பதினான்கு வயதுப்

பேரழகியாய்த் தோன்றியவள்

ஒவ்வோரடியிலும்

ஓரோர் வயது முதிர்ந்தவளாய்

கிட்ட வந்தடைகையில்

சுமார் அறுபது வயதுப் பேரழகு.

சுமார் மூன்று நிமிடத்தில்

நான் கண்டது: அவளுடைய

நாற்பத்தாறு வருடங்கள்

அல்ல; நாற்பத்தாறு ஆண்டுகள்தான்

மூன்று நிமிடமாய் மயங்குகிறதோ?

நிச்சயிக்க முடியவில்லை; ஆனால்

என் கண்முன்னால் அந்தப் பேரழகு

எதுவும் பேசாமல்

என்னைக் கடந்து மறைந்தது மட்டும்

நிச்சயமான உண்மை.

எதை வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் கவிதையை உருவாக்கலாம், கவியுள்ளம் மட்டுமிருந்தால்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive