கவிதையின் மதம் - தேவதேவன்

என்னுடைய ‘கவிதை பற்றி’ நூலை முழுமையாகப் படிக்க நேர்ந்த பிரமிள் என்னுடனும் சில நண்பர்களுடனும் நடந்த உரையாடலில் பேசியவற்றை இங்கே முழுமையாகக் குறிப்பிட்டால் அது எனக்கு உவப்பில்லாத ஒரு சுயசரிதைத்தன்மையையும் வரலாற்றையும், ஒரு பெருமையையும் கொண்டுவிடும். பயன்மிக்க முக்கியமான விஷயத்தை மட்டும் இங்கே வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

“இந்தக் கட்டுரையை எத்தகைய மனதினால் எழுத முடியும் தெரியுமா?” என்று புகழ்ந்து சிலாகித்த பிறகுதான் ஓர் அவரோகணம் போல் தாழ்ந்த சுருதியில் அவர் கூறியது: “நானும் கவிதை குறித்து எழுதியிருக்கிறேன். இப்படி theory for theorysake ஆக நான் எழுதியதில்லை.”

இன்றைக்கும் ஒரு கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கும் இவ்வேளையில் எல்லாவற்றையுமே சமன்செய்தபடி எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

 ***

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் போகலாம். ஆனால் அந்த மனம் தன் கவிதையை ஆய்வது நல்லது. தேவையானதும் கூட.

முதலில் கவிதை நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது தன்னை ஆய்வு செய்கிறது. ஆய்வோ கவிதைக்கு அகப்படாமல் போகிறபோக்கில் அது சொல்லிவிட்டுப்போகும் குறிப்புக்களை நமக்குச் செல்வமாகத் தந்துவிட்டுப் போகிறது. கவிதை குறித்த பேச்சோ வேறுகதை. கவிதையைக் கண்டவர்களுக்கு கவிதையைக் குறித்த பேச்சு ஒரு விளக்கம்தானே ஒழிய கவிதை இல்லை. ஆனாலும் விளக்கமும் ஒரு பொருள்தானே. சிலருக்கு இந்த விளக்கம் போதாமல் ஆகிவிடுகிறது. சிலருக்கு அனுபவித்தவர்களின் விளக்கம் இனிமை தருகிறது. என்றாலும் காண்பதே பேரனுபவம்! கவிதை! விளக்கமும் கூட அனுபவத்தை அடைகிற மனதிற்குள் கவிதையைப் பெய்துவிடத்தான் செய்கிறது. அப்போது அதுவும் ஒரு காணல்தான். ஏதானாலும் சரி. கவிதை எப்போதுமே காண்பதற்கான தகுதியையே இறைஞ்சி நிற்கிறது. சரியான விளக்கத்தின் நோக்கமும்கூட அதுதான். ஆனாலும் விளக்கங்கள் கவிதையனுபவத்தைக் கொடுப்பதில்லை என்பதுதான் கண்கூடான உண்மையும் மானுட அனுபவமும்.

நாம் இப்போது இங்கே செய்யப்போவது கவிதையனுபவம் பற்றிய ஒரு விளக்கமல்ல: ஓர் ஆய்வு. சிறுபார்வை. மீண்டும் முயலும் ஒரு எடுத்துரைப்பு. கவிதையை அனுபவம் கொள்வதற்கான முன்அறிவுகளையோ வரையறைகளையோ வகுத்துவிடாத கவனம். முன்அறிவுகளும் வரையறைகளும் உருவாகிவிட்ட பிறகு கவிதை ஒரு கலையாகிவிடுகிறது. அந்தப் பேரனுபவம் கிட்டுமா என்பது கேள்விக்குறியே, கிட்டும் என்று கூறுகிறார்கள். நாமும் மேலே சொல்லியிருக்கிறோம். விளக்கத்தாலும் ஓர் அகக் காணல் நடக்கலாம் என்று.

கவிதையை ஒரு சிறந்த கட்டுமானமாக அறிந்திருப்பவர்கள் கவிதையைப் படைக்கையில் ஒரு கட்டுமானம் தானே வந்து சேரும்.

உந்துதலையே வைத்துக்கொண்டு இயங்கவேண்டும். மாறாக, உற்பத்தி செய்துவிடுபவர்களால் வாழ்வையோ, கவிதையையோ கண்டுகொள்ள முடியாமலே போய்விடவும் செய்கிறது என்பதே நமது தயக்கமும் அச்சமும். எதையும் கலையாக்கி மகிழலாம். கவிதையை மட்டும் கலையாக்கிவிடக்கூடாது என்று புரிந்துகொண்டிருக்கிறேன். கலையாகும் ஒரு பார்வைதான் – அதாவது ஒரு வகை அழகுதான் கவிதை என்று ஒரு சிலர் தர்க்கிக்க முன்வரக்கூடும். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபடி நாம் விலகிவிட வேண்டியதுதான். ஆழமற்றது அந்த உவப்பு என்பதை அவர்கள் தாங்களேதாம் அறியவேண்டும். பழமையான சொற்களில் கூற வேண்டுமானால் ஆன்மிகமான ஒரு கண்டடைதலையே கவிதை என வேண்டும். மேல்நோக்கிய ஓர் ஆற்றல் அது. புனிதமான முழுமை உணர்வு அது. ஆறாத புத்துணர்ச்சி மிளிரும் கவிதையின் மதம் இதுவே. வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் நாம் பருகும்தோறும் நோக்கமற்று மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருப்பது. வாழ்வெனும் பெருங்கலையைக் கண்டடைவதற்கான ஒரே வழியாக இதுவே இருப்பதை அறியாத அறியாமையில்தான் நேற்று, நாளை, அகம், புறம், நான், நீ, நன்மை, தீமை என்றெல்லாம் எதையும் பிரித்தே நோக்கி உண்மையை அறிய முடியாதவர்களாகிவிடுகிறோம்.

இந்த ‘மகாநதி’ கவிதையையே பார்க்கலாம்.

அகன்ற இதன் பரப்பைக்கண்டு, கடலோ என வியக்கிறது வானம். வானத்தைத் தன் நெஞ்சில் நிறைத்துக்கொண்டு கிடக்கிற நதிக்கும் வானத்திற்குமிடையே உள்ள காதலோ சொல்லிமாளாத பேரனுபவம். அதன்பிறகுகூட இந்தக் காதல்! இந்தக் காதல்தான் எத்தகையது? எல்லா இடங்களும் காலமும் சுட்டிக்காட்டப்படுவதே கவிதையாக அமைந்துள்ளது. காதல், கவிதை, வாழ்வு என்றெல்லாம் சொல்லப்படுகிற ஒன்றுதான் உறவு என்பதும் என்கிறதா அது? எந்தச் சொற்களுக்கும் வந்துவிடாமலேயே ஓர் அனுபவத்தைத் தொட்டுவிட முடிகிறதா நம்மால்?

மகாநதி

அகன்ற நதியைக் கண்டு
கடலோ என வியந்தது
வானம்.

வானத்தைத்
தன் நெஞ்சில் நிறைத்துக்கொண்டுதானே
நெகிழ்ந்து கிடக்கிறது நதியும்?
கடலோடு கலந்தால் என்ன,
வானோடு கலந்தால் என்ன,
மண்ணோடு கலந்தால் என்ன,
எந்த உயிரோடு கலந்தால் என்ன,
கலக்கும் இந்த உறவுதானே
காதல் என்பது?

கடல் எனும் கவிதையையும் பார்க்கலாம். சின்னஞ்சிறிய செம்பருத்திச் செடியின் கீழே இலையிலிருந்து விழுந்துவிட்ட இரண்டு பச்சைப் புழுக்களிடையே ஓர் உரையாடல் நடக்கிறது.

 கடல்

சின்னஞ்சிறிய
செம்பருத்திச் செடியின் கீழ்
வந்துகிடந்தன
இரண்டு பச்சைப்புழுக்கள்.

எங்கிருந்தாலும்
உண்டு முடித்தவுடனே
இலையின் அடியில் வந்து
ஒட்டிக்கொள்ள வேண்டாமா?
எத்தனை முறைகள்
படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறேன்,
அதுவும் மழைபொழியும் இந்நேரம் –
குறுக்கே பேசாதே –

நீ சொல்ல வருவது புரிகிறது –
இத்தனை ஆயிரம் கால்களை
நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்,
எங்கிருந்தாலும்
நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டாமா,
கால்களால் ஆட்டமா போட்டுக்கொண்டிருந்தாய்?

சரி அம்மா, நீங்கள் ஏன்?

நீ விழுந்ததைப் பார்த்து
மனம் பொறுக்காமல்தான்
உனக்காக நானும் குதித்துவிட்டேன்
என் செல்லமே!

அப்போது அங்கே அவர்கள்
மனிதக் குதிங்காலால்
உண்டாகியிருந்த தடக்குழியில்
தேங்கியிருந்த நீர்ப்பரப்பைக் கண்டார்கள்.

அம்மா,
மனிதர்கள் குளம் குளம் என்று
சொல்கிறார்களே அது இதுதானா?

ஆமாம், என் செல்லமே,
நன்றாய்க் கவனித்திருக்கிறாய் நீ.
கடல் என்றும்
இதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்
மகாநதி என்றும் சொல்வார்கள். 

இந்த இரு கவிதைகளையும் வாசிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எப்படி வாசித்தோம் என்பதை அறிவதற்கும் உள்ள ஒரே வழி நாம்தான். அதாவது பிறர் சொற்களை நாம் நாடுவதற்கில்லை. நம்பவும் ஏற்கவும் கூடாது. கவிஞனுடைய சொற்களையும்கூட. அப்பொழுதுதான் நிகழ்கிறது கவிதை. அந்தக் கவிதைப்புலத்திற்குள் ஆழந்து சென்று அல்லது நீந்திச் சென்று அதன் ஆழத்தையோ கரையையோ அடைவதுதான் ஆய்வு எனப்பட வேண்டும். அங்கிருந்துதான் தொடங்குகிறது அறிதல். வாழ்வெனும் மாபெரும் கலையுலகிற்கு நாம் வந்துசேரும் வழி. அறிதலே மயமான ஆற்றற்கனலை அது பெற்றுவிடும்போது மின்னற் பொழுதே தூரமாய் வெளிப்படுவதும் அதுதான். சாலை எனும் பெயருக்கு வழி என்றும் நிலையம் என்றும் பெயர் அமைந்திருப்பதையும் நாம் நினைவுகூர வேண்டிய இடம் இது.

***

‘ஆய்வினால் கவிதைக்குப் பயனில்லை எனினும் சில குறிப்புகளைத் தருகிறது.’ அவை என்ன?

கவிதை காலத்தையும் இடத்தையும் பொருட்படுத்துவதில்லை. காலத்தாலும் இடத்தாலும் ஏற்படுகிற வாதைகளை அது எழுதினாலும், காலம் இடம் கடந்த வெளியில்தான் அதன் வாழ்வும் களிப்பும் நிறைவும் துயரமும் இருக்கின்றன. எந்தக் கவிதைக்கும் ஒரு நாயகன் இருப்பதில்லை. ‘மையம் கிடையாது‘, ‘நான் கிடையாது’ என்றெல்லாம் சொல்கிறோம் இதைத்தான். மகத்தான வெறுமை என்றும் சொல்லலாம். இந்தப் பெருங்களத்தில் நிற்கும் போதெல்லாம்தான் கவிஞன்/மனிதன் ஒவ்வோர் உயிரிலும் தன்னை அறிகிறான். ஒவ்வொரு நிகழ்விலும் அதன் உண்மையை அறிகிறான். ஒவ்வொரு பொருளிலும் அதன் இருப்பை அறிகிறான். எல்லாவற்றிற்கும் இடையே ஓடும் உறவை அறிகிறான். அதன் காதலும் காதலின்மையுமே வாழ்வாக இருப்பதைக் காண்கிறான். மகத்தான ஓர் ஒத்திசைவுக்காகவே அவன் ஏங்கிறான்.

இப்படிப்பட்ட கவிஞன்தானா ‘நான்’ ‘நான்’ ‘நான்’ என்று கூத்தாடுகிறான். இருக்காதல்லவா? நானில் மாட்டிக்கொள்கிற பல கவிஞர்களின் கவிதைகளைப் பார்த்திருக்கிறோம். நமக்குத்தான் எத்தனை சந்தேகங்கள்!

வாழ்வு என்றால் என்ன என்று வரையறுக்க முடியாததைப் போலவேதான் கவிதை என்றால் என்ன, கவிஞன் யார் என்பதையெல்லாம் வரையறுக்க முடியாது. வாழ்வும் கவிதையும் வேறுவேறு அல்ல என்பது நாம் அறிந்தவைதானே. காலம்காலமாகக் கவிதை பற்றிய ஆய்வாளர்கள் தோற்றுக்கொண்டே இருப்பதன் காரணம் இதுதான்.

ஒரே வழிமுறைதான் உள்ளது. கவிதை என நம்மைத் தீண்டிவிட்ட ஒவ்வொரு கவிதை கொண்டும் கவிதையை நாம் வரையறுத்துக்கொண்டே செல்வதுதான் அது. ஒன்று நிச்சயம். கவிதை எழுதுவதற்கு முன்னான கவிஞனின் கவிதையனுபவமும் வாசகன் அடைகிற கவிதையனுபவமும் ஒன்றே என்பதும், அந்த ஒன்றை உத்தேசித்ததே என்பதும்தான் அது. இவற்றிற்கு வெளியே உலவுபவைகளைத்தாம் (நல்ல) கவிதைகளல்ல என்று ஒதுக்கிவிடுகிறோம். இங்கே நான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதெல்லாம் நம்மைத் தீண்டிய அபாரமான கவிதைகளை முன்வைத்தே. இந்த முறையில் நீங்களே கவிதையை எடுத்து ஆராய்ந்து பார்க்கலாம்.

அதற்கும், வாழ்வு என்றால் என்ன? கவிதை என்றால் என்ன? (இரண்டுமே ஒரே கேள்விதான் என்பதை அறிவோம்) முதலில் கேள்வி என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்வோம். பேசுவதற்கென எதுவுமே இல்லாத மவுனத்திலிருந்து நாம் எதைப் பேச முடியும்? நம்மை நோக்கி எறியப்படும் ஒரு பிரச்னையே கேள்வி என்பது. அதற்கான பதில்தான் பேச்சு என்பதே. இப்போதும் அந்த மவுனத்திலிருந்துதான் அந்தப் பேச்சு வந்தாலும் கேள்விக்குள்ளிருந்துதான் பதிலைக் கண்டைந்து எடுத்துக்கொள்கிறது மவுனம். ஆகவேதான் ஒருத்தர் உண்மையை அறிந்துகொள்வதற்கு பிறரை நாடவேண்டிய அவசியமில்லை என்றிருக்கிறது. ஆனால் நாமோ பிறரையே நாடுபவர்களாக இருக்கிறோம். இதுவே இந்த உலகின் மலினத்திற்கும் ஆபத்திற்கும் வீழ்ச்சிகளுக்கும் காரணம்.

இல்லை, இல்லை. சற்றுமுன் நீங்கள் தந்த கவிதையை நானாகத்தான் படித்தேன் என்கிறார் ஒருவர். அது உண்மையானால் ஒரு பிரச்னையுமில்லை. பிரச்னைகள் எங்கிருந்து வருகின்றன? நம் அறியாமையிலிருந்து என்று சொல்லப்படுகிறது அது உண்மையல்ல. உண்மையை நாம் எதிர்கொள்ள முடியாமையிலிருந்தே பிரச்னைகள் வருகின்றன என்பதே உண்மை.

கீழே பிரமிளுடைய ஒரு கவிதை. நம்மை என்னை செய்கிறது என்று பார்க்கலாம். அது நாம் அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது. அதற்கு வேண்டியது ஒரு திறந்த மனம். அந்த நிலையில் நாம் ஒரு நுண்மையும் மென்மையுமிக்க நிலையில் இருக்கிறோம். பேரனுபவங்கள் நம்மைப் பற்றிக்கொள்கின்றன, பேருண்மைகளும்தான்.

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்
என் பாதம் பதிந்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

நாம் விளக்கப் போவதில்லை. ஆய்வுதான் செய்வோம் என்று சொல்லியிருந்தோம். இப்போது நம் மனதை அடைந்த அனுபவம் எத்தகையது? சொல்லொணாத ஒரு பேரனுபவம் என்றாலும் நம்மைத் தீண்டிவிட்ட ஒரு புத்துணர்வு என்றாலும் – அதை ஆய்வு செய்வது நல்லதுதான். ஒருவன் தன்னை அறிதலுக்கு நிகரானது அது.

நீங்கள் ஒரு கவிதை வாசகர் என்ற முறையில் உங்கள் அறிவை விழித்தெழச் செய்வதற்கு முன்பே அது உங்கள் இதயத்தைத் தொட்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால் கவிதை அங்கிருந்துதான் பிறக்கிறது. கவிதையை உணரத்தக்க இதயமுடைய ஒரு மனம் இயல்பிலேயே உயிரின் ஒத்திசைவினால் உண்டாகும் பெருங்களிப்பைத் தன்னுள் கொண்டது.

நீங்களே இந்தத் கவிதையைப் பிறர் உதவி மற்றும் பிற உதவிகள் எதுவுமே இல்லாமல் ஆய்ந்து பார்க்க வேண்டுகிறேன். அதுதான் உண்மையான பாதை.

 ***

அண்மையில் சிங்கப்பூர் வாசகர் வட்டம், சிங்கப்பூர் நூலக அரங்கில் நிகழ்த்திய எனது உரையை வீடு வந்ததும் இணையத்தில் கேட்டேன். யாரோ ஒருவரை உற்றுக்கவனிப்பதுபோல. பல இடங்களில் தான் சொல்ல வேண்டியதைத் சொல்லியிருக்கிறார்தான். என்றாலும் பல இடங்களில் நிகழ்ந்த உடல்மொழி, தீர்ப்பு கூறியவை போன்ற விஷயங்கள் அதிருப்தி தருகின்றன. ஒன்று புரிந்தது. நான் மனிதர்கள் அடைய வேண்டிய மனநிலையை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதைக் காண்பதும் அதை எழுதுவதும் என்பதைக் கவிதையாகக் கொண்டிருக்கிறேன். அரங்கில் பேச நேர்வதோ, நேர்ந்ததோ கவிதை பற்றி. வாழ்க்கை பற்றி. அப்போது கவிதை ஒரு துறையாகவும் கலையாகவும் வனைந்து கொண்டு வந்து உட்கார்ந்துவிடுகிறது. எனது பேச்சு சட்டதிட்டங்களும் தீர்ப்புகளுமாய் மாறிப்போய்விடுகிறது. இதுதான் எனது அதிருப்திக்கும், எப்போதும் என்னிடமிருக்கும் மவுனம் கலைந்து சற்றுத்தாழ இறங்கிவிட்டதற்குமான காரணமாயிருக்கிறது. கவிதைக்கலை அதாவது அப்போதைய அந்த மனிதன் தான் இவ்வளவுதான் உயரம், என்று தன்னுடைய இடத்தைக் குறித்துத் தானே அடைந்த வெட்கம் அது. அதிகமான சொற்களில் குற்றங்களில்லாமல் போகாது என்று பைபிளில் ஒரு சொற்றொடர் இயேசுவுடையது. சொந்த அனுபவம்தான் பேசுகிறது வேறென்ன?

உரையாடலின் இறுதியை நெருங்கியவர்கள்போல் இன்னும் நீங்கள் ஏதாவது சொல்ல இருக்கிறதா, என்றால் சொல்லுங்கள் எனப்பட்டது. அது ஓர் ஆழ்ந்த உரையாடலுக்குச் செல்லும் பாதை. சொல்வதற்கு ஏதுமில்லாத மவுனத்தை வாழ்க்கையின் பிரச்னைகள்தாம் சொல்வதற்குரியதாக மாற்றுகின்றன. அப்போதுதான் உணர்ந்தேன், நம்மிடையே வாழ்க்கைமீதும் கவிதைமீதும் ஆழமான ஒரு தேடல் இல்லை, கேள்வி இல்லை என்பதை. நீங்கள்தாம் கேட்க வேண்டும், தேட வேண்டும் என்று சொன்னதாக ஞாபகம். நானே அப்போதும் இந்த வாழ்வு குறித்தும் கவிதை குறித்தும் தொகுத்துக்கொண்டு பேசியிருக்கலாம். அவையின் நேரம் முடியும் தறுவாயிலிருந்ததும் களைப்பும் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும்கூட அதை மறுப்பதற்கில்லை, உண்மைதான். நம்மிடம் தீவிரமான தேடல் இல்லை. நாம் கவிதையை ஒரு கலையாகக் காண்கிறோம், அதன் வழியாக ஓர் உலகியல் இன்பத்தை அடையவே ஆசைப்படுகிறோம். கலையையே ஆய்கிறோம். ஆனால் கவிதை எப்போதும் மனிதனை அழைத்துச்செல்லுமிடம் ஒரு பெருங்களம். அபூர்வமான வாசகர்களும் மனிதர்களுமே அந்தக் களத்தில் தங்கள் வீட்டை நிறுவிவிடுகிறார்கள். நான் தொகுப்பாக இன்னும் பேசியிருந்தாலும் அது ஒரு கருத்துக்களமாகவே ஆகியிருக்கும். அதுவரையும் வாசகர்கள் கேட்ட/கண்ட உண்மையின் கணங்கள் நிறையவே உள்ளன. அவர்களே தொகுத்துக்கொள்ளும்போதுதான் வாழ்வை, கவிதையைக் கண்டடைகிறார்கள்.

இது எப்படி சார், இது எப்படி சார் என்று அகம் தொடர்பான கேள்விகளைக் கேட்கும் அன்பர்களிடம் நான் சொல்ல விரும்புவது அந்தக் கேள்வியை நீங்களே உங்களுக்குள்தான் கேட்க வேண்டும், அறிந்து கொள்ளவேண்டும். அது ஒன்றே சரியான வழி. கவிஞரைப் பாராட்டுகிற ஒரு வியப்பாக இருப்பதைச் சொல்லவில்லை. தீவிரமான நாட்டம் காட்டுபவர்களைத்தாம் சொல்கிறேன். அதற்கு நம் உணர்வாற்றல்தான் வழிமுறை. சக இதயர்கள்தாம் ஆசான்கள். இதுவே நட்பையும் உறவையும் அன்பையும் சமத்துவத்தையும் அறத்தையும் உலகில் விளைக்கும். பிறவோ அழிவு தரும் நச்சுக்கனிகள்தாம் என்பதை நாம் அறிவது ஒன்றும் கடினமானதல்ல. காலம் இடம் அற்ற கவிதைத்கணத்தை நாம் விரித்துக்கொள்ளும் போதெல்லாம் நாம் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்துவிடுகிறோம், இல்லையா? இதுதான் வீடுபேறு என்பதும் நிர்வாணம் என்பதும் இங்கிருந்துதான் மானுட உறவு எனும் அதன் செயல்பாடுகள் மலர்கின்றன.

கவிதையை வியக்கும்போது, இந்த நிலையை நீங்கள் எப்படி அடைந்தீர்கள் என்பது கவிஞனை நோக்கிய ஒரு கேள்வியாக இருக்கிறது உங்களிடம்.

பிறக்கும்போதே நாம் அப்படித்தான் இருக்கிறோம். குழந்தைப்பருவத்தில் அது நம்மிடையே வாழ விரும்பித்தான் நம்மோடு ஒட்டிக்கொண்டுவருகிறது. வாழ்வின் பரபரப்புகளில் எண்ணங்களில் தொலைந்துவிட்டது அது. ஒரு சின்னஞ்சிறிய கவிதை எனது குழந்தைப்பருவத்தில் பதிவாகியது. இளமைப்பருவத்தில் எனது ‘குளித்துக் கரையேறாத கோபியர்களில்’ – நான் நினைவு கூர்ந்து எழுதியது.

காலிடம்ளர்

சாப்பாட்டு வேளையில்
தண்ணீர் எண்ணித்
தூக்கின செம்பின்
திடுக்கென்ற வெறுமை-
நிலைகுலைத்து
நிலைநிறுத்திய
ஞாபகமூட்டல்?

விளக்கவேண்டுமா?

ஆனால் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். “கவிஞர்கள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை” என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் இது. என்றாலும் இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாற்றப்பட வேண்டிய மானுட உலகு வெகுகாலமாகவே மாற்றப்படாதிருப்பதின் அடையாளம் இது. அவமானம் இது. பிறப்பு என்பது அவனது குழந்தைப்பருவம் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என்றாக்க வேண்டும் நாம்.

பிரமிள் உங்களை ஈர்த்திருக்கிறார். ஆனால் பிரமிளைப் போலவே உங்கள் எழுத்துமுறை இல்லை, இது எப்படி என்று கேட்கிறீர்கள்.

ஒன்றாயிருப்பது அதன் அடிநாதம்தான். அண்மையில் திருநெல்வேலியில் பிரமிள் குறித்த ஒரு முழுநாள் கருத்தரங்கு நடந்தது. பார்வையாளனாய்ச் சென்றிருந்த நானும் பிரமிள் குறித்தும் கவிதை குறித்தும் பேச நிர்ப்பந்திக்கப்பட்டேன், அன்பன் ஆர்.ஆர்.சீனிவாசனால். நான் முதன்முதலாகப் பிரமிளில் வீழ்ந்ததற்குக் காரணமாக இருந்த ‘பாலை’ என்ற கவிதையை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். இடையில் அந்தக் கவிதையை வாசிக்க நேர்கையில் விழிகள் கசிந்து சிறிது நேரம் பேச முடியாத மவுனம் குறுக்கிட்டுவிட்டது.

நன்றாகக் கவனித்துப்பாருங்கள். ‘ஒரு மரத்தைக் கூடக் காண முடியவில்லை’ என்ற வரியையும். இதை நான் மிக அண்மையில்தான் உணர்ந்தேன். இதில் ஆழ்ந்திருக்கும் பிரமிளின் மனநிலையையும் ஆளுமையையும்கூட அறியாதவர்கள் பலர். என் இரண்டாம் கவிதைத்தொகுப்பிற்கான முன்னுரைக்கு அவரையே நாட இருந்த விஷயம் அறிந்த கவிஞர் ராஜசுந்தரராஜன் அதைப் பிரமிளிடம் கூற பிரமிள் அதற்கு, ‘அதை அவரல்லவா பேச வேண்டும், நீர் என்ன இடையில்?’ என்று உறும, ராஜசுந்தரராஜன் அதை என்னிடம் முறுமுறுக்க நான் அனுப்பிவைத்தேன். ஒரு வாரத்தில் பிரமிளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. சொல்லொணா வியப்படைந்த வாசகங்களுடன். அவரே முதன்முதலாக அந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்தார். என்னை ஓவியம் தீட்டினார்.

‘மின்னற்பொழுதே தூரம்’ என்ற வரியையே தலைப்பாக்கினார். தமிழில் தனக்குப்பிறகு வர இருக்கும் கவி தேவதேவனே என்றார். எனது புதிய கவிதையியல் முயற்சிகள் அவருக்கு வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கின. எவரையும் பின்பற்றாத எனது சுதந்திரமான போக்கையும் எழுத்துமுறையையும் ரசித்தார். இவை எதுவுமே வெளியே தெரிந்துவிடாதபடி மறைக்கப்பட்டிருக்க, ஜெயமோகன் களத்திற்குள் குழந்தையாய் வந்தவுடன் மீண்டும் தேவதேவன் ஒரு முக்கியமான கவிஞர் என்கிற பெயர் முன்வந்து நிற்கிறது. ஓர் ஆளுமைக் கலாச்சாரத்திற்குள் துன்புற்றுழலும் காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கும் அதைக் கடப்பதற்காகவும் நாம் நம் அவமானங்களை அறிந்துகொள்வது நல்லதுதான். அந்த அளவுக்கான அனுபவங்களை அவசியப்படும்போது நான் சொல்லத் தயாராயிருக்கிறேன். குறிப்பாகப் பிரமிளுடனான என் அனுபவங்கள் மற்றும் பார்வைகள் வாழ்வுக்கும் கவிதைக்கும் ரொம்ப ரொம்பப் பயனுள்ளவை என்றாகும்போது.

நான் கவிதைத்தொகுப்பினை வெளிக்கொணர இருந்தபோது என் கைவசமுள்ள மொத்த கவிதைகளை இரண்டாகப் பிரித்தேன். முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேறாத கோபியர்களை’ நீராலானவை சார்ந்த கவிதைகளாய்த் தலைப்புகளையெல்லாம் உருவிவிட்டு ஒரு காவியம்போல் அமைக்க முயன்றேன். (பின்னாள் முழுத்தொகுப்பின்போது தலைப்புகளை மீண்டும் இணைத்துக்கொண்டேன்) இரண்டாம் தொகுப்பில் வேறுவேறு முகங்களுள்ள தீவிரமான கவிதைகளைக் கண்ட விமர்சகர்கள் அனைவருமே ஏமாந்துபோனார்கள். தேவதேவன் வேகங்கொண்டு இரண்டாம் தொகுப்பில் முன்னேறிவிட்டார் என்று.

கவிதையில் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் கிடையாது. குறிப்பாக எனது கவிதையில். அதன் புறத்தோற்ற மாறுபாடுகளை வேண்டுமானால் ஏதாவது சொல்லலாம். கவிதையின் அகம் மாறாததும் மாற்ற முடியாததுமான ஓர் இயக்கம். வாழ்வின்பாற்பட்டது. அதைத்தான் நாம் கண்டடைய வேண்டும்.


எனது பள்ளிப்பருவத்தில் நடந்த ஓர் அனுபவம். பாடத்தில் முதன்முதலாய்த் திருக்குறள் அறிமுகமான வகுப்பு. அதை வைத்துத்தான் இன்று அந்த வயதைக் கணிக்கிறேன். திருக்குறளை நல்ல மாதிரி அறிமுகப்படுத்திய தமிழாசிரியர். முழுநூலையும் வாசிக்க விரும்பும் உந்துதல் பெற்று திருக்குறள் நூலைப்பெற்று, காமத்துப்பாலில் நான் கண்டு வியந்து நின்றுவிட்ட ஒரு குறள்:

காணுங்காற் காணேன் தவறுஆய காணாக்கால்
காணேன் தவறுஅல் லவை.


காதலன் காதலி உறவு பற்றிய காதல் கவிதை இது. இதெல்லாம் தெரியாத வயது எனக்கு. ஆனால் நான் கண்ட மனித நட்புறவுகளிலேயே இதை அறிந்திருந்ததுதான் எனது வியப்பின் காரணம். காதலின் இந்த உளவியல், அபாரமான மானுட உச்சத்தைத் தொட்டுள்ளதுதான் காரணம். மேலும் என் மனதில் எப்போதும் உறைந்துள்ள ‘காலம்’ பற்றி இது ஆழமாகக் கூறுகிறது. இவை எல்லாமே எந்த அறிவுத்துணையில்லாமலே என்னைத் தொற்றிக்கொண்ட உண்மைகள்.


காணும்போது
அவர் குற்றங்கள் எதுவுமே
எனக்குத் தெரிவதில்லை


எனும்போது வெளிப்படும் நிகழ்கணம் ஒரு கவிஞனுடையது அல்லவா, அன்பு கொண்ட மனத்தினுடையதும். காணும்போது தவறுகள் எதுவுமே தெரியவில்லை. அப்படியானால் அப்போது காணப்படுவது யாது? ஆகா! வள்ளுவர் எதைத்தொட்டுவிட்டார் பார்த்தீர்களா? காணாதபோது, அவனைக் குதறத் துடித்துக்கொண்டு காத்திருந்த பெண் அவள்.

எனது ஆங்கில ஆசிரியர், ஒரு வகுப்பில் ஏதோ ஒரு பாடத்தில் உதித்த உண்மையை விவரிப்பதற்காக, உரைத்த ஒரு கவிதை விவரணைச் சித்திரத்தில் மயங்கியேவிட்டேன். பின்னாளில்தான் தெரிந்தது அது கீட்ஸின் Ode on a Gretian Urn. ஓடும் காதலியை எட்டிப்பிடிக்க நீண்ட காதலனின் கை அந்த ஓவியம் காலத்தால் நிலைத்துநிற்கிறது அந்த ஜாடியில்.

காலம் பற்றிய இன்னொரு வரியையும் கேட்டேன் அந்தக் காலத்தில். தன் தந்தையால் நன்றாகப் தளுக்கு மிடுக்கோடு பயிற்றுவிக்கப்பட்ட பேச்சாள மாணவன், அப்பா எழுதித்தந்ததை ஒப்பிக்கிறான்: அதில் ஒரு வரி “காலம். காலம் என்பதே கிடையாது என்கிறான் ஓர் அறிஞன்… இன்று என்று சொல்லும்போதே அக்கணம் அது கடந்துவிடுகிறது.”

இதெல்லாம் மறக்காமல் என் நெஞ்சில் பதிந்தது, முன்னமேயே எனக்குள்ளிருந்த மெய்மையினாலேதான் என்பதையே நான் உணரத்தொடங்கினேன். அதைவிட்டு ஒருக்காலும் நான் பிரிந்ததில்லை.


கவிதை

 
எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா,
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.
 
உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!
 
முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.

சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.

***

தேவதேவன் அரூ இணைய இதழ் கவிதையின் மதம் என்னும் தலைப்பில் எழுதிய வரும் கட்டுரை தொடரின் முதல் கட்டுரை இது. பிறக் கட்டுரைகளை வாசிக்க: கவிதையின் மதம்

(நன்றி அரூ அறிபுனைவு இணைய இதழ்) 

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

***

பின்னிணைப்பு:

Share:

விபரீதக்குமிழி உடையும் நிசப்தம் - கடலூர் சீனு

1

அத்தனை சிறிய வினோத சவப்பெட்டியை அன்றுதான் முதன்முறை கண்டேன். எதிர் வீட்டு கிறிஸ்துவ தம்பதி நெடுநாள் காத்திருந்து பெற்ற மகன். சில மாதங்களிலேயே மரித்துப்போனான். அவனுக்கான சவப்பெட்டி அது. அதன் வினோதத்துக்கு காரணம், குழந்தை இறுதியாக கண்துஞ்சிய பிரம்பு ஊஞ்சலே அவனுக்கான சவப்பெட்டியாக மாற்றப்பட்டிருந்ததுதான்.

பூச்சிகள் அண்டாமல் குழந்தையை தரையில் கிடத்த, நான்கு கால்கள் கொண்டு பயன்படுத்தப்படும் பிரம்பு ஊஞ்சல் அது. ஆட வேண்டும் எனில் ஊஞ்சலை சங்கிலியில் தொங்க விட அதன் ஓரத்தில் பிடிகள் இருக்கும். கிராமப்புறங்களில் பிள்ளை வரம் வேண்டி பிரார்த்தித்து தொங்கவிடும் ஊஞ்சல் இந்த வகை ஊஞ்சலே.

வெகு சில நாட்கள் பிள்ளை புழங்கிய ஒரே பொருள். தாய் தந்தை மடி விட்டால் அது கண்வளர்ந்த இடம். அதன் முதல் சிற்றில். பிள்ளை இல்லாத வெறும் தொட்டில், அது அளிக்கும் துயரத்தை தாள இயலாது. விட்டு எறியவோ மனமில்லை. ஆகவே அதையும் சேர்த்து மகனுடன் அதையே சவப்பெட்டியாக மாற்றி புதைத்து விட்டார்கள்.

நெடுநாள் என்னைத் துரத்திய ஒரு இருள் சித்திரம் அது. ஊஞ்சல் சவப்பெட்டி. பின்னர் ஒரு நாள் இனிய பயணங்களை முடித்தபின் என் வசம் அப்படி ஒரு பிரம்பு ஊஞ்சல் வந்து சேர்ந்தது. அது கிளர்த்தும் இருள் நினைவுகளை எவ்விதம் கடப்பது? ஊஞ்சலை நிற்கவைத்து பிரம்பு பின்னல் வரிசை இடையே இரண்டு பலகைகளை செருகி சிறியதொரு புத்தக அலமாரி என்று அதை மாற்றினேன். அதில் எடுத்து அடுக்கிய கவிதை தொகுதி வரிசையில் கண்டு, முதன் முறையாக தேவதச்சனின் இந்த கவிதை அன்றெனக்கு வாசிக்கக் கிடைத்தது.

 

தொட்டில்

இனிய தொட்டில் உடைகிறது
கீழே விழுந்து அல்ல
யாரோ தவற விட்டு அல்ல

இனிய தொட்டில் உடைகிறது
பரணில் பராமரிப்பு அற்று, படிமமாக கிடந்ததால் அல்ல.

இனிய தொட்டில் உடைந்தது.

குழந்தையின்
மெல்லிய மூச்சு
நிற்பதற்கு,
மேலும் கீழும் ஏறியபோது. 


முதல் பார்வைக்கு வெகு சாதாரண  தோற்றமளிக்கும் இக்கவிதை, தன்னுள் பொதிந்துவைத்திருக்கும் இரட்டை நிலை வெளிப்பாடு வழியே இதன் மைய உணர்வு நிலையான இருண்மையை சென்று தொடுகிறது. முதல் இரட்டை நிலை உடையும் ஊஞ்சல் எனும் ரொமான்டிச துவக்கமும் இறுதி மூச்சு எனும் குரூர முடிவும். இரண்டாம் இரட்டை நிலை முன்னும் பின்னுமாகவோ, இடமும் வலமுமாகவோ நிகழும் ஊஞ்சல் அசைவு. அதன் மேல் மெல்ல ஏறி இறங்கும் சிறு மகவின் நுரையீரல் அசைவு.

ஊஞ்சலில் அசைவை தொட்டெழுப்பிய கரம் அறிவோம். இந்த உயிர்க்கூட்டில் அசைவை தொட்டெழுப்பிய கரத்தை?

***

2

எனது பால்யம் முதலே கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்து, அதே அமைப்பில் இப்போதும் நீடிப்பவன் நான். பளீர் வெளிச்சம் பொழிய, ரேடியோ ஓலம் பொங்க இங்கே ஆட்கள் குறட்டை விட்டு தூங்குவார்கள் என்பதெல்லாம் எனக்கு சகஜம். என் பால்யத்தில் எல்லோரது வீடுகளும் இவ்விதமே இருக்கும் என்று நம்பி இருந்தேன். விடுமுறை ஒன்றுக்கு நெய்வேலி அரசினர் மருத்துவமனையின் தலைமை செவிலியாக பணியாற்றிய என் சித்தி வீட்டுக்கு செல்லும் வரை. முதல் நாள் எல்லோரும் பணிக்கு சென்றுவிட, மர நிழல்கள் வருடும் மௌனத்தில் செவிலியர் குடியிருப்பு மொத்தமும் முழு அமைதியில் உறைந்து நின்றது. என்னால் தாள இயலாமல் அடுத்த மூன்றாவது நாள் அழுது துடித்து வீடு வந்து சேர்ந்தேன். மனித சத்தம் இல்லாத வீட்டுக்கு கல்லறை என்றே பெயர் சூட்ட வேண்டும்.

இதற்கு நேரெதிரானது துயரக் கூச்சல் வெளியிடும் இல்லங்கள்.முன்னது கல்லறை என்றால் இது சுடுகாடு. குடும்ப வன்முறையால் பெண்கள் குழந்தைகள் அடி வாங்கி எழுப்பும் ஓலத்தை, அது வெளியே செல்லாமல் தடுக்க வகையற்று கற்சுவர் புகையென்றே ஆகிவிட்டமை போல கையறு நிலையில் திகைத்து  நிற்கும் வீடுகள்.

பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகள், வளர்ந்து படித்து திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட, சூழல் காரணமாக வீட்டிலேயே தங்கி விட்ட முதியோர் தனித்து வாழும் இல்லங்களின், மீள இயலா நோயில்  மரணம் நோக்கி காத்திருக்கும் நோயாளியின் வலி முனகலை அடைகாக்கும் வீடுகள்.

அந்த வீடுகளின் சப்தம் அல்லது நிசப்தம் குறித்த இருண்மை உணர்வைக் கிளர்த்தும் கவிதை இது.

நிசப்தம் நிசப்தமாக

சத்தங்களால்
கட்டப்பட்டிருக்கின்றன வீடுகள்.

வீட்டிற்கு உள்ளிருக்கும் நிசப்தம்
வீடல்ல என்று தெரியவரும்போது
ரொம்பவும் திடுக்கிடுகிறேன்

எப்பவாவது வீட்டுச் சத்தங்கள் வெளியே கேட்கும்போது
வீடு நீண்டு
வீடாக இல்லாது போகிறது. அப்பவும் திடுக்கிடுகிறேன்.அங்கு
கிழக்கு மூலையில் அடுப்பின்
நீலநிற ஜ்வாலை
விழித்தெழும்போதும்

நோயுற்றவர்களைத் தொட்டுத்
தூக்கும்போதும்

நிசப்தத்துக்கு அப்பால்
நீண்டு சென்றுவிடுகிறது வீடு.

மழைக்காலத்தில் நள்ளிரவு மின்னலில் தெரியும்
தாமரை இலைகளைப் போல
வீட்டிற்குள்
மிதந்துகொண்டிருக்கின்றன, சத்தங்கள்.

அவைகளை நான்
மிகவும் விரும்புகிறேன்

நிசப்தம் நிசப்தமாக இல்லை என்று அவை எனக்குச் சொல்கின்றன.

***

3

பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய அப்பாவும் நானும் சிறுகதை மாலையில் துவங்கி இரவில் முடியும். ஒளியில் தெரியும் அழகிய உலகில் ஒரு பதற்றமும் இல்லை. எல்லாவற்றையும் குறித்து துணை வரும் அப்பாவுக்குத் தெரியும். மேலும் எப்போதும் துணையாக எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டு கடவுள் துணை இருக்கிறார். அப்பாவும் மகனும் தண்டவாளத்தில் நடந்து குறுக்கு வழியில் இல்லம் செல்வார்கள்.

இரவு அடர்ந்து வர வர பையனுக்கு மெல்ல மெல்ல பயம் கிளம்பும். அடர் இருளில் தூரத்தில் ஏதோ ஒளி. நிச்சயமாக இது எந்த ரயிலும் வரும் நேரம் இல்லை. பின்னர் அது என்ன? புகைபோக்கி வழியே புகைக்கு பதிலாக நெருப்பு கொழுந்துவிட்டு எரிய அதி வேகத்தில் தடதடத்து வருவது ரயில்தான். மின்னல் வேகத்தில் மகனுடன் தண்டவாளத்தில் இருந்து எட்டி குதித்து தப்பிக்கிறார் அப்பா. ரயில் அவர்களை கிடக்கிறது. எஞ்சின் ட்ரைவர் ஒரு பிரேத மனிதன். எல்லா பெட்டியும் முற்றிருளில் இருக்க, தடதடத்து இருளுக்குள் சென்று மறைகிறது அந்த ரயில்.

அப்பா இது என்ன? இப்போது என்ன நடந்தது?

தெரியவில்லை மகனே.

அப்பாவுக்கு எதுவும் தெரியாது. துணை வர கடவுள் இல்லை. வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் வந்து விட்டோம். என்ன ஒரு பயங்கரம். என்று சிறுவன் நினைப்பதாக கதை முடியும்.

ரயில் நவீன யுகத்தின் குறியீடு. நேரடியாகவே வெளிச்சத்திலிருந்து இருளுக்கு நழுவும் வாழ்வு மீதான இருத்தலியல் நோக்கிலான சித்தரிப்புக் கதை.

இந்தக் கதையின் அதே ரயில் தேவதச்சனின் கவிதைக்குள் வந்தால்?  முதல் இரண்டு கவிதையின் அதே இருண்மை இந்த மூன்றாவது கவிதையில் இருந்தாலும், இந்தக் கவிதை மேலும் நகர்ந்து அமானுஷ்ய உணர்வு நிலை ஒன்றை தொட்டு விடுகிறது.

 ரயில்

காட்டு விலங்கின் துல்லியமான
பாகம் ஒன்று கிடக்கிறது
செம்மண் பொட்டலில்.

அந்த மானின் எலும்புக்
கூட்டுக்கிடையே நாவை விட்டு இன்னொரு மான் புல்லைக் கடித்துவிட்டு நகர்கிறது.

நகரும் மானின் கண்கள்
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன.

அருகில் செல்லும்
தண்டவாளத்தில்
ஒரு நாளைக்கு நிறையவே
ரயில்கள் செல்கின்றன

ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு சூரியன்

லட்சக்கணக்கான பயணிகளின் லட்சக்கணக்கான கண்கள்
சிமிட்டி சிமிட்டி
விபரீதமான குமிழ் ஒன்று ஒரே திசையை பார்த்துக்கொண்டிருக்கிறது.

உடையாத நிசப்தத்தில்
குலுங்கும் இந்தக் குமிழை இழுத்துச் செல்லவா

இத்தனை பெரிய ரயில்?

ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு சூரியன் எனும் வரி வரை இந்தக் கவிதை அளிக்கும் காட்சி அனுபவம் சினிமாட்டிக் ஆனது.

முன்னொரு காலத்தில் வாழ்ந்து சடலம் என மிஞ்சும் மான்.

பின்னொரு காலத்தில் அங்கே புல் மேயும் மான் முந்தைய காட்சி மீது ஓவர் எக்ஸ்போஸ் ஆகி அந்த காலத்தை முடித்து இந்த காலமாக தொடர்கிறது.

இந்த நிலக்காட்சி கொண்ட ஆதி காலத்தை முடித்து வைக்கிறது ரயில் தண்டவாளம் வழியே வரும் நவீன காலம்.

மாலை மஞ்சள் ஒளியில் சில் அவுட் ஆக விரையும் ரயிலில் ஒவ்வொரு ஜன்னலிலும் மாலைச் சூரியன் மின்னி மின்னி மறைகிறது.

அன்று காட்டில் மானின் விழிக் குமிழ் சிமிட்டி சிமிட்டி அதில் பிரதிபலித்த அதே சூரியன்தான்.

இன்று லட்சக்கணாக்கான பயணிகள் விழிக்குமிழ்கள் சிமிட்டி சிமிட்டி அதில் பிரதிபலிக்கும் இந்த சூரியன்.

விபரீதக் குமிழ் வரும் இறுதி வரிகள் அமானுஷ்யம் கொண்டு விடுகிறது. காலங்கள் மாறிக்கொண்டே இருக்க, விலங்குகள் மனிதர்கள் பிறந்து பிறந்து இறக்க, நித்யமாக இந்த சுழலைப் பார்த்துக்கொண்டிருக்கும் அது என்ன?   வாழ்விலிருந்து மரணத்துக்கு  செல்வதுதான் இந்த ரயிலின் இலக்கா?

தமிழில் மிக அபூர்வமான அமானுஷ்யக் கவிதைகளில் ஒன்று இக்கவிதை.

***

மரம் நபர்: தேவதச்சன் கவிதைகள். பெருந்தொகுதி உயிர்மை வெளியீடு.

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

*** 

Share:

திணை களைந்து நீந்தும் காளி - அழகுநிலா

கவிதையில் இடம் பெறும் தொன்மங்கள் கவிதையின் மைய உணர்ச்சியைக் குறைந்த சொற்களில் அதிக தீவிரத்தோடு கடத்தக் கூடியவை. காலங்காலமாய் புழக்கத்தில் இருக்கும் ஒரு தொன்மத்தை கவிதை தனக்குள் பலவாறு விரித்துப் பொருள் கொள்ள வைக்கிறது. சில சமயங்களில் தொன்மத்தின் மீதான மரபான அர்த்தங்கள் முற்றிலுமாக மறைந்து புதிய பொருளில் வேறொன்றாக மாறும் அதிசயமும் கவிதையில் நிகழ்வதுண்டு.

லதாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘யாருக்கும் இல்லாத பாலை’. போருக்குரிய தெய்வம், நிலம் என்ற இரண்டு தொன்மங்கள் இந்தக் கவிதையில் இருக்கின்றன. வெம்மை வாட்டும் பாலை நிலத்தில் பெரும் போருக்குப் பின் களைத்து நிற்கும் காளி தனது கையிலிருக்கும் அனைத்து ஆயுதங்களையும் வீசி எறிகிறாள். பிணங்களைத் தூர் வாரும் இயந்திரங்களின் இசைப் பின்னணியில், தகப்பனை, சகோதரர்களை, கணவனை, மகனைப் போரில் பறிகொடுத்த பெண்கள் காளியின் வெற்றுக் கரங்களில் போருக்கு எதிரான கொடிகளை, அன்பை யாசிக்கும் கொடிகளைக் கட்டிச் செல்கின்றனர்.

பெண்களின் துயர் மிகுந்த பாடல்களுக்குச் செவிசாய்த்து, செம்மைக்குப் பதில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும் காளி போர் தெய்வமென்ற நிலையிலிருந்து மென்மையான பெண்ணாக உருமாறத் தொடங்குகிறாள். ஆனால் ‘அடையாளம்’ என்ற கருத்துருவாக்கம் உலகக் குடிமகளாக மாற விரும்பும் அவளது மென்மையை, வண்ணங்களை, அன்பின் கொடிகளை, அமைதியின் பாடல்களை ஏற்க மறுத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறது. அடையாளத்தைச் சுமக்க நிர்ப்பந்திக்கப்படும் அவளது மென்மை தேசக்கொடிகளால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறது.

வலிந்து திணிக்கப்படும் அடையாளங்களைத் துறந்து, திணைகளைக் களைந்து கடலில் நீந்தும் காளி உடல் முழுதும் உயிர்களைச் சுமக்கும் பேரன்னையாக உருமாறுகிறாள். இரத்த வாடை வீசும் வெக்கையிலிருந்து கருணை கொண்ட நீர்மைக்கு இடம் பெயர்கிறாள். ஆயுதங்களைச் சுமந்த போர் தெய்வம் உயிர்களைச் சுமக்கும் பேரன்னையாக மாறி நிற்கும் அற்புத கணத்தில் அவளது கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் வேறு ஒரு காளியை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அடையாளத்துக்காக ஆயுதம் ஏந்திய காளி மனிதம் காக்க ஆயுதம் ஏந்தி நீந்தும் காட்சி அழகானது.  

யாருக்கும் இல்லாத பாலை
போர் களைத்து நிற்கிறாள் காளி.
மணல் காற்றின்
வெம்மை வாட்டும்
எல்லையற்ற வெளியில்
ஒவ்வொரு கையாய் வீசுகிறாள்
ஒலியுடன் விழுகின்றன ஆயுதங்கள்.
தூர் வாரும் இயந்திரங்களின் இசையில்
பாடிச் செல்லும் பலவிதப் பெண்கள்
அவள் வெற்றுக் கரங்களில் கொடிகள்
கட்டிச் செல்கின்றனர்.
பதினெட்டுக் கரங்களிலும் பல பாடல்கள்.
செம்மை களைந்து வண்ணங்கள் பூசிய
அவளை
சென்ற இடமெல்லாம் கேட்டனர்
“எந்த நாட்டவள்?”.
மென்மையேறிய கரங்களை
வலிக்க வலிக்க
தேசக்கொடிகளால் இறுகக் கட்டினாள்.
அதன் இடுக்குகளில்
துப்பாக்கிகள் செருகி
எவருமற்ற கடல் பரப்பில்
திணை களைந்து நீந்துகிறாள்.
உடலெங்கும் உயிர்கள் சுமந்து.  


‘மென்மை’ என்ற தலைப்பிட்ட லதாவின் மற்றொரு கவிதை திரௌபதி என்ற தொன்மத்தைக் கையாளுகிறது. ‘உன் தோள் முறிக்க என் விரல் போதும்’ என்ற வரியின் மூலம் மென்மையும் அதற்குள் கரந்திருக்கும் வன்மையுமாக வேறு ஒரு திரௌபதி எழுந்து வருகிறாள். சத்தமின்றிக் கொத்தித் தின்னும் கழுகான அவளுக்கு குருசேத்திரம் அவசியமில்லைதான்.

யாருக்கும் இல்லாமல் போகவேண்டும் பாலை, எல்லா வாள்களையும் ஒன்றாய்ப் புதைக்க வேண்டுமென இரண்டு கவிதைகளும் போருக்கு எதிராக குரல் கொடுத்தாலும் சொருகப்பட்ட துப்பாக்கிகள் வழியாக மனிதம் காக்க விழையும் அன்னையையும் சும்மா ஒரு சபதம் என்பதன் வழியாக நிதர்சனம் உணர்ந்த பெண்மையையும் காட்டுகின்றன.  

மென்மை

ஆடை களைந்தாய் என்றா
வாளைத் தூக்கச் செய்தேன்?  
தாயக்கட்டையில்
சாயம் போனபின்
சுற்றி இருக்கும் சேலையிலா
தொக்கி நிற்கும் என் கற்பு?
தொடையில் அமரச் சொல்லி
நீ ஆதிக்கம் காட்டலாம்
கூந்தல் அவிழ்த்து விட்டு
நான் துவேஷம் தணிக்க மாட்டேன்
தோள்களில் தொலைத்த பலம் காட்ட
பூக்களின் இதழ் தேடி நீ வரலாம்.
உன் தோள் முறிக்க என் விரல் போதும்
குழல் ஊதும் இறைவனைக்
கூப்பிட மாட்டேன்
கொக்கரிப்புகளில் கும்பல் சேர்க்கும்
கோழி அல்ல;
சத்தமின்றிக் கொத்தித் தின்னும் கழுகு நான்
எல்லா வாள்களையும்
ஒன்றாய்ப் புதைக்கவே
சும்மா ஒரு சபதம்.


யாருக்கும் இல்லாத பாலை (க்ரியா பதிப்பகம்), பாம்புக் காட்டில் ஒரு தாழை (காலச்சுவடு பதிப்பகம்) தொகுப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்ட கவிதைகள்

***

கனகலதா தமிழ் விக்கி பக்கம்

Share:

ரமேஷ் பிரேதன் கவிதைகள்- பாலாஜி ராஜு


அரசியல் கவிதைகள் இறுக்கம்
, கொந்தளிப்பு என சில பண்புகளைத் தன்னுள் பரவலாகக் கொண்டிருப்பவைகவிஞனின் உணர்வுகள், அறச்சீற்றம் என அதற்கான காரணிகள் அமைகின்றனபாரதி, ஆத்மாநாம், இளங்கோ கிருஷ்ணன் என சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த வரையறைக்கு வெளியே கவிஞர் ஞானக்கூத்தன் பகடி கலந்த அரசியல் கவிதைகளை எழுதியிருக்கிறார் (எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதைப்பிறர்மேல் விடமாட்டேன்). ரமேஷ் பிரேதனின் இந்தக் கவிதையும் பகடியையே தன் கூறல்முறையாகக் கொண்டுள்ளது. கவிதையின் வரிகளை  ஒரு சிறுபுன்னகை இல்லாமல் கடக்க முடிவதில்லை.

பகடி மட்டுமல்லாமல் கோட், எலி என்று மிகச் சிறந்த படிமங்களும் கவிதைக்குள் ஊடாடுகின்றன. மேற்குலக அதிகாரங்களின் ஒட்டுமொத்த பிம்பமாக கோட் அமைகிறது. நூற்றாண்டுகளாக அதிபர்களிடம் அது கடத்தப்படுகிறதுஅவர்களை அறியாமலேயே கோட்டில் எலிகளைச் சுமந்துகொண்டு அலைகிறார்கள்பரவவிடுகிறார்கள். பிறகு நடப்பவையெல்லாம் ஒருவகை டாம்&ஜெர்ரி விளையாட்டுதான்.


அணுஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகச்

சொல்லப்பட்ட

ஒரு பாலைவன நாட்டைச்சுற்றி வளைத்துக்

கைப்பற்றியது உலகமகா வல்லரசுப்படை

தரைமட்டமான நகரங்கள் கட்டியெழுப்பப்படவும்

எரியும் எண்ணெய்வயல்கள்சீ ரமைக்கப்படவும்

இறந்தவர்களுக்குக் கல்லறைகட்டவும்

பன்னாட்டு நிறுவனங்கள் வந்து குவிந்தன

எல்லா இடங்களிலும் வல்லரசின் இரும்புப்பார்வை

உலகநாடுகள் நிசப்தத்தில் உறைந்தன

வல்லரசின் அதிபர் பிடிபட்ட நாட்டைப்

பார்வையிட பலத்த பாதுகாப்போடு

பாலைவனத்தில் வந்து இறங்கினார்

தனது ராணுவத்தளத்தில் உலக அமைதி குறித்தும்

தீவிரவாதப் பேரழிவு குறித்தும் உரையாற்ற

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு

அதிபரின் மிடுக்கு வெற்றிப்புன்னகை

ராணுவத்தினரை உணர்ச்சியின் விளிம்பில் நிறுத்தும்

தியாகத்தின் வர்ணனை

உலகமே வாய்ப்பொத்தித் தொலைக்காட்சிப்பெட்டி முன்

அதிபர் எதேச்சையாகத் தனது கோட்டுப் பாக்கெட்டில்

கையைவிட அவர் முகத்தில் சிறுமாறுதல்

பையிலிருந்து கைவழியே சடசடவென மேலேறி

முகத்தில் சாடியது குட்டிச்சுண்டெலி

அதிபர் அய்யோஎன்று பதறினார்

ராணுவம் பதறி எழுந்து பாதுகாக்கவேண்டி

அதிபரைச் சூழ்ந்தது

சுண்டெலி துள்ளிக்குதித்துக் கூட்டத்துக்குள் ஓட

அதிபரின் பதறிப் பயந்த முகத்திருந்து

விடுபட்ட காட்சி

சுண்டெலியைப் பதிவுபடுத்தி ஓடியது

உலகம் முழுதும் தொலைக்காட்சிமுன் அமர்ந்திருந்த

குழந்தைகள் ஜெர்ரி எனச் சுண்டெலியைப் பார்த்துக்

குதூகலத்தோடு கத்த

டாம் கோட்டுப்பைக்குள் கையைவிடவே பயந்து

நடுங்கிக்கொண்டிருந்த படப்பதிவு

அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு

விளம்பரப்படம் ஓடியது.

……….

 

 நடக்கக்கூடிய தூரம் :

இங்கு எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அல்லது நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்தலின், நிகழ்த்தப்படுதலின் மையமாகவே பெண் இருக்கிறாள்.

எளிய நிகழ்வுகளின் சித்திரங்களாக, ஒரு பெண்ணின் சிறு பயணத்தைக் காட்சிப்படுத்தும் இந்தக் கவிதையில்,காப்பியங்களின் கதைமாந்தர்கள் வந்தமர்ந்ததும் நிகழ்காலமும் கடந்தகாலமும் தம் எல்லைகளைக் கலைத்துக்கொள்கின்றன. கவிதையின் எடை கூடி பூடகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது.காட்சி மற்றும் அர்த்த வரையறைகள் கடந்து இந்தக் கவிதை நம்மிடம் கவிதை அனுபவமாகவே எஞ்சுகிறது, அதுவே இதை சிறந்த ஒரு கவிதையாகவும் மாற்றுகிறது.


நடக்கக்கூடிய தூரம்தான்

அதற்குள் ஏதேனும் நிகழலாம்

பாதிவழியிலேயே திரும்பி வந்துவிடவும் நேரலாம்

வழியில் உனக்காக ஒரு கொலை காத்துக்கிடக்கலாம்

அல்லது ஒரு பரதேசி மரத்தடியில் செத்துக்கொண்டிருக்கலாம்

புணர்ந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு

செம்பருத்திப் பூக்களைப்போல

உன் கூந்தலில் தொத்திக்கொள்ளலாம்

நடக்கக்கூடிய தூரம்தான்

அதற்குள் ஏதேனும் நிகழலாம்

பலூன் விற்பவன் குறிசொல்லும் கிழவி

பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவன்

சைக்கிளில் கட்டிச்செல்லும் புடவை வியாபாரி

ஆடுமேய்க்கும் சிறுமி

பக்கத்து நாட்டில் குண்டுவீச உனது

பக்கத்து ஊரில் பெட்ரோல் நிரப்ப

தரையிறங்கும் விமானம் என

ஏதேனும் வழியில் எதிர்ப்படலாம்

கண்ணகி மாதவி மணிமேகலை

காப்பியங்களிருந்து வெளியேறி

தமது வேடங்களைக் கலைத்தபடி

புளியமரத்தடியில் வெற்றிலை மென்றுகொண்டிருக்கலாம்

உன் இடுப்பில் ஏறிக்கொள்ள அழும் குழந்தைபோல

உன்னை கைப்பிடித்துவரும் உனது நிழல்மீது

ஒற்றைமாட்டுவண்டியின் இடதுசக்கரம் உருளலாம்

மாராப்பை சரிசெய்தபடி நடக்கக்கூடிய தூரந்தான்

வழியில் உனக்காக ஒரு ஆறு காத்துக்கிடக்கலாம்.

……….

'மார்கழி பாவியம்' தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்ட இரு கவிதைகள் (யாவரும் பப்ளிசர்ஸ்).

Share:

கவிதையை வேண்டும் கவிதை - மதார்

கவிதை எழுதாதபோது அல்லது கவிதை தோன்றாதபோது கவிஞர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

  • கவிதை எழுதிக் கொண்டிருப்பார்கள்
  • புலம்பிக் கொண்டிருப்பார்கள்

"இறைவனின் கூலி எப்போது கிடைக்கும் என்று சலித்துக் கொள்ளாதீர்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருங்கள். நீங்கள் சலிப்பதற்கு முந்தைய கணம் வரை அது உங்களை நெருங்கிக் கொண்டுதான் இருந்தது. உங்களது சலிப்பினாலும், பொறுமையின்மையாலும் அது உங்களை வந்தடையாது நின்றுவிடலாம். ஆகவே, பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருங்கள்"
என்று குரானில் சொல்லப்பட்டுள்ள விஷயம் கவிதைக்கும் பொருந்தும்.
தூண்டிலுடனும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் மீனுக்குக் காத்திருக்கும் பொழுதுகள் அவை. ஆக மீனும், கவிதையும் கிடைப்பது உறுதி பொறுமையையும், நம்பிக்கையையும் இழக்காத வரை.
    பெரும்பாலும் இந்த 'கவிதையை வேண்டும் கவிதைகளை' தமிழில் பெரும்பாலான கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். விக்ரமாதித்தனின் கவிதையில் உலகியலையும், கவி வாழ்வையும் இணைத்துச் செல்லும் சரடாக துன்பம் எழுதப்பட்டிருக்கும். அதே அவரது கவிதைகளிலேயே அந்தச் சரடு 'ஒளி'யாகவும் இருக்கும். தேவதேவனின் கவிதைகளில் வரும் கவிதை தேவதேவன் தான். தேவதச்சனுக்கு ஹோல்ட்ரில் பல்பை மாட்டும் எதார்த்த அதிசயம். பாரதியில் இதனை வெடிப்பாகக் காணலாம்.பிரமிள், ஞானக்கூத்தன், சுகுமாரன் என்று யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. கவிதையை வேண்டும் கவிதை பிச்சைப்பாத்திரத்தை பிச்சை கேட்டு அந்த பிச்சை பாத்திரத்தில் பிச்சை பாத்திரத்தை பிச்சை கேட்பது போல் தான். இன்றைய இளம் கவிஞர்களிலும் பெரும்பாலும் எல்லோருமே கவிதையை வேண்டும் கவிதைகளை எழுதியிருப்பவர்களாகவே உள்ளனர். கவிஞர் றாம் சந்தோஷின் முதல் தொகுப்பான சொல்வெளித் தவளைகளின் துவக்கமே கவிதை கவிதை என்று சில முறை எழுதவும் என்று கவிதையை வேண்டும் ஒரு மந்திரமாகத்தான் துவங்குகிறது. ஒரு கவிஞன் கவிதையை, வாழ்வை எப்படி புரிந்து கொள்கிறான், எப்படி பார்க்கிறான் என்று அறிந்து கொள்ள அவனது தொகுப்பில் இருக்கும் கவிதையை வேண்டும் கவிதையே போதுமானது என்று நினைக்கிறேன். அதுவே அவனை முழுமையாக காட்டிவிடும். தாகூரின் நிறைய கவிதைகளில் கவிதை என்று வருகிற இடத்திலெல்லாம் தெய்வம் என்று போட்டு வாசித்தாலும் அது அப்படியே கவிதையோடு பொருந்தி போவதை பார்க்கலாம். அதுவே அவனை அவனது கவிதையை முழுமையாகத் திறந்து காட்டிவிட போதுமானது.

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்து கொண்டே இரு

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒரு போதும்.

- ரூமி


சமீபத்தில் வெளிவந்த கவிஞர் ஸ்ரீநேசனின் 'மூன்று பாட்டிகள்' தொகுப்பில் ஒரு கவிதையை வேண்டும் கவிதை. அது மிகச்சரியாக ஸ்ரீநேசனின் கவிதை உலகை அடையாளம் காட்டிவிடுகிறது.


கல்

- ஸ்ரீநேசன்

கடவுள் அவ்வப்போது என்மேல் கல்லெறிகிறார்
அதுவும் அருளே என ஏற்றுக்கொள்கிறேன்
எறிகிற கல் எனை அடைகையில் சொல்லாகி விடுகிறது
அற்புதம்தான்
எனக்காக உருமாறிய கடவுளின் சொற்கள்
சும்மா வைத்துக் கொள்ள முடியாது
உடனே எழுதத் தூண்டும் பிரத்யேகச் சொற்கள்
படைக்கத் தொடங்கி விட்டேன்
கவிதையிலடங்கிய சொற்கள்
அவர் சொற்களுக்கடங்காப் பொருள்கள்
கொஞ்சம் மமதைதான்
கடவுள் கவனித்திருக்க வேண்டும்
அதனாலோ என்னவோ கல்லெறிவதை நிறுத்தி விட்டார்
அவர் விட்டதுபோல் கவிதை என்னை விடவில்லை
அவரிடமே விண்ணப்பம் செய்தேன்
அது ஆலயம்வரை இட்டுச் சென்றது
ஆங்கே
மணம் வீசும் சொற்களை மாலையாய்ச் சூட்டி
வெளிச்சமான சொல்லால் ஒரு சுடரை ஏற்றி
வணங்கி நின்றேன்
சுடரின் வெளிச்சத்தில் கடவுள் சொல்லென நின்றார்
பொருளும் பொருளின்மையும் முயங்கிய ஒருநிலை
என்மீது எறிந்த கல் உருவாக நிற்கும் அருஞ்சொல்.
கடவுள் படைப்பும் கவிதைப் படைப்பும் பொருள்பட ஒன்றென
அக்கண அமைதியில் உணர்ந்தேன்
அப்போதும் உள்ளேயிருந்து ஒரு குரல் இன்னும்
கல்
சொல்
எனக் கூறிக் கொண்டிருந்தது.

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive