அண்மையில் நீலி இதழில் அவர் எழுதிய
சீமோன் வெயில், ஹன்னா அரெண்ட் போன்ற ஆளுமைகள் வரலாற்றில் திரண்டு வந்த விதம், அவர்களின் தத்துவார்த்த நோக்கு, சாராம்ச தேடல் குறித்த கட்டுரைகள் சார்ந்து எழுத்தாளர் சைதன்யா வசம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் முடிவில் பெண்ணிய நோக்கு சார்ந்த பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையில் பெண்ணை பெண் என்று வரையறை செய்தாலே வரையறைகளை எதிர்க்கும் கோட்பாட்டாளர்கள் எவ்விதம் பாய்ந்து வந்து எப்படி அப்படியெல்லாம் வரையறை செய்யலாம்? யார் வரையறை செய்வது? எந்த ஆதிக்கத்தின் கருவி அந்த வரையறை என்றெல்லாம் கேட்டு கொந்தளிக்கிறார்கள் என்பதை சொன்னார்.
பெண் என்ற வரையறை இல்லாமல் பெண் குறித்த விஷயங்களை எப்படிப் பேசுவார்களாம்? சுவாரஸ்யம் உந்த க்ரோம் உதவியுடன் தங்கீலிஷ்ல் மாற்றி இன்றைய பெண்ணிய அயல்நில உரையாடல்கள் சிலவற்றை கொட்டாவிகளுக்கு இடையே வாசித்தேன். பெண் என்று வரையறை செய்வதில் இருந்தே ______ மீதான முதல் ஆதிக்கம் துவங்குதாக அந்த அந்தர கோஷ்டியின் வாதம் துவங்கி முன்னே செல்கிறது. இந்த அந்தர கோஷ்டிக்கு ஒரு செயல்திட்டம் இருப்பதை, அவர்களின் உரையாடல்கள் துவங்கிய புள்ளி எது என்று பின்னால் சென்று தேடும்போது புரிந்தது.
2000 களுக்கு பிறகு பெருகிய நுகர்வு பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக ஆதரவாகவும், அந்த பொருளாதார அமைப்புக்கு எதிராக இருக்கும் எதையும் அதன் கருத்தியல் அடித்தளத்தை உடைக்கும் வண்ணம் செயல்படுவது இந்த அந்தர கோஷ்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று.
இரண்டு உலக போர்களுக்குப் பிறகு இயந்திரமாக்கலுக்கு எதிரான பார்வையாக எமர்சன் தோரோ என பல்வேறு ஆளுமைகள் வழியே இயற்கை குறித்த உயிர்ச்சூழல் நோக்கு உலகு தழுவி வலுப்பெற்று விரிந்தது. அதன் பல்வேறு விளைவுகளில் ஒன்றாக ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் எனும் சூழலியல் அழிவு சார் விழிப்புணர்வு நூல் எழுந்தது. இதன் சம காலத்துடன் அமெரிக்க பிரெஞ்ச் நிலங்களில் பெண்ணிய சிந்தனைகளும் வலுப்பெற்றன.
1975 இல் பிரான்ஸை சேர்ந்த Francoise d'Eaubonne (இணையத்தில் கிடைக்கும் இவர் வாழ்க்கை குறிப்பு சுவாரஸ்யம் மிக்கது) பெண்ணியத்தையும் சூழலியலையும் கோட்பாட்டு ரீதியாக இணைத்து எக்கோஃ பெமினிசம் என்ற அடிப்படையை உருவாக்கினார். (இந்தியாவில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து பெண்கள் போராடிய சிட்கோ இயக்கம் துவங்கி, நர்மதை நதிஅணை திட்ட போராட்ட ஆளுமை மேத்தா பட்கர் வரை இங்கே அத்தகு வரையரைக்குள் வரும் வரிசை ஒன்று உண்டு. இந்தியாவில் மரங்கள் நதிகள் எல்லாமே பெண்மை என்று இந்திய ஆழ் மனதில் பதிந்த அந்த நிலையின் வெளிப்பாடே மேத்தா பட்கர் போன்ற ஆளுமைகள் பெற்ற வெற்றி என்பதை அறிவோம்). இந்த எக்கோ ஃபெமினிசம் எனும் சட்டகத்துக்குள் இன்றுவரை உலக புகழ் பெற்ற போலிகள் பலர் செயல்பட்டாலும், உண்மையும் திவிரமும் கொண்ட ஆளுமைகளால் இந்த கருத்தாக்கம் கொண்ட செயல் வடிவம் ஒரு கால் நூற்றாண்டு உலகு முழுதும் சீரிய பல ஆக்கப்பூர்வ விளைவுகளை உருவாக்கவே செய்தது.
2000 கு பிறகான நுகர்வு பொருளாதாரம் இந்த சூழலியல் அழிவு எதிர்ப்பாளர் தடையை உடைக்க சமூக ஊடகங்களையும், பல்கலைக்கழகங்கள் வழியே உருவாக்கிய, உள்ளுறையாக மெய்யான தத்துவச் சிக்கல் ஏதும் இல்லாத போலி கோட்பாடுகளையும், அதைப் பரவச் செய்யும் வெற்று ஆளுமைகளையும் உற்பத்தி செய்து எல்லா தளங்களிலும் உலவ விட்டது. அவர்களின் முதல் இலக்கு எக்கோஃபெமினிசம் என்பதன் ஒவ்வொரு கருத்தியல் அடித்தளத்தையும் உடைப்பது. பெண் என்று துவங்கினால், இந்த வரையரையில் இருந்தே ஆதிக்கம் துவங்குகிறது என்பார்கள். அங்கிருந்து பிறன், ஆண்மைய்ய நோக்கு, சுரண்டல், ஆதிக்கம், அதிகாரம் என்றெல்லாம் விரித்து கொண்டே செல்வார்கள். பெண்ணும் இயற்கையும் என்று துவங்கினால், மேற்கண்ட வரிசையின் படி இயற்கைக்கு பால் பேதம் கற்பிக்கும் இந்த வரையரையில் இருந்து, பெண் என்ற வரையறை வழியே ஆதிக்கம் கொண்டு அவளை கீழாக ஆக்குவதை போலவே அவளை உயர்வு நவிற்சி வழியே வரையறை செய்வதும் இன்னொரு வகை ஆதிக்கமே என்றெல்லாம் துவங்கி களமாடுவார்கள்.
இப்படி வாசித்து செல்கையில் அத்தகு அந்தர கோஷ்டி ஒன்றின் வசைபாடல் வழியாகவே அப்படி வசைமழையில் நனைந்த பல கவிதைகளில் ஒன்றாக ஒக்டோவியா ப்பாஸ் ஸ்பானிஷ் இல் எழுதி, அதை மர்ரியல் ருக்கிசர் ஆங்கிலத்தில்
இன் ஹர் ஸ்பிலண்டர் ஐலாண்டட் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருந்த கீழ்கண்ட அழகிய கவிதையை கண்டடைந்தேன்.
IN HER SPLENDOR ISLANDED
Spanish poem
By
OCTAVIO PAZ
translated by
MURIEL RUKEYSER
அவளது பேரெழில் தீவுத்தொகையில்
அவளது பேரெழில் தீவுத்தொகையில்
இந்தப் பெண் வசீகரிக்கும் ஆபரணம் போலும்
சுடர்கிறாள்.
உறங்குமோர் அச்சுறுத்தும் படையணி.
இவ்விரனுள் இப்பெண்
மூடிய கண்களின் கீழ் தெளிந்த நீர் போலும்
படுத்திருக்கிறாள்
மர நிழலில்.
எழுவிசை அருவியொன்று ஸ்தம்பித்து நிற்கிறது
தனது பாதி வழியில்.
பாய்விசை நதியொன்று.
சட்டென உறைந்து விட்டது பெரும் வழுகுப்பாறையொன்றின் அடியில்.
மலையடிவாரத்தில் சித்திரைமாதப் பொய்கை போலும் அவள் படுத்திருக்கிறாள்.
பாப்லரும்
தைல இலைகளும் பிணைந்ததவளது அடியாழம்
மீன்களோ விண்மீன்களோ எரிகின்றன
அவளது தொடைகளுக்கு இடையே.
பறவைகளின் நிழல்
அவள் பகம் மறைக்கும்
அரிதாக.
அமைதியான வானின் கீழ் அசைவிலா சிறுகுடிகள்
அவளிரு கொங்கைகள்.
இப்பெண் இங்கே படுத்திருக்கிறாள்
ஒரு வெண்கல் போல.
நிலவின்
துஞ்சிய எரிமலைவாய்
நீர் போல.
எவ்வொலியுமில்லா இரவில்
பாசியோ மணலோ அல்ல
நீரின் செவியில்
தசையின் செவியில்
மெல்ல மொக்கவிழ்வது
எனது சொற்கள் மட்டுமே.
விரைவற்று ஓடும்
தெளிந்த நினைவாக
இங்கே மீள்கிறது இந்த எரியும் தருணம்
தன்னில் தான்மூழ்கி
ஒருபோதும் நுகராது...
உலகின் மிகப் பழமையான, வேட்டைச் சமூக மானுடம் கொண்ட சிலையான வீனஸ் ஆஃப் வில்யுன்ட்ராஃப் சிலைக்கு வயது 32 000. தனங்களும் புட்டங்களும் தொடைகளும் பண்டியும் பல மடங்கு பெருத்த, முகமற்ற சிலை. தொடர் பிறவி அளிக்கும் மரணமின்மையின் குறியீடு. குன்றா வளம் என்பதன் குறியீடு. கொல்லப்பட்டும், கொன்று புசித்தும் வாழும் ஆதி மானுட வேட்டைச் சமூகம் ஒன்று, தொடர் பிறவி அளிக்கும் ஒருவளை கூட்டு உள்ளுணர்வால் இயற்கையின் மையப் பகுதியாக ஆற்றலின் வடிவமாகக் கண்டு வணங்கியது என்பது எத்தகையதொரு ஆத்மீக பரிணாம வளர்ச்சி. அதை ஆணாதிக்க சதி என்று மட்டுமே புரிந்து கொள்வோர் எத்தகு பேதையர்.
X X எனும் ஆதிப் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் X Y எனும் ஆண் மரபணு. அது Y அல்ல இரண்டு கால்களில் ஒன்று இல்லாத X தான் அது. மானுட குலம் என்பது X X எனும் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் என்று கூறுகிறது மரபணுவியல். அதாவது மனித குலத்துக்குத் தந்தை உண்டா? அது யார்? தெரியாது. ஆனால் தாய் நிச்சயம் உண்டு அவள் யார் என்றும் தெரியும் இது மரபணுவியல் உண்மை. இந்த உண்மையை அறிந்த இன்றைய மானுடனுக்கும் 32000 வருடத்துக்கு முந்திய ஆதி மானுடனுக்கும் இடையே சாராம்சத்தில் வேறுபாடு என்றோ தொலைவு என்றோ ஏதும் உண்டா என்ன?
விந்தணுவை ஆண் என்றும் அண்டத்தை பெண் என்றும் கொண்டால், பலநூறு விந்தணுக்களின் இடையே போட்டியிட்டு முன்னேறி மண்டையால் முட்டி அண்டத்தை பிளந்து உள்ளே நுழையும் ஒன்றே பிறந்து நிற்கும் மனித உயிர் என்ற இதுகாறும் நிலைபெற்றிருந்த உடற்கூறு அறிவியல் முடிவு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. அண்டம் ( கருணை கொண்டு ?!!) தன்னுள் அனுமதிக்கும் விந்தணுவே உலகுக்கு வரும் மனிதவுயிர் என்ற நிலை நோக்கி அந்த முடிவு மாறிக்கொண்டிருக்கிறது.
( உண்மையாக இருக்கவே வாய்ப்பு மிகுதி. இல்லையேல் உடல் முதல் அறிவு வரை அனைத்திலும் சோப்ளாங்கியான நான் இப் பூவுலகில் வந்துதிக்க வேறு காரணம் இருக்க வாய்ப்பு இல்லை)
ஆதி மானுடமும் அறிவியலும் கண்ட இவற்றை கவிஞன் தனது கனவு கொண்டு சென்று தொட்டுவிட மாட்டானா என்ன? ப்பாஸ் அத்தகு கவிஞர்களுள் ஒருவர். ஒக்கடாவியோ ப்பாஸின் சில கவிதைகள் இந்தியத் தன்மை கொண்டவை அத்தகு இந்தியத் தன்மை கொண்ட கவிதைகளில் ஒன்று இது. பெண்ணை பெண்மை எனும் கடலில் ஒரு துளி என காண்பது. பெண்மையை ஆற்றல் எனும் கடலில் ஒரு துளி என காண்பது. அந்த ஆற்றலை இயற்கையின் பகைப்புலத்தில் வைத்து காண்பது என இக்கவிதை கொண்ட அனைத்துமே இந்திய ஆத்மீகத்தின் சாக்த தரிசன மரபுக்கு மிக அணுக்கமானது.
ஜெயமோகன் வாசகர் எவரும் கொற்றவை நாவலில் கோவலன் கண்ணகியை நீங்கும் தருணம் மீதான சித்தரிப்பு போல, ஜெயமோகன் புனைவுலகின் பல்வேறு தருணங்களுடன் இக் கவிதை இணைந்து அதன் கற்பனை அர்த்த சாத்தியங்கள் விரிவதை உடனடியாகவே அறிய முடியும்.
இக் கவிதையை வாசகனுக்குள் அனுபவ விரிவாக்கமாக மாற்றும் இதன் ஆன்மாவை விளக்குவதும் விவாதிப்பதும் விவேகமன்று. மாறாக இக் கவிதை கொண்ட உடலையும் அழகையும் சற்றேனும் அணுகி உரையாடினால், இக்கவிதையின் உடல்
ஆண் × பெண்
நீர் × நிலம்
நீர் × நெருப்பு
வானம் × பூமி
மலை × மடு
உயரம் × ஆழம்
பாசி × மணல்
ஆற்றல் × நிலைத்ததன்மை
பிரம்மாண்டம் × தன்னிலை
என பல்வேறு எதிரிடைகளால் கட்டப்பட்டிருப்பதை காணலாம்.
இதன் அழகு என்பது முதன்மையாக இதன் உவமைகளில் வர்ணனைகளில் இலங்குகிறது.
கண்வளரும் அந்தப் பெண் சுற்றிலும் நீர் சூழ்ந்து பிற நிலங்களுடன் தொடர்பு இல்லாத தீவுத் தொகை போல இருக்கிறாள். தீவுத் தொகை என்பது மைய்யத்தில் ஒரு பெரிய தீவும், சுற்றிலும் சிறிய தீவுகளும் கொண்ட நில அமைப்பு. அதில் சுடரும் ஒரு வசீகர ஆபரணம் போல அவள் இருக்கிறாள்.
மூடிய இமைகளின் கீழ் உறையும் நீர்மை போல படுத்திருக்கிறாள். அச்சம் விளைவிக்கும் ராணுவ ஆற்றல் ஒன்று இப்போது ஓய்வில் இருப்பது போல படுத்திருக்கிறாள்.
கணத்தில் உறைந்து விட்ட வீழும் அருவியின், பாயும் நதியின் ஆற்றலின் தூல வடிவம் போலும் படுத்திருக்கிறாள்.
(கவிதை நிகழ்ந்த நிலம் சார்ந்து) ஏப்ரல் மாதம் எனில் உறைபனி காலம் முடிந்து விட்ட, அடுத்த பருவம் மெல்ல மெல்ல துவங்கும் நிலையில் உள்ள மலையடிவார பொய்கை நீர் போல அவள் படுத்திருக்கிறாள்.
அமைதியான வானின் கீழ் தூரத்தில் இருந்து பார்க்க அசைவே இல்லாதது என தோன்றும் இரண்டு மலை கிராமங்கள் போல அவள் கொங்கைகள். அவள் நிர்வாண இடைக் கரவை மறைக்கும் எப்போதேனும் மேலே கடந்து செல்லும் பறவைகளின் நிழல்
பாப்லர் மர இலைகள் முதுமையின் அல்லது விடை பெறுதலின் குறியீடு. தைல மர இலைகள் மருத்துவத்தின் உயிர்தெழுதலின் குறியீடு. இவை முயங்கியது அவள் கொண்ட ஆழம்.
கடலடியில் மனிதன் அறிய இயன்ற அளவு ஆழத்தில் இருளில் சுடரும் மீன்கள் உண்டு. வானத்தில் மனிதன் அறிய இயன்ற அளவு உயரத்தில் தூரத்தில் சுடரும் விண் மீன்கள் உண்டு. இத்தகு பிரம்மாண்டம் அவள் இடைக்கரவில் அடக்கம்.
இத்தகையவள் ஒரு சிறிய வெள்ளைக் கூழாங்கல் போல படுத்திருக்கிறாள்
இத்தனைக்கும் பிறகு அவள் நிலாப் பரப்பில், ஓய்ந்த எரிமலை வாயில் நிறைந்து நிற்கும் நீர் போல இருக்கிறாள்.
எளிய தன்னிலை ஒன்றால் நுகர முடியாத இத்தகைய பிரம்மாண்டமான ஒருவளை குறித்து மீளும் எரியும் நினைவுகள் மீதான கவிதை.
இந்த கவிதை கொண்ட மிக முக்கிய எதிரிடைகளில் ஒன்று இயற்கை அனுபவம் × நுகரும் அனுபவம் எனும் எதிரிடை. இயற்கை அனுபவம் மற்றும் நுகரும் அனுபவம் இவற்றுக்கு இடையேயான பேதம் என்ன?
இயற்கை அனுபவம் ஐம்புலன்கள் வழியே ஒவ்வொரு கணமும் நிறைவது. அந்த அனுபவத்தின் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோமே அன்றி நமது கட்டிருப்பாட்டில் அந்த அனுபவம் இல்லை. அந்த அனுபவத்தில் நமது தேர்வு என்று எதையும் செய்ய முடியாது. அதில் எதையும் சேர்க்கவோ கழிக்கவோ முடியாது.
நுகர்ச்சி அனுபவத்தில் அந்த அனுபவத்துக்கு நாம்தான் எஜமானன். அந்த அனுபவத்தை தேர்ந்தெடுக்க முடியும். நமக்கு தேவையான விஷயங்களை சேர்க்கவும் தேவயற்றத்தை நீக்கவும் முடியும். மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ள முடியும். தேவையான போது வெளியேறவும் முடியும்.
பெண் அவள் இயல்பில் யாரோ அந்த இயற்கை இயல்பில் அவளை தரிசித்து, ஆனால் நுகர்வு அனுபவம் வழியாக மட்டுமே அனுபவித்து வாழ அறிந்த ஒரு தன்னிலை இயலாமைப் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி நிற்கும் உணர்வுநிலை மீதான தனித்துவமான கவிதை.
இந்த வானம், பூமி, நிலா, காற்று எல்லாமே உன்னுடையதுதான் உன்னுடைய தலை கை கால்கள் சுவாசம் உடல் அளவுக்கே உன்னுடையது. எல்லாம் நீ அனுபவிக்கவே. ஆனால் இது எதுவும் நீ 'நுகர்வதற்கான' உன்னுடைய 'உடமை'யல்ல. காரணம் இவை எவற்றில் இருந்தும் பிரிந்து தனியாக நீ இல்லை. அப்படி தனியாக நான் இல்லை என்பதை அறிந்து, இயற்கையை 'நுகராமல்' மாறாக இயற்கையை 'அறிந்து உணரும்' அனுபவிக்கும் நிலையை புஞ்சிதா எனும் சொல்லால் குறிக்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.
அந்த புஞ்சிதா எனும் நிலையை அறியாத, ஆனால் இயற்கையின் சக்தி தரிசனத்தை கண்டு திகைத்து, நுகர்வதன்றி தன்னிடம் வேறு கருவிகள் இல்லாத தன்னிலை ஒன்று பெருமூச்சுடன் சொல்லும் சொற்களில் எழுந்த அழகிய கவிதை ப்பாஸின் மேற்கண்ட கவிதை.
(பின்குறிப்பு: கவிதையின் தமிழ் மொழியாக்கம் கடலூர் சீனுவாகிய என்னுடையது. ஸ்பானிஷ் இல் இருந்து இந்தக் கவிதை கவிதையாகவே அங்கிலத்துக்கு வர எந்த அளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டதோ அதே அளவு சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதை இது. 'சுதந்திரமான' மொழியாக்கம்தானேயன்றி 'பிழையான' மொழியாக்கம் அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.
பாப்லர் என்பதற்கு தமிழ் இல்லை.
வழுகு எனில் வழவழப்பான மேற்பரப்பு என்று பொருள்.)
பகம் எனில் பெண் ஜனனஸ்தானம். சொல் உபயம் திரு நாஞ்சில் நாடன்.
***