Showing posts with label க.நா. சுப்பிரமணியம். Show all posts
Showing posts with label க.நா. சுப்பிரமணியம். Show all posts

கவிதை சில குறிப்புகள் - க.நா. சுப்ரமண்யம்

‘சென்ற இதழில் வெளியான க.நா.சு.வின் ‘தமிழில் புதுக் கவிதை’ (‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959) என்ற கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. பலரும் கட்டுரையை வாசித்துப் பகிர்ந்திருந்தார்கள். கவிஞர் க. மோகனரங்கன் அக்கட்டுரையின் சிறப்புகளைக் குறிப்பிட்டு வாசகர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அவரது பதிவில் மறுமொழியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் அக்கட்டுரை வெளியான காலத்தையொட்டி ‘எழுத்து’ இதழிலும் க.நா.சு. கவிதை பற்றி எழுதியிருப்பதை நினைவுகூர்ந்தார்.

இந்த இதழில் ‘விமர்சனக் கலை’ (1959) நூலிலிருந்து ஒரு பகுதியும், ‘எழுத்து’ ஆரம்ப இதழ்களில் வெளியான குறிப்புகளும் இடம்பெறுகின்றன. இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஒரே காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’

தமிழில் கவிதையைப் புதுக் கலையாக்கவேண்டிய அவசியம் இன்று உண்டு. இந்தக் காரியத்தைச் செய்ய புதுமைப்பித்தன் ஓரளவுக்கு வழிகாட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். சிறு கவிதை முயற்சிகள் செய்து பார்த்த புதுமைப்பித்தன் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை தான். இருந்தாலும் ஓரளவுக்கு என்ன செய்யலாம், எந்த திசையில் நாம் முயற்சி செய்யவேண்டும் என்று சுட்டிக் காண்பித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

புதுமைப்பித்தனதும் அவ்வளவாக மரபு பிறழாத கவிதை தான்; ஆனால் புது முறையில் செய்தார். மரபை ஒட்டிச் செய்யப்படுகிற இன்றையக் கவிதை நன்றாக இல்லாதிருப்பதற்கோ, பிரமாதமாக ஒன்றும் சாதிக்காதிருப்பதற்கோ காரணம் மரபு, எதுகை, மோனை, அணி அலங்கார கனம் அல்ல. இன்று கவி என்று எழுதத் தொடங்குகிறவர்களிடம் சரக்கும் ஒரு புது இலக்கிய நோக்கும் ஒரு தனித்துவம் இல்லாமையும்தான் காரணம்.

சமீபகாலத்திய தமிழ்க் கவிகளிலே பாரதியாரிடம் ஒரு வேகமும் Personality-யும் உண்டு. விஷயத் தெளிவும், வாக்கினிலே உண்மை ஒளியும் உண்டு. பாரதிதாசனின் ஆரம்பக் கவிதைகளிலே இத்துடன் ஒரு முழுமையும் இருந்து, பின்னர் மறைந்துவிட்டது. விஷயத்தை மட்டும் வைத்துச் சொல்லவில்லை, நான். புரட்சி மோகத்தை வைத்தும் சொல்லவில்லை. கவியாகவும் அவர் சக்திகள் குன்றிவிட்டன. தேசிகவிநாயகம் பிள்ளையின் எழுத்திலே ஒரு சுக பாவம் உண்டு; அதற்குமேல் அவர் கவிதையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. நாமக்கல் கவிஞரைப் பிற்காலத் தலைமுறைகள் கவியாக நினைவில் வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே. ச.து.சு. யோகியாரின் கவிதையிலே கம்பனின் வேகம் இருக்கிறது - அவ்வளவுதான். அந்த வேகம் கம்பனுடையதே தவிர, யோகியாருடையதல்ல. மற்றப்படி இன்று எழுதுகிற கவிகளிலே பிக்ஷுவும், தமிழ் ஒளியும் ஏதோ கொஞ்சம் முயற்சி செய்கிறார்கள். கலைவாணனும், சாலிவாஹனனும் சில சமயங்களில் பளிச்சென்று ஒரு உருவம், ஒரு சிந்தனைத் திரி ஏற்றுகிறார்கள் - அவ்வளவுதான். புதுமைப்பித்தனைப் பின்பற்றி ரகுநாதன் புதுக்கவிதை எழுதியிருக்கிறார். நான் படித்த வரையில் மற்றவருடைய கவிதை பூராவும் வெறும் வார்த்தைக் குப்பைதான் என்று சொல்ல வேண்டும். இந்த வார்த்தை குப்பைகளிலே சில சமயம், நிறைய எழுதுகிற தோஷத்தினாலும், விஷய முக்கியத்தினாலும், கொத்தமங்கலம் சுப்பு கவிதை செய்துவிடுகிற மாதிரி தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் கவிதையிலே நம்பிக்கை வறட்சியும், அவருடைய தனித்துவமும் சேர்ந்து அற்புதமாகச் செயல் - அதாவது கவிதையாகச் சொல் - பட்டிருக்கின்றன. ஒரு கிண்டல் பாவம் அற்புதமாக அமைந்துள்ள கவிதை அவருடையது. இன்றைய வாழ்க்கைக்கேற்ற விமரிசனமாக அவர் கவிதை அமைந்துவிட்டது என்பதை அவருடைய தனிச்சிறப்பாகச் சொல்லவேண்டும். அதாவது இன்றைய கவிதைக்கான சந்தமும் போக்கும் அவர் கவிகளிலே அமைந்துவிட்டன. ‘மாகாவியம்’ என்னும் அவர் முயற்சி மிகவும் சிறப்பானது. அதைப் பின்பற்றி இன்னும் பலர் முயற்சி செய்துபார்த்தால் தற்காலத் தமிழ்க் கவிதை இலக்கிய அந்தஸ்தை எட்டிவிடும்.

எதுகை மோனை இலக்கணங்களைக் கையாண்டும், மேலை நாடுகளில் செய்கிறமாதிரி பலரகமான வசன கவிதையிலும் முயற்சிகள், இலக்கிய நினைவுடன், இலக்கியப் பிரக்ஞையுடன் செய்யப்படுகிற முயற்சிகள், தமிழ்க் கவிதை வளர மிகவும் அவசியம். அந்த அவசியத்தை உணர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் முயன்று பார்த்தால், கவிதை வளம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழ்க் கவிதை அரசி மஹோன்னதமான ஸ்தானத்திலே வீற்றிருக்கத் தொடங்குவாள். நூற்றுக்கணக்கான முயற்சிகளிலே ஒன்றிரண்டு கவிதையாகவும் தேறலாம் என்பது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்.

(‘விமரிசனக் கலை’ (1959) நூலில் ‘சில குறிப்புகள்’ என்ற கட்டுரையில் ‘கவிதை’ என்ற தலைப்பின் கீழ் வரும் பகுதி)


கவிதை

எனக்கும்

கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ

எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்: இவற்றில்

எத்தனை எட்டுக்கள் கவிதையால்

சாத்திய மாயின


என்று யார்

தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்

எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?

மொழியின் மழலை அழகுதான்.

ஆனால் அது போதவே


போதாது.

போதுமானால் கவிதையைத் தவிர வேறு

இலக்கியம் தோன்றியிராதே. போதாது

என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக

இத்தனை இலக்கியத்


துறைகள்

தோன்றின—நாடகமும், நாவலும், நீள்

கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்

தோன்றியிராது; ஆனால் அவையும்தான்

திருப்தி தருவதில்லையே!


அதனால்

தான் நானும் கவிதை எழுதுகிறேன்.

மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.

மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்

தரும். கலையின்


பிறப்பு

இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே

இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது

இந்த அடிப்படையில்தான் சாத்தியம்

என்று சொல்லலாம்.

‘எழுத்து’, இதழ் 1, ஜனவரி 1959

https://amzn.to/46HwlT9

***


‘எழுத்து’ம் அதன் முயற்சிகளும்

...3-வது ‘எழுத்’தில் வெளிவந்திருக்கிற ‘உன் கை நகம்’ என்கிற கவிதை அவசியமான ஒரு இன்றைய சோதனை முயற்சி. அது இருப்பதால்தான் உங்களுடைய ‘ஜீவா தயவு காட்டு’ என்கிற அசட்டு கலீல் கிப்ரான் பாட்டுக்கும்கூட ஓர் அர்த்தம் ஏற்படுகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது...

‘எழுத்து’, இதழ் 4, ஏப்ரல் 1959

https://amzn.to/3WAkt0B

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்றும்‌ சுமார்‌ ஐம்பது வருஷங்களுக்கு முன்‌ சுப்பிரமணிய பாரதியார்‌ புதுக் ‌கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச்‌ சொன்னார்‌. எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும்‌ பின்பற்றி பின்னர்‌ கவிகள்‌ சிலர்‌ எழுதினார்கள்‌. செய்யுள்‌ சிறப்பாக அமைந்த இவற்றிலும்‌ கூட புதுக்‌ கவிதை பிறந்துவிடவில்லை. ‘பாரதிக்குப்‌ பின்‌ இவர்தான்‌ மேலான கவி, உயர்ந்த கவி’ என்று அழுத்தமாகச்‌ சுட்டிக்‌காட்டும்படியாக ஒரு கவியும்‌ தோன்றிவிடவில்லை. தமிழ்க்‌ கவிதை ஊற்றே வறண்டு போய்‌விட்டதோ என்று சொல்‌லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம்‌ பழசை அப்படியே நகல்‌ எடுப்பதாக, பாரதியாரின்‌ அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச்‌ சூழ்நிலையைச்‌ சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும்‌ நிலைக்கக்‌கூடிய கவிகளைச்‌ செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில்‌ பெரும்பாலானவை ஊமையாகவும்‌, குருடாகவும்‌, நொண்டி முடமாகவும்‌ இருந்தன என்று சொல்வது மிகையேயாகாது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும்‌ மேலாக ஒரு வேகம்‌ இருந்தது. இந்த வேகம்‌ எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான்‌ உயர்‌ கவிதை எப்படித்‌ தோன்றுகிறது என்பது தெரியவரும்‌. உள்ளத்தில்‌ உள்ள உண்மை ஒளி, வாக்கினாலும்‌ வந்ததனால்‌ ஏற்பட்டதொரு வேகம்‌ இது. எப்படி வந்தது என்பதுதான்‌ கலை ரகசியம்‌, எப்படியோ வந்தது. பாரதியார்‌ உயர்ந்த கவியானார்‌. இப்படித்‌ தோன்றிய வேகத்தால்தான்‌ கம்பனும்‌, இளங்கோவடிகளும்‌ காரைக்‌காலம்மையாரும்‌ ஆண்டாளும்‌ மாணிக்கவாசகரும்‌ பட்டினத்தடிகளும்‌ ஜெயங்கொண்டானும்‌ கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌ தாயுமானவரும்‌ அவரவர்‌ அளவில்‌ உயர்‌ கவிகள்‌ ஆகிறார்கள்‌. இந்த கவிதை உண்மையை அலசிப்‌ பிய்த்து எடுத்துப்‌ பார்க்க முடியாது - ஆனால்‌ சூட்சமமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர்‌ கவிதையின் உயிர்‌ இது.

இந்தக்‌ கவிதை உண்மைக்கு இன்றைய வாரிசாக புதுக்‌கவியும்‌ புதுக்‌ கவிதையும்‌ தோன்ற வேண்டும்‌. பாரதியார்‌ காலத்தில்‌ பொதுவாழ்க்கை சிக்கலானதாகிவிட்டது என்று சொன்னால்‌ சுலபமாக ஏற்றுக்‌கொண்டுவிடலாம்‌ போலத்‌ தோன்றும்‌. பாரதியார்‌ மக்களிடையே பொதுவாகவும்‌ தனித்தனியாகவும்‌ கண்ட குறைகளுக்கு எல்லாம்‌ சுதந்திரமின்மையே காரணம்‌ என்று நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டால்‌ ௮க்குறைகள்‌ தானாகவே நீங்கிவிடும்‌ என்றும்‌ நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டது. தனிமனிதர்களின்‌ குறைகள்‌ பன்மடங்காக அதிகரித்துவிட்டன போல்‌ இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம்‌ பற்றியோ கேட்கவே வேண்டாம்‌. பொருளாதார, சமூக, அரசியல்‌ துறைகளில்‌ மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும்‌, ஆன்மிகப்‌ பரமார்த்திக துறைகளிலும்‌ போலிகளும்‌ மோசடிகளும்‌ மலிந்துவிட்டன. குறைகள்‌ நிறைந்து நிற்கன்றன.

கவிதை மனிதனின்‌ குறைகளைப்‌பற்றி மட்டும்தான்‌ சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்‌. குறையை சொல்வதும்‌ நிறையை சொல்வதும்‌ ஒன்றுதான்‌. ஒன்றைச்‌ சொல்லி ஒன்றை விட முடியாது. இலக்கியத்‌ துறைகள்‌ எல்லாமே சமுதாயம்‌, தனிமனிதன்‌ என்ற இரண்டு பிரிவிலும்‌ குறைகளையும்‌ நிறைகளையும்‌ சொல்லியும்‌ சொல்லாமலும்‌ அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக்‌ காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக்‌ காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச்‌ சேர்க்கைகளில்‌, நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு புதுக்‌கவிதை தேவை. அப்போதுதான்‌ சங்க காலத்தின்‌ சிறந்த கவிதை சிருஷ்டிகளையும்‌, சிலப்பதிகாரம்‌, கம்பராமாயணம்‌ போன்ற நூல்களின்‌ தனித்‌தன்மையையும்‌ நாமும்‌ இன்று எட்ட முடியும்‌. (இலக்கிய ரீதியாகத்தான்‌ சொல்லுகிறேன்‌.) இன்றும்‌ ஒரு புதுச்‌சிலப்பதிகாரமும்‌ ஒரு கம்ப ராமாயணமும்‌ தோன்ற முடியும்‌. (அது கவிதை ரூபத்தில்‌ இருக்கக்‌ கூடாது என்று விதி கிடையாது. நச்சுப்‌ போன, நைந்து நொந்த செய்யுள்‌ உருவத்தில்‌ புதுக்‌ கவியும்‌ இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்‌ கவிதைக்கானதோர்‌ இலக்கணம்‌ வேண்டும்‌.)

இலக்கியத்தில்‌ இது கவிதை யுகம்‌ அல்ல - கவிதை யுகம்‌ கடந்துவிட்டது - என்றுதான்‌ பெருவாரியான மொழிகளில்‌ கருதப்படுகிறது. காவியங்களும்‌ சிறு கவிதைகளும்‌ ஒரு காலத்தில்‌ சாதித்து வந்த கலைசாதனையை சிறுகதைகளும்‌ நாவல்களும்‌ வசனத்தில் சாதித்துவிட முடியும்‌ என்று சென்ற நூறு ஆண்டுகளில்‌ உலகமெங்கும்‌ ஏற்றுக்‌கொள்ளப்பட்டுவிட்டது.

எனினும்‌ கவிதை அநாவசியம்‌ என்றோ இனி அதற்கு ஒரு காலம்‌ தோன்றாது என்றோ யாரும்‌ கருதுவதில்லை. மீண்டும்‌ இலக்கியத்தில்‌ கவிதை யுகம்‌ தோன்றலாம்‌. இதற்கு அரணாக ஜெர்மன்‌ மொழியில்‌ ரில்கேயின்‌ கவிதைகளும்‌, பிரெஞ்சு மொழியில்‌ பாதாலர்‌, ரிம்போ, மல்லார்மே, வாலோ இவர்களின்‌ கவிதைகளும்‌, ஆங்கில மொழியில்‌ யேட்ஸ்‌, எலியட்‌, டைலன்‌ தாமஸ்‌ இவர்களின்‌ கவிதைகளும்‌ சுட்டிக்‌காட்ட உபயோகிக்கப்படும்.

தமிழைப்‌ பற்றிய வரையில்‌, தமிழ்க்‌ கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாமோ? செய்யுளியற்றுபவர்களின்‌ எண்ணிக்கை நம்மிடம்‌ இன்று அதிகம்தான்‌ என்றாலும்‌, செய்யுள்‌ எல்லாம்‌ கவிதையாகிவிடாது என்பதில்‌ என்ன சந்தேகம்‌? யாப்பு, இலக்கணம்‌, அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள்‌ இட்டு, எதுகை மோனை, சீர்‌, தளை என்றெல்லாம்‌ நைந்துபோன செய்யுள்‌ வார்த்தைகளுக்கு மீண்டும்‌ மீண்டும்‌ உயிர்‌ தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க்‌ கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌, சுப்பிரமணிய பாரதியாரும்‌ ஓரளவுக்கு புத்துயிர்‌ தந்தார்‌கள்‌. கவிதையொடு இசை என்னும்‌ உயிர்‌ சேர்த்து கவிதை செய்தார்கள்‌ அவர்கள்‌. பக்தி விசேஷம்‌, இசை முதலியவற்றினால்‌ முந்திய பாரதியாரும்‌, சமூக வெறி, சுதந்திர வேகத்தினால்‌ பிந்திய பாரதியாரும்‌ தமிழ்க்‌ கவிதைக்கு புதுமை தர முயன்றார்கள்‌. இருவருக்கும்‌ இசை நயம்‌ ஓரளவுக்குத்‌ தனிக்கவிதை நயத்தை தீர்த்துக்‌கட்ட உதவியது என்றும்‌ அதே மூச்சில்‌ சொல்லலாம்‌. தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம்‌. ஆனால்‌ சங்க நூல்‌, சிலப்பதிகார (இசையற்ற அகவல்‌, சொல்லளவு) மரபு ஒன்றும்‌ தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்‌கொள்ளத்‌தானே வேண்டும்‌! தமிழில்‌ புதுக்‌ கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகளை ஒழித்து மிகப்பழைய மரபுகளைத்‌ தேட வேண்டும்‌ என்பது ஒருவிதத்தில்‌ தெளிவாகிறது என்றே சொல்லலாம்‌.

தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில்‌ புதுக் கவிதை செய்தவர்களின்‌ நிலைமையை சற்று நோக்கினால்‌ விஷயம்‌ புரியும்‌. பல ஐரோப்பிய மொழிகளில்‌ கவிதையை சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்‌கவிகள்‌ பிடிவாதமாகவே புதுக்‌கவிதை செய்துவருகிறார்கள்‌. இந்தப்‌ புதுக்‌கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச்‌சிக்கலை பூரணமாகப்‌ பிரதிபலிக்கும்‌ ஒரு வார்த்தைச்‌ சிக்கலும்‌, இன்றைய புதுமைகளை எல்லாம்‌ தொட்டு நடக்கும்‌ ஒரு நேர்‌ நடையும்‌, அகவல்‌ சந்தம்‌ என்று நாம்‌ சொல்லக்‌கூடிய ஒரு பேச்சு நடை, அடிப்படைச்‌ செய்யுள்‌ வேகமும்‌, எல்லாவற்றிற்கும்‌ மேலாக, இடைக்காலப்‌ பழமைக்கு மேலாக, பண்டைக்‌ கால, ஆதிகாலப்‌ பழமையைப்‌ போற்றும்‌ ஒரு திறனும்‌ காணக்கிடக்கின்‌றன.

உதாரணமாகப்‌ பார்த்தால்‌— டி. எஸ்‌. எலியட்‌ என்‌பவர்‌ புதுக்‌ கவிதை ஆங்கிலத்தில்‌ எழுதுகிறார்‌ என்றால்‌, அவர்‌ இன்றைக்குரிய ஒரு கோணத்தில்‌, ஒரு முகத்தில்‌ நின்று இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன்‌ எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின்‌ அகவல்‌ பாணியை மேற்கொண்டு, பேச்சு சந்தத்துக்கிசைய கவிதை செய்‌கிறார்‌. இடைக்கால மரபுகளைப்‌ புறக்கணித்துவிடுகிறார்‌. ஆனால்‌ பழைய இலக்கண மரபை அவர்‌ அப்படியே கொள்வதும்‌ இல்லை. இன்றையப்‌ பேச்சு வேகத்துக்கேற்ப சொல்‌ என்று மக்களின்‌ வாயில்‌ வழங்குவதின்‌ அடிப்படையில்‌ கவிதை செய்கிறார்‌. அதேபோல எஸ்ரா பவுண்டு என்ற ஆங்கிலக்‌ கவிஞர்‌ ப்ரோவான்ஸ்‌ கீதங்களையும்‌, சீனத்துக்‌ கவிகளையும்‌, ஜப்பானிய ஹைக்குகளையும்‌ தன்‌ மரபாக்கிக்‌கொண்டு, புதுக் கவிதை செய்கிறார்‌. அவருடைய கவிதைப்‌ பாணி இன்று ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிற எல்லோரையும்‌ பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட்‌ விட்மன்‌ வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரி வரியாக வெட்டிக்‌ காட்டி, விஷய அமைதி தந்து கவியாகி வெற்றி பெற்றார்‌. இன்றைய மொழிகள்‌ பலவற்றிலுள்ள புதுக் கவிதைக்குப்‌ பொதலெர்‌, ரிம்போ மல்லார்மே முதலிய பிரெஞ்சுக்‌ கவிகளையும்‌, வால்ட்‌ விட்மனையும்‌தான்‌ ஆதாரமாகச்‌ சொல்லுவார்கள்‌. இவர்‌களையெல்லாம்‌ பற்றி நான்‌ இங்கு குறிப்பிடுகிறேனே தவிர விவாதிக்கவில்லை. ஏனென்றால்‌ தமிழில்‌ புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள்‌ புறம்பானவர்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ செய்திருப்பது என்னவென்றால்‌, அன்று ஆட்சி செலுத்திய மரபைத்‌ தகர்த்தெறிந்துவிட்டு இவர்கள்‌ ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து இன்றையப்‌ பேச்சு வளத்து அடிப்படையிலேயே புதுக்‌ கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள்‌ - அவரவர்கள்‌ மொழியிலே அவர்‌களுடைய புதுக்கவிதை முயற்சிகள்‌ வெற்றியும்‌ பெற்றிருக்‌கின்றன. ஐரோப்பிய மொழிகள்‌ பலவற்றிலே இப்போது புதுக்‌ கவிதை திடமான ஒரு இலக்கியக்‌ குழந்தையாகக்‌ காட்சி தருகிறது.

தமிழில்‌ புதுக்‌ கவிதையின்‌ அவசியத்தைப்‌ பற்றிய வரையில்‌ எனக்குச்‌ சந்தேகமில்லை. மரபுக்‌ கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்‌கொண்டிருக்கிறது) புதுக்‌ கவிதை தோன்றியே தீரும்‌. ஆனால்‌ அது எந்த உருவம்‌ எடுக்கும்‌ என்று இப்போது யாரும்‌ திட்டவட்டமாகச்‌ சொல்ல முடியாது. ஏனென்றால்‌ பலரும்‌ பலவிதமான முயற்‌சிகள்‌ செய்து பார்த்து வெற்றி தோல்விகள்‌ ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான்‌ புதுக்கவிதை உருவாகி இலக்‌கியப்‌ பூரணத்துவம்‌ பெற்று விமரிசன விஷயமாக முடியும்‌. தேவையை உணர்ந்து பலரும்‌ சமீப காலத்தில்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்‌ என்றுதான்‌ சொல்லவும்‌ வேண்டும்‌. அகவலுக்கே ஒரு புது வேகம்‌ தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார்‌, வசன கவிதை என்று பெயரைக்‌ காட்டிக்‌ குற்றம்‌ சாட்டி ஒதுக்கிவிடச்‌ சிலர்‌ முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார்‌. கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும்‌ உணர்ந்திருந்தார்‌ என்‌பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப்‌ பின்பற்றி இரண்டொருவர்‌ - முக்கியமாக, காலஞ்‌சென்ற கு. ப. ராஜகோபாலன்‌ - வசன கவிதை செய்து பார்த்தார்கள்‌. புதுமைப்பித்தன்‌ தன்‌ கிண்டலுக்கும்‌ கேலிக்கும்‌ வாகனமாகச்‌ சித்தர்‌ பாடல்‌களில்‌ ஆதாரம்‌ தேடிய ஒரு செய்யுள்‌ உருவத்தைக்‌ கையாண்டு பார்த்தார்‌. எழுதியுள்ள அளவில்‌ அவர்‌ வெற்றி கண்டார்‌ என்றே சொல்ல வேண்டும்‌. ‘மாகாவியம்’‌ என்கிற அவருடைய கவிதை முயற்‌சி பாரதியாருக்குப்‌ பிந்‌திய கவிதை முயற்சிகளில் சிறந்தது என்பது என் ‌அபிப்பிராயம்‌. ரகுநாதன்‌ புதுமைப்பித்தனின்‌ முயற்சியைப்‌ பின்பற்றி சிறிதளவு வெற்றி பெற்றிருக்கிறார்‌. நாட்டுப்புறத்தான்‌ மெட்டிலே நாகரிகக்‌ கவிதை செய்யப் பார்த்த, இன்றைய புகழேந்தி கொத்தமங்கலம்‌ சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும்‌ ஓரளவுக்கு வெற்றி பெற்றன. இன்னும்‌ சிலரும்‌ புதுக் கவிதை முயற்‌சிகள்‌ செய்திருக்கலாம்‌; அவை என் கண்ணில்‌ பட்டதில்லை என்பது அவர்கள்‌ குற்றமாகாது. என்‌ படிப்புக்கெட்டிய இவைதான்‌ புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும்‌ புது முயற்சிகள்‌.

நான்‌ தமிழில்‌ எழுத ஆரம்பிக்கத்‌ தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில்‌ புதுக்கவிதை பற்றிய சோதனைகளில்‌ ஈடுபட்டுக்‌கொண்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன்‌ நடத்திய மலர்களில்‌ ஒன்றிரண்டில்‌ என்‌ கவிதைச்‌ சோதனைகள்‌ வெளியாகியும்‌ இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும்‌ ஏதோ கொஞ்சம்‌ செய்துபார்த்தேன்‌. ஆனால்‌ தொடர்ந்து முறையாகச்‌ செய்து பார்க்கவும்‌, செய்து முடித்ததை வெளியிடவும்‌ சமீப காலத்தில்‌ ‘சரஸ்வதி’ மூலம்தான்‌ முடிந்தது. மயன்‌ என்கிற புனை‌பெயரில்‌ என்‌ புதுக் கவிதை முயற்சிகள்‌ சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன்‌. இந்தக்‌ கவிதை முயற்சிக்கு, இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்து வைத்துக்கொண்டு, அவ்விலக்‌கணத்துக்கு ஒப்ப நான்‌ கவிதை எழுதவில்லை. என்‌ புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம்‌ உண்டானால்‌ — இலக்கணம்‌ இருக்கத்தான்‌ வேண்டும்‌; ஏனென்றால்‌ அதை இலக்கியமாக உணர்ந்தே நான்‌ எழுத முற்படுகிறேன்‌ - அதைப்‌ பின்னர்‌ நிர்ணயித்துக்‌கொள்ளலாம்‌. இப்போது கவிதையில்‌ நான்‌ செய்ய முயற்சித்ததெல்லாம்‌ விஷயத்தையும்‌ வார்த்தைகளையும்‌ உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும்‌ நாக்கும்‌ சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும்‌, கண்‌ தருகிற கட்டுப்‌பாடுகளுக்கும்‌, உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்‌, இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான்‌. இன்றைய என்‌ அனுபவத்தை வார்த்தைகளால்‌, பேச்சு வழக்கு வார்த்தைகளால்‌, பேசும்‌ சத்தத்தில்‌ இலக்கியமாக்க கவிதையாக்க முயலுகிறேன்‌. பயன்‌ கழுதையா குதிரையா, வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று சிலர்‌ கேலி செய்பவர்‌ இருக்கலாம்‌. சோதனை என்று சொல்லும்‌போது இதற்கெல்லாம்‌ பயப்பட்டு கட்டாது. இலக்கிய சோதனைகள்‌ பலவும்‌ ஆரம்பத்தில்‌ கேலிக்கிடமாகவேதான்‌ காட்சியளித்தன. புதுக்‌ கவிதை தோன்றுகிறதா என்பதுதான்‌ தீர்மானிக்கவேண்டிய விஷயம்‌. தோன்றாவிட்டால்‌, முயற்சியையே மறந்துவிடலாம்‌. தோன்றிவிட்டால்‌ நல்லதுதான்‌. புதுத்‌ தமிழ்‌ இலக்கியம்‌ மேலும்‌ வளம்பெறும்‌. என்‌ புதுக்கவிதை முயற்சிகள்‌ கவிதையாகவும்‌ இலக்கணமாகவும்‌ உருவெடுக்க, வாசகர்கள்‌ ரசிகர்கள்‌ உள்ளத்தில்‌ எதிரொலித்‌துப் பலன்‌ தரப்‌ பலகாலமாகலாம்‌ என்பதையும்‌ அறிந்தேதான்‌ நான்‌ இந்தக்‌ கவிதைச்‌ சோதனையைச்‌ செய்து பார்க்கிறேன்‌.

நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்‌பெறுகிற விஷயங்கள்‌ எல்லாமே, உவமைகள்‌, உருவகங்கள்‌, ஏக்கங்‌கள்‌, ஆசைகள்‌, வார்த்தைகள்‌, மெளனம்‌ எல்லாமே என்‌ கவிதைக்கு விஷயம்‌. வாழ்க்கை சிக்கல்‌ நிறைந்ததாக இருப்‌பது போலவே என்‌ கவிதையும்‌ சிக்கலும்‌ சிடுக்கும்‌ நிரம்பியதாக இருக்க வேண்டும்‌ என்பதே என்‌ ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்‌. ஆனால்‌ சிக்கல்‌ விடுவிக்கக்‌கூடாததாகவும்‌ இருக்க வேண்டும்‌. கவிதை நயம்‌ எது என்று எடுத்துச்‌ சொல்லக்‌கூடாததாக இருக்க வேண்டும்‌. புரியவில்லை போல இருக்க வேண்டும்‌. அதே சமயம்‌ பூராவும்‌ புரியாமலும்‌ இருந்துவிடக் கூடாது. திரும்பத்‌ திரும்பப்‌ படித்துப்‌ பார்க்க ஒரு தரம்‌ படிப்பவருக்கும்‌ ஒரு வேகம்‌, ஒரு எதிரொலிக்கும்‌ தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப்‌ பிடித்துக்‌கொள்ளும்‌ ஒரு குணம்‌ இருக்க வேண்டும்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதையிலே என்றுதான்‌ எண்ணுகிறேன்‌. இலக்கணம்‌ என்று எதையும்‌ சொல்லிக்‌ கட்டுப்படுத்தப்‌படக்‌ கூடாதது கவிதை - அது தூர விலகிப்‌ போய்‌விட வேண்டும்‌. பிறகு பார்த்துக்கொள்ளலாம்‌ இலக்கண அமைதிகள்‌ பற்றி. சிருஷ்டி காரியத்திலே இலக்கணத்துக்கோ, அதன்‌ இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது.

பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள்‌ சொல்லலாம்‌. புதுக்கவிதைக்கும்‌ பழங்‌கவிதைக்கும்‌ பொதுவான விஷயங்‌கள்‌ இவை. வார்த்தைச்‌ சேர்க்கைகள்‌ காதில்‌ ஒரு தரம்‌ ஒலித்து, உள்ளத்தில்‌ மீண்டும்‌ எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல்‌ கேள்வி. இரண்டாவதாக - எந்தக்‌ காலத்‌திலுமே வாழ்க்கை எந்தக்‌ காலத்து மனிதனுக்கும்‌ சிக்கலானதாகத்தான்‌ இருந்துவந்திருக்கிறது. அந்தந்தக்‌ காலத்துக்‌ கவிதை - நல்ல கவிதை - அந்தக்‌ காலத்துச்‌ சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப்‌ புதுக்‌ கவிதை இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கல்‌ தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கலையும்‌ புதிரையும்‌ போலவே முதலில்‌ புரியாததுபோல இருந்து, படிக்கபடிக்க புரியத்‌ தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாக கேட்டுக்‌கொள்ளவேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில்‌ விழித்துக்‌கொள்ளும்போது, இந்தக்‌ கவிதையில்‌ ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல்‌ மனசில்‌ தானே தோன்றி புது அர்த்தம்‌ தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக்‌ கவிதையைப்‌ படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும்‌ ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக்‌ கவிதை நல்ல கவிதை, உயர்‌ கவிதை என்று நாம்‌ முடிவுகட்டிவிடலாம்‌. சிலப்பதிகாரத்தில்‌ இந்த அடிக்கு இன்னார்‌ இன்ன உரை எழுதினார்‌ என்பதோ, கம்பராமாயணத்தில்‌ எந்த பாடபேதம்‌ சரியானது என்பதோ, குறளில்‌ இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம்‌, இன்று வேறு அர்த்தம்‌ என்பதோ புலமைக்கு சான்றாகலாம்‌. கவிதையை ரசித்ததற்கு சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை. எந்தக்‌ கவிதையுமே அர்த்தப்படுத்திக்‌கொண்டுதான்‌ ஆக வேண்டும்‌ என்பது இல்லை. அனுபவித்தால்‌ போதுமானது. ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும்‌ பதில்‌ கூறிக்‌கொள்வதுதான்‌ நல்ல கவிதை. ரசிகன்‌ தன்‌ கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்‌ கொள்ளவேண்டிய காரியம்‌.

புதுக் கவிதை மட்டும்தான்‌ புதுக்‌ கவிதை என்பதில்லை. பழங்கவியும்‌ இன்று நான்‌ வாசித்து அனுபவிக்கும்போது புதுக் கவிதைதான்‌. கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக்‌கொள்ளும்‌ சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாக காணக்‌கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம்‌ அதன்‌ காலத்தில்‌ மட்டுமல்ல; இன்றும்‌ புதுக்‌ கவிதைதான்‌. அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால்‌ புதுக்‌ கவிதை முயற்சிகள்‌ மிக மிக அவசியம்‌. அவை வரவேற்றுப்‌ பாராட்டப்பட வேண்டும்‌.

இலக்கியச்‌ சோதனைகளில்‌ எப்போதுமே வெற்றி தோல்விகள்‌ பூரணமானவை. என்‌ புதுக்‌ கவிதை முயற்சி வெற்றி பெறும்‌ என்றே நான்‌ எண்ணிச்‌ செய்கிறேன்‌; சோதனைகளின்‌ தன்மையே இதுதானே! செய்து செய்து பார்க்க வேண்டும்‌. அவ்வளவுதான்.

***


முந்தைய பிரசுரம்:

  • ‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959
  • ‘இந்திய இலக்கியம்’, கலைஞன் பதிப்பகம், 1984
***
க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

க.நா. சுப்பிரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***

    Share:

    க.நா.சு.வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

    ‘க.நா.சு. இலக்கியத் தடம்’ என்ற நூல் 1991ஆம் ஆண்டு வெளியானது. அதில் க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ (1957) நூலை முன்வைத்து அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரையில் அவர், ஒரு வாசகன் என்ற முறையில் தனக்கு க.நா.சு. மீது ஆதங்கம் இருப்பதாகக் கூறி, அதற்கான காரணங்களையும் சொல்கிறார். ‘நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை ஒவ்வொன்றையும் எவ்வாறு ரசிப்பது என்பதற்குத் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதக்கூடிய புலமையும் ஆற்றலும் கொண்டிருந்தும் அவ்வாறு செய்யாததற்கும்’ ஆதங்கப்படுவதாகக் கூறுகிறார். க.நா.சு. எழுதி வெளியான கட்டுரைத் தொகுப்புகள் அத்தனையையும் படித்திருத்தால் அவர் இவ்வாறு ஆதங்கப்பட நேர்ந்திருக்காது. தனது கட்டுரைக்காகத் தேர்ந்தெடுத்த ‘படித்திருக்கிறீர்களா?’ நூலின் மற்றொரு பாகத்தைக்கூட (1958) அவர் வாசிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தனது கட்டுரைக்கு ‘படித்திருக்கிறீர்களா க. நா. சுப்பிரமணியம்?’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

    க.நா.சு. நாவல் ரசனை தொடர்பாக ‘நாவல் கலை’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் உள்ள கட்டுரைகள் திட்டமிட்டு ஒரே மாதத்தில் எழுதப்பட்டவை. க.நா.சு. இந்த ‘நாவல் கலை’ போல ‘கவிதைக் கலை’ என்ற நூலை எழுதவில்லையே தவிர, அவரது கட்டுரைத் தொகுப்புகளில் கவிதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அவற்றைக்கொண்டு ஒரு தொகுப்பை நாமாகவே உருவாக்கிகொள்ளலாம். நூல்வடிவம் பெறாத கட்டுரைகளிலும் கவிதை பற்றி எழுதியவை ஏராளம். ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் உள்ளடக்கினால் பெருந்தொகையாகச் சேரும்.

    அம்ஷன் குமாரின் கட்டுரையை வாசித்ததும் ‘நாவல் கலை’ போல கவிதை, சிறுகதை பற்றிய க.நா.சு.வின் கட்டுரைகளைத் தனித்தனி நூல்களாகத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப்பற்றி நண்பர் துரை. லட்சுமிபதியிடம் கூறியதும், சிறுகதை பற்றிய தொகுப்பை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு வேலையைப் பகிர்ந்துகொண்ட சில நாட்களிலேயே கவிதை பற்றியத் தொகுப்பில் இடம்பெறவேண்டிய கட்டுரைகளின் பட்டியல் தயாராகிவிட்டது. ஆனால், நூலாக்கப் பணியை மேற்கொள்ளும் பொழுது கூடவில்லை.

    ஒருசில நாட்களுக்கு முன் பிரியத்திற்குரிய மூத்த கவிஞர் ஒருவர் நவீன கவிதை பற்றி சில கட்டுரைகளை எழுதவுள்ளதாகத் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது க.நா.சு. கவிதை பற்றி எழுதியவற்றைக் கொடுத்து உதவுமாறு கோரினார். அவரிடம் மேற்கண்ட விவரத்தையே பதிலாகச் சொல்லவேண்டியதாயிற்று. கவிஞருடனான அந்த உரையாடல் திட்டமிட்டிருந்த தொகுப்பை விரைவில் வெளியிட ஆவன செய்யவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது.

    கட்டுரைகளைத் தொகுத்து நேரடியாக நூலாக்குவதற்குப் பதிலாக இணைய இதழ் ஒன்றில் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகமாக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ‘கவிதைகள்’ இணைய இதழின் பொறுப்பாசிரியர்கள் அதற்கு மகிழ்வுடன் இசைந்தனர்.

    முதல் கட்டுரையாக ‘தமிழில் புதுக் கவிதை’ என்ற கட்டுரை வெளியாகிறது. தமிழில் இன்று நிலவும் நவீன கவிதை, ‘புதுக் கவிதை’ என்ற பெயரில் உருவாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டது இக்கட்டுரை. புதுக் கவிதை என்ற சொல்லே க.நா.சு.வின் மூலம்தான் பரவலாகப் புழக்கத்திற்கு வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலத்தை ஒட்டி, ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் ‘எழுத்து’, ‘சரஸ்வதி’ முதலிய சிற்றிதழ்களில் நடந்த விவாதங்கள் மூலம் புதுக் கவிதை என்ற பெயர் நிலைத்தது.

    அந்த விவாதங்களுக்கெல்லாம் முன்பு புதுக் கவிதையின் குணங்கள் என்னென்ன, அவை மரபிலிருந்து உதறவேண்டியவை எவை, அயல்மொழிகளில் புதுக் கவிதை முயற்சிகள் செய்து வெற்றி கண்டவர்கள் யார்யார், தமிழில் புதுக் கவிதையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கியவர்கள் யார்யார், அவர்கள் செய்த முயற்சியின் எல்லைகள் யாவை, தான் செய்துவரும் புதுக் கவிதைப் பரிசோதனை எத்தகையது எனப் பல வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கட்டுரை இது. க.நா.சு. முன்வைத்துள்ள பெரும்பாலான சிந்தனைகள் அடிப்படையானவை, இன்றும் காலாவதியாகாதவை என்பதே இக்கட்டுரையுடன் தொடரைத் தொடங்குவதற்குக் காரணம்.
    ***

    ***

    Share:
    Powered by Blogger.

    Poetic Angst - ஜெயமோகன்

    உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

    தேடு

    முந்தைய இதழ்கள்

    Labels

    அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Most Popular

    Labels

    அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Blog Archive