‘முன்னுக்குப் பின் முரணாகப் பாடுகிறேனா? என்னுள்ளே பல முரண்கள் அடங்கியுள்ளன’ என்றும் வால்ட்விட்மன்
கவிதை செய்தான்,
எல்லாக் கவிகளுள்ளும் பல லட்சங்கள் அடங்கியுள்ளன. லட்சங்கள் என்ன கோடிகள்
அடங்கியுள்ளன. பல ஒன்றுக்கொன்று முரணாக விஷயங்கள் அடங்கியுள்ளன. இது எல்லாக்
கவிகளுக்கும் பொருந்தும்.
பாரதியாரில் காணமுடியாத முரண்களா? அரசியல் எழுச்சியைத் தனிமனிதர்களின் செயலாகப் பாடுகிற அதே பாரதி அரசியல்
புரட்சிகளையும் செயல்களையும் பராசக்தியின் செயலாகவே காண்கிறார். இதைவிட முரண்பட்ட பார்வைகள்
வேறு என்ன வேண்டும்? பாரதியார்
வெறும் அரசியல்வாதியா? வெறும்
மதவாதியா? இரண்டும்தான்.
ஏனென்றால் இரண்டும் முரண்பாடான சிந்தனைகளானாலும் கவியுள்ளத்தில் அவை ஒன்றுக்கொன்று
அனுஸரணையான விஷயங்களாகவும் செயல்படலாம். எதையும் விட்டுவிடக் கூடாது. துரும்பும் தூசியும் தேவவிக்கிரஹமும் உயர் கலையும் என்
பார்வையில் ஒன்றுதான். அவை என் மனக்கண்களில் உலகத்தைப் படைக்கிற கலைப்பொருள்கள்
என்றுதான் கவி ஒவ்வொருவனும் சொல்லுகிறான். சிலர் சொல்லாமல் சொல்லுகிறார்கள். சிலர்
சொல்லிச் சொல்கிறார்கள். இதை நினைவில் வைத்துக்கொண்டால் முரண்கள் மறைந்துவிடும்.
முரண்களும் அழகாகத்தான் இருக்கின்றன. முரண்களே கவிகளுக்கு உணவு, கவிதைகளின் ஆதாரம் என்றும் சொல்லலாம்.
***
என் சமுதாயத்தின் பாதிப்பை நான் தவிர்க்க இயலாது. நான் பிறந்து வளர்ந்த
சூழ்நிலையில் - ஆர்யப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜஸ்டிஸ் கட்சி, த. மா. இயக்கம் இவற்றின் காலத்தில்கூட -
ஒதுங்கி நின்று செயல்படுவது, சிந்திப்பது
என்பது மனிதர்களிடையே ஒரு லட்சியமாக இருந்தது. தாமரையிலை நீர் போல என்பது வெறும்
வார்த்தையல்ல. பல தடவை சொல்லிச் சொல்லித் தேய்ந்து கூர்மையிழந்த க்ளீஷேதான். ஆனால்
அதற்கு இன்னமும் அர்த்தம் இருக்கிறது. பட்டும்படாமலும்தான் நம்மில் பலரும்
வாழ்கிறோம். அதை ஒரு சிறப்பாகவும் கருதுகிறோம்.
இது ஓர் ஆன்மிகப் பயிற்சியினால் நம்மிடையே ஏற்பட்டது. தலைவலி வருகிறபோது என்
தலையையா வலிக்கிறது என்று கேட்டுக்கொள்கிற வழக்கம் இருக்கிறது.
நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் வேறுவிதமான பட்டும்படாமலுக்கும் உதாரணமாக
விளங்கினார்கள். அவர்கள் வியாபாரிகள். லோகாயதமாக வெற்றியை விரும்பியவர்கள். ஆனால்
வெற்றியைக்கூடத் தங்கள் நிபந்தனைகளுடன் விரும்பியவர்கள். நாணயமாக இருப்பது அவர்கள்
குறிக்கோள். நாணயம்தான் லாபம் தரும் என்கிற அளவில் நாணயமானவன் என்கிற புகழ்
வேண்டும் என்று எண்ணியவர்கள். அவர்கள் கவிதைகள், கலை, இலக்கியம் பட்டும்படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பவைதான். ஆனால் இரண்டு விதமான ஒட்டியும், ஒட்டாமலும் இருப்பதும் மிகவும் வித்தியாசப்பட்டவை.
ஒன்று ஆன்மிக ஆழத்தினால் ஏற்பட்டது. இன்னொன்று உலக நடப்பை நகைச்சுவையாகப்
பார்ப்பதனால் ஏற்பட்டது.
உலக வாழ்க்கையையே மாயம் என்று சொன்ன, தீவிரமாக நம்பிய சங்கரர் ஏன் மக்கள் லாபமடைய மடங்களை நிறுவவேண்டும்? ஏன் தேவி ஸ்தோத்திரங்களைப் பாடவேண்டும்?
ஆன்மிக அளவில் மாயை என்று
உணருவதற்கும், மாயையில்
அகப்பட்டுக்கொண்டு உழல்வதற்கும் நிறைய சம்பந்தமுண்டு. மாயை மாயை என்று
சொல்லிக்கொண்டே உழன்றுதான் ஆகவேண்டும். தேவியைத் துதித்து எப்படியோ கரையேற முயல
வேண்டும். பிரிட்டிஷ்காரன் தேவியைத் துதிக்கவில்லை. தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள
மாயையும் பார்த்து நகைத்துக்கொண்டே வெளியேறினான்.
சமுதாயத்துக்குச் சமுதாயம் இந்த ஆன்மிக லௌகிக அடிப்படைகள் மாறுகின்றன.
சரித்திரம் அதிகமில்லாத அமெரிக்கன் இருக்கிற சரித்திரத்தைப் புரட்சிகரமானதாகச்
சொல்லிக்கொண்டு உலக விஷயங்களில் அதிகமாக உழல்கிறான். நேர்மாறாக, அதிக சரித்திரம் படைத்த சீனாக்காரன் மாயை என்று
தெரிந்தும் அதை உண்மையாக மாற்றி, அதில் வாழக் கற்றுக்கொண்டுவிடுகிறான்.
ஜப்பான்காரன் எல்லாவற்றிலும் அழகு கண்டு அனுபவிக்கத் தெரிந்து சொல்கிறான்.
அவரவர் கவிதைகளைப் படிக்கும்போது அந்தந்த சமுதாயத்தின் போக்கு நிதரிசனமாகத்
தெரியவருகிறது. வால்ட்விட்மன் தன் கவிதையில் எல்லோரையும் எல்லாவற்றையும்
அணைத்துக்கொள்ளப் பார்க்கிறான். டி. எஸ். எலியட் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும்
கண்ணோட்டமிடுகிறான். அவன் உண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவன் அல்ல. அதனால் அவனிடம்
நகைச்சுவையில்லை. சீனக் கவிதைகளைப் படிக்கும்போது குன்றுகள், பனிப்படலம், மேகங்கள் எல்லாமும்கூட உண்மை என்பதாகவே தோன்றுகிறது.
ஜப்பானியக் கவிதையில் வானத்தின் அழகையும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களையும் காண
முடிகிறது.
தமிழ்க் கவிதையில் ஒரு வறட்டு ஜம்பத்தையும் தன் பிச்சைக்காரப் பெருமை பேசும்
போக்கையும் ஆரம்ப காலத்திலிருந்து காணமுடிகிறது. கம்பன் காலகட்டத்தில்
வாழ்க்கையின் மேன்மையும் அந்த பொய்யை மெய்போல வாழும் போக்கும் வற்புறுத்தப்பட்டது.
இன்று பாரதியார் பாரதத்தின் அபூரணத்தை திராவிட நிறைவில் பாடினார்.
புதுக்கவிதைக்காரர்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு முழுமை பெறாத அறிவுத் தளத்து
உலகத்தை உருவாக்க முயலுகிறார்கள். இதில் பழைய ஜம்பமும் காண்கிறது. இன்றைய மாயை
என்கிற நினைப்பும் காணப்படுகிறது.
இதிலே உலகம் பூராவும் பரவிவிட்ட ஒரு சித்தாந்தமாக ஒரு மார்க்ஸிஸ்டு பார்வை
தொக்கி நிற்கிறது. அவர்களுக்கு மதம், ஆன்மா என்பதிலும் நம்பிக்கை கிடையாது. பொருளாதாரத்திலும் உழைப்பாளி அளவில்
அல்லாது நம்பிக்கை கிடையாது. தங்கள் மெய்ம்மையில் நம்பிக்கையுண்டு. அதற்கு மேல்
எல்லாம் மாயை, பொய். இது காரணமாக
அவர்களுக்கு ஒட்டியும் ஒட்டாமலும் வரவில்லை. பிரிட்டிஷ் நாணயமும் வரவில்லை.
சீன மாயையானாலும் மாயையல்லாதது போல வாழ்ந்துவிடுவதும் வரவில்லை. ஜப்பானியர்கள் போல
அழகு ஈடுபாடும் வரவில்லை. ஓரளவில் அவர்கள் அமெரிக்கர்களுக்கு இணையானவர்கள். புது
சரித்திரப் பார்வை உருவாக்கி மேற்கொள்ளப் பார்ப்பவர்கள். நான்தான் உலகத்தின்
கடைசிக் கவிஞன் என்று ஒரு ருஷ்யக் கவியால் சொல்ல முடிந்தது போல! வால்மீகி என்பவரை
ஆதி கவி என்று ஸம்ஸ்கிருதக்காரர்கள் சொல்லுவது போல!
கவிதையைத் தெரிந்தோ, தெரியாமலோ
நம் தேவைக்கு ஏற்ப நாம் இனம் பிரித்துக் கண்டுகொள்கிறோம் என்பது உண்மை. இது
அவசியமும்கூட. ஏனென்றால் இப்படி இனம் பிரிப்பது நமது தேவைகளைப் பூர்த்தி
செய்துகொள்ள நமக்கு உதவுகிறது.
இந்த மாதிரிதான் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை. வேறு விதமாகவும்
பார்க்கலாம் என்பதுதான் விஷயம். இலக்கியத்தில் மட்டும் எந்த ஒருவனுடைய பார்வையும்
சரியானது என்று அடித்துச் சொல்லிவிட முடியாது. வாழ்க்கையில்கூட இப்படிச் சொல்லிக் கட்சி
கட்டலாம். இலக்கியத்தில் முடியாது.
அதனால்தான் இலக்கியத்துக்கு முக்கியமாகக் கவிதைக்கு நிரந்தரமான பாதிப்பு சக்தி
ஏற்படுகிறது.
***
எந்தக் கவிதையின் கருப்பொருளும் முடிவில்லாத இன்று என்கிற விநாடியில் தான்
நிலைத்து நிற்கிறது.
கவி தெரிந்தே இந்த ‘இன்றைத்’ தன் கவிதைகளில் சொல்லியிருக்கிறானா என்பது
முக்கியமல்ல. தெரியாமல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த இன்றின் முக்கியம்தான் கவிதையின்
நிரந்தரத்தன்மைக்கு சாட்சி, நிரூபணம்.
அர்த்தமும்கூட.
***
கவி என்பவன் ஓர் இடத்தில் நிலைத்து நின்று தன் கவிதையை உருவாக்குகிறான். கவிதையும்
அசையும் பொருள் - கவியும் அசையும் பொருள்தான். வாசகன் என்பவன் அநேகமாக அசையாப்
பொருளாகவே செயல்படுகிறான். கவியின் அசைவு சக்திகள் அநேகமாக வாசகனுக்கு
எட்டுவதில்லை. அதனால்தான் அவன் கவியாக மாட்டாமல் வாசகனாக நின்றுவிடுகிறான்.
வாசகன் என்று ஒருவனை எப்படித் தன் கவிதையை எட்டச் செய்கிறான் கவி என்கிற
கேள்விக்கு இரண்டொரு பதில்கள் சொல்லிப் பார்க்கலாம்.
கவிதை படைக்கும்போது கவிக்கு வாசகன் நினைப்பே யில்லை என்பது ஒரு பதில்.
கவிதைப் படைப்பில் கவிதைக் கருவும் போக்கும், அதற்குத் தான் கொடுக்கப்போகிற உருவமும்தான் முக்கியமாக கவியின் மனத்தில்
இருக்கின்றன. வாசகனைப் பற்றிய நினைப்பே யில்லை.
கவிதை எழுதி முடித்த பிறகும்கூட வாசகன் நினைப்பு கவிக்கு ஏற்படுகிறதா என்று
சொல்ல முடியவில்லை. இந்தக் காலத்தில் வேண்டுமானால் கவிகள் தங்கள் கவிதைகளைப்
படித்துக் கேட்டவர்கள் அதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாகத்
தெரிந்துகொள்ள முடிகிறது. விமர்சகர்கள் சிலர் வாசகர்களாகத் தங்கள்
அபிப்பிராயங்களைச் சொல்லலாம். சமீபகாலம் வரையில் விமரிசகர்கள் தங்கள் காலத்து
இலக்கியத்தைப்பற்றி அதிகமாகக் கவலை காட்டியதில்லை.
சம்ஸ்கிருத அலங்கார சாஸ்திரக்காரர்கள் வாசகர்களின் கவிதையுள்ளத்தை
ஸஹ்ருதயர்கள் என்று குறிப்பிட்டு அவர்களை கவிகள் சுலபமாக எட்டுவதைக்
குறிப்பிட்டார்கள். இது ஓரளவுக்கு இலக்கண சுத்தமாக இலக்கணத்தையும், இலக்கிய நோக்கங்களையும் பூரணமாக
ஏற்றுக்கொண்டு இலக்கியம் செய்பவர்களிடையே பலிக்கலாம். சங்க இலக்கிய மரபுகள் போல
இந்த மரம் பெயர் சொன்னால் இதைக் குறிக்கும், இந்தப் பூவின் பெயர் சொன்னால் இதைக் குறிக்கும்
என்று ஏற்றுக்கொண்டால் ஸஹ்ருதயர்கள் கொள்கை சரிப்பட்டு வரும். இலக்கணத்தையோ,
மரபுகளையோ ஏற்காத
புதுக்கவிதைக்காரர்களுக்கு ஸஹ்ருதயர்களைக் கட்டாயப்படுத்தவேண்டிய அவசியம்
இருக்கிறது. தானாக வரமாட்டார்கள். புதுக்கவிதையும் ஓர் இலக்கண வரம்பு, மரபு என்று ஏற்றுக்கொண்டு செயல்பட
ஆரம்பித்துவிடுமானால் அது சாத்தியம்.
அதுவரை ஸஹ்ருதயர்கள் தேவையில்லை - வாசகர்கள் போதும். துர்ப்பாக்கியவசமாக
புதுக்கவிதை வாசகர்கள் எல்லோருமே ஸஹ்ருதயர்களாகிப் பின்னர் கவிதையும் எழுதத்
தொடங்கிவிடுகிறார்கள். இன்று புதுக்கவிதை எழுதுகிறவர்கள் அளவில் வாசகர்கள்
எண்ணிக்கை இருக்கிறதா என்பது சந்தேகமே. வாசகர்கள் வாசகர்களாக மட்டும் இருக்க
விரும்புகிற காலம் வரவேண்டும் என்று தோன்றுகிறது. ஆயிரம் வாசகர்களும் நூறு கவிகளும்
இருப்பதற்குப் பதிலாக, ஆயிரம்
கவிகளும் நூறு வாசகர்களும் இருக்கிறார்கள். இன்று வாசகர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் கூட்ட
ஏதாவது நடவடிக்கை, இயக்கம்
வேண்டும் என்று தோன்றுகிறது.
***
கவிதை அதுவரை ஏற்படாத ஒரு அர்த்தத்தை நாம் வாழ்கிற வாழ்க்கைக்குத் தருவதாக
இருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்லுகிறவர்கள் தெரிந்து
சொல்லுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் இது ஒரு நியாயமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.
எந்த இலக்கியமும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்காகவே எழுந்தது, படைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் சொல்லுகிற குறிப்பிட்ட ஒரு அர்த்தத்தைத்தான் கவிதையோ, இலக்கியமோ ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது
அல்ல. வாசகன் மனதில் அதுவரை தோன்றாத புது அர்த்தத்தை அது ஏற்படுத்தித் தரலாம்.
அப்படி ஏற்படுத்தித் தருவது இலக்கியத்தின் பரமசுகமான நோக்கங்களில் ஒன்று.
இதை ஏற்றுக்கொண்டு படிப்பவனும் அதிருஷ்டசாலி, அந்த மாதிரி ஒரு வாசகனைக் கண்டுவிட்ட கவியும் இலக்கியவாதியும்
அதிருஷ்டசாலி என்று சொல்லலாம்.
வாழ்க்கைக்கு அர்த்தத்தை நூல்களில் தேடக் கூடாது - நேரில்
அனுபவிப்பதிலிருந்துதான் அர்த்தம் தோன்ற வேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு.
அனுபவம் என்பது பலதரப்பட்டது. எல்லா அனுபவங்களும் எல்லாருக்கும் ஏற்பட முடியாது
என்பது ஒன்று. இரண்டாவது நூல்களில் படிப்பதும் உன் வாசக சக்தியைப் பொறுத்து ஒரு
அனுபவமேயாகும். சில நேர் அனுபவங்கள் நெருப்புப் போலச் சுடலாம்; பனிக்கட்டி போலச் சில்லிடலாம். நேர்மாறாக
சில அனுபவங்கள் பிறர் எடுத்துச் சொல்லும் வரையில் அனுபவமாக நம் மனத்தில்
உறைப்பதில்லை. இந்த மாதிரி சில அனுபவங்களைப் பிறர் எடுத்துச் சொல்வது போல
நூல்களில் சில இலக்கியாசிரியர்கள், கவிகள் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்கையில் அனுபவ முதிர்ச்சி ஒரு
வாசகனுக்கு ஏற்படுவதை நாம் வேண்டாம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. வாசகனும்
ஏற்க மறுக்கவேண்டிய அவசியமில்லை.
***
நல்ல கவிதையை எல்லோரும் ரசிக்கும் சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற
அவசியம் இல்லை. அதேபோல யாராவது ரஸிக்கிற, மிகவும் விரும்பி அனுபவிக்கிற கவிதை நல்ல கவிதையாகத்தான் இருக்க வேண்டும்
என்கிற அவசியமும் இல்லை. கம்பனைப் படிப்பவர்கள் அநேகமாக சிலப்பதிகார ஆசிரியரைப்
படித்தனுபவிப்பதில்லை. டி.கே.சி சொன்னால் இளங்கோவின் வரிப்பாட்டுகளைத்தான்
சொல்லுவார். இதனால் கம்பன் உயர்ந்த கவி என்றோ இளங்கோ உயர்ந்த கவி என்றோ
ஏற்பட்டுவிடாது. சொல்ல வந்ததை வழிய விடாமல், அதிகமாகச் சொல்லாமல் சில விஷயங்களை மட்டும் பொறுக்கி
எடுத்துச் சொல்லுவதில் தமிழில் ஒரே ஒரு கவியை மட்டும்தான் இளங்கோவுக்கு ஈடாகச்
சொல்ல இயலும் - திருவள்ளுவரை. தேர்ந்தெடுத்துச் சொல்லுகிற விஷயங்களை சாதாரணமாக
வார்த்தைகளில் வடித்துக் காட்டுகிற கவிதா சக்தி இருவருக்கும் நிறையவே இருந்தது.
கம்பனால் அதிகமாகச் சொல்ல இயன்றது என்பது உண்மை; வில்லம்பு எய்துவதில் அம்பு குறியை எட்டாமல்
விழுவதும் பிசகுதான்; தாண்டிப்
போவதும் பிசகுதான் என்று கன்ஃபூசியஸ் ஒரு இடத்தில் சொல்லுகிறார். அதே மாதிரி
கம்பனில் கவி சொல்ல வந்ததற்கு அதிகமாகவே சொல்லிவிடுகிற இடங்கள் அதிகம். இது ஒரு
குறை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வள்ளுவரிலோ இளங்கோவிலோ இந்த மாதிரிக் குறையை
என்னால் காண முடியவில்லை. அதனாலேயே வள்ளுவரும் இளங்கோவும் கம்பரைவிடப் பெரிய உத்தம
கவிகளாக எனக்குத் தோன்றுகிறார்கள்.
***
விமர்சனப் பார்வையுடன் ஆங்கிலக் கவிகளைப் பார்க்கிற அளவுக்குக்கூடத் தமிழ்க்
கவிகளைப் பார்க்கிற பழக்கம் தமிழர்களிடையே ஏற்படவில்லை. கவிதையில் ஒரு பகுதியை
நன்றாகப் பார்க்க, விமரிசன
அளவில் டி.கே.சி. தெரிந்து வைத்திருந்தார். அந்தப் பார்வையையே அவர் சிஷ்யர்கள்
சிலர் பின்பற்றுகிறார்கள். அது முழுமையான பார்வையல்ல என்றாலும் ஓரளவுக்கு
விமரிசனப் பார்வையை சாத்தியமாக்கியது.
கம்பனில் முத்துக்குளிப்பது, அதைவிடச் சிரமமான காரியமாக சேக்கிழாரில் முத்துக்குளிப்பது என்பது
நடைபெறுகிறது. வள்ளுவரில் முத்துக்குளிப்பது சாத்தியமே - இளங்கோவில் முடியாது.
இளங்கோவை வரிப்பாட்டு உள்பட ஒரு கட்டாயமாகத்தான் பார்க்க முடியும்.
காரைக்காலம்மையாரை மதரீதியில் கடவுள் சிந்தனைகளைச் சொல்கிற அளவில் பார்க்க
இயலுகிறதே தவிரக் கவியாக யாரும் காண முயற்சி செய்யவில்லை. இதேபோல தாயுமானவரையும்
காண முயலலாம். ஜோதி ராமாலிங்கம் கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டாலும், எத்தனை நிற்கும் என்பது தெரியவில்லை.
விமரிசனபூர்வமாகப் பார்க்க வேண்டும். இலக்கணப் பண்டிதரான ஆறுமுக நாவலர் ராமலிங்கர்
பாடல்களைத் திருவருட்பா என்று சொல்வது தவறு என்று மதரீதியாக வழக்குப் போட்டார்.
அவர் இலக்கண ரீதியாகவும் வழக்குப் போட்டிருக்கலாம். இலக்கணப் பிசகு என்றில்லை.
பழசை மீண்டும் எடுத்து நீர் ஊற்றி இளக்கி கவிதையாக்குவது என்பது ஜோதி
ராமலிங்கத்துக்குச் சுலபமாக வந்தது.
பக்திக் கவிதைகளை இலக்கியபூர்வமான விமர்சனம் செய்து அவற்றின் தரத்தை
நிர்ணயித்துச் சொல்வது என்பது மிகவும் சிரமமான காரியம். ராமாயணத்துக்கும் பகவத்
கீதைக்கும் விமரிசனம் ஒத்துவராது. வேதத்துக்கும் அப்படித்தான். பைபிளுக்கும்
அப்படித்தான். குர்ஆனுக்கும் அப்படித்தான்.
***
‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு
தர மொழிந்திடுதல்’ என்று பாரதியார் கூறிய காரியம் இருக்கிறதே, அது வசனத்தில்கூட சிரமப்பட்டுத்தான்
சாதிக்கவேண்டியதாக இருக்கிறது. கவிதையில் தெளிவுற அறிந்து தெளிவுற மொழிவது என்பது
மிகச்சில மகாகவிகளுக்கே கைவந்திருக்கிற விஷயம் என்று சொல்லலாம். மிகத்தெளிவான
நடையை உண்டாக்கிக் காட்ட கவி படுகிற பாடு வெளியே தெரிவதில்லை. அநாயாஸமாகச் செய்தது
போல இருந்தாலும் நடைத்தெளிவு மிகவும் சிரமப்பட்டுத்தான் உண்டாகிறது என்று
சொல்லுவது மிகையாகாது. ஏதாவது அகஸ்மாத்தாக ஏற்பட்ட விஷயமா இந்தத் தெளிவு அல்லது
கலைஞனின் உழைப்பின் பயனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பாரதியில், இளங்கோவில் திருக்குறளில் இருக்கிற தெளிவு
கம்பனில் இல்லை என்று சொன்னால் கம்பன் ரஸிகர்கள் கோபித்துக்கொள்ளக்கூடும். உண்மை
அதுதான். கம்பன் இரண்டு பண்பாடுகளுக்கிடையில் அகப்பட்டுக்கொண்டவன்; தமிழ்ப் பண்பாடும், சமஸ்கிருதப் பண்பாடும் அவனை நெருக்குகின்றன.
இளங்கோவுக்கு இரண்டாவது பண்பாடு பற்றி அக்கறையில்லை; வள்ளுவருக்கும்தான். பாரதியின் காலத்தில் மூன்று
பண்பாடுகளுக்கு வாரிசு அவன் - ஆனால் அவன் எதைத் தேர்ந்தெடுத்தான் என்பது தெளிவு.
அதில் குழப்பமில்லை.
***
ஒரு தெருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா?
நேரிடையாக ஏற்படுகிற அனுபவத்துக்கும், கவிதை மூலம் ஏற்படுகிற அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று
தோன்றுகிறது. அனுபவத்தில் தான் சம்பந்தப்படாத வரையில், தூர இருந்து பார்க்கும் வரையில் அதில்
சம்பந்தப்பட்டவர்களை எட்டித் தொடலாம் போலத்தான் இருக்கிறது. அதேபோல ஒரு
நிலைக்கண்ணாடியில் காண்கிற காரியங்களையும் எட்டித் தொடலாம் போலத்தான் இருக்கிறது -
ஆனால் தொட முடியாது என்பதும் தெரிகிறது. வெளி நேரடி அனுபவத்திலும் ஒதுங்கி
நின்றுதான் பார்க்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
கவிதை அனுபவத்தை உண்மையானதாக ஆக்க மறுபடி மறுபடி அதுபற்றிச் சிந்திக்க
வேண்டியதாக இருக்கிறது. நேரில் காண்கிற அனுபவம் சிந்திக்கச் சிந்திக்க விலகுகிற
மாதிரி, ஒதுங்கிப் போகிற
மாதிரி இருக்கிறது. கவிதை அனுபவம் வார்த்தைகளாகத்தான் என்றாலும் நிலைத்து
நிற்கிறது. நேரடி அனுபவம் கண் முன்னமே இல்லாமல் போய்விடுகிறது. காலமும் அதில்
செயல்படுகிறது. கவிதை அனுபவத்தில் காலம் செயல்படுவதில்லை. இதையெல்லாம் கணக்கில்
எடுத்துக்கொண்டு பார்க்கும்போது கவிதை அனுபவமே அதிகப் பயன்தரக்கூடியதாகத்
தோன்றுகிறது.
***
ஒரு சிட்டுக்குருவியின் விழுகையில்கூடக் கடவுளின் கையைக் காணமுடியும் என்று
ஹாம்லட் சொல்லுவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். எல்லாக் கவிதைகளின் வரிகளிலும்
கடவுளின் கையைக் காண முடியும். அதனால் சரஸ்வதி என்று கவிதை படைப்பவனை தேவியாக, சர்வவல்லமையுள்ளவனாகக்
கொண்டாடவேண்டியதாக இருக்கிறது. இது ஒருவிதத்தில் உண்மை. என்றாலும், சரஸ்வதியாவது, சர்வவல்லமையுள்ள தேவியாவது. மனிதன் தன் சொந்த
புத்தியினால், உணர்வுகளினால்,
சக்தியினால், தான் அறிந்த வார்த்தைகளினால் ஒரு கவிதையை
வடிக்கிறான். அவன் புத்தி சாதுர்யப் போக்கிற்கும் சொந்த மேதைக்கும் ஏற்ப கவிதை
அமைகிறது. எல்லாக் கவிதைகளையும் சரஸ்வதி தேவி எழுதினால் ஏன் அதில் இப்படித் தர
வித்தியாசங்கள் இருக்கின்றன? ஒரு
கவிதை நன்றாக இருப்பானேன் - சரஸ்வதி என்கிற சிந்தனையே பொறுப்பைத் தட்டிக்கழிக்கும்
பம்மாத்துச் சிந்தனை என்று சொல்லலாம். அதுவும் சரியான விஷயம்தான் என்று
தோன்றுகிறது.
ரிஷிமூலம், நதிமூலம்
விசாரிக்கக் கூடாது என்பது மரபு. அதேபோலக் கவிமூலமும் விசாரிக்கக் கூடாது
என்றுதான் சொல்ல வேண்டும். இதை இந்தியாவில் ஒரு மரபாக
ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள் - கவிதையை அனுபவிக்கலாமே தவிர அலசக் கூடாது
என்று. ஆனால் மரபில் அலசியும் பார்த்திருக்கிறார்கள்.
சிறுகதைகள், நாவல்களை
அலசும்போது அவற்றின் ஆசிரியர்கள் நினைக்கவே நினைக்காத பல விஷயங்கள்
தெரியவருகின்றன. கவிதையை அலசும்போது கவிக்கே தெரியாத விஷயங்கள் கவிதையில்
இடம்பெற்றிருக்கின்றன என்று கவி ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படியா, சரிதான்; இருக்கும் என்று நகர்ந்துவிடுவான். அதனால்தான்
கவிதையை அலசுகிற காரியம் அதிகமாக மேலைநாடுகளில் நடக்கிறது. நாவல், சிறுகதையை அலசுகிற விஷயம் அவ்வளவாக
நடைபெறுவதில்லை.
பூவைப் பிய்த்துப் பார்த்து அதன் அழகின் ரகசியத்தைக் கண்டுவிட முடியாது.
அதேபோல கவிதையைப் பிய்த்துப் பார்த்து அதன் ஆன்மாவைக் கண்டுகொள்ள முடியாது
என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் கவிதையை அலசிப் பிய்த்துப் பார்க்கும் காரியம்
இடைவிடாமல் நடந்துகொண்டுதான் இருக்கும் போல இருக்கிறது.
***
கவிதையில் உணர்ச்சி தூக்கி நிற்க வேண்டும் என்றும் அறிவு தூக்கலாக இருக்கக்
கூடாது என்றும் சொல்லுகிறார்கள். அப்படி அறிவைப் பிரிந்த உணர்ச்சிக்கு என்ன
மதிப்பு இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பதிலுக்கு, உணர்ச்சியைப் பிரிந்த அறிவினால் என்ன பயன்
என்று கேட்கலாம். உணர்ச்சியற்ற அறிவு ‘dry as dust’, பாண்டித்யம் போல உபயோகமற்றது என்று
ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல அறிவற்ற உணர்ச்சியினாலும் பயன் இல்லை என்று
ஏற்றுக்கொண்டால் போதுமே. அறிவோடு உள்ளத்து உணர்ச்சியைப் பார்க்க வேண்டும் என்றும்
மில்டனுக்கு இந்த உணர்ச்சி கலந்த அறிவு கைவரவில்லை, வேர்ட்ஸ்வர்த்துக்குக் கைவந்தது என்றும் ஒரு
கடிதத்தில் கீட்ஸ் எழுதுகிறார். இதற்கு அர்த்தம் இருப்பது போலவே தோன்றுகிறது.
***
‘ஒவ்வொரு கவிதைக்குப் பின்னரும் ஒரு கதை இருக்கிறது’ என்று வில்லியம் எமர்ஸன்
என்கிற ஆங்கில விமரிசகர் கூறும்போது அது நியாயம் என்றே தோன்றுகிறது. அந்தக்
கதையின் தொடர்ச்சியாகவே கவிதை உருப்பெற்றிருக்கலாம் அல்லது அந்தக் கதைக்கு
எதிர்மாறாக வேறு பக்கத்தில் போவதற்காக கவிதை உருவாகியிருக்கலாம். இதனால் நற்றிணை கவிதைகளில்
நாடகங்களைக் காணுகிற முயற்சியில் தமிழ்ப் புலவர்கள் ஈடுபடுகிறார்கள். அதேபோல,
சிலப்பதிகாரத்தை நாடக காவியம் என்று
சொல்லி ஒரு குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். சிலப்பதிகாரம் நாடகம் இல்லை.
நாடகத்தை நாட்டியம், இசை
என்றும், அது ஒரு மேடையில்
அளிக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொண்டால் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவுக்கு
நாடக மேடை பற்றி, நாட்டியம்
பற்றி, இசை பற்றி அறிவு
இருந்தது என்று சொல்லலாம். அவர் நாடகக் காப்பியம் எழுதினார் என்று சொல்வதற்கு
அர்த்தமே யில்லை.
சிலப்பதிகாரத்தை நாடகம் என்று சொல்வதற்குப் பதில் அகிலன் ஏதோ ஒரு தீபாவளி
மலரில் எழுதியது போல அதை ஒரு நாவல் என்று சொல்லலாம். நாவலில் நாவலாசிரியன் சில
விஷயங்களைச் சொல்லுகிறான்; சில
விஷயங்களை விட்டுவிடுகிறான். அந்த மாதிரி ஒரு கைதேர்ந்த நாவலாசிரியர் போல பல
விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் - பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்.
மதுரையிலும் புகாரிலும் இந்தச் சாமியாருக்கு விலைமாதர் தெருவில் என்ன வேலை என்று கேட்கத்
தோன்றுகிறது. ஆனால் ஒரு விலைமாதையே கதாநாயகியாக ஏற்றுக்கொள்கிற தைரியம் இந்தச்
சாமியாருக்கு இருந்ததுதான் விஷயம். துறவு மனப்பான்மையுள்ளவர்களுக்கு பணத்தியானால்
என்ன? பரத்தியானால் என்ன?
‘கலை நுட்பங்கள்’, 1988
***
0 comments:
Post a Comment