சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் பதிவு ஒன்றை வாசித்தேன். அந்தப்பதிவு இப்படி இருந்தது, "எனக்குக் கடிதங்கள் வந்து நீண்ட வருடங்களாகிவிட்டது. யாராச்சும் எனக்குக் கடிதம் ஒன்றை எழுதுங்களேன்"என்று.
அந்த பதிவில் வெளிப்பட்ட அந்த மனிதன் குரலில் ஒருவிதமான அன்பு, நெகிழ்ச்சி, இரக்கம், கண்ணீர் போன்றவற்றுடன் நவீன வாழ்வில் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் சன்னமான குரல் இருந்தது.
அந்தப்பதிவின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட நான் அந்த மனிதனின் பதிவுகள் மட்டுமின்றி என்றாவது ஆச்சரியமாக அவர் எழுதும் கவிதைகளையும் பின்தொடர ஆரம்பித்தேன். இன்றுவரை அந்த மனிதனைப் பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். இந்த பின் தொடரல் வழியாக எனக்கு அறியாத மனிதனாக இருந்த அவர் தற்போது போது எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
கவிஞர் நிலாகண்ணன் இன்றைய நவீன நகரங்களில் ஒன்றான சென்னையில் தனது பூர்வீகத்தின் அத்தனை சுயங்களையும் தொலைத்துவிட்டு ஒரு காரோட்டியாக தனக்குப் பிடித்த இளையராஜா, தான் என்றும் நேசிக்கும் குடும்பம், குறைந்த இலக்கிய நண்பர்கள், நிறைய வாசிப்பு இவற்றுடன் வாழ்கிறார்.
நிலாகண்ணன் தனது வாழ்வின் அற்புதமான கணங்களில் எதையாவது என்று எழுதி எழுதிச் சேகரித்த கவிதைகள் தான் தற்போது அவரின் முதற் கவிதைத் தொகுப்பாக "பியானோவின் நறும்புகை" என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது.
முதற் தொகுப்பு ஒவ்வொரு கவிஞனுக்கு பெரும் கனவு. தன்னை நவீன கவிஞர்களின் ஒருவராக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தன்முனைப்பு பொதுவாக அப்படிப்பட்ட முதல் தொகுப்புகளில் வெளிப்படுவதை நான் பார்க்க நேரிட்டுள்ளது. நிலாகண்ணனுக்கு இப்படியெல்லாம் சிந்தனை வந்திருக்குமா என்று தெரியவில்லை. அதேநேரத்தில் நிலாகண்ணன் நவீன கவிஞர்களின் வரிசையில் தனக்கான தனித்துவமான இடம் ஒன்றை இந்த தொகுப்பின் வழியாக உருவாக்கிட முயன்றுள்ளார் என்பதும் நிதர்சனம்.
நிலாகண்ணன் தனித்துவமான கவிஞர்களின் ஒருவர். அவர் எதன் தொடர்ச்சி என்பதை அவ்வளவு எளிதாக அடையாளம் காண இயலவில்லை என்பதால் தான் இதை என்னால் சொல்ல முடிகிறது.
"கவிதை என்ன செய்யும்
பிரார்த்தனை ஏற்றுக் கரையும்
கற்பூரவில்லை போல
எரிந்து முடியும், அவ்வளவுதான்"
என்கிறார் நிலாகண்ணன். ஒருவகையில் இது சரிதான். இன்னொரு வகையில் இது கவிஞனுக்கு மட்டும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அக்கவிதையை அல்லது கவிஞனை வாசிக்கும் வாசகனுக்கு ஒருபோதும் அந்தக் கற்பூரவில்லை எரிந்து அணைவது இல்லை. அது அவனுக்கே தெரியாமல் அவனுள்ளே இருக்கும் இன்னொரு எரியும் சுடரை அல்லவா காட்டிவிட்டு விலகிப் போய் விடுகிறது.
நிலாகண்ணன் தனது முதற் தொகுப்பின் வழியாக நிறைய கவிதைகளின் சுடர்களை ஏற்றிப் பார்த்துள்ளார்.
"எந்த இடத்தில் நின்று பார்த்தால்
வாழ்வு அர்த்தப்படுகிறதோ
அவ்வளவு தள்ளி நில்லுங்கள்."
என்கிறார். சரி கவிஞனே தள்ளியே நிற்கிறேன் என்று புன்னகையுடன் இன்னும் தாவி அடுத்த கவிதை என்னும் சுடரை நோக்கி பக்கங்களைத் திரும்புகிறேன். ஒரு அரசியல் கவிதையில்,
"உறங்கும் குழந்தைகளின் முகங்களைப்
பார்க்கக்கூடாது என்பதுதான்
தற்கொலைக் குறிப்பின் முதல் வரி"
என்று நம்மை நமது நவீன வாழ்வின் ஆகச்சிறந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டுவிட நமது குழந்தைகளின் முகங்களை அன்றாடம் பார்க்கச் சொல்கிறார்.
சரி, இதோ இப்போது பார்க்கிறேன் என்று பார்த்துவிட்டு வருகிறேன். பார்த்துவிட்டு வந்து அமைதியாக அடுத்தடுத்து பக்கங்களில் தாவி நகரும் போது,
"நிலவைக் குடியுங்கள்
அதுதான் தலைகீழாய் புதைக்கப்பட்ட
உலகின் மிகப்பழைய வைன்
கூழாங்கற்கள் குடிக்கின்றன
நீர் வெளிச்சமானது"
என்று என் வாழ்வின் நான் தவறவிட்ட அத்தனை கணங்களை மீண்டும் ஒரு ஜென் குருவைப் போல எனக்கு நிலவின் வெளிச்சத்தில் காட்டுகிறார்.
டிரம்ஸ ஒலி என்று இன்னொரு கவிதை (நிச்சயம் நீங்கள் தேடித்தான் வாசிக்க வேண்டும்) போய் வாசிக்கிறேன். ஆமாம் இந்தக் கவிஞனுக்கு எப்படித் தெரியும் என் புல்லட் கனவுகளைப் பற்றி?
எனக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இடர்பட்ட வாழ்வில் எல்லா ஆசைகளையும் மறைத்துக்கொண்டு அந்த எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகை புரிகிறவர்கள் தானே நாம். ஒருநாள் நமக்கும் புல்லட் வசப்படும் கவலை வேண்டாம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
"வலியென்பது
உடலில் ஏற்றிவைக்கப்படும் ஜோதி."
நிஜம் தானே, ஒருநாளும் நம் வலி குறையப் போவதில்லை. உங்கள் கவிதைகளை நீங்கள் எழுதுங்கள் நான் அதில் என் வலிகளைச் சற்று துடைத்துக் கொள்கிறேன் இந்த வாழ்வில்.
நம்பிக்கை எனும் அதிமதுரம் என்கிற கவிதை. ஏற்கனவே ஏராளமான நம்பிக்கைகளைத் தொலைத்த எனக்கு நம்பிக்கை தரவில்லை புன்னகை தான் தந்து போகிறது.
"குட்டி யானைகளில் சாமான்களை
ஏற்றிக் கொண்டிருக்கிறேன்
பெரிய யானையாய் இருக்கிறது
சொந்தவீட்டுக்கனவு!"
கனவாக மட்டும் இருக்கிறது. பல நேரங்களில் இவ்வாழ்க்கை. அந்தக் கனவுகளின் கணங்களைக் கூட ஏன் இப்படி கவிதை சுடராக ஏந்தி இன்னும் இன்னும் வலிக்க வைக்கிறீர்கள் நிலாகண்ணன்.
"சற்று முன்புவரை அமர்ந்திருந்த பறவை
பறந்து போன பின்புதான்
மேலும்
துயரமானதாகத் தெரிகின்றது
அந்தச்சிலுவை"
இப்படித்தான், இந்த கவிதைத் தொகுப்பின் வாசிப்புக்குப் பிறகு வாழ்வு வெறுமையாகத் தெரிகிறது. ஆனாலும் பாதகமில்லை. இந்தத் தொகுப்பின் வழியாக எனக்குள் நிலாகண்ணன் ஏற்றி இருக்கும் சுடர்களைச் சற்றே வாய்ப்புள்ள போதெல்லாம் நிச்சயம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்.
"கனவில் வரும் பறவைக்கு
அமரக் கிளைகள் இல்லை
அது தன் இணையை அழைத்த ஒலியில் அமர்கிறது."
நானும் இத்தொகுப்பில் ஒரு சக நண்பராக ஒரு வாசகனாகச் சற்று அமர்ந்துவிட்டுப் போகிறேன். நிச்சயம் மகிழ்ச்சியுடன், கண்ணீருடன், என் அகத்தின் இன்னும் சுடர்விட்டு எரியும் ஒளியுடன்.
***
நிலாகண்ணன்: பிறந்தது காரைக்குடி. தற்போது சென்னையில் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். கவிதைகளை தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறார். ஆனந்த விகடன், தடம், கணையாழி இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் முதல் கவிதைதொகுப்பு “பியானோவின் நறும்புகை” தற்போது வெளிவந்துள்ளது.
நூல் விபரம்:
பியானோவின் நறும்புகை ( கவிதை நூல்)
படைப்பு பதிப்பகம்,
Ph: 9489375575.
கட்டுரை ஆசிரியர்: க. விக்னேஷ்வரன்
***