அடுத்ததாக, 1986ஆம் ஆண்டில் சிடாடெல் வெளியீடாக வந்த ‘க.நா.சு. கவிதைகள்’ என்ற சிறு நூலுக்கு எழுதிய ‘இரண்டு வார்த்தைகள்’ என்ற முன்னுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
***
ஆரம்பகாலத்தில் என் இலக்கிய அபிப்பிராயங்கள் என் தகப்பனாரின் நிழலில் வளர்ந்து உருவானவை. என் தகப்பனாருக்கு கவிதை அவ்வளவாக உகக்காத விஷயம் அடிக்கடி கவிதையின் காலம் கடந்துவிட்டது; இனி முக்கியமான, தரமான இலக்கிய முயற்சிகள் எல்லாம் வசனத்தில்தான் இருக்கும் என்று சொல்லுவார். கதைகளும் நாவல்களும்தான் வருங்கால இலக்கியத்தின் முக்கியத்துறைகள் என்று அவர் அடித்து சொன்னதை மறுத்து சொல்ல எனக்கு அப்போது Personality இல்லை.
என் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் ஆங்கிலத்திலேயே அமைந்தன. ஆங்கிலத்தில் Prosody படித்திருந்தாலும்கூட metrical petterns-க்கு உட்படாமல், அப்பாவுக்கும் தெரியாமல், நான் பல கவிதைகள் எழுதிப் பார்த்தேன். ஒரு கவிதையை என் காலேஜ் பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தும் பார்த்தேன். We are Free என்று தலைப்பு அதற்கு, ஆசிரியர் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது, ஆனால் யாரையும் பின்பற்றி அமைக்கவில்லையென்றால் அதை வெளியிட இயலாது என்றார். We are Free கவிதைஆசிரியருக்கு பிறருடையது எதையும் பின்பற்றி தன் கவிதையை அமைக்க அவசியமில்லை என்று சாதுர்யமாக சொல்லிப் பார்த்தேன். அவர் வெளியிடவில்லை. தொடர்ந்து பல கவிதைகள், காலேஜில் கடைசி வருஷத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது எழுதினேன் என்று நினைவிருக்கிறது. அதில் ஒன்று I am the centre of the storm என்பது, என் காலேஜ் நண்பர்களிடையில் ஒரு பரபரப்பையும் எனக்குப் புகழையும் தந்தது என்றும் நினைவிருக்கிறது. இந்தக் கவிதைகள் எல்லாம் என்ன ஆயின என்று எனக்குத் தெரியாது. எழுதுவதை ஏதாவது ஒரு நோட்புக்கில் பிரதியெடுத்து நோட்புக்கை எங்காவது விட்டுவிடுவேன். வாடகை தராத வீடு எதிலாவது போயிருக்கலாம்.
கரையான் அரித்திருக்கலாம். எங்கேயாவது இன்னமும், இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் கவலையும் படவில்லை. ஆங்கிலம் எழுதுவதை நிறுத்திவிட்டு 1934ல் தமிழில் எழுத ஆரம்பித்த சமயத்தில் முதலில் கதைகள் எழுதினேன். பிறகு நாவல் எழுதினேன். மூன்றாவதாக, 1936, 37ல் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை படித்த வேகத்தில் கவிதைகளையும் எழுத முற்பட்டேன். இந்த தடவை யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளலாம் என்று – நான் யோசித்துக்கொண்டிருந்த சமயம் ச.து.சு. யோகியாருடன் நட்புக் கிடைத்தது, புதுமைப்பித்தன் மூலம். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை, கவிதை எழுத என்கிற முடிவுக்கு வரச்செய்தது. யோகியார் சொன்னார்: “எப்படி என்ன எழுதினாலும் அதை யாப்பிலக்கணப்படி தரம் சொல்லிப்பார்த்துக்கொள்ள முடியும்” என்றார்.
அப்படியானால் யாப்பிலக்கணம் படிக்கவேண்டிய அவசியப்மென்ன என்று எனக்கு தெரியவில்லை. கவிகள் யாப்பு படித்து எழுத வேண்டிய அவசியமில்லை; யாப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் பண்டிதர்கள் - இலக்கிய வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எண்ணினேன்.
ஆங்கிலத்தில் free verse என்று சொல்லப்பட்டதற்கு சரியான பதம் ‘வசன கவிதை’ என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணியிருந்த ஒரு காலம். பிச்சமூர்த்தி, கு.ப.ரா., புதுமைப்பித்தன் எல்லோருமே ‘வசன கவிதை’ என்றுதான் அப்போது அதை குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு முன்மாதிரியாக தமிழில் பாரதியாரின் காட்சிகளும் ஆங்கிலத்தில் Walt Whitman கவிதைகளும் பயன்பட்டன. நான் மேலே குறிப்பிட்ட நால்வருக்குமே டி. எஸ். எலியட் படிப்பு என்று உணர்ந்தேன். டி. எஸ். எலியட் பற்றிய விமரிசனப் போக்கிலும் ஈடுபாடு உண்டுதான். ஆனால் டி. எஸ். எலியட் செய்துகொண்டிருந்த முயற்சிகளை ஒட்டி தமிழில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம் பல சொல்லலாம். இந்த நால்வரும் (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்) தனித்துவம் உடையவர்கள். எலியட்டைப் பின்பற்றிக் கவிதை செய்துபார்க்கவேண்டிய அவசியமில்லை என்று எண்ணியிருக்கலாம். தவிரவும் அப்போது இந்தியாவில் எலியட் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படாத கவி. பின்னர் 1942க்குப் பின்தான் எலியட் சர்வகலாசாலை பண்டிதர்களுக்கே தெரியவந்தார் என்று சொல்லலாம்.
ஒரு சமயம் 1938ல் புதுமைப்பித்தன், வசன கவிதை என்பது குதிரையும் அல்ல, கழுதையும் அல்ல, கோவேறு கழுதை என்று சொன்னார். தாகூரின் வசன கவிதை முயற்சிகளே அப்படித்தான் எனக்குத் தோன்றுகின்றன என்று நானும் சொன்னேன்.
இன்னும் வசன கவிதையை வேறுவிதமாக அமைத்து வசனத்தின் தரமெல்லாம் உள்ளதாக கவிதையின் லட்சியங்களையும் உள்ளடக்கிச் செய்ய முடியும் என்று நான் நம்புவதாகவும் சொன்னேன். இதன் விளைவாக முழுவதும் Free Verse ஸில் 1938 கடைசியில் ஒரு இலங்கை நாட்டுக்கதையை வைத்து ‘பேரன்பு’ என்று ஒரு நாடகம் எழுதினேன். எனக்கு திருப்தியாக வந்திருந்தது எனினும் அதை புதுமைப்பித்தனிடம் காண்பிக்கவோ அல்லது வெளியிடவோ தைரியம் வரவில்லை. அதில் ஒரு பாட்டை மட்டும் ‘சூறாவளி’ பத்திரிகை தொடங்கியபோது அதில் வெளியிட்டேன். அதைப் பற்றி கு.ப.ரா. உள்பட பலர் விவாதம் செய்தார்கள். புதுமைப்பித்தன் அந்த விவாதத்தில் பங்குகொள்ளவில்லை. ஆனால் அதற்கு முன் நான் எழுதிய ஒரு கவிதையை ‘ஆண்டாள்’ என்கிற பெயரில் ‘என் காதலன்’ என்று அவர் பதிப்பித்த ஒரு ‘தினமணி’ ஆண்டு மலரில் வெளியிட்டார்.
இதற்கு பின்னர் புதுமைப்பித்தன் வேளுர் வே. கந்தசாமிக் கவிஞர் என்கிற பெயரில் ‘கலாமோஹினி’யிலும் வேறு பல இடங்களிலும் கவிதை எழுதினார். அவர் அவற்றை வசன கவிதையாகக் கருதவில்லை, எழுதவுமில்லை என்பது உண்மைதான். ஆனால் Free Verse என்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது என்பதும் உண்மைதான். ஏனென்றால் எலியட், பவுண்ட், மரியான் மூர் என்பவர்களுடைய கவிதைகளையும் ஈ. ஈ. கம்மிங்ஸ் என்பவருடைய நூல்களையும் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் சேர்ந்து படித்து விவாதித்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கம் தமிழ் இலக்கியத்தில் தேவை என்பதும் அவருக்கு உடன்பாடுதான். கம்ப ராமாயணத்தில் அவருக்கு மிக உகந்த பகுதியான யுத்த காண்டத்தில் பல பகுதிகளைப் படிக்கும்போது இதில் Free Verse வேகம் தொனிக்கவில்லையா என்று நான் கேட்பதற்கு, இது Free Verse இல்லாவிட்டாலும் Free Verse—ஸின் தரம் இருக்கிறது என்று சொன்னார் ஒருதரம். இது ‘சந்திரோதயம்’ நடந்துகொண்டிருந்த சமயம் என்று எண்ணுகிறேன்.
தொடர்ந்து வசன கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவல் ஒரு பக்கம் எனக்கு இருந்தபோதும் நான் ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்துவிட்டேன்.
எப்போதாவது ஒரு சிந்தனையை குறித்து வைப்பேன். அதோடு நின்றுவிடும். அதற்கப்புறம் நாவல், விமரிசனம் என்று காலம் சென்றுவிடவே கவிதை முயற்சிகளில் ஈடுபட எனக்கு அவசியமோ அவகாசமோ கிடைக்கவில்லை. ஆனாலும் சங்க இலக்கிய உலகத்தை கண்டுகொள்ள ஆரம்பித்தது முதல், நாம் Free Verse என்று மேலைநாட்டு இலக்கியாசிரியார்களில் படிப்பதன் போக்கும் வசன வேகமும் உரமும் இதிலெல்லாம் இருப்பது போல இருக்கிறதே என்று எனக்கு மனசில் இடறும். இரண்டொரு தடவைகள் திருவனந்தபுரத்தில் இருக்கும்போது இதுபற்றி டி. கே. துரைஸ்வாமியிடம் பேசியிருப்பதாகவும் நினைவிருக்கிறது.
திருவனந்தபுரத்திலிருத்து கிளம்பிய பிறகு ஓரளவு விமரிசனத் துறையில் ஒரு தேக்கம் தோன்றவே இதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் செல்லப்பாவின் ‘எழுத்து’ முயற்சி உருவாகிக்கொண்டிருந்த சமயத்தில் 1958 கடைசியில் ‘புதுக் கவிதை’யென்று பெயர் கொடுத்துக் கவிதை முயற்சிகள் எந்தப் போக்கில் அமைய வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என்பதையும் சொல்லி ஒரு கட்டுரை எழுதினேன். எலியட் போன்ற புதுக்கவிதைக்காரர் எலிஸபெத் காலத்து நாடகப்பேச்சின் சந்தத்துக்கு ஆங்கிலக்கவிதையை திருப்பியதுபோல, எஸ்ரா பவுண்டு என்பவர் கவிதையை பொதுவாக பல பழைய தடங்களை நாடி செல்லச்செய்தது போல, தமிழில் புதுக்கவிதை சங்ககால கவிதைப்போக்குகளை பின்பற்றி, வசனத்தின் முக்கியமான அம்சங்களான தெளிவு, வலிவு, நேர்மை இவற்றுடன் செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தினேன். இந்தக் கட்டுரை ‘சரஸ்வதி’யில் வெளிவருவதற்கும் ‘எழுத்து’வுக்கு போதுமான தரமுள்ள சிறுகதைகள் கிடைப்பதில்லை என்று சி. சு. செல்லப்பா சொல்வதற்கும் ஒத்துப்போயிற்று. அப்போது சிறுகதை கிடைக்காவிட்டால் பாதகமில்லை.
பிச்சமூர்த்தி எழுதுகிற கவிதைகள் இருக்கின்றன; நானும் இரண்டொரு கவிதைகள் எழுதித் தருகிறேன் என்று தந்ததும், அவை ‘எழுத்து’வில் வந்ததும் நினைவிருக்கிறது.
நான் நினைத்துப் பார்ப்பதில் ‘புதுக் கவிதை’ என்கிற வார்த்தை சேர்க்கைக்கு ஏதோ மமதை, மேதாவித்தனம் அல்லது விசேஷ மரியாதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வசனகவிதை என்கிற வார்த்தை போதுமானதாக இல்லை என்பதனால் புதுக் கவிதை என்று 1930களில் கம்யூனிஸ்டுகளிடையே வழக்கிலிருந்த New Verse என்கிற பதத்தை மொழிபெயர்த்து சொன்னேன்.
அவ்வளவுதான். பெயரில் ஒன்றும் பிரமாதமான பாதிப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு புதுமாதிரியான கவிதைமுயற்சிக்கு பெயர் சற்றுப் பொருத்தமாக அமைந்தது. வசன கவிதை, லகு கவிதை, சுதந்திரக் கவிதை என்பதைவிட இது ஏற்றதாக இருந்தது. பின்னர் செல்லப்பா வெளியிட்ட ‘புதுக்குரல்கள்’ என்கிற நூலுக்கு அந்த பெயர் பொருத்தமாக அமைந்தது போல.
(அந்தப் பெயரிலும் விசேஷ மேதைமை அம்சம் ஒன்றும் இல்லை. New University English Poetry என்பதன் மொழிபெயர்ப்பே அது. அந்தப் பெயரில் எனக்கும் கொஞ்சம் சம்பந்தம் உண்டு என்றுதான் எண்ணுகிறேன்.) மேலே கூறிய ‘புதுக்குரல்கள்’ போக்கு, சரித்திரம் பற்றி இன்று படிப்பவர்களுக்குத்தெரியும். ‘எழுத்து’வின் - முக்கியமாக பிச்சமூர்த்தியின் – ஆதரவுடன் புதுக்கவிதை ஒரு உருவமும் வேகமும் பெற்றது. இந்த வேகமும் உருவமும் நான் எதிர்பார்த்ததில்லை என்று பலதடவைகளில் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.
புதுக்கவிதையின் முக்கிய அம்சம் யாப்பின்மை மட்டுமல்ல, வசனத்தின் முக்கிய அம்சங்களான வேகம், வலு, நேர்மை என்பது என் கட்சி. என் கொள்கைகளுக்குட்பட்டுத்தான் யாரும் கவிதை செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நானேகூட என் கொள்கைகளுக்கு அடங்கிக் கடக்கும் வகையில் கவிதை எழுதியிருக்கிறேனா என்று மயன் கவிதைகளை படித்துப் பார்க்கும்போது எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் புதுக்கவிதை என்று ‘சரஸ்வதி’ கட்டுரையில் குறிப்பிட்ட அடிப்படைகளில் கவிதை செய்துவருபவர்கள் என்று என்னால் சிலரை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. சண்முக சுப்பையா, பசுவய்யா, நகுலன், ஞானக்கூத்தன் – இவர்களில் முக்கியமாக நான் நகுலனுடைய கவிதைகளைக் கருதுகிறேன். என் கவிதைகளில் ‘வைகுண்டம்’, ‘ஆ என்று முடியும் கவிதை’ இவற்றில் புதுக் கவிதை அம்சம் என்று நான் ஏற்றுக்கொள்பவை அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன்.
‘மயன் கவிதைகள்’ என்று வெளிவரும் இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டவை. நான் எழுதிய கவிதைகளின் பிரதிகளையோ வெளிவந்த பத்திரிகைகளையோ நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளவில்லை. நம்மால் இவற்றைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. ஒரு சமயம் ஒரு புதுக்கவிதை நூல் வெளியிடலாம் என ஒரு 30 கவிதைகள் தயாரித்தேன். அதை அச்சேற்றும் சமயம் மனம் மாறிவிட்டது. நண்பர் முத்துசாமியிடமிருந்து, அது ஆக்ஸ்போர்டு யுனிவர்ஸிடி பிரஸ் ஆர். பார்த்தசாரதியிடமும், பின்னர் க்ரியா ராமகிருஷ்ணனிடமும் போய்க் கடைசியில் பி. கே. புக்ஸ் ஜி.எம்.எல். பிரகாஷிடமும் போய்ச்சேர்ந்து, அவையும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்த நூலைத் தொகுத்து வெளியிட பிரயாசை எடுத்துக்கொண்ட ஜி.எம்.எல். பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றி. அவரில்லாமல் ‘மயன் கவிதைகள்’ நூல் உருப்பெற்றிராது என்பது நிச்சயம்.
டெல்லிக்கு வந்தபின் என் 57வது வயதில் புதுக்கவிதை முயற்சியாகவே என் சுயசரிதத்தை எழுதிப் பார்க்கலாமே என்று எழுதினேன். அது காவியமாக, 15 காண்டங்களில் 1300 வரிகளில் நீண்டது. அதை வெளியிடுகிறேன் என்று எடுத்துப் போய், சில ஆரம்பப் பகுதிகளைக் ‘கணையாழி’யில் வெளியிட்டார் அதன் ஆசிரியர். நான் அதை அவர் பத்திரிகை தாங்காது என்று சொல்லியும். சில பகுதிகளை வெளியிட்டுவிட்டு நிறுத்தினார். அவருக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வெளிவருகிற முதல் தமிழ் நூல் இது. அதைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்வது என் கடமை. இலக்கியம் எதுவுமே யாராவது படித்து பாராட்டிய பிறகுதான் இலக்கியமாகிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எழுதுவதில் - நல்ல காபி சாப்பிடுவது போல, அழகிய யுவதி ஒருத்தியை பார்ப்பதை போல, நல்ல நூல் ஒன்றை படிப்பதைபோல - ஒரு ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தம் என் வாழ்வை நிறைவுறச் செய்ய எனக்கு அவசியமாக இருக்கிறது. எழுதுகிறேன். தினமும் இடைவிடாமல் எழுதுகிறேன் நான். கவிதை, கதை, நாவல், விமரிசனம், சிந்தனைகள் எல்லாம் எழுதுகிறேன். இப்படி எழுதுவதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் தமிழில் எழுதுவதில் மற்ற மொழிகளில் எழுதுவதைவிட அதிக ஆனந்தம் கிடைப்பதாக தோன்றுகிறது. எழுதுகிறேன் - தினம் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவ்வளவில்லாவிட்டாலும் சற்றுக் குறைவான ஆனந்தம் இருக்கிறது என்று கண்டு ஆங்கிலத்திலும் வேறு சில மொழிகளிலும் கவிதைகள், கதைகள், நாவல்கள், விமரிசனங்கள் எழுதுகிறேன். ஆயினும் எனக்காகவேதான் எழுதிக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதுவதை நீங்களும் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமோ சந்தோஷக் குறைச்சலோ இல்லை. அதனால்தான் ஜி.எம்.எல். பிரகாஷ் இந்த நூலை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதித்தேன்.
என் கவிதைகளை நூலாகப் படித்துப் பார்ப்பது எனக்கே ஒரு நூதனமான அனுபவமாகப்பட்டது. மற்ற கவிகளுக்கும் இப்படித்தானோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் அடிக்குறிப்பில்லாத, இந்நூலிலுள்ள வேறு சில கவிதைகளுக்கும் வேறு கவிகளின் எழுத்தில் ஆதாரம் இருப்பது போலத் தோன்றுகிறது. தெரிந்து காபியடிக்க வேண்டும் என்று செய்ததில்லை அது. ஆதாரக் கவியின் பெயர், கவிதையின் தலைப்பு மறந்தும் போய்விட்டது. இரண்டு மூன்று தமிழாயிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். மற்றவை – பெரும்பாலானவை - எனக்குத்தான் சொந்தம்.
(‘மயன் கவிதைகள்’, பி. கே. புக்ஸ், 1977)
***
இரண்டு வார்த்தைகள்
கவிதைக்கு முன்னுரையோ பின்னுரையோ அல்லது
வியாக்கியான விரிவுரைகளோ
அநாவசியம் என்கிற நினைப்பும் எனக்குண்டு. 1985-ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை
பத்திரிகை துணுக்குகளாகவும்,
அரசியல்
கமெண்ட்களாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும்
உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒருவிதத்தில் தவறு என்றுதான்
சொல்லவேண்டும். ஆனால் கவிதை எழுதுவதற்கு உள்ளூர இருக்கிற
உந்துதல், அடிப்படையான மனுஷ்யத்துவம் நிறைந்த உந்துதல், அவரவர் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் கவிதை எழுதிப்பார்ப்பதும் வெளியிட முடியுமானால்
வெளியிடுவதும் உலகில் தவிர்க்கமுடியாத
காரியம்.
எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார
நம்பிக்கை. அது நிஜமாகவே
கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக, அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்கவேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக்கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத்தாக்கமும் பெற்றிருந்தால்தான் கவிதை
புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன்
நான்.
என் முந்திய நாளைய முயற்சிகளில் விட இந்தச் சிறுநூலில் அடங்கிய கவிதைகளில் என்
புதுக்கவிதை லட்சியம் சற்று அதிகமாகக் கனமாகக்கூடி வந்திருப்பதுபோல எனக்கு தோன்றியது. அப்படியும் எத்தனைதூரம் பழக்கப்பட்டதை தவிர்த்திருக்கிறேன் என்று சொல்லத்தெரியவில்லை. எழுதும்போதுதான்
அது நிதானப்படும் என்று சொல்லத் தேவையில்லை.
***
க.நா. சுப்ரமண்யம் தமிழ் விக்கி பக்கம்
***