கவிதை சில குறிப்புகள் - க.நா. சுப்ரமண்யம்

‘சென்ற இதழில் வெளியான க.நா.சு.வின் ‘தமிழில் புதுக் கவிதை’ (‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959) என்ற கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. பலரும் கட்டுரையை வாசித்துப் பகிர்ந்திருந்தார்கள். கவிஞர் க. மோகனரங்கன் அக்கட்டுரையின் சிறப்புகளைக் குறிப்பிட்டு வாசகர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அவரது பதிவில் மறுமொழியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் அக்கட்டுரை வெளியான காலத்தையொட்டி ‘எழுத்து’ இதழிலும் க.நா.சு. கவிதை பற்றி எழுதியிருப்பதை நினைவுகூர்ந்தார்.

இந்த இதழில் ‘விமர்சனக் கலை’ (1959) நூலிலிருந்து ஒரு பகுதியும், ‘எழுத்து’ ஆரம்ப இதழ்களில் வெளியான குறிப்புகளும் இடம்பெறுகின்றன. இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஒரே காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’

தமிழில் கவிதையைப் புதுக் கலையாக்கவேண்டிய அவசியம் இன்று உண்டு. இந்தக் காரியத்தைச் செய்ய புதுமைப்பித்தன் ஓரளவுக்கு வழிகாட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். சிறு கவிதை முயற்சிகள் செய்து பார்த்த புதுமைப்பித்தன் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை தான். இருந்தாலும் ஓரளவுக்கு என்ன செய்யலாம், எந்த திசையில் நாம் முயற்சி செய்யவேண்டும் என்று சுட்டிக் காண்பித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

புதுமைப்பித்தனதும் அவ்வளவாக மரபு பிறழாத கவிதை தான்; ஆனால் புது முறையில் செய்தார். மரபை ஒட்டிச் செய்யப்படுகிற இன்றையக் கவிதை நன்றாக இல்லாதிருப்பதற்கோ, பிரமாதமாக ஒன்றும் சாதிக்காதிருப்பதற்கோ காரணம் மரபு, எதுகை, மோனை, அணி அலங்கார கனம் அல்ல. இன்று கவி என்று எழுதத் தொடங்குகிறவர்களிடம் சரக்கும் ஒரு புது இலக்கிய நோக்கும் ஒரு தனித்துவம் இல்லாமையும்தான் காரணம்.

சமீபகாலத்திய தமிழ்க் கவிகளிலே பாரதியாரிடம் ஒரு வேகமும் Personality-யும் உண்டு. விஷயத் தெளிவும், வாக்கினிலே உண்மை ஒளியும் உண்டு. பாரதிதாசனின் ஆரம்பக் கவிதைகளிலே இத்துடன் ஒரு முழுமையும் இருந்து, பின்னர் மறைந்துவிட்டது. விஷயத்தை மட்டும் வைத்துச் சொல்லவில்லை, நான். புரட்சி மோகத்தை வைத்தும் சொல்லவில்லை. கவியாகவும் அவர் சக்திகள் குன்றிவிட்டன. தேசிகவிநாயகம் பிள்ளையின் எழுத்திலே ஒரு சுக பாவம் உண்டு; அதற்குமேல் அவர் கவிதையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. நாமக்கல் கவிஞரைப் பிற்காலத் தலைமுறைகள் கவியாக நினைவில் வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே. ச.து.சு. யோகியாரின் கவிதையிலே கம்பனின் வேகம் இருக்கிறது - அவ்வளவுதான். அந்த வேகம் கம்பனுடையதே தவிர, யோகியாருடையதல்ல. மற்றப்படி இன்று எழுதுகிற கவிகளிலே பிக்ஷுவும், தமிழ் ஒளியும் ஏதோ கொஞ்சம் முயற்சி செய்கிறார்கள். கலைவாணனும், சாலிவாஹனனும் சில சமயங்களில் பளிச்சென்று ஒரு உருவம், ஒரு சிந்தனைத் திரி ஏற்றுகிறார்கள் - அவ்வளவுதான். புதுமைப்பித்தனைப் பின்பற்றி ரகுநாதன் புதுக்கவிதை எழுதியிருக்கிறார். நான் படித்த வரையில் மற்றவருடைய கவிதை பூராவும் வெறும் வார்த்தைக் குப்பைதான் என்று சொல்ல வேண்டும். இந்த வார்த்தை குப்பைகளிலே சில சமயம், நிறைய எழுதுகிற தோஷத்தினாலும், விஷய முக்கியத்தினாலும், கொத்தமங்கலம் சுப்பு கவிதை செய்துவிடுகிற மாதிரி தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் கவிதையிலே நம்பிக்கை வறட்சியும், அவருடைய தனித்துவமும் சேர்ந்து அற்புதமாகச் செயல் - அதாவது கவிதையாகச் சொல் - பட்டிருக்கின்றன. ஒரு கிண்டல் பாவம் அற்புதமாக அமைந்துள்ள கவிதை அவருடையது. இன்றைய வாழ்க்கைக்கேற்ற விமரிசனமாக அவர் கவிதை அமைந்துவிட்டது என்பதை அவருடைய தனிச்சிறப்பாகச் சொல்லவேண்டும். அதாவது இன்றைய கவிதைக்கான சந்தமும் போக்கும் அவர் கவிகளிலே அமைந்துவிட்டன. ‘மாகாவியம்’ என்னும் அவர் முயற்சி மிகவும் சிறப்பானது. அதைப் பின்பற்றி இன்னும் பலர் முயற்சி செய்துபார்த்தால் தற்காலத் தமிழ்க் கவிதை இலக்கிய அந்தஸ்தை எட்டிவிடும்.

எதுகை மோனை இலக்கணங்களைக் கையாண்டும், மேலை நாடுகளில் செய்கிறமாதிரி பலரகமான வசன கவிதையிலும் முயற்சிகள், இலக்கிய நினைவுடன், இலக்கியப் பிரக்ஞையுடன் செய்யப்படுகிற முயற்சிகள், தமிழ்க் கவிதை வளர மிகவும் அவசியம். அந்த அவசியத்தை உணர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் முயன்று பார்த்தால், கவிதை வளம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழ்க் கவிதை அரசி மஹோன்னதமான ஸ்தானத்திலே வீற்றிருக்கத் தொடங்குவாள். நூற்றுக்கணக்கான முயற்சிகளிலே ஒன்றிரண்டு கவிதையாகவும் தேறலாம் என்பது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்.

(‘விமரிசனக் கலை’ (1959) நூலில் ‘சில குறிப்புகள்’ என்ற கட்டுரையில் ‘கவிதை’ என்ற தலைப்பின் கீழ் வரும் பகுதி)


கவிதை

எனக்கும்

கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ

எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்: இவற்றில்

எத்தனை எட்டுக்கள் கவிதையால்

சாத்திய மாயின


என்று யார்

தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்

எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?

மொழியின் மழலை அழகுதான்.

ஆனால் அது போதவே


போதாது.

போதுமானால் கவிதையைத் தவிர வேறு

இலக்கியம் தோன்றியிராதே. போதாது

என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக

இத்தனை இலக்கியத்


துறைகள்

தோன்றின—நாடகமும், நாவலும், நீள்

கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்

தோன்றியிராது; ஆனால் அவையும்தான்

திருப்தி தருவதில்லையே!


அதனால்

தான் நானும் கவிதை எழுதுகிறேன்.

மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.

மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்

தரும். கலையின்


பிறப்பு

இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே

இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது

இந்த அடிப்படையில்தான் சாத்தியம்

என்று சொல்லலாம்.

‘எழுத்து’, இதழ் 1, ஜனவரி 1959

https://amzn.to/46HwlT9

***


‘எழுத்து’ம் அதன் முயற்சிகளும்

...3-வது ‘எழுத்’தில் வெளிவந்திருக்கிற ‘உன் கை நகம்’ என்கிற கவிதை அவசியமான ஒரு இன்றைய சோதனை முயற்சி. அது இருப்பதால்தான் உங்களுடைய ‘ஜீவா தயவு காட்டு’ என்கிற அசட்டு கலீல் கிப்ரான் பாட்டுக்கும்கூட ஓர் அர்த்தம் ஏற்படுகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது...

‘எழுத்து’, இதழ் 4, ஏப்ரல் 1959

https://amzn.to/3WAkt0B

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

எது நல்ல கவிதை?

Indian Literature மார்ச் - ஏப்ரல் 1987 இதழில் வெளியான இந்தக் குறிப்புகள், 'காலச்சுவடு' ஏப்ரல் - ஜூன் 1989 இதழில் தமிழாக்கம் செய்து பிரசுரிக்கப்பட்டது. 'அவதானி' என்ற புனைபெயரில் இதை மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி. இந்தக் கட்டுரையில், எது நல்ல கவிதை? என்பதற்கு இந்தியக் கவிஞர்கள் பலரும் அளிக்கும் பதில் சுவாரசியமானது. இதனை நன்றியுடன் மறுபிரசுரம் செய்கிறோம்.

***
ஒரு நல்ல கவிதை

தேவைக்கு மேலாகவோ அல்லது

குறைவாகவோ கூறுவதில்லை

மோசமான கவிதையில்

எப்போதும் சிறிது கழிக்கலாம்

சிறிது சேர்க்கலாம்.


வில்லியம் ராடிஸே

ஆங்கிலக் கவி. 

(ரவீந்திரநாத தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், பி.1951)

***

எது நல்ல கவிதை என்பதை ஒருவன், ஒருக்கால், உள்ளுணர்வால் அறியலாம். அல்லது உயரலாம். வறண்ட தருக்கம் கொண்ட உலர்ந்த வார்த்தைகளால் ஒருவன் வரையறை செய்ய இயலுமா? உதாரணமாக ஒருவனால் சுவையற்றும், வார்த்தைக் கூட்டமாக முடியாமலும், காதலையோ அல்லது இன்ப துன்பங்களையோ வரையறுக்க இயலுமா? சொல்ல எண்ணியதைச் சொல்ல முடியாத நிலைதானே அப்போது மிஞ்சும்?

ஒரு கவிதையின் ஆக்கம் வார்த்தைகளால் ஆனது, தனி மனிதனின் மனதிலும் கனவுகளிலும் வேர்விட்டுநிற்கும் அளவிற்கு வார்த்தைகள் சமூக மரபுரிமையும் கொண்டவை. வேசியர் விடுதிகளின் சந்தைப் பேரத்திலிருந்து சர்வதேச ராஜதந்திரம் வரையிலும் கூக்குரல்களிலும் முணுமுணுப்புகளிலும் வெற்றோசைகளிலும் வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றன. ஒரு நல்ல கவிதையிலோ ஒவ்வொரு வார்த்தையும் பேசுகிறது. ஒவ்வொன்றும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மாற்று சொற்கள் அற்றவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் நுட்பமான அர்த்த பேதங்களின் தொடர்புகளால் வலுவேறியது. வசீகரம் கொண்டது. ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் அமைதியாகப் பேசுகின்றன. எளிமையாக, அமைதியைக் குலைக்கப் பயந்தபடி பேசுகின்றன. ‘மற்றொன்றை’ சந்திப்பதற்கான படிகளாக அவை அமைகின்றன. ‘மற்றொன்’றின் சந்திப்பை வரவேற்கின்றன. ‘இருள் வலிமை’ எனக் கவிஞன் லோர்க்கா அழைத்த அந்தச் சக்தியை - தன்னையும் அசைத்து நம்மையும் அசைக்கும் சக்தி - அவை கொண்டிருக்கின்றன. உள்ளுணர்வினால் மட்டுமே இந்த மாயத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

ஒரு நல்ல கவிதை, எந்த ஒரு நல்ல கலைப்பொருளைப் போலவே, இருப்புப் பற்றிச் சிந்திக்கிறது. ஒரு போதும் அது கற்றுத் தர முற்படுவதில்லை. நம் கருத்துக்களின் சேமிப்புக் கிடங்குக்கு மேலும் ஒரு சேர்மானம் அல்ல அது. இங்கு உறைந்திருக்கும் சகலப் பொருள்களின் பூடகத்தன்மை பற்றி, ஒரு சிலவற்றை, வார்த்தைகளின் நெசவினால் வெளிப்படுத்தும் அசையும் உருவம் அது. அவற்றுடன் இணைந்து கிடைக்கின்றன நம் சாவுகள், நம் கனவுகள், நம் ஆத்மா, நம் சதை. அது வெளிப்படுத்தல் மயமானது - தொலைதூர நட்சத்திரங்களின் கனவிலிருந்து வாய் மெல்லும் உணவின் ருசி வரையிலும். அதற்குமுன் இல்லாத ஒன்றை உருவாக்கித் தருவதில் கொள்ளும் சந்தோஷம் அதன் சாராம்சம். ஒரு நல்ல கவிதை வார்த்தை கள்பால் பக்திமயமான உறவும், முழுமையான அடக்கமும் கொண்டது. குயவனுக்கும் மண்ணுக்குமான; தச்சனுக்கும் மரத்திற்குமான உறவு வகை அது.

மனித துக்கத்தின் மொத்தச் சரித்திரங்களிலிருந்து ஒரு நல்ல கவிதை ஒரு போதும் கசப்பை மட்டும் ஏந்திக்கொள்வதில்லை. அது எடுத்துக்கொள்வது கருணையை; நம்பிக்கையின் உணர்ச்சியற்ற உறுதிப்பாட்டை. ஆமாம்; அது விளைபயனில் மிகுந்த வெறி கொண்டது. சரித்திரத்தைப் பற்றி அசிரத்தை கொண்டது. காலடியில் ஒரு எறும்பு மிதிபடும்போதுகூட நியாயம் கேட்டு, மூடி இருக்கும் கடவுள்களின் சகலக் கதவுகளையும் அது தட்டும். புல்லின் ஒரு கீற்று முளைத்த இடத்தில் இரண்டு முளைக்க அது பிரார்த்தனை செய்யும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வாசகனும் கவிஞன் ஆவானாக. ஒரு நல்ல கவிதை, எதை அது சொல்லிற்றோ அது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது என்ற வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. எதை அது சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்ல முடியாமல் இருப்பதும் அதற்குத் தெரியும். உண்மையான மேலான கவிதை ஒன்றை, யாரோ ஒருவன், எங்கோ ஓரிடத்தில் புனைந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. 

சீதாகாந்த் மகாபத்ர

ஒரிய மொழிக் கவி பி.1937

***

நான் ஒரு கவிதை இதழை, உத்தேசமாக, இருபத்தைந்து ஆண்டுகள் பதிப்பித்தேன். அந்த நாட்களில் கணிசமான இளம் கவிஞர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிச்சயமற்ற தன்மையும், பயமும், அடக்கமும், ரகசியச் சவால்களும் நிரம்பிய என் இளமைக் காலத்தை அடிக்கடி நினைவு கூருகிறேன். ஆசிரியரின் அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்க, நடுங்கும் கரங்களுடன் ஒரு இளம்கவிஞன் தனது கையெழுத்துப் பிரதியை என்னிடம் அளிக்கும்போது என் வளர்பருவத்தை அவனிடம் இனம் காண முயல்கிறேன். ஒரு இளம் கவிஞனின் கவிதைகளைப் படித்துப் பார்க்காமலேயே, அவனது பழக்கவழக்கங்களை ஆராய்ந்தே அவன் கவிதை உலகத்தில் நிலைத்திருப்பானா மாட்டானா என்பதைக் கண்டறிய முடியும் - இந்த மனப்பதிவு தோற்றுப்போகும் சந்தர்ப்பங்கள் மிகுதி என்றாலும், கலையின் உலகில், முன் கூட்டி வந்த முடிவுகள் எதுவும் முற்றாகப் பொருந்துவதில்லை. அதனால்தான் வாழ்க்கை இவ்வளவு வசீகரமாக இருக்கிறது.

ஒரு பெண்ணின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் நோக்கத்தில்தான் கவிதை எழுத்தின் முதல் முயற்சிகள் என்னிடம் தோன்றின. அவள் என் நண்பனின் சகோதரி; என் முதல் காதலி. அவளுக்காகத்தான் எழுதினேன் என்றாலும் எழுதியவை அனைத்தும் காதல் கவிதைகள் அல்ல. சீல்டாக் ஸ்டேஷனில் உள்ள வயோதிக அகதிப் பெண்ணைப் பற்றி எழுதிய கவிதையைக்கூட நான் அவளுக்கு அனுப்பியிருந்தேன். இதே காரணத்துக்காகத்தான் தங்கள் முதல் கவிதைகளை இன்றைய இளம் கவிஞர்கள் எழுத முற்படுகிறார்களா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கவிஞர் குழு ஒன்றுடன் இரண்டொரு ஆண்டுகளுக்குள் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. கவிதையில் எங்கள் கலகம் அப்போதுதான் ஆரம்பம் ஆயிற்று. ஆவேசத்திற்கு ஆட்பட்டு அனைத்தையும் அழிக்க விரும்பினோம் - தாகூரின் பாதிப்பை, அப்போது ஆட்சியில் இருந்த கவிதையின் ஓசைகளை, இயற்கையின் வருணனைகளை. இவை வெளிப்படையான சவால்களாக இருந்தன. ஆனால் ரகசியத்தில், தன்னந்தனியாகக் கவிதை எழுதப்பட வேண்டிய புத்தகத்தின் முன்னால் இருந்தபோது, கூர்மையான கேள்விகள் என்னைப் பேய்போல் பிடித்து ஆட்டின. நான் படைக்கும் கவிதை, கவிதை உலகத்திற்கு உரியதுதானா? நான் பயன்படுத்தும் வார்த்தைகள் அவற்றிற்கே உரிய இசைத்தன்மையைக் கொண்டிருக்கின்றனவா? இந்த உலகில் எண்ணற்ற நல்ல கவிதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இதற்குமேல் நானும் கவிதைகள் எழுத வேண்டுமா?

சிறந்த கவிதைகள் எழுதும் பொருட்டுத் தங்களை எவ்வாறு தயார் செய்துகொள்ள வேண்டும் என்று இன்றைய இளம் கவிஞர்கள் என்னைப் பார்த்துக் கேட்கும்போது நான் விடை கூறுவதற்குப் பதில் புன்னகை புரிகிறேன். கவிதைகள் எழுதுவது பற்றிக் கூறப்படும் எந்த அறிவுரையும் விரும்பத்தக்கது அல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் பலரும் கவிதை எழுதத் தொடங்குகின்றனர். பின், பருவகாலம் முடிந்த பூக்கள்போல் அவர்களில் பலரும் உதிர்ந்துவிடுகின்றனர். ஆனால் வார்த்தைகளின் தந்திர வசீகரத்தால் ஆட்டிப்படைக்கப்படுகிறவன் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பான். அவனால் எழுதாமல் இருக்க முடியாது. கட்டுரை, கதை, அரசியல் துண்டுப்பிரசுரம், சமூக ஆராய்ச்சி இவற்றிற்குப் பதிலாக எவன் ஒருவனுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கவிதையை நாடவேண்டி இருக்கிறதோ அவன் அடிப்படையாக வார்த்தைகளின் அழகைப் பூஜிப்பவன். ஆனால் ஒருவன் வார்த்தைகளின் ஓசைகளில் சிறையுண்டுபோனால் அவன் கவிதையை உருவாக்குவதில்லை. அப்போது வார்த்தைகளின் விளையாட்டாக அது உருமாறிவிடுகிறது. வெறும் அருவம் அல்ல கவிதை. எவ்வளவு சுருக்கமாக இருப்பினும், எவ்வளவு குறியீட்டுப் பாங்காக அதன் மொழி இருப்பினும், தான் வாழும் காலத்தைப் பற்றியும், தேசத்தைப் பற்றியுமான ஒரு கவிஞனின் பார்வையை ஒரு கவிதை முன்வைக்கிறது. ஒரு சமூகத்தில் மாறி மாறி நிகழும் சாட்சிகளிடையே, மனசாட்சியின் பங்கைக் கவிஞன் ஒருவனாலேயே உருவாக்க முடியும். இந்த நூற்றாண்டின் சரித்திரத்தை, வரவிருக்கும் காலம் எழுத முற்படும்போது, நம்பத் தகுந்த சாட்சியாகக் கவிதை மட்டுமே வந்து நிற்கும்.

இருப்பினும், தன் வாழ்நாள் பூராவும் கவிஞனின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கேள்வி ஒன்று உண்டு. இன்று வரையிலும், மேலான கவிதையின் ஒரு வரியையேனும் எழுதுவதில் தான் வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதுதான் அது.

சுனில் கங்கோபாத்யாய

வங்காளக் கவி, நாவலாசிரியர்  பி.1934

***

கடிவாளத்தை

சிந்தனை பற்றும் போது

மொழி

சாதுவாக விரையும் போது

கவிதையின் பிறப்பு நிகழ்கிறது...

கமலா தாஸ்

ஆங்கிலப் பெண் கவி.

மாதவிக்குட்டி என்ற பெயரில் 

மலையாளத்திலும் எழுதி வருகிறார். பி.1934

***

ஒரு நல்ல கவிதையை வரையறுக்க இயலாது. ஏனெனில் நல்ல கவிதைக்கான வரையறுப்பு என்று ஒன்றும் இல்லை. ஆனால் வாழக்கையின் ஆழமான அனுபவத்தின் சாராம்சம் போல் ஒருவனின் ஆத்மாவை அது தொடும்போது ஒருவனால் அதை இனம் கண்டுகொள்ள முடியும்.

ஒரு நல்ல கவிதை அதன் செய்தியை நம் மனதில் மின்னலைப் போல் பாய்ச்சுகிறது - ஆழங்காண முடியாத அனுபவம், பரவசம், தனித்துவக் களிப்பு ஆகியவற்றின் செய்தியை.

ஒரு நல்ல கவிதை ஒரு உலகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்கும், மேன்மையிலிருந்து மேன்மை தாண்டியும், காணக் கிடைப்பவையும் காணக் கிடைக்காதவையும், அசைபவையும் அசையாது நிற்பவையும், உயிரும் அஃறிணையும் உடன் வாழும் உலகத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கிறது.

ஒரு நல்ல கவிதை மௌனத்திற்கு மொழியும் அளவுகோலும், மொழிக்கு உருவமும் மணமும், பூடகங்களுக்கு வலுவும், உண்மைக்குக் கொடியும், வெற்றுச் சொற்களுக்கு அழகும் தருகிறது.

ஒரு நல்ல கவிதை தொனிகளின் நிரந்தரம் கொண்டது. அசைய அசையத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துவது. நிமிஷத்திக்கு அது நித்தியத்துவம் அளிக்கிறது. அது அறிவிற்கும் இதயத்திற்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது. வார்த்தைக்கும், இசைக்கும், ஓசைக்கும் அது தெய்வப் பதவியை அளிக்கிறது.

ஒரு நல்ல கவிதை விளக்க முடியாத ஒரு பேரனுபவம்.

நிர்மல்பிரபா பர்தோலாய்

அஸ்ஸாமிய பெண் கவி. பி. 1933

***

நல்ல கவிதை என்று ஒன்று இல்லை என அறிவித்து ஒருவன் இக்கேள்வியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட முடியுமா? அவ்வாறு ஒருவன் உண்மையாகவே உணர்ந்தான் என்றால் அப்படிச் செய்யலாம்தான். ஆனால் நல்ல கவிதைகள் இருக்கின்றன. சந்தேகம் இல்லை. நல்ல கவிதைகளுக்குரிய வரையறைகள் சார்ந்த எண்ணங்களுடன் அவை ஒத்துப் போகாதவை என்பதால் தரமானவையாக அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கலாம். பிடித்து வைக்கப்பட்ட எல்லா வரையறைகளையும் மீறுபவைதான் நல்ல கவிதை என்றுகூடச் சொல்லிவிடலாம். வரையறுக்கப்பட்ட பின்புதானே வரையறை சார்ந்த அளவுகோல்கள் உருவாகின்றன. மேலும் வரையறைகளும் அப்படி ஒன்றும் உறுதியானவையும் அல்ல. நல்ல கவிதை பற்றிய சிந்தனை வழுக்கிக்கொண்டு போகக்கூடியது - அக்கவிதைகளைப் போலவே.

ஒவ்வொரு நல்ல கவிதையும் ஒரு புதிய விடை பெறுதல். வேறு எந்தக் கவிதைக்கும் செல்லுபடி ஆகாத ஒரு புதிய வரையறையை அது உருவாக்குகிறது. எண்ணற்ற கவிதைகளுக்கு ஒரு வரையறை செல்லுபடி ஆகுமென்றால், அது அதிகம் பொதுமைப்பட்டு, உபயோகம் இல்லாமலே போய்விடும். கவிதையில் வரையறைகளைத் தேடுபவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள்.

ஒரு நல்ல கவிதை சுயமானதாக இருக்க வேண்டும் என்று சொல்லலாம். அது ஒரு மோசமான கவிஞனை ஆசை காட்டி ஏமாற்றும். அது ஒரு நல்ல வாசகன் மனத்தில் - சஹிருதயன் மனத்தில் - அதை அவன் கவனிக்கும் முன்னரே விர்ரென்று புகுந்துவிடும்.

சுருங்கக் கூறுவது எனில் ஒரு நல்ல கவிதை நல்ல கவிதையாக இருக்க வேண்டும்.

அய்யப்பப் பணிக்கர்

மலையாளக் கவி. பி. 1936

***

கவிஞன் பொருந்திப் போகாதவன், அவன் உண்மையான கவிஞன் எனில். அத்துடன் அவன் தன் வாசகர்களையும் பொருந்திப் போகாதவர்களாக ஆக்குவதில் சந்தோஷம் அடைகிறான்.

கவிதை ஒரு மன நிர்ப்பந்தத்தின் விளைவு என்று கூறுவது ஒரு சூத்திரம். அந்த மன நிர்ப்பந்தத்தின் குணம் என்ன? எவ்வாறு அதை நான் சமாளிக்கிறேன்? 

இதன் விடை சுருக்கமாக, கவிஞன் ஒட்டி ஒழுகுகிறவர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் தன் சுதந்திரத்தை, தன் ஆளுமையை ஒருங்கிணைத்து வளர்த்துக்கொள்வதன் மூலம் காப்பாற்றிக் கொள்கிறான். தன்னைத் தாண்டி அவன் வளர்வதற்கு முன்னரே இது நிகழ்கிறது. இந்த நேரங்களில்தான் அவன் கவிதைகள் பிறக்கின்றன. என் கவிதை ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்:

என் படிமம் ஒன்றை உருவாக்கி

பின்னர் அதை நான் உடைக்கின்றேன்

அப்போது நீங்கள் கூறுகிறீர்கள்

நான் ஒரு கவிதையை

உருவாக்கி விட்டேனென்று.

தன் அகநிலையைத் தாண்டி வளர்வது என்பது கவிஞன் என்று கூறிக்கொள்பவர்களுக்கு மட்டுமே உரித்தான நிகழ்வு அல்ல என்றே நான் நம்புகிறேன். இது போன்ற அனுபவங்களுக்கு என் சக மனிதர்கள் பலரும் ஆளாகிறார்கள். அவர்கள் எப்போதும் எழுதுவதில்லை என்பதுதான் வித்தியாசம். சிலர் முழு மனிதர்களாக வளர்ந்தும் விடுகின்றனர்; அல்லது வேறு துறைகளைத் தேடிச் செல்கின்றனர். ஒருக்கால் அத்துறைகளில், அவர்கள் எழுத்துத் துறையைவிட அதிகத் தயாரிப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஒரு கவிஞன் எழுதும் போதும் பொருந்திப் போகாதவர்களின் சமூகத்தை விரித்துக்கொண்டே போகிறான். உயிர் வாழ்வதற்காக ஒட்டி ஒழுகுபவர்களின் சமூகத்தில், கவிதை நின்று நிலைக்க, வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

ரெகுவீர் சஹாய்

இந்திக் கவி. பி.1929 

***

சமீபத்தில் முப்பதாண்டு கவிதை எழுத்தின் முடிவில், என் படைப்பு முறைகளைத் திரும்பிப் பார்ப்பது அவசியம் என்று எனக்குத் தோன்றிற்று. இதன் விளைவாகப் பதினைந்து கவிதைகளின் தொடர் வரிசை உருவாயிற்று. கடைசி பதினான்கு வரி கவிதையின் கடைசி இரண்டு வரிகள், எப்போதாவது ஒரு முறை எப்படி ஒரு நல்ல கவிதை நிகழ்கிறது என்பது பற்றிய என் எண்ணத்தைத் தொகுப்பதாக இருக்கிறது.

ஒவ்வொரு கவிதையும் 

நம்பிக்கையின் ஒரு பயிர்

ஆழத்திலிருந்து மேலெழும்

முத்துக்குளிப்போனின் அதிருஷ்டம்

எது நல்ல கவிதை? நம் முன்னோர்கள் கடவுளின் கருத்தாக்கத்தைப் பற்றி நமக்குக் கூற முயன்றபோது, ‘எவை எவை அல்ல’ என்று கூறியதைப் போலத்தான் நாமும் முயல வேண்டி இருக்கிறது.

ஒரு கவிதை கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்யும் நோக்கம் கொண்டதல்ல. கதை கூறவோ, கருத்தாக்கங்களைக் கூறவோ அவை இல்லை. ஒரு விஞ்ஞான விந்நியாசத்தின் தர்க்கமல்ல அதன் தர்க்கம். ஜீரணித்து முடித்துவிட்ட தன் அனுபவங்களை ஒரு கவிஞன் திணிப்பதற்கான அச்சும் அல்ல கவிதை.

அடிப்படையாக, உணர்ச்சியின் தளத்தில் தொழில்படும் தன்மையில், கவிதை வசனத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது.  ஒரு முத்து மாலையில் முத்துக்களை இணைக்கும் சரடு போன்றது கவிஞன் தன் அனுபவத்தைத் தொற்ற வைக்கப் பயன்படுத்தும் தர்க்கம். கவிஞனின் வார்த்தைகளும், படிமங்களும் உருவாக்கும் உணர்வுகளும், பிரதிபலிப்புகளும் இணைந்து அந்தத் தர்க்கம் உருவாகிறது. ஒரு அனுபவத்திற்கு உருவம் தரக் கவிஞன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவே கவிதை. இந்தச் செயல்பாட்டில் எது தன் வாசகனுக்கும் உரிய பங்களிப்பைத் தருகிறதோ அதுதான் நல்ல கவிதை.

முத்துக்குளித்தெடுக்கும் கவிதைகள் அடிக்கடி நிகழ்வதில்லை என்பது வருந்தத்தக்கதுதான். மனதில் நம்பிக்கையுடன் ஆழ்கடலில் மீண்டும் மீண்டும் மூழ்குவதைத் தவிரக் கவிஞன் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.

ராமசந்திர சர்மா

கன்னடக் கவி. பி.1925

***

ஒரு நல்ல கவிதையை வரையறுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் முடியவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நல்ல மனிதனின் முன்னால் நிற்கும்போது அவனுடைய நற்குணத்தை நாம் உணருவதைப் போலவே படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ ஒரு நல்ல கவிதையை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். ஒரு நல்ல கவிதை ருசி சார்ந்த விஷயமும்கூட. அறிவும் உணர்வும் கொண்ட பண்பட்ட மனிதனின் ருசி.

ஒரு நல்ல கவிதையை வரையறுக்க இயலாது என்றாலும் கூட ஒரு நல்ல கவிதையை உருவாக்கும் சில குணங்கள் பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியும். மிக அதிகமானவற்றை மிகக் குறைந்த வார்த்தைகளில் வெளியிடுவதால் இலக்கியத்தில் ஆகப் பெரிய உருவம் கவிதைதான் என்று சொல்வேன். ஒரு நல்ல கவிதை ஆழ்ந்த அர்த்தம் கொண்டிருக்க வேண்டும். சுருங்கக் கூறலும், நேர்த்தியும் கொண்டிருக்க வேண்டும். அதன் வார்த்தைகளின் கூட்டுத் தொகையைவிட மிக அதிகம் அது சொல்ல வேண்டும்.

வார்த்தைகள் நடனம் புரியும்போது கவிதைகள் பிறக்கின்றன. ஒரு நல்ல கவிதை இசையும் ஒத்திசைவும் கொண்டதாக இருக்க வேண்டும். மந்திரம்போல் இருக்க வேண்டும் அது. ஆதி ஓசையில் முழு உடலும் அதிரும் உச்சாடனமாக இருக்க வேண்டும். கலை வெளியீட்டின் தெய்வீகச் சக்தியாக, மிக வலுவான ஊடகமாக நிற்பவை வார்தைகள். அவை ஓசையாகவும், நிறமாகவும், சிந்தனையாகவும், உணர்வாகவும், காட்சிப் புலனாகவும் இருக்கின்றன. இந்தக் குணங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் ஒரு நல்ல கவிதை. அது உங்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். வண்ணப் படிமங்களை அது உங்கள் மனக்கண் முன் உருவாக்க வேண்டும். உங்கள் மனதை மேலெடுத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கையின் செழுமையையும் அழகையும் வெளிப்படுத்தக்கூடியவையாக அவை இருக்க வேண்டும். அது பாதிப்புக்கு ஆட்பட்டது மட்டுமல்ல; ஊக்கத்தை அளிக்கக்கூடியதும் ஆகும்.

எம்.ஆர். சர்தேசாய்

கொங்கணிக் கவி. பி.1925

***

பரவலாகத் தெரிய வந்ததும், எல்லோரும் அறிந்திருப்பதுமான சூத்திரம் ஒன்று உண்டு. கவிதையில் உருவமும் உள்ளடக்கமும் வேறுபட்டு நிற்கக் கூடாது என்பதுதான் அது. வாசகனுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிய வேண்டும். நல்லதாகவோ, மோசமாகவோ, பலவீனமாகவோ, உறுதி யாகவோ, ஏதோ ஒன்று எடுத்து உரைக்கப்படுகிறது என்ற தோற்றம் தரக் கூடாது. மற்றொரு உருவத்தில் இதனை அளித்திருக்க முடியாது என்றும் தோன்ற வேண்டும். இதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை என்றாலும் அவ்வாறு தோன்ற வேண்டும்.

உள்ளடக்கமும் உருவமும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றால் தொடர்ந்து பல கேள்விகள் முளைக்கின்றன. உதாரணமாகப் படைப்பாளியின் உத்தியினால் உருவத்தில் பல ஊனங்களும் பலவீனங்களும் இருக்கலாம். அவற்றைச் சமன் செய்துகொண்டுபோகும் வேறு கூறுகளும் கவிதையில் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் உருவ பலவீனங்கள் - நாம் அவற்றைச் சுட்டிக்காட்டக் கூடுமென்றாலும் - அவற்றால் நாம் பாதிக்கப்படாமல்  இருக்கும் அளவுக்குக் கவிதையில் கூறப்பட்டவை முக்கியத்துவம் பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஒத்திசைவு பற்றிக் கூறுவதென்றால், அது மிகுந்த ஒருங்கிணைந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும். வார்த்தை வளம் சார்ந்தும் இதைச் சொல்லலாம். உதாரணமாக, சொல்ல வந்த விஷயம் எளிமையாக இருக்க, வார்த்தைகள் அலங்காரமானவையாக இருக்குமென்றால் - நிறைய இளம் கவிஞர்கள் விஷயத்தில் இவ்வாறு நேருகிறது; எளிய விஷயங்களைச் சிக்கலான வழியில் கூறுவது மோஸ்தராகக்கூடக் கருதப்படுகிறது - நான் என்னளவில் இதை ஒரு சிறந்த கவிதையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். கவிதையின் ஊற்றுக்கண் உணர்ச்சி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு தத்துவக் கருத்தையோ அல்லது ஒரு அரசியல் கருத்தையோ அல்லது தனிப்பட்ட உறவையோ இவற்றில் உணர்ச்சிகள் உறவாட இல்லையென்றால் எவரும் அதைக் கவிதையாக எழுதப்போவதில்லை. அப்படி எழுதினால் கவிதை எழுதியதற்கான உந்துதல் பலவீனமாகவே இருக்கும்.

குறியீட்டையும் படிவத்தையும் அலங்காரப் பொருட்களாக நான் கருதவில்லை. இவை கவிஞனின் குரலை வெளிப்படுத்துவதோடு கவிதையின் தவிர்க்க முடியாத பகுதியாகவும் இருக்க வேண்டும். படிமங்களாகவும் குறியீடுகளாகவும் நிறைய வார்த்தைகள் இருக்கும் வகையைச் சேர்ந்த கவிஞன் என்றால் அவனுடைய வெளியீட்டுப் பாங்காக அவற்றைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் வேறு சில கவிஞர்கள் குறியீடு களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கும் விமர்சகர்கள் அல்லது வாசகர்கள் பார்வையில் தன் கவிதையின் தரத்தைத் தூக்குவதற்காகக் குறியீடுகளைத் திணிப்பார்கள். குறியீட்டுயியல் என்று கூறும்போதே நல்ல குறியீட்டுயியல் என்று தீர்மானித்துக் கொண்டுவிடுகிறார்கள். அப்படி அமைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மதிப்பீடுகள் சார்ந்த அளவுகோல்கள் உள்ளன. பொதுவாக இவை கற்றுத்தரப்படுகின்றன; விவாதிக் கப்படுகின்றன; கற்பிக்கப்படுகின்றன. இவ்விஷயங்கள் சார்ந்து ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒன்றும் இல்லை.

லட்சியபூர்வமான கவிதைகள் பற்றி நான் யோசிப்பது இல்லை. ஏனெனில் வெவ்வேறு மட்டங்களில் கவிதைகள் நன்றாக இருக்கலாம். ஒரு சிறிய கிண்டல் கவிதை நன்றாக இருக்கலாம். அதன் மதிப்பை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் எந்த மட்டத்தில் அது இயங்குகிறதோ அந்த மட்டத்தில் வைத்துத்தான் நாம் அதை மதிப்பிட வேண்டும். அந்த மட்டம் திருப்திகரமாக இருந்தால் அது ஒரு நல்ல கவிதை, என்னைப் பொருத்தவரையில், யாரேனும் ஒருவர் அதைப் பெரிய கவிதை என்று என்னிடம் சொன்னால் ‘இல்லை’ என்பேன். ஆகப் பெரியவை எந்த மட்டத்தில் இயங்குகின்றன என்பதும் எனக்குத் தெரியும்.

நிசிம் இசக்கியேல்

ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவி பி.1924

***

அறிவுபூர்வமான தீவிரமும், உணர்ச்சிபூர்வமான தீவிரமும் எங்கு கூடி முயங்குகிறதோ அங்கு ஒரு கவிதை உயிர் கொள்கிறது என்பது என் அபிப்பிராயம். மனமும், இதயமும், ஆத்மாவும் இணைகின்றன. ஒரு நல்ல கவிதையின் உருவாக்கத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த உருதுக் கவி முஸ்ஸஃபர் ஷா தன்னுடைய இரட்டை வரிப் பாடலொன்றில் கூறுகிறார்:

சுடர் விடும் நெருப்பென உண்மையை

நீ அறிந்து கொண்டாய் எனில்

ஏந்து அதனை நாவில் களிப்புடன்.

இதை ஒரு நல்ல கவிதை என்று நான் அழைப்பேன். நெருப்பின் தணியாத தணல் மேற்கொண்ட தவத்திலிருந்து பிறந்த வரிகள்.

இர்வின் வாலஸோ அல்லது வேறுயாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். பலருடைய அனுபவமாகவும் இது இருக்கிறது. ‘உத்தியில் கைதேர்ந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சொல்ல ஒன்றும் இராது. அவர்களால் எதையும் சாதிக்க இயலாது. உள்ளே ஒன்றும் இல்லாதபோது எப்படி அவர்கள் தேடிக்கொள்ள முடியும். நிறையச் சொல்ல இருக்கும்; ஆனால் செம்மையாகச் சொல்லத் துணைபோகும் உத்தி இராது. இவர்கள் மற்றொரு வகை. இவர்கள்மீது சிறிது நம்பிக்கை கொள்ளலாம். ஏனெனில் உத்தி என்பது முயற்சியால் கற்றுக்கொள்ளக்கூடியது என்பதால்.’

உள்ளடக்கம் இருக்கும்போதுதான் உத்தியின் தேவையே முளைக்கிறது. உள்ளடக்கத்திற்கு மாறாக உத்திக்கு, அதிக அழுத்தம் இந்நாட்களில் தரப்படுகிறது. நம் வாழ்வும் உள்ளடக்கம் இல்லாதுபோனதே இதற்குக் காரணம். நாம் வாழும் முறையிலும் நம் பார்வையிலும்கூட உள்ளடக்கம் இல்லாது போயிற்று. அதனால்தான் நம் எழுத்திலும் சாரம் இல்லாமல் போயிற்று. வார்த்தைகள் அவற்றின் வலுவை இழந்தவைபோல் காட்சியளிக்கின்றன. ஏதோ ஒரு குறை நம்மிடம் தோன்றிவிட்டது. நம் வார்த்தைகளில் ஒளியும் இல்லை; நிழலும் இல்லை. 

உத்தி என்றால் என்ன? நமக்குச் சொல்ல இருக்கிறது. அதற்குச் சொல்லும் முறை ஒன்று வேண்டும். உத்தி என்றால் ஒரு விஷயத்தை எப்படிச் சொல்வது என்பதுதான். அதன் முறைதான் ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது. மனதிற் குள்ளும் இதயத்திற்குள்ளும் நேரடியாகப் போகும்படி, ஒருவனை ஸ்பரிசிக்கும்படி, மொழிமீது முழு ஆற்றலுடனும், தீவிரத் துடனும், புதிய பதச் சேர்க்கைகளில் ஒரு எழுத்தாளனால் வெளியிட முடிந்தால் அதுதான் கவிதை. இல்லாதவரையிலும் வார்த்தைகள் சூனியங்களாக, அறிவுரைகளாக மிஞ்சும். வார்த்தைகள் கவிதைகளாக நம் உணர்ச்சியைத் தொட வேண்டும். நம் அறிவையும் தர்க்க புத்தியையும்கூடத் தொட வேண்டும்.

அம்ரிதா ப்ரீதம்

பஞ்சாபிப் பெண் கவி  பி.1919

***

எனக்கு ஒரு கவிதை அசலானதாகவும் மனித ஜீவன்போல் ஒருங்கிணைந்தும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு உடல் இருக்க வேண்டும். அதன் பல்வேறு அங்கங்களும் அந்தந்த இடங்களில் அந்தந்த அளவில் இருக்க வேண்டும். இவை மட்டும் போதாது; அதற்கு ஒரு மனமும் இருக்க வேண்டும். அதற்கே உரித்தான ஒரு உள் வாழ்க்கையும் இருக்க வேண்டும். மனித ஜீவன் எவ்வளவு அசலோ அவ்வளவு அசலாக அது இருக்க வேண்டும். மறைபொருள் என்பது ஒவ்வொன்றினுடையவும் ஒரு பகுதியாக இருக்கிறது. உயிர் மூச்சு எங்கிருந்து, எவ்வாறு புகுந்தது என்பதைக் கூறுவது கடினம். அதைப் போல் ஒரு கவிதை தயாரிப்பாக இல்லாமல், உண்மையாக எவ்வாறு உருவாகிறது என்பதைக் கூறுவதும் கடினம்.

ஒரு கவிதை அசலாக இருக்கும்போது மற்றொன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டும் இருக்கிறது. அது தனியானது, தனித்துவம் கொண்டது. உள்ளடக்கத்தோடும் பொருளோடும் இணைந்து அசையும் ஒத்திசைவின் மூலம் ஒரு கவிதைக்குத் தனித்தன்மை ஏற்படுகிறது. இந்த ஒத்திசைவு கவிதைக்கே உரித்தானது. வார்த்தைகளின் ஏற்றமும் இறக்கமும் அது. வார்த்தைகளுக்கு ஓசைகள் உள்ளன. ஆனால் இசை சார்ந்த ஓசைகளை அல்ல நான் கவிதைகளில் வேண்டுவது. இசை ஒரு கவிதையிலிருந்து பலவற்றையும் வெளியே தள்ளிவிடுகிறது. உயிர்மூச்சு இந்த ஒத்திசைவின் வழியாகத்தான் கவிதைக்குள் நுழைகிறது. அர்த்தத்தைத் தீர்மானிக்கும் ஒத்திசைவுதான் கவிதையை வாசிக்கும்போது களிப்பைத் தருகிறது. இந்த ஒத்திசைவுதான் வசனத்தில் இருந்து கவிதையைப் பிரித்துக் காட்டுகிறது. நுட்பமான இந்த ஓசைதான் கவிதையின் சாரம். சிறிது இசைக்கு இடம் தரும் பாங்கு அதில் இருக்கலாம். கவிதை அசலானதாக இருந்து, இட்டுக் கெட்டியதாக இல்லாமல் இருக்கும்போது சில சமயம் சிறிது இசைக்கும் இது இடம் தரலாம். வார்த்தைகளின் ஓசைகளை சரிவரப் பயன்படுத்தும்போது, மொழியின் முழு ஆற்றலையும் பயன் படுத்தும்போது, அதில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போது கவிதை படிக்கும் இன்பத்தைத் தருகிறது. ஓசையின் அசைவு கவிதையின் பொருளுக்குச் செழுமை ஊட்டவில்லை என்றால் அதைக் கவிதை அல்ல என்று சொல்லிவிடலாம். அது இறந்துபோன ஒன்று. வெறும் சடலம், அதற்கு வெளி உறுப்புகள் இருக்கலாம். ஆனால் உயிர் இல்லை.

கவிதை தீவிரமானதும், சிந்தனையைத் துண்டுவதுமாக இருந்தால் கவிதையின் பொருள் இவ்வாறு உருவாக்கம் பெறும்போது அதன் உள்ளடக்கம் நம் அனுபவமாக மாறுகிறது. இல்லாதவரையிலும் அது மூளை லகான் பிடிக்கும் வெறும் உணர்ச்சிப் பெருக்கு. அதில் உணர்ச்சி மட்டுமே இருக்கு மென்றால் அது ஒரு மதிகெட்ட பொருள். மதிகெட்ட கவிதை அது.

ஒரு கவிதை, அது தனித்துவம் மிகுந்த பொருள் என்றாலும் அதே நேரத்தில் அது சமூகக் விளைவும்கூட. மொழியால் ஆக்கப்பட்டது என்பதாலேயே அது சமூக காரியம்தான். தனி மனிதனின் உணர்வையோ அனுபவத்தையோ சமூக மாக்கும் முயற்சிதான் உண்மையில் கவிதை. சமூகப் பேச்சு மொழியில் இருந்து கவிதைக்கு ஏற்ற மொழி உருப்பெற்று வருகிறது. இது உருவகம் மூலமோ இலக்கிய அணிகள் மூலமோ படைக்கப்படுகிறது. ஆகவே கவிதை, வசனம்போல் அல்லாமல் தொனிகள் மூலம்  பல்வேறு தளங்களில் கூடும் அர்த்தங்கள் மூலமும் செழுமை பெறுகிறது. மிகக் குறைந்த வார்த்தைகளில் மிக அதிகம் சொல்வதற்கான முயற்சிதான் கவிதை. ஆக அது ஒரு சமூகக் காரியம். தனி மனிதனின் காரியமும். ஒவ்வொன்றும் மற்றொன்றால் பாதிக்கப்படுகிறது. இதுகாறும் நான் கூறியவையெல்லாம், ஒருக்கால், விஷயத்திற்கு அப்பாற் பட்டவையாகக்கூட இருக்கலாம். முடிவாக ஆராயும்போது ஒரு நல்ல கவிதை நல்ல கவிதையாக இருக்க வேண்டும். படிக்கும்போது நாம் அதை இனம் கண்டுகொள்கிறோம்.  

கோபாலகிருஷ்ண அடிகா

கன்னடக் கவி  பி.1918

***

‘மோசமான கவிதை’ என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என் நம்பிக்கை. நமக்குக் கவிதைகள் இருக்கின்றன. மிக அபூர்வமாக ஒரு பெரிய கவிதை பிறக்கிறது. செய்யுள் முயற்சிகளும் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றை வேறு வகை யானவையாகக் கருதுகிறேன். கவிதை என்பது அடிப்படையில் வார்த்தைகள். ஓசையின் மனத்தையும், நுட்பங்களையும் மொழியின் குரலையும் அது பயன்படுத்திக்கொள்கிறது. கவிஞனின் கவலைகளிலிருந்தும், காலத்தைப் பற்றிய அவனது கவலைகளிலிருந்தும் கவிதைக்கான விவேகம் கூடுகிறது. அது அசலாக இருக்க அனுபவம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். பெரிய கவிதை எல்லாக் காலங்களிலும் சலனத்தை ஏற்படுத்துவது தற்செயல் விளைவு அல்ல. கவிதை காலத்தின் சோதனையைத் தாண்டக்கூடியது. இருப்பினும் பொதுவாக அவை மனிதர் களைப் பற்றியும், அவர்களுடைய வருத்தங்கள் பற்றியும், பயங்கள் பற்றியும், சந்தோஷங்கள் பற்றியும், ஆசைகள் பற்றியும் பேசு கின்றன. நூற்றாண்டுகளில் இந்த அடிப்படை மாறிவிடவில்லை.

பெரிய கவிஞனின் நிகழ்வுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். ஏனெனில் அது நிகழ மட்டுமே முடியும்.

தினநாத் நதிம்

காஷ்மீரிக் கவி  1914

***

கவிதை வரையறைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும் நல்ல கவிதையின் ஒரு சில குணங்களைத் தொட்டுக்காட்ட முடியும்.

ஒரு நல்ல கவிதைக்கு, அது எந்த உருவத்தில் இருப்பினும் சரி, உயிர் இருக்க வேண்டும். அதில் ஆற்றல் குமிழியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆற்றல் கவிஞனின் மனதில் இருந்து தோன்றுகிறது. இதை விளக்க தாமஸ்ஹூட் என்ற கவிஞனின் ‘பெரும் மூச்சுக்களின் பாலம்’ என்ற கவிதை ஒரு நல்ல உதாரணம்: ‘மிருதுவாக அவளை எடு, கவனத்துடன் அவளைத் தூக்கு.’ வேகமான வெளிப்பாடு. கவர்ச்சிகரமாகவும் அமைந்துவிட்டது.

அழகியல் ரீதியான திருப்தியையும் ஒரு நல்ல கவிதை அளிக்க வேண்டும். வெள்ளி மீன்களும் நீல வானமும்தான் அழகானவை என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒரு கவிதையில் கூறப்படும்போது ஒரு இருட்டறையும் அழகானதாக இருக்கலாம். அழகு நீக்கமற நிறைந்திருக்கிறது, கடவுளைப் போல்.

பொருத்தமான சொல்லாக்கமும் ஒரு நல்ல கவிதையின் தவிர்க்க இயலாத குணமாகும். கவிதை சாரத்தின் ஒரே வாகனம் சொல்லாக்கம்தான். சொல்லாக்கம் பல வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. குறியீடுகளாக, படிமங்களாக, கனம் பொருந்திய வார்த்தைகளாக, வார்த்தைகளின் வரிசைகளாக. ஒரு உதாரணம் தரலாம். 

பல பூக்கள் பூக்கின்றன

பார்க்காதவர்கள் நாணமுறும்படி

அவற்றின் இனிப்பனைத்தும் வீண்

அந்த பாலைவனக் காற்றில்.

கவிதை மொழிக்குரிய மொழியீட்டுப் பாங்குகளையும், சொற்றொடர்களையும் ஒரு நல்ல கவிதை பயன்படுத்திக் கொள்கிறது. இல்லாதவரையிலும் நாம் விரும்பும்படி அது இராது. இதனால்தான் கவிதையின் மொழிபெயர்ப்பு, அதன் மூலத்தின் அளவிற்குச் சிறப்பாக இல்லாமல் போகிறது.

ஜி.டி. தேஷ்பாண்டே

மராத்திக் கவி  பி.1910

***

என் அபிப்பிராயத்தில் ஒரு நல்ல கவிதை என்பது பொருளும் ஓசையும் சுமுகமாக இணைந்திருப்பதுதான். நடைமுறையில் ஓசை பொருளைவிடச் சற்றுத் தூக்கலாக இருக்கலாம். அல்லது நேர்மாறியும் இருக்கலாம். ஆனால் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் அளிப்பதுதான் மிகச் சரியானது. உடலுக்கு ஆத்மா எதுவோ அதுதான் கவிதைக்கு ஓசை. சமஸ்கிருதக் கவிஞர்கள் கவிதையை ஒரு காதலன் காதலியிடம் விரும்பும் வனப்பு மிகுந்த உடலுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். ஆனால் உருவ அழகு உள்ளடக்கச் சாராம்சம் இல்லாததாக இருக்கக் கூடாது. கவிதையில் கவிஞனின் பார்வை இருக்க வேண்டும். செய்தியோ, இன்ப துன்பங்கள் சார்ந்த அனுபவமோ, மனத்தோற்றமோ, விநோதமான கற்பனையோ, விமர்சனமோ, கதைப் பாங்கோ, விவரிப்போ கவிதையில் இருக்க வேண்டும். வகைகள்தான் வாழ்கையின் ஜீவன். வகைகளால் இலக்கியம் செழுமை பெறுகிறது. கவிதை அறநோக்குக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. சமூகத்தின் ரட்சகர்கள் அல்லர் கவிஞர்கள். ஒரு சிவப்பு ரோஜா நல்ல மணம் தருவதைப் போலவோ, பழுத்த மாம்பழம் நல்ல ருசியைத் தருவதைப்  போலவோ, ஒரு கவிதை நல்லதாக இருக்க வேண்டும்.


அன்னதா சங்கர் ரே

வங்காளக் கவி, நாவலாசிரியர் பி.1904

***

(இண்டியன் லிட்டரேச்சர் ஆங்கில இதழ், மார்ச் - ஏப்ரல்1987)

தமிழில்: அவதானி

(காலசுவடு இதழில் வெளிவந்தது, நன்றி: காலசுவடு)

***


Share:

காலம், கவிதை - இரண்டு உரையாடல்கள் - வே.நி. சூர்யா

1. காலம்

"எங்கு தனிமை முடிவடைகிறதோ, அங்கே சந்தை ஆரம்பிக்கிறது. எங்கே சந்தை ஆரம்பிக்கிறதோ, அங்கே மகத்தான நடிகர்களின் பேரோசையும் விஷப்பூச்சிகளின் ரீங்காரமும் ஆரம்பிக்கிறது."

-நீட்ஷே


நபர்-1: தார்க்கோவ்ஸ்கியின் சாக்ரிபைஸ் (Sacrifice) திரைப்படம் பார்த்திருக்கிறாயா? நேற்று மறுமுறை பார்த்தேன். “மகத்தான கலை மேதைகள் என்று இப்போது யாருமில்லை. இதுதான் உலகத் தீமைகளுக்குக் காரணம்” என்று ஒரு வசனம் இடம் பெறுகிறது.  அன்று இரவு புதிதாக வாங்கி வந்த சில கவிதைத்தொகுதிகளைப் புரட்ட ஆரம்பித்தேன். மறுபடியும் உலகளவில் கவிதை தனது ஆதாரமான வலுவை இழந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வை அடைந்தேன். உனக்கும் அப்படி ஏதாவது தோன்றியதுண்டா?

நபர் 2: பார்த்ததில்லை. மனதில் வைத்துக் கொள்கிறேன். நான் கவிதைகளை வாசிக்கிறேன்தான். ஆனால் அதிகம் வேறு எது குறித்தும் யோசித்துச் சிக்கலாக்கிக் கொள்வதில்லை. அ-புனைவுகளைத்தான் மிக அதிகமாக வாசிக்கிறேன். ஆமாம், இந்தக் காலகட்டமே இவ்விதம்தான் உள்ளது. இன்றைய உலகத்தைக் குறித்து என்ன சொல்வது? 

நபர் 1: நாம் நிஜமாக எதையும் பார்ப்பதேயில்லை. சுமார்ட் போன் திரையைப் போல இந்த உலகத்தையும் ஸ்க்ரோல் செய்து விடுகிறோம். பயன்பாடு சார்ந்து சிந்திப்பதும் அதிகரித்து விட்டிருக்கிறது. அப்புறம் நாம் ஒய்வில்லாத நுகர்வோராக விளங்குகிறோம். நாம் எதையும் அவதானித்துப் பார்க்காததால் பூமிக்கும் நமக்குமான உறவு பலவீனப்பட்டுள்ளது. கூடவே வாழ்க்கையின் வேகமும் உயர்ந்துள்ளது. அது அனுபவங்களிலும் எதிரொலிக்கிறது. ஆகவே சாரம் நம்முள் இறங்குவதில்லை. மேலோட்டமான தளமே இதமளிப்பதாக உள்ளது. இப்போது நாம் வியப்பதில்லை, மாறாக ஆழமாகச் சந்தேகிக்கிறோம். அப்புறம் மற்றமை மீதான கரிசனமின்மை, சுயநலத்தின் பொருட்டு உண்டாகும் செவி கேளாமை, நுகர்ந்து நுகர்ந்து தன்னழிவை இன்பத்துக்காக நுகரும் அவலம், இன்றை எதிர்கொள்ளத் திராணியற்றுக் கடந்த காலத்திற்குத் திரும்புவதற்கான பிரேமை, தகவல்களின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுதல், அழகிலிருந்தும் உண்மையிலிருந்தும் அந்நியப்படுதல், தீராத பறதி (பதற்றம்), அதீத செயல்வெறி. இவைதான் ஏறத்தாழ இக்காலகட்டத்தின் குணங்கள் என்று தோன்றுகிறது.

நபர் 2: ஏறத்தாழ நீ சொல்வது உண்மைதான். "நாம் மாபெரும் அக்கறையின்மையின் காலத்தில் வாழ்கிறோம். இன்றைக்குத் தீவிரவாதிகள் மட்டுமே கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்" என்று போலந்து கவிஞர் ஆடம் ஜகாயெவ்ஸ்கியின் (Adam Zagajewski) கட்டுரையொன்றில் ஒரு வரியை முன்பு வாசித்தது நினைவுக்கு வருகிறது. டிப்பிரசன் என்று ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு யாரேனும் கூறியிருப்பார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன். இப்போது ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் 'டிப்பிரஸன்' என்ற வார்த்தையை உபயோகிப்பதைப் பார்க்கிறேன். விளையாட்டுகளற்ற அபார்ட்மென்ட் குழந்தைகளை, எனது தந்தையைப்போலக் கறாறாகப் பேசும் சிறுவர்களை, தொழில்நுட்பத்தால் உறிஞ்சப்படுகிற குழந்தைப் பருவத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு காலகட்டமும் வரலாற்றில் இப்படித்தானே இருந்திருக்கிறது.

நபர் 1: மறுக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டமும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஒரே வித்தியாசம். அன்று, காலகட்டத்தின் நாடித்துடிப்பை உணர முடிந்த மனங்கள் நமக்கு இருந்தது. இன்று அவற்றை இழந்து விட்டோம் என்பதுதான் பிரச்சினையே. நாம் மிகமிக அந்தரங்கமான தன்மோக நபர்களாக மாறியிருக்கிறோம். மற்றவர்களையும் காலத்தையும் உணரும் தருணங்கள் வெகு குறைவு. நாம் உலகத்தை அவதானித்துக் காணும் கலையைத் தொலைத்து விட்டோம். ஆகவே அந்தகர்களாக உள்ளோம். அப்புறம் அறிவியல், தொழில்நுட்பம் போன்றவை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் செளகர்யத்தன்மை நமது அகங்காரத்தைச் செறிவாக்கியுள்ளது. எதுவும் நம்முள் நுழைவதில்லை. ஆகவே நமக்குச் செவியும் கேட்பதில்லை; நாம் திறப்பதேயில்லை; இது முன்பிருந்த காலகட்டங்களில் நிலவாத ஒரு சூழ்நிலை.

நபர் 2: ஓ, புரிகிறது. சரி. மகத்தான கலைமேதைகள் இல்லை என்பதுதான் உலகின் தற்போதைய தீமைகளுக்குக் காரணமா? இரண்டுக்கும் என்ன தொடர்பு? விளக்க முடியுமா?

நபர் 1: நிச்சயமாக. ஒருவகையில் கலை, இலக்கியம் மற்றும் தத்துவம்தான் வரலாற்றுக்கும் கலாச்சாரத்துக்கும் கருத்துகளையும் உருவகங்களையும் உருவாக்கியளிக்கும் பணியைச் செய்து வருகின்றன, சற்று மறைமுகமான வழியில். உதாரணத்திற்கு நாம் மேற்கத்திய இசை வரலாற்றைப் பார்க்கலாம். ஆரம்பங்களில் நாட்டார் தன்மையுடன் திகழ்ந்து, பின்னாளில் கடவுளைப் போற்றும் விதமாகப் பக்தி, சரண் போன்ற மனோநிலைகளைக் கிளர்த்தும் இசைக்கோர்வைகளாகப் படைக்கப்பட்டு, பின்னர் தோராயமாக நூறாண்டுகளுக்குப் பிறகு மெதுமெதுவாகக் கடவுள் எனும் உள்ளடக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனிமனிதனின் உணர்ச்சிகள் பிரதானமானதாக மாறி வந்திருப்பதை இசை வரலாற்றில் ஒருவர் அவதானிக்கலாம். கூடவே இம்மாற்றங்களுக்கு இணையாகக் கவிதையிலும் ஏன் சமூக தளங்களிலும் கூட மாற்றங்கள் நடந்திருப்பதைப் பார்க்கலாம். நிலவில் நிஜ விண்கலங்கள் இறங்குவதற்கு முன்பே பொற்கால அறிவியல் புனைவுகளில் நிலாவில் தரையிறங்கும் விண்கலங்களை ஒருவர் பார்க்க முடியும். கலையில் சற்று முன்கூட்டியே அனைத்தும் நிகழ்ந்து விடுகிறது என்கிறேன். 

நபர் 2: நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே?

நபர் 1: சற்று விவரிக்கப் பார்க்கிறேன். தன் காலத்தை முழுவதுமாக உள்வாங்கி எதிர்காலத்தை நோக்கி ஆழமாகப் பேசுகிறவர்களையே நான் கலை மேதை அதாவது Great Master என்கிறேன். அவ்வகையில் மேதைகள் என்பவர்கள் வெறும் ஒரு  தனியிருப்பு அல்ல. ஓர் உடனடி உதாரணத்திற்கு மார்க்ஸும் யூங்கும் நீட்ஷேவும் அவரவர் காலகட்டத்தை மறைமுகமான வகையில் விரிவுபடுத்தியவர்கள் எனலாம். மார்க்ஸ் எல்லாவற்றிற்கும் ஒரு பொருளியல் கோணத்தை வழங்கினார்; யூங் எல்லாவற்றிற்கும் நனவிலி சார்ந்த கோணத்தைக் கொடுத்தார்; நீட்சே அதிகாரம் சார்ந்த காரணத்தை அளித்தார். இம்மூன்று கோணங்களும் அதுவரை அவ்விஷயங்களில் நிலவி வந்த எல்லைகளை எதிர்காலத்தை நோக்கி விரிவுபடுத்திற்று என்று சொல்லலாம். தற்காலத்தில் கவிதையில் உலகளவில் மேதைகள் அருகி விட்டனர் என்று இந்தப் பின்னணியிலிருந்தே கூறுகிறேன்.

நபர் 2: தற்காலத்தில் கவிதையில் ஏன் உலகளவில் பிரம்மாண்டமான கவிதைக்குரல்கள் உருவாகவில்லை ?

நபர் 1: கவனச்சிதறலும் கட்டுக்கடங்காத உற்பத்தியும் மிகப்பெரிய காரணம். அதீத பயன்பாடு சார்ந்து பார்க்கும் கோணமும் அனைத்தையும் அதிகாரமாகச் சிந்திக்கும் போக்கும் இலக்கியத்திற்குள்ளும் பரவலாகி விட்டது. ஜனநாயகத்தன்மையின் பாதக அம்சங்கள், தரம் சார்ந்த அளவுகோல்களையும் விமர்சனத்துறையையும் பலவீனப்படுத்திவிட்டது. நாம் முன்பிருந்ததை விடவும் கூடுதலாக, கலையிலிருந்து அந்நியமாகியிருக்கிறோம். மிக முக்கியமாக, கவிதை Trend சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. அநேக கவிதைகள் வாணவேடிக்கைகள் போலவே இருக்கின்றன. அவை உயரத்திற்குச் செல்கின்றன; ஜொலிக்கின்றன; அப்புறம் மறைந்து விடுகின்றன. இன்று காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.

நபர் 2: காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும்தான் காரணமா? கவிதை பரவலாகவும் ஜனநாயகப்படவும் அவை உதவியிருக்கின்றனதானே?

நபர் 1: பாதித்திருப்பதாகச் சொல்கிறேன். அப்புறம் நாம் அடைந்திருக்கும் செளகரியத்தன்மை குறித்தும் சற்றுப் பேச வேண்டும். நவீனமயமாதல் நம்மைப் பூமியின் மன்னர்களாக முடிசூட்டியிருக்கிறது. அது தங்க மகுடமா முள் மகுடமா என்பது ஒரு தனிக்கேள்வி. அறிவதற்கு அறிவியல், எண்ணியவாறு உலகை மாற்றியமைத்துக்கொள்வதற்குத் தொழில்நுட்பம், சாவை ஒத்திப்போடுவதற்கு மருத்துவம், எண்ணிய கணத்தில் தொடர்புகொள்வதற்குத் தகவல் தொடர்பு என அத்தனை தளங்களிலும் இலகுத்தன்மையை எய்தியிருக்கிறோம். இந்த இலகுத்தன்மையின் வரலாறு இனிமையானது ஒன்றுமில்லை என்பதையும் நினைவுகூர வேண்டும். உருவகரீதியில் கூறவேண்டுமென்றால், எங்கும் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. உடல், மனம் என அத்தனை தளங்களிலும் வறுமையையும் வெறுமையையும் எதிர்கொண்ட, உபகரணங்கள் குறைவான தலைமுறை ஒன்று இருந்திருக்கிறது. அவர்கள் எளிதாக்கி அளித்த பாதையில், அவர்களிடமிருந்த தீவிரத்தன்மையையும் அர்ப்பணிப்பையும் உதறி, கைநிறைய மீம்ஸ்களுடன், “பூமிக்கு எஜமானர்கள் நாம்” எனும் அழகிய கற்பனையினூடே, இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

நபர் 2: இவ்வளவு அவநம்பிக்கை அவசியமா என்று தெரியவில்லை. காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களால் கவிதைக்கு நேர்ந்திருக்கும் பாதிப்புகள் என்ன என்று ஏதும் சொல்லவேயில்லையே?

நபர் 1: அவநம்பிக்கை அல்ல; எனது வருத்தத்தைச் சொல்கிறேன். ஒன்றில் கவனத்துடன்  தரித்து நிற்பதற்கான மனவலுவை மெதுமெதுவாக இழக்கிறோம் என்பது எனக்கு மிகவும் முக்கியமான சிக்கலாகப்படுகிறது. இருபது வினாடி ஒரு காட்சித்துணுக்கு. பிறகு முற்றிலும் அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு காட்சித்துணுக்கு என நம் மின்திரைகளில் காட்சிகள் விழுந்தபடி இருக்கின்றன, அதுவும் நம் ரசனைக்கு ஏற்றவாறு இடையறாது. இது ஒரேமாதிரியான விஷயங்களின் சிறை போலில்லையா? அப்புறம் நமது நினைவாற்றலையும் மெதுமெதுவாக இழக்கிறோம். ஏனெனில் பெரும்பாலும் நினைவாற்றலுக்கு நாம் வேலையே அளிப்பதில்லை. ஒருவகையில் செளகர்யம்தான் எனினும் நினைவூட்டும் வேலையை அலைபேசியிடம் ஒப்படைத்திருக்கிறோம். அலைபேசி மறந்துவிட்டால் நாமும் மறந்து போகிறோம்.  இவை யாவற்றைவிடவும் தீவிரமான பிரச்சினை ஒன்றுண்டு. அது நாம் தகவல்உண்ணிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதுதான். செய்திகள், தொலைக்காட்சிகள், அலைபேசிகள், இணையம் எனப் பல்வேறு வடிவங்களில் நமக்கான ஹோட்டலொன்று இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கி வருகிறது. நமக்கு வரலாறும் தகவல்தான்; மற்றவர்களின் இன்பதுன்பங்களும் தகவல்தான். இது தகவல் தொழில்நுட்பம் நம்முள் ஆழமாக ஏற்படுத்தியிருக்கும் முறிவு. இந்தச் சலனங்கள் யாவும் கவிதையிலும் எதிரொலிக்கின்றன.

நபர் 2: ஆனால் நம் அறிவுச்சேகரத்துக்கான வாய்ப்புகள் பெருகியிருக்கிறதே. நேரம் மிச்சப்பட்டிருக்கிறதே. கூடவே கவிதை ஜனநாயக மயமாகியிருக்கிறதே? இதெல்லாம் தொழில்நுட்பத்தின் பங்களிப்புகள் இல்லையா? 

நபர் 1: பங்களிப்புகள்தான். மறுக்கவில்லை. ஆனால் அதனுடன் நிகழ்ந்திருக்கும் பாதகங்களையும் நாம் சிந்திக்க வேண்டும். அது குறை கூறுதல் ஆகாது; கச்சிதத்திற்கான ஏக்கம். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒரு புதிய விபத்தையும்தான் புதிதாகத் தோற்றுவித்து விடுகின்றன என்பதை எப்படிக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியும்? அறிவுச்சேகரத்துக்கான வாய்ப்பு மிகுந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் நாம் அறிவை வெறும் தகவலாக அல்லவா சேமிக்கிறோம்? புரிந்துகொள்ளலின் பிரதேசத்திற்கு அது வருவதில்லை. மேலும் நமது அறிவு, புத்தக வாசிப்புகளை நாம் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறோமா என்பது கேள்விக்குறிதான். தொழிற்சாலைகளில் நிகழ்வது போலவே நம் தலைவழியே நாம் அறிந்தது எல்லாம் புகையாக வெளியேறி விடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் கவிதை ஜனநாயக மயமாகியிருக்கிறது என்பது சமூகக் கலாச்சாரத்தளத்தில் முக்கியமான மாற்றம். கவிதை பன்மையடைவதற்கும் கட்டற்ற சுதந்திரத்தை எய்துவதற்கும் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது; ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பாதகங்களும் இல்லாமலில்லை. கவிதை உற்பத்தி கட்டற்றுப் பெருகியிருக்கிறது. ஆகவே கவிதைப்புத்தகங்கள் வந்த வேகத்தில் மறதியினுள் செல்கின்றன. அதீத உற்பத்திக்கும் மறதிக்கும் பரவலுக்கும் விமர்சனக் கண்ணோட்டமின்மைக்கும் ஆழ்ந்த தொடர்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். அதீத உற்பத்திச்சூழலில் வாசகரிடத்திலும் படைப்பாளியிடமும் ஒருவிதமான சோர்வைப் படர விட்டிருப்பதையும் நாம் பார்க்கலாம். கவிதையின் உள்ளடக்கமும் வடிவமும் உற்பத்தி வேகத்தில் மீளமீள எழுதப்பட்டுத் தேய்வழக்காக மாறும் அபாயமும் நடந்து வருகிறது.

நபர் 2: அச்சமாகத்தான் உள்ளது. கவிஞர் என்ற பாத்திரத்தைக் குறித்துப் பேசுவோம்.

நபர் 1: கவிஞர் என்று சொல்ல முடிகிறதா என்ன? 

நபர் 2: அப்படிச் சொல்வதில் எனக்குச் சில தயக்கங்கள் உள்ளனதான். கவிஞர் என்ற தொழிற்பெயரின் பரிமாணங்கள் காலத்தில் மிகவும் ஆழமானவை. மொழியின் ஆரம்பத்திலிருந்து கவி என்ற பாத்திரம் தொடர்ந்து வருகிறது என்பதால் அது பெரும்பொறுப்புணர்வின் பாற்பட்டது. கபிலர், மாணிக்கவாசகர், பாரதி போன்றவர்களும் கவிஞர்கள்தாம்; கூடவே இன்று எழுதுபவர்களும் கவிதான் எனும்போது அந்த நீண்ட வரிசையில் ஒரு நபராக நிற்பதைக் குறித்த தன்னறிதல் அத்தியாவசியமானது என்று நினைக்கிறேன்.

நபர் 1: எனக்குக் கவிதை மீது கவிஞர்களே ஆழத்தில் நம்பிக்கை இழந்துவிட்டதான ஒரு தோற்றம் தெரிகிறது. என்ன  சொல்வது? சரி, இருட்டிக்கொண்டு வருகிறது.  நாம் நாளை வேறு விஷயங்களைப் பற்றி உரையாடலாம். இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

***

2. கவிதை

“கவிதையின் நோக்கம் பிரமிக்கத்தக்க சிந்தனையால் நம்மை மயக்க முயல்வது அல்ல. மாறாக, இருப்பின் ஒரு கணத்தை மறக்க முடியாததாகவும் தாங்க முடியாத ஏக்கத்திற்குத் தகுதியானதாகவும் மாற்றுவதேயாகும்.”

மிலன் குந்தேரா

“ஓர் அழகியல் உள்ளுணர்வு மனிதனுள்ளே மிக வேகமாக வளர்கிறது. தான் யார் என்றோ, தன் தேவை என்ன என்றோ முற்றாக உணராமலே, தனக்கு என்ன பிடிக்கவில்லையென்றும் தனக்கு எது பொருந்தவில்லையென்றும் ஒருவன் உள்ளுணர்வால் தெரிந்து கொள்கிறான். மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்கிறேன்: நன்னெறி சார்ந்த பிராணி என்பதற்கு முன்னால், மனிதன் ஓர் அழகியல் பிராணி.”

- ஜோசப் ப்ராட்ஸ்கி

நபர் 2: நாம் கவிதையைப் பற்றிப் பேசலாம். நான் கேட்பது மிகப் புதிய கேள்வி அல்ல எனினும் கேட்கிறேன் எது கவிதை? கவிதையை ஏன் வரையறுக்க முடியவில்லை?

நபர் 1: அதுஒரு புதிர்தான். நாம் அறிந்த சொற்களினூடாக எழுதப்பட்ட ஒன்று என்றாலும்கூட அங்கே எழுதப்பட்டதிலிருந்து எழுதப்படாத ஒன்று எழுகிறது. விளக்கைத் தேய்த்ததும் வெளிவரும் பூதம்போல. முறையாக எழுதப்பட்ட இசைக்குறிப்புகள்தான் ஆனால் இசையனுபவமாக மாறுகையில் ஏதேதோ நிகழ்வதைப்போன்ற ஓர் அனுபவம் என்று கூறலாம். பார்க்கிறவரைப் பொறுத்து, பார்க்கப்படுவதும் மாறுகிறது என்று சொல்வது கவிதைக்கு மிகவும் பொருந்துவது. கவிதைக்கு நிரந்தரமான வரையறையை மானுடத்தால் உருவாக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 

நபர் 2: அப்படியெனில் இதுகாறும் கவிதை குறித்துப் பேசப்பட்ட பேச்சுகளுக்குப் பயனே இல்லையா?

நபர் 1: ஒட்டுமொத்தமாக அப்படிக் கூற முடியாது. கவிதையின் மர்மத்தின்மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சங்கள்தான் அவை. இம்முயற்சிகள் நிகழாது போயிருந்தால் நாம் கவிதையின் விசையைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டிருப்போம். இசைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட சொற்கள், கற்பனை மற்றும் உணர்ச்சியின் துணையுடன் நிகழ்த்தப்படும் அறியப்படாததை நோக்கிய மொழிவழிப்பயணம், மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழியமைப்பு, சொல்லமுடியாத விஷயங்களைக் குறித்த பேச்சு, சிறப்பான வரிசையில் அமைக்கப்பட்ட சிறப்பான சொற்கள், வாழ்க்கை பற்றிய விமர்சனம் என இதுபோல எத்தனைஎத்தனை வரையறுக்கும் முயற்சிகள். பிறகு இருட்டான அறையில் சுவிட்சைத் தேடுவது எப்படி? வெளிச்சம் வருகிறது அல்லது இல்லை என்பதைக்கூட விட்டுவிடுவோம்.

நபர் 2: இன்னும் புதிர் அகலவில்லை. எது கவிதை? எதுதான் கவிதை?

நபர் 1: நோக்கத்தை வைத்து நோக்கத்தை ஏற்றெடுத்துக் கொண்டவரைப் புரிந்துகொள்ள முயல்வது போல நாம் கவிதையின் நோக்கம் என்ன எனக் கேட்டுக்கொள்வதன் மூலம் கவிதை என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ள முடியுமா? ஓர் உடனடி உதாரணத்திற்குச் சிலவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசிப் பார்க்கலாம். “காலத்தை நிறுத்துவதே அனைத்துக் கவிதைகளின் ரகசிய விருப்பம்” என்கிறார் அமெரிக்கக் கவிஞர் சார்லஸ் சிமிக். மறுபக்கம், “மானுடத்தின் ஆச்சரியத்திற்கான சாத்தியங்களை மீட்டெடுப்பதே கவிதையின் நோக்கம்” என்கிறார் ஆக்டேவியோ பாஸ். போலந்து கவிஞரான செஸ்லா மிலோஷ் "வெறும் ஒற்றை நபராய் இருப்பதென்பது எத்தனை கடினம் என்று ஞாபகமூட்டுவதே கவிதையின் நோக்கம்” என்று சுவாரசியமான வகையில் வரையறுக்கிறார், இங்கும் எது கவிதை என விளங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூடவே கவிதையின் நோக்கம் சார்ந்த குழப்பமும்.

நபர் 2: நாம் பேசுவதை வைத்துப் பார்த்தால் ஒரு வகையில் எது கவிதை என்பதற்கும் கவிதையின் நோக்கம் என்ன என்பதற்கும் மிகவும் அகவயமான பதில்களே அதிகமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நபர் 1: அதேதான். அதுதான் நான் சொல்ல வருவதும். ஒவ்வொரு கவிஞரும் கவிதை குறித்து ஒவ்வொன்றைச் சொல்லக் கூடும். வாசகன் கவிதையைக் குறித்து இன்னொன்றைச் சொல்லக் கூடும். இவ்வளவையும் கவிதை ஏற்கிறதா மறுக்கிறதா? ஒரேசமயத்தில் ஏற்கவும் செய்கிறது, மறுக்கவும் செய்கிறது. ஏற்கும்போது கடந்த காலத்திற்கு ஆம் என்கிறது; மறுக்கும்போது எதிர்காலத்திற்கு ஆம் என்கிறது.

நபர் 2: கவிதையின் நோக்கம் போலவே கவிஞரின் நோக்கம் என்று ஒன்று இருக்கிறது இல்லையா? ஏன் கவிதை எழுதுகிறீர்கள்? என்ற வினாவுக்குப் பல்வேறு விதமான பதில்களைப் பார்க்கிறேன். ஒருவர் தனது ஆறுதலுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் எழுதுகிறார். இன்னொருவர் அடிப்படையான வினாக்களால் தூண்டப்பட்டு எழுதுகிறார். மற்றொருவருக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இதுபோல அநேகஅநேக தேர்வுகள்.

நபர் 1: அடையாளத்திற்காக, புகழுக்காக, லெளகீகமாக, பொழுதுபோக்காக என்றுகூட இருக்கிறது. தான் ஏன் எழுதுகிறோம் என்பது மிகமிக அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான ஒரு வினா. திட்டவட்டமாக இல்லையெனினும் தோராயமாகவேனும் அக்கேள்விக்கான பதிலைத் தன் சுயஅனுபவத்தினூடாகவும் வாசிப்பினூடாகவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒருவகையில் கவிதையை ஒருவர் என்னவாக விளங்கிக் கொள்கிறார் என்பது சார்ந்த வினா அது. தன்னைத் தொகுத்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வினாவும்கூட.

நபர் 2: வேறு ஏதோ பேசிக்கொண்டிருக்கிறோம் போல.

நபர் 1: அப்படி அல்ல, இதுவும் அத்தியாவசியமான பேச்சுதான். மா.அரங்கநாதன் தனது கவிதை குறித்த கட்டுரைநூலான பொருளின் பொருள் கவிதையில் சொல்கிறார், எது கவிதை என்பதை நெருங்குவதற்கு எதுவெல்லாம் கவிதை அல்ல என்று சொல்வதே சிறந்த உபாயம் என்று..

நபர் 2: தான் யார் என்று அறிய எதெல்லாம் தானில்லை என விலக்கிக்கொண்டே செல்ல வேண்டும் என அத்வைதத்தில் சொல்லப்படுவதுபோல அல்லவா உள்ளது இது?

நபர் 1: ஏகதேசம் அதுதான். நானைப் போல கவிதையும் இருக்கிறதோ என்னவோ. இப்படியும் சொல்லலாம். கவிதை வாழ்க்கையின் சாயலில் இருக்கிறது. வாழ்க்கையை நம்மால் வரையறுக்க இயலாது இல்லையா? அதுபோலத்தான் கவிதையும்.

நபர் 2: எதெல்லாம் கவிதை அல்ல? இதற்காவது பதில்கள் உண்டா?

நபர் 1: திருகலான வெறும்மொழி கவிதை அல்ல; நீதிபோதனைகளோ, அறிவுரைகளோ கவிதை அல்ல; வாழ்க்கையின் அடிப்படையை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தொடுவதற்குச் சாத்தியமற்றது கவிதை அல்ல.

நபர் 2: வெறும்மொழி ஏன் கவிதை அல்ல என்பதை விளக்க முடியுமா?

நபர் 1: தாராளமாக. முதன்மையாக மொழி கவிதையை மூழ்கடித்து விடுகிறது. கவிதை அம்சம் நதியில் விழுந்த குண்டூசி போலாகி விடுகிறது. வெளிப்பாட்டிற்குக் கவிதையின் மொழி இடைஞ்சலாக இருக்கலாகாது என்பதையே சொல்கிறேன். நம் மொழி அவ்வளவு விரிவான வார்த்தை வங்கித்தன்மைக் கொண்டதுதான். ஆனால் வெறுமனே தனது பண்டிதத்தனத்தை வெளிப்படுத்துவதற்காக மொழி பயன்படுத்தப்படுவதைப் பிழை என்கிறேன். மொழி ஒருவிதமான மந்திரத்தன்மை கொண்ட உபகரணம் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதேயளவுக்குத் தொடர்புறுத்தலுக்காகத்தான் உபகரணமே ஒழிய உபகரணத்திற்காகத் தொடர்புறுத்தல் இல்லை என்பதும் உண்மை என்று கருதுகிறேன். ஒருவேளை அனுபவ வறட்சியை மறைக்கத்தான் மொழி திருகப்படுகிறதா என்றுகூட எனக்குச் சந்தேகமிருக்கிறது. 

நபர் 2: அப்படியெனில் நமது மொழியின் வளம் யாருக்காக?

நபர் 1: ஒரு கவிதை ஒருமுறைதான் நிகழ முடியும். மறுமுறை அது நிகழ்ந்தால் அது வேறொரு கவிதைதான். அப்புறம் கவிதையின் மொழி மீது நாம் கொண்டுள்ள அதீத பற்று என்பது வேறொன்றுமில்லை, புலவர் மரபின் நீட்சிதான் அது. மொழியின் செழிப்பைக் கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை. எழுதும்போது மிக இயல்பான வகையில் சொற்கள் கவிதையில் பறவைகள் போல வந்து அமர வேண்டும் என்பதையே நான் சொல்கிறேன். ஆழுள்ளம் மனம் விட்டுப் பேசட்டுமே? 

நபர் 2: ஆழுள்ளம் மனம் விட்டுப் பேசட்டும் என்பது நன்றாக இருக்கிறது.

நபர் 1: யோசித்துப் பார்த்தால் நாம் ஆழுள்ளத்தைப் பேச விடாமல் அழுத்தி வைத்துக் கொள்வதையே ஒருவகையில் நவீனம் என்கிறோம். ஆழுள்ளம் விலங்குத்தன்மையுடையதாக இருக்கிறது. அங்கு ஓரளவுக்கு மேல் தர்க்கங்கள் இல்லை. கோர்வையென்றும் ஒழுக்கு என்றும் ஒன்றில்லை. அது கட்டற்றது; சுதந்திரமானது; சிருஷ்டிக்கு அணுக்கமானது. காரண காரிய அறிவை நம்புதல், உள்ளுணர்வுக்குப் பதில் தர்க்கம் எனப் பள்ளிக்கூடங்களிலிருந்து ஆழுள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. ஆகவே ஆழுள்ளம் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பங்களை நாம் அநேகமாக இழந்து விடுகிறோம். ஆனால் கவிதை நம்மை ஆழுள்ளத்துடன் இணைக்கிறது. ஆழுள்ளம் இந்த முழுப்பிரபஞ்சத்துடன் நம்மை இணைத்து விடுகிறது. ஒரு கோணத்தில் ஆழுள்ளத்துடனான தொடர்புகளை மீட்டெடுப்பதே கவிதையின் நோக்கம்.

நபர் 2: பிரக்ஞையின் பங்கு கவிதையில் மிகவும் குறைவுதானா?

நபர் 1: கவிதையின் சிருஷ்டி கணத்தில் பிரக்ஞையின் பங்களிப்பு குறைவு. கவிதையின் முதல் வரி காகிதத்தில் வந்து விழுவதற்கு முன்பு நம்முள் இருப்பது என்ன? ஒரு காட்சியா? கருத்தா? படிமமா? ஒரு சொல்லா? அல்லது ஒரு மூட்டமான உணர்வோட்டமா? கவிதை எங்கிருந்தும் தொடங்கலாம். கவிதை திடீரெனத் தொடங்குகிறது, மின்னல் போல. அது ஒரு வலுவான பின்னணியை வைத்திருப்பதில்லை. ஆகவேதான் கவிதையை வாசிக்கையில் நாம் சிரமங்களை உணர்கிறோம். கவிதையின் முதல் வரிக்கு முன்னால் இருட்டு; கடைசிவரிக்கு அப்புறமும் இருட்டு; அதாவது இரண்டு இருட்டுகளுக்கு இடையிலிருக்கும் வெளிச்சம் நிரம்பிய வரிகள். காகிதத்தில் கவிதை இப்படித்தான் அமைந்துள்ளது. பிரக்ஞை எழுதி முடித்த பின்பு தொழிற்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அப்போது நம் வாசிப்பின்மூலம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு சல்லடை தோன்றுகிறது. நாம் கவிதை குறித்துச் சேகரித்து வைத்திருக்கும் அறிவார்த்தமான விஷயங்களின் விழிகளால் பார்க்கத் தொடங்குகிறோம். வரிகளை மாற்றியமைக்கிறோம்; திருத்துகிறோம்; மீண்டும் திருத்துகிறோம்.

நபர் 2: கவிதையைக் கட்டமைக்க முடியாதா?

நபர் 1: தாராளமாக; கவிதையை ஒரு கட்டடம் கட்டுவது போல பார்த்துப்பார்த்து எழுப்பலாம்தான். கவிதை சொற்களால் மட்டுமே ஆனது என நம்பினால் ஒருவர் அதைச் செய்யலாம். யார் அறிவார். அது அசலான கவிதை போலவே தோற்றம் தரவும் கூடும். கவிதையை ஒருவடிவமாக உத்தியாகக் கற்றுக்கொண்டு ஒருவர் பிரமாதமான கவிதையைக்கூட எழுதி விடலாம். ஆனால் அதனால் ஆவதென்ன? கவிதை சொற்களால் மட்டுமே ஆனது என நம்பும் ஒருவர் மிகமிகத் தொலைவில் இருப்பவர் என்பது எனது கருத்து. 

நபர் 2: ஏன் அப்படிச் சொல்கிறாய்?

நபர் 1: சொற்களால் மட்டும் ஆனது எனும்போது கவிதை இயந்திரத்தனமானதாக மாறி விடுகிறதில்லையா? சில வார்த்தைகளை மாற்றி அமைப்பதன் மூலம் ஒன்றைச் சிருஷ்டித்துவிட முடியும் எனும்போது அங்கிருப்பது படைப்பூக்கம் அல்ல. நாம் அறிந்த இடத்தில் ஆரம்பித்து நாம் அறியாத ஏதோவொன்றில் முட்டி நிற்பது அங்கு நிகழ்வதில்லை. இயந்திரத்தனமானவற்றை மறுபடி மறுபடி நிகழ்த்தி விடலாம். ஆனால் கலை ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது. அப்புறம் ஒவ்வொரு கவிதையும் எழுதுபவரைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. ஒருவரிக்கு அப்புறம் என்ன வரப்போகிறது எனும் இனிய எதிர்பாராமையை இழப்பது ஒரு துயர்தான். எழுதுபவரை அகழ்வாராய்ச்சித்தளம் போல கவிதை கையாள்கிறது. ஒருவருக்குள்ளிருந்து பொற்காசுகள் வெளிப்படலாம்; மண்பாண்டங்கள்  கிடைக்கலாம்; சமயங்களில் ஒன்றுமே கிடைக்காமல்கூடப் போகலாம். கவிதை எழுதுவது என்பது ஒருவகையில்தான் அறிந்தது வெகுசொற்பம் என்பதை நினைவூட்டிக் கொள்வதுதான். அகங்காரத்தின் கூர்நுனியை உடைத்துக் கொள்வதும்தான். கவிதையை இயந்திரத்தனமாக எண்ணிக்கொள்பவர் இவற்றையெல்லாம்தான் இழந்து விடுகிறார். கவிதை ஒரு திறன் அல்ல; பழக்கமும் அல்ல; ஒரு விதையிலிருந்து தாவரம் வளர்வதைப் போல மிகவும் இயல்பானது.

நபர் 2: கவிதையை மிகவும் இயற்கையான ஒன்று எனச் சொல்கிறாய் என்று எடுத்துக் கொள்ளலாமா?

நபர் 1: ஆமாம், நிச்சயமாக. கவிதை மலைகளைப் போல, கடல்களைப் போல இயற்கையானது.

நபர் 2: இனி வேறொரு தலைப்பிற்குச் சென்று விடுவோம். தற்காலத் தமிழ்க் கவிதையின் பலம் பலவீனங்கள் குறித்து உரையாடலாம். தற்காலத் தமிழ்க் கவிதையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

நபர் 1: ஒட்டுமொத்தச் சித்திரமாக யோசித்துப் பார்க்கையில் இன்றைய காலகட்டக் கவிதைப் போக்குகளின் மீது ஒருவிதமான திருப்தியின்மையே எனக்குள் இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. தற்போதைய நவீன கவிதையின் சாதகங்கள் எனில் வடிவம், உள்ளடக்கம், தொனி என அத்தனை வகைகளிலும் அடைந்திருக்கும் பன்மை அம்சத்தையும் சுதந்திரத்தையும் சொல்ல வேண்டும். இதன் அர்த்தம் முன்னர் அப்படி இல்லை என்பதல்ல. முன்னர் இருந்தவற்றின் இடைவெளிகளை நிரப்பும் சுதந்திரமான வெளிப்பாடுகள் கொஞ்சம் ஆரோக்கியமாகவும் கொஞ்சம் பாதி வெந்த நிலையிலும் (இதுவும் முக்கியம்தான்) மொழியில் நடந்துள்ளன என்பதையே சொல்வேன். புதிய காட்சிகள்/தருணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எழுபது எண்பதுகளில் கவிதையின் பலவீனங்கள் எனக் கைவிடப்பட்ட அம்சங்களை இன்றைய கவிதைகள் சாதகமாகக் கைக்கொண்டு எழுவதையும் பார்க்கிறோம். உடனடி உதாரணமாக, உணர்வையோ கண்டுபிடிப்பையோ கவிதையின் மூட்டத்துடன் வெளிப்படுத்தும் பொருட்டு, கறாராகப் பின்பற்றபட்ட வார்த்தைச் சிக்கனத்தைப் பெரும்பாலும் இன்றைய கவிதைகள் அதன் தேவைக்கேற்பக் கைவிட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

வடிவரீதியில் / உத்திரீதியில் எனில் கவிதை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்தித்த காலகட்டம் இதுதான் என்றும் நினைக்கிறேன். பாடல்தன்மை, விவரணை அம்சம், படிம உருவக வெளிப்பாடுகள், கதைகூறல் தன்மை, புகைப்படத்தன்மை, ஹைக்கூ, வெள்ளைக்கவிதை, புனைவம்சம், நுண்விவரணை, சிதறிய ஆற்றொழுக்கற்ற வெளிப்பாடுகள் எனக் கவிதையின் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுத் தேய்க்கப்பட்டிருப்பதையும் ஒருவர் பார்க்க முடியும். ஆகவே ஒவ்வொரு கவிதையும் கட்புலனாகாத நெருக்கடியின் சூழலிலிருந்து வருகிறது. தற்காலத் தமிழ் கவிதையில் வடிவங்களின் முயக்கம் ஒரு புதிய வடிவமாக எழுந்து வருவதைக் காண முடிகிறது. ஒரு கவிதை கதையாகத் தொடங்கிச் சிதறி ஆற்றொழுக்கை இழந்து கடைசி வரிகளில் பறக்கத் தொடங்கலாம். இன்றைய கவிதைக்கு ஒரு மையம்தான் இருக்க முடியும் என எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. கவிதை பயணம் போல இருக்க முடியும். அப்புறம் ஏலவே கூறியது போல வார்த்தைச் சிக்கனம் இன்றைய கவிதையின் முழுமுற்றான லட்சியமாக இல்லை. இசைமையையும் கவிதை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளவில்லை. கவிஞர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு எதுஎதெல்லாம் தடையென்று உணர்கின்றனரோ அவை ஒவ்வொன்றும் தேவைக்கேற்பக் கவிதையில் விலக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சுதந்திரம் எய்தப்பட்டிருக்கிறது; மனத்தடைகள் குறைந்திருக்கின்றன. 

எனினும் நான் பலவீனமாகக் கருதும் விஷயங்கள் சில உள்ளன.  இவற்றை ஓர் அவதானிப்பாக மட்டும் சொல்கிறேன். 

1) அவதானிக்கும் ஆற்றலில் பற்றாக்குறையோடு இருப்பது அனுபவ வறட்சியை உண்டு பண்ணுகிறது. அனுபவ வறட்சி மேலோட்டமான தன்மையைத் தோற்றுவிக்கிறது. எனவே கவிதை ஒருமுறை மட்டும் வாசிக்கத் தகுந்ததாகவும் சீக்கிரம் தீர்ந்துவிடக்கூடியாகவும் மாறுகிறது. அதாவது OTP கவிதைகள். 

2) நகலெடுப்பு. பாதிப்பு என்பது ஒன்றை உட்செரித்துக்கொண்டு தன் ஆளுமையின் பிரதிபலிப்புகளோடு இருப்பது. நகலெடுப்பு ஆளுமையின்மையின் வெளிப்பாடு. கவிக்குரல் மீது நமக்கு நம்பகத்தன்மை ஏற்படுவது மிகவும் சிரமமானதாக மாறியிருக்கிறது.

3) ஒவ்வொரு கவிஞரும் தன் கவிதைகளினூடாக ஓர் உலகத்தை உருவாக்குகின்றனர். முதல் தொகுப்பு அஸ்திவாரம் எனில் அடுத்த அடுத்த தொகுப்புகள் கட்டடங்களும் அறைகளும் போல. அவர்களுடைய உலகத்தில் அவர்களால் நீண்ட காலமாகப் பரிசீலிக்கப்படும் சொற்கள், மனநிலைகள், பேசுபொருட்கள், இடைவெளிகள் உள்ளன. உதாரணத்திற்கு கவி தனது கவிதைகளில் இன்மை என்று சாதாரணமாகச் சொல்வதில்லை. இன்மை என்றால் என்ன என்று புரிந்துகொள்வதற்கான ஒரு செயல்முறை கவிஞரிடம் இருக்கிறது. அங்கிருந்து அவர் இன்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆனால் இங்கு அந்த வார்த்தை நன்றாக இருக்கிறதே என்ற ரீதியிலும் மேலோட்டமான கவர்ச்சிக்கு உட்பட்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது நடக்கிறது. சொற்களுக்குப் பொறுப்பெடுக்க வேண்டாமா?

4) கறாரான சுயதணிக்கை அற்றிருப்பது இன்னொரு முக்கியமான பிரச்சினை. கவிதையில் தொழிற்படுபவர்களிடம் கவிதை ஓர் அரிதான விஷயம் என்ற உணர்வு குறைந்துவிட்டது என்பதை வாசிக்கும் கவிதைகளினூடாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

5) கவிதை முதன்மையாகத் தீர்வு சொல்லும் வடிவம் அல்ல. கவிதை பெரும்பாலும் “எனக்குத் தெரியவில்லை, இப்படி இருக்கலாமா? பாருங்கள்” எனப் பரிந்துரை போலத் தோன்றாத மெல்லிய பரிந்துரையை மட்டுமே நம் ஆழுள்ளத்திற்கு அளிக்கிறது. எனவேதான் கவிதை உபதேசமோ, அறிவுரையோ அல்ல என்கிறேன்.

6) காட்சி ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத பரவலுக்குப் சமூக நெருக்கடிகளை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள் கூடுதல் ஆழத்தைக் கோரி நிற்கின்றன. கவிதை செய்தித்தாளைப் பிரதிபலிப்பது அல்ல. கவிதை, செய்தித்தாளிலிருந்து செய்தித்தாளுக்குப் அப்பால் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்புறம் அரசியல் கவிதையைப் பொறுத்தவரை எனது எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறு. அரசியல், தன்னிலிருந்து தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன்.  தன்னில் குமிழ்விடும் சிடுக்குகள், வெறுப்புணர்ச்சி, சுயநலம், அக்கறையின்மை இவற்றிற்கும் நாட்டில் நடப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. நாம் திடீரென ஒருவர் மீது உணரும் வெறுப்புதான் செய்திகளில் நாம் காணும் வெறுப்பின் விதை. நம் சுயநலம்தான் அங்கே பிரம்மாண்ட உருவத்தில் உள்ளது. தீமையைக் கண்டும் காணாது இருக்கும் நமது பொன்னான பண்புதான் அங்கு வேறொன்றாகியிருக்கிறது. ஆகவே அரசியல் கவிதை என்பதை வெறும் காகிதத்தில் எழுதப்படும் ஒன்றாக நான் கருதவில்லை. உலகத்தைத் தன் உடலில், மனத்தில் உணர்ந்து கொண்டேயிருப்பதைத்தான் சமூக நெருக்கடிகள் சார்ந்து எழுதப்படும் கவிதைகளின் ஆதார உணர்ச்சி என்று நினைக்கிறேன். செய்தித்தாள்களாலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ கூற முடிகிறவற்றைத்தான் கவிஞனும் கூறுகிறான் எனில் என்ன சொல்வது? 

இவை எனக்கு உடனடியாகத் தோன்றுவன..

நபர் 2: இதற்கு முன்பும் அனுபவ வறட்சி என்று சொன்னதைக்  கவனித்தேன். சற்றுத் தெளிவுபடுத்த முடியுமா?

நபர் 1: ஏதொன்றையும் ஆழ்ந்து அவதானிக்கையில் பக்தியின் அம்சம் வந்து விடுகிறது. ஒரு கவிதை தன்னைத் தவிர உலகில் எதுவுமே இல்லை என்பது போல நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறாயா? ஒரு காதலனுக்குத் தன் காதலியைத் தவிர மற்றவை அனைத்துமே சாரமற்றுத் தெரிவது போல. ஒரு தருணத்திற்குக் கவிதை கூர்ந்த கவனத்தை அளிப்பதன் மூலம் கவிதை அத்தருணத்தைப் போற்றத் தொடங்கி விடுகிறது. ஆனால் நாம்தான் அவதானித்துக் காண்பதேயில்லையே? நமக்கு வேகம் வேண்டும். அனுபவங்களை வேறொன்றாக்கும் திறனை இழந்திருக்கிறோம் என்பதையே அனுபவ வறட்சி என்று சொல்கிறேன். நம் அனுபவங்களால் நம்மை உருமாற்ற இயல்வதில்லை.  அவை வருகின்றன, போகின்றன. நாம் இருக்கிறோம்.

நபர் 2: நாம் வாழவில்லை; எதிர்வினைதான் செய்கிறோம் என்கிறாய் இல்லையா?

நபர் 1: கிட்டத்தட்ட.  

நபர் 2: கவிதையில் புதிய வடிவங்கள் என்று ஏதும் உருவாகவில்லை இல்லையா?

நபர் 1: புதிய செல்போன் மாடல் சந்தைக்கு வருவது போல கலையில் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். கலையில் மாற்றங்கள் மிகமிக மெதுவாகவே நடக்க முடியும். உலகக் கலை வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ரொமான்டிக் காலகட்டத்தின் அலை அடங்கி நவீனத்துவம் தொடங்குவதற்கு ஏறத்தாழ கலை ஒரு நூற்றாண்டை எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். உலக கவிதையிலே இந்நெருக்கடி இருக்கிறதுதான். அமெரிக்கக் கவிகள் கஸல் போன்ற உருதுக் கவிதை வடிவங்களையும் ஹைக்கூவையும் எழுதிப் பார்க்கிறார்கள். நோபல் பரிசு வென்ற ஸ்வீடனின் தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் ஹைக்கூ கவிதைகளை எழுதியிருக்கிறார். இவையெல்லாமே வடிவம் சார்ந்த எல்லைகளை மீற முடியுமா என்ற முயற்சிகளாகவே ஒரு கோணத்தில் எனக்குப் படுகிறது. அப்புறம் தற்காலம் ஆழமற்று மேலோட்டமாக இருக்கும்போது கடந்த காலத்திற்கு முக்கியத்துவம் உருவாகி விடுகிறது என்பது எனது எண்ணம். மைய நீரோட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட வடிவங்களே கலையில் எதிர்காலமுள்ளவையாக மாறி விடுகின்றன. நீள்கவிதைகள், குறுங்காவியங்கள் மீது சமீபத்தில் உருவாகியிருக்கும் கவனத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்நுகர்வுக் கலாச்சாரக் காலகட்டத்தில் இவ்விதம் நடக்காமல் இருந்தால்தான் ஒருவர் ஆச்சர்யப்பட வேண்டும். துரித உணவின் தன்மை கூடும்போது கவிதை, நீள்கவிதையின் திசைக்கு வந்தடைந்திருக்கிறது. 

நபர் 2: துரித உணவின் தன்மையா?

நபர் 1: ஆம். துரித உணவு என்றுதான் சொல்வேன். இந்த நூற்றாண்டில் கவிதைக்குத் தன்னை ஆசையோடு பொருத்திக் கொள்வதற்கென்று லட்சியவாதம் போன்ற மாபெரும் தேர்வுகளில்லை. எனவே நிற்பதற்கும் நிலமில்லை. இப்போது என்னதான் எஞ்சியிருக்கிறது? தருணங்களைத் தவிர. எனவே முன்னெப்போதும் இல்லாதவகையில் தருணங்களின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவர்களாகக் கவிஞர்கள் உள்ளனர். இது ஒருவிதத்தில் கவிதையின் பன்மைக்கு வழி வகுத்திருக்கிறது என்றாலும் தற்காலிகத்தன்மையில் அதிகச் சார்பு கொள்ளும் அம்சமும் கூடியிருக்கிறது. இன்று ஒரு கவிஞர் வாழ்க்கை குறித்தும் தனது காலம் குறித்தும் பிரத்யேகமான பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. அந்தந்தத் தருணங்களில் தரித்தால் போதும். பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தருணம் மறைந்ததும் அது சார்ந்த பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு விடலாம். இது உலகத்தையும் அதன் அனுபவங்களையும் அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற இடம்வரை அழைத்துச் சென்று விடுகிறது. ஆகவே எண்ணற்ற தருணங்களினூடாக வளர்ந்து ஓரிடத்தில் முட்டி நிற்கும் நீள்கவிதை போன்ற வடிவம் மிகவும் முக்கியத்துவம் கொள்கிறது. நீங்கள் நீள்கவிதைக்கு நேரத்தையும் கவனத்தையும் முழுமையாக அளித்தாக வேண்டும். மெதுவாக நகரும் காட்சிகளாலான திரைப்படம் முன்பு அமர்ந்திருப்பது போல அமர்ந்திருக்க வேண்டும். 

நபர் 2: புரிகிறது. சரி உள்ளடக்கம் சார்ந்து பேசலாம். ஒரு கோணத்தில் கவிதையின் பாடுபொருட்களே மிகவும் வரம்புக்கு உட்பட்டதுதான் என்று நான் சொன்னால் நீ என்ன சொல்வாய்?

நபர் 1: கொஞ்சம் விரிவாகச் சொல்லேன்.

நபர் 2: மேலோட்டமாகப் பார்க்கப் போனால் இயற்கை, காதல், உலகியல் அனுபவங்கள், முடிவின்மையைத் தொடும் தருணங்கள் என இவை போன்றவைதானே அநேகமான பாடுபொருட்கள்? காலம்காலமாகக் கவிதையின் பேசுபொருளாக இவைதானே உள்ளன?

நபர் 1: கலை வளர்வதில்லை அதன் பேசுபொருட்கள் தான் காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கின்றன என டி.எஸ்.எலியட் தனது கட்டுரையொன்றில் சொல்கிறார். கலையில் மாறாத அம்சம் என ஒன்றுள்ளது. காலகாலமாக அவை கலையில் விதவிதமான தோற்றத்தில் வெளிப்பாடு காண்கின்றன. உயிருணர்ச்சி, ஆன்மா, ஜீவன் எனப் பல பெயர்களில் நாம் அந்த ஒன்றை அழைக்கிறோம். கலையும் ஒரு Archetypeதான். ஆகவே கலை மிகத் தொன்மையான ஒன்றே. அவ்வளவு கவிதைகளின் இறுதி நிறுத்தம் என்ன? அவை எவற்றைக் குறித்தும் பேசட்டும். ஆனால் அவை இறுதியாகச் சுட்டுவது என்ன என்பதில் ஓர் ஒற்றுமை உள்ளதாகவே எனக்குப் படுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கவிதையும் நேற்று இங்கு எழுதப்பட்ட ஒரு காதல் கவிதையும் சந்தித்துக் கொள்வது எப்படி? 

நபர் 2: அப்படியெனில் புதிது என்று ஒன்றில்லை என்கிறாயா?

நபர் 1: புதிது என்று நிச்சயம் ஒன்றிருக்கிறது. ஆனால்  பிறிதொன்றில்லாத புதுமை சொல்லும் முறையில் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஆதாரமான உணர்ச்சிகள் உலகம் முழுதுமே ஒன்றுதான். வேண்டுமானால் கலாச்சாரப் பின்னணி சார்ந்து வெளிப்பாடுகளில் சுருதி வேறுபாடு இருக்கலாம். என்ன சொல்லப்பட்டது என்பது வரம்புகளுக்கு உட்பட்டது. ஆனால் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டது. நான் ஏற்கனவே சொன்னது போல கலையில் ஒரு Archetype உள்ளது. முழுமையான சுதந்திரம் உள்ளதாக நாம் கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். ஆனால் பகுதியளவு சுதந்திரமே கலையில் சாத்தியம். சொல்லும் முறை சார்ந்த சுதந்திரம் நம் வசம் உள்ளது. பேசுபொருள் சார்ந்த சுதந்திரம் கலையிடம் உள்ளது. கோயில் சிற்பங்களைப் பார்க்கிறோம். ஒரு செவ்வியல் கவிதையை வாசிக்கிறோம். அவை புதிது போலத்தானே உள்ளது? ஒர் உதாரணத்திற்குச் சொல்கிறேன். நேற்று எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசிக்கிறோம். அது ஏன் மிகப் பழையது போன்ற உணர்வைத் திடுமெனத் தோற்றுவிக்கிறது? 

நபர் 2: கடந்த காலம் முழுமையாகவே ஓர் இடம்தான் இல்லையா.  ஒரு நல்ல புகைப்படத்தைப் பாரேன். எல்லாமே எவ்வளவு அழகாக அதனதன் இடத்தில் பொருந்தியிருப்பதுபோலத் தெரிகின்றன. ஆனால் நிகழ்காலம் இன்னும் ஒரு இடமாகவில்லை. நாம் நம்மை எங்கு பொருத்திக் கொள்வது என்று தெரிவதில்லை. ஞாபகத்தின் கறைபடாததற்கு, நிற்பதற்கு இடமில்லை. ஞாபகத்தின் கறைபடாதது அவ்வளவு தனிமையாக நிற்கிறது. கூடவே அப்படியொன்று உள்ளதா என்றும் சந்தேகமாக உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் எனில் வேறொரு காலகட்டத்தின் கவிதைகளை நாம் இங்கிருந்து பார்க்கிறோம். பள்ளிக்கூடப் புகைப்படத்தைக் கல்லூரி படிக்கையில் பார்ப்பது போல. ஆனால் தற்காலக் கவிதையை நாம் தற்காலத்தில் இருந்தே பார்க்கிறோம். நமக்கும் நிழல் கிடைக்கவில்லை. நாம் வாசிக்கும் கவிதைக்கும் நிழல் கிட்டவில்லை. நல்ல வெய்யில் வேறு.

நபர் 1: ஹாஹா. இது மிகவும் அகவயமான பதில். புதியதாக இருக்க வேண்டும் என்று ஏதும் கட்டாயமுள்ளதா என்ன? திடீரெனத் தோன்றுகிறது.

நபர் 2: ஏன் அப்படித் தோன்றுகிறது?

நபர் 1: Make it new என்பது ஒரு பிரமாதமான வாசகம்தான். ஆனால் நாம் ரொம்பவும் புதிது மேல் மோகம் கொண்டு விட்டோமோ? புதுமையை முன்னிட்டு வாழ்க்கையைக் கலையில் நழுவவிட்டு விட்டோமோ? நமக்கு நன்கு தெரிந்தவற்றை நமக்குச் சிறிதும் பரிச்சயமற்ற ஒன்றாக, விந்தையாக உருமாற்றிக் காட்டுவது கவிதையின், ஏன் கலையின் ஆதாரமான பண்புகளில் ஒன்று. ஆனால் இங்கு நாம் ஒரு மேஜிக் ஷோ முன்பு அமர்ந்திருப்பவரைப் போல உணர ஆரம்பித்து விடுகிறோம். வெறுமனே புதியதாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலை தற்போதைய தமிழ்க்கவிதைகளில் பரவியிருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது தினுசாக விளங்கினால் மட்டுமே போதும். வேறொன்றும் கவிதைக்கு வேண்டியதில்லை என்பது போல. இந்த மனநிலைக்குக் காரணங்கள் பல. நவீன வாழ்க்கையின் சலிப்பு, நுகர்வியம், அனுபவ வறட்சி எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் கற்பனையாற்றலும் ஒரு திறனாக, தேய்வழக்காக மாறி வருகிறது. இன்று பெரும்பாலான கவிதைகளில் கற்பனையாற்றலின் பிரகாசத்தைப் பார்க்கிறோம்தான். ஆனால் வெற்றுக்கற்பனைகளில் நுட்பமோ விரிவோ இருப்பதில்லை. யானையோ பூனையோ பறக்கிறதுயெனில் அது அழகுதான். ஆனால் ஏன் பறக்கிறது என்பதும் முக்கியம் இல்லையா? காரணமேயில்லாமல் இருப்பதன் அழகு என்றுகூட அதைச் சொல்ல முடியவில்லை. கள்ளமின்மையை நடித்துக் காட்டுவது என்றுதான் சொல்வேன். நம் செவ்வியல் கவிதைகளில் கற்பனை அம்சம் இருக்கிறதுதான். ஆனால் கற்பனை மட்டுமா? நுட்பம் இல்லையா? நிலக்காட்சியே மானுட உணர்வாக வாசிப்பில் அதிர்வதில்லையா? 

நபர் 2: அப்படியெனில் சர்ரியலிசம் போன்றவை எல்லாம்? 

நபர் 1: சர்ரியலிசம் வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு. சர்ரியலிசம் ஆழ்மனப் படிமங்களின் பேச்சு. அதுஒரு வகையான துருவித்துருவிச் செல்லுதல். இது வெறும் மூளைரீதியிலான கற்பனை விளையாட்டு. இன்னும் சொல்லப்போனால் ஒன்றை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பிரக்ஞைபூர்வமாகவே இன்னொன்றை வைத்துப் பார்ப்பது. அதுஒரு உத்தியும்கூட. உத்தி எனும்போது செய்யக் கூடியதும்கூட. செய்யக் கூடியது எனும்போது ஜீவன் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டும் தருவதும்கூட. 

நபர் 2: எது கவிதை என்பதற்கு உனக்குச் சில கருத்துகள் இருக்கும் போலத் தோன்றுகிறதே.

நபர் 1: இவை எனது எதிர்பார்ப்புகள் என்றளவில்தான் பேச முடியும். கவிதை வாழ்க்கையுடனான தொடர்புகளை இழந்துவிடக் கூடாது என்று கருதுகிறேன். வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக உருமாற்றுவது கவிஞர்களின் முக்கியமான வேலைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த வாழ்க்கையை அதன் அனுபவங்களை அழகாகவும் ஆழமாகவும் மாற்றுவதற்கே கலை நமக்குத் தரப்பட்டுள்ளது. 

நபர் 2: நிற்க. அழகாகவும் ஆழமாகவும். இது ஒரு முரணாக இல்லையா?

நபர் 1: முரண் என்று அறிந்துதான் அப்படிச் சொன்னேன். ஆழம் உண்மையோடு சம்பந்தப்பட்டது. உண்மை பயங்கரத்துடன் சம்பந்தப்பட்டது. ஆழத்தில் எப்போதும் இருட்டு உள்ளது. இருட்டில் தெளிவின்மைகள்  இலங்குகின்றன. தெளிவின்மைகள் விசாரத்துக்கும் விசாலத்துக்கும் கூட்டிச் செல்கின்றன. இனிய உண்மையென்று ஏதாவது உள்ளதா என்ன? ஆனால் அழகு முற்றிலும் வேறு. அழகில் மானுடன் தன் வீட்டில் விடுமுறை நாளில் இருப்பவனைப் போலத் தணிந்து விடுகிறான். தஸ்தாவெஸ்கியின் ஒரு வரி உண்டு. 'அழகு உலகைக் காக்கும்' என்று. காக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் நம்மை மனிதனாக வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அழகில் திளைக்கும்போது மனிதன் தனது குழந்தை பருவத்துக்குச் சென்று விடுகிறான். எது நல்லது எது கெட்டது என்று தெரியாத ஒரு பருவம். உண்மை காயப்படுத்துகிறது; அழகு குணப்படுத்துகிறது. அதாவது ஓர் உயிர்த்தெழல் தருணம். ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் எண்ணங்கள் இருக்க முடியும் என்பதைக் கவிதை நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதை நமது மையப் பண்பாட்டுக் கதையாடல்கள் மறுக்கின்றன என்கிறார் அமெரிக்க கவிஞர் எட்வர்ட் ஹிர்ஸ்ச். கவிதை, முரண்பாடுகளையும் அழகு என உருமாற்றி விடுகிறது. உதாரணத்திற்கு ஒருவன் தனது துயரைத்தான் கவிதையில் எழுதுகிறான். கவிதையின் ஏதோவொன்று அவனுடைய துயரை அழகாக மாற்றி விடுகிறது. சமூக வாழ்க்கையில் இரண்டு உண்மைகளை வைத்துக்கொண்டு ஒருவன் ஒரு விஷயத்தை எதிர்கொள்வது எப்படிப் பார்க்கப்படும்? அவனை இரட்டை மனம் கொண்டவன் என்றோ சிந்தனைத் தெளிவற்றவன் என்றோ எதிர்மறையாகச் சித்தரித்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கவிதையில், அவன் வாழ்க்கையின் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட்டவன் ஆகி விடுகிறான். அத்வைத ஞானி நடராஜ குரு சொல்கிறார்: இரண்டு உண்மைகள் இருக்கும்போது அவை ஒன்றையொன்று அழித்துக் கொள்ளும். இறுதியில் சூன்யமே எஞ்சும் என்று. ஆனால் கவிதையில் இரண்டு உண்மைகள் சந்தித்துக் கொள்ளும்போது பரவசம் அல்லவா உருவாகிறது. தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் தனது கவிதைகளைச், சந்திக்கும் இடங்கள் என வரையறுக்கிறார். எத்தனை பொருத்தம்!

நபர் 2: எனக்கு அழகைக் குறித்து இருக்கும் மிக முக்கியமான புகார்களில் ஒன்று, அதுசில சமயங்களில் பாகுபாட்டிற்கு இட்டுச் சென்று விடுகிறது. 

நபர் 1: கலை இருக்கும்போது அழகின்மை என ஒன்று இருக்கிறதா என்ன ? என்பதே எனது கேள்வி. அப்படியெனில் நாம் நம் கலையைத் தீவிரமாகக் கைக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அருவருப்பு, அசூயை, அசிங்கம் எனக் கருதப்படுபவையும் ஒருகோணத்தில் அழகானவை என நினைக்கிறேன். பிடித்தவைகளினூடாகச் செல்வதற்கு ஒரு பாதை இருக்கும்போது ஏன் பிடிக்காதவையினூடாகப் பயணிப்பதற்கு ஒரு பாதை இருக்க முடியாது? முன்னதைவிடப் பின்னதில் அக உருமாற்றத்திற்கு வாய்ப்புகள் அதிகம். கவிதை, தத்துவ ஞானியின் கல் (Philosopher’s stone) போலத்தான். நாம் ஒரு ரசவாத மேடையின் முன்புதான் நின்று கொண்டிருக்கிறோம். 

நபர் 2: சரி. அழகுக்குப் பாகுபாட்டை உண்டாக்கும் இயல்பில்லை. ஆனால் அழகை வைத்துப் பேதத்தை நாம் உருவாக்குகிறோம் தானே?

நபர் 1: ஏற்கனவே இதற்கு நான் பதில் கூறி விட்டேன். நீ கூறுவது உண்மைதான், உடன்படுகிறேன். ஆனால் அழகை வைத்து பேதத்தை உருவாக்கும் நம் இயல்பிலிருந்து நம்மை மீட்கவே கலைகள் உள்ளன என்கிறேன். பிரெஞ்சுக்கவி மல்லார்மே உலகம் புத்தகமாக மாறுவதற்கே இருக்கிறது என்கிறார். நான் அந்த வரியை இப்படி மாற்ற விரும்புகிறேன். ஒவ்வொன்றும் கவிதையாக மாறுவதற்காகவே காத்திருக்கின்றன.

நபர் 2: கவிதை எழுதப்படுவது தானே? கவிதையாக மாறுவதால் என்ன நடந்து விடும்? 

நபர்1: எழுதப்படுவது மட்டும் கவிதை அல்ல. ஒரு குழந்தையின் மழலைப் பேச்சின் முன்பு நிற்கும்போது நாம் ஒரு கவிதையின் முதல் வரியிலோ நடுவிலோதான் நிற்கிறோம். ஒரு நிலக்காட்சியைத் தன்னந்தனியாக எதிர்கொள்ளும்போது, ஒருவர் இன்னொருவருக்கு உதவுவதற்குச் சாட்சியாக நிற்கையில் நாம் கவிதையினுள்தான் இருக்கிறோம். மிலன் குந்தேரா காஃப்கா பற்றிய கட்டுரையொன்றில் செக் நாட்டின் கவி ஜான் ஸ்கஸெலின் மேற்கோளைத் தருகிறார். “கவிஞன் கவிதையை உண்டாக்குவதில்லை. கவிதை எங்கோ பின்னால் காலங்காலமாக இருந்து வருகிறது. கவிஞன் அதைக் கண்டுபிடித்து விடுகிறான்.” இந்த மேற்கோளைத்தானே நம்புவாய்? ஹாஹா..

நபர்2: மேற்கோளை மட்டுமே நம்புவேன் என்று யார் சொன்னது? 

நபர்1: வேடிக்கையாகவே சொன்னேன். தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேற்கொண்டு தொடர்கிறேன். கவிதையாக மாறுவதால் என்ன நடக்கிறது? உதாரணத்திற்கு நம் காலடியில் கிடக்கும் கல்லைப் பார். அது வெறும் கல் மட்டுமேயெனில் அங்கு எல்லாச் சாத்தியங்களும் முடிந்து விடுகின்றன. அது அதுவாக மட்டுமே இருக்கும் உலகத்தில் மானுடனால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்றே நினைக்கிறேன். கவிதை, கல்லை உயிருள்ளது என்பது போலப் பொருட்படுத்திக் கவனிக்கிறது. கல் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்கிறது என்று போகிறபோக்கில் சொல்கிறது. யோசித்துப் பார். இந்த வானத்தைப் பற்றி இதுவரை உலகம் முழுதும் எத்தனை கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்? நிலவு? ரோஜா? காதல்? போர்? ஏன் இவ்வளவு கவிதைகள்? ஏனெனில் நாம் இத்தனை கவிதைகளினூடாகவே சாத்தியங்களை அகலமாகவும் ஆழமாகவும் மாற்றிக் கொள்கிறோம். கவிதை ஒரு கல்லைப் பார்க்கும்போது நாம் நினைத்துக் கொள்வதற்கு ஏராளமானவற்றைத் தருகிறது. புதிதாகக் காண்பதற்கான சந்தர்ப்பங்களைத் தருகிறது. ஆகவே நம் யதார்த்தம் நமக்குள் புதுப்பிக்கப்படுகிறது. நம் அனுபவம் விசாலமாகவும் ஆழமாகவும் மாறுகிறது. எனவே நம் வாழ்க்கையைச் சற்றுச் செறிவாக்கிக் கொள்கிறோம். 

நபர் 2: பிரமாதம்! அப்படியெனில் திரும்பக்கூறல் ஒரு பிரச்சனையில்லையா? . நிலவு, மலை, படகு, பனிமூட்டம், தனியன் ஒருவன், மரங்கள், காற்று, அந்திக்கருக்கல், பறவைகள் போன்றவைதான் பெரும்பாலான ஜென் கவிதைகளில் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கிறது. 

நபர் 1: நவீனத்துவத்தின் அளவுகோலுக்குத்தான் இந்தத் திரும்பக்கூறல், வார்த்தைச் சிக்கனம், கச்சிதம் என்பதெல்லாம். ஜென் கவிதையை எப்படி நவீனத்துவ அளவுகோலால் அளக்க முடியும்? திரும்பக்கூறலைப் பொறுத்தவரை ஓர் உள்ளடக்கம் எத்தனை தடவையும் வரலாம். ஆனால் முந்தைய கவிதையில் வராத புதிய ஆழம், புதிய கவிதையில் எய்தப்பட்டிருக்கிறதா என்பதே எனக்கு முக்கியமாகப்படுகிறது. ஆயிரம் முறை எழுதப்பட்டபிறகும்கூட ஆயிரத்தியோராவது முறையும் புதிதாகச் சொல்ல முடிகிறது என்பது இந்த உலகம் மேலோட்டமானதில்லை என்பதைக் காட்டுகிறது இல்லையா? மனிதன் எவ்வளவு ஆழமானவன் என்பதைச் சொல்கிறதில்லையா? 

நபர் 2: அப்புறம் கவிஞரின் Obsession வெளிப்படுகிறது என்றும் சொல்லலாமா?

நபர் 1: Obsession என்பதைவிடக் கவியை எப்போதும் உறுத்துவது குறித்த விசாரணை என்றுகூடக் கூறலாம். 

நபர் 2: மழை வரும் போலிருக்கிறதே. நல்லதுதான். இவ்வளவு நேரம் பேசியதை வைத்துப் பார்க்கும்போது கவிதையை நீ எல்லாவற்றிற்கும் மேலான ஒன்றாக, கிட்டத்தட்ட ஒரு மதம் போல முன்வைப்பதாகத் தோன்றுகிறது.

நபர் 1: நாம் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் மதம் போல அல்ல இது. இங்கே அழகும் உண்மையுமே தெய்வங்கள். ஆழ்ந்துகவனிப்பதே ஒரு பிரார்த்தனை போலத்தான்.  இது வியப்பின் திகைப்பின் மதம். சமூக கருத்தாக்கங்களுக்கும் வேறு விஷயங்களுக்கும் அலுவலகங்கள், டீக்கடைகள், திடல்கள் என நிறைய இருக்கின்றன இங்கு. ஆனால் கலைக்கு யார் உளர்? எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்தாலும் கலை தன்னளவில் தனக்குள் உணரும் தனிமை என்று ஒன்றுண்டு. சரி. நான் அலைபேசியில் ஒரு கவிதையைப் பதிந்து வைத்திருக்கிறேன். வாசிக்கவா?

நபர் 2: ஆஹா! தயவு செய்து.. 

நபர் 1: இது மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்தவர் சிற்பி.

கவிதை ஒரு மதம்

கவிதை ஒரு மதம்

இந்த மதத்தில் இல்லை புண்ணியமும் பாவமும்.

இல்லை உபதேசிகளும் சுவிசேஷமும்

நல்ல கவிதை எழுதாதவர்களும்கூட

நரகத்துக்குப் போவதில்லை,

நாயைப் போல

அதைக் காண மட்டும் செய்கிறார்கள்.

அங்கே தங்கள் வாசகர்களையும் கூட.


கவிதையை நம்புகிறவர்கள்

கூட்டமாய்க் கூடுவதில்லை, மதம் மாற்றுவதில்லை

விக்கிரகம் இல்லாததனால்

விக்கிரகத்தின் பேரால் கலகம் புரிவதுமில்லை

கோயில் இல்லாததனால்

யாருடைய கோயிலையும் இடிப்பதுமில்லை.


அவர்கள் தனித்தனியே

விஷம் சாப்பிடுகிறார்கள்

தனித்தனியே சங்கிலியால் கட்டுண்டு கிடக்கிறார்கள்

பைத்தியங்கள் என்று

சாட்டையடி வாங்குகிறார்கள்

சிறையையும், தூக்குமரத்தையும்,

மரண வாயுவையும், மின்சார நாற்காலியையும்

ஏற்றுக் கொள்கிறார்கள்,

பிரபஞ்சம் முழுவதன் நன்மைக்காகவும்

பிரார்த்தித்துக் கொண்டே.


இந்த மதத்தில்

புழுவுக்கும் ஆத்மா உண்டு

புல்லுக்கும் உண்டு இந்தப்

புவியில் அதன் பங்கு

நீர்த்துளிக்கும் உண்டு அமரத்துவத்தின் உண்மை

இங்கே பொருட்களுக்கும்

உண்டு ஜீவன்

எப்போதேனும்

எப்போதேனும் மட்டும்

காயம்பட்டதும்

தனித்திருப்பதுமான ஒரு தெய்வம்

வரிகளைப் பிரித்து மாற்றி எட்டிப் பார்க்கிறது

அப்போது சொற்கள்

மின்னல் கொடிபோல் சுடர்கின்றன

அவற்றின் எல்லைகளைப் புலப்படுத்திக் கொண்டு.


ஒளிவீசுவது ஒலியா, மெளனமா என்று

வாசகர்கள் அஞ்சுகிறார்கள்

அவர்களும் அந்தத் தெய்வத்தைக் காண்கிறார்கள்

அவர்களும் எல்லைகளை அறிகிறார்கள்

மொழியினுடையதும் சத்தியத்தினுடையதுமான

எல்லைகளை.


கவிதை என்னுடைய மதம்

மதம் இல்லாதவரின் மதம்.

நபர் 2: அருமையான கவிதை. மிக்க நன்றி. 

நபர் 1: கவிதையின் சரிவுக்கும் மனித நாகரீகத்தின் ஆன்மிகச் சரிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. உலகத்திலிருந்து கவிதையைக் கண்டடையும் சக்தியை மனிதன் இழக்கும்போதும், மனிதனைக் கவிதை அதிர்வுறச் செய்யாதபோதும் அவன் தனது ஆன்மாவிடமிருந்து (சரி. உயிர்த்தன்மையிடமிருந்து) மிகத் தூரமாகச் சென்று விடுகிறான். கவிதையில் அக்கறையுடன் இருப்பது என்பது திடீரென ஏதோவொன்றைப் பார்த்து, ஆச்சர்யம் தாளாது, ஓரிரு நொடிகளுக்குப் பரவசத்தில் உறைந்து நிற்பதன் ஊடே தெய்வீகத்தையும் மெளனத்தையும் பணிவையும் நன்றியுணர்ச்சியையும் ஒருங்கே உணரும் சக்தியைப் பாதுகாத்துக் கொள்வதுதான். 

நபர் 2: இதோ மழை தூற ஆரம்பித்துவிட்டது. பேசியது போதும் என்கிறது போல.

***

(24.2.2024 & 25.2.2024 ஆகிய தேதிகளில் எழுத்தாளர் பா. வெங்கடேசன் ஏலகிரியில் ஏற்பாடு செய்த ‘புரவி’ கூடுகையில் கவிதை அமர்வுக்காக எழுதப்பட்ட உரையாடல் வடிவ கட்டுரை.)

(நன்றி வனம் இதழ்)

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில கவிதைகள் - 1

ஒவ்வொரு புலரியிலும்

சிரத்தையோடு மலர் கொய்து

கடவுள்களை அலங்கரிக்கிறாள்

ஒரு வனிதை

அவளுக்கு

கனவுகள் இல்லை

கண்ணீர் இல்லை

பயமும்

பக்தியும் கூட இல்லை.

இந்த உலகில்

மலர்கள் இருக்கின்றன

என்பது தவிர 

அவளுக்கு வேறொன்றுமில்லை.

- இசை

***

மூன்று வேகத்தடைகள் கொண்ட வாழ்வு

என் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மொத்தம்

மூன்று வேகத்தடைகள்

முதலாவது – மிக எளிமையான மலையேற்றம்

எவ்வளவு பெரிய அவசர வேலை என்றாலும்

என் பரபரப்பைக் குறைத்து கவனமாக வழியனுப்பும்

இரண்டாவது – ஒரு உறைந்துபோன பேரலை

பகல் ஆனந்தமாய் எரியும் பொன்கொன்றையின் நிழலை

இளைப்பாறவேண்டி சற்று கைமாற்றாக தந்தனுப்பும்

மூன்றாவது – அடிக்கடி தொந்தரவு செய்யும் இடை வீக்கம்

எதிர்பாராத நேரத்தில் பூதாகரமாய் இடைமறித்து

நம்பிக்கையோடு திட்டமிட்ட முடிவுகளை நிறுத்தி

இரக்கமின்றி வந்தபாதையிலேயே திருப்பி அனுப்பும்.

நான்காவதோ – எந்த கணக்கிலும் வராத கானல்மேடு

அன்றாடங்களினால் அமிழ்த்தி அமிழ்த்தி

அடையாளம் தெரியாதளவுக்கு மாறிவிட்டதன் தோற்றம்கண்டு

நானும் சாதாரணமாய் கடந்து வந்திருப்பேன்

பின்னர் யாரேனும் சொல்லித்தான் தெரியவரும்

ஒருசில விஷயங்கள் ஒருகாலத்தில்

எவ்வளவு தூரம் போற்றப்பட்டன என்று.

-    பெரு விஷ்ணுகுமார்

***


***
Share:

சில கவிதைகள் - 2

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா” என்று

அண்ணாந்தேன்…

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.

-    பிரமிள்

***



இதன் பொருள் இது தான் என்று

சரிந்து

மெல்ல விழுகிறது வேப்பம் பூ

இதன் பொருள் இது இல்லை என்று

கனிந்து

உதிர்கிறது வேப்பம் பழம்

சரியும் பூவையும்

உதிரும் பழத்தையும்

பொருள் தேடிப் பொறுக்கும்

என்மீது

பருவங்களின் கணவாயில்

வீசும்

காற்று

கசப்பில்லை

கசப்பில்லை

- ஷாஅ

***

அழுகையை முழுங்கு

என்றாள் அம்மா

அதன் ருசி என்ன

என்று அறிவதற்குள்

அவசரமாய்

விழுங்கிவிட்டேன்

சிரி என்றாள்

தொண்டைக்குள் இனித்தது

அது

- மதார்

***

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

எதிர்வினைகள்

(ஜூலை 2024 'கவிதைகள்' இதழில் வெளியான க.நா.சு.வின் 'தமிழில் புதுக் கவிதை' கட்டுரைக்கான எதிர்வினைகள். பலரது பேஸ்புக் பதிவுகள் மற்றும் மறுமொழிகளில் இருந்து தொகுக்கப்பட்டது.)

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

கவிஞர் க. மோகனரங்கன்:

தமிழில் புதுக்கவிதை ஒரு இலக்கிய வகைமையாக அங்கீகரிக்கப்படாத காலத்தில், சோதனை முயற்சிகளாகவே கருதி சிலரால் முயன்று பார்க்கப்பட்ட ஒரு சூழலில் புதுக்கவிதை என்பது எதிர்வரும் காலத்தில் எப்படி உருவெடுக்கக் கூடும் அதன் இலட்சணங்கள் எவையெவையாக அமையும் என்கிற அனுமானத்தில் க.நா.சு எழுதிய கட்டுரை ஒன்று சரஸ்வதி ஆண்டுமலரில் 1959 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. இன்று படிக்கும்போதும் அதன் பொருத்தப்பாடு மங்கிவிடாமல் துலங்கவே செய்கிறது. ஒரு புதுக்கவிதைக்கு இருக்கவேண்டிய இலட்சணங்களாக அன்று அவர் குறிப்பிடும் நான்கு விஷயங்கள் இன்றைக்குமான இசைவுடன் இருக்கின்றன.

கவிதைகளுக்காக தனிப்பட்ட இணைய இதழாக நண்பர்கள் மதார், நவின் ஆகியோரின் முன்னெடுப்பில் வெளியாகிவரும் kavithaigal.in ல் இக்கட்டுரையை வாசிக்கலாம்.

***

'காலச்சுவடு' கண்ணன்:

'எழுத்து' இதழில் இதே பொருளில் க.நா.சு. எழுதிய ஒரு சிறிய ஆனால் முக்கியமான குறிப்பு அனேகமாக இதே ஆண்டில் வெளியாகியுள்ளது.

***

கவிஞர் அதியமான்:

க.நா.சு முழுக் கவிதைகள் தொகுப்பு நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. வாரம் ஓருமுறை இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்துகொள்கிறேன். இக்கட்டுரை எனக்கு நிறைய வெளிச்சத்தை கொடுத்த ஒன்று.

***

மண்குதிரை:

பகிர்வுக்கு நன்றி. இந்தக் கட்டுரையில் உள்ள புதுக்கவிதை லட்சணங்களை மேற்கோள் காட்டி ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார்.

***
க.நா.சு.வின் கவிதை இயல் கட்டுரை (தமிழ் இந்து பதிவு):

தமிழில் இன்று நிலைபெற்றுள்ள புதுக்கவிதை வடிவத்தை பாரதியார் தொடங்கிவைத்தார் எனலாம். ஆனால், அதற்குப் புதுக்கவிதை எனப் பெயரிட்டு, அதன் லட்சணங்களை மதிப்பிட்டு எழுதியவர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம். இந்த நவீனக் கவிதை இயல் குறித்து க.நா.சு. எழுதிய கட்டுரை ஒன்று 1959இல் ‘சரஸ்வதி’ ஆண்டு மலரில் வெளியாகி விவாதிக்கப்பட்டது. அந்தக் கட்டுரை www.kavithaigal.in இணைய இதழில் மீள் பிரசுரம் கண்டுள்ளது. ‘தமிழில்‌ புதுக்‌கவிதையின்‌ அவசியத்தைப்‌ பற்றிய வரையில்‌ எனக்குச்‌ சந்தேகமில்லை. மரபுக்‌ கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்‌கொண்டிருக்கிறது) புதுக்‌கவிதை தோன்றியே தீரும்‌’ என இந்தக் கட்டுரையில் புதுக்கவிதையின் வீச்சைத் தீர்க்கமாக மதிப்பிட்டுள்ளார் அவர்.


***


***
Share:
Powered by Blogger.

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB   கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive