இம்மாத கவிதை இதழ் கவிஞர் அபியின் சிறப்பிதழாக வெளிவருகிறது. கவிஞர் அபி 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தார். இம்மாதம் 22 ஆம் தேதியோடு தனது எண்பது வயதை நிறைவு செய்கிறார்.
கவிஞர் அபி தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார். இதுவரை இவரின் மூன்று கவிதை தொக்குப்புகள் வெளிவந்துள்ளன.
- மெளனத்தின் நாவுகள் (1974)
- அந்தர நடை (1978)
- என்ற ஒன்று (1987)
அவரது எல்லா கவிதைகளையும் தொகுத்து அபி கவிதைகள் (2003) - கலைஞன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இப்போது உள்ள மூன்றாம் பதிப்பு அடையாளம் பதிப்பகம்.
தமிழின் பெருங் கவிஞரான அபியின் எண்பது அகவை நிறைவை மரியாதை செய்யும் வகையில் இம்மாத இதழ் அவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த மாத இதழை அவரது பத்து கவிதைகள் அடங்கிய சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
- ஆசிரியர் குழு
ஒருவர் விடைபெறுகிறார். ஒருவர் வழியனுப்புகிறார். அவ்வளவுதான். புன்சிரிப்பு, பெருமூச்சு, பார்வைப் பரிமாற்றம் என எல்லாமே அக்கணத்தில் நிகழ்கின்றன.
இதுதான் கவிதைக்குரிய சித்திரம். இந்தச் சித்திரத்தைத் தீட்டும்போதே, அபியின் தூரிகை இன்னொரு சிறியதொரு சித்திரத்தையும் தீட்டிவிடுகிறது. சித்திரத்துக்குள்ளே ஒரு சித்திரம். இந்தச் சித்திரத்தில் புன்னகையை மட்டுமே இடம்பெற வைக்கிறார் அபி.
புன்னகை மானுட உருவம் கொள்கிறது. ஒயிலாக ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்தைநோக்கி அந்தரத்திலேயே அடியெடுத்து வைத்து நடந்து செல்கிறது. காதலைச் சுமந்து செல்லும் அந்த அந்தரநடையை ஓர் உயிருள்ள பாத்திரமாகவே மாற்றிவிடுகிறார் அபி.
காதலர்கள் அல்லது யாரோ இருவர் விடைபெறும் கணத்தை முன்வைக்கும் கவிதை என்று அறிந்துகொண்டதுமே இயல்பாக ஒரு வாசகர் எதிர்பார்க்கக்கூடிய எதையுமே அபி அளிக்கவில்லை. ஆனால் முற்றிலும் புதிய ஒன்றை வழங்கிவிட்டுச் செல்கிறார்.
சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்ற குறிப்பே இல்லை.அவர்களிடையில் என்ன நடைபெற்றது என்கிற குறிப்பும் இல்லை. பின்னோக்கிய குறிப்புகள் எதுவுமே இல்லை. முற்றிலும் புதிய வகையில் அக்கணத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் புன்னகைக்கு உயிரூட்டி உலவவைக்கிறார். அந்தரத்திலேயே நடந்துசெல்கிறது அந்தப் புன்னகை. மனம் மிதப்பதுபோல புன்னகை மிதக்கிறது. இது அபி ஒரு சித்திரத்துக்குள் தீட்டியிருக்கும் இன்னொரு சித்திரம்.
வழியனுப்ப நீ
வந்தாலும்
வாசல் இருட்டில்
உன்முகம் தெரிவதில்லை
உன்
நிழல்குரலும்
வெறும் அசைவன்றி
வேறொன்றும் உணர்த்துவதில்லை
உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டு முன்
உருமாறும்
ஓயாமாறிகள்
பிரபஞ்சத் தூசிகளை
மூச்சிடை உள்ளிழுத்து
வெளியை
ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த
சூன்யத்தில்
நீ நான் நம்மிடை
விறைத்தோடிய மெல்லிய கோடு.
கணத்தின் சிறுதுகள்.
பிரமிப்பில்
பிரமிக்கவும் மறந்து
உன்னுடன் கைகோத்து
இடைக்கோட்டில்
அந்தர நடை பயின்றது
உண்மைதான்
எனினும்
நம்பச் செய்வது -
இல்லை -
நம்புவது எப்படி
கனவில் கண்ட ஒரு காட்சியைப் பகிர்ந்துகொள்வதுபோலவே கவிதை தொடங்குகிறது. கனவில் அவன் பார்த்ததெல்லாம் விரிந்ததொரு நிலம். கனவு என நினைத்தாலும், தான் கண்டதெல்லாம் கனவில்லையோ என்ற மயக்கமும் விவரணையாளனுக்கு இருக்கிறது. ஆனால் அது ஓர் அபூர்வமான நிலம் என்பதை மட்டும் அவன் மனம் உறுதியாக உணர்ந்திருக்கிறது.
கிழக்கு, மேற்கு என வேறுபாடற்று ஒன்றென விரிந்திருந்தது அந்த அபூர்வ நிலம். அங்கே அபூர்வமாக ஒரு மனிதன் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி நடந்துசெல்கிறான். ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஒரு பறவையும் அபூர்வமாக பறந்து செல்கிறது. அங்கே ஆணையிடுகிறவர்களும் இல்லை. தடுப்பவர்களும் இல்லை. சுதந்திரமாக நடமாடலாம். நடமாட்டமின்றி அமைதியாகவும் இருக்கலாம்.
கனவு - அன்று - கனவு
எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்று
அவனுக்காகக் காத்திருப்பதை
கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது
ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்
கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது
தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது
சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்
ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடி நிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்
கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்
- அபி