நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்
என்ற வரிகள் புலன்வழி அறிதல்களுக்கு அப்பால் ஆத்மார்த்தமாக உணரப்படவேண்டிய நாதமெனும் பிரம்மாண்டத்தை உணர்த்துபவை.
ஓடையில் கால்வைத்ததும்
புல்லரிக்கக்
காலைக் கடித்துப் போகும்
மீன் குஞ்சுகள்
தொலைவை உணராதிருக்கக்
காதில் விழும்
நட்சத்ரங்களின் சிரிப்பு
போன்ற காட்சிச் சித்தரிப்புகளில் வெளிப்படுவது நாதமன்றி நாதத்தை காண முற்படும் புலன்களின் மாயையே. அவை முழுமையான காட்சிகளாக இல்லாமல் நாதத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்த முடியாத காட்சியின் போதாமையின் எடுத்துக்காட்டாகவே இங்கு பயன்படுத்தப்படுகின்றன
நாத அலையெனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்
நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது
அலைவதன்று
என்ற வரிகளில் நாம் காணும் அலைகளுக்கு அப்பால் புலன்கள் அறிய முடியாத ஆழத்தில் அமையும் கடலெனும் பேரிருப்பாய் நாதத்தை உணர்கையில் நம் புலன்களின் மாயைகளுக்கு அப்பால் நித்தியமாக இருக்கும் பிரம்மமென நாதம் நம்முள் விரிகிறது.
***
நாதம்
நெளிநெளியாய்
மனோலயங்களைக்
காற்றில்
கோதிக்கொண்டு
வருவோர் போவோரின்
சமிக்ஞைகளைச்
சுற்றிலும் நடத்திக் கொண்டு
உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகள் கேட்டுக்கொண்டு
என்ன செய்கிறாய்?
தெருவில் இறங்கியதும்
திடுக்கென்று ஒட்டி
நடுக்கும் பனிக்காற்று
ஓடையில் கால்வைத்ததும்
புல்லரிக்கக்
காலைக் கடித்துப் போகும்
மீன் குஞ்சுகள்
தொலைவை உணராதிருக்கக்
காதில் விழும்
நட்சத்ரங்களின் சிரிப்பு
எங்கெங்கிருந்தோ வந்து
மையத்தில் எனக்
குவியும் உன்
காலடித் தடங்கள்
என்ன நடக்கிறது?
எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்
நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்
புலன்களில்
பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்
பிரமைகளின் உட்செறிவில்
தனித்திருந்து
பிரியம் வளர்க்கிறாய்
நாத அலையெனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்
நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது
அலைவதன்று
- அபி
***
மாலை தொகுப்பு கவிதைகளின் கருக்கள் கற்பனாவாதத் தன்மை கொண்டவை என்று கூறமுடியும். மாலையின் மந்திரக் கணங்களை பல்வேறு கோணங்களில் அணுகுபவை இவை. இவற்றுள் சில கவிதைகள் முதல் வாசிப்பில் ஒரு விதமான காதல் கவிதைகளோ என்றே கருதத்தக்கவை. அவை ஒரு காதலன் பிரபஞ்சத்தை அதன் எழிலின் உச்சத்தில் கண்டு வர்ணிக்கும் தருணங்களாகவே முதல் பார்வையில் தோன்றக்கூடியவை. அவற்றுள் திரும்புதல் அசாத்தியமான அழகோடு வெளிப்படும் கவிதை. அபியின் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படும் முக்கியக் கருப்பொருளான காலமே இக்கவிதையிலும் கையாளப்படுகிறது. ஆனால் அவரது அருவமான கவிமொழியும் படிமங்களுமின்றி விரிவான காட்சிச் சித்தரிப்புகளாகவே இங்கு காலம் வெளிப்படுத்தப்படுகிறது. அருவக் கவிதைகளின் முன்னோடியான அபியின் காட்சிச் சித்தரிப்புகளின் அழகும் நேர்த்தியும் முழுமையாக வெளிப்படும் கவிதை இது. மாலையை முடிவின் கணமாக உருவகிக்கும் அந்திமக் காலம், sunset of my life போன்ற சொற்கள் மிகச் சாதாரணமாக புழங்கக் கூடியவை. அத்தகைய ஒரு மாலையை கருவாகக் கொண்டே அதன் சாத்தியங்களும் ஆழங்களும் இங்கு கவிதையாக்கப்படுகின்றன. மாலையை முடிவாக அன்றி புத்துயிர்ப்பிற்கு முந்தைய ஒரு சிறு இளைப்பாறலாகவே கொண்டு கவிதை விரிகிறது.
கடந்துபோன காலங்களின்
சுவடுகள் மீது
கரித்து வளரும் புல்
போன்ற வரிகளில் காட்சிகள் முடிவாக மட்டுமின்றி புத்துயிர்ப்பாகவும் விரிகின்றன. ஒளியின் வேற்றுமைகள் அகன்று இருளில் அனைத்தும் ஒன்றென கலக்கும் இளைப்பாறலையும் மீண்டும் வரவிருக்கும் அடுத்த புலரியின் புத்துயிர்ப்பையும் ஒன்றாக உணர்த்துகின்றன. ஆனால் ஒரு நாளின், ஒரு வாழ்வின் புலரியில் சென்று மாலையில் மீளுதல் எப்படி திரும்புதலாக முடியும் என்ற கேள்வியும் இங்கு முன்வைக்கப்படுகிறது? சென்றவையும் மீண்டவையும் எப்படி ஒன்றெனக் கருதப்பட முடியும்? மாலை ஒரு இளைப்பாறல் மட்டுமே முழுமையான திரும்புதல் இல்லை.
கவிதையின் ஒவ்வொரு வரியிலும் சாயையின் மந்திர ஒளி வீசிக்கொண்டே இருக்கையில்
அதோ தொலைவில்
விளக்குப் புள்ளிகளைத்
தன்மீது தரிக்கும்
ஊரின் மாலை
இங்கே என்னருகே
எனது மாலை
பிரபஞ்ச சோகம் திளைத்து
என்ற வரிகளில் மாலை இருளில் சங்கமிக்கும் தருணம் வர்ணிக்கப்படுவது, ஒரு வாழ்வின் முழுச் சித்திரமாகவே கவிதையில் அமைகிறது.
***
மாலை – திரும்புதல்
புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை
சலிக்கிறது
கடந்துபோன காலங்களின்
சுவடுகள் மீது
கரித்து வளரும் புல்
திரும்புதலின் குற்றோசைகள்
படிந்து இறங்கி
அடிமண்ணின் உளைச்சலில்
புழுங்கி அவியும்
இது எப்படித் திரும்புதல் ஆகும்?
ஏதேதோ மூலைகளைப்போய் விழுங்கி
வெடித்து
வேறாகி வருவது
திரும்புதலா?
வாசனைகள் இருண்டு
அதனாலேயே
வடிவம் பெறுகின்றன
ஆடுகள் மலையிறங்கித்
தலைதாழ்த்தி வருகின்றன
வானம் சுற்றிலும்
வழிந்து இறங்குகிறது
பேச்சுக்கு முந்திய திருப்பம்
தயக்கங்களால் நிரம்புகிறது
இனிவரும் நூற்றாண்டுகளில்
இந்த சதுக்கம்
ஊமை வெளியாக
உறைந்து வெளிரும்
வந்தாயிற்று
அதோ தொலைவில்
விளக்குப் புள்ளிகளைத்
தன்மீது தரிக்கும்
ஊரின் மாலை
இங்கே என்னருகே
எனது மாலை
பிரபஞ்ச சோகம் திளைத்து
- அபி
***
கவிஞர் அபி விக்கி பக்கம்
அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்
0 comments:
Post a Comment