ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய்

ண்பனின் மகளின் பெயர்

மழை என்று தெரிந்தபோது

மனம் தெளிந்தது

சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்

சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே


வம்ச முத்திரை இல்லாத

ஜாதி அடையாளம் இல்லாத

உயிர்கள் அனைத்திற்கும் மேல்

சமமான ஊக்கத்துடன்

பெய்திறங்கும் மழை

முதல்முறையாக ஒரு பெண்ணின்

பெயராக மாறியிருக்கிறது


மழை போல ஒரு நல்ல பெயர்

எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறை

ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது!

குழந்தையாக இருக்கையிலேயே

அவளுக்குரிய பெயர் அமைந்துவிட்டது


மழைக்கும் இருக்குமே ஆசை

வீடாகி குடும்பமாகி வாழ்வதற்கு 

ஊருக்குப் போகவும் வீட்டுக்குச் செல்லவும்

நினைவூட்ட வேண்டிய பொறுப்பை

காலங்களாக சுமப்பவள் அல்லவா?

மூடிய கதவுக்கு அப்பால்

பிறப்புக்கு அப்பால் என்பதுபோல்

நெடுங்காலம் காத்து நின்றிருந்தவள் அல்லவா?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்

உள்ளே நுழைந்து பார்த்தவள் அல்லவா?


இனி மழை

குடையுடன்

கையில் புத்தகங்களுடன்

முற்றத்தில் இருந்தே அம்மா என்று அழைத்தபடி

வீட்டுக்குள் நுழையும்

பூனையும் அம்மாவும்

கதவைத் திறந்து

அவளை உள்ளே கொண்டுசெல்வார்கள்


மழை

மழையானபோது

எங்கெல்லாம் போனாள்?

ஓடையை தாவிக்கடந்து வருகிறாள்

சப்பணம் இட்டு அமர்ந்து

சாப்பிடுகிறாள்

கை கழுவுகிறாள்

மழை மழையில் துள்ளிக்குதிக்கிறாள்


ஆட்டோவில் ஏறிக்கொள்கிற

ஓடத் தொடங்கிய பேருந்தில் ஏறமுடியாமல்

முகம் கனத்து திரும்பிவருகிற

ஊசிபோட்டதன் வலி அகலும்வரை

தலைகுனிந்திருக்கிற

வகுப்பில் அடங்கியிருக்காத

சிரித்துக் குழைகிற

காதலிக்கிற

கொட்டாவியிடுகிற

மதியம் ஆனபின்னரும் போர்த்திச் சுருண்டு துயில்கிற

மழை


மழைக்கு

மாறாத ஜலதோஷம் என்றால்

அதற்குக் கெட்ட பெயர் என்பாரா வைத்தியர்?

ஒழுகுவதை அடைத்து என்ன செய்ய

மழை இதோ வீட்டுக்குள் அல்லவா

என்று கேலிசெய்வாரா பிளம்பர்?


எண்பது தொண்ணூறாண்டு நீளும் மழை

என்று யாராவது ஆச்சரியப்பட மாட்டார்களா

ஆ, மழை வந்துவிட்டதே

என்று சிரிக்கமாட்டார்களா தோழிகள்

[மண்புழுவும் தவளையும் காற்றும் இலையும்தானே

முன்னர் அவளுக்கு தோழியாக இருந்தார்கள்]

ஒரு வீட்டில் மட்டும் மழை

என்று முணுமுணுப்பார்களா அண்டைவீட்டார்?

சனியன்பிடித்த மழை என்று சலித்துக் கொள்ளுமா

வம்பும் புறம்பேச்சும்?

மழை என்று கேட்டதுமே

பாய்ந்து குடையை விரிப்பார்களா சிலர்?

அவள் அந்தக்குடையை

சிரித்தபடி கடந்து செல்வாளா?


மழையே

நீ வெயிலுடனா

காற்றுடனா

மின்னலுடனா

அலைபாயும் மரங்களுடனா

வயதடைந்தபின் செல்வாய்?

வயதாகும்தோறும் 

மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?


பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் பெயர்

வெளியே செல்ல விடாத பெயர்

தாழ்ந்த இடங்களில் தேங்கும் பெயர்

கொஞ்சம் போனால் சலிக்கும் பெயர்!


எத்தனை நல்ல பெயர்கள் பின்னர்

அந்தப் பெயருக்குரியவர் மட்டுமாக

அவர்கள் உண்டுபண்ணும் எரிச்சல் மட்டுமாக

ஆகிவிடுகின்றன.

மழையே

நீயும் அப்படி ஆகிவிடாதே!

-   கல்பற்றா நாராயணன் (தமிழில்: ஜெயமோகன்)

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு: தொடுதிரை மலையாளக் கவிதைகள்

வெளியீடு: விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

 

Share:

மின்னல் மின்னி - சுஜய் ரகு

முதிய குதிரை 

புதிதாகப் பார்க்கிறது 

பனியில் பூத்த மலரை

- ரியோகான் 

இலக்கிய வகைமைகளில் கவிதைகள் வசீகரமானவை. கவிதையைக் காண்கின்ற அந்த ஒரு தருணத்தில் சில்லிட்டுப்போகும் மனம் தீராத உளைச்சல்களிலிருந்தும் படிந்து பெருகிய அழுத்தங்களிலிருந்தும் மாயையாய் விடுபடுகிறது. ரியோகானின் கவிதையில் வரும் முதிய குதிரை நிகழ்காலக் குறியீடு போன்றே தோன்றுகிறது. பனிப்பாதையின் தொலைவும் பயண அலுப்புமாக சோர்வுற்றிருந்த அத்தருணத்தில் சற்றைக்குமுன் மலர்ந்த ஒரு மலரைத் தந்து நெகிழ்த்துகிறது இயற்கை. அக்கணமே துயர கணங்களிலிருந்து சட்டென்று விடுபடுகிறது நிகழ்காலம். கவிதையின் திறப்பு அந்த வசீகர மலரைப் போன்றதுதான். 

இருபது பனிநிறை மலைகளின்

மத்தியில் ஒரே ஒரு சலனம் 

கருங்குருவியின் கண்

- வாலஸ் ஸ்டீவன்ஸ் 

கண் முன்னால் மிகப்  பிரம்மாண்டமான பனிமலைகள் காட்சிப்படும்போது அவற்றிற்கு மத்தியில் தோன்றும் 

ஒரு துளி கருங்குருவியின் கண் தான் நம்மைச் சலனத்திற்குள்ளாக்குகிறது .

கவிதைகளோடு வாழ்கிறவர்கள் பிரம்மாண்டமாய் சூழும் உணர்வுகளிடையே 

துளிச் சலனத்தைக் காண முயல்கிறார்கள். அச்சலனமானது எப்படிப்பட்ட  புறவியக்க சீற்றங்களையும் தோற்றுப்போகச் செய்கிறது. மேலும் சொற்களைத் தேடும்போதும் கண்டடையும்போதும் ஒருவித அகத்திறப்பு தானாய் நிகழ்கிறது. முன்னர் கண்டிராத பிரபஞ்சங்களை அதன்மூலம் நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

இரவில் ஒரு நட்சத்திரமும் 

எஞ்சியிருக்கப் போவதில்லை

இரவும் கூட மிஞ்சியிராது 

நான் இறப்பேன் 

என்னோடு சேர்ந்து 

சகிக்கவியலாத இப் பிரபஞ்சத்தின் 

எடையும் இல்லாதொழியும்

அன்றாட வாழ்க்கை தரும் இன்னல்களையும்  அல்லல்களையும்  சக மனிதரோடு பகிர்ந்துகொள்ள ஒருபோதும் மனம் இசைவதில்லை. இதில் சமரசம் கொள்ளாத காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடம் ரகசியங்கள் பல்கிப் பெருகிவிட்டன. நன்மையோ தீமையோ அவற்றின் தீர்வுகளைக் காண சுயரகசியங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தனி மனித சுதந்திரம் தனிமனித வாழ்வோடு புழுங்கிக்கொண்டுள்ளது .

கவிதைக்குள் சஞ்சரிக்கும் ஒருவன் இதையெல்லாம் எளிதாக உடைத்தெறிகிறான். தற்கொலை குறித்த மேற்சொன்ன போர்ஹேவின் வரிகளில் மனத் தீவிரத்தின் நிலைப்பாடானது கவிதைக்குள் எளிதாகத் திணிவதைக் காண்கிறோம். 

மேலும் எந்த் தடைகளையும் காணாமல், 

பிரமிடுகளை பெரும் பதக்கங்களை 

கண்டங்களை, முகங்களை 

நான் துடைத்தழிப்பேன் 

என்கிறார் போர்ஹே 

ஒரு கவிஞனின் தற்கொலை இப்பிரபஞ்சத்தின் முகமூடிகளை கழற்றி எரிகிறது. அதன் நிகரற்ற சாரம் தனிமனித இழப்பில் தவிடுபொடியாகிறது.

மேலும் தொட்டழிப்பேன் 

இறந்த காலத்தின் சேகரங்களை 

வரலாற்றைப் பொடித்துத் தூசியாக்குவேன் 

தூசியிலும் தூசியாக  

போர்ஹே இவ்வரிகளின் வழியாக விடுதலை அடைந்து விடுகிறார். நினைவுகளில்  வரலாற்றை சிதைத்த கணத்தில் அவருக்கும் அவரை மனத்தீவிரத்திற்குள் தள்ளித் துயருரச்செய்த  இப்பிரபஞ்சத்திற்குமான உறவு அத்தோடு அறுந்து போகிறது . கடைசியில் அவர் 


நான் இப்போது 

இறுதியாகக் காண்கிறேன்

சூரியன் மறைவதை 

கடைசிப் பறவை 

கரைவதைச் செவிமடுக்கிறேன் 

நான் கையளிக்கப்போவதில்லை 

எவர் ஒருவருக்கும் வெறுமையை

என்று சொல்லி முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார். தன்  வெறுமையை இவ்வுலகிற்குக்  கையளிக்க விரும்பாத மனிதனாக கவிஞனால் மட்டுமே ஆக முடிகிறது. கவிஞனுக்கும் உலகிற்குமான உறவு தூய்மையிலும் தூய்மையானதாக இம்மண்ணில் நிலைபெற்றுவிடுகிறது. "கவிதைக்குள் எல்லாம் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன" என்கிறார் நிக்கனோர் பர்ரா. வாழ்வின் சஞ்சலங்களையும் அனுகூலங்களையும் வெகு இயல்பாக அவனால் கவிதைகளிடம் பகிர்ந்துகொள்ளமுடிகிறது . சக மனிதனிடம் உள்ள விருப்புவெறுப்பு ஏற்புமறுப்பு  போன்ற எவ்வித உணர்வு பேதங்களையும் கவிதைகள் கொண்டிருக்கவில்லை. வாழ்வில் சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும்  ஒருவனை இயங்கச் செய்கின்ற சிறப்பைக் கவிதைகளே கையளிக்கின்றன. 

அதே சமயத்தில் பந்த பாச மதிப்பீடுகளைக் கவிதைகள் துச்சமாக்குகின்றன. பிரபஞ்சத்தின் தன்னிச்சையான இயக்கம் போன்றொரு உந்துவிசை கவிஞனையும் கவிதையையும் இணைக்கின்றது. பிரிவும் பரிவும் தத்தம் தீவிரத்திலிருந்து விடுபட்டு ஒரே எடையுள்ள உணர்வுகளாய்  சொற்களில் இலகுவாகின்றன. 

மலையையும் மடுவையும் ஒரே சமமான நித்தியத்துவற்குள் அடக்கிவிடுகிறான் கவிஞன். காற்றின் தொலைவும் கடலின் இருப்பும் இரண்டுமே ஒன்றுதான் அவனைப் பொருத்தவரை.கவிஞனுக்கு பறத்தல் சாத்தியமில்லை. ஆனால் பறவைகளைவிடவும் மேலான நம்பிக்கையையும் கனவுகளையும் லட்சியமாகக் கொண்டுவிடுகிறான்.

அந்த லட்சியமே அவனை வானையும் நிலவையும்  நட்சத்திரங்களையும் எளிதாக ஸ்பரிசிக்க வைக்கின்றது.

விடிகாலையில் ஒரு வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு முயல் குறுக்காக ஓடியதை எங்களில் ஒருவர் விரல் நீட்டி சுட்டினார். அப்போதுதான் அம்முயலை காண நேர்கிறது. இந்தச் சம்பவம் நடந்து வெகுநாட்களிகிவிட்டது. இப்போது யாருமே இல்லை. அந்த முயலும் கூட இல்லை. ஆனால் அந்த முயலோடும் திசையைச் சுட்டிய விரலும் அவ்விரலிலிருந்து வியப்பாக கணப்பொழுதில் எழுந்த மின்வெட்டும் காலத்திற்கும் அணையாமல் மனதில் ஒளிர்ந்துகொண்டிருப்பதாக "ஸெஸ்லாவ் மிலோஸ் " என்பவரின் கவிதை வரிகளில் வருகின்றன. கவிஞனால் மட்டுமே அந்த மின்வெட்டையும் வியப்பையும் காலம்தாண்டியும் கடத்தவியலும். இவ்வித கவிதைகளின் வியப்பானது வரலாற்றில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

***

ரியோகான் - Taigu Ryokan

வால்ஸ் ஸ்டீபன் - Wallace Stevens

போர்ஹே - Jorge Luis Borges

***

Share:

இரண்டு மொழியாக்கக் கவிதைகள் - கடலூர் சீனு

தயையுண்டு கடவுளுக்கு; மழலையர்தோட்ட குழந்தைகள் மீது

தயையுண்டு

கடவுளுக்கு  மழலையர்தோட்ட குழந்தைகள் மீது. 


பள்ளிக் குழந்தைகள் மீது 

அவருக்கு தயை குறைவே.


வளர்ந்தவர்கள் மீது அவருக்கு இரக்கமே இல்லை. 

அவர் அவர்களை  தனியே விட்டுவிடுகிறார். 


சிலநேரங்களில்

குருதியால் மூடுண்ட அவர்கள் 

முதலுதவி மையம் சேர

 நான்கு கால்களாலும் தவழ நேர்கிறது 


எரிமணலில். 


ஆயினும்  

ஒருவேளை அவர் மெய்யான காதலர்களைக் காண நேர்ந்தால் 

அவர்கள் மீது கருணையே கொள்வார் .


பொதுஇருக்கையில் உறங்கும் முதியவருக்கு மேல் 

உயர்ந்து நிற்கும்  தருபோலும்    

புகலிடம் தருவார் .



ஒருவேளை

நாமும் கூட அவர்களுக்கு அளித்திடுவோம் 


சேவைக்கென்று 

அன்னை நமக்கு கையளித்த அந்த  

இறுதி  அரிய நாணயங்களை. 


அதன்பொருட்டு அவர்களின் ஆனந்தம் நம்மைக் காக்கும்.

இப்பொழுதிலும் பிற  தினங்களிலும் .

(எஹுதா அமிக்ஹாய்)

எளிய நேரடியான கவிதை. காதலை, குழந்தைமையின் பரிசுத்தத்துக்கு இணை வைக்கிறது. பள்ளி துவங்கி அறிவுக்கனி புசித்து மெல்ல மெல்ல வளரும் மனிதனை, கடவுள் கைவிட்டே விடுகிறார். அவன் உடலெல்லாம் குருதி வழியும் ரணமாகி பாலை மணலில் ஊர்ந்து செல்லும் நிலை வந்தாலும் அவர் கருணை கொள்வதில்லை.

சேவைக்கென அளிக்கப்பட்ட அரிய இறுதி நாணயங்கள். வறியவனின் பசி தீர்க்கவோ, நோயாளியின் பிணி தீர்க்கவோ அல்ல, லௌகீகக் கவலை இன்றி காதலர்கள் தங்கள் காதலில் திளைத்துக் கிடக்கவென செலவு செய்யப்படுவதை விட பெரிய சேவை என்ன இருக்க முடியும்.

துயர்மிகு லெளகீக வாழ்வுக்கு எதிராக ஆனந்தக் காதல் வாழ்வு, எரிமணல், தருநிழல் போன்ற எதிரிடைகள் கவிதைக்கு உயிரோட்டம் அளிக்கின்றன. மூச்சு முட்ட செய்யும் யதார்த்த உலகம் கண் எதிரே நிற்கையில் அதை உதறி எழுந்து கடவுளின் கருணையின் கீழ் குழந்தைகளாகவோ காதலர்களாகவோ நம்மை வாழ்ச்சொல்லும்  இக்கவிதை அளிக்கும் ஒரு வித ஆறுதல் ஆசுவாசம் அலாதியானது.

காற்று, நீர் ,கல்

நீர்  நிறையழிக்கிறது கல்லினை   ,

காற்று சிதறச்செய்கிறது நீரினை ,

காற்றினைத்  தடுக்கிறது கல்.


நீர்,காற்று,கல்.


காற்று செதுக்குகிறது கல்லினை. 

கல்லின் ஒரு கோப்பை நீர் .

தப்பிய நீர் காற்றென்றாகிறது.


கல்,காற்று,நீர்.


காற்று இசைக்கிறது சீழ்க்கையில். 

நீர் முணுமுணுக்கிறது செல்கையில். 

அசைவற்ற 

கல் நிலைத்திருக்கிறது.  


காற்று,நீர் ,கல்.



அவற்றின் வெற்றுப் பெயர்களை ஊடுருவிக் 

கடந்தும் மறைந்தும்.


ஒவ்வொன்றும் மற்றதாகவும்,

பிறிதென அல்லாததாகவும்.


நீர், கல், காற்று.


(ஓக்ட்டேவியோ ப்பாஸ்)

பௌர்ணமி நாளில் கொந்தளிக்கும் குமரி முனை கடற்கரையில் நின்றால் கண்ணுக்கு சிக்கும் சிறு காட்சி போல விரியும் கவிதை.


ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டு இயங்கும் ஆற்றல். ஆற்றல்கள் மோதி முயங்கி ஒவ்வொன்றின் தன்மையும் கலங்கி, காண்பவை யாவும் ஒரு பெரிய கொந்தளிப்பான இயக்கம் மட்டுமே. 


மாறிக்கொண்டே இருக்கும் இவை ஏதும் நிறைநிலையில் இல்லை. நிறைநிலையில் இல்லாத இவற்றுக்கு சாராம்சம் என ஒன்று எவ்விதம் இருக்கும்? 


காணும் இவற்றின் நிலையற்ற, நிறையற்ற, சாரமற்ற தன்மை மேல் கவிந்திருக்கும் வெற்றுப் பெயர்களை கடந்து நோக்கினால் எஞ்சுவது என்ன? 

***

பின்குறிப்பு: 

“God has Pity on Kindergarten Children” (by Yehuda Amichai)

wind, water, stone 

(BY OCTAVIO PAZ _

TRANSLATED BY ELIOT WEINBERGER)

for Roger Caillois

எனும் தலைப்பு கொண்ட இரண்டு ஆங்கில கவிதைகளை எனக்கென நான் செய்து வைத்துக்கொண்ட மொழியாக்கம் இது. (இப்படி எனக்கென மொழியாக்கங்களை அவ்வப்போது நான் செய்து வைத்துக்கொள்வதுண்டு)

நான் ஆங்கிலப் புலமை கொண்டவன் அல்ல. அகராதிப் பொருள் சார்ந்தும் எனது மொழி ரசனை கொண்டும் கவிதையின் உடலும் ஆன்மாவும் கெடாமல்  நான் எனக்கென, நெகிழ்வான  இம்மொழியாக்கங்களை செய்து வைத்துக்கொள்ளக் காரணம், இக்கவிதைகளை என் தாய்மொழியில் எழுதிப் பார்க்கையில் கிடைக்கும், நானே இக்கவிதையின் படைப்பாளி என்பதை போன்றதொரு தன்மய பரவச உணர்வை அனுபவிக்கவே.

***

எஹுதா அமிக்ஹாய் - Yehuda Amichai

ஓக்ட்டேவியோ ப்பாஸ் - Octavio Paz

***


Share:

நீரின் திறவுகோல் - சுஜய் ரகு

சில நாட்களாகவே எப்போதும் கையில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட சிறந்த கவிதைளை உள்ளடக்கியுள்ளது. மொழிபெயர்ப்பும்  நம்மொழிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் வாசிப்பிற்கு எத்தடையுமில்லை. நம் புத்தக அலமாரியில் கவிதைகளுக்கென்றொரு பகுதி இருந்தால் சர்வநிச்சயமாக இந்த புத்தகத்திற்கான இடத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். இப்பபுத்தம் இல்லாமல் கவிதைப்பகுதி முழுமையாகாது. 

நல்ல கவிதைளுக்கு அழகே சதா துடிப்போடு இருப்பதுதான். யார் வாசிக்கிறார்? எந்த மனநிலையில் வாசிக்கப்படுகிறது ? எந்த நேரத்தின் வாசிப்பு?  என்பதுபோன்ற புறவியக்கங்களுக்கு  அடங்காத துடிப்பு அது. அக்கவிதைகள் தரும் அகத்தூண்டல் அலாதியானது. அகத்தூண்டலற்ற கவிதைகள் வாசித்த கணத்தில் பனித்துளியெனக் கரைந்துவிடுகின்றன.துடிப்பான கவிதைகளே மனத்தில் நங்கூரமிட்டு நிற்கின்றன.  

"நீரின் திறவுகோல்" கவிதைகள் வியந்து அணுகும் வண்ணம் துடிப்போடுள்ளன. அவற்றைக் கரைத்துப்போடும் ஒரு காலம் இனி எப்போதும் விடியப்போவதில்லை.வாசிப்பில் சில கவிதைகள் இன்பத்திற்கு மெருகூட்டின. என் ஆற்றாமைக்கு சில கவிதைகள் தீர்வு தந்தன.வாசிக்க வாசிக்க அகத்தேடலுக்கான ஒருவித நிறைவைக் கண்டது மனம். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒரே கவிதை பலவாறான கோணங்களை எனக்கு அடையாளம் காட்டின. 

குரோ புட்டின் வாழ்வென்பது யாது?  கவிதையில் வரும் உவமைகள். நான் யூகித்திருந்த வாழ்வின் கோணங்களைத் தகர்த்துப்போட்டன. 

வாழ்வென்பது யாது?  

அது இரவில் தெரியும் 

மின்மினிப்பூச்சியின் வெளிச்சம்

அது குளிர்காலத்தில் கேட்கும் 

எருமையின் மூச்சொலி

அது புல் தரையின் குறுக்காக ஓடி 

சூரியன் மறையும்போது 

தன்னை இழக்கும் சிறிய நிழல் 


வாழ்வு எத்தனை இலகுவாகிவிட்டது கவிதையின் இறுதி வரிகளில்.

சூரியன் மறையும்போது தன்னை இழக்கும் ஒரு சிறிய நிழல்  அவ்வளவுதான் வாழ்க்கை.பெரும் பாரமென்று உழன்றுகொண்டிருந்த வாழ்வை வெட்கக்கேடானதாக உரு மாற்றுகின்றது கவிதை. கவிதையின் வரிகள் மிக எளிமையானதாக இருந்தாலும் உளவியல் ரீதியிலான பெரும் தாக்குதலை அது தொடுக்கிறது. 

கார்ல் சாண்ட்பர்க் கின் " சூப் "என்றொரு கவிதை 

புகழ்பெற்ற மனிதனொருவன் 

சூப் பருகுவதைக் கண்டேன் 

ஒரு சிறு கரண்டியால் கொழுப்புச் சாறினை எடுத்து 

தன் வாய்க்குள் அவன் திணிப்பதைக் கவனித்தேன் 

அம்மனிதனின் பெயர் அன்றைய நாளிதழில் 

தடித்த கறுப்பெழுத்துக்களால் அச்சிடப்பட்டிருந்தது 

ஆயிரக்கணக்கானவர்கள் அம்மனிதனைப் பற்றி 

பேசிக்கொண்டிருந்தனர் 

நான் பார்க்கும்போது அம்மனிதன் 

தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு 

கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான் 

சாதாரண ஒரு மனிதனின் பார்வைக்கு இன்னொரு மனிதனின் புகழ் பிம்பங்கள் குறித்து எந்த வியப்பும் இருப்பதில்லை. அவனைப் பொருத்தவரையில் தன்னைப்போல அவனும் சூப் பருகிறவன் அவ்வளவுதான்.

தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு 

கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான்

இவ்வரிகளிலிருந்து பார்த்தால் இன்னும் தன்னிலும் கீழானவனாகவே அவனை அவன் பார்க்கிறான் என்பது புரிகிறது. புகழும் பணமும் மதிப்பும் மனித உடல் கொண்ட  அன்றாட இயக்கங்களிலிருந்து விலகிவிடுகின்றன. கோட்சூட் உள்ளிட்ட உயர் ரக உடலணிகள் எல்லாம் வெறும் அலங்காரப் பொருட்கள் மாத்திரமே. தலைகுனிந்து அவன்  உண்ணும்போது அவை உடற் சித்திரங்கள்போல உறைந்துவிடுகின்றன. 

ஒரு கடற்கரையில் ஆன்மாவிற்கும் உடலுக்குமான உரையாடலை " அன்னா ஸ்விர் "ன் கவிதை இப்படி விவரிக்கிறது.

கடற்கரையில் 

தத்துவப் பாடநூல் ஒன்றினைப்

படித்துக்கொண்டிருந்தது ஆன்மா 

அது உடலிடம் கேட்டது 

"நம்மை ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பது யார்? "

உடல் சொன்னது 

"இது முழங்கால்களை வெய்யிலில் காட்டும் வேளை"

ஆன்மா உடலிடம் வினவியது 

"நம் இருப்பு உண்மையானதில்லை 

என்பது மெய்தானா? "

உடல் பதிலளித்தது 

" நான் முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன்" 

ஆன்மா உடலிடம் கேட்டது 

"இறப்பு எங்கிருந்து தொடங்குகிறது 

உன்னிலிருந்தா அல்லது என்னுள்ளிருந்தா?

உடல் சிரித்தபடியே 

முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டியது

இவ்வுரையாடலில் உணர்த்தப்படுவது தத்தம்போக்கில் இழுபடுகின்றன ஒரே உடலில் உள்ள ஆன்மாவும் அதே ஆன்மாவைக் கொண்ட உடலும் என்பது விளங்குகிறது. தன் மீது செலுத்தப்படும் புறவியக்கங்களுக்கு ஈடுகொடுக்க ஆன்மா விரும்புகிறது. ஆனால் அதற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. தன் தாகத்தை தன் பசியை தன் சுய  லாப நஷ்டங்களை, ஓய்வை நோக்கி பாரபட்சமின்றி  உடலானது ஆன்மாவை இழுக்கிறது. இதனால் முடிவற்றுத் தொடர்கிறது ஆன்மாவிற்கும் உடலுக்குமான இழுபறி. இதை அன்னா ஸ்விர்ன் கவிதை அழகாகச் சித்தரித்திருக்கின்றது. 

இங்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என்றாலும் கூட "மனச்சிதைவு" எனும் ஒரே புள்ளியில் அவை ஒன்றுபடுகின்றன. போராட்ட குணங்களை நோக்கிப் போகவே வாழ்க்கைப் பணிக்கிறது .பகல் முழுவதும் ஓட்டமாய் ஓடி இரவுக்குள் விழுந்து விடிந்ததும் மீண்டும் எழுந்து ஓடுவதே சூழலாகிப் போனது. ஓய்வையும் உற்சாகத்தையும் ஊறுகாய்போல தொட்டுக்கொள்ளவே நேர்கிறது. 

காலையில் கண் விழித்ததும் 

உற்சாகமாக உணர்ந்தவன் 

தொலைபேசியை எடுத்து 

இன்று வேலைக்கு வரவியலாது 

என்பதை தெரிவிக்க

எனக்கு முதலாளியாக 

வாய்த்தவரின் எண்ணிற்குத் 

தொடர்பு கொண்டேன் 

உனக்கு ஏதேனும் நலக்குறைவா?

முதலாளி வினவினார்

இல்லை ஐயா 

இன்று வேலைக்கு வரவியலாத அளவுக்கு 

அதிக பூரிப்புடனிருக்கிறேன் 

நாளை சோர்வாக உணரும் பட்சத்தில் 

நேரமாகவே பணிக்குத் திரும்பிவிடுவேன் 

என்றேன் 

பெட்ரோ பியட்ரி "தொலைபேசி இணைப்பகம்" என்கிற தலைப்பில் இதை எழுதி இருக்கிறார். உற்சாகமும் பூரிப்புமாக விடிகிற ஒரு நாளைத் தக்கவைத்துக்கொள்ள  சூழலிலிருந்து நாமாகவே துண்டித்துக்கொள்வதே ஆகச்சிறந்த செயல். நேரடியாகவே இந்தக்கவிதை அதை உணர்த்துகிறது.

நாளையிலிருந்து விடுமுறை எனும் உற்சாகத்தோடு குதூகலித்தபடி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளைப்போல இவ்விஷயத்தில் நாமும் ஆகிறோம். ஆக அகச்சோர்விலிருந்து விடுபடவியலாத சூழலால் நாம் ஆட்கொண்டுவிட்டோம். அச்சூழலை பெட்ரோ பியட்ரியின் இந்தக் கவிதை ஆசுவாசப்படுத்தியது என்றுதானே சொல்லவேண்டும்!

நான் எதுவுமில்லை

நான் எதுவொன்றுமாக 

ஆகப்போவதில்லை

நான் எதுவொன்றுமாக 

ஆகப்போவதைப் பற்றி

ஆசைப்படக் கூட இல்லை

இதையெல்லாம் விடுத்து 

நான் என்னுள்ளாககொண்டிருக்கிறேன்

இந்த உலகத்துக் கனவுகளையெல்லாம்

போர்ச்சுகல் கவியான "பெர்னான்டோ பெசொவா"இதை எழுதியிருக்கிறார். நான் எதுவுமில்லை என்கிற முதல் வரிக்கும் நான் என்னுள்ளாகக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்துக் கனவுகளை எல்லாம் "என்கிற இறுதி வரிக்குமான அழகான முரண்தான் கவிதையைப் பேசுபொருளாக்குகிறது. தன் சேகரங்களிலிருந்து எப்போதுமே முற்றாக விலகிக்கொண்டுவிடுகிறான் கவிஞன். சொற்களின் வழியாகவே அவனுடைய அவதானிப்புகளில் உள்ள பிரமிப்பும் ஆழமும் வெளிப்படுகின்றன. எதுவுமில்லை என்பவனிடம் அவனுக்குள் திரண்டு பீறிடும் சொற்களே அவனை அவனுள்ளாக நிரம்பி வழியச் செய்கின்றன. கவிஞன் மட்டுமே தன்னிலிருந்து தன்னையே விலக்கிக்கொண்டு அந்த வெறுமையின் வழியாக நிறைவைக் கண்டடைகிறான். 

நீரின் திறவுகோலை ஒரு வானப் புத்தகம் எனலாம். மேகமாக நிலவாக நட்சத்திரங்களாக சூரியனாக பறவைகளாக கவிதைகள் இவ்வானில் சிறகடித்து ஒளிர்கின்றன. 

கவிஞர் க.மோகனரங்கன் அவர்கள் சிறந்த அர்ப்பணிப்பை மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார்.எக்காலத்திலும் நிலைத்து நின்று வாசிப்பில் கொண்டாடப்படும் இந்த  "நீரின் திறவுகோல்"  கவிதைப் புத்தகம்

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு: நீரின் திறவுகோல்

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

*** 

***

Share:

சந்திரா தங்கராஜின் வேறு வேறு சூரியன்கள் - மதார்

கால்களை இழுத்தபடி நடக்கும் மழை

ஒரு நிமிடம் கூட விடாத மழை 

எந்த பறவையும் குரல் எழுப்பவில்லை 

அனைத்தும் நனைந்தபடி எங்கிருக்கின்றனவோ 

என விசனம் கொள்கிறேன்.

என் கண் முன்னே ஒரு மனிதன் 

மழையில் கால்களை இழுத்துக்கொண்டு நடந்து போகிறான் 

எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது 

நான் அவனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் "எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது" என்ற வரியில் கவிதை நிறைந்துவிடுகிறது. மொத்த மழையும் அவன் மேல் பொழியும்போது அவன் மழையும் ஆகிவிடுகிறான் என்பது கவிதையின் தலைப்பாகிவிடுகிறது. அழகான கவிதை...

இந்தத் தொகுப்பில் பொடி மீன் என்ற இன்னொரு கவிதையும் அழகானது. 

பொடிமீன்

ஆற்றின் கரையோரம் நடந்து செல்கிறேன் 

ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் 

தீபத்தை போன்று ஒளிர்கிறது சூரியன் 

நதியில் இறங்கி மல்லாக்க மிதக்கிறேன் 

நெஞ்சின் வெறுப்புகள் எல்லாம் நீரில் கரைகின்றன 

இப்போது நான் ஒரு பொடிமீன் 

எளிதில் வலைவிரித்து பிடித்துவிடலாம் 

எனக்கென்று இனி புதிதான தீமைகள் எதுவும் 

வரப்போவதில்லை.


ராணி திலக்கின் ஒரு கவிதை உண்டு. 

நான் சின்னஞ்சிறு

குற்றங்கள் செய்வேன்

சின்னஞ்சிறு மலர்களாகப்

பிறப்பேன் 

இந்தக் கவிதையில் கவிஞர் எளிதில் வலைவீசிப் பிடித்துவிட முடிகிற பொடி மீனாகிவிடுகிறார். தன் கையில் தானே ஒரு பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்ப்பது மாதிரியான கவிதை. இதே போல இன்னொரு கவிதை

அணையாச் சிதை

இப்போதெல்லாம் என் கனவில் 

நதிக்கரையில் எரிந்து கொண்டிருக்கும் 

அணையாச் சிதை ஒன்று 

அடிக்கடி வருகிறது.

மகரந்தசுடர் போன்ற தீப்பொறி 

விழாக்கோலமாய் வெளியில் பறக்க, 

உடலின் நறும்புகையை எடுத்துக்கொண்டு 

பறவைகள் எங்கேயோ பறந்து செல்கின்றன.

காற்றில் செஞ்சுடரின் களி நடனம்.

நான் எரிந்துகொண்டிருப்பதை 

நானே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் 

படகோட்டி காத்திருக்கிறான் 

என்னை மறுகரைக்கு கூட்டிச் செல்ல.

இதுவும் தன் கையில் தானே பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்க்கும் கவிதைதான். இரண்டு கவிதைகளும் துயரத்தை அல்லாமல் நிறைவையே பேசுகின்றன. தொகுப்பின் முதல் கவிதை அழிக்கத் தெரியாத ரப்பர்

அழிக்கத் தெரியாத ரப்பர்

நிறுத்தி நிறுத்தி அழும் காயம்பட்ட சிறுமியைப்போல 

சூரியன் விட்டுவிட்டு ஒளிர்ந்தது.

என்னதான் நடக்கிறதென 

என்றோ மூடப்பட்ட என் சாளரத்தை திறந்து பார்த்தேன் 

எதிர் திசையில் மண்சுவரில் படர்ந்திருந்த பூசணிப் பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும் 

வெயிலற்ற பொழுதில் ஒரு மாதிரியுமாய் நிறம் கொண்டிருந்தன.


முன்பு அங்கொரு வீடிருந்தது 

அங்கே துணிகளுக்கு அடியில் தாழம்பூ மணக்கும் 

அம்மாவின் தகரப்பெட்டியும் இருந்தது 

அதில் ஒரு சின்ன நெளிவு 

அவளின் முடிக்கற்றையைப்போல அவ்வளவு அழகாக.


வாரத்திற்கொருமுறை 

அம்மா ஏற்றும் அகல்விளக்கு ஒளி நிழல்களில் 

கருமையாய் படிந்திருந்தன எங்களின் லட்சம் துயர்கள் 

வீட்டுப்பாடங்களை எழுதும்போது, 

ஆப்பிள் வாசனை வரும் பென்சில் அழிப்பான்களால் அவற்றை அழித்தோம். 

ஆனால் அம்மாவின் துயர் மட்டும் 

ஆப்பிள் வாசனையோடு மிஞ்சிப்போனது. 

கவிதையின் துவக்கமே சூரியனை நமக்கு அறிமுகம் செய்வதுதான். விட்டுவிட்டு அழுகிற சிறுமியென விட்டு விட்டு ஒளிர்கிற சூரியன் அறிமுகமாகிறது. அப்படி விட்டு விட்டு ஒளிர்கையில் பூசணிப்பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும், வெயிலற்ற சமயம் ஒரு மாதிரியும் இருக்கின்றன. இறுதியில் அம்மாவின் துயர் வாசனையாக மிஞ்சி நிற்கிறது. திரைப்படங்களில் ஒரு நிலக்காட்சியை, ஒரு இயற்கைக் காட்சியை காட்டிவிட்டு ஒரு கதாபாத்திரத்தின் முகம் அறிமுகமாவது போல் இந்தக் கவிதையில் சூரியனின் வழி கவிதை ஆரம்பமாகி அம்மாவில் முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு இந்தக் கவிதையில் இயற்கை (சூரியன்) அறிமுகமாவதற்கு ஒரு சிறுமியின் முகம் தேவையாய் இருக்கிறது. ஆக மேலும் கீழும் காட்சிக் கோணங்கள் மாறாமல் அடுத்தடுத்து நகர்வது போன்ற உணர்வை வாசிப்பில் கவிதை தருகிறது. சிறுமியும் சூரியனும் வெயிலும் பூசணிப்பூவும் அம்மாவும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். 

இந்தத் தொகுப்பில் வரும் உருத்திரளாத நிலவு பவளமல்லி மரத்திற்கிடையே உடைந்து நிற்கிறது என்ற வரி அழகானது. 

வாழ்விடம் பதிலேதும் இல்லை

ஆனால் அதன் ரெக்கைகள் மட்டும் படபடத்தன.

என்ற வரியும்..

"அன்னமிடுதல்" என்ற கவிதை கனவுகளுக்கு உணவிடுவதைப் பற்றியது

அன்னமிடுதல்

என் கனவுகளில் குதிரைகளின் உடல்கள் துண்டாக்கப்படுகின்றன 

என்றேன் பாட்டியிடம் 

"ஒரே கனவா" எனக்கேட்டாள் 

இல்லை வெவ்வேறு கனவுகள் வெவ்வேறு குதிரைகள் என்றேன். 

"மாமிசங்களைத் துண்டாக்கி காய வை" என்றாள் 

குதிரை மாமிசம் உண்ணக் கூடாதில்லையா என்றதும் 

"அது உனக்கல்ல உன் கனவுகளுக்கு" என்றாள் இப்படித்தான் தொடங்கியது 

கனவுகளில் கண்டதையெல்லாம் மாமிசமாக்கி 

உப்பிட்டு கனவுகளுக்கு உணவிடுவது.

இதே போல "ஐந்து ஐந்தாக" என்ற கவிதையும் வினோதமானது.

ஐந்து ஐந்தாக

அவள் அன்று வலது கையில் கடிகாரம் அணிந்திருந்தாள் 

அது ஐந்து நிமிடம் தாமதமாக ஓடியது.

அதை உணர்ந்த ஐந்தாவது நொடியில் 

பின்னுக்குத் திரும்பிப்பார்க்கிறாள்

அவன் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துகொண்டிருந்தான் 

பின் ஐந்து மணி நேரம் 

ஐந்து நாள் 

ஐம்பது வாரம் 

ஐநூறு மாதம் 

ஐந்தாயிரம் வருசம்

ஐம்பதாயிரம் நூற்றாண்டு தாமதமாகி காணாமல் போய்விட்டான்.

தொகுப்பில் வரும் தரிசனம் எளிமையுடன் அழகும் ஆழமும் திகழும் கவிதை.

தரிசனம்

பிரார்த்தனையெல்லாம் இல்லை

சூரியன் குன்றுக்குப் பின்னே அஸ்தமிப்பதை காண்பதற்காகத்தான்

தாமஸ் மௌண்ட் தேவாலயத்திற்குச் செல்கிறேன்

ஏசுவும் அதே காரணத்திற்காகத்தான் அங்கிருப்பதாகச் சொன்னார். 

***

சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு : வேறு வேறு சூரியன்கள்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:
Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive