இவ்வாண்டு (2021) விஷ்ணுபுரம் விருது பெறும் விக்கி அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம்
***
ஆண் பெண் ஆடல் என்பது என்றும் நிறைவடையாதது. எப்போதும் சொல்லித் தீராதது. அந்த ஆடலுக்கு சுந்தரனும், மீனாட்சியும் விதிவிலக்கல்ல.
சொக்கன் தன் திருவிளையாடலை என்றும் எவரிடமும் ஆடிய வண்ணமே நிற்கிறான். ஆடிக் கொண்டே முயலகனை காலின் கீழ் வைத்துள்ளான். கண்டத்தை கழுத்தின் நுனியில்.
எல்லாம் ஆடவல்லானின் ஆடவல்லமை எனத் தோன்றும் கணம் கவிஞன் அதனை ஆட்டி வைக்கும் ஆடவல்லமையை கண்டடைகிறான் அதன்பின் அவன் வாழ்வில் துன்பமில்லை, துயரமில்லை, இன்பநிலை வெகுதூரமில்லை.
நீ எங்கு வேண்டுமானாலும் ஆடு, என்ன வேண்டுமானாலும் ஆடு உன் திருவிளையாடலுக்கு நான் என்றும் பயந்து நின்றதில்லை. என்னை காக்கும் ஆதி தேவி என்னுடன் இருக்கிறாள் என விக்ரமாதித்தனின் இந்த கவிதை வரிகளை இரு ஆடவல்ல சக்தியை அறிந்த சித்தனின் வெளிச்சப்பாடு என்றே வாசிக்கத் தோன்றுகிறது.
- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
***
இனி ஒரு துன்பமில்லை
ஒரு சோகமில்லை
என்னை
இப்படியெல்லாம்
கஷ்டப்படுத்தாதே நண்பா
என்னை
கேள்வி
கேட்காதே சகோதரி
என்னை
எதிர்த்து
பேசாதே இவளே
காளிக்கு
இருக்கிறது
ஒரு தனிச் சுடலைக்காடு
நடராஜரை
நம்பியே
நாற்பது கோடி சில்வானத்துக்குக்
குடிபடைகள்
அவன் மார்பழகு
எவளுக்குச் சொந்தம்
சிவகாமிக்கு
சொந்தம்
போட்டி போட்டு
ஆடும் கறுத்த காளி அறிவாள்
அவன்
பாகீரதியை மறித்துச் சிரசில்
ஏந்திக் கொண்டவன்
சோமனின் சாபம் மாற்ற
சூடிக்கொண்ட சுந்தரன்
பிச்சைக்குப் போனாலும்
பூதகணங்களை இட்டுச் செல்லும்
பேரழகன்
அவனழகு
எவனுக்கு வரும்
இளமான்
அவன் விழிபார்த்துத் துள்ளுகிறது
உன் முகம்
எல்லாம் யாரால்
ஒரு சிவகாமி
பொறுதியில்
காளி
மேலேயேறி மிதித்தால் காலி நீ
உனக்கொரு
காடு
ஆட
ஐந்து சபை
உடன்
படுக்க ஒரு துடியான தேவி
பிறகு வந்து லோகபரிபாலனம்
பண்ணுவாயோ நீ
ஆனாலும்
உன்னை
எதிர்பார்த்துத்தானே
ஒரு கன்னிக்குமரி
அவள்
அக்காள் மேற்கே
ஆடு
தன்னை
மறந்து
நிருத்தியம் செய்
நேரம் காலமில்லாது
காலில்
போட்டு மிதி முயல்களை
கண்டம்
கறுத்தவனே
காரைக்கால் அம்மைக்கு நல்ல
கதி தந்தவனே
ஆடு
ஆடுவதுதானே உனக்கு அழகு
ஆடினாலும்
அரசனல்லவோ நீ
ஆட்ட வகை
அத்தனையும் தேறியவனல்லவோ
நீ
ஆடு அண்டபகிரண்டம் குலுங்க
ஆடு
கரும்பைக் கையில்வைத்து
காப்பாற்றிவிடுவாளாம் அவள்
இவளுக்குக் கட்டுப்பட்டு
ஏனிருக்கிறாய் மதுரையில்
தரையில்
கால்பதித்து நடந்ததுண்டா நீ
சிவகாமி மனசு தெரிந்திருந்தால்
காளி எங்கே வருவாள்
வந்தவளையும்
வாழவைத்தவனில்லை
நீ
கூட இருந்தவளையும்
கொண்டாடாதவன் நீ தெரியுமா
பெண்ணருமை தெரியாத
உன்னைச்
சிவனென்று
மனம் ஒப்பிக் கும்பிடுகிறதே ஜனம்.
என்னை
மாதிரி கலைஞர்கள்
என்றென்றைக்கும்
சக்தி பக்கம்
தான்.
குழல்வாய் மொழி அம்மனின்
குரலினிமை தெரியுமா உனக்கு
உலகம்மையின்
ஒரு பெரும்பரிவு உணர்வாயா நீ
காந்திமதியின் கண்பார்வை
கண்டு மனம்கொண்டதுண்டா நீ
உலகுயிர்க்கெல்லாம்
என்றும் காமாட்சித்தாய்தான்
நீ
சபையில் ஆடிக்கொண்டிரு
சலிப்பு தட்டினால்
சுடலையில் போய் ஆடு
எங்களுக்கு
எங்கள் தாய் ஆதிசக்தி இருக்கிறாள்.
அன்ன பூரணி இருக்கிறாள்.
அகமும் புறமுமான
அன்னை
மீனாட்சி இருக்கிறாள்.
சாந்த
ஸ்வரூபிணி சிவகாமித்தாய் இருக்கிறாள்.
துடியான காளியும்
துணையாயிருப்பாள்.
இன்னும் என்ன வேண்டும்
”இனி ஒரு துன்பமில்லை
ஒரு சோகமில்லை
வரும் இன்பநிலை
வெகுதூரமில்லை.”
- விக்ரமாதித்தன்
(‘சேகர் சைக்கிள் ஷாப்’ தொகுப்பிலிருந்து)
***