மலையாளத்தின்
மிக இளம் கவிகளில் முக்கியமான முகம் ஆதில் மடத்தில். 2020-ல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வலியபள்ளி ரோடு’ வெளிவந்து முக்கியமான கவனத்தை பெற்றது. இஸ்லாமிய பின்புலத்தில் இவரது கவிதைகள் உறவுகள், நிலம், ஆன்மீகம் என பயனிக்கும் மொழியும் பார்வையும் மலையாள சமகால கவிதைகளுக்கு அத்தனை
புத்துணர்ச்சி அளிக்கிறது.
ஒரு படிமம் வந்து அமரும் போதே கவிதையாகி விடுகிறது.
அந்த ஒரு படிமம் மட்டுமே அந்த கவிதையின் அழகு. அது மிகாமலும், குன்றாமலும் சரிவிகதத்தில்
வந்து அமரும் போதே கவிதை ஆகிறது.
ஆதில் மடத்தில் இக்கவிதை, சலவைக்கல்லை பற்றி
மட்டுமே பேசுகிறது. அதிலிருந்து ஒவ்வொரு குறியீடாக, அர்த்தங்களாக நம்மை விரித்து செல்ல
வைக்கிறது. நான் வாசிக்கும் போது என் இளைமைப் பருவத்தில் என் வீட்டில் சலவைக்கல்லாய்
அமர்ந்திருந்த என் பாட்டியை நினைத்துக் கொண்டேன்.
- ஆனந்த் குமார்
***
சலவைக்கல்
நதிக்கரையில் நனைந்து காயும்
சலவைக்கல்.
நனைந்து
நுரைத்து
நனைந்து.
வண்ணாத்திப் பெண்கள்
சென்றபின்
ஒழுகும் நீர் நடுவில்
தனிமையில் கொதிக்கும்.
ஒட்டிய சோப்பு
வறண்டு காயும்.
நதி வெயிலின்
பெருமூச்சில்
அலைகள் பெருக,
ஆழத்தில் முளைக்கும்
குளிர் குமிழிகளை
இழுத்துப் போர்த்தும்.
அந்தியில் திரும்பும்
பெண்கள்
நனைத்து உலர்த்தும்வரை
வியர்வையில் குளித்திருக்கும்.
அவர் சென்றபின்
வந்தமர்ந்து
வாலாட்டும் கிளியொன்று
இரவு பகலை பிரிக்கும்
நட்சத்திரங்கள்
ஒளிரும்
இருண்ட சலவைக்கல்