சமீபத்தில் தற்கால மலையாள கவிதைளை தேடித்தேடி படித்துக் கொண்டிருக்கும்போது தனித்துவமான குரலாக ஒலித்தது அம்மு தீபாவின் கவிதைகள். 2010 க்குப் பின் மலையாளத்தில் எழுத வந்த பெண் கவிஞர்களில் முக்கியமானவர் அம்மு தீபா. இவரது ‘கரிங்குட்டி’ என்ற கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.
செடிகளின் வாசனைகள், மரங்கள், பறவைகள் இவரின் சில கவிதைகளில் வந்துகொண்டே இருக்கிறது.
அதனோடு சேர்ந்து சங்க கால தலைவியின் குரலில் ஒலிக்கின்றன சில கவிதைகள்.
அதில் ஒன்றான கீழுள்ள கவிதையில் தலைவியின் தாபத்தை இயற்கையினோடு ஒத்திசைக்கிறது. அது தன் காதலின் உச்சத்தில் ‘என் விஷத்தை நீ என்ன செய்தாய்’ என கேட்கிறது.
ஆண், பெண் உறவுகளில் மௌன இடைவெளி
சொல்லாமல் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த மௌனத்தை நோக்கிய கேள்விகளை இருவரும் மனதில்
ஊடும் பாவுமாக நெய்து வாழ்வை நெசவு செய்வர். அத்தகைய ஊடுபாவின் ஒரு பின்னல் தான் கீழுள்ள
கவிதை.
- ஆனந்த் குமார்
***
கரும்புத் தோட்டங்களின் மேல்
வெயில் விழுகையில்
காலில் பாம்பு கொத்திய
பெண்ணொருத்தி
உன்னைக் காண வந்தாள்
உனது உதடுகளின் ஞாபக
நூற்றாண்டுகளினூடேயான
அலைச்சல்.
மஞ்சள் இலைகள்
மூடிக்கிடக்கும்
அதே வீடு
அதே முற்றம்
எங்கிருந்தோ கரைந்து
வந்த
காற்றில்
தாமரையின் வாசம்
கானான் கோழியின்
சத்தம்
செம்மண் தோய்த்த
குளிர்த்திண்ணையில்
நீலம் பாய்ந்த உடலுடன்
முகம் சரித்துவைத்து
நீ
கவிழ்ந்து
கிடக்கிறாய்.
நடுங்கும் கைகளுடன்
உனது முகம்மூடிய
சிதல்புற்றை நான்
உடைத்துப்
பார்க்கிறேன்
என் விஷத்தை நீ
என்ன செய்தாய்?
- அம்மு தீபா
***
சிறு வயது கிராமத்து நினைவுகளில் நீங்காத ஒன்று குளத்தில் நீச்சல் பழகுவது. அதில் ஒரு சீண்டல் இருக்கும். அரவணைப்பு, முந்தி செல்ல துடிக்கும் எத்தனிப்பு, போட்டி மூன்று கலந்திருக்கும். முங்கு நீச்சல் போட்டு நம் காலை பிடித்து இழுக்கும் நிகழ்வை ஒவ்வொருவரும் ஞாபகம் வைத்திருப்போம். அதில் ஒரு வக்ரமும் உண்டு. ஒரு குதுகலிப்பு உண்டு. இரண்டு ஒரு சேரவே நினைவில் எழும்.
அம்மு தீபாவின் இந்த கவிதை. அந்த இரண்டு இடமும் முயங்கி தொடுமிடத்தில் அமைந்தது. அந்த விளையாட்டின் பல தலைமுறை கண்ட குளம் புதிதாக வரும் சிறுவனிடம் அதனை சொல்கிறது. அந்த படிமத்தை வாழ்க்கை என்னும் குளத்துடனே மனம் இணைத்துக் கொள்கிறது.
குளம்
உனது வீட்டின் அருகிலுள்ள
கோவில் குளம் நான்
நீ ஓடி வந்து குதி
மல்லாந்தும்
கவிழ்ந்தும்
நீந்து
உனக்குப் பிறகு
குதிக்கவரும் பையன்களின்
கழுத்தை அழுத்தி மூழ்கடி
ஆனால் பையா,
உனக்கு முன்பே
குதித்துவிட்டார்களே சிலர்
அவர்களை நீ
என்னசெய்வாய்?
அய்யோ
வேகமாய் நீந்திக் கரையேறு.
தப்பித்துகொள்
முங்குநீச்சல் அடித்து
அதோ அவர்கள்
உனக்கு நேரே
வருகிறார்கள்
- அம்மு தீபா
***