Showing posts with label வே. நி. சூர்யா. Show all posts
Showing posts with label வே. நி. சூர்யா. Show all posts

வே.நி. சூர்யா கவிதைகள் - 2

ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்...  ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் 

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு 

ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது 

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி 

ஆழப் பதித்துப் பதித்து 

நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை .. 

இனி திரும்பிச்செல்வேன் 

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம் 

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

***

கன்னியாகுமரியில்

சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன் 

ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல 

யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில் 

அந்தத் திருகாணிதான் 

கோத்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.


நாளைக்குத் தெரியவில்லை 

இப்போது எனக்குத் தோன்றுகிறது 

இங்கு எதுவுமே பொய்யில்லை 

அழகின் வறுமை எதனிடமுமில்லை 

கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே 

ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

அறுதியிட்டுச் சொல்லமுடியும்: 

இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி


ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும் 

என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன் 

பாருங்களேன் 

எவ்வளவு கொண்டாட்டம் 

நான் இருக்கிறேன் என்று உணர்கையில் 

ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன் 

மூழ்கும் படகில் இருப்பவன் என. 

குழந்தைகளாகக் கண்விழித்து மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்துநிற்கிறார்கள் நண்பர்கள்


மூன்று.. இரண்டு.. ஒன்று... எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி 

ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம் 

நாங்கள் சத்தியம் செய்கிறோம் ஒருபோதும் இதை மறக்கமாட்டோம் என.


(கல்லூரி அறையை எடுத்துவந்திருந்த நண்பர்கள் 

சிவக்குமாருக்கும் ஸ்ரீதரனுக்கும்)

***

பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா

பொடிநடையாகக் கடற்கரையில் 

நடந்துகொண்டிருந்தேன். 

ஆங்கே ஓரிடத்தில்

எந்த அலைகளாலும் தொடமுடியாதபடி 

மண்ணில் கிடக்கும் 

ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன். 

எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை?

யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது? 

மொத்தச் சமுத்திரமும் 

அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளிலும் 

ஆழ்கடல் சீவராசிகளும் 

யாவும் யாவும் 

அந்த ஒற்றை ரோஜாவை 

அழைத்துக்கொண்டிருக்க 

அதுவோ 

பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது

கடல் பார்த்துத் தனித்திருக்கும் யுவதி என.

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில்போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை,

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம்

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

*** 

ஒரு டிசம்பர் மாலைப்பொழுது

காற்றடித்தால் 

உயரத்திலிருந்து சிணுங்கிச்சிணுங்கி 

நான் இருக்கிறேன், 

நான் இருக்கிறேன் எனத் 

தெரிவிக்கும் 

இந்த உலோகக் கிண்கிணிகளை 

நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று. 

இப்போது பார், 

காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும் 

வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும் 

மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு,

சோகம்தான்...

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

தனியன் - மதார்

வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் தனியன்

இம்முறை நிலவு கூட இல்லை ஆகாசத்தில்" 

என்று துவங்கும் ஒரு கவிதை வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் வருகிறது. இதில் வரும் தனியன் தான் வே.நி.யின் எல்லா கவிதைகளிலும் வருகிறான். தமிழ்க் கவிதையில் 'தனியன்' அதிகமாக இடம் பெற்றது நகுலனின் கவிதையில் தான். எல்லா கவிஞர்களுமே தனியர்கள் தான். ஆனால், அவர்கள் தன்னை பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி கொள்கிற ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்கள் தனியர்கள் இல்லை. நகுலன் சுசீலாவோடும், பூனையோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவர் தனியனாகவே தான் இருக்கிறார். இந்த வினோதத்துக்கு காரணம் அவர் தொடர்புபடுத்தும் பூனையும், சுசீலாவும் அவரது தனிமையையே அடைகிறார்கள் என்பதால்தான். பிரபஞ்சத்தோடு தொடர்புபடுவதில்லை. ஆனால் அதுதான் நகுலனின் தனித்துவமாக அமைந்தது.  வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பு கரப்பானியம். அதில் அவர் தொட்ட யாவுமே தனிமையை அடைந்தன. அந்தியில் திகழ்வதில் சூர்யா தனிமையைத் தொட வருகிறார். ஆனால் பிரபஞ்சத்தோடு தொடர்புபடுகிறார். இது கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் இடம். இது சூர்யாவின் இரண்டாவது தொகுப்பிலேயே ஒரு மாற்றமாக அவருள் நிகழ்ந்திருக்கிறது. 

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும்

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன : 

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடிக்கவில்லை

வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி

இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்

***

தியானம்

இந்நாட்களில் காலையில் எழுந்ததும்

முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

என்ன கோஷம்

என்ன காரணத்திற்காக

ஒருவேளை ஒன்றுமில்லையோ?

அறிய முடிந்ததேயில்லை என்னால்

ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

ஒரு தியானம் போல

மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்

பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக

ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

அந்தியில் திகழ்வது வாங்க...

***

மறுபதிப்பு: முதல் பதிப்பு செப்டம்பர் 2022

Share:

இன்மைகளின் வலிகளின் நோய்மையின் அழகியல் - சமயவேல்

வெகு காலத்திற்குப் பிறகு முழுக்கக் கவித்துவம் ததும்பும் தனித்துவமானதொரு கவிதைகள் வே.நி.சூர்யாவின் கவிதைகள். நோய்மையிலும் வலியிலும் கூட இயற்கையோடு கைகோர்த்து மரணத்தையும் தனக்குள் அடக்கிக்கொள்ளும் வாழ்வின் மகத்துவத்தை, கவிதைகளாக்கியிருக்கிறார் சூர்யா. இவரது ஆழ்ந்த வாசிப்பும் கவிதைகள் மேலான அபரிமிதமான ஈடுபாடும் புதிய பா வகைமையை உருவாக்கியுள்ளன. கவிதைகளென ஏராளமாக அச்சாகிக் குவியும் இந்நாளில், வாழ்தலின் அனுபவங்ளை எவர் போலவும் இல்லாமல் தன்போக்கில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகள் இவரது ‘கரப்பானியம்’  ‘அந்தியில் திகழ்வது’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இருக்கின்றன. புராதன நகரம் திருநெல்வேலியில் இருந்து விடுபட்டு கன்னியாகுமரிக் கடற்கரை ஊருக்குக் குடியேறியது இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

இருவேறு உலகங்களை இணைக்கும் அந்திப் பொழுது இருமை இணைவின் அழகியலாக மாறுகிறது. ஒளியையும் இருளையும்,  விழிப்பையும் உறக்கத்தையும், சூரியனையும் விண்மீன்களையும் இணைக்கும் அந்தி, சற்று நேரம் மயங்குகிறது. பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும் என எல்லா உயிர்களும் மயங்குகின்றன. அந்திப்பொழுது மாறுதலின் வலியை அழகியலாக மாற்றுகிறது. ரில்கேயின் புகழ்பெற்ற கவிதையான ‘அந்தி’யில், ‘இரண்டு உலகங்கள் உன்னைவிட்டு நீங்குகின்றன’ என்கிறார். கவிதையின் கடைசி வரி:  ‘உனது வாழ்க்கை, ஒரு நொடி உனக்குள் ஒரு கல், அடுத்த நொடி அதுவொரு நட்சத்திரம்.’ நாகர்கோவிலைச் சுற்றியுள்ள கடற்கரைகளும் அந்திப்பொழுகளும் சூர்யாவின் ‘கற்களை’ தங்க நாணயங்களாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. இரும்பையும் மகிழ்ச்சியாக உண்டு செரிக்கும் வல்லமையை கவிதை வழங்கும் அதிசயத்தை வே.நி.சூர்யாவின் "அந்தியில் திகழ்வது" தொகுப்பில் காண்கிறோம். 

“பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா” என்று ஒரு கவிதை இவ்வாறு முடிகிறது. 

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம் 

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று. 

இங்கே பிரிதல் வலியில்லை. அனைத்தையும் ஏற்கும் ஆன்மபலம் கவிக்கு மிக இயல்பாகக் கூடுகிறது. பிரிதலை எண்ணி எண்ணி புலம்பும் கவிகளிடம் இருந்து சூர்யா வேறுபடும் இது.  

‘பாடல்’ என்ற கவிதையில்,

சந்தித்தால் பிரிய நேரிடும் இன்ப வடிவே,

ஆதலால் சீவனுக்கு எட்டாமல்

ரகசியமாகவே இரு எனது மரண தேதியைப்போல

உன்னை எண்ணி எண்ணி

அப்போதுதான் என்னைப்

பிரமாதமாக

அழித்துக்கொள்ள முடியும் எனக்கு.

என்று மரணமும் பிரமாண்டமான அழிவும் சூர்யாவுக்கு தன்விருப்பமாக அமைகிறது. இது வரையிலும் நாம் தமிழில் வாசிக்காத மனநிலை.

“இறுதியில் யாவுமே தருணங்கள்தானா” என்பது ஒரு மிகப்புதிய அமைப்பிலான பத்துப் பகுதிகள் கொண்ட வடிவான கவிதை. ஒன்பது எதிரெதிர் விசாரங்களும் பத்தாவதாக இவ்விதம் வெகு அழகாக முடிகிறது. 

அமைதியாக இரு

அமைதியாக இரு

இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

நான்

இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.

முக்கிய பரிசோதனைகளுக்கும், கிளை கிளையாய் பிரிந்து விரிந்து அயர்ச்சி தரும் விவாதங்களுக்கும், பெரும் விசாரத்துக்கும் வலிக்கும் அழுகைக்கும் பின்னால் அகமும் சரீரமும்  இணைந்து ஓர் உயிர் தோன்றிவிடுகிறது. வீடே, தெருவே, ஊரே கொண்டாடும் தருணம் இது. இறுதியில் எல்லாம் தருணங்களே என்றாகின்றன.  

பல்வகை நோய்மை குறித்தும் அவற்றிலிருந்து விடுதலை அடைவது குறித்தும் எழுதப்படும் எழுத்துக்களே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு நோய்மை உலகையே பிடித்தாட்டுகிறது. ஜெர்மனியில் ஒரு குறிப்பிட்ட மனிதனை அதிகார வெறி, இன வெறுப்பு ஆகிய நோய்கள்  பிடித்து ஆட்டியபோது, இரண்டாம் உலகப்போர் மூண்டது. எவ்வளவு கொடூரங்கள்? எவ்வளவு உயிர்களை நாம் இழந்தோம்? ஹிட்லரைத் தொடர்ந்து ஸ்டாலினியப் போர்களால் சின்னஞ்சிறிய நாடுகளில் எவ்வளவு மரணங்கள்? எல்லாமே திரள் மனநோய்களே.  

காஃப்கா, நாஜிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டது போக இறுதியில் காச நோயாலும்  பீடிக்கப்படுகிறார். காச நோய் ஏற்பட்டு சானடோரியங்களில் இறுதிக் காலத்தைக் கழித்த பல கவிகளையும் எழுத்தாளர்களையும் பற்றி நாம் வாசிக்கிறோம். காச நோய்க்கு சரியான மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு கவி அந்தக் காச நோய் பற்றியே கவிதை எழுதுகிறார். வே. நி. சூர்யாவின் “காச நோய்க்கு ஒரு பாடல்”  கவிதை, மகத்தான அற்புதம். 1970களில், என் சகோதரி ஒருவர், காச நோய்க்கு ஒரு நுரையிரலை இழந்து இறந்த நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. எத்தனை வகையான மாத்திரைகள்? எத்தனை தூங்காத இரவுகள். சானடோரியத்தின் ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்தும் கசியும் துயரமும் தாங்க முடியாதவை. அந்தக் காலங்கள் எல்லாம் மறைந்து போயின. 

ஆனாலும் காசநோயே

நான் எப்போதும் இப்படித்தான்

நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன்

விடைபெறுகிறேன்

அழுகிறேன் எச்சில் வடிக்கிறேன்

சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

என் வேர்கள் பலவீனமானவை

சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூடத் தெரியாதவை

அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே

இவை உன் கைங்கரியம்தானா

அறியேன் அறியேன் அறியேன் 

இப்போது நாம் வே.நி.சூர்யாவின் தியான மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறோம். அது, “நோயை எதிர்கொள்ளல்” என்று கட்டுரை எழுதிய நித்ய சைதன்ய யதியின் தியான மண்டபமாகவும் இருக்கலாம். உண்மையில் ‘தியான மண்டபம்’ என்னும் கவிதையும் எனக்குப் பிடித்த கவிதை. 

ஒன்றுவிடாமல் அத்தனையும்

மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

அதனுள் நான் அமர்கிறேன்

என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன

மாலை 06.56க்கு நிகழும் இந்தக் கவிதையில் முழு பூமியும் தியான மண்டபம் ஆகிறது. அந்த மண்டபத்துக்குள் அத்தனை உயிர்களும் தியானம் செய்கின்றன. இந்த மண்டபத்தின், 

கீழறையில் ஒரு காகிதத்தில்

சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக

ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்

ஒர் அமைதி 

நிறுத்தற்புள்ளி போல.

என்னவொரு அற்புதமான அனுபவம். 

வே. நி. சூர்யாவின் வாசிப்பை நான் நேரடியாக அறிவேன். உலகின் மிகச் சிறந்த கவிகளை எல்லாம் அவர் தேடித் தேடி வாசித்து வருகிறார். வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்தது ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்பதை அறிந்திருப்பதால், சூர்யா கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மிகச் சிறந்த உலகக் கவிதைகள், சூர்யாவின் அகத்தில் ஆன்ம பெலத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது தலை முட்ட, வயிறு முட்ட, மனசு முட்ட கவித்துவத்தை  நிரப்பியிருக்கிறது. ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பு முழுவதுமே அவரது ஆன்மாவின் விகசிப்பதைக் கேட்க, உணர முடியும். 

‘ஒளி மனிதன்’ என்னும் கவிதையில்  

தேநீர் மேசையின் எதிர்புறத்தில் அமர்ந்திருக்கும், ஒட்டுமொத்த அண்ட சராசரத்துடனும் மொழியின்றி 

பேச்சைத் துறந்து பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் 

கடற்கரை ஒரு மெத்தை என்றாகச் 

சோர்ந்து சுருண்டு தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான்

என்று எழுதுகிறார். தனக்கு வெளியே தான் எப்படி படுக்க முடியும்? 

அச்சு அசலாய் 

மானுட உருவில்

ஓர் உடுத்தொகுதி 

என்று கவிதை முடிகிறது. ஒளி மனிதன் என்பவன் அந்த உடுத்தொகுதி. 

இப்படி ஒவ்வொரு கவிதையையும் அனுபவித்து வாசிக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புக்கு ‘விமர்சனம்’ எழுதுவது அபத்தமானது. வாசித்து, மீண்டும் மீண்டும் வாசித்து,  உணர்ந்து அனுபவிக்க வேண்டும். 

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***


Share:

இறையியலும் தற்கால கவிதைகளும் - பண்ணாரி சங்கர்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

மண்ணில் வாழும் இந்த உயிரினங்களை அறிவு என்ற வகைமையால் ஆறாக பிரித்துக் கூறுகின்றார் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் (இதில் பூமியில் வாழும் உயிர்கள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது).இப்படி பூமியில் ஆறுவகை பிறப்புகளும் எடுக்கும் உயிரினங்களுக்கும் , பிறப்பு என்பது ஒன்று, உயிர் என்பது ஒன்று. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு" எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒன்று என்கின்றது திருக்குறள்.

இதை தான் இந்து மத நான்கு வேதங்களின் சாரமான மஹாவாக்கியங்களும் விளக்குகின்றது. இந்த வாக்கியங்களுக்குள் செல்வதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் . பிரம்மன் (நான்முகன் என்ற படைப்பின் கடவுள் அல்ல) ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக கருதப்படுகின்ற வேதங்களில் குறிப்பிடப்படும் பிரம்மனை குறிப்பது. ஆத்மன் என்பது மனிதர்களின் ஆன்மாவை குறிப்பது.

ரிக் வேதத்தின் சாரமான பிரக்ஞானம் பிரம்ம என்பது பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன். அறிவுணர்வு என்று இருக்கும் எல்லாவற்றுள்ளும் படைப்பின் ஆதாரமாக விளங்குகின்ற பிரம்மன் இருக்கின்றது. அதர்வண வேதத்தின் சாரமான அயம் ஆத்மா பிரம்ம என்பது ஆத்மன் தான் பிரம்மன். அதாவது எல்லா உயிர்களில் இருக்கும் ஆத்மன் தான் படைப்பின் ஆதாரமாய் விளங்குகின்ற பிரம்மன். சாம வேதத்தின் சாரமான தத் த்வம் அஸி என்பது ஆத்மன் ஆன நீயே அந்த பிரம்மன் என்கின்றது. யஜுர் வேதத்தின் சாரமான அஹம் பிரம்மாஸ்மி என்பது ஆத்மனான நானும் பிரம்மன் தான் என்கின்றது.

மௌனி சொல்வார் "பிரக்ஞை சுடர் மாதிரி எறிஞ்சிண்டே இருக்கணும் , உள் மனசிலே". அதுபோல பிரக்ஞை சுடர் போல எரியும், உயிரினங்களிலும் கடவுள் இருக்கின்றார். இப்படியான தத்துவத்தின் நீட்சியாகதான் மதாரின் தொகுப்பான வெயில் பறந்தது என்ற தொகுப்பில் வரும் முப்பத்தி ஏழாவது கவிதையை பார்க்கின்றேன்.


சமவெளிகளில் ஆடு மேய்க்கும் சிறுவன்

மானசீகமாய்க் கும்பிடுகின்றான்

அதிகாலைப் பனியை

ஆடுகள் தங்களது காலை உணவில்

சேர்த்து விழுங்குகின்றன

மேய்ப்பாளனின் கடவுளை

மேய்ப்பரும் கர்த்தா

மேய்வதும் கர்த்தா 

இந்த கவிதையில் பனித்துளியை கடவுளாக பார்க்கின்றான் ஆடு மேய்க்கும் சிறுவன். புல்லுடன் அந்த பனித்துளியையும் சேர்த்து விழுங்குகின்றன ஆடுகள். இங்கு ஆடுகளும் கர்த்தா, விழுங்கும் பனித்துளியும் கர்த்தா என்கின்றார் மதார். இங்கு நிலம், புல்,பனித்துளி, ஆடு, சிறுவன் என யாவும் கர்த்தா தான். இப்படி எல்லாவற்றிலும் இறைத்தன்மையை உணர்ந்த திருமூலரும் தனது திருமந்திரத்தில் அணுவிற்கு உள்ளும் இறையே, புறமும் இறையே. இறையே பிரபஞ்சம் அளவு விரிந்துள்ள எல்லாமும் ஆக இருக்கின்றது என்கின்றார்.

***

அணுவில்  அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தனிவற நின்றான் சராசரம் தானே

இதையேதான்  ஒவ்வையார் எழுதிய விநாயகர் அகவலில் வரும் ஒரு வரியும் 

கூறுகின்றது.

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்

எல்லாவற்றிலிலும் நீக்கமற நிறைத்த அந்த இறையை தான் வே.நி.சூர்யா, தனது அந்தியில் திகழ்வது தொகுப்பின் (கடவுள் வாழ்த்து பாடல் போன்று அமைந்த) முதற் கவிதையில் வணங்குவோம் என்கின்றார்.

தூரத்தில்

ஒரு சோளக்கொல்லை பொம்மையினை பார்த்தேன்

இருந்தும் இல்லாது

பறவைகளின் நெரிசலையும் அதன் சாயைகளின் நெரிசலையும்

நெறிப்படுத்திக்கொண்டு

ஏதோ தானொரு போக்குவரத்து காவலர் என்பதுபோல

நின்றுகொண்டிருந்தது

மானுடர்களுக்கும் இப்படியொருவர்

இருக்கவேண்டும்

அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு

அநேகமாக எந்நேரமும் உறங்கியபடி

எட்டாத தொலைவினில்

ஒரு இன்மையின் வடிவிலிருந்து

சகலத்தையும்

ஒழுங்குபடுத்தியவாறு

ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும்

அவரை அந்தப் பேரின்மையைப்

போற்றுவோம் நண்பர்களே

அப்பாலுக்கு அப்பலாய் இருந்தபடி எல்லாவற்றையும் ஒரு நெறிப்படுத்தும் இன்மையே இறைநிலை. அப்படி தனக்குள் இருக்கும் இன்மையை , ஆன்மா என்னும் இறையை போற்றுவோம். இந்த இறையின் தரிசனத்தை காணாத மாந்தர்கள் கோடி கோடி என்கின்றார் சிவவாக்கியார்.ஆம் அவர் சொல்லும் அந்த மகத்தான ரகசியம் ஆன்மன் தான்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

இப்படியான மகத்தான ரகசியத்தை உணர்த்த நிலை பற்றி வெளிப்படுத்துதல் கவிதையில் விளக்குகின்றார் சூர்யா.

ஊழ்கத்தின் கடைசிப் படிக்கட்டை

விட்டிறங்கி

இன்மையின் முதல் படிக்கட்டில்

கால் வைக்கிறான்

ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்

சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது

அத்தனை ஞானத்துடனும்

அத்தனை துயரத்துடனும்..

தான் இறை என்று உணர்ந்த ஆன்மன் , இறையின் நிலையான இன்மையை நோக்கி முதல் படிக்கட்டில் கால் வைக்கின்றது. அந்த நிலையில் சிங்கமும் இல்லை , பசுவும் இல்லை. எல்லாம் ஆன்மன் , எல்லாம் இறை. இந்த  இறைநிலை அத்தனை ஆனந்தம் பொதிந்த ஒன்று, ஞானத்தின் உச்சம் . இங்கு அத்தனை துயரம் என்பது முரண், உலகவாழ்வை நீங்க துணியாத மனத்தினை குறிக்கின்றது அல்லது தான் இறை என்ற உயரிய ஞானத்தை அடைந்துவிட்டோம் , இறையின் உன்னதத்தை அறிந்து , அதன் உன்னதத்தை அடைந்து ,அதனுடன் எவ்வாறு இரண்டற கலக்கப்போகின்றோம் என்ற அச்சத்தின் காரணமாக ஏற்பட்ட துயர். இயங்கும், படைக்கும் யாவும் இறை எனில் நாமும் இறையே என்பதே இக்கவிதைகளின் வாயிலாக உணரக்கூடிய உண்மை.

***

மதார் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

*** 

Share:

வே.நி.சூர்யா கவிதைகள் - அதிரூபன்

முழுக்க முழுக்க வெளி
 
எளிமையில் இருந்து எளிமைக்கே திரும்பும் பாதை இது. காற்று தீயை தொடுவது போல , ஊஞ்சலை தாய்கரம் ஆட்டுவது போல சொற்களாளும் தருணங்களாளும் கவிதையை நிகழ்த்துகிறார் சூர்யா. அஸ்தமனத்தின் பெயரில் இங்கு வார்த்தைகள் வான்வலம் போகின்றன. அகக்கொண்டாட்டங்கள் யாவும் நிரம்பி பார்வைக்கு வெளியே திரிகின்றன. மீண்டும் மீண்டுமாய் ஒருவன் வெளிக்கீற்றாய் பிறந்துகொண்டே இருக்கிறான்.  எண்ணவொண்ணா கணத்தில் நிகழும் க்ஷணத்தின் மந்திரத்தைப்போல, பிடிவாதமில்லாத சொற்கள் பக்கங்களை திறந்துகொண்டே இருக்கின்றன. பாதி ரகசியம் மீதி எளிமை முழு பரிதவிப்பு முடிவில் ஒரு அந்தரப் பறத்தல். வெளி சுற்றிலும் நீக்கமுடியாத அகத்தை புதிதுபுதிதாக திறந்து பார்கிறார். தரையில் இருந்து நீருக்குத் தாவும் தவளையைப்போல அகத்தில் இருந்து வெளிக்கு தாவும் சூர்யா-வை இந்தக் கவிதைகளில் கண்டுபிடிக்கலாம்...
***
 
கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:
அவ்வளவு பேரும் புதியவர்கள்
மங்கல் முகங்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை.
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம் 
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்
நெருங்கிநெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்.
 
 
***
உன் பாதை

ஒவ்வொரு இலையும்
ஓர் உலகமன்றி வேறென்ன?
நீ சஞ்சலப்படுவதும்
பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக?
சூரியப்பிரபையில்
தலையாட்டி பொம்மை போலாடும்
மரகதப்பச்சையைப் பார்.
எகிறிக்குதி அதனுள்
நீண்டுசெல்லும் நரம்புகளே உன் பாதை.
தொடர்ந்து போ அதனூடே.
கிளைகள் மலைகள் ...
ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு
அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி
சூரியனைக் கடந்து சென்றுவிடு
என்ன ஆயினும்
நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்
இலைகளிருக்கின்றன உனக்கு
இன்னும் ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்
அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்.
போ...

***

நாகர்கோவிலை சேர்ந்த வே. நி. சூர்யா இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‘கரப்பானியம்’. சமீபத்தில் வெளிவந்த இவரது ‘அந்தியில் திகழ்வது’ கவிதை தொகுப்பில் இடம்பெற்ற இரண்டு கவிதைகள் இவை.


கவிதை தேர்வு மற்றும் குறிப்பு: அதிரூபன்


‘அந்தியில் திகழ்வது’ கவிதை தொகுப்பு வாங்க.
 





Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive