திரும்ப முடியாத பாதை - க. மோகனரங்கன்

மூணாறிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தோம். முன்தினம் பெய்த மழையின் ஈரம் முற்றிலுமாக வற்றியிருக்கவில்லை. புதுப்பட்டுத்திய பெண் போல் ஊமை வெய்யிலில் மினுங்கிக் கொண்டிருந்தது மலை. சாலை இருமருங்கிலும் விதவிதமான பச்சையில் தாவரங்கள் காற்றில் ஆடி நின்றன. மனமும், உடலும் ஒருசேரக் குளிர்ந்து போயிருந்தது. பேச்சின் உற்சாகத்திற்குத் தகுந்தபடி நிதானமான வேகத்தில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அறிவிப்புப் பலகையைக் கண்ணுற்ற நண்பன் கூறினான் "வழியில் மறையூர்ல பழைய பாறை ஓவியங்கள் இருக்காம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்" சாலையோரத் தேநீர்க்கடையில் நிறுத்திக் கேட்டபோது அங்கிருந்தவர்களுக்கும் சரியான விவரம் தெரியவில்லை. ஆனாலும், கடைக்காரர் இடதுபுறமாகக் கையைக் காட்டிச் சொன்னார். "இந்த வழியிலேயே கொஞ்ச தூரம் போய் மேலுக்கேறிப் போக ஒரு பாறக்கோயிலு வரும். நீங்க கேக்கற படம் அங்க இருக்கலாம். போயிப் பாருங்க" முன்புறம் சாய்ப்பு வைத்த ஓட்டு வீடுகள் உள்ளடங்கியிருந்த தெருக்களைக் கடந்து, குறுக்கிட்ட ஒரு ஓடைப்பாலத்தைத் தாண்டிய பிறகு வளைந்து வளைந்து மேலேறிச் சென்ற சாலையில் ஊர்ந்து, ஒரு குன்றின் பக்க வாட்டில் வந்து நின்றது எங்கள் கார்.

பெரும்யானை ஒன்றின் முதுகென விரிந்துகிடந்தது அந்தக் கரும்பாறைத் திட்டு. வெய்யிலிலும், மழையிலும் உவறி மேற்பரப்பு பொரிந்து கிடந்தது. சிறிதும் பெரிதுமான செவ்வக வடிவக் கற்பலகைகள் ஒருவரிசையாய்க் குலைந்துகிடந்த வடகிழக்கு மூலைக்கு நடந்தோம், நாற்புறமும் நிற்கவைத்த பலகைகளுக்கு மேலே மற்றுமொரு செவ்வகப்பாளம் கிடத்தப்பட்டு, முடுக்குகளில் சிறுசிறு சில்லுகள் தாங்க அசையாது நின்றது. உடனிருந்த நண்பர்களுள் ஒருவர் சுவடியியல், கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு படிப்பவர், பார்த்துவிட்டுச் சொன்னார். “இவை யெல்லாம் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையா இருக்கும். எப்படியும் ரெண்டு மூணாயிரம் வருஷத்துக்கு குறையாது. முதுமக்கள் தாழின்னு படிச்சிருப்பிங்களே! இதுவும் அதுபோலவொரு சவஅடக்கமுறைதான். செத்த உடலை நடுவில் வச்சு, மிருகங்கள், பறவைகள் கொத்தி குதறி விடாதபடிக்கு சுத்தியும் கல்பலகை வச்சு மூடிட்டு போய்டுவாங்க". மூன்று, நான்கு அடுக்குகள் மாத்திரம் முழுமையாக நின்றுகொண்டிருக்க, ஏராளமான பலகைகள் சரிந்தும், உடைந்தும் அங்காங்கே சிதறிக்கிடந்தன. நான் அதைக்குறித்து வருத்தப்படவும், அந்நண்பர் கசந்த புன்னகையோடு சொன்னார். “சரித்திரத்தைப் புறத்தே வச்சு பார்க்கற அளவுக்கு அதைவிட்டு வெளியே வந்துவாழ நாம் இன்னும் படிக்கலை. முக்கால பேதம் எதுவுமில்லாமதான் நாம் வாழறோம், நமக்கு இவ்வளவுதான் வரலாற்றுணர்வு இருக்கும்."

பாறையின் ஒருமூலையில் சிறிய அம்மன் கோயில் ஒன்றும், அதற்குச் சற்றுத் தொலைவில் ஆளுயரக் கான்கிரீட் சிலுவை ஒன்றும் நிறுவப் பட்டிருந்தது. எது முதலில் தோன்றியது எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்றின் பதிலியாகவே மற்றொன்று முளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை, அந்தப் பழம்பெரும் கற்பாளங்கள் மெளனமாக விளம்பிநிற்கும் 'மரணம்' என்னும் முழுமுற்றான உண்மைக்குமுன் சிமெண்ட்டால் எழுப்பப்பட்ட இந்த சிலையும், சிறு கோயிலும், மனிதர்களான நமது எளிய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அபத்தமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நாங்கள் தேடிவந்த பாறை ஓவியங்கள் எதுவும் அங்கில்லை. என்றாலும், எங்களுடைய பயண நிரலில் திட்டமிடப்படாததொரு முக்கிய நிகழ்வாக அத்தருணம் அமைந்தது. அதுகாறும் உற்சாகமாகத் தொடர்ந்து வந்த பேச்சு மெல்ல அடங்கி, ஒவ்வொரு வரும் தத்தமது சொந்த யோசனைகளுக்குள் மூழ்கிப் போனோம். அந்தப் பாறைத்திட்டிலிருந்து பார்க்கையில், சுற்றிவர மூன்றிலொரு பாகத்திற்கு மேல் வெட்டவெளியாய் விரித்துகிடக்க, பார்வை தொடுவானில் மங்கிக் கலந்தது. மனிதர்களின் இறுதி உறக்கத்திற்கென்று இவ்விடத்தைத் தெரிவு செய்த அம்மூதாதை கனிந்த விவேகியாய்த்தானிருக்க வேண்டும்.

உலகின் எப்பகுதியில் வாழும் இனக்குழுக்களாக இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான சடங்கு எதுவென ஆராயப் புகுவோமானால், அது பெரும்பாலும் மரணத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாத அந்த நிச்சயமான உண்மையை எதிர் கொள்வதற்காக மனிதர்கள் தம் வாழ்வினூடாகத் திரட்டிக்கொண்ட நம்பிக்கையும், ஆறுதலுமே அனைத்து வகையான வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும், கலை வெளிப்பாடுகளுக்குமான தோற்றுவாய். மரித்த உடலை எரிப்பது அல்லது புதைப்பது என்ற இருவேறு வழக்கம் உலகெங்கும் தொன்று தொட்டு இருந்துவருகிறது. மரணத்தை முற்றுப் புள்ளியாக ஏற்றுக்கொள்பவர்கள் உடலை எரிக்கவும், இறப்பிற்குப் பின்னும் வாழ்வில் நீட்சியை ஏதோஒரு வகையில் கற்பனை செய்ய விரும்புகிறவர்கள் புதைக்கவும் செய்கிறார்கள் என நம்பலாம். உலகின் தொன்மையான கல்லறைகளாகக் கருதப்படுகின்ற பிரமிடுகளில் புதைக்கப்பட்ட மன்னர்களின் அப்பாலை வாழ்விற்குத் துணையாகப் பெரும் செல்வமும், பணியாட்களும் உடன் புதைக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் எல்லா மொழிகளிலும், உள்ள இலக்கியங்களிலும் ஈமக்கலன், இடுகாடு, ஈமத்தீ முதலியவற்றைச் சுட்டும் சொற்களும், குறிப்புகளும், தொல்பழங்காலம் தொட்டே இருந்துவருவதை மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழர் நாகரிகத்தின் செழுமைக்கும், தொன்மைக்கும் வலுவானதொரு இலக்கியச் சான்றாகக் கொள்ளப்படும் புறநானூற்றிலும் இத்தகைய செய்திகளைக் கொண்ட சில பாடல்கள் உள்ளன. பின்வரும் பாடல் (புறம் - 356) வாழ்வின் நிலையாமையை அறிவுறுத்தும் விதமாக எழுதப்பட்டது.

கனறி பரந்து. கன்னி போகிப்

பகலும் கூட்டம் கூகையொடு, பேழ் வாய்

ஈம விளக்கின், போஎய் மகளிரொடு

அஞ்சுவந் தன்று. இம்மஞ்சுபடு முதுகாடு

நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்

என்புபடு சுடலை வெண்ணறு அவிப்ப

எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து

மன்பதைக் கெல்லாம் தானாய்த்

தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.

                                        திணை: காஞ்சி

                               துறை: பெருங்காஞ்சி

                பாடியவர் : தாயங்கண்ணனார் 

காடு பரந்து, கள்ளிகள் மிகுதியாக முளைத்திருக்கும் இச்சுடுகாட்டில் பகல் பொழுதிலேயே கூகைகள் கூவுகின்றன. பிணத்தைச் சுடும் தீயின் வெளிச்சத்தில் கோரமான பற்களோடு அகன்று காணப்படும் வாயை உடைய பேய் மகளிர் உலவு கின்றனர், புகை தவழும் இவ்விடம் காண்பாருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்தோர் மீது அன்புகொண்டோர் விடும் கண்ணீரில் பிணத்தை எரிக்கும் நெருப்பின் சாம்பல் அவிகிறது. எல்லோருடைய முடிவையும் தான் கண்டு, உலகத்து மாந்தருக்கெல்லாம் இறுதிப்புகலிடமாய் அமையும் இச்சுடுகாடு, தன்னைப் புறங்காண வல்லவர் எவரையும் இதுகாறும் கண்டதில்லை.

இக்கவிதை தீட்டிக்காட்டும் சித்திரமளவிற்கு, அச்சம் தருவதாக அல்லாது போனாலும், பாழடைந்து, எருக்கஞ் செடிகளும், முட்புதர்களும் நிறைந்து ஓணான்களும் கூகைகளும் கழுகுகளும் பயமின்றி அலைய, குழந்தைகளும் பெண்களும் நுழையக் கூடாத ஒரு கைவிடப்பட்ட ஸ்தலமாகவே பெரும்பாலான ஊர்களின் இடுகாடுகள் அமைந்துள்ளன. இறப்பது ஒரு கலை என்றால், இறந்தவர்களுக்கு உரிய மதிப்புடன் விடைதந்து அனுப்புவது என்பதுவும் அதற்குச் சற்றும் குறையாத கலைதான், அதில் நம்மைவிடவும் மேலைநாட்டினர் தேர்ந்தவர்களாக உள்ளனர். இறந்த உடலை அலங்கரிப்பதற்கும், சவப் பெட்டியை அழகுப்படுத்தவும் அங்குத் தனியே கலைஞர்கள் உள்ளனர். தவிரவும் சுற்றுச்சுவருடன் கூடிய தோட்டத்தில் நிழல் தரும் மரங்களுக்குக் கீழாக, பூச்செடிகளின் அருகில் துயிலும் அந்த ஆன்மாக்கள் கொடுத்து வைத்தவையே என்பதில் ஐயமில்லை.

மரணத்தைத் தட்டிப்பறிக்கும் கூற்றுவனாக, திகிலூட்டும் ஒரு இருண்ட அனுபவமாக, தப்ப முடியாத ஒரு தண்டனையாக உருவகிக்கும் ஒரு போக்கு நமது மரபில் உண்டு. இது உருவாக்கும் அச்சத்தினூடாக, இக வாழ்வில் மக்களிடையே தர்மத்தையும், அறவிழுமியங்களையும் தழைக்கச் செய்யமுடியும் என்றும் நம் முன்னோர் நம்பினர். பிறகு வந்த பௌத்த, சமண சமயங்கள் மரணத்தைக் சுடந்து செல்லவேண்டிய ஒரு வாயிலாக, இயல் பான ஒருமுடிவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வலியுறுத்தின.

மேற்காணும் புறநானூற்றுப் பாடல், மனித நாடகத்தின் இறுதிக்காட்சியை அழுத்தமான அவலச்சுவையுடன் தீட்டிக் காட்டுவதன் வாயிலாக, பிறிதொரு, கருத்தைக் குறிப்புணர்த்தி நிற்கிறது. எந்நிமிடமும் கலைந்துவிடக்கூடிய இந்நீர்க்கோல வாழ்வை நச்சி, நலிவுற்று அழியாமல் நமது நற்செயல்கள் மூலம் அதை அர்த்தப்படுத்திக் கொண்டாகவேண்டும் என்பதையே மறைமுகமாக வலியுறுத்துகிறது.

ஒருமுறை நண்பர்களுடனான உரையாடலின்போது கனவுகளைப்பற்றிய பேச்சு எழுந்தது ஆழ்மன வெளிப்பாடு என்பதால் கனவுகள் நமது புறமனதின் தர்க்க ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட சுயேச்சை யான இயக்கவிதிகளைக் கொண்டிருக்கின்றன எனவே, காணப்படும்போது மிகத் துல்லியாக தெரியும் கனவு, விழித்தபிறகு நினைவுபடுத்திப் பார்க்கையில் பல இடங்களில் தெளிவின்றிக் கலங்கிப் போய் மங்கலாகத்  தென்படும் . பல கனவுகள் விழித்தெழுந்தவுடன் நினைவுகொள்ள முடியாதஅளவிற்குத் தடமின்றி மறைந்துபோய் விடுவதுமுண்டு. அபூர்வமாக சில கனவுகள் மாத்திரம் வரையப்பட்ட சுவரோவியம் போல் நினைவில் துல்லியமாக நிலைத்துவிடுவதுண்டு் அவ்வாறான அழியாத சில கனவுகளைப் பற்றிய தமது அனுபவங்களை அப்போது நண்பர்கள் பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு நண்பர் விவரித்த கனவு அதன் வினோதத்தால் என் நினைவில் தன் விட்டது.

அக்கனவில் நண்பர் இறந்துபோய் சடலமாகக் கிடக்கிறார். வீட்டுக் கூடத்தில் உற்றார் குழுமியிருக்க, மனைவியும், பெற்றோரும் கதறி அழு கின்றனர். தலைமாட்டில் எரியும் விளக்கில் ஒருபெண் திரியைத் தூண்டிவிட்டு எண்ணெய் நிரப்புகிறாள். நண்பருக்குப் பிடிக்காத நெடியில் ஊது பத்தி புகைகிறது. எல்லாவற்றையும் விலகியிருந்து அறிகிறது நண்பரின் உடலற்ற பிரக்ஞை . அப்போது தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதைப் போல புலன்களனைத்தும் குளிர்ந்துபோயிருந்ததாக ஒரு உணர்வு மாத்திரம் மீந்திருந்தது என்று சொன்ன நண்பர், தலைமாட்டிற்கு நேரே கூடத்தைத்தாண்டி வீதியைப்பார்க்க திறந்துகிடந்த தலைவாசலில் தனது பதின்மவயது நண்பனைக் கண்டார். பித்தான்கள் போடப்படாத சட்டை திறந்து வயிற்றைக் காண்பித்துக் கொண்டு, இடுப்பிலிருந்து இறங்க முயலும் கால்சட்டையை ஒருகையால் இழுத்துப் பிடித்தபடி மற்றொரு கையால் சீக்கிரம் வாவென சைகை காட்டுகிறான். நண்பருக்குப் புரிகிறது.

சாமித்தோப்பின் மூலைக்கிணற்றில் நீந்த எல்லோரும் போய்விட்டனர். இவர்தான் கடைசி. நண்பன் பொறுமையிழந்து கால்மாற்றி வைக்கிறான். எவ்வளவு முயன்றும் படுத்துக்கிடப்பவரால் எழ முடியவில்லை. சட்டென்று விளங்கியது. இந்தஎழவு அழுகையை இவர்கள் நிறுத்தினால்தான் அவர் எழுந்து நீச்சலுக்குப் போகமுடியும். அவர் பேச்சு மட்டுமல்ல கத்தி கூப்பாடு போட்டும் யாருக்கும் கேட்கவில்லை. வார்த்தைகள் ஒலிவடிவம் கொள்ளாமல் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் உடைந்துபோகும் காற்றுக்குமிழிகள் போலக் குரல்வளைக்குள்ளாகவே கலைந்து போனது. வெளியே நிற்கும் நண்பன் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தபடி நகர, இவர் 'விட்டுப்போகாதே!' என எழமுயல, அர்த்தமற்ற கேவலுடன் படுக்கையினின்றும் விழித்தெழுகிறார். பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியும் குழந்தையும் யாரோ போலத் தோன்ற, தலையை உதறி உடலைநிமிர்த்தி சமநிலைக்கு வந்தவர் மீத இரவுமுழுவதும் தூங்காமல் இக்கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனவில் வந்த அந்த பால்ய நண்பன் தனது பதினான்காவது வயதிலேயே விஷக்காய்ச்சலில் மாண்டு போனவன் இத்தனைவருடங்கள் கழித்து எதற்கு இந்நண்பரைக் காணவந்தான்? அதுவும் பிழைப்புதேடி சொந்த ஊரைவிட்டுப் பலநூறு மைல்கள் தாண்டிவந்து சேர்ந்த இந்நகரிலுள்ள வீட்டிற்கு எப்படி வழி கண்டுபிடித்து வந்திருப்பான்? அவனது அந்த அழைப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் மறைபொருள் என்ன? உண்மையில் மரணம் குறித்த முன்னுணர்த்தல் ஏதேனுமிருக்குமோ? என அரண்டுபோன நண்பர் சோதிடரொரு வரை கலந்தாலோசித்த பிறகு சனிபகவானுக்கு எழுவாரங்கள் எள்ளும் நெய்யுமிட்டு பரிகாரம் செய்திருக்கிறார். நான் சிரித்தபடியே நண்பரை வினவினேன். "நீங்க மத்த எல்லாவற்றையும் விட உங்கமனைவி, குழந்தை மேல் அதிக ஆசை வச்சிருக்கிங்க இல்லையா?" நண்பர் தயக்கத்துடன் 'ஆம்' என்றார். இவ்வாழ்க்கையின் மீது அவர் கொண்டிருக்கும் மாளாத காதலே அவருடைய ஆழ்மன விருப்பமாகத் தலைகீழாக்கப்பட்ட நிலையில் மரணம் குறித்த நிகழ்வாக மாறிக் கனவில் வெளிப்பட்டிருக்கிறது என்றேன். எனது அரைகுறை படிப்பையும், சொந்தக் கற்பனையையும், கலந்து நான் சொன்னக் காரணத்தை நம்பியவராக நண்பர் மலர்ந்து சிரித்தார்.

'தன் மரணக் கோலத்தைத் தானே பார்ப்பது' என்பது பலரும் பலவாறு கற்பனைகளிலும், சில சமயம் கனவுகளிலும் காண்பதுவே. அவ்வப் போது, ஏதேனுமொரு பிரபலத்தைப் பற்றிய மரணச்செய்தி புரளியாகப் பரவி ஓயக்காண்போம். 'கண்ணேறு கழித்தல்' என்னும் பரிகாரநிமித்தம் அவர்களே கிளப்பிவிடும் வதந்தி அது எனக் கூறுவோரும் உண்டு. கல்யாணத்தின்போது ஒப்புக்கொண்ட சீர்வரிசைகளைக் குழந்தை பிறந்த பின்னும் தரவில்லை என்பதற்காக, உயிரோடிருக்கும் போதே தன் மாமனாருக்கு உத்தரகிரியைப் பத்திரிகை அடித்து விநியோகித்த மருமகன் ஒருவரையும் நான் அறிவேன். தன் மரணத்தைத் தானே காண்பது அல்லது கேள்விப்படுவது என்பது முதல்கணத்தில் வலிதருவதாக இருப்பினும், அதைக்குறித்து ஆழ யோசிப்பவர்களுக்கு அதுவொரு அகவயப் பயணமாகவே அமையும் என்பது திண்ணம்.

நடைப்பயிற்சியை முன்னிட்டு நம்மில் சிலர் காலையிலோ, மாலையிலோ உலாவச் செல்வதுண்டு அபியின் பின்வரும் கவிதையும் அப்படிப்பட்ட ஒரு உலாவைப் பற்றிதான் விவரிக்கிறது, ஆனால் இது பௌதீகமான தளத்தில் நிகழும் ஒன்றுஅல்ல. இக்கவிதை உத்தேசிக்கும் வழி அகவயமானது. நமக்கு அவ்வளவாக பரிச்சயமற்றது என்பதால் முதலில் தடுமாறவைக்கக்கூடியது. ஆயினும் சற்று நிதானமாக எட்டு வைத்தால் இக்கவிதையுடன் சேர்ந்து அது சுட்டும் இடத்தில் நாமும் சென்றடையலாம்.

    உலா 

நிழல்

தொட்டு எழுப்பிவிட்டுப்

போனது

ஒருநாளும்

படுக்கையில்

பின்னம் விடாமல்

வாரிச் சுருட்டி

முழுமையாய் எழுந்ததில்லை

இன்றும் தான்.

 

வாடைக் காற்று

வழித்துப் போகும்

தேய்மானம்

பொருட்படுத்தாமல்

நடைபாதை நெருப்புத்

தொற்றித் தொடர

ஊர்க் கோடி வரை

உலாவப் போக வேண்டும்

 

ஊர்க்கோடி

ஒருநாள் இருந்த இடத்தில்

இன்னொரு நாள்

இருப்பதில்லை

 

போய்ச் சேரும் போது

பெரும்பாலும்

இருட்டி விடும்       

 

இருளின் பேச்சு மட்டும்

மயக்கமாய்

கனத்துக் கேட்கும்

அதில் மின்மினிகளின்

பாதையன்றி

வேறொன்றும் தெரியாது       

 

திரும்பிப்பார்த்தால்

ஊர்

புகைவிட்டுக்கொண்டு

சின்னதாய்த்தெரியும்

பிணங்கள் அங்கே

பொறுமையிழந்து

கூக்குரலிடுவது கேட்கும்.....

திரும்பத்தான் வேண்டும்

மனமில்லாவிடினும்,

 

திரும்பி

கடைவாயில்

மரணம் அதக்கி

மழுப்பிச் சிரித்து

உறங்கித் திரியவேண்டும்

மறுபடி நிழல்வந்து

தொட்டு எழுப்பும் வரை,

'நாம் பேசும் வார்த்தைகள், நாம் பேசியிராத முறைகளில் இதற்கு முன்பு நாம் சந்தித்திராத சந்திப்புகளில், இதுவரை நம்மைத் தொட்டிராத த்வனிகளுடன் நம்மை எதிர்கொள்கின்றன கவிதையில்' என்று கூறும் அபியின் குரல் தமிழ்க் கவிதையின் அபூர்வங்களில் ஒன்று. இலக்கியச் சூழலின் சந்தடியிலிருந்து எப்போதும் ஒதுங்கியே காணப்படும் அவரது சுபாவத்தினால் மட்டுமல்லாது, அவருடைய கவிதைகளின் அசாதாரணமான உள்ளடக்கம் மற்றும் அதன் முன்பரிச்சயமற்ற தன்மை காரணமாகவும், தனது சாதனைகளுக் குரிய அங்கீகாரத்தையும், கவனத்தையும் போதிய அளவு பெறாதவர் அவர்.

மொழியை மிகுந்த விழிப்போடும், வீச்சோடும் பயன்படுத்துகிற அபியின் கவி உலகம் பலவிதங்களிலும் தனித்துவமான ஒன்று. அது அருவமான சித்தனைகளையும் ஆழ்மனப் படிமங்களையும் உள்ளடக்கியது. புற உலகின் தோற்றங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அகவயமான காரணிகளைக் காணும் பொருண்மைத்தன்மை உடையது. சொல்லுக்கும், பொருளுக்கும் இடையிலான பிளவை, அதில் நிரம்பியுள்ள நிழல்வெளியைக் குறித்த கவனத்துடன் எழுதப்படும் இவரது கவிதையின் வரிகள் ஆழமான வாசிப்பைக் கோருபவை. மேற்சுட்டப்பட்டிருக்கும் கவிதையும் இத்தன்மையதே. இக்கவிதையினுள் தொழிற்படும் காலம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் கடிகாரச் சுற்றிற்கு உட்பட்ட ஒன்றல்ல. மட்டுமின்றி இதில் சுட்டப்பெறும் இடங்களான படுக்கை, ஊர், நடைபாதை, ஊர்க்கோடி என்பவையும் திட்டவட்டமான பௌதீக இருப்பாக இல்லாமல் அசையும் படிமங்களாகவே காணப்படுகின்றன.

எனவே இக்கவிதை குறிப்புணர்த்தும் உலா என்பது உள்முகமான ஒன்று என்பதை அறிகிறோம் கொண்டாட்டமான வாழ்வின் வெளிச்சத்திற்கடியில் ஒளிந்திருக்கும் மரணத்தின் நிழலை ஒரு எக்ஸ் கதிர் படம்போல் பிடித்துக்காட்டுகிறது இந்தக் கவிதை. இருப்பிற்கும் இறப்பிற்குமிடையில் இருப்பதாக நாம் கருதும் இடைவெளியைத் தனது சொற்களால் அழிப்பதன் மூலம் இக்கவிதைவின் அனுபவத்தை உருவாக்குகிறார் அபி. 'ஒரு நாளும் படுக்கையினின்றும் பின்னம் விடாமல் எழுந்ததில்லை', 'ஒரு நாளிருந்த இடத்தில் இருப்பதில்லை ஊர்க்கோடி' 'ஊர் புகைவிட்டுக்கொண்டு தெரியும், 'என்பிணங்கள் பொறுமையிழந்து கூக்குரலிடும்’ போன்ற தொடர்கள் முதலில் தரும் திடுக்கிடலைக் கடந்து உள்நுழையும் ஒருவருக்கே இக்கவிதை தனது அனுபவத்தின் வாசலைத் திறக்கிறது எனலாம்

எங்களூர்ப் பகுதியில் இறந்த உடலைப் பாடையில் வைத்து ஆற்றின் அக்கரையிலுள்ள இடுகாட்டிற்குக் கொண்டு செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட தூரம்வரையிலும் இறந்தவரின் முகம் ஊளரைப் பார்க்கத் திரும்பியிருக்குமாறு எடுத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட ஒரு இடம் வந்தவுடன் உடலைத் திசைமாற்றி முகம் இடுகாட்டைப் பார்த்தவாறு இருக்க சுமந்து செல்வார்கள். அந்த இடத்திற்கு 'பாடை மாற்றி' என்று பெயர். அவ் விடம் வரும்வரை உடலுக்குரியவருக்கு ஊருடன் இருந்த பிணைப்பு அத்தோடுஅறுந்து இனியெப்போதும் திரும்பமுடியாத வழியில் இடுகாட்டை நோக்கிச் செல்வதாக ஒருநம்பிக்கை, இதே மாதிரியான ஒரு தலைகீழாக்கல் மூலமாகவே இக்கவிதையில், வாழ்வு X மரணம் என்ற வழக்கமான எதிரீடுகளைக் கலைத்து அவற்றின் அர்த்தங்களை ஒன்றின் பரப்பிற்குள் மற்றொன்றை ஊடாடச் செய்வதன் வழியாக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார் அபி.

இங்கு எடுத்தாளப்பட்ட கவிதைகள் இரண்டினுள் முதலாவதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் மரணத்தைப் புறவயமாக ஆராய்கிறது. திட்டவட்டமான நோக்குடன் இழப்பு குறித்து ஒரு துல்லியமான சித்திரத்தை வரைந்து காட்டுவதன் வாயிலாக அப்பாடல் வாழ்வின் நிலையாமை குறித்து நமக்கு போதிக்கிறது. அப்பாடலின் உட்கிடையாக அமைந்திருக்கும் செய்தி அநித்திய மான இந்த வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக நாம் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதே.

இரண்டாவதாகச் சுட்டப்பெற்ற அபியின் கவிதையோ இறப்பை அகவயமான நிலையிலிருந்து பரிசீலனை செய்கிறது. நாம் இருந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் தன்மையைக் கோடிகாட்டும் இக்கவிதை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ அறிவுரை எதையும் நம்மிடம் பகர்வதில்லை . மாறாக மரணம் குறித்த முடிவற்ற யோசனைகளின் அதலபாதாளத்திற்குள் நம்மை இழுத்துக் கொண்டுவிடுகிறது. சாவு குறித்த நமது இந்தத் தயக்கமும் அச்சமுமே , அதன் மறுதலையாக வாழ்வு குறித்த ஈர்ப்பும் துய்ப்புமாக நம்மிடம் வெளிப்பாடு காண்கிறது எனலாம். காலவரிசைப்படி இவ்விரு கவிதைகளுக்குமிடையில் பல நூற்றாண்டுகள் இடைவெளியிருப்பினும் இவற்றின் சாராம்சமான யோசனைகளின் அடிப்படையில் அருகருகே வைத்து நோக்கத்தக்கவையே. மனித சிந்தனையின் பரிணாமவரலாற்றில் தொடக்கம்தொட்டே நீடித்துவரும் புதிர்களில் மரணமளவிற்கு வசீகரமானது வேறு எதுவுமில்லை. அதனாலேயே தர்க்கத்தின் துணை கொண்டு ஆராய்கின்ற தத்துவவாதிகளை மட்டுமில்லாது, கற்பனையின் சிறகு கொண்டு பறக்கும் கவிஞர்களையும் அது ஒன்று போலவே ஈர்த்து வருகிறது.

***

கவிஞர் அபி தமிழ் விக்கி பக்கம்

Share:

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் - பெரு விஷ்ணுகுமார்

பொதுப்புத்தியிலிருந்து தன்னை துண்டித்துக்கொள்கிற வழக்கமான கவிமனம் ஒரு சமூகம் தரும் பொது அனுபவங்களை தன் படைப்புக்குள் எதிர்கொள்கிற இடம் மிகவும் சுவாரசியமானது. அதிலும் தன்னிலையின் ஆதிக்கத்தால் மொழி சிந்தனைக்கு உட்படும்போதெல்லாம் கவிதையில் மனிதர்கள் குறைந்து போவதை அபி, நகுலன் மாதிரியான கவிஞர்களை வாசிக்கையில் உணரலாம். அதற்கு காரணம் அக்குறிப்பிட்ட அனுபவத்தைச் சொல்ல எழுதியவனின் சாட்சியே போதுமென்கிற முடிவுதானே தவிர, கவிஞனின் வாழ்வுக்குள் மற்றும் அவன் படைப்புக்குள் ஒரு சமுதாயம் உண்டாக்கும் விளைவு எந்த பாதிப்பையும் தராது என்கிற முடிவல்ல. எவ்வாறு ஒரு தனிமனித அனுபவத்திற்குள், ஒரு கூட்டு அனுபவத்தின் சாத்தியங்கள் பொதிந்திருக்கின்றன என்கிற நோக்கும், அளவுகோலும் காலங்காலமாகப் புனையப்படும் மகத்தான சித்திரங்கள் பலவற்றுக்கும் பொருத்திப்பார்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக துறவறம் செல்லவேண்டி எடுத்த மணிமேகலையின் முடிவினை வெறுமனே ஒரு தனிப்பட்ட நிலைப்பாடு என்று மட்டும் கூறிவிட முடியாதல்லவா. ஆக, துறவுநிலைக்கும் ஒரு சமூகத் தொடர்புண்டு. பிராய்ட்-ன் வார்த்தைகளில் கூறுவதெனில் "புறம் என்பது யாவும் அகத்தின் எதிரொளிப்பே". மேலும் தன் தனிமையின் குரலுக்கு பதிலுரைக்கும் பிரதிபலிப்பாக இடம்பெறும் நகுலனின் சுசீலா, அவர் தன் தன்னிலை என்னும் மையத்திலிருந்து விலகி யோசித்த மற்றமை என்பதன்றி வேறென்ன...? இந்த வகைமையில்தான் ஆத்மநாம், ஞானக்கூத்தன் மற்றும் யவனிகா ஸ்ரீராம் போன்ற கவிஞர்களின் உலகில் அந்த மற்றமையின் மீது செலுத்தப்படும் கவனம் பெருகிப் பெருகி அவர்தம் கவிதைகளுக்குள் ஒருவித சமூக உருவாக்கம் நிகழ்வதைக் காணலாம். இந்த வரிசையில் உலகமயமாக்கலின் துவக்கத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு கலாச்சாரங்களின் நினைவுகளை ஒன்றிணைப்பதன் மூலம் பண்பாட்டு வேற்றுமைகளை களைந்து உலகளாவிய தன்மையை புனைய முயலும் கவிஞர். யவனிகா தொடர்ச்சியாக தனது பாடுபொருட்களில் கீழை நாடுகளின் அரசியலை மேலதிகமாய் கவனப்படுத்துவதன்மூலம் அந்த பொதுத்தன்மையை சாத்தியப்படுத்துகிறார்.

கவிதைக்குள் இயற்கையைப் பாடுதல் தத்துவம் என்றும், அதுவே சூழலியலைப் பேசினால் அரசியல் என்றும் புரிந்துவைத்திருக்கும் போக்கு ஒருபோதும் அகத்தையும் புறத்தையும் ஒன்றுபோல பாவிக்காது. அதுபோன்ற நிலைதனில், முழுமுற்றான தனிமை சாத்தியமில்லை என்பதுபோல், முழுமுற்றான பொது மனமும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கவிதையின் பணி எப்போதும் ரசனைகளின் வழியே உலகைக் காண்பதோ அல்லது நடப்புச் சூழலுக்கு பொறுப்பேற்பதோ மட்டுமல்ல. இயல்பில் அது ஒருவகை சமநிலை நோக்கு கொண்டதாகவே காணமுடிகிறது. சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு எதிரொளிக்கும் கண்ணாடியான மனித மனம் எப்போதும் அந்தந்த தருணங்களின் கூட்டுத்தொகையே. அவற்றை அகம்/புறம் என பிரித்துக்காண்பதெல்லாம் அப்படைப்பை அணுகுவதற்கான விமர்சன வழிமுறைகளேயாகும். கவிஞர் எஸ். சண்முகம் தமது கட்டுரையொன்றில் அகம்/புறம் என்பது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் இரு எதிரெதிர் தூண்களைப்போன்றது என்றும், அத்தூண்களுக்கிடையிலான வெளியே கவிதையில் உருவகங்களுக்கான வெளி என எடுத்துரைக்கிறார். அந்தவகையில் உருவகங்களின் அல்லது படிமங்களின் வலிமை சமயத்தில் அந்த இரண்டு எதிரெதிர் நிலைகளையும் சரிசமமாக்கி ஒரு தராசைப்போல நிலைநிறுத்துமெனில் அதையே சமநிலைமனம் என எடுத்துக்கொள்ளலாம். இதன் அர்த்தம் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை பின்பற்றும் ஆளுமையின் நடுநிலைமையைக் குறிப்பதல்ல. மாறாக பல்வேறு வாதங்களை தமக்குள் எழ அனுமதிக்கிற அகத்தின் தருணங்கள் சார்ந்தது. அதாவது ஒரு சமூகத்தின் அனைத்து புறப்புள்ளிகளையும் தன் அகத்தால் ஒன்றிணைத்துவிடும் கவிஞர். யவனிகா ஸ்ரீராம் தொடர்ந்து தமது ”தனிப்பட்ட அனுபவங்களிலுள்ள பொது அனுபவத்தை” எவ்வாறு கவிதையாக்குகிறார் என்கிற நோக்கு அவரை சற்று மாற்றுக்கண்ணோட்டத்தில் காண வழிவகுக்கலாம்.   

1.

மார்க்சியம் முதலாக சிக்கலான பல புரட்சிகர சித்தாந்தங்களின் எளிய உதாரணங்களை தொடர்ந்து தம் கவிதைக்குள் தேடி அவற்றை மொழிப்படுத்தும் யவனிகாவுக்கு “நான் மனிதன், எனவே மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று” என்கிற தெறன்ஸின் கூற்று பொருத்தமாக இருக்கும். இவரின் பெரும்பாலான எள்ளல்கள், முரண்பாடுகள் அனைத்தும் தேய்வழக்காகிப்போன நியதிகளையும் மற்றும் பொறுப்பற்ற தினசரிகளையும், நிதர்சனத்தில் ஓரெல்லைகளைத் தாண்டி செயல்பட முடியாமல் விதிகளால் சூழப்பட்ட மனித இயலாமைகளையும் குறித்தே நிகழ்வதால் இவரின் மொழி எப்போதும் ஒரு விழிப்புநிலையிலேயே (consciousness) செயல்படுகிறது. அந்த விழிப்புணர்வு தம்மையும் அந்த குற்றச்சாட்டுக்குள் உட்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. "ஒரு நகரத்திற்கான பனித்துளிகளை குளிர்பதனப் பெட்டிகளே வழங்கிவிடுகின்றன" என்று கூறும் யவனிகா, கற்பனைகளால் வாழ்வியலையும், அபிப்பிராயங்களால் விமர்சனங்களையும் தம் மொழிக்குள் சரிநிகராய் முன்னிறுத்துகிறார். 

"அவன் ஒரு பூவைக் கிள்ளும் வேளையில்

பூக்களுக்கு நரகம் உண்டாவெனக் கேட்டான்

கிள்ளிய நகங்களை கேட்கத் தோன்றாமல்" 

நிஜவாழ்வில் குற்றங்களும் பின்விளைவும் அடுத்தடுத்த நிகழ்வுதான். ஊழ்வினையைப்போல் பாவ புண்ணியம் மனிதனிடமிருந்து வெகுதொலைவில் இருப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் சுமத்திக்கொள்ளும் ஒவ்வொரு பிராதுகளிலும் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை ஆராயும் பணிகளை அரசமைப்புகளைக் காட்டிலும் இலக்கியங்கள் பாரபட்சமின்றி புரிந்தன. அதிலும் கவிஞர்.யவனிகா தமது அரசியலை கூட்டுக்குரலாக மட்டும் அணுகாமல் ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆழமான கேள்விகளாகவும், அதன் தாக்கத்தையும் பதிவுசெய்த அவரின் கோணமானது வழக்கமான அரசியல் நோக்குகொண்ட கவிதைகளுக்கு கிடைத்திட்ட மாற்றுப்பார்வை எனலாம். எல்லா தண்டனைகளும் குற்றவுணர்வைத்தான் போற்றி வளர்கின்றன என்றால் அந்த குற்றவுணர்வுகளை ஆய்வுக்குட்படுத்துவதும், அவற்றை யார் யார்மீது சுமத்துகிறார் என்பதை கேள்விக்குட்படுத்தும் செயலை அரசியல் கவிதைகளின் தன்னியல்புகளுள் ஒன்றாக முன்வைக்கிறது இக்கவிதை. அதுவே தேவதேவன் காணும் பூவிற்கும், யவனிகா பயன்படுத்தும் பூ என்கிற கருப்பொருளுக்குமான வேறுபாடாகும்.

2.

அரிஸ்டாட்டில் பரிணாமத்தை அறிவியலாகக் கண்டதுபோல், 19ஆம் நூற்றாண்டின் அறிவியலாளர்கள் வரலாற்றையும் ஒரு சமூக பரிணாமம்போல் முன்வைத்தனர். அதன்பிறகே அணுக்கொள்கை உட்பட உலகின் எல்லா பருப்பொருட்களின் பரிணாமமும் அறிவியலில் ஒரு வரலாறுபோல நினைவூட்டப்பட்டன. அந்தவகையில் தெரிந்தோ தெரியாமலோ கவிதைகளும் வரலாற்றின் நிழலுக்குள் வந்துசெல்லவேண்டிய தற்செயல் அவ்வப்போது வாய்க்கத்தான் செய்கிறது. இன்னமும் கூறப்போனால் அந்த வரலாறு என்னும் அந்தஸ்தை, அந்த வடிவத்தை (Form) ஒரு தனிமனிதனின் நாட்குறிப்புகளில் துவங்கி, சின்னச் சின்ன பருப்பொருட்களுக்கும் வழங்கி கலைகள் தான் சொல்லவந்த நோக்கத்திற்கான உருவகமாகப் பயன்படுத்தின. பிற்பாடு குறியியலில் அடிப்படையில் அந்த உருவக நோக்கில் கண்காணிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் தமக்குரிய வழக்கத்திலிருந்து கூடுதலான அர்த்தங்களைச் சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட, வார்த்தைகள் ஒவ்வொன்றும் அகராதிகள் தரும் அர்த்தங்களோடு மரபுசார்ந்த மற்றும் கலாச்சார நினைவுகளும் சேர்ந்து வெளிப்படத்துவங்கின. 

சட்டை

வேறு வேறு வர்ணங்களில்
ஒழுங்கிழந்து ஊசிக் குத்துக்கள் வாங்கி
உடல் தழுவி உப்பில் கசிந்து
முதல்நாள் பெருமிதமாய்
சலவையில் சுயம் இழந்து
மூடிக்காத்து மூடிக்காத்து பின்
மூட மறந்து மூலையில் கிடந்து
பாத்திரக்காரனுடன் பயணித்து
வேறு உடல் கண்டோ விலகி வீழ்ந்தோ
லாரித் துடைப்பில் கந்தையாய்
பைத்தியக்காரனின்
பக்கவாட்டுத் தொங்கலாய்
சிலநேரம் தொழுநோயாளியின் துடைப்பில்
சாக்கடையில், குளத்தில் அடியில்
சாலையோர மரங்களில் முள் செடியில்
வெயில் காய்ந்து பொடியாய் உதிர்ந்து
மண்ணோடு மண்ணாய் மாறும்
என் ஒரு நாள் விருப்பச் சட்டை

இக்கவிதையில் தத்தம் தினசரியில் பயன்படும் ஒரு சட்டையின் பல்வேறு நிலைமைகளை எடுத்துரைக்கும் அதேவேளையில், “என் ஒருநாள் விருப்பச்சட்டை” என்ற வரிகளால் இத்தனைபேரோடும் பயணித்தது ஒரே சட்டைதானோ என்ற ஐயத்தையும் தருவதாக உள்ளது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தையும், எல்லாநிலை மனிதர்களோடும் பயணிக்கவல்லதொரு வஸ்துவின் வாழ்வை சுயவரலாறுபோல் எழுதுவதன் மூலம் பேதமற்ற மனோபாவத்தையும் இக்கவிதை மறைமுகமாய் வலியுறுத்துகிறது. மேலும் மனித உடலை சட்டையாக உருவகம் செய்கிறது பகவத்கீதை. எனில் இக்கவிதையின் இறுதியில் 'மண்ணோடு மண்ணாய் மாறும்' என்கிற வரியைக் கண்டோமேயானால் இங்கு சட்டை என்பதற்கு பதிலாக உடல் என்ற வார்த்தையும் பொருத்திப்பார்க்கலாம். இக்கவிதையில் ஒரே கருப்பொருளை ஒரே கவிதையில் பொதுமையிலும், தனிப்பட்ட முறையிலும் காண்பதுபோலான அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன.

3.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இருத்தலியல் குறித்தும், விழுமியங்கள் குறித்தும், ஆன்மீக மற்றும் மத ஈதியிலான பற்றுதல்கள் குறித்தும் பெரிய வினாக்களை மனித சமூகம் தம் அகத்தே எதிர்கொள்ளவேண்டிய நிலையுண்டானது. ஒரு அரசதிகாரத்தின் உட்சபட்ச ஆற்றல் என்பது படைபலங்களைத் தாண்டி அது கொண்டிருக்கும் ஆயுதங்களின் அடிப்படையில் அளவிடப்பட்டது. முக்கியமாக மனித உழைப்பின் விளைவாக உண்டான எல்லா பொருட்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவை இருப்பதையும், அப்பொருட்களின் இடம், நேரம் பொறுத்தும் அதன் பயன்பாடுகளைப் பொறுத்தும் அவையளிக்கும் அர்த்த மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஒரு சமயலறை கத்திக்கும், போர்வாளுக்குமான தொழில் என்பது பெரிதளவிலான வேறுபாடுகள் கொண்டதல்ல எனக்கூறும் யவனிகாவின் முக்கியமானதொரு கவிதை இது,

சிறுநெருப்பு

என் வீட்டில் ஆயிரம் தோட்டாக்கள்
செய்யக்கூடிய பித்தளை உலோகம்
ஒரு பெரிய நீர் பானையாய் இருக்கிறது.
சில கருந்துப்பாக்கிகளுக்கான இரும்பு
குழந்தைகள் சிலநேரம் நானும்
ஆடும் ஊஞ்சலாய் கூடத்தில் சிணுங்குகிறது.
சின்னஞ்சிறு நெருப்புப் பெட்டிகளில் இருந்து
பல வெடிகுண்டிற்கான மூலப்பொருளை
அனேக காலமாய் என் தாய் செலவழிக்கிறாள்.
சேய்மை நிலமொன்றில் பல நாட்களின் தொடர்ச்சியாய்
குருதிவெள்ளம் பாயும் தெருக்கள் பற்றியும்
ஈ மொய்க்கும் பிணங்கள் பற்றிய விவரணையும்
ஒலிபரப்பப்படும்போதெல்லாம்
எந்தையின் ஈமச்சடங்கிற்கு இளநீர்காய் வெட்டிய
தென்னங்கொல்லைக்கிடையில் திடுக்கிட்டுப் போகிறேன்
இன்னமும் அங்கிருக்கிறதா நீர் பானையும் ஊஞ்சலும்
சிறு நெருப்போடு தென்னங்கொல்லையும் '
 

ஒரு போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் சாதாரண வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான தொடர்பு என்பது மனித சமூகம் தனிப்பட்ட முறையில் போர்கால சூழலை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்கிற சித்திரைத்தை எளிக்கிறது. யுத்தத்தின் நினைவுகளை ஒரு தனிப்பட்ட மனிதன் எவ்வாறு தொடர்புறுத்திக்கொள்வான் என்கிற பாவனையில் அமைந்துள்ள இக்கவிதை பெரும் சாகசங்களுக்கு ஈடாக எங்கோ ஓரத்தில் நடக்கின்ற சின்னச் சின்ன பிரம்மாண்டங்களை அருகருகே நிறுத்திப் பார்க்கின்றது. இதுபோல எளிய எடுத்துக்காட்டுகளை முன்னிறுத்துவதன் மூலம் அதன் உள்ளர்த்தங்களால் ஒருவித கூட்டு மனநிலைக்கு இட்டுச்செல்லும் கவிதைகளை யவனிகா ஏராளம் எழுதியுள்ளார். அவரின் பார்வையில் சமூகத்தின் ஒட்டுமொத்த போக்கிற்கும் தனிமனித அனுபவத்திற்கும் நேரடி தொடர்புண்டு. கிட்டத்தட்ட யவனிகாவின் இயங்குமுறை ஒரு தேர்ந்த தன்னிலையை மையமாகக் கொண்டது. அந்த தன்னிலை கவிதையைச் சொல்லும் ஆளுமையோடு தொடர்புடையது. அது மானுடத்தின் பிரச்சினைகளைப் பேசும் அதேவேளையில், ஓடங்களின் பாடல்களை அதன் கரையில் கட்டிப்போட முடியாது” என்ற வரிகளைப்போன்று சிறு சிறு சுவாரசியங்களின் மீதான பிடியையும் விட்டுவிடுவதில்லை. அத்துடன் அக்கவிதைகளை எழுதும் ஆளுமைக்கு என்று சில கருத்தியல் நம்பிக்கைகள் உள்ளதென்பதால், அவரின் கவிதைககளுக்கான மையம் சமயங்களில் அவரின் ஆளுமையின் தொடர்ச்சியாகவும் மாறிவிடுகிறது. இது அவரின் பலம்/பலவீனம் இரண்டையும் உள்ளடக்கியது என்பேன். ஆனால் மற்றபடி ஒரு கவிஞரின் மொத்த கவிதைகளையும் ஒரு அறிவெல்லைக்குள் தொகுத்துக்கொள்ள அந்த மையமானது அவசியமானதுதான். எல்லாவற்றையும் மறுவரையறை செய்யும் தீர்க்கமும், உள்ளடக்கத்தில் புதிய உத்திகளை சாத்தியப்படுத்திய முனைப்புகளும் யவனிகாவின் உலகத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்திடாமல் தொடர்ந்து விரியச் செய்யும் தூண்டுகோலாக இருக்கின்றன.

***

யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

பெரு விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்

Share:

கவிதையின் கருவிகள்- கவிஞர் மதார்

நவீன தமிழ் இலக்கியம் ஒரு வானம், எவ்வளவு பறவைகள் வேண்டுமானாலும் அதில் பறக்கலாம். அதற்கான இடம் அதில் உள்ளது என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையொன்றில் குறிப்பிடுகிறார். தற்கால சூழலுக்கு மிகப் பொருத்தமான வரிகள் இவை. ஒருவன் கவிஞனாக வேண்டுமெனில் அவனுக்கு முதலில் சிறகு முளைத்தாக வேண்டும். மொழி - ஒரு சிறகு. ஆளுமை - இன்னொரு சிறகு. வாசிப்பு, பயிற்சி, தொடர் முயற்சி இவற்றின் வழி மொழி ஒருவனுக்கு கைகூடிவிடலாம். ஆளுமையை அவரவரது வாழ்வே தீர்மானிக்கிறது. தமிழில் கவிகளுக்கு தனிக்குரல் இல்லை. எல்லாரும் ஒன்று போலவே எழுதுகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்றுண்டு. ஆனால், கவிதையில் மிக நுண்ணிய இடத்தில் கவிஞனின் இயல்புகள் கவிதையில் ஏறியிருக்கும். 

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவற விடுகிறார்

தொப்பென வீழ்ந்து

விடாதபடிக்குத்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலால் ஏற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கிடையே

மாறி மாறித் தட்டி

விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை: உன்னைக்

கைவிவிடுவதுமில்லை”

பிதாவே! தயவு பண்ணி எம்மைக்

கைவிடும்”.

இசையின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும்போது நாம் புன்னகைக்கிறோம். ஒருவேளை இந்த கவிதையை எழுதியவர் பிரான்சிஸ் கிருபாவாக இருந்திருந்தால் இது ஒரு துயர அனுபவத்தைக் கூட தந்திருக்கலாம். எப்படி பார்த்தாலும் ஒரு நல்ல கவிதையில் அதை எழுதிய கவிஞனின் ஆளுமை பதிந்தே இருக்கும். புத்தம் புதிதாக எழுத வரும்  இளம் கவிஞன் முன் இந்த ஆளுமைதான் கேள்வியாக நிற்கிறது. இதனாலேயே என்னவோ 'நான்' கள் இடம்பெறும் கவிதைகளை கவிஞர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் அதிகம் எழுதிப் பார்க்கிறார்கள் அல்லது தான் விரும்பும் மூத்த கவிஞரின் சாயலில் கவிதைகளை எழுதிப் பார்க்கிறார்கள். ஒரு கட்டம் வரைக்கும் அந்த சாயல், பாவனை இளம் கவிக்கு தேவையாய் இருக்கிறது. ஏனென்றால் தன்னை கவர்ந்த அந்த கவிஞரின் பாதிப்பில் தான் அவன் கவிதையே எழுத வந்திருப்பான். ஒரு ஊன்றுகோல் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அது தேவைப்படுகிறது. பின்னர் சுயமாக நடக்கும் காலத்தில் மொழி, ஆளுமை என்ற இரண்டு சிறகுகளுடனும் அவன் பறத்தலுக்கு தயாராகிறான்.

பெரு.விஷ்ணுகுமாரின் "அசகவ தாளம்" அவரது இரண்டாவது கவிதை தொகுப்பு. அவரது தனித்துவம் அவர்  பயன்படுத்தும் கவிதையின் கருவிகள். நிலா, பூ, பறவை போன்றவை காலங்காலமான கவிதையின் கருவிகள். பெரு.விஷ்ணுகுமார் கூடுமானவரை தன் கவிதைகளில் பழைய கருவிகளை தவிர்க்கிறார். திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்டு அர்த்தம் ஏற்றப்பட்ட நிலவையும், பூவையும், பறவையையும் அவர் அரிதாகவே பயன்படுத்துகிறார். புதிய கருவிகள், விசித்திர சம்பவங்கள் அவரது கவிதைகளில் அதிகமாக வருகின்றன. க்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவன், கன்வேயர் பெல்ட்டில் பயணிப்பவன் என்பன சில எடுத்துக்காட்டுகள். புதிய கருவியை முன்வைப்பதால் நிகழ்கிற விசித்திரங்கள் மட்டும் கவிதைக்கு போதாது. அதைத் தாண்டிய ஒன்றை அடையவே பெரு.விஷ்ணுகுமார் தன் கவிதைகளில் முயற்சிக்கிறார். புதிய கருவிகளின் வரவு தமிழ்க்கவிதைக்கு ஆரோக்கியமானதே. ஆனால் பழைய கருவிகளை முழுவதுமாக கைவிடுவதும் சாத்தியமல்ல. பழைய கருவிகள் பழுதடைந்து விட்டதாக புதிய கவிகள் நினைக்கிறார்கள். பழைய கருவிகளை புதிய கவிகள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொருத்தே பழைய கருவிகள் நவீனமடையும். அந்த வகையில் சேர்கிறது இந்த தொகுப்பில் வரும் "மீள" என்கின்ற கவிதை.

மீள

அவ்வளவு சிரமத்தோடெல்லாம்

இங்கிருந்து நிரந்தரமாய்

எனைவிட்டுப் பிரிய வேண்டாம்

ஆற்றில் பயணிக்கும்

ஆளற்ற படகே 

விருப்பமில்லையெனில் திரும்ப வந்துவிடு

உன்னால் முடியும் என்றால் . . .

இதில் வரும் "உன்னால் முடியும் என்றால்" என்ற கடைசி ஒரு வரி இந்த கவிதைக்கு பெரு.விஷ்ணுகுமாரின் ஆளுமையைக் கொண்டு வந்து விடுகிறது. அவரது முதல் தொகுப்பான "ழ என்ற பாதையில் நடப்பவன்", இரண்டாவது தொகுப்பான "அசகவ தாளம்" இரண்டையும் ஒரு வாசகன் படிக்கும்போது உணர முடியும் இந்த ஒரு வரியில் பெரு வரும் இடம். அதுதான் அவரது ஆளுமை. அதை எந்த மெனக்கெடலும் இல்லாமல் இந்த கவிதை சாத்தியப்படுத்துகிறது. எந்த புதிய கருவிகளும் இல்லை, விசித்திர நிகழ்வுகள் இல்லை, ஆளற்று போகும் ஒரு படகிடம் வேண்டுமென்றால் வா,அதே நேரத்தில் உன்னால் முடிந்தால் என்று கூறும் இடத்தில் பெரு.விஷ்ணுகுமார் பறக்கத் துவங்குகிறார்.

*** 

பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இறையியலும் தற்கால கவிதைகளும் - பண்ணாரி சங்கர்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

மண்ணில் வாழும் இந்த உயிரினங்களை அறிவு என்ற வகைமையால் ஆறாக பிரித்துக் கூறுகின்றார் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் (இதில் பூமியில் வாழும் உயிர்கள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது).இப்படி பூமியில் ஆறுவகை பிறப்புகளும் எடுக்கும் உயிரினங்களுக்கும் , பிறப்பு என்பது ஒன்று, உயிர் என்பது ஒன்று. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு" எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒன்று என்கின்றது திருக்குறள்.

இதை தான் இந்து மத நான்கு வேதங்களின் சாரமான மஹாவாக்கியங்களும் விளக்குகின்றது. இந்த வாக்கியங்களுக்குள் செல்வதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் . பிரம்மன் (நான்முகன் என்ற படைப்பின் கடவுள் அல்ல) ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக கருதப்படுகின்ற வேதங்களில் குறிப்பிடப்படும் பிரம்மனை குறிப்பது. ஆத்மன் என்பது மனிதர்களின் ஆன்மாவை குறிப்பது.

ரிக் வேதத்தின் சாரமான பிரக்ஞானம் பிரம்ம என்பது பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன். அறிவுணர்வு என்று இருக்கும் எல்லாவற்றுள்ளும் படைப்பின் ஆதாரமாக விளங்குகின்ற பிரம்மன் இருக்கின்றது. அதர்வண வேதத்தின் சாரமான அயம் ஆத்மா பிரம்ம என்பது ஆத்மன் தான் பிரம்மன். அதாவது எல்லா உயிர்களில் இருக்கும் ஆத்மன் தான் படைப்பின் ஆதாரமாய் விளங்குகின்ற பிரம்மன். சாம வேதத்தின் சாரமான தத் த்வம் அஸி என்பது ஆத்மன் ஆன நீயே அந்த பிரம்மன் என்கின்றது. யஜுர் வேதத்தின் சாரமான அஹம் பிரம்மாஸ்மி என்பது ஆத்மனான நானும் பிரம்மன் தான் என்கின்றது.

மௌனி சொல்வார் "பிரக்ஞை சுடர் மாதிரி எறிஞ்சிண்டே இருக்கணும் , உள் மனசிலே". அதுபோல பிரக்ஞை சுடர் போல எரியும், உயிரினங்களிலும் கடவுள் இருக்கின்றார். இப்படியான தத்துவத்தின் நீட்சியாகதான் மதாரின் தொகுப்பான வெயில் பறந்தது என்ற தொகுப்பில் வரும் முப்பத்தி ஏழாவது கவிதையை பார்க்கின்றேன்.


சமவெளிகளில் ஆடு மேய்க்கும் சிறுவன்

மானசீகமாய்க் கும்பிடுகின்றான்

அதிகாலைப் பனியை

ஆடுகள் தங்களது காலை உணவில்

சேர்த்து விழுங்குகின்றன

மேய்ப்பாளனின் கடவுளை

மேய்ப்பரும் கர்த்தா

மேய்வதும் கர்த்தா 

இந்த கவிதையில் பனித்துளியை கடவுளாக பார்க்கின்றான் ஆடு மேய்க்கும் சிறுவன். புல்லுடன் அந்த பனித்துளியையும் சேர்த்து விழுங்குகின்றன ஆடுகள். இங்கு ஆடுகளும் கர்த்தா, விழுங்கும் பனித்துளியும் கர்த்தா என்கின்றார் மதார். இங்கு நிலம், புல்,பனித்துளி, ஆடு, சிறுவன் என யாவும் கர்த்தா தான். இப்படி எல்லாவற்றிலும் இறைத்தன்மையை உணர்ந்த திருமூலரும் தனது திருமந்திரத்தில் அணுவிற்கு உள்ளும் இறையே, புறமும் இறையே. இறையே பிரபஞ்சம் அளவு விரிந்துள்ள எல்லாமும் ஆக இருக்கின்றது என்கின்றார்.

***

அணுவில்  அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தனிவற நின்றான் சராசரம் தானே

இதையேதான்  ஒவ்வையார் எழுதிய விநாயகர் அகவலில் வரும் ஒரு வரியும் 

கூறுகின்றது.

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்

எல்லாவற்றிலிலும் நீக்கமற நிறைத்த அந்த இறையை தான் வே.நி.சூர்யா, தனது அந்தியில் திகழ்வது தொகுப்பின் (கடவுள் வாழ்த்து பாடல் போன்று அமைந்த) முதற் கவிதையில் வணங்குவோம் என்கின்றார்.

தூரத்தில்

ஒரு சோளக்கொல்லை பொம்மையினை பார்த்தேன்

இருந்தும் இல்லாது

பறவைகளின் நெரிசலையும் அதன் சாயைகளின் நெரிசலையும்

நெறிப்படுத்திக்கொண்டு

ஏதோ தானொரு போக்குவரத்து காவலர் என்பதுபோல

நின்றுகொண்டிருந்தது

மானுடர்களுக்கும் இப்படியொருவர்

இருக்கவேண்டும்

அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு

அநேகமாக எந்நேரமும் உறங்கியபடி

எட்டாத தொலைவினில்

ஒரு இன்மையின் வடிவிலிருந்து

சகலத்தையும்

ஒழுங்குபடுத்தியவாறு

ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும்

அவரை அந்தப் பேரின்மையைப்

போற்றுவோம் நண்பர்களே

அப்பாலுக்கு அப்பலாய் இருந்தபடி எல்லாவற்றையும் ஒரு நெறிப்படுத்தும் இன்மையே இறைநிலை. அப்படி தனக்குள் இருக்கும் இன்மையை , ஆன்மா என்னும் இறையை போற்றுவோம். இந்த இறையின் தரிசனத்தை காணாத மாந்தர்கள் கோடி கோடி என்கின்றார் சிவவாக்கியார்.ஆம் அவர் சொல்லும் அந்த மகத்தான ரகசியம் ஆன்மன் தான்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

இப்படியான மகத்தான ரகசியத்தை உணர்த்த நிலை பற்றி வெளிப்படுத்துதல் கவிதையில் விளக்குகின்றார் சூர்யா.

ஊழ்கத்தின் கடைசிப் படிக்கட்டை

விட்டிறங்கி

இன்மையின் முதல் படிக்கட்டில்

கால் வைக்கிறான்

ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்

சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது

அத்தனை ஞானத்துடனும்

அத்தனை துயரத்துடனும்..

தான் இறை என்று உணர்ந்த ஆன்மன் , இறையின் நிலையான இன்மையை நோக்கி முதல் படிக்கட்டில் கால் வைக்கின்றது. அந்த நிலையில் சிங்கமும் இல்லை , பசுவும் இல்லை. எல்லாம் ஆன்மன் , எல்லாம் இறை. இந்த  இறைநிலை அத்தனை ஆனந்தம் பொதிந்த ஒன்று, ஞானத்தின் உச்சம் . இங்கு அத்தனை துயரம் என்பது முரண், உலகவாழ்வை நீங்க துணியாத மனத்தினை குறிக்கின்றது அல்லது தான் இறை என்ற உயரிய ஞானத்தை அடைந்துவிட்டோம் , இறையின் உன்னதத்தை அறிந்து , அதன் உன்னதத்தை அடைந்து ,அதனுடன் எவ்வாறு இரண்டற கலக்கப்போகின்றோம் என்ற அச்சத்தின் காரணமாக ஏற்பட்ட துயர். இயங்கும், படைக்கும் யாவும் இறை எனில் நாமும் இறையே என்பதே இக்கவிதைகளின் வாயிலாக உணரக்கூடிய உண்மை.

***

மதார் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

*** 

Share:

ஆழம் நிறைக்கும் இனிமை கல்பனா ஜெயகாந்த் கவிதைகள் - ஆனந்த் குமார்

கல்பனா ஜெயகாந்தின் கவிதைளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருப்பது ‘இனிமை’.  நிறைய கவிதைகளின் தலைப்பே இனிமையைச் சுட்டுவதாக இருக்கிறது. ஒரு கவிதையில் (தேன் பிசுக்கு) தேன்பிசுக்கில் சிக்கிமடிய தன்னை ஒப்புக்கொடுக்கும் மனம் மற்றொன்றில் வீட்டில் நிறையும் மெளனத்தின் ஒலியை ‘இனிப்பென்று’ சுவைக்கிறது.

இந்தக் கவிதை பிரிவை அதன் முழுமையோடு இனிமையென ஏற்றுக்கொள்கிறது. தேனின் ஒழுகல் போல் சாந்தமாய் நடக்கும் நிறைவு. இனிப்பென தன்னை நிறைத்துவிட்டுப் போவதை பிரிகிறதென எப்படிச் சொல்ல முடியும்.
 
***
 
தேனின் ஒழுக்கு 
 
முதன் முதலில் உன்னைப் பார்த்த போது
காற்றிலாடும் கொடியாய் படபடத்துக் கொண்டிருந்தாய்
துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை

சிட்டுக்குருவி

பின்
மெல்ல மெல்ல கால்கள் தரித்தன
கண்கள் சாந்தம் கொண்டன
உதடுகள் குறுநகை பூத்தன
அமைந்திருக்கலானாய்
இயைந்திருந்தோம்

இதோ விட்டகலவும் போகிறாய்
இனிய நினைவுகளாய்
உன்னை என்னில் நிறைத்து விட்டு

எல்லாருக்கும்
எல்லாவற்றிலும்
இது
இத்தனை இனிமையாய்
இத்தனை சுலபமாய்
தேனின் ஒழுக்காய்
அமைந்து விடுமா என்ன
 
***
கவி கண்டடையும் பொக்கிஷங்கள் சில சமயங்களில், கடைசிவரை யாராலும் அடையாளம் காணப்படாமலேகூட போய்விடுபவை. ஆனாலும் குற்றமில்லை, அது பொக்கிஷமேதான். கண்டடைந்தனாலேயே அது பொக்கிஷமாகிறது. வைரம் என தலைப்பிட்ட இக்கவிதை ஒக்கலில் தூக்கி வைக்க வேறொன்றாகிறது. அதைச் சுமப்பதால் பேரழகுகொள்ளும் ஒரு பெண் எழுதுவதால் இன்னொன்றாகி விரிகிறது. ஆனாலும் எல்லோருக்குமான பொக்கிஷத்தை எவ்வளவு எளிமயாய் கண்டெடுத்துவிட முடியுமென காண்பிக்கிறது.

வைரம்
என்
மணற் பரல்களோடு
ஒன்றாய்
இதுவும்
கலந்திருக்கிறது

கண் கூசும் ஒளியில்லை
யாரும் கவனிக்கவுமில்லை
ஆனாலும்
இது வைரமே தான்

பார்க்கப்படாமல்
இருப்பதே
நல்லது

வெய்யில் படாத இடுப்பாய்
மேலும்
மெருகேறட்டும்

இன்னும் ஆழ
ஒக்கலில்
புதைத்துக் கொள்கிறேன்

என் பொக்கிஷம்

இதைச் சுமப்பதாலேயே
நான்
பேரழகு கொள்கிறேன்

தேடிப்
பித்துக் கொண்டு அலைபவர்
வரும் வரை

இன்னும் கொஞ்ச காலம்
இது
என்னுடனேயே இருக்கட்டும்
***
Share:
Powered by Blogger.

நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive