ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவற விடுகிறார்
தொப்பென வீழ்ந்து
விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் ஏற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி
விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை: உன்னைக்
கைவிவிடுவதுமில்லை”
பிதாவே! தயவு பண்ணி எம்மைக்
கைவிடும்”.
இசையின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும்போது நாம் புன்னகைக்கிறோம். ஒருவேளை இந்த கவிதையை எழுதியவர் பிரான்சிஸ் கிருபாவாக இருந்திருந்தால் இது ஒரு துயர அனுபவத்தைக் கூட தந்திருக்கலாம். எப்படி பார்த்தாலும் ஒரு நல்ல கவிதையில் அதை எழுதிய கவிஞனின் ஆளுமை பதிந்தே இருக்கும். புத்தம் புதிதாக எழுத வரும் இளம் கவிஞன் முன் இந்த ஆளுமைதான் கேள்வியாக நிற்கிறது. இதனாலேயே என்னவோ 'நான்' கள் இடம்பெறும் கவிதைகளை கவிஞர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் அதிகம் எழுதிப் பார்க்கிறார்கள் அல்லது தான் விரும்பும் மூத்த கவிஞரின் சாயலில் கவிதைகளை எழுதிப் பார்க்கிறார்கள். ஒரு கட்டம் வரைக்கும் அந்த சாயல், பாவனை இளம் கவிக்கு தேவையாய் இருக்கிறது. ஏனென்றால் தன்னை கவர்ந்த அந்த கவிஞரின் பாதிப்பில் தான் அவன் கவிதையே எழுத வந்திருப்பான். ஒரு ஊன்றுகோல் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அது தேவைப்படுகிறது. பின்னர் சுயமாக நடக்கும் காலத்தில் மொழி, ஆளுமை என்ற இரண்டு சிறகுகளுடனும் அவன் பறத்தலுக்கு தயாராகிறான்.
மீள
அவ்வளவு சிரமத்தோடெல்லாம்
இங்கிருந்து நிரந்தரமாய்
எனைவிட்டுப் பிரிய வேண்டாம்
ஆற்றில் பயணிக்கும்
ஆளற்ற படகே
விருப்பமில்லையெனில் திரும்ப வந்துவிடு
உன்னால் முடியும் என்றால் . . .
இதில் வரும் "உன்னால் முடியும் என்றால்" என்ற கடைசி ஒரு வரி இந்த கவிதைக்கு பெரு.விஷ்ணுகுமாரின் ஆளுமையைக் கொண்டு வந்து விடுகிறது. அவரது முதல் தொகுப்பான "ழ என்ற பாதையில் நடப்பவன்", இரண்டாவது தொகுப்பான "அசகவ தாளம்" இரண்டையும் ஒரு வாசகன் படிக்கும்போது உணர முடியும் இந்த ஒரு வரியில் பெரு வரும் இடம். அதுதான் அவரது ஆளுமை. அதை எந்த மெனக்கெடலும் இல்லாமல் இந்த கவிதை சாத்தியப்படுத்துகிறது. எந்த புதிய கருவிகளும் இல்லை, விசித்திர நிகழ்வுகள் இல்லை, ஆளற்று போகும் ஒரு படகிடம் வேண்டுமென்றால் வா,அதே நேரத்தில் உன்னால் முடிந்தால் என்று கூறும் இடத்தில் பெரு.விஷ்ணுகுமார் பறக்கத் துவங்குகிறார்.
***
பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment