கவிதைகளில் நாய் - கடலூர் சீனு

நாய்களுடான என் சிநேகம் என் பால்யத்திலேயே துவங்கிவிட்ட ஒன்று. சமீப காலம் வரை எங்கள் குடும்பத்தில் எங்கள் உறுப்பினர்களில் ஒருவராக ஒரு நாயும் உடன் வாழ்ந்திருக்கிறது. அது ஒரு விதமான குற்ற உணர்வின்பாற்பட்ட துவக்கம் எனக்கு. அப்பாவின் விரல் பற்றி பேராலய விழா ஒன்று கண்டேன். அதில் முதன் முதலாக அம்பாரி சுமந்து செல்லும் யானையை கண்டேன். அதன் பிறகு வந்த நாட்களில் கனவெல்லாம் யானை மேல் அம்பாரியில் அமர்ந்து சவாரி செய்து கொண்டு இருந்தேன். விருப்பம் தாளாமல், மனைக்கட்டை ஒன்றை அம்பாரி என்றாகி, எங்கள் வீட்டுக்கு அப்போது புதிதாக வந்திருந்த நாய்க்குட்டி முதுகில் வைத்து ஏறி அமர்ந்து சவாரி செய்ய முயன்றேன். அன்று எனக்கோ அந்த நாய்குட்டிக்கோ இன்று போலவே பௌதீக விதிகள் குறித்த அறிவு குறைவு. நாய்க்குட்டி பிதுங்கி செத்துப் போனது.

அதன்பிறகு என் வாழ்வில் எத்தனையோ நாய்கள் வந்தது. எல்லா நாய்களின் கண்களிலும் பாத்தியா நான் உன்னை தேடி திரும்ப வந்துட்டேன் என்று அவன் வந்து சொல்வான். இந்த பொது தன்மைக்கு வெளியே அவன் ஒவ்வொரு நாய் உடலிலும் ஒவ்வொரு ஆளுமை கொண்டு வெளிப்படுவான். நாய்களுக்கும் மனிதர்கள் போலவே பெர்சனாலிட்டி உண்டு என்று மெல்ல மெல்ல அவர்களை அகத்தால் தொடர்ந்து அறிந்தேன்.

பின்னர் இலக்கிய அறிமுகம் கண்ட பிறகு அந்த வாழ்விலும் என் துணைவனாக அவன் வருவானா என்று தேடி இருக்கிறேன். வெகு மக்கள் கலைகளில், இலக்கியங்களில், நாய்களுக்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கிறது. அந்த அளவு வெளி கூட தீவிர இலக்கியக் கதைகளில் நாவல்களில் நாய்களுக்கு இல்லை.  இத்தனைக்கும் தமிழ் நில வாழ்க்கைக்கும் நாய்களுக்குமான தொடர்பு மிக நீண்டது. ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த வீரக்கல் அல்லது நடுகல் ஒன்று வீரம் காட்டி உயிர் துறந்த நாய்க்கு இருக்கிறது. திருச்சி மலைக்கோட்டையில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கங்காதரர் புடைப்பு சிற்பத்தில் ஒரு நாய் வந்து அமர்ந்திருக்கிறது. இந்தியாவின் எப்பகுதி பகீரதன் கதையிலும் அந்த நாய் குறித்து எந்த குறிப்பும் இல்லை. அதுபாட்டுக்கு  'நானும் கூட வருவேன்' என்று வந்து அமர்திருக்கிறது. (எனக்கென்னவோ அதை வடித்த சிற்பி வளர்த்த நாயாக அது இருக்கும் என்று தோன்றுகிறது. :) )

இந்திய இலக்கியத்தில் இருப்பதிலேயே பழமையான ரிக் வேதத்தில் சரமா என்ற நாய் தூதனாக செயல்பட்டதாக தெரிகிறது.

தமிழ் நிலத்தின் சங்க இலக்கியங்களில் வேட்டைநாய்கள் குறித்து அதன் ஆசிரியர்கள் 'நல்ல மாதிரி' சொல்லிவைத்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்களின் கூற்று வழியே அறிய முடிகிறது. திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தாதவை என்றொரு பட்டியல் கண்டேன்.  தமிழ், தகரடப்பா, என்று தொடரும் அந்த பட்டியலில் நாயும் இடம்பிடித்திருந்தது.

இதிகாச கதைகளில் தர்மர் கொஞ்சம் தேவலாம். இந்த நாயையும் என்னுடன் வர அனுமதிக்காவிட்டால் எனக்கு அப்படிப்பட்ட சொர்க்கமே வேண்டாம் என்கிறார். நாயாக உடன் வந்தவர் தர்ம தேவர். கம்ப ராமாயணத்தில் நாய் எத்தனை இடங்களில் எவ்விதம் வருகிறது என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாடல் நினைவில் உண்டு.


அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய  மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”  என்று, எனை ஓதாரோ?

இவர்களை உயிருடன் விட்ட இந்த குகன் 'நாய் குகன்' என்று ஊரார் ஓதுவார்களாம்.

ஆண்டாள் பாடல்களில் கண்ணனுக்கே என்று வளர்ந்த தன்னை மானுடர் வசம் ஒப்புவிப்பது குறித்து அவள் வருந்துகையில் நாய்க்கு ஒன்று விட்ட மாமாவான நரி வருகிறது.  (நரியால் வளர்த்து எடுத்த நாய்களும் உண்டு) தேவர்களுக்கான அவியை நரி வந்து உண்பதோ என்கிறாள். நாயன்மார்கள் சிலர் தங்கள் பாடல்களில் தன்னை மிகுந்த தன்னடக்கத்துடன் 'நாயினும் கடையேன்' என்று சொல்லிக்கொள்கிறாகள்.

சித்தர் பாடல்களில் நாய்கள் நாய்படாதபாடு படுகிறது. பட்டினத்தாரின் சீடர் பத்ருஹரியார் நாய் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். 'மோட்சம் மிக முக்கியம் சீடனே' என பட்டினத்தார் சொன்னதும் அதை தனது திருவோடு கொண்டு மண்டையில் அடித்து கொல்கிறார். பெண் மட்டும் அல்ல நாயும் மோட்சத்துக்கு தடை.  நாய்ப் பாசம் அல்லது வெறுப்பு தொணிக்கும் பத்ருஹரியார் பாடல்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

வள்ளலார் தன்னை நாய் என்று அவமதித்துவிட்டதாக நாவலர் போட்ட வழக்கு மிக பிரபலமானது. வள்ளலாரை தனது ஆதர்சங்களில் ஒருவராக கொண்ட ஜெயகாந்தன் தமிழ் அறிஞர்களை நாய் என்று சொல்லி அவமதித்துவிட்டார் என தமிழ் அறிஞர்கள் கொதித்தெழுந்து அவர் மேல் பாடிய நாய்க் கவிதைகள் அன்று மிகப் பிரபலமானது. ஜெயகாந்தன் இந்த சர்ச்சைகளை என் விமர்சனத்தில் நாயை எடுத்துவிட்டு அங்கே சிங்கத்தை போட்டு கொள்ளுங்கள் என்று முடித்து வைத்தார். இறுதிவரை தமிழ் அறிஞர்களை மிருகங்கள் எனும் ஸ்தானத்தில் இருந்து அவர் விடுவிக்கவே இல்லை.

செங்கோட்டை ஆவுடயக்காள் அவர்களுக்கும்  நாய்களுக்கும் அவர் பாடல்களில் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் உண்டா அறியேன், ஆனால் பாரதியார் ஆவுடயக்காள் கவிதைகளுடன் நிறைய வாங்கல் களில் ஈடுபட்டிருக்கார் என்று நாஞ்சில் நாடன் தெரிவிக்கிறார். "வாலைக் குழைத்துவரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா" என்று பாப்பாக்களுக்கு நாய்களை பாரதி நல்ல முறையில் அறிமுகம் செய்தாலும், பெரியவர்களுக்கு அவர் அவ்வளவு சிலாக்கியமாக நாய்களை அறிமுகம் செய்ததாக தெரியவில்லை.
"நாய் தரும் நல்லரசு அதை சிம்மம் கொள்ளுமோ" என்று கவிதையில் எழுதுகிறார். நாயும் நாணும் பிழைப்பு என்று ஏசுகிறார்.

புதுமைப் பித்தன் புனைவுலகில் நாய்கள் உண்டா? அது என்னவாக வெளிப்படுகிறது? பெரிதாக எந்த சித்திரமும் இப்போது நினைவில் எழவில்லை. நகுலன் தனது புனைவுகளில் நாய்களை அதன் நல்ல குணங்களுடன் அனுமதித்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற கவிதை நடுநிசி நாய்கள்.


இந்த நடுநிசி நாய்கள்
இருள் விழுங்குகையில்
தொண்டையில் சிக்கிக்
கத்திச் சாகின்றன.

தரை வெளுத்ததும்
பாதையோரம்
குனிந்த தலை குனிந்தபடி
மோப்பக் காற்றில் தூசிபறக்க
சாபத்தின் ஏவல்போல்
மனித மலங்கள்
தேடித் திரிகின்றன.

கருப்பு விதைகாட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந் நடுநிசி நாய்களுக்கு
ஓய்வில்லை.
உறக்கமும் ஓய்வாக இல்லை.

கைஉயர்த்திப் பாசாங்கு காட்டும்
பள்ளிச் சிறுவனிடம் பயங்கொண்டு
இந் நடுநிசி நாய்கள்
பின்னங் காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால்தின்று சாகின்றன.

முற்பகலில்
மனம் மூட்டமடைய
நினைவுகளால்
துக்கம் தேக்கி
சிறிது வலுச்சண்டை கிளப்பி
கடித்துக் குதறி
ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன.

பிற்பகல் ஒளிவெள்ளம்
பார்வையைத் தாக்க
இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய
சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன.

மாலையில் கண்விழித்து
நால்திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக்கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடை செல்கின்றன.

அந்தியில் புணர்ச்சி இன்பம்
(ஒரு தடவை அல்லது இரு தடவை)
மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித்
தொண்டை சிக்கக் கத்தல்.

குறியீட்டுக் கவிதை. வெட்கமே இன்றி ஊழல் செய்து சிறை சென்று, அப்படி ஒரு ஊழலே தாங்கள் செய்யவில்லை என்று தர்க்கித்து, எல்லா இச்சகமும் செய்து ஆட்சிக்கு வரும் அரசியல்வாதி,  காசுக்காக ஒட்டு முதல் எதையும் விற்க துணியும் இன்றைய சாமானியனின் ஒரு நாள் அதில் அவனது ஆளுமை, என இப்படி எதை எதையோ எத்தனையோ கீழ்மைச் செயல்புரியும் ஆளுமைகளை மேற்கண்ட இக் கவிதை தனது நாய் குறித்த அதன் நடத்தை குறித்த சித்திரம் வழியே விமர்சன அடிக்கோடிடுகிறது. வாசகனை அந்தக் கீழ்மைகளுடன் சேர்ந்து தெரு நாய்களையும் வெறுக்க வைக்கும் கவிதை.

சமீபத்தில் கவி மனுஷ்ய புத்திரன், தமிழில் யார் நம்பர் ஒன் எழுத்தாளர் என்றொரு 'காத்திரமான' உரையாடலை முகநூலில் முன்னெடுத்தார். அதற்கு கச்சா எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருந்த ஒரு நேர்காணல். அந்த நேர்காணல் நான்தான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் எனும் தலைப்பிட்டு ஜெயமோகனின் பெரிய படத்துடன் வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகை நேர்காணலுக்கு ஒரு கேச்சியான தலைப்பு என்று நம்பி இந்த தலைப்பை அந்த நேர்காணலுக்கு போட்டிருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தில் ஜெயமோகன் சொன்னவை வேறுவிதமான உரையாடல் விரிவு கொண்டவை. மனுஷ்ய புத்திரன் அவர்கள் அதை வாசிக்காமல் நேரடியாக தலைப்பை எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார். (அரசியல்வாதிகள் செயல்பாடு எப்போதுமே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்)அவரொத்த ஆசாமிகள் ஆளாளுக்கு அந்த ஜோதியை முன்னெடுத்துக்கொண்டு ஓட, குடிசை முதல் குப்பைத்தொட்டி வரை தீ திக்கெட்டும் பரவி, ட்ரெண்டிங் ஆகி, தமிழில் நம்பர் ஒன் உப்புமா என் பொண்டாட்டி சுடும் உப்புமாதான் என்றெல்லாம் எழுதப்பட்டு முகநூலே கொதித்து குழம்பானது. கோமாவில் கிடந்து எழும் ஒருவன், உடனடியாக சமகாலத்துக்கு திரும்ப வேண்டி, சற்றே முகநூல் வழி சுற்றி சூழல் உணர்ந்து, தமிழில் நம்பர் ஒன் ஊசி இப்போது இந்த நர்சம்மா என் புட்டத்தில் குத்திய இந்த ஊசிதான் என்று தனது முகநூல் சுவற்றில் எழுத்திக்கொண்டிருக்கும்போது, இடை மறித்து 'உண்மையில்' என்னதாம்பா பிரச்சனை என்று ஒருவன் கேட்டால், அந்த கோமா கோமகன் என்ன சொல்வான்? உண்மையில் இதுதான் இன்று எந்தத் துறை சர்ந்தும் தமிழ் சமூகம் முகநூலில் சமூக ஊடகங்களில் உரையாடிக்கொண்டிருக்கும் விதம். இதைத்தான், இந்த ஆசாமிகளின் உரையாடலைத்தான் இத்தகு இணைய தொடர்புகள் வராத கற்காலத்திலேயே கவிதையாக பாடி வைத்திருக்கிறார் ஞானக்கூத்தன். இதிலும் களப்பலி நாய்கள்தான்.

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்.

ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன.

ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன.

நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன.

நஞ்சை புஞ்சை
வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின.

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

ஞானக்கூத்தனின் மற்றொரு புகழ் பெற்ற கவிதையான அன்று வேறு கிழமை கவிதையும், நாய் நடத்தை குறித்த (அதற்கான மனிதர்களின் எதிர்வினை குறித்த) கவிதைதான். இந்த கவிதையை ஆ. மாதவனின் நாயனம் சிறுகதையுடன் இணைத்து வாசித்தால் (அந்த கதை இறுதிஊர்வலம் மாலை முடிந்து துவங்கும் இரவில் நடக்கும்)  இரண்டுமே அதன் அபத்த நகைச்சவை பரிமாணத்தில் இன்னும் ஆழம் பெறுவதை காணலாம். கவிதையின் கற்பனை சாத்தியங்கள் பலவெனினும் கீழ்கண்ட கவிதையின் நேரடி சித்திரத்தை உண்மையாகவே நான் கண்ட தருணமும் உண்டு. சற்றே மாறுபாட்டுடன். வெறிகொண்டு கண்ணடைத்த நாயொன்று எங்கிருந்தோ குலைத்தபடி ஓடிவர, பாடை சுமந்த நால்வரில் முன்னிருவரில் ஒருவர் இயல்பான எதிர்வினையாக எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிட்டு ஓடினார். பாடை புரள, கதி மோட்சம் கண்ட கிழவனார் சில நிமிடங்கள் தரையில் கிடந்து கருடாசனம் செய்ய நேரிட்டது. இப்போதெல்லாம் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அமரர் ஊர்திதான் எங்கும். போதாக்குறைக்கு போகும் வழிக்கு பட்டாசுகளை வெடிக்க வைத்து நாய்களை வேறு பதற வைக்கிறார்கள்.

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான்.
நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான்.
அது நகர

தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான்.
அது விலக

வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான்.

இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்.

'மார்கழி மாச நாய் கணக்கா வாரான்' என்றொரு சொலவடை என் ஊர் பக்கம் உண்டு. விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியும் வயதில் அதை நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். மெய்தோய் இன்பமாக மனிதர்க்கு விதிக்கபட்ட அதே ஒன்று, மெய்தோய் துன்பமாக நாய்களுக்கு சபிக்கப்பட்ட்டு விட்டதா, உண்மையில் அவைகள் நிகழ்த்தும் கயிறுழுக்கும் போட்டி இன்பமா துன்பமா?

இந்நிலை மீது என் மனதுக்கு உகந்த கவி இசை அவர்களின் கவிதை ஒன்றுண்டு,

 

நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன.


பின்நவீன பிரதிகளில் சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் 'கொடுத்து வைத்த' நாய்கள் குறித்த கவிதை ஒன்றுண்டு. வேதத்தில் மனிதர்களின் பொருட்டு நாய் தூது போன காலம் போய், இப்போது நாயின் காம உன்மத்தம் தீர்க்க மனிதர்கள் தூது போகும் பின்நவீன காலம் வந்து விட்டது. உயர்தர வீட்டு நாய்களுக்கு இருக்கும் வசதிகளில் பத்தில் ஒன்று கூட இங்கே மனிதர்க்கு இல்லை.

 நாய்கள்


கலவி கொள்ளலாமா
எனக்கேட்டாள்.
இதுவரை பேசியிராத
அந்த பக்கத்துவீட்டுப் பெண்.

பித்தமோ
சித்தம் கலங்கியதோ
என வியந்தேன்.

பிறகுதான் தெரிந்தது

அவளுடைய பெண் நாய்
என்னுடைய ஆண் நாயுடன்
கலவி கொள்ளலாமா
எனக் கேட்டாளென்று.

நாய்கள் கொடுத்து வைத்தவை.

நவீனத்துவ நோக்கில் பீதி எனும் உணர்வுக்கு கவிஞர் ஆனந்த் ரேபிஸ் வந்து வெறி கூடிய நாயின் உருவத்தை அளித்துப் பார்க்கிறார், கீழ்கண்ட கவிதையில்.


கோரைப்பற்கள்


நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு.
 

மேற்கண்ட கவிதைகள் பேசும் நாயின் குணாம்சங்கள் எல்லாமே நாயின் விஷய பாவங்கள். நாய் என்று இங்கே வந்த ஒன்றின் என்றும் மாறாத ஸ்தாயி பாவம் எது? அதைச் சுட்டி மேற்கண்ட ஆனந்த் கவிதைக்கு எதிர்நிலை கொண்டு அமையும் ஷங்கரராம சுப்ரமணியன் கவிதை கீழ்கண்டது.


உலகிலேயே அழகான
உயிர் பொருள்
நாய்வால்தான்

அதற்கு கண் இல்லை
காது இல்லை

ஒரு இதயத்திலிருந்து நீளும்
துடிப்பு உண்டு

மிக மிக மிக
முக்கியமாக

அதற்கு
அன்பின் கோரைப்பற்களில்
ஒன்றுகூட இல்லை.

அதற்கு அன்பின் கோரைப்பற்களில் ஒன்றுகூட இல்லை என்பது கவியின் முக்கியமான ஸ்டேட்மெண்ட். எப்போதும் அன்பு ஏன் பூனை நகம் போல, எப்போதேனும் வெளிக்காட்டும் கோரைப்பற்கள் கொண்டே இருக்கிறது? எளிய விடையாக இப்படி சொல்லிப்பார்க்கலாம். சற்றே வெறுப்பு கலக்காத முழு முற்றான அன்பு என்பது லௌகீகத்தில் சாத்தியமே இல்லை. மாறாக நாய்களின் அன்பில் துளி வெறுப்பு கூட கிடையாது. துளி வெறுப்பும் இன்றி முற்ற முழுதான அன்புடன் அவனை நோக்கும் ஒரு ஜீவன், இதோ உனக்கென நான் இருக்கிறேன் என்று முற்ற முழுதாக அவன் முன் நிற்கும் ஒரு உயிர் நாய். மனிதன் எத்தனை பெரிய ஆசி பெற்றவன். அந்த ஆசியின் சந்துஷ்டியை காணுங்கள் தோறும் நிரப்பி வைத்திருப்பவை ஷங்கர் ராம சுப்ரமண்யத்தின் கீழ்கண்ட இரு கவிதைகளும்.

 

1) நிழல் ஆடும் முன்றில்

46 வயது யுவதி அவள்

தெரு மூலையில் இருக்கும்
வீட்டின் முற்றத்தைத் தெளித்துவிட்டு

காலியான பிளாஸ்டிக் வாளியை
முறத்தைப் போல உயர்த்திப் பிடித்து

தனது செல்லத்துடன்
காலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதன் பெயர் என்னவென்று கேட்டேன்

'நிழல்' என்றாள்

நிழலுக்கோ
உலகை முழுக்கப் பிரதிபலிக்கும் கண்கள்
கோலிக்குண்டின் தீர்க்கம்

நிழலுக்கோ
உடல் முழுதும் துள்ளும் பரபரப்பு

அந்தத் தெரு முழுவதையும்
உயிர்க்கச் செய்யும்
வாலின் துடிப்பு

அது
நிழல்

நீ
நிழல் ஆடும் முன்றிலா
என்று கேட்க வேண்டும்.

2) இனிமையே உன்னை எங்கே இறக்கி வைப்பேன்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு
சாயங்காலம்
என் மீது வெளியே படர்கிறது
மூடிய பூங்காவின் பெஞ்சுகள்
வீடுகளின் ஜன்னல்கள் சுவர்கள் கூரைகளில்

அது அது அவர் அவர்
நிறங்களை விரியத் திறந்து
தன் நிறமின்றிப் பொழிகிறது
சூரியனின் கடைசிப் பிரகாசம்.

தெருவில் வசிக்கும் சினேகித நாயை
ஒரு குட்டிப்பையன்
கழுத்தை இழுத்து வளைத்துக்
கட்டிக்கொள்கிறான்

அந்த அன்பை அவனுக்கு
யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை
அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை

ஒவ்வொரு அடிவைக்கும் போதும்
ப்பீ ப்பீ ப்பீ எனக் குலவையிடும்

புதிய காலணிகளைக் கேட்டபடியே
மிகக் குட்டியான சிறுமி
அம்மாவுடன் சின்ன அண்ணனுடன்
தெருவின் ஓர் ஓரத்தை எடுத்துக்கொண்டு
எதையுமே ஆக்கிரமிக்காமல்
எட்டு வைத்து நடக்கிறாள்

அவளை நடுவே விட்டு
அவர்கள் நடக்கிறார்கள்

இந்தச் சூரியனை
இந்த வேளையை
எங்கே இறக்கிவைப்பேன்

இனிமையே உன்னை
தெருவிலும் விட முடியாது
வீட்டுக்கும் எடுத்துச் செல்ல இயலாது. 

என் அனாதை வாழ்வில் அத்து அலைந்த காலங்களில் தெருவில் கிடந்து அடைந்த ஞானம் ஒன்றுண்டு

ஒரு நாய்க்குட்டி போதும் இங்கே அனாதை என்று எவரும் இல்லை

என்பதே அது. அந்த வகையில் மேற்கண்ட கவிதையின்
 

//அந்த அன்பை அவனுக்கு

யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை
அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை//
 

வரிகள் எனக்கு மிக மிக அணுக்கமானவை.

ஷங்கர் ராம சுப்ரமணியன் தளத்தில் நாய் குறித்து கண்ட வரிகளை சுட்டி இக்கட்டுரையை முடிக்கிறேன். அந்த வரிகளைத் தமிழாக்கம் செய்தால் இப்படி வரும்...


ஒளிரும் கண்கள்
குழையும் வால்
துள்ளும் உடல் கொண்டு
இக்குட்டி நாயின் வடிவில்
உன்னை விளையாட
அழைக்கிறது
இப் பிரபஞ்சம்.

*** 

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

ஞானக்கூத்தன் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்  

சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்

ஷங்கர் ராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (151) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (3) வே.நி. சூர்யா (5) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (151) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (3) வே.நி. சூர்யா (5) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive