தாயுமானவர்
வேதாந்தி. துறவியும் ஆனவர். ஆனால் தானே ஈடுபட்ட துறையில் வெற்றி கண்டவர் என்றுதான்
சரித்திரம் சொல்கிறது. மதுரையில் ராணியாக ஆண்ட மீனாக்ஷி தன்னையே
அர்ப்பணித்துக்கொள்ள முன்வந்தபோது, தாயுமானவரின் வேதாந்தம் வெற்றி பெற்றது. வேதாந்தி யல்லாத வேறு ஒருவனாக
இருந்தால் ராணியின் காதலுக்கு வசப்பட்டு, சில மாதங்களோ, சில
வருஷங்களோ, அல்லது சில நாட்களோ
சுகமாக வாழ்ந்துவிட்டுச் செத்து மடிந்திருப்பான். அழகான ராணி எதிர்ப்பட்டு “என்னை
ஏற்றுக்கொள்” என்று சொல்லும்போது, “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ஊரைவிட்டே ஓடிப் போகத் துணிகிற துணிச்சல் ஒரு வேதாந்திக்குத்தான் வரும்.
தாயுமானவர் என்கிற வேதாந்திக்கு அது நன்கு கைவந்தது என்றும், அவர் கவியாக உருவாக இச் சம்பவம் உதவியது
என்பதும் வெளிப்படை. மீனாக்ஷியின் சரித்திரத்தை அறிந்தவர்களுக்குத் தாயுமானவர்
செய்ததுதான் சரியான காரியம். இல்லாவிட்டால் தாயுமானவர் என்கிற பெயரே தமிழ்நாட்டில்
இருந்திராது என்பதும் நன்றாகவே புரியும்.
இப்படித் துணிந்து
செயலாற்ற ஒரு வேதாந்திக்கு உதவிய ஒரு தத்துவத்தை நாம் சற்றேறக்குறைய நூறு
வருஷங்களாகவே ஏதோ குறை கூறிக்கொண்டு, சிறுமைப்படுத்தி நம்முடைய விஞ்ஞான லோகாயத வளர்ச்சியைப் பற்றிப் பெருமை
பாராட்டிக்கொண்டு வருகிறோம். விஞ்ஞானமும், லோகாயதமும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வேதாந்தமும் என்கிற தத்துவத்தை நாம்
உணருவதில்லை. உண்மை வேதாந்தமே அதைத்தான் வற்புறுத்துகிறது. போலி
வேதாந்திகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிற மாதிரித்தான் தாயுமானவரின் கவிதைகள்
அமைந்திருக்கின்றன. இந்த இருநூற்றைம்பது வருஷங்களில் பழகு தமிழில் உள்ள எந்தக்
கவியையும் விடத் தாயுமானவரின் கவிதைகள் தமிழர்களின் மனத்தை அதிகமாகக்
கவர்ந்திருப்பதாக நாம் நினைத்தால் அது தவறேயாகாது. ஒரு வார்த்தைக்குள்ளும்
அகப்படாத ஒரு தத்துவத்தைப் பல வார்த்தைகளில் திணிக்க முயன்ற தாயுமானவரைப் புதுத்
தமிழ் இலக்கியத்துக்கு அடிகோலித் தந்த தமிழ்ப் பெரியார்களில் ஒருவராக நாம்
கணித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே சொல்ல வேண்டும்.
தாயுமான
சுவாமிகளின் வாழ்க்கைக்கும் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிலே வாழ்ந்து தன் ஒரு
நாவலால் தமிழுக்கு வளம் தந்த ராஜமையரின் வாழ்க்கைக்கும் பலவிதங்களிலும்
ஒற்றுமையுண்டு. தாயுமானவரும் அல்பாயுசில் மாண்டு போனவர்தான். 1706ல் பிறந்தவர். 85 வயதுவரை உயிருடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஒரு சிலர் அவர் 88வது வயதுவரை
இருந்ததாகக் கொள்கிறார்கள். அவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 1659ல் இறந்தார் என்றும் ஒரு வரலாறு உண்டு. கல்வி கேள்விகளில் அவரும் ராஜமையரைப்
போலவே நவீன வாழ்வுக்கேற்ற வசதிகளெல்லாம் படைத்தவர்தான். விஜயரகுநாத சொக்கலிங்க
நாயக்கரின் கணக்குப்பிள்ளையாகத் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தவர் அவர் தகப்பனார்.
ராணி மீனாக்ஷியைப் பற்றிய கதையைச் சாதாரணமாக உண்மை யெனத்தான் கொள்வது வழக்கம்.
மீனாக்ஷியைப் புறக்கணித்துவிட்டு ராமேசுவரம் போன தாயுமானவர் பின்னர் திருமணம் செய்துகொண்டு.
சிறிது காலம் இல்லறம் நடத்திவிட்டுப் பிறகு துணிந்து துறவறம் பூண்டதாகத்
தெரிகிறது. தமது வேதாந்த முடிவுகளைத் தாயுமானவர் கவிதையாக எழுதினார். ராஜமையர்
ஆங்கிலத்தில் வசனமாக எழுதினார். வேதாந்தமாகப் பார்க்காமல் இலக்கியமாகப்
பார்க்கும்போது என்னைப் பற்றிய வரையில் தாயுமானவருக்கு ஒரு முக்கியமுண்டு என்பதும், அதேபோல் ராஜமையருக்கும் ஒரு முக்கியமுண்டு
என்பதும் தெரிகிறது.
வியாக்கியான
கர்த்தாக்களையும் சங்கேதப் பதங்களையும் தகர்த்தெறிந்து கவிதை செய்யத் துணிந்தவர்
என்று தாயுமானவரைக் கொள்வதில் தவறில்லை. அவரையும் வியாக்கியானம் செய்து, அவருடைய சாதாரணப் பதங்களையும் சங்கேதப்
பதங்களாக மாற்றிவிட்டார்கள் என்பதும் தமிழ்ப் பண்டிதர்களின் பெருமை. ஆனால்
எந்தவிதமான உதவியுமில்லாமல் தாயுமானவர் பாடல்களைப் பாடல்களாகப் படித்து நம்மால்
அறிந்துகொள்ள முடிகிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படிப்
புரியும்படியான கவியாக இருந்ததனால், மற்ற எல்லாத் தமிழ்க் கவிகளையும் விடத் தாயுமானவருடைய கவிதை வேகம்
தமிழர்களுக்கு இந்த இருநாறு வருஷங்களும் உகந்ததாக இருந்திருக்கிறது என்பது மட்டும்
அல்ல; நேரடியாகவும் இலக்கிய
ரீதியிலே பிரயோசனப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். பதிப்புகளைக்
கணக்கெடுத்துப் பார்த்தால் தாயுமானவர் பாடல்கள் மட்டும், அச்சுப் புஸ்தகங்கள் தமிழ்நாட்டிலே தோன்றின
காலத்திலிருந்து இன்றுவரை அதிகமாக அச்சாகியிருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில்
இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவருடைய உவமைகளும் வார்த்தைச்
சேர்க்கைகளும் மற்ற எந்தக் கவியினுடையதையும் விட அதிகமாகத் தமிழர்களுடைய
பழக்கத்திலிருந்து வந்துள்ளது என்றும் சொல்லலாம்.
தமிழுக்குக்
காம்பீர்யம் அளிப்பதற்காக நிதானித்து ஒரு முன்கூட்டிய திட்டத்துடன் தாயுமானவர் தம்
கவிதைகளில் சம்ஸ்கிருத மொழி வார்த்தைகளையும் கலந்து கையாண்டார் என்பது
எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் கலவை இவரிடம் அமைந்த மாதிரித் தமிழில் வேறு
எந்தக் கவியிடமும் அமைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருடைய திறத்தால்
கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கான ஒரு நடை இவருடைய கவிதையிலே திறமையாகத் தாளம்
போடுகிறது. அமைதியும் அணியும் அழகும் பொருந்தியிருக்கிறது. தமிழில் பிறமொழிச்
சொற்கள் சேர்க்கக் கூடாது என்று இன்று வாதிப்பவர்கள்கூட, தாயுமானவர் மாதிரி சேர்க்க முடியுமானால் சேர்க்கலாம்
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள்.
வேதாந்தத்தைச்
செய்யுளில் வடித்துத் தந்த தாயுமானவரைக் கவியாக, இலக்கிய கர்த்தாவாக மதிப்பிடுவது சரியல்ல என்பதுதான்
இத்தனை நாளும் நம்மிடையே வழக்கிலிருந்து வந்துவிட்ட மனோபாவம். அது சரியல்ல என்று
சொல்லுவது பொருந்தும். வேதாந்தத்தை உட்பொருளாக வைத்துக் கவிதை செய்வது சிரமமான
காரியம் என்று ஒப்புக்கொள்ளும்போதுகூட, அந்தச் சிரமமான காரியத்தைத் தாயுமானவர் பிரமாதமாகவே செய்திருக்கிறார் என்று
ஒப்புக்கொள்ளத்தான் தோன்றுகிறது. டாண்டே என்கிற இத்தாலிய கவி தன் காலத்திய விஞ்ஞான
அறிவையும், கிறிஸ்துவ வேத
ஆகமங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் தமது மகா காவியமான ‘தேவ நாடக’த்தை
எழுதினார். அதற்காக, இது
கிறிஸ்தவ வேத ஆகமத்தைப் பின்பற்றியது, ஆகவே இது கவிதையாகாது என்று ஒதுக்கிவிட முடியுமா? அப்படி ஒதுக்கிவிடுபவர்கள் இலக்கியத்தின் ஒரு
அற்புதமான இலக்கிய அநுபவத்தை இழந்துவிடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வேதங்களில் உபநிஷத்துக்களும் இந்த மாதிரிக் கவிதையாகவே போற்றப்படுகிற
பகுதிகள்தான். விவிலிய நூல் மதநூல்தான் என்றாலும்கூடப் பல மொழிகளிலும், முக்கியமாக ஆங்கில மொழியில், இலக்கியமாகவே பயன் தந்து வந்திருக்கிறது.
‘சும்மா இருப்பதே
சுகம்’ என்று வேதாந்தபரமாக நம்பாதவர்களும்கூட, தாயுமானவரை இலக்கியமாக அறிந்து அநுபவிக்கத்
தவறிவிடக் கூடாது; அப்படி
அநுபவிக்கத் தவறிவிடுபவர்கள் முக்கியமானதொரு ரஸ அநுபவத்தை இழந்துவிடுகிறார்கள்.
வேதாந்தத்தைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பக்தியே கவிதையாகிய
திருவாசகத்தைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியுமோ? நல்லது, தீயது என்று உலக வாழ்வை வரையறுத்துச் சொல்லும் திருக்குறளை ஏற்றுக்கொள்ள
முடியுமோ? வேதாந்தத்தை
ஏற்றுக்கொள்ளாதவர்களும்கூடத் தாயுமானவரைக் கவியாக ஏற்றுக்கொள்ள முடியும்.
தாயுமானவர்
வேதாக்குக் கவி. அவருக்கு ஒரு
நூறாண்டுக்குப் பின் வாழ்ந்த ஜோதி ராமலிங்கம் பக்திக் கவி. இந்தக் காலத்தில்
வாழ்ந்த மற்ற எந்தக் கவியையும் விட இவர்கள் இருவரும் இன்றையப் புதுத் தமிழ்
இலக்கியத்தைச் சமைத்துத் தர நமக்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருபதாம்
நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாரதியாரால் இவ்வளவு கவிதை எப்படிச் செய்ய முடிந்தது
என்றால் அதற்கு முன்னோடிகளாக இவர்கள் இருவரையும் சொல்ல வேண்டும். பண்டிதர்களையும்
அரும்பத அகராதிகளையும் தாண்டிக் கவிதை செய்ய வேண்டும் என்கிற எண்ணம்
தாயுமானவருக்கே உண்டாகிவிட்டது என்பது அவருடைய கவிதையைப் படிக்கும்போது நமக்கே
தெரிகிறது. கண்ணெதிரில் விந்தை செய்யும் சூரியாஸ்தமனக் காட்சியைக் காணக் கண்ணாடி
தேவையா என்ன?
***
‘கல்கி’, 4 ஜனவரி 1959








0 comments:
Post a Comment