ஜெயமோகனின் நீலம் நாவலில் ஒரு படிமம் வரும், “வேனல் எழுந்த வெம்மை பரவி கருகி நின்றது காடு. கிளை பட்டு நின்றது பெருமரம். அதன்மேல் மொட்டு மொட்டு என்று கொத்திக்கொண்டிருந்தது பூந்தலை மரம்கொத்தி. கொத்திக் கொத்தி அது அமைப்பது நானிருக்கும் காலம். நத்தை ஊரும் வழியாக நீண்டுசெல்வதோ நீ அமைந்த காலம். ஊர்ந்து ஊர்ந்து நத்தை உணரும் ஒருகாலம். அசைந்து அசைந்து நத்தைக் கொம்புணரும் காலம். நத்தை உடலுணரும் காலம். நத்தை அகமுணரும் காலம். காலில்லா உடலுக்குள் எழுந்த பெரும்புரவி”.
நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம். கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து இங்கு ஒரு பார்வை தீண்டிச் செல்கிறது. அந்த பார்வையின் தீண்டல் நம் சட்டகங்களை நமக்கு உடைத்துக் காட்டுகிறது.
- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்
***
அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு
ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது:
எல்லாம் எத்துனை சுலபமாகவும்
வேடிக்கையாவும் விளையாட்டாகவும்
இருக்கின்றன !
ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்
குறுக்கே ஒரு திரை.
பத்தடி தூரத்தில்
எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்
இரண்டு சன்னல்களையும் பற்றி
இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்
நன்றாய்த் தொங்கும் அது.
இந்தப் பக்கம்,
அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான
மின்விளக்கின் பேரொளி
அந்த பக்கம்,
அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த
நயமான இருள்.
உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்
உடல் அலுங்காமல் திரைவிலக்கி
எட்டிப் பார்த்துக் கொள்கிறாள்…
- தேவதேவன்
***
க் கவிஞர் தேவதேவன் விக்கி பக்கம்