கருக்கலில் ஒளிர்வன வெண்ணிற மலர்கள் ~ தேவதேவன்.
1
மேற்கண்ட வரிகள் தேவதேவன் கவிதைகள் ஏதோ ஒன்றில் இடையே வரும் வரிகள். அவரது எந்த கவிதையில் இடையே வரும் வரிகள் இவை என்று அந்த முழுக் கவிதையை தேட வேண்டிய தேவையே அற்ற, தன்னளவில் நிறை கொண்ட வரிகள்.
அப்படி இந்த வரிகளைத் தனித்துவம் கொண்ட கவிதை என ஆக்கும் அம்சம் எது? இதில் உறையும் ஜென் தருணமே அது என்று சொல்லலாம். 'ஜென்' . இந்த ஜென் எனும் சொல்லைக் கேட்டதுமே கொட்டாவி வந்து விடும். அந்த அளவு தமிழில் துவைத்து பிழிந்து காய வைக்கப்பட்டு விட்ட ஒரு சொல் இது. குறிப்பாக 1990 முதல் அடுத்த சில ஆண்டுகளில். அன்றைய பத்திரிக்கை சூழலை அதில் வந்த கவிதைகளை இன்று ஒருவர் எடுத்துப் பார்த்தால் மொத்த தமிழ்ச் சமூகமே ஜென்னில் நடந்து ஜென்னில் அமர்ந்து ஜென்னில் உண்டு ஜென்னில் உறங்கியது என்ற முடிவுக்கு வந்து விடுவார்.
அந்த சூழலில்தான் எனக்கு ஜென் கவிதைகள் முதன் முதலாக ஓஷோ வழியே அறிமுகம் ஆனது. அது பிறக்காத இறக்காத ஓஷோ, பூமி எனும் கிரகத்துக்கு செய்திருந்த விஜயம் முடிவுக்கு வந்திருந்த ஆண்டு. உரிய அனுமதி பெற்று நூல்கள் வெளியாகும் முன்பு ஓஷோ குறித்த நூல்கள் (ஓஷோ மிகவும் தவறாகக் கருதப்படும் ஒரு மனிதர்) இப்படிப்பட்ட தலைப்புகளில் ஒவ்வொன்றாக வெளியானது. அதில் ஒன்றாக ஜென் குறித்து ஓஷோ பேசியவற்றின் மீதான சிறிய நூல் ஒன்றில், பாஷோ, பூஸன், இஸ்ஸா, ஷிக்கி போன்ற பெயர்களை முதன் முதலாக கேள்விப்பட்டேன். அவர்களது ஜென் கவிதைகளையும்.
அந்த நூலில் ஓஷோ அவரது பாணியின்படி அதுவரை அந்த ஜென் கவிதைகள் மீது நிகழ்ந்த வாசிப்பை உடைத்து தூர போட்டுவிட்டு 'தனது' நோக்கில் அதை வியாக்கியானம் செய்திருந்தார் என்று பின்னர் அறிந்தேன். குறிப்பாக இந்த கவிதைக்கு,
***
அவன் வனத்தில் நுழைகையில்
புற்கள் நசுங்குவதில்லை
அவன் நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை.
***
இந்த கவிதையில் வரும் 'அவன்' என்பது நிலவொளி அல்லது சூரிய ஒளி என்று அதுவரை இக் கவிதை கொண்டிருந்த பொருளை, இங்கிருக்கும் எதையுமே கலைக்காமல் இங்கிருக்கும் அனைத்தையும் தொட்டறியும் அந்த அவன் என்பது 'தியானியின் தூய பிரக்ஞை' என்று ஓஷோ புதிய விளக்கம் அளித்திருந்தார். சரியான நோக்கு. அன்று தமிழின் பொது வாசிப்பு சூழலிலும் தீவிர இலக்கிய சூழலிலும் எழுதிக் குவிக்கப்பட்ட ஜென் கவிதைகளில் இல்லாதிருந்த முக்கிய அம்சம் அது.
தியானம் என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டது ஜப்பானிய ஜென் என்பதும், ஜென் கவிதைகளின் இலக்கணமான 5,7,5 நேரசைகளிள் அமைந்த ஹைக்கூ எனும் பா வடிவம் குறித்தும் நிறையவே அன்று பேசப்பட்டிருக்கிறது. பொது வாசிப்பு சூழலில் இந்த உரையாடலை ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் எனும் சிறு நூல் வழியே சுஜாதா முன்னெடுக்க, தீவிர இலக்கியச் சூழலில் சி. மணி, ஆனந்த் போன்றவர்கள் இப்பணியை முன்னெடுத்தனர்.
இந்த ஹைக்கூ எனும் ஜப்பானிய இலக்கணப் பா வடிவில் அமைந்த ஜென் கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார் என்கிறது தமிழ் இலக்கிய வரலாறு.
"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் சிறப்புத் தன்மை என்று 'நோக்குச்சிப்' புலவர் சொல்வதாக குறிப்பிடும் பாரதியார், 'ஐக்கூப்' பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும் என்கிறார். (பாரதி தமிழ். பக்கம் 222)
***
பருவ மழையின்
புழையொலி கேட்பீர்
இங்கென்
கிழச் செவிகளே.
***
தீப்பட்டெறிந்தது;
வீழு மலரின்
அமைதியென்னே.
***
போன்ற கவிதைகள் பாரதி மொழியாக்கம் செய்த ஜென் ஹைக்கூ கவிதைகள் என்று அறியக் கிடைக்கிறது.
2
1990 துவங்கி அடுத்து வந்த சில ஆண்டுகள் பொது மற்றும் தீவிர வாசிப்பு சூழலில் சில மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டு. உலகமயமாக்கத்தின் துவக்கம், கணிப்பொறி தொழில்நுட்பத்தின் எழுச்சி, என பற்பல நிகழ்ந்தன. பெண்கள் பெறுமளவு அலுவலக வேலைக்கு செல்லும் நிலை துவங்கியது. கேபிள் டிவி இன்னும் நுழையாத சூழலில் கணினி தொழில்நுட்பம் வழியே பத்திரிக்கை தொழில் இலகு கொள்ள, பத்திரிக்கைகள் பெருகின பெண்களை குறிவைத்து நிகழும் வார மாத பத்திரிக்கைகள் எண்ணிக்கைகள் கூடின. பாலகுமாரன் அவர்கள் மத்தியில் ஸ்டார் எழுத்தாளர் ஆனார். கணிப்பொறி சார்ந்த வாய்ப்புகள் கிராம இளைஞர்களை நகரம் நோக்கி இழுக்க அவர்கள் உலகின் ஸ்டார் என சுஜாதா அமைத்தார். பொது வாசிப்பில் இந்த இருவர் நிரப்பிய இடத்துக்கு கீழே நிரப்ப வேண்டிய பல இடங்களில் ஒன்றை கவிதைகள் எடுத்துக் கொண்டது. ஒவ்வொரு இதழும் இதழின் இலவச இணைப்பிலும் பெருமளவு வாசகர் கவிதைகள் இடம் பெற்றன. அவற்றை வடிவமைத்தது ஹைக்கூ.
நம்புவதற்கு சிரமம்தான் ஆனாலும் இது நிஜம். இணைப்பாக வெளியாகும் குடும்ப மலர் இதழில் அன்று ஒரு இல்லத்தரசி எழுதி 20 ரூபாய் பரிசு வென்ற ஹைக்கூ கவிதை இது
***
இவ்வளவு எண்ணெய் குடிக்கிறாயே
உனக்கு கொலஸ்ட்ரால் பயமே கிடையாதா
மெதுவடையே.
***
மற்றொரு ஜென் கவிதை இது
சுழல்கிறது பூமி
சுவர் மூலையில்
அசைகிறது சிலந்தி வலை.
***
சிலர் ஜப்பானிய ஹைக்கூ பா வகையில் அமையும் அதே 5,7,5 கணக்கில்தான் தமிழில் ஹைக்கூ எழுதுவேன் என அடம் பிடித்தனர். உதாரணத்துக்கு ஒன்று கீழே
***
அணை கட்டாதவரை
அனைவருக்கும் உரியது ஆறு-
கழுத்தில் மங்கல நாண்.
***
சில தமிழ்த் தீவிரவாதிகள் இன்னும் மேலேபோய் சாட்ஷாத் அந்த ஜப்பான் ஜென் கவிதையையே தமிழ் இலக்கண மரபுக்குள் அதே 5,7,5 கணக்கில் அடித்துப் புதைத்தனர். உதாரணத்த்துக்கு ஒன்று கீழே
***
ஆண்டொன்று போச்சு
ஆண்டையென் தலையில்
குடைத்தொப்பி
ஆண்டியென்கீழ் காலணி.
***
பாஷோ எழுதிய கீழ்கண்ட
Another year is gone
A travel hat on my head
Straw- sandals on my fest.
கவிதையே மேற்கண்ட முறையில் மொழியாக்கம் கண்டிருக்கிறது. இதில் ஆண்டி ஆண்டை எல்லாம் எங்கே வந்தார்கள் என்று கேட்க கூடாது 5,7,5 கணக்கு சரியா இருக்கா என்று மட்டும் பார்க்க சொன்னார்கள்.
இவை போக மொழியாக்கம் வழியே வந்த ஜென் கவிதைகளில், அது எதை பேசுகிறதோ அதுதான் அது எனும்படிக்கு அமைந்த ஜென் கவிதைகள், அவ்வாறே வெளிப்பாடு கொள்ள வாகான ஜப்பானிய சித்திர மொழியை, அதே துல்லியத்துடன் அங்கிலப்படுத்த வழி இல்லாததால், ஒவ்வொரு ஜென் கவிதைக்கும் குறைந்தது மூன்று வித ஆங்கில மொழியாக்கங்கள் எழுதப்பட்டு, தமிழில் அது ஆறு விதமாக வந்து சேர்ந்தது.
‘யார் பெத்த புள்ளையோ பாவம் இங்க வந்து எல்லார்கிட்டயும் இப்பிடி அடி வாங்குதே’ எனும் படிக்கு வெகு சிலரின் அனுதாபத்தையும் வென்ற அந்த ஜென் ஹைக்கூ எனும் வகைமாதிரியை உலகோர் முன் முதல் முதலாக கொண்டு வந்தவர் ரெஜினால்டு ஹோரேஸ் ஃபிளைத். ரெஜி ஆங்கிலேயர். பிரிட்டனில் உயர்தர கல்விக்கூடத்தில் பயின்ற அங்கிலப் பேராசிரியர். கீழைத்தேயவியல் மீது ஆர்வம் கொண்டவர். இரண்டு உலகப்போர்கள் இடையே கொரியாவிலும் ஜப்பானிலும் வாழ்ந்தவர். அவரது தத்து புத்திரன் உலக போர் ஒன்றில் இருந்து வெளியேறி கொரியா வர, வழியில் அவர் வட கொரியா வசம் சிக்கி மீண்டு தனது தாயகமான தென் கொரியா செல்ல, அங்கே அவர் கைது செய்யப்பட்டு துரோகி உளவாளி என பல்வேறு முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை அடைகிறார். ரெஜி இரண்டாம் உலக போர் சூழலில் அவரது ஜப்பானிய ஜென் குரு உடன் தங்கி இருந்த சூழலில் உளவாளி எனும் சந்தேகத்துக்கு ஆளாகி சிறை சென்றார். அந்த சிறை வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் வழியாகவே ஜப்பானிய ஜென் மரபு அதன் தொடர்ச்சியான ஜென் கவிதைகள் அமெரிக்கா உள்ளிட்ட மேலை உலக பார்வைக்கு வருகிறது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த ஹைக்கூ எனும் வடிவமும் ஜென் எனும் உள்ளடக்கமும் இந்த கவிதைகளை உலகம் முழுவதும் பரவ செய்தது. 1970 யில் அமெரிக்காவில் ஹைக்கூ எழுத கற்கும் கல்வி அமைப்புகள் கூட தோற்றம் கொண்டன.
3
இந்தியாவில் இருந்து சீனா வழியே ஜப்பான் சென்ற, மகாயான பௌத்தத்தின் வெளிப்பாடுகளின் ஒன்றான இந்த ஜென் கவிதைகள் அடிப்படையில் கவிஞனால் எழுதப்பட்டு வாசகனுக்கு அளிக்கப்படும் கலைப் பிரதி அல்ல. அது வெறும் ஒரு 'வெளிப்பாடு'. அங்கே வாசகன் அந்த வெளிப்பாட்டுக்கு ஒரு பொருட்டே இல்லை.
***
*மட்ஸூஷிமா-
ஆ-மட்ஸூஷிமா!
மட்ஸூஷிமா!
***
மேற்கண்ட பாஷோவின் ஜென் கவிதையில் வாசகனுக்கு ஏதேனும் உள்ளதா என்ன? அது அத்தருணத்தின் பரவசத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவ்விதமான அந்த வெளிப்பாடு மட்டுமே அங்கே அதற்கு முக்கியம். அதற்கு வாசகர் ஒரு பொருட்டே இல்லை.
மேற்கண்ட ஜென் கவிதையில் மற்றொரு அம்சமும் புலனாகும். ஜென் கவிதை எவற்றின் குறியீடும் அல்ல. அது எதைக் குறித்து எவ்விதம் வெளிப்படுகிறதோ அதுவே அது. அதுவன்றி வேறெதுவும் இல்லை.
***
*இலையுதிர்கால அந்தி
வெற்றுக் கிளையில்
காகம்.
***
மேற்கண்ட பாஷோவின் கவிதையில் உள்ளது தனிமை எனும் உணர்வு மட்டும் அல்ல, அந்த உணர்வை அளிக்கும் இலையுதிர்காலம் எனும் பருவமும் அந்தி எனும் பொழுதும் கூடத்தான். நிலையற்று மாறிக்கொண்டே இருக்கும் இந்த பருவமும் பொழுதும் ஜப்பானிய மொழியில் கிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிகோவும் நேரடி உணர்வும் ஜென் கவிதைகளின் ஆதார விசைகளில் ஒன்று.
***
*என்னால் சொல்ல முடியாது.
இன்னதுதான் இன்னது என்று.
ஒளிரும் ப்ளம் மலர்
வசந்தகால இரவின்
நிலவாய் இருக்கிறது.
***
மேற்கண்ட ஷிக்கிபூ வின் ஜென் கவிதையில் உள்ள மொழி படைப்பூக்கம் வழியே உருவாக்கிய மீ மொழி அல்ல, 'அது' எவ்விதம் உணரப்படுகிறதோ அவ்விதமே, அந்த அதர்க்க வடிவிலேயே வெளிப்பாடு கண்டதன் மொழி.
***
*உலகம் ஒரு பனித்துளி போன்றது
உலகம் ஒரு பனித்துளி போன்றதுதான்
என்றாலும்... என்றாலும்...
***
இஸ்ஸாவின் மேற்கண்ட ஜென் கவிதையில் பௌத்தத்தின் நிலையின்மை நிறையின்மை சாரமின்மை நோக்கு தொழிற்பட்டாலும் அந்த நோக்கு 'வெளிப்பட்ட' கவிதை இதுவே அன்றி அந்நோக்கு 'தொழிற்பட்ட' கவிதை அல்ல.
***
இந்த ஜென் கவிதைகளின் மற்றொரு முக்கிய கூறு இவற்றின் ஹா, ஹே, ஓ போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள். இந்த ஷிக்கி எழுதிய கவிதை போல
*ஆஹா என்ன குளுமை
மழை பெய்யும்போது
ஊசியிலை மரத்தில் ஏறுகிறது
சிறு நண்டு.
***
ஜென் கவிதைகளில் வந்து கலந்த மற்றொரு பண்டைய ஜப்பானிய மரபு என்பது மரணத் தருவாயில் குருவால் எழுதப்படும் கவிதைகள். கீழ்கண்டது மரணத் தருவாயில் ஹனபுசா இக்கீய் எழுதியது.
*இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன்.
இருந்தும்
இதோ என்னிடம் வருகிறது மரணம்.
வெறும் எண்பத்தி ஐந்தே வயது நிரம்பிய குழந்தையிடம்.
***
*பூவைக் காட்டும்போது
வாயைத் திறக்கிறது
அந்தச் சிறு குழந்தை.
ஸெய்ப்ஃஹு ஜோ எனும் பெண் துறவி எழுதிய இந்த ஜென் கவிதை, ஜென் கவிதைகள் எனும் வெளிப்பாட்டின் நிலையை அறிந்து கொள்ள உதவும் அழகிய கவிதை. ஒரு மலரைக் கண்ட அக்கணம் ஒரு குழந்தை அடையும் கரையற்ற வியப்பு. அதன் வெளிப்பாடு. இரண்டுக்கும் இடையே எந்த தூரமும் இல்லை. இரண்டுக்கும் இடையே தன்முனைப்பு அல்லது மனம் அல்லது அறிவு இவற்றின் எந்த இடையீடோ வியாக்கியானமோ இல்லை. இதுவே ஜென் கவிதைகளின் தோற்றுவாயும் நிலைக்களனும் என்று சொல்லலாம்.
4
ரெஜினால்டு வழியே உலகப்பார்வைக்கு வந்த ஜென் கவிதைகள் அன்று மிக பரபரப்பாக பரவிய காரணங்களில் முக்கியமானது, அமெரிக்காவில் அடிப்படைவாத கிறிஸ்துவ நோக்குக்கு எதிராக, இயற்கையினை அதன் ஒரு பகுதியாக மனிதனைக் கண்டு, அந்த இயற்கையுடன் பழுதற இணைவதை மனிதனின் மீட்சியாகக் கண்ட தோரோ எமர்சன் போன்றோர்களின் நோக்குக்கு மிக நெருக்கமாக அதன் ஆத்மீக அடித்தளமாக ஜப்பானிய ஜென் மரபு இருந்ததே. தோரோ, எமர்சன் வழி வந்த மரபினருக்கு மாபெரும் ஈர்ப்பாக அமைந்தது ஜப்பானிய ஜென் மரபு. ஜென்னை அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்த ரெஜினால்டு அவர்களே தோரோ குறித்து விரிவாக நூல்கள் எழுதியவர்தான்.
அங்கிருந்து உலகம் முழுக்கப் பரவி தமிழுக்கும் வந்த ஜென் கவிதைகள் மீது தீவிர இலக்கியத்தின் கவிஞர்களுக்கு ஈர்ப்பு வந்ததன் காரணமும் அதுவே. இந்திய ஆத்மீக மரபிலும் தத்துவம் நியமங்கள் இவற்றுக்கு வெளியிலான ஜென் எனும் பண்புக்கு நிகரான நிலையை எய்தும் வழிமுறைகளும் இருந்தன. இணையாக ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியும் இங்கே அத்தகு (கடந்த கால மரபின் இடையீடு அற்ற) ஜென் போன்ற நிலை குறித்தே வெவ்வேறு சொற்களில் பேசி உலகை ஈர்த்துக்கொண்டு இருந்தார்.
இந்தப் பின்புலத்தில் 'மரபின் பாரம்' இல்லாத (இமய மலை எனில் வெறும் இமய மலை மட்டுமே, அது கங்கை வார் சடையனின் தோற்றம் அல்ல) ஆத்மீக விடுதலை பாவம் கொண்ட இலக்கியக் கலை எனும் வினோதக் கனவு இங்கே கொஞ்சகாலம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. அதன் பகுதியாகவே இங்கே நவீனத் தீவிரத் தமிழ் இலக்கியத்தில் ஜென் கவிதைகளை எழுதத் தலைப்பட்டனர் பலர்.
ஆனால் ஜென் கவிதையின் உண்மையான சாரம் என்பது அது தியானிகளின் வெளிப்பாடு என்பதே.
அதை நடிக்கவோ மறு உருவாக்கம் செய்யவோ படைக்கவோ முடியாது என்பதை தமிழ் சூழல் உணரவே இல்லை.
அன்றைய ஒட்டு மொத்த தமிழ் ஜென் கவிதைச் சூழலும் வெய்யோன் அவித்த மூங்கில் இலை பனித்துளி என்றாகிவிட்ட, இன்றைய சூழலில் நின்று பின்நோக்கிப் பார்க்கையில் எல்லா யத்தனங்களும் முடிந்து போன எல்லையில் அதே வசீகரத்துடன் அவ்வாறே நின்றிருக்கிறது பாஷோ, பூஸன்,இஸ்ஸா,ஷிகி போன்றோரின் ஜென் கவிதைகள். எழுத்தாளர் கவிஞர் யுவன் சந்திர சேகர் அவர்களின் முக்கியமான ஜப்பானிய ஜென் கவிதைகள் பலவற்றை தொகுத்து மிக அழகிய மொழியாக்கத்தில், கவிதைகள் மற்றும் ஜென் கவிதைகள் இடையேயான வேறுபாடுகள் உள்ளிட்ட விரிவான விளக்கங்களுடன் _பெயரற்ற யாத்ரீகன்_ எனும் பெயரில் வெளியிட்டிருந்தார். (இப்போது அது நூல்வனம் வெளியீடாக மறு அச்சு கண்டிருக்கிறது).
தமிழில் நிகழ்ந்தவற்றில் சிலவற்றில் குறிப்பாக ஆனந்த், தேவதச்சன் கவிதைகளில் ஆங்காங்கே ஜென் கவிதைகளின் உணர்வு தளம் போல ஒன்று தொழிற்படுகிறது.
என் நோக்கில் இந்த ஜென் எனும் நிலையை அனுபூதி எனும் சொல்லலால் சுட்டுவேன். முற்றிலும் தியானியின் அனுபூதி நிலையில் நின்று கவிதைகளாக வெளிப்பட்டவை ஜப்பானிய ஜென் கவிதைகள்.
இலக்கியக் கலையின் ஒரு பகுதியாக கவிதைகள் படைக்கும் கவிஞன், 'படைப்பாளி' தானேயன்றி அனுபூதி அடைந்த தியானி அல்ல. ஆனால் தமிழ் நவீன கவிதை மிக மிக அபூர்வமாக சில தேவதேவன் கவிதை வரிகள் வழியே அந்த அனுபூதியை சென்று எட்டி இருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்புக் கவிதை வரிகளை எழுதிய அக்கணம் ஒரே ஒரு கணம்தான் என்றாலும் கூட தேவதேவன் அக் கணத்தில் அனுபூதி நிலையை சென்று தொட்ட தியானி என்றே இருப்பார். அந்நிலை இன்றி இவ்வரிகள் சத்தியமே இல்லை.
~ கருக்கலில் ஒளிர்வன வெண்ணிற மலர்கள் ~
***
* குறியிட்ட கவிதைகள் யுவன் சந்திரசேகர் மொழியாக்கம் செய்த ஜென் கவிதைகளின் தொகுப்பான “பெயரற்ற யாத்ரீகன்” தொகுப்பில் இருப்பவை.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
பெயரற்ற யாத்ரீகன் நூல் வாங்க
***