வெளி மொத்தமும்
மேய்ச்சல் நிலமாய்
பனிநீர் கனக்கும் புல்லை
அதக்கி கடவாயில் ஒடுக்கும்
எருமையின் திமிலேறி
அமர்கிறது ஒரு காகம்
சிலுப்பலொன்றுக்கு மேலெழுந்து
மீண்டமர்ந்து
மேலெழுந்து மீண்டமர்கிறது
நீர் விட்டு எவ்வி
நீரையே தொடும்
தவளைக் கல்லில்
ஒரு காகத்தின் எச்சம்
கரையாது படிந்தேயிருக்கிறது.
எருமை திமில் மேல் காகம் விளையாடும் விளையாட்டும், நதி நீரில் கல் விளையாடும் விளையாட்டும் ஒரே விளையாட்டாகும் இடம் இந்த கவிதையை அழதாக்குகிறது. தமிழ்க் கவிதையில் தவளைக் கல் விளையாடுபவர் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கல்யாண்ஜி. 'நதி நீர்' பிரதானமான அவரது பெரும்பான்மை கவிதைகளில் தவளைக் கல் ஒரு உப பொருளாக நதியோடு விளையாட்டை நிகழ்த்த வந்து விடும். தவளைக் கல் ஒரு கவிதைக்குள் வரும்போது அது நீரை மையப்படுத்தியே இருக்கும். கவிஞர் பூவண்ணா சந்திரசேகரின் இந்த கவிதையில் தவளைக் கல், நதி நீர் இரண்டுமே உப பொருளாகி காகம் முதன்மை ஆகிறது. நீர் தொடாத காகத்தின் எச்சம் என்ற வரி இந்த கவிதையில் ஒரு மர்ம அழகை வைத்துவிடுகிறது. கரைக்கும் தொழிலை நீர் கைவிட்டது எதன்பொருட்டு? கரையும் காகத்தின் குரலுக்காகவா?
பூவண்ணாவின் இந்த கவிதையில் 'அசைவு' நிகழும் இடம் அபாரமாக எழுதப்பட்டுள்ளது. அதுவே இந்த கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது.
ONCE UPON A TIME IN EAST
வெகுதூரம் ஓடி வந்த
பேருந்து முன் நின்றது
எதோ ஒன்றை
தவறவிட்ட நியாபகத்தில்
பின் வாயில் ஏறி
முன்னது பக்கம் அமர்கிறேன்
கரைவேட்டிக்காரரொருவர்
நெட்டி இழுத்து
சீட்டை விட்டிறக்கினார்
அவர் கைக்குட்டையால்
முன்பதிவு செய்திருந்த இடம் போல அது
பெரிய மீனை
விசிலால் விரட்டுபவர்
முகத்தைத் திருப்பிக் கொண்டார்
முன் வாய் வழியிறங்கி
விட்டு வந்த ஒன்றைத்
தேடி எடுக்க
அதே குடைக்கு
மீண்டும் விரைந்துகொண்டிருக்கிறேன்
முதல் வாசிப்புக்கு பூவண்ணாவின் இந்த கவிதை பிடிபடவில்லை. மீள் வாசிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் தொடங்கியது. இந்த கவிதை பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கியது. குறிப்பாக 'பெரிய மீனை விசிலால் விரட்டுபவர்' என்ற ஒரு வரி இந்த கவிதையை புரட்டிப் போடுகிறது. மொத்த பேருந்தையும் ஒரு திறந்த மீன் தொட்டியாகவும், மொத்த உலகையும் ஒரு கடலாகவும், பயணிகளை மீனாகவும் மாற்றும் ஒரு கண நேர வரி. மின்னல் கீற்று போல இத்தகு வரிகள் கவிதையில் தோன்றும் இடங்கள் மெய் சிலிர்க்க வைப்பவை. கண் மருத்துவர் இடது கண்ணை மூடச்சொல்லி வலது கண்ணை பரிசோதிப்பது போல அந்த ஒரு வரியை மனதில் கொள்ளாமலும் இந்த கவிதையை வேறு வகையில் படித்து பொருள் கொள்ளலாம். ஏறியவரும் இறங்கியவரும் ஒன்று தான்.
பேருந்தில் இடம், நிழற்குடை இடம் எல்லாம் ஒன்றுதான். பேருந்தில் மறந்தது, நிழற் குடையில் மறந்தது எல்லாம் ஒன்றுதான் என்ற ஒரு மாய வாசிப்புக்கும் இந்த கவிதை வழிவகுக்கிறது. கடலின் அடி ஆழத்தில் கிடக்கும் ஒரு கூண்டை மீன் தொட்டியாக பாவித்து மீன்கள் ஆடும் விளையாட்டை பூவண்ணா இந்த கவிதையில் நிகழ்த்துகிறார். வெளியே கடலே இருந்தாலும், கூண்டுக்குள் சீட்டு போடும் இடம் - இப்போது இந்த கவிதையை வாசித்தால் இது வேறொன்றாகிறது. கற்பனை தளத்தின் எதார்த்த நிலை. பேருந்தோட்டும் பெரிய மீன், இனி ஒரு பேருந்து பயணம் கிடைத்தாலும் இந்த கவிதையை நினைத்து நினைத்து களிக்கலாம்.
***
0 comments:
Post a Comment