மலைமேல் ஒளிரும் லாந்தர் விளக்கு - எம்.கோபாலகிருஷ்ணன்

இந்திக் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வு. யாரை மொழிபெயர்க்க வேண்டும், கவிதைகள் எங்கிருந்து கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் எந்தத் தெளிவும் இருக்கவில்லை. எந்த முன் ஏற்பாடுகளுமின்றி கால்போன போக்கில் திடீரென்று தொடங்கிய பயணம் போன்றதுதான். நடைமுறை சிரமங்களும் எதிர்பாராத சிக்கல்களும் ஏற்படும் என்றாலும் ஆர்வத்தைத் தூண்டும் அனுபவங்களும் மேலும் தொடர்ந்து செல்வதற்கான முனைப்பையும் தரும் சந்தர்ப்பங்களும் அமையும். நூற்றுக்கணக்கான கவிஞர்கள், ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து எதை எடுப்பது, எதை விடுவது என்று முடிவு செய்வது பெரும் சவால். ஒரு கவிஞருக்கு அதிகபட்சம் பத்து கவிதைகள் என்று ஒரு வரையறையை வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில கவிஞர்களை அந்த வரையறைக்குள் நிறுத்த முடியவில்லை. அப்படி குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அவர்களை அடக்குவது நியாயமல்ல என்பதை உணர்த்தின அவர்களுடைய கவிதைகள்.  

இந்தப் பயணத்தின்போது அவ்வாறு நான் கண்டடைந்த கவிஞர்களில் முதன்மையானவர் மங்களேஷ் டப்ரால். அவருடைய கவிதைகள் எளிமையான மொழியில் அமைந்தவை. சாதாரணத் தோற்றம் தருபவை. உரத்துப் பேசாதவை. ஆனால், அவை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது. திரும்பத் திரும்ப அசைபோடச் செய்வது. அன்றாடங்களின் அபத்தங்களையும் நடைமுறை சிக்கல்களையுமே அவை அதிகமும் பேசுகின்றன. தலைதெறிக்க ஓடும் பெருங்கூட்டத்திலிருந்து ஒருகணம் விலகி நின்று மூச்சு வாங்க எங்கே எதற்காக ஓடுகிறார்கள், நாமும் இவர்களோடு ஏன் சேர்ந்து ஓடுகிறோம் என்று சில நிமிடங்கள் யோசிக்கச் செய்கின்றன. தொடர்ந்து ஓடத்தான் வேண்டும் என்றாலும் அந்த சில நிமிட யோசனை நமக்குள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த எண் உபயோகத்தில் இல்லை

திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட்

எங்கே சென்றாலும் எந்த தொலைபேசியில் அழைத்தபோதும்

விநோதமான இந்தக் குரலே ஒலித்திருக்கிறது எப்போதும்

திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட், இந்த எண் உபயோகத்தில் இல்லை

சில காலத்துக்கு முன்பு இந்த எண்ணில் பேசமுடிந்திருந்தது பலருடனும்

வாருங்கள் உங்களை எமக்குத் தெரியும் 

இந்த உலகில் உங்களுக்கென ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது

என்று அவர்கள் அழைப்பார்கள்.


ஆனால் இப்போது அந்த எண் உபயோகத்தில் இல்லை

அது முன்பிருந்த எண்ணாகிப் போனது

பழைய அந்த விலாசத்தில் மிகச் சிலரே எஞ்சியிருக்கின்றனர்

காலடியோசைக் கேட்டதும் கதவுகள் திறந்துகொள்ளும்

அந்த முகவரியில் 

இப்போது அழைப்புமணியை அழுத்திவிட்டு 

கொஞ்சநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

கடைசியாக யாரேனும் வெளியில் தென்படும்போது

அந்த நபரின் அடையாளங்கள் மாறியிருக்க வாய்ப்புண்டு

அல்லது அவர் சொல்லக்கூடும்

நீங்கள் சொல்கிற அந்த நபர் நானல்ல என்றோ

நீங்கள் உங்கள் துயரங்களைச் சொன்ன அந்த எண் இதுவல்ல என்றோ


எங்கே சென்றாலும் யாரைப் பார்த்தாலும் மாறிப்போய்விட்டன

எண்களும் முகங்களும் தோற்றங்களும்

சாக்கடைகளில் கிடக்கின்றன பழைய நாட்குறிப்புகள்

அவற்றிலுள்ள பெயர்கள் மெல்ல மெல்ல நீரில் கரைகின்றன

இப்போது புதிய எண்கள் அங்குள்ளன

முன்பிருந்தவற்றைவிட அதிகமாக கம்பிகளுடனும் கம்பிகள் இன்றியும்

அவற்றில் இப்போது வேறுவிதமான உரையாடல்கள்

வியாபாரம், கொடுக்கல் வாங்கல், விற்பதும் வாங்குவதுமான

முகமற்றவர்களுக்கான தொடர்ந்த குரல்கள் 


எங்கேனுமொரு இடத்துக்கு சென்று 

ஏதேனுமொரு எண்ணைத் தொடர்புகொண்டு

நான் சோர்வுடன் கேட்கிறேன் 

திறந்துதான் இருக்கிறது கதவு, உள்ளே வாருங்கள்

நீங்கள் இங்கே தங்கியிருக்கலாம்

விரும்பும் எந்த வேளையிலும் 

நீங்கள் வரலாம் இந்த உலகுக்கு 

என்றழைக்கும் அந்தக் குரலைக் குறித்து,

மங்களேஷ் டப்ராலின் இந்தக் கவிதை மிகவும் புகழ்பெற்றது. அதிகமும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய மனிதன் சந்திக்க நேர்கிற அன்றாடத்தின் எளிய, தவிர்க்க முடியாத சிக்கலை கவிதையாக்கும் டப்ராலின் கலைத்திறனுக்கு ஓர் உதாரணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். நம் தனித் திறன்களை மழுங்கச் செய்யும் நவீன தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவும் தெளிவும் நமக்குண்டு. ஆனால், நுகர்வு கலாச்சாரத்தின் பிடிக்குள் சிக்குண்ட பின் அந்த அறிவும் தெளிவும் நமக்கு பெரிய அளவில் பயன்படுவதில்லை. குறைந்தபட்சம் இருபது தொலைபேசி எண்கள் விரல் நுனியில் இருந்த காலம் உண்டு. சொல்லப்பட்ட அடையாளங்களைக் கொண்டு வழி தேடி, எதிர்ப்படுவோரிடம் விசாரித்து அலைந்து சேர வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்த அனுபவங்கள் உண்டு. பதினாறாம் வாய்ப்பாடு வரை தலைகீழாக ஒப்பிக்கவும் முடிந்தது. உலக வரைபடத்தை வைத்துக்கொண்டு நாடுகளையும் தலைநகரங்களையும் கண்டுபிடிக்கும் விளையாட்டின் வழியாக உலகப்பயணம் சென்ற தலைமுறைகளின் நினைவுகளும் கதைகளும் இன்று கேலிக்குரியன. தொழில்நுட்ப நுண்ணறிவு அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் இந்நாட்களில் ‘யாரும் யாருடனும் இல்லை’ என்பதுதான் உண்மை.

‘அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் எதிரானவன் இல்லை நான். ஆனால், நினைவின் மீது அவை செலுத்தும் தாக்கத்தைப் பற்றியே நான் எச்சரிக்கிறேன். கற்பனைக்கு நினைவுகள் முக்கியம். நுகர்வுக் கலாச்சாரமும் தொழில்நுட்பமும் அந்த ஆதாரத்தைச் சிதைக்கின்றன’ என்னும் டப்ராலின் கவலையே இந்தக் கவிதையின் ஆதாரமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். ‘நினைவுகளுடன் சேர்ந்து வரலாறும் அழிக்கப்படும். மொழியும் இலக்கியமுமே அந்த அபாயத்திலிருந்து தப்புவதற்கான வழிகள்’ என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது.

மனிதனின் மூளைத்திறனுக்கு இணையான அல்லது அதைவிடவும் வலிமையான ‘செயற்கை நுண்ணறி’வை பயன்படுத்தும் சாட் ஜிபிடி (chatGPT) தொழில்நுட்பமே இன்று அதிகமும் விவாதிக்கப்படும் ஒன்று. தஸ்தாவஸ்கியின் புகழ்பெற்ற ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் ஒரு பகுதியைக் கொடுத்து பிரான்ஸ் காஃப்கா இதை எப்படி எழுதியிருப்பார் என்று கேட்டால், அந்தப் பகுதி மொத்தத்தையும் காஃப்காவின் பாணியில் எழுதிக் கொடுக்கிறது இந்தத் தொழில்நுட்பம். சூழலையும் கதாபாத்திரத்தையும் மட்டும் உள்ளீடாகக் கொடுத்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களைக் கொண்டு காட்சியையோ அத்தியாயத்தையோ எழுதிக் கொடுத்துவிடுகிறது. இத்தனை காலமும் கற்பனையின் துணைகொண்டு படைப்பாற்றலின் வழியாக எண்ணற்ற கலைஞர்கள் உருவாக்கிய கலைக் களஞ்சியங்களே இந்தத் தொழில்நுட்பத்தின் உள்ளீடு, ஆதாரம் (Source, Input). நுகர்வோரின்(Consumer) தேவைக்கேற்ப இந்த உள்ளீடுகளைப் பிரித்து, அலசி ஆராய்ந்து சாத்தியமான ஒரு பொருளை (output, product) தருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைக் குறித்தும் இதன் எல்லையற்ற சாத்தியங்களைப் பற்றியும் விவாதங்கள் தொடர்ந்திருக்கும் அதே நேரத்தில் இவை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களைப் பற்றியும் எச்சரிக்கைகளும் எழுகின்றன. 

இதைப் பற்றித் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும்போது, மங்களேஷ் டப்ராலின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.

இன்னொரு கரம்

என்னிடம் இருப்பது ஒரு கரம்தான்

அதைக்கொண்டு எத்தனை வேலைகளைத்தான் செய்யமுடியும் என்னால்

என்னுடைய இன்னொரு கையால் எந்தப் பயனுமில்லை

எப்போதாவதுதான் அது உதவ நீளும்

இன்னுமொரு கை என்னிடம் உள்ளது என்பது

அடிக்கடி எனக்கு மறந்துதான் போகிறது. 


இந்த ஒரு கையினால்தான் வேலை செய்கிறேன் நான்

சமையலறைக்கு தண்ணீர் சுமந்து வருகிறேன்

நன்றி அறிவிப்புகளை எழுதுகிறேன்

பேருந்துகளில் தொங்கும் வார்களைப் பற்றிக்கொள்கிறேன்

அன்றாடத்தை சமாளிக்கிறேன்

துடிப்புடனும் சலிப்பின்றியும் இருக்கும்பொருட்டு

நடக்கும்போது இந்தக் கையை வீசியபடியே நடப்பேன்


அந்த இன்னொரு கை

புதரில் பதுங்கும் முயலைப்போல

பதுங்கிக்கொள்கிறது 

அல்லது 

சிறுவயது பந்துகளுடனோ 

மரக்குதிரையுடனோ

மூலையில் எங்கோ கிடக்கிறது.

இளமைப் பருவத்தில் பெண்ணொருத்தியுடன்

கைகோர்த்த நடந்த அந்தக் கையை

வீசிநடக்கும் இந்தக் கை தொடவும்கூட முடிவதில்லை


நகரங்களின் அலுவலகங்களின் வீடுகளின்

கதவுகளைத் தட்டி நிற்கிறது இந்த கை

இதைக்கொண்டுதான் நான் எல்லா வேலைகளையும் செய்கிறேன்

உலகத்தின் அத்தனை பெரிய பொய்களிலும் நனைக்கும் இந்தக் கை

களைத்துப்போவதுமில்லை மனம்சோர்வதுமில்லை

அந்த இன்னொரு கை தனக்கு எதிராக பிடிவாதம் கொள்ளும்போதுதான்

வலியுடன் அது நடுங்குகிறது.

தொடர்ந்து பயன்படுத்தப்படாதபோது அது தேவையற்றதாகிவிடும். நம் நினைவிலிருந்து அகன்றுவிடும். ‘என்னுடைய இன்னொரு கையால் எந்தப் பயனுமில்லை’ என்பதைப் புரிந்துகொள்ளவும்கூட நாளை ஒரு தொழில்நுட்பமே தேவைப்படலாம். இதை இன்னும் தெளிவாக எடுத்துச்சொல்ல டப்ராலின் ‘கண்ணீரின் கவிதை’ உதவக்கூடும்.

கண்ணீரின் கவிதை

அந்தக் காலத்தில் கண்ணீருக்கும் மிகுந்த மதிப்பிருந்தது. முத்துக்களுக்கு சமமாகக் 

கருதப்பட்ட கண்ணீர் பெருகுவதைக் கண்டு அனைவரின் உள்ளமும் நடுங்கிற்று. 

ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஏற்ப அது குறைந்த அளவிலோ அல்லது மிகுதியாகவோ 

முன்கூட்டி காலத்தைக் கணித்திருக்கக் கூடும். ஏழுக்கும் அதிகமான

வண்ணங்களில் ஒளியைச் சிதறடிக்கச் செய்ய முடியும்.


கண்களுக்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக சிலர் முத்துக்களை பணம்கொடுத்து 

வாங்கி விலைமதிப்பற்ற நிலைத்த கண்ணீராக காட்சிப்படுத்தலாயினர். இப்படியாக 

கண்ணீரில் பிரிவினை உண்டாயிற்று. அசலான கண்ணீர் மெல்ல மெல்ல

பின்தங்கிப் போனது. இன்னொரு பக்கம் முத்துக்களை உருவாக்கும் தொழிற்கூடங்கள் பெருகின. 


இருட்டுக்குள் தனியாக நெற்றியை சுவர்களில் சாய்த்தபடி உண்மையில்

அழுபவர்களின் கண்களிலிருந்து வெகு நேரத்துக்குப் பிறகு மிகுந்த சிரமத்துடன் 

கண்ணீர் என்ற பெயரில் ஒன்று வெளிப்பட்டு வழிந்தது. பின்பு அப்படியே உலர்ந்தும் போனது. 

இமயமலையில் அடிவாரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள காஃபல்பானி என்ற இடத்தில் 1948ஆம் ஆண்டில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால். அவரது இளமைக்காலத்தின் ஒரு பகுதியாக அமைந்தது இமயமலை. அதுவே அவரது கவி மனத்துக்கு ஊற்றாக அமைந்தது. மலைப் பிரதேசத்தின் புத்துணர்வளிக்கும் காற்றையும் காட்சிகளையும், பெருநகரத்துக்கு வந்து சேர்ந்த சிறுவனுக்குள் மங்காதிருக்கும் பால்யத்தின் சுவடுகளையும் அவரது கவிதைகளில் உணர முடியும். 1960களில் தில்லிக்கு இடம்பெயர்ந்த அவர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். சிறியவொரு மலை நகரத்திலிருந்து பெருநகருக்கு வந்து சேர்ந்தவரின் ஒவ்வாமையை, பொருந்திப்போக முடியாத தவிப்பை, அன்றாடத்தின் இருமையை அவரது கவிதைகள் தொடர்ந்து வெளிப்படுத்தின. முதல் கவிதைத் தொகுப்புக்கு ‘மலையின் மீது லாந்தர்கள்’ என்று பெயரிட்டார். 

‘மலை மீதிருந்து தப்பி உருண்ட ஒரு கூழாங்கல்லைப் போன்றவன் நான். இந்த நகரத்தில் கிடைத்த இடத்தில் அப்படியே நின்றுவிட்டவன். அங்குமின்றி இங்குமின்றி எங்குமில்லாதவனாய் என்னை நான் உணர்ந்ததுண்டு. இந்த நகரத்தில் என்னைப் பொருத்திக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயத்தில் என் கிராமத்து அடையாளங்களையும் தொடர்ந்து பேணவும் இயலவில்லை. மண்ணிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் காலூன்றிக்கொள்ள முடியாத அகதி மனப்பான்மையில் சிக்குண்டிருந்தேன்’ என்று அவர் குறிப்பிடும் இடப்பெயர்ச்சியின் வெறுமையிலிருந்தே அவரது கவிதைகள் ஊற்றெடுத்துள்ளன. 

நினைவு – ஒன்று

ஜன்னலின் துளைகள் வழியே லாந்தரின் வெளிச்சம்

பரவுகிறது மஞ்சள் பூக்களைப்போல

ஆர்மோனியத்திலிருந்து காற்றில் எழுகிறது புராதன ஸ்வரம் 

சின்னஞ்சிறிய லேசான மேகங்களைப்போல மினுமினுக்கிற அந்திப்பொழுது

ஒரு சாதுவான குழந்தையைப்போல பால்கனியில் வந்தமர்திருக்கிறது

காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்து வரும் பெண்கள்

முற்றத்தின் வழியே நடந்து கால்தடங்களை விட்டுச்செல்கிறார்கள்


இதற்கிடையில் வெகுநேரம் கடந்து போய்விட்டது

நிறைய மழை பெய்து பின் வற்றியும் போனது

அடிக்கடி பனியும் பெய்து உருகியும் முடிந்தது

இருந்த இடத்திலிருந்து கல் நழுவி வேறொங்கோ சென்றுவிட்டது

முற்றத்தில் நின்று கனிதரும் மரம் இன்னும் வளர்ந்தோங்கியது

ஆட்களும் தம் வீட்டின் கதவுகளை அடைத்துவிட்டு

புதிய அடைக்கலவான்களை நோக்கி மாண்டுபோனார்கள்


மறைந்துபோன காட்சிக்குள்ளிருந்து அப்போதும் வந்துகொண்டிருக்கிறது

மஞ்சள் பூக்களைப்போன்று லாந்தரின் வெளிச்சம்

ஆர்மோனியத்தின் மேகங்களிலிருந்து எழுகின்றது ஸ்வரம்

முற்றத்தில் தெரிகின்றன

காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்துவரும் பெண்களின் கால்தடங்கள்.

ஜன்சத்தா, சஹாரா சமய், ஹிந்தி பேட்ரியாட் போன்ற சஞ்சிகைகளுக்காக பத்திரிகையாளராக அவர் பணியாற்றியிருக்கிறார். போபால் ‘பாரத் பவன்’ அமைப்பு வெளியிட்ட ‘பூர்வகிரஹ்’ பத்திரிகையின் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். தேசிய புத்தக கழகத்திலும் பணி புரிந்திருக்கிறார். தன் பணியின் பொருட்டு அவர் தில்லி, போபால், லக்னௌ போன்ற நகரங்களில் வசிக்க நேர்ந்தபோதும் அவரது தெஹ்ரி கர்வால் கிராமம் அவருக்குள்ளிருந்து மறைந்துவிடவில்லை. கிராமத்தில் தனது வீட்டில் தனது தந்தையின் முன்னமர்ந்து அவரது இசையைக் கேட்ட அனுபவத்துக்காக அவர் தொடர்ந்து ஏங்கியவாறிருந்தார். ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டுகளில் ஒலிப்பெருக்கியின் முன்னால் கால்மடக்கி அமர்ந்திருக்கும் நாயைப் போல அப்பாவின் முன்னால் நாய்க்குட்டியாகி உட்கார்ந்திருப்பேன். மசூரியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜௌன்சார் பாவர் என்கிற மலைகிராமத்தின் ஆதிவாசிகள் இசைக்கும் பாடல்களை அவர் பாடிக்கொண்டிருக்க மொத்த குடும்பமும் தாளம்போட்டு ரசித்திருப்போம். அபூர்வமான, அமைதியிழக்கச் செய்யும் படிமங்கள் கொண்ட பாடல்கள் அவை. லாந்தரின் மங்கிய ஒளியில் அவர் துர்கா, மால்கௌன், சாரங்க், பூபாள ராகங்களையும் ஆதிவாசிப் பாடல்களையும் பாடுவார்.’

இந்த ஏக்கமும் நினைவுகளுமே அவரது கவிதைகளில் ஒலிக்கும் மௌனத்துக்கு அடித்தளமாயுள்ளன. கவிதைகளினூடே மலைக் கிராமத்தின் சித்திரங்களையும் இசையின் தடங்களையும் உணரமுடியும். அவையே அவரது கவிதைகளுக்கான தனித்தன்மைகளாகவும் அமைந்துள்ளன. 

ஆர்மோனியம்

சங்கீதமற்ற இறுக்கமான உலகில்

பெருக்கெடுக்கும் நீர்போல

மின்னும் விண்மீன்கள்போல

சிறிது காலம் அதுவும் இசைத்துக் கொண்டிருந்தது

அறை நடுவில் வெளிச்சத்தில் அது வைக்கப்பட்டிருந்தது

அதன் காரணமாகவே அந்த இடம் அறியப்பட்டது

எல்லோரும் வந்து அதைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்


இப்போது அது கிடக்கிறது மற்றப் பொருட்களுக்கு நடுவில் 

பித்தளை இரும்பு மரச் சாமான்களோடு

அதை இப்போது இசைத்தால் 

துர்கா ராகமோ மலையின் ஸ்வரமோ வெளிப்படுவதில்லை

பெருமூச்சை மட்டுமே கேட்கமுடிகிறது


அவ்வப்போது 

நலம்விசாரிக்கவென வரும் ஆட்களிடமிருந்து 

காப்பாற்றுவதற்கென்றே

உள்ளே வைத்துப் பூட்டப்படுகிறது அது

பழையப் பெட்டியொன்றில்.

தெஹ்ரி அணை கட்டுமானத்தின்போது அவரது கிராமத்தில் கடைசியாக எஞ்சி நின்ற மரமும் நீருள் மூழ்கியபோது கிராமத்து வீட்டின் லாந்தர் விளக்கின் சுடர்தான் மங்களேஷ் டப்ராலின் மனத்துள் ஒளியுடன் அசைந்திருந்தது வாழ்வின் பல்வேறு கடினமான இருண்ட காலங்களை அவர் கடக்க நேரிட்டபோது அவருக்கு ஒளிகாட்டி வழிகாட்டியதும் அந்த லாந்தர் விளக்குதான். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக தில்லியில் உயிரிழந்தார் மங்களேஷ் டப்ரால். அந்த கணம்வரை, பழைய பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்ட பழைய ஆர்மோனியத்திலிருந்து அவர் மலைப் பாடல்களைக் கேட்டுக்கொண்டுதானிருந்தார். அதுவே அவரையும் அவரது கவிதைகளையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

***
மங்களேஷ் டப்ரால்  உத்தர்காண்டிலுள்ள காப்லபானி என்ற ஊரில் 1948ல் பிறந்தவர். தெக்ராதூனில் கல்வி கற்றவர். தில்லிக்கு குடிபெயர்ந்து பல்வேறு நாளிதழ்களில் பணிபுரிந்தார். போபாலில் அமைந்திருந்த பாரத் பவனின் 'பூர்வகிரகம்' இதழின் ஆசிரியராகவும் பின் அலகாபாத்திலும் லக்னோவிலும் வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார். தேசிய புத்தக கழகத்தின் ஆலோசகராகவும் விளங்கினார். 

கவிதை, உரைநடை, பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, திரைக்கதை என பல்துறை பங்களிப்பாளர். ஆறு கவிதை தொகுப்புகள், இரண்டு உரைநடை தொகுப்புகள், ஒரு பயண நூல் ஆகியன இவரது பங்களிப்புகள். 

2000ம் வருடத்தில் "ஹம் ஜோ தேக்தே ஹைன்"  தொகுப்புக்காக சாகித்திய அகாடமி பரிசு வழங்கப்பட்டது. பஹர் பர் லால்டேன், கர் கா ராஸ்தா, ஹம் ஜோ தேக்தே ஹைன், ஆவாஜ் பி ஏக் ஜஹக் ஹே, நயே யூக் மே  சத்ரு ஆகியவை இவரது கவிதை தொகுதிகள். லேகக் கி ரோட்டி, கவி கா அகேலாபன், ஏக் பார் லாவோ ஆகியன இவரது உரைநடை நூல்கள்.



***
Share:

கவிதையும் கவிஞனும் - ரமாகாந்த் ரத்

ரமாகாந்த் ரத்
நீண்ட காலமாய் நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தாலும்கூட ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது என்பது பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. ஒரு சில கவிஞர்களே இதை அறிவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அவர்களிலும் ஒரு சிலர் கவிதையில் தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்பதில் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றாலும்கூட! என்னைப் பொறுத்தவரை தான் எப்போது எப்படி எழுதப்படவேண்டும் என்பதை கவிதையே தீர்மானிக்கிறது என்றே நினைக்கிறேன். கவிஞனை ஒரு கருவியாகவே அது தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. எனவே, தானே கவிதையின் ஆசிரியன் என்கிற மாயையை கவிஞன் உதறித் தள்ளவேண்டும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் கவிதை இவ்வுலகில் இறங்கி வரும் தருணத்தில் அதைக் கைகொள்ளத் தவறிவிடாத ஒரு ஆயத்த நிலையில் இருப்பதுதான்.

கவிஞன் கவிதையின் ஆசிரியன் இல்லை என்பதை எந்தவொரு நிலையிலும் எளிதில் நிரூபிக்கமுடியும். அவன்தான் ஆசிரியன் என்றால் அவன் விரும்பும்போதெல்லாம் அவனால் கவிதை எழுத முடியவேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மேலும், ஒரு கவிதையை எழுதி முடித்த பின்பு அந்தக் கவிதை அவன் நினைத்ததிலிருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கிறது. ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக மட்டுமே அவன் இருந்திருக்கிறான்.

கவிஞன் ஒரு கவிதையைத் தனது சாதனையாக நினைத்து, குதூகலிக்க முடியாமல் போவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமென்றாலும் தோல்விக்கான சாத்தியங்களும் அதே அளவில் உண்டு. ஆனால், கவிதையைப் பொறுத்தவரை தோல்வி உத்தரவாதமானது. வெற்றி எப்போதாவது வெகு அபூர்வமாய் வாய்க்கலாம். உங்கள் அனுபவங்களை மிக நேர்மையாக அலசிப் பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்ல நினைத்ததில் மிக கொஞ்சமானதையே, பெரும்பாலும் உத்தேசித்த உணர்ச்சியின் சிதைந்த ஒரு பகுதியையே சொல்ல முடிந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கவிதையில் நீங்கள் விவரிக்க நினைத்த உணர்ச்சியின் பெரும்பகுதி தப்பிப் போயிருக்கும். இது எப்போதும் கவிஞனின் குற்றமாக இருக்காது. கவிஞனின் பல உணர்வு நிலைகளுக்கு மொழியினால் ஈடுகொடுக்க முடியாததால் அவற்றை விவரிக்கச் சொற்களை அவனால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அவன் கண்டெழுதும் சொற்கள் அவனது உணர்ச்சிகளை முழுமையாகவும் நம்பகத் தன்மையுடனும் வெளிக்கொணர முடிவதில்லை. 

மழை நாள் இரவொன்றில் ஒரு காட்டினூடே நீங்கள் பயணம் செய்வதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள். காட்டில் மரங்களும் மலைகளும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தகர்க்க முடியாத அடர்ந்த இருள் அவற்றைத் தழுவியுள்ளது. மழை பெய்யும் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள். திசையெங்கும் காட்டின் மரங்களும் இலைகளும் மலைகளும் மண்ணும் மழையில் நனைந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இருளும் மழையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்போது இந்த மழை வெறும் மழையல்ல. இருள் வெறும் இருளல்ல. இவற்றோடு இணைந்து உங்களை நீங்கள் உணர்வது தவிர்க்க முடியாதது. இதை நீங்கள் முழுக்க அனுபவிக்கிறீர்கள். ஆனால் இந்த அனுபவத்தை அதன் எந்தப் பகுதியையும் இழந்துவிடாது முழுமையாக விவரிக்கிற வார்த்தைகளை உங்களால் தேர்வு செய்துவிட முடியுமா?

இவ்வாறு பல அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அனுபவங்களுக்கான வார்த்தைகளைத் தெரிவுசெய்ய நீங்கள் தவறிவிடுகிறீர்கள். இப்படியிருக்கும்போது கவிஞனால் தான் வெற்றி அடைந்துவிட்டதாய் எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? அவன் எழுத நினைத்த கவிதை பெரும்பாலும் எழுதப்படாமலே நின்றுவிடுகிறது.

இது கவிஞனின் விதி. அவன் உண்மையில் கவிஞனென்றால், கர்வமற்றவன் என்றால் அவனது அனுபவம் தோல்வியான ஒன்றாகவே இருக்கும். சில காலங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதையை எழுதமுடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு அசலான கவிஞனுக்கு இந்த நம்பிக்கை வறட்சி என்பது தீர்வில்லாத முடிவற்ற ஒரு அனுபவமாகும். அவன் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறானென்றால் அதற்குக் காரணம் அவன் தளராத தைரியசாலி என்பதே. ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்திருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாதவன். இந்த தைரிய குணத்தை துணிச்சலிலிருந்தும் அகந்தையிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். துணிச்சலும் அகந்தையும்மிக்க ஒரு கவிஞன், தான் தோற்றுப் போவதை அறிவதில்லை. இதற்கு மாறாக அசலான கவிஞனே தன் தோல்வியைப் புரிந்துகொள்கிறான். இருப்பினும் கவிதையை அவனால் விட்டுவிட முடிவதில்லை. அவன் வாழ்வின் மிக முக்கியமான தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அது ஆகிவிடுகிறது.

கவிஞனுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் தெளிவானவை. தன் கவிதையின் உள்ளீடற்ற தன்மையையும் சாதாரண தன்மையையும் அறிந்துகொள்ளாது, கவிஞன் என்கிற முகமூடியயை அணிந்துகொண்டு முகமெங்கும் கர்வம் ஒளிர, பிறரிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்கிற மிதப்போடு தன்னைப்போல பிரபலமடையாத பிற கவிஞர்களிடமிருந்து தான் வேறுமாதிரியானவன் என்ற தலைநிமிர்வோடு உலகை வலம்வருவது ஒன்று. அல்லது நம்பிக்கை வறட்சியோடு முகம் முழுக்க கண்ணீரில் நனைந்து தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பது. அவன் தொடர்ந்து கவிதை எழுதுவது தன் அனுபவ முழுமையை விவரிக்கும் கவிதையொன்றை என்றேனும் ஒரு நாள் எழுத முடியும் என்ற நம்பிக்கையால் அல்ல! தான் பொய்யானவன் இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள வேறு வழியேதும் இல்லை என்பதனால்தான். ‘நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுவேன்’ என்று அவன் சொல்வதில் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைப்பிற்கும் அவனது கவிதைக்கும் உள்ள இடைவெளி என்பது தான் கவிஞனே என்று உறுதியாய் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சியான ஒரு கவிஞனின் கவிதைக்கும் நினைப்புக்கும் உள்ள இடைவெளி அளவுக்கு பெரிதாய் இருக்காது.

***

ரமாகாந்த் ரத், ஒரியக் கவிஞர். நவீன ஒரியக் கவிஞர்களில் முதன்மையானவர். சாகித்ய அகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகாதமியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

கட்டுரை மூலம்: ரமாகாந்த் ரத்

தமிழில் மொழியாக்கம்: எம். கோபாலகிருஷ்ணன்

பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி புத்தகம் வாங்க

***

Share:

இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் - எம். கோபாலகிருஷ்ணன்

கபீர்

இந்தி மொழி வட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களிடையே புழங்கி வந்த பேச்சுமொழிகள் கலந்து உருவான ஒன்று. பிரஜ், புந்தேல், அவத், கன்னௌஜ், கடிபோலி, மார்வாரி, அங்கிகா, வஜ்ஜிகா, மைதிலி, மகதி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு பேச்சுவழக்குகள் ஒன்றிணைந்த கூட்டுமொழி என்று சொல்லலாம். இன்று புழக்கத்திலுள்ள இந்தி மொழியின் அடிப்படை அமைப்பு கடிபோலியிலிருந்து பெறப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவில் பேசப்படும் ஒரு பொது மொழியாக இந்தி உருவானது. எழுத்து வடிவத்துக்கு தேவநகரி எழுத்துருக்களை பயன்படுத்திக் கொண்டது.

இந்திக் கவிதைகளைப் பொறுத்தவரை மேற்சொன்ன வெவ்வேறு பேச்சுமொழிகளில் எழுதப்பட்டவற்றையும் இன்று ‘இந்திக் கவிதை’ என்றே குறிப்பிடுகிறோம். வித்யாபதி தன் காவியத்தை மைதிலி மொழியில் எழுதினார். கபீர் பாடல்களில் அதிகமும் போஜ்புரியில் எழுதப்பட்டவை. ஜெய்ஸியும் துளசிதாஸரும் தம் பாடல்களை அவத் மொழியில் எழுதினர். பிரஜ்பாஷாவைக் கொண்டு கவி புனைந்தவர்கள் சூர்தாஸூம் பிகாரியும். மீரா ராஜஸ்தானி மொழியில் கவிதைகளை இயற்றினார். இவர்களில் எவருமே கடிபோலியில் எழுதாவிட்டாலும் இவர்களுடைய கவிதைகள் இந்திக் கவிதைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆயிரம் ஆண்டு காலமாக வெவ்வேறு வளர்ச்சிப் போக்குகளின் ஊடாக உருவாகி வந்தது இந்திக் கவிதை. இந்த வளர்ச்சிக் காலகட்டங்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்க முடியும்.

                    1.     ஆதி காலம்

                    2.     பக்தி காலம்

                    3.     ரீதி காலம்

                    4.     நவீன காலம்


ஆதி காலம்/வீரக்காதைகளின் காலம் (7 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை)

சந்தபர்தாயி எழுதிய பிரிதிவிராஜ் ரசோ

கன்னௌஜ், தில்லி, அஜ்மீர் பகுதிகளிலிருந்து மத்திய இந்தியா வரைக்குமான பகுதிகளில் உருவானவை ஆதி கால இலக்கியங்கள். பராக்கிரம் மிகுந்த வீரர்களைப் போற்றிய வீரக்காதைகளின் காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆளும் ரஜபுதன அரசர்களின் பெருமைகளையும் போர் வீரர்களின் பராக்கிரமங்களையும் புகழ்ந்து பாடப்பட்ட காவியங்கள் இடம்பெற்றன. போரைக் குறித்த உயிரோட்டமுள்ள வர்ணனைகள், மன்னர்களின் வீரத்தைப் போற்றும் கதைகள், வீரமும், சிருங்காரமும் கொண்ட சித்தரிப்புகள் ஆகியன இக்காவியங்களின் குணாம்சங்கள். பிரபந்த காவிய வடிவிலும் போர்க் கதை வடிவிலும் காவியங்கள் இயற்றப்பட்டன.

ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி உருவாகி வளர்ந்த காலத்தில் எழுதப்பட்டவை இவை. முதலாவது பக்தியும் சிருங்காரமும் ஒன்றிணைந்த மொழியில் எழுதப்பட்ட ‘சித்த’ இலக்கியம். பௌத்த மதத்தின் வஜ்ராயனப் பிரிவைச் சேர்ந்த துறவிகளால் இயற்றப்பட்டவை இவை. இரண்டாவதாக, ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோரக்நாத் உள்ளிட்ட கவிஞர்களால் ’தோஹா’ (இரண்டடிகள் கொண்ட கவிதை வகை), ‘சௌபாய்’ ஆகிய கவிதைகளான ‘நாத இலக்கியம்’. மூன்றாவது, ஜெயின் சிங் ஆகியோர் ஒழுக்கக் கோட்பாடுகளையும் இயற்கையையும் போற்றிப் பாடிய ’ஜெயின்’ இலக்கியம்.

இந்த சமயத்தில் பாடப்பட்ட முக்கியமான காவியங்கள் என சந்தபர்தாயி எழுதிய 'பிரிதிவிராஜ் ரசோ’, தள்பத்விஜய் எழுதிய 'குமான் ரசோ’, நர்பதி நல்காவின் ’விசால்தேவ் ரசோ’, ஜக்னிக்கின் ’பரிமள் ரசோ’ ஆகியனக் குறிப்பிடப்படுகின்றன.


பக்தி காலம் (14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை)  

மாலிக் முகமத் ஜெய்ஸி

பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலுமான காலம் ‘பக்தி காலம்’ என்றழைக்கப்படுகிறது. நாட்டின் அரசியல் சமூக நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலம். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நிலைகொண்டிருந்தது. மக்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்க பக்தி இலக்கியம் உருவாகி தழைத்தோங்கியது. இது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கவிஞர்கள் தத்தம் கடவுளை அணுகும் போக்கினை அடிப்படையாகக் கொண்டு ’சகுண பக்தி’, ‘நிர்குண பக்தி’ என்று பிரிக்கப்பட்டது. கடவுள் உருவமற்றவர் என்பதே நிர்குண பக்தியின் அடிப்படை. சகுண பக்தியோ மனித வடிவில் அவதாரங்களை எடுப்பவர் கடவுள் எனும் நம்பிக்கையில் அமைந்தது.

உருவமற்ற கடவுளை அணுகும் வழிமுறைகளின் அடிப்படையில் நிர்குண பக்தியில் இரண்டு பிரிவுகள் உண்டு. கடவுள் ஒருவரே, ஞானத்தின் வழியாக அன்பின் மூலமாக அவரை அடையலாம் என்ற வழிமுறையைக் கொண்டது முதலாவது பிரிவான ‘ஞான மார்க்கம்’. இப்பிரிவின் முதன்மை கவிஞர் கபீர். ‘பீஜக்’ இவரது முக்கியமான படைப்பு. இரண்டடி கவிதைகளின், பாடல்களின் வழியாக ஞான மார்க்கத்தை வலியுறுத்திய இந்தப் பிரிவைச் சார்ந்த பிற கவிஞர்கள் குருநானக், ரவிதாஸ், தர்ம தாஸ், மாலுக் தாஸ், தாது தயாள், கந்தர் தாஸ் ஆகியோர்.

நிர்குண பக்தியின் இன்னொரு பிரிவு அன்பே கடவுளை அடையும் வழி என்று பாடிய சூஃபி கவிஞர்களைக் கொண்டது. அரசவம்சத்தினரின் காதல் கதைகளை பாரசீகத்தின் புகழ்பெற்ற கவிதைப்பாணியில் அழகான முறையில் கவிதைகளாக்கினர். காதலின் உன்மத்தம், விரக தாபம், பிரிவின் வேதனை ஆகியவற்றை சரித்திரத்துடனும் இயற்கையுடனும் இணைத்துப் பாடியமையே இக்கவிதைகளின் தனித்தன்மை.

‘பத்மாவத்’ காவியத்தை இயற்றிய மாலிக் முகமது ஜெயஸி, மன்ஜன், குதுபன், உஸ்மான் ஆகிய கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சகுண பக்திக் கவிஞர்கள் உருவ வழிபாட்டை ஆதரிப்பவர்கள். மக்களை கருணையுடன் காப்பாற்றும் கடவுள்களாக ராமனையும், கிருஷ்ணனையும் ஆராதித்தவர்கள். இந்தப் பிரிவின் முக்கியமான கவிஞரான துளசிதாஸ் தனது காவியங்களான ராமசரிதமானஸ், கீதாவளி, கவிதாவளி, வினயபத்ரிகா ஆகியவற்றில் ராமனையே உதாரணப் புருஷனாகக் காட்டுகிறார். கிருஷ்ணனைப் போற்றிப் பாடும் கவிஞர்களில் முதன்மையானவர் சூர்தாஸ். அவரது சூர்சாகர், சூர் சூறாவளி ஆகிய இரண்டும் பக்தி காலகட்டத்தின் முக்கியமான ஆக்கங்கள். இந்த வகையில் பரமானந்தரும் மீரா பாயும் முக்கியமான கவிஞர்கள். சகுண பக்தி காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் இருவர் மாலிக் முகமது ஜெய்ஸியும், அப்துல் ரகுமான் கன்கனாவும்.


ரீதி காலம் (17 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை)

பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமான காலகட்டம் ’ரீதி காலம்’ எனப்படுகிறது. முகலாயர்களின் ஆட்சி நிலைப்பெற்றிருந்தது. அவர்களது கொண்டாட்ட மனநிலை இலக்கியத்திலும் பிரதிபலித்தது. ராமனின் மீதும் கிருஷ்ணனின் மேலும் காட்டிய பக்தியுணர்வு குறைந்து சிருங்கார உணர்வுகள் மேலோங்கின. கவிஞர்களின் கவனமும் கவிதையின் கோட்பாடுகளின்பால் குவிந்தது. ’ரீதி’ என்பது கோட்பாடு. கவிதைகளின் உருவம், உள்ளடக்கம் சார்ந்த கோட்பாடுகள் முழுமையான அளவில் உருவாக்கப்பட்ட காலம் என்பதால் இது ‘கோட்பாடு’ களின் காலம் எனப்பட்டது. ரசம், அலங்காரம், நாயக நாயகி பாவம போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட பாடல்கள் இந்தக் காலகட்டத்தில் இயற்றிப் பாடப்பட்டன. பக்தி காலக் கவிதைகளில் மேலோங்கியிருந்த கவிதையின் உணர்ச்சித் தளம் என்பது மட்டுப்பட்டது. இக்காலகட்டத்தில் எழுதிய கவிஞர்களில் கோட்பாடுகளை அடியொற்றி எழுதியவர்களை ’ரீதி பத்த’ (கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்ட) என்றும், அவற்றிலிருந்து விலகி போனவர்களை ’ரீதி முக்த’ (கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட) என்றும் அழைக்கப்பட்டனர்.

கவிதைகளில் அணியலங்காரத்தை மிகுதியும் கையாண்ட ஆச்சார்ய கேசவ்தாஸிலிருந்து இக்காலகட்டம் தொடங்கியது. ரசங்களைக் கொண்டு கவிதை புனைந்ததில் முதன்மையானவர் ஆச்சார்ய சிந்தாமணி ஆவார். மேலும் யஷ்வந்த் சிங், குலபதி மிஸ்ர, தேவ், பிகாரி தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திக் கவிதையின் நவீன காலம் (19 ஆம் நூற்றாண்டு முதல்)

இந்தி இலக்கியத்தின் நவீன காலம் 1857ல் தொடங்கியது. மேற்கத்திய சிந்தனைகளாலும் கருத்துகளாலும் இந்திய சமூக வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த நவீனத்தன்மை (modernity) இந்திய இலக்கியங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தி இலக்கியத்தில் நவீனத்தன்மையின் தாக்கங்கள் பாரகேந்து அரிச்சந்திராவின் காலகட்டத்தில் தொடங்கிற்று. நவீன இந்தி கவிதையின் வளர்ச்சியை இலக்கிய விமர்சகர்களும் ஆய்வாளர்களும் பல்வேறு காலகட்டங்களாக வகுத்துள்ளனர். இதில் அவர்களிடையே முரண்களும் உண்டு என்றாலும் பொதுவாக இவ்வாறு வரையறுக்கிறார்கள்.


1.     பாரதேந்துவின் காலம் (1850 முதல் 1900 வரை)

2.     திவேதியின் காலம் (1901 முதல் 1918 வரை)

3.     சாயாவாத் எனப்படும் கற்பனாவாத காலம் (Romanticism) (1919 முதல் 1936 வரை)

4.     பிரகதிவாத் எனப்படும் முற்போக்குவாதம் (Progressivism) (1936 முதல் 1943 வரை)

5.     பிரயோக்வாத் எனப்படும் நவீனத்துவம் (Modernism) (1943 முதல் 1950 வரை)

6.     நயி கவிதா எனப்படும் புதுக்கவிதை காலம் (1950 முதல் 1960 வரை)

7.     சமகாலக் கவிதைகள் (1960 முதல்)


1. பாரகேந்துவின் காலம் (1850 முதல் 1900 வரை)

பார்கேந்து அரிச்சந்திரா

நவீன இந்தி இலக்கியத்திற்கான தொடக்கத்தை தந்தவர் பாரகேந்து அரிச்சந்திரா. இந்தி இலக்கியத்தில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி வலுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்தக் காரியத்தில் இவருடன் இன்னும் சில ஆளுமைகள் துணைநின்றனர். ’பாரகேந்து முகாம்’ என்று அழைக்கப்பட்டவர்களில் பிரதாப் நாராயண் மிஸ்ரா, பத்ரிநாராயண் சௌத்ரி (பிரேமகான்), தாகூர், ஜக்மோகன் சிங், அம்பிகா தத்தா வியாஸ், அயோத்யா பிரசாத் கத்ரி, ராதாசரண் கோஸ்வாமி, பாலமுகுந்த குப்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான பிரச்சனைகளைக் கொண்டு கவிதைகளை எழுதினார்கள். கவிதைகளில் எளிய மக்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். வறுமை, பஞ்சம், வரிச்சுமை, விடுதலை, சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துதல், சகோதரத்துவம், பெண் கல்வி, விதவை மறுமணம் போன்றவையே கவிதையின் பாடுபொருட்களாக அமைந்தன. அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சமூக சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனையாளர்களாகவும், லட்சியவாதக் கவிஞர்களாகவும் பங்காற்றினர். ராஜாராம் ராணடே பரமஹம்சர் போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் வலுவான பாதிப்பு இவர்களிடம் இருந்தது. இலக்கியத்தின் மூலமும் கவிதையின் மூலமும் இந்திய நாட்டில் சமூக சீர்த்திருத்தத்தைக் கொண்டு வருவதே இவர்களின் இலட்சியமாக இருந்தது. கவிதைகளில் பகடியையும் நையாண்டியையும் கொண்டு சமூக விழிப்புணர்வையும் நூற்றாண்டுகளாய் கெட்டித்தட்டிப்போன மக்களின் மனத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்த முனைந்தனர்.

இந்திக் கவிதைகளில் நவீனத்தன்மை கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரகேந்து ஆசிரியராக இருந்த ’அரிச்சந்திரா’, ‘கவி பச்சன் கதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின் ’பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின் ‘இந்தி பிரதீப்’, பத்ரி நாராயண் சவுத்ரியின் ’ஆனந்த கடம்பினி’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தக் காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் முந்தைய காலக் கவிதைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. நவீனக் கவிதைக்கான குணங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளவுமில்லை. நவீனக் கவிதைக்கான தொடக்கம் மட்டுமே. கவிதைகளில் புதிய உத்திகளும், சிந்தனைகளும் உள்ளே வருவதற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டன.

இலக்கண அடிப்படையிலோ மொழியியல் நோக்கிலோ இக்கவிதைகள் திருத்தமானவை அல்ல. ஆனால், அவை மக்களின் வாழ்வைச் சொல்லின. கவிஞர்களின் தேர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தன. பார்வை விசாலமடைந்திருந்தது.


2. திவேதி காலம் (1900 முதல் 1918 வரை)

மகாவீர் பிரசாத் திரிவேதி

நவீன இந்திக் கவிதையின் இரண்டாம் காலகட்டம். இந்தக் காலத்தின் முன்னோடியாக விளங்கியவர் மகாவீர் பிரசாத் திவேதி. 1903 ஆம் ஆண்டு முதல் வெளியான ’சரஸ்வதி’ இதழின் ஆசிரியர். இந்தி மொழியின் முக்கியமான பேச்சுவழக்கான ’கடிபோலி’யை விதிகளுக்குட்பட்டு கவிதையிலும் உரைநடையிலும் திருத்தமாகவும் சரியாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ’மர்யாதா’, ‘இந்து’ ஆகிய சில பத்திரிகைகளும் இக்காலகட்டத்தில் இந்திக் கவிதையின் மேன்மைக்குப் பங்களித்தன. மகாவீர் பிரசாத் திவேதி, ஸ்ரீதர் பதக், மைதிலி சரண் குப்தா, சியாராம்சரண் குப்தா, லஷ்மிதர் வாஜ்பேயி, கோபால் சரண் சின்கா, ’ஹரிஅவுத்’ ஆகியோர் இக்காலத்தின் முக்கியமான கவிஞர்கள்.

மனிதர்களைக் குறித்த புதிய பார்வையை இக்காலகட்டத்துக் கவிதைகள் அளித்தன. அதுவரையிலும் சமுகத்தால் கண்டுகொள்ளப்படாத சில பெண் கதாபாத்திரங்கள் கவிதைகளில் புதிய பரிணாமத்துடன் சித்தரிக்கப்பட்டனர். ’பிரியாபிரபாஸ்’, ‘யசோதரா’, ‘சாகேத்’ ஆகியன சில உதாரணங்கள்.

புதிய வடிவங்களில் கவிதைகள் எழுதப்பட்டன. ’சாகேத்’, ‘பிரியாபிரபாஸ்’ போன்ற காவியங்கள், ‘ஜயத்ரதன் வதம்’, ’கிஷான்’, ‘மிலன்’ போன்ற குறுங்காவியங்கள், ‘சகுந்தலா ஜன்ம’, ‘கேஷோ கி கதா’, ‘விகட் பட்’ போன்ற உரைநடைக் கவிதைகள் என வெவ்வேறு வடிவங்களில் கவிதைகள் வெளியாயின. ராமன், ஊர்மிளை, யசோதரை போன்ற காவிய நாயகர்கள் உணர்ச்சிகளும், குணங்களும் கொண்ட எளிய மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தேசபக்தி, அறம், லட்சியம், மனிதாபிமானம், பகடி, எள்ளல், வரலாற்று உணர்வு ஆகியவற்றை இக்கால கவிதைகளின் பாடு பொருட்களாக இருந்தன. கவிதைமொழியும் சொல்முறையும் முக்கியத்துவம் பெற்றன.


3. சாயாவாத் – கற்பனாவாதம் (1919 முதல் 1936 வரை)

ஜெய்சங்கர் பிரசாத்

நவீன இந்திக் கவிதை வரலாற்றின் முக்கியமான காலகட்டம் இது. இரண்டு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. எனவே இதற்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ’சாயாவாத்’ எனும் இந்தக் கற்பனாவாத காலகட்டத்தை வகுப்பதில் பல விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டென்றாலும் இலக்கிய உலகுக்கு இந்தக் காலம் கொண்டு சேர்த்த வளங்களை, மேன்மைகளை அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள். இக்காலத்தை மேற்குலகில் ஏற்பட்ட கற்பனாவாதத்தின் மறுஎழுச்சி காலத்துடன் ஒப்பிடலாம். அதன் பல்வேறு கூறுகளை இக்காலத்தின் கவிதைகளில் காணமுடியும். அழகைக் குறித்த நுட்பமான பார்வை. சுதந்திர உணர்வு, விசாலமான கற்பனை, உள்முகமான சிந்தனைப்போக்கு, தனித்தன்மை, லட்சியநோக்கு ஆகியன முக்கியமான அம்சங்கள். தனிமனித சுதந்திரத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர் இக்காலகட்டத்துக் கவிஞர்கள்.

ஜெய்சங்கர் பிரசாத், மகாதேவி வர்மா, சுமித்ரா நந்தன் பந்த், சூர்யகாந்த் திரிபாதி, நிராலா ஆகியோர் சாயாவாதத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் மாகன்லால் சதுர்வேதி, ராம் நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான், சோகன்லால் திவேதி, அரிவம்சராய் பச்சன் ஆகியோர் இக்காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள்.

கற்பனாவாத காலத்தின் சாதனை என ஜெயசங்கர் பிரசாத் இயற்றிய ’காமாயனி’ காவியம் குறிப்பிடப்படுகிறது. இந்தி இலக்கியத்தின் ’வோர்ட்ஸ்வொர்த்’ என்று சொல்லப்படுகிற சுமித்ரானந்தன் பந்த் முக்கியமான பல கவிதைகளை எழுதியுள்ளார்.

கற்பனாவாத காலத்தில் இரண்டு கவிதைப் போக்குகள் இருந்தன. தேசியவாதக் கவிதைகள் என்பது முதலாவது. சமத்துவம், நீதி, சுதந்திரத்திற்கான போராடும் எண்ணத்தை மக்களின் மனத்தில் விதைப்பதே இதன் நோக்கம். மாகன்லால் சதுர்வேதி, ராம்நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான் ஆகியோர் இவ்வகைக் கவிதைகளை எழுதினர். இரண்டாவது போக்கு உமர் கயாமின் ‘சூனியவாத’ த்தின் பாதிப்பைக் கொண்டது. நேரடி யதார்த்தத்தை சந்திக்க மறுப்பது. களிப்பைக் கொண்டாடும் போக்கை இக்கவிதைகளில் அதிகம் காண முடியும். அரிவம்ச ராய் பச்சன், நரேந்திர சர்மா, ராமேஷ்வர் சுக்லா, பகதிசரண் வர்மா ஆகியோர் இந்தப் போக்கின் முக்கியமான கவிஞர்கள். சொல் அழகும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் இவ்வகை கவிதைகளுக்கு கூடுதல் சிறப்பை அளித்தன.

உத்தி, வடிவம், நயம், சொல்முறை என வெவ்வேறு கவித்துவ ஆற்றல்களைக் கொண்டு எழுதப்பட்ட சாயாவத் கவிதைகள் இந்திக் கவிதைகளுக்கு புதியவொரு தோற்றத்தைத் தந்தன. தனித்தன்மை கொண்ட படிமங்களையும் குறியீடுகளையும் மிக நுட்பமாகப் பயன்படுத்தினர்.


4. பிரகதிவாத் – முற்போக்குவாதம் (1936 முதல் 1943 வரை)

பிரேம் சந்த்
சாயாவாதக் கவிதைகளுக்கான எதிர்வினையாக உருவானவை பிரகதிவாத் கவிதைகள். எல்லையற்ற கற்பனையும், யதார்த்தத்திலிருந்து விலகும் போக்கும் கொண்ட சாயாவாத் கவிதைகளை மறுத்த ஒரு சாரார் அவற்றுக்கு மாற்றாக புதிய வகைக் கவிதைகளை எழுதினார்கள்.

மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையைக் கொண்டது பிரகதிவாதம். தவிர, தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நிகழ்ந்த பல சம்பவங்களும், பாசிச எதிர்ப்பு நிலை, இந்தியாவில் நிலவிய ஆங்கில ஆட்சி போன்றவையும் இக்கவிதைகளில் பாதிப்பை ஏற்படுத்தின.

1935 ஆம் ஆண்டு  பாரிஸில் ’முன்னேற்ற எழுத்தாளர்கள் சங்கம்’ நிறுவப்பட்டதை அடுத்து இந்தியாவில் முல்க் ராஜ் ஆனந்தும் சஜித் ஜகீரும் இந்தியாவில் அந்த அமைப்பை நிறுவ முனைந்தனர். முதல் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரேம் சந்த். ’ஜாகரன்’, ‘நயே சபேரா’, ‘நயே சேத்னா’ போன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன. உருவம், உள்ளடக்கம் இரண்டிலும் புதிய தோற்றம் கொண்ட கவிதைகளை இவை அறிமுகப்படுத்தின. வர்க்கப் போராட்டம், மார்க்ஸிய சித்தாந்தம், யதார்த்தம், புரட்சிகர லட்சியம், சமூக அடக்குமுறைகளை எதிர்த்தல், உலகளாவிய மனித குலத்துக்கான குரல் போன்றவையே இந்தக் கவிதைகளின் அடிப்படைகளாக இருந்தன.

சுமித்ரானந்தன் பந்த், நிராலா, நரேந்திர சர்மா, கேதார்நாத் அகர்வால், நாகார்ஜூன் ஆகியோர் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள். ஊழல், சுரண்டலுக்கு எதிரான குரல்களை இந்தக் கவிதைகளில் கேட்க முடிந்தது. சமூகத்தின் அடித்தட்டு மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாய் இருந்தனர் இக்கவிஞர்கள். இவை பொதுமக்களின் உண்மையான குரல்களாய் ஒலித்தன. கற்பனையான உலகின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் கொண்ட உலகை நிர்மாணிக்க முயன்றனர்.


5. பிரயோக்வாத் – நவீனத்துவம் (1943 முதல் 1950 வரை)

கஜானன் மாதவ் முக்திபோத்

இந்திக் கவிதை வரலாற்றில் இன்னொரு முக்கியமான காலகட்டம். 1943 ஆம் ஆண்டு ஏழு கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட ’தார் சப்தக்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகி இந்திக் கவிதையுலகில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கஜானன் மாதவ் முக்திபோத், நேமிசந்த் ஜெயின், பாரத் பூஷன் அகர்வால், பிரபாகர் மாஸ்வே, கிரிஜாகுமார் மாதுர், ராம்பிலாஸ் சர்மா, அக்ஞேய ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட இதனைத் தொகுத்தவர் கவிஞர் அக்ஞேய. பிற காலகட்டங்களைப் போலவே ’பிரதிக்’, ’கல்பனா’, ‘ஆலோசனா’, ‘நயி கவிதா’ ஆகிய இதழ்கள் இக்காலகட்டத்தில் முக்கிய பங்களித்தன. பிரகதிவாதத்துக்கு மாற்றாக உருவான பிரயோக்வாதம் சமூகத்துக்கு பதிலாக தனிமனிதனுக்கு முன்னுரிமை தந்தது. ’பரிசோதனை’ (பிரயோக்) ஒரு கொள்கையாக அன்றி கவிதையின் ஒரு புதிய அணுகுமுறையாக அமைந்தது.

அக்ஞேய
இந்த அணுகுமுறையைப் பின்பற்றிய கவிஞர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். மேற்கத்திய இலக்கியத்தை கற்றறிந்தவர்கள். பாதலேர், மார்லோ, எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச். லாரன்ஸ், பிராய்டு, மார்க்ஸ், டார்வின் ஆகிய மேற்கத்திய அறிஞர்களின் எழுத்துகளால் உத்வேகம் பெற்றவர்கள். இந்திக் கவிதையில் புதியப் போக்கை உருவாக்க முனைந்தனர். அதேசமயம் அவர்கள் அனைவரும் இந்தியச் சூழலுக்கேற்ப தத்தம் தனித்திறன்களை கவிதைகளில் வெளிக்காட்டினர். தனிமனித சுதந்திரத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த இக்கவிஞர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்துவமான ஒரு அடையாளம் உள்ளதென கருதினர். பிற சாமானியர்களைப் போலவும் அல்லாமல் செல்வந்தர்களைப் போலவும் இல்லாமல் தம் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாத மத்தியதர மக்களின் துயர வாழ்வை இவர்களின் கவிதைகள் பிரதிபலித்தன.

இக்கவிஞர்கள் கவிதைகளை புதுமையான வகையில் எழுதினர். கவிதையின் வடிவங்களிலும் நுட்பங்களிலும் பெரிதும் கவனம் செலுத்தினர்.


6. நயி கவிதா – புதுக்கவிதை காலம் (1950 முதல் 1960 வரை)

பவானி பிரசாத் மிஸ்ரா

தேச விடுதலைக்குப் பிறகு உருவானது ’நயி கவிதா’ எனும் புதுக்கவிதையின் காலம். பிரயோக்வாதத்தைப் போலவே இக்கவிதைப் போக்கும் 1951ல் வெளியான ’தூஷ்ரா சப்தக்’ எனப்படும் கவிதைத் தொகுதியின் வழியாகவே வெளிச்சத்துக்கு வந்தது. பபானி பிரசாத் மிஸ்ரா, சகுந்தா மாதுர், ஹரிநாராயண் வியாஸ், சம்ஷேர் பகதூர் சிங், நரேஷ் மேத்தா, ரகுவீர் சகாய், தரம்வீர் பாரதி ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. தொகுப்பாசிரியர் அக்ஞேய.

’நய பதே’, ’நயீ கவிதா’, ’நிகாஸ்’ ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின.

1959 ஆம் ஆண்டு அக்ஞேய ’தீஸ்ரா சப்தக்’ என்ற பெயரில் மூன்றாவது தொகுப்பைக் கொண்டு வந்தார். இதிலும் பிரயாக் நாராயண் திரிபாதி, கீர்த்தி சௌத்ரி, மதன் பச்சாயன், கேதார் நாத் சிங், குன்வர் நாராயண், பிஜய் தேவ் நாராயண் சகி, சரபேஸ்வர் தயாள் சக்சேனா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன.

’நயி கவிதா’வில் மேற்கத்திய சிந்தனையும் தத்துவமும் பெரும் பாதிப்பைச் செலுத்தின என்பது உண்மையே. குறிப்பாக இயல்புவாதம் (naturalism), மீயதார்த்தவாதம் (surrealism), அபத்தவாதம் (absurdism) ஆகிய மேற்கத்திய இலக்கிய போக்குகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தின. தற்கணத்தில் இருத்தல், மனிதத்துவம், தனிமையுணர்வு, மரணபயம், மாறும் மதிப்பீடுகள் ஆகியனவே கவிதையின் பாடுபொருட்களாக இருந்தன. உணர்வுகளின் தனித்தன்மைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். இக்கவிஞர்கள். குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள், மிகைக் கற்பனை போன்ற கூறுகளை கவிதையில் பயன்படுத்துவதைப் பற்றிய கூர்மையான சிந்தனை இவர்களிடம் இருந்தது.


7. சமகாலக் கவிதைகள் (1960 முதல்)

கேதார்நாத் சிங்
1960க்குப் பிறகு ஒரு புதிய எதிர்மறையான போக்கு நவீன இந்திக் கவிதையை உலுக்கியது. கடுங்கோபமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மோதல்களும் முற்போக்குச் சிந்தனையையும் கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தின் கவிதைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களின் தாக்கங்களை கொண்டிருந்தன.

1960களில் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த வேலை நிறுத்தங்கள், மாணவர் போராட்டங்கள், இந்திய சீன போர், நேருவின் மரணம், இந்தியா – பாகிஸ்தான் போர், பங்களாதேஷின் உருவாக்கம், 1975ல் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை போன்ற நிகழ்வுகளும் கணிசமானத் தாக்கங்களை ஏற்படுத்தின.

புதுக் கவிதைக்கு மாற்றாக ‘அ கவிதா’ (எதிர்க்கவிதை) உருவானது. சீரழிந்த வாழ்வின் இருண்ட பகுதிகளை, அவநம்பிக்கையைக் குறித்து எழுதப்பட்டது. முன்னர் இருந்த முற்போக்குக் கொள்கைகளை மேலும் முதிர்ச்சியுடன் அணுகும் போக்கு கவிதைகளிலும் எதிரொலித்தது. இருத்தலியல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. சில கவிஞர்களிடத்தே அன்னியமாதல் கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. பெண்ணியக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. எதிர்க்கவிதை முகாமைச் சேர்ந்த கவிஞர்கள், வாழ்வில் பொருளெதுவும் இல்லை, சலிப்பும், வெறுப்பும், விரக்தியுமே அதன் பலன் என்றனர். ஆனால், இக்கவிதைப் போக்கை பெரும்பாலான கவிஞர்கள் புறக்கணித்தனர். எதிர்க்கவிதையின் வரவால் முக்கியத்துவம் இழந்த பல கவிஞர்கள், புதிய வீச்சுடன் எழுந்த ஜனநாயகப் போக்கினால் மீண்டும் எழுந்தனர். எதிர் கவிதையின் வெறுப்பு மனப்பான்மையை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத முற்போக்குக் கவிஞர்களான நாகார்ஜூன், கேதார்நாத் அகர்வால், சம்ஷேர் பகதூர் சிங், திரிலோசன் ஆகியோரும் விடுதலைக்குப் பிறகு எழுதத் தொடங்கிய ரகுவீர் சஹாய், சர்வேஷ்வர் சக்சேனா, கேதார்நாத் சிங் ஆகியோரும் இப்போது முக்கியத்துவம் பெற்றனர். வினோத் குமார் சுக்ல, விஷ்ணு கரே, அருண் கமல், மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி போன்று புதிய தலைமுறை கவிஞர்கள் உருவாகி புதிய கவிதை மொழியையும் வெளிப்பாடுகளையும் கண்டடைந்தனர். இந்தக காலக்கட்டத்தை அசோக் வாஜ்பாய் ’கவிதையின் மீட்சி’ எனக் குறிப்பிட்டார்.

அசோக் வாஜ்பேய்

கடந்த இரு தசாப்தங்களாக பல்வேறு வளர்ச்சிப் போக்குகளைக் கடந்து வந்திருக்கும் இந்திக் கவிதை, இன்றைய காலகட்டத்தில் புதிய சவால்களை சந்திக்க நேர்ந்திருக்கிறது. உலகமயமாக்கலும், தேசிய அளவில் உருவாகியிருக்கும் அரசியல், சமூகப் போக்குகளும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள், பழங்குடிகளைக் குறித்து இந்திக் கவிதையின் அக்கறை மேலும் வலுவடைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக எழுதத் தொடங்கியுள்ள கவிஞர்கள் பலர் இந்திக் கவிதைக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கிறார்கள். புதிய பிரச்சனைகளையும், மாந்தர்களையும் சூழலையும் கவிதையில் பேசுகிறார்கள். ஹோமியோபதி உருண்டைகளும், முகநூலும் கூட பாடுபொருளாகியுள்ளன. குறியீடுகளையும், படிமங்களையும் பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட நேரடியான அனுபவங்களின் விவரணைகள் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன. பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் கவிதையில் சாதாரணமாக இடம்பெறுகின்றன.

***



***
Share:

மரணம் வந்த வேளையில் - மதார்

கஜானன் மாதவ் முக்திபோத்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் "பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி" இந்தி மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பில் குன்வர் நாராயணனின் "மணியொலி" என்ற கவிதை படித்ததுமே ஈர்த்தது.

மணியொலி 

தொலைபேசி மணியொலித்தது

நான் இல்லை என்று சொல்லிவிட்டு

புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்


கதவின் அழைப்பு மணி அடித்தது

நான் இல்லை என்று சொல்லிவிட்டு

புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்


அலாரத்தின் மணி ஒலித்தது

நான் இல்லை என்று சொல்லிவிட்டு

புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்


ஒருநாள்

சாவின் மணி அடித்தது

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்

நான்தான் - நான்தான் - நான்தான்

என்று கத்தினேன்


புரண்டு படுத்துத் தூங்கு என்று

சொன்னது மரணம்

குன்வர் நாராயண்

மரணம் வரும் வேளை எப்போதுமே கவிதையின் பாடுபொருளாய் இருக்கிறது. குன்வர் நாராயணனின் இந்தக் கவிதை அதில் தனித்துத் தெரிகிறது. "பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி" தொகுப்பில் 23 கவிஞர்களின் 179 கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. நவீன இந்திக்கவிதையின் ஆரம்பப்புள்ளியான கஜானன் மாதவ் முக்திபோத்தில் தொடங்கி சம காலக்கவிஞரான அனுஜ் லுகுன் வரை. தமிழுடன் ஒப்புநோக்கும்போது கலாப்ரியா, தேவதேவன், கல்யாண்ஜி, லீனா மணிமேகலை, பெருந்தேவி போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்க கவிஞர்களும், கவிதைகளும் இதில் உள்ளனர். ப்ரான்சிஸ் கிருபா, ரமேஷ்-பிரேம் போன்ற கவி ஆளுமைகளை ஒத்தவர்கள்  இதில் இல்லாதது போல் இருந்தது. ஒரு கவிஞரின் முழுத் தொகுப்பையும் படிக்கும்போதே அந்த கவிஞரின் உலகம் பிடிபடும். அவ்வாறு அல்லாமல் இந்திக்கவிதைகளின் உலகுக்கு ஒரு திறவுகோலாக இந்தத் தொகுப்பு அமைகிறது. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக ரசனை சார்ந்து (கவிதைகள் தேர்வும்/மொழிபெயர்ப்பும்) செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கல்யாண்ஜி தனது சமீபத்திய தொகுப்பான  "வெயிலில் பறக்கும் வெயில்" முன்னுரையில் இந்த இந்தி மொழிபெயர்ப்புக் கவிதை நூலைப் படித்த தாக்கத்தில்  எழுதிய மூன்று கவிதைகளே தனது தொகுப்பின் சிறந்த கவிதைகளாக தான் உணர்வதாகக் குறிப்பிடுகிறார். அந்த வகையில் நிறைய நல்ல கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட தொகுப்பாக இது உள்ளது. 

தமிழில் நவீன கவிதை உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மை கவிதைகள் நீள்கவிதைகளாகவே இருந்தன. இந்தியிலும் அவ்வாறே துவங்குகிறது (முக்திபோத்தின் "பிரம்மராச்சஷ்" என்கின்ற நீள்கவிதை) 

அக்ஞேய

இந்திக் கவிஞர் 'அக்ஞேய' வின் 'என் வீடும் அதன் வீடும்' என்ற கவிதை கவிஞர் தேவதேவனின் கவிதையை நினைவூட்டுகிறது.

என் வீடும் அதன் வீடும் 

பறவையொன்று

தினமும் என் வீட்டுக்கு வருகிறது

எனக்கு அதன் பெயர் தெரியாது

அடையாளங்கள் மட்டுமே தெரியும் எனக்கு

தானியங்களைத் தேடியபடி 

கீச்சிட்டபடியிருக்கும் வெகுநேரம்.

பின் பறந்து போகும்

தன் வீடு நோக்கி.

எங்கே இருக்கிறது அதன் வீடு? 

அதற்கென உண்டா ஒரு கூடு? 

அல்லது அந்த வீடு அதனுடையதில்லையா? 

அதற்கென இருந்தாலும்

அந்த வீடு

ஓலமும் அழுகையும் நிறைந்த

என் வீட்டைப்போல் இருக்காது.

பின் எதற்கு வருகிறது

என் வீட்டுக்கு அந்தப் பறவை, 

கீச்சிட்டபடி ஒவ்வொரு நாளும்.

அக்ஞேய வின் இன்னொரு கவிதை தலைப்பு  - புத்தாண்டு நாளில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் கிழவன் 

கவித்துவம் மிக்க தலைப்பு. இதே போல் கவிஞர் விநோத் குமார் சுக்ல வின் தலைப்பும் கவித்துவம் மிகுந்தது - புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன் ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்  அவரது "நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்" என்ற கவிதை கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைக்கு நெருக்கமாக அமைகிறது.

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

அந்த மனிதனை எனக்குத் தெரியாது

நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்

எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்

நான் கை நீட்டினேன்

என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்

என்னை அவனுக்குத் தெரியாது

நான் கைநீட்டியதை அவன் அறிவான்

நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்

ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்

சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு. 

அசோக் வாஜ்பேய்
அசோக் வாஜ்பேயின் "பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி" என்ற கவிதையின் தலைப்புதான் நூலுக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி 

பூமியை மெல்ல மெல்லக் கொறிக்கிறது

இருட்டில் முயல்.

பூமியை முதுகிலேற்றி

மெல்ல மெல்லத் தூக்கிச் செல்கின்றன எறும்புகள்

கொடுக்கால் பூமியைக் கொத்திவிட்டு

சென்றுகொண்டிருக்கிறது தேள்.

பாதி பழுத்த கொய்யாவைப்போல்

பூமியை உடைத்து

கையிலேந்தியிருக்கிறாள் என் மகள்.

இருளிலும் ஒளியிலும்

நூற்றாண்டுகளாக

தனக்கான இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது பூமி.

கவிஞர் கேதார்நாத் சிங்கின் "திசை" என்ற கவிதை முஸ்தபா மஸ்தூரின் 'திருமுகம்' நாவலின் இறுதி பகுதியை ஞாபகப்படுத்தியது. 

திசை 

பள்ளிக்கூடத்துக்கு வெளியே

பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவனிடம் கேட்டேன்

இமயமலை எங்கே இருக்கிறது? 


அதோ அங்கே இருக்கிறது என

பட்டம் பறந்த உயரத்தைக் காட்டினான்.

அவன் சொன்னது சரிதான்.

இமயமலை எங்கே இருக்கிறது என்பதை

அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். 

கேதர்நாத் சிங்

கேதார்நாத் சிங்கின் இன்னும் சில கவிதைகள்

திடீரென்று ஒரு நாள் 

திடீரென ஒரு நாள்

வைரம் முத்து

மஞ்சள் வெங்காயம்

கபீர் நிராலா

சொர்க்கம் நரகம்

பூச்சிகள் பனி

அனைத்தின் பொருளும்

தெளிந்துவிடும்

ஓட்டுக்கூரையின் மேல்

ஊர்ந்திடும் வெயில்

திடீரென ஒளிர்வதைப்போல.

ஒரு மகுடம் போல

பூமியின் நெற்றியில் 

ஒரு மகுடத்தைப்போல

எழுந்து பறந்ததொரு பறவை.

தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நான்

அங்கிருந்தே கூவினேன்

வாழிய, புவி வாழியவே.

மங்களேஷ் டப்ரால்

மங்களேஷ் டப்ராலின் கவிதைகள் கலாப்ரியாவை நினைவுபடுத்துவதாக எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கிரிராஜ் கிராதுவின் கவிதைகள் ராணிதிலக்கின் "காகத்தின் சொற்கள்" தொகுப்பை நினைவுபடுத்தக் கூடியவை. 

கீத் சதுர்வேதியின் "பேப்பர் வெயிட்" என்ற கவிதை இத்தொகுப்பில் உள்ளது.

பேப்பர்வெயிட் 

அப்போது பலத்த வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது காற்று

உன்னுடைய கண்ணீரின் ஒரு துளி

இந்தக் காகிதத்தின் மீது வந்து விழாமல் இருந்திருந்தால் 

எப்போதோ பறந்துபோயிருக்கும் அது. 


கவிஞர் மோனிகா குமாரின் "குழம்பு" என்ற கவிதை

குழம்பு 

குழம்பு கொதிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு

வீட்டில் பரவுகிறது நறுமணம்.

பாத்திரத்திலிருந்து நெய் விடுபடத் தொடங்கி

தனித்திருந்த மணமும் சுவையும் ஒன்றுகலந்து பக்குவமடையும் 

நொடியின் சமிஜ்ஞை அது.

குழம்பை லேசாகக் கிளறிய பின்

வாணலியின் விளிம்பில்

கரண்டியால் ஒரு தட்டு தட்டிவிட்டு 

நெருப்பை அணைக்கிறாள் அவள்.


சமையலின் அந்த இறுதி நொடியை தவறவிடும்போது

நறுமணத்தை நுகர்ந்து கண்ணயரும்போது 

கொதிக்கும் குழம்பைக் கண்டு எரிச்சல் மேலிடும்போது

சமையலறையின் ஜன்னல்களை திறந்துவைக்கிறாள் அவள்

அந்த நாள் முழுவதும் கழிகிறது வருத்தத்துடனே.

கவிஞர் சுபம்ஸ்ரீயின் கவிதைகள் லீனா மணிமேகலை, பெருந்தேவி கவிதைகளுக்கு நெருக்கமாக அமைகிறது.

சுபம்ஸ்ரீ

பொதுவாக மொழிபெயர்ப்பு கவிதைகள் தொகுக்கப்படும்போது ஆண்டின் அடிப்படையில் தொகுக்கப்படும். இதுவும் அத்தகைய வரிசை அமைப்பேயே கொண்டுள்ளது. ஆனால் அதனைத் தாண்டி இதில் மொழிபெயர்க்க தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மொழிபெயர்ப்பாளரின் ரசனையை அடிப்படையாகக் கொண்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தன்மை இந்நூலிற்கு சுவையேற்றுகிறது. பாதி பழுத்த கொய்யாவின் சுவை.

***

பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி புத்தகம் வாங்க

***

Share:

துரத்தப்படுவதன் இன்பம் - நிக்கிதா

குன்வர் நாராயண்
சிறு வயது முதல் எனக்கு பிடித்தமான விளையாட்டு ஓடி பிடித்து விளையாடுவது. சிலரை எத்தனை வேகமாக பின் தொடர்ந்தாலும் தொட்டுவிட முடியாது என தெரிந்தும் துரத்துவேன், பலரை கை எக்கி தொட்டுவிடுவேன், அதில் ஓரிருவருக்கு மட்டும் யூகங்கள் வகுத்து, திட்டமிட்டு தொட முயற்சிப்பேன். தொட்டுவிடுவதன் பலன் அல்லது லாபம் நாம் துரத்தப்படுவோம் என்பதை தவிர வேறேதும் இல்லை என்றதறிந்தும், துரத்தப்படுவதன் இன்பத்திற்காக ஓடுவேன். ஆம்,  இப்பொழுது அந்நினைவுகள் இன்பமாக மனதில் எழுகிறது. துரத்தப்படுவதன் இன்பம், துரத்துவதையும் இன்பமாகிவிடுகிறது. நான் உன்னை பின் தொடர்வேன், நீயும் என்னை பின் தொடர் அல்லது என்னை நோக்கி வா என்ற ஒப்பந்தம் விளையாடுபவர்கள் தாண்டி, பிடித்தமான விஷயங்கள், அடையவேண்டியவை, அன்பு, லட்சியம் என வளர்கிறது. இது அடுத்ததாகத் தன்னை தானே பின் தொடர வைக்கிறது. பிறகு ஒப்பந்தங்கள் நீங்கி வெறும் பின் தொடர்தலாக ஆகிறது. 

இந்தி கவிஞர் குன்வர் நாராயணின் கவிதை ஒன்றின் தலைப்பு "காலி பீச்சா" வெறுமென பின்தொடர்வது. பின் தொடர்வதற்காக ஓடும் பாவனை, துரத்தப்படுகிறோமா என்ற நோட்டம், துரத்துவதற்கான எத்தனிப்பு அனைத்தும் தீரா ஓடி விளையாட்டாக, ஒத்திசைவாக, பெரும் ஆடலாக, லீலையாக பேருரு கொண்டு ப்ரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருப்பது இவரின் இக்கவிதையில் திதிலியின் ஆடலில் பிரதிபலிக்கிறது. 

பட்டாம்பூச்சிகளின் பூமியில்

முன்னொருமுறை எனக்கொரு கற்பனை 

பட்டாம்பூச்சிகளின் பூமியை சென்றடைந்த என்னை 

பட்டாம்பூச்சியொன்று துரத்துவதாக. 

நான் நின்றேன் 

ஆகவே அதுவும் நின்றுவிட்டது 

பின்னல் திரும்பி பார்த்தேன் 

ஆகவே அதுவும் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தது 

அதைத் துரத்திக்கொண்டு நான் போகத் துடங்கியதும் 

அதுவும் தன்னைத் தானே துரத்தத் துடங்கிற்று 

உண்மையில் என்னைப்போன்றே 

அதுவும் ஒரு கற்பனையில் ஆழ்ந்திருந்தது 

பட்டாம்பூச்சிகளின் உலகத்தில் இருப்பதாகவும் 

யாரோ ஒருவர் அதைத் துரத்துவதாகவும்.

கவிதைகளில் நான் எப்போதும் வியக்கும் விஷயம் ஒன்றுண்டு. அதற்குள் ஒளிந்திருக்கும் தரிசனம் வாசகருக்கு திறந்துகொள்ளும் தருணம். தர்க்கப்பூர்வமாக எத்தனை முட்டினாலும் பிடி கிடைக்காத கவிதை, மனதை லேசாக்கி கவிதையின் வடிவில், சொல்லில் தியானித்தால் அந்த தரிசனம் வாசகரின் அக கண்ணில் நிகழ்வதை உணரமுடியும். அப்படிப்பட்ட தருணங்கள் அற்புதமானவை, கவிதை நேரடியாக ஏதோ நம் ஆழத்தில் இருக்கும் ஜோதியை பற்றவைத்தது போல் தோன்றும். எப்படி அது நிகழ்ந்தது என்று யோசித்தால், அந்த சொற்களின் மூலமாகவா என்று பார்த்தால், வெறும் சொற்களிலிருந்து இல்லை, அதை தாண்டி கவிதைகளில் வாழும் அருளால் என்றே தோன்றும். குன்வர் நாராயணனின் இந்த கவிதை அத்தகைய அனுபவத்தை எனக்களித்தது.

 சொல்

இது அதே சொல்தான்

 

இந்த ஜென்மத்துக்கு முன்பு

எங்கே நான் ஜென்மமெடுத்திருக்க கூடுமோ

இது அதே இடம்தான்

 

இந்த காதலுக்கு முன்பு

எந்தப் பருவத்தில் நான் காதலித்திருக்கக்கூடுமோ

இது அதே பருவம்தான்.

 

இந்த காலத்துக்கு முன்பு

எந்த சமயத்தை நான் கழித்திருக்கக்கூடுமோ

இது அதே காலம்தான்

 

மீண்டும் சந்திப்போம் என

எங்கே நான் வாக்களித்திருந்தேனோ

அங்கேயே ஏதேனுமொரு இடத்தில

தங்கிப்போய்விட்டது

ஒரு கவிதை.

 

இந்த வாழ்விற்கு முன்பு

முடியாத வாழ்வை எப்போதோ வாழ்ந்திருக்கக்கூடுமோ

இது அதே சொல்தான்.

மீண்டும் சந்திப்போம் என

எங்கே நான் வாக்களித்திருந்தேனோ

அங்கேயே ஏதேனுமொரு இடத்தில

தங்கிப்போய்விட்டது

ஒரு கவிதை.

கனவில் ஒரு நொடியில் இந்த கவிதை முழுமையாக விரிய துவங்கியது. கூகிள் மேப்ஸில் சாட்டிலைட், ட்ராபிக், டெர்ரன், ஸ்ட்ரீட் என பல விதங்களில் நாம் வழியை காண முடியும். அப்படி 3D ஆக 6D ஆக இடம், காலம், நேரம், மனிதர்கள், தருணங்கள் எல்லாம் விரிந்து கொண்டே சென்றது. ஹாரிஸாண்டிலாக (கிடைமட்டமாக) பல ஜென்மங்களுக்கு நீண்டு,  இவை அனைத்தையும் ஒன்றாக கோர்த்திருந்த நூல் அந்த சொல்லென உணர்ந்தேன். இக்கவிதையில் மற்றும் ஒரு தரிசனம் கடைசி வரிகளில் நிகழ்கிறது. அந்த சொல்லை அந்த இடத்தில் நிலைநாட்டும் சக்தி கவிதை வடிவில் சொற்களை வெளி அனுப்பி அனைத்தையும் இணைந்திருக்கிறது. பறந்து விரிந்த வெளியிலும், ஆழத்தின் ஆழத்திலும் சொல் நிறைந்திருக்கிறது, சொல் இணைக்கிறது, சொல் சாட்சியாய் நிற்கிறது.

***

குன்வர் நாராயணன் (1927-2017) உத்திர பிரதேசம், பைசாபாத்தில் பிறந்தவர். லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

முதல் கவிதை தொகுப்பு 'சக்ரவ்யூஹம்' 1956ம் ஆண்டு வெளியானது. யுக சேத்னா, நயா பிரதீக், சயநாத் ஆகிய இலக்கிய இதழ்களின் இணை ஆசிரியர். 1995ல் 'கோயி தூஸ்ரா நஹின்' தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருதும் 2005ம் ஆண்டு ஞானபீட விருதும் 2009ம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றவர். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு காவியங்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் என எல்லாத் துறையிலும் பங்களித்திருக்கிறார். குறிப்பிடத்தக்கக் கவிதை தொகுதிகள் சக்ரவ்யூஹம், தீஷ்ரா சப்தக், அப்னே சாம்னே, கோயி தூஸ்ரா நஹின்.

***

Share:
Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive