Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு

தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அதிகமாக அறியப்பட வேண்டிய ஒரு படைப்பு. சிலப்பதிகாரத்திற்கு தற்போது ஆங்கிலத்தில் இரண்டு உரைநடை வடிவ மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒன்று டாக்டர் வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர் அவர்களால் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி ப்ரஸ் மூலம் வெளியிடப்பட்டது. மற்றொன்று அலைன் டேனிலோ அவர்களால் அமெரிக்காவின் நியூ டைரெக்ஷன்ஸ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. டேனிலோ தனது பதிப்பில் இக்காப்பியத்தின் சில பாடல்களை புதுக்கவிதையாக மொழியாக்கம் செய்துள்ளார்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிலப்பதிகாரம், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில் சிறந்ததாகத் திகழ்கிறது. பிற காப்பியங்களில் முழுமையான வடிவில் இன்று கிடைப்பவை இரண்டு மட்டுமே. மற்ற இரண்டு காப்பியங்களும் சில துணுக்குகளாகவும் பின்னாளில் எழுதப்பட்ட சுருக்கமான குறிப்புகளாகவும் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த ஐந்து காப்பியங்களும் தமிழ்ப் பெண்கள் அணியும் அணிகலன்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன: சிலப்பதிகாரம், காலில் அணியும் சிலம்பு. மணிமேகலை, இடையணியாகிய மேகலை. சிந்தாமணி, கழுத்தணியான சிந்தாமணி மாலை. வளையாபதி, கைகளில் அணியும் வளையல். குண்டலகேசி, காதில் அணியும் குண்டலம். இந்த ஐந்து காப்பியங்களும் தமிழ்ப் பண்டிதர்களின் சொல்வழக்குப்படி தமிழ்க் கலைமகளின் ஐந்து ரத்தினங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும் சமமானவை அல்ல. சிலப்பதிகார நாயகன்-நாயகியின் மகளுடைய கதையைப் பேசுவதே மணிமேகலை. அது மதத்திலும் சமூகத்திலும் நிலவிய பல்வேறு அம்சங்களின் பின்னணியுடன் அக்கதையை விவரிக்கிறது. சிந்தாமணி மரபான செய்யுள் வடிவங்களை நீண்ட கதை வடிவில் பயன்படுத்திய விதத்தில் சாதனைமிக்க ஓர் இலக்கிய ஆக்கம். இதில் கதாநாயகனின் பலவிதமான மணவாழ்க்கை சார்ந்த சாகசங்கள் கொஞ்சம் சலிப்பூட்டும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு காப்பியங்கள் குறித்து இன்று நமக்குக் கிடைப்பது அவற்றின் மேலோட்டமான கதைச் சுருக்கங்கள் மட்டுமே. இங்கு கருத்தில்கொள்ள வேண்டியது யாதெனில், இந்த ஐந்துமே காப்பியத்திற்கான பண்புகள் கொண்டவை என்பது அக்காலத்தைய சமஸ்கிருத மரபுவாதிகள் உருவாக்கிய பிம்பம் மட்டுமே. உண்மை என்பது அவ்வாறல்ல.

இன்று நமக்கு முழுமையாகக் கிடைக்கின்ற மூன்று தமிழ்க் காப்பியங்களில், அநேகமாக சிலப்பதிகாரமே மிகப் பழமையானது. இது இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகவும், சந்தம் இல்லாத ஆனால் குறிப்பிட்ட தாள நடையில் [meter] அமைந்த அகவற்பா வடிவத்தின் (blank verse) உச்ச நிலையாகவும் காணப்படுகிறது. இச்செய்யுள் வடிவம், இங்கிலாந்தின் எலிசபெத்திய காலத்தைச் சேர்ந்த மர்லோவும் ஷேக்ஸ்பியரும் பயன்படுத்திய தாளக் கவிதைகளுக்கு மிகவும் நெருக்கமானது. இக்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கேள்வி விவாதத்திற்குரியது; அதற்குப் பின்னர் வருகிறேன்.

இந்தக் காப்பியத்தை சமணர், பௌத்தர், இந்துக்கள் எனப் பல மதக்குழுக்களும் தங்களுடையதாகக் கூறுகின்றன. ஆனால், இதை எழுதியவர் பிற சமயத்தாரோடு இணக்கமாக வாழ்ந்த ஒரு சமணத் துறவி என்பது கிட்டத்தட்ட நிரூபணமான விஷயம். கதைகளின்படி இளங்கோவடிகள் (அதாவது ‘அடிகளான இளவரசன்’) என்பவர், தூரத் தெற்கிலிருந்த ஒரு சேர மன்னனின் இளைய மகன் ஆவார். ஒருநாள் ஜோதிடர் ஒருவர், முடிக்குரிய மூத்த மகன் உயிரோடு இருக்கும்போதே இளையவன் தந்தையின் அரசை ஏற்கப் போகிறான் என்று கணித்துள்ளார். உடனே அந்த இளையவர் உலகத்தைத் துறந்து துறவியாக ஆனார்; இதனால் ஜோதிடரின் கணிப்பு பொய்யாகி, தம் அண்ணன் அமைதியாக ஆட்சி செய்ய முடியும் என நம்பினார். இந்த அண்ணன், சேர மன்னன், காப்பியத்திலேயே ஓரிடத்தில் இடம்பெறுகிறார்.

சமணத் துறவியாக நம்பப்படும் இளங்கோவடிகளுக்கு பல்வேறு கலைகள், மதங்கள், அரசுகள் பற்றி இருந்த ஆழமான புரிதல் சிலப்பதிகாரத்தை பல்வேறு களங்களைத் தொட்டு செல்லும் படைப்பாக ஆக்குகின்றது. மனித நடத்தைகளின் மீதான நேர்மையான விசாரணை இதனை ஆர்வமூட்டும் மானுட ஆவணமாகவும் வாசிக்க வைக்கிறது.

இளவரசராக இருந்த துறவி எவ்வாறு காப்பியம் படைப்பவராக மாறினார் என்பதும் இந்தக் காப்பியத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு நேரில் சாட்சியாக இருந்த ஒருவர், அவரிடம் வந்து கதையை விவரிக்கிறார். அவர் தானே ஒரு கவிஞர் என்பதால், காப்பிய நாயகியின் மகளைக் குறித்து ஒரு செய்யுள் படைத்ததையும் சொல்கிறார். இதுவே இளங்கோவடிகளை அக்கதையைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. அவர் தன் காப்பியத்தை இயற்றியபோது, அவருடைய அண்ணன், சேர மன்னன் படைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் வடக்கே போர் நடத்திச் சென்று, இமயமலையிலிருந்து கற்களையும், கங்கையிலிருந்து நீரையும் கொண்டுவருகிறார். தெய்வ நிலையை அடைந்துவிட்ட காப்பிய நாயகிக்கு ஒரு கோயில் அமைக்கிறார். இதுவே காப்பியத்தின் மூன்றாம் பகுதியாக விவரிக்கப்படுகிறது. காப்பியத்தின் முதல் இரண்டு பகுதிகள் முறையே காவேரியின் முகத்துவாரத்தில் அமைந்த புகழ்பெற்ற சோழர் தலைநகரான புகாரிலும் பாண்டியரின் தலைநகரான மதுரையிலும் நடக்கின்றன. மூன்றாம் பகுதியோ சேர அரசின் தலைநகரமான வஞ்சியில் நிகழ்கிறது. இன்று இந்நகர் வெவ்வேறு இடங்களுடன் அடையாளம் காணப்படுகிறது.

கதையின் சாரம் முழுமையாகத் தமிழ் மரபிலிருந்து கிளைத்த ஒன்று. ஆனாலும், புத்த, சமண மரபுகளில் இதேபோன்ற கதைகள் சமஸ்கிருதத்தில் பின்னாளில் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அவை இக்கதையின் பாதிப்பால் தோன்றியிருக்க வேண்டும். உள்ளூர் நாயகி ஒருத்தி அந்நிலத்தால் வழிபடப்படும் தெய்வமாக உயர்வது இக்காப்பியம் கூறும் முக்கிய அம்சங்களில் ஒன்று. சமீப நாட்களில், சில அறிஞர்கள் தென் தமிழகம் மற்றும் சேரப் (கேரள) பிரதேசங்களில் வழிபடப்படும் பகவதி எனும் தெய்வத்துடன் இந்த நாயகி வழிபாட்டை ஒப்பிட்டுக் காண முயன்றுள்ளனர்.

காவிய ஆசிரியர் தன் தனித்துவமான செய்யுள் பாங்கில், அக்கால மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒரு சமீபத்திய நிகழ்வின் கதையையே விரித்துரைக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் விதியின் வழிகளைப் பின்தொடர்வதும் அதை விளக்குவதுமே படைப்பின் நோக்கமாகத் தோற்றமளித்தாலும், மனித வாழ்க்கை குறித்தோ அல்லது விதி குறித்தோ எந்தத் தத்துவார்த்தமான விவாதத்தையும் அவர் முன்வைப்பதில்லை.

இந்தக் காப்பியத்தை கவிஞரின் காலத்து மூடநம்பிக்கைகளையும் சமயப் பின்னணியையும் மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், இப்போது சொல்லப்படும் சமூக யதார்த்தவாத அழகியலியன்படி அமைந்த ஆவணமாகவே கொள்ளலாம். இந்த அழகியலை ஆதரிப்பவர்கள், ஒரு தெய்வம் உருவாகிவரும் சித்திரத்தை விரிவாகப் பேசும் காப்பியத்தின் மூன்றாம் பகுதியை மட்டும் குறைவுடையதாய் கருதலாம். இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வேறொரு கவிஞரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் இந்த வாதம் ஏற்புடையதல்ல. காரணம், முதல் இரண்டு பகுதிகளிலும் இதேயளவிற்கு அக்காலத்தின் பொதுவான பழக்க வழக்கங்களும் மத நம்பிக்கைகளும் பேசப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளும் ஒரே மகத்தான தமிழ் கவிஞரின் படைப்புகளே. பல நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கானப் பெரும் கவிஞர்கள் சிறிய படைப்புகளுக்கே அகவற்பாவை சிறப்புற பயன்படுத்தி வந்தனர். அவ்வரிசையில் சற்றே சுதந்திரமளிக்கும் செய்யுள் வடிவமான அகவற்பாவின் உச்ச நிலையில் உருவானது சிலப்பதிகாரம்.

சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை, மழையைச் சுருக்கமாகப் புகழ்ந்து வர்ணித்தபடி காப்பியம் தொடங்குகிறது. பின்னர் சோழ அரசின் தலைநகரமான புகாரைப் புகழ்கிறது. அங்கு பல பெருவணிகர்கள் வாழ்ந்தனர்; அவர்கள் உள்நாட்டிலும் கடல் வழியிலும் வியாபாரம் செய்து, செல்வ வளத்துடன் இளவரசர்களைப் போன்று வாழ்ந்தனர். அப்படியான வணிக இளவரசர்களில் ஒருவரான கோவலன் என்பவரின் திருமண நிகழ்வை ஆசிரியர் விரிவாக வர்ணிக்கிறார். அவர் மற்றொரு செல்வந்த வணிகரின் மகளான கண்ணகியை மணக்கிறார். அக்கால வழக்கம்போல், திருமணத்தின்போது நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் வசீகரிக்கும் அழகும் நடனத் திறனும் மிகுந்த மாதவி அற்புதமாக நடனம் ஆடுகிறார். அவர் அங்கே இருந்த அனைவரின் இதயத்துடன் மணமகனின் இதயத்தையும் சேர்த்தே கவர்ந்துவிடுகிறார். இது தமிழ் அகத்துறை படைப்புகளில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமான சூழல். கணவன் வேறொரு கணிகையின் தந்திரங்களால் கவரப்பட்டு மனைவியைப் பிரிந்து செல்வான், மனைவியோ அவன் மனம் மாறித் திரும்ப வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பாள். அவன் திரும்பி  வரும்போது பிரிவின் காரணமாக இன்னும் அதிகமான பாசத்துடன் அவனை ஏற்றுக்கொள்வாள்.

இளங்கோவடிகளும் இந்த இலக்கிய மரபைத் தொடர்கிறார், ஆனால் அதைத் தனக்கே உரிய தனித்துவத்துடன் உயர்த்துகிறார். காப்பியத்தில் வரும் மாதவி அவைகளில் ஆடும் நடன மங்கை என்பதில் மாற்றமில்லை. ஆனால் அவள் தன் கலையில் மிகுந்த தேர்ச்சியடைந்தவள். நடனத்தில் அவளின் தேர்ச்சியை விவரிக்கும்போது, துறவியாகிய இளங்கோவடிகளுக்கும் அக்கலையில் உள்ள ஈடுபாடு வெளிப்படுகிறது. மேடை அமைப்பு, நடனத்துக்குத் துணைபுரியும் இசைக்கருவிகள், அவளது கலைநயத்தின் நுட்பங்கள் என அவர் வழங்கும் நுண்விவரங்கள் யாவும் ஆழமும் வியப்பும் மிக்கவை. மேலும், இக்காப்பியத்தில் மாதவி ஒரு பத்தினியாகவே காட்டப்பட்டிருக்கிறார். ஒருமுறை கோவலனின் அன்பைப் பெற்றதும், அவள் அவனை முழு மனதுடன் நேசிக்கிறாள். அவனுக்கு உண்மையாக வாழ்கிறாள். இவர்களின் இணைவில் ஒரு மகள் பிறக்கிறாள், அவளே பின்னர் வந்த புத்த மதக் காப்பியமான மணிமேகலையின் நாயகி.

கணவன் மீது பற்று கொண்டவளாகிய கண்ணகி, தன் கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். இல்லத்தரசியாக தன் கடமைகளைத் தெய்வ நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொண்டு, விட்டுச் சென்ற கணவனின் மீது கொண்ட அன்பை உள்ளத்தில் பாதுகாத்து வாழ்கிறாள். மாதவிக்கும் கோவலனும் இடையே ஒரு தவறான புரிதலால் பிரிவு ஏற்பட்டபோது, கோவலன் மீண்டும் தன் மனைவியிடமே திரும்புகிறான். பொருளாதார ரீதியில் ஏழ்மையடைந்திருந்தாலும், மனைவியின் அன்பால் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். அவன் தான் இழந்த தனது செல்வத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை வருகிறது. தன்னை யாரும் அறியாத வேறொரு நகரில் அது எளிதாக இருக்கும் என்று எண்ணி, பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்குப் புறப்பட முடிவு செய்கிறான். கண்ணகியும் அவனுடன் செல்லத் தீர்மானிக்கிறாள். பூம்புகாரிலிருந்து மதுரை வரையிலான அந்தப் பயணம் விரிவான சூழல் விவரங்களுடன் வர்ணிக்கப்படுகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சித்திரம் நமக்கு இப்பயணத்தின் மூலம் கிடைக்கிறது. கணவனும் மனைவியும் பயணத்தில் இருக்கும்போதே, தன் காதலனிடமிருந்து பிரிவைத் தாங்கமுடியாத மாதவி உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டாள் என்கிற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் அவளுடைய மகளும் அதே பாதையைத் தேர்ந்தேடுக்கிறாள்.

பயணத்தின் சோர்வு காரணமாக மதுரையின் புறநகரை அடைந்தபோது, கண்ணகி இடையர்களான ஆய்ச்சியரிடம் அடைக்கலம் பெறுகிறாள். கோவலன் மட்டும் கண்ணகியின் மதிப்புமிக்க சிலம்பை விற்க நகருக்குள் செல்கிறான், அதன் மூலம் வியாபாரம் தொடங்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டிவிடலாம் என நம்புகிறான். ஆனால் இங்கே விதி குறுக்கிடுகிறது. தமிழ் மரபில் காட்டப்படும் அனைத்து பொற்கொல்லர்களைப் போலவே இங்கும் அரசின் பொற்கொல்லன் ஒரு கள்வனாக இருக்கிறான். அவன் அரசியின் ஒரு சிலம்பைத் திருடி வைத்திருக்கிறான். அப்போது ஒரு அந்நியன் சிலம்பை விற்க முன்வந்ததைப் பார்த்ததும், அவனைத் திருடனாகக் காட்டி பாண்டிய மன்னரின் அவைக்குக் கொண்டு செல்கிறான். விதியின் கொடுமையாக, மன்னன் விஷயத்தை ஆழமாக விசாரிக்காமலும் ஒருவேளை அரசியை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் உடனடியாக கோவலனுக்கு மரண தண்டனை விதித்துவிடுகிறான்.

இதற்கிடையில், விசுவாசமான மனைவியான கண்ணகியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ஆய்ச்சியர் பல தீய சகுனங்களைப் பார்க்கிறார்கள். தங்கள் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவர்கள் பாடல்களைப் பாடி, நடனம் ஆடுகிறார்கள். அவற்றை இன்றைய மொழியில் சொன்னால், நாட்டார் பாடல்கள் மற்றும் நாட்டார் நடனங்கள் என்று வகைப்படுத்தலாம். இதையும் கவிஞர் விரிவான விவரங்களுடன் வர்ணிக்கிறார். ஆனால் இவை யாவும் பலனளிக்காமல் போகின்றன. கண்ணகி கணவனைத் தேடிப் புறப்படும்போது, கோவலன் ஏற்கெனவே இறந்துவிடுகிறான். இதை அறியும் கண்ணகி பழிவாங்கும் தெய்வம் போல மதுரையின் வீதிகளில் நடந்து செல்கிறாள்.

கண்ணகி பாண்டிய மன்னரின் முன் தோன்றி, அவன் இழைத்தது மாபெரும் அநீதி என்கிறாள். இதை அவன் திட்டமிட்டே செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறாள். அரசியின் சிலம்புகளுக்கும் தன் சிலம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை, நிரூபிக்கிறாள். தன் சிலம்புகளில் உள்ள ரத்தினங்களும் மணிகளும் வேறு எனக் காட்டி, தன் தரப்பை கோபாவேசத்துடன் முன்வைக்கிறாள். தான் செய்த பெரும் அநீதியின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்த பாண்டிய மன்னன் அதிர்ச்சியில் உயிர்துறக்கிறான், அவனது அரசியும் உடன் உயிர்நீங்குகிறாள். ஆனால் மன்னனும் அரசியும் இறந்தபோதிலும் கோபம் தணியாத கண்ணகி, இறை ஆணையின் மூலம் மதுரை நகரைத் தீக்கிரையாக்குகிறாள். அந்நகரமே அழிந்துவிடுகிறது. தன் கடமையை நிறைவேற்றிய விசுவாசமான மனைவியாக, கணவனுடன் சேர்ந்து அவள் விண்ணுலகம் சேர்கிறாள்.

மதுரையில் நடந்த இந்த அதிசய நிகழ்வுகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்த ஒருவர், இவற்றை இளங்கோவடிகளுக்கு எடுத்துரைக்கிறார். இளங்கோவின் சகோதரரும் சேர மன்னருமானவர், இந்த தெய்வீகப் பெண்ணுக்கு ஓர் ஆலயம் அமைப்பதாக சபதம் ஏற்கிறார். தன் படைகளைத் திரட்டி, வெற்றிப் பயணம் மேற்கொண்டு, இமயமலையிலிருந்து கல்லையும் கங்கை நதியிலிருந்து நீரையும் வென்ற அரசர்களின் தலைமேலேயே சுமக்கச் செய்து கொண்டுவந்து, தன் நகரத்தை ஒட்டிய காடுகளில் கண்ணகிக்கான கோவிலை அமைக்கிறார். அந்த ஆலயம் அமைந்ததும் தெய்வமாகிவிட்ட கண்ணகி வழக்கமான சமய மரபின்படி தன் பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறாள். இப்பகுதியில் பக்தி இலக்கியக் கவிஞர்களின் மரபை ஒத்த பாடல்களும் இடம்பெறுகின்றன.

இந்தக் காப்பியம் கதைசொல்லல், பாடல்வரிகள் (lyric), இசைப்பாடல்கள் (song) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது. இதன் பெரும்பகுதி நெகிழ்வான அகவற்பா வடிவில் அமைந்துள்ளது. இது கவிஞரின் காலத்திலிருந்த பேச்சு ஒலியமைப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம். மிகுந்த உணர்ச்சியைக் கொண்ட இந்தக் கதை, எந்த உணர்ச்சி வெளிப்பாடுமின்றி சொல்லப்படுகிறது. நிகழ்வுகள் ஒருவிதமான ஆர்வமற்ற, விலகிய பார்வையுடன் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு அதிக விளைவை உண்டாக்கக்கூடியதாய் இருந்தாலும் இளங்கோவடிகளுக்கு முன்பு தமிழில் இதைப் பயன்படுத்தியவர் யாரும் இல்லை. பின்னாளில் கம்பன், தன் இராமாயண மறுகூறலில் இதே வகையான கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்.

கவிஞர் அகவற்பா வடிவத்தில் மட்டுமல்ல, இசைநயத்துடன் யாப்பில் அமைந்த  செய்யுள்கள் புனைவதிலும் வல்லவராகத் திகழ்கிறார். மதுரையின் ஆய்ச்சியர் பாடும் சமயப் பாணியிலான நாட்டார் பாடல்களை ஒத்த கவிதைகளைப் பற்றி முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன். மாதவியும் கோவலனும் பிரிய நேரும் தருணத்தில், அது என்றென்றைக்கும் நிகழும் பிரிவாக, ஓர் இசைநயம் மிக்க பாடல் காட்சி வருகிறது. அவ்வகையில் அது தமிழ்க் கவிதையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததாக படைப்பாகக் கருதப்படுகிறது. மீண்டும், இறுதிப் பகுதிகளில், பக்திக் கவிஞர்களின் இசைநயத்தை கொண்டுவருவதிலும் கவிஞர் தன் வல்லமையைக் காட்டுகிறார். மீண்டும் மீண்டும் பாடும் தன்மை கொண்ட அந்த யாப்பு, ஆழ்ந்த சமய உணர்ச்சியைத் தூண்டுவதாகவும், ஓர் எல்லையில் தெய்வீகப் பரவசநிலைக்கு ஆட்படுத்துவதாகவும் உள்ளது. பல்வேறு யாப்பு வடிவங்களோடு சேர்த்து, சில இடங்களில் கவிஞர் உரைநடையையும் பயன்படுத்துகிறார். சில பகுதிகளை இணைக்க இந்த உரைநடை உதவுகிறது. அது ஷேக்ஸ்பியர் பாணியை நினைவூட்டுவதோடு, தமிழ்மொழியின் காலவரிசையில் முதன்முதலில் தோன்றிய உரைநடை முயற்சிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தக் காப்பியத்தைத் தவிர, இளங்கோவடிகள் எழுதியதாக வேறு படைப்புகள் ஏதும் இல்லை.

பண்டைய தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் வாழ்ந்த மக்களிடையே நிலவிய மறைமுகமான மனநிலை வேறுபாடுகள் இன்றைய வாசகனின் கவனத்திற்குரியவை. பூம்புகாரில் வாழ்ந்த மக்கள் உலகியல் அறிவு கொண்டவர்களாகவும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். அது வணிகர்களின் நகரம்; பரத்தையரும் வாழ்க்கையின் பல இன்பங்களும் செழிப்பான வாழ்விற்குரிய அம்சங்கள் பலவும் நிறைந்த நகரம். அவர்கள் அழிவின் விளிம்பில் நின்றிருந்தாலும் அதை உணர்வதில்லை. ஒரு நகரத்தின் திருவிழா மிக நுட்பமாக விவரிக்கப்படுகிறது, அதன் உளநிலை இன்றைக்கும் நாம் நெருக்கமாக அறியக்கூடியதாகவும் உள்ளது. பயணிகள் பாலைவனங்களையும் காடுகளையும் கடந்து செல்வதும் விரிவாக வர்ணிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தலைநகரமான மதுரை நீதியின் நகரமாகத் திகழ்கிறது. ஆனால் அந்த நீதி தவறும்போது, அந்நகரம் தன் மன்னரையும் தன்னையும் அழிக்கக்கூடிய சக்தியாக ஆகிறது. நகர்ப்புற எல்லைகளில் வாழும் ஆயர்கள் ஒழுக்கமும் எளிமையும் நிறைந்த சமய வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்காக ஆடப்படும் கணிகையரின் அவை நடனங்களுக்கு பதிலாக, இங்கு தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களின் நடனமும் பாடல்களும் இடம்பெறுகின்றன. சேர நாட்டின் மக்கள் மூன்றாவதாக வேறொரு வர்ணத்தை அளிக்கின்றனர். அவர்கள் லட்சியத்திற்காகப் போராடும் வீரர்கள்; இறைநம்பிக்கையை பக்திப் பாடல்களாக வெளிப்படுத்திப் போற்றி பாடுபவர்கள். தங்கள் மரபான தெய்வங்களை வழிபடுவதோடு, புதிய தெய்வங்களையும் வரவேற்று, வழக்கமான பாணியில் பாடல்கள் பாடி வணங்குகிறார்கள். வெற்றிகொள்ளப்பட்ட ஆரிய அரசர்கள் இமயமலையின் கல்லையும் கங்கை நீரையும் சுமந்து வருகிறார்கள் என்கிற விவரம், நெடுங்காலம் முன்பு ஆரியர்கள் தென்னாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு வீரக் கனவாகவே இருக்கலாம்.

இக்காவியத்தின் காலக்கட்டம் எவ்வளவு பழமையானது என்பது முக்கியமான கேள்வியாக இருந்தாலும், தற்போது அதற்கான துல்லியமான விடை இல்லை. அறிஞர்கள் இக்காவியத்திற்குப் பலவாறாக காலம் நிர்ணயித்துள்ளனர். பொதுவாக இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பு குறிப்பிடப்படுகிறது. இளங்கோவடிகள், காப்பியத்தில் விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கு சமகாலத்தவராகக் கருதப்படுகிறார். காப்பியத்தின் நிகழ்வுகள், பூம்புகார் கடலில் மூழ்குவதற்கும் சோழர்கள் உள்நாட்டிலுள்ள உறையூருக்கு இடம்பெயர்வதற்கும் முன்பு நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கண்ணகி கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இலங்கை அரசன் ஒருவன் வந்ததாகவும் காப்பியம் குறிப்பிடுகிறது. பிரதியில் காணப்படும் ஜோதிட மற்றும் வானியல் குறிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இந்தக் காப்பியத்தின் காலம் பழமையானது என்பதற்கு ஆதரவாகச் சொல்லப்படுபவை. ஆனால் மறைந்த அறிஞர் வையாபுரிப் பிள்ளை இவ்வாதங்களை ஏற்க முடியாதவை என நிராகரிக்கிறார். தமிழில் சொற்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மொழியியல் சான்றுகளை முன்வைத்து, இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வாதிடுகிறார்.

இளங்கோவடிகள் பயன்படுத்தும் அகவற்பா வடிவம் மிகுந்த நுட்பமும் செம்மையும் கூடியது. இத்தகைய முழுமைநிலை பல நூற்றாண்டு பயிற்சியின் மூலம் மட்டுமே அடையக்கூடியது. மேலும், இக்காப்பியம் தன்னளவிலேயே நுட்பமான நவீனப் படைப்பாகும்; முதிர்ச்சியற்ற தொடக்கநிலை படைப்பல்ல. இது காவியங்களுக்கு உரிய சமஸ்கிருத மரபுச் சட்டங்களைத் திட்டவட்டமாக மீறுகிறது. இதில் ஒரு பெண் நாயகியாக இருக்கிறாள்; இக்காவியத்தில் நிலம், நதி, அரசு அல்லது தலைநகரம் போன்றவற்றை அக்கால சமஸ்கிருத காவியங்களில் காணப்படும் வழக்கமான வர்ணனைகளின் அடிப்படையில் விவரிக்கவில்லை. இவ்வாறு, இளங்கோவடிகள் எனும் கவிஞர், மரபுகளுக்கு எதிரான ஒரு மறைமுக எதிர்ப்பாக, தனித்துவமான, ஆழ்ந்த மானுட ஆவணமாகும் ஒரு படைப்பை உருவாக்க விரும்பினார் என்றே தோன்றுகிறது.

தமிழில் டி. ஏ. பாரி

ஆங்கில மூலம்: Indian and Foreign Review, March 15, 1967

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

சிலப்பதிகாரம் தமிழ் விக்கி பக்கம்

டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கிரிராஜ் கிராது கவிதைகள்

பெங்களூரு 4.0 


கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன

துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்

ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்

கவலைகளுடன் சுற்றுகின்றன.

சிலைகள் சிலைகளாக கிடக்கும்

ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்

***

லைவ்

 ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,

அதிக ஆரவாரம் கூடாது.

ஒரு ஸ்மார்ட் போனும் ஐம்பது நூறு ரூபாய்க்கு டேடாவும் வைத்து

யார் வேண்டுமானலும் யூ ட்யூப் சேனலை உருவாக்க முடியும்

ராத்திரி அவசியமில்லை, பகல் வெளிச்சமிருந்தாலே வீடியோ நன்றாக வரும்

ஒரேயடியாக யாருமில்லாமல் இருப்பது ஆகாது,

எத்தனைக்கெத்தனை கூட்டம் உள்ளதோ அத்தனைக்கத்தனை நல்லது

கத்தி இருந்தால் நல்லதுதான் ஆனால் கட்டாயமில்லை.

மனிதனின் கையும் காலுமே போதுமானது.

             

போரை நேரடியாக ஒலிபரப்புகிறது சி என் என்

கொலை எண்ணத்தால் உற்சாகமடைந்து

கொலையை மக்களுக்குப் பிடித்த எண்ணமாக உருவாக்குகிறது பிரைம் டைம்

கொலையை நேரடியாக ஒலிப்பரப்பும் நாடாக ஆக்குகிறதா?

 ***

ஒரு அலைபேசி எண்ணைப் போல

 

உங்களை அழைப்பதாக இருந்தேன் நான்.

 

ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாகவே படப்பிடிப்பை முடித்தோம்

இத்தனை சீக்கிரம், மூன்று நாட்களுக்கு உள்ளாகவே,

வேறுமாதிரியாகும் என்று எனக்குத் தெரியாது

இந்த மூன்று நாட்களில் பல முறை உங்களைப் பற்றி யோசித்தேன்

எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுபோல

மந்தமாக, ஆகவே சற்று பின்தங்கியவராக,

இருபதாம் நூற்றாண்டிலேயே மாட்டிக் கொண்டவர் என்றும்

இப்போதெல்லாம் உங்கள் வேலையை நீங்கள் சொன்னபடி சரியாக செய்வதில்லை

இந்து குடும்பத்திலிருந்து வந்த உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்

உங்களுக்குக் குழந்தைகள் உண்டல்லவா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

இந்த ஊரிலிருந்து போய் விட்டீர்களா?

என்றெல்லாம் நான் யோசித்தேன்

 

உங்கள் கேமரா பழைய தூர்தர்ஷனின் தரத்துக்கு சமமாக இல்லாமல் இருந்திருக்கலாம்

ஆனால் அதன் உணர்வுகள் சரியாக பொருந்தியிருந்தன.

நாள் முழுவதும் உங்களுடைய கண்கள் மனிதர்களை அல்ல, ஒளியையே பார்த்திருக்கும்

ஜே பி, இந்திரா இருவரையும் நீங்கள் இதே கண்களால் நேரில் பார்த்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை

ஆனால் ஏதாவது செய்யுங்கள், உங்கள் உபகரணங்கள் பழசாகிவிட்டன

தூர்தர்ஷனை நீங்கள் வேலையாக மட்டும் பாருங்கள், காதலைப் போல் அல்ல.

 

ஆனால், உங்களைப் பற்றி பேச நான் உங்களிடம் வரவில்லை

அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று தெரியாது

உங்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது

இன்னும் நாம் நண்பர்களாகவில்லை

ஒருவேளை அது நடக்காமலும் போகலாம், ஏனெனில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை

இப்போதும் நான், இந்த எளிய நகரத்தில்

தற்பெருமை, அகங்காரம், சுயவிரக்கத்துடன் அலைந்து திரியும் கைவிடப்பட்டவன்தான்

நல்லது, நான் என்னைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை

தவிர வேறெதையும் செய்வதுகூட இப்போது மேலும் சிரமமாக இருக்கிறது.

உங்களிடம் நான் ஒரு தாங்க முடியாத துயரத்தைப் பகிரவே வந்திருக்கிறேன்

 

என்ன நடந்தது என்றால் உங்களை நான் அழைப்பதாக இருந்தேன்

என்னுடைய அலைபேசியில் உங்களைப் பெயரை இட்டு,

தேடி வெகு நேரத்துக்குப் பிறகு கிடைத்தது

என் வாழ்வில் உள்ள இஜாஸ் நீங்கள் மட்டுமே அல்ல.

நண்பர்களற்று கைவிடப்பட்டு வருடக்கணக்கில் ஊர் ஊராக திரியும்

என்னுடைய அலைபேசியில் அந்த இன்னொரு இஜாஸின் எண்

எப்படி தங்கியதென்று எனக்குத் தெரியவில்லை

 

அந்த எண்ணையும் பெயரையும் கண்ட அந்த நொடியில்

எஞ்சியிருந்த இறகுகள் உடைந்து நொறுங்கின

நண்பர்களற்ற, கைவிடப்பட்ட ஒருவன் அழுவதுபோல அழுது கொண்டிருக்கிறேன்

நாற்பத்தி ஆறு டிகிரி கொதிக்கும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்

மோட்டர் சைக்கிள் ஓட்டியபடியே அழுது கொண்டிருக்கிறேன்.

 

உங்களுக்குப் புரிகிறதல்லவா? இஜாஸ் அகமது இந்த உலகில் இல்லை

இப்போது அவர் என் அலைபேசியில் உள்ள ஒரு எண்.

இஜாஸ் அகமது இல்லை என்பது

இப்போது எத்தனை துக்கம் அளிக்கக் கூடியதென்பதை

உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

***

- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

கிரிராஜ் கிராது:

நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது. 

1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.

வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.

அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை. 

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)

மேலே உள்ள கவிதைகள் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.

***

Share:

பறவைகளை அறிதல் - கேரி ஸ்னிடர்

பறவைகளை அறிதல்


நீ வாழும் நிலம்

அந்நிலத்தின் பருவகாலம்


அப்பறவைகள் பறந்தலையும் பரப்பு

புல்வெளியில்

புதரில்

கானகத்தில்

கற்பாறையில்

நாணல் இடையில்


தனியென

குழுவென

சிறுகுழுவென?


அதன்

உருவம்

விசை

பறத்தலில் தனி லாவகம்


அதற்கே உரிய

வினோதம்

வாலின் சிற்றசைவு

சிறகசைப்பு

தலைநாடல்


அவை உண்ணும் உணவை உன்னால் பார்க்கமுடிகிறதா?


அதன் 

அழைப்புகளை 

பாடல்களை?


இறுதியில்

உனக்கு வாய்க்குமெனில்


அவைகளின் வண்ணங்களை

இறகுகளின் வடிவங்களின் நுண்மையை- 

வரிகளை

புள்ளிகளை 

தீற்றல்களை


பறவைக்கு ஒரு பெயர் சூட்ட 

உனக்கு தேவையான

அனைத்தையும்

அந்த விவரங்கள் சொல்லும்,

ஆனால்


அதற்கு முன்னரே

இந்த பறவையை அறிவாய் நீ.

(Gary Snyder)

(தமிழில்: வேணு வேட்ராயன்)

***

Share:

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB 

கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று

குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது

பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது

காதல் கவிதையோ ஒப்பாரியானது

சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது

தமிழென்று நினைத்தது மலையாளமானது

மலையாளமோ தெலுங்கானது

போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த

1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது

பழைய ஒரு படத்தில்

நீயென்று எண்ணிய உருவம் இளையராஜாவின் உருவமானது.

மனோவோ, ராஜேஷ் கிருஷ்ணனோ

உன்னுடைய குரலில் பாடிய எத்தனையோ பேரையும் நீ என்றே நினைத்திருந்தேன்

 

உன் குரலிலிருந்து அவர்கள் தங்கள் குரலைக் கண்டடைந்திருக்க வேண்டும்

எனக்கென்று குரல் இல்லை, உன் குரலின் நகல்தான் அது.

ஏதேனும் ஒரு நாள் நான் உன்னுடைய ‘மன்றம் வந்த’ அல்லது ‘இது ஓர் பொன் மாலை’

அல்லது ‘நகுவா நயனா’ அல்லது ‘நா நிச்சலி’ யை பாடுவேன்

ஏன் இத்தனை பக்திப் பாடல்களை பாடினாய் நீ

ஏன் இத்தனை நல்லவனாக இருந்தாய் நீ

உன்னுடைய உடல் நலம் குறித்த செய்திகளை

சக்தி வாய்ந்த தலைவர்கள் ஏன் மூடி மறைத்தார்கள்

அவர்கள் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னிப்பதற்கு

நீ பாடிய அனைத்து கானங்களும் சேர்ந்து முயன்றால்கூட முடியாது.

 

இரண்டு முறை நாம் சந்தித்திருக்க முடியும், முயலவில்லை நான்

ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்வில்

மரியா அல்லது ஜானியின் பாடல்களை பாடியபடி வந்திராமல் போயிருந்தால்,

பெருமைமிக்க பிரதேசப் பேச்சு வழக்கை

இந்தியல்லாத உச்சரிப்புடன் மாற்றியும் தேற்றியும் நீ பாடாமல் இருந்திருந்தால்

கலைகளின் வர்ணாசிரமம் புரிந்திருக்காது

முன்பின் அறியாத மொழி எழுத்துகளின் நடுவே மூன்று ஆங்கில எழுத்துகளைக் கொண்ட

அந்த மேக்னா சவுண்ட் கேசட்டை எடுக்காமல் போயிருந்தால்

சுத்த சங்கீதக் காவலர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது

 

உன்னுடைய பிரிவுப் பாடல் என்னிடம் கிடையாது

அது தமிழோ தெலுங்கோ இந்தியோ தெரியாது

அது உங்களது ‘நீ கூடு செதிரிந்தி’யாக இருக்கலாம் வேறு ஏதேனும் இருக்கலாம்

ராஜேஷ் மனோ ரகுமான் ராஜா அனைவரும் உனக்கு விடை தந்துவிட்டார்கள்

என்னால் எப்போது சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை

‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடல் சோகப் பாடலுக்கு சரியாக வராது

உஷா உதூப்போ ராஜேஷோ மனோவோ நானோ புனித் சர்மாவோ அமித் ஸ்ரீவத்ஸாவோ

இருந்திருந்தால் அது எப்படிப்பட்ட வழியனுப்புதலாக இருந்திருக்கும்

தேசத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் முன்னால் நின்று

உன்னை அழைத்துப் பாடத் தொடங்குவோம்

‘ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் ஆரம்பம்’.

- கிரிராஜ் கிராது (மூலம்: இந்தி)

தமிழில் - எம். கோபாலகிருஷ்ணன்

***

Share:

கிரிராஜ் கிராது கவிதைகள்

செல்ஃபி

கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை

துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது

டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை

பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார்

மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து தெரியாமல்

 

இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும்

மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு முகத்தை

***

பெங்களூரு 4.0

கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன

துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்

ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்

கவலைகளுடன் சுற்றுகின்றன.

சிலைகள் சிலைகளாக கிடக்கும்

ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்.

***

புதிய யுகத்தில் நட்பு

பெண்களை இழிவுபடுத்திய ஒரு அதிகாரிக்கு எதிரான 

கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர் 

அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவில்லை.

அப்போது என்னை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்

“நானொரு அரசியல்வாதி.”

அன்று முதல் அவரை நான் மரியாதையுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டேன்.


அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்பது

இந்திக் கலாச்சாரம் என்றவர்

ஒருமுறை அதில் சென்று கலந்து கொண்டார்

அப்போது அவர் என்னிடம் சொன்னார் “எனக்குத் தெரியாது”

இதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ளவில்லை


இலக்கிய அமைப்புகள் தில்லியில் ஏற்பாடு செய்யும் மாலை நிகழ்ச்சிகளில்

ஒரு நாள் மாலையில்

வெளியில் நின்று சிகரெட் புகைத்தபடியே கேட்டார்

“இந்த ஒலிப்பதிவு வேலையில் போதுமான சம்பளம் கிடைக்கிறதா?”

என்னுடைய சம்பளத்தைச் சொன்னவுடன் அவர் கூறினார்

“இதுபோன்ற வேலைகள் இருந்தால் சொல். இதைவிட குறைவு என்றாலும் பரவாயில்லை”

அன்றிலிருந்து ஒவ்வொரு முறை சம்பளம் கிடைக்கும் போதும்

அவருடைய முகம், சிகரெட்டுடன் சேர்த்து நினைவில் எழுகிறது

அப்போது அவருக்கு வயது எழுபது, சாவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு.


அவருடைய பிரசித்திபெற்ற ‘துணை’ கவிதையைப் பற்றி இரண்டு முறை எழுதினேன்

முதல் முறையில் சில கேள்விகள் இருந்தன, 

இந்தி மொழிக்குள் உள்ள அரசியலின் தாக்கம் குறித்து.

இரண்டாம் முறையில் பாராட்டு இருந்தது, 

இவ்வுலகில் கலை சார்ந்த அரசியலின் தாக்கம் பற்றி 

முதலாவதை எழுதும் வரையில் நாங்கள் இருவரும் 

ஹிந்தியின் இரு வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்

இரண்டாவதை எழுதுகையில் ஹிந்தியில் அவ்வாறான முகாம்கள் இல்லையென்று கருதினேன்

ஆனால் இரண்டு முறையும் இக்கவிதையைக் குறித்தோ அல்லது

அதைப் பற்றியது எழுதியது பற்றியோ அவரிடம் பேசவில்லை

ஒருபோதும் பேசிக்கொள்ளவே இல்லை



எப்படி அவர் கவிஞராக இருக்கிறாரோ அதுபோலவே 

மனிதனாக, தொழிலாளியாக, கூலியாக, பொறியாளராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, 

தலைவராக, பெயின்டராக என யாராகவும் ஆகக்கூடிய வாய்ப்பு எத்தனைக் குறைந்திருக்கிறதோ

அந்த அளவுக்கு அப்படி ஆவதற்கான தேவைகள் கூடியுள்ளன. 

படுகொலைகளை எதிர்த்து கண்டன அறிக்கைகளில் 

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் கையெழுத்திட்டபோதும், 

அவ்வப்போது ஆழமான புரிதலுடனும் வேறு வழியற்ற அப்பாவித்தனத்துடனும்

அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடியுமிருந்தனர்.


நாம் இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை, இருந்திருக்க முடியும்

ஆனால் சந்தித்தபோது நண்பர்களைப் போலவே சந்தித்தோம்

விடைபெற்றுச் சென்றபோதும் நண்பர்களைப் போலவே விடைபெற்றோம்.

- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

கிரிராஜ் கிராது:

நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது. 

1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.

வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.

அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை. 

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)

மேலே உள்ள கவிதைகளும், இம்மாத இதழில் வெளியான எஸ்.பி.பி கவிதையும் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.

***


Share:

நிம்மதி துவங்கும் தருணம் - கடலூர் சீனு

ஒரு முறை குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல, சொந்தகார மாமாவை அழைக்க அவர் வீடு போனோம். மாமா எங்களுடன் கிளம்பும்போது வாசல் வரை வழியனுப்ப வந்த (மாமாவின் அம்மா) ஆச்சி எங்களிடம் சற்றே கெஞ்சல் போன்ற குரலில்  அவன கொஞ்சம் பாத்துக்கிடுங்கப்பா திங்காம அலஞ்சிகிட்டு கிடப்பான் என்று சொல்லி விட்டு உள்ளே போனார். ஆச்சிக்கு வயது 85. மாமாவுக்கு வயது 60.

பிற உயிர்குலத்தில் அம்மாக்கள் இப்படி இல்லை. குட்டி தனியே பிழைத்துக் கிடக்க கற்றுக்கொண்டு விட்டால் பின்னர் அந்த குட்டி குறித்து தாய் கவலை கொள்வதில்லை. மனித குலத்தில் மட்டும் ஏன் இப்படி? அம்மா எனும் நிலையை அம்மாவுக்குள் சாகும்வரை அப்படியே வைத்திருக்கும் நியதி எது? 

ஒரு மனிதன், மனைவி குழந்தை என்று தான் அமைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்புகளை துறக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும்  அம்மாவுக்கு மகனாக முன்னரே அவனுக்கு விதிக்கப்பட்டு  அவன் கொண்ட பொறுப்புகளை துறக்க வகை கிடையாது. அம்மா இருந்தால் அவளது பரிபூரண ஒப்புதலுக்கு பிறகே ஒருவன் துறவு பூண் முடியும் என்பது முந்தைய இந்திய மரபு. நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும் நான் இறந்த பிறகு எனக்கு நீ வந்ததுதான் கொள்ளி போட வேண்டும் என்று சத்தியம் பெற்றுக்கொண்டே அவரது அம்மா பட்டினத்தாருக்கு அவர் துறவு ஏற்க சம்மதம் தந்தார் என்பது கதை.

ஆதி சங்கரரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுக்கிறது. சங்கரரின் அம்மா கரையில் கிடந்து தவிக்கிறார். சங்கரரை நீ துறவு ஏற்க அனுமதி கொடுத்தால் முதலை விட்டு விடும் என அசரீரி கேட்க, மகன் என்னோடு இல்லாவிட்டாலும் பரவா இல்லை. ஆனால் அவன் உயிருடனாவது இருக்கட்டும் என்ற நிலையிலேயே அவர் அம்மா சங்கரருக்கு துறவு பூண அனுமதி கொடுத்தார் என்பது மற்றொரு கதை.  ரமணரோ தன்னைக் காண வந்த தாயை விட்டு ஓடி ஒளிந்திருக்கிரார்.

ஜெயமோகன் எழுதிய திசைகளில் நடுவே கதையில் வரும் தீக்ஷணன், விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் இந்த இரண்டு பாத்திரங்களும் தங்களை லெளகீகமாக பின்னிழுக்கும் அம்மா மீது எழும் கசப்பு மீது வளருகிறது.  இதெல்லாம் ஆத்மீக சிக்கல் என்றால் இதே நிலை லெளவ்கீகத்தில் நிகழ்ந்தால் அது இன்னொரு வகை மூச்சு முட்டும் அனுபவம். ஜெயமோகன் சொல்லும் உதாரணம் ஒன்று உண்டு. முட்டைக்குள் குஞ்சு வளர அந்த முட்டைக்குள் காற்று வந்து சென்று சுழலும் ஒரு மிக சிறிய காலி இடம் இருக்கும். அந்த காலி இடத்தை இழந்தால் குஞ்சு இறந்து போகும். லெளவ்கீகத்தில் தாய் அவளது பேதமையால் இறுதியாக அபகரிப்பது, முட்டைக்குள் குஞ்சுக்கான அது உயிரோடு இருக்க அளிக்கப்பட்ட அந்த சிறிய வெளியைத்தான்.

இரண்டு கரு சிதைவுக்கு பிறகு பிறந்தவன் நான். ஆகவே என் அம்மாவுக்கு என் மேல் சற்று கூடுதலாகவே கரிசனம். நான் இப்படி அஷ்ட கோணல் உடலுடன் சவலைப் பிள்ளையாக பிறந்து திரிய காரணம், நான் கருவில் இருந்த போது கிரகண நேரத்தில் அம்மா வெளியே திரிந்திருக்கிறார். அவரது அந்த பிழையைத்தான் நான் இன்றளவும் சுமக்கிறேன் என்ற குற்ற உணர்வு அவருக்கு. அது கடந்து எத்தனையோ சூழல் இடர்கள் வர, நான் துறவியாக போய்விடுவேன் என்று அம்மா எப்படியோ நம்பி விட்டார். குறிப்பிட்ட சூழல் ஒன்றில் நான் அப்படி ஏதும் செய்துவிடலாகாது எனும் படிக்கு கிட்டத்தட்ட நான் மீற இயலா உத்தரவு ஒன்று கூட பிறப்பித்தார். 

அம்மா மனம் சிதறி நின்ற வேறொரு சூழலில் அவரை பேணும் நிலையில் நான் இருக்கையில் கண்டேன். அவருக்கு நான் யார் என்பதே நினைவில் இல்லை. மிக பின்னர் ஆலிவர் சாக்ஸ் ஆவணம் செய்த சிக்கல்கள் வரிசையில் ஒருவரை குறித்து வாசித்தேன். அவருக்கு ஒரு சிக்கல் அதன் தொடர்சியாக அவருக்குள் இருந்த அம்மா எனும் பிம்பம் மறைந்து போகிறது. அம்மா குரலை போனில் கேட்டால் அம்மா என்னை விட்டு எங்க போன. உன்னை உடனே பாக்கணும் வா என்று சொல்லி அழுவான். அம்மா நேரில் வந்தாலோ அவளை அவனுக்கு அடையாளம் தெரியாது. என் அம்மா குரல்ல பேசுரியே யார் நீ? எங்கே என் அம்மா என்று கேட்பான். இந்த அம்மா மகன் பிணைப்பு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டவை எல்லாம் ஐஸ்க்ரீக் புகை போல ஆவி ஆகி மறைந்து போகும், நரம்பு முடிச்சு மேல் அமைந்த வெறும் ஒரு மெல்லிய பதிவு மட்டுமே. ஒரு சின்ன பிசகு போதும் எல்லாமே ஆவியாகி விடும் என்றால், நான் கொண்ட கொந்தளிப்பு அனைத்திற்கும், அம்மா மகன் எனும் நிலை மேல் மானுடம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் அனைத்திற்கும் என்னதான் பொருள்? அவற்றின் பெருமதிதான் என்ன? 

கல்பற்றா நாராயணனின் கீழ்கண்ட கவிதை பேசுவது மேற்சொன்ன எளிய நரம்பு முடுச்சு கொண்ட வெறும் மெல்லிய அடையாளத்தை குறித்தது தானா? பிறந்து நெடு வருடம் கழித்தும், நினைவுகளின் கர்ப்பப்பை விட்டு வெளியே விடாது, அக்கறை எனும் அறுபடாத தொப்புள் கொடியால் மகனை இன்னும் சுற்றி வைத்திருக்கும் அன்னையையும், அவளைக் குறித்த மகனின் நிலையையும் பேசும் இந்த கவிதையயை முதன் முதலாக இந்த கவிதை எழுதி வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து இதை கேட்டிருக்கிறேன். உண்மையில் இது இறப்பின் நிம்மதியை பேசுகிறதா அல்லது பிறப்பின் நிம்மதியை பேசுகிறதா என்ற தத்தளிப்புடன் இதை முதன் முறை கேட்ட போது உளம் மொத்தமும் கொந்தளித்து இல்லை இல்லை இல்லை என்று அறற்றியது. அதனூடு ஆழ் மனம் மெல்லிய குரலில் ஆம் என்றது. 

அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் இந்த கவிதை எதேச்சையாக கண்ணில் பட வாசிக்கிறேன் . உள்ளே இல்லை இல்லை இல்லை என்ற அதே கொந்தளிப்பு. ஆம் என்ற அந்த மெல்லிய குரல் மீண்டும் கேட்குமா என்று துணுக்குரலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

நிம்மதி

அம்மா இறந்தபோது

ஆசுவாசமாயிற்று.


இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்

எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்.


இனி என்னால்

காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்

முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை.


இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து

தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்

ஓடிவரும்  அலறல்

என்னை திடுக்கிடச்செய்யாது.


இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது

கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை

பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த

பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து

தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்

நேற்றோடு இல்லாமலாயிற்று.


இனி நான்

சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்

நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு

நேற்று அணைந்தது.


தன் தவறால்தான்

நான் துன்பப்படுகிறேன் என்ற

கர்ப்பகால பிரமைகளிலிருந்து

அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.

ஒருவழியாக அவள் என்னை

பெற்று முடித்தாள்.


மலையாளத்தில் : கல்பற்றா நாராயணன்

தமிழில் : ஜெயமோகன்

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொடுதிரை நூல் வாங்க...

***

Share:

வீரான்குட்டி கவிதைகள் 1 - ப. தாணப்பன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாராயங்குளத்தில் பிறந்த வீரான்குட்டி மடப்பள்ளி அரசுக் கல்லூரியில் மலையாளத் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ஜல பூபதம் 2001ல் வெளிவந்தது. தொடர்ந்து 'தொட்டு தொட்டு நடக்கும் போழ்', 'வீரான் குட்டிக் கவிதைகள்',  'நிசப்தத்துடே ரிபப்ளிக்', 'நதியன்' ஆகிய தொகுதிகள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், தமிழ், அரபி, ஜெர்மன், ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் இவர்.

எப்போதுமே நம் மனதிற்கு நெருக்கமானவை கவிதைகள் வீரான் குட்டி கவிதைகள். அவை படிவங்களைக் கொண்டிருக்கின்றன. எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிவங்கள், உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுவற்ற எளிய உணர்வுகள் இவற்றை தாங்கி நிற்கின்றன இவரது கவிதைகள். இதனாலேயே இவரை படிமங்களின் கவிஞர் என்று கூறலாம் என்று தன்னுரை தந்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் சுஜா.

அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிரிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது என்று ஜெயமோகன் 'எளிமையெனும் எனும் விடுதலை' எனும் தலைப்பில் வாழ்த்துரை தந்திருக்கின்றார்.

கேள்

கல்லிடம் கேள் 

எவ்வளவு காத்திருந்து 

ரத்தினமாகியதென

நீர்த்துளியிடம் விசாரி 

எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 

உதடுகள் இருந்திருந்தால் 

அவை சொல்லியிருக்கும்:

அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்

என்று ஆம். ரத்தினமாவதற்கும் முத்தாவதற்கும் எவ்வளவு காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று உதடுகள் இருந்தால் சொல்லியிருக்கும் என்று சொன்ன அவர், அன்போடு ஒரு கை தொடும் அந்த நேரமே அவை நிகழ்ந்து விடும் என்று வாஞ்சையுடன் வருடி விடுகிறார்.

ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன உதடுகளுடன் 

எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா? 

புல்லாங்குழல் பாடுகிறது

மூங்கிலில் துளையிட்டு புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். அந்த மூங்கிலில்  துளை இடுவதென்பது ஒரு தனி கலை.  தேர்ந்த மூங்கில் எடுத்து அதில் லாவகமாக துளையிட்டு புல்லாங்குழலாக்குவர். இத்தகைய காயங்களை தாங்கிய அது நம்முடைய உதடுகளுடன் எப்போதும் வசிக்க முடியுமா? அந்த வலியினைத் துறந்து ஆனந்தமாக பாடுகிறது புல்லாங்குழல் என்கிறார். வலியையும் ஆனந்தத்தையும் ஒரு சேர கூறுவதில் வீரான்குட்டி நம்மை ஆள்கிறார்.

பிடியில்

உறைந்து கட்டியாகிய 

தண்ணீரில் இருந்த 

மீன்குட்டியை 

சூரியன் வந்து திறந்துவிட்டது. 

திரும்பிப் போகையில் 

தண்ணீர் சூரியனோடு போய்விட்டது 

இனி அந்தக் குட்டியை 

யார் கவனிப்பார்?

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால் என்பார் வைரமுத்து. இங்கே உறைந்து கட்டியாக இருக்கின்ற தண்ணீரின் உள்ளே உறைந்த மீன் குட்டியை சூரியக்கதிர்கள் விலக்கி அதனை நீந்த விடுகிறது. சூரியன் தன் கடமையை முடித்து திரும்பிப் போகையில் அந்த தண்ணீர் வெம்மையை இழந்து மீண்டும் குளுமைக்கு மாறி விடுகிறது. இப்போது மீண்டும் மறைந்து போன அந்த மீன்குட்டியை யார் கவனிப்பார்? என்று கவலை கொள்ள வைக்கிறார். இது அழகியலோடு இணைந்த நுட்பமான படிமம் சார்ந்த கவிதை.

வீணாக 

சுயரூபம் 

நீட்டியும் 

குறுக்கியும் ஆடும் 

நிழலின் 

விளையாட்டை 

அற்பமாக 

நினைக்க வேண்டாம் 

எப்போதும் 

ஒருவனின் 

கீழேயே 

இருக்க வேண்டி வந்ததன் துக்கத்தை 

மறப்பதற்கு 

அது 

முயற்சி செய்து கொண்டிருக்கலாம்

வெயிலில் நாம் போகும் போது. நம் நிழல், நம் அசைவிற்கேற்ப நீண்டும், குறுகியும், ஆடி அசைந்தும் போவதுண்டு. அந்த நிழலை கண்ணுற்றவர் எப்போதும் தமக்கு கீழேயே அது இருக்கிறதே என்று ஏங்கி அதன் துக்கத்தை நீக்குவதற்காக அது முயற்சி செய்கிறது என்று தேற்றுகிறார். இது ஒரு படிம நிலைக் கவிதை. மனித வாழ்வியலோடு இதனை பொருத்திப் பார்த்தால் எப்போதுமே நாம் கீழே இருக்க வேண்டிய நிலையிலேயே இருப்போமோ என்பதை துறந்து முயற்சி செய்தால் மீண்டு வரலாம்  என்ற தன்னம்பிக்கையைப் பேசுவதாக அமைகிறது.

ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்து கொண்டு 

பூமியின் எல்லா மரங்களிலும் 

எத்தனை இலைகள் என்று 

எண்ணத் தொடங்குகிறோம் 

இலைகள் எவ்விதத்திலும் 

ஒத்துழைப்பதில்லை

அவற்றிற்கு அதொன்றும் 

முக்கியமில்லை. 

ஒவ்வோர் இலையும் 

அதனதன் அதீத தனிமையில்

உதிரும் போதுதான் 

நாமதைத் தெரிந்து கொள்கிறோம் 

அவ்வளவு தான்.

பூமியினுடைய எல்லாம் மரங்களிலும் உள்ள இலைகளையும் எண்ணத் தொடங்குவதென்பது அத்தனை எளிதல்ல. அதேபோல வீழும் ஒவ்வொரு இலையும் அதனதன் தனிமையைச் சுமந்து கொண்டு விழுகின்றன என்ததத்  தெரிந்து கொண்டாலே போதும், அந்த வலியை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும்.

உங்கள் கடைசி கோடாரிக்கு அப்புறமும் எங்கள் முதல் இலை உதிராமல் தான் இருக்கும் என்று நிறைவு செய்திருக்கும் 'எங்கள் முதல் இலை' என்னும் கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

***

வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

***

Share:

பெண்மை எனும் பேரெழில் - கடலூர் சீனு

அண்மையில் நீலி இதழில் அவர் எழுதிய சீமோன் வெயில், ஹன்னா அரெண்ட் போன்ற ஆளுமைகள் வரலாற்றில் திரண்டு வந்த விதம், அவர்களின் தத்துவார்த்த நோக்கு, சாராம்ச தேடல் குறித்த கட்டுரைகள் சார்ந்து எழுத்தாளர் சைதன்யா வசம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் முடிவில் பெண்ணிய நோக்கு சார்ந்த பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையில் பெண்ணை பெண் என்று வரையறை செய்தாலே வரையறைகளை எதிர்க்கும் கோட்பாட்டாளர்கள் எவ்விதம் பாய்ந்து வந்து எப்படி அப்படியெல்லாம் வரையறை செய்யலாம்? யார் வரையறை செய்வது? எந்த ஆதிக்கத்தின் கருவி அந்த வரையறை என்றெல்லாம் கேட்டு கொந்தளிக்கிறார்கள் என்பதை சொன்னார். 

பெண் என்ற வரையறை இல்லாமல் பெண் குறித்த விஷயங்களை எப்படிப் பேசுவார்களாம்? சுவாரஸ்யம் உந்த க்ரோம் உதவியுடன் தங்கீலிஷ்ல் மாற்றி இன்றைய பெண்ணிய அயல்நில உரையாடல்கள் சிலவற்றை கொட்டாவிகளுக்கு இடையே வாசித்தேன். பெண் என்று வரையறை செய்வதில் இருந்தே  ______ மீதான முதல் ஆதிக்கம் துவங்குதாக அந்த அந்தர கோஷ்டியின் வாதம் துவங்கி முன்னே செல்கிறது. இந்த அந்தர கோஷ்டிக்கு ஒரு செயல்திட்டம் இருப்பதை, அவர்களின் உரையாடல்கள் துவங்கிய புள்ளி எது என்று பின்னால் சென்று தேடும்போது புரிந்தது.

2000 களுக்கு பிறகு பெருகிய நுகர்வு பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக ஆதரவாகவும், அந்த பொருளாதார அமைப்புக்கு எதிராக இருக்கும் எதையும் அதன் கருத்தியல் அடித்தளத்தை உடைக்கும் வண்ணம் செயல்படுவது இந்த அந்தர கோஷ்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று.

இரண்டு உலக போர்களுக்குப் பிறகு இயந்திரமாக்கலுக்கு எதிரான பார்வையாக எமர்சன் தோரோ என பல்வேறு ஆளுமைகள் வழியே இயற்கை குறித்த உயிர்ச்சூழல் நோக்கு உலகு தழுவி வலுப்பெற்று விரிந்தது. அதன் பல்வேறு விளைவுகளில் ஒன்றாக ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் எனும் சூழலியல் அழிவு சார் விழிப்புணர்வு நூல் எழுந்தது. இதன் சம காலத்துடன் அமெரிக்க பிரெஞ்ச் நிலங்களில் பெண்ணிய சிந்தனைகளும் வலுப்பெற்றன. 

1975 இல் பிரான்ஸை சேர்ந்த Francoise d'Eaubonne  (இணையத்தில் கிடைக்கும் இவர் வாழ்க்கை குறிப்பு சுவாரஸ்யம் மிக்கது) பெண்ணியத்தையும் சூழலியலையும் கோட்பாட்டு ரீதியாக இணைத்து எக்கோஃ பெமினிசம் என்ற அடிப்படையை உருவாக்கினார்.  (இந்தியாவில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து பெண்கள் போராடிய சிட்கோ இயக்கம் துவங்கி, நர்மதை நதிஅணை திட்ட போராட்ட ஆளுமை மேத்தா பட்கர் வரை இங்கே அத்தகு வரையரைக்குள் வரும் வரிசை ஒன்று உண்டு. இந்தியாவில் மரங்கள் நதிகள் எல்லாமே பெண்மை என்று இந்திய ஆழ் மனதில் பதிந்த அந்த நிலையின் வெளிப்பாடே மேத்தா பட்கர் போன்ற ஆளுமைகள் பெற்ற வெற்றி என்பதை அறிவோம்). இந்த எக்கோ ஃபெமினிசம் எனும் சட்டகத்துக்குள் இன்றுவரை உலக புகழ் பெற்ற போலிகள் பலர் செயல்பட்டாலும், உண்மையும் திவிரமும் கொண்ட ஆளுமைகளால் இந்த கருத்தாக்கம் கொண்ட செயல் வடிவம் ஒரு கால் நூற்றாண்டு உலகு முழுதும் சீரிய பல ஆக்கப்பூர்வ விளைவுகளை உருவாக்கவே செய்தது.

2000 கு பிறகான நுகர்வு பொருளாதாரம் இந்த சூழலியல் அழிவு எதிர்ப்பாளர் தடையை உடைக்க சமூக ஊடகங்களையும்,  பல்கலைக்கழகங்கள் வழியே உருவாக்கிய, உள்ளுறையாக மெய்யான  தத்துவச் சிக்கல் ஏதும் இல்லாத போலி கோட்பாடுகளையும், அதைப் பரவச் செய்யும் வெற்று ஆளுமைகளையும் உற்பத்தி செய்து எல்லா தளங்களிலும் உலவ விட்டது. அவர்களின் முதல் இலக்கு எக்கோஃபெமினிசம் என்பதன் ஒவ்வொரு கருத்தியல் அடித்தளத்தையும் உடைப்பது. பெண் என்று துவங்கினால், இந்த வரையரையில் இருந்தே ஆதிக்கம் துவங்குகிறது  என்பார்கள். அங்கிருந்து பிறன், ஆண்மைய்ய நோக்கு, சுரண்டல், ஆதிக்கம், அதிகாரம் என்றெல்லாம் விரித்து கொண்டே செல்வார்கள். பெண்ணும் இயற்கையும் என்று துவங்கினால், மேற்கண்ட வரிசையின் படி இயற்கைக்கு பால் பேதம் கற்பிக்கும் இந்த வரையரையில் இருந்து, பெண் என்ற வரையறை வழியே ஆதிக்கம் கொண்டு அவளை கீழாக ஆக்குவதை போலவே அவளை உயர்வு நவிற்சி வழியே வரையறை செய்வதும் இன்னொரு வகை ஆதிக்கமே என்றெல்லாம் துவங்கி களமாடுவார்கள்.

இப்படி வாசித்து செல்கையில் அத்தகு அந்தர கோஷ்டி ஒன்றின் வசைபாடல் வழியாகவே அப்படி வசைமழையில் நனைந்த பல கவிதைகளில் ஒன்றாக ஒக்டோவியா ப்பாஸ் ஸ்பானிஷ் இல் எழுதி, அதை மர்ரியல் ருக்கிசர் ஆங்கிலத்தில் 

இன் ஹர் ஸ்பிலண்டர் ஐலாண்டட் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருந்த கீழ்கண்ட அழகிய கவிதையை கண்டடைந்தேன்.

IN HER SPLENDOR ISLANDED

Spanish poem

By

OCTAVIO PAZ

translated by 

MURIEL RUKEYSER

அவளது பேரெழில் தீவுத்தொகையில்

அவளது பேரெழில் தீவுத்தொகையில்


இந்தப் பெண் வசீகரிக்கும் ஆபரணம் போலும்

சுடர்கிறாள்.


உறங்குமோர் அச்சுறுத்தும் படையணி.


இவ்விரனுள் இப்பெண் 

மூடிய கண்களின் கீழ் தெளிந்த நீர் போலும்

படுத்திருக்கிறாள்

மர நிழலில்.


எழுவிசை அருவியொன்று ஸ்தம்பித்து நிற்கிறது

தனது  பாதி வழியில்.



பாய்விசை  நதியொன்று.

சட்டென உறைந்து விட்டது பெரும் வழுகுப்பாறையொன்றின்  அடியில்.


மலையடிவாரத்தில் சித்திரைமாதப் பொய்கை போலும் அவள் படுத்திருக்கிறாள்.



பாப்லரும் 

தைல இலைகளும் பிணைந்ததவளது அடியாழம்


மீன்களோ விண்மீன்களோ எரிகின்றன

அவளது தொடைகளுக்கு இடையே.



பறவைகளின் நிழல்

அவள் பகம் மறைக்கும்

அரிதாக.


அமைதியான வானின் கீழ் அசைவிலா  சிறுகுடிகள்

அவளிரு கொங்கைகள்.


இப்பெண் இங்கே படுத்திருக்கிறாள் 

ஒரு வெண்கல் போல.

நிலவின் 

துஞ்சிய எரிமலைவாய் 

நீர் போல.


எவ்வொலியுமில்லா இரவில்


பாசியோ மணலோ அல்ல

நீரின் செவியில்

தசையின் செவியில்

மெல்ல மொக்கவிழ்வது

எனது சொற்கள் மட்டுமே.


விரைவற்று ஓடும்

தெளிந்த நினைவாக

இங்கே மீள்கிறது இந்த எரியும் தருணம் 


தன்னில் தான்மூழ்கி


ஒருபோதும் நுகராது...

உலகின் மிகப் பழமையான, வேட்டைச் சமூக மானுடம் கொண்ட சிலையான வீனஸ் ஆஃப் வில்யுன்ட்ராஃப் சிலைக்கு வயது 32 000. தனங்களும் புட்டங்களும் தொடைகளும் பண்டியும் பல மடங்கு பெருத்த, முகமற்ற சிலை. தொடர் பிறவி அளிக்கும் மரணமின்மையின் குறியீடு. குன்றா வளம் என்பதன் குறியீடு. கொல்லப்பட்டும், கொன்று புசித்தும் வாழும் ஆதி மானுட வேட்டைச் சமூகம் ஒன்று, தொடர் பிறவி அளிக்கும் ஒருவளை கூட்டு உள்ளுணர்வால் இயற்கையின் மையப் பகுதியாக ஆற்றலின் வடிவமாகக் கண்டு வணங்கியது என்பது எத்தகையதொரு ஆத்மீக பரிணாம வளர்ச்சி. அதை ஆணாதிக்க சதி என்று மட்டுமே புரிந்து கொள்வோர் எத்தகு பேதையர்.

X X எனும் ஆதிப் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் X Y எனும் ஆண் மரபணு. அது Y அல்ல இரண்டு கால்களில் ஒன்று இல்லாத X தான் அது. மானுட குலம் என்பது X X எனும் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் என்று கூறுகிறது மரபணுவியல். அதாவது மனித குலத்துக்குத் தந்தை உண்டா? அது யார்? தெரியாது. ஆனால் தாய் நிச்சயம் உண்டு அவள் யார் என்றும் தெரியும் இது மரபணுவியல் உண்மை. இந்த உண்மையை அறிந்த இன்றைய மானுடனுக்கும் 32000 வருடத்துக்கு முந்திய ஆதி மானுடனுக்கும் இடையே சாராம்சத்தில் வேறுபாடு என்றோ தொலைவு என்றோ  ஏதும் உண்டா என்ன?

விந்தணுவை ஆண் என்றும் அண்டத்தை பெண் என்றும் கொண்டால், பலநூறு விந்தணுக்களின் இடையே போட்டியிட்டு முன்னேறி மண்டையால் முட்டி அண்டத்தை பிளந்து உள்ளே நுழையும் ஒன்றே பிறந்து நிற்கும் மனித உயிர் என்ற இதுகாறும் நிலைபெற்றிருந்த உடற்கூறு அறிவியல் முடிவு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. அண்டம் ( கருணை கொண்டு ?!!) தன்னுள்  அனுமதிக்கும் விந்தணுவே உலகுக்கு வரும் மனிதவுயிர் என்ற நிலை நோக்கி அந்த முடிவு மாறிக்கொண்டிருக்கிறது. 

( உண்மையாக இருக்கவே வாய்ப்பு மிகுதி. இல்லையேல் உடல் முதல் அறிவு வரை அனைத்திலும் சோப்ளாங்கியான நான் இப் பூவுலகில் வந்துதிக்க  வேறு காரணம் இருக்க வாய்ப்பு இல்லை)

ஆதி மானுடமும் அறிவியலும் கண்ட இவற்றை கவிஞன் தனது கனவு கொண்டு சென்று தொட்டுவிட மாட்டானா என்ன? ப்பாஸ் அத்தகு கவிஞர்களுள் ஒருவர். ஒக்கடாவியோ ப்பாஸின் சில கவிதைகள் இந்தியத் தன்மை கொண்டவை அத்தகு இந்தியத் தன்மை கொண்ட கவிதைகளில் ஒன்று இது. பெண்ணை பெண்மை எனும் கடலில் ஒரு துளி என காண்பது. பெண்மையை ஆற்றல் எனும் கடலில் ஒரு துளி என காண்பது. அந்த ஆற்றலை இயற்கையின் பகைப்புலத்தில் வைத்து காண்பது என இக்கவிதை கொண்ட  அனைத்துமே இந்திய ஆத்மீகத்தின் சாக்த தரிசன மரபுக்கு மிக அணுக்கமானது.

ஜெயமோகன் வாசகர் எவரும் கொற்றவை நாவலில் கோவலன் கண்ணகியை நீங்கும் தருணம் மீதான சித்தரிப்பு போல, ஜெயமோகன் புனைவுலகின் பல்வேறு தருணங்களுடன் இக் கவிதை இணைந்து அதன் கற்பனை அர்த்த சாத்தியங்கள் விரிவதை உடனடியாகவே அறிய முடியும்.

இக் கவிதையை வாசகனுக்குள் அனுபவ விரிவாக்கமாக மாற்றும் இதன் ஆன்மாவை விளக்குவதும் விவாதிப்பதும் விவேகமன்று. மாறாக இக் கவிதை கொண்ட உடலையும் அழகையும் சற்றேனும் அணுகி உரையாடினால், இக்கவிதையின் உடல் 

ஆண் × பெண்

நீர் × நிலம்

நீர் × நெருப்பு

வானம் × பூமி

மலை × மடு

உயரம் × ஆழம்

பாசி × மணல்

ஆற்றல் × நிலைத்ததன்மை

பிரம்மாண்டம் × தன்னிலை

என பல்வேறு எதிரிடைகளால் கட்டப்பட்டிருப்பதை காணலாம்.

இதன் அழகு என்பது முதன்மையாக இதன் உவமைகளில் வர்ணனைகளில் இலங்குகிறது. 

கண்வளரும் அந்தப் பெண் சுற்றிலும் நீர் சூழ்ந்து பிற நிலங்களுடன் தொடர்பு இல்லாத தீவுத் தொகை போல இருக்கிறாள். தீவுத் தொகை என்பது மைய்யத்தில் ஒரு பெரிய தீவும், சுற்றிலும் சிறிய தீவுகளும் கொண்ட நில அமைப்பு. அதில் சுடரும் ஒரு வசீகர ஆபரணம் போல அவள் இருக்கிறாள்.

மூடிய இமைகளின் கீழ் உறையும் நீர்மை போல படுத்திருக்கிறாள். அச்சம் விளைவிக்கும் ராணுவ ஆற்றல் ஒன்று இப்போது ஓய்வில் இருப்பது போல படுத்திருக்கிறாள்.

கணத்தில் உறைந்து விட்ட வீழும் அருவியின், பாயும் நதியின் ஆற்றலின் தூல வடிவம் போலும் படுத்திருக்கிறாள்.

(கவிதை நிகழ்ந்த நிலம் சார்ந்து) ஏப்ரல் மாதம் எனில் உறைபனி காலம் முடிந்து விட்ட, அடுத்த பருவம் மெல்ல மெல்ல துவங்கும் நிலையில் உள்ள மலையடிவார பொய்கை நீர் போல அவள் படுத்திருக்கிறாள்.

அமைதியான வானின் கீழ் தூரத்தில் இருந்து பார்க்க அசைவே இல்லாதது என தோன்றும் இரண்டு மலை கிராமங்கள் போல அவள் கொங்கைகள். அவள் நிர்வாண இடைக் கரவை மறைக்கும் எப்போதேனும் மேலே கடந்து செல்லும் பறவைகளின் நிழல்

பாப்லர் மர இலைகள் முதுமையின் அல்லது விடை பெறுதலின் குறியீடு. தைல மர இலைகள் மருத்துவத்தின் உயிர்தெழுதலின் குறியீடு. இவை முயங்கியது அவள் கொண்ட ஆழம்.

கடலடியில் மனிதன் அறிய இயன்ற அளவு ஆழத்தில் இருளில் சுடரும் மீன்கள் உண்டு. வானத்தில் மனிதன் அறிய இயன்ற அளவு உயரத்தில் தூரத்தில் சுடரும் விண் மீன்கள் உண்டு. இத்தகு பிரம்மாண்டம் அவள் இடைக்கரவில் அடக்கம்.

இத்தகையவள் ஒரு சிறிய வெள்ளைக் கூழாங்கல் போல படுத்திருக்கிறாள்

இத்தனைக்கும் பிறகு அவள் நிலாப் பரப்பில், ஓய்ந்த எரிமலை வாயில் நிறைந்து நிற்கும் நீர் போல இருக்கிறாள். 

எளிய தன்னிலை ஒன்றால் நுகர முடியாத இத்தகைய பிரம்மாண்டமான ஒருவளை குறித்து மீளும் எரியும் நினைவுகள் மீதான கவிதை.

இந்த கவிதை கொண்ட மிக முக்கிய எதிரிடைகளில் ஒன்று இயற்கை அனுபவம் × நுகரும் அனுபவம் எனும் எதிரிடை. இயற்கை அனுபவம் மற்றும் நுகரும் அனுபவம் இவற்றுக்கு இடையேயான பேதம் என்ன? 

இயற்கை அனுபவம் ஐம்புலன்கள் வழியே ஒவ்வொரு கணமும் நிறைவது. அந்த அனுபவத்தின் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோமே அன்றி நமது கட்டிருப்பாட்டில் அந்த அனுபவம் இல்லை. அந்த அனுபவத்தில் நமது தேர்வு என்று எதையும் செய்ய முடியாது. அதில் எதையும் சேர்க்கவோ கழிக்கவோ முடியாது. 

நுகர்ச்சி அனுபவத்தில் அந்த அனுபவத்துக்கு நாம்தான் எஜமானன். அந்த அனுபவத்தை தேர்ந்தெடுக்க முடியும். நமக்கு தேவையான விஷயங்களை சேர்க்கவும் தேவயற்றத்தை நீக்கவும் முடியும். மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ள முடியும். தேவையான போது வெளியேறவும் முடியும்.

பெண் அவள் இயல்பில் யாரோ அந்த இயற்கை இயல்பில் அவளை தரிசித்து, ஆனால் நுகர்வு அனுபவம் வழியாக மட்டுமே அனுபவித்து வாழ அறிந்த ஒரு தன்னிலை இயலாமைப் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி நிற்கும் உணர்வுநிலை மீதான தனித்துவமான கவிதை. 

இந்த வானம், பூமி, நிலா, காற்று எல்லாமே உன்னுடையதுதான் உன்னுடைய தலை கை கால்கள் சுவாசம் உடல் அளவுக்கே உன்னுடையது. எல்லாம் நீ அனுபவிக்கவே. ஆனால் இது எதுவும் நீ 'நுகர்வதற்கான' உன்னுடைய 'உடமை'யல்ல. காரணம் இவை எவற்றில் இருந்தும் பிரிந்து தனியாக நீ இல்லை. அப்படி தனியாக நான் இல்லை என்பதை அறிந்து, இயற்கையை 'நுகராமல்' மாறாக இயற்கையை 'அறிந்து உணரும்' அனுபவிக்கும் நிலையை புஞ்சிதா எனும் சொல்லால் குறிக்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.

அந்த புஞ்சிதா எனும் நிலையை அறியாத, ஆனால் இயற்கையின் சக்தி தரிசனத்தை கண்டு திகைத்து, நுகர்வதன்றி தன்னிடம் வேறு கருவிகள் இல்லாத தன்னிலை ஒன்று பெருமூச்சுடன் சொல்லும் சொற்களில் எழுந்த அழகிய கவிதை ப்பாஸின் மேற்கண்ட கவிதை.

(பின்குறிப்பு: கவிதையின் தமிழ் மொழியாக்கம் கடலூர் சீனுவாகிய என்னுடையது. ஸ்பானிஷ் இல் இருந்து இந்தக் கவிதை கவிதையாகவே அங்கிலத்துக்கு வர எந்த அளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டதோ அதே அளவு சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதை இது. 'சுதந்திரமான'  மொழியாக்கம்தானேயன்றி 'பிழையான' மொழியாக்கம் அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.

பாப்லர் என்பதற்கு தமிழ் இல்லை.

வழுகு எனில் வழவழப்பான மேற்பரப்பு என்று பொருள்.)


பகம் எனில் பெண் ஜனனஸ்தானம். சொல் உபயம் திரு நாஞ்சில் நாடன்.

***

Share:
Powered by Blogger.

இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive