பொருளின் பொருள் கவிதை - மா. அரங்கநாதன்

குறியீடுகளையும், படிமங்களையும் படைப்பதில் சில பல அசெளகர்யங்கள் தோன்றலாம். தன்னோடு எந்தவிதத் தகராறையும் வைத்துக் கொள்ளாத காரணத்தால் மலையும், கடலும், மலரும் கவிஞனின் செல்லக் குழந்தைகளாக ஆகிவிடுதல் வியப்பில்லாத சங்கதி.

கவிதையின் மரபு கவிதை அம்சம்தான். அதை மீறிவிட்டால் கம்பனும் கவிஞன் ஆகிவிடமாட்டான். கவிதை அம்சத்தை மீறி என்ன மரபைக் காணமுடியும்? கவிதை அம்சத்தை மீறிய ஒன்று எந்த நாளிலும் கவிதையாகிவிட முடியாது.

உரைநடை சம்பந்தமட்டில் மொழியின் உள்ளேயே தங்கிவிடுகிற நாம் கவிதையில் மொழியைவிட்டு வேறு பாதையில் ஆர்வத்துடன் ஓடுகிறோம் அல்லது ஓட்டப்படுகிறோம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது. 

மலரைப் பார்த்தபின் கவிஞன் அழகை உணரவில்லை. ஏற்கனவே உணர்ந்த ஒன்று அவனுக்கு காட்சி நிலையாக மலர் மூலம் வெளிப்படுகிறது. கவிஞனின் உணர்வுக்கு மலர் என்ன செய்யும்? 'அவன்' அழகாக இருந்த காரணத்திற்காக அவனுக்கு மலர் அழகாகத் தெரிந்தது.

உலகவியல் எல்லாமே காலத்தால் மாறி வருபவை. இன்றைய அறிவு நாளைய முட்டாள்தனமாகக் கருதப்படலாம். நல்லவை கெடுதலாகலாம். ஒரு மிருகத்தை வேட்டையாட வேண்டிய திறமை பெற்றவனைப் "புத்திசாலி" என கருதிய அன்றைய காலம் இன்று இல்லை. அறிவு சார்ந்த ஒன்று கவிதையின் இடத்தை என்றும் பிடித்துவிட முடியாது. கவிதையைப் பொறுத்தவரை கருத்து ஒரு பக்க வாத்தியமே.

படைப்பாளியின் வாழ்வுதான் படைப்பு. வாழ்வை அவன் எவ்வாறு எடுத்துக் கொண்டானோ அதைத்தான் நாம் முடிவாகக் காணமுடியும். 

கவிஞன் ஒருவனுக்குக் "கவிதை" பற்றித் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கவிதை பற்றிய திறனாய்வு செய்த யாரும் கவிஞர்களாக இருக்க வேண்டியதும் இல்லை.

கவிதை நமக்கு இன்னொரு மொழி.

என்ன சொன்னான் என்பது கவிஞனின் பார்வையைப் பொறுத்தவரைச் சாதாரண விஷயம். கவிஞன் என்ன சொன்னான் என்பதைவிட 'ஏன் சொன்னான்' என்று கேட்பது கொஞ்சம் ஆழமானது. 

"கவிதையம்சம்" குறித்து விளக்கம் கேட்டால் "தெரியாது" என்று சொல்லும் முதல் ஆள் கவிஞன் தான். 

கருத்துப் பரிமாற்றம் என்ற சாதாரண வேலையைச் செய்ய கவிதை தேவை இல்லை. அவ்விதம் பயன்படுவதும் கவிதையாகாது.

விண்வெளிக் கலத்தைப் பற்றிய விளக்கம் தருகிற புதுமைக் கவிதையைவிட எந்த விளக்கத்தையும் தராது குறிஞ்சி மலரையும் அன்னப் பறவையையும் எண்ணங்கள் எதுவும் இல்லாது பார்த்துவிட்ட பழங்கால வெண்பாக்கள் மேல்.

எண்ணக் கட்டுப்பாடின்றி எவன் தனி மனிதனாக இருக்கிறானோ, அவன் தான் ஓர் இயக்கமாக இருக்க முடியும். கவிஞன் அப்படிப்பட்டவன்.

ஒரு கவிதையில் குழந்தையின் அழுகையை மட்டும் கேட்டு விட்டாலே போதும். அழுகையின் காரணம்- அழுகையை எவ்வாறு நிறுத்துவது, எவ்வாறு நிறுத்தப்பட்டது என்பனவெல்லாம் உரையாடல்தாம்.

உண்மையோடு உறவு வைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்டதில்லை.

பாரதிக்கு நாட்டு விடுதலை பற்றி முன்பே தெரிந்துதான் கவிதை பண்ணியிருக்கிறார் என்றால் அது அவரது அரசியல் அறிவைக் குறிக்கும். அரசியலில் அவரைவிட முதியோரும் சிறந்தோரும் அப்போது இருந்தனர். அவர்களிடமிருந்து பெற முடியாத அரசியல் தீர்க்கதரிசனத்தையா பாரதியிடம் நாடவேண்டும்? அவர்களை நாம் கவிஞர் எனக் கூறுவது கிடையாது.

பாரதி கவிதைகளில் நாம் பயன்படுத்திக்கொண்ட சீற்றத்தையும் எக்களிப்பையும் விளக்க முடியாமல்தான் அவரது அரசியல் அறிவையும் தீர்க்கதரிசனத்தையும் கூறி ஒதுங்கி விடுகிறோம்.

கவிதையில் நோக்கம் எதுவும் இருப்பதில்லை. கவிதையில் நோக்கம் என்ற ஒன்று இருந்திருந்தால் - அது நிறைவேறியவுடன் கவிதை அழிந்திருக்கும். 

உலகில் பசிப்பிணியில்லாத நிலை ஏற்பட்டுவிட்டால் பொருளாதார சம்பந்தமான நூல்கள் அனைத்தும் வேண்டாதவை ஆகிவிடலாம். அந்நிலையிலும் "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக" என்ற வள்ளுவனின் கவிதை ஒரு கண நேரம் நம்மை அயரவைத்துவிடும். இத்தனைக்கும் பசிப்பிணி அகல செய்ய வேண்டியவை குறித்து அக்கவிதை எதுவும் சொல்லவில்லை.

கவிதையின் பயன் அல்லது கலைகளின் பயன் என்னவென்ற கேள்விக்கு வாழ்க்கையின் பயன் என்னவென்ற கேள்விதான் பதில்.

அழகு பொருந்தியது கவிதை என்று சொல்லிக்கொண்டே 'அழகு' என்றால் என்னவென்ற மிக முக்கியமானதும் நுண்ணியதுமான விஷயத்தை நாம் கவிதை விமர்சனங்களில் கோட்டை விட்டுவிடுகிறோம்.

கவிதையம்சம் என்பதிலே காரணம் எதுவும் கிடையாது.

ஒரு குறிப்பிட்ட இசைக் கருவியில் பயிற்சி பெற்ற ஒருவன் வேறொரு கருவியில் இசை மீட்ட முடியாதவனாகிறான். பண் என்னவோ ஒன்றுதான். மரபுக் கவிதையென்றும் புதுக் கவிதையென்றும் சொல்லப்படும் படைப்புகளுக்கும் இதே நிலைதான். இரண்டிலும் கவிதையம்சம் மாறுபடுவதில்லை.

எத்தனை காரணங்களால் ஒன்று கவிதை இல்லை என்று தெரிந்து கொள்கிறோமோ அத்தனைத்தூரம் நாம் கவிதையுடன் நெருங்கி விடுகிறோம்.

இறைவனே நமது மொழியில் கவிதை இயற்றியுள்ளான் என மகிழ்கிறோம். இறைவனே வந்து கவிதை யாத்தான் என்ற எண்ணம் கவிதையம்சத்தின் தோற்றமாகும்.

அந்தி வந்தடைந்த தாயையும் கன்றையும் காட்டும் கம்பன் வரிகளிலிருந்து தாய் சேய் அன்பை நீங்கள் கண்டு கொண்டாலோ, அல்லது சீவராசிகளின் அன்பை உணர்ந்து கொண்டாலோ நாம் கம்பன் கண்ட காட்சியை - அமைதியை அடையத் தடையிராது. மேற்படி வரிகளை ஆராய்ந்து கம்பன் வாழ்ந்த இடத்தில் எருமை மாடுகள் இருந்தன என்ற வரலாற்று உண்மையை கண்டுபிடித்து அதுதான் அந்தக் கவிதையின் சிறப்பு என்று கவியரங்கம் நடத்தாமலிருந்தால் போதும்.

***

மா. அரங்கநாதன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

தியானம்: ஐந்து கவிதைகள் - கடலூர் சீனு

மானுடம் கண்ட மகத்தான கவிதைகளில் ஒன்று, ரிக் வேதத்தின் ஸ்ருஷ்டி கீதம். நான்காயிரம் வருடம் கடந்தும் புதுமையும் தீவிரமும் குன்றாத அக்கவிதையை எழுதியது ஒரு ரிஷி, முனி, ஞானி. அங்கே துவங்கி பல உபநிஷத் கவிதைகள், கீதை தந்த கிருஷ்ணன், பாரதம் தந்த வியாசன், வால்மீகி, சங்கரர், தமிழ் நிலத்தின் சைவ வைணவ பக்தி இயக்க ஆளுமைகள் துவங்கி குணங்குடி மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை மகத்தான கவிதைகள் தந்த பலர் அடிப்படையில் ஞானியரும் கூட. 

பாரதியில் துவங்கும் நவீன கவிதை மரபின் வரிசையில் மகத்தான கவிதை எழுதிய பலர், அத்தகு கவிதை எழுதும் அந்த உச்ச கணத்தில், அந்த ஒரே ஒரு கணம் படைப்பாளி என்ற நிலையிலிருந்தும் மேலெழுந்து ஞானிகள் கொண்ட அனுபூதி நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். பாரதி முதல் பிரமீள் தொடர்ந்து தேவதேவன் வரை அது அவ்விதம்தான்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் கடலூர் சீனு ஆகிய நான் ஒரு ஞானி அல்ல. ஆனால் சில வருட யத்தனங்கள் வழியே வந்து சென்ற சிற்சில தியான அனுபவங்கள் அதன் சில நிலைகளை அறிந்தவன்.  அந்தப் பயணத்தில் நான் சந்திக்க நேர்ந்த சன்யாசிகளில் பெரும்பாலானோர் காவி கட்டி தாடி வளர்த்த ஞானியர் வார்த்தைகளை அந்த ஞானியர் போலவே பேசும் வெற்று ஆசாமிகள்.

அதே நிலைதான் நவீன  கவிதையிலும். இன்றுவரை தமிழில் எழுதப்படும்  நவீன கவிதைகளில்  கவிதைகளை நடிக்கும் போலி கவிதைகளே அதிகம். அதே பிரச்சனைதான் இத்தகு மெய்மை அனுபவம் தியான நிலைகளை சார்ந்து எழுதப்படும் கவிதைகளிலும் தொடர்கிறது. உதாரணத்துக்கு நகுலனின் கீழ்கண்ட கவிதை.


நான் ஒரு உடும்பு

நான் ஒரு கொக்கு

நான் ஒரு ஒன்றுமில்லை.


(நகுலன்)

யாருமில்லாத இடத்தில்

என்ன நடக்கிறது?

எல்லாமும்தான்.


எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்.

போன்ற எந்த ஆழமும் அற்ற அவரது எளிய எண்ண தெறிப்புகள் எல்லாம் மிகுந்த பரவசத்துடன் கொண்டாடப்பட்ட சூழலில் அவரது இந்த கவிதையும் அதே பரவசத்துடன் அனைவராலும் தூக்கி சுமக்கப் பட்டது. நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த புதிதில் நானும் இத்தகு கவிதைகளை   'ஐய்யோ மனுஷன் என்னமா சொல்லிப்புட்டாரு' என்று வியந்திருக்கிறேன்.

இந்த கவிதையில் முதல் வாசிப்பில் கிடைப்பது  'நான் 'ஒரு ஊர்வனவாக  இருந்து ஊர்ந்து, பறப்பனவாக எழுந்து பறந்து, ஒன்றுமில்லாமல் காணாமல் போவது. அடுத்த வாசிப்பில் உள்ள உடும்பு உறுதியை குறிக்கிறது. உறுதியான தவம். கொக்கு மிக மிக பொறுமையான காத்திருப்பை குறிக்கிறது. ஞானத்துக்கான காத்திருப்பு. ஞானம் தொடும் கணம் அந்த நான் ஒன்றுமில்லாமல் போகிறது. 

இந்த கவிதையில் உள்ள முதல் கோணல் இது எந்த நிலையிலும் அந்த கவிஞன் கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடு அல்ல என்பது. இரண்டாவது கோணல் இதில் உள்ள ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டு. அது முடிந்ததும் பிறகு என்ற கேள்விக்கு இந்த கவிதை வசம் எந்த பதிலும் இருக்காது. அது முன்னரே செத்து விட்டிருக்கும். மூன்றாவது இது கவிதை வடிவில் பூடகம் போல சொல்லப்பட்ட ஒரு மொழிக் குட்டிக்கரணம் மட்டுமே. இதை இன்று கூகிள் கூட எழுதும். 

தியானம் சார்ந்த, மெய்மை சார்ந்த தமிழின் நல்ல கவிதைகள் என்பது இத்தகு போலிகளை கடந்தே அடையவேண்டியது உள்ளது.


மெய்மை நிலை குறித்த கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று மரபார்ந்த பின்புலத்தில் தொல் படிமங்களை கையாள்வதன் வழியே பயணிப்பது. உதாரணம் பிரமிளின் தெற்கு வாசல் போன்ற கவிதைகள். இரண்டாவது வகை இத்தகு விஷயங்களை உதறி நேரடியாக அன்றாடத்திலிருந்து துவங்கி பேரியற்கை எனும் மனம் கடந்த அப்பால் நிலையை சுட்ட முயலும் கவிதைகள். உதாரணம் தேவ தேவன் கவிதைகள். இரண்டாவதன் உதாரணமாக ஒரு கவிதை.

புத்தகத்தை மூடு

விளக்கை அணை


உன் அறிதுயிலில் உணரப்படட்டும்


உன் மேஜையோரத்து

கொசுபத்தி போலவோ

ஊதுபத்தி போலவோ


இந்தப் பிரபஞ்சமெங்கும்

நிறைந்துகொண்டிருக்கும்


உறக்கமென்பதிறியா

விழிப்பொன்றின்

மாண்புகள்.


(தேவதேவன்)

சிறு வயதில் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று, ஒரு ஊதுபத்தியை ஏற்றிவைத்து அதன் மேல் ஒரு சிறிய கண்ணாடி காலி மீன் தொட்டியை கவிழ்த்து வைத்து, காற்று அசையாத அதற்குள் இழை போலும் மெல்ல மெல்ல ஊதுபத்தி புகை வியாபித்து நிறையும் காட்சியை அசையாது அமர்ந்து ரசிப்பது. எனக்குள்ளும் அந்த ஊதுபத்தி புகை போலும் ஏதோ ஒரு பரவசம் நிறையும்.

இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கொண்டிருக்கும் உறக்கம் என்பதை அறியா அந்த மாண்பிற்கு நம்  மேஜையோர ஊதுபத்தி புகையில் இருந்தே பாதை சமைக்கிறது இக்கவிதை. (புத்தகத்தை மூடு,) அறிவால் அல்ல, (விளக்கை அணை) புறக் கண்களால் அல்ல, அரிதுயில் கொள்ளும் உள்விழி அதைக்கொண்டே காண முடிந்த மாண்பு அது. 

வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து

ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது


மனவெளியும் நிலவொளியில் குளிர

செவிப்பறை சுயமாய் அதிர

மண்ணில் ஒருபோதும் கேட்டிராத ஓசை உவகைகள் எழும்பின 

பாஷை உருகி ஓடிற்று


ஒரு

சொல் மிச்சமில்லை


என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது


ஒரு கணம்தான்


மறு கணம்

லாரியின் இரைச்சல் 

எதிரே நாற்காலி.


(சுந்தர ராமசாமி.)



கண நேரம் அடையும் இந்த ஆத்மீக பரவசத்தை ஓஷோ சட்டோரி என குறிப்பிடுகிறார். அந்த ஒரே ஒரு கணத்துக்கு பிறகு அந்த மனிதன் வாழ்வில் பிறகு ஒருபோதும் இந்த அனுபவம் நிகழாமலேயே கூட போகலாம். இது காரண காரிய தொடர்பின் ஒரு பகுதி அல்ல என்பதே பிரதான காரணம்.

//என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது//

கவிதையை அதன் உயர் தளத்துக்கு எடுத்து செல்லும் வரிகள் இவை.

இவையெல்லாம் கவிக்கு எல்லாம் சரியாக இருந்ததால் நிகழ்ந்த ஒன்றல்ல. மூளையில் ஒரு மெல்லிய நரம்பு அறுந்ததால் அதாவது ஒரு சிறிய பிழை ஏற்பட்டதால் நிகழ்ந்த ஒன்று. இதுதான் இத்தகு நிலைகள் மீது சுந்தர ராமசாமியின் பார்வை. 

இந்த காலம் இடம் இருப்பு கடந்த அனுபவ மண்டல பரவசம் எல்லாமே ஒரே ஒரு கணம்தான். மறுகணம் லாரி ஓசை வழியே நிகழ் காலம் வந்து விட்டது, எதிரே இடம் வந்து விட்டது, நாற்காலி வழியே இருப்பு வந்து விட்டது. 

இதற்கு முன்பான அந்த கணம். மூளையில் ஏதோ ஒரு சிறிய நரம்பு அறுந்த அந்த ஒரே ஒரு கணம், அதுதான் வாழும் கணம்.


தியானத்தில்

ஒரு கவலை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது.


நாகம்

இறக்கி வைத்த விஷக்கல்.


நான் என் தியானத்தால்

அதை

உண்டு உண்டு

செரிக்க முயன்றேன்.


அது இன்னும் கடினமாகி

கடினமாகி

நெற்றி நடுவில்

நீலமாய்ப் பூரித்தது.


நான்

என் சிறிய கவலைகள் எல்லாம் தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும் பாம்புக்குட்டிகள் போல்

அதை நோக்கி நெளிந்து செல்வதைப் பார்த்தேன்.


அம்மா

நான் என்ன செய்வேன்.


புவிமேல்

நானொரு மாபெரும் கவலைத் துளி.

(போகன்)



தியான அனுபவங்களில், உள்ளே நூறு பௌர்ணமிகளின் ஒளி வெள்ளம் நிறைவது, செவிக்குள் இனிய ஒலிகள் கேட்பது, நெற்றிக்குள் நீலம் ஒளிர்வது இப்படி பல இனிய தடயங்கள் கிடைக்கும். இவை பற்றி பதஞ்சலி யோக சூத்திரங்கள் நிறைய பேசுகிறது. கூடவே தியான அனுபவம் என்பது அகம் உள்முகமாக இருளுக்கும் ஒளிக்குமாக ஊசலாடும், ஆனந்தத்துக்கும் துயரத்துக்குமாக அல்லாடும் நிலையையும் கொண்டது. 

இதில் தவறான முறையில் சாதகனின் குண்டலினி எழ நேர்ந்தால் அவனை பீதி கிளர்த்தும் சித்திரங்கள் வேறு துரத்தும். தகுந்த குரு இல்லையேல் இத்தகு விஷயங்களில் இருந்து மீளாது, ஒளியில் இருந்து தவறி இருளில் விழவே வாய்ப்பு மிகுதி. 

தியான சாதகன் மட்டுமே அடைய நேரும் மற்றும் ஒரு துயர் உண்டு. இந்த உயிர் இந்த பிரக்ஞை இந்த உடலால் எல்லைகட்டபட்டமை கொண்டே தவிர்க்க இயலாது. அதன் உள்ளுரயாக அமையும் துயர் அது. அதில் விழுந்தவனுக்கும் மீட்சி அரிதே. இத்தகு விஷயங்கள் மீதான கவிதை என மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்

பூந்தோட்ட மலர்களிலே 

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி


வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல் நோக்கிப் பறந்து


நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது


முதல் கணம்

உவர்த்த  சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.

(பிரமிள்)

உலகின் உயிர்ராசிகள் ஒவ்வொன்றும் அதற்கென வகுத்துவைத்த சூழல் வெளியில்தான் வாழ்கிறது. மனிதனை தவிர வேறு எவற்றாலும் இதை மீற முடியாது. அந்த வகையில் பட்டாம்பூச்சி கடலுக்கான உயிர்ராசி அல்ல. அது அங்கே போனதற்கு அதன் இயங்கு தளத்துக்கு மீறிய ஆற்றலே காரணம். சைவம் உள்ளிட்ட பல மரபுகளில் இதை இவ்விதம் செய்தால் ஞானம் எய்தி விட முடியும் எனும் நிலை என்பது கிடையாது. செய்ய வேண்டியதை செய்து விட்டு ' அவன் ' அருள் வேண்டி காத்திருக்க வேண்டியதுதான். நமது முயற்சி அல்ல, அவனது அருளே நாம் எய்தும் ஞானத்துக்கு மூலம். 

மேற்கண்ட கவிதையை, லெளகீகம் விட்டு தன் செயலாக அன்றி புற ஆற்றலால் ஆத்மீகத்துக்குள் சென்று விழும் ஒரு தன்னுணர்வு அடையும் அனுபவம் குறித்த கவிதையாகவும் வாசிக்கலாம்.

( எல்லா நல்ல கவிதைகளும் வாசிப்பவர் வாழ்வுப் பின்புலம், கலாச்சார வேர், ரசனைக் கோணம் சார்ந்து, பல்வேறு அர்த்த சாத்தியங்களை, கற்பனை சாத்தியங்களை அளிக்க வல்லவயே. எனவே என்னுடைய வாசிப்பு என்பது அந்த வரிசையில் ஒரு கோணம் மட்டுமே அன்றி இக் கவிதைகள் மீதான இறுதி வியாக்யானம் அல்ல)


***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மின்னற்பொழுதே தூரம் - சக்திவேல்

தேவதேவனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று, பின்வருமாறு தொடங்குகிறது.

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு


தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

கவிதை வாசிப்பவர்களுக்கு தெரியும், மேற்காணும் வரிகள் வாசகனின் கற்பனையின் வளத்துக்கும் வாழ்க்கையின் போக்குக்கும் ஏற்ப முடிவிலா விரியும் சாத்தியத்தை கொண்டவை என்று. அக்கவிதையின் விரிவடையும் சாத்தியத்தின் மைய அம்சம் ஒன்றுண்டு. அது அறிதலின் விந்தை. அறிவென்று இங்கு நம்மை சூழ்ந்து மாயம் காட்டும் ஒன்றின் வெளிப்பாட்டை தன் அலகால் அள்ளமுயலும் பறவையே அக்கவிதை என்று.

ஒரு நீருற்றைத் தேடி என்று தலைப்பிட்ட மனுஷ்யபுத்திரனின் பின்வரும் கவிதையை வாசித்த கணம் கல்பற்றா நாராயணனின் தொடுதிரை எனும்  கவிதை மனதில் உதித்தது. ஒரு நீருற்றைத் தேடி செல்பவன் தன் சின்னஞ்சிறு தாவரத்தின் வதங்களுக்கு வருந்துகிறான். எல்லாவற்றையும் சின்னஞ்சிறு தாவரமாக பார்ப்பதும் கடப்பாரைகளின் ஓசையுடன் மோதுவதும் இளமையின், தந்தைமையின் இயல்புகள். ஆனால் தொடுதிரையில் அப்பாவுக்கு கற்பிக்கும் ஒரு மகன் வருகிறான். நம் குழந்தைகள் நமக்கு கற்பிக்கையில் நாம் தந்தையில் இருந்து தாத்தாவாக பெருந்தந்தையாக மாற தொடங்குகிறோம். அங்கே நாம் கிணறு தோண்ட ஆட்களை கூட்டி வரும் வாலிபத்தில் இல்லை. வெறுமே பார்ப்பவராக ஒரு விலக்கத்தையும் அதனூடாக ஒரு கனிவையும் அடைகிறோம். 

எப்போதும் ஒரு கவிதை இன்னொரு கவிதையுடன் இணைவதும் நமக்கு பிடித்த கவிதை இன்னொருவருக்கு பிடிப்பதும் தேனீக்கள் தங்களுக்குள் ஆடிக்காட்டும் நடனத்தை போன்றதே. ஒரு நீருற்றைத் தேடி சென்றவன் நீரின் மேல் நடக்கும் ஏசுவை காணும் தருணம், தொடக்கத்தில் 

சொன்னதுபோல தேவதேவனின் வரிகளில் மின்னற்பொழுதேயான தூரம் அது.


ஒரு நீருற்றைத் தேடி


கிணறு தோண்ட ஆட்கள்

வந்து விட்டார்கள்


கணீரெனெ பூமியில் இறங்குகிறது

கடப்பாரையின் முதல் ஓசை


அருகே புதர்மறைவில்

அதிர்ந்து சீற்றத்துடன்

தலைதூக்கிய நாகம்

பதுங்கி மறைகிறது


எவ்வளவு பாறைகள்

மணல் துகள்கள்

சேற்றுப் படிவுகள்

நிலத்தடியில் தகிக்கும் பெருமூச்சுகள்


ஒரு நீருற்றைப் போய்ச்சேர

இவ்வளவு பிரயாசையா

என்று கேட்கும்

என் சின்னஞ்சிறு தாவரமே


நீ அறிகிறாயா

வாடி வதங்கும் உன் இலைகளின் கருமை

இந்த அந்தியை

எவ்வளவு கறுப்பாக்குகிறதென்று

- மனுஷ்யபுத்திரன்


தொடுதிரை


காய்த்துப்போன விரலிருந்தும்

எத்தனை அழுத்தியபோதும்

செயல்படவில்லை


இது தொடுதிரை அப்பா

மெல்ல தொட்டாலே போதும்

அழுத்தவே வேண்டியதில்லை

சொல்லப்போனால்

தொடக்கூடவேண்டியதில்லை

இதோ இப்படி


அவன் விரல்

நீரின்மேல் ஏசு போல

நடந்தது

அவன் விரும்பியபடி

செயல்பட்டன எல்லாம்


உலகம்

எனக்கு வசப்படாமலிருந்தது

இதனால்தானா ?

நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா ?


என்னளவு அறிவோ ஆற்றலோ

இல்லாதவர்கள்

நான் விரும்பியவற்றை

விரும்புவதைக் கண்டு

தேவையில்லாமல் ஆற்றாமை கொண்டேன்.

எதிரிகளுக்கு

ஏன் எல்லாமே எளிதாக இருக்கிறது என்று

தெய்வத்திடம் முறையிட்டேன்


மேல்தளத்தில் 

எடையில்லாமல் நகர

என்னால் இயலவில்லை

முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்

பூ விரிவதை கண்டதில்லையா 

செடி அழுத்துகிறதா என்ன ?

ஆனால் நான் 

பழுதடைந்த மின்விசிறிபோல

ஓசையிட்டபடி மலர்ந்தேன்

நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து

என் அப்பங்களை வேகவைத்தேன்

அது ஐந்தாயிரம்பேருக்கல்ல

ஐந்துபேருக்கே போதவில்லை

என் ஏசு

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல

தேவைக்குமேல் சிலுவையேறியவர்


மூடிய வாசல்களை எளிதில் திறந்தவர்களை

நான் கண்டிருக்கிறேன்

வெறும் குண்டூசியால் 

பூட்டின் ஏழு தடைகளையும் திறந்த

நண்பனின் கண்களில் திருட்டுச்சிரிப்பை

நான் அறிவேன்

அசாத்தியமானதை செய்தவர்கள்

சாத்தியமானதை செய்தவர்கள்போல

பாடுபடுவதில்லை என்பதை

உணர்ந்திருக்கிறேன்

ஏமாற்றியவனை

மாயாவி என

ஊரார் போற்றுவதையும் கண்டதுண்டு

நான் கற்பாறைமேல் கட்டினேன்

இவனோ அலைநீரின்மேல்.



திறக்க 

பலமே தேவையில்லாத வாசல்முன்

ஏன் வந்தோம் என்பதையே மறந்து

நின்றிருக்கிறான் ஒரு தனியன்

மெல்ல அழுத்தினால்போதும் 

அழுத்தக்கூட வேண்ட

தொட்டாலே போதும்


சரியாகச் சொன்னால் 

தொடக்கூடவேண்டியதில்லை

- கல்பற்றா நாராயணன்


மேகத்தை தழுவி மனிதர் இறப்பதில்லை. மேகங்கள் தழுவுகையில் மனிதர்கள் இறப்பதுண்டு.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

என் பெயர் இந்திரஜித் - மதார்

அரசியல் கவிதைகளை எழுதுவதில் உள்ள பிரச்சினை போலியான பாவனையும், வெறும் ஸ்டேட்மெண்ட் ஆகிவிடும் தன்மையும்தான். அதைத்தாண்டி எழுதப்பட்ட நல்ல அரசியல் கவிதைகளும் உண்டு. அப்படி ஒரு கவிதையை நேர்ப்பேச்சில் கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன் அடிக்கடி குறிப்பிடுவார். அது கவிஞர் கைலாஷ் சிவன் எழுதிய அகதிச்சிறுவனின் இருள் மாசானம் என்ற கவிதை. ஈழப்பிரச்சனை பற்றி தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கவிதைகள் எழுதப்பட்டிருக்கும். அதில் அகதிச்சிறுவனின் இருள் மாசானம் என்ற கவிதை தனித்துவமானது.

அகதிச்சிறுவனின் இருள் மாசானம்

அந்திவேளை கருக்கல்

சிறுவன் கையில் ஊதுகுழல்

வாயில் வைத்துக் கொண்டு பேசினான்

தொடந்து பேசினான்


ஓர் புதிய ஒளியின் காலை,மதியவெயில்,கருக்கல்

இரவின் நட்சத்திரங்கள் ,குளிர்,முழு நிலவின் அமைதி

ஓர் அமாவாசையில் நதி ஒளித்துக் கொண்டதை

மிகத் தெளிவாகப் பேசினான்

ஒரு பயங்கரம் இரவில் குண்டுகள் வீழும் சப்தம்

அதிர்ச்சி பிரமைகள்,குழந்தைகளின் கதறல் ,மற்றும்

பெண்களின் ஓலம்,புகைக்காற்று,தீ


ஊதுகுழலின் துவாரத்தில் சுருங்கும் காற்று ஓர் தீவு


குழலை கையில் பிடித்துக் கொண்டான்

தாழ்ந்த குரலில் - அண்ணே

நான் சுவாசித்த பூமி ,வானம்,மழை,

நதி,நிலவு,காற்று

இந்த மலை, இன்னும் இன்னும்

எல்லாவற்றையும் நன்றாக ஊதினேனா !


இந்நேரம் சூரியன் தாழ்ந்தே போய்விட்டான்


தம்பி நீ யார் ?


தென்கிழக்குத் திசையை காட்டி - அங்கிருந்து

எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது இங்கு

வந்து விட்டோம்

வருஷம் 12 ஓடிவிட்டது


அதோ அந்த வேலியிடப்பட்ட கூடாரத்திற்குள்

தங்கியிருக்கிறோம்


உன் அம்மா அப்பா?

; எனக்குத் தெரியாது

என் பெயர் : இந்திரஜித்

[ சூனியப்பிளவு கவிதை தொகுப்பிலிருந்து...]

இந்தக் கவிதையின் தலைப்பு என் பெயர் இந்திரஜித் என்றே என் நினைவில் தவறாக பதிவாகியுள்ளது. ஆனால் அதுவே சரியானதாகவும் தோன்றுகிறது. இந்தக் கவிதையில் போலி பாவனை இல்லை. தட்டையான உணர்ச்சி இல்லை. குழலில் எல்லாவற்றையும் சொல்லிவிடும் இடம் கவிதையை உயர்த்துகிறது. தமிழில் எழுதப்பட்ட ஈழக் கவிதைகளில் இந்தக் கவிதை தனித்துவமானது. நிலைத்து நிற்பது.

***

Share:

மூன்று சப்பாத்துகளின் கதை - மதார்


ஓடும் ஆற்றின்

இதயத் துடிப்பை அறிய

நாம் கையில்

ஒரு மீனைப் பிடிக்க வேண்டும்.


- நெகிழன்


நெகிழனின் "மூன்று சப்பாத்துகளின் கதை" கவிதை தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பு பூஜ்ய விலாசம். தொகுப்பின் நிறைய கவிதைகளில் நெகிழன் துயரத்திடம் சேட்டை செய்கிறார். அதுவே அவரது கவிதைகளுக்கு தனியொரு நிறத்தை அளிக்கிறது. தலையைத் திருகிவிடுவேன் என்ற குரல் நெகிழன் கவிதைகளில் வன்முறையாக அல்லாமல் சேட்டையாகவே ஒலிக்கிறது. அதன் வழி நெகிழன் தன் கவிதைகளின் வழியே ஒரு விளையாட்டை நிகழ்த்திப் பார்க்கிறார். பூஜ்ய விலாஸம் தொகுப்பில் செங்கல்லை தின்னும் கவிதை முக்கியமானது. மூன்று சப்பாத்துகளின் கதை தொகுப்பிலும் குறித்து வைக்கும்படியான கவிதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில

யாரும் ஏந்தாத சில விரல்கள்

ஒருநாள் மலைக்கு

தலையும் கைகால்களும் முளைத்தன

ஒரு கணம் அது

எழுந்து நின்று

கால் மடிய

தன் காலடியில் வளர்ந்த

ஒரு சிறிய செடியின் முன்

மண்டியிட்டது.

ஒவ்வொரு கையிலும்

பூக்களை விரல்களாகப் பெற்ற

அச்சின்னஞ் சிறிய செடி

மலையின் முகத்தை

ஆசையோடு வருடிவிட்டது

அப்போது உண்டான சிலிர்ப்பில்

அதுவரை

யாருமே ஏந்தாத சில விரல்கள்

உதிர்ந்தன.

***

சால்னாவின் வாசம்

மணி பத்து

எல்லோரும் தூங்கிவிட்டார்கள்

ஒன்பது வரை

சிமினி விளக்கை ஒளிரவிடும்

முனியம்மாள் கிழவி

மதியமே

மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்

திருட்டுக் கால்களால்

மெது மெதுவாய் நடந்துவந்து

கதவைத் தட்டியது

புரோட்டாவின் சால்னா வாசம்

அது

உலகின் மிக மெல்லிய ஒலி. 

***

அதிசய மரம்

சாக்கடையோரம் கிடந்தவனை

தூக்கிச் சென்று

மரத்தடியில் கிடத்துகிறான்

தூரத்தில் நின்றுகொண்டு

போவோரிடமும் வருவோரிடமும்

சொல்கிறான்

அங்கே பாருங்கள்

அந்த அதிசய மரம்

தனக்குக் கீழே

நிறைய இலைகளையும்

ஒரு மனிதனையும்

உதிர்த்திருக்கிறது.

***

என்றாகிவிட்டது

சற்றே குரலவிழ்த்து

தேநீரில் சக்கரையில்லை என்றேன்

கோபித்துக்கொண்டு

கரும்புக் காட்டுக்குள் புகுந்துவிட்டாள்

தன்னைக் கரும்பென

நம்பிவிட்டவளை அழைத்துவர

அறுவடைக் காலம்வரை

காத்திருக்கும்படியாயிற்று

நாளடைவில்

வார்த்தைகளை

எச்சிலில் கரைக்கும் வித்தையை

கற்றுக்கொண்டேன்

இருந்தும் ஒருநாள்

மறதியாய்

குழம்பில் உப்பில்லை என்றேன்

பாவிமகள்

கடலுக்குள் இறங்கிவிட்டாள்

நீருக்கடியில் மீனென நீந்திக் கிடந்தவளை

வலை வீசிப் பிடிப்பதற்குள்

போதும் போதும் என்றாகிவிட்டது.

***

வெட்க ராணி

எனைக் கண்டதும் 

வெட்கம் ஒரு முயலாக மாறி

உன் முகத்திலிருந்து

எகிறிக் குதித்தோடுகிறது

ராணி,

உனக்கு ஆட்சேபனை இல்லையெனில்

கொஞ்சம் அமைதியாய்

இங்கேயே அமர்ந்திரு

நானதன் காதைப் பிடித்துத்

தூக்கிக்கொண்டு வந்து

உன் மடியில் போடுகிறேன்.

***

Share:
Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive