Showing posts with label கல்பற்றா நாராயணன். Show all posts
Showing posts with label கல்பற்றா நாராயணன். Show all posts

ஆழத்தில் மணக்கும் மலர்கள் - இசை

கல்பற்றா நாராயணன் எழுதிய இக்கட்டுரைகள் ‘அகழ்’ இதழில் வெளியான போதே பரவலான வாசககவனம் பெற்றவை.  இதில் மூன்று கட்டுரைகள் புனைவு சார்ந்தவை. ஏனைய யாவும் கவிதை  குறித்து எழுதப்பட்டவை. புனைவு குறித்து எழுதப்பட்டவையும் தனது  கவித்துவச்  செறிவால் கவிதையைப் பேசுவது போன்றே மயக்கம் தருகின்றன. மேலும் அந்த மூன்று கட்டுரைகளும் சில பிரமாதமான கவிதைகளின் ஊற்றுமுகமாய் இருக்க வாய்ப்புள்ள கட்டுரைகள். கவிஞர்களின் கட்டுரைகள் அவை.  ஆகவே இந்நூலை கல்பற்றா,  கவிதை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று சுட்டவே விரும்புகிறேன்.

‘விரித்தால் சுவை குன்றுவது கவிதை’   என்பதே பொதுவான அபிப்ராயம். ஆனால் விரித்து விரித்து மேலும் சுவை கூட்டும் கட்டுரைகள் இவை. ஒரு கவிதையை எவ்வளவு நீட்டிப் பார்க்க முடியுமோ அவ்வளவு நீட்டிப் பார்க்கிறார் கல்பற்றா. அதாவது மனித குல வரலாற்றில் எவ்வளவு நீளம் போகுமோ அவ்வளவு நீளம் நீட்டிப்பார்க்கிறார். இந்தக் கட்டுரைகளை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது…” உலகிலேயே மிக நீளமானது கவிதைதான்  போல?”  

கவிதை என்றால் என்ன  என்கிற பழம்பெரும் கேள்வி பேசித் தீராதது. 

ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்து விருதுகள், பாராட்டுகள் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஒரு கவியும், அந்தக் கேள்வியின் முன்னே ஆர்வம் கொப்பளிக்கும் ஓர் இளம் மாணவன்தான். ஏற்கனவே சொன்ன பதிலை கொஞ்சமே கொஞ்சமாக மாற்றிச்  சொன்னால்,  அதைப் புதிது போன்றே  கேட்பவன் . . ஏற்கனவே சொன்ன பதிலை அப்படியே திருப்பிச் சொன்னால், அதையும் புதிது போன்றே கேட்பதில் வல்லவன் . ஒவ்வொரு முறையும்  ஒரு ரகசியத்தைக்  கேட்கும் கூர்த்த  கவனத்துடனும், இன்பத்துடனும் அதற்குச் செவி மடுக்கிறான் அவன்.

“ஒரு வகையில் கவிதை என்பதே கழிவிரக்கத்தின் வெளிப்பாடு தானோ? செய்ய வேண்டியதைச்  செய்ய வேண்டிய தருணத்தில் செய்யாமல் இருந்தவனின் மொழியா?.....பெரும்பாலான கவிதைகளும் ஒரு வகையான பெருமூச்சுக்கள்தான்”

“சொல்லா முடியாததைச் சொல்வது என்கிற மொழியின் புராதன கடமை கவிதையில் ஒவ்வொரு முறையும் நிறைவேற்றப்படுகிறது”

“கவிதையின் வடிவில் அல்லாமல் வேறெப்படியும் சிலவற்றை வெளிப்படுத்த முடியாது”

“மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்பு போல நிறைவின்மை கொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லை மீறலாக கவிதையை நாம் யோசித்துப் பார்க்கலாம்”

கவி புனையும் கட்டுரைகளுக்கென்றே ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு. அந்தக்  கிறங்கடிக்கும் தன்மை வியாபித்துள்ள எழுத்துக்கள் இவை. கட்டுரையின்  சில வரிகளை தீவிரமாக மனம் கொண்டு தொடர்ந்தால் செறிவான இன்னொரு கட்டுரை பிறக்கும் வாய்ப்புண்டு. இதில் கிடைக்கும்  தொன்மக் கதைகளும் சுவாரஸ்யமானவை. சில வரிகள் மனித குல வரலாற்றின் கவித்துவமான திருப்பங்களைத்  தொட்டுச் சுடர்கின்றன.  

“எப்போது என்று உறுதியாகச் சொல்லமுடியாத தொல் பழங்காலத்தில் , இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப் பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை  / ‘ சுய’ ரூபத்தை நீர்ப் பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத் தொடங்குகிறான். அது நீர்ப் பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வது போல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச் சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம்…

“இரவில் நெருப்பைச்  சூழ்ந்து அமர்ந்திருத்தலிருந்துதான் கதையும், கவிதையும், இசையும், நடனமும், தத்துவசிந்தனையும் வரலாறும், அறிவியலும் உருவெடுத்தது”

கவிஞர் உடற்பயிற்சியை  ‘பரிகாசத்திற்கு உரிய விஷயம்’ என்கிறார். அதனால் பலன் அடைந்தவன் என்பதால் என்னால் அப்படிக் கருத முடியவில்லை. ஆனால் அவர் சொல்வது போன்றே நடைப்பயிற்சிக்கும் எழுத்திற்குமான உறவை நான் உறுதியாக வழி மொழிகிறேன். என் பெரும்பாலான கவிதைகள் காலை நடையில் எழுதப்பட்டவைதான். “காலை நடை முடித்து வீட்டிற்கு திரும்புவது புறப்பட்ட நான் அல்ல” என்கிறார். நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். ஆயிரம் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியிலும் அள்ள அள்ளத் தீராத பொக்கிஷமாக வெளி திறந்து விரிந்து  கிடக்கிறது. 

கல்பற்றா தீவிர விராட் கோலி ரசிகர்.  கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கி, வாலிபால், கபடி , கூடைப்பந்து என எல்லா விளையாட்டிலும் கோலியை “ Non playing captain “ஆக நியமிக்க வேண்டும் என்று அனுஷ்கா ஷர்மாவோடு சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்குமளவு ரசிகர். இந்தக் கட்டுரைகளை கோலியின் ஸ்டைலான பவுண்டரிகள் மற்றும் ஆக்ரோஷமான சிக்‌ஷர்கள் என்று வர்ணனை செய்தால் நிச்சயம்  அவர் மகிழ்வார். அப்போது அவர் முகத்தில் தவழும் அந்தப் புன்னகையையே தமிழின் பரிசாக அவருக்குச்  சூட்டி மகிழ  விரும்புகிறேன். 

படைப்பாளி படைப்புக்கான ஊக்கம் பெறும் வழியும் அவ்வளவு துலக்கமாக  இல்லை. கவி கண்ணீரையும் இரத்தத்தையும் சரிவிகித சமானத்தில் கலந்து வார்த்தாலும், சமயங்களில்  அங்கு கவிதைக்கு பதிலாக வேறொன்றே  தோன்றி நிற்கும்.  அப்போது அவன் எவ்வளவு பாவம் என்பதை அவன் மாத்திரமே அறிவான்.

“சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த நாட்களில், மிகச் சொற்பமான ரன்களில் வெளியேறிய நாட்களில் , நான் ஆற்றிய மேடையுரைகளின் வரைபடம் உயர்வு தாழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்… பொறுமையில்,  படைப்பூக்கத்தில், விழிப்பு நிலையில் எல்லாம் எனக்குச்  சிறந்த விளையாட்டு வீரர்கள் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள்..”  என்கிறார்.   ஜனரஞ்சக சினிமாக்கள் என்று எள்ளப்படும் சினிமாக்களிடம் இருந்து கூட   நான் தூண்டுதல் பெற்றிருக்கிறேன்.  கார்த்திக் சுப்புராஜின்  “ பீட்சா” படம் எனக்குப் பிடித்திருந்தது. அதன் சுவாரஸ்யம் புத்துணர்ச்சி அளித்தது.  அந்தப் படம் பார்த்து வந்த மாலையில்தான் “ லியூகோடெர்மா கன்னியின் விநாயகர்” என்கிற கவிதையை எழுதினேன்.  இப்போதும் எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் அது உண்டு. அந்தப் படத்திற்கும் கவிதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  இல்லை, அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியவில்லை. அந்தக் கவிதையின் புனிதத்தில் தூசு படிந்துவிடும் என்று இத்தனை நாளும் இந்த ரகசியத்தை மறைத்து வந்தேன். 

“கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள்” என்கிற கட்டுரையில் குறிப்பிட்ட கவிதைக்கு வெளியே மேலும் சுதந்திரமாகும் , மேலும் காத்திரம் கொள்ளும் வரிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  கம்பனில் ஒரு வரி உண்டு “ கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பதென் கொலோ?”. சீதை தன் நெஞ்சிற்குச்  சொல்வதாய் அமைந்த எளிய காதல் கவிதை. இராமனைக்  கண்ட மாத்திரத்திலேயே அவனை இறுக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியல்லாமல் அவனைக்  கடந்து செல்ல விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவித்து என்ன பயன்? என்று கேட்கிறாள். இவ்வரி அந்தக் கவிதைக்குள் அப்படியொன்றும் ஆகச்சிறந்த வரியல்ல. ஆனால் அவ்வரியை அக்கவிதையிலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்து வைத்தால்,  காலாதி  காலமாக  மனிதன் தவற  விட்டுவிட்டுத்  தவிக்கும்   அத்தனை துன்பங்களையும்  கோர்த்துக் கட்டிவிடுகிறது  இவ்வரி. 

இந்த நூலின் வழியே   20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்  மலையாளத்தில் செல்வாக்கு செலுத்திய பல கவிஞர்களின் முக்கியமான வரிகள் தமிழுக்கு அறிமுகமாகின்றன. அவ்வரிகளின் வழியே அவர்களும். மலையாளக்கவி பி. ராமனுடனான ஒரு உரையாடலில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலையாளத்தில் பல முக்கியமான கவிகள் தோன்றியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாரும் கடினமான   செய்யுள் வடிவங்களில் எழுதியதால் அவற்றை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியாமல் போய்விட்டது என்றும் வருத்தப்பட்டார். அந்த மலையாளக் கவிதைகளின் வரிகளை வாசிக்கையில்.  அதே காலத்தில் தமிழில் செய்யுள்  வடிவில் இயற்றப்பட்ட கவிதைகளுக்கும் அவற்றுக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும்  மலையாளக் கவிதைகள்  நவீனக் கூறுகளுடனேயே வெளிப்பட்டிருக்கின்றன. மனித அகத்தை ஊடுருவிப் பார்ப்பதையே  அதிகம் விரும்பியிருக்கின்றன. குறிப்பாக அக்கவிதைகளில் உள்ள கசப்பையும்  இருட்டையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் நாம் ஒரே ஒரு பாரதியோடு வாழ்ந்து வந்துள்ளோம். அவரும் ‘ அன்புசெய்தால் போதும் பாடுபடாமலேயே பயிர் விளையும்’ என்று பாடும் அளவு பொன்னுலகப் பித்தராக  இருந்திருக்கிறார்.  

இத்தொகுப்பு  முழுக்கவே  இருள் நிரம்பியுள்ளது. 

“குற்றம் மீதான ஈர்ப்பு எவ்வளவு அபாயகரமானது! ஆனால் எவ்வளவு உண்மையானது.”

“நம் ஒழுக்கநெறிகள் அசைந்தபடியே உள்ள ஒரு கல்லில் அஸ்திவாரம் அமைத்து ஆலயம் போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது”

“எந்தப் பசியும் ஒன்றை விட மற்றது எளிமையானது அல்ல”

“தொன்மங்களும், மூட நம்பிக்கைகளும் மனிதனுக்கு அளித்த பாதுகாப்புணர்வை வரலாற்றாலும் அறிவியலாலும் அளிக்க முடியவில்லை”

“உறக்கம் ஒரு பிழையான செயல் அல்ல. ஆனாலும் அதில் தன்னலம் இருக்கிறது. ஒரு வகையான கண்டுகொள்ளாமை உண்டு. பாவம் உண்டு. நல்ல தூக்கம் என்ற சொல்லில் மேலே சொன்ன எல்லாமே உண்டு”

“மாண்பான நபர்கள் கொலையை கனவு காண்கிறார்கள். அப்படி அல்லாதவர்கள் அதை நிகழ்த்துகிறார்கள்”

“வெண்மை எவ்வளவு அருவருப்பானது. நன்நம்பிக்கை எவ்வளவு பொய் ஆனது இல்லையா?”

கும்மிருட்டு என்றாலும் இவை ஒரு கவி கட்டாயம் காண வேண்டிய இருட்டல்லவா? கவிதை எரி மூண்டு எழும் இருட்டல்லவா?

கொஞ்ச காலமாக எனக்கு ‘சித்தார்’ பைத்தியம் பிடித்திருந்தது. எப்போது  காரைக் கிளப்பினாலும்   அதை அனுஷ்கா ஷங்கர்தான் ஓட்டினார்.  பிறகு ‘சரோட்’  அறிமுகம் ஆனது. அதன் ஆழமான ‘ ட்வாங் ‘கை  கேட்டதும் அதுவே என் வாத்தியம் என்பதை உணர்ந்தேன். ஒரு நண்பருடனான  சமீபத்திய உரையாடல்  இப்படி அமைந்தது

“சித்தார் இல்ல, சரோட்தான் என் வாத்தியம்”

“ஏன், சித்தார்க்கு என்ன குறை?”

“துக்கம் பத்தல”  

“கொஞ்சம் கண்ணீர் கலக்காத வாழ்கைப் பலகாரம் எதற்கு?” என்று கேட்கிறார் இடச்சேரி கோவிந்தன். நீங்கள் கவலைப்படாதீர் கவிஞரே! கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் அது கிடைக்காது.

இந்த மொழியாக்கத்தின் வழியே தமிழ்க் கவிதையியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்துள்ளார் மணவாளன்.  கவிதை மொழியாக்கத்தைப் போன்றே கவிதை குறித்த எழுத்தை மொழி பெயர்ப்பதும் அடிப்படையில் சிக்கலானதே. ஆனால் அந்தச் சிக்கலை தீவிரத்துடனும்  பரவசத்துடனும்  எதிர் கொண்டிருக்கிறார். அடிக்குறிப்பு என்பதே  விளக்குவதை  நோக்கமாகக் கொண்டது மணவாளன் அதிலும் செறிவைக் கைவிடாதவராக உள்ளார். “ உம்பம்” என்கிற சொல்லிற்கான அடிக்குறிப்பு இது…  “  உம்பம்- அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளத்தில் தண்ணீர் ‘உம்பம்’ என்று சொல்லப்படுகிறது” எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளம் தெரியும் என்று தோன்றியது. அது போன்றே அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் தெலுங்கும், அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் உருதும் எனக்குத் தெரியும் என்கிற எண்ணம் என்னை குதூகலம் கொள்ள வைத்தது. 

கல்பற்றாவுக்கு  சிரம் தாழ்ந்த வந்தனங்களைச் சொல்கிறேன். மணவாளனை இறுக அணைத்துக் கொள்கிறேன்..

“தீர்வு உள்ள பிரச்சனைகளுக்கு அல்ல, தீர்வே இல்லாத பிரச்சனைகளுக்குத்தான் எழுத்தாளன் உடனிருக்க வேண்டும்” என்கிறார் கல்பற்றா. 

தீர்வு இல்லாத சிக்கல்களில் சும்மா கூட  இருப்பதில் என்ன அருமை வந்துவிடப் போகிறது?  தீர்வே   இல்லாத சிக்கல்களில் கூடவே  இருப்பவனைக் காட்டிலும்  அருமையானவன்  இன்னொருவன் உண்டோ?

(கல்பற்றா நாராயணனின் கருப்பு இருட்டல்ல கட்டுரை தொகுப்பிற்கு கவிஞர் இசை எழுதிய முன்னுரை)

கருப்பு இருட்டல்ல (தமிழில் அழகிய மணவாளன்) நூல் வாங்க...

***





Share:

நிம்மதி துவங்கும் தருணம் - கடலூர் சீனு

ஒரு முறை குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல, சொந்தகார மாமாவை அழைக்க அவர் வீடு போனோம். மாமா எங்களுடன் கிளம்பும்போது வாசல் வரை வழியனுப்ப வந்த (மாமாவின் அம்மா) ஆச்சி எங்களிடம் சற்றே கெஞ்சல் போன்ற குரலில்  அவன கொஞ்சம் பாத்துக்கிடுங்கப்பா திங்காம அலஞ்சிகிட்டு கிடப்பான் என்று சொல்லி விட்டு உள்ளே போனார். ஆச்சிக்கு வயது 85. மாமாவுக்கு வயது 60.

பிற உயிர்குலத்தில் அம்மாக்கள் இப்படி இல்லை. குட்டி தனியே பிழைத்துக் கிடக்க கற்றுக்கொண்டு விட்டால் பின்னர் அந்த குட்டி குறித்து தாய் கவலை கொள்வதில்லை. மனித குலத்தில் மட்டும் ஏன் இப்படி? அம்மா எனும் நிலையை அம்மாவுக்குள் சாகும்வரை அப்படியே வைத்திருக்கும் நியதி எது? 

ஒரு மனிதன், மனைவி குழந்தை என்று தான் அமைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்புகளை துறக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும்  அம்மாவுக்கு மகனாக முன்னரே அவனுக்கு விதிக்கப்பட்டு  அவன் கொண்ட பொறுப்புகளை துறக்க வகை கிடையாது. அம்மா இருந்தால் அவளது பரிபூரண ஒப்புதலுக்கு பிறகே ஒருவன் துறவு பூண் முடியும் என்பது முந்தைய இந்திய மரபு. நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும் நான் இறந்த பிறகு எனக்கு நீ வந்ததுதான் கொள்ளி போட வேண்டும் என்று சத்தியம் பெற்றுக்கொண்டே அவரது அம்மா பட்டினத்தாருக்கு அவர் துறவு ஏற்க சம்மதம் தந்தார் என்பது கதை.

ஆதி சங்கரரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுக்கிறது. சங்கரரின் அம்மா கரையில் கிடந்து தவிக்கிறார். சங்கரரை நீ துறவு ஏற்க அனுமதி கொடுத்தால் முதலை விட்டு விடும் என அசரீரி கேட்க, மகன் என்னோடு இல்லாவிட்டாலும் பரவா இல்லை. ஆனால் அவன் உயிருடனாவது இருக்கட்டும் என்ற நிலையிலேயே அவர் அம்மா சங்கரருக்கு துறவு பூண அனுமதி கொடுத்தார் என்பது மற்றொரு கதை.  ரமணரோ தன்னைக் காண வந்த தாயை விட்டு ஓடி ஒளிந்திருக்கிரார்.

ஜெயமோகன் எழுதிய திசைகளில் நடுவே கதையில் வரும் தீக்ஷணன், விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் இந்த இரண்டு பாத்திரங்களும் தங்களை லெளகீகமாக பின்னிழுக்கும் அம்மா மீது எழும் கசப்பு மீது வளருகிறது.  இதெல்லாம் ஆத்மீக சிக்கல் என்றால் இதே நிலை லெளவ்கீகத்தில் நிகழ்ந்தால் அது இன்னொரு வகை மூச்சு முட்டும் அனுபவம். ஜெயமோகன் சொல்லும் உதாரணம் ஒன்று உண்டு. முட்டைக்குள் குஞ்சு வளர அந்த முட்டைக்குள் காற்று வந்து சென்று சுழலும் ஒரு மிக சிறிய காலி இடம் இருக்கும். அந்த காலி இடத்தை இழந்தால் குஞ்சு இறந்து போகும். லெளவ்கீகத்தில் தாய் அவளது பேதமையால் இறுதியாக அபகரிப்பது, முட்டைக்குள் குஞ்சுக்கான அது உயிரோடு இருக்க அளிக்கப்பட்ட அந்த சிறிய வெளியைத்தான்.

இரண்டு கரு சிதைவுக்கு பிறகு பிறந்தவன் நான். ஆகவே என் அம்மாவுக்கு என் மேல் சற்று கூடுதலாகவே கரிசனம். நான் இப்படி அஷ்ட கோணல் உடலுடன் சவலைப் பிள்ளையாக பிறந்து திரிய காரணம், நான் கருவில் இருந்த போது கிரகண நேரத்தில் அம்மா வெளியே திரிந்திருக்கிறார். அவரது அந்த பிழையைத்தான் நான் இன்றளவும் சுமக்கிறேன் என்ற குற்ற உணர்வு அவருக்கு. அது கடந்து எத்தனையோ சூழல் இடர்கள் வர, நான் துறவியாக போய்விடுவேன் என்று அம்மா எப்படியோ நம்பி விட்டார். குறிப்பிட்ட சூழல் ஒன்றில் நான் அப்படி ஏதும் செய்துவிடலாகாது எனும் படிக்கு கிட்டத்தட்ட நான் மீற இயலா உத்தரவு ஒன்று கூட பிறப்பித்தார். 

அம்மா மனம் சிதறி நின்ற வேறொரு சூழலில் அவரை பேணும் நிலையில் நான் இருக்கையில் கண்டேன். அவருக்கு நான் யார் என்பதே நினைவில் இல்லை. மிக பின்னர் ஆலிவர் சாக்ஸ் ஆவணம் செய்த சிக்கல்கள் வரிசையில் ஒருவரை குறித்து வாசித்தேன். அவருக்கு ஒரு சிக்கல் அதன் தொடர்சியாக அவருக்குள் இருந்த அம்மா எனும் பிம்பம் மறைந்து போகிறது. அம்மா குரலை போனில் கேட்டால் அம்மா என்னை விட்டு எங்க போன. உன்னை உடனே பாக்கணும் வா என்று சொல்லி அழுவான். அம்மா நேரில் வந்தாலோ அவளை அவனுக்கு அடையாளம் தெரியாது. என் அம்மா குரல்ல பேசுரியே யார் நீ? எங்கே என் அம்மா என்று கேட்பான். இந்த அம்மா மகன் பிணைப்பு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டவை எல்லாம் ஐஸ்க்ரீக் புகை போல ஆவி ஆகி மறைந்து போகும், நரம்பு முடிச்சு மேல் அமைந்த வெறும் ஒரு மெல்லிய பதிவு மட்டுமே. ஒரு சின்ன பிசகு போதும் எல்லாமே ஆவியாகி விடும் என்றால், நான் கொண்ட கொந்தளிப்பு அனைத்திற்கும், அம்மா மகன் எனும் நிலை மேல் மானுடம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் அனைத்திற்கும் என்னதான் பொருள்? அவற்றின் பெருமதிதான் என்ன? 

கல்பற்றா நாராயணனின் கீழ்கண்ட கவிதை பேசுவது மேற்சொன்ன எளிய நரம்பு முடுச்சு கொண்ட வெறும் மெல்லிய அடையாளத்தை குறித்தது தானா? பிறந்து நெடு வருடம் கழித்தும், நினைவுகளின் கர்ப்பப்பை விட்டு வெளியே விடாது, அக்கறை எனும் அறுபடாத தொப்புள் கொடியால் மகனை இன்னும் சுற்றி வைத்திருக்கும் அன்னையையும், அவளைக் குறித்த மகனின் நிலையையும் பேசும் இந்த கவிதையயை முதன் முதலாக இந்த கவிதை எழுதி வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து இதை கேட்டிருக்கிறேன். உண்மையில் இது இறப்பின் நிம்மதியை பேசுகிறதா அல்லது பிறப்பின் நிம்மதியை பேசுகிறதா என்ற தத்தளிப்புடன் இதை முதன் முறை கேட்ட போது உளம் மொத்தமும் கொந்தளித்து இல்லை இல்லை இல்லை என்று அறற்றியது. அதனூடு ஆழ் மனம் மெல்லிய குரலில் ஆம் என்றது. 

அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் இந்த கவிதை எதேச்சையாக கண்ணில் பட வாசிக்கிறேன் . உள்ளே இல்லை இல்லை இல்லை என்ற அதே கொந்தளிப்பு. ஆம் என்ற அந்த மெல்லிய குரல் மீண்டும் கேட்குமா என்று துணுக்குரலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

நிம்மதி

அம்மா இறந்தபோது

ஆசுவாசமாயிற்று.


இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்

எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்.


இனி என்னால்

காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்

முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை.


இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து

தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்

ஓடிவரும்  அலறல்

என்னை திடுக்கிடச்செய்யாது.


இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது

கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை

பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த

பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து

தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்

நேற்றோடு இல்லாமலாயிற்று.


இனி நான்

சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்

நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு

நேற்று அணைந்தது.


தன் தவறால்தான்

நான் துன்பப்படுகிறேன் என்ற

கர்ப்பகால பிரமைகளிலிருந்து

அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.

ஒருவழியாக அவள் என்னை

பெற்று முடித்தாள்.


மலையாளத்தில் : கல்பற்றா நாராயணன்

தமிழில் : ஜெயமோகன்

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொடுதிரை நூல் வாங்க...

***

Share:

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய்

ண்பனின் மகளின் பெயர்

மழை என்று தெரிந்தபோது

மனம் தெளிந்தது

சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்

சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே


வம்ச முத்திரை இல்லாத

ஜாதி அடையாளம் இல்லாத

உயிர்கள் அனைத்திற்கும் மேல்

சமமான ஊக்கத்துடன்

பெய்திறங்கும் மழை

முதல்முறையாக ஒரு பெண்ணின்

பெயராக மாறியிருக்கிறது


மழை போல ஒரு நல்ல பெயர்

எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறை

ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது!

குழந்தையாக இருக்கையிலேயே

அவளுக்குரிய பெயர் அமைந்துவிட்டது


மழைக்கும் இருக்குமே ஆசை

வீடாகி குடும்பமாகி வாழ்வதற்கு 

ஊருக்குப் போகவும் வீட்டுக்குச் செல்லவும்

நினைவூட்ட வேண்டிய பொறுப்பை

காலங்களாக சுமப்பவள் அல்லவா?

மூடிய கதவுக்கு அப்பால்

பிறப்புக்கு அப்பால் என்பதுபோல்

நெடுங்காலம் காத்து நின்றிருந்தவள் அல்லவா?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்

உள்ளே நுழைந்து பார்த்தவள் அல்லவா?


இனி மழை

குடையுடன்

கையில் புத்தகங்களுடன்

முற்றத்தில் இருந்தே அம்மா என்று அழைத்தபடி

வீட்டுக்குள் நுழையும்

பூனையும் அம்மாவும்

கதவைத் திறந்து

அவளை உள்ளே கொண்டுசெல்வார்கள்


மழை

மழையானபோது

எங்கெல்லாம் போனாள்?

ஓடையை தாவிக்கடந்து வருகிறாள்

சப்பணம் இட்டு அமர்ந்து

சாப்பிடுகிறாள்

கை கழுவுகிறாள்

மழை மழையில் துள்ளிக்குதிக்கிறாள்


ஆட்டோவில் ஏறிக்கொள்கிற

ஓடத் தொடங்கிய பேருந்தில் ஏறமுடியாமல்

முகம் கனத்து திரும்பிவருகிற

ஊசிபோட்டதன் வலி அகலும்வரை

தலைகுனிந்திருக்கிற

வகுப்பில் அடங்கியிருக்காத

சிரித்துக் குழைகிற

காதலிக்கிற

கொட்டாவியிடுகிற

மதியம் ஆனபின்னரும் போர்த்திச் சுருண்டு துயில்கிற

மழை


மழைக்கு

மாறாத ஜலதோஷம் என்றால்

அதற்குக் கெட்ட பெயர் என்பாரா வைத்தியர்?

ஒழுகுவதை அடைத்து என்ன செய்ய

மழை இதோ வீட்டுக்குள் அல்லவா

என்று கேலிசெய்வாரா பிளம்பர்?


எண்பது தொண்ணூறாண்டு நீளும் மழை

என்று யாராவது ஆச்சரியப்பட மாட்டார்களா

ஆ, மழை வந்துவிட்டதே

என்று சிரிக்கமாட்டார்களா தோழிகள்

[மண்புழுவும் தவளையும் காற்றும் இலையும்தானே

முன்னர் அவளுக்கு தோழியாக இருந்தார்கள்]

ஒரு வீட்டில் மட்டும் மழை

என்று முணுமுணுப்பார்களா அண்டைவீட்டார்?

சனியன்பிடித்த மழை என்று சலித்துக் கொள்ளுமா

வம்பும் புறம்பேச்சும்?

மழை என்று கேட்டதுமே

பாய்ந்து குடையை விரிப்பார்களா சிலர்?

அவள் அந்தக்குடையை

சிரித்தபடி கடந்து செல்வாளா?


மழையே

நீ வெயிலுடனா

காற்றுடனா

மின்னலுடனா

அலைபாயும் மரங்களுடனா

வயதடைந்தபின் செல்வாய்?

வயதாகும்தோறும் 

மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?


பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் பெயர்

வெளியே செல்ல விடாத பெயர்

தாழ்ந்த இடங்களில் தேங்கும் பெயர்

கொஞ்சம் போனால் சலிக்கும் பெயர்!


எத்தனை நல்ல பெயர்கள் பின்னர்

அந்தப் பெயருக்குரியவர் மட்டுமாக

அவர்கள் உண்டுபண்ணும் எரிச்சல் மட்டுமாக

ஆகிவிடுகின்றன.

மழையே

நீயும் அப்படி ஆகிவிடாதே!

-   கல்பற்றா நாராயணன் (தமிழில்: ஜெயமோகன்)

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு: தொடுதிரை மலையாளக் கவிதைகள்

வெளியீடு: விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

 

Share:

மின்னற்பொழுதே தூரம் - சக்திவேல்

தேவதேவனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று, பின்வருமாறு தொடங்குகிறது.

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு


தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

கவிதை வாசிப்பவர்களுக்கு தெரியும், மேற்காணும் வரிகள் வாசகனின் கற்பனையின் வளத்துக்கும் வாழ்க்கையின் போக்குக்கும் ஏற்ப முடிவிலா விரியும் சாத்தியத்தை கொண்டவை என்று. அக்கவிதையின் விரிவடையும் சாத்தியத்தின் மைய அம்சம் ஒன்றுண்டு. அது அறிதலின் விந்தை. அறிவென்று இங்கு நம்மை சூழ்ந்து மாயம் காட்டும் ஒன்றின் வெளிப்பாட்டை தன் அலகால் அள்ளமுயலும் பறவையே அக்கவிதை என்று.

ஒரு நீருற்றைத் தேடி என்று தலைப்பிட்ட மனுஷ்யபுத்திரனின் பின்வரும் கவிதையை வாசித்த கணம் கல்பற்றா நாராயணனின் தொடுதிரை எனும்  கவிதை மனதில் உதித்தது. ஒரு நீருற்றைத் தேடி செல்பவன் தன் சின்னஞ்சிறு தாவரத்தின் வதங்களுக்கு வருந்துகிறான். எல்லாவற்றையும் சின்னஞ்சிறு தாவரமாக பார்ப்பதும் கடப்பாரைகளின் ஓசையுடன் மோதுவதும் இளமையின், தந்தைமையின் இயல்புகள். ஆனால் தொடுதிரையில் அப்பாவுக்கு கற்பிக்கும் ஒரு மகன் வருகிறான். நம் குழந்தைகள் நமக்கு கற்பிக்கையில் நாம் தந்தையில் இருந்து தாத்தாவாக பெருந்தந்தையாக மாற தொடங்குகிறோம். அங்கே நாம் கிணறு தோண்ட ஆட்களை கூட்டி வரும் வாலிபத்தில் இல்லை. வெறுமே பார்ப்பவராக ஒரு விலக்கத்தையும் அதனூடாக ஒரு கனிவையும் அடைகிறோம். 

எப்போதும் ஒரு கவிதை இன்னொரு கவிதையுடன் இணைவதும் நமக்கு பிடித்த கவிதை இன்னொருவருக்கு பிடிப்பதும் தேனீக்கள் தங்களுக்குள் ஆடிக்காட்டும் நடனத்தை போன்றதே. ஒரு நீருற்றைத் தேடி சென்றவன் நீரின் மேல் நடக்கும் ஏசுவை காணும் தருணம், தொடக்கத்தில் 

சொன்னதுபோல தேவதேவனின் வரிகளில் மின்னற்பொழுதேயான தூரம் அது.


ஒரு நீருற்றைத் தேடி


கிணறு தோண்ட ஆட்கள்

வந்து விட்டார்கள்


கணீரெனெ பூமியில் இறங்குகிறது

கடப்பாரையின் முதல் ஓசை


அருகே புதர்மறைவில்

அதிர்ந்து சீற்றத்துடன்

தலைதூக்கிய நாகம்

பதுங்கி மறைகிறது


எவ்வளவு பாறைகள்

மணல் துகள்கள்

சேற்றுப் படிவுகள்

நிலத்தடியில் தகிக்கும் பெருமூச்சுகள்


ஒரு நீருற்றைப் போய்ச்சேர

இவ்வளவு பிரயாசையா

என்று கேட்கும்

என் சின்னஞ்சிறு தாவரமே


நீ அறிகிறாயா

வாடி வதங்கும் உன் இலைகளின் கருமை

இந்த அந்தியை

எவ்வளவு கறுப்பாக்குகிறதென்று

- மனுஷ்யபுத்திரன்


தொடுதிரை


காய்த்துப்போன விரலிருந்தும்

எத்தனை அழுத்தியபோதும்

செயல்படவில்லை


இது தொடுதிரை அப்பா

மெல்ல தொட்டாலே போதும்

அழுத்தவே வேண்டியதில்லை

சொல்லப்போனால்

தொடக்கூடவேண்டியதில்லை

இதோ இப்படி


அவன் விரல்

நீரின்மேல் ஏசு போல

நடந்தது

அவன் விரும்பியபடி

செயல்பட்டன எல்லாம்


உலகம்

எனக்கு வசப்படாமலிருந்தது

இதனால்தானா ?

நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா ?


என்னளவு அறிவோ ஆற்றலோ

இல்லாதவர்கள்

நான் விரும்பியவற்றை

விரும்புவதைக் கண்டு

தேவையில்லாமல் ஆற்றாமை கொண்டேன்.

எதிரிகளுக்கு

ஏன் எல்லாமே எளிதாக இருக்கிறது என்று

தெய்வத்திடம் முறையிட்டேன்


மேல்தளத்தில் 

எடையில்லாமல் நகர

என்னால் இயலவில்லை

முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்

பூ விரிவதை கண்டதில்லையா 

செடி அழுத்துகிறதா என்ன ?

ஆனால் நான் 

பழுதடைந்த மின்விசிறிபோல

ஓசையிட்டபடி மலர்ந்தேன்

நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து

என் அப்பங்களை வேகவைத்தேன்

அது ஐந்தாயிரம்பேருக்கல்ல

ஐந்துபேருக்கே போதவில்லை

என் ஏசு

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல

தேவைக்குமேல் சிலுவையேறியவர்


மூடிய வாசல்களை எளிதில் திறந்தவர்களை

நான் கண்டிருக்கிறேன்

வெறும் குண்டூசியால் 

பூட்டின் ஏழு தடைகளையும் திறந்த

நண்பனின் கண்களில் திருட்டுச்சிரிப்பை

நான் அறிவேன்

அசாத்தியமானதை செய்தவர்கள்

சாத்தியமானதை செய்தவர்கள்போல

பாடுபடுவதில்லை என்பதை

உணர்ந்திருக்கிறேன்

ஏமாற்றியவனை

மாயாவி என

ஊரார் போற்றுவதையும் கண்டதுண்டு

நான் கற்பாறைமேல் கட்டினேன்

இவனோ அலைநீரின்மேல்.



திறக்க 

பலமே தேவையில்லாத வாசல்முன்

ஏன் வந்தோம் என்பதையே மறந்து

நின்றிருக்கிறான் ஒரு தனியன்

மெல்ல அழுத்தினால்போதும் 

அழுத்தக்கூட வேண்ட

தொட்டாலே போதும்


சரியாகச் சொன்னால் 

தொடக்கூடவேண்டியதில்லை

- கல்பற்றா நாராயணன்


மேகத்தை தழுவி மனிதர் இறப்பதில்லை. மேகங்கள் தழுவுகையில் மனிதர்கள் இறப்பதுண்டு.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இ(கெ)ட்ட பெயர் - சுதா


கட்டு கட்டு கவிதையால் கட்டு

என்னை வாயடைக்கச் செய்ய வேண்டியிருந்தால் “அதெல்லாம் கவிதை. உனக்கு புரியாது” என்பார் ஒருவர். இருக்கலாம். ஆனால் எனக்கும் கவிதை புரியும் என்று நிரூபிப்பவர்களின் வரிசை ஒன்று இருக்கிறது.


அப்பர் பெர்த்திலிருந்து

உருண்டு விழப்பார்க்கிறது குழந்தை.


ஜன்னல் வழியே

உலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த

அவள் அன்னை

அதை உதறியெறிந்துவிட்டு

பதறியெழுந்து

கைவிரித்து நிற்கிறாள்.


அதே கணத்தில் அனிச்சையாய்

ஆங்காங்கே எழுந்து

கைவிரித்து நின்றனர் சில அன்னையர்.


நானும் ஒரு கணம்

அன்னையாகிவிட்டு

எனக்குத் திரும்பினேன்.


இசையின் இந்த கவிதையை வாசிக்கும்பொழுது நானும் ஒரு கணம் கவிதை வாசகியாகிவிட்டு எனக்குத் திரும்பினேன். ஆக, எனக்குள்ளும் கவிதை கணங்கள் உண்டு. அதை நிகழ்த்துவதில் பெரும் பங்கு கல்பற்றாவினுடையது.

அவரது மேடை உரைகளே கவிதை போலத்தான் ஒலிக்கும். மலையாளம் அறியாதவர்கள் கூட மொழிபெயர்ப்பாளர் இன்றியே புரிந்துகொள்ள முடியும். அவரது கவிதைகளுக்கும் அது கூடுதலாகவே பொருந்தும்.

சமீபத்தில் நான் (வாசிக்கக்)கேட்டதில் என்னை விடாது பிடித்துக்கொண்டது ‘பேரு தோஷம்’ என்ற கவிதை.


இ(கெ)ட்ட பெயர்

எதன் பொருட்டு நான் என் நாய்குட்டிக்கு பெயரிட்டேன்

பெயரிட்டதால் அது நாயல்லாதானதா

சிறப்புற்ற நாயானதா

என்னுடைய நாயானதா

நாய்க்கு நாய் என்ற பெயர் போதாதா

காகமும் எருமையும் வண்டும் கத்தரிக்காயும் போல

ஒரு தனிப்பட்ட பெயரின்றி என் நாயும் வாழமுடியும்தானே

பெயர் தேவைப்பட்டது எனக்கா இல்லை அதற்கா


நான் இட்ட பெயர் அதன் பெயராவதற்கு சில காலம் ஆனது

ஒரே ஒலியில் ஒரே லயத்தில் பலமுறை அழைத்தபோது

அது தலையுயர்த்தியது

அதன் கண் திறந்தது

அது என்னை ஏற்றுக்கொண்டது - தன்னை ஏற்றுக்கொண்டது

இனி வேறு பெயரில் விளித்தால் அது தலை உயர்த்தாது

அது இனி மற்றுமொரு நாயல்ல - அது இனி நாயேயல்ல

பூமியில் சொந்தமாக பெயருள்ள ஒரு சிலரில் 

அது ஒன்றாகியிருந்தது


அம்மாவும் அப்பாவும் தம்பி தங்கைகளும்

நான் இட்ட பெயர்கொண்டு அதை அழைத்தனர்

அது பெருமை கொண்டது - வாலாட்டியது

யாரேனும் அலட்சியமாக அதன் பெயரை உச்சரித்தால்

அது ஏறெடுப்பதும் இல்லை

அந்த பெயரே உடலாகி அது முற்றத்தில் திரிகிறது

அதன் வாழ்வில் முதல்முறையாக ஒரு ஒலி வார்த்தையாகி இருக்கிறது

என் நாய் இப்போது ஒற்றை சொல் கொண்ட ஒரு அகராதி

எங்கிருந்தாலும் அப்பெயர் அதனை அழைத்தது - அதை மட்டும்

 நான் வைத்த பெயர் இப்போது அதனுடையது

அந்த பெயரை உச்சரித்தால் அந்நியர்களும்

அதனை அறிந்தவராகிறார்கள்


இன்று என் கண்பார்வைக்கு வெளியிலிருந்தாலும்

அதை நான் தளையிட்டிருந்தேன் -

கண்ணுக்குத் தெரியாத கயிறொன்றால், அப்பெயரால்

நொடிக்கு நூறுமுறை நான் அதன் பெயரை சொன்னேன் – 

நான் அதன் ஆதாம் அல்லவா

அதன் ஆதாமை வெகு தூரம் நகர்த்திவிட்டவன் அல்லவா


இப்போது அது வெறும் ஒரு நாயல்ல

நாய் நமக்கு ஒரு வசைச்சொல், 

ஒரு சிறுமை

நான் அதன் சிறுமையை போக்கிவிட்டேன்


நான் அதற்கு இட்ட பெயர் 

நாய்களுக்கு மட்டுமே இடப்படுவது

அப்பா, மாமா, தம்பியின் பெயர்களுடன் மாறிப்போகாதது

நாயுடைய சங்கிலியும் கழுத்துப்பட்டையும் போல

நாயுடன் மட்டுமே இணைந்துகொள்வது

ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கோ 

வேற்றுசாதிக்காரனுக்கோ 

அடிமைக்கோ

மட்டுமே இடக்கூடிய பெயர்

வீட்டினுள் நுழையாத,

வீட்டின் வெளியிலேயே நிற்கக்கூடிய 

எனது வீட்டின் வெளியே மட்டுமே நிற்கக்கூடிய பெயர்


எதன் பொருட்டு நான் என் நாய்குட்டிக்கு பெயரிட்டேன்

பெயருள்ள எல்லோரையும் என் நாய்க்கு நிகர் வைக்கவா


நாய்க்கு பெயரிடுவதை பற்றிய ஒரு எளிய விவரிப்பாக தொடங்கும் கவிதை. சில வரிகளிலேயே பெயர் நாய்க்கு கம்பீரம் கூட்டுகிறது. நமக்கும் புன்னகை. அடையாளமான பெயர் அதனை அடிமை கொள்ளும்போது புன்னகை மறைய ஆரம்பிக்கிறது. நம் மனசாட்சி சீண்டப்படுகிறது. 

ஆவேச முழக்கங்கள் இல்லை, அறைகூவல்கள் இல்லை. பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பவர் உரையாடும் ஒரு தொனி மட்டுமே. ஆனால் பேசுபொருளின் தீவிரத்தை ஒரு சில வார்த்தைகளால் கடத்திவிடுகிறார். நாய் ஒரு படிமமாகிவிடுகிறது.

மலையாள மொழிக்கு இயல்பாக அமைந்த ஒரு இசைத்தன்மை உண்டு. அது அவரது படைப்புகளில் எப்போதும் உடனிருப்பது. 

‘ஞான் அதை கயறில்லாது கெட்டி பேரிட்டு பூட்டி’ 

‘சங்கலையோ பெல்டோ போலே நாய்க்கு மாத்ரம் இணங்குன்ன பேரு’

‘வீட்டின் புறத்து மாத்ரம் நில்குன்ன, எண்டே வீட்டின் புறத்து மாத்ரம் நில்குன்ன பேரு’

இது போன்ற வரிகளை உதாரணம் சொல்லலாம். இசைதன்மையோடு கூட அழுத்தம் கொடுக்கவேண்டிய இடங்களில் சரியான வார்த்தைகளை பொருத்திவிடுகிறார்.

பொதுவாக கவிதை வாசிப்பிற்கு ஒரு தனி மனநிலை வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு கவிஞரின் படைப்புகளை உள்வாங்க அவரது அகப்பயணம் பற்றிய அறிதல் வேண்டும், அல்லாமல் எந்த கவிதையும் படிப்பவர் மனதில் மலராது என்பது பலராலும் சொல்லப்பட்ட, ஏற்கப்பட்ட கருத்து.

ஆனால் எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தனி முயற்சிகளேதும் எடுக்காமல் ஒருவரை உள்ளிழுத்துக்கொள்ளும் சொற்கள் கல்பற்றாவினுடையது. ஓடுபாதையில் தடதடக்காமல் ஓட்டி, தரைவிட்டெழும் கணத்தை தனித்து அறியாமல், ஆகாயத்தில் பறக்கச்செய்யும் விமானி அவர்.   

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொடுதிரை நூல் வாங்க...

***


Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive