நூலின் இறுதி கவிதையாக அமைந்த _கசாப்பு கடை_ எனும் தலைப்பிலான கவிதை நேரம் கடந்த இரவு ஒன்றில் காலை முதல் பரபரப்பாக இயங்கி இப்போது மூடிக் கிடக்கும் கசாப்பு கடை ஒன்றின் சித்திரத்தை விவரிக்கிறது. இரவு, கைதி தப்பிக்கவேண்டி தோண்டும் சுரங்க பாதை கொண்ட ( வெளியே தெரிந்துவிட கூடாது எனும் படி ஒரு ஒளி) மெல்லிய வெளிச்சம் போல ஒரு வெளிச்சம் தரும் இரவு விளக்கு எரியும் மூடிய கடை,
கொக்கியில் தொங்கும் ரத்தக்கரை படிந்த அங்கி, ரத்தம் கொண்டு வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் போல அது இருக்கிறது. இருள் சூழ்ந்த தேவாலயத்தின் உள்ளே (முடவர்களை நடக்கவைக்கும் ரோகிகளை குணப்படுத்தும்) மின்னும் ரூபங்கள் போல வரிசையாக தொங்கும் இருளுக்குள் மின்னும் கத்திகள், அந்த கவிதை இப்படி முடிகிறது, கறியை வைத்து வெட்டும் மரமேடை
// படுகைவரை உலர்ந்துவிட்ட நதியென சுத்தமாய் சுரண்டப்பட்ட மேற்புறம். அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன். அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும் ஒரு குரல் எனக்கு கேட்கிறது.//
சிமிக் தனது கவிதை வழியே உருவாக்கும் உலகவரலாறு, இந்த வாழ்வு, தன்னிலை இவைகள் குறித்த அவரது நோக்கு எல்லாமே ஒரே வீச்சில் துலங்கி வரும் கவிதை.
இருத்தலியல் தத்துவ நோக்கு இந்த கவிதைக்குள் இருந்தாலும் இக்கவிதை அந்த தத்துவத்தின் பொருட்டு சமைக்கப்பட்ட ஒன்றல்ல. தத்துவம் எந்த எல்லை வரை ஓடி வந்து நிற்குமோ, அந்த எல்லையில் இருந்து எழுந்து பறக்கும் கவிதை இது. தத்துவம் என்பது அறிவுக் கண். அறிவுக் கண்களை உதறி குருட்டு இதயத்தால் மட்டுமே உணரப்படக் கூடிய சில உண்டு அதை கவிதைகள் மட்டுமே சென்று தொட முடியும். அதனால்தான் உலகின் முக்கிய தத்துவவாதிகள் பலரும் புனைவுகளை குறிப்பாக கவிதைகளை பின் தொடர்கிறார்கள் போலும்.
சாத்தியப்பட்ட துல்லியமான புற உலகு, சாத்தியமற்ற அக உலகு இந்த இரண்டின் சித்திரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைத்து, இரண்டையுமே துல்லிய புற உலகின் சித்திரம் போல புனைந்து அது அளிக்கும் உணர்வுநிலையை மையமாக்கி தனது கவிதை உலகை வடிவமைக்கிறார் சிமிக் _இன்னும் விழித்திருக்கும் சலவைக்கடை_ என்ற தலைப்பில் அமைந்த இந்த கவிதை
//விளக்குகள் அணைக்கப்பட்ட கடைகள் இருக்கும் வீதியில்
ஒரு சிறுநகர சலவைக்கடை
பளீர் விளக்குகளுடன் ஒளிர்கிறது.
முகப்பில்
வயோதிக
எல்விஸ் பிரஸ்லி
கசங்கிப்போன பிரபலமான பெண்கள் பத்திரிக்கை பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறார்.
சில தனி மேகங்கள்
இரவு வானில்.
அவனது நைய்ந்த ஜீன்ஸ்
சலவை எந்திரத்தில் சுழலும்போது
எல்லாவற்றையும் விழுங்கும்
கண்புழைகளைக் கொண்ட
சாவு முகமூடியப்போல
சுழலும் ஒரு மேகம். //
இருத்தலியல் புனைவுவெளிக்கே உரிய காத்திக்கான சர்ரியல் சித்திரங்களை சிமிக்கும் தனது கவிதைகளுக்குள் புனைகிறார். ஆனால் அந்த சித்திரங்கள் டாலி உருவாக்குவது போல உருகும் கடிகாரங்கள், வினோத உயிரினங்கள் போன்றவை அல்ல. அன்றாடம் நாம் அறிந்து பயன்படுத்தும் பொருட்களை பீதி அளிக்கும் சர்ரியால் படிமங்களாக மாற்றுகிறார் சிமிக். உதாரணமாக _எமது குளிர்காலப் பிற்பகல்கள்_ எனும் வசன கவிதையில் வரும் படிமங்கள். அதில் அவள் அவனை மென் தசையில் பதியும் கொதிக்கும் இஸ்திரி பெட்டி போல ஸ்பரிசிக்கிறாள். தலைகீழாக மாறிய காலுறைக்குள் அதை நேர் செய்ய அது முழுவதுமாக உள்ளே நுழையும் கை போல அவள் அவனுக்குள் நிறைகிறாள். (குருதி இழையினை நூலாக கொண்ட) இணைக்கும் ஊசி துளைத்து செல்வது போல அவனை துளைத்து இணைகிறாள்.
அவரது மினிமலிஸ்டிக் நடை இத்தகு சர்ரியல் சித்திரங்களுக்கு மேலும் தீவிரம் அளிக்கிறது. அப்படி அமைந்த ஒரு கவிதை கீழ்கண்டது.
// ஒரு கத்தியால்
கண்களை தோண்டியெடுத்த
பசுவொன்று அங்கே இருந்தது.
அதன் வாலுக்குக் கீழே வைக்கோலைப் பற்றவைத்தனர்.
அப்போதுதான் தாறுமாறாக
கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலத்தின்மேல் ஓடும்.
பின்னர் என் தலைக்குள்ளும்
அவ்வப்போது. //
இந்த வரிசையில் முக்கியமானது தர்பூசணி என்ற தலைப்பிலான கவிதை.
அறைக்குள் அமர்ந்து தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள். உள்ளே குண்டு வந்து விழுகிறது. மொத்த அவலமும் குழந்தையின் பார்வையில் ஒரு குழந்தை விளையாட்டு போல சொல்லப்பட்ட கவிதை. இந்த கவிதையில் நிகழும் வெடிகுண்டு, உடன் விளையாட வரும் வண்டாக மாறும் அந்த ரசவாதம், அது சிமிக் உள்ளும் எங்கோ நிகழ்ந்திருக்கிறது போலும். இந்த தொகுப்பில் பல கவிதைகளில் அந்த குழந்தைகள் பார்க்கும், பின்னர் சிரிக்கும் அந்த அழிவு போலதான் இதில் உள்ள இருண்ட சித்திரங்கள் அமைகிறது.
உலக அளவில் பழங்குடி மரபில் ஆன்மா இல்லாத புறப்பொருள் என்ற ஒன்றே இல்லை என்பதை பண்பாட்டு மானுடவியலாளர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். தமிழில் சங்க இலக்கிய மரபிலும் அதுதான், கம்பன் காவியத்திலும் அதுதான். சீதை இல்லாத துயரில் ராமன் தனித்து இருக்கும் வனத்தில், ஒவ்வொரு இலையும் சோகம் கொள்கிறது. அப்படித்தான் சேதன அசேதன பிரிவினை கோடு மங்கிய நிலையில் சார்லஸ் சிமிக் உருவாக்கும் கவிதை உலகும் இருக்கிறது.
குட்டி ஆந்தையே அலறு
நீ அங்கேதான் இருக்கிறாயா?
அங்கு என்ற ஒன்று
நிஜமாகவே அங்குள்ளதா என்ன?
உன் விருப்பப்படி அலறு.
அல்லது அமைதியாய் இரு.
இருள் சூழ்ந்துள்ளது இரவு.
இங்கே
நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சர்யம் கொள்ள
தாமதமாக
நட்சத்திரங்கள் வரலாம்
அங்கே.
மேற்கண்ட கவிதையில் ஆச்சர்யம் கொள்ளும் நட்சத்திரத்தை எப்போது மனிதனால் உணர முடியும்? இரவோடு, ஆந்தையோடு எப்போது அவனால் பேச முடியும்? இங்கு அங்கு என்று பேதம் இல்லாது எப்போது அவனால் தரிக்க முடியும்? போர் வந்து, அல்லது ஊழி வந்து எல்லாம் அழிந்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சப்பட்ட மனிதனாலா?
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கொண்ட முக்கியமான அம்சம் கவிதைகளுடன் கவிஞர் கொண்டுள்ள எமோஷனல் டிட்டாச்மெண்ட். இது எல்லாம் சிமிக்ன் கவிதைகள்தான், சிமிக்கே ஒரு கவிதைக்குள் கவிப்பாத்திரமாக வருகிறார். ஆனாலும் மினிமலிச நடை கொண்டு துல்லியமாக அனைத்தையும் புறவயமான சித்தறிப்புக்குள் நிறுத்துவதன் வழியே இந்த எமோஷனல் டிட்டாச்மெண்ட்ஐ நிகழ்தி, கவிஞரின் சார்பு நிலை கொண்ட உணர்வு உணர்சி படிந்து அதனால் கலைக் குறைபாடு கொண்ட கவிதையாக இவை நின்றுவிடாது தனது கலை வெற்றியை சாதிக்கிறார் சிமிக். அதன் உச்சம் உஷ்ணமான கோடை இரவு எனும் தலைப்பிலான கவிதை. கிட்டதட்ட ஒரு சென் கவிதை போல அமைந்துவிட்ட கவிதை.
// தூரத்து நட்சத்திரங்களின் சோம்பல் ஒளி.
கீழே இங்கே பூமியிலோ
எக்காளமிடும் ஓடைத்தண்ணீர்
குண்டு தர்பூசணியை
குளிரவைத்துக் கொண்டிருக்கிறது.//
வாசித்த அக்கணமே அகம் ஓடையில் கிடந்து குளிரும் குண்டு தர்பூசணியாகிவிடுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த தொகுப்பு கொண்ட அழகு என்பது, இரவு வருவதற்கு முன்னர் சில கணம் ஒளிரும் அந்தியின் அழகு போன்றது. ( சிமிக் சொற்களில்) ஒவ்வொன்றும் தன் எழிலில் தானே விதிர்த்து நிற்கும் அந்தி.
எதிர் வெளியீடாக _காதல் உண்ணி_ எனும் தலைப்பில் சார்லஸ் சிமிக் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட சில கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன். முன்னுரையில் சார்லஸ் சிமிக் புனைவுலகை வாசகன் அணுகி ரசிக்க தேவையான அனைத்து குறிப்புகளையும், தான் இக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட விதத்தையும் விவரித்திருக்கிறார் ஷங்கர். இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்யும்போது, இந்த கவிதைகளை தானே எழுதிக்கொண்டு இருப்பதாக கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மயங்கியிருக்கக் கூடும். சிமிக் கவிதைகள் வழியே உருவாக்கும் உலகை, உணர்வு நிலையை, வாழ்க்கை நோக்கை அவ்விதமாகவே தமிழுக்கு கொண்டு வந்த அழகிய மொழியாக்கம்.
சார்லஸ் சிமிக் மிக அழகிய முறையில் தமிழுக்கு வந்திருக்கிறார். கொண்டுவந்த கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களுக்கு வாசகனாக என்றும் என் அன்பு.
***







0 comments:
Post a Comment