காகங்கள் - சச்சிதானந்தன் கவிதைகள்

 காகங்கள்

1

என் குழந்தைப் பருவத்தில் காகங்களுக்கு

பித்ருக்களின் முகச்சாயல் இருந்தது.

பலிச்சோறு பரிமாறிய பிறகு அம்மா கைதட்டப் போவதை எதிர்பார்த்து

மரணத்தால் களைத்த முகத்துடன்,

அவை முற்றத்து புளியமரக் கொம்பில் அமர்ந்திருக்கும்.

சொர்க்கம் வெகுதூரம்.

கடவுளோ மௌனி,

பலிச்சோறு தின்று திரும்பும்போது

பாட்டி தாத்தாவிடம் சொன்னாளாம்;

‘செத்த பிறகும் பிறரைச் சார்ந்திருப்பது

எத்தனை பயங்கரமான விஷயம்!’

***

2

நான் வளர்ந்தபோது காகங்களுக்கு

தத்துவ ஞானிகளின் முகபாவம் வந்து விட்டிருந்தது.

பகல் முழுக்க அவை

விடுதலை பற்றி விவாதம் செய்தன.

இரவுகளில் அவை மானுட சாத்தியங்களின் எல்லைகளையும்

மரணத்தையும் எனக்கு நினைவூட்டின.

என் தலைமுறையின் பாலியம் இவ்வாறாக

தூக்கமில்லாமல் போயிற்று.

சூனியத்தின் விரல் ரேகைகள் கூட எங்களுக்கு

கிராமப்பாதைகள் போல தெரிந்திருந்தன.


மரணத்தை நாங்கள்

எங்கள் கிராமத்துக் காவல் தேவதையான ஏரியைத்

தொடுவது போல அறிந்தோம்

சிலர் தங்கள் மெலிந்த கரங்களில் இருந்து

கைக்கடிகாரங்களை கழட்டி வீசி

அதன் இரண்டு ஆழங்களுக்குள் இறங்கிச் சென்றனர்

கொப்பளித்த சுரக்குமிழிகள்

முணுமுணுத்தது இதுதான்,

பித்ருகளின் சேற்றுப் படுக்கையில்

எந்த தாமரையும் விரிவதில்லை.

தெய்வத்தின் மண்டை ஓட்டுக்குள்

குடியேறியது ஒரு தவளை.

குரோம் குரோம்

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை!

***

3

தாமரைகள் மலர்ந்ததோ பள்ளத்தாக்கில்

கால்களில் நடனமும்

காடுகளில் அன்பும்

கனவு முழங்கும் இதயங்களை பறையாக மாற்றி

வீட்டுக் கூரைகளில் தொங்க விட்டோம்

பித்ருக்களின் மூடுபனி விலகியது.

விடுதலையின் சிகரநுனியை

முதல் முறையாக கண்டோம்.

விவசாயிக்கான கிரீடம்

மேங்களில் மினுங்கியது.

திடீரென்று காகங்கள்

இரவுகளாய் மாறி வந்திறங்கின.

எங்களில் சிறந்தவர்களை

அவை கவ்விச் சென்றன.

அவர்கள் இருந்த இடத்தில்

ஒரு ரத்த வட்டம் மட்டுமே எஞ்சியது.

ரத்த சாட்சிகளில் விதியை ஏளனம் செய்து

காகங்கள் சென்று மறைந்த இருண்டவானம் கண்டு

நாங்கள் வழியறியாமல் திகைத்து நின்றோம்.

***

4

தூய சிந்தனையில் வழியில்லை,

சுத்த சாவேரியில் மோட்சமில்லை

கரிய சிறகோசையின் கீழ் அமர்ந்து

எஞ்சியவர்கள் பரஸ்பரம் அறிய முயன்றோம்.

அம்முயற்சியில் எங்களுக்கு பைத்தியம் பிடித்தது

வெறுப்பு எங்களை வென்றது.

ஏகாந்தமான இந்த முற்றம் முன்பு

ஜனக்கூட்டம் ஓடும் நதியாக இருந்தது

பித்து தெளியச் செய்யும் ஜலம்

அதன் எலும்புக் கூடுகளுக்கு இடையே இன்னமும் மீதியுண்டு

சற்று தோண்ட வேண்டும்

அதை தெளித்து அனைவரையும் நான் திரும்ப அழைப்பேன்

ராஜனை, ரமேசனை, ராமகிருஷ்ணனை

சலீமை, சினலை, சுப்ரமணியத்தை...

வாழ்விற்கும், அன்பிற்கும்.


அவர்கள் சேர்ந்து கை தட்டும்போது

நான் புளியமரக் கிளையிலிருந்து பறந்து வருவேன்.

கரிய சிறகுகளில் பதியும்

பூமியின் ஒளிக்  கூறும்

‘இறந்த பின்பும்

மனிதரில்லா உலகில்

வாழ நேர்வது எத்தனை பயங்கரம்!’

***

5

கைதட்டுங்கள்! கைதட்டுங்கள்!

ஜனங்களின் திருவிழா இத்தனை சீக்கிரத்தில்

கிழவர்களின் கடந்தகால ஏக்கமாய் மாறிவிடலாகாது!

***

குறிப்பு:

பலிச்சோறு: இறந்தவர்களின் முதல் வாரிசுகள் ஆண்டுதோறும் திதியன்று காய்கறிகளுடன் சேர்த்து சோறு சமைத்து ஒரு பகுதியை ஆற்றில் அல்லது குளத்தில் விட்டு விட்டு மீதியை காகங்களுக்கு பரிமாறுவார்கள். இதை உண்ண வரும் காகங்கள் பலிக் காகங்கள் எனப்படுகின்றன. சாதம் பரிமாறப்பட்ட பிறகு ஈரக் கைகளுடன் கை தட்டுவார்கள். இந்த விசேஷமான ஒலிக்கு பழகிப் போன காகங்கள் சாதம் உண்ண வரும். அவை பலி ஏற்க வரும் பித்ருக்கள் (மூதாதையர்கள்) என்று ஐதீகம்.

பெயர்கள் - போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்டு தீவிரவாத இளைஞர்கள்

***

தமிழில்: ஜெயமோகன்

(தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து)

கே. சச்சிதானந்தன் தமிழ் விக்கி பக்கம்

***






Share:

விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் - லக்ஷ்மி மணிவண்ணன்

 1

அவர் மரபின் தொடர் அல்லவா? என்று ஒருவர் சொன்னாலும் அதனை மறுப்பதற்கில்லை.எல்லா இடங்களிலும் எல்லைகளை மீறுகிறாரே என்றாலும் மறுப்பதற்கில்லை.இரு வேறுபட்ட நிலைகளை வகுக்கவும்,வேறுபடுத்திக் காணவும் தொகுத்துக் கொள்ளவும் உள்ள கருவிகளே நம்மிடமிருப்பவை.நாம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.அவருடைய கவிதைகளைப் பொறுத்து அவர் எப்போதுமே இருவேறுபட்ட நிலைகளுக்கு இடையில் இருக்கிறார்.இருவேறுபட்ட நிலைகளை மறுப்பதற்கும் அல்லது ஏற்பதற்கும் என தனியே அவரிடம் சிறப்பாக எதுவும் இல்லை.பல தரப்புகளுக்கு மத்தியில் இருந்து அவருடைய கவிதை நம்மை நோக்கி வருகிறது.அது தன்னுடைய தனித்துவத்தைக் கவனி என்றோ,நான் பார்த்ததைப் பார் என்றோ தன்னை முன்வைக்க வில்லை.அவருடைய தரிசனங்களும் கூட தனிப்பட்டவை அல்ல பொதுவானவை.' விதியை நம்பிய போதும் வெறுமனே இருப்பதில்லை யாரும் "என்கிற எளிய வரியில் எளிய கவிதையும் உள்ளது.அது மிகவும் எளிய தரிசனத்தால் உரு ஆகிறது.இந்த எளிய பழ மொழியை ஒத்த தரிசனம் தனிப்பட்ட ஒருவரிடம் இருந்து வரவில்லை.பொதுவான ஒன்றில் இருந்து அதன் கூட்டான சரடு ஒன்றிலிருந்து கூட்டான மனப்பகுதிக்கு வந்து சேர்கிறது.நம்பி என்னும் விக்ரமாதித்யனின் அருஞ்சிறப்பு இது.அவர் ஒரு மூன்று சீட்டு விளையாட்டுக்காரன் நின்றால் அவனை எந்த அரங்கிலும் கண்டுவிடுவது போல ,அவர் அவருடைய கவிதைகளை நம்மை நோக்கி இழுத்து வருகிறார்.நமது மேஜையில் கொண்டு நிறுத்தப்படுகிற மூன்று சீட்டு விளையாட்டுகாரன் அவருடைய கவிதைகள்.அவருடைய கவிதைகளுக்கு ஞானக்கூத்தன் கவிதைகளைப் போன்றே ஒரு நடனம் இருக்கிறது.அவை நேராகவோ,செங்குத்தாகவோ நம்முடைய வாசிப்பு மேஜையில் நிற்பதில்லை.அதன் நடனத்தையும் சேர்த்து நாம் வாசிக்க வேண்டியுள்ளது.குத்துமதிப்பாகச் சொல்வதெனில் அதுவொரு சமூக நடனம்.

பழக்கத்திற்கு வந்த விஷயங்களே வகைபடுத்துவதற்குத் தோது படுகின்றன.விக்ரமாதித்யன் தமிழில் முன்னுதாரணம் அற்றவர் ஆகவே புதியவர் .மரபிலும் சரி நவீனத்திலும் சரி அவர் புதியவர்.வகைக்குள் வராதவர்.நில்லாதவர்.உள்ள எழுச்சியை  கவிதையில் முன்வைத்தவர்.குறிப்பிட்ட விதமான நவீன கவிதைக் கொள்கைகளுக்கு வெளியே கவிதையைத் திரட்டித் தந்தவர்.

தமிழில் நவீன கவிதை உருவாகத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே தனிப்பட்ட மனிதனின் அகத்துக்குள் அது பிரவேசிக்கத் தொடங்கி விட்டது.அது ஒரு நவீனத்துவ பண்பும் ஆகும்.அதனால் அதற்கு ஒரு அந்தரங்கத் தன்மையும் உண்டாயிற்று.வெகு விரைவாக அதில் இறுக்கம் பற்றத் தொடங்கியது.அதற்குரிய கவிதைக் கொள்கைகள் வகுக்கப்பட்டுவிட்டன.வகுக்கப்படும் எதற்கும் நிறுவன அரண் உண்டாகிறது.விக்ரமாதித்யன் அதனை பற்றி வெளியில் இழுத்தார்.தன்னை ரத்தமும் சதையுமாக தின்னக் கொடுத்து தன்னுடைய புதிய மொழியால் அதைச் சாதித்தார்.இதனை அவர் சாதித்திராவிடில் என்ன ? அவருடைய வாழ்வு சாத்தியமாகி இராது.வாழ்வை கண்டடைதல் என்பது லௌகீகத்தைக் கண்டடைவதல்ல.திறப்பையும்,விடுதலையையும் கண்டடைவது.மொழியும் கவிதையும் வாழ்வுடன் அவ்வாறான தொடர்புகள் கொண்டவை.எந்த உயரிய கொள்கையிடமும் கவிதையை ஒப்படைக்க இயலாது என்பதற்கு தமிழில் விக்ரமாதித்யனின் கவிதைகள் மட்டுமே சாட்சி.ஐரோப்பிய சாயல் அல்லாத தமிழ் மொழியின் சாயல் கொண்ட சுய மொழி கண்டவர்.அதே சமயத்தில் ஆங்கில மொழியை அப்படியே பல இடங்களில் பயன்படுத்திய கவிஞரும் கூட.தனித்த ஓசை அவருடையது.அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள்,சேட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு மலையாளக் கவி  ஐயப்பனோடு இவரை ஒப்பிட முடியும் ஆனால் இருவருடைய கவிதைகளும் ஒப்பிடவே இயலாத அளவிற்கு வேறுபட்டவை.ஐயப்பனுடையவை 

நவீனத்தின் மரபார்ந்த ஐரோப்பிய வகைமையைச் சேர்ந்தவை எனில் விக்ரமாதித்யனுடையவை ஒழுகி வந்த ஐரோப்பிய மரபு சாராத தமிழ் உள்ளமும் மொழியும் அமைந்த நவீன கவிதைகள் .சமகாலத் தமிழில் ஐய்யப்பன் வகைப்பட்ட ஐரோப்பிய வழி நவீன  கவிதைக்கு சபரி நாதனை உதாரணமாகச் சொல்லலாம் எனில் அன்ணாச்சியின் வகைக்கு கண்டராதித்தனை உதாரணம் காட்டலாம்

விக்ரமாதித்யனின் வாசகர்கள் பல திறத்திலானவர்கள் .மேட்டுக்குடியினர் அவர்களில் உண்டு.அவர்களுக்கு அண்ணாச்சியின் கவிதைகளில் வெளிப்படும் அரைமயக்க பித்து நிலை மீது மோகம் உண்டு.அறிவியக்க மேட்டிமை கொண்டோரும் அவரது வாசகர்களாக இருந்தார்கள்.இருக்கிறார்கள். சாதாரணர்களும்  உண்டு.சாதாரணமானவனுக்கு அவன் சிக்குண்டு ஒடுங்கும் முட்டுச்சந்தை கவிதைகள் மூலமாக உணர்த்திக் கொண்டேயிருக்கிறார் விக்ரமாதித்யன்.பலசமயங்களில் இருவரும் இணைந்து முட்டுச் சந்தை எட்டிச் சாடுகிறார்கள்.பொது மக்கள் வாசகர்களாக அவருக்கு உள்ளனர்.சூழலின் அறிவு ஜீவிகள்,சக கவிகள்,புனைவு எழுத்தாளர்கள் என பல திறத்தினர் அவர் வாசகர்களில் அடக்கம்.அசோகமித்திரன் தன்னை அவருடைய வாசகன் என குறிப்பிட்டிருக்கிறார்.தமிழ் நவீன கவிகளில் பிற கவிகளுக்கு பன்முக வாசிப்பிற்கான இந்த வாய்ப்பு உண்டானதில்லை.

ஐரோப்பிய முன்மாதிரிகளைக் கொண்ட தமிழ் அறிவு ஜீவிகள் தாங்கள் பேசும் விஷயங்கள் விக்ரமாதித்யனிடம் சென்று எவ்வாறு எதிரொளிக்கிறது என்பதை தனிப்பட்ட உரையாடல்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.அவர்களுடைய உரையாடல்கள் அவரில் மோதி மிகவும் எளிமையாக கீழே விழுந்து நொறுங்கின.இவ்வளவு எளிமையாக அவர்களின் உரையாடல்களுக்கு இடையூறு செய்த தமிழ் கவிகள் வேறு இலர்.அதனாலேயே அவர்களுக்கு ஈர்ப்பும் விலக்கமும் கொண்டவராக அவர் இருந்தார்.அவர்கள் ஐரோப்பிய பிரதிகளை முன்வைக்குந்தோறும் இவர் இங்குள்ள முன்னவர்களை ,பழந்தமிழ் ஆசிரியர்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்.அவர்கள் சிக்கலாக்குந்தோறும் இவர் எளிமை செய்தார். அவர்கள் இங்குள்ள சமய உள்ளடகங்களை மேல் நிலைச் சமயங்கள்,நாட்டார் தெய்வங்கள் என இரண்டாக பிளக்க முயலும்போது "நாட்டார் தெய்வங்களை வசப்படுத்துவது எளிது;இந்த பெருந்தெய்வங்கள் தான் பிடி கொடுக்காது போக்கு காட்டிக் கொண்டே செல்லும்  " என்கிறார். அவருடைய இந்த கவிதை வரி ஒரு தரிசனமும் கூட.அது அவர்கள் செய்ய வந்த காரியத்தை தலைகீழ் ஆக்கி அவர்களிடமே திருப்பித் தந்தது.அறிவு ஜீவிகளுக்கு இப்படியான பிரச்சனைகள் எனில் புனைவு எழுத்தாளர்களுக்கு ,நவீனத்துவர்களுக்கு அவர் வேறுவகையில் பிரச்சனையாக இருந்தார்.அவர்களால் விக்ரமாதித்யனை வரையறை செய்து கொள்வதில் இடர்பாடுகள் இருந்தன.விக்ரமாதித்யன் பழையவரா புதியவரா என்னும் பிரச்சனை அதில் ஒன்று.சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவர்களுக்கு மரபைத் தாண்டித்தானே நவீனம் ,இவரோ நவீனத்தில் இருந்து பின்னுக்குச் செல்கிறாரே என்னும் குழப்பம் .தமிழ் சமூகத்தில் எல்லோருக்கும் பொதுவாக  இருந்தது ,அவருடைய பழக்க வழக்கங்கள் சார்ந்த பிரச்சனை.

தொண்ணூறுகளில் உருவான கவிஞர்கள் பலரின் மூலவர் விக்ரமாதித்யன்  என்பேன்.முந்தைய கவிக் கொள்கைகள் தளர்வுற்று பிறிதொரு போக்கு தொண்ணூறுகளில் தொடங்கிற்று.இந்த போக்கே தமிழ் கவிதையில் தனிமனித அகத்துக்கு வெளியே கவிதையை எடுத்து வந்தது.இந்த புதிய போக்குக்கு நவீன கவிதையில் அடித்தளம் அமைத்தவர் ஞானக்கூத்தன் எனில் ஏற்கனவே உருவாகி நின்றவற்றைச் சிதறி  ஆனைப்பாதை ஒன்றை உருவாக்கியவர் விக்ரமாதித்யன் தான்.தன்னை,தன் தன்னிலையைச் சிதறிச் சிதறி அவர் உருவாக்கிய ஆனைப்பாதை அது.அடித்துத் துவைத்து தன்னைச் சிதறி ஆனைப்பாதை அமைத்தார் என்கிறீர்களே அப்படியானால் அப்படிச் சிதறியவற்றை அவர் எடுத்துக் கோர்த்தாரா என எவரேனும் கேட்பீரேயாயின் இல்லை என்பேன்.அது ஒரு கவிஞனின் வேலையாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லாதது.

சிகரெட் ஆஷ் அவருடைய கவிதை ஒன்றில் வருகிறது. ஆஷ் டிரே ஒரு கவிதைப் பொருளாக முடியும் என்பதை விக்ரமாதித்யனிடம் தான் நான் கண்டேன்.சிகிரட் ஆஷ் போலவே அவர் கவிதைகளில் தெய்வங்கள் தோன்றினார்கள்.அத்தனை தெய்வங்களும் எழுத்தில் தணிக்கை செய்யப்பட்டிருந்த காலத்தில் அவர் கவிதைகளில் அவர்கள் வந்து முன் தோன்றினார்கள்.தணிக்கையால் தானே, அதற்கு எதிர்வினையாகத்தானே வந்து தோன்றினார்கள் என்றும் தள்ளத் தகாத விதத்தில் அவர்கள் கவிதையில் இயல்பாக அமைந்தார்கள்.அவர்களுக்கு மனிதர்களை விட அதிக முக்கியத்துவம் கொண்ட இடத்தையும் அவர் வழங்கவில்லை.பெரும்பாலும் மனிதனுக்குத் தெய்வங்களின் சாயலும்,தெய்வங்களுக்கு மனிதச் சாயலும் அவர் படைப்பில் உண்டானவை.

இப்போது யோசித்துப் பார்க்கும் போது அவருடைய "சேகர் சைக்கிள் ஷாப்"என்கிற கவிதையின் தலைப்புதான் என்னுடைய "சக்தி மசால் ஸ்டோர் "என்கிற கவிதைக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது என்பது விளங்குகிறது.இதுபோலவே ஷங்கர்ராம்சுப்ரமணியனின் "சிங்கத்துக்குப் பல் துலக்குவது எப்படி ?" என்னும் கவிதை விக்ரமாதித்யனின் " கூண்டுப்புலிகள் நன்றாகவே பழகி விட்டன " எனும் கவிதையின் தொடர்.இசையின் பகடி சற்றே கூர்ந்து நோக்கினால் விக்ரமாதித்யனின் மடியில் சென்று சேரும்.

பெருந்தேவி, போகன் சங்கர் என நீளும் எதிர் கவிதை போக்கின், மூலம் ஏதேனும் ஓரிடத்தில் விக்ரமாதித்யனில் கட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர முடியும்.முதன் முதலாக தமிழில் நவீன கவிதை தன் அக அழுத்தத்தை விக்ரமாதித்யன் கவிதைகளின் மூலமாகவே கீழ் இறக்கி வைத்தது.விக்ரமாதித்யனின் அழுகுரல்களில் கூட பகடி உண்டு.கழிவிரக்கத்தை உறுத்தா வண்ணம் முன்வைக்கத் தெரிந்தவை விக்ரமாதித்யனின் கவிதைகள் மட்டுமே.அவை பொதுவாக மாறிவிடுகின்றன.அவருடைய கவிதைகளில் அவை வேறொன்றாகி விடுகின்றன.

"ரத்தத்தில் 

கை நனைத்ததில்லை நான்

எனினும் 

ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில் 

தங்க நேர்கிறது எனக்கு


திருடிப் பிழைத்ததில்லை நான் 

எனினும் 

திருடிப் பிழைப்பவர்களிடம் 

யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு


கூட்டிக் 

கொடுத்ததில்லை நான்

எனினும் 

கூட்டிக் கொடுப்பவர்களின்

கூடத் திரிய நேர்கிறது எனக்கு"

இந்த கவிதையை நமது வாழ்வு அடைந்திருக்கும் வினோத தன்மைக்கு சாட்சியமாகக் கொள்ளமுடியும்.தேர்விற்கு அப்பால் வாழ்வு நகர்ந்து செல்வதைக் குறிக்க இந்த கவிதையைக் காட்டிலும் சிறப்பான ஒரு கவிதை தமிழில் இல்லை,ஞானக்கூத்தனின் "சைக்கிள் கமலம்" வேறு ஒரு தளம்.எங்கு வேண்டுமாயினும் யார் வேண்டுமாயினும் முட்டிக் கொள்ள முடியும் என்பதை அகத்திற்கு அது அனுபவமாக்குகிறது.விக்ரமாதித்யனின் இந்த கவிதை அத்துடன்  நம்முடைய அற உணர்ச்சிகளை மீள் பரிசீலனை செய்கிறது.அவை பதுங்கி நிற்கும் இடங்களை வெட்டி வீழ்த்தி புதிய ஒன்றாக்குகிறது.ஒரு கொலையாளியும் அவனுக்குத் தண்டனை தரும் நீதிபதியும்  சேர்ந்து இந்த கவிதையில் சிறைக்குச் செல்கிறார்கள்.தமிழில் கவிதையில் உருவான அரிய நாடக நிகழ்வுகளில் ஒன்று இந்த கவிதை .கொலையாளி பாலியல் புரோக்கர்,திருடன்,காட்டிக் கொடுப்பவன் என அனைவருக்கும் புனித இடத்தை வழங்கும் கவிதை இது.கவிதையின் இறுதியில் பாபம் படியாதோ ,சாபம் கவியாதோ என ஒரு அப்பாவிக் குழந்தையைப் போல அருகில் நின்று கேட்டு கொண்டிருக்கிறார் ஒரு குழந்தை விக்ரமாதித்யன்.

2

நவீன கவிதை என்பது நவீன வாழ்வோடும் தொடர்புடையது.இன்றைய நவீனம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய மயமாதலைக் குறிப்பதே.பொதுவாகப் பார்ப்போமெனில் எந்த காலத்திலும் சமுகம் நவீனமாகிக் கொண்டுத்தான் இருக்கும் .ஏதேனும் ஒரு விதத்தில் அது முன்னதில் இருந்து மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.முன்னகரும்.மனித இயக்கம் அவ்வாறானது.அது எஞ்சியதில் இருந்து கிளைத்து மேலெழவே விரும்புகிறது.கவிதா தேவியும் அவ்வாறு மெலெழ விரும்புபவளே.பழமையில் இருந்து புதுமை நோக்கியே அவள் கால்கள் அடியெடுத்து வைக்கின்றன.அதன் காரணமாகவே கவிஞனும் முன்னடி வைக்கிறான்.அல்லது வைக்க வேண்டியிருக்கிறது.நவீன வாழ்வின் முன்பாக அவன்  விரும்பியோ விரும்பாமலோ கொண்டு நிறுத்தப்படுகிறான்.சிக்கலான ஒரு நவீன ரயில் நிலைய வாயில் என இந்த நிலையை உருவகிப்பேன் எனில் விக்ரமாதித்யன் அந்த வாயிலின் அருகே நாற்பதாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார்.அதற்கு இணையாக   ந.ஜெயபாஸ்கரனும் நின்று கொண்டிருக்கிறார் எனலாம்.யாரும் இங்கே எங்கு வந்திருக்கிறீர்கள் ? நலமாயிருக்கிறீர்களா ? என்றெல்லாம் கேட்க மாட்டார்கள் என்பதை இருவருமே நன்கறிவர்.நடைபாதை அனுமதிச் சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளேறி செல்லவும் இருவரும் விரும்பவில்லை.ஆனால் விக்ரமாதித்யன் காத்திருந்த அந்த களத்தை தன்னுடைய கவிதைகளால் புதிய விளையாட்டுக் மைதானமாக மாற்றி அமைத்துக் கொண்டார்.அதனால் ஜெயபாஸ்கரனிடன் தென்படும் பழமையின் ஏக்கம் விக்ரமாதித்யனிடம் இல்லை.ஒருவிதத்தில் விக்ரமாதியன் கவிதைகளில் இறந்த காலம் இல்லை.நிகழ் நாடகம் மட்டுமே உள்ளது.


விக்ரமாதித்யன் அடிக்கடி தான் உருவாக்கிய இந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து வீட்டுக்குச் செல்கிறவராக இருக்கிறார்.அங்கே பழைய நினைவு போல ஒரு வீடு இருக்கிறது.ஒரு வெளியேறியவர் திரும்பிச் சென்று அடையமுடியாத  வீடு அது..வெளியேறினால் வெளியேறியதுதான்.அவருடைய கவிதைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வீடு என்பதும் அவர் வெளியேறிவிட்ட வீடே.அது இதமாகவும் இருக்கிறது.மீண்டும் மீண்டும் வைத்துக் கொள்கிறது,வேறு வேறு விதங்களில் வெளியேற்றவும் செய்கிறது.விக்ரமாதித்யனின் வீடு பௌதீகமானதல்ல .அது அருபமானது.அது தான் உருவாக்கிய விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியாக வால் போல நீண்டிருப்பது.


வேறுவிதத்தில் சொல்வதாயின் வாழ்வு ஒரு நவீன கவிஞனை சரியாக ஒரு முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்துகிறது.நவீன கவிஞன் சரியாக இந்த இடத்தில்தான் நிறுத்தப்படுகிறான்.செய்யுள் செய்பவன் இவ்வாறு நிறுத்தப்படுவதில்லை.அவனுக்கு சீரானதொரு விந்தையை வியப்பை ஏற்படுத்துக் கொண்டிருந்தால் போதுமானது .வேலை முடிந்துவிடும்.கவிஞனின்  வாழ்வைத் திறக்கும் பணி அமைந்திருக்கிறது.அவன் அருகில் சங்குடன் கடவுள் காத்து நிற்கிறார்.திறக்கிறானா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.இந்த நிலையை அவன் தன்னுடைய கவிதைகளின் வழியாக எப்படி எதிர்கொள்கிறான் என்பதே அவன் ஏற்றிருக்கும் சவால்.பெரும்பாலும் விக்ரமாதித்யன் அண்ணாச்சி கூனிப்படைகள் சேர்ந்து கப்பலக் கவிழ்ப்பது போல தன்னுடைய இரண்டு வரி சின்னஞ்சிறிய கவிதைகளால் இதனைச் சாதித்தார்.அவருடைய குறுங்கவிதைகள் இன்றளவும் தமிழில் அரியவை.மாதிரியற்றவை.கிரகயுத்தம்,நவ பாஷாணம் உட்பட அவருடைய குறுங்கவிதைத் தொகுதிகள் அருங்கொடைகள்.அவருடைய தரிசனங்கள் ஒருங்கே அமைந்தவை அவை.

"எழுதிச் சலித்தவன் 

எழுதுகிறேன்

எழுதிய அயர்ச்சியில் 

எழுதுகிறேன்

எழுதி ஓயாது எழுதுகிறேன்


எழத வேண்டியதை

எழுதுகிறேன்

*

சட்டையைக் கிழி

சந்தோஷம் சந்தோசம்

பாத்திரத்தை உடை

கோபம் தீரும் கோபம் தீரும்

*

உடைப்பதும் கிழிப்பதும் 

ஒரு மன நோய்


மன நோயில்லாத 

மனுஷன் யாரு ?

*

சாக்லெட்டே சாக்லெட்டே 

குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லட்டே

சிகிரட்டே சிகிரட்டே 

நேரம் கெட்ட நேரத்தில் தீர்ந்து போகும் சிகிரட்டே

*

லௌகீகத் தோல்வி

ஆன்மீகம் திருப்பி

டும் டும் டும்

*

இந்திரலோகமும் 

எப்போதோ பார்த்தாயிற்று

சந்திர லோகமும் 

சங்கடமில்லாமல் போய்வந்தாயிற்று

பாதாள லோகமும் 

புகுந்து வெளிவந்தாயிற்று


இன்னுமென்ன இன்னுமென்ன 

தன் மானம் 

மயிரே போயிற்று

இந்த இரட்டை வரிகள் கிரக யுத்தம் கவிதைத் தொகுப்பில் உள்ளவை. விக்ரமாதித்யனிடம் ஏமாற்றக் கூடிய எளிமை உண்டு.தன்னில் இந்த எளிமையை எட்டாத ஒருவனுக்கு அவை தன்னைக் காட்டாது .காட்டுவதும் இல்லை.எளிமையாக இருக்கிறீர்களே என்றால் "ஆமாம் எளிமையாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லிவிடக் கூடியவர் அவர்.

சாமி மலையேறி 

எங்கே போகும் 

தேவி மடியில் 

விழுந்து கிடக்கும் 

*

அறியாதவர்களுக்கு 

ஆபத்து

கொள்ளிடத்து முளைக் குச்சுகள்

*

பரு வெடித்த முகம் 

பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது

*

சிவப்புப் பட்டுக்கு 

மஞ்சள் கரை ஜோர்

மஞ்சள் பட்டுக்கு 

கறுப்புக் கரை பிரமாதம்


பட்டோடு படுத்து

புரளுவார்களா யாரும்?

*

மாத விடாயை

தீண்டல் என்பது வழக்கு


காய்விடுதலென்றால்

கருச்சிதைவு


மன நோய்க்கு

கோட்டி


சொல்லே கவிதைதான்

சொல்லித்தந்தது 

தாம்ரவருணிக் கரை

இத்தகைய சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட விக்ரமாதித்யனின் கவியுலகம் புதுமையான அவருடைய ஒரு முகம் எனில் அவருடைய இருத்தல் பிரச்சனைகளால் ஆன உலகு மற்றொரு முகம்

"உணவின் முக்கியத்துவம்

உன்னை விட எனக்கு அதிகம் தெரியும் 


ஒட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன்

இலையெடுத்திருக்கிறேன்

கல்யான வீடுகளில் போய் பந்திக்கு

காத்துக் கிடந்திருக்கிறேன்


அன்னதான வரிசையில் 

கால்கடுக்க நின்றிருக்கிறேன்

கோயில் உண்டைக் கட்டிகளிலேயே

வயிறு வளர்த்திருக்கிறேன்

சாப்பாட்டுச் சீட்டுக்கு 

அலைந்து திரிந்திருக்கிறேன்


மதிய உணவுக்கு மாநகராட்சி லாரியை 

எதிர்பார்த்திருந்திருக்கிறேன்


சொந்தக்காரர்கள் சினேகிதர்கள்

வீடுதேடிப் போயிருக்கிறேன்"


இப்படியான உக்கிரமான முகம் தாண்டி அருள் முகம் ஒன்று அவருகுண்டு.கவிஞனில் அவனுக்கெல்லாம் இந்த அருள் முகம் உண்டோ ,அவர்களிடம் நமக்கு வழங்குவதற்கு என்னவெல்லாமோ இருக்கின்றன.விகிரமாதித்யன் நம்பியின் கவிதைகளும் வழங்கக் கூடியவை,நான் மடியேந்திப் பெற்றிருக்கிறேன்,ஆகவே எனக்கு அவர் பிற கவிகளில் ஒருபடி மேலே அமர்ந்திருக்கிறார்

அருவி 

யாருக்கும் சொந்தமில்லை

அதனால் 

அருவிக்கு யாரும் அன்னியமில்லை

விழுவது தவிர்த்து 

வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு 


குளிர்ச்சியும் தெளிவும் அதன் 

குணங்களல்ல இயற்கை 


அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள் புதிதாக வருவதும்

அதற்கொரு விஷயமேயில்லை

அருவியின் எல்லைக்குள் யாரும் செய்தித்தாள் மேய்வதோ

அரசியல் பேசுவதோ இல்லை


அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்லை

அவசியமென்ன இருக்கிறது அதற்கு?


அருவி வாழ்தல் பயம் அறியாதது 

அதனால் சுரண்டல் தெரியாதது


அத்வைதம் மார்க்ஸியம் ஸ்டரக்சுரலிசம்

எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஹிம்சையற்றது அது


ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும் 

யாருக்கும் ஏன்

புத்தி வருவதில்லை?


சாப்பாட்டு நேரம் வரை இருந்து

இலக்கியம் பேசியிருக்கிறேன் 


அன்றைக்கு அம்மை ஒறுத்து வந்தாள்

இடையில் வந்த இவள்


இன்ரைக்கும் 

யார் யார் தயவிலோதான்


இருக்க முடியாது யாரும் 

என்னைக் காட்டிலும் 

சாப்பாட்டு அருமை தெரிந்தவர்கள்"

இந்த கவிதை அருவியைபற்றியான அண்ணாச்சியின் ஒரு கவிதை.ஒருவிதத்தில் நம்மிடம் அவரை யாரனெத் தெரிவிக்கும் கவிதையும்  கூட.

***

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

புதுக்கவிதையின் எல்லைகள் - க.நா. சுப்ரமணியம்

கவிதையிலிருந்து புதுக்கவிதையை மட்டும் தனிப்படுத்தி பேசவேண்டிய காலம் கடந்துவிட்டது என்று எண்ணுகிறேன். புதுக்கவிதை என்று சொல்லும்போது ஷண்முக சுப்பையா, நகுலன், ஞானக்கூத்தன், இவர்களோடு மயன் (நான்) ஏற்படுத்தித் தந்த ஒரு மரபு சோதனைகட்டத்தைத் தாண்டி கவிதை என்கிற கட்டத்தை எட்டிவிட்டது.

இன்றைய இந்த கவிதையின் எல்லைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் மேலே கவிதை சாத்தியமாவதே இப்படி எல்லைகளை அறிந்துகொண்டதனால் ஏற்படுகிற காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிதைக்கு எல்லைகள் உண்டா? உண்டானால் அவை எதெதனால் எப்படியெப்படி ஏற்படுகின்றன என்று விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த  காரியத்தில் நமக்கு உதவக்கூடியவர்கள் என்று முற்காலத்தில் ஸமஸ்கிருத இலக்கியத்திலிருந்து கவிதை அழகுத்தத்துவத்தை காண முயன்றவர்களையும், இக்காலத்தில் மேலைநாடுகளில் செயல்பட்டு நம்மையும் எட்டியுள்ள அளவில் கவிதை விமரிசகர்களையும் மனத்தில் வாங்கிக்கொண்டு அதன்மேல் நமது கவிதைப்படிப்பை - பழசில் பரவலாக உள்ளதையும் புதுசில் எட்டியவரையில் பார்ப்பதையும் - வைத்துக்கொண்டு சொல்லிப் பார்க்கலாம்.

இது ஒரு டெண்டட்டிவ் (Tentative) முயற்சி. இலக்கிய விஷயங்களில் தரம் பிரிப்பது, இது மேன்மையானது, இது மேன்மையை எட்டாதது என்று சொல்லுவதெல்லாம் ஒருவிதத்தில் ‘டெண்டட்டிவ்’ முயற்சிதான். எதைச் சொன்னாலும், அது முடிவாக தீர்மானமாக சொல்லப்பட்டது போலவே சொல்லப்பட்டாலும், அழுத்தமான முடிவு என்று சொல்லப்பட்டாலும்கூட, மறுமதிப்பீடு உண்டு, மேலே ஏதோ சொல்லலாம் என்கிற நினைப்பு கூடவே வரவேண்டும். அப்போதுதான் விமரிசனத்துக்கே ஒரு உரு, ஒரு கலை அடிப்படை ஏற்படுகிறது என்று சொல்லவேண்டும். இதை நினைவில் கொண்டு கவிதைபற்றி சொல்லுகிற எதுவும் அந்த சமயத்துக்கு, அந்த ஆசாமிக்கு (சொல்கிற, சொல்லப்படுகிற, ஆசாமிக்கும்; மற்றவருக்கும்) அது முடிவாக இருக்கலாமே தவிர எல்லோருக்கும், எப்போதுமான முடிவு அல்ல என்கிற நினைப்புடன் விமரிசனத்தை காண அணுகுபவனுக்குத்தான் விமரிசனம் தன் முழுப்பயனையும் தருகிறது என்று நான் நினைக்கிறேன்.

கவிதையின் எல்லைகளைப் பற்றி பார்க்கலாம்.

கவிதைக்கு எல்லையுண்டா? அது எதனால் ஏற்படுகிறது என்கிற சிந்தனை அவசியம்.

கவிதையில் இந்த விஷயங்களைத்தான் சொல்லவேண்டும், வேறு சிலதை சொல்லக்கூடாது என்றெல்லாம் நமது முன்னோர்கள் நம்பினார்கள். எழுதியும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கவிதைக்கான விஷயம் என்று தனியாக ஏதோ இருப்பதாக ஏற்பட்ட நினைப்பு இடைக்காலத்தில் எழுந்து பல இலக்கிய மொழிகளில் செயல்பட்ட விஷயம் என்று ஏற்றுக்கொண்டாலும்கூட, இன்றுவரை, சமீபகாலம்வரை அப்படி ஒரு நினைவிருந்து வந்திருக்கிறது. இந்த நினைவை ‘வேளூர் கந்தசாமிக் கவிராயர்’ (புதுமைப்பித்தன்) தனது ‘மாகாவியம்’ என்கிற கவிதையில் எடுத்துச்சொல்லி சாடியிருக்கிறார். இந்தியாவில் கவிதைக்கு விஷய எல்லை என்பது தமிழில் புதுமைப்பித்தனுடனும், ஹிந்தியில் ஆக்யேயாவுடனும், மற்ற மொழிகளில் வேறு பலருடனும் உடைந்துவிட்டதாக தெரிகிறது. எனினும், அப்படி ஒன்றும் விஷய எல்லை என்பது செயல்படவில்லை என்று சொல்ல முடியாது.

உதாரணமாக, ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளை எடுத்துக்கொண்டால் பழைய கவிதையின் விஷய எல்லை சிறப்பாகவே செயல்படுவது தெரிகிறது. இது கவிதை மரபு எல்லைகளை மீறி வரவில்லை என்பதும் தெரிகிறது. பாரதியாரிலும் இந்த விஷய எல்லைகள் மீறப்படவில்லை என்றாலும் கவிதை என்கிற அளவில் அவர் வசனகவிதைகள் உருவமும் ஆழமும் பெற்றுவிடுகின்றன. அப்படி பிச்சமூர்த்தி கவிதையில் அமையவில்லை என்பதால் இப்போது ந.பி.யின் கவிதைகளைப் படிப்பவன், ‘இது கவிதை அல்ல’ என்கிற தீர்மானத்துக்குதான் வரவேண்டியதாக இருக்கிறது. புதுக்கவிதையல்ல, கவிதையாக இருக்கலாமோ என்கிற நினைப்பும் போக, கவிதையாகவும் அமையவில்லை என்கிற நிச்சயம் இன்று ஏற்படுகிறது.

காமராஜன், வைரமுத்து, மேத்தா போன்றவர்கள் பிச்சமூர்த்தியை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் கவிதைகளிலும் உள்ளடக்கத்தில், வேண்டுமென்றே அவர்கள் புரட்சி செய்வதாக முயன்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை புரட்டிப்போட்டு, எதிர்மறையாக எதுகை, மோனை, சிந்தனை என்றில்லாமல் சொன்னாலும் அவையும் கவிதையாக அமையவில்லை என்று காணமுடிகிறது. பிச்சமூர்த்தி, கண்ணதாஸன் இருவரும் விஷய எல்லைகளை பழைய அளவில் ஏற்றுக்கொண்டதாலேயே கவிதை என்று செய்தாலும் அவர்களுக்குக் கவிதை கைவரவில்லை என்று சொல்லவேண்டும். ஜனங்கள் பாராட்டுகிறார்களே என்று சொல்லாதீர்கள் - கவிதையை ஜனங்கள் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் கிடையாது! ஜனங்களையும் மீறித்தான் கவிதை எந்த அளவிலும் சொல்லப்படுகிறது.

பழைய கவிதை விஷய எல்லைகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக கவிதை -புதுக்கவிதையாகவே - செய்ய முடியும் என்று செய்து காட்டியவர் ஷண்முக சுப்பையா. பிச்சமூர்த்தி புதுக்கவிதை செய்ய ஆரம்பித்த இரண்டாவது காலகட்டத்திலேயே இவரும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தவர். பிச்சமூர்த்தியை முன்மாதிரியாகக்கொண்டு எழுதி, ஓரளவுக்கு வெற்றிகண்டவர்கள் பலர் - தி. சோ. வேணுகோபாலன், எஸ். வைதீஸ்வரன் போலவே இவரும் கொஞ்ச காலத்துக்குப்பின் கவிதை செய்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆனால், எழுதியவரையில் விஷய எல்லைகளை மீறி, புதுக்கவிதைகளை கவிதையாகவே செய்துகாட்டியவர் ஷண்முக சுப்பையா என்பதற்கு அவருடைய ஒவ்வொரு கவிதையையுமே உதாரணமாக எடுத்துக்காட்டலாம். ‘நாய்க்காட்சி’, ‘காவற்காரன்’ முதலிய கவிதைகள் சிறப்பான உதாரணங்களாக அமைகின்றன.

கவிதைக்கு விஷய எல்லைகள் பற்றி நிறையவே சொல்லலாம். ஒருவிதத்தில் விஷயம் பற்றி எல்லை இல்லை என்பதும் உண்மை. எல்லை உண்டு என்பதும் உண்டு. கவி அனுபவத்துக்கு உட்படாத விஷயம் என்று உலகில் எதுவும் இருக்க இயலாது. இதனால்தான் ‘குண்டகர்’ என்கிற சமஸ்கிருத காவிய விமரிசகர் யதார்த்தமில்லாமல் இலக்கியமே இல்லை என்கிறார். கனவுலக இலக்கியமும்கூட உண்மையில் யதார்த்தத்தில் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்றிருப்பதுதான் என்கிறார். யதார்த்தத்தை கட்டிவைத்துவிட்டுக் கவிதை செய்ய எவராலும் முடியாது. வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ் என்கிற அமெரிக்கக் கவி இதையேதான், ‘கவிதை என்பது அது சுட்டிக்காட்டுகிற பருப்பொருள்களில்தான் இருக்கிறது’ என்கிறார்.

இந்த நினைப்பு வருவதற்கு முன் சாஸர் காலத்திலிருந்து ஷெல்லி, கீட்ஸ் வரையில் கவிதையில் விஷயம் என்கிற எல்லை பலவிதங்களில் ஆங்கிலக்கவிகளிடையே ஆட்சி செலுத்தியிருக்கிறது. லிரிகல், மெடாபிஸிகல், ஸடைரிக், ரொமாண்டிக் என்று பல தளங்களில் விஷய எல்லைகள் கவிதையை ஆண்டுவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஷயஎல்லை கொடுங்கோன்மை விட்மனின் கவிதைகளில் மாறுவதைப் பார்க்கிறேன். ‘Where Lilacs last in the Dooryard blooded என்பதிலிருந்து ‘Song of India போன்ற கவிதைகளில் பார்க்கலாம். எட்கார் ஆலன் போவின் கூற்று, ‘ஒரு நீளக் கவிதை என்பது சாத்தியமல்ல’ என்பது விஷய எல்லையை எதிர்த்து சொல்லப்பட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. போவை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிற போதலேர், மல்லார்மே, ரிம்போ என்பவர்கள் சரியாக புரிந்துகொண்டுதான் ஐரோப்பாவில் புதுக்கவிதைக்கு அடிக்கல் நாட்டினார்கள் என்றும் சொல்லவேண்டும்.

கவிதைக்கு எல்லைகளை வகுப்பது விஷயத்துக்கு அடுத்தபடியாக மொழியாகும். இந்த மொழியென்பதில் உள்ளவை மரபு, பிராந்திய பண்பாட்டின் பழக்கவழக்கங்களில், மதப்போக்கின் விளைவு. இது எல்லாமாக சேர்ந்து கவிதைக்கு ஒரு எல்லையை, பல எல்லைகளை, விதிக்கின்றன என்பது சொல்லவேண்டிய விஷயம்.

கவிதை மொழியால் எல்லை வகுக்கப்படுகிறது என்பதைத்தான் கவிதையை மொழிபெயர்ப்பது கடினம் என்றும், சாத்தியமே இல்லையென்றும் கூறி நாம் சுட்டிக்காட்டுகிறோம். மொழியில் வார்த்தைகளுக்கு அர்த்தபாவங்கள், புனை கற்பனைகள் ஏற்படுவது பிராந்திய மதப்பழக்க வழக்க அடிப்படைகளில் ஆகும். இதை மொழிபெயர்த்துத் தருவது சிரமமாக இருக்கிறது.

கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழி, பண்பாட்டு, மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல. நல்ல கவிஞன் எவனும் இலக்கண விதிகளாலோ, செய்யுள் மரபாலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை. அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும். ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல.

கிரேக்க கவிகளில் தொடங்கி, சமஸ்கிருத, தமிழ், அராபிய, பர்சிய, ஹீப்ரூ, கவிகள் எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் மொழி, பண்பாடு, கலாச்சாரக் கட்டுப்பாடு சிறப்பாகவே தெரிகிறது. எனினும், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கவிதை செய்யவே எந்த மொழிக் கவிஞனும் கவிதை செய்கிறான். எல்லைகளை மீறுகிற ஒரு காரியத்தில்தான் கவிதையே பிறக்கிறது என்றுகூட சொல்லலாம். இதையே ‘கவிதை த்வனி’ என்று ஆனந்தவர்த்தனர் சொன்னதாக ஏற்றுக்கொண்டால்கூட தவறில்லை என்று எனக்கு தோன்றுகிறது. கவிதை மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கவிதைத் த்வனி ஏற்படுகிறபோதுதான் வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கிடையில் உள்ள மௌனத்திலும், அர்த்தங்களிலும், அர்த்தங்களுக்கிடையே உருவாகிற அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டதிலுமே கவிதை உருவாகிறது. இதையே பின்னர் தோன்றிய குண்டகர், ‘வக்ரோக்தி தனிமைப்பட்டது. யாருக்கும் அதுவரை கைவராதது’ என்று சொன்னார். மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லோருக்கும் கைவந்தவை. இவைகளைத் தாண்டி, இவைகளைப் புறக்கணித்துவிடாமல் ‘வக்ரோக்தி’ சாத்தியமாகிறபோதுதான் கவிதை உண்டாகிறது.

விஷய எல்லைகளையும், மொழி, பண்பாடு, கலாச்சார எல்லைகளையும் மீறி கவிதை செய்ய முயல்பவர்கள் அவரவர் காலத்து புதுக்கவிதைக்காரராக இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவர் அவர் காலத்தில் புதுக்கவிதைக்காரர். சீவகசிந்தாமணி ஆசிரியர் அவர் காலத்தில் புதுக்கவிதைக்காரர். சிலப்பதிகார ஆசிரியர் அவர் காலத்தில் புதுக்கவிதைக்காரர். பாரதியார் அவர் காலத்தில் புதுக் கவிதைக்காரர். பாரதிதாஸனோ கண்ணதாஸனோ இந்த கணக்கில் அகப்படவில்லை. நகுலனும் ஷண்முக சுப்பையாவும் மயனும் இன்று ஞானக்கூத்தனும் புதுக்கவிதைக்காரர்களாகச் சொல்லப்படுகிறபோது இவர்கள் மொழி, பண்பாட்டு கலாச்சார இலக்கண செய்யுள் மரபை மீறிச் சிலது செய்ய முன்வந்தார்கள் என்பது முக்கியமான விஷயம்.

வால்ட்விட்மனும், போதலேர், மல்லார்மே, ரிம்போ போன்றவர்களும், வசன கவிதையில் சுப்ரமணிய பாரதியாரும் செய்ய முயன்றது இதுவேயாம். கவிதையின் மொழி இத்யாதி எல்லைகளை உணர்ந்து அவற்றை மீறிச் செயல்பட்டு கவிதை செய்யவே அவர்கள் முயன்றார்கள்.

இன்னொரு விஷயமும் நினைவில் கொள்ளவேண்டும். சங்கீதத்தை மொழியை கடந்தகலையாக சொல்லுகிறார்கள். சங்கீதத்தின் மொழி பிரபஞ்சம் முழுவதுக்கும் உரியது என்கிறார்கள். இது காரணமாகத்தானோ என்னவோ, மொழிகளால் எல்லைகள் வகுக்கப்பட்ட கவிதை சங்கீதத்துடன் சேரும்போது பிரபஞ்ச பாஷையாக மாறிவிடுகிறது என்று ஒரு மரபு நம்மிடையே ஏற்பட்டிருக்கிறது. ஈஸ்வரனுக்கு அர்ப்பணமான கவிதையெல்லாம் எந்த மொழியில் சாகித்தியம் இருந்தாலும், சங்கீதத்துடன் பக்தியும் சேரும்போது பிரபஞ்ச மொழியாகிவிடுகிறது என்றும், பாடப்படுவதே கவிதையின் இலக்கு என்றும் இடைக்காலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது ஓர் இந்திய மரபு என்றாலும் பரவலாக உலகம் பூராவிலும்கூட இந்த  சிந்தனை இருக்கிறது.

ஜெயதேவர் அஷ்டபதியில் இசையையும் கவிதையையும் சேர்த்தபோது சமஸ்கிருத கவிதை தரம்குறைய ஆரம்பித்துவிட்டது என்று சுப்பைய தீக்ஷிதர் என்கிற மொழிப்பண்டிதர் சொல்லுகிறார். இது அவ்வளவாக ஏற்கப்படாத ஒரு இந்திய மரபு ஆனால் இப்படியும் ஒரு சிந்தனை இருந்தது என்பது தெரிகிறது.

விட்மன் தொடங்கி, பாரதியார் வசன கவிதைகள் மூலம் தமிழர்களை எட்டிய புதுக்கவிதையில் இசையம்சம் குறைவு என்பது சொல்லாமலே தெரிகிறது. இந்த, இசையைவிட்டு கவிதையை பிரித்து காண்பதை உலகில் பல மொழி புதுக்கவிதைகளில் காணமுடிகிறது. புதுக்கவிதை என்கிற முயற்சியேகூட ஒருவிதத்தில் கவிதைக்கு ஒரு பிரபஞ்ச அணி அலங்கார அடிப்படையை ஏற்படுத்தித் தருவதாக வைத்துக்கொள்ளலாம். பழைய அணி அலங்காரங்கள் எல்லாம் மொழியளவில் வருபவை. அவை ஒரு சார்பு எல்லைகளை கவிதைக்கு வகுத்துத் தருகின்றன. அதை மீறி கவிதை செய்வது, எல்லைகளை தாண்டி வருவது புதுக்கவிதையில் உபயோகப்படுகிற அணி அலங்காரங்களினால், அவை மொழி சார்பாக அமையாமல் வந்தால், சாத்தியமாகிறது.

புதுக்கவிதை இயக்கம் உலகில் பெருமளவிற்கு கவிதையை இசையின் பிடியிலிருந்து தளர்த்திவிட முயலுகிறது. புது அணி அலங்காரங்கள் புதுக்கவிதைக்கு தேவைப்படுகின்றன. இவை மொழி மூலமாக ஏற்படாமல் விஞ்ஞான சிந்தனை, இன்றைய தத்துவ தரிசனம், மதமறுப்பு இவற்றின் மூலமாக ஏற்பட்டு, சங்கீதத்தில் போல கவிதைக்கும் ஒரு புது பிரபஞ்ச மொழிக்கு -  மொழிகளைக் கடந்த மொழிக்கு - ஏற்பாடு செய்து தரலாம் என்றுதான் தோன்றுகிறது.

மூன்றாவதாக, கவிதைக்கும் - புதுக்கவிதைக்கும் ஏற்படுகிற எல்லைகள் கவிதையை வாசகர்களின் எதிர்கொள்ளும் சக்தியிலிருந்து விளைகின்றன என்பது வெளிப்படை. இதை கம்யூனிஸக்காரர்கள்தான் முதன்முதலில் இக்காலத்தில் இனம்கண்டு சொன்னவர்கள். மக்கள் இலக்கியமே இலக்கியம் என்கிற கோஷம் இதன் விளைவு. இலக்கியத்தை, கவிதையை ஏற்றுக்கொள்ளும் தரத்தை மக்களிடையே குறைத்துவிட வழிகள் செய்துவிட்டு உயர் கவிதை வரவில்லையே என்று அழுதால், கூடி அழலாமே தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. கவிதையை எதிர்கொள்பவர்களின் மனோநிலை, ரஸப்பக்குவம் எப்படி இருக்கிறது என்பது தமிழில் நிதரிசனமாகவே தெரியக் கிடக்கிறது.

‘சோஷியாலஜியில் ஆய்வுகள்’ என்று மக்களிடையே நடத்தி இந்த மனப்பக்குவம், ரஸனை அனுபவம் எப்படி எப்படி மாறுகிறது, உருப்பெறுகிறது என்று மேலைநாடுகளில் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ஒன்றும் நம்மிடையே மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், சமஸ்கிருத ஸாஹித்திய அழகு தத்துவ சாஸ்திரிகள் ஸஹ்ருதயர்கள் என்று ஒரு சிந்தனையை எடுத்துச் சொன்னார்கள். கவி சமைப்பவனே போன்ற வாசகர்கள்தான் ஸஹ்ருதயர்கள் என்று சொல்லப்பட்டவர்கள். கவி காரியம் என்பதை சமைப்பதற்கும் ஏற்பவனுக்கும் (உண்பவனுக்கும்) பொதுவாக வைத்து அவர்கள் கணித்தார்கள். அதாவது, நல்ல இலக்கியம் படைக்க எந்த மாதிரியான குணாதிசயங்கள், மேதை அம்சங்கள், தேவையோ அந்த அளவு வாசகர்களுக்கும் குணாதிசயங்கள் மேதை அம்சங்கள் தேவை என்று அவர்கள் அன்றே கண்டு சொன்னார்கள்.

இதன் உண்மையை நாம் காண்கிறோம். இன்று சினிமா பார்ப்பவர்களுக்கு வைரமுத்து கவியாக காட்சியளிக்கிறார். அன்று சினிமா பார்த்தவர்களுக்கு கண்ணதாஸன் கவியாக காட்சியளித்தார். ‘குமுத’த்தில் படித்து, புரியவில்லையே என்று குழம்புகிறவனுக்கு ‘குமுதம்’ துணுக்குக் கவிதை கவிதையாகவே படுகிறது.

ஆனால், புதுக்கவிதை கவிதையாகவே மாறி செயல்படுவதை மயன், ஷண்முக சுப்பையா, நகுலன், ஞானக்கூத்தன் என்று மரபிலும் அவர்களை ஒட்டிப் பின்வருகிற இருபது, முப்பது இன்றைய கவிகளிலும் காண்கிறோம். இப்படியேதான் போய்க்கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல விஷயம்; இதைவிட மேலாகவும் வரவேண்டும் என்பதுதான் எல்லைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய விஷயம், வரும். காலதேவன் அப்படியொன்றும் லோபியல்ல.

ஆனால், கவிதை என்பது கவிதைக்கு ஏற்பட்ட எல்லைகளை மீற முயலுகிறபோதுதான் கவிதையேயாகிறது. ‘இப்படிப்பட்ட கவிதையில் நல்ல கவிதை, கெட்ட கவிதை, புதுக்கவிதை, பழங்கவிதை என்று எதுவும் கிடையாது. கவிதை மட்டும் உண்டு’ என்று ‘வக்ரோக்தி ஜீவிதம்’ ஆசிரியர் சொல்லுகிறார். அது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

ஒரு நல்ல வாசகன் இருந்தால் போதும். அவன் ஸஹ்ருதய போக்கினால் கவிதை உண்டாகிவிடும் என்பது இலக்கிய அனுபவமாக தெரிகிறது. நல்ல வாசகன் நல்ல கவிதைகளைப் படித்து ஸஹ்ருதயனாகிறான். ஆதாரம் முதல் கோழியா முட்டையா என்கிற விசாரணை போன்றது இது. இரண்டும் அவசியம் என்பது எல்லைகளை வகுக்கிறது.

முதல் வெளியீடு: ‘ழ’ இதழ் 28, அக். 1988

விருட்சம் இதழில் மறுபிரசுரம்

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

களம் - தாமரைக்கண்ணன் புதுவை

என்னுடைய நண்பர்கள் இருவர் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தார்கள். ஒன்றே போல் பணி, அலுவலகத்திலிருந்த பலரில் திறமைசாலிகள் இருவரும்தான். அவன் பல தோல்விகளில் இருந்து எழுந்துகொண்டிருந்தான். அவள் மெத்தப்படித்த பெண். எல்லோரும் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருக்க அவர்கள் காதலர்களானார்கள். அவள் அவனை மணந்துகொள்ள எண்ணியிருந்தாள், அவனுக்கும் அந்த எண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவரே பணியில் மேலெழுந்து செல்லவேண்டிய கட்டாயம். அந்தப்பெண் எளிதாக அடுத்த நிலைக்கு சென்றுவிட்டாள். பதவி, ஊதியம், மதிப்பு எல்லாம் கூடியது. ஏதோ ஒருகணத்தில் அவன் சரிய ஆரம்பித்தான் நிலைகொள்ள முடியவில்லை. அவள் காதலனைப் பற்றிக்கொள்ள நினைத்து கைதுழாவினாள். அவளுக்கு அவன் தென்படவே இல்லை. அவளது கனவுகள் எல்லாம் சிதறிவிடும் என்ற அச்சம், கூவிக்கரைகிறாள் கண்ணீர் பெருகுகிறது. பதற்றம் அதிகரிக்கின்றது அவளுக்கு அவன் காணாமலே போய்விட்டான். அவள் காலடியில் கிடைக்கும் அவனது உடலை அவள் கவனிக்கவே இல்லை, பலமுறை தழுவிய கரங்கள்.  இன்னும் அவள் அவனுக்காக தினமும் அழுகிறாள்.

சங்க இலக்கியம் பிரிவை பிரிவாற்றாமையை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே இருக்கிறது. பொருள் தேடிச்செல்லும் பிரிவு, போருக்கு செல்பவனின் பிரிவு, பிறபெண்களிடம் சென்றவனால் ஏற்படும் பிரிவு, தொலைநிலத்திலிருந்து காதல் கொள்ள வந்தவன் மீண்டும் வருவானா என்ற ஏக்கமும் பயமும் இவ்வாறெல்லாம். 

சங்க இலக்கணப்படி தலைவன் தலைவி என்ற வழக்கு மட்டுமே இருக்கும் தனிப்பட்ட  பெயர்கள் தெரியாது. காப்பியத்தில் கண்ணகி என்றும் மாதவி என்றும் பெயர்கள் தெரியும். மாதவியின் பிரிவை இன்னும் மேற்சென்று இளங்கோவால் சொல்ல முடிகின்றது, ஏனெனில் கோவலனுடனான அவளது காதல்வாழ்வே சிலம்பில் பெரிதும் பேசப்படுகிறது.  கண்ணகி மதுரையில் கற்புடைய ஏழு பெண்களை முன்வைத்து வஞ்சினம் உரைக்கிறாள் அவர்களுள் ஆதிமந்தியும் ஒருத்தி.

ஆதிமந்தி சோழ இளவரசியாக கருதப்படுபவள். பொன்னி நதி கொண்டுசென்ற தனது காதலன் ஆட்டனத்தியை மீட்டவள். அவள் பாடியதாக ஒரு செய்யுள் குறுந்தொகையில் உள்ளது.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்தக் கோனை

யானுமோர் ஆடுகள மகளே என்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே


உழவர் நிரம்பிய விழாவிலும் 

பெண்களுடன் கைகோர்த்து ஆடும் கூத்திலும்

எங்கும் காணவில்லை தலைவனை

நானும் ஒரு ஆடுகள மகள்தான்

என்கைவளை நெகிழக்காரணமான பெருமைக்குரிய

அவனும் ஆடுகள மகன்தான் 

ஆதிமந்தி காதலனை விழாவிலும் கூத்திலும் தேடுகிறாள், அவளும் ஆடுகள மகள்தான் ஆனால் அவனைக்கான முடியவில்லை. பிரிவுக்குக்காரணம் தொலைவென்பது மட்டுமல்ல, அருகாமையுமாக இருக்கலாம்.

காஹா சத்த சஈ என்னும் பிராகிருத தொகை நூலொன்றின் பாடல் பின்வருவது ( சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் மொழிபெயர்ப்பு )  

தன் காதலனின் அஸ்திச்சாம்பலை 

உடலெல்லாம் ஓயாது பூசுகிறாள் இளம் காபாலிகை

வியர்த்து ஒழுகிறது அவளுக்கு

அஸ்தியின் இன்பம்

முதலிரு வரிகளே மனதை மோதி அறைகின்றன. காபாலிகையும் காதலனை பிரிய விரும்பவில்லை, தன்மேலேயே பூசிக்கொள்கிறாள்.

***

ஆதிமந்தியார் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

பேரழகின் போதம் - பிரபு மயிலாடுதுறை

கவிஞர் ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகளை கடந்த சில ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். மண்ணும் நீரும் இலையும் தளிரும் மேகமும் வானமும் மழையும் நிறைந்திருக்கும் உலகை உலகின் அழகை அப்பேரழகின் முன் வியந்து நிற்கும் போதத்தை வேராய் கொண்டவை அவரது கவிதைகள். இயற்கையும் இயற்கையின் பேரெழிலும் அப்பேரெழிலின் மீது கொள்ளும் கவிமனத்தின் தீராக் காதலும் அவரது கவிதையின் பேசுபொருட்கள். எல்லையின்மையின் பேரெழில் தன் சௌந்தர்யங்களுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்களை சிறு சிறு எல்லைகளில் புதைத்துக் கொள்கிறார்கள். சிறு சிறு அடையாளங்களுடன் பிணைத்துக் கொள்கிறார்கள். கவிஞன் என்னும் ஆளுமை எல்லைகளையும் அடையாளங்களையும் தகர்த்து நிற்கிறான். பேரெழிலின் சௌந்தர்யத்தில் பறந்து எழுகிறது அவனது அகம். அதுவே அவன் சஞ்சரிக்கும் வானம். எல்லைகளுடன் பிணைத்துக் கொள்ளும் ஜீவன்கள் அடையும் துக்கம் அவன் நிற்கும் பூமி. துக்கம் நிறைந்திருக்கும் சக ஜீவன்களின் துயரை தன் துயராகவும் கொண்டு உணர்ந்து வலி சுமந்து பேரெழிலின் முன் தன் சொற்களை முன்வைக்கின்றன ஆதித்ய ஸ்ரீநிவாஸின் கவிதைகள். 

நம் மரபில் தேவாரமும் திருவாசகமும் ஸ்ரீநாலாயிர திவ்ய பிரபந்தமும் இறைவனின் தோற்றப் பொலிவைப் பாடிக் கொண்டேயிருக்கின்றன. சம்பந்தருக்கு அவரது இறைவன் எப்போதும் பிறை சூடியவன். புலித்தோலாடை அணிந்தவன். சாம்பல் பூசியவன். பலவித மலர்களால் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன். இது ஒருபுறம். இன்னொரு புறம் அவரது இறைவன் கருணை மிக்கவன். கருணையே அவனது இயல்பு. அந்த கருணை இயல்பின் முன் சம்பந்தரும் நாவுக்கரசரும் மாணிக்கவாசகரும் அருள் வேண்டி அரற்றுகின்றனர். அந்த அருள் வேட்டல் அகங்காரத்திலும் அறியாமையிலும் பிணைந்திருக்கும் சக ஜீவன்களின் துயர் நீக்கத்துக்கானது. இறைவனின் தோற்றத்தை தீராத சொற்களால் வர்ணிப்பதும் இறைவனின் கருணை முன் உளம் நெகிழ்ந்து அரற்றுவதும் தமிழ்க் கவிதை வரலாற்றில் செறிவான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தேவாரம் பிரபந்தம் தொடங்கி குமரகுருபரர் வழியாக தாயுமானவர் வள்ளலார் எனப் பயணித்து பாரதி வரை அந்த மரபு தொடர்கிறது. 

உணர்வு உருகி பெருகும் சொற்களிலிருந்து நவீன் கவிதை மொழி தன்னை தொலைவில் வைத்துக் கொள்வதை சௌகர்யமாக உணர்ந்தாலும் இயற்கையின் பேரெழிலை ஆராதிக்கும் இயற்கை முன் அகம் கரைந்து நிற்கும் கவிஞர்கள் உருவாகி வந்த படியே இருக்கிறார்கள். ஆதித்ய ஸ்ரீநிவாஸ் அவ்விதமானவர். 

பெருவிருட்சம் அடர்ந்த

இவ்வனாந்திரத் தனிமையில்

இடறி விழ நழுவி

மேலெல்லாம்

நிலவு வழிந்து கிடக்கும்

இப்பொழுதில்

உன்னைப்பற்றியே

நினைத்துக்கொண்டிருக்கிறேன்


வனத்தின் ஏதாந்தத்தின் மேல்

ஒரு சொல்கூட துணையில்லா வானம்

கடலின் ஆழத்தில் எழுகிறது

அழுந்திய காலங்களின் குரலொன்று

நான் என் சின்ன பிரிவை

அவ்வளவு‌ கண்ணீருடன்

அணைத்து இன்புறுகிறேன்

உயிர்த்துடிப்பின் ஒலிகளாலும் காட்சிகளாலும் ஆனது காடு. தன்னுள் வாழும் எல்லா உயிர்களையும் கருக்கொண்டு தனிமை கொண்டிருக்கிறது காடு. காட்டின் தனிமைக்குள்  தன் வெள்ளொளியை நிரப்பிக் கொள்கிறது மதி. மௌனத்தின் அடர்த்தி கொண்ட இப்பிரதேசத்தில் பயணிக்கும் இவன் யார்? யாரைப் பிரிந்திருக்கிறான் இவன்? பிரிவின் துயர் கொண்டவன் எவ்விதம் காட்டை அதன் மௌனங்களுடனும் வசீகரத்துடனும் காண்கிறான்? இவன் பரம்பொருளைப் பிரிந்திருக்கும் ஜீவனை அல்லது ஜீவன்களைப் பேசுகிறானா? ஒரு பிரிவில் அழுந்திய காலங்களின் குரல் எழுவது எதனால்? காலகாலமாக ஒரே அரற்றலும் தவிப்பும் தானா ஒலியெழுப்பிக் கொண்டே இருக்கிறது? இத்தனை ஒலி கேட்டும் ஏன் வானம் ஒரு சொல் கூட துணை கொள்ளாமல் இருக்கிறது ? 

இந்த கவிதை உறவின் பிரிவுக்கு அப்பால் இருக்கும் சற்றே பெரிய துக்கத்தைப் பேசுவதாக நினைக்கிறேன்.  

சொல்தான்

அழைத்துச்சென்று

நதியைக் காட்டியது

மலரைக் காட்டியது

யானைகளைக் காட்டியது

இலைகளைக் காட்டியது

வனங்களை

கடலை

வானத்தைக் காட்டியது

பின்

அளப்பரியது என்றது

சொல்லில் அடங்காது என்றது

பொருள் நேரானதல்ல என்றது

இரவின் ஓசைகளைக் கேள் என்றது

விழு நட்சத்திரம்தான் ஆதிச்சொல் என்றது

சொல்லுக்கு அப்பால் பார் என்றது

புலன்களால் அல்ல என்றது

ஆத்மம் என்றது

சொல்லின்மையில் ஆழ்ந்து போ என்றது

சிலருக்கு

சொல் தேவையில்லை

ஒரு மலரைக் கண்டால் போதுமென்றது

கருவில் பரு வடிவ உடல் கொள்ளும் முன்னே கருவில் நான் என்னும் உணர்வு கொள்கிறது ஜீவன். நான் என்னும் உணர்வு ஒரு உண்மை. நான் என்னும் உணர்வு உண்மையின் முதல் படி. பற்றால் உலகனைத்தையும் தழுவிட விழைகிறது மனிதப் பிரக்ஞை. லட்சம் மனிதர்களில் ஒருவனே பற்றென்னும் சமுத்திரத்தைக் கடக்க உதவும் சொல்லின் துணை என்னும் படகைக் கைகொள்கிறான். அவனே கவிஞன். அவனை சொல்லே ஞானத்துக்கு கொண்டு செல்கிறது. சொல்லே அவனுக்கு ஞானத்தைப் போதிக்கிறது. 

சொல் எனும்‌ தெய்வம்

சொல்லின் சமிக்ஞைகள்

வான்நீலம் பாவிய விரல்களால்

அழைத்துக்கொண்டே இருக்கிறது

எழுந்து செல்வதற்கான

ஆணை ஆழத்திலிருந்து

ஒரு சொடுக்கலாக எழுந்தது

வானமே அலையென

விழுந்து அள்ளிச் சென்றது

ஆயிரம் வண்ணங்கள் காட்டி

ஓராயிரம் இருள் சொரிந்து

கசடுகளோடு அனைத்துமென்றது

இசையின் பறவைகளால் ஆன

ஒரு அந்தியை வரைந்து காட்டி

துயரத்தின் ஆழத்தில் உரையும்‌

இன்பத்தைக் காண் என்றது

அதனதன் தன்மைக்கு முன் எத்தன்மையதென

அதனதன் தன்மை

எத்தன்மை நோக்கி

எழுகிறதெனக் காணச்செய்து

வனத்தீ எரிந்தடங்குகையில்

என்னை

சொல்லின்மையின் சமிக்ஞைகள்

கேட்கும் வெளியில்

விட்டுச் சென்றது

சொல் கவிஞனை ஒரு பருவத்தில் மௌனப் பெருவெளியில் கொண்டு நிறுத்துகிறது. கவிஞன் சொல்லாகவே தன்னை உணர்ந்தவன். மௌனத்தின் பிரும்மாண்டத்தை சொற்களாகவும் உணர்வார்கள் கவிஞர்கள். 

மொய்க்கும்  இருள்கூட்டம்

அத்தனை வேகத்தில் விலகுவதில்லை

அவ்வப்போது கடக்கும்

மின்மினி ஒன்றின் ஒளியில்

காட்சியாகிறது

அடர் இருள்

நெடும்பிறவி தவம்கொண்டு

இழுத்து வந்துள்ளேன்

சுடரும்‌ தீபமொன்றை

சுடரொளி கவரும்

சிறு வட்டத்திற்குள்

இப்பிறவி நலுங்குகிறது

பிறப்பு இறப்பு, உறவு பிரிவு, சுகம் துக்கம் என இந்த இருமைகளின் ஆட்டத்தையே ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். எப்போதும் ஒரு வலி இருக்கவே செய்கிறது. அந்த வலியை புரிந்து கொள்ள வகுத்துக் கொள்ள இயலவில்லை மனிதர்களால். அவர்களின் வலிக்கு சொல்வடிவம் தருகிறான் கவிஞன். 

இத்தனை தூரம்

பயணித்துவிட்டேன்

குதிரைகளின்

களைப்பொலி

வனமெங்கும் ஒலிக்கிறது

இனி திரும்பிச் செல்ல வேண்டும்

எத்தனை பிறவித்தூரமோ

அத்துனைக்கும்

காலநேரம்

காலத்துள் துறந்தலையும்

பிச்சைக்காரர்கள்

சிரிக்கிறார்கள்

நேரத்தை வைத்தாடும்

நம் பகடையாட்டங்களை

இந்த மண் பிச்சைக்காரர்களின் மண். மண்டையோட்டுக் கப்பரையில் பிச்சை எடுக்கிறான் ஆதிசிவன்.  தன் அகங்காரத்தை அவனது கப்பறையில் பிச்சையாக இடும் ஜீவனுக்கு முக்தியை அளிக்கிறான் அப்பிச்சைக்காரன். வாமனனாக திருமாலும் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவன் தான். எல்லையின்மை தரும் சௌகர்யங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில பிச்சைக்காரர்கள். அவர்கள் எல்லை அமைத்துக் கொண்டு அசௌகர்யமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கண்டு மெலிதாகப் புன்னகைக்கிறார்கள்.  

நிரந்தர அடிமை

அடிமையாக்கப்படுதல் வேறு

அடிமையாதல் வேறு

ஒன்றில் ஆணவம் வெல்கிறது

மற்றொன்றில்

அழிகிறது

ஒன்று இரத்தம்

மற்றொன்று

கண்ணீர்

ஒன்று சுமை

மற்றொன்று

ஏகாந்தம்

ஒன்று அச்சம்

மற்றொன்று

சரனாகதி

ஒன்று முறிவு

மற்றொன்று

பறத்தல்

ஒன்று எஜமானனது

மற்றொன்று

தந்தையினது

***

Share:

நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர் க.மோகனரங்கன் மொழிபெயர்த்த உலகக் கவிதைகளின் தொகுப்பான "நீரின் திறவுகோல்" நூல் குறித்து கலந்துரையாடினோம். நெல்லை குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் படித்துறையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பதினாறு பேர் பங்கேற்றனர். கவிஞர்கள் ஆகாசமுத்து, வே.நி.சூர்யா, ஆனந்த் குமார், வ.அதியமான், பாபு பிரித்விராஜ் ஆகியோர் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்துகொண்டனர். கலந்துரையாடலில் பேசப்பட்டதின் உரையாடல் கட்டுரை இது. கட்டுரையின் வசதி கருதி சில இடங்கள் சுருக்கப்பட்டுள்ளன. 

மதார்: நெல்லை இலக்கியத் திருவிழா அமர்வில் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுபிடம் நான் கேட்ட கேள்வி: 

"கவிதை மொழிபெயர்ப்பை மட்டும் ஏன் நீங்கள் செய்யவேயில்லை?" 

அதற்கு அவர் கூறிய பதில்: "கவிதையை எவராலும் மொழிபெயர்க்கவே இயலாது; அப்படி செய்தால் அந்தக் கவிதை இறந்துவிடும்" 

குளச்சலின் இந்தப் பதிலை என்னால் முழுமையாக ஏற்க இயலவில்லை. நான் அவரது பதிலை ஒட்டியும், விலகியும் சிந்தித்தேன். பிறகு தோன்றியது. ஆம் சரிதான்! அவர் சொன்னதில் 50 சதவிகிதம் சரியே! கவிதையை எவராலும் நூறு சதவிகிதம் மொழிபெயர்த்து விட முடியாது. கவிதை மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் ஒன்று அந்தக் கவிஞருக்கேயுரிய மொழி நடை, வட்டார வழக்கு அதை அப்படியே மொழிபெயர்க்கும்போது அதிலுள்ள கவித்துவ அம்சம் வெளியேறிவிடும் வாய்ப்புண்டு. இன்னொன்று அந்தக் கவிதையை அதன் கவிதை உணர்வை சரியாகக் கடத்திவிடும்போது கவிஞரின் நடை, மொழி வழக்கு போன்றவற்றில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த இயலாது. இதில் கவிஞர் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "நீரின் திறவுகோல்" நூலானது இரண்டாவது வகையில் அமைகிறது. இந்தத் தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும் அந்தக் கவிதை உணர்வின் உயரத்தை ஒரு வாசகராக நாம் அடையலாம். அதுவே இத்தொகுப்பின் வெற்றி. அதே போல மொழிபெயர்ப்பின் பிரச்சினையில் கூறிய முதல் சிக்கல் இத்தொகுப்பில் உள்ளது. இதன் எல்லா கவிதைகளும் ஒரே நபர் எழுதியதைப் போன்ற தோற்றத்தை மொழிநடையில் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை, கவிதையை அப்படித்தான் மொழிபெயர்த்தாக வேண்டியிருக்கிறது. பிரம்மராஜன் மொழிபெயர்த்த "உலகக் கவிதைகள்" தொகுப்பு முக்கியமானது. உலகளாவிய பல்வேறு கவிஞர்களை, கவிதைப் போக்குகளை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பு அது. மொழிச்சிக்கலும், கவிதையை மூலத்தின் அதே நடையோடு மொழிபெயர்க்கையில் விடுபட்டுச் செல்லும்  கவித்துவ உணர்வும் அத்தொகுப்பின் பிரச்சினையாக இருந்தது. அதற்கு நேர் எதிர்த்தன்மையோடு கவிதை அம்சம் கெடாமல் "நீரின் திறவுகோல்" மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்க் கவிதைக்கு அறிமுகமாகிறது. இந்தத் தொகுப்பின் இன்னொரு தனித்த அம்சம் இதிலுள்ள எல்லாக் கவிதைகளும் மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பாகி தமிழுக்கு வருகிறது. அதனால் இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் உச்ச பட்ச கவிதை உணர்வை வாசகருக்குக் கடத்துகிறது. எனவே, இது மிகவும் முக்கியமான தொகுப்பாகிவிடுகிறது. 

சில கவிதைகளை வாசிக்கிறேன்.. 

கே.சச்சிதானந்தன் எழுதிய கவிதை - காந்தியும் கவிதையும் 


காந்தியும் கவிதையும்

ஒரு சமயம் காந்தியைக் காணவென

ஒரு மெலிந்துபோன கவிதை

அவருடைய ஆசிரமத்திற்கு வந்தது.

ராமனை எண்ணியபடி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்த காந்தி 

கதவோரம் காத்திருந்த கவிதையை கவனிக்கவில்லை. 

பஜனப் பாடலாக இல்லாமைக்கு

வெட்கமுற்று ஒதுங்கி நின்ற கவிதை

தொண்டையைச் செரும,

நரகத்தையே உற்றுநோக்கிய அந்தக் கண்ணாடி வழியாக

ஓரக் கண்ணால் பார்த்த காந்தி வினவினார் 

'எப்போதாவது நூல் நூற்றதுண்டா? 

குப்பை வண்டி இழுத்திருக்கிறாயா?

விடியற்காலையில் சமையலறையின்

புகைக்குள் புழுங்கியிருக்கிறாயா? 

என்றாவது பட்டினி கிடந்ததுண்டா?' 

கவிதை பதிலளித்தது. 

'கானகத்தில் ஒரு வேடனின் நாவில் பிறந்தேன்

மீனவனொருவனின் குடிலில் வளர்ந்தேன்

பாடுவதைத் தவிர பிறதொழிலெதுவும் பழகவில்லை.

முன்பு அரண்மனையில் இசைத்துக்கொண்டிருந்தேன்

செழுமையாகப் பொலிவுடனிருந்தேன்.

இப்போது தெருக்களில் அரைவயிற்றோடு அலைகிறேன்'. 

'நல்லது' ஓசையெழாது சிரித்தவர்

'அவ்வப்போது சமஸ்கிருதத்தில் பேசும் வழக்கத்தை

நீ விட்டொழிக்க வேண்டும். தவிரவும்

வயல்வெளிக்கு சென்று விவசாயிகள் பேசுவதை கவனி' 

ஒரு விதையாக மாறி நிலத்தை அடைந்த கவிதை, 

புது மழைக்குப் பிறகு உழுபவர்கள் வந்து

ஈர மண்ணைக் கீழ்மேலாக மாற்றிடக்

காத்துக்கிடந்தது.


ஆனந்த் குமார்: இந்தக் கவிதையை முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இந்தக் கவிதையில் ஒரு இந்தியப் பின்புலம் உள்ளது. இலட்சியவாதத்தின் பிரதிநிதியாக காந்தி வருகிறார். கவிதையின் அழகியல் அதற்கு எதிர்நிலையில் உள்ளது. இரண்டும் உரையாடும் அழகிய முரண் கவிதையாகிறது. 

அதியமான்: கவிதை எப்போதும் இலட்சியவாதத்திற்கு எதிரானது என நீங்கள் கருதுகிறீர்களா? 

வே.நி.சூர்யா: இந்த இரண்டு போக்குகளும் எப்போதுமே இருந்து வருபவை. 

ஆனந்த் குமார்: இலட்சியவாதிகள் எப்போதுமே அழகியலுக்கு எதிரானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையில் வரும் காந்தி. ஆனால் கவிஞர்கள் இலட்சியவாதத்தைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் சச்சிதானந்தன் அவர்களால் இந்தக் கவிதையில் இந்த இரண்டு நிலைகளையும் எழுத முடிகிறது. 

அதியமான்: கவிதை, இலட்சியவாதம் இரண்டும் வேறு வேறா? 

வே.நி.சூர்யா: நாமனைவரும் இங்கே கூடி தலையாய கவிதையைப் பற்றி உரையாடுவதே ஒரு இலட்சியவாத செயல்பாடுதான். 

ஆனந்த் குமார்: ஆம்.நிச்சயமாக..

அதியமான்: கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்ற கோணத்திலும் இந்தக் கவிதையை பார்க்கலாம்தானே? 

ஆகாசமுத்து: காந்தியின் அரசியல் ஆளுமையை உள்வாங்கி கவிஞர் சச்சிதானந்தன் இயற்கையோடு உறவாடும் எளிய உழவனோடு உரையாடும் வெளிப்பாடு இந்தக் கவிதை.

மதார்: உரையாடல் நகன்று நகன்று கவிதையில் அரசியலை நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது. இன்றுள்ள அரசியல் கவிதைகளில், தலித் கவிதைகளில் பிரச்சினையாகத் தெரிவது அதில் அரசியல் கச்சிதமாகப் பேசப்படுகிறது. தலித் வாழ்வியல் நுண்மையாக எழுதப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நிகழவேண்டிய கவிதை, கவிதை அனுபவம் அதை அந்தக் கவிதைகள் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடுகின்றனவோ என்றும் தோன்றுகிறது. அப்படி அதைத் தவறவிடாத ஒரு அரசியல் கவிதையாக இந்தத் தொகுப்பில் வரும் பெர்டோல்ட் பிரெக்டின் பின்வரும் கவிதையைச் சுட்டலாம் என நினைக்கிறேன் 


ஜெனரல் உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது 

ஜெனரல், உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது. 

அது காடுகளை அழிக்கும்,

ஒரு நூறு பேரை நசுக்கிவிடும்.

ஆயினும் அதில் ஒரு குறை உள்ளது.

அதை இயக்குவதற்கு ஒரு ஓட்டுநர் தேவை.

ஜெனரல், உங்களுடைய குண்டுவீச்சு விமானம் சக்தி வாய்ந்தது.

அது புயலைக் காட்டிலும் வேகமாகப் பறக்கும்

யானையை விடவும் அதிகம் சுமக்கும்.

ஆனால் அதில் ஒரு குறை உண்டு

அதை பழுது நீக்க ஒரு பணியாள் தேவை.

ஜெனரல், மனிதன் மிகவும் பயனுள்ளவன்

அவனால் பறக்கவும் கொல்லவும் முடியும்.

ஆனால் அவனிடம் ஒரு குறை இருக்கிறது,

அவனால் யோசிக்க முடியும்.


மயன் ரமேஷ் ராஜா: இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பாக நான் பார்ப்பது கவிதையைப் பற்றி பேசும் நிறைய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. 

ஈஸ்வரன: உரையாடலின் துவக்கத்தில் பேசியதையே ஒரு சந்தேகத்துக்காகத் திரும்பக் கேட்கிறேன். கவிதையை முழுமையாக மூலம் போலவே மொழிபெயர்ப்பது துளியும் சாத்தியமில்லாத ஒன்றா? 

வ.அதியமான்: ஒரு கவிதை எப்போதுமே இரண்டுவிதமான அம்சங்களால் ஆனது. ஒன்று உலகலாவிய மானுட ஆழ் மனத்தின் பொது அம்சம். இரண்டு கவிதை எழுதப்பட்ட மொழியின் நிலம் தேசம் பண்பாடு தட்பவெப்பநிலை வரலாறு ஆகியவற்றால் ஆன தனித்துவமான அம்சம்.இதில் ஒரு கவிதையின் பொது அம்சத்தை மட்டுமே ஒரு மொழியில் இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியம்.கவிதையின் தனித்துவமான அம்சங்களை பெரும்பாலும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியமில்லை.அதனால் கவிதை மொழிபெயர்ப்பில் கவிதையின் தனித்துவமான அம்சங்களை இழப்பது வழக்கமான ஒன்று தான் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உலக கவிதைகளை இயல்பாக நாம் அணுக முடியும்.

ஆகாசமுத்து: இன்னொன்று, ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை முழுமையாய் உள்வாங்க நாம் பல விஷயங்களை ஏற்கனவே உள் வாங்கியிருக்க வேண்டும். குறிப்பாக நிலத்தை, காலநிலையை.. பீர்ச் மரங்கள், மேப்பிள் இலைகள் என்றெல்லாம் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் வரும். மேலும் ஓவியத்தை, சினிமாவை ஆழ்ந்து காணும்போது அதன் வழியாகக் கூட கவிதையின் விஷயங்கள் துலங்குவதற்கான சாத்தியங்கள் உண்டு. 

ஆனந்த் குமார்: ஆம் நீங்கள் கூறுவது போல ரஷ்யாவின் பனியை உணரவே நாம் பல நாவல்களை வாசிக்க வேண்டியுள்ளது. அதன் வழியாகவே இன்னொரு மொழியின் கலாச்சார பிண்ணனியை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

தானப்பன் கதிர்: நீங்கள் சொல்வது போலத்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் படைப்புகளை நான் உணர்ந்தேன். நமக்கும் அந்நிய மொழிக்குமான அந்நியம், நமக்கும் அந்நிய நிலத்துக்குமான அந்நியம் ஏதோ ஒரு கணத்தில் அந்நியமற்றுப் போய்விடுகிறது. அதைச் செய்பவை சிறந்த கவிதைகளாக, சிறந்த மொழிபெயர்ப்புகளாக உள்ளன. நீரின் திறவுகோல் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை நூல். 

ஆகாசமுத்து: ஆம். அது போலவே ஒரு தனிக் கவிதை மட்டுமே நம்முள் பல விஷயங்களை கிளர்ந்தெழச் செய்யும் பேராற்றல் கொண்டது. உதாரணத்திற்கு இந்தத் தொகுப்பில் வரும் ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் 'அமைதி' என்ற கவிதை,

அமைதி

அமைதி கூறியது

உண்மைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.

குதிரை வீரன் இறந்தபிறகு

வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை

எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது

எது ஒன்றையும் சொல்லாமலேயே.


இந்தக் கவிதை எனக்கு மஜீத் மஜீதியின் ஒரு காட்சிச் சட்டகத்தை நினைவூட்டியது. ஒரு வரி அது கவிதைக்குள் இருக்கும்போது அது செய்யும் மாயம் சொல்லி மாளாதது. கவிதையின் சிறப்பே அதுதான். 

மயன் ரமேஷ் ராஜா: கவிதையைச் சொல்லி கைதட்டல் பெறுவதென்பதும் இந்தக் காலத்தில் கிளிஷே வாகிவிட்டது. இந்தத் தொகுப்பின் கவிதைகள் கவிதை என்பது என்ன என்ற ஆழ்ந்த உண்மையை ஒரு அறிமுக வாசகருக்கும் மிக எளிமையாகக் கடத்திவிடும். 

ஆகாசமுத்து: ஒரு கவிதையை கோடி பேர் வாசித்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி  அனுபவங்கள்.

மயன் ரமேஷ் ராஜா: இன்றைய கவிதைகளில் மொழிச் சிடுக்கு இல்லை. எளிமையும் ஆழமுமே இன்றைய கவிதைகளின் இலக்காக இருக்குமென நினைக்கிறேன். 

பாபு பிரித்விராஜ்: ஆமாம். இந்தத் தொகுப்பில் வரும் லெப்போல்டு ஸ்டாப்பின் அடித்தளங்கள் என்ற கவிதையை வாசிக்கிறேன்.

அடித்தளங்கள்

மணல் மீது கட்டினேன்

அது சரிந்து விழுந்தது.

பாறை மேல் எழுப்பினேன்

அது இடிந்து விழுந்தது. 

இப்போது நான் கட்டவேண்டுமாயின்

புகை போக்கியிலிருந்து

வெளியேறும் புகையிலிருந்து

தொடங்குவேன். 

இந்தக் கவிதை நீங்கள் சொல்வது போல எளிமையானது அதே சமயம் ஆழமானதும் கூட.

சாம்: எனக்கு இந்தத் தொகுப்பில் பிடித்த கவிதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் எல்லோருடனும் தனித்திருப்பது

எல்லோருடனும் தனித்திருப்பது

எலும்பைப் போர்த்தியிருக்கிறது சதை

அவர்கள் ஒரு மனதை

அங்கே பொதிந்து வைத்தனர் 

சமயங்களில் ஓர் ஆன்மாவினையும்.

பெண்கள் பூச்சாடிகளை

சுவரில் வீசியெறிந்து உடைக்கிறார்கள்.

ஆண்கள் அளவுக்கதிகமாய் குடிக்கிறார்கள்.

யாரும் அந்த ஒருவனைக் கண்டறிவதில்லை

ஆயினும் தொடர்ந்து தேடுகிறார்கள்

படுக்கைகளில் உள்ளும் புறமுமாய்ப் புரண்டவாறே. 

சதை மூடியிருக்கிறது எலும்பை.

சதையினூடாகத் தேடுகிறார்கள்

சதையை மீறிய ஒன்றை.

அதற்கு வாய்ப்பேதும் இல்லை.

நாமனைவரும் ஒரே விதியால்

பீடிக்கப்பட்டிருக்கிறோம்.

எவரொருவரும் எந்நாளும்

அறியவியலாது அவ்வொருவரை.

நகரில் குப்பைகள் நிறைகின்றன

வேண்டாத பொருட்கள் கிடங்குகளில் நிறைகின்றன.

மனநலவிடுதிகள் நிறைகின்றன

மருத்துவ மனைகள் நிறைகின்றன

கல்லறைத் தோட்டங்கள் நிறைகின்றன

வேறெதுவும் நிறையவில்லை.

இந்தக் கவிதை இருத்தலியல் சிக்கல், கன்சியூமரிசம், மெட்டீரியலிசம் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இறுதி வரி மொத்த ஒன்றையும் வேறொன்றாக்கிவிடுகிறது. இனி வரும் காலம் குறித்த அச்சத்தை இந்தக் கவிதை எழுப்புகிறது. கடவுளை எங்கு தேடுகிறார்கள் என்ற கேள்வியும் இந்தக் கவிதையின் வழி எழுகிறது. 

ராஜா முகம்மது: நீரின் திறவுகோல் எனக்கு முக்கியமான புத்தகம். 112 கவிஞர்களை இந்நூல் அறிமுகம் செய்கிறது. எனக்கு நிறையவும் வேலை வைத்தது. ஒரு மாதத்திற்குள் இந்த புத்தகத்தை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நான் இந்நூலின் ஒவ்வொரு கவிதைகளையும் தமிழில் படித்தபிறகு ஆங்கிலத்திலும் தேடித் தேடிப் படித்தேன். ஆசிரியர்களின் பின்புலத்தை, வாழ்வை தேடிப் படித்தேன்.அதனால் ஒரு மாத காலத்திற்குள் இந்நூலை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நூலின் முதல் கவிதையே எனக்கு அதிக வேலை வைத்தது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் வெர்மீரின் சிறுமி என்கிற அந்தக் கவிதை முதலில் எனக்கு விளங்கவில்லை. பிறகு அதிலுள்ள வெர்மீர் என்ற சொல்லை கூகுளில் தேடினேன். ஜோஹனஸ் வெர்மீர் என்கிற டச்சு ஓவியரைச் சுட்டியது. அவர் வரைந்த Girl with a pearl earring என்ற ஓவியத்தைத்தான் அந்தக் கவிதை பேசுகிறதென புரிந்தது. அதன் பிறகு அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகு அந்தக் கவிதை மேலும் எனக்குத் திறந்தது. அந்த ஓவியத்தில் வரும் சிறுமியின் டர்பன், சிவந்த ஈரமான உதடுகள், முத்து போன்றவற்றை கவிதையில் அவர் வர்ணிப்பார். இப்படி ஒவ்வொரு கவிதையிலும் தேடுவதற்கென ஒன்று ஒளிந்திருந்தது. 

வெர்மீரின் சிறுமி

வெர்மீரின் சிறுமி, தற்போது பலராலும் அறியப்பட்டவள்

நோக்குகிறாள் என்னை, ஒரு முத்தும் நோக்குகிறது. 

வெர்மீரின் சிறுமிக்கு

சிவந்த ஈரமான

மிளிரும் உதடுகள்

வெர்மீரின் சிறுமியே, முத்தே

நீலத் தலைச்சுருணையே

நீவிர் அனைவரும் ஒளிர்கிறீர்,

நானோ நிழலால் ஆனவன்.

ஒளி குனிந்து 

பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது

ஒருவேளை இரக்கமாகவும் இருக்கலாம். 

ஆகாசமுத்து: இந்த உணர்வைக் கடத்தியதுதான் மொழிபெயர்ப்பாளரின் வெற்றி அல்லவா. ஓவியத்திலிருந்து ஒரு கவிதை எழுவது அழகானது. அந்த ஓவியமே ஒரு கணம் அசையும் உணர்வைக் கவிதை நமக்குத் தந்துவிடுகிறது. கவிதையில் வரும் "ஒளி குனிந்து பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது" என்ற வரி அற்புதமானது. 

ராஜா முகம்மது: ஆமாம். முதல் கவிதையே எனக்கு ஆர்வத்தைத் தூண்டும்படியாக இருந்ததால் தொடர்ந்து நான் ஒவ்வொரு கவிதையாக ஆர்வத்துடன் படித்தேன். அப்படிப் படித்ததில் நான் செய்த தவறு என்னவென்றால் கவிதையை ChatGPT செயலியில் பதிவிட்டு analyse poem option கொடுப்பேன். அப்படி செய்தது கவிதையை ஒரு இயந்திரகதியில் படிக்கும் அந்நிய உணர்வைத் தந்தது. அப்படி இல்லாமல் தன்னியல்பாக நானாகவே படித்தது இத்தொகுப்பில் வரும் கமலாதாஸின் மழை என்கிற கவிதையை. அந்தக் கவிதை தந்த பேருணர்வை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. 

மழை

களையிழந்து போன

அப்பழைய வீட்டை நீங்கி

நாங்கள் வந்துவிட்டோம்.

என்னுடைய நாய் அங்கு இறந்துபோனது.

அதைப் புதைத்த இடத்தில்

நட்டிருந்த ரோஜாச் செடி

இரண்டாவது முறை பூத்ததும்

அதை வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு

எங்களுடைய புத்தகங்கள், துணிமணிகள்,

நாற்காலிகளோடு

நாங்கள் அவசரமாகக் கிளம்பிவிட்டோம்.

ஒழுகாத கூரையுடைய புதிய வீட்டில்

இப்போது வசிக்கிறோம்.

இங்கு மழை பொழிகையில்

அங்கே அந்தக் காலிவீட்டை

நனைத்துக்கொண்டிருக்கும் மழையை

நான் பார்க்கிறேன்.

எனது நாய்க்குட்டி

தனித்துத் துயிலும் இடத்தில் பொழியும்

அதன் ஓசையை

நான் கேட்கிறேன்.

அதே போல் இந்தத் தொகுப்பில் வரும் அடையாளச் சோதனை என்கிற கவிதையை ஆங்கிலத்தில் படித்தபோது changeling என்ற வார்த்தை வந்தது. அதே வார்த்தை தமிழில் சவால் என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அது எனக்கு விளங்கவில்லை.

இதில் Changeling என்கிற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தேடும் போது, அதற்கு அர்த்தம் ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றை வைத்தல் என்று வந்தது. குறிப்பாக குழந்தைகளை தேவதைகள் வந்து மாற்றி வைக்கும் என்பது போன்ற தொன்மக் கதைகளுக்கு இட்டுச் சென்றது அந்த ஆங்கில வார்த்தை.ஆனால், மொழிபெயர்ப்பில் சவால் என்று மட்டும்  இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது.

மேலும் தாமஸ் டிரான்ஸ்டோமரின் இரு நகரங்கள் கவிதையை சபரிநாதன் மொழிபெயர்க்கையில் தூபா (Tuba)  என்பதை அப்படியே போட்டு கீழே அடிக்குறிப்பில் டிரம்பட் போன்ற ஒரு காற்றிசைக் கருவி என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் இந்தத் தொகுப்பில் அது நேரடியாக காற்றிசைக் கருவி என்றே கவிதையில் எழுதப்பட்டுள்ளது. இது உண்மைத் தன்மையைக் குறைப்பதாக எனக்குப் பட்டது. மேலும் கவிதையைப் பொறுத்தவரை நான் ஒரு ஆரம்பக்கட்ட வாசகனே. இந்தத் தொகுப்பில் ஒரு கவிஞரின் ஒரு கவிதையைப் படித்துவிட்டு அவரின் மற்ற கவிதைகளையும் புத்தகத்துக்கு வெளியே தேடிப் படித்தபோது ஒரு பரந்துபட்ட கவிதை உலகம் எனக்கு அறிமுகமாகியது. அப்படித் தேட வைத்ததில் இந்தத் தொகுப்பின் பங்கு முக்கியமானது. 

வ.அதியமான்: நீங்கள் பேசியதிலிருந்து ஒரு கேள்வி. கவிதை மொழிபெயர்ப்பின் எளிய நோக்கம் என்ன? நமக்குத் தெரியாத மொழியை விட்டுவிட்டு தெரிந்த மொழியில் எளிதாகப் படிப்பது. அப்படி இருக்கையில் நீங்கள் மூல மொழியிலும் தேடித் தேடிப் படித்ததாகச் சொல்கிறீர்கள். கவிஞர்களைப் பற்றியும் தேடி அறிந்துகொண்டதாகச் சொல்கிறீர்கள். ஏன் கவிதை உங்களுக்குப் போதுமானதாக இல்லையா? மொழிபெயர்ப்பு உங்களுக்குப் போதுமானதாக இல்லையா? 

மதார்: அது அவரவர் விருப்பம் சார்ந்து கூடுதலாகச் செய்வது. 

ராஜா முகம்மது: எனக்கு அதன் பின்புலத்தை அறிவது கவிதையை இன்னும் நெருங்குவதற்கு உதவுகிறது. 

வே.நி.சூர்யா: இதை இன்னும் தெளிவாகக் கூறலாம் என நினைக்கிறேன். ஒரு கவிஞனை முழுமையாக அறியும்போது அவன் கவிதையை முழுமையாக அறிய முடியும். 

பொன்னையா: இத்தொகுப்பில் போவாயிஸ் தேவாலயம் பற்றி ஒரு கவிதை வருகிறது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கி எழுதியது.

வாகனக் கண்ணாடி

பின்னோக்கு ஆடியில் திடுமென,

'போவாயிஸ்' தேவாலயத்தின்

பெரும்பகுதியைக் கண்டேன்.

பெரிய விஷயங்கள்

ஒரு கணம்

தங்குகின்றன

சிறியவற்றுள். 

போவாயிஸ் தேவாலயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இணையத்தில் அதைப் பார்த்துவிட்டு இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒரு பிரம்மாண்டத்துடன் என்னால் கவிதையை அணுக முடிந்தது.

வ.அதியமான்: சரி, ஆங்கிலமே தெரியாதவர்கள் இணையமே பயன்படுத்தத் தெரியாதவர்கள் இந்தக் கவிதையை எப்படிப் படிப்பார்கள்? ஒரு கவிதைக்குள் அந்தக் கவிதையின் வழியாகவே செல்லவேண்டும். மொழிபெயர்ப்பு என்ற சலுகையை வழங்குவது சரியா? 

மதார்: மேற்சொன்ன போவாயிஸ் தேவாலயம் கவிதையில் அந்தத் தேவாலயம் பற்றித் தெரியாமல் வாசித்தாலும் அந்தக் கவிதை முழுமையான ஒன்றாகவே இருக்கிறது. நிறைவான கவிதை அனுபவத்தைத் தந்துவிடுகிறது. இருந்தாலும் கூடுதலாக தெரிந்துகொள்வதற்காக அவர் அந்தத் தேவாலயம் பற்றி படிக்கிறார். ஆனால் வெர்மீரின் சிறுமி கவிதை அப்படி அல்லவென நினைக்கிறேன். அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகே அந்தக் கவிதையை முழுதாகத் திறக்க முடிக்கிறது. 

ஆனந்த் குமார்: வேறு கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்கும் அந்தக் கவிதை ஊடகமாக இருக்கிறது.

வே.நி.சூர்யா: அத்தகைய வாசிப்புகளும் தேவை என்றே நினைக்கிறேன். உள்ளூர் மனிதனாக இருக்கும் நம்மை உலக மனிதனாக மாற்ற, இன்னும் திறக்க அது உதவுகிறது. 

வ.அதியமான்: நல்லது. நமது இன்றைய உரையாடலை முன்னிறுத்தி சில கேள்விகளைக் கேட்கிறேன். உலகக் கவிதை என்றால் என்ன? உலகக் கவிதை என்று சொல்வதனால் உள்ளூர் கவிதை என்று ஒன்று தனியாக உண்டா? அல்லது எழுதப்படும் அத்தனையும் உலகக் கவிதை தானா? பொதுவாக உலகக் கவிதை என்பதன் எளிய வரையறை என்பது நம் மொழிக்கு நம் நாட்டிற்கு வெளியே இருக்கும் கவிதை என்பதே. இது மட்டும் போதுமா, அல்லது வேறேதேனும் வரையறை அதற்கு உண்டா? அவை அனைத்தும் உலகக் கவிதைகளா? நம் மொழியில் எழுதப்படுபவை அவர்களுக்கு உலகக் கவிதைகளாகுமா? இது முதல் கேள்வி. இரண்டாவது உலகக் கவிதை வாசிப்பின் இன்றைய தேவை என்ன? நம் மொழியின் கவிதைகள் போதாமையாக உள்ளனவா? மூன்றாவது கேள்வி ஒரு கவிஞன் ஏன் உலகக் கவிதைகளை வாசிக்க வேண்டும்? அவ்வாறு வாசிப்பதனால் அவன் கவிதைகள் மேம்பாடு அடையுமா? 

வே.நி.சூர்யா: முதலில் 'உலகக் கவிதை' என்ற பதத்தைப் பற்றிப் பேசலாம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அது எவ்வாறு உருவானது எனக் குறிப்பிடுகிறார். முதலில் 'கவிதை' என்றே இருந்ததை 'உலகக் கவிதை' எனக் குறிப்பிட்டவர் கதே. கவிதை சந்திக்கும் பொதுத்தளத்தால் அது உலகக் கவிதை அந்தஸ்தை அடைகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே நாமும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஜெர்மன் மொழியில் ஒரு கவிதை எழுதப்படுகிறது, ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது, தமிழில் எழுதப்படுகிறது, இந்தியில், உருதில் இப்படி வேறு வேறு மொழிகளில் எழுதப்படுகிறது. அந்தக் கவிதைகள் அனைத்தும் சந்திக்கும் பொதுப்புள்ளி என்று ஒன்று இருக்குமேயானால், அப்படி அவை சந்திக்குமேயானால் அதை உலகக் கவிதை என்கிறோம். இரண்டாவது கேள்விக்கு என்னையே உதாரணமாக்கிக் கூறுகிறேன். நான் கவிதைகளை மொழிபெயர்க்கிறேன், மொழிபெயர்ப்பாளனாக உள்ளேன். வாசிக்கிறேன் வாசகனாக உள்ளேன்.எழுதுகிறேன் கவிஞனாக உள்ளேன். இன்னொருவரின் கவிதையை நான் மொழிபெயர்க்கையில் நான் அவரது உலகத்திற்குள் செல்கிறேன். என்னை இன்னும் திறக்கும் ஒரு வாய்ப்பு உண்டாகிறது. அது எனது ஈகோவை இல்லாமலாக்குகிறது. இன்னொன்று நான் இன்னொருவர் எழுதிய உலகக் கவிதையை வாசிக்கையில் அந்தக் கவிதையை அவர் எழுதிய காலத்திலேயே தான் சந்திக்கிறேன். இதிலேயே உங்களது இரண்டு கேள்விகளுக்குமான பதில் உள்ளதென நினைக்கிறேன். 

ஆகாசமுத்து: மூன்றாவதாக அவர் கேட்ட கேள்வி மொழிபெயர்ப்புக் கவிதையை வாசிப்பது கவிஞனின் மொழியை, கவிதையை கூர்மை செய்யுமா..ஆம் நிச்சயமாகச் செய்யும். ஆனால் தமிழிலும் மிகச் சிறந்த கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர். யவனிகா ஸ்ரீராம், வெய்யில்,பிரமிள் என்று நீண்ட பட்டியிலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரு  இடதுசாரி மார்க்சியக் குரல் வட்டாரத் தன்மையிலிருந்து உலகளாவிய அரசியல் வரைக்கும் பேசக்கூடியதாக இவர்களது கவிதைகள் அமைந்திருக்கின்றன. அதேபோல கோட்பாடுகளை படித்துதான் ஒருவன் கவிஞன் ஆக முடியும்   என்றெல்லாம் இல்லை. இன்றைய நவீன வாழ்வையும், அதன் நெருக்கடிகளையும் மேலும் ஒரு கவிஞனுக்குள் நிகழும் மாற்றங்களையும் அவன் ஆழ்ந்துணரும்போது அவனால் கவிதை எழுதிட முடியும். அதே போல நிறைய படிப்பதனால் மட்டும் ஒரு கவிஞன் உருவாகிவிட முடியாது. வயல்வெளியில் விவசாயி பாடும் நாட்டுப்புறப்பாடலும் ஒரு கவிதைதான். அது தன்னிச்சையாகத் திரண்டு வருவது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சூழலிலும், தருணத்திலும் கவிதை உள்ளது. வகுப்பறை என்ற வட்டத்திற்குள் கவிதையை அடைக்க முடியாது. தேவதச்சன் அடிக்கடி சொல்வார். நான் ஒழியும் இடத்தில்தான் கவிதை உருவாகிறது என்று. வண்ணதாசனும் அதையே சொல்வார்.  எழுதும்போது நீங்கள் அந்த இடத்திலிருந்து மறைந்து விடவேண்டுமென்று.

வே.நி.சூர்யா: நீரின் திறவுகோல் பற்றி சில விஷயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன். முதல் விஷயம் இதிலுள்ள கவிதைகளின் தேர்வு. கபீர், அக்கமாதேவி என்று ஒரு பக்கம் பக்திக் கவிதைகளாக வருகிறது. இன்னொரு பக்கம் திடீரென ஆலன், சார்லஸ் என்று வேறு தரப்புக் கவிஞர்களும் வருகிறார்கள். வேறு வேறு காலத்தைச் சேர்ந்த கவிஞர்கள் வேறு வேறு கலாச்சாரப் பிண்ணனிகளுடன் ஒரே நேரத்தில் ஒரே தொகுதியில் சந்தித்துக் கொள்ளும் தொகுப்பாக இது உள்ளது. அது இந்த நூலின் முக்கிய அம்சம். இன்னொன்று இந்நூலில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் கவிதை பாடுபொருட்கள். அதில் ஒரு தேர்வு உள்ளது. பெரும்பாலும் spiritual தன்மை கொண்ட அல்லது மனித விசாரம் தொடர்பான கவிதைகளே இந்தத் தொகுப்பில் அதிகம் உள்ளன. உதாரணத்திற்கு பிரக்ட்,ஆடம் ஜகாவெஸ்கி என்று பலரது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிரக்ட் நிறைய அரசியல் கவிதைகள் எழுதியுள்ளார். ஆடம் ஜகாவெஸ்கியும் கூட. ஆனால் அவர்களது வேறு வகைப்பட்ட கவிதைகளே இந்நூல் நெடுக உள்ளது. அவர்களது வழக்கமான முகமல்லாத வேறு முகம் இத்தொகுப்பில் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு டி.எஸ்.எலியட் என்றாலே 'பாழ் நிலம்' கவிதைதான் என்றாகிவிட்டது. ஆனால் அவரது கவிதைகளிலும் நகைச்சுவையான சில இடங்கள் உண்டு. வேறு வேறு இடங்களை முயன்றிருப்பார். இதே போல எல்லா கவிஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முகத்தைத்தான் நாம் வழங்குவோம். ஆனால் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் க.மோகனரங்கன் கவிஞர்களின் வேறு வேறு முகங்களை வேறு வேறு கவிதைகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் சிக்கலாக நான் பார்ப்பது மொழிபெயர்ப்பில் எல்லா கவிஞர்களுமே ஒரே மாதிரி தோற்றம் தரும் தன்மை. ரூமியை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் இல்லை, அவருக்கென்று ஒரு மொழி உள்ளது. அவருக்கான விஷயங்கள் தனி. ஆலன் கின்ஸ்பெர்க், சார்லஸ் புக்கோஸ்கி போன்ற நவீன கவிஞர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் உண்டு. அவர்களது மூல மொழிநடை பல்வேறு அம்சங்களால் ஆனது. ஒரு வட்டார வழக்குத்தன்மை, பாடல், கெட்டவார்த்தை இப்படி கவிதைக்குள் எதுவெல்லாம் அனுமதி இல்லை என்று சொன்னார்களோ அதையெல்லாம் எழுதும் ஒரு புரட்சிகர எழுத்தாக அவர்களது எழுத்து உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு செவ்வியல் கவிஞர் தோரணையில் இந்த நூலில் வருகிறார்கள். அந்தத் தன்மை இந்தத் தொகுப்பில் அதிகமாக உள்ளது. இன்னொரு சிக்கல் அந்த மொழிக்கு நாம் சரியாக இருந்து மொழிபெயர்த்தோமேயானால் வரிக்கு வரி மொழிபெயர்க்க வேண்டி வரும். அது கவிதையின் கவித்துவ அம்சத்தை வெளியேற்றியும் விடலாம். சரி கவித்துவ அம்சத்தை கவனத்தில் கொண்டு செய்தால் அதன் மொழியை நாம் சரியாக செய்ய முடியாததாகிவிடும். அதனால் மொழிபெயர்ப்பவரின் ஆளுமை அந்தக் கவிதைக்குள் புகுந்துவிடலாம். ஒன்று கவிதையை இழப்போம் அல்லது மொழியை இழப்போம். ஆகவே இரண்டுக்கும் இடையில் ஒரு புள்ளியைக் கண்டறிந்து செய்வதே சரியான கவிதை மொழிபெயர்ப்பாக இருக்குமென கருதுகிறேன். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அதன் அருகில் சென்றுள்ளன. 

வ.அதியமான்: நீங்கள் குறிப்பிட்டது போல இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த நூலை ஒரு ஆரம்பக்கட்ட கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. ஒரு தேர்ச்சி பெற்ற கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. இலகுவாக , வாசிப்பு சரளத்துடன் ஒருவரால் இந்நூலைப் படிக்க முடிகிறது. அதில் மொழிபெயர்ப்பாளர் கவனம் செலுத்தியிருக்கலாம். அது இந்த நூலில் சிறப்பாக வந்துள்ளது. அப்படி இல்லாது நீங்கள் சொன்ன விஷயத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒருவேளை தேர்ச்சி பெற்ற வாசகனுக்கு மட்டும் என்றாகிவிடும், பிரம்மராஜனின் உலகக் கவிதைகள் தொகுப்பு போல.. அப்படி அல்லாது இருவருக்கும் கதவைத் திறந்து வைத்ததே இந்நூலின் தனிச்சிறப்பு என நான் கருதுகிறேன். 

ஆகாசமுத்து: ஆமாம். மொழிபெயர்ப்பில் கவிதை நமக்கு வாசிக்கக் கிடைப்பதே கிடைத்தவரைக்கும் லாபமான ஒன்றுதான். 

வ.அதியமான்: இன்னொரு கேள்வி - ஒரு கவிதையை கவிஞன் மொழிபெயர்ப்பதற்கும் கவிஞன் அல்லாதவன் மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டா?

வே.நி.சூர்யா: எனது அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். பரிசோதனை என்ற இதழ் முன்பு வந்தது. அதில் சில கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டி கவிஞர்களிடமும், புனைவெழுத்தாளர்களிடமும் அளித்திருந்தேன். கவிஞர்கள் மொழிபெயர்த்தவை மொழியின் அழகுடன் திகழ்ந்தன. ஆனால் புனைவெழுத்தாளர்களின் மொழி தட்டையாக இருந்தது. ஏனென்றால் மொழியில் கவிஞர்களின் புழங்குதளமும், புனைவெழுத்தாளர்களின் புழங்குதளமும் வெவ்வேறானவை. 

பாபு பிரித்விராஜ்: கவிதையின் வழக்கமான வடிவமல்லாது புதிய வடிவம் எதுவும் இந்தத் தொகுப்பில் முயலப்பட்டுள்ளதா? இப்போதுள்ள கவிதை வடிவம் ஒரு அயற்சியைத் தரவில்லையா? பாரதியின் வசன கவிதை மாதிரி புதிய கவிதை வடிவம் என்று ஒன்று தோன்றும் வாய்ப்புள்ளதா? 

வே.நி.சூர்யா: அப்படி எதுவும் இல்லை. எல்லாமே இங்கு எழுதப்பட்டுவிட்டது...

பாபு பிரித்விராஜ்: இல்லை நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது இப்போதைய கவிதை வடிவமே மேற்கிலிருந்து வந்ததுதான்..

வே.நி.சூர்யா: இல்லை அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. விக்கிரமாதித்தன் - வேதாளம் கவிதையில் படிக்கடி பேசுகிறது. அது ஒரு சர்ரியலிசம் இல்லையா? 

பாபு பிரித்விராஜ்: நாம் நமது வசதிக்காக வேண்டி அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளலாம். 

வே.நி.சூர்யா: இல்லை. எல்லா கலாச்சாரங்களிலும் எல்லா அம்சங்களும் உள்ளன. 

பாபு பிரித்விராஜ்: நவீன கவிதை வடிவம் உங்களுக்கு அயற்சியைத் தரவில்லையா? மொழிபெயர்ப்பாளராக உங்கள் பார்வை என்ன? 

வே.நி.சூர்யா: ஆண்ட்ராய்ட் அப்டேட் போல எதுவும் உடனே நிகழ்ந்துவிடாது என்று நினைக்கிறேன். அது காலத்தைப் பொறுத்தது. 

பாபு பிரித்விராஜ்: மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதை வந்த ஒரு காலகட்டம் இருக்கிறதல்லவா..

வே.நி.சூர்யா: அதேதான் மரபிலிருந்து புதுக்கவிதைக்கு வந்து சேர்ந்த பாதை பெரியது. பல்வேறு பரிசோதனைகள், சோதனைகளுக்குப் பிறகே அது நிகழ்ந்தது. 

பாபு பிரித்விராஜ்: ஆம் அதே போல நவீன காலகட்டத்தில் கவிதைக்கென மாற்று வடிவம் தோன்றுமா எனக் கேட்கிறேன். 

வே.நி.சூர்யா: மரபுக் கவிதை உடைய நிறைய அழுத்தம் அன்று இருந்தது. இன்று அப்படி இல்லை. சுதந்திரமாகவே உள்ளோம். மரபுக் கவிதையில் வடிவ சுதந்திரம் இல்லை. 

பாபு பிரித்விராஜ்: இன்றுமே நவீன வடிவிலும் திரும்பத் திரும்ப எழுதி ஒரு சூத்திரம் போன்ற ஒன்றுக்கு நாம் வந்துவிடவில்லையா. படிமங்கள் போன்றவை திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் சுற்றும் உணர்வைத் தரவில்லையா? இது மாறுமா? 

வே.நி.சூர்யா: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பாபுபிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளராக உங்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

வே.நி.சூர்யா: வார்த்தை விளையாட்டுகளை நிறைய புதிதாகச் செய்கிறார்கள்.ஆனால் அவை கவிதையல்ல. கவிதை எப்போதுமே வாழ்வனுபவங்களைச் சொல்லும். சொல்லும் முறையால் அது கவிதையாகும். 

பாபு பிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளர்களால் அத்தகைய புதிய வடிவ மாற்றம் தற்போதைய கவிதை மொழியில் நிகழுமா? 

வ.அதியமான்: அதைத்தான் அவர் காலத்தைப் பொறுத்து நிகழும் என்கிறார். அது தன்னிச்சையாக மட்டுமே நிகழக்கூடியது.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் - 1 - க.நா.சு

உலகத்து கவிதைகளைப்‌ பற்றி ஒரு மணிநேரத்துக்குள்‌ சொற்பொழிவு ஆற்ற வேண்டும்‌ என்று எனக்குப்‌ பணித்திருக்‌கிறார்கள்‌. இது கொஞ்சம்‌ சிரமம்‌ என்று...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive