இன்றைய இந்த கவிதையின் எல்லைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு செயல்படுவது
மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் மேலே கவிதை சாத்தியமாவதே இப்படி எல்லைகளை அறிந்துகொண்டதனால் ஏற்படுகிற காரியம் என்றுதான்
சொல்ல வேண்டும்.
கவிதைக்கு எல்லைகள் உண்டா?
உண்டானால் அவை எதெதனால் எப்படியெப்படி
ஏற்படுகின்றன என்று விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த காரியத்தில் நமக்கு உதவக்கூடியவர்கள் என்று முற்காலத்தில் ஸமஸ்கிருத
இலக்கியத்திலிருந்து கவிதை அழகுத்தத்துவத்தை காண முயன்றவர்களையும், இக்காலத்தில் மேலைநாடுகளில் செயல்பட்டு
நம்மையும் எட்டியுள்ள அளவில் கவிதை விமரிசகர்களையும் மனத்தில் வாங்கிக்கொண்டு
அதன்மேல் நமது கவிதைப்படிப்பை - பழசில் பரவலாக உள்ளதையும் புதுசில் எட்டியவரையில்
பார்ப்பதையும் - வைத்துக்கொண்டு சொல்லிப் பார்க்கலாம்.
இது ஒரு டெண்டட்டிவ் (Tentative) முயற்சி. இலக்கிய விஷயங்களில் தரம் பிரிப்பது, இது மேன்மையானது, இது மேன்மையை எட்டாதது என்று சொல்லுவதெல்லாம் ஒருவிதத்தில் ‘டெண்டட்டிவ்’ முயற்சிதான். எதைச் சொன்னாலும்,
அது முடிவாக தீர்மானமாக சொல்லப்பட்டது போலவே சொல்லப்பட்டாலும், அழுத்தமான முடிவு என்று சொல்லப்பட்டாலும்கூட, மறுமதிப்பீடு உண்டு, மேலே ஏதோ சொல்லலாம் என்கிற நினைப்பு கூடவே
வரவேண்டும். அப்போதுதான் விமரிசனத்துக்கே ஒரு உரு, ஒரு கலை அடிப்படை ஏற்படுகிறது என்று சொல்லவேண்டும்.
இதை நினைவில் கொண்டு கவிதைபற்றி சொல்லுகிற எதுவும் அந்த சமயத்துக்கு, அந்த ஆசாமிக்கு (சொல்கிற, சொல்லப்படுகிற, ஆசாமிக்கும்; மற்றவருக்கும்) அது முடிவாக இருக்கலாமே தவிர
எல்லோருக்கும், எப்போதுமான
முடிவு அல்ல என்கிற நினைப்புடன் விமரிசனத்தை காண அணுகுபவனுக்குத்தான் விமரிசனம்
தன் முழுப்பயனையும் தருகிறது என்று நான் நினைக்கிறேன்.
கவிதையின் எல்லைகளைப்
பற்றி பார்க்கலாம்.
கவிதைக்கு எல்லையுண்டா?
அது எதனால் ஏற்படுகிறது என்கிற
சிந்தனை அவசியம்.
கவிதையில் இந்த விஷயங்களைத்தான் சொல்லவேண்டும், வேறு சிலதை சொல்லக்கூடாது என்றெல்லாம் நமது
முன்னோர்கள் நம்பினார்கள். எழுதியும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
கவிதைக்கான விஷயம் என்று தனியாக ஏதோ இருப்பதாக ஏற்பட்ட நினைப்பு இடைக்காலத்தில்
எழுந்து பல இலக்கிய மொழிகளில் செயல்பட்ட விஷயம் என்று ஏற்றுக்கொண்டாலும்கூட,
இன்றுவரை, சமீபகாலம்வரை அப்படி ஒரு நினைவிருந்து
வந்திருக்கிறது. இந்த நினைவை ‘வேளூர் கந்தசாமிக் கவிராயர்’ (புதுமைப்பித்தன்) தனது ‘மாகாவியம்’ என்கிற கவிதையில்
எடுத்துச்சொல்லி சாடியிருக்கிறார். இந்தியாவில் கவிதைக்கு விஷய எல்லை என்பது தமிழில் புதுமைப்பித்தனுடனும்,
ஹிந்தியில் ஆக்யேயாவுடனும், மற்ற மொழிகளில் வேறு பலருடனும்
உடைந்துவிட்டதாக தெரிகிறது. எனினும், அப்படி ஒன்றும் விஷய எல்லை என்பது
செயல்படவில்லை என்று
சொல்ல முடியாது.
உதாரணமாக, ந.
பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளை எடுத்துக்கொண்டால் பழைய கவிதையின் விஷய எல்லை சிறப்பாகவே செயல்படுவது தெரிகிறது. இது கவிதை
மரபு எல்லைகளை மீறி வரவில்லை என்பதும் தெரிகிறது. பாரதியாரிலும் இந்த விஷய
எல்லைகள் மீறப்படவில்லை என்றாலும் கவிதை என்கிற அளவில் அவர் வசனகவிதைகள்
உருவமும் ஆழமும் பெற்றுவிடுகின்றன. அப்படி பிச்சமூர்த்தி கவிதையில் அமையவில்லை என்பதால் இப்போது ந.பி.யின் கவிதைகளைப்
படிப்பவன், ‘இது கவிதை அல்ல’ என்கிற
தீர்மானத்துக்குதான் வரவேண்டியதாக இருக்கிறது. புதுக்கவிதையல்ல, கவிதையாக இருக்கலாமோ என்கிற நினைப்பும் போக,
கவிதையாகவும் அமையவில்லை என்கிற
நிச்சயம் இன்று ஏற்படுகிறது.
காமராஜன், வைரமுத்து,
மேத்தா போன்றவர்கள் பிச்சமூர்த்தியை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்வதில்லை. ஆனால்
அவர்கள் கவிதைகளிலும் உள்ளடக்கத்தில், வேண்டுமென்றே அவர்கள் புரட்சி செய்வதாக முயன்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை புரட்டிப்போட்டு, எதிர்மறையாக
எதுகை, மோனை, சிந்தனை என்றில்லாமல் சொன்னாலும் அவையும்
கவிதையாக அமையவில்லை என்று
காணமுடிகிறது. பிச்சமூர்த்தி, கண்ணதாஸன் இருவரும் விஷய எல்லைகளை பழைய அளவில் ஏற்றுக்கொண்டதாலேயே கவிதை என்று செய்தாலும் அவர்களுக்குக் கவிதை கைவரவில்லை என்று சொல்லவேண்டும். ஜனங்கள் பாராட்டுகிறார்களே
என்று சொல்லாதீர்கள் - கவிதையை ஜனங்கள் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயமும்
கிடையாது! ஜனங்களையும் மீறித்தான் கவிதை எந்த அளவிலும் சொல்லப்படுகிறது.
பழைய கவிதை விஷய எல்லைகளை ஏற்றுக்கொண்டு
சிறப்பாக கவிதை -புதுக்கவிதையாகவே - செய்ய முடியும் என்று செய்து காட்டியவர் ஷண்முக
சுப்பையா. பிச்சமூர்த்தி புதுக்கவிதை செய்ய ஆரம்பித்த இரண்டாவது காலகட்டத்திலேயே
இவரும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தவர். பிச்சமூர்த்தியை முன்மாதிரியாகக்கொண்டு
எழுதி, ஓரளவுக்கு வெற்றிகண்டவர்கள் பலர் - தி. சோ. வேணுகோபாலன், எஸ். வைதீஸ்வரன் போலவே இவரும் கொஞ்ச
காலத்துக்குப்பின் கவிதை செய்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆனால், எழுதியவரையில் விஷய எல்லைகளை மீறி, புதுக்கவிதைகளை கவிதையாகவே செய்துகாட்டியவர் ஷண்முக
சுப்பையா என்பதற்கு அவருடைய ஒவ்வொரு கவிதையையுமே உதாரணமாக எடுத்துக்காட்டலாம். ‘நாய்க்காட்சி’,
‘காவற்காரன்’ முதலிய கவிதைகள்
சிறப்பான உதாரணங்களாக அமைகின்றன.
கவிதைக்கு விஷய எல்லைகள் பற்றி
நிறையவே சொல்லலாம். ஒருவிதத்தில் விஷயம் பற்றி எல்லை இல்லை என்பதும் உண்மை. எல்லை உண்டு என்பதும் உண்டு. கவி அனுபவத்துக்கு
உட்படாத விஷயம் என்று உலகில் எதுவும் இருக்க இயலாது. இதனால்தான் ‘குண்டகர்’ என்கிற சமஸ்கிருத
காவிய விமரிசகர் யதார்த்தமில்லாமல் இலக்கியமே இல்லை என்கிறார். கனவுலக இலக்கியமும்கூட உண்மையில் யதார்த்தத்தில் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்றிருப்பதுதான்
என்கிறார். யதார்த்தத்தை கட்டிவைத்துவிட்டுக் கவிதை செய்ய எவராலும் முடியாது. வில்லியம்
கார்லாஸ் வில்லியம்ஸ் என்கிற அமெரிக்கக் கவி இதையேதான், ‘கவிதை என்பது அது சுட்டிக்காட்டுகிற
பருப்பொருள்களில்தான் இருக்கிறது’ என்கிறார்.
இந்த நினைப்பு வருவதற்கு முன் சாஸர் காலத்திலிருந்து ஷெல்லி, கீட்ஸ் வரையில் கவிதையில் விஷயம் என்கிற எல்லை பலவிதங்களில் ஆங்கிலக்கவிகளிடையே ஆட்சி செலுத்தியிருக்கிறது.
லிரிகல், மெடாபிஸிகல், ஸடைரிக், ரொமாண்டிக் என்று பல தளங்களில் விஷய எல்லைகள் கவிதையை ஆண்டுவந்துள்ளன. பத்தொன்பதாம்
நூற்றாண்டில் விஷயஎல்லை கொடுங்கோன்மை விட்மனின் கவிதைகளில் மாறுவதைப் பார்க்கிறேன்.
‘Where Lilacs last in the Dooryard blooded’ என்பதிலிருந்து ‘Song of India’ போன்ற கவிதைகளில் பார்க்கலாம். எட்கார் ஆலன் போவின்
கூற்று, ‘ஒரு நீளக் கவிதை
என்பது சாத்தியமல்ல’ என்பது விஷய எல்லையை எதிர்த்து சொல்லப்பட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. போவை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிற போதலேர்,
மல்லார்மே, ரிம்போ என்பவர்கள் சரியாக புரிந்துகொண்டுதான்
ஐரோப்பாவில் புதுக்கவிதைக்கு அடிக்கல் நாட்டினார்கள் என்றும் சொல்லவேண்டும்.
கவிதைக்கு எல்லைகளை வகுப்பது
விஷயத்துக்கு அடுத்தபடியாக மொழியாகும். இந்த மொழியென்பதில் உள்ளவை மரபு, பிராந்திய பண்பாட்டின் பழக்கவழக்கங்களில், மதப்போக்கின் விளைவு. இது எல்லாமாக சேர்ந்து கவிதைக்கு ஒரு எல்லையை, பல எல்லைகளை, விதிக்கின்றன என்பது சொல்லவேண்டிய விஷயம்.
கவிதை மொழியால் எல்லை வகுக்கப்படுகிறது
என்பதைத்தான் கவிதையை மொழிபெயர்ப்பது கடினம் என்றும், சாத்தியமே இல்லையென்றும் கூறி நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
மொழியில் வார்த்தைகளுக்கு அர்த்தபாவங்கள், புனை கற்பனைகள் ஏற்படுவது பிராந்திய மதப்பழக்க வழக்க அடிப்படைகளில் ஆகும். இதை
மொழிபெயர்த்துத் தருவது சிரமமாக இருக்கிறது.
கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழி, பண்பாட்டு, மதச்
சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல
முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள்
போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல. நல்ல கவிஞன் எவனும் இலக்கண விதிகளாலோ,
செய்யுள் மரபாலோ தடுத்து
நிறுத்தப்படுவதில்லை. அதை
சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும். ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம்
விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம்
அல்ல.
கிரேக்க கவிகளில் தொடங்கி, சமஸ்கிருத, தமிழ், அராபிய, பர்சிய, ஹீப்ரூ, கவிகள் எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் மொழி, பண்பாடு,
கலாச்சாரக் கட்டுப்பாடு சிறப்பாகவே தெரிகிறது. எனினும், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கவிதை செய்யவே எந்த
மொழிக் கவிஞனும் கவிதை செய்கிறான். எல்லைகளை மீறுகிற ஒரு காரியத்தில்தான் கவிதையே பிறக்கிறது
என்றுகூட சொல்லலாம். இதையே ‘கவிதை த்வனி’ என்று ஆனந்தவர்த்தனர் சொன்னதாக
ஏற்றுக்கொண்டால்கூட தவறில்லை என்று
எனக்கு தோன்றுகிறது. கவிதை மொழி, பண்பாடு, கலாச்சாரம்
இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கவிதைத் த்வனி ஏற்படுகிறபோதுதான் வார்த்தைகளிலும்,
வார்த்தைகளுக்கிடையில் உள்ள
மௌனத்திலும், அர்த்தங்களிலும்,
அர்த்தங்களுக்கிடையே உருவாகிற
அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டதிலுமே கவிதை உருவாகிறது. இதையே பின்னர் தோன்றிய
குண்டகர், ‘வக்ரோக்தி தனிமைப்பட்டது. யாருக்கும் அதுவரை கைவராதது’ என்று சொன்னார். மொழி,
பண்பாடு, கலாச்சாரம் எல்லோருக்கும் கைவந்தவை. இவைகளைத் தாண்டி,
இவைகளைப் புறக்கணித்துவிடாமல் ‘வக்ரோக்தி’ சாத்தியமாகிறபோதுதான்
கவிதை உண்டாகிறது.
விஷய எல்லைகளையும்,
மொழி, பண்பாடு, கலாச்சார எல்லைகளையும் மீறி கவிதை செய்ய முயல்பவர்கள் அவரவர்
காலத்து புதுக்கவிதைக்காரராக இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவர் அவர் காலத்தில்
புதுக்கவிதைக்காரர். சீவகசிந்தாமணி ஆசிரியர் அவர் காலத்தில் புதுக்கவிதைக்காரர்.
சிலப்பதிகார ஆசிரியர் அவர் காலத்தில் புதுக்கவிதைக்காரர். பாரதியார் அவர் காலத்தில்
புதுக் கவிதைக்காரர். பாரதிதாஸனோ கண்ணதாஸனோ இந்த கணக்கில் அகப்படவில்லை. நகுலனும் ஷண்முக சுப்பையாவும் மயனும் இன்று ஞானக்கூத்தனும் புதுக்கவிதைக்காரர்களாகச்
சொல்லப்படுகிறபோது இவர்கள் மொழி, பண்பாட்டு கலாச்சார இலக்கண செய்யுள் மரபை
மீறிச் சிலது செய்ய முன்வந்தார்கள் என்பது முக்கியமான விஷயம்.
வால்ட்விட்மனும், போதலேர்,
மல்லார்மே, ரிம்போ
போன்றவர்களும், வசன கவிதையில்
சுப்ரமணிய பாரதியாரும் செய்ய முயன்றது இதுவேயாம். கவிதையின் மொழி இத்யாதி எல்லைகளை உணர்ந்து அவற்றை மீறிச் செயல்பட்டு கவிதை
செய்யவே அவர்கள் முயன்றார்கள்.
இன்னொரு விஷயமும் நினைவில் கொள்ளவேண்டும். சங்கீதத்தை மொழியை கடந்தகலையாக சொல்லுகிறார்கள். சங்கீதத்தின் மொழி பிரபஞ்சம் முழுவதுக்கும் உரியது என்கிறார்கள்.
இது காரணமாகத்தானோ என்னவோ, மொழிகளால்
எல்லைகள் வகுக்கப்பட்ட கவிதை
சங்கீதத்துடன் சேரும்போது பிரபஞ்ச பாஷையாக மாறிவிடுகிறது என்று ஒரு மரபு நம்மிடையே
ஏற்பட்டிருக்கிறது. ஈஸ்வரனுக்கு அர்ப்பணமான கவிதையெல்லாம் எந்த மொழியில் சாகித்தியம்
இருந்தாலும், சங்கீதத்துடன்
பக்தியும் சேரும்போது பிரபஞ்ச மொழியாகிவிடுகிறது என்றும், பாடப்படுவதே கவிதையின் இலக்கு என்றும்
இடைக்காலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது ஓர் இந்திய மரபு என்றாலும் பரவலாக
உலகம் பூராவிலும்கூட இந்த சிந்தனை இருக்கிறது.
ஜெயதேவர் அஷ்டபதியில் இசையையும் கவிதையையும் சேர்த்தபோது சமஸ்கிருத கவிதை தரம்குறைய
ஆரம்பித்துவிட்டது என்று சுப்பைய தீக்ஷிதர் என்கிற மொழிப்பண்டிதர் சொல்லுகிறார். இது
அவ்வளவாக ஏற்கப்படாத ஒரு இந்திய மரபு ஆனால் இப்படியும் ஒரு சிந்தனை இருந்தது
என்பது தெரிகிறது.
விட்மன் தொடங்கி, பாரதியார்
வசன கவிதைகள் மூலம் தமிழர்களை எட்டிய புதுக்கவிதையில் இசையம்சம் குறைவு என்பது
சொல்லாமலே தெரிகிறது. இந்த, இசையைவிட்டு கவிதையை பிரித்து காண்பதை உலகில் பல மொழி புதுக்கவிதைகளில்
காணமுடிகிறது. புதுக்கவிதை என்கிற முயற்சியேகூட ஒருவிதத்தில் கவிதைக்கு ஒரு
பிரபஞ்ச அணி அலங்கார அடிப்படையை ஏற்படுத்தித் தருவதாக வைத்துக்கொள்ளலாம். பழைய அணி
அலங்காரங்கள் எல்லாம் மொழியளவில் வருபவை. அவை ஒரு சார்பு எல்லைகளை கவிதைக்கு வகுத்துத் தருகின்றன. அதை
மீறி கவிதை செய்வது, எல்லைகளை தாண்டி வருவது புதுக்கவிதையில் உபயோகப்படுகிற
அணி அலங்காரங்களினால், அவை
மொழி சார்பாக அமையாமல் வந்தால், சாத்தியமாகிறது.
புதுக்கவிதை இயக்கம் உலகில் பெருமளவிற்கு கவிதையை இசையின் பிடியிலிருந்து
தளர்த்திவிட முயலுகிறது. புது அணி அலங்காரங்கள் புதுக்கவிதைக்கு தேவைப்படுகின்றன. இவை மொழி மூலமாக ஏற்படாமல் விஞ்ஞான சிந்தனை, இன்றைய தத்துவ தரிசனம், மதமறுப்பு இவற்றின் மூலமாக ஏற்பட்டு, சங்கீதத்தில் போல கவிதைக்கும் ஒரு புது பிரபஞ்ச மொழிக்கு - மொழிகளைக் கடந்த
மொழிக்கு - ஏற்பாடு செய்து தரலாம் என்றுதான் தோன்றுகிறது.
மூன்றாவதாக, கவிதைக்கும் - புதுக்கவிதைக்கும் ஏற்படுகிற எல்லைகள் கவிதையை வாசகர்களின் எதிர்கொள்ளும் சக்தியிலிருந்து
விளைகின்றன என்பது வெளிப்படை. இதை கம்யூனிஸக்காரர்கள்தான் முதன்முதலில் இக்காலத்தில்
இனம்கண்டு சொன்னவர்கள். மக்கள் இலக்கியமே இலக்கியம் என்கிற கோஷம் இதன் விளைவு. இலக்கியத்தை,
கவிதையை ஏற்றுக்கொள்ளும் தரத்தை மக்களிடையே குறைத்துவிட வழிகள் செய்துவிட்டு உயர் கவிதை
வரவில்லையே என்று அழுதால்,
கூடி அழலாமே தவிர வேறு எதுவும் செய்ய
இயலாது. கவிதையை எதிர்கொள்பவர்களின் மனோநிலை, ரஸப்பக்குவம் எப்படி இருக்கிறது என்பது தமிழில்
நிதரிசனமாகவே தெரியக் கிடக்கிறது.
‘சோஷியாலஜியில் ஆய்வுகள்’ என்று மக்களிடையே நடத்தி இந்த மனப்பக்குவம், ரஸனை அனுபவம் எப்படி எப்படி மாறுகிறது,
உருப்பெறுகிறது என்று மேலைநாடுகளில்
பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ஒன்றும் நம்மிடையே மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், சமஸ்கிருத
ஸாஹித்திய அழகு தத்துவ சாஸ்திரிகள் ஸஹ்ருதயர்கள் என்று ஒரு சிந்தனையை எடுத்துச்
சொன்னார்கள். கவி சமைப்பவனே போன்ற வாசகர்கள்தான் ஸஹ்ருதயர்கள் என்று
சொல்லப்பட்டவர்கள். கவி காரியம் என்பதை சமைப்பதற்கும் ஏற்பவனுக்கும் (உண்பவனுக்கும்) பொதுவாக
வைத்து அவர்கள் கணித்தார்கள். அதாவது, நல்ல இலக்கியம் படைக்க எந்த மாதிரியான குணாதிசயங்கள், மேதை அம்சங்கள், தேவையோ அந்த அளவு வாசகர்களுக்கும் குணாதிசயங்கள்
மேதை அம்சங்கள் தேவை என்று அவர்கள் அன்றே கண்டு சொன்னார்கள்.
இதன் உண்மையை நாம்
காண்கிறோம். இன்று சினிமா பார்ப்பவர்களுக்கு வைரமுத்து கவியாக காட்சியளிக்கிறார்.
அன்று சினிமா பார்த்தவர்களுக்கு கண்ணதாஸன் கவியாக காட்சியளித்தார். ‘குமுத’த்தில்
படித்து, புரியவில்லையே என்று குழம்புகிறவனுக்கு ‘குமுதம்’ துணுக்குக்
கவிதை கவிதையாகவே படுகிறது.
ஆனால், புதுக்கவிதை
கவிதையாகவே மாறி செயல்படுவதை மயன், ஷண்முக சுப்பையா, நகுலன்,
ஞானக்கூத்தன் என்று மரபிலும் அவர்களை
ஒட்டிப் பின்வருகிற இருபது, முப்பது
இன்றைய கவிகளிலும் காண்கிறோம்.
இப்படியேதான் போய்க்கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல விஷயம்; இதைவிட மேலாகவும் வரவேண்டும் என்பதுதான் எல்லைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய விஷயம், வரும்.
காலதேவன் அப்படியொன்றும் லோபியல்ல.
ஆனால், கவிதை என்பது
கவிதைக்கு ஏற்பட்ட எல்லைகளை மீற
முயலுகிறபோதுதான் கவிதையேயாகிறது. ‘இப்படிப்பட்ட கவிதையில் நல்ல கவிதை, கெட்ட கவிதை, புதுக்கவிதை, பழங்கவிதை என்று எதுவும் கிடையாது. கவிதை மட்டும்
உண்டு’ என்று
‘வக்ரோக்தி ஜீவிதம்’ ஆசிரியர் சொல்லுகிறார். அது உண்மை என்றுதான்
தோன்றுகிறது.
ஒரு நல்ல வாசகன் இருந்தால் போதும். அவன் ஸஹ்ருதய போக்கினால் கவிதை உண்டாகிவிடும் என்பது இலக்கிய அனுபவமாக தெரிகிறது. நல்ல வாசகன் நல்ல கவிதைகளைப் படித்து ஸஹ்ருதயனாகிறான். ஆதாரம் முதல் கோழியா முட்டையா என்கிற விசாரணை போன்றது இது. இரண்டும் அவசியம் என்பது எல்லைகளை வகுக்கிறது.
முதல் வெளியீடு: ‘ழ’ இதழ் 28, அக். 1988
விருட்சம் இதழில் மறுபிரசுரம்
***
க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment