தெளிவு
பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலையடிவார நகரின்
மாலைக்காற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது
என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்
சாம்பல்நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்
சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்
இசைவாகின
யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது
எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன
தனித்தலின் பரவசம்
அனுபவத்தின் கையிருப்பில்
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது
தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்
‘Communication’ கவிதையின் அடிப்படைக் கருத்தான தெளிவைப் பற்றிய தொடர்ச்சியாகவும் இக்கவிதையைப் பார்க்கலாம். ‘தெளிவும் ஒரு கலங்கலே’ என்று அக்கவிதை முடிகிறது. ஆனால், இக்கவிதை தெளிவு, கலங்கல் — இரண்டையும் தாண்டிய ஒரு நிலையைச் சித்தரிக்கிறது எனலாம். ஒருவகையில், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதாம். கலங்கல் தெளிவை நோக்கிய ஓரடி என்றால், தெளிவு மற்றொரு கலங்கலின் தொடக்கம் எனலாம். தெளிவு முழுமையாக அறிவுடன் தொடர்புடையது. ஆனால் வாழ்க்கையின் ரகசியம் அறிவாற்றலில் மட்டும் அடங்காதது. அறிவு தெரிந்தவற்றில் மட்டும் இயங்கக்கூடியது. தவிர, முடிந்த அனுபவங்கள்தாம் அதற்கு ஆதாரம். அதனால், அது நினைவுகளின் தொகுப்பாகிறது. மன இயக்கம் என்பது, ஒரு பார்வையில், நினைவுகளின் யதேச்சையான குறிக்கோளற்ற ஓட்டம்தான். மனத்தின் மீது நினைவுகளின் ஆதிக்கம் மிகவும் வலுவானது. உணர்ச்சிப்பூர்வமான நினைவுகள் பெரும்பாலும் காட்சிகளாகத் தேங்கியிருக்கும். மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம் போன்ற எல்லா உணர்ச்சிகளின் நிகழ்வுகளும் படங்களாக உரிய உணர்ச்சித் தீவிரத்துடன் மனத்தில் பதிந்திருக்கும். ஆசை ஊக்குவித்த கற்பனைகளும் சித்திரங்களாகத்தான் சேகரிக்கப்பட்டிருக்கும். இப்படி, விருப்பு-வெறுப்பு அடிப்படையில் தன்னுடன் தொடர்புடையவர்களையும், முக்கியமாகத் தன்னையும், முதன்மைப்படுத்திப் பதிந்திருக்கும் காட்சிகள்தாம் பிம்பங்கள் எனலாம். பிம்பங்களின் கருணையற்ற சர்வாதிகாரம்தான் எல்லா மனிதத் துயரங்களுக்கும் மிக முக்கியமான காரணமாகும். ஒரு சில நொடிகளுக்காவது பிம்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும் அனுபவம் அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாகும். அகத்தின் ஆனந்தம் புறத்தையும் மாற்றிவிடும். என்றைக்குமில்லாமல் அன்று காற்று புது இன்பம் விளைவிக்கும்.
பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலையடிவார நகரின்
மாலைக்காற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது
சோதனையும் வேதனையுமாக அனுபவமாகியிருக்கும் இருள்கூட எதிர்பாராவண்ணம் எளிமையாக நட்புடன் வந்து இணையும்.
என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்
நினைவுகளின் சுவடேதுமில்லாமல் துயரமும் தொலைவில் நிற்க, களங்கமில்லாத இருள் அது. அன்றாடம் நிகழும் ஒன்றான மாலைவானம் இருளுக்கு இடம்கொடுத்து மறைவதும், அன்று தனிச் சிறப்புடன் அமைகிறது. உள்ளத்தின் மகிழ்ச்சியானது உலகம் முழுவதும் பரவியிருப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது.
சாம்பல் நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்
உணரவும், உணர்ந்ததை உணர்த்தவும் பயன்படுவது சொல். சொல்லின் உதவியின்றி ஓர் உணர்ச்சியை அதுவாகவே உணரும்பொழுது நிச்சலன மன அமைதியில் ‘நான்’-இன் இயக்கம் வெகுவாக அடங்கிவிடுகிறது. அப்பொழுது, பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படும் பொருள் — மூன்றும் ஒன்றாகிவிடும் அனுபவம் நிகழ்கிறது. நிகழ்வதும் அதைப் பார்க்க நிகழ்பவனும் இசைந்துவிடுகின்றன.
சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்
இசைவாகின்றன. இந்த நிலையில்தான் மற்றுமொரு உன்னதமான ஆன்மிக அனுபவம் தோன்றுகிறது. மனத்தின் இன்னொரு பெயர் ‘தளர்விலாத சுயநலம்’. மனத்துடன் முற்றிலுமாகத் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் இன்னொரு பெயரும் சுயநலம்தான்.
சுயநலத்திற்குத் தன்னுடைய சுகத்தைவிட சோகம்தான் அழுத்தமாகத் தெரியும். பிறருடைய சோகம் அதற்குப் புலனாகலாம், ஆனால் சற்றும் அதை அது உணராது. அக்கணத்தில், சோகங்களின் நடுவில் தன்னுடைய சோகம் ஒன்றுதான் உண்மை என்று அது உணரும். இங்கே சோகம் தொடர்பான ஜே.கே.யின் கருத்துகள் மிகப் பொருத்தமாக இருக்கும். அவர் சொல்கிறார்: “சோகத்திற்குப் பல உருவங்கள் உண்டு. அவற்றுடன்தான் நாம் காலகாலமாக வாழ்ந்து வருகிறோம்.. வருத்தம், தனிமையின் சோகம், தீவிரக் கவலை தோற்றுவிக்கும் சோகம், மற்றவருடனான உறவு சரிவர அமையாததின் சோகம், ஒரு தாயின் சோகம், ஒரு தந்தையின் சோகம், போரில் கொல்லப்பட்ட கணவனை இழந்த மனைவியின் சோகம், அறியாமையின் சோகம்.” இந்த உலகச் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று யாரும் உணர்வதில்லை. தன் சொந்த சோகத்தின் அழுத்தத்தில் துன்புறுகிறான் மனிதன். சோகத்திலிருந்து விடுபடாமல் மேலும் மேலும் அதில் அழுந்துவதற்குக் காரணம் ‘நான்’-இன் மிகச் சூட்சுமமான வலைவிரிப்பு. மாறுவதும் வளருவதுமான விருப்பு-வெறுப்பு விளைவிக்கும் தோல்விகளும் வாழ்வில் நிகழும் சில இழப்புகளும் மனிதனைச் சுய இரக்கத்தில் அமிழ்த்திவிடுகின்றன. கழிவிரக்கம் சோகத்தைப் புரிந்துகொள்ள முயல்வதற்குப் பதில், அதிலிருந்து தப்பிக்கவோ, அல்லது அதை ஏதோவொரு வழியில் எதிர்க்கவோ செய்யும். ஆனால் இவ்வாறன்றி, சோகத்தைப் புரிந்துகொள்ளும்பொழுது, ஆழமான அர்த்தமுள்ள புது அனுபவம் தோன்றி விரிவடைகிறது. சொந்த சோகத்தின் எல்லை மறைய, பிரபஞ்ச சோகத்தின் சுமையைத் துல்லியமாக உணரமுடிகிறது. அதனுடைய வலிய அழுத்தத்தையும் உணரமுடிகிறது.
யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது
தன் சோகத்தின் எல்லை உதிர, ‘நான்’-இன் இறுகிய பிடிப்பு நெகிழ்ந்து விரிய, எல்லையற்ற அற்புத ஆன்மிகச் சக்தி பிறக்கிறது. அச்சக்தியின் முதற்பண்பே அன்பாக மிளிர்கிறது. அந்நிலையில் பார்த்தல், பார்க்கப்படுதல் என்ற வேற்றுமைகள் கழன்றுவிட, நேற்றின் நிழலும் நாளைய கனவுமின்றி, வார்த்தைகளின் உரசலின்றி அக்கணத்தின் உணர்ச்சித் தூய்மை அனுபவமாய் ஒப்புமையிலாத ஆனந்தம் விளைகிறது. இது புறவுலகின் நொடியில் நிகழும் அகவுலக ஆன்மிகத் திளைப்பு. எல்லாமுமாக உணரும் இருப்பின் உச்சம்.
எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தனஇந்தத் திளைத்தல்தான் தனித்தலின் பரவசம். தனிமைக்கும் தனித்தலுக்குமிடைய உள்ள வேற்றுமை மலைக்கும் மடுவுக்குமானது. தன்னால் யாரையும் சார்ந்திருக்கமுடிவதில்லை, தன்னையும் யாரும் சார்ந்திருப்பதில்லை என்ற ஏக்க உணர்வே தனிமை. உறவிற்கும், உடைமைக்கும், உரிமைக்கும் தீவிர எதிர்பார்ப்புடையது தனிமை. தனித்தல் முற்றிலும் மாறுபட்டது. ஜே.கே. குறிப்பிடுவது போலத் தனித்தல் என்பது, “ஒரு நினைவோ அங்கீகாரமோ அல்ல. இது, மனத்தாலோ, வார்த்தையாலோ, சமூகத்தினாலோ, பரம்பரைப் பழக்கத்தினாலோ சற்றும் பாதிக்கப்படாதது. ஒரு பரவசப் பிரார்த்தனை”. இந்த அனுபவம் ஒப்பிட முடியாதது. வார்த்தைகளால் இவ்வனுபவத்தைத் தொட முடிவதில்லை. முடிந்து திரண்ட அனுபவப் பரப்பில், எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், இது அடங்காமல் பிரபஞ்சம்போல் விரியும்.
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது தனித்தலின் பரவசம் ஒப்பிடமுடியாத ஆழமும் அமைதியும் ஒருங்கிணைந்த பேரானந்தம். விருப்பம் நிறைவேறும்பொழுது தோன்றும் மகிழ்ச்சி அல்ல இது. மகிழ்ச்சியின் எதிர்முனையில் மகிழ்ச்சியின்மை இருக்கும். ஆனால் பரவசத்திற்கு எதிர்நிலை என்று ஒன்று இருக்கமுடியாது; அதை இழந்த நிலை வேண்டுமானால் இருக்கலாம். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் அடிப்படையில் மனத்துடன் தொடர்புடையவை. ஒப்பிடுதல் மனதின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று என்றால், தன் அனுபவமும் அது தந்த பார்வையும்தான் ஒப்பிடுதலின் மையங்களாக இருக்கும். உலகளாவிய அனுபவச் சாத்தியத்தின் முன்னால் தனிமனிதனின் அனுபவம் மிகவும் குறுகியது. ஆனால், பரவசம், உலகளாவிய அனுபவச் சாத்தியத்திலும் அடங்காது. எந்தவொரு அனுபவத்திலும் பகுத்துணரும் அறிவாற்றலின் பங்கு மிக முக்கியமாக இருக்கும். அறிவாற்றலின் இயலாமையும் செயலின்மையும்தான் பரவசம். அதனால்தான், அது அனுபவத்தின் கையிருப்பில் அடங்காது நழுவுகிறது. என்றாலும், அந்த உன்னத அனுபவம் ஒரு நிரந்தரப் பின்விளைவாக, ‘தெளிவு என்பது பொய்’ என்ற ஓர் உண்மையை உணர்த்துகிறது.
மனம் எப்பொழுதும் தெளிவைத் தேடும். அறிந்தவைகளின் நடுவில் இயங்குவது மனத்திற்கு வசதி. அஞ்சவேண்டியதில்லை. நம்பிக்கையுடன் செயல்படமுடியும். அதற்கு ‘தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறும்’ இயல்புள்ளது. சற்றும் சிந்தனையின்றி, தெளிவைப் பெற்றிடப் பல ‘பாமர முயற்சிகள் மேற்கொண்டு திரும்பத்திரும்பத் தோற்கும்.’ ஆனாலும், முயன்றதிற்காக மகிழும். காரணம், தோல்வியை முடிந்த முடிவாக இன்னும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்று எண்ணிப் பெருமிதமடைந்து கொண்டிருக்கும். ஆனால் பரவச அனுபவத்திற்குப் பின் எந்தவொரு வருத்தமும் ஏமாற்றமுமின்றி, அந்தப் பழைய நாட்கள் பாதிப்பேதுமின்றி நிழலாகும்.
தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்
‘தெளிவு’ மிகச்சிறந்த ஆன்மிகக் கவிதைகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆன்மிக இலக்கியங்கள் உணர்த்தும் ஆன்மிகப் பயணம் ஒரு பம்மாத்துக்கு, அறிவு, அறிதல், இருப்பு, இருப்பின்மை என்ற பாதையில் நிகழ்கிறது. இக்கவிதையிலும் இந்நிலைகளை உணரமுடிகிறது. அறிவின் போதாமையைக் கவிதையின் கடைசி வரிகள் வலியுறுத்துகின்றன.
சுயநலம் நீங்கிய உறவில் பிறருடைய துன்பத்தையும் சோகத்தையும் உணரும் அறிதல் பிறக்கிறது. இந்த அறிதல் நிலையில்தான், நான்-எனது என்ற சிந்தனை இறுக்கம் மறைந்து மனிதனிடம், மனித இனத்திடம், எல்லா உயிர்களிடத்திலும் நிபந்தனையற்ற அன்பு சுரக்கிறது. கணப்பொழுதும் மனித இனம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தாங்கொணாத பெரும் துயரத்தை, சோகத்தைத் துல்லியமாக உணரமுடிகிறது. ‘யாருடையதென்றிலாத சோகம்’ அர்த்தமுள்ளதாகிறது. இருப்புநிலையில் சோகம் – சுகம் என்ற இருமை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. உருவ வடிவங்கள் செயலாக்கத்தின் வசதிகளாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். எறும்பு, யானை இவ்விரண்டின் இயற்கையான உருவ வேற்றுமையைத் தாண்டி, இவ்விரண்டிற்கும் பொதுவான உயிர்த்துடிப்பில் உண்மையைக் காணும். எறும்பின் மரணமும் யானையின் மரணம் போன்றே மிகவும் சோகத்திற்குரிய நிகழ்வாகும். உருவிலி ஆன்மிக உணர்வு காணுமிடமெங்கும் நிரம்பிப் பூரிக்கும்.
எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன
என்ற வரிகள் இருப்பின் பண்பை மிகச்சரியாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன.
திளைத்தலில்கூட திளைப்பவனின் நிழல் இருக்கும். ஆனால் பரவச நிலையில் அந்த உணர்வு மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். நிகழ்வதில் கரைந்து, அக்கணம் கேட்கும் செயலில் முழுக் கவனத்துடன் ஈடுபட்டிருக்கும், செயலாற்றத் தேவையான கருவியாக ‘நான்’ இருக்கும். ஆனாலும், ‘நான்’-இன் நோக்கம் எதுவும் அச்செயலில் இருக்காது. ஆன்மிகப் பயணத்தின் இறுதிநிலையாக, அமைதியின்றி இருந்துகொண்டிருக்கும், தனித்தலின் பரவசம். ஆன்மிக விழிப்புணர்வு கண்டிருக்கும் கர்ம, ஞான, பக்தி மார்க்கங்கள் அனைத்தும் இறுதியில் சென்றடையும் அனுபவம் தனித்தலின் பரவசம்தான். இவ்வனுபவத்தை, எளிய சொற்கள், உருவகங்கள் மூலமாக இக்கவிதை உணர்த்துவதால் ‘தெளிவு’ சிறப்பிடம் பெறத் தகுதியுள்ளதாகிறது.
நான் இல்லாமல் என் வாழ்க்கை
நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது
வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது
எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது
உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது
கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது
பூமியைத் துளைத்து
மறுபுறம் வெளிவந்தது
பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது
மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது
காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது
தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று
எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டதுவாழ்க்கையெனும் முடிவிலாத இயக்கம் எந்த ஒரு உயிரையும், ஒரு மனிதனையும் சார்ந்து இல்லை. ஒருவனின் தோற்றத்திற்கு முன்பும் அவனுடைய மறைவிற்குப் பின்பும் வாழ்க்கை சீராகவும் இயல்பாகவும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. தனிமனித வாழ்வு, பெருகும் வாழ்க்கைப் பெருங்கடலில் ஓர் அணுத் துளி எனலாம். இத்துளியின் வாழ்வைப் பொதுவாக இரு தளங்களில் உணரலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கைதான் உண்மையான ஒன்று். இறப்பிற்குப் பின் மனிதனின் வாழ்வு எவ்வகையிலும் தொடர்வது இல்லை. இறப்பு அவனுடைய முழுமையான முடிவு. புறவுலக புலனுலகங்களைத் தாண்டி ஓர் உருவிலி வாழ்க்கை என்பது உறுதியாக இல்லை, இயலாது. இரண்டாவது தளமான ஆன்மிகப் பார்வையில், மரணம் புதியதொரு வாழ்வின் தொடக்கம் உடலின் அழிவைத் தாண்டி, மனிதனின் இருப்பு — ஆன்மிக மொழியில், ஆன்மா — தொடர்கிறது. அதற்கு அழிவில்லை. வாழ்வை இவ்வான்மிகத் தளத்தில் இருந்து நோக்கும்பொழுது, தனிமனித ‘நான்’-இன் பங்கும் பணியும் ஏதுமின்றி, பொதுவான புறவுலக வாழ்வின் தவிர்க்கமுடியாத அவலங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் விடுபட்டு அது இயல்பாக உலா வருவதை உணரலாம்.
அத்தளத்தில், உடல், மனம் இவற்றின் எல்லைகள்-தொல்லைகள் இல்லையாதலால், யாருடையது என்றில்லாத எல்லா உணர்வுகளும் தன்னுணர்வுபோல் அர்த்தங்கொள்ளும். அதனால்தான் நான் இல்லாமலும் அது என் வாழ்க்கையாகிவிடுகிறது. அந்த வாழ்க்கையும் தன் போக்கில் திரண்டு இயங்குகிறது. ‘நான்’ ஒருவகையில், விருப்பு-வெறுப்புகளின் சிக்கலான தொகுப்பாகும். அதன் வழிநடத்தலின்படியே, வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கும். ஏதோவொரு குறிக்கோள் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்துக்கொண்டிருக்கும். ஆனால், ‘நான்’ இல்லாத வாழ்க்கை, விருப்பு-வெறுப்பின்மையால், குறிக்கோளின்றி அதற்கேயுரிய வழியில், இயல்பாக நடந்து கொண்டிருக்கும்; ‘ஏதேச்சையில் அருத்திரண்டு’ கொண்டிருக்கும்.
ஒருவகையில், உருவ வடிவங்களின் தொடர்பும் அதன் பாதிப்பும்தான் வாழ்க்கையெனலாம். யுகங்களாய் மனிதனை வென்று சீர்குலைக்கும் ஆசைகளின் அடிப்படை அவற்றின் உருவ வடிவங்கள்தாம். விருப்பு-வெறுப்பு மனிதனின் அகச்சிறைகள் என்றால், வடிவ விளிம்புகள் அவனுடைய புறச்சிறைகள். சிறைகளிலிருந்து உருவிலியாய் விடுதலை பெற்றவுடன், கண்டு கற்பிக்கப்பட்ட எல்லைகள் நீங்க, அவன் எங்கும் எப்பொழுதும் நீக்கமற நிறைந்துவிடுகிறான். முடிவின்றி விரிந்திருக்கும் ஆகாயம்போல் நீல வியாபகமாய் ஆகிவிடுகின்றான்.
நிம்மதியின்மைக்கு மூலகாரணங்களே தேடி விரும்பியது கிடைக்கப் பெறாமையால் ஏற்படும் இழப்பும், கிடைக்கப் பெற்றதை ஏதோவொரு காரணத்திற்காக அறிந்து துறப்பதும்தாம். இழப்பும் துறவும் விருப்பு-வெறுப்பிற்குள் இயங்கும் மனதுடன் தொடர்புடையவை. மனமின்மையாகிய ‘நான்’ இல்லாமையில் நிம்மதியின்மைக்கு வாய்ப்பு இல்லையாகையால்,
எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் என் வாழ்க்கை திளைத்தது. நிறைவின்மை தரும் வேதனையும் நிறைவின் உச்சத் திகட்டலுமின்றி வாழ்க்கைத் திளைத்தது.
ஒருவனின் உணர்ச்சியோட்டத்தைக் கூர்ந்து கவனித்தால், பெரும்பாலும் விருப்பு-வெறுப்புகளில் சிக்கித் தவிப்பதும், உருவ வடிவங்களின் ஈர்ப்பில் மீளமுடியாமல் உழல்வதும்தாம் என்றாகியிருக்கும். பொருள், புகழ், உறவு போன்றவைகளின் தொடர்பின்றி, எவ்விதமான குறிக்கோளுமின்றி உணர்ச்சிகள் தாமாக தன்வயமாக இயங்குவது மிக மிக அரியதோர் அனுபவமாகப் புலப்படும். ஆனால், இவ்வாழ்க்கையில் பிணைப்பும் பிடித்தலும் இல்லாவிட்டாலும், தீவிரம் குறையாமல்,
உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும். இயல்பாக நோக்கமற்று இருப்பதால், பின் விளைவுகள் ஏதுமின்றி, இவ்வாழ்க்கை, நிழல் வீழ்த்தாமல் நடமாடிக்கொண்டிருக்கும்.
வாழ்க்கை உறவுகளின் நெருக்கமும் பெருக்கமும் என்றால், ஒருவனுடைய உறவுகள் சமூகத்தின் மிகச்சிறிய பகுதி எனலாம். இச்சமூகத்தினரின் ஒட்டுமொத்தச் செயல்களையும் கவனித்தால், அவற்றின் அடிப்படைக் காரணங்கள் வாழ்க்கை ஒரு போராட்டமாகவும் போட்டியாகவும் பார்க்கப்படுவதே என்று உணரலாம். வெற்றியேணியில் தொடர்ந்து முன்னேறுதல், பெரும் புகழடைதல், சமூகம் மதிக்கும் முக்கியமானவராக இருத்தல் — இவைதாம் அநேகமாக பெரும்பாலோரின் மறைமுகக் குறிக்கோளாக இருக்கும். சமூகத்தின் அடிப்படை அமைப்பே சுயநலத்தில் கட்டுண்டிருக்கும் நிலையில், மனிதர்களிடையே போட்டி, பொறாமை தோன்றுவது தவிர்க்கமுடியாதது.வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், தீவிரம் குறையாமல் இயங்கிக்கொண்டிருக்கும், இயக்கிக்கொண்டிருக்கும் ஆசைகள், ஒருவருக்கு வேண்டியவர்களிடம் எதிர்பார்ப்பையும் மாறுபடுபவர்களிடம் எதிர்ப்பையும் தோற்றுவிக்கும்.
கூரைகளுக்கு மேலே தன்மைகளின் எதிர்ப்பு, தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். ஆனால் நான் இல்லாத இவ்வாழ்க்கை, ஏற்புக்கும் மறுப்புக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் ஆசை, ஆணவம் இவற்றின் மெல்லிய நிழலும் அனுபவமாகாததால், போட்டி, பொறாமை தோற்றுவிக்கும் சிக்கல்களை, குழப்பங்களைத் தன்னைப் பாதிக்கவிடாமல் அலட்சியம் செய்யும். அதுவும் அலட்சியம் செய்கிறோம் என்ற உணர்வே பிறருக்குத் தோன்றாதவாறு, அசைவு தெரியாமல் தன்னிச்சையாய்ப் பறந்து திரியும்.
உருவ எல்லையின் கட்டுப்பாடு இல்லாமையால், அது சுதந்திரமாக இயல்பாக இயங்கமுடியும். நீல வியாபகம் கொண்டு பிரபஞ்ச அளவில் விரிவு கொள்ளும்பொழுது, எளிதில் சின்ன பூமியைத் துளைத்து மறுபுறம் வெளிவரும்.
மனம் வேறு, தான் வேறு என்றுணர்ந்திராத ஒருவனுக்கு நிகழ்வும் அதுதரும் நினைவும்தாம் வாழ்க்கை என்றாகியிருக்கும். நினைவுகளும் பொதுவாகக் காட்சிகளாகத்தான் பதிந்திருக்கும். புலனாகும் காட்சிகளின் ஒழுங்கற்ற தொகுப்பும் அது விளைவிக்கும் உணர்ச்சிகளும்தாம் மனம் இயங்கப் பாதையை உருவாக்குகின்றன. அதிலும் பெரும்பாலும் அச்சம், ஆசை தொடர்பானக் காட்சிகள்தாம் மனதின் பெருமளவு இடத்தை வேர்விட்டு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும். இக்காட்சிகளாகிய பிம்பங்களின் துரத்தலுக்கு மீளமுடியாமல் மனம் அகப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இவ்வாழ்க்கை மனமிலி வாழ்க்கை. இதில் நினைவுப் பதிவுகள் ஏதுமில்லாத எளிமையுடையது. ஆகவே, பிம்பங்களின் தொடர் நெருடல் இருக்கமுடியாது.
நுட்பம் எதுவுமற்ற சூன்யம் தானே தெரிய, அதில் நோக்கமிலியாய் இவ்வாழ்க்கை அலைகிறது. உண்மையில், நுட்பமின்றி இருப்பது சூன்யமல்ல. தோன்றிக்கொண்டிருக்கும் அத்தனை உயிர்களின் மூலங்களையும் உள்ளடக்கியது சூன்யம். நான் இல்லாத இவ்வெளி வாழ்க்கைதான் நுட்பமற்றிருக்கிறது. நுட்பம் அறிவுடன் தொடர்புடையது, இவ்விரண்டும் மனதின் பகுதிகள், நான் மறைய இவையும் அடங்கி மறைந்துவிடும்.
மரணம் இவ்வாழ்க்கைக்கு அச்சம்தரும் ஒன்றல்ல. மாறாக, மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஒரு சாதனம். புது வெள்ளத்தில் குதித்து விளையாடி மகிழும் சிறுவனுக்கும் பாறை கைகொடுப்பது போன்றது மரணம். தவிர உடலுக்கு மட்டுமே. உடல் தானல்ல என்ற மைய அனுபவத்தைக் கொண்டுள்ள இருப்பிற்கு, ஆன்மாவிற்கு முதலும் முடிவும் இல்லை என்பர். அதிகபட்சமாக, மரணம் அதற்கு ஒரு தற்காலிக இடைவெளி, முழு அமைதியுடன் ஒரு சிறிய ஓய்வு, அவ்வளவுதான்.
ஆனால், பொதுவாழ்வில், மரணம் காலத்தின் சர்வாதிக்கத்திற்கான மறுக்கமுடியாத சின்னமாக உணரப்படுகிறது. எந்த உயிரும், எந்த நாளும் காலத்தின் பாதிப்பிலிருந்து மீண்டதாக இல்லை. காலத்தின் ஆதிக்கம் கருணையற்றது்; தவிர்க்கமுடியாதது. ஆனால் காலத்தின் ஆட்சியால் நானில்லா இவ்வாழ்க்கையைப் பாதிக்க முடியவில்லை. அதனுடைய அதிகாரம் உருவங்கள், வடிவங்கள்மீது மட்டுமே சென்றது். உருவிலி உன்னதத்துடன் போராடித் தோற்றுப் ‘புகைந்து அடங்குகிறது’ காலத்தின் இயலாமையைக் கண்டு, தன்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, வல்லமையுடன் இருக்கும் ஒன்றை வெல்ல நினைத்த அதன் அறியாமையை ரசித்து விலகிநின்று வேடிக்கை பார்க்கிறது.
தத்துவம் இவ்வாழ்க்கையைச் சற்றும் நெருங்கமுடியாது. தத்துவம் அடிப்படையில் அறிவுடன் இறுகிய தொடர்புடையது். அது அறிவின் பண்பு ஒன்றை அறிந்து அதை ஆளுவதாகும். அறியாததின், அறியமுடியாததின் முன் அது கலவரப்படும். ஆன்மிகம், அறிவுக்கு அப்பாற்பட்டது்ம் உணர்ந்து வாழ்வதுமே அன்றி அறிந்து தெளிவதில்லை.. எனினும், நான் யார் எனும் தேடல் மனிதனுக்கு மட்டுமே மேற்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பிலாப் பண்பு. அதனாலேயே சில நேரங்களில் அத்தேடல் தத்துவ வேட்கையாய் வளர்ந்து சுமையாகவும் உருவெடுத்துவிடுகிறது. ஆனால் நான் மறைந்த இந்த வாழ்க்கைக்குத் தத்துவத்தின் நிச்சயமான எல்லை நன்றாகப் புரியும். தத்துவ முயற்சி நிழலாய், நினைவாய் மாறியிருக்கும்.
தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று
இறுதியில், தனக்கெனவுள்ள தன் அடையாளங்களையும் துறந்திருக்கும். பொதுவாக, ஒருவன் தன்னைத் தனக்குக் காட்டிக்கொள்ளப் பெற்றிருக்கும் குறியீடுகள் இனம், மொழி, சமயம் ஆகும். இவற்றைத் தொடர்ந்து அவன் அடைந்திருக்கும் புகழ், பதவி, பணம் போன்றவையும் ‘நான்’-இன் ஆணித்தரமான அடிப்படைகள். மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் சமூக ஏற்பாடுகள்.
நான் இல்லாத வாழ்க்கைக்கு இவை தேவையில்லாத வெற்று சுமைகளே. இச்சுமைகள் நீங்கிய புனித வாழ்வு, நான் இல்லாத வாழ்க்கை. நான், எனது, நீ, உனது போன்ற உரிமைகளும் உடைமைகளும் அங்கே அர்த்தமற்றவை.
எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது
இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றாகிவிட்ட அதியுச்ச எதிர்நிலையற்ற பேரானந்தம், இவ்வாழ்க்கை.
இக்கவிதையில் ‘நான்’ இல்லாத என் வாழ்க்கையின் பண்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. எல்லாத் துயரங்களுக்கும் மூலகாரணமான ‘நான்’-இன் தீவிர ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் முரண்பாடற்ற ஒரு பேரானந்த நிலையை அனுபவமாக்கும், மிகச்சிறந்த கவிதை இது.
இக்கவிதையில் அருத்திரண்டது என்ற சொல்லாட்சி பெரும் சிறப்புடையதாகப்படுகிறது. ‘நான்’ இல்லாத உணர்ச்சியின் செறிவும் தீவிரமும் சுட்டிக்காட்டிட, இப்புதுச்சொல் நன்கு பொருந்துகிறது. உருவிலித்தன்மையும் அவ்வுணர்வின் செழிப்பும் அதன் குறிக்கோளற்ற வியத்தகு இயக்கமும் இச்சொல்லால் வெளிப்படுகின்றன.
‘நான்’-இல் திணிந்திருக்கும் தன்மைகள் ஒவ்வொன்றாய் உதிர, விளையும் நிலைகளும் சரியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ‘நான்’ மறையும் இப்பயணத்தில், கவிதை நம்மை இட்டுச் சென்று நிறுத்தும் இறுதிக் கட்டமானது முழுமையான முத்தாய்ப்பு. இந்நிலையைத் தாண்டி மற்றுமொரு நிலையைச் சிந்தித்துப் பார்க்கமுடியவில்லை. இல்லாமல் இருக்கும் வாழ்வில் கவிதையும் கழன்று விழுவதை உணரமுடிகிறது.
மனிதனைத் துன்புறுத்தும் எல்லா அச்சங்களுக்கும் மூல காரணம் மரண பயம் என்றால், அதற்கும் மூலம் நான் என்கிற உணர்வு. நான் என்பதிலிருந்து விடுதலைதான் அச்சம் மறைய வழி என்ற உண்மையைப் புத்தர் அறிவுறித்தியதை ஓஷோ குறிப்பிடுகிறார்:
“நீ இருக்கிறாய் என்ற எண்ணம் உனக்கு இருக்கும்வரையில் உனது பயம் அழியமுடியாது. பயத்தினின்று விடுபட விரும்பினால், முதலிலேயே நீ இல்லை என்பதை ஏற்றுவிடு. நீயே இல்லை என்பதுபோல் வாழ்ந்திரு. நீ இருக்கவில்லை என்று வாழ்வது மட்டுமே சாதனை. பிறகு எதுவும் உன்னை அச்சுறுத்த முடியாது. நீ என்பதே இல்லை என்ற அனுபவம் உனக்கு ஏற்பட்டுவிட்டால், நீ சூன்யமானவன் என்று உணர்ந்துவிட்டால், ஒரு கணத்திற்கும் பயமடையக் காரணம் கிடையாது” என்கிறார் புத்தர்.
இதே கருத்தை ஜே.கே.யும் வேறொரு விதமாக உணர்த்துகிறார்.
“நாளை காலை நீங்கள் மரணமடையப் போகிறீர்கள் என்று உங்களிடம் சொல்லப்பட்டால், என்ன நடக்கும்?” என்று ஒருவர் ஜே.கே.யைக் கேட்டார்.
சிரித்தபின் ஜே.கே. சொன்னார்: “ஒன்றுமில்லை அதற்கு முன்னால் எப்படி வாழ்ந்தேனோ, அதே போல்தான். உலகத்திடம் நான் எதையும் கேட்கவில்லை. அதுதான் என்னுடைய பதில். மனிதர்களிடமிருந்தோ, கடவுள்களிடமிருந்தோ நான் எதையும் விரும்பவில்லை. யாரிடமிருந்தும் எதுவும் தேவையில்லை. இப்பொழுது மரணம் இங்கு வந்து என்னிடம், ‘இன்று மாலை நீ போகப் போகிறாய்’ என்று சொன்னால், அதுவும் சரிதான்.”
இங்கே, ஜே.கே. உணர்த்தியுள்ளது இல்லாமலிருக்கும் அனுபவத்தைத்தான். நான் இல்லாத வாழ்க்கையென்பது ஆன்மிக வாழ்வின் அரிச்சுவடி, மூலசூத்திரம் என்பதை இக்கவிதை நிலைநிறுத்துகிறது.
***
ஆழங்களின் அனுபவம்
அபியின் ‘என்ற ஒன்று’ கவிதைகள்
மீதான வாசிப்பு
ஜி.ஆர். பாலகிருஷ்ணன்
சீர்மை
பக்கங்கள் : 240 / விலை : ₹280
முதல் பதிப்பு : ஜூலை 2022
ISBN : 9789391593148
'தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.'
— ஜெயமோகன்
'தியானத்தின் நிலைக்கு கவிதை அனுபவத்தை நகர்த்தியவர்' என்று விமர்சகர்களால் ஆழ்ந்து நோக்கப்படுபவர் அபி. சொல்ல முடியாததை (unutterable) சொல்ல முனைபவை அபியின் கவிதைகள். மௌனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவரின் கவிதைகள் நிர்ணயங்களையும் துல்லிய வரையறைகளையும் நம்பாதவை. 'தெளிவு' என்பதை ஒரு பகட்டாக நினைப்பவை. இருளின் தீட்சண்யத்தில் கண்திறப்பவை.
***