1
மிக பெரியவைகளை நோக்கி செல்லவே நாம் பழக்கப்படுத்தபட்டிருக்கோம், அது தவறும் அன்று. அதை அடைந்த பின் அங்கிருந்து அடுத்த பெரிய ஒன்றை தானாக கண்டடைந்து அதை நோக்கி செல்வதே இயல்பான ஒன்று. இந்த நீண்ட பயணத்தில் பல நேரம் நாம் பணயமாய் (இரையாக்குவது) வைப்பது நமக்கு கை அளிக்கப்பட்டிருக்கும் தூய்மையான எளியவைகளை. பெரும் வெற்றிகள் ஆணவத்தின் நிறைவைக் கொடுக்கலாம் ஆனால் அது என்றும் எளிய தூய்மையின் முன் இரண்டாம் இடமே.
சிறிய விஷயங்களின் சாத்தான்
சிறியவைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது
ஒரு மிடறு தேநீரைப் போன்ற சிறிய விஷயம்
ஒரு பைத்தியத்தால் கொண்டாடப்படுகிறது
ஒரு சின்னஞ்சிறு சாக்லெட் துண்டு
குழந்தையின் முகத்தில் கொண்டு வரும்
நிலா வெளிச்சத்தை
ஒரு சின்னஞ்சிறு மலர்
மனதுக்குள் கொண்டுவரும் சூரிய வெளிச்சத்தை
பெரிய விஷயங்களின் கடவுளால் அருள முடிந்ததே இல்லை
பெரிய விஷயங்கள் பெரிய பெரிய நாகரிகங்களை உருவாக்குகின்றன
பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்குகின்றன
சிறிய விஷயங்கள் தங்கள் சின்னஞ்சிறுமையில்
அவற்றைப் பகடி செய்கின்றன
பொறாமை கொள்ளச் செய்கின்றன
2
வெளிச்சத்தின் நிழலில் பதுங்கி இருந்த யாவும் இருளில் ஒவ்வொன்றாக வெளிப்படுவதை சமயங்களில் எல்லோரும் ஒரு நேரம் கண்டிருப்போம். காரணம் ஏதுமில்லாமல் இன்னும் இன்னும் என்று பெருகி கொண்டே இருக்கும் மனதின் சொற்கள். ஒளியற்ற இருளின் தனிமை அதை ஊதி ஊதி பெரிதாக்கி தன்னுள் இருந்து வந்த சொற்களின் வலையில் தானே சிக்கும் அபாயம். பெயரில்லா துக்கத்தை பாடும் காகம் , இருண்ட வானில் தனித்திருக்கும் விண்மீன் , பெரும் மழை முடிந்த பின் ஓலமிடும் தவளை - இதெல்லாம் காரணிகள் என்றோ கவி மனம் கேட்டாலும், அந்த காரணிகளே - காகம், விண்மீன், தவளை - கவியின் மனம் என்ற வாசிப்புக்கும் இடம் கொடுக்கும் கவிதை. பெருகி நிறைக்கிறது சொற்கள் அதை களைத்து போட்டப்படி இருக்கிறது மனம். சேர்ந்து கொண்டே இருக்கும் கரை மணலை என்று முடிக்கும் சிறு பூச்சியின் சின்னஞ்சிறிய கால்கள்?
இரவின் சொற்கள்
புதிய வெட்டுக் காயத்தில்
உதிரம் பெருகுவது போல்
இவ்விரவில் சொற்கள்
ஏன் பெருகுகின்றன
மனதின் எந்த உலை
ததும்பிப் பொங்குகிறது
காரணமற்ற துக்கத்தில்
இருண்ட பின்னும்
கத்திக்கொண்டிருக்கும்
காகத்தின் துயரமா
மழை தீர்ந்த இரவின்
தவளையின் கூச்சலா
நிலவற்ற வானின்
ஒற்றை விண்மீனா
எது கொண்டு வந்தது
இந்த பாரத்தை
அலை வந்து சேர்க்கும்
கரை மணலை
சிறு காலால் பறித்துப் பறித்து
வெளித்தள்ளும்
சிறு பூச்சியாய்
இறைத்துச் சலிக்கிறது மனம்
***
0 comments:
Post a Comment