செய்யுளிலிருந்து கவிதைக்கு - கடலூர் சீனு

கொண்டுகூட்டிக் கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப் பொருள்மாறும் அந்த சீரிளமைத் தேகம்

தளை தட்ட,


துறைவிட்டகலாது

மறுகி நிற்கிறது;


மல்லற்பேரியாற்றின்

நீர்வழிப்படூஉம்

எனது புணை. 

(மோகனரங்கன்)

பொதுவாக  எனக்கு உள்ளுக்குள் சொல்லிச் சொல்லி மகிழும் வண்ணம் எழுதப்பெறும் நவீன கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

பின் நவீன அலைக்குப் பிறகு கவிதை அழகியலில் சமகாலம், சிம்கார்டு, அதிகாரம், அரசியல், கட்டுடைப்பு என்றெல்லாம் பேசப்பட்டு,  திட்டமிட்டு ஒழுங்கு, சந்தம், மொழி அழகு, மற்றும் இவை போன்ற  இன்ன பிற எல்லாம் அற்ற எதிர் கவிதைகள் சைடு கவிதைகள் என்றெல்லாம் எழுதப்பட்டு அவற்றின் ஆட்டங்கள் யாவும் சலித்த பின்னர் நவீன தமிழ்க் கவிதை மீண்டும் தனது ஆதி அழகு நோக்கி மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருப்பதன் சாட்சியமாக மேற்கண்ட மோகனரங்கன் கவிதையை சொல்லலாம்.

எப்போதும் போல இக்கவிதையை பின் சென்று சரி பார்க்காமல், அது என் நினைவில் 'என்' கவிதையாக நிற்கும் வகையில் இருந்தே இதை எழுதுகிறேன். 

நேரடியான கவிதை. காமக் கடும்புனலில் தெப்பமாக அடித்துச்செல்லப் படுவதற்கு முந்தைய தயங்கி நிற்கும் கணம், அது எதனால் என்று சொல்லும் கவிஞனின் கவிக் கூற்றாக எழும் கவிதை. 

இக் கவிதை கொண்ட உணர்வு நிலை, சங்க காலம் முதல் இன்று வரை தொடரும் 'என்றுமுள்ள' ஒரு உணர்வு நிலை. அந்த உணர்வை வெளிப்படுத்தும் மொழியும் வடிவமும் செவ்வியல் தமிழின் மொழி அழகும், இலகுவான செய்யுள் ஒன்றின் வடிவ அழகை பாவனையாகவும் கொண்டது. மொழி அழகும் சந்த அழகும் கூடிட ஒரு வாசகன் சும்மா உள்ளே சொல்லி சொல்லி மட்டுமே இக் கவிதை அளிக்கும் உணர்வு நிலையை அதன் இனிமை குன்றாது மீட்டிக்கொண்டே இருக்க முடியும்.

சங்க காலத்தில் இருந்து ஒரு கவிஞர் கிளம்பி 'இன்று'ல் வந்து நின்று இக் கவிதையை வாசித்தார் என்றார், அவர் இன்றைய மோகனரங்கனை தனது சக கவியாகவே உணர்வார். அதே நிலை தான் வாசனுக்கும். அவன் இந்த  மோகனரங்கன் கவிதையின் உணர்வு தளம், மொழி அழகு இவற்றைப் பற்றிக்கொண்டு பின்னால் சென்றால் இன்றைய மோகனரங்கனுக்கும் அன்றைய கபிலனுக்கும் 'கவிதை வெளி'யின் காலத்தில் எந்த தூரமும் இல்லை என்பதை உணர்வான்.  காலத்தால் தொடர்பு அறாத கவிதை எனும்  உயிரியின் அதே உடலின் நடுக்கண்டத்தின் துவக்கம் கபிலன் என்றால் முடிவு மோகனரங்கன் என்று சொல்லலாம்.

2000 இல் நவீன கவிதை வாசிக்க வந்த பலரைப் போலவே, எனக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் குறித்த ஈடுபாடு ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் நூலில் இருந்தே துவங்கியது. மெல்ல மெல்ல சங்கக் கவிதைகளை வாசிக்க நானே எனக்கொரு வழிமுறை உருவாக்கிக்கொண்டேன். அந்த வழிமுறையின் படி நான் ரசித்த வெள்ளிவீதியார் கவிதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் ‘திதலையும் பசலையும்’ எனும் தலைப்பில் நான் நிகழ்த்திய ரசனை உரையாடல் எனக்கு அக்கவிதைகள் வாசிப்பது சார்ந்து மேலும் பல வாசல்களை அளித்தது.  

உதாரணமாக கீழ்கண்ட வெள்ளி வீதியார் கவிதை இது வரை நமக்கு எவ்விதம் வாசிக்கக் கிடைத்தது?

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

மேற்கண்ட விதத்தில்தான் இல்லையா. ஒவ்வொரு சொல்லின் பொருள். பின்னர் ஒட்டு மொத்தமாக சொற்றொடர்கள் வழியே கிடைக்கும் ஒட்டு மொத்த பொருள். அந்த பொருளில் இருந்து அது அளிக்கும் செய்தி. மிக அழகாக சொல்லப்பட்ட செய்தி. 

மாறாக இந்த சொற் பொருள் அதன் படியிலான செய்தி விளையாட்டுக்கள் அனைத்தையும் உதறி, இதை செய்யுள் வடிவ 'கவிதை' என்று கண்டு வாசித்தால், 

கன்று ஈன்ற பசுவுக்கு அந்த கன்றின் ஆற்றலுக்கு வேண்டிய சத்துக்களுடன் முதலில் சுரக்கும் பால் தீம் பால் (சீம்பால், திரட்டுப்பால் என்று நம்மிடம் இப்போதும் புழங்குவதுதான் இந்த தீம்பால்) என்று உணர்வோம். அத்தகு பால் கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் மண்ணில் வீணாவது போல எனும் வரிகள் வழியே அவளது புலம்பலின் தீவிரத்தை உணர்வோம்.  ரத்தம் பாய்ந்து உன்மத்தம் கொண்டு மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு திதலை என்றும், ரத்தம் இழந்து சோகை கொண்ட மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு பசலை என்பதையும் உணர்ந்தால் மேற்கண்ட கவிதை கொண்டிருக்கும் எரோட்டிக் உச்சம் விளங்கும். 

ஆக சங்கக் கவிதைகளை வாசிக்க முதல் மற்றும் சரியான வழி, அவை 'அன்றைய' செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்ட, 'என்றுமுள்ள' உணர்வுகளைக் கொண்ட, அதை  'தனித்துவம்' கொண்ட காட்சி வழியே வெளிப்படுத்தும் 'இன்றைய' கவிதைகள் என்று அதை அணுகுவதே. 

துரதிஷ்ட வசமாக நான் சங்கக் கவிதைகளை அறிமுகம் செய்து கொள்ள தேர்வு செய்த தவறான நூல்களில் தலையாயது பொது அறிவு ஜீவி வாத்தியார், எழுத்தாளர் சுஜாதா உரை எழுதிய குறுந்தொகை 401 காதல் கவிதைகள் ஒர் எளிய அறிமுகம். 

பிழைகள் மலிந்த நூல். கன்றும் உண்ணாது என்று துவங்கும் வெள்ளி வீதியார் கவிதையை அந்த நூலில் கொல்லன் அழிசி எழுதியதாக கண்டிருந்தது.  (என்னிடம் உள்ளது முதல் பதிப்பு. அடுத்த பதிப்பில் அது திருவள்ளுவர் என திருத்தம் கண்டிருக்கலாம். தெரியவில்லை) . மேலும் சுஜாதா அவர்கள் அளித்த உரையில் ’உ’  மட்டுமே இருக்கிறது ’ரை’ யை காணவில்லை. இவற்றையெல்லாம்விட சங்கக் கவிதை ஒவ்வொன்றிலும் எந்த அம்சம் அதைக் கவிதை என்று ஆக்குகிறது என்பது சுஜாதாவுக்கு புரியவே இல்லை. உதாரணத்துக்கு சுஜாதா ’உ’ எழுதிய கீழ்கண்ட இந்த கவிதை

மாசு அறக் கழீஇய யானை போலப் 

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் 

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் 

நோய் தந்தனனே- தோழி; 

பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே.

சுஜாதா உரை.

கண்ணின் நிறம் 

அழுக்குப்போக கழுவப்பட்ட யானையைப் போல பெருமழையினால் கழுவப்பட்டு பசுமைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் எனக்குத் தந்த நோயால் என் கருப்பான கண் பச்சையாயிற்று.

முடிந்தது கதை. முதலில் மேற்கண்ட பாடலே சொற்பிழை கொண்டு பதிப்பிக்கப்பட்ட பாடல். அது ஒரு தலைச் சேக்கும் அல்ல, ஒரு கலைச் சேக்கும். கலை என்றால் இங்கே கலை மான்.

அது ஒரு பாறை. எப்படிப்பட்ட பாறை? 

இரும்பு போல கரிய வண்ணம் கொண்ட, கரடு முரடான சருமம் கொண்ட, மழை 'அடித்துக்' கழுவிய, மாசு அற நீராட்டப்பட்ட யானை போன்ற, பாறை. அதில் தனிமை ஏக்கம் கொண்டு அமைந்திருக்கிறது 'ஒற்றைத்' கலை மான். 

அந்த நிலத்தைச் சேர்ந்தவன் எனக்களித்த நோயால் என் குவளைக் கண்கள் பசலை வண்ணம் கொண்டதே தோழி.

இதில் காதலியின் கண்கள் கருங்குவளை என்றோ செங்குவளை என்றோ கொண்டால் அந்த வண்ணம் போய் வெளுத்து விட்ட மலராக இந்த நோயால் இப்போது அவள் கண்கள் மாறி விட்டது. 

எத்தனை வண்ணங்கள் செறிந்த  கவிதை. மழை நின்ற பசுமை வெளியில் கரும்பாறையில் நின்றிருக்கும் பொன்னிற மான் பின்னணியாக கார்வண்ண வானம். இது எதுவுமே சுஜாதாவுக்கு உள்ளே சென்று சேராவிட்டாலும் பரவாயில்லை, கண்கள் பச்சை ஆனதே என்று அவர் விளக்கியது அதி கொடூரம். பசலையில் இருந்து அவர் மனம் பசலைக் கீரைக்கு சென்று அதிருந்து பச்சைக்கு சென்று விட்டது போலும்.

ஆக சங்கக் கவிதைகளை அறிய செய்யக் கூடாத முதல் விஷயம், பிழையான, பாப்புலர் பல்துறை அறிவு ஜீவி எழுத்தாளர்கள் எழுதிய உரை நூல்களை துணை கொள்ளாதிருப்பது.

காட்சிப் பூர்வமான சங்கக் கவிதைகளைப் பொருள் கொள்ள புதிய வாசகன் அடையும் முதல் இடர் என்பது, பண்டைய உரை மரபில் உள்ள காட்சி சார் வறுமை. பசலை திதலை போன்ற அனைத்துக்கும் ஒரு வகை தேமல் என்று மட்டுமே இருக்கும். பெரும் தேமல் பிரச்சனையில்  பண்டய தமிழ் இளம் பெண்கள் சிக்கி சீரழிந்திருக்கிறார்கள் என்றே உரைகள் வழி ஒருவர் உணரக் கூடும். அதே போல ஒரு வகை மரம், ஒரு வகை பறவை, இப்படியே நீளும். கொஞ்சம் முயன்றால் இன்றைய இணைய வசதி வழியே அந்தக் குறையை தாண்டி விட முடியும். உதாரணமாக ஒரு கவிதையில் கர்ப்பமான பச்சை பாம்பு போல, இதழ் விரிக்க துவங்கும் கரும்பு என்று கவிஞர் சொல்கிறார். இரண்டு படங்களையுமே நான் இணையத்தில் கண்டெடுத்து விட்டேன். அதே போல இக் கவிதைகளில் வரும் பறவைகள் குறித்தும் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயமோகன் ‘குருகு’ என்றொரு கட்டுரையே எழுதி இருக்கிறார்.

காட்சி இன்பம் அளவே செவிக்கின்பம் அளிக்கும் வரிகளும் சங்க கவிதைகளில் உண்டு, ஓய் என்று அழைக்கிறது குயில், நள் என்று ஒலிக்கிறது யாமம். பசு மாட்டின் கழுத்து மணி ஓசை என இத்தகு ஒலி சார்ந்த அழகுகள் நிறைய உண்டு.

நாசி நுகர்வு சார்ந்த அழகுகளையும் நிறைய கவிதைகள் கொண்டிருக்கிறது. தேன் வாசம், மலர் வாசம் கொண்டு மழை பொழிகிறது. என்றோ பிரிந்து சென்ற காதலன் சூடி இருந்த மலரின் மணம் இப்போதும் தன் தோளில் இருப்பது போல நினைவில் எஞ்சி இருப்பதாக காதலி ஒருவள் சொல்கிறாள்.  அதிலும் நுட்பங்கள் பல உண்டு உதாரணமாக இந்த கவிதை

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே

நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே

எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று

பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்

யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப

வேங்கை கமழுமெஞ் சிறுகுடி

யாங்கறிந் தனையோ நோகோ யானே.

இக்கவிதையில் பல்லோர் துஞ்சும் பானாட் கங்குலில், ஓங்கிய மலைப் பாதையில் காதலன் காதலியைத் தேடிப் போகிறான். அவனைக் கண்ட சந்தோஷம், ஆச்சர்யம் தாங்காமல் காதலி கேட்கிறாள்,  இரவில் இந்தக் கடும் மழையில் விண் நோக்கி வழி தேற வழி இல்லை. புரண்டோடும் வெள்ளத்தில் மண் நோக்கி வழி தேரவும் வழி இல்லை. எவ்விதம் எங்கள் சிறு குடிக்கு வந்தாய்? இங்கு வீசும் மெல்லிய வேங்கை மர வாசம் கொண்டா? 

செய்யுளின்படி நேரடி சொல்லுக்கு சொல் வழியே கொள்ளும் பொருளில் இல்லை இக் கவிதை. இந்த செய்யுளை கொண்டு  கூட்டிப் பொருள் கொள்ளுதல் போலவே அது அளிக்கும் காட்சி வழியே கொண்டு கூட்டி ஒரு கவிதை வாசகன் சென்றடையக் கூடிய இடம் இது. 

தொட்டு உணரும் அனுபவம் சார்ந்த அழகிய கவிதைகள் பலவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று கீழே 

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

இது காதலி எப்படிப்பட்டவள் என்று காதலன் கூறுவது.

கோடையில் அவள் குளிர்ச்சி தரும் சந்தனம். எப்படிப்பட்ட சந்தனம் என்றால் எவ்வுயிரும் அணுக இயலா உயர்ந்த  மலை உச்சியில் அங்கே உறையும் தெய்வத்தின் பின்னே வளர்ந்த மரத்தின் சந்தனம். பனிக் காலத்தில் அவள் வெம்மை. எப்படிப்பட்ட வெம்மை கொண்டவள் என்றால், சூரியனின் வெம்மையை வாங்கிக் (ஐ -அழகு)  குவிந்த தாமரையின் உள்ளே பொதிந்திருக்கும் வெம்மை கொண்டவள். இயல்பாகவே தாமரை குளிர்ச்சியின் பகுதி. ஐ எனக் குவிந்த தாமரை தனக்குள்ளே பொத்தி வைத்திருக்கும் வெம்மையைக் கொண்டவள்.

ஐம்புலன் கடந்து உள்ளுணர்ந்து கொள்வதன் வழியே உவகை அளிக்கும் கவிதைகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடி பசி களைஇய பெருங்கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே

தோழி, உன் காதலன் சென்ற வெம் பாதையில், தன் பிடியின் தாகம் தணிக்க மரப் பட்டையை உரித்து உண்ணக் கொடுக்கும் வேழத்தைக் காண்பார். பெரும் காதலன்  (திரும்ப வருவார்) பெருங் கருணை மழை உன் மீது பொழிவார்.

எல்லா உணர்வுமே குறிப்பால் உணர்த்தப்பட்டுவிடும் கவிதை. காதலன் தன்னைக் களிறு என்றெண்ணும் ஒரு ஆல்பா மேல். வெம்மையில் நீருக்கான யானையின் தவிப்பு என்ன விதமாக இருக்கும்? அப்படி தனது காதலனுக்குகாக தவித்திருக்கிறாள் காதலி. அவளுக்கு  அத்தகைய்ய காதலிக்கு, இத்தகு காதலன் நல்குவது அன்பின் பெரு மழையாகத் தானே இருக்கும்.

இந்த ஐம்புலன் உள்ளுணர்வு இவற்றுக்கு வெளியே நிற்கும் அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணம்

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! எம்

தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

விடரகம் எனில் மலைச் சாரலில் பாறை மேல் பாறை நின்று, கூரையும் முற்றமுமாக  இயல்பாக அமைந்த ஒரு பகுதி. பெரும்பாலும் சமண துறவிகள் மலை மேலே இத்தகு நிலைகளை தேர்வு செய்து தங்கிக் கொள்வார்கள். சிறந்த உதாரணம் குடுமியான் மலை சமண படுக்கைகள் உள்ள இடம். வெயில் படாது. கொட்டும் மழையில் ஒரு சொட்டு கூட உள்ளே வராது. 

விரைந்து ஓடும் அருவி, அந்த விடரகத்து சொல்கிறது, மேலே மேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று.

அந்த நாட்டை சேர்ந்தவனே 

(மழை இல்லாமல் ஆகி விட்டால்  அருவி தேய்ந்து  வரைமுற்றமும் அருவியும் கொண்ட உறவு   இல்லாமல் ஆகி  விடுவதைப்  போல)  காமம் இல்லா விட்டால் நமது உறவும்  தேய்ந்து இல்லாமல் ஆகி விடுமா?  என்று கேட்கிறாள். 

இங்கே விடரகமும் அருவியும் காதலன் காதலி போலவே பேசிக்கொள்கின்றன. அவை வெறும் இயற்கையின் அசைவு மட்டுமே அல்ல. இப்போது அவை ஆன்மாவும் உணர்வும் கொண்ட உயிர்ப் பொருட்கள் .

சங்க இலக்கியத்தை ஆக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்று இது. பாறைக்கும் அருவிக்கும் உணர்வு உண்டு என்று அறிந்திருப்பது அது. அது ஒரு ஆதிப் பழங்குடி மனம். கை வளை கழலுவது போல திரும்ப திரும்ப அதில் நிகழ்வது ஒரு செவ்வியல் மனம். இந்தக் கலவையே சங்க இலக்கிய செய்யுள்களின் அடிப்படை. இதற்குள் வெள்ளி வீதியார் கபிலர் போன்ற கவி ஆளுமைகள் அவர்களின் தனித் தன்மையுடன் அழுத்தமாகவே வெளிப்படுகிரார்கள்.

அந்த வகையில் சங்க இலக்கியப் பாடல்களை அணுகி ரசிக்க விரும்பும் துவக்க நிலை வாசகன் செய்ய வேண்டியது, சுஜாதா போன்ற பிழைகளை முதல் தேர்வாக கொள்ளாதிருப்பது. ஜெயமோகனின் சங்ககச் சித்திரங்கள் போன்ற நூல்கள் வழியே அடிப்படைக் கவிதை ரசனைப் புரிதலை அடைவது. அகம் புறம் எனும் தத்துவ நோக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு, துணைக்கு உதவும் சொற் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, திணை துறை பகுப்புகள், தலைவன் தலைவி கூற்று போன்ற வியாக்யானங்களை உதறிவிட்டு, நேரடியாகவே செய்யுள் வடிவம் கொண்ட நவீன கவிதைகள் இவை எனும் போதத்துடன் இந்த உலகில் நுழைவது. இயன்றவரை  இக் கவிதைகள் அளிக்கும் காட்சி சித்திர நுட்பங்களை தேடி காட்சியாக காண்பது. குறிப்பாக வெள்ளி வீதியார், கபிலர் போன்ற ஒரே ஆளுமையின் கவிதைகளை மட்டும் தேர்வு செய்து தொடர்ந்து வாசிப்பது.

அனைத்துக்கும் மேல் கவிதை வாசகனை இயக்கும் இக் கலை வடிவம் மீதான தொடர் ஈடுபாடும் கற்பனை வீச்சும்  அவனுக்கு சங்கப் பாடல்கள் சார்ந்த  அனைத்து வாசல்களையும் திறந்து கொடுக்கும்.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

சுஜாதா தமிழ் விக்கி பக்கம்

சங்க சித்திரங்கள் வாங்க...

***

Share:

மினல் மணிக் குலம் - ஸ்ரீநிவாஸ்

காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை. 

இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுபவை என்பது அறிந்ததுதான் என்றாலும் அதன் விந்தையான படிம வகைகளில் ஒன்று இந்த ஆற்றில் கிடக்கும் மணிகள் என்பது. நவீன இலக்கியம் எடுத்தாளாமலும் மரபிலக்கியர் பெரிதும் வாசிக்காமலும் இருப்பவற்றில் ஒன்று.

உழவர்கள் மண்ணை உழுகையில் சங்கு, மீன், பொன் ஆகியவற்றுடன் அருமணிகள் எழுந்து ஒளிவிடுவது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாஇருஞ்சடையோனின் கற்றையில் இவை ஒளிவிடும் கணங்களென இமைத்திருக்க, கங்கை அவற்றை அள்ளி ஆர்ப்பரித்து புவியிறங்குகிறாள். சரயு முதன்முதலில் காட்டின் சந்தனமும் அகிலும் யானை மதநீரும் கொண்டு காட்டாறாக இறங்கி நகர் நுழைகையில் நகரத்தின் முகங்களென இம்மணிகள் கரைகளில் அமைகின்றன. இராமன் நுழையும் மிதிலை நகரின் சாதாரண வீதிகள் அகத்தியன் கடல் குடித்தபின் நீரற்ற மணற்பரப்பு அவற்றிலிருந்த அருமணிகளுடன் ஒளிவிட்டதுபோல வெளித்திருக்கின்றன.

ஆற்றில் கவி சொல்வது போல ஒளிர்மணிகளை காண அவற்றை அங்கே கொண்டுவந்து நாமே கொட்டி பார்த்தால்தான் உண்டு. இயல்பு அணி அல்ல இது. எண்ணிக்கையிலும் அவ்வளவு அள்ளி வைப்பதுதான் அவர் வழக்கம். ஆக, ஆற்றில் மணிகள் என்ற கற்பனைக்கு வேர் எங்கிருக்கிறது?

ஆற்றுப் பேரொழுக்கால் பல இடங்களில் இருந்து கொண்டு வந்து போடப்பட்ட என்ன ஏதென்று தெரியாமல் பலநிறங்களில் மின்னும் துண்டுகள் அன்று வேடிக்கைப் பார்த்தவனுக்கு பித்துபிடிக்க வைத்திருக்க வேண்டும். இன்னொரு வகையில் இது கிரானைட் போன்ற பலவண்ண ஒளிமாறுபாடுகளாலான ஒரே நிலப்பரப்பை குறிக்கும் அணியாகவும் இருந்திருக்கலாம். மேரு மலையை அப்படித்தான் பல வண்ணங்களை, பொன்னை பிரதிபலிக்ககூடியதாக  காளிதாசனிலிருந்தே பார்க்கிறோம். அதுவே பின்னர் ஆற்றங்கரைகளுக்கும் ஏற்றப்பட்டிருக்கலாம். 

ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈரம் புனல்

பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்

ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது.

அறுத்து செம்மை செய்யப்பட்ட பளிங்கு போல தெளிந்த நீர், அதன் படித்துறைகளில் இழைக்கப்பெற்றுள்ள நவமணிகளுடன் படியுந்தோறும் படியுந்தோறும் அதன் நிறத்தை பெறுவதால், பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை பெற இயலாதவரின் உள்ளம் போல் விளங்குகின்றது அந்த வாவி. 

பம்பை வாவிப் படலம். சீதையைப் பிரிந்த ராமன் உளம் கலங்கி இருக்கையில் கிஷ்கிந்தைக்கு செல்லும் வழியில் பம்பை எனும் வாவியைக் கடக்கிறான். உச்ச செவ்வியலின் அழகியலில் ஒரு பாடுபொருளை அறிமுகப்படுத்துகையில் நேரடியாகத் தொடர்பற்ற கோணங்களில் பலவகைகளிலும் இணைத்து இணைத்து பொருளேற்றி, பிரக்ஞை முழுதாக தொகுத்துக்கொள்ள இயலாத அளவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடகத்தை தொடங்குவது இயல்பு. 

வாவியின் இயல்பாக தோற்றமாக கூறப்படும் பலவற்றில் ஒன்று இது. பலவகையான நிறங்கள் வழியாக அடித்து விலகும் இராமனின் மனம் எனக் கொள்ளலாம். அது புறச்சூழல்கள் மேல் சென்று படிகிறது. மீண்டும் விலகி உள்ளொடுங்கிய துயருக்குச் சென்று விடுகிறது. புறவுலகம் என்பது ஒரு பெரிய படித்துறை தான் என்பதே சற்று மனம் உறையச் செய்யும் கற்பனை.  ஒளிமணி வண்ணங்கள் நீரில் சுழிக்கையில் அதில் படிந்து படிந்து எதையும் பெற்றுக்கொள்ளாது ஒரு மனம் அங்கிருக்கிறது என்பதும், அது தூயதும் கூட என்பதும் இப்பாடலை ஒரு பொருளில் அமையச் செய்யாது  அலையடிக்கிறது.

அடுத்த படலத்தில் சொற்களால் தன் பேருருவம் காட்டி இராமனை தன்னை ஏற்கச் செய்யும் அனுமனின் அறிமுகத்தையும் இணைத்துப் பார்த்தால், ஆசிரியனின் வரவை எதிர்நோக்கிய மாணவனொருவனின் உள்ளக்கலக்கத்தின் இறுகிய சொற்களாக, அதன் பருவடிவாக அந்த நவமணி பித்திகை அந்நீரில் தோய்ந்திருக்கிறது. 

குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்

கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்

தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்

உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது.

பொய்கையில் குவியல்களாக மணிகள் கிடக்கும் இடம்தோறும், பவளக்கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய அரச அன்னங்கள் அவற்றின் பெடைகளோடு காணப்படுவது, அழியா வானகம் விண்மீன்களோடு எண்ணற்ற முழுமதிகளுடன் தோற்றம் கொண்டிருப்பது போன்றது. 

அதே பம்பை வாவி வர்ணனையில் அடுத்தப் பாடல். அன்னப்பறவை இணைகள் மகிழ்ந்திருக்கும் காட்சி. இதில் அன்னங்கள் நிலவாகவும் விண்மீன்களாகவும் தோன்றுகிறது. இதைச் சொல்கையில் மணிகளின் குவியல்களும், பவளக் கால்களும் ஏன் சேர்த்துச் சொல்கிறார்?

அன்றாட மனநிலையில், பொதுவாக மணிகள் கொண்ட பாடல்களோடு எளிதில் இணைய முடிவதில்லை. ஏனென்றால் முதலில் அவற்றை பலவகையான மின்னும் ஜிகினாப் பொருட்கள் என்றே கற்பனை செய்கிறது மனம். அவை இன்று கூச்சலிடும் அடையாளங்களாக தோன்றுவதால் நமக்கு ஒரு சிறு விலக்கத்தையும் அளிக்கலாம். 

ஆனால் கம்பன் காலத்தில் இத்தனை வகையான ஒளி என்பது மணிகளில் இருந்தே பெறப்பட்டிருக்கும் என்பதால் இவை மீதான பித்து இன்று எளிதில் உய்த்துணரக்கூடியது அல்ல. வடிவம், வண்ணம், வாசம் எனப் புலன்களை கவரும் அனைத்தின் சிறுசிறு வகைபேதங்களிலும் மனிதர்கள் பித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்.  

மணிகளைத் தண்வடிவ எரி எனலாம். ஒளியையே பருப்பொருளென கொண்டுள்ளவை. இந்த நுண்மைநிலையிலிருந்து தான் கவிமனம் சிதறிப் பரவியிருக்க வேண்டும். 

ஒளியைச் சொல்ல எத்தனை சொற்கள் வேண்டியிருக்கிறது. அது மின்னுகிறது. வீசுகிறது. நம்மைப் பார்க்கிறது. இல்லை இமைக்கிறது. அது கோபமா, கனல்கிறது. கான்றுகிறது, காந்துகிறது. அது தன்னைத்தான் எரிக்கிறது. எரித்து சுடர்கிறது; சுடாத சுடர் மலராகிறது. விரிக்கிறது. நாறுகிறது. வெளியை வெளித்து நிறைத்து நகைக்கிறது. தன்னில், பிறவற்றில் தோய்கிறது; மணி ஒளியை ஈனுகிறது. ஈன்று உமிழ்கிறது. உமிழ்தல் எனும் அதே பொருளில் காலுகிறது. மின்னலென வெட்டுகிறது. தங்களுக்குள் துவன்றி மிடைகிறது. அகன் வெளியில் விரிந்து பரவி பாய்ந்து செல்கிறது. 

வெவ்வேறு வகையான ஒளிவீசக்கூடிய இந்த மணிகள் இடையே இந்த சந்திரன் விண்மீன் போன்ற உறவு நிகழ்கிறது. இன்னும் விரிவான ஒரு பிரபஞ்ச கற்பனை. இன்னொரு வகைபேதம். அல்லது சொர்க்கமா? சூழ இருக்கும் அந்த மணிகள் அவர்கள் உறவில் வெளிப்படும் உணர்வுநிலைகளின், சூழல்களின் வண்ணங்களா. இவற்றைப் பார்த்து இமைத்திருக்கும் வேறு பல கண்களைச் சொல்கிறாரா? 

பவளக்கோல் போன்ற கால்கள் கொண்ட அன்னம் என்கிறார். பவளக்கோல் என்ற ஒரு பொருள் இருந்திருக்குமா? பவளக்கோல் என்ற செங்கோல் கொண்ட அரச அன்னங்களைச் சொல்கிறார். இவர்கள் அரசர் அரசியர் என்றால், அந்த நவமணிகளை குடிமக்களின் கண்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். தெளிவற்று சீதையின் பொருட்டு பின்னால் புலம்பிவிருக்கும் இராமன் தன் நினைவுகளின் அடுக்கில் காணும் இணைந்திருந்த தருணங்களின் தொகுப்பாக கொண்டால் இப்பாடல் மேலும் பொருளுள்ளதாகிறது. 

தவா நெடு வானகம் என்ற சொல்லாட்சியில் தவா என்பது அழியாத, இறுதியில் எஞ்சுகிற என்ற பொருள் கொண்டது. வெறும் வானமெனும் கச்சாவில் தொடங்கி அழியாத வானத்தில் தயங்கும் மீன்களும் எண்ணற்ற நிறைமதிகளும் என்ற உருவகம் வரையிலான தொலைவை யோசிப்பது இக்கலையின் மிகை எனும் முகத்தையும் அறியும் பயணமாகவும் அமையும். சில நவமணிகள் நம் கொழுமுகத்திலும் இமைக்ககூடும்.

***
Share:

ஆடவல்லானின் ஊர்த்துவம் - தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

சில நாட்களாக நண்பர்களுடன் இணைந்து கம்பராமாயணம் வாசித்து வருகிறேன். சங்கப்பாடல்களிலும் பக்தி இலக்கியத்திலும், நவீனக்கவிதைகளிலும் இல்லாத ஓரழகு காவியத்தில் இருக்கிறது. அது பத்தாயிரம் பாடல்கள் எழுதுபவனின் கரங்களில் மட்டும் குடியேறக்கூடியது. அணிகளும், கற்பனையும், அழகியலும்  விண்முட்டும் உச்சத்தை அடையும் பாடல்கள் காவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும். அதுபோலவே சிற்ப அழகியலின் உச்சம் ஊர்த்துவ தாண்டவர். 

ஆடும் சிவன் எப்போதும் இங்கிருக்கும் பெரும்படிமம். கொடுகொட்டி நடம் புரியும் ஈசனை சிலம்பு பேசுகிறது. பிற்பாடு சோழர் காலத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஆனந்த தாண்டவ மூர்த்தி ஆடலின் ஒரு வடிவை மட்டும் நிலைப்படுத்தியது. இது சிதம்பரம் நடராஜரின் புகழால் நேர்ந்த கலை விபத்தாகவும் இருக்கலாம். பின் அந்த ஆனந்த நடனமிடும் வடிவம் வார்ப்புருக்களின் மூலமாக, தத்துவ இணைப்பின் மூலமாக உலகெங்கும் சிற்பக்கலைக்கு ஒரு அடையாளமாக மாறியது. உலகின் எந்த மியூசியத்திலும் ஒரு சோழர்கால நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். பரதத்தின் நூற்றி எட்டு கரணங்களும் ஆடும் ஈசனுக்கு முன்னும் சிவன் வெவ்வேறு வடிவங்களில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கிராத மூர்த்தியும் அர்ச்சுனனும் அம்பெடுப்பது நடனத்தின் ஒரு அசைவு போலத்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. ஈசனின் வீரச்செயல்களை காட்டும் பல சிலைகள், வார்ப்புருக்கள் ஒரு நடனத்தின் நிலையெனவே வைக்கப்பட்டிருக்கின்றன. கதைகள் வாய்வழியாக பாடலாக பரவியது போல கதையோடு கூடிய நடனமான கூத்து இந்த நாடு முழுவதும் பலகதைகளை ஏற்றிச்செல்லும் ஊர்தியாகவும் இருந்திருக்கிறது. இந்த நடனத்திலிருந்து ஓவியர்களும் சிற்பிகளும் தங்கள் கலைக்கான உருவங்களை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். கூத்தர்களின் சிலைகளில்லாத பழங்கோவில்கள் இல்லை. 

ஊர்த்துவ தாண்டவ வடிவம், ஆடலுக்கிறைவனின் மற்றோர் வடிவம். இடக்காலை தலைக்குமேல் உயர்த்தி நிற்கும் காலன் ஊழிக்கூத்திடுகிறான் புன்னகையோடு. தல புராணங்களில்  திருவாலங்காட்டில் சிவன்  காளியை வெல்ல  இப்படி காலுயர்த்தி ஆடினார் என்று உள்ளது.தில்லையிலும் இதே கதையுண்டு.  இதையொட்டி சிற்பமரபில் நடராஜருக்கு அருகிலேயே நடனமிடும் காளியின் சிலையும் வடிக்கப்படும். சோழர் கலைக்கோவில்களின் கோட்டத்தில் ஆனந்த நட்டம் செய்யும் நடராஜர் காலடியில் காரைக்காலம்மையும் காளியும் வடிக்கப்பட்ட சிலைகளுண்டு, அழகிய உதாரணம் கங்கைகொண்ட சோழீச்சுரம். நந்தியோடும் பூதகணங்களோடும் நடமிடும் ஊர்த்துவ தாண்டவர் கைலாசநாதர் கோவிலிலிருக்கிறார். மேலும் திருப்பட்டூரில் சிவனின் ஒரு  ஊர்த்துவ நடன சிலையுண்டு என்று இரா கலைக்கோவன் தெரிவிக்கிறார். திருச்செங்காட்டங்குடியிலும் ஒரு ஊர்த்துவ தாண்டவர் இருக்கிறார். பிற ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிலைகள் தூண்சிற்பங்களாக சிற்பமண்டபங்களில் பெரும்பாலும் செதுக்கப்பட்டன, அவற்றிற்கெதிரே காளியும் தூண்சிற்பமாயினள். குறுஞ்சிற்பங்களாகவும் இவ்வடிவு கோவில்களில் உள்ளது. பிற்காலத்தில் இவர் கங்காள வடிவத்தோடிணைந்து, கங்காளம் என்னும் கருவியை இசைப்பது சிலைகளில் சேர்க்கப்பட்டது, அவிநாசியப்பர்  கோவில் தூணில் உள்ள பதினாறுகை ஊர்த்துவ தாண்டவர் அவ்வாறே இருக்கிறார். ஊர்த்துவம் என்றால் கீழிருந்து மேலாக என்று பொருள், தலைக்கு மேலே காலுயர்த்தி ஆடும் இந்நிலைக்கு மேலதிக அர்த்தங்கள் இருக்கக்கூடும். 

வார்ப்புச்சிலையாக திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ நடமிடுகிறார். அவரும் வேறிடங்களில் காணாத ஒற்றைக்கொரு அழகர், தூண் சிற்பங்களும் அவருக்கும் வேறுபாடுண்டு. இவர் வார்ப்புருக்களின் சாத்தியத்தை ஏற்று, வலப்புறம் சூலமூன்றி வட்டத்திருவாசியின் மையத்திலிருந்து  மூலைக்குச்செல்லும் ஆரக்கோடுபோல இடக்காலுயர்த்தி அதன் நுனியை இடக்கையால் தொடுவதுபோன்ற பாவத்திலிருக்கிறார். இது பரதநாட்டிய கரண நிலையை விஞ்சிய கலைப்படைப்புமாகும்.காலை தலைக்கு மேலே உயர்த்தா விடினும், பக்கவாட்டில் வீசாமல், முழங்காலை மடித்த வாக்கில்  நேராக உயர்த்தினாலே அதை ஊர்த்துவம், ஊர்த்துவஜானு என்கிறார்கள், சில வார்ப்புருக்களும், மகர தோரணங்களிலுள்ள நடராஜரும் அதையொத்தவர்கள்.   

சிந்தாமணி கோவிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவமூர்த்தி,    எண்கரம் கொண்ட இறைவனின் இடக்கைகளில் இரண்டு நாகம், வஜ்ரம் கொண்டிருக்கிறது ஒருகை நடன முத்திரை ஒன்றை காட்ட, காதின் மகரக்குழைக்கு பின்செல்லும் இன்னொன்று தலைக்கு மேல் நின்று கனிந்து சடையின் உச்சிக்கொன்றையை நோக்குகிறது. இடக்கைகளில் ஒன்று உயரத்தூக்கிய காலின் தொடையை பற்றியிருக்க ஏனைய கரங்களில் மணியும், பாசமும், நீள்தடியொன்றும் உள்ளது.  உற்றுநோக்கினால் அது தடியின் உச்சியில் மனித உருவம் போலுள்ளது, விஸ்வக்ஷேனரை உறித்து ஒருமூட்டையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் பிட்சாடனரை ஒத்திருக்கிறது, பிரேதம் எனக்கொள்ளலாமா தெரியவில்லை. 

ஒரு காலை முயலகனின் முதுகில் ஊன்றி எழும்பியவாறே ஆடும் இறைவனின், மற்றோர் கால் விண்ணோக்கி உயர்ந்திருக்கிறது. உள்ளங்கால் தெரியும் வடிவு, யாளி வேலைப்பாடுகளுடன் இடையணி , இருபுறமும் தொங்கும் கச்சை, சிறுமணிகள் தொங்கும் அணிகள் செறிந்திருக்கிறது, ஆடைகளின் சிறுமடிப்பும்கூட தெளிவாகக்காணும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் அணிகள், உதரபந்தம், புரிநூல், ஒருகை உயர்ந்ததால் மார்பின் காம்புகளில் ஒன்று மேலேறிச்செல்கிறது. கழுத்தணியின் முடிகயிறு உயர்ந்த கையின் கக்கத்தில் படிந்திருக்கிறது. அழகிய சடாமகுடத்துடன் உள்ள முகத்தின் அருகே சென்றால் உணர்வெதும் இல்லை, சற்று தொலைவில் சென்றால் புன்னகை பூக்கிறது. மீண்டும் அருகில் சென்றால் அது மறைந்துபோகிறது. 

பரதம் போன்ற செவ்வியல் நடனங்களை ஒரு ஆண் ஆடுவதே  அவனது இயல்பை மாற்றி நளினமாகிவிடும் என்பது பொதுப்பார்வை, ஆடலை தாண்டவம் லாஸ்யம் என இரு பாலாக பிரித்து தாண்டவத்தை ஆண்களுக்கானதாக வைக்கிறது பரதநாட்டியம். இது இரண்டையும் தாண்டி எண்ணக்கூடுவது, ஆடும் இறைவனின் அசைவுகள் அனைத்தும் ஆடலுக்குட்பட்டு நளினமானவை, ஆனால் அதிலிருந்து மேலெழும் கம்பீரத்தைத்தான் இந்த நடராஜ மூர்த்தங்கள் காட்சிப்படுத்துகின்றன, இந்த ஊர்த்துவ மூர்த்தியின் திருவடி விண்ணோக்கி முறுவல் செய்து சொல்வதெல்லாம், கலையின் பால் பேதமற்ற உறுதிப்பாட்டை. அந்தக்கம்பீரத்தைத்தான் அருகிருக்கும் சிவகாமியும் நகைமொக்குடன் ஆமோதிக்கிறாள். 

ஊர்த்துவதாண்டவத்தை காரைக்காலம்மை போல வேறெவரும் பாடப்புகவில்லை, அவளை நினைக்காது இதை முடிக்க முடியாது. அம்மையின் மூத்த திருப்பதிகப்பாடல்கள் சில...


சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் 

  சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்

தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் 

  தான்தடி தின்றணங் காடுகாட்டிற்

கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் 

  காலுயர் வட்டணை இட்டுநட்டம்

அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே


நாடும் நகரும் திரிந்துசென்று 

  நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்டமாடே 

  முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்

காடுங் கடலும் மலையும் மண்ணும் 

  விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி

ஆடும் அரவப் புயங்கன்எங்கள் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே

***


Share:

புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை - சி. கனகசபாபதி

ஒரே ஒரு சொல்லில், ஒரே ஒரு தொடரில் படிமம் தோன்றக்கூடும். தற்கால ஆங்கிலப்பாட்டுக்களில் இத்தகைய எத்தனைப் படிமங்கள் காணக்கிடைக்கின்றன! படிமவியலின் ஆதிகர்த்தாக்களில் ஒருவரான டி. இ. ஹுயூம்மைத் தமிழ் இலக்கியர்கள் மறந்துவிடக்கூடாது. அவர் நட்சத்திரங்கள் தோன்றும் வானத்தை ஓர் அழகுப்படிமமாக ஒரு சிறு பாட்டில் காட்டுகிறார். ‘பழசான நட்சத்திரங்கள் தின்றுபோட்ட வானத்தின் போர்வை’ (The old star-eaten blanket of the sky) என்ற இவ்வரியில் அமைந்துள்ள படிமத்தை டி.எஸ்.இலியெட்டும் பாராட்டியிருக்கிறார், நிலாவையும் வெள்ளிகளையும் மற்றொரு பாட்டில் டி.இ.ஹூயூம் பாடும்போது, சிவப்புநிற முகமுடைய குடியானவனைப்போன்ற முகம் மிகச்சிவந்த நிலா என்றும் (The ruddy moon like a red-faced farmer), நகரக் குழந்தைகள் போல வெள்ளை நிற முகங்களுடைய கவலை கொண்ட வெள்ளிகள் என்றும் (The wisiful stars with white faces like town children) உவமைகள் தோன்றப் படிமங்களை உருவாக்கியுள்ளார். இப்படியே படிமவியல் ஓர் இயக்கமாகத் தோன்றிய நாள் தொட்டுப் பல உதாரணங்கள் எடுத்துச்சொல்லலாம். தமிழில் சங்ககாலத்தில் செவ்வியல் பாங்கு படிந்த படிமங்கள் ஒரே சொல்லிலும் ஒரே தொடரிலும் எப்படி வந்துள்ளன என்று பார்க்க ஆசையுற்றேன். பல பூக்களையும் இதழ் இதழாகப் பிரித்து, எனக்கு இதமாகப்பட்ட இதழ்களை இங்கே கொஞ்சம் தர விரும்புகிறேன்.

சங்ககாலத்தில் தொழில் முன்னேற்றம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அக்காலச் சிறு இயந்திரத் தொழில் சார்பான சில படிமங்களை முதலில் காணலாம். பன்றிகள் ஓடிவந்ததால் அலரிப்பூக்களின் மகரந்தத் தூள்கள் தரையில் கொட்டிக்கிடந்ததை, பொன்னை உரைத்துப் பார்க்கும் உரைகல் போல இருந்தது என்று ஒரு கவிஞர் பாடியிருக்கிறார்.

‘பன்றி

அலங்குகுலை அலரி தீண்டித் தாதுகப்

பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வர.’

(அகம்.178)

வெண்மையான மேகம், மண்பானையைச் சுடுகிற புகையைப்போலத் தோன்றுகிறது என்றார் மற்றொரு கவிஞர். ‘வெண்மழை கவைஇக் கலஞ்சுடு புகையின் தோன்றும்’ (அகம்.308). பாறையொன்று உலைக்களத்தின் கல்லைப்போல இருக்கிறது (‘உலைக்கல் அன்ன பாறை’ குறு. 12) என்று உவமையாகவே ஒரு படிமம் காணப்படுகிறது. எருமையின் வலிமையான கொம்புகள் இரும்பால் செய்யப்பட்டது போல இருக்கின்றன (‘இரும்பியன் றன்ன கருங்கோட்டு எருமை’ அகம். 56) என்று உவமையின் வடிவத்தில் இன்னொரு படிமம் கண்ணில் படுகிறது.

வசந்த காலத்தில் மரங்களும் கொடிகளும் எப்படி இருக்கும் என்று ஒரு பழைய கவிஞர் கற்பனை செய்திருக்கிறார். வீரர்களைப் போன்ற மரங்களைத் தழுவிக்கொண்டு பெண்களைப் போன்ற ஆடுகிற கொடிகள் அசையும் என்பது அவர் கற்பனை.

‘மள்ளர் அன்ன மரவம் தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்’

(ஐங்குறு. 400)

என அக்கவிஞர் பாடியதில் அழகான படிமம் இருக்கிறது. ஒரு சங்ககாலக் கவிஞருக்கு இளங்கீரனார் என்று சொந்தப் பெயர். அந்தி என்னும் சொல் சேர்ந்து அந்தி இளங்கீரனார் என்பது அவருக்கு முழுப்பெயர். இச்சொல் கூடச் சேர்ந்ததற்குக் காரணம் அவர் அந்திப் பொழுதைப் பாடியதுதான். தீயில் வெந்து ஆறின பொன்னைப்போல அந்தி பூத்திருந்தது என்று அவர் யாரும் பாடாத வகையில், ‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப’ (அகம்.71) எனப் பாடியிருக்கிறார். இதுவரை பார்த்துவரும் சங்கப்பாட்டு வரிகளில் வெறும் உவமைகளே தோன்றுகின்றன என்று பேசுவதற்கில்லை. உவமையின் உயர்வு கைதூக்கிக் கொடுக்கப் படிமம் எழுந்து தோன்றுவதைக் காணமுடிகிறது. கடைசியாகப் பார்த்த அந்தியின் வர்ணனையிலும் வார்த்தைக்குள்ளே உவமைக்குள்ளே அடங்காத வகையில் படிமம் மீறி உருக்காட்டுகிறது.

ஐங்குறுநூற்றில் ‘நிலவுக்குவித் தன்ன வெண் மணல்’ என்று ஒரு வரி; அகநானூற்றில், ‘நிலவு மணல்’ என்று ஒரு தொடர். கடற்கரை மணல் நிலா ஒளியைக் குவித்துவைத்தது போல இருக்கிறதாம்.

மின்னல் மின்னுவதை, ‘மலை இமைப்பதுபோல் மின்னி’ என்று நற்றிணையில் (நற். 112) ஒரு கவிஞர் வரைந்து காட்டுகிறார். மலை தன் கண்களால் இமைப்பதுபோல மின்னல் தோன்றுகிறது என்பதில் தூய்மையான படிமம் உள்ளது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகள் கிடக்கும் பாலை வழி என்று பாடும்போது சங்ககாலக் கவிஞர் ஒருவர்,

‘கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்குக்

குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த

சுரன்’

என்று குறிப்பிடுகிறார். அங்குங்குக் கிடந்த குன்றுகள் பேயின் உறவினர் கூடியிருந்தது போலவாம்.

மங்கிய பெரிய மேகம் தெற்குத் திசையில் செல்லுகிறது. அது அகன்ற இடத்தில் அசைந்தபடி போகிறது. வானம் மேலே இருந்து உரிந்துவிழுவதுபோல் இருக்கிறதாம் அக்காட்சி.

‘விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி

மங்குல் மாமழை தென்புலம் படரும்.’

(அகம் 24)

‘விசும்பு உரிவதுபோல்’ என்னும் சிறுதொடர் காட்டும் படிமக்காட்சி தெளிவுடைமையும் செவ்வியல் பாங்கும் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயர்ந்த படிமத்தை எழுதினால் போதும் என்று எஸ்ரா பவுண்டு கூறவில்லையா? அப்படி ஒன்றை வரைந்த அளவில் இலக்கியப் பெருமை அடைந்துவிட்ட கவிஞர்கள் சங்ககாலத்தில் உண்டு என்று சொல்வது உண்மையாகும். ஒரு பழைய கவிஞருக்குக் கங்குல் வெள்ளத்தார் என்று பெயர். அவர் ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என்று பாடினார் இரவாகிய வெள்ளம் என்று உருவகம் ஆக்கி, அது கடலைக்காட்டிலும் பெரியது என்று சிந்தனை விரிந்து பறக்கக் கூறியுள்ளார். நினைக்கும்போதெல்லாம் புதுமை மாறாத படிமம் இரவு வெள்ளம் பற்றிய இப்படிமம்.

2

பாடும் முன்பே தெளிவு செய்யப்பட்ட ஒரு எண்ணத்தை நோக்கிச்சென்று விளங்கவைக்கும் படிமம் எதுவோ அதுவே செவ்வியல் பாங்கானது என்று சொல்லப்படுவது. ‘மலை இமைப்பதுபோல் மின்னி’, ‘விசும்பு உரிவதுபோல் வியலிடத்து ஒழுகி’ என்று வருபவை செவ்வியல் படிமவகை.

‘தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள் - பாரடி!’

என்று பாரதி பாடிய வரிகளில் இருப்பது புனைவியல் படிமவகை. பாடும் முன்பே தெளிந்த எண்ணம் வேறாக, கவிஞன் தரும் சித்திரங்கள் வேறாக இங்கு இருப்பதே வேற்றுமைக்குக் காரணம்.

‘அருவிகள் வயிரத் தொங்கல் 

அடர்கொடி பச்சைப் பட்டே 

குருவிகள் தங்கக் கட்டி

குளிர்மலர் மணியின் குப்பை’

என்று பாரதி போலவே பாரதிதாசன் பாடியதில் புனைவியலே இருக்கிறது. இவர் இருவரையும் குறிப்பிட இங்கு நேர்ந்துவிட்டதால் பிச்சமூர்த்தியைப் பற்றியும் நினைக்கத் தோன்றுகிறது. ‘இருளும் ஒளியும்’ என்னும் நீண்ட பாட்டில்,

‘ரவியான பொன்பருந்து

விடுதலையாய் வட்டமிட்டான்;

ஒளியான பொன்பசுக்கள்

குதித்துவந்து மூச்சுவிட்ட’

என்று பிச்சமூர்த்தி இன்று பாடுகிற வரிகளில் பழைய சங்ககாலப் பாட்டுக்களில் நாம் காணத்தகுந்த செவ்வியல் பாங்கு மரபு கொழிக்கிறது.

பாடும் முன்பே தெளிவுசெய்யப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்து, புறநானூற்றில் பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர் பாடிய படிமவியல் பாட்டை இங்குக் காணவேண்டும் என்பது என் ஆர்வம்.

அப்பாட்டைப் பாடியவர் சாத்தந்தையார். அவர் பாட்டின் கதைக்கரு இரண்டு மல்யுத்த வீரர்களின் மல்யுத்தம் பற்றியது. அவர்களில் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இன்னொருவன் ஆமூர்மல்லன். இருவரும் நிகழ்த்திய மற்போரின் விரைவைக் கண்ட சாத்தந்தையார் அவ்விரைவை மட்டும் பாட எடுத்துக்கொண்டு சிறுபாட்டாகப் பாடியிருக்கிறார். மிகவும் ஆச்சரியமான உவமை ஒன்றால் அந்த மற்போரின் விரைவை அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டில் கட்டுகிற ஒரு கீழ்மகன் (அவன் பிறந்த குலம் தாழ்ந்தது என்று கருதப்பட்டதாகத் தெரிகிறது) அடுத்த ஓர் ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு வீட்டில் வேலை கிடைத்தது. அங்கே கட்டில் கட்டிக்கொண்டிருக்கும்போது, தனது ஊரில் திருவிழா தொடங்கிற்று என்றும், வீட்டில் தன் மனைவி பிள்ளை பெற இருக்கும் மாதம் என்றும், பெய்கிற மழை நிற்காத சூரியன் சாய்ந்த மாலைப்பொழுது என்றும் அவன் நினைத்த வண்ணமே இருக்கிறான். வெளியே போகமுடியாது அவனால், மழையோ பெய்கிறது. மழை நிற்கும் என்ற அறிகுறியே இல்லை. மாலை கழிந்து இரவு வந்துவிட்டால் என்ன செய்வது? ஊரிலோ இன்பமான திருவிழாவில் தான் உதவி செய்யவேண்டாமா? அவன் மனைவிக்கு அவனேதான் துணை. மனைவியின் மெய் நோவுக்கு உதவிசெய்யவேண்டியதும் அவன் கடமை. அவளுக்கு இப்போது என்ன துன்பமோ? இப்படியெல்லாம் நினைக்கும் கட்டில் கட்டும் அத்தொழிலாளியின் கையில் தைக்கும் ஊசி இருக்கிறது: ஊசியில் வார் கோத்திருக்கிறது. அவன் கையிலுள்ள ஊசி அச்சமயம் மன ஆத்திரம் காரணமாக எவ்வளவு விரைவாக ஆடும்? ஆமூர் மல்லனுடன் கோப்பெருநற்கிள்ளி செய்த மற்போர் அந்த ஊசியைக் காட்டிலும் விரைந்தது.

இப்படிக் கூறித் தம் பாட்டை சாத்தந்தையார் முடித்திருக்கிறார். பாட்டையே பார்ப்போம்.

‘சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்

பட்ட மாரி ஞா ன்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொடு

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.’

(புறம்.82)

(சாறு - திருவிழா. பெண்ஈற்று - மனைவி பிள்ளை பெறுவது. ஞான்ற - சாய்ந்த. இழிசினன் - கீழ்மகன். போழ் - வார்)

முதலில் இப்பாட்டில் வெளியீடுபெறும் மற்போரின் விரைவு கவிஞரால் நேரில் காணப்பட்டது என்றும், அந்த விரைவைப் பாடவேண்டும் என்பதே அவர் மனத்தில் தெளிந்த எண்ணம் என்றும் நாம் கண்டு அறிகிறோம். தம் எண்ணத்தை நோக்கியே மற்ற சித்திரங்கள் எல்லாம் விளக்கி நிற்க, அவர் பாட்டைப் படைத்திருக்கிறார். எனவே சாத்தந்தையாரின் இப்பாட்டு செவ்வியல் பாங்கானது என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது.

இதில் ஒரு சின்னஞ்சிறிய கதைக்கரு மிகவும் சாதாரணமானது. இரண்டு மல்லர்களின் மல்யுத்த விரைவு மட்டுமே இங்கு வரும் கதைக்கரு. இதனால் எந்த நீதிக்கும் எந்தத் தத்துவ தரிசனத்துக்கும் ஒருவழியும் தோன்றவில்லை. கண்ணால் கண்ட ஒரு காட்சியின் வர்ணனை ஒன்றையே இப்பாட்டில் கவிஞர் பாடியிருக்க நாம் காண்கிறோம். இது வர்ணனைப் படிமம் (Descriptive image) அமைந்த பாட்டு என்று சொல்லலாம். காட்சியொளிப் படிமத்தினும் வர்ணனைப் படிமம் வகையில் வேறானது. இதிலுள்ள வர்ணனை மற்போரின் விரைவு என்னும் கதைக் கருவை அழுத்திக் கெடுத்துவிடவில்லை கதைக்கருவுக்கு வர்ணனை நிறம் ஊட்டிப் பொலிவாக்குகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் பற்றிப் பாடினால்தான் பாட்டா? நான்கில் ஒன்று பற்றிய நீதியைக் கூறுவதுதான் பாட்டா? ஒரே ஒரு படிமத்துக்காக நீதியின் பக்கமே திரும்பாமல் ஒரு வர்ணனை பொருந்திவரப் பாடுவதும் பாட்டு என்று புறநானூற்றில் சாத்தந்தையார் தெரிவிக்கிறார் நமக்கு. அவர் பாட்டின் நடுவே வரும் ‘விரைந்தன்று’ என்னும் ஒரு சொல் படிமத்திலுள்ள உணர்ச்சிப் பாங்கானது என்று காணலாம்.

ஆமூர்மல்லனுடன் மற்போர் நடத்திய பெருநற்கிள்ளியின் கைகளும் கால்களும் எவ்வளவு விரைந்து ஆடியிருக்கும்? கட்டில் கட்டும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் விரைவை உவமையாக்குகிறார் கவிஞர் என்று கண்டோம். வெறுமனே ஒரு வர்ணனை மட்டும் இல்லை இங்கு. உணர்ச்சிப் பாங்கான படிமத்தையே காண்கிறோம்.

இதன் உருவம் ஆசிரியப்பாவிலேயே இலகுந்தன்மை கொண்டு நிற்கிறது. அதாவது எதுகை மோனையின் கனம் பெற்றில்லை. சிறு சொற்றொடர்கள் பின்னி வருவது புதுக்காலப் பாணிக்கு ஒக்கும் என்னலாம்.

3

இதேபோல வர்ணனைப் படிமம் கொண்ட மற்றும் சில பாட்டுகள் சங்ககால இலக்கியத் தொகுதியிலிருந்து எடுக்கலாம். வேறொரு புறநானூற்றுப் பாட்டு இதே வகையில் இருந்தாலும் இதற்குத் தன் வழியில் வேறுபட்டும் விளங்குவதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மார்க்கண்டேயனார் என்னும் கவிஞர் பூமாதேவி அழுத அழுகையை ஒரு பாட்டாகப் பாடியிருக்கிறார். அவர் பூமியை ஒரு மகள் என்று உருவகம் செய்து, விசும்பு முகமாக ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்கள் கண்களாக உடையவள் என்றும் உருவகத்தை மேலும் அழகுபடுத்தி முழுமையாக்கிக் கூறியுள்ளார். காற்றும் செல்லாத வான மண்டலத்தில் தமது ஆணைச் சக்கரங்களைப் போரின் முன்னே செலுத்தி வென்று, மறுபடியும் பகைவர் வரவில்லை என்பதால் செருக்குக் கொண்ட அரசர்கள் எத்தனை பேர்? அவ்வரசர்கள் எல்லாம் செல்லவும், நான் மட்டும் இன்னும் செல்லாது, விலை மகளிரைப்போலப் பலர் என் அழகைப் புகழ்ந்துகூற இப்பொழுது இருக்கிறேன் என்று நிலமகள் அழுவதாகக் கவிஞர் கற்பனையுடன் பாடியுள்ளார்.

இவர் பாட்டில் நிலமகளின் வர்ணனையுடன் வான மண்டலம் பற்றிய வர்ணனையும் அரசர்களின் ஆணைச் சக்கர வர்ணனையும் அவற்றைக்கொண்டு புரிந்த போரின் வர்ணனையும் ஒன்றி இணைந்து வருகின்றன.

‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரிமுன் சமத்து உருட்டிப்

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற

உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

(புறம்.365)

(வளி - காற்று. வழக்கரு நீத்தம் - உயிர்கள் செல்ல முடியாத விசும்பு. திகிரி - ஆணைச்கக்கரம். காஞ்சி - நிலையாமை. உணர்ந்திசினோர் - உணர்ந்தவர்)

இப்பாட்டில் நிலமகளைப் பற்றிய உருவகம் வந்துள்ள படிமம் சிறப்பானது. அரசர்களின் செருக்கைப் பலவாறு அழகுறக் குறிப்பிட்டு, அவ்வரசர்கள் விண்ணுலகு செல்லவும் என அவர்களின் முடிவைக்கூறிக் கடைசியில் தானும் அரசர்களுடன் செல்லாது இன்னும் இருப்பதற்கு வருந்தி நிலமகள் கூறுவதை உணர்த்துகிறார் கவிஞர். அங்கதம் வரும் குறிப்புடன் மார்க்கண்டேயனாரின் இப்பாட்டு நம் காலத்திற்கும் புதுமையுணர்வு தருவதாக உள்ளது.

இதன் உருவம் பார்த்தால், முதலில் ஒளிவீசும் வர்ணனைப் பகுதி. அதற்கேற்ப வார்த்தைகளில் ஒரு ஜொலிப்பு. வரவர ஒளியின் வீழ்ச்சி, இவ்வாறு ஒலிநயம் சிறந்திருக்கிறது காணலாம்.

இது வர்ணனைப் படிமம் அமைந்த பாட்டானாலும் தத்துவ தரிசனமும் தருகிறது. ஆனால் கடைசியில்.

‘நிலமகள் அழுத காஞ்சியும்’

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

என்று நீதிப்படுத்தும் நோக்கம் புலப்படக் கவிஞர் பாடிவிட்டார். நிலமகளின் அழுகையை அப்படியே சொல்லி நிறுத்திவிட்டிருந்தால் நிலமகள் படிமத்தின் உயர்ச்சி முதலில் தொடங்கிய தொடக்கத்திற்குச் சரிக்கட்டி மிகவும் பொலிவு பெற்றிருக்கும் என்று கருதலாம். பாட்டு பழையதாக இருக்கலாம். இருந்தும் ஒரு உவமை, ஒரு வர்ணனை, ஒரு உருவகம் என்பவற்றின் இடையே படிமக்கோலம் போடும் வகையில் அப்பழைய பாட்டு நமது பார்வையில் பதிவாகக்கூடியது என்பது உண்மை என்றே தெரிகிறது.

***
இக்கட்டுரை டிசம்பர், 1963 மாத எழுத்து இதழில் வெளி வந்தது.

நன்றி: எழுத்து இதழ்; 


***
Share:

தூண்கள் இல்லா தோரணங்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் நாம் நம்மை காண விழைகிறோம். புற இயற்கை நிகழ்வுகளையும் அதன் விதிகளையும் ஏதோ ஒரு வகையில் நம்முடையதேயான அனுபவங்களாக்கிக் கொள்ள விரும்புகிறோம். பறவை பற்றிய, விலங்கு பற்றிய நமது அவதானிப்புகளை நமது வாழ்வோடு தொடர்புறுத்திக் கொள்கிறோம். அவை என் அழகியல் உணர்வையும் உன்னத விழைவையும் தூண்டவில்லை என்றால், … வயல்களிலும், வனங்களிலும் நான் கற்றவை என் சகமனிதர்களைப் பற்றி நான் அறிந்தவற்றோடு ஒத்துப்போகவில்லை என்றால் அதில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வாய்ப்பில்லை.

பொதுவாக, மனிதன் இயற்கையை அவதானிப்பது குறித்து ஜான் பர்ரோஸ் தனது “இயற்கையின் வழிகள்” என்ற நூலில் சொல்வதை கவிதைக் கலையோடு பொருத்திப் பார்ப்பது இனிய அனுபவமாகக்கூடும்.

கவிதை படைத்துக் காட்டும் உவமை, குறியீடு, படிமம், தற்குறிப்பேற்றம் இவற்றில் எல்லாம் இயற்கை காட்சிகளும் நிகழ்வுகளும் மண்டிக் கிடப்பது புதுமையானதோ அரிதானதோ அல்ல.  ஆனால், காளிதாசனை படிக்கையில் அவரளவுக்கு இயற்கையோடு முழுமையாக ஒன்றிய வேறொருவர் இருக்க முடியுமா என்றே தோன்றுகிறது. பார்ப்பதற்கு இது அதைப் போல் இருந்தது, இதன் மணம் அதனுடையதைப் போல் இருக்கிறது, இந்த ஒலி அந்த ஒலியை நினைவுறுத்தியது, இந்தச் சுவை அந்தச் சுவையை ஒத்திருந்தது என புலன்கள் சார்ந்து உவமைகளை அடுக்கும் கவி மெய்ப்பாடுகளை, உணர்வு நிலைகளை சொல்லவும் கூட இயற்கையை துணைக்கழைக்கிறார். நிகழ்வுகளை, புராணச் செய்திகளைக் கூட இயற்கைக் காட்சி அல்லது நிகழ்வைக் கொண்டு கடத்திவிடுகிறார். 

ரகுவம்சத்தில் காளிதாசன் காட்டும் எல்லா இயற்கைக் காட்சிகளும்/நிகழ்வுகளும் ஆர்வமூட்டுபவை. எடுத்துக்காட்டாக அவற்றில் சில:

திலீபன் என்னும் அரசனின் பெருமைகளை கூறும்போது, மனுவின் குலத்தில் திலீபன் தோன்றியதை பாற்கடலில் நிலவெழுந்ததுடன் ஒப்பிடுகிறார்.

[ததன்வயே ஶுத்திமதி ப்ரஸூத: ஶுத்திமத்தர:

திலீப இதி ராஜேந்து: இந்து: க்ஷீரநிதாவிவ

பரிசுத்தமான அம்மனுவின் வம்சத்தில், மிகவும் பரிசுத்தனான திலீபன் என்ற, சந்திரன் போன்ற அரசன் பாற்கடலில் சந்திரன் பிறந்ததுபோல பிறந்தான்]

சுறாவும் முத்தும் ஒருங்கேயுள்ள ஆழிபோல், அஞ்சத்தக்கதும் விரும்பத்தக்கதுமான அரசர்க்குரிய பண்புகொண்டிருந்தான் திலீபன் என்கிறார்.

[பீமகாந்தைர்ந்ருபுணை: ஸ பபூவோபஜீவனாம்

அக்ருஷ்யஶ்சாபிகம்யஶ்ச யாதோரத்னைரிவார்ணவ:

அச்சம் உண்டாக்குவனவும் விரும்பத்தக்கனவுமான அரசர்க்குரிய குணங்களால், அவன் நீர்விலங்குகளும் ரத்தினங்களும் உள்ள கடல் போல, தன்னை அண்டிப்பிழைப்பவர்களுக்கு அவமதிக்க முடியாதவனாகவும் அணுக முடிந்தவனாகவும் இருந்தான்]

குடிகள் செழிக்கவே வரி விதித்த திலீபனை வாரி வழங்கவே ஆவி கொள்ளும் ஆதவனுடன் ஒப்பிடுகிறார். 

[ப்ரஜானாமேவ பூத்யர்த்தம் ஸ தாப்யோ பலிமக்ரஹீத்

ஸஹஸ்ரகுணமுத்ஸ்த்ரஷ்டும் ஆதத்தே ஹி ரஸம் ரவி:

அவ்வரசன் மக்களின் செல்வத்தின் பொருட்டே அவர்களிடமிருந்து வரியை வாங்கினான்; சூரியன் ஆயிரம் மடங்காக கொடுப்பதற்காகவே நீரை எடுத்துக்கொள்கிறான் அன்றோ!]

நாட்டில் அரசன் உலா செல்கையில் வழியில் இருபுறமும் தூண்களை நட்டு தோரண மாலைகளை கட்டுவது வழக்கம். திலீபனும் அவன் மனைவியான அரசி சுதக்ஷிணையும்  காட்டு வழியே சென்றபோது வானில் வரிசையாகப் பறந்த கொக்குகள் தூண்களில்லா தோரணங்கள் போலத் தோன்றியது என மிக அழகிய ஓவியத்தை வரைந்து காட்டுகிறார் கவி. 

[ஶ்ரேணீபந்தாத் விதன்வத்பி: அஸ்தம்பாம் தோரணஸ்த்ரஜம்

ஸாரஸை: கலநிர்ஹ்லாதை: க்வசிதுன்னமிதானனௌ

வரிசை அமைப்பினால் தூண்களற்ற தோரணமாலை போல் இருப்பவைகளும், இனிய ஒலி எழுப்புபவைகளுமான கொக்குகளை முகம் நிமிர்த்தி பார்த்தபடி சென்றனர்]

சிவப்பு நிறப் பசுவான நந்தினியின் மேல் பாய்ந்த சிங்கம், தாதுப்பொடிகள் நிறைந்த மலைமுகட்டில் பூத்த காயவிளை மரம்போல் இருந்தது என்று ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறார். இயற்கையின் வண்ணங்களைப் பற்றிய அவரது நுட்பமான மனப்பதிவுக்கு இது சாட்சியாக இருக்கிறது.

[ஸ படிலாயாம் கவி தஸ்திவாம்ஸம் தனுர்தர: கேஸரிணம் ததர்ஶ

அதித்யகாயாமிவ தாதுமய்யாம் லோத்ரத்ருமம் ஸானுமத: ப்ரஃபுல்லம்

வில்லேந்திய அவ்வரசன், தாதுப்பொடிகள் நிறைந்த மலையின் மேல்பகுதியில் உள்ள காயவிளை மரமென சிவந்த நிறமுடைய பசுவின்மேல் இருந்த சிங்கத்தை கண்டான்]

மலையிலிருந்த பிலத்தில் இருந்தபடி சிங்கம் தனது பற்கள் தெரியும்படி திலீபனைப் பார்த்து சிரிக்கிறது. இதை, பில இருளை பல்லொளியால் துண்டாடிய சிரிப்பு என்கிறார் கவி. இருண்ட பின்புலத்தில் பளீரெனத் தெரியும் பற்களைச் சொல்லி அந்த நிகழ்வை காட்சிப் படுத்துகிறார்.

[அதாந்தகாரம் கிரிகஹ்வராணாம் தம்ஷ்ட்ராமயூகை: ஶகலானி குர்வன்

பூய: ஸ பூதேஶ்வரபார்ஶ்வவர்தீ கிஞ்சித்விஹஸ்யார்தபதிம் பபாஷே

சிவபிரானுடைய சேவகனாகிய அச்சிங்கம் சிறிது சிரித்து பற்களின் ஒளியால் மலை குகைகளுடைய இருளை சிறுதுண்டுகளாக செய்துகொண்டு அரசனை நோக்கி மீண்டும் பேசிற்று]

மழைக்காலம் முடிந்து கூதிர்காலத்தில் ரகு என்பவன் (திலீபனின் மைந்தன்) போர்ப்பயணத்தை தொடங்கினான் என்பதை இந்திரனும் ரகுவும் வில்லை எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார் கவி.

[வார்ஷிகம் ஸஞ்ஜஹாரேந்த்ரோ தனுர்ஜைத்ரம் ரகுர்ததௌ

ப்ரஜார்தஸாதனே தௌ ஹி பர்யாயோத்ருத்கார்முகௌ

இந்திரன் மழைக்கு அறிகுறியான (வான) வில்லை (வானிலிருந்து) எடுத்துக்கொண்டான். ரகு வெற்றியையே அளிக்கின்ற வில்லை எடுத்துக்கொண்டான். மக்களைக் காக்க இருவரும் மாறி மாறி வில்லை எடுத்தனர்]

ரகு வங்க மன்னர்களை வென்று அவர்களை மீண்டும் அரச பதவியில் இருத்தி அவர்கள் அளித்த பொருள்களால் மேலும் செல்வந்தனான நிகழ்வை அரிய உவமை ஒன்றின் வழியே சொல்கிறார்.

[ஆபாதபத்மப்ரணதா: கலமா இவ தே ரகும்

ஃபலை: ஸம்வர்தயாமாஸுருத்காதப்ரதிரோபிதா:

தாமரை போன்ற அவன் அடிகளை வணங்கியவர்களும், மீண்டும் அரச பதவியில் நியமிக்கப்பட்டவர்களுமான வங்க மன்னர்கள் (நாற்றங்காலிலிருந்து) பெயர்த்து நடப்பட்டவையும் (தங்கள்) வேருக்கு அருகிலுள்ள தாமரை வரையில் வணங்கி இருப்பவையுமான நெற்பயிர்களைப் போல (பலவகை) பொருள்களால் ரகுவை செல்வமுடையவனாகச் செய்தனர்]

தென் திசைப் பாண்டியர்கள் ரகுவிடம் பணிந்ததை கூறும் வரிகள்:

[திஶி மந்தாயதே தேஜோ தக்ஷிணஸ்யாம் ரவேரபி

தஸ்யாமேவ ரகோ: பாண்ட்யா: ப்ரதாபம் ந விஷேஹிரே

தெற்கு திசையில் சூரியனுடைய ஒளிகூட குன்றிவிடுகிறது. அதே திசையில் ரகுவின் பெருமையை பாண்டிய மன்னர்கள் தாங்கவில்லை]

தக்ஷிணாயனத்தில் சூரியன் தென் திசையில் வரும்போது அவனது ஒளி குறைவது இயற்கை. இதற்குக் காரணம் பாண்டியர்களிடம் அவன் அஞ்சுகிறான் என்பது கவியின் கற்பனை. அவ்வளவு வீரமுடையவர்களான பாண்டியர்களாலேயே ரகு தம்மிடம் வருகையில் அவனது வீரப் பெருமையை தாங்கமுடியவில்லையாம்.

காவியத்தில் முக்கிய பேசுபொருளாக இருப்பதே இயற்கைதான்; கவி தீட்டும் பேரோவியத்தில் தூரிகையாகவும், வண்ணங்களாகவும், சீலையாகவும் இருப்பதே இயற்கைதான் என்று எண்ணுமளவுக்கு இயற்கை ஒன்றிக் கலந்திருக்கிறது. திசையெங்கும் அழகு செய்யும் தூண்களில்லா தோரணங்கள் காவியத்தை ஒளிரச் செய்கின்றன.

***


Share:
Powered by Blogger.

நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive