கவிதையின் மதம் 2 - தேவதேவன்

ஆளுமை என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நமது கட்டுரையில் அங்கங்கே – பிரமிளைப் பற்றிய ஒரு குறிப்பிலும் கூட. ஆளுமை என்ற சொல் முற்றுமுழுமையான ஒன்றல்ல. சம்பிரதாயமாக நாம் வழங்குகிற ஒரு சொல்தான் அது. உண்மையில் நிறைவான மனிதன் என்பவன் ஆளுமையே அற்றவன். இன்மையே பேராளுமை என்ற சொல்லாலும் நாம் சொல்லும்போது அதுவும் கருத்துருமிக்க காலத்திலிருந்துவரும் ஒரு சம்பிரதாயமான ஒரு சமூகவெளியின் மதிப்புமிக்க ஒரு சொல்தான். உண்மையல்ல. உண்மை, ஒவ்வொரு கணமும் நிலைக்காது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவே அந்த மனிதனும் மாறிக்கொண்டே இருக்கிறான். இது ஒரு கருத்து அல்ல. இது உண்மை. இதில் ஆளுமை எங்கே இருக்கிறது? நாம் எப்போதும் நம் எண்ணத்தாலேயே ஒரு படிமத்தை உருவாக்கி அப்புறம் அதில் அமர்ந்துவிடுகிறோம். இருபதாம் நூற்றாண்டின் நவீன கவிதையை நிலைநிறுத்த எழுந்த டி.எஸ். எலியட் கவிதை என்பது ஓர் ஆளுமையை உருவாக்குவதல்ல, ஆளுமையிலிருந்து வெளியேறுவதே என்றது இதனால்தான். உண்மையை அறியாத மானுடம்தான் ஓர் ஆளுமையாகவும், பேர் பெறவும், வழிபடவும், அதிகாரம் பெறவும், செல்வத்தைப் பெறவும் என்னென்ன தவறான பாதைகளில் அல்லாடுகிறது! ஆளுமைகள் என்போர் மனிதன் அடைய வேண்டிய களத்தைச் சுட்டக்கூடுமே ஒழிய, நிறைவேறும் நன்மையானது அதைக் காண்பான் ஒருவனால் மட்டுமே ஆகக்கூடியது. அந்தச் சரியான செயல் அவன் வாழ்க்கையில் அமைந்திருக்கிறதா என்றால் உண்மை காலத்தின்பாற்பட்டதல்ல என்பதே பதில். நாம் அறிந்துகொள்ள வேண்டிய எந்தக் கேள்விக்குமான இந்தப் பதிலைக் கண்டடைவதற்கான ஆற்றல் கூர்மையானதும் விவேகமானதும், விடுதலைகொண்டதுமான ஓர் உள்ளத்தினுடையது. கவிதைகளில் செயல்படுவது ஓர் ஆளுமையின் இந்த ஆற்றல்தான்.

அண்மையில் நடந்த ஒரு மேடையில் அன்பர் ஒருவர் கேட்கிறார்: அய்யா, நீங்கள் வானம், மரம், பறவைகள் என எப்போதும் விரிந்த கருப்பொருட்களையே எடுத்துக்கொள்கிறீர்கள். அதுவே உங்கள் கவிதைகளை இங்ஙனம் ஆக்கிவிடுகிறது இது பற்றிக் கூறுங்கள். (நான் கண்டுபிடித்தது சரிதானே, இது ஏன்? இது பற்றிக் கூறுங்கள்.)

அன்று நான் அந்த நண்பரை நோக்கி – ஆனால் நானே உருவாக்கிக்கொண்ட வேறொரு கேள்விக்கே பதில் கூறினேன்.

நாம் கவிதையை, படைப்பை, மேலோட்டமாக அணுகக்கூடாது. கவியினுடைய மனமும் வாசகனுடைய மனமும் வேறுவேறு இல்லை என்ற நிலையில் இருவருடைய அக்கறைகளும் ஒன்றுபோலவே இருந்தாக வேண்டும். இங்கேதான் கவிஞன் என்பவனுடைய ஆளுமையை நாம் முக்கியப்படுத்துகிறோம். அதன் சரியான புரிதலுடனேதான். உருக்கமான ஓர் இசையைக் கேட்டு முடித்தவுடன் கண் ததும்ப வைக்கும்படி அந்த இசை கொண்டுசென்றுவிட்ட பேரமைதியான ஒரு மனநிலையுடன்தான் ஒருவன் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்க வேண்டும் என்பேன். இது ஒன்றும் நமது புதிய செய்தி அல்ல, என்றும் மாறாத கவிதை குறித்த புதிய செய்தியே இதுதான். நாம் அறிந்ததும், எப்போதும் அறியத் தவறவிடுகிறதும்தான்.

ஒரு எழுத்தாளன் தனது ஆயிரம் பக்கங்களடங்கிய நாவலின் தலைப்பாக ‘விடியுமா?’ என்று எழுதுகிறான். ஒரு நண்பன் கவலையோடு தன் நண்பனிடம் “ஒரே இருட்டாக இருக்கிறது” என்கிறான்.

புரியாமலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கவிதையைப் புரியாமலும் மனிதன் இருக்க முடியுமா?

சாதாரண சொற்களில், சாதாரண நிகழ்வை, சில வரிகள் எழுதிவிட்டு அதை நீங்கள் நன்கறிந்த ஆளுமைமிக்க ஒரு கவி கவிதை என்று நீட்டுகிறான். கவிதை என்பது விலைமதிக்க முடியாத பொன்னாலான ஒரு சட்டகம் என்பதே அதன் பொருளாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக இங்கே இப்போது சில கவிதைகளைக் காண்போம்:

கீழேயுள்ள தலைப்பிடப்படாத ஏழு சின்னஞ்சிறு கவிதைகளையும் அருகிலுள்ள “யாம் பெற்ற இன்பம்” தொகுப்பினைப் புரட்டி உடனே தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறோம்.


எத்துணை பெரிய வானம்

லேசான தூறல்.

0

கால் தகிக்கும் வெயிலில் நடந்தவன்

கண்டுகொண்டான்

காலூன்றி நிற்கும் மர நிழலை.

0

கண் முன்னால்தான் இருக்கிறது

காண்பாரில்லை.

0

ஓடும் புகைவண்டியில் மனிதர்கள்

தூரத்து உறவுகளோடு, தேடலோடு.

0

சலவை செய்த ஆடை

நேற்றையது இல்லை.

0

காலமெல்லாம் காற்றில்

அசைந்துகொண்டிருக்கின்றன

துயரென்பதேயறியாத பசுங்கொடிகள்.

0

எளிய கவிதை ஒன்றால்

‘அதை’க் கூறிவிட விரும்புகிறேன்.

0

நாம் கவிதையை மேலோட்டமாக அணுகுகிறோம். நம் அக்கறை என்ன என்பதே முக்கியம். கலைகளின் உச்சநிலையில் இருக்கிற கவிதையின் வாசகர்கள் நாம். நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அகம் பற்றிய தன் கேள்வியைப் பிறரிடம் கேட்காமல் ஒருவன் தனக்குள்ளேயே கேட்டுக் கண்டடைய வேண்டும் – புறப்பொருட்களைத் தேடி அடைவது நமது அகம்தான். கவிதைக்கான பொருட்கள் என்று ஏதுமில்லை. மேலும் இயற்கைமீதான நமது உறவு முக்கியமானது என்பது இயற்கையான உணர்வின்பாற்பட்டதுதானே ஒழிய நமது தந்திரத் தேர்வுகள் அல்ல. நாம் அவற்றை எடுத்துக்கொள்வதில்லை; அவைகள்தாம் நம்மை எடுத்துக்கொள்கின்றன. நாம் அவற்றை எடுத்துக்கொள்ளும்போது அது வெறும் பாவனையாகத் தோற்று உதிர்ந்துகொண்டே இருக்கும். நாம் இவ்வுலகில் படைத்திருக்கும் பல ‘நன்மைகள்’ இத்தகையதாக இருப்பதே இவ்வுலகின் மிகப்பெரிய அவலம். தன்னலத்தின் ஊற்றிலிருந்து வருவதே பாவனை. அவை மேலும்மேலும் உலகைக் குழப்பத்திற்கும் போருக்கும் துயருக்குமே அழைத்துச்செல்லும்.

இன்று நான் இந்த உலகைப் பார்ப்பதுபோலத்தான் குழந்தைப் பருவத்திலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்திலேயே மனிதர்கள் இந்த உலகிற்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலிருப்பதை அறிந்துகொண்டேன். காண்பதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ இருப்பதாகப்பட்டது. எந்த வயதிலும் மனிதர்களுக்கே உரிய அச்சம் தவிர்த்த வியப்பும் களிப்பும் எல்லோர்க்குமே இயல்பானது என்பது அறிவோம். வியப்புக்கும் களிப்புக்கும் அப்பால், மிக அதிகமான ஓர் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளானவன்போலும், தனித்துப்போனவனாய், ஒரு பேரிடியால் அழுத்தப்பட்டவன் போலும் காண்போர்க்கு விசித்திரமானவனாய் இருந்திருக்கிறேன்.

இன்றும் தொடரும் இந்தக் குழந்தைப் பருவகாலத்து எனது இயல்பு அனுபவம் ஒன்றைக் குறித்து எழுதிய ஒரு கவிதையினை இங்கே குறிப்பது நலமாயிருக்கும் என நம்புகிறேன்.

பயணம்

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்

காலத்தை எவ்வளவு வீணாக்கினாய்

எஞ்சிய பொழுதுகள் எரிந்து நின்ற வெளியில்

என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்


பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த

உற்றார் உறவினர்களை

உறவு சொல்லி விளிக்க

உன் நா காட்டும் தயக்கத்தில்

என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்

உன் அறியாப் பருவத்திலிருந்தே


எப்போதும் உன் முகத்தில்

வெகுநீண்ட பயணத்தின் களைப்பு

இன்னும் வரவில்லையோ

நாம் வந்தடைய வேண்டிய இடம்?

இன்னும் காணவில்லையோ

நாம் கண்ணுறவேண்டிய முகங்கள்?

0

-புல்வெளியில் ஒரு கல் (1998)

கவிதை என்பதே படிமம்தான்; படிமம் இல்லாமல் கவிதை இல்லை. தொடக்க காலத்திலிருந்தே நாம் கவிதையைப் பற்றி இதைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறோம். புறஉலகு ஒன்றின் மூலமாகத்தான் நாம் நம் அகத்தை வெளிப்படுத்த முடியும் என்றிருக்கையில் நாம் வேறு என்ன சொல்ல முடியும்? அனுபவம் புறக்காட்சிகளில் படர்ந்தபடி ஒரு படிமமாக வெளிப்பட்டாலும் இறுதியில் எண்ணங்களின் ஒரு விளைச்சலே எனும் நிலையையே அது வந்தடைகிறது. அனுபவத்தை அடுத்து நம் நினைவே படிமமாக உருக்கொள்கிறது. படிமமும் ஓர் எண்ணமாகவே வெளிப்பட்டு நிற்பதை நாம் தடுக்க முடிவதில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், காலமற்ற அனுபவவேளை தன் இடத்தைக் கடந்துவிட்டபோதே அது காலத்தையும் இடத்தையும் ஓர் எண்ணத்தையுமே கொண்டதாகிவிடுகிறது. இதனால்தான் காலத்தையும் இடத்தையும் எண்ணத்தையும் கொண்ட ஒரு காட்சியைத் தீட்டி சாமான்ய மனிதனும் அதைக் கவிதை என்கிறான். நேர்க்காட்சிகள் அலுத்துப்போனநிலையில், கற்பனையும் புனைவுகளுமான மனக்காட்சிகளும், மனநெறியற்ற கற்பனைச் சித்தரிப்புகளுமாய்க் கவிதைகள் எழுதப்படுவதைப் பார்க்கிறோம். வாசகர்களும் விமர்சகர்களும் திணறுகிறார்கள். வாசகர்கள் ஓடிப்போயேவிடுகிறார்கள் என்று சொல்லவேண்டும். கவிதைக்கு வாசகர்கள் ஏன் குறைவாக இருக்கிறார்கள்? தெரிகிறதல்லவா?

கவிதைக்கு வேண்டிய மனவெழுச்சி என்பதே – வாழ்வுக்கு வேண்டிய மனவெழுச்சியும்தான் – இல்லாதவர்கள், தங்கள் பல்வலி, வயிற்றுவலி, பசி, பட்டினி, தலைவலி, தாகம், சோகம், மோகங்களைக் கவிதை என எழுதுகிறார்கள். பற்று, பாசம் மற்றும் புலனின்பங்களையும் அழகின்மையையும் இவற்றைவிட விசேஷமான ஒன்றாக இப்போது ‘படைப்பு’, ‘கட்டுமானம்’. படார் என எனக்கு இங்கே இப்போது நினைவுக்கு வருவது: ‘கவிதை ஒரு கலை அல்ல; அது ஓர் உணர்வு’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சொற்றொடர். இந்தக் குரல், ‘கவிதை என்பது ஓர் ஆளுமையின் வெளிப்பாடுதான்’ என்ற இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ‘ஆளுமை’ என்ற சொல்லாலும் நாம் குழப்பிவிடாதிருக்க ‘ஆளுமை’ பற்றியும் இங்கே ஆரம்பத்தில் நாம் விளங்கிக்கொண்டிருக்கிறோம்.

0

காட்சிகள் வெளிப்படுத்தும் நம் அகம் எத்தகையது? எத்தகைய அகம் கொண்டு நாம் இந்த உலகைப் பார்க்கிறோம்?

பார்க்கிறோம், அனுபவிக்கிறோம், அப்புறம் நினைவுகளாகிவிட்ட அதைச் சிந்திக்கிறோம்; எந்த நினைவானாலும் அவை நம் எண்ணங்கள்தாம்; எண்ணங்களைத்தான் நாம் சிந்திக்கிறோம். அங்கிருந்துதான் நாம் செயல்படுகிறோம்.

பிறந்த சிசு இவ்வுலகத்தைத் தன் விழிகொண்டு காணத் தொடங்கியதிலிருந்துதான் எத்துணை அனுபவங்கள்! அவற்றில் அறிவுகளாகவும் ஞாபங்களாகவும் சேகரமாகியவைகளும், சேகரமாகாதவைகளும் எவ்வளவு? எவ்வளவு? இதில் பொதுவான கணக்கு ஒன்று உண்டு என்பதை அறிந்திருந்தேன். அத்தோடு அந்தக் கணக்கினை மீறய அபூர்வ அனுபவங்களாகவும் என்னிடம் சில இருந்தன.

ஜெயகாந்தன் தன் நண்பர்களோடு உரையாடுகையில் “உங்கள் முதல் அனுபவம் எது சொல்லமுடியுமா?” என்று கேட்பாராம்.

ஜெயமோகனிடம் எனக்கேற்பட்ட துவக்ககாலச் சந்திப்பு ஒன்றின்போது நான் இதே கேள்வியை அவரிடம் கேட்டேன். கேட்டது நல்லதாய்ப் போயிற்று. அவர் ஒரு வயதுகூடக் கூடியிராத சிசுப்பருவத்தில் தான் கண்ட அனுபவத்தையும் ஞாபகத்தையும் பின்னாளில் சம்பந்தப்பட்டவர்களும் அதிர்ச்சியுறும்படி கூறியதையும் உரைத்தார்.

அந்த உரையாடல் நான் தேடிய இடத்தையே வந்தடைந்தது சந்தோஷமாக இருந்தது. என்னுடைய மூன்று அனுபவங்களை நான் இங்கே கூற விரும்புகிறேன். முதலாவதாக; நான் அதிகபட்சமாய்த் தவழும் குழந்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதுவும்கூட ஞாபகம் இல்லை. அதைவிடச் சிறிய சிசுவாகக்கூட இருக்கலாம். தார்சாவிலுள்ள கட்டிலில் என்னைக் கிடத்தியுள்ளார்கள். அந்த வீட்டின் சுற்றுப்புறத்தின் தோற்றமெல்லாம் மிகத் தெளிவாகப் பதிந்துள்ளது மூளையில். மொட்டைத் தலை முழுக்க மொழுமொழுவென்று எண்ணெய். எண்ணெய்க்காக வந்த எறும்புகள் ஆயிரம். அவற்றின் திடீர்க் கடிகளால் நான் அலறுகிறேன். இந்த விஷயத்தைப் பின்னாளில் அம்மாவும் எனக்குச் சொல்ல – பயங்கர நிகழ்வு அல்லவா – அம்மாதான் ஓடிவந்து என்னைத் தூக்கிக்கொண்டு காத்ததைச் சொல்கிறார். இல்லை, அத்தகைய சிசுப்பருவத்தின் ஞாபகம் சாத்தியமில்லை அம்மா சொன்ன நிகழ்வின் அடிப்படையில் பிறந்த மாயத்தோற்றமாகத்தான் இது இருக்க வேண்டும் என்றே பிற்காலத்திய எனது பகுத்தறிவுச் சிந்தனை யோசித்தது என்றாலும் உண்மையாகவும் கிடந்தது. இதே போன்ற இன்னொரு நிகழ்வும் இதை உறுதி செய்தது மட்டுமின்றி அசைக்க முடியாத ஓர் உண்மையாகவும் நிலைத்தது. அதைக் கூறுவதற்குமுன் ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். எனது பெற்றோர், மற்றும் சகோதரிகள், சுற்றம் எல்லோருமே அசைவ உணவுக்காரர்கள்தான். எங்கள் வீட்டின் ஓய்வுநாள் ஞாயிறுதோறும் ஆட்டிறைச்சி உணவு உண்பார்கள். நெடிய நடை நடந்து வெகுதூரம் உள்ள ஒரு கடைத்தெருக்கடைக்குச்சென்று இறைச்சி கொத்தும் அரிவாளையும் இறைச்சியையும், தெறிக்கும் இரத்தத் துளிகளையும் – சமயங்களில் என் முகத்திலும் சட்டையிலும்கூடத் தெறித்துவிடும் – பார்த்தபடி கடைக்காரர் முன்னாலேயே நின்று காத்திருந்து வாங்கிச் செல்வது மிகச்சிறிய வயதிலிருந்தே நான்தான்.

நான் எனது நினைவறிந்த நாளிலிருந்தே மாமிச உணவு எதையுமே அருந்தாதவன் என்பதை யாவரும் அறிவர். இது பற்றிய எந்த எண்ணங்களும் கருத்துகளும் என் மூளையில் கிடையாது. அந்த மாமிச உணவின் மீதும் அதைப் புசிப்பது மீதும் ஓர் இணக்கமும் இல்லாத விலக்கமும் இல்லாத ஒரு மனநிலையில் நான் இருந்தேன். ஒரு ’நல்ல மனநிலை’, ‘அஹிம்சை’ போன்ற எதுவுமில்லை அது என்பது தெளிவாகவே இருந்தது. இது நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டுத்தான் இருந்தது என்றாலும் எதையும் ஆய்ந்து அதன் காரணங்களை இன்னதெனக் காணும் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையே எனது கூர்மையான அறிவாக உள்ள முதிர்பருவத்தின் சிறுவயது அது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எனது எட்டாவது வயதோ, பத்தாவது வயதாகவோதான் இருக்க வேண்டும். வரலாற்றுப்பாடம். ஆசிரியர் உணர்ச்சி பொங்க விவரிக்கிறார், கலிங்கப்போரில் குருதி சிந்த, சிதைந்த உடலங்களுடன் போர்க்களத்தில் விழுந்துகிடக்கும் மனிதர்களைக் கண்ட அசோகன்… அந்தக் காட்சி எனக்குக் கண்கூடாகத் தெளிவாய்க் காண்கிறது மட்டுமின்றி இதற்கு இணையான அதே போலொரு காட்சியும் அப்போது என் நினைவுக்கு வந்தது. பக்கத்துவீட்டு ஒரு சகோதரர் கைக்குழந்தை என்னை மார்பில் வைத்துக் கவனித்துக் கொள்ளவேண்டிய நிலையிலேயே தன் வேலையாக வெளியே வருகிறார். அது ஆடுகள் வெட்டும் இல்லம். அந்த இடத்திற்குள் நுழைகையில் அவர் பாதம் இயங்க இயங்க தோளில் இருக்கும் எனது பார்வைக்கு அலங்கோலமான தோற்றங்களுடன் இரத்தம் சிந்தச் சிதைந்தபடியும், மனிதர்கள் வெட்ட வெட்டத் துடித்து விழுந்தபடியுமான ஆடுகள், அடுக்கடுக்காய்த் தொடர்ந்த ஒரு பெரிய நிலத்தில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. பிற்காலத்தில் அந்த இடத்தை நான் தூர நின்று பார்க்க நேர்ந்தபோது அது ஒரு சிறிய வீட்டுக்கட்டடத்தில் இரண்டொரு அறைகள் உள்ள அதன் உட்பகுதிதான் என்றிருந்தது.

ஓகோ, இதுதான் காரணமாகி இருக்கிறது என்று தேர்ந்துகொண்டேன் ஒரு பெரிய அறிவாளியாய்.

இன்னும் ஒரு நிகழ்வு: இதுவும் பொதுவாக நினைவு தோன்றியிராத காலத்தின் அபூர்வமான நமது நினைவுகளில் ஒன்றுதான். தார்சாவில் குறுங்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை உருண்டு ஆழமான கீழ்த்தரைக்கு வரும் படிக்கட்டுகளில் மோதிமோதி அதன் வலதுகாலின் மூட்டிலும், மூட்டுக்குச் சற்றே தூரத்திலுமான இரண்டு மிகமிக ஆழமான காயங்கள் – உருண்டது நன்கு நினைவிலுள்ளது – அந்தக் காயங்கள் இப்போதும் தழும்பாக இருக்கின்றன. காட்சிகள் காண்தெளிவுடன் இருக்கின்றன. நான் அந்தப் படிக்கட்டுகளில் கால்களை இளைப்பாற்றி வைத்துக்கொண்டிருக்க தெரு அண்மையிலுள்ள ஒரு நர்ஸ்தான் வெள்ளைச் சீருடையுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து எனது கட்டுகளை அவிழ்த்து புதிய கட்டுகள் அணிவித்துச் சென்று கொண்டிருப்பார். மறக்கவொண்ணாத அனுபவம் அது. அதே அளவு மறக்க முடியாததுதான் பிற்காலம் ஒன்றில் நடந்ததும். நாங்கள் வீடு வெதுதூரத்திற்கு விலகிப்போய்விட்ட தெரு ஒன்றில் குடியிருக்க வந்துவிட்டோம். அப்போதுதான் வளர்ச்சியடைந்திருந்த நகரத்தின், ஏராளமானவர்கள் பணிபுரியும் பொதுமருத்துவமனைக்கு நானும் அப்பாவும் முதன்முதலாகச் சென்றபோது இங்கேதான் அந்த நர்ஸ் பணிபுரிவதாக அப்பா சொல்ல, நான் அவரைப் பார்க்க வேண்டுமே என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அழைத்துச் செல்லப்பட்டு அவரைப் பார்த்தேன். எத்தகைய ஒரு பெரிய ஏமாற்றம் நான் அடைந்தது! எத்தகைய துக்கம்! இந்த உலகை நான் அறிந்துகொண்ட இயலா? தாக்கமா? நான் முற்றிலும் எதிர்பாராத முகம் போலிருந்தது அது! உற்சாகமற்று, நலிந்து சலித்த ஒரு வயோதிக முகம்! பணிச்சுறுசுறுப்பிலிருந்தார் அவர், அப்பாவும் தூர இருந்துதான் சுட்டிக்காட்டினார். நானும் தூர இருந்துதான் பார்த்தேன். யாருக்கும் நெருங்கத் தோன்றவேவில்லை.

பொதுவாக நம் நினைவுகளைத்தாம் ‘அனுபவங்கள்’ என்று கூறுகிறோம். (நினைவாகவும் அறிவாகவும் மாறுமுன்னான நிகழ்வை நாம் என்னவென்று சொல்வோம்?) இந்த அனுபவங்களால்தான் உருப்படாமல் போகிறான் மனிதன். மனித வரலாறும்தான். (மனிதனும் மனிதவரலாறும் வேறுவேறா என்ன?) அறிவு என்றும் நாம் இதைத்தான் கூறுகிறோம். அறிவாகவும் நினைவுகளாகவும் மாறும் முன்னான நிகழ்வுகளனைத்தையும் நமது மூளை அறிவாகவே சேமித்துவைத்துள்ளது. இந்த அறிவுக்கு முந்தைய அடிப்படை நிகழ்வையும் நாம் ‘அனுபவம்’ என்றே குறிக்கிறோம். மூளையின் எந்த உறவுகளையும் கொண்டிராத மெய்அனுபவம் அது.

‘நினைவு தெரிந்த நாள் முதலாய்’ என்ற ஒரு சொற்றொடரை நாம் சொல்வதுண்டே. நினைவு, அதைத் தொடர்ந்த சிந்தனைகள், அதைத் தொடர்ந்த செயலும் இருப்பும். இதுதானே நமது வாழ்க்கை. குழப்பமும் துயரமுமான வாழ்க்கை? என்றால் இவை எங்கிருந்து வந்தன? இவற்றின் ஊற்றுக்கண் எது? இங்கேதானே எங்கோ ஓர் இடத்திலிருந்து அது தொடங்க வேண்டும்?

நினைவு தெரிந்த நாட்களுக்கு முந்தைய வாழ்க்கையை நாம் அறிவோமா? நினைவு தெரிந்த நாட்களுக்கு முந்தைய வாழ்க்கை. அதாவது ஒரு சிசுவின்/குழந்தையின் வாழ்க்கை. அது எத்தகையது? அது எவ்வளவு வாழ்ந்தது? எப்படி வாழ்ந்தது? அதன் காலம் எவ்வளவு? காலமற்றது அது என்றால் அது சாமான்யமானதல்லவே. சாமான்யமானதல்ல என்றால், ஒருவேளை இந்த மானுடகுலம் அடையவேண்டிய எல்லையும் எல்லையின்மையுமே அதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறதா உங்களுக்கு?

அந்த அனுபவம் அவ்வப்போது எல்லோருக்குமே கிட்டுவதுதான் என்றால், அதன் பொருள் என்ன? காக்கமுடியாததா, கைப்பற்றவும் கடைப்பிடிக்கவும் முடியாததா அது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒன்று இல்லாமலிருக்கலாம். நிச்சயமாக, செய்ய வேண்டாததெல்லாம் என்ன என்ன என்று ஒன்று இருக்கிறதை – அதைத்தான் நான் நன்கு அறிந்துகொண்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் இங்கே. அதற்கு வேண்டியதெல்லாம் அவ்வப்போது வெற்றுச்சவடால் வார்த்தைகளாய் நாம் சொல்வோமே ‘குழந்தைமை’ ‘குழந்தைமை’ என்று அதுதான் அது.

குழந்தைமை, மிகக் கூர்அறிவுடன் இயங்குவது. கண்ணெதிரே கண்ட காட்சியையே பார்த்தறிவது. தேவைக்கான அனுபவங்களை மட்டுமே நினைவாகப் பதிந்து வைத்திருப்பது. அந்த நினைவுகளையும்கூட நினைவுகளற்ற உளத்தூய்மை கொண்டே செயற்படுத்துவது. குழந்தைமையின் அடித்தளமும் களமும் உளத்தூய்மை எனும் பேரின்மைதாம். நம் அறிவு அறிய வேண்டிய பேருண்மையும் இதுவே. இந்த மெய்யனுபவமே உயிரின் கனல்நிலையை, பேராற்றலை, பேரெழுச்சியைத் தனக்குள் கொண்டிருப்பது. காண்பதையும் காணப்படுவதையும் அறியும் அறிநிலை அது. அறிவு அல்ல; அறிவோ, ஞாபகம் மற்றும் ஞாபகத் தொகுப்புகளாக மாறிவிட்ட நிலையில் அறிநிலையற்ற பயன்படுத்தல்களால் உலகைப் பாழ்படுத்திவிடக்கூடியது. அறிநிலையின் பேரெழுச்சியிலேதான் நம் புலனுணர்வுகளாலான பெருங்களி, பெருந்துயர், வியப்பு, கண்டுபிடிப்பு, படைப்பு எல்லாம் ஓருயிர்போல் தோன்ற இவற்றையே நாம் கவிதை எனக்கொள்கிறோம். குழந்தைமைக்கே உரியது என்கிறோம். கவிதைமூலம் படைப்புமூலம் நாம் சென்றுசேரவேண்டிய இடம் இதுதான். இது மட்டுமேதான். பிற எல்லாமே நம் புலன்அனுபவங்கள்போலும் மேலான ஒரு பொழுதுபோக்காகவே அமைந்துவிடுகின்றன. சமயங்களில் உணர்வுகளை மழுங்கடிக்கும் குப்பைகளாகவும், ஆபத்தான விஷங்களாகவும்கூட.

எல்லாம் சரி. நன்கு புரிகிறது. கலை என்றும் கவிதை என்றும் துறைகளைப் பகுத்தும் தொகுத்தும் படைத்துக்கொண்டிருப்பவர்கள் நாம்தான். மெய்யனுபவத்திலிருந்து வந்தவன் அவ்வனுபவத்தைப் படைப்பாக வடிக்கையில் அவனது அறிவு நினைவுத்தொகுப்பு சிந்தனை முடிவுகளையே சித்திரங்களாகக் காட்டுகிறான். அறிவும், சிந்தனைகளும் சித்திரங்களும் எத்தகைய மனவெழுச்சிதரும் மெய்யனுபவம் இல்லாதவனிடமும்கூடத் தோன்றி படைப்பாக வெளிப்படலாமே. என்றாலும் நல்ல கவிதைகளை – உண்மையை – கண்டுபிடிக்க வழி இல்லாமலா இருக்கும்? ஆனால் ஒருவர் அதனைத் தானேதான் கண்டுபிடித்தாக வேண்டும். தானே கண்டுபிடித்தால்தான் அது உண்மை.

இன்னொரு ஐயமும் கேள்வியும் இருக்கிறது நம்மிடம். கலை மேலான ஒரு பொழுதுபோக்காக இருந்தால் என்ன? நாம் அடைய விரும்பும் வாழ்வின்பத்தைப் போலவே இதுவும் ஒரு சுவைதானே?

அழகும் நியாயமுமான கேள்விதான். பதில், நாம் இந்த வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்வோடு எத்தகைய தொடர்பினைக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொருத்தது அது. நம் துக்கத்தையும், தாகத்தையும் பசியையும் பொருத்திருக்கிறது அது.

கவிதை அதை நிறைவேற்றுமா? கவிதைதான் அதை நிறைவேற்றும் என்கிறது கவிதையின் மதம். தன்னை விரித்துக்கொள்ளத் தன்னையே அழித்துக்கொண்டு ஒளிர்கிறது கவிதை மட்டுமே. இந்தக் கவிதானுபவத்தையே கண்டவர்; விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றது ஓர் இதயம். இத்துணை தீவிரமான ஒரு வரியை நாம் வேறெங்குமே கண்டிருக்க முடியாது. கண்டவர் – மெய்மையைக் கண்டுகொண்டவர் – அவ்வனுபவமேயாகிவிடுகிறார். வெளிப்பாடு அவர் வாழ்வு மட்டுமேயாகிவிடுவதால், மொழிவெளிப்பாட்டை ஒரு தன்மய்யம் கொண்ட செயலாகக் கண்டு துறந்துவிடுகிறவராயிருக்கிறார். முயன்று பார்க்கிறார் அவ்வளவுதான்.

விண்டவர் கண்டிலர் என்னும் சொற்கள்தாம் மிகப்பயங்கரமாக ஒலிக்கக் காண்கிறோம். சொற்களை உதிர்ப்பவனை ஐயத்துடன் பார்ப்பது மட்டுமின்றி இவன் மெய்யானவனே இல்லை என்ற நிலைக்கு ஓங்கி அறையவும் துணிந்துவிடுகிறது அது. இந்நிலையில் கவிதையை நாம் ஒரு வெளிப்பாட்டுத்துறையாகத்தான் கொண்டிருக்கிறோம் என்பதை மிகுந்த அடக்கத்துடன் உணர்ந்து கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம், இல்லையா?

0

அனுபவம், கவிதை ஆகியவை குறித்து சிங்கப்பூர் அரங்கத்திலும், அதற்குச் சற்று முன்னரே விஷ்ணுபரம் விருது மேடை ஒன்றிலும் பேசிய ஒரு விளக்கமும் படிமமும் முக்கியமானது. அதற்கு முன்னும் பின்னுமாக வெளிப்பட்ட இரண்டு கவிதைகளை இத்தோடு இணைத்திருக்கிறோம்.

‘அனுபவத்’தின்போது எந்த எண்ணங்களும் இல்லை –எண்ணங்களற்ற ஒரு வேளையில்தான் ‘மெய்யனுபவம்’ கூடுகிறது. அழகின் ஈர்ப்பு, ஒரு திகைப்பு, இன்பம், வலி ஆகிய எந்தச் சொற்களில் சொன்னாலும், இன்னும் எத்தகைய புனைவுகளால் படைத்தாலும், அது கூறுபவனின் எண்ணங்களையும் ஆளுமையையுமே சுட்டிவிடுகிறது. ஆனால் ஒரு கவிஞனிடம் உள்ள எண்ணங்கள் எதுவுமே அவனது மெய்யனுபவத்திலிருந்துதான் சேகரமாகியிருக்கும் என்று வைத்துக்கொண்டு நாம் ஏற்றுக்கொள்கிறோம், வேறுவழியின்றி. இதில் பொய்மையும் பாவனைகளும் கலந்துவிட ஏராளமான வழிகளுமிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. இதன் காரணமாகவேதான் ஓர் அசல்தன்மையை, நம்பகத்தன்மையைத் தேடுவதும் ஆராய்வதும் நேர்கிறது. இந்த அசல்தன்மை அந்தக் கவிஞனின் பிறபிற கவிதைகளாலும் அவனுடைய ஆளுமையாலுமே கண்டடையப்படுகிறது. அதற்கு ஒரு நெடிய வாசிப்பு தேவை வாசகனுக்கு. இதன் மூலமேதான் கவிஞனும் வாசகனும் உறவாகிறார்கள். உறவுதானே வாழ்வும் உயிரின் இயக்கமும். இவ்வாறுதானே நிகழ முடியும் கவிதையனுபவம்?

கீழே காணும் இரு கவிதைகளுக்கும் முன்னுள்ள அனுபவம் என்னவாக இருந்திருக்கும்? அது ஒரு மெய்யனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற நிலையில் ஓர் இன்மைப் பெருவெளியைத்தானே நாம் காண்கிறோம்? இல்லையெனில் அவற்றின் பெருமதி என்ன? கேள்வியை அறிபவர்கள் அதன் பதிலையும் தாங்களே அறிந்துகொள்ள முடியும் அல்லவா?

முடிச்சு

ஓ, இங்கேயும் ஓர் இடமிருக்கிறதா

என எட்டிப்பார்த்துவிட்டு

ஏனோ போகாமல் திரும்பிக்கொண்டது

மரக்கிளையினின்று

சிறகு விரிக்க இருந்த பறவை ஒன்று.


வீதியில்

வெளிகாட்டி வெளி திளைத்தவாறு

நடந்து செல்கிறாள் ஒரு பெண்.

வானம் வெளிப்பட

அவள் தோள்களை அணைந்த ஆடையின்

விளிம்புகளை இணைத்த

அந்தக் கயிற்று முடிச்சேதான்

இப்போதைய பிரச்சனையா?

நட்ட நடுவில்

கால்மேல் கால்போட்டமர்ந்தபடி

முடிவிலா உலகப் பெரும்

புரட்சியையே முடித்துவிட்டதுபோல்

தன் அழகு குறித்து

அது காட்டும் பவிசும் பெருமிதமும்தானா

ஒரு கணம் அதைப் பார்க்க நேர்ந்த

அவனிடம் அப்படி ஒரு

புன்னகையைக் கொளுத்திற்று?

0


அகலத் திறந்த முதுகு

அழகாயிருக்கிறதா?

நான் சென்றாலும்

என்னைப் பார்த்துக்கொண்டே

இருக்க வேண்டும் நீங்கள்.

என் முதுகும் உங்களைப்

பார்த்துக்கொண்டே இருக்கும்

நான் உங்களைப்

பிரியமாட்டேன் என்பதை

வேறெப்படிச் சொல்ல?


தன் முதுகைத் தான் அறிந்தோரால்

இயற்றக் கூடியதுதானே இது?


ஆண்களின் அகன்ற

மார்பினுக்கிணையானதில்லையா இது?


எனக்குத் தெரியும்

எங்கள் முகத்தை

நிலவென்றும் தாமரையென்றும்

பாராட்டிய நீங்கள்

ஒளிரும் விண்ணளவு விரிந்த அகம் என

இதனையும் பாராட்டுவீர்கள் என.


நான் எனது ஆணின் மார்பில்

தலைசாய்க்கையில்

என்னை அரவணைக்கும் அவன் கரங்கள்

இளைப்பாறும் இடம் இது.

அழிவில்லாத அன்பின்

அந்த எழிற்தலம்

பின்னுள்ளதும் பின்தொடர்வதும்

எனச் சொல்லக்கூடிய

கடந்தகாலமோ எதிர்காலமோ அல்ல

நாம் யாவருமே கண்டுகொண்டதும்

காலத்தால் இயற்ற முடியாமலிருப்பதுமான

இந்த நொடியே

என்பதைத்தான் சுட்டுகிறதில்லையா?

***

தேவதேவன் அரூ இணைய இதழ் கவிதையின் மதம் என்னும் தலைப்பில் எழுதிய வரும் கட்டுரை தொடரின் முதல் கட்டுரை இது. பிறக் கட்டுரைகளை வாசிக்க: கவிதையின் மதம்


(நன்றி அரூ அறிபுனைவு இணைய இதழ்) 

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கவிதை வாசகருடன் நேர்காணல் - மதார்

கவிஞனைப் போலவே கவிதை வாசகனும் கவிதைக்கு முக்கியமானவன். தேவதேவன் தன் கவிதையை பற்றிய நூலில் கவிஞனுக்கு இணையான பங்களிப்பை வாசகனும் கவிதையில் செய்கிறான், கவிஞன் அடைந்ததையே ஒருகட்டத்தில் வாசகனும் அடைந்துவிடுகிறான் என்கிறார். அந்த வகையில் ஒரு கவிதை வாசகன் அவன் வாசிக்கும் கவிதையை எப்படி அணுகுகிறான் என்று அறிந்துகொள்ள தீவிர கவிதை வாசகரான நெல்லையைச் சேர்ந்த ஈஸ்வரன் அவர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

உங்களைப் பற்றி?

ஈஸ்வரன்.நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் வாசலில் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறேன். வாசகன்.

வாசிப்பில் ஆர்வம் எப்படி? எழுதுவது உண்டா?

எழுதுவது இல்லை. வாசிப்பை விரும்பி செய்கிறேன்.குடும்பச் சூழலால் படித்து முடித்தவுடனேயே தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். 

வாசிப்பு என்ன தந்தது?

என்னைத் தவிர எல்லாருமே உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டுந்தான் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வுணர்ச்சி அடிக்கடி எழுந்தது. அதிலிருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வர புத்தக வாசிப்பு உதவியது. 

எனது நண்பர் உமாபதி தான் புத்தகங்களை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க இந்த உலகம் பிடிபட ஆரம்பித்தது. நாம் மட்டுமே துன்பத்தில் இல்லை மொத்த உலகமும்/மனிதர்களும் சதா ஏதோ வலியில் உழல்பவர்கள் தான் என்ற உண்மை விளங்க ஆரம்பித்தது. அதை எப்படிக் கடப்பது என்ற மனபலத்தையும் பக்குவத்தையும் வாசிப்பே எனக்குத் தந்தது.

வாசகனாக எப்போதும் மனநிறைவுள்ளவனாக இருக்கிறேன். அதை பெருமையாகவும் கருதுகிறேன்.

தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை வாசகர்கள் சிறுகதை நாவல் வாசகர்களை விட குறைவாகத்தான் உள்ளனரா? 

கவிதை வாசிப்பு எதார்த்த வாழ்விலிருந்து பிரித்து விட்டேந்தி மனநிலையை அளிக்கும் என்ற தவறான கண்ணோட்டமே காரணம் என்று நினைக்கிறேன். பொதுவாகவே கவிதை வாசிப்பை சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் தரும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். துன்பமும் சரி இன்பமும் சரி நம் மனநிலையைப் பொறுத்து அமைவதே. 

இந்த நெருக்கடிகளிலிருந்து விலக்கி என்னை இலகுவாக்குவதையே நான் கவிதையாகப் பார்க்கிறேன். நூறு பக்க நாவலோ இருபது பக்க சிறுகதையோ தரும் வாசிப்பனுபவத்தைக் காட்டிலும் ஐந்து வரி கவிதை தருகின்ற அனுபவமும், புத்துணர்வும் அலாதியானது. முதன்முதலாக உலகுடன் அறிமுகப்படும் குழந்தையின் பரவசத்தை கவிதை எனக்கு அளிக்கிறது. அது என்னை நாள் முழுவதும் பொழிவோடும் எனது லெளகீக வேலையை மிகுந்த ஈடுபாட்டோடும் செய்யத் துணைபுரிகிறது. உலகிலிருந்து என்னைத் தனிமைப்படுத்தாமல் உலகோடு இணைந்து செயல்படவும் உலகை மேலதிகமாக புரிந்துகொள்ளவும் கவிதை உதவுகிறது.

பிடித்த அல்லது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் கவிதை வரிகளைக் குறிப்பிட முடியுமா? 

ஒன்று இரண்டு என்று குறிப்பிட முடியாது. வரிகளை மட்டும் சொல்வது சரியாக இருக்குமா எனவும் தெரியவில்லை. ஏனெனில் ஒரு கவிதையின் வரி அதன் முன் பின் உள்ள மொத்த கவிதையோடும் இயைந்து பொருள்பட வேண்டியது. உதாரணத்திற்கு பாரதியின் 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரி. தேடிச் சோறு நிதம் தின்று என ஆரம்பிக்கும் அந்தப் பாடலில் வீழ்வேனென்று நினைத்தாயோ வைத் தாண்டியும் கவிதை நீளும். அதில் பராசக்தியிடம் பாரதி வரம் கேட்பார். பொதுவாகவே இதிகாசங்களில் புராணங்களில் வழங்கப்படும் வரங்களில் ஒரு சூசகம் இருக்கும். பாரதியோ 'நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

அதை நேரே எனக்குத் தருவாய்' 

என்கிறார். நான் என்ன கேட்கிறேனோ அதை நேரடியாக எனக்குக் கொடுத்துவிடு என்கிறார். பிரபஞ்சத்திடன் நானும் அதையே தான் கேட்கிறேன். கடந்தகாலம், எதிர்காலம் என்று எந்த ஊடுருவலும் இல்லாமல், முன்வினைப் பயன், கர்மா என்று எதையும் காரணம் சொல்லாமல் இப்போது எனக்கு என்ன வேண்டுமோ அதை எனக்குக் கொடு என்றே நானும் பிரபஞ்சத்திடம் கேட்கிறேன். ஒரு தெளிவைத் தரும் பாரதியின் நல்ல கவிதை. விக்ரமாதித்தனின் 

"கரடியே சைக்கிள் ஓட்டும்போது 

நாம் ஏன் வாழ்க்கையை"

என்ற கவிதையும் அடிக்கடி மனதில் எழும். வண்ணதாசனின் அகம் புறம் என்ற கட்டுரைத் தொகுப்பில் ஒரு பகுதி வரும். வழக்கமாக நாம் வானவில்லை அண்ணாந்து பார்ப்போம். அந்தக் கட்டுரையிலோ பொதுக் கழிவறைக்குச் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து கசியும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டுத் தெரியும் வானவில் என்பது போல ஒரு வரி வரும். அதைப் படித்தவுடன் அது தந்த மனக்கிளர்ச்சியும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. இவை யாவுமே நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிலும் கவிதைத் தருணங்கள் ஒளிந்திருப்பதை திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கின்றன. அதே போல் இன்றைக்கும் நான் படித்து வியக்கும் கவிஞர்களில் ஒருவர் பிரமிள். இன்னும் நிறைய பேரைச் சொல்லலாம். பெருந்தேவியின் கவிதை என்ன செய்யும் என்ற கவிதையும் மிகவும் பிடித்தமானது. 

அறிந்ததுதான்

அதனால் எந்த வழக்கமான 

அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது

தண்ணீரை ஓயின் ஆக்குவதோ

வானத்திலிருந்து வெட்டுக்கிளிகளைச் சொரிவதோ

இருக்கட்டும் அதனால் கைக்கெட்டிய தூரத்தில் 

ஒரு சாதாரணக் கதவைக்கூட 

திறந்துவிட  முடியாது

ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதை

நிறுத்த முடியாது

ஒரு பிடிவாத முகத்தில்

சின்ன புருவத் தூக்கலைக்கூட

உருவாக்க முடியாது

முக்கியமாக 

அதனால் எந்தத் துரதிர்ஷ்டத்தையும்

தாமதிக்கச் செய்ய முடியாது

வாழ்க்கையின் பொருள்

ஒன்றும் செய்ய முடியாதது என்கிறபோது

இதில் வியப்படைய எதுவுமில்லை

ஆனால் கவிதை ஒன்றைச் செய்கிறது 

ஒரு மன இருளிலிருந்து

இன்னொரு மன இருளுக்கு

இன்னொரு மன இருளுக்கு

சில சொற்களை 

முத்தமிட்டுப் பறக்கவிடுகிறது


எதையும் காப்பாற்றி வைக்க முடியாதபோது

கவிதை கைதூக்கி ஆசிர்வதிக்கிறது

புதிய செல்லாக் காசுகளால்.

கவிதை வாசிப்பில் உள்ள சவால்கள்?

ஒரு நெருக்கடி காலத்தில் திருச்சி செல்ல வேண்டிய சூழல். அப்போது நெல்லை ஜங்சனில் செல்வம் கிளாசிக்ஸ் கேசட் கடை இயங்கி வந்தது. அதன் முகப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். அதில் சூன்யப் பிளவு என்று ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது.எழுதியவர் பெயர் கைலாஷ் சிவன் என்று இருந்தது. என் சட்டைப் பையில் இருந்ததோ வெறும் இருபது ரூபாய். என் அதிர்ஷ்டமோ என்னவோ புத்தகத்தின் விலையும் இருபது ரூபாயாக இருந்தது. பேருந்தில் ஏறி புத்தகத்தில் நான் படித்த முதல் வரி

"மேல் நோக்கும் விதானமெல்லாம்

ஒளித் துவாரங்கள்" 

முதல் வாசிப்புக்கு புரியவில்லை. பின்பு நிறைய தீவிர இலக்கிய நூல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு கவிதைகள் விளங்க ஆரம்பித்தன.

"மேல் நோக்கும் விதானமெல்லாம்

ஒளித் துவாரங்கள்" 

ஒரு நாள் மொட்டை மாடியில் இதை நேரிலேயே கண்டபொழுது இந்தக் கவிதை என்னுள் ஆழப் பதிந்தது. 

படைப்பாளிக்கும் வாசகனுக்கும் கவிதை ஒன்றா?

படைப்பாளிக்கு எப்படியோ வாசகனாக எனக்கு கவிதை எப்போதுமே அற்புதம் தான். சில சமயங்களில் தண்ணீர் அருந்தும்போது திராட்சை ரசம் அருந்துவது போல ஏதோ அற்புதம் ஒன்று நிகழ்வது போலத் தோன்றியிருக்கிறது. ஒரு நல்ல கவிதையைக் கேட்டு உம்மனாமூஞ்சி கூட புருவம் தூக்குவதை பார்த்திருக்கிறேன். 

புனைவு வாசிக்க ஆரம்பித்து பிறகு கவிதைகளை வாசித்தீர்களா? அல்லது எடுத்தவுடனேயே கவிதை வாசிப்புதானா? 

ஆரம்பத்தில் எது கிடைக்கிறதோ அதை வாசித்துக் கொண்டிருந்தேன். கவிதைக்குள் செல்ல சற்று நேரம் பிடித்தது. கவிதையிலும் வானம்பாடி பாணி கவிதைகளிலிருந்து தீவிர நவீன கவிதைகளுக்குள் பிரவேசிப்பதில் இன்னுமே நேரம் எடுத்தது. அது கொஞ்சம் வாசிப்பில் உழைப்பைக் கோருவது. வாசகப் பங்கேற்பையும் முக்கியமாகக் கருதுவது.நம்மைக் காலியாக வைத்துக் கொண்டு வாசிக்கும்போதே நவீன கவிதை நமக்கு விளங்க ஆரம்பிக்கும். 

தினசரி நெருக்கடியில் வாசிக்க முடியாமல் போகும்போது கூட தினமும் இரவு தவறாமல் ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்து அதன் சில கவிதைகளையாவது வாசித்து விடுவேன். அந்த ஒரு கவிதை ஒரு நாளுக்குப் போதுமானது, பெறுமதியானது. 

புனைவில் கிடைக்காத எது கவிதையில் கிடைக்கிறது? கவிதையில் கிடைக்காத எது புனைவில் கிடைக்கிறது? 

கவிதை எனக்குச் சிறகுகளைத் தருகிறது. பறக்க வைக்கிறது. நிலத்தில் காலூன்றச் சொல்லித் தருவது புனைவு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இரண்டும் இருப்பதால் ஒரு சமன்பட்ட நிலையை அடைவதாக உணர்கிறேன். 

கவிதையிலும் கால் ஊன்றும் தருணங்கள் உண்டுதானே? புனைவில் கூட பறக்கும் தருணங்கள் வாய்க்கும் அல்லவா? 

அப்படியும் இருக்கலாம். அப்படி இருக்கும்போதும் அவை நம்மை சமன்படுத்துகின்றன.

சிறுகதை/நாவல்களில் கவித்துவமான பகுதிகள் இருக்கும் அல்லது கவித்துவ நடையிலேயே எழுதப்பட்டதாக இருக்கும். அதை வாசிப்பதற்கும் தனியாக ஒரு கவிதையை வாசிப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? 

உரைநடையில் நிறைய கவித்துவமான வரிகள் இருக்கலாம். யுவன் சந்திரசேகரின் ஒரு நாவலில்

"கழுகுக்குச் சாலையாகும் காற்று" 

என்று ஒரு வரி வரும்.

ஜெயமோகன் எழுதிய ஒரு கதையில் மரத்தைப் பற்றி வரும் ஒரு வரியில் இருந்த இடத்திலேயே தன் இருப்பை வாசனை மூலம் வெளிபடுத்தும் என்று எழுதியிருப்பார். இதுபோல் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். ஆனால் அவையாவுமே அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளுக்கு ஒரு பொழிப்புரையாக வருபவை. அதற்கும் முன்னும் பின்னும் ஒரு சூழல் இருக்கும். அதற்குள் ஒரு அர்த்தமாக அந்த வரி அமையும். அந்த அர்த்தத்தைத் தாண்டிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் குறைவு. ஆனால் கவிதை அப்படி அல்ல. அது எல்லைகள் அற்றது. இன்று ஒரு அர்த்தம் புரியும் அதுவே நாளை வோறொன்றாகத் தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி புலப்படும். எனவே உரைநடையில் வரும் கவித்துவமான வரிகள் எப்போதும் ஒரு கவிதைக்கு ஈடாகாது. அதனால்தானோ என்னவோ சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்களை மொத்தமாக எழுத்தாளர்கள் என்கிறோம். கவிஞர்களை மட்டும் சிறப்பாக கவிஞர்கள் என்கிறோம். ஒரு மொழியின் உச்ச பட்ச வெளிப்பாடு கவிதைதான். 

கவிதை வாசிப்பு போல கவிஞர்களை நேரில் சந்தித்து உரையாடும் பழக்கம் உண்டா? 

மிகவும் குறைவுதான். வாசிப்பு மட்டுமே போதும் என்று கருதுகிறேன். நேரில் சந்திக்கும்போது அந்த படைப்பாளி குறித்து அப்போது ஏற்படும் பிம்பம் நாம் அடுத்து வாசிக்கவிருக்கும் அவரது படைப்பில் படிந்து வாசிப்பில் முன் முடிவுகளை எடுக்க வைத்துவிடுமோ என்ற ஐயத்தில் நேர் சந்திப்புகளை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன்.சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் தவிர்ப்பதில்லை. மெனக்கெட்டு போய் சந்திப்பது குறைவு.  எல்லோரும் அப்படி இருக்க வேண்டியதில்லை. எனக்கு வாசித்து இருக்கவே பிடித்திருக்கிறது. 

தனிப்பட்ட தேர்வில் உங்களுக்கு விருப்பமான கவிதை பாடுபொருள் எது? 

எல்லாமே. 

கோட்பாட்டு ரீதியில் படைப்புகளை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனது தேர்வு எனக்கு பிடித்தமானது என்பதைத் தாண்டி இன்னொருவரின் தேர்வும் முக்கியமானது. இன்று முக்கியமில்லாதது நாளை முக்கியமாகலாம். இன்று கொண்டாடப்படுவது நாளை காணாமல் போகலாம். அதே போல எனது கருத்துகளை இன்னொருவர் மேல் திணிப்பதும் தவறு. அவரவர்க்கு அவரவர் தேர்வு. அவரவர் வாசிப்பு. அவ்வளவுதான்.

உங்களது பார்வையில் எது நல்ல கவிதை? 

என்னை ஒரு Universal Man ஆக உணர வைப்பது. 

நல்ல வாசகர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக ஆகியிருக்கிறார்கள். நீங்கள் எப்படி? 

சில பாடுபொருட்களில் எழுதிப் பார்த்ததுண்டு.ஆனால் அதற்கு நானே கடும் விமர்சகனாக இருந்துவிடுகிறேன். அது ஒரு தவறான மனநிலை என்று நிறைய பேர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். நாம் எழுதுவதை பெரும் எழுத்தாளர்கள் எழுதுவதோடு ஆரம்ப காலகட்டத்தில் ஒப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் எழுதுவது நிறைவளிக்காத போது அதை எப்படி அச்சுக்கு அனுப்ப? அதில் பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. ஒருவேளை பின்னால் எழுதலாம், எழுதாமலும் போகலாம். ஆனால் எழுதுவதில் கவிதை எனக்கான தளம் அல்ல. வாசகனாகத் தொடரவே விரும்புகிறேன்.

***

Share:

பிரதான சாலையோரத்தில் காலம் - பாபு பிரித்விராஜ்

பிரதான சாலையோரத்தில் காலம்


துளித்துளியாய் கோர்த்து அலையடித்துக் கிடக்கிறது

சிறு கடல் போல.

வேர்விடத் துடிக்கிறது.

ஒரு பறவை திடீரென எடுத்துப் பறந்து விடுகிறது.

பின் தன்னிறகை ஒவ்வொன்றாக உதிர்த்துக் கொள்கிறது.

நிழல் நிஜமாகவே தொலைகிறது.

வெட்டவெளியில் காலம் நிற்கிறது.

அது அப்படித்தான் நிகழும்.

அதற்கென்று தனியாக ஒரு இருப்பு இல்லை. 

காலம் கனிகிறபோது தரு

மீண்டும் கனி தருகிறது .

வானிறங்கி சொட்டுகையில் காலம் தானிறங்கி வருகிறது

பின் மணம் சொல்லில் மலரென ஆகியது

வடிவம் விழிகளில் அழகென விரிகிறது

மரம் ரகசியமின்றி காலத்தை காட்டுகிறது.

நினைவில் மட்டுமே எஞ்சிய எனது காலத்தை எப்படிக் காட்டுவது?

நினைவை சமைத்த அனைத்தும் இம்மரம் போல் ஒன்றல்லவா!

எதனுடன் எக்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தேனென நினைவில்லை.

தொகுத்து தொகுத்து குறியீடாக கவிதை மொழிய காத்திருக்க வேண்டியதுதான்.

போன வந்த பாதைகளனைத்தும் ரகசியமே!

கூறயியலாத கணங்களை ரத்து செய்த பயணங்களாகவே பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

ரகசியம் இலாத காலம் வாய்க்கும் கணமே அழகு!

கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணனின் ஒரு கவிதை தந்த வாசிப்பனுவமே இது. பரந்த வெளியும், காலமும் கூட மனிதனின் மனப்பிரமைகளே. பொருள்களின் நிறங்களும் அதன் வடிவமும் நம் மனதினால் கண்டுணரப்படுகிறது. அதே போலத்தான் காலமும், இந்த பிரபஞ்சமும் நம் மனதால் கண்டுணரப்படக்கூடிய ஒன்று தான் என்கிறார் ஐன்ஸ்டீன். இப்பிரபஞ்சத்தை எப்படி கண்டுணர்கிறீர்கள்? பிரபஞ்ச வெளியில் இருக்கும் பொருள்கள் மூலமாக மலை,மரம், மண் இம்மாதிரி பொருட்கள் நிறைந்ததே இப்பிரபஞ்சம். அந்த பொருட்களில் நிகழும் நிகழ்ச்சிகளின் மூலமாக அந்நிகழ்ச்சிகளை வரிசைப்பிரகாரமாக அளக்க முற்படும்போது நாம் காலத்தை உணர்கிறோம். சரிதானே! ஆக காலம் என்பதும் நம் மனத்தின் உணர்வே. இந்தப் பிரபஞ்சம் என்பதும் மனத்தின் உணர்வே. மனத்தின் உணர்வுக்கு அப்பால் சென்று விட்டால் அணுவுமில்லை அண்டமுமில்லை காலமுமில்லை பொருளுமில்லை பிரபஞ்சமுமில்லை. ஆனால் கவிஞனின் பார்வையில் மட்டுமே காலம் சட்டமிட்டு அமரும் அவ்வகையில் கவிதை மாத்திரமே தன்னை உதிர்த்து மீண்டும் பச்சையம் பூக்கும் மரம் போல் இடமளிக்க தயாராகயிருக்கும். ஆகவே கவிதை அழகு!

கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணனின் அந்தக்கவிதை,

உடல் விடர்த்து

தளிர்க்கும் அரச மரம்

மரத்தின் எலும்புக் கூடனெ

நிற்கிறது


அதன்மேல் அமர்ந்திருக்கும்

காகங்கள்

கிளிகள்

கொக்குகள் அரசின் கனிகள் போல

தொங்குகின்றன


அடுத்த பருவம் இலை உதிர்த்து

பச்சையம் பூக்கும்

எல்லாமே வெட்ட வெளியில்

நடக்கின்றன


ஒளிவு மறைவு என்று

ஒன்று கூட இல்லை


பிரதான சாலையோரம்

இது!


அதே கவிஞரின் இன்னொரு கவிதை,

ஐந்து தலை நாகமும் சாதுதான்

தலைவைத்துப் படுத்திருப்பது யார் 

என்பதைப் பொறுத்திருக்கிறது 

அது


ஆசையின் தலைதான்

எவ்வளவு பெரியது

அருமையான கவிதையிது இக்கவிதை நிகழ்த்தும் பேதங்கள் எண்ணிலடங்காதவை. திரிபின் நிலைகளை நிகழ்த்துபவை. அறியும் அறிவை வகுத்துப் பார்க்க வைப்பவை. இயல்பையிழந்து பெறும் ஒன்றுதான் இயல்பே என்பவை. காணும் யாவிலுமே அவ்வியல்பே இயக்குகிறது என்பவை. நிகழும் தினங்களில் தூங்கும் பொழுதுகள் அத்தனை இலகுவாய் அமைந்து விடுமாயென்ன? சிவமாய் சமைந்துவிடும் சக்தியை அத்தனை சீக்கிரம் அடைந்து விடலாமா?  சிதறி தெறித்த விழிகளாகி மீண்டும் ஆகாயத்தில் காயமாக முடியுமா? கதிரின் அகத்தீயில் இணையும் விதிகளை அறிவார் யார்!  சாயை அழியுமென்பது மாயையே! அழிக்கும் ஒளியிங்கே கிடையவே கிடையாது. இங்கே ஒளி மூழ்கி ஒளிந்ததும், இருளாகிவிடும் அவ்வளவு ரகசியம் இதுமட்டுமே நித்யம். இமைக்கும் உயிர்களனைத்தும் கணந்தோறும் காண்பதிதுதானோ. அறிவின் பாற்கடலில் அறிவதென்ன? அதன் ஆழங்கள் எதனெதனாலோ ஆனவை. அத்தனையுமறிய ஆவலாவென்றால் ஆம்! அறியுந்தோறும் அலையுந்தன்னிலை மறந்து அரை விழி மூடிக் கொள்ளும் நீலமென துயிலுமோ? விளைவின் ஆழத்தில் செயலுறையுமோ? இரைத்துச் சோர்ந்தபின்  பாத்திகளில் நிறையும் கிணறு ஒருமையுணர்த்துகிறதோ. அறியவேயியலாத அமுதவிஷத்தின் அறிவை சித்'தில் வைத்தது தான் சத்'தின் ஆனந்தமோ. அசையும் விசை குடையென விரியுவமயம் அபேத கணத்தை அடைவதெங்ஙனம். நர்த்தனக் களைப்பின் நாடகமோ. நாடக வையத்தின் அவயங்களோ. சுயமே லிங்கமாகி ஆவுடையைக் கொள்கிறதோ.

***


***
Share:

யூமா வாசுகி நேர்காணல்கள் - மதார்

தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் யூமா வாசுகியின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பான 'யூமா வாசுகி நேர்காணல்கள்' நூலை வாசித்தேன். நேர்காணல் தொகுப்புகள் படைப்பாளி குறித்தும் படைப்புகள் குறித்தும் ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பவை. இந்த நூலில் கவிஞராக ஓவியராக மொழிபெயர்ப்பாளராக சிறார் இயக்கச் செயல்பாட்டாளராக எழுத்தாளராக பத்திரிக்கையாளராக என பன்முகப்பட்ட யூமா வாசுகியைப் பார்க்க முடிந்தது. கலை மீதான அவரது பொறுப்புணர்வு இந்த நூல் முழுவதும் வெளிப்படுகின்றது. கவிதை குறித்து யூமா வாசுகி முன்வைக்கும் சில அவதானங்கள் இந்த நூலிலிருந்து  

என்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான ஈரத்தைக் கவிதைதான் எனக்குத் தருகிறது.

கவிதை மட்டும்தான் கவிதையின் உச்சம். கவிதையின் பெரும்பேறு என்பது, அது நல்ல கவிதையாக அமைவதுதான். தனது படைப்பிற்கு உயிரும் உரமும் கொடுத்து, அதை இயன்றவரையில் உயர்வானதாகப் பிறப்பிக்கச் செய்வதுதான் ஒரு கவிஞனின் வேலையாக இருக்கவேண்டும். தவிர, கவிதையைத் தூண்டில் புழுவாகப் பயன்படுத்தி லெளகீக லாபங்கள் அடைய முயற்சிப்பது இலக்கியத்திற்கெதிரானதாகும். 

0

என்னுடைய அனுபவத்தில் சில முக்கியமான படைப்பு சந்தர்ப்பங்களில், படைப்புவயப்பட்ட மிக அதீத மன நெருக்கடியில் மொழி சற்று விலகி நிற்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எனது சகலவிதமான தேடுதல் பிரயத்தனங்கள் அத்தனையும் நிகழ்ந்தும்கூட சில கவிதைகளில் மொழி என்னுடன் பரிபூரணமாகக் கலக்கவில்லை. மொழி ஒரு வெளியீட்டு சாதனம் எனில் உணர்கின்ற எல்லாவற்றையும் அதன் நுட்பத்துடன் வெளிப்படுத்திவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

தன் சக்தி முழுவதையும், படைப்பூக்கத்தின் இறுதித் துளிவரை ஆத்மார்த்தமாகத் தன் படைப்பு வெளிப்பாட்டின் உயர்வுக்குச் செலவிடுவது மட்டுமே படைப்பாளியின் ஒழுக்கம்.

கவிதை எழுதுவதற்கான மனநிலை வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது. மிக நெருக்கடியான ஒரு சூழலில், நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்துக் கூட்டத்தில் பிதுங்கிப் பயணம் செய்யும்போது என் கவிதை வெளியில் மிக சுதந்திரமாக நான் பிரவேசித்து இருக்கிறேன். அந்த நெருக்கடியிலும் என் கவிதையை இயல்பாகப் பின்னியபடியே பயணித்திருக்கிறேன். அதே சமயம் என் நீண்ட, மிக ஏதுவான, எந்தத் தொந்தரவும் இல்லாத ஓய்வுகளில் என்னால் எதுவும் எழுத முடிந்ததில்லை. லௌகீக சிந்தனைகளுடன் தஸ்தயேவ்ஸ்கி சாலையில் சென்றுகொண்டிருக்கிறபோது, அந்தக் கவித்துவத்தின், படைப்பு மனநிலையின் மந்திரக்கோல் பிரக்ஞையில் பட்ட மாத்திரத்திலேயே உயர்வான படைப்பு எழுச்சி நிலைக்கு ஆட்படுகிறார். இப்படி ஒரு குறிப்பு வெண்ணிற இரவுகளில் வருகிறது.

கவித்துவத்தின் பறவை இடையறாது மாந்திரீகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அது நம் தோளணையும் தருணத்தை நாம் நிதானிக்க இயலாது. படைப்பு மன நிலை என்பது முற்றிலும் அரூபம் சார்ந்தது. ஒருவித மாயத் தன்மையுடனும், எல்லையற்ற சுதந்திரத்தோடும்தான் படைப்பின் மனநிலை இயங்குகிறது. இந்த மன நிலையைத் தக்க வைத்துக்கொள்வதில்தான் ஆகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையின் ஓரத்தின் கல்லில் அமர்ந்து அழுதபடியே என் சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன். மனநிலை வாய்ப்பது என்பது மிக முக்கியமானதாகும். பாரதியார்கூட சில வருடங்கள் எட்டயபுரம் மகாராஜாவின் விருந்தினராக இருந்தபோது எழுதாமல் இருந்திருக்கிறார். சுந்தர ராமசாமி போன்றவர்களும் பல வருடம் எழுதாமல் இருந்திருக்கிறார்கள்.

ஆகச் சாதாரண அற்ப விஷயம்கூட படைப்பு மனநிலையைப் புரட்டிப் போட்டுவிட முடியும். பழக்கப்பட்ட டீ குவளை காணாமல் போனால்கூட படைப்பாளிக்கு மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. உயிர் கொல்லும் மனவாதையில் இருக்கும் போது படைப்பிலே அற்புதங்கள் துலங்கலாம். அதற்கு முரணாகவும் இருக்கலாம்.

0

ஒரு படைப்பில் ஈடுபடும்போது அந்தப் படைப்பு நிர்ப்பந்திக்கக் கூடிய விஷயங்களில் அந்த படைப்பாளி நேர்மையாக இருக்கவேண்டும். அதாவது அந்தப் படைப்பு அவனுள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவன் அதற்குப் பரிபூரண விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அது காத்திரமான படைப்பாக வெளிப்படும். படைப்பு வேறு. படைப்பாளி வேறுதான். அதிகபட்சம் தன் படைப்பின் உருவாக்கத்தில் உண்மையாக இருக்க வேண்டும். அவன் பறவையாக கூடு பாய்ந்து இருந்தால் அப்பட்டமாக ஒரு பறவை அந்தப் படைப்பின் பக்கங்களில் வாழவேண்டும். இன்னொன்று, படைப்பின் அடிப்படையாக படைப்பாளியின் ஆளுமைப் பண்பே விரிந்து கிடக்கிறது.

0

முதலாவதாக, கவிஞன் தன் படைப்புருவாக்கத்தில் சந்திக்கும் முட்டுச் சந்துகளை, படைப்பைக் கருக்கொள்வதிலிருந்து அதை உருவாக்குவது வரை நேரக்கூடும் பெருந்தடைகளை யெல்லாம் தன் கவிதார்த்த தாபத்தின் பேரான்மிகத்தால், பல கோடிக் கண்களாலும் கரங்களாலும், கொந்தளிப்பும் குமுறலுமாகத் தேடும் படைப்பு மூர்க்கத்தால் உடைத்துப் போட்டுப் பெருவெளிக்குப் போகிறான். அவனுடைய அந்த அபூர்வ இயல்பினால் சொற்களும் பொருட்களும் புத்தாக்கங்களாகக் கூடுகின்றன. அறியப்படாத பிரதேசங்கள் கண்டடையப்படுகின்றன. இது அவனது அக வாழ்க்கை. இதில் அவனை அவனே தின்றுமுடித்து மீளவும் தன்னைப் பிறப்பித்துக்கொள்கிறான். இப்படி, கவிதை அவன் மீது சுமத்தும் பேரழுத்தத்தின் காரணமாகத்தான் அவன் உலகின் ஒளியாக மாறுகிறான்.

0

ஒரு விஷயத்தை யோசிக்கும்போது, அதை வெளிப்படுத்த பிரயாசைப்படும்போது சிறந்த வகையில் வெளியிடுவதற்கு தகிப்பு உண்டாகிறது.

ஒரு பெரும் சூறாவளியில் சிக்கித் தவிக்கிற, அல்லாடும் மரம்போலத் தேடுதல் நடக்கிறது. இப்படித்தான் எனது மொழியைக் கண்டுபிடிக்கிறேன். அல்லாட்டமும் பித்தமும் கிறக்கமுமான நிலையில் சில வரிகள் ஓடி வரும். சொல்ல வேண்டிய பரிதவிப்பில் இருந்து அப்படி உருவாகிறது.

உதாரணமாக, குழந்தை தொடர்பாக நான் எழுதிய ஒரு கவிதையில், 'இதயத்திலிருந்து ரத்தத்தை மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனா முனை' என்று ஒரு வரி வரும். இதுபோன்ற பல வரிகளுக்கான திறப்பு உன்மத்தமும், பதற்றமும், ஆவேசமும், குழப்பமும் இயலாமையும், சோர்வும் கொண்ட மனநிலையிலிருந்துதான் வருகிறது.

அது கவித்துவம் கொண்ட வரிகளாக இருக்கலாம், அன்றாடப் புழக்கத்தின் மொழியில் இருக்கலாம். இரண்டுமே விரவித்தான் வரும். அதை அந்தக் கணத்தில் முறைப்படுத்தவும் முடியாது. யூகிக்கவும் முடியாது. அது கவிதையின் ஆன்மீகம் தொடர்பானது.

0

கவிதை என்பது கவித்துவம். அது எழுதப்படுவது மட்டுமே அல்ல. வரிவடிவங்கள், வார்த்தைகளால் வரையப்படுவது மட்டுமே அல்ல. இறைத்துவத்தை நாம் கவிதைப்பூர்வமாகவே பார்க்கிறோம். கவிதையின் கூறுகள் பலவிதமாக இப்படித்தான் இந்த உலகில் சிதறிக் கிடக்கின்றன. இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக்கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.

அழகு என்று அதைக் குறுக்க முடியாது. ஒழுங்கு என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. அது பெரும் தரிசனம். மனிதனிடம் இருக்கும் ஆற்றலெல்லாம் சென்றடைந்து, ஓய்வுற்று ஆனந்திக்கிற எல்லையாகக் கவிதை நிலை உள்ளது. அது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. அதை இனம்கண்டு உணர்வதில்தான் நமக்குப் பிரச்சினை உள்ளது. அதை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளும் கணத்தில், இந்த உலகில் உள்ள அனைத்தும் அவருடையதாக மாறிவிடுகிறது. கவித்துவம்தான் ஒரு நல்ல ஓவியத்தைத் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல சிறுகதையையும், நாவலையும் அதன் கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல மனிதனின் நடத்தையை அவனது கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் சகலமும் கவித்துவமாகவே இருக்கிறது.

0

என்னுடைய அனுபவத்தில் உரைநடையை விடவும் மிகவும் உறுதிப்பாடாக அனுபவத்தைக் கடத்தும் வடிவம் கவிதையே என்று நம்புகிறேன். ‘அவனை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்' என்ற தேவதேவனின் கவிதையை உதாரணமாகச் சொல்கிறேன். அந்த வரி என் மனதில் வரும்போதே எனக்கு கண்ணீர் கசிந்துவிடும். சாலையில் அலைந்து கொண்டிருப்பவனை, பூட்டிய கடையின் முன்பு நள்ளிரவில் படுத்து உறங்குபவனை, குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு அழுதபடி ஓடும் பெண்ணை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன் என்று போகும் கவிதை அது. இந்த நான்கு வரியில் எவ்வளவு துயரம் நம்மேல் கவிந்துவிடுகிறது. இந்த நான்கு வரி கொடுக்கும் அனுபவத்தை ஆயிரம் பக்க நாவலும் கொடுக்கும். ஆனால், கவிதை வலிமையாகவும் கூர்மையாகவும் கடத்தும் அனுபவம் தனியானது.

0

கவித்துவத்தை மிக உச்ச உணர்வாகத்தான் நான் பார்க்கிறேன். இதைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஒன்றும் இல்லை. இதைத் தாண்டிச் செல்வதற்கும் இடம் இல்லை. ஆதியும் அந்தமும் இது. ஆழ ஆழத்தில் உணர்க. அமிழ்க. பரவிக் கலந்து நிறைக. கண்ணீரால் தொழுதிடுக. அற்புதங்களின் சிறகு கொண்டு பறந்தலைக. ஆர்த்தார்த்து வியந்து வணங்குக. கவிதை. கடவுளே அது. வாழ்வேதான் அது. கோடி கோடி சல்லி வேர்களால் உறிஞ்சுக. அது கொண்டு ஆகும் ஒரு மலர். ஒட்டுமொத்த தரிசனம். எழுதுவது மட்டும் அல்ல.

0

மீனுக்குத் துடுப்புகள் உருவானதற்கு அதன் காலகால எத்தனமே காரணம் என்பதுபோல, வெளிப்படுவதற்காகத் திமிறும் படைப்பு, சுய எத்தனத்திலிருந்தே மொழியை எடுத்துக்கொள்கிறது.

0

இன்றைக்கு எழுதும், என்னைவிட வயதில் குறைந்த ஒருவர் தம் படைப்பில் இலக்கியத்தின் புதிய சாத்தியங்களை எனக்குக் காட்டித் தரும்போது அவரும் எனக்கு முன்னோடிதான்.

0

கவிதை எழுத வேண்டும் என்றோ, கவிஞராக

அறியப்பட வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் கவிஆற்றாருக்கு இல்லை.அதே நேரத்தில், அவரது கவிதை கைவிட்டுப் போகாதிருப்பதில் - அதன் கலையும் மொழியின் ஒழுங்கும் இழப்பாகாதிருப்பதில் கவனம் கொண்டிருந்தார். கவிதை எழுதவில்லை என்றாலும், பிரசுரிக்கவில்லை என்றாலும் எப்போதும் மனதில் கவிதை இருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் கொண்டவர்.

0

அம்புக்குறியின் அகண்ட பாகம் எல்லையற்று விரிந்து எல்லாம் உட்கொண்டு, அதன் கூர்முனை அன்பெனக் குவிகிறது.

சூரிய ஒளிக் கிரணங்களுக்கு எத்தனை வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகள் கவிதை கூடிவருவதற்கும் இருக்கின்றன. தான் சம்பவிப்பதற்கு ஒரு படைப்பு மேற்கொள்ளும் முறைகள் வரையறுக்க முடியாதவை.

0

பெருநகரச் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது, பேருந்துக்குக் காத்திருக்கும்போது, உணவருந்துகையில் என எந்த நிலையில் இருந்தாலும் திடீரென்று தன்னெழுச்சியாக என்னுள்ளே கவிதைகள் அரிதாக நிகழ்ந்தது உண்டு. எத்தகைய சூழ்நிலையிலும் அப்போதே மெனக்கெட்டு அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். உதாரணமாக, 'அம்மாவுக்கு என் கைகளை மிகவும் பிடிக்கும்...' என்று ஆரம்பிக்கும் கவிதை, 'மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்', 'தெருப் பெண்ணுக்கு', 'பூமொழி' போன்ற கவிதைகளைச் சொல்லலாம்.

இவை முதற்கட்டத்தில் எப்படி முகங்காட்டினவோ அப்படியே பதியப்பட்டவை. பிறகு எந்தத் திருத்தங்களுக்கும் ஆட்படாதவை. சில, இரண்டு முறை எழுதப்பட்டு, சில நான்கைந்துமுறை செம்மைப் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

சிலவற்றை மாதக்கணக்கில் எப்போதும் என்னுடனேயே வைத்திருந்து போகும் இடங்களிலெல்லாம் செப்பனிட்டிருக்கிறேன். இதற்கு உதாரணமாக, 'சக்தி வழிபாடு' போன்ற கவிதைகளை நினைவுகூர்கிறேன். நடந்துகொண்டே, நின்று நின்று, மனதிற்குகந்த ஒரு கவிதையை எழுதி முடித்தவுடனே சாலையோரக் கல்லில் அமர்ந்து குமுறி அழுதிருக்கிறேன். வேறொரு கவிதையை எழுதிவிட்ட உடனே வானளாவி வளர்ந்துவிட்டவனாக அவ்வளவு இறுமாப்புடன் சகலத்தையும் துச்சமென நோக்கி நடந்திருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் இடமுண்டு...

கவிதைக்கான மனநிலையை எப்போதும் தக்கவைப்பதும், அசகாய மோப்ப சக்தியுடைய வேட்டை நாய்போலக் கவிதையின் சலனங்களைப் பின்தொடர்வதும், எக்கணமும் பிரக்ஞையுடன் இருப்பதும் முக்கியமாகிறது. 

0

மாயாஜாலக் கதை ஒன்றில் தன் மீது பாதம் பதிக்கும் சிறுமியிடம் ஒரு படி சொல்லும்: 'மாயக் கம்பளத்தில் பறப்பதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தாயே? இப்போது அது பொய் என்று தெரிகிறதா?' அதற்கு அவள் பதில் சொல்வாள்: 'அது கற்பனை என்று இப்போது அறிகிறேன். ஆனால் அந்த மாயக் கம்பளத்தில் பறந்து பறந்து நான் கொய்தெடுத்த கவிதைக் கதிர்கள் எண்ணற்றவை. இன்னமும் அவற்றின் மணம் நுகர்கிறேன். காற்றசைவில் உலையும் எழில் பார்க்கிறேன், அவற்றில் அமர்ந்த பறவைகளின் பாடல் கேட்கிறேன். அவை என் வாழ்வை உருவாக்கிய அம்சங்களில் ஒன்று! 

0

யூமா வாசுகி தமிழ் விக்கி பக்கம்

யூமா வாசுகி நேர்காணல்கள் வாங்க...

***

Share:

தேவதேவனின் தோள்பை - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை விளையாட்டாக சொன்னார், “தேவதேவனுக்கு உலகிலுள்ள அனைத்து பொருட்களும்/விஷயங்களும் கவிதைகான படிமம்” என்று. வேடிக்கையாக சொல்லப்பட்ட வரி என்றாலும் அதில் எத்தனை உண்மை உள்ளது என யோசித்துப் பார்க்கிறேன். தேவதேவன் எழுதி தீராத ஒரு படிமம் அவரது வீடு. 

“நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று 

என்ன செய்ய 

இந்த வீட்டை நான் இன்னும் விட முடியவில்லை” 

வேறொரு கவிதையில் உனது வீட்டை கடந்து செல்லும் மேகங்கள் உன்னை தீண்டியதில்லையா? என எழுதியிருப்பார். இப்படி எண்ணற்ற கவிதை அவருள் வீட்டை படிமமாக்கிக் கொண்டே இருக்கும். காரணம் தூத்துக்குடியில் அவர் கட்டிய வீட்டை தேவதேவன் உயிருள்ள மனிதர்களைப் போல் நேசித்தார். இப்போது பெங்களூரில் மகன், மகள் வீட்டில் வசிக்கும் போது கூட அவர் பேச்சில் தூத்துக்குடி வீட்டைப் பற்றிய நினைவுகளும், ஏக்கங்களும் வந்துக் கொண்டே இருக்கும். அவரது மணி நகர் வீடு என்பது அவருடன் வாழும் இன்னொரு துணைவன். அதனுள் உள்ள ஒவ்வொரு பொருளையும், செடிகளையும் நேசிப்பவர். 

அவருக்கு உலகிலுள்ள அனைத்தும் அவருள் ஒரு அங்கமாக மாறிவிடும். அனைத்தையும் தன்னிலிருந்தே விரித்துக் கொள்பவர் தேவதேவன். அனைத்தையும் வியக்கும் சிறுவனின் பார்வை அவருடையவை எனச் சொல்லலாம். ஒரு கவிதையில் வீட்டில் ஆய்ந்துக் கொண்டிருக்கும் மெஜெந்தா நிற பட்டர் பீன்னீஸ்களை வியந்துக் கொண்டிருப்பார். ஏனென்றால் தேவதேவனுக்கு அனைத்து பொருட்களும் இயற்கையின் அம்சம் கொண்டவை. இயற்கையின் உன்னதமான அன்பை தன்னுள் தாங்கி நிற்பவை. தேவதேவனின் கவிதைகளில் மட்டுமே வண்ணத்துப்பூச்சி ஒன்றின் சிறகடிப்பில் காற்று தன் அலுப்பை நீக்கிக் கொள்ளும். 

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் தேவதேவன் அசைவ வெறுப்பாளர் மட்டுமல்ல, அசைவங்களை சாப்பிடுபவரையும் வெறுப்பவர் என்று. அதிலுள்ள ஆன்மீகமான கோபம் என்ன அவருடைய கவிதைகளை படிக்கும் போது புரிகிறது.

தேவதேவனின் ‘அவள் தன் தோள்பையை’ கவிதையில் வரும் தோள்பை என்பது தேவதேவன் உடலில் ஒரு அங்கமாகி போன அவரது தோள்பையே. அதில் கவிஞன் கண்டடைந்த அமைதியை. மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய அமைதியை நோக்கி தோள்பை வழியாக அக்கவிதை விரியும். எனினும் அவரது தோள்பை சிறப்பாக வந்த கவிதை என்பது “தோள்பை” கவிதையிலே. 

தனித்தோ, பிரித்தோ, விளக்கியோ சொல்லி விட முடியாதது குழந்தையின் அன்பு. அந்த குழந்தையின் பேரன்பு எங்கே அன்னையின் பேரணைப்பாக மாறுகிறது. தேவதேவனின் தோள்பை கவிதையில் அந்த பை அவர் உலகின் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. அவர் அதனை தாங்கிக் கொள்கிறார் என்ற முரணில் இருந்து இந்த ‘குழந்தையாய் வந்த பேரன்னை!’ என்ற முரணும் அர்த்தம் கொள்கிறது. அந்த தோள் பை அவருக்கு வெறும் சுமைதூக்கியாக இல்லை. வெறும் பொருளாகவும் இல்லை. அது அவர் உலகின் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. 

ஓடும் ரயிலில் எனத் தொடங்கும் இக்கவிதையின் இரண்டாவது வரியே அவன் மடியில் தலைவைத்து அமர்ந்திருந்தது ஒரு தோள்பை என ஒரு புகைப்பட சித்திரம் போல் ஆகிறது. தேவதேவன் இக்கவிதையில் அத்தனை பெரிய ரயிலில் அந்த மனிதனைக் கூட கவனம் செலுத்தவில்லை. அவன் மடியில் அமர்ந்திருக்கும் தோள்பையின் சித்திரம் மட்டுமே நமக்கு அளிக்கிறார். ஒரு காட்சி சித்திரம் போல். அந்த தோள்பை அந்த மனிதனுக்கு அந்நியமானது. அந்த மனிதன் அதனை தாங்கிச் செல்கிறான். முதலில் அவன் மடியில் அமர்கிறது, பின் அங்கிருந்து சிறிது சிறிதாக விலகிச் சென்று அருகில் இருக்கிறது. பின் மீண்டும் பழைய நிலைக்கே ஆனால் இன்னும் நெருக்கமாக, இன்னும் அன்னோயமாக. 

நம் வாழ்வில் நம் அகத்தோடு இத்தகைய நிலையை நாம் கடந்திருப்போம். நம் மனது நமக்கான அனைத்தையும் தனக்குள் தாங்கிக் கொள்கிறது. நாம் அதனை தாங்கிக் கொள்கிறோம். ஒரு உடன்படிக்கை தான் என்றாலும் அதில் எப்போதும் பேரம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இரண்டின் உறவில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. சில சமயம் நெருக்கமாக இருக்கலாம் சில சமயம் விலகலாக இருக்கலாம். ஆனால் தேவதேவனுக்கு எல்லாம் அன்பை சொல்லும் பாஷைகள் தான்.

அந்த விளக்க முடியாத, பிரிக்க முடியாத அன்பே தேவதேவன் கவிதையின் அடிநாதம். அந்த விளக்கமுடியாத ஒன்றை சுமக்க இங்கே தோள்பை வருகிறது. தேவதேவன் உலகில் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பேதம் ஏது? அனைத்தும் அன்பை சொல்லத்தர தானே பூமியில் பிறப்பெடுத்துள்ளது.


தோள் பை

ஓடும் ரயிலில்

அவன் மடியில் தலைவைத்து

அமர்ந்திருந்தது

ஒரு தோள் பை.

அடக்கமான

அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.

அவனுடையன

எல்லாவற்றையும் சுமந்துகொண்டு

தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்

பேரறிவன்!

 

குழந்தையாய் வந்த பேரன்னை!

 

மடியில் அவன் கையடங்கலுக்குள்

அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!

என்ன ஒரு உறவு அது!

தீண்டும், வருடும்,

அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்

விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!

இத்துணை அமைதியும் அன்பும்

ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.

 

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து

இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி

அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்

இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.

தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்

தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது

அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?

விளக்கிச் சொல்லத்தான்,

பிரித்துச் சொல்லத்தான்,

சொற்களாலே சொல்லிவிடத்தான்

முடியுமோ இந்த அன்பை!

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive