இன்மைகளின் வலிகளின் நோய்மையின் அழகியல் - சமயவேல்

வெகு காலத்திற்குப் பிறகு முழுக்கக் கவித்துவம் ததும்பும் தனித்துவமானதொரு கவிதைகள் வே.நி.சூர்யாவின் கவிதைகள். நோய்மையிலும் வலியிலும் கூட இயற்கையோடு கைகோர்த்து மரணத்தையும் தனக்குள் அடக்கிக்கொள்ளும் வாழ்வின் மகத்துவத்தை, கவிதைகளாக்கியிருக்கிறார் சூர்யா. இவரது ஆழ்ந்த வாசிப்பும் கவிதைகள் மேலான அபரிமிதமான ஈடுபாடும் புதிய பா வகைமையை உருவாக்கியுள்ளன. கவிதைகளென ஏராளமாக அச்சாகிக் குவியும் இந்நாளில், வாழ்தலின் அனுபவங்ளை எவர் போலவும் இல்லாமல் தன்போக்கில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகள் இவரது ‘கரப்பானியம்’  ‘அந்தியில் திகழ்வது’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இருக்கின்றன. புராதன நகரம் திருநெல்வேலியில் இருந்து விடுபட்டு கன்னியாகுமரிக் கடற்கரை ஊருக்குக் குடியேறியது இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

இருவேறு உலகங்களை இணைக்கும் அந்திப் பொழுது இருமை இணைவின் அழகியலாக மாறுகிறது. ஒளியையும் இருளையும்,  விழிப்பையும் உறக்கத்தையும், சூரியனையும் விண்மீன்களையும் இணைக்கும் அந்தி, சற்று நேரம் மயங்குகிறது. பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும் என எல்லா உயிர்களும் மயங்குகின்றன. அந்திப்பொழுது மாறுதலின் வலியை அழகியலாக மாற்றுகிறது. ரில்கேயின் புகழ்பெற்ற கவிதையான ‘அந்தி’யில், ‘இரண்டு உலகங்கள் உன்னைவிட்டு நீங்குகின்றன’ என்கிறார். கவிதையின் கடைசி வரி:  ‘உனது வாழ்க்கை, ஒரு நொடி உனக்குள் ஒரு கல், அடுத்த நொடி அதுவொரு நட்சத்திரம்.’ நாகர்கோவிலைச் சுற்றியுள்ள கடற்கரைகளும் அந்திப்பொழுகளும் சூர்யாவின் ‘கற்களை’ தங்க நாணயங்களாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. இரும்பையும் மகிழ்ச்சியாக உண்டு செரிக்கும் வல்லமையை கவிதை வழங்கும் அதிசயத்தை வே.நி.சூர்யாவின் "அந்தியில் திகழ்வது" தொகுப்பில் காண்கிறோம். 

“பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா” என்று ஒரு கவிதை இவ்வாறு முடிகிறது. 

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம் 

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று. 

இங்கே பிரிதல் வலியில்லை. அனைத்தையும் ஏற்கும் ஆன்மபலம் கவிக்கு மிக இயல்பாகக் கூடுகிறது. பிரிதலை எண்ணி எண்ணி புலம்பும் கவிகளிடம் இருந்து சூர்யா வேறுபடும் இது.  

‘பாடல்’ என்ற கவிதையில்,

சந்தித்தால் பிரிய நேரிடும் இன்ப வடிவே,

ஆதலால் சீவனுக்கு எட்டாமல்

ரகசியமாகவே இரு எனது மரண தேதியைப்போல

உன்னை எண்ணி எண்ணி

அப்போதுதான் என்னைப்

பிரமாதமாக

அழித்துக்கொள்ள முடியும் எனக்கு.

என்று மரணமும் பிரமாண்டமான அழிவும் சூர்யாவுக்கு தன்விருப்பமாக அமைகிறது. இது வரையிலும் நாம் தமிழில் வாசிக்காத மனநிலை.

“இறுதியில் யாவுமே தருணங்கள்தானா” என்பது ஒரு மிகப்புதிய அமைப்பிலான பத்துப் பகுதிகள் கொண்ட வடிவான கவிதை. ஒன்பது எதிரெதிர் விசாரங்களும் பத்தாவதாக இவ்விதம் வெகு அழகாக முடிகிறது. 

அமைதியாக இரு

அமைதியாக இரு

இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

நான்

இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.

முக்கிய பரிசோதனைகளுக்கும், கிளை கிளையாய் பிரிந்து விரிந்து அயர்ச்சி தரும் விவாதங்களுக்கும், பெரும் விசாரத்துக்கும் வலிக்கும் அழுகைக்கும் பின்னால் அகமும் சரீரமும்  இணைந்து ஓர் உயிர் தோன்றிவிடுகிறது. வீடே, தெருவே, ஊரே கொண்டாடும் தருணம் இது. இறுதியில் எல்லாம் தருணங்களே என்றாகின்றன.  

பல்வகை நோய்மை குறித்தும் அவற்றிலிருந்து விடுதலை அடைவது குறித்தும் எழுதப்படும் எழுத்துக்களே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு நோய்மை உலகையே பிடித்தாட்டுகிறது. ஜெர்மனியில் ஒரு குறிப்பிட்ட மனிதனை அதிகார வெறி, இன வெறுப்பு ஆகிய நோய்கள்  பிடித்து ஆட்டியபோது, இரண்டாம் உலகப்போர் மூண்டது. எவ்வளவு கொடூரங்கள்? எவ்வளவு உயிர்களை நாம் இழந்தோம்? ஹிட்லரைத் தொடர்ந்து ஸ்டாலினியப் போர்களால் சின்னஞ்சிறிய நாடுகளில் எவ்வளவு மரணங்கள்? எல்லாமே திரள் மனநோய்களே.  

காஃப்கா, நாஜிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டது போக இறுதியில் காச நோயாலும்  பீடிக்கப்படுகிறார். காச நோய் ஏற்பட்டு சானடோரியங்களில் இறுதிக் காலத்தைக் கழித்த பல கவிகளையும் எழுத்தாளர்களையும் பற்றி நாம் வாசிக்கிறோம். காச நோய்க்கு சரியான மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு கவி அந்தக் காச நோய் பற்றியே கவிதை எழுதுகிறார். வே. நி. சூர்யாவின் “காச நோய்க்கு ஒரு பாடல்”  கவிதை, மகத்தான அற்புதம். 1970களில், என் சகோதரி ஒருவர், காச நோய்க்கு ஒரு நுரையிரலை இழந்து இறந்த நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. எத்தனை வகையான மாத்திரைகள்? எத்தனை தூங்காத இரவுகள். சானடோரியத்தின் ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்தும் கசியும் துயரமும் தாங்க முடியாதவை. அந்தக் காலங்கள் எல்லாம் மறைந்து போயின. 

ஆனாலும் காசநோயே

நான் எப்போதும் இப்படித்தான்

நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன்

விடைபெறுகிறேன்

அழுகிறேன் எச்சில் வடிக்கிறேன்

சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

என் வேர்கள் பலவீனமானவை

சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூடத் தெரியாதவை

அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே

இவை உன் கைங்கரியம்தானா

அறியேன் அறியேன் அறியேன் 

இப்போது நாம் வே.நி.சூர்யாவின் தியான மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறோம். அது, “நோயை எதிர்கொள்ளல்” என்று கட்டுரை எழுதிய நித்ய சைதன்ய யதியின் தியான மண்டபமாகவும் இருக்கலாம். உண்மையில் ‘தியான மண்டபம்’ என்னும் கவிதையும் எனக்குப் பிடித்த கவிதை. 

ஒன்றுவிடாமல் அத்தனையும்

மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

அதனுள் நான் அமர்கிறேன்

என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன

மாலை 06.56க்கு நிகழும் இந்தக் கவிதையில் முழு பூமியும் தியான மண்டபம் ஆகிறது. அந்த மண்டபத்துக்குள் அத்தனை உயிர்களும் தியானம் செய்கின்றன. இந்த மண்டபத்தின், 

கீழறையில் ஒரு காகிதத்தில்

சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக

ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்

ஒர் அமைதி 

நிறுத்தற்புள்ளி போல.

என்னவொரு அற்புதமான அனுபவம். 

வே. நி. சூர்யாவின் வாசிப்பை நான் நேரடியாக அறிவேன். உலகின் மிகச் சிறந்த கவிகளை எல்லாம் அவர் தேடித் தேடி வாசித்து வருகிறார். வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்தது ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்பதை அறிந்திருப்பதால், சூர்யா கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மிகச் சிறந்த உலகக் கவிதைகள், சூர்யாவின் அகத்தில் ஆன்ம பெலத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது தலை முட்ட, வயிறு முட்ட, மனசு முட்ட கவித்துவத்தை  நிரப்பியிருக்கிறது. ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பு முழுவதுமே அவரது ஆன்மாவின் விகசிப்பதைக் கேட்க, உணர முடியும். 

‘ஒளி மனிதன்’ என்னும் கவிதையில்  

தேநீர் மேசையின் எதிர்புறத்தில் அமர்ந்திருக்கும், ஒட்டுமொத்த அண்ட சராசரத்துடனும் மொழியின்றி 

பேச்சைத் துறந்து பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் 

கடற்கரை ஒரு மெத்தை என்றாகச் 

சோர்ந்து சுருண்டு தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான்

என்று எழுதுகிறார். தனக்கு வெளியே தான் எப்படி படுக்க முடியும்? 

அச்சு அசலாய் 

மானுட உருவில்

ஓர் உடுத்தொகுதி 

என்று கவிதை முடிகிறது. ஒளி மனிதன் என்பவன் அந்த உடுத்தொகுதி. 

இப்படி ஒவ்வொரு கவிதையையும் அனுபவித்து வாசிக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புக்கு ‘விமர்சனம்’ எழுதுவது அபத்தமானது. வாசித்து, மீண்டும் மீண்டும் வாசித்து,  உணர்ந்து அனுபவிக்க வேண்டும். 

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***


Share:

உருகும் பனி - சக்திவேல்

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும்

தேயிலை பையெனத் தொலைவில்

அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன்

(அலைகளை எண்ணுபவன் கவிதையில் இருந்து)


நீரில் கரைந்து அதனை தேநீராக்கும் தேயிலை பையை போல கடலில் கரையும் சூரியன் கவிதைச்சொல்லியின் தன்னிலையை கரைக்கும் உலகமே வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது கவிதை தொகுப்பு எனலாம். ஒவ்வொரு கவிஞனும் தன் கவிதைகளில் தன்னை எவ்விதமான தன்னிலையாக உணர்கிறார் என்பது முக்கியமானது. அதுவே அவரது கவியுலகின் செல்திசையை, கண்டடைதல்களை தீர்மானிக்கும் சாரம். 

சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் திகழும் அந்த தன்னிலையை அந்தி சூரியன் முன் உருகும் பனிக்கட்டி என வரையறுக்கலாம். அது இயற்கையின் முன் தன்னிலையை இழந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு தன்னுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது. உருகி நெகிழ்ந்து இன்னொன்றாவதின் மகிழ்வும் இதுநாள் வரையிலான அடையாளங்கள் ஏதுமற்று நிற்பதன் துயரமும் என துலாமுள்ளின் நிலைக்கோட்டில் நின்றதிரும் பனிக்கட்டியாக இருக்கிறது. முதற்புள்ளிக்கு தத்தளிப்பு போலவும் கவனித்தால் தன் அதிர்வில் மகிழ்ந்து துக்கித்து வெறும் சாட்சியாக விடுதலை கொள்ளும் பரிணாமத்தை பார்க்கலாம். அந்த பரிணாமத்தின் கவிதையாக இதை சொல்லலாம்.


ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை என்றே கிடக்கின்றன சிப்பிகள்

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு

ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி

ஆழப் பதித்து பதித்து

நடப்பதில் ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

இனி திரும்பிச்செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்

உங்களுக்கு மேலே என்னை சிருஷ்டித்துக்கொண்டு.


கடலும் அலைகளும் மனித அகத்தையும் அகத்தூறும் எண்ணங்களையும் குறிக்கும் தொல்படிமங்களில் ஒன்று. அந்தியில் திகழ்வது தொகுப்பில் இருக்கும் கடல் காலவெளியாக அதன் அலைகள் நம்மை வந்தறையும்  மணித்துளிகளாக உள்ளது. அந்த மனமே காலத்திற்கப்பால் பதியும் கவியின் காலடிச்சுவடுகளை தொட்டெடுக்கிறது. 

காலவுணர்வு கடக்கப்படுகையில் நாமறிந்த அனைத்தும் அர்த்தங்களை இழந்து வேறொன்றாக அறியப்பட முடியாதவகையாக அமைவதை சொல்லும் அழகிய கவிதை ஒன்றுகளில் இது.


கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போடுகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும் 

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஓரே முகங்கள் ஆகிவிடுகின்றன

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை

வேறு ஏதோ ஒருமொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆக போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி

இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்


இக்கவிதையின் இன்னொரு அம்சம் புலன்களின் வழி தன்னிலை ரத்தாதல். வே.நி.சூர்யாவின் கவிதைகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் புலன்களால் உணரப்படும் உலகத்தின் வழியாக தூய தன்னுணர்வாக தன்னை உணரும் கணங்கள். அதற்கொரு சிறந்த உதாரணமாக பரிசு கவிதையை சொல்லலாம்.


இந்நாட்களில் காலையில் விழித்ததும்

முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

என்ன கோஷம் ?

என்ன காரணத்திற்காக ?

ஒருவேளை ஒன்றுமில்லையோ ?

அறிய முடிந்ததேயில்லை என்னால்.

ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

ஒரு தியானம்போல

மேலும் சில நிமிடங்கள் அவற்றைக் கண்ணூன்றிக் காண்கிறேன்

பின்பு ஒரு எறும்பை விடவும் சிறிய ஆளாக

ஏழெட்டு முறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

பூஜ்ஜியத்தைத் தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது.


‘பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது’ எனும் இவ்வரி சூர்யாவின் கவிதையுலகில் வேறுவேறு வகையில் மீள மீள வருவதை பார்க்கிறது. அது நழுவி கொண்டிருக்கும் தன்னிலை எனும் ஆடையை இறுதி நேரத்தில் கவ்வி பிடித்து கொள்ளும் செயலாக தோன்றுகிறது. இதற்கு நேரெதிராக காற்றில் சுழன்று கழன்று போன மேலாடையே எதிர்காற்றில் என்னுடன் வந்து சேராதே என்ற தொனியில் சொல்லப்பட்ட கவிதையாக மாபெரும் அஸ்தமனம் இருக்கிறது.


அந்திவானில் மகத்தான ரத்தத்துளி

அதன் ஒளிப்பரிவாரங்களோடு

அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது

அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்

ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது

தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை

வேறெதுவோ நான்...

ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி

எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை 

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

என்னுடைய நானே திரும்பி வராதே ...

நீ இப்போதே எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு.

அதுவே உன் சுவர்க்கம்.


அந்தியின் சூரியன் மகத்தான ரத்தத்துளி என்றாகும் போது வாழ்க்கையில் நம்மை விட்டு மறைந்து விடுதலை கொடுத்த பலவற்றுடன் தொடர்புறுத்தி கொள்ள முடிகிறது. இக்கவிதையில் வரும்


எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

என்ற வரிகள் இருப்பிலிருந்து இன்மையாகும் கணத்தில் நிகழும் பரிணாமத்தின் நெளிவை சுட்டி கூர்மை கொள்ள வைக்கிறது. திரும்பி வராதே... என்ற நான் திரும்பி வந்தால், உடன் ஒரு திருப்தியையும் எடுத்து வந்தால் அது எனக்கு மனம் கிடைத்துவிட்டதே! என பிதற்ற வைக்கிறது.


எவ்வளவு பெய்தால் யாவும் 

சாந்தப்படுமோ அவ்வளவு மழை

நடந்துகொண்டிருக்கிறேன் நான்

தவளைகள் நில்லாமல் சமிக்ஞை

அனுப்புகின்றன கார்மேகக் கும்பலுக்கு

இலைமறைவில் கனவு காண்கிறது வண்டு

முதலில் ஒரு துளி

பின் அடுத்தது

பின்னர் விடாப்பிடியாய் இன்னொன்று

சிவப்பு மலர் நசுங்கிவிட்டது

இப்போது அது நூறு காளைகள்

தாறுமாறாய் ஓடிய தோட்டம் அல்லது

ஊருக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான மந்திகளின் கதை

சொந்த புதிர்ப்பாதையைக் கடந்து

சாலை வந்திறங்கினேன்

எனக்கு மனம் கிடைத்துவிட்டது

இனி சொல்வேனே

கற்களுக்கு நினைவு உண்டென்றும் 

சாமத்தில் விண்ணேக்ககூடிய 

கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்


துயரங்களில், இழப்புகளில், வலிகளில் நம் கண்ணுக்குள்ளே மலரும் சிவப்பு மலரை விட்டு உலகத்து சாலைகளில் இறங்கி நடப்பது எத்தனை ஆசுவாசமானது என அப்போது மட்டுமே உணர்கிறோம். ஆனால் சலிப்புற்ற ஒரு வெற்று நாளில் அவ்வுணர்வு நேரெதிராக திரும்ப கூடும். இப்படியாக,


உன் பாதை

ஒவ்வொரு இலையும்

ஓர் உலகமன்றி வேறென்ன ?

நீ சஞ்சலப்படுவதும்

பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக ?

சூரியப்பிரபையில்

தலையாட்டி பொம்மை போலாடும்

மரகதப்பச்சையைப் பார்

எகிறிக்குதி அதனுள்

நீண்டுசெல்லும் நரம்புகளே உன் பாதை

தொடர்ந்து போ அதனூடே

கிளைகள் மலைகள்...

ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு

அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி

சூரியனைக் கடந்து சென்றுவிடு

என்ன ஆயினும் 

நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்

இலைகளிருக்கின்றன உனக்கு

இன்னும் ஏன் நின்றுக்கொண்டிருக்கிறாய்

அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்

போ

எப்போதும் இருக்கும் விடுதலை வெளியாக இயற்கை திகழ்வதை, அதன் உருவகமாக அந்தி அமைவதை சூர்யாவின் கவிதைகளில் காண்கிறோம்.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***


Share:

ஓர் அமைதி நிறுத்தற்புள்ளி - சாகிப்கிரான்

மனித லட்சியத்திற்கு உதவக்கூடிய புதிய வடிவங்களோ, உத்திகளோ தோன்றுவதற்கான அவசியம் என்பது எவ்வளவு அவசியமில்லை என்பதை ஒரு படைப்பாளி முற்றாக தன்னுணர்வும் நுண்மையும் அடைந்துவிட்ட பிறகு

படைப்பு செயலிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பான ஒரு ஒத்திகையாகக்கூட அத்தகையாக ஏதுமற்ற எளிமையைப் புரிந்து கொள்ளலாம். இது தன்னியல்பான உள்ளொளியின் அல்லது மனம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் ஒரு எதேச்சையான உத்தியாகவே இருக்க வேண்டும். 

தொகுப்பில் உள்ள ஒரு கவிதை,


மாபெரும் அஸ்தமனம்

அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு

அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது.

அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன். ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது. தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்...

ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே? ஒருவேளை வீட்டை இழுத்துச் சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா? என்னுடைய நானே திரும்பி வராதே... நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு. 

அதுவே உன் சுவர்க்கம்.

சூர்யாவின் முந்தையத் தொகுப்பான "கரப்பானியம்" கவிதைகள், சிக்கலான மன அமைப்பால் அல்லது கவிதை உரையாடலில் முன்னும் பின்னும் நகரக்கூடிய அதீத உணர்வு நிலையைக் கொண்டவையாக இருந்தன. ஆனால் இரண்டாவது தொகுப்பான "அந்தியில் திகழ்வது" எத்தகைய சுழிப்பும் இல்லாத, தெளிந்த சாரம்சம் என்ற தன்மையில் அமைந்திருக்கக்கூடிய கவிதைகளை மட்டுமே கொண்டிருக்கின்றது. இதை பிரக்ஞையற்ற உத்வேகங்கள் உண்மையாலுமே பிரக்ஞை பூர்வத் தெரிவுகளுடன் அமைந்துவிட்ட தற்செயல் என்று மேம்போக்காகக் கூறிவிடலாகாது. நாம் நமக்குள் உண்டு பண்ணிகொள்ளும் மன அமைப்பும், புறந்திடமிருந்து உருவாகிவரும் மன அமைப்பும் ஒரே வகையானவையாக இருந்துவிடுவதில்லை. இந்த இரண்டிலுமே சுயம் செயல்பட்டு தனக்கான பின் விளைவுகளை உண்டு பண்ணிக் கொள்கிறது. அத்தகைய பின்விளைவே, தொகுப்பு முழுவதும் இயற்கையைத் தவிர வேறு ஆள் அரவமே அற்ற ஒரு கவிதை வெளியின் சுயேட்சையான ஒரு கருத்தாகத் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.

க்ரியா வெளியிட்ட வே.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்த்த "கீழை நாட்டுக் கதைகள்" (மார்கெரித் யூர்ஸ்னார்) என்ற தொகுப்பில் வரும் முதல் சிறுகதையே, "உயிர் தப்பிய வாங்-ஃபோ". இக்கதையில் கிழவனான வாங்-ஃபோவிற்கு பேரரசன் இரண்டு கண்களையும் பொசுக்கும் தண்டனையளிக்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம் விசித்திரமானது. கடைசியாக வாங்-ஃபோ நிறைவு செய்யாத ஓர் ஓவியத்தை வரைந்து முடித்ததும் தண்டனை என்றாகிறது. அந்த மரணத் தருவாயில் ஒரு படைப்பாளியின் படைப்புத் திறத்தின் உடன் நிகழ்வானது அந்தப் படைப்பின் வழியாக நிரந்தரமடையவே தன்னியல்பைக் கொண்டிருக்கிறது. அந்த ஓவியத்தில் கடலை வரைய, அந்த அரண்மனை நீர்மமாக மாற, அதில் ஒரு படகை வரைந்து, வாங்-ஃபோவும் அவரது சீடனும் தப்பிவிடுகின்றனர். ஒரு படைப்பாளிக்கு அந்தப் படைப்பு நிரந்தரமாகும் தன்மையின் இயல்புடைய படைப்பாளி, உலகுடனான தன்னுடைய எப்போதைக்குமான தொடர்பைக் காத்துக் கொள்ளவதற்காகத் தக்கவைத்துக் கொள்கிறான்.

"மாபெரும் அஸ்தமனம்" கவிதையானது "அந்தியில் திகழ்வது" தொகுப்பிற்கான ஒரு மையமாக இருக்கிறது. எல்லாக் கவிதைகளும் புனைவின் வழியாக அந்தப் படைப்பாளியின் ஒவ்வொரு விதமான சூழ்நிலைக்கும் பொருத்தமான ஒரு தப்பித்தலின் இடைச் சார்பாக, இடையறாமல் மாறுபடுகின்ற படைப்பியக்கமாக நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு துக்கம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்வது என்பது ஒரு ஆழ்ந்த யோசனையின் தீவிர ஆக்கச் செயல்பாடே. இதை சூர்யாவே "போற்றுவோம் நண்பர்களே" கவிதையில் இப்படி முடிக்கிறார்...

/எட்டாத் தொலைவினில் ஓர் இன்மையின் வடிவிலிருந்து

சகலத்தையும்

ஒழுங்குபடுத்தியவாறு

ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும். அவரை அந்தப் பேரின்மையைப் போற்றுவோம் நண்பர்களே

சூர்யாவின் முதல் தொகுப்பிலிருந்த மனச்சிதைவின் தாக்கம் இரண்டாவது தொகுப்பின் நோய்க் கூறின் வீர்யத்தில் தெளிவடைந்துவிட்டதாக கருத இடமளிக்கிறது. "காசநோய்க்கு ஒரு பாடல்" என்பது ஒரு நோயாளியின் வழக்கமான புலம்பலாக இருந்தாலும் அது கவிஞனை வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சப் பருவத்தில் நிகழ்த்துவதாக இருக்கிறது. அவன் தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு குட்டி நாயைப்போலத் தடவிக் கொடுக்கிறான். பாக்டீரியாவின் அரசிக்கு விடை கொடுக்கிறான். நன்றி கெட்ட ஒரு மனிதனாகத் தன்னை நினைவுபடுத்திக் கொள்கிறான். தற்கணத்தின் மெய்ம்மையை அர்த்தச் செறிவுடன் தனக்கு வழங்கிய நோய்க்கு நன்றி கெட்டவனாக விடை கொடுத்துவிட்டது, யதியின் "நோயை எதிர் கொள்ளல்" கட்டுரைக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதுபோல, எனது 17 வயதில் டைஃபாய்ட் நோயின் தாக்கத்தில் வீழ்ந்தேன். எனது பள்ளி தமிழ் ஆசிரியரும் எனது ஆசானுமான அந்தோனிராஜ் அவர்கள் கிருத்துவ மிஷினரி புத்தகத்தை கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுப் போனார். அது கிட்டத்தட்ட என்னை இதே மனநிலைக்குக் கொண்டு சென்றது. கையறுநிலையில் ஒரு சாதாரணன் கடவுளை வேண்டுகிறான். ஒரு படைப்பாளியோ அந்த நோயிடமே ஓர் உரையாடல் நிகழ்த்துகிறான். ஒருவகையில் கிருத்துவத்தின் வெற்றியே இதுதான் போல. அது விழித்திருந்த எனதிரவுகளை பிரமாண்ட அண்டத்தின் சாத்தியங்களில் திறக்கச் செய்தது. ஆனால் சூர்யா அந்த நோய்மையைத் தனக்கான ஒரு வதை நல்வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை அபூர்வமான வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. அப்பரின் இறையன்பு இவ்வாறே சூலை நோயிலிருந்து தோன்றுகிறது. ஆனால் நவீன மனிதன் கடவுளின் தோற்றம் பற்றிய தெளிவுடன் இருக்கிறான். அதனால் அந்தக் கிருமியுடன் ஓர் உரையாடலை பாவிக்கிறான். அதன் மூலம் தனது இருப்பை முற்றாக உணர்கிறான். அதாவது நிலையற்றத் தன்மையின் வெளியில் அடுத்து எந்த கணமும் நேரக்கூடிய அவனின் சொந்த அழிவை தர்க்கத்திற்கு உள்ளாக்குவதன் மூலம் அதிலிருந்து, அந்த நல்வாய்ப்பிலிருந்து ஒரு குற்ற மனப்பான்மையுடன் வெளியேறிவிடுகிறான்.

மற்றொரு கவிதை,

கண்ணாடிக் குவளை

மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப நினைக்கிறேன்.

சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது என ரகசியமாக

எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் கணத்தில்

கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைத்த காட்சியைப்

பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் என் அடுத்த எண்ணத்திற்காகப்

புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

இது ஒரு வியப்பூட்டும் கவிதையாக நின்றுவிடாமல் எத்தகைய படைப்பு சான்றை வழங்கக்கூடும் என்று யோசித்தால், தத்துவமே அதற்குக் கை கொடுக்கிறது. ஹைடேக்கரின் இருத்தலியலை புரிந்து கொள்ள ஹுஸ்ரல் வேறு ஒரு கருத்தியலை நுழைக்கிறார். அதுதான் phenomenology எனும் நிகழ்வியம் தத்துவம். இதன் மூலமே இருத்தலியலின் நுண்மையை நம்மால் ஓரளவேனும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது நாம் அறிகின்ற ஒன்றை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று பேசுகிறது. குறிப்பாக தத்துவத்தில் தனி மனித உணர்வுகளுக்கு இடம் தந்து அதன் மூலமே நாம் இருத்தலியலையும் பின் நவீனத்துவத்தையும் வந்தடைகின்றோம்.

கவிதையில் மேசையும் கண்ணாடிக் குவளையும் இருத்தலியலின் சான்றுகளாகின்றன. ஆனால் நிகழ்வியலின் நிகழ்தகவு எண்ணத்தைச் சார்ந்து ஒரு recurrent உருவாக்கப்படுகிறது. அது இயல் கடந்த ஒரு தன்மையில் நடப்பதாக அமைந்துவிடுவதுதான் கவிதையின் சாராம்சமாக இருக்கிறது. இயல்பினில் அவ்விரு பொருட்களும் எந்த வகையிலும் செயல்படுவதில்லை. ஆனால் கவிஞரின் மனநிலையில் அந்தக் கண்ணாடிக் குவளை கோடி முறை விழுந்து நொறுங்குகிறது. இது மனிதனின் எண்ணத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவன் தனது நிலையாமையை அல்லது இன்மையை அந்தக் கண்ணாடிக் குவளைக்குப் பொருத்திப் பார்க்கிறான். தானே நொறுங்கி தானே இணைந்து கொள்கிறான். இதன் மூலம் மனோரீதியிலான ஒரு திடத்திற்கு வருகிறான். இந்த மனித phobiaவானது ஃபிராய்டின் Desire to Death என்ற கருதுகோளின்படி நிகழ்கிறது. இதன் மூலம் மனித மனமானது ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு தன்னை விடுவித்துக் கொள்கிறது. அந்தக் கண்ணாடிக் குடுவையில் நிரம்பியிருப்பதுதான் உயிர் வாழ்வின் அல்லது இருத்தலின் பூடகம். அதன் நிலை இங்கே பேசப்படாமல் விடுவதே கவிதையின் மற்றொரு நிலைப்பாடு.

இந்தக் கவிதையை ஒட்டிய ஒரு மனநிலையை உருவாக்குவதே மற்றொரு கவிதையான, "மே 16, 2020". இது மனச்சிதைவின் உச்சம் என்றாலும், எல்லாமே Object ஆகிவிடாமல் Subject அதைப் புரிந்து கொள்வதாக விவரிக்கின்றது. புறத்தூண்டல் ஒன்று அந்த மனச்சிதைவை கண நேரத்தில் சரி செய்வதென்பது, எல்லா பிளவுபட்ட ஆளுமைகளும் தன்னை சூர்யா என்ற ஒற்றை Identityயில் தக்க வைத்துக் கொள்வதே மீண்டும் அந்த இணைவை சாத்தியமாக்குகிறது. Identity மாறியிருந்தால் மறுநிகழ்வின் சாத்தியமற்று இருந்திருக்கும்.

மே 16, 2020

இம்முறை கைமீறிப் போய்விட்டது அறையில் மொத்தம் பதினைந்து சூர்யாக்கள்

யார் நிஜம் அறியேன்

ஒருவர் இன்னொருவரைத் தாக்குகிறார்

அந்த இன்னொருவர் சுவரில் தலையை முட்டிக்கொள்கிறார்

இன்னும் சிலர் தலையணை, புத்தகங்கள் என எது கையில் அகப்படுகிறதோ

அதையெடுத்து உண்கின்றனர் வலது கையால் கழுத்தைப் பிடிப்பதும்

அதை இடது கையால் தடுப்பதுமாகச் சிலர்

தனது உதட்டில் தானே முத்தமிட முயன்றுகொண்டிருக்கிறார் மற்றொருவர்.

திடுமென வெளியேயிருந்து யாரோ சூர்யா என அழைக்கிறார்.

பதினைந்து பேரும் ஒரே ஆளாகிய என்ன என்கிறார்கள்.

இதே தன்மையின் வேறொறு வடிவம்தான் "நிழலாகயிருப்பது நன்று நிழலாகக்கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று". கவிதை.

என்னுடையது அதோ அந்த ஒரு நிழல் மட்டுமே. மற்றபடி, இச்சுவர் ஏந்தியிருக்கும்.

இருக்கைகளின் நிழல்களோ, அதிலொன்றில்

கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ. என்னுடையதில்லை.

என்னுடையது இல்லவே இல்லை.

எவருடைய சாயையாகக்கூட இருக்கட்டுமே, எனக்குப் பிரச்சனையும் இல்லை.

அந்நிழலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல்போல அமர்கிறேன், அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது.

கவிதையின் கடைசி வரிதான் சூர்யாவின் முத்திரையாக இருக்கிறது. இதைத் தன்னிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமாக, ஒரு எல்லைக்குள் வகுக்கப்படாத வெளி மூலம் மனம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்வது, கவிஞரின் யார் அங்கு இல்லை என்பது பற்றிய விழிப்புணர்வு என்பது மட்டுமில்லாது, அங்கு யாரையும் உணராதது போன்ற விழிப்புணர்வு நிலையாகும். படைப்புச் செயல் மூலமாக அடையும் இடம் என்பது மனிதனின் சுயக்கட்டுப்பாட்டிற்குள் தன்னைக் கடந்து செல்வதற்கான சான்றாகும். இது ஒருவகையில் தன் நிலையாமையின் திறத்தின் மீது படைப்பூக்கத்தின் சாதகத்தில் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு அனுகூலம்தான். இந்த அனுகூலத்தின் முழு பலனையும் படைப்பின் வழியாகக் கண்டடைந்தவர் சூர்யாவாக இருக்கக்கூடும்.

கடைசியாக "வெளியேற்றம்" கவிதையின் வழியாக தொகுப்பிற்கான இறுதி வடிவத்திற்கு வந்து விடலாம்.

கவிதை இதுதான்.

இருளில் ஒளி மூழ்குவதுபோலவும் தனிமையில் காதலர்கள் பிரிவதுபோலவும்

சிறிதுசிறிதாகக் கடற்கரை தீர்ந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை வாரி இறைப்பதுபோன்று கடற்கரையிலிருந்து கடற்கரையை

இன்னும் இன்னும் என வெளியேற்றிக்கொண்டிருக்கிறது அந்தி.

மெதுவாக அங்கிருந்து வெளியேறுகின்றனர் யாவரும். அவ்வளவுதானா எனக் கூவியபடி

கூடுகளுக்கு விரைகின்றன புள்ளினங்கள் அங்கு ஏதோ எழுதியிருக்கிறது என்பதுபோல அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை

வெறித்துக்கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்.

நவீன கவிதை, தன்னை முற்றாக இதுநாள் வரை நம்பப்பட்டு வந்த வரையறைகளை உதறி, மொழியின் மேல் உள்ள கச்சிதத் தன்மையை உணர்வுகளின் தாராள வடிவமாக்க முயலுவதாகத் தெரிகிறது. 

"அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்."

இதுவே மேலே இருக்கும் முழு கவிதைக்குமான தன்னெழுச்சியைத் தந்துவிடுகிறது. அப்படி தளைகளற்ற சுதந்திரமான நிபந்தனையற்ற மொழிக் கட்டமைப்பு என்பது ஒருவகையில் அதை எழுதும் படைப்பாளிக்கு ஒரு மெய்ம்மையின் ஆவேசங்களை கடக்க உதவும் கவனமின்மையாகக்கூட இருக்கக்கூடும். 

முழுத் தொகுப்பும் இம்மாதிரியான வெவ்வேறு மனநிலைகளைத் தந்தாலும் அது உருவாக்கும் ஒட்டு மொத்த மைய்யத் தன்மையாது, ஒரு கைவிடப்பட்ட தோட்டத்தின் வீடுபோல, கண நேரச் செயல் நோக்கமுடைய உத்வேகங்களான, ஓர் அடித்தளம் கொண்டதாக வெளிப்பாடுகள் கொண்ட "தான்" என்ற வேதனையனுபவத் திரள் முழுவதையும் படைப்பூக்கத்திற்கு உந்தித் தள்ளும் அபூர்வ மனோநிலையின்  மொழியால் கடந்த ஒரு ஆனந்தம்.... ஒரு துக்கம்..... ஒரு வெறுமை என்று சிருஷ்டித்துக் கொள்கிறது.

ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம் ... ஒரு வெறுமை.


மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது

வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது. காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி ஆழப் பதித்துப் பதித்து நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம். ஒரு வெறுமை..

இனி திரும்பிச்செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம். 

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

***

.வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***

நன்றி: கல்குதிரை இதழ்

Share:

தருணங்களின் கதவு - அபிநயா

இருள் தொட்டதெல்லாம் கண் காணாமல் ஆகிவிடுகிறது

தண்ணீர் தொட்டதெல்லாம் புரிந்து  கொள்ள முடியாததாக

நான்  இருக்க வேண்டும் கொஞ்ச நேரமாவது எதையும் தொடாமலும்

இயன்றால் எதனாலும் தொடப்படாமலும்

- ‘அந்தியில் திகழ்வது’  தொகுப்பிலிருந்து

இந்த அவசர வாழ்க்கையில், நிற்க நேரமில்லாத ஓட்டத்தில் கவிதை நின்று அமர்ந்து மெல்லிய மலரைத் தொடுவது போன்றது. அவ்வப்போது சில கவிதைகள் ஒரு உணர்வைத் தொடங்கி வைத்துத் தானே அமிழ்ந்து கொள்ளும். சில கவிதைகள் தருணத்தில் நிலைப்பவை; அவை சிற்சில நிமிடமேயானாலும் செறிவான உணர்வைக் கடத்திச் செல்லும் . அப்படி, சூர்யாவின் இந்தக் கவிதை ஒரு ஜென் மனநிலையைத் தரக்கூடியது. உலகின் நிலையாமையை, மனங்களின் வெற்றிடத்தை உணர்த்தும் வண்ணம் செயல்பட முயல்வது. இயற்கைக்கும் மனித மனதிற்கும் உள்ள ஒற்றுமையை ஏதுமற்றதன்மையை இந்த வரிகள் ஆழமாகப் பதிக்கின்றன. ஆகவே அந்த நேரத்து நியாயமாக ஒரு தருணத்தில் நிலைப்பது சௌகர்யம்.


சன்னல்-3

எந்த சன்னலிடமும் நேற்று இல்லை..

அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே

நீங்கள் வேண்டுமானால்

’இதோ வைத்துக்கொள் வைத்துக்கொள் ‘ 

என நேற்றுகளைக் கொடுத்துப் பாருங்களேன் 

குளிர் பொறுக்காமல் பனிக்கட்டிகளை நழுவவிடும்  பாவனையோடு 

அவை அவற்றை தவறவிட்டு விடும்  

நேற்றுகளை ஏற்றுவிட்டால் 

உலகம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடும் 

என்று சன்னல்களுக்குத் தெரியும்

சன்னல்களை உலகத்தைக் காணும் சிறிய கதவுகளாக அவ்வப்போது நினைக்கத் தோன்றும். சன்னல்கள் காண்பிக்கும் நிலவோ, சூரியனோ தனித்த அழகுடன் தான் தோன்றுகின்றன. கோடுகளுக்கு மத்தியில் தெரியும் அவ்வொளி ’நிசப்தம்’.

இந்தக் கவிதையில் சன்னல்கள் காலத்தின் வாயிலாகப் பயணம் செய்கின்றன. நாம் நிஜத்தில் வாழும்போது கடந்த காலத்தின் நினைவுகள் யாவும் சன்னல் கதவுகளாக அடைக்கப்படுகின்றன. அதில் சில மென்காற்றும் உண்டு ; பல புயல்களும் உண்டு. அதையே அவை உண்மை என ஏற்றுக்கொள்ளும் . சன்னல் கதவுகளில் தோன்றுவது அந்த அந்த நேரத்து இன்ப-துன்பங்கள் மட்டுமே .

நம் நினைவுகளை நாம் கொண்டு செல்லவும் முடியாது. அதை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியவும் முடியாது. கடந்த காலத்தை எதன் முன் நோக்கினாலும் அதை அதே இடத்தில் விட்டுவரத்தான் நம் மனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. அப்படி நாம் இந்தத் தருணத்தில் நிலைப்பது தான் சன்னல் வழிக் காணப் போகும் காட்சி.

…எனக்கு மனம் கிடைத்து விட்டது 

இனி சொல்வேனே 

கற்களுக்கு நினைவு உண்டென்றும் 

சாமத்தில் விண்ணேகக்கூடிய 

கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்…

வலைகளின் பின்னல்களாகத் தொடரும் வாழ்க்கையில் யாவும் புதிர் தான் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு பெரும்பாலான நேரம் நமக்கு பதில் கிடையாது. இப்படி இயற்கையோடு இயங்கும் மனங்கள் பல போராட்டங்களைச் சந்தித்து தான் கரையைச் சேர்கின்றன. துயரமற்ற மனம் எங்கேயும் காணக்கிடைப்பதில்லை.  பெருமழை ஓய்ந்த பின் மரக்கிளை என்னவாகும் என்பது புரியாத ஒன்று தான்.  

நினைவை நாம் உணர்ந்த நேரம் மனம் தோன்றியிருக்குமா என்ன?   சந்தோஷங்களுக்கும் துக்கங்களுக்கும் இடையில் சிக்கி எப்போதாவது அமைதியான கடல்களும் சூர்யோதங்களும் கண்களில் தென்படும். அப்படி ஓய்ந்த மனதில் ஒரு சாயங்காலப் பொழுது நன்மையை கொண்டு வரும் . எதையோ அடைந்து விட்ட  இன்பம் தோன்றும். மழை முடிந்த பின் வரும் மண்வாசனை போல் மனத்தைக் கண்டடைந்த தருணத்தை இந்தக் கவிதை விவரிக்கின்றது.

***

Share:

கரப்பானியம் - சாகிப்கிரான்

கவிதை சார்ந்த உரையாடலை மரபார்ந்த கவிதை சாராத தன்மையின் அழகியல் வழியாக நிகழ்த்திக் காட்டுவது என்பது கரப்பானியத்தின் ஓர் உள்ளியல்பாக இருக்கிறது. கரப்பானியம் என்பதே எப்போதுமிருக்கும் அந்நியத்தின் ஒரு நித்திய உரையாடலாகவே இருக்கிறது.

வே. நி. சூர்யாவின் கவிதைகளை நாம் திறந்து கொள்வது, ஒரு ஸ்தூலமான பொருள், அனேகமாக ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு மனப் படிமமாக, புலனுணர்வாக மறுபடி மறுபடியும் காட்டப்படுவது தீவிரமான அகவயமான மேம்பட்ட நிலையைப் புறக்கணிப்பதே ஆகும். இது சில செளகரியக்களுக்கு வழிகோல்கிறது. இத்தகைய உத்திகள் தமிழுக்கு புதியன.

ஒரு கவிதை இப்படி முடிகிறது.

'இன்றென்னவோ தெரியவில்லை மேலிருந்து கண்டால் எல்லாமே பெரிதாகத் தெரிந்து தொலைக்கிறது.

ஒரு மனிதன் Block Hole னுடைய Event Horizon-ல் நின்றிருந்தால் அவன் உணரும் இயற்பியலானது அதிபுனைவாக இருக்கிறது. அந்தத் தன்மையின் சூக்குமம் மனிதனின் உள்ளியல்பின் மேல் கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கோடு. அந்தக் கோட்டிற்கும் பொறுப்பாளியாவதோ, அத்தகைய அதிபுனைவை சாத்தியமாக்குவதோ எல்லாமே அவனது இருத்தலின்பால் நடக்கும் ஓர் இயற்பியல். அது அந்த கவிஞரின் மாட்டிக் கொண்ட ஒரு கூக்குரலின் மனசாட்சியாக இருக்கிறது. சூர்யாவின் கவிதைகள் பெரும்பாலும் தப்ப முடியாத தருணத்தின் உடன்பாடான ஒரு மனப்பான்மையை வடித்தெடுக்க முயற்சிக்கின்றன.

இதை முழுமையாக நிரூபிப்பது, நெடுங்கவிதையான ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே. 

வாசலும் கிடையாது

வீடும் கிடையாது

உள்ளேயும் கிடையாது

வெளியேயும் கிடையாது

இடமும் கிடையாது

வலமும் கிடையாது

"சுயம்" ஒரு சுழற்பாதை

ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே

அச்சுழற்பாதையை விட்டு

உன்னால்கூட வெளிவரமுடியாது

நீ அறிவாய்தானே

அன்னியமாக்கப்பட்ட அனுபவ எல்லைகளுக்குள் உருவாகும் அந்நியமற்ற தன்மையானது, சூர்யாவின் கவிதைகளை உச்சநிலை அந்நியமாக்கலை பேசினாலும் அதனுள் இருக்கும் அவை அழுத்த மிகுந்த துயர் வெடிப்பு அனுபவமாக இல்லாமல் அதன் பொருட்டு எடுத்தாளப்பட்ட பருப்பொருட்களாகவே இருக்கின்றன.

ஒரு கவிதை இப்படி பேசுகிறது.

மரங்களடர்ந்த பூங்காவில்

பிளேடும் கைநரம்பும்

தீவிரமாய் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தன

இங்கே, சூர்யாவைப் பொறுத்தவரை, மனச் செயல் நோக்கம் அல்லது மனோபாவம்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறதே ஒழிய அந்த செய்கையல்ல. இது ஒருவகையில் மனித செயல்பாட்டின் அதி நிலையின் ஒரு ரகசியக் கூறாகவே பார்க்கிறேன். அந்த ரகசியமானது உயிரியின் நிலைத்திருத்தலின்பால் அதன் தன்னியல்பு தன்மையின் அடிப்படை கனிவன்பு என்றே கருதுகிறேன். இதுவே அந்த நரம்பை பிளேடிலிருந்து பிரித்து வைக்கிறது. அல்லது அந்த பிளேடை அந்த நரம்பின் ஓர் உள்ளியந்த பண்பாகப் பார்க்க வைக்கிறது.

தொகுப்பில் திருநகத்தழகி, செவ்வியல் தன்மையின் புதிய காதல் கவிதைகள். பெரும்பாலும் மாதவி குறித்தக் கவிதைகள் எல்லாமே இப்படி இருந்தாலும் அவற்றின் தர்க்க அடித்தளம் காதலின்பாற்பட்ட மெய்ம்மையின் ரகசிய வெளிப்பாடாக இருக்கின்றன.

உனக்குத் தெரியுமா மாதவி

எப்போதுமே

உன்

கூதிர்கால சமநிலை

என்னெதிரே குலையவே விரும்புகிறேன்

உன்னுறுதி நொறுங்கிச் சிதறும்

கணங்களுக்கு ஒரு பெயரிட்டுள்ளேன்

என்ன பெயரெனக் கேட்கமாட்டாயா

சரி வேண்டாம் நானே சொல்கிறேன்

மரகதகணக்கள்

மரகதகணங்களா?

ஆம் மரகதகணங்கள்தான்

இக்கணங்களைப் போல்.

தற்கணங்களை தேர்ந்து ஒரு சேமக்கலனிலிட்டுக் கொண்டும் அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டும் இயங்கும் 'தன்னிலையின்' தேகங்களை விடுதலையின் பக்கம் கொண்டு சேர்க்கும் ஒரு சுய சிகிச்சை முறையாக இதைக் காணலாம். இதன் அழகியல் ரீதியிலான பயன்பாடு என்பதே அதன் உச்சபட்ச வடிதலின் உள்ளிணையாக இருக்கிறது. இதை ஒரு படைப்பாளி மட்டுமே கண்டடைவான் என்பதைவிடவும் அவனே அதை மொழி செயல்பாடாக்க முடியும் என்பதே இங்கு அதன் பயனாக இருக்கிறது.

உயிர்த்தெழுதல் என்பது மரணத்தின் விளைச்சல். சூர்யாவின் கவிதைகளில் நேரிடையாகவும் மறைபொருளாகவும் வருபவை நினைவின் அதீத செயல்பாட்டு செயல் மறுப்பின் உபவிளைவு. நண்பன் ஹெராயினை எடுத்துக் கொள்ளச் சொல்லும்போதும் அதை அவனின் நினைவாகப் பத்திரப்படுத்துவதும், பிறகு அதை எடுத்துக் கொள்ளும்போது நண்பன் சென்னாற்போல கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளாதது சொல் மறுப்பு என்பதாயிருந்தாலும் அதுவே உயிர்த்தெழுதலைச் சாத்தியமாகிறது. கவிஞன் கட்டமைக்கும் அறம் அப்பாவிற்கு எதிராக இருந்தாலும் துடிக்கும் கத்தியானது இத்தகைய எதிரிடையில் பொதிந்து கிடக்கும் பூரானாகவே தெரிகிறது. திருப்பிரதேசம் என்பதே இத்தகைய இருப்பிலிருந்து இன்மையை நோக்கிச் செல்லும் வளையல் துண்டுகள்தான். ஓர் ஈக்குச்சி அத்தகைய உயிர்த்தெழுதலை முகாந்திரப்படுத்தும் என்பதெல்லாம் ஒரு பெரிய சமூகச் சடங்கு தன்னை ஆட்கொள்ளும் கணத்தின் மாயஜாலம்தான். அதன் அதி அற்புதம்,

நீ உயிரோடிருப்பதே

ஒரு மாயாசாலத்திற்கான மந்திரம்தானென்று. 

சூர்யா முடிக்கும் ஒரு கவிதையானது, தாழக்கோல் என்ற தலைப்பிலானது.

ஒருவன் தனது மாற்றியமைக்கப்படாத சமூக சூழமைவுக்கள் தனது புதிய இடத்திலிருந்து காலம் சார்ந்த வரையறைக்குள் நுழையும் வாழ்க்கையின் குலைவை 'மத்தகத்'திலிருந்து 'கணச்சுழல்', 'நீயே உனக்கு புதையல்தான்', 'நினைவுநாள்' முதலிய கவிதைகள் வழியாக

வாழ்க்கையற்ற வாழ்க்கையை இன்றும் வழக்கம்போல வாழ்ந்தாக வேண்டும் என்பதாகக் கடக்கின்றான்.

'விளக்கங்களுக்கு எதிரான குறிப்புகள்' கவிதைகள், சாதாரண தன்னுணர்வு கவிதைகளைப்போல் இருந்தாலும், அவற்றின் உள்ளார்ந்த தன்மையானது, பொதுப்புத்தியைக் கேள்விக்கு உள்ளாக்குவது, அதன் மூலம் அர்த்தம், அனுபவம் இரண்டிற்குமான நடைமுறை அறிவு சார்ந்த பார்வையை கவிஞனின் சொல்லாடல்களுக்கும், தகவல் அறிவின் சொல்லாடல்களோடு தொடர்புடைய கண்ணிகளை மேம்பட்ட உணர்வு சார்ந்த தன்னொளியாக மடைமாற்றும் தரிசனமாக்குவது சூர்யாவின் ஏனையக் கவிதைகளைக் காட்டிலும் தொகுப்பின் முற்பகுதிக் கவிதைகளில் இருக்கும் ஒரு செளகரியம் அந்தக் கவிஞனின் பிரசன்னத்தை வாசகன் புரிந்து கொள்ளுமிடமாகும்.

அது ஓர் உதிர்ந்த இலை அவ்வளவுதான்

அந்த இலை விளக்கங்கள் இல்லாதபோது

அழகாகத்தான் இருந்தது

நீங்கள் விளக்கத் தொடங்கியபோது தன் உன்னதத்தை

இழந்திருந்தது

விளக்கமளித்து விளக்கமளித்து சலிக்கவில்லையா

உங்களுக்கு

எதையும் விளக்க உதவாத மொழியை

எப்போது கற்றுக் கொள்ளப்போகிறோம்.

இடையறாத - ஏன் வாழ்நாள் முழுமையும் என்று கூடச் சொல்வேன். அவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து, சொற்களைக் கருவியாகக் கொண்டு உழைக்கின்ற உழைப்பு இல்லையென்றால், எழுத்தாளனால் எவ்விதச் சாதனையும் செய்யமுடியாது என்று கான்ஸ்டாண்டின் ஃபெடின் சொல்கிறார். இது தமிழின் நெடுங்கவிதைகளுக்கு மிகப் பொருந்தும். நெடுங்கவிதை, ஒரு விதத்தில் ஒரு மனநிலையின் தற்காலிக அல்லது பாவனையான ஒரு நீட்சி. இதைத் தக்கவைப்பது என்பது அந்தக் கவியின் கலாப்பூர்வ தக்கவைப்பேதானே ஒழிய அது ஒரு பயிற்சியாக இருக்க இயலாது. இது இயல்பான கவிதையுணர்வுக்கு எதிர்மறையான ஒரு தன்னுணர்வு மனோநிலையாகும்.

காயாபுரி கோட்டை என்ற பிரிவில் இருக்கும் கவிதைகள் பெரும்பாலும் நெடுங்கவிதைகளாக இருக்கின்றன. அதில் ஒரு இடைப்பட்டக் கவிதை, 

வரையிலிருந்து தரைவரும் நுரையீரலைப் போல

மாண்ட விளக்கின் சொப்பனத்திலிருந்து செந்நீல தீபம்

எண்ணிறந்த கணச்சுடர்களிலொரு தனிச்சுடரது

அச்சுடர்தம் உடலெல்லாம் எண்ணம்

சூதானமாய் புறம் வந்து ஆகாசத்தை

காணக் காண்கின்றது: 

பூரணவெளியில் சாய்ந்தாடும்

இன்றின் ஒளிக்கதிகளை.

இது இத்தனை இருட்டுக்குள் ஒருவனால் தன்னையே பார்க்க முடியாது என்ற நெடுங்கவிதையின் ஒரு பகுதி இது.

சூர்யாவுக்கான நெடுவழியாக இருப்பவை அவரின் அந்நியப்பட்ட காட்சி நெகிழ்வின் அதிபுனைவுகளே. இந்தக் கவிதையை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்று அதிகாலை சூரிய உதயம் அல்லது அதிகாலையில் வீட்டின் குலமகள் புலரும் வேளையில் தான் போட்ட வாயில் கோல நடுவில் வைக்க எடுத்துப்போகும் ஒரு விளக்குச் சுடர். இரண்டுக்குமான தனித்த கூர்ந்த மனம் அடையும் வடிவக் கிளர்ச்சியும் சிந்தனைக் குவியமும் அபூர்வமாக இருக்கின்றன. 

வரையிலிருந்து தரைவரும் நுரையீரல் தனக்கான முழு அளவு ஆக்ஸிஜனையும் அடைந்து கொள்ளும். மாண்ட விளக்கின் சொப்பனம் என்பது விடிந்த பின் நிகழும் நிகழ் நினைவு. தற்கணத்தை சொப்பனமாக நிலைப்படுத்துவது, எதிர்நிலையில் சொல்லிச் செல்வது ஒரு அபூர்வ மனக்கிளேசத்தை உண்டுபண்ணும் அதேவேளை அது எண்ணிறந்த கணச்சுடர்களிலொரு தனிச்சுடரேதான்.

துரத்தும் அசைவின்மை மனிதனைப் பற்றிக் கொள்ளுதல் ஆகாது

அசையும் இருளே பந்தம்

தன்னைச் சுற்றிக்கொண்டு நினைவையும்

வலம்வரும் மறதியை ஏன் மறுத்தேன் சந்திக்க

இதோ வெளிறிய வீதியில்

காக்கைகள் தாறுமாறாய் பறக்கும் காட்சி ...

இது அதே நெடுங்கவிதையில் வரும் மற்றுமொரு பகுதி. துரத்தும் அசைவின்மையாகப் பகலையும் அதாவது வெளிச்சத்தையும் அதற்கு நேரெதிரான அசைவற்ற அல்லது இருளில் மட்டுமே தன் அசைவை சாத்தியப்படுத்திக் கொள்ளும் அசையும் இருட்டை தனது அல்லது மனித குலத்தின் பந்தமாகக் காண்கிறார். ஏனெனில் இருள் மட்டுமே நமக்கு இந்த பிரபஞ்ச இருப்பை அசைத்துக் காட்டுகிற ஒரே சாளரம். மனிதனின் ஆகிருதியை தவிடு பொடியாக்கும் நுண்மையின் வீர்யம் மிக்கது. தன்னையும் சுற்றிக்கொண்டு நினைவையும் சுற்றி வரும் வரும் மறதியை மறுப்பது ஒரு பாவச்செயலாக, அதன் தன்மை நினைவின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதாவது நினைவும் மறதியும் எதிரிடையல்ல. ஒன்று மற்றொன்றை நிலைப்படுத்துகிறது. அப்படியானால் இரண்டின் தனிப்பட்ட தேவைதான் என்ன? 

ஒன்று நினைவு என்பது தற்கணமாக்கப்பட்ட இறந்த காலம். மறதி என்பது இறந்த காலமாக்கப்பட்ட தற்கணம். அது மிகப் பூடகமானது. இரண்டும் ஒரு புள்ளியில் செயல்படுகின்றன. இதுதான் கலையாக்கம். ஒன்று மற்றொன்றாக மாறும் சடுதி மாற்றம். அதுவே கலையின் ஊற்றுக்கண்ணாக, படைப்பின் ரகசியமாக இருக்கிறது.  எனவேதான் வெளிறிய காக்கைகள் பறக்கும் அந்திவான சூரியனை ஓவியக் கித்தானில் கொண்டுவந்து பொருத்துகிறது, காதையிழந்த வான்கா காலத்தை மடைமாற்றும் பதற்றத்தின் வெறுமனே ஓவியமல்லாத படைப்பு வெளிப்பாடு,  கவிதையிலும். இங்கே ஒரு விஷயத்தை வாசகன் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் வாசிப்பு வெறுமனே தகவல்களைப் பொருத்திப் பார்க்கும் ஒரு மனச் செயல்பாடல்ல. படிப்படியாக ஆன்மாவை, அது தான் அடைய விரும்பும் அதன் தன்மையின் உள்ளார்ந்த செயல்பாடாக நடக்கும் அனைத்தையும் இனம் கண்டு கொள்ளும் ஒரு செய்கையாகும். மேன்மக்கள் தன்னியல்பாக அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். படைப்பாளி புறச்செயலின் வழியாக அதை கண்டு கொள்ளும் வாய்ப்பை எப்போதும் இழந்துவிடக்கூடாது. சூர்யாவின் தேடல் என்பதைவிட செயல்பாடே இப்படித்தான் இருக்கிறது. நெடுங்கவிதைகள் பெரும்பாலும் இதற்கு சாட்சியாகத்தான் இருக்கின்றன.

இதையே

இவ்வுலகம் ஏற்கனவே நினைவாலானதாக இருக்கையில் ஏன் நீடிக்க இயலவில்லை மறதியாக. துயரம்தான் ....... நினைவு.

கவிஞனின் தேடல் வெற்று நிகழுச் சுழலாகவோ, உணர்ச்சி வடிதலாகவோ, பொதுவான கவிதை செயல்பாடாக இல்லாமல் வாழ்வை, இருப்பை மெய்மையில் விளங்கிக் கொள்ள மனம் தானே நாடும் தனக்கான ஒரு மொழி செயல்பாடாக அமைந்துவிடுவது அபூர்வமான ஒன்றுதான்.


பன்னெடுங்காலமாய் நாம் தேடுவது இதைத்தான் இல்லையா

சூர்யா இதை இப்படித்தான் வந்தடைந்து முடித்துக் கொள்கிறார்.

கரப்பானியத்தை முன்வைத்து என்னால் வாசிப்பனுபவம் சார்ந்த உணர்வெழுச்சி ஒன்றை வெளிப்படுத்த இயலவில்லை. கரப்பானியம் வழக்கமான கவிதைக்கான அதீத தன்னுணர்ச்சியை முன்னெப்போதும் காணாத ரகசிய பாதை வழியாக நடத்திச் செல்கிறது. இது மேலோட்டமாக பார்த்தால் அபத்தவாதமாக இருந்தாலும் அதன் உள்ளொளியானது அதற்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு நிலையாக இருக்கிறது. இது தத்துவம் என்ற கவிதையின் எதிரிடையால் எழுச்சியடையும் ஏகமான தன்னுணர்வு மெய்மையாக தன்னைப் புதைத்துக் கொள்கிறது. தத்துவம் சார்ந்த உரையாடலை அழகியலின் உச்சபட்ச ஆகிருதியில் நிலைக்கச் செய்திருப்பது சூர்யாவின் தனிப்பட்ட கூறாகவே பார்க்கிறேன்.

ஒரு முதல் தொகுப்பு அதற்கான பெலஹீனங்களைக் கொண்டதாக இருப்பதை தவிர்ப்பது என்பது எதோச்சயானதல்ல. அதற்கு ஒரே வழி அதனைப் படைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அல்லது தக்க வைத்துக் கொள்ளும் ஆக்கமே ஆகும்.

புதிய வடிவங்களை, உணர்வுகளை, செயல்பாடுகளை இலக்கியத்தில் கையாளும்போது அவற்றின் தெளிவின்மை வாசகப் பரப்பில் ஒரு சவாலை எதிர்கொள்ள வைப்பதை சாதுர்யமாகத் தவிர்ப்பது சாதாரணம் இல்லை. சூர்யா இதை கையாண்டிருப்பது இயல்பிலேயே ஒருவித கோட்பாட்டு முறைமைவாதியாகத் தன்னை பாவித்துக் கொள்ளாத, அதே சமயம் அத்தகைய கூறுகளை ஜீவனுள்ள கவிதை வளர்ச்சிக்கு மடைமாற்றுவதற்கு நிறைய விஷயங்களை அல்லது மய்யமான  ஒருங்கிணைவை பயிற்சியாகக் கைக்கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அத்தகைய பயிற்சியே ஒரு வாசகனை சிறந்த படைப்பாளியாக்கிவிடும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஒட்டுமொத்தத் தொகுப்பும் தமிழின் புதிய விசையழகை வெளிக் கொண்டுவந்த தனித்தனி கவிதைகளாகின்றன. ஒவ்வொரு கவிஞனும் தனக்கெனத் தனியாக ஒரு மொழி வெளிப்பாட்டு உத்தியைக் கைக்கொள்ள சில வழிமுறை உத்திகளைக் வகுத்துக் கொள்வது இயல்பானதானாலும் அதில் இருக்கும் சிக்கல் வாசகனது வாசகப் பரப்பைக் கணக்கில் கொள்வதில் இருந்தாலும் அதை அதன் எல்லைக்குள் அசாத்திய நுண்ணுணர்வு மூலம் இலக்கியத்தின் பொது வளர்ச்சிப் போக்கைக் கணக்கிலெடுத்திருக்கும் சூர்யாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

துறவிகள் பயணிகள் திருடர்கள்

ஆய்வாளர்கள் நீங்கள், நான்

என எல்லோரும் குழுமியிருக்கிறோம்

கங்கைக்கு தீபாராதனை

பெண்கள் விளக்குகளை மிதக்கவிடுகிறார்கள்

நரிகள் பரிகளான கதையாய்

அத்தனையும் ஓடங்களாக உருதிரிய

அதிலொன்றில் கேமராக்களுடன் ஆய்வாளர்கள் ஏறிக்கொள்கிறார்கள்

பிறிதொன்றில் உள்ளூர்வாசிகள் குழாம்

நான் இன்னொன்றில் ஏறிக்கொள்ளப்போகிறேன்

நீங்களும் வருகிறீர்களா

இது சில சித்திரங்கள் நெடுங்கவிதையில் வரும் ஒரு பகுதி. சூர்யாவின் // நான் இன்னொன்றில் ஏறிக்கொள்ளப்போகிறேன்// என்பது பொது மையத்திலிருந்து தனித்திருக்கும் அல்லது அதன் போக்கிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதில் இருக்கும் நிலைப்பாடு தமிழ் கவிதைக்கும் நல்லது. தனித்திருக்கும் ஒரு தனிக்கும் நல்லதாகவே தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு நூலுக்கான பார்வை என்பது அல்லது விமர்சனம் என்பது அதற்கு Spoiler ஆக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதுவே வாசகனுக்கு படைப்பு பற்றி தனிப்பட்ட பார்வையை உருவாக்கும். கவிதைகளை வாசித்துவிட்டு அவற்றை விளக்குவது விமர்சனமாகாது. அது Retold ஆகிப்போய்விடும். 

தொகுப்பின் பிரதியாக்கம் தனித்துவமாக இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி வேண்டும். வார்த்தைகளைப் பிரித்திருக்கலாம். அதை வாசகனுக்கே விடுவது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. கரப்பானியம் முதல் தொகுப்புக்குரிய பெலஹீனங்களற்று இருப்பது சமீபத்தில் வந்த அகம் சார்ந்த கவிதைகளின் புதிய அனுபவ திரட்டு.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


கரப்பானியம் தொகுப்பு வாங்க

***

நன்றி: கல்குதிரை இதழ்

Share:
Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive