கரப்பானியம் - சாகிப்கிரான்

கவிதை சார்ந்த உரையாடலை மரபார்ந்த கவிதை சாராத தன்மையின் அழகியல் வழியாக நிகழ்த்திக் காட்டுவது என்பது கரப்பானியத்தின் ஓர் உள்ளியல்பாக இருக்கிறது. கரப்பானியம் என்பதே எப்போதுமிருக்கும் அந்நியத்தின் ஒரு நித்திய உரையாடலாகவே இருக்கிறது.

வே. நி. சூர்யாவின் கவிதைகளை நாம் திறந்து கொள்வது, ஒரு ஸ்தூலமான பொருள், அனேகமாக ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு மனப் படிமமாக, புலனுணர்வாக மறுபடி மறுபடியும் காட்டப்படுவது தீவிரமான அகவயமான மேம்பட்ட நிலையைப் புறக்கணிப்பதே ஆகும். இது சில செளகரியக்களுக்கு வழிகோல்கிறது. இத்தகைய உத்திகள் தமிழுக்கு புதியன.

ஒரு கவிதை இப்படி முடிகிறது.

'இன்றென்னவோ தெரியவில்லை மேலிருந்து கண்டால் எல்லாமே பெரிதாகத் தெரிந்து தொலைக்கிறது.

ஒரு மனிதன் Block Hole னுடைய Event Horizon-ல் நின்றிருந்தால் அவன் உணரும் இயற்பியலானது அதிபுனைவாக இருக்கிறது. அந்தத் தன்மையின் சூக்குமம் மனிதனின் உள்ளியல்பின் மேல் கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கோடு. அந்தக் கோட்டிற்கும் பொறுப்பாளியாவதோ, அத்தகைய அதிபுனைவை சாத்தியமாக்குவதோ எல்லாமே அவனது இருத்தலின்பால் நடக்கும் ஓர் இயற்பியல். அது அந்த கவிஞரின் மாட்டிக் கொண்ட ஒரு கூக்குரலின் மனசாட்சியாக இருக்கிறது. சூர்யாவின் கவிதைகள் பெரும்பாலும் தப்ப முடியாத தருணத்தின் உடன்பாடான ஒரு மனப்பான்மையை வடித்தெடுக்க முயற்சிக்கின்றன.

இதை முழுமையாக நிரூபிப்பது, நெடுங்கவிதையான ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே. 

வாசலும் கிடையாது

வீடும் கிடையாது

உள்ளேயும் கிடையாது

வெளியேயும் கிடையாது

இடமும் கிடையாது

வலமும் கிடையாது

"சுயம்" ஒரு சுழற்பாதை

ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே

அச்சுழற்பாதையை விட்டு

உன்னால்கூட வெளிவரமுடியாது

நீ அறிவாய்தானே

அன்னியமாக்கப்பட்ட அனுபவ எல்லைகளுக்குள் உருவாகும் அந்நியமற்ற தன்மையானது, சூர்யாவின் கவிதைகளை உச்சநிலை அந்நியமாக்கலை பேசினாலும் அதனுள் இருக்கும் அவை அழுத்த மிகுந்த துயர் வெடிப்பு அனுபவமாக இல்லாமல் அதன் பொருட்டு எடுத்தாளப்பட்ட பருப்பொருட்களாகவே இருக்கின்றன.

ஒரு கவிதை இப்படி பேசுகிறது.

மரங்களடர்ந்த பூங்காவில்

பிளேடும் கைநரம்பும்

தீவிரமாய் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தன

இங்கே, சூர்யாவைப் பொறுத்தவரை, மனச் செயல் நோக்கம் அல்லது மனோபாவம்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறதே ஒழிய அந்த செய்கையல்ல. இது ஒருவகையில் மனித செயல்பாட்டின் அதி நிலையின் ஒரு ரகசியக் கூறாகவே பார்க்கிறேன். அந்த ரகசியமானது உயிரியின் நிலைத்திருத்தலின்பால் அதன் தன்னியல்பு தன்மையின் அடிப்படை கனிவன்பு என்றே கருதுகிறேன். இதுவே அந்த நரம்பை பிளேடிலிருந்து பிரித்து வைக்கிறது. அல்லது அந்த பிளேடை அந்த நரம்பின் ஓர் உள்ளியந்த பண்பாகப் பார்க்க வைக்கிறது.

தொகுப்பில் திருநகத்தழகி, செவ்வியல் தன்மையின் புதிய காதல் கவிதைகள். பெரும்பாலும் மாதவி குறித்தக் கவிதைகள் எல்லாமே இப்படி இருந்தாலும் அவற்றின் தர்க்க அடித்தளம் காதலின்பாற்பட்ட மெய்ம்மையின் ரகசிய வெளிப்பாடாக இருக்கின்றன.

உனக்குத் தெரியுமா மாதவி

எப்போதுமே

உன்

கூதிர்கால சமநிலை

என்னெதிரே குலையவே விரும்புகிறேன்

உன்னுறுதி நொறுங்கிச் சிதறும்

கணங்களுக்கு ஒரு பெயரிட்டுள்ளேன்

என்ன பெயரெனக் கேட்கமாட்டாயா

சரி வேண்டாம் நானே சொல்கிறேன்

மரகதகணக்கள்

மரகதகணங்களா?

ஆம் மரகதகணங்கள்தான்

இக்கணங்களைப் போல்.

தற்கணங்களை தேர்ந்து ஒரு சேமக்கலனிலிட்டுக் கொண்டும் அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டும் இயங்கும் 'தன்னிலையின்' தேகங்களை விடுதலையின் பக்கம் கொண்டு சேர்க்கும் ஒரு சுய சிகிச்சை முறையாக இதைக் காணலாம். இதன் அழகியல் ரீதியிலான பயன்பாடு என்பதே அதன் உச்சபட்ச வடிதலின் உள்ளிணையாக இருக்கிறது. இதை ஒரு படைப்பாளி மட்டுமே கண்டடைவான் என்பதைவிடவும் அவனே அதை மொழி செயல்பாடாக்க முடியும் என்பதே இங்கு அதன் பயனாக இருக்கிறது.

உயிர்த்தெழுதல் என்பது மரணத்தின் விளைச்சல். சூர்யாவின் கவிதைகளில் நேரிடையாகவும் மறைபொருளாகவும் வருபவை நினைவின் அதீத செயல்பாட்டு செயல் மறுப்பின் உபவிளைவு. நண்பன் ஹெராயினை எடுத்துக் கொள்ளச் சொல்லும்போதும் அதை அவனின் நினைவாகப் பத்திரப்படுத்துவதும், பிறகு அதை எடுத்துக் கொள்ளும்போது நண்பன் சென்னாற்போல கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளாதது சொல் மறுப்பு என்பதாயிருந்தாலும் அதுவே உயிர்த்தெழுதலைச் சாத்தியமாகிறது. கவிஞன் கட்டமைக்கும் அறம் அப்பாவிற்கு எதிராக இருந்தாலும் துடிக்கும் கத்தியானது இத்தகைய எதிரிடையில் பொதிந்து கிடக்கும் பூரானாகவே தெரிகிறது. திருப்பிரதேசம் என்பதே இத்தகைய இருப்பிலிருந்து இன்மையை நோக்கிச் செல்லும் வளையல் துண்டுகள்தான். ஓர் ஈக்குச்சி அத்தகைய உயிர்த்தெழுதலை முகாந்திரப்படுத்தும் என்பதெல்லாம் ஒரு பெரிய சமூகச் சடங்கு தன்னை ஆட்கொள்ளும் கணத்தின் மாயஜாலம்தான். அதன் அதி அற்புதம்,

நீ உயிரோடிருப்பதே

ஒரு மாயாசாலத்திற்கான மந்திரம்தானென்று. 

சூர்யா முடிக்கும் ஒரு கவிதையானது, தாழக்கோல் என்ற தலைப்பிலானது.

ஒருவன் தனது மாற்றியமைக்கப்படாத சமூக சூழமைவுக்கள் தனது புதிய இடத்திலிருந்து காலம் சார்ந்த வரையறைக்குள் நுழையும் வாழ்க்கையின் குலைவை 'மத்தகத்'திலிருந்து 'கணச்சுழல்', 'நீயே உனக்கு புதையல்தான்', 'நினைவுநாள்' முதலிய கவிதைகள் வழியாக

வாழ்க்கையற்ற வாழ்க்கையை இன்றும் வழக்கம்போல வாழ்ந்தாக வேண்டும் என்பதாகக் கடக்கின்றான்.

'விளக்கங்களுக்கு எதிரான குறிப்புகள்' கவிதைகள், சாதாரண தன்னுணர்வு கவிதைகளைப்போல் இருந்தாலும், அவற்றின் உள்ளார்ந்த தன்மையானது, பொதுப்புத்தியைக் கேள்விக்கு உள்ளாக்குவது, அதன் மூலம் அர்த்தம், அனுபவம் இரண்டிற்குமான நடைமுறை அறிவு சார்ந்த பார்வையை கவிஞனின் சொல்லாடல்களுக்கும், தகவல் அறிவின் சொல்லாடல்களோடு தொடர்புடைய கண்ணிகளை மேம்பட்ட உணர்வு சார்ந்த தன்னொளியாக மடைமாற்றும் தரிசனமாக்குவது சூர்யாவின் ஏனையக் கவிதைகளைக் காட்டிலும் தொகுப்பின் முற்பகுதிக் கவிதைகளில் இருக்கும் ஒரு செளகரியம் அந்தக் கவிஞனின் பிரசன்னத்தை வாசகன் புரிந்து கொள்ளுமிடமாகும்.

அது ஓர் உதிர்ந்த இலை அவ்வளவுதான்

அந்த இலை விளக்கங்கள் இல்லாதபோது

அழகாகத்தான் இருந்தது

நீங்கள் விளக்கத் தொடங்கியபோது தன் உன்னதத்தை

இழந்திருந்தது

விளக்கமளித்து விளக்கமளித்து சலிக்கவில்லையா

உங்களுக்கு

எதையும் விளக்க உதவாத மொழியை

எப்போது கற்றுக் கொள்ளப்போகிறோம்.

இடையறாத - ஏன் வாழ்நாள் முழுமையும் என்று கூடச் சொல்வேன். அவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து, சொற்களைக் கருவியாகக் கொண்டு உழைக்கின்ற உழைப்பு இல்லையென்றால், எழுத்தாளனால் எவ்விதச் சாதனையும் செய்யமுடியாது என்று கான்ஸ்டாண்டின் ஃபெடின் சொல்கிறார். இது தமிழின் நெடுங்கவிதைகளுக்கு மிகப் பொருந்தும். நெடுங்கவிதை, ஒரு விதத்தில் ஒரு மனநிலையின் தற்காலிக அல்லது பாவனையான ஒரு நீட்சி. இதைத் தக்கவைப்பது என்பது அந்தக் கவியின் கலாப்பூர்வ தக்கவைப்பேதானே ஒழிய அது ஒரு பயிற்சியாக இருக்க இயலாது. இது இயல்பான கவிதையுணர்வுக்கு எதிர்மறையான ஒரு தன்னுணர்வு மனோநிலையாகும்.

காயாபுரி கோட்டை என்ற பிரிவில் இருக்கும் கவிதைகள் பெரும்பாலும் நெடுங்கவிதைகளாக இருக்கின்றன. அதில் ஒரு இடைப்பட்டக் கவிதை, 

வரையிலிருந்து தரைவரும் நுரையீரலைப் போல

மாண்ட விளக்கின் சொப்பனத்திலிருந்து செந்நீல தீபம்

எண்ணிறந்த கணச்சுடர்களிலொரு தனிச்சுடரது

அச்சுடர்தம் உடலெல்லாம் எண்ணம்

சூதானமாய் புறம் வந்து ஆகாசத்தை

காணக் காண்கின்றது: 

பூரணவெளியில் சாய்ந்தாடும்

இன்றின் ஒளிக்கதிகளை.

இது இத்தனை இருட்டுக்குள் ஒருவனால் தன்னையே பார்க்க முடியாது என்ற நெடுங்கவிதையின் ஒரு பகுதி இது.

சூர்யாவுக்கான நெடுவழியாக இருப்பவை அவரின் அந்நியப்பட்ட காட்சி நெகிழ்வின் அதிபுனைவுகளே. இந்தக் கவிதையை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்று அதிகாலை சூரிய உதயம் அல்லது அதிகாலையில் வீட்டின் குலமகள் புலரும் வேளையில் தான் போட்ட வாயில் கோல நடுவில் வைக்க எடுத்துப்போகும் ஒரு விளக்குச் சுடர். இரண்டுக்குமான தனித்த கூர்ந்த மனம் அடையும் வடிவக் கிளர்ச்சியும் சிந்தனைக் குவியமும் அபூர்வமாக இருக்கின்றன. 

வரையிலிருந்து தரைவரும் நுரையீரல் தனக்கான முழு அளவு ஆக்ஸிஜனையும் அடைந்து கொள்ளும். மாண்ட விளக்கின் சொப்பனம் என்பது விடிந்த பின் நிகழும் நிகழ் நினைவு. தற்கணத்தை சொப்பனமாக நிலைப்படுத்துவது, எதிர்நிலையில் சொல்லிச் செல்வது ஒரு அபூர்வ மனக்கிளேசத்தை உண்டுபண்ணும் அதேவேளை அது எண்ணிறந்த கணச்சுடர்களிலொரு தனிச்சுடரேதான்.

துரத்தும் அசைவின்மை மனிதனைப் பற்றிக் கொள்ளுதல் ஆகாது

அசையும் இருளே பந்தம்

தன்னைச் சுற்றிக்கொண்டு நினைவையும்

வலம்வரும் மறதியை ஏன் மறுத்தேன் சந்திக்க

இதோ வெளிறிய வீதியில்

காக்கைகள் தாறுமாறாய் பறக்கும் காட்சி ...

இது அதே நெடுங்கவிதையில் வரும் மற்றுமொரு பகுதி. துரத்தும் அசைவின்மையாகப் பகலையும் அதாவது வெளிச்சத்தையும் அதற்கு நேரெதிரான அசைவற்ற அல்லது இருளில் மட்டுமே தன் அசைவை சாத்தியப்படுத்திக் கொள்ளும் அசையும் இருட்டை தனது அல்லது மனித குலத்தின் பந்தமாகக் காண்கிறார். ஏனெனில் இருள் மட்டுமே நமக்கு இந்த பிரபஞ்ச இருப்பை அசைத்துக் காட்டுகிற ஒரே சாளரம். மனிதனின் ஆகிருதியை தவிடு பொடியாக்கும் நுண்மையின் வீர்யம் மிக்கது. தன்னையும் சுற்றிக்கொண்டு நினைவையும் சுற்றி வரும் வரும் மறதியை மறுப்பது ஒரு பாவச்செயலாக, அதன் தன்மை நினைவின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதாவது நினைவும் மறதியும் எதிரிடையல்ல. ஒன்று மற்றொன்றை நிலைப்படுத்துகிறது. அப்படியானால் இரண்டின் தனிப்பட்ட தேவைதான் என்ன? 

ஒன்று நினைவு என்பது தற்கணமாக்கப்பட்ட இறந்த காலம். மறதி என்பது இறந்த காலமாக்கப்பட்ட தற்கணம். அது மிகப் பூடகமானது. இரண்டும் ஒரு புள்ளியில் செயல்படுகின்றன. இதுதான் கலையாக்கம். ஒன்று மற்றொன்றாக மாறும் சடுதி மாற்றம். அதுவே கலையின் ஊற்றுக்கண்ணாக, படைப்பின் ரகசியமாக இருக்கிறது.  எனவேதான் வெளிறிய காக்கைகள் பறக்கும் அந்திவான சூரியனை ஓவியக் கித்தானில் கொண்டுவந்து பொருத்துகிறது, காதையிழந்த வான்கா காலத்தை மடைமாற்றும் பதற்றத்தின் வெறுமனே ஓவியமல்லாத படைப்பு வெளிப்பாடு,  கவிதையிலும். இங்கே ஒரு விஷயத்தை வாசகன் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் வாசிப்பு வெறுமனே தகவல்களைப் பொருத்திப் பார்க்கும் ஒரு மனச் செயல்பாடல்ல. படிப்படியாக ஆன்மாவை, அது தான் அடைய விரும்பும் அதன் தன்மையின் உள்ளார்ந்த செயல்பாடாக நடக்கும் அனைத்தையும் இனம் கண்டு கொள்ளும் ஒரு செய்கையாகும். மேன்மக்கள் தன்னியல்பாக அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். படைப்பாளி புறச்செயலின் வழியாக அதை கண்டு கொள்ளும் வாய்ப்பை எப்போதும் இழந்துவிடக்கூடாது. சூர்யாவின் தேடல் என்பதைவிட செயல்பாடே இப்படித்தான் இருக்கிறது. நெடுங்கவிதைகள் பெரும்பாலும் இதற்கு சாட்சியாகத்தான் இருக்கின்றன.

இதையே

இவ்வுலகம் ஏற்கனவே நினைவாலானதாக இருக்கையில் ஏன் நீடிக்க இயலவில்லை மறதியாக. துயரம்தான் ....... நினைவு.

கவிஞனின் தேடல் வெற்று நிகழுச் சுழலாகவோ, உணர்ச்சி வடிதலாகவோ, பொதுவான கவிதை செயல்பாடாக இல்லாமல் வாழ்வை, இருப்பை மெய்மையில் விளங்கிக் கொள்ள மனம் தானே நாடும் தனக்கான ஒரு மொழி செயல்பாடாக அமைந்துவிடுவது அபூர்வமான ஒன்றுதான்.


பன்னெடுங்காலமாய் நாம் தேடுவது இதைத்தான் இல்லையா

சூர்யா இதை இப்படித்தான் வந்தடைந்து முடித்துக் கொள்கிறார்.

கரப்பானியத்தை முன்வைத்து என்னால் வாசிப்பனுபவம் சார்ந்த உணர்வெழுச்சி ஒன்றை வெளிப்படுத்த இயலவில்லை. கரப்பானியம் வழக்கமான கவிதைக்கான அதீத தன்னுணர்ச்சியை முன்னெப்போதும் காணாத ரகசிய பாதை வழியாக நடத்திச் செல்கிறது. இது மேலோட்டமாக பார்த்தால் அபத்தவாதமாக இருந்தாலும் அதன் உள்ளொளியானது அதற்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு நிலையாக இருக்கிறது. இது தத்துவம் என்ற கவிதையின் எதிரிடையால் எழுச்சியடையும் ஏகமான தன்னுணர்வு மெய்மையாக தன்னைப் புதைத்துக் கொள்கிறது. தத்துவம் சார்ந்த உரையாடலை அழகியலின் உச்சபட்ச ஆகிருதியில் நிலைக்கச் செய்திருப்பது சூர்யாவின் தனிப்பட்ட கூறாகவே பார்க்கிறேன்.

ஒரு முதல் தொகுப்பு அதற்கான பெலஹீனங்களைக் கொண்டதாக இருப்பதை தவிர்ப்பது என்பது எதோச்சயானதல்ல. அதற்கு ஒரே வழி அதனைப் படைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அல்லது தக்க வைத்துக் கொள்ளும் ஆக்கமே ஆகும்.

புதிய வடிவங்களை, உணர்வுகளை, செயல்பாடுகளை இலக்கியத்தில் கையாளும்போது அவற்றின் தெளிவின்மை வாசகப் பரப்பில் ஒரு சவாலை எதிர்கொள்ள வைப்பதை சாதுர்யமாகத் தவிர்ப்பது சாதாரணம் இல்லை. சூர்யா இதை கையாண்டிருப்பது இயல்பிலேயே ஒருவித கோட்பாட்டு முறைமைவாதியாகத் தன்னை பாவித்துக் கொள்ளாத, அதே சமயம் அத்தகைய கூறுகளை ஜீவனுள்ள கவிதை வளர்ச்சிக்கு மடைமாற்றுவதற்கு நிறைய விஷயங்களை அல்லது மய்யமான  ஒருங்கிணைவை பயிற்சியாகக் கைக்கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அத்தகைய பயிற்சியே ஒரு வாசகனை சிறந்த படைப்பாளியாக்கிவிடும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஒட்டுமொத்தத் தொகுப்பும் தமிழின் புதிய விசையழகை வெளிக் கொண்டுவந்த தனித்தனி கவிதைகளாகின்றன. ஒவ்வொரு கவிஞனும் தனக்கெனத் தனியாக ஒரு மொழி வெளிப்பாட்டு உத்தியைக் கைக்கொள்ள சில வழிமுறை உத்திகளைக் வகுத்துக் கொள்வது இயல்பானதானாலும் அதில் இருக்கும் சிக்கல் வாசகனது வாசகப் பரப்பைக் கணக்கில் கொள்வதில் இருந்தாலும் அதை அதன் எல்லைக்குள் அசாத்திய நுண்ணுணர்வு மூலம் இலக்கியத்தின் பொது வளர்ச்சிப் போக்கைக் கணக்கிலெடுத்திருக்கும் சூர்யாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

துறவிகள் பயணிகள் திருடர்கள்

ஆய்வாளர்கள் நீங்கள், நான்

என எல்லோரும் குழுமியிருக்கிறோம்

கங்கைக்கு தீபாராதனை

பெண்கள் விளக்குகளை மிதக்கவிடுகிறார்கள்

நரிகள் பரிகளான கதையாய்

அத்தனையும் ஓடங்களாக உருதிரிய

அதிலொன்றில் கேமராக்களுடன் ஆய்வாளர்கள் ஏறிக்கொள்கிறார்கள்

பிறிதொன்றில் உள்ளூர்வாசிகள் குழாம்

நான் இன்னொன்றில் ஏறிக்கொள்ளப்போகிறேன்

நீங்களும் வருகிறீர்களா

இது சில சித்திரங்கள் நெடுங்கவிதையில் வரும் ஒரு பகுதி. சூர்யாவின் // நான் இன்னொன்றில் ஏறிக்கொள்ளப்போகிறேன்// என்பது பொது மையத்திலிருந்து தனித்திருக்கும் அல்லது அதன் போக்கிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதில் இருக்கும் நிலைப்பாடு தமிழ் கவிதைக்கும் நல்லது. தனித்திருக்கும் ஒரு தனிக்கும் நல்லதாகவே தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு நூலுக்கான பார்வை என்பது அல்லது விமர்சனம் என்பது அதற்கு Spoiler ஆக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதுவே வாசகனுக்கு படைப்பு பற்றி தனிப்பட்ட பார்வையை உருவாக்கும். கவிதைகளை வாசித்துவிட்டு அவற்றை விளக்குவது விமர்சனமாகாது. அது Retold ஆகிப்போய்விடும். 

தொகுப்பின் பிரதியாக்கம் தனித்துவமாக இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி வேண்டும். வார்த்தைகளைப் பிரித்திருக்கலாம். அதை வாசகனுக்கே விடுவது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. கரப்பானியம் முதல் தொகுப்புக்குரிய பெலஹீனங்களற்று இருப்பது சமீபத்தில் வந்த அகம் சார்ந்த கவிதைகளின் புதிய அனுபவ திரட்டு.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


கரப்பானியம் தொகுப்பு வாங்க

***

நன்றி: கல்குதிரை இதழ்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive