திறந்த வானமெங்கும்
நட்சத்திரங்கள்
தெற்குச் சரிவினில் ஏறும்
பிறைநிலவு
மலை மேல் ஏற்றப்பட்ட நெருப்பு
காட்டு வழியில் தூரத்துக் குடிலின்
மஞ்சள் விளக்கு
வெளி முற்றத்தில் நல்ல காற்று
வயிற்றுச் சிசுவுக்கு விக்குகிறது
குனிந்து அமர்ந்திருக்கிறாள்
பிள்ளைத்தாச்சி
திறந்த வானமெங்கும்
நட்சத்திரங்கள்
***
பொறி
அம்மாவின் கண்ணில் பட்டது
மகனின் முதல் நரை ஒரு
தீப்பொறியென.
கண்ணிவெடியைச்
செயலிழக்கச் செய்யும் ஒருவரைப் போல
அவள் அதை அகற்றினாள்.
வதிமழை ஊற்றுகிறது
வன்னாத்தி மகள் தூக்குகளுடன் தட்டழிகிறாள்
கோணிக் கதகதப்புள் ஆடுகள் உரசியொட்டி நிற்கின்றன.
அவனைப் பற்றிய அவளது
எண் அற்ற கவலைகளில்
ஒன்று
கூடுகிறது.
***
ஆனை கட்டிய கல்
கோட்டை வீட்டின் திட்டி வாசலை
ஒட்டியுள்ள கல்லில்தான்
ஜமீந்தார் கொடையளித்த
யானை கட்டப்பட்டிருந்தது.
கோட்டை வீட்டார் பிறகு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தனர்.
அப்புறம் சீமைக்குச் சென்று செட்டிலாகிவிட்டதாக கேள்வி.
ஜமீந்தாரி ஒழிப்புச்சட்டம் அமலுக்கு வந்தபோது
வெட்டிக்கொண்டிருந்த கிணறு தாத்தாவுக்கே சொந்தமானது.
‘ஆனை கட்டிய கல் இது’ என்று அறிமுகம் செய்தது அவர்தான்.
இப்போதங்கே உத்தி பிரிக்கும் பையன்களுக்கு
அதுதான் கிரிக்கெட் ஸ்டம்ப்.
துரைச்சானிகள் போய்விட்டனர்
ராஜா ராணிகள் போய்விட்டனர்
போன வருடம் தாத்தா போய்ச்சேர்ந்தார்
கரண்டிவாயன் ஊசிவாலன் கூடவே பூநாரைமார்களும் போய்விட்டனர்
கொப்பரைகளைக் கழுவி முடித்த கிட்ணம்மா
வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்கிறாள்.
ஆனை கட்டிய கல் அருகே
கருத்த இரவு.
0 comments:
Post a Comment