ஒரு வீடென்பது தனியொரு மனிதனை போல. அதனால் தான் ஒவ்வொரு வீடும் சுவாரஸ்யமானது. இன்னொரு பார்வையில் இன்றுள்ள சூழலில் ஒரே மாதிரி வார்க்கப்படும் மனிதர்களையும் வீடுகளையும் இந்தக்கவிதைகள் மனதில் கொண்டு வருகின்றன.
வாசலில் நின்று வழியனுப்பும் தலைவியும்,வெளியில் திரியும் ஒரு மனிதனின் சித்திரமும் விரியும் கவிதைகள் இவை.
வீடு விசித்தரமானது. உள்ளே இருக்கும் போது வெளியே தள்ளவும் வெளியே இருக்கும் போது நம்மை ஓயாது அழைக்கும் ஒன்று.
முதல் கவிதை வீட்டை பேசுவதன் மூலம் மனதையும், இரண்டாம் கவிதை மனதை பேசுவதன் மூலம் வீட்டையும் பேசுகிறது.
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய் போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காகப்
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள
வீட்டைவிட்டு வெளியேறும் இந்தக்கவிதைக்கு மாற்றாக வீடுதிரும்புதல் என்ற கவிதை உள்ளது. இந்தக்கவிதையில் வீடு என்பது மனதின் அலைகழிப்பாக மாறியுள்ளது. ஒரு கடல் போல வீடு ஒருவனை உள்ளிழுக்கவும் வெளியே தள்ளவுமாக இருக்கும் வீட்டை அவன் தன்னுள் உணர்கிறான். இந்தக்கவிதையில் ரூபமான ஒன்று அரூபமாக மாறுகிறது. கவிஞனின் மனம் இருளுக்குள் திரும்பிச்செல்ல உள்ள எண்ணற்ற சாத்தியங்களில் தன்னிடம் தான் திரும்புதல் நிகழ்ந்துள்ள கவிதை இது.
ஏனெனில் வீடென்பது எல்லோருக்கும் அம்மா. அம்மா என்பது திரும்புதல் மட்டுமே சாத்தியமுள்ள வெளி. அவளே வீடு..ஒரு வகையில் அவளே நம் மனமும் கூட.
வீடு திரும்புதல்
எதற்காக வீடு
திரும்பவேண்டும் நாம்
யார் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் நம்மை
சொந்த வீடு
உண்டா நமக்கு
வீடென்பது இடமா
விரும்பும் மனமா
வீடென்றால்
எல்லோருக்குமே அம்மா
பிறகு வந்தவொரு
பெரியமனசுக்காரி
அவள் வயிற்றில்
உதித்த குழந்தைகள்
தோட்டத்துக் கனகாம்பரங்கள்
வேப்பமரம் கல்யாணமுருங்கை
முற்றத்துக் கொடிப்பசலி
தேடிவரும் பூனைக்குட்டிகள்
நட்ட நடுநிசியிலும்
தெருவில் லாந்தும் நாய்கள்
ஊருக்குக் கொஞ்சம் தள்ளி
ஓடும் ஆறு
சாலையோரம் குடிகொண்டிருக்கும்
இசக்கியம்மன்
அரிவாளைத் தூக்கி நிற்கும்
சுடலை மாடசாமி
கோட்டை போலிருக்கும்
கோயிலுக்குள்ளே
நிற்கிறானா அமர்ந்திருக்கிறானா
என்று சொல்ல முடியாத
எங்கள் ஆதிசிவன்
நின்று
அருள்பாலிக்கும் அம்மை
ஊருக்குள்
இருக்கிறது வீடு
வீட்டிற்குள்
இருக்கிறார்கள் பிரியமானவர்கள்
பிரியப்பட்டவர்களைத்தாம்
தேடுகிறது உள்மனசு
வீடு கிட்டத்தில்
இருக்க வேண்டும்
வேண்டியவர்கள்
பக்கத்தில் இருக்க வேண்டும்
வீடுதொலைத்து
வெளியில் திரியும்
ஒருவன் வரிகள் இவை
வீட்டைவிட்டு
வெளியில் ஏன் வருகிறோம்
வேலை தேடி
பஞ்சம் பிழைக்க
பணம் சம்பாதிக்க
பசிக்குப் பதில் சொல்ல
பிறகு எதற்கு
வீடுதிரும்ப வேண்டும்
வீடென்பது கனவு
வெளியென்பது எதார்த்தம்
வீடும் வெளியுமாய்த்தான்
விளங்குகிறது
உன் வீடு உன்னைக் கூப்பிடும் மாதிரி
என்ன வைத்திருக்கிறது
வீட்டிலும் வெளியைப்போலவே
பொய்களைப் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொள்வாயா
வீடற்றவர்களை எப்பொழுதாவது
நினைத்துப் பார்த்திருக்கிறாயா
அப்பன் விரட்டி
அம்மை விரட்டி
அடுத்து பிள்ளைகளும்
இரக்கமில்லாமல் விரட்டி
வெறுத்துப்போய்த் தனிவீடு
உண்டாக்கிக்கொண்டான்
கவிதையில் இவன்
அந்த வீடுதான் இவன்
இவன்தான் அந்த வீடு
நிழல் இருள் பாடல்.
***
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment