கவிதை எதன் பொருட்டு? - தேவதேவன் நேர்காணல்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
கேள்வி: கவிதையில் படிமம் ஒரு வலிந்த பாணியே அன்றி அதுவே உன்னத நிலை அன்று, ஆனால் எந்தவொரு உன்னத நிலையுமே சுயேச்சாபூர்வமானது. எனவே உன்னத நிலைக்கான யத்தனம் என்பது ஆதாரத்தில் வெறும் முரண்பாடுதான். முரண்பாடு கவிந்த நிலையில் உன்னதத்தின் முழுமையென்ற மலர்ச்சி ஏது? உன்னதம் அணுவின் கருவையும் காணும் காணுதல் மட்டுமே. இந்த காணுதலில் படிமம் எவ்வளவு வசீகரமானதாக இருந்தாலும் அது ஒரு திரைதான். காணுதலை அது களங்கப்படுத்துகிறது என்ற வகையில், அப்படிப் பார்க்கும்போது படிமங்களில் திளைக்கிறவர்களுக்கு பிரபஞ்ச தர்சனம் கிடைக்கவே கிடைக்காத ஒன்று. நீங்களோ படிமத்தைப்போய் கவிதையின் உன்னத நிலை என்கிறீர்களே?

பதில்: வாழ்வும் கவிதையும் ஒன்று என்று நீங்கள் குழம்பியுள்ளமை தெரிகிறது. முதலில் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வும் கவிதையும் ஒன்றல்ல. வாழ்வு வேறு; கவிதை வேறு. வாழ்வும் கவிதையின் பொருளும்தான் வேறு வேறல்ல. கவிதையைக் குறித்துச்சொல்வது வாழ்விற்குப் பொருந்தாது. உதாரணமாக, வாழ்வில் முரண்பாடுகளைக் கொண்டு முரண்பாடுகளற்ற நிலையை (உன்னத நிலையை) சாதிக்க முடியாது என்பது விஞ்ஞானம். இது உங்களுக்குத் தெரிந்திருப்பது குறித்து சந்தோஷம். ஆனால் சித்தரித்தல் எனும்போது, அதாவது கவிதையில், முரண்பாடுகளைக் கொண்டுதான் முரண்பாடற்ற உன்னத நிலையை சிருஷ்டிக்க முடியும். 'சாதிக்க முடியும்' என்று குறிப்பிட்டிருந்தேன். வாசகானுபவத்தில் சாதிக்கவே செய்யும். வாழ்வனுபவம் தான் சுபேச்சாபூர்வமானது. கவிதை மனிதனின் படைப்பு. ஆகவே இதிலே கவிதானுபவம், தானே உயர்வதும் உயர்த்தப்படுவதும் (யத்தனம்) ஆகிய இரண்டு நிலைக்குமே ஆளாகும். இதை உழைப்புமிக்க கலைஞர்கள் யாவரும் அறிவர். Conscious artist செய்யும் வேலை என்ன? 'உயர்த்துவது' தானே? கலையில் unconscious-ஆக நிகழ்வதுதான் தானே நிகழ்வது. conscious artist ஐத் தானே நல்ல கலைஞன் என்கிறோம்?

கவிதையில் வாழ்வனுபவத்தைச் சாதித்தல் என்பதுவே கவிஞனின் பிரச்னை. இந்த ரீதியில்தான் கவிதையில் படிமம் உன்னத நிலையாக அவனுக்குத் தெரியவந்துள்ளது. படிமத்தைத் தாண்டியே வாசகன் கவிதானுபவத்தை அடைய வேண்டும். படிமம் திரைதான் என்றாலும் படிமம் இல்லையெனில் அந்தக் கவிதை இல்லை. கவிதானுபவம் உண்டு. கவிதானுபவம்தான் (வாழ்வனுபவம்) எங்கேயும் உண்டே. கவிதையின் தாதுதான் கவிதானுபவமேயொழிய கவிதையின் உன்னதம் கவிதைக்கு ரூபத்தைத் தரும் படிமச்செறிவு, படிமநேர்த்தி ஆகியவைதாம்; படிம வகைகளல்ல, கவிதையிலுள்ள கவிதானுபவமே வாழ்வைப் போஷிக்கிறது என்றாலும்.

 
கேள்வி: 'உன்ன தரூபம்,' 'உன்னத நிலை,' 'வாழ்வின் உன்னத நிலையை கவிதை சித்தரிக்கிறது.' என்றெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது எந்த லட்சிய நிலையை? அதை விளக்க முடியுமா? 

பதில்: உள்ள நிலையே லட்சிய நிலை. ஆனால் இலட்சிய வாதத்தையும் இதையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது; லட்சியவாதம் உள்ளதோடு முரண்படக்கூடியது; சிதைக்கக்கூடியது; அவலமானது. உள்ளதோ முழுமையானது; ஆனந்தம் தரக்கூடியது. உள்ளதை உணர்தல் என்பது, நம் அனுபவத்திற்கு வருகிற ஒரு விஷயத்தை பூரணமாக அறிதல் என்பதாகும். அவ்வாறு அறிந்தவையே அந்த விஷயத்தின் அந்தப் பகுதியின் முழுமையாகும்; அதன் உன்னத ரூபமாகும். இத்தகைய ரூபத்தை ஸ்பர்சித்து நிற்கிற மன நிலையையே உன்னத நிலை என்கிறோம்.

லட்சியமோ நடந்து முடிந்ததான அனுபவ தீர்மானத்தினின்று ஏற்படுவது. வாழ்வு அல்ல. இலட்சிய நிலை என்று நாம் இங்கே குறிப்பதோ வாழ்வை. இலட்சியத்தோடு இலட்சிய நிலையை அணுக அணுக, இலட்சிய நிலை, கண்டுகொள்ளக் கிடைக்காது, இலட்சியம்தான் மேலும் மேலும் தடித்து, லட்சிய நிலை மேலும் மேலும் அவலம் தருவதாகக் காணப்படுகிறது. ஆக, லட்சியம் உண்மையைக் காண உதவுகிறதல்ல, அல்லவா?

 

கேள்வி: கவிஞனுக்கு ஒரு லட்சியம் வேண்டாமா? Committed Writings என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நமது நினைப்புகள் ஏதும் வேண்டாம். அது என்னவென்று பார்ப்போம். 'வாழ்வின் இலட்சியம் வாழுதல் அன்றி வேறு என்னவாக இருக்கிறது? கவிஞன் வாழ்வின் இலட்சியமான வாழுதலில் அழுந்திக்கிடப்பவன். அதை வெளிப்படுத்துதலே அவனது வேலை. இதுவே ஆதாரமாக நின்று பிற இலட்சியங்களையும் அவனுக்கு வென்று தருகிறது. பிற இலட்சியங்கள் சும்மா கமிட் பண்ணிக்கொண்டு விடுவதாலெல்லாம் இலட்சிய நிவர்த்தி அடைந்து வாழ்வு உய்வு பெற்றுவிடுவதில்லை . ஏனெனில் இலட்சிய பூர்த்தி என்பதும் வாழ்வு உய்வு பெறப்போராடுதல் என்பதும் 'தன்'னில் மையங்கொண்டுள்ள விவகாரமாதலால் குறுகியது. சிதைவு ஏற்படுத்தக்கூடியது, யாதொரு ஆக்கமும் அதனால் நிகழ்வதில்லை. இருங்கள், இதை உங்களுக்கு இன்னும் தெளிவாக்க முயற்சிக்கிறேன்.

நமக்குத் தேவையான மாங்காயை, தேங்காயை, அதற்கும் உயரே உள்ள இன்னொரு கனியை உத்தேசித்து நாம் ஒரு அம்பை (ஏவுகணையை) எய்கிறோம். அந்தக்குறி நிறைவேறியோ, நிறைவேறாமலோ எய்யப்பட்ட அம்பு திரும்பி பூமியில் விழுந்து தவிர்க்க முடியாத பெரும் நாசத்தை விளைவித்தே தீர்க்கிறது.

இப்பொழுது நாம் இன்னொரு வகை அம்பை எய்கிறோம். யாதொரு குறிக்கோளுமற்று வெறுமே உயரே நோக்கிப் பாய்கிற இந்த அம்போ, மாங்காய் தேங்காய் இன்னும் உயரேயுள்ள அந்தக் கனி எல்லாவற்றையும் கொய்து கொடுத்துவிட்டு இன்னும் மேலே மேலே பூமியின் ஆகர்ஸ்ண எல்லையைத் தாண்டி 'வீணே' சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆற்றல் தான் பூமியின் ஆகர்ஸ்ண எல்லையைத் தாண்டி விடுவதால் மண்ணில் விழுந்து சிதைவு ஏற்படுத்தாது, காரியங்களைச் சித்தியாக்க விண்ணுக்குச் சென்றுவிடுகிறது.

 

கேள்வி: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், எதற்குமே கட்சி கட்டாத, கட்சி சேராத, தார்மீக சக்தியையே வாழ்வு (அல்லது கவிதை) போதிப்பதாகப் படுகிறது.

பதில்: ஆம்.
 

கேள்வி: தார்மீகத்தை எவ்வாறு நாம் அடையாளம் கண்டு கொள்வது? 

பதில்: அதற்கு ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக சுயமான ஒரு புத்தி நுட்பம் இருந்தாக வேண்டியுள்ளது. இந்த புத்தி நுட்பமில்லாதவர்கள்தான் சான்றுகளையும், முன்னோடிகளையும், கட்சிகளையும், தலைவர்களையும், இலட்சியங்களையும், இஸம்களையும், கடவுள்களையும் சார்கிறார்கள். இத்தகைய மனிதர்களுக்கும்கூட வாழ்வு அனுபவமாவதும், தார்மீகம் எழுவதும், அடையாளம் காணப்படுவதும் மேற்படியான சரக்குகளையெல்லாம் மனசு சுத்தமாய்த் துறந்து நிற்கிற அபூர்வ நிலையில் மட்டும்தான். இதனால்தான் ஒருவன் அமைப்பிலும் தலைவரிலும் ஒரு லெளகீக அவசியத்திற்காக வெளியுலகில் சேர நேர்ந்திருந்தாலும் அகவுலகில் அவன் மனம் எதிலும் சாராதிருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மற்றப்படி அத்தகைய மனங்களுக்கு வாழ்வு அனுபவமாவதில்லை . தார்மீக சக்தி செயல்படுவதில்லை. அவர்களை ஊக்குவிப்பது, செயல்படுத்துவது எல்லாமே அவர்களின் 'கடவுள்'கள் தாம். அதாவது அவர்கள் மேல் சுமையேறியிருக்கும் அவர்களது சிந்தனைகள்தாம். கவிதையை இவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?

 

கேள்வி: ஆனாலும், மேலே சொல்லப்பட்ட மனிதர்கள்தாம் பெரும்பாலோர். அவர்களால் நம் படைப்புகள் ரசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே? 

பதில்: கவிதை என்னும் தனிக்கலைக்கு மிகக்குறைந்த வாசகர்களே சாத்தியமாகியிருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? மற்ற இலக்கியத் துறைகளில் இவர்கள் கவனிப்பைப் பெறுவதும் அதன் உன்னதமான கவித்வ ஒருமைக்காக அன்றி, அதற்குப் பரிமாணம் தரும் (மனித) விகார வாழ்விற்குத்தான். இவ்விலக்கியத்திலும் அதன் கவித்வ ஒருமையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டவன் நிச்சயமாக கவிதைக் கலையின் வாசகனாகிவிடுவான், கவிதையிலும் கூட முன்னர் குறிப்பிட்ட பெரும்பான்மை மனிதர்களுக்குத் தீனியாகிற (மனித) விகார வாழ்வு உள்ளதுதான் என்றாலும், இங்கே, கவிதையில் இந்த அம்சம் ஒரு தார்மீக சக்தியை, அல்லது பிரபஞ்ச உயிர்ச்சியை வெளிப்படுத்தும் குறியீடாகவும், படிமமாகவும் உருமாறிவிடுவதால், இந்த ரகஸியம் மனசிலாகாத பலருக்கு நமது கவிதை சுவைப்பதில்லை. 

 

கேள்வி: பாரதியின் தேசீய கீதங்களில் எங்கள் தாய், ஜெய பாரத, பாரத தேசம் போன்ற பாடல்கள் தவிர பெரும்பான்மையானவை கவிதைகளல்ல என்று ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி?

பதில்: அங்கே, பாரதி என்னும் ஒரு கவிஞன் பாட்டுக்காரனாக நிறைய செயல்பட்டிருக்கிறவன். மக்கள் கூட்டம் சுதந்திர உந்துதல் பெற கூடி நின்று பாட பாடல் எழுதுவது அவனது நோக்கம். எத்தனை பேர் அடங்கிய கூட்டத்தில் ஒலிக்கப்பட்டாலும், கலை என்பது ஒவ்வொருவரையும் தனியாக அணுகி அவனுடைய இதயத்தைத் தொட்டு, வாழ்வின் அடி நாதமான பண்புகளை உலுக்கிவிட்டு, அங்கிருந்து அவனை உத்வேகங்கொள்ளச்செய்வது. இதில் பங்கமேற்படின் அது கவிதையாகாது. பாரதி நிறைய பாடல்களில் தமிழனுக்கும், இந்தியனுக்கும் 'சூடு' உண்டாக்க என்று பொய்யான தற்பிரபாவங்களில் தானும் மூழ்கி, மூழ்க்கும் படியான ஆழமற்ற பேத உணர்வுகளினின்று எழுப்பிய குரல் கவித்வ நேர்மையற்ற ஒன்றாகும். இதுவேதான் மேற்படியான கவிதைகளின் சாராம்சங்கள் தார்மீகமற்ற, கண்ட இஸம்களின் தற்பெருமைகளல்லாது வாழ இயலாத பெரும்பான்மை மனிதப் பிண்டங்களுக்குப் போஷாக்காகி இன்றைய சமூகத்தில் பல குணக்கேடுகளும் நாசமும் நிலவுவதற்குக் காரணமாகிறது.

 

கேள்வி: ஆமாம். இன்று நம்மிடையே பேசப்படுகிற தமிழியம், இந்தியம் ஆகியவைகள் பொய்யான உன்னதங்களைத்தான் கொண்டிருக்க வேண்டுமா என்ன?

பதில்: தனது தன்மயம் கொழுக்கவே விரும்புகிறவனுக்கு பொய்யான உன்னதங்களே கைக்குக் கிட்டும். உண்மையான பெருமைகளை உணர இந்தத் தன்மயம் அற்றிருக்க வேண்டும். தன்மயம் மற்றொன்றுக்கு முரணானது. ஆகவே போரையும், ஹிம்சையையும் விளைவிக்கக்கூடியது. இன, தேச உணர்வுகள் தன்மயத்தை, ‘தன்’னை மையமாகக் கொண்டிருப்பவையல்லவா? ஆகவே, இன, தேச உணர்வுகளல்ல, ஒரு பிரபஞ்ச ஜீவி என்றே உணர்விலே தான் என்றும் விடுதலையை நல்குகிற சக்தி மறைந்து கிடக்கிறது. இங்கிருந்தே உண்மையான சுதந்திர வேட்கையை எழுப்பமுடியும். பாரதி அத்தகைய கவிஞனாக மற்ற இடங்களில் செயல்பட்டிருப்பதைக் காணலாம்.
 

கேள்வி: அப்படியானால் இன விடுதலைப்பற்றி, தேச விடுதலை பற்றி கவிதை எழுத முடியாதா? எழுதப்படுகிறதே?

பதில்: முடியாது. ஏனென்றால் ஒரு இனம் என்பதோ, ஒரு தேசம் என்பதோ முழுமையான மனிதகுலமல்ல. பகுதியானது. கவிதையோ முழுமையான வாழ்வைப் பரவுவது. இன விடுதலை பற்றி தேச விடுதலை பற்றி எழுதப்படுகிற கவிதைகளில் அவ்வுணர்வு, அகண்ட பிரபஞ்ச உணர்வின் திவலையே ஆகி, இன தேசங்கள் வெறும் குறியீடாகி, மொத்த மனித விடுதலையைக் குறிக்கிறதாகிவிடும். வெறும் இன தேச விடுதலைக்குள்ளேயே உழலும் உணர்வு கவிதையுமாகாது, சுபிட்சமும் பயக்காது.

 

கேள்வி: அகண்ட பிரபஞ்ச உணர்வின் தெறிப்பாக, இன தேச எல்லைகள் வெறும் குறியீடு அல்லது படிமமாக மாறியுள்ள கவிதைக்கு ஒரு உதாரணம் தாருங்களேன். 
பதில்: நமது தேசிய கீதமான தாகூரின் பாடலையோ பாரதியின் பாரத தேசத்தையோ எடுத்துப் பாருங்கள்.

 

கேள்வி: தேசியவாதம் (Nationalism) தன்மயம் கொண்டது; பகுதியானது; ஆகவே கவிதையாகாது. தேசியவாதம் பிரபஞ்ச பாஷையில் பேசப்படுமானால் தேசியவாதமே மறைந்து கவிதையாகிறது என்கிறீர்கள். பிரபஞ்ச பாஷையென்று அன்பு, நீதி, சுதந்திரம், அழகு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவைகள் தன்மயமற்றிருக்கின்றன என்பதற்காகத்தானே? இதனை விளக்கமாகக் கூற முடியுமா?

பதில்: அனுபவத்தில்தான் நீங்கள் இதை உணர முடியும். நீங்கள் உங்களைப் பற்றிய தேசம், இனம், மதம், ஜாதி, கண்டம், ஏன் உங்களுக்குப் பெயர் கூட இல்லாதபடி இன்னொருவரற்ற ஒரு உலகத்திலிருந்து வருவதாக வைத்துக்கொள்ளுங்கள். (மனோதத்துவ ரீதியாக இந்நிலை சாத்தியம்தான்). எந்த ஒரு நாட்டின் பள்ளியிலும் கற்றவரிலலை நீங்கள். நல்லது - கெட்டது, செய்யத்தகுந்தது - தகாதது என்ற நெறிகள் தெரியாது உங்களுக்கு. 

அந்த உலகத்திலிருந்து நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு காட்சி: இரண்டு மனிதர்கள். ஒருவன் மற்றவனைப் பிடித்து வைத்துப் பலமாகத் தாக்கிக்கொண்டிருக்கிறான். இப்போது உங்கள் மனதை உற்றுக் கவனியுங்கள். உங்கள் மனம் துணுக்குறுகிறது ஏன்? சற்றே யோசியுங்கள். அக்காட்சி இசைவாக இல்லை உங்களுக்கு அல்லவா? ஏன்? அங்கே தாக்கப்படுபவனாக உங்களை நீங்கள் இனங்காண்பதாலா? - சரி, நீங்கள் திடகாத்திரமானவராயிற்றே. தாக்குபவனாக உங்களை நீங்கள் இனங்காணும் போது உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லை. ஏன்? தாக்குபவன், தாக்கப்படுபவன் யாருமே உங்களுக்கு வேண்டியவர்கள் இல்லை. பின்னே உங்கள் மனம் துணுக்குறுகிறது. இருவரும் உங்களைப் போன்ற மனிதர்கள் என்ற இன உணர்வினாலா? இல்லை. ஏனெனில் வரும் வழியில் ஒரு பூ மலர்ந்துள்ளதைக் கண்டீர்கள்; அதை முத்தமிட்டீர்கள். 

தூய மலைக்காற்றும் அருவியின் நீரும் சக மனித உறவைவிட உங்களுக்கு அன்யோன்யமான, அந்தரங்கமான சுகத்தைக் கொடுத்ததே. மேலும் ஒரு புலி தன் இரைக்காக மான் மீது பாய்ந்தபோது துணுக்குற்ற உங்கள் மனம் நிச்சயமாக தன் (மனித) இனம் என்பதிலேயே மையங்கொண்டிருக்க முடியாது, அத்தகைய உங்கள் மனம் ஒரு செயலை அழகற்றதாக, அன்பற்றதாக, நீதியற்றதாக, சுதந்திரமற்றதாக உணர்ந்து விடுகிறதே, எப்படி? இதையே உள்ளுணர்வு என்கிறோம். இது யார் தந்தது என்பது இன்று அசட்டுத்தனமான கேள்வி. எங்கிருந்து தோன்றுகிறது? தன்மயமற்ற மனத்திலிருந்து. அதுவே உள்ளது. உணரப்பட வேண்டியது. தன்மயமற்ற மனநிலைதான், தன்மயமான காரியங்களில் துணுக்குறுகிறது என்றில்லை.

ஆனால் இந்தத் துணுக்குறலும் அவசமும் (agony) தான் ஆக்கத்தைத் தரவல்லது, மாறாக, தன்மயமான மனமும் தன்மயமான காரியங்களால் துணுக்குறுகிறதே அந்தத் துணுக் குறலும் அவசமும் அழிவையே தரவல்லது. கவித்வமற்றது.

 

கேள்வி: நீங்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டே வருகிறேன். வாழ்வும் கவிதையும் வேறுவேறல்ல என்றாகிறது. சரிதானே?

பதில்: தவறு. வாழ்வும் கவிதையின் பொருளும் (கவிதானுபவம்) வேறு வேறல்ல என்றுதான் பார்த்தோம். யார் மேற்கூறிய வாக்கியத்தை உபயோகித்தாலும் இந்தப் பொருளில்தான் அது புரிந்துகொள்ளப்பட வேண்டும். நிச்சயமாக வாழ்வு வேறு; கவிதை வேறு. கவிதை மனிதனின் படைப்பு - வாழ்வு அத்தகையதல்ல; வாழ்வு உள்ளது என்று நமக்குத் தெரியும். 

 

கேள்வி: கவிதை (படைப்பு) வாழ்வைப் போஷிக்கிறதா?

பதில்: கவிதையிலுள்ள கவிதானுபவமே (வாழ்வே) வாழ்வைப் போஷிக்கிறது.


கேள்வி: கவிதானுபவமுள்ளதுதானே கவிதை; கவிதை வாழ்வைப் போஷிக்கிறது என்று சொன்னால் என்ன? 

பதில்: கவிதையில் கவிதானுபவம், கவிதை எழுதுதல் என்ற இரண்டு சங்கதிகள் இருக்கின்றன என்ற அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். கவிதை வாழ்வை போஷிக்கிறது என்றால் அப்புறம் கவிதை எழுதுவது தான் உன்னதமான காரியமாகிவிடும். கவிதை எழுதுவது என்பது கவிதா னுபவத்தைப் போன்ற உன்னதமான காரியமல்ல.
 

கேள்வி: ஏன் அப்படி?

பதில்: கவிதானுபவம் தன்மயமற்றது. கவிதை எழுதுவது தன்மயத்தைக் கொண்டது. படைப்பாளி இந்த இரண்டோடும் தொடர்புடையவனாகிறான், இந்த வாழ்க்கைதான் படைப்பாளி உன்னதமானவனாய்த்தான் இருக்கமுடியும் என்ற நியதியைச் சிதறடிக்கிறது. தன்மயம், போட்டி - பொறாமை, போர், வன்முறை, அழிவு ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருப்பது. ஆகவேதான் படைப்பவனுக்கு கவிதானுபவத்தைவிட கவிதை எழுதுதலே முதன்மையாகிவிடும்போது மகாகேவலமாகிவிடுகிறான். கவிதை எழுதுவதை விட கவிதானுபவமே அவனுக்கு எப்போதும் முதன்மையாகி விடும்போது அவன் நல்ல மனிதனாக இருக்கிறான்.

 

கேள்வி: கவிதை எழுதுவதிலே உற்சாகம் கொண்டுவிட்டவனுக்கு மீண்டும் கவிதானுபவம் கிட்டுவது சாத்யமில்லையல்லவா?

பதில்: ஆமாம். அவன், எழுதியவற்றையே திரும்பத்திரும்ப வேறு வேறு விதமாக புகழ், பணம் ஆகியவற்றிற்காக எழுதிக்கொண்டிருக்கிறான். என்றோ அடைந்த அந்த கவிதானுபவமும் அவனிடமும் நீர்த்துப்போய் வீர்யம் இழந்த படைப்புகளாய் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். தன் நிலையை உணர்ந்து அவன் அதிலிருந்து விடுபட வேண்டும். தன் முயற்சியின்றியே தன்மயம் கரைந்து நிற்கிற பொழுதுகள் கிட்டி அவன் கவிதானுபவம் கொண்டு மீண்டும் படைக்க வேண்டும்.
 

கேள்வி: கவிதானுபவமுள்ளவனே கவிதையைப் படைக்கிறான். கவிதானுபவமுள்ளவனே கவிதையை ரசிக்கிறான். அனுபவம் தான் அனுபவத்தைப் போஷிக்கிறது. இதற்கிடையில் கவிதை படைக்கப்படுவதும் படிக்கப்படுவதும் எதன் பொருட்டு?

பதில்: உங்களுக்குத் தெரியாதா என்ன? படைப்பவன் படைப்பதில் கிடைக்கிற ஒரு திருப்திக்காகவும், சந்தோஷத்திற்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் கூட படைக்கிறான். அப்போது அவன் அடைகிற மனவெழுச்சி வேறு; கவிதானுபவம் (வாழ்வனுபவம்) அவனுக்குக் கிடைக்கிற போது அவன் அடைகிற மனவெழுச்சி வேறு. முன்னது தன்மயமானது. பின்னது தன்மயமற்றது. கவிதானுபவமுள்ள, உண்மையான ரசிகன் கவிதையை ரசிக்கையில் கவிதையிலுள்ள கவிதானுபாவத்தையே அடைகிறான். கவிதானுபவமுள்ளவனும் கவிதையை ரசிக்கையில், அவ்வளவு ஒசத்தியான கவிதையை நாங்கள் ரசிக்கிறோமாக்கும் என்ற தன்மயமான திருப்தியையும் சந்தோஷத்தையும்கூட அடைவதுண்டு. இது படைப்பாளி படைத்து முடிக்கிறபோது அவனுக்கு உண்டாகிற சந்தோஷத்திற்கு நிகாரனதே.

பொதுவாக, படைப்பவனின் முதுகுப் பக்கமாய் நின்றுகொண்டு "வாழ்வுதான் இருக்கவே இருக்கிறதே, எதற்காக படைக்க வேண்டும்.'' என்ற கேள்வியை உலகில் எரிகிறது. படைப்பவன் எவன் ஒருவனது சந்தோஷத்தையாவது கண்டு காழ்ப்பும் எரிச்சலும் அடைந்ததாலேயேதான் என்றிருக்கிறது. ஆனால் இங்கே நீங்கள் பிரச்னையை அலசுகிற நோக்கில் உங்கள் தன்மயத்தை இழந்தே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
 

கேள்வி: கவிதானுபவமுள்ளவனே கவிதையை ரசிக்கிறான். கவிதானுபவமில்லாதவன் கவிதையை ரசிக்கமுடியாது. கவிதானுபவமுள்ளவனுக்கோ அனுபவம் கவிதையில்தான் என்றில்லை. எங்கும் கிடைத்துக் கொள்ளுகிறது. ஆகவே கவிதையின் (படைப்பின்) ஜீவாதார அடிப்படை படைப்பவனின் அந்த அற்ப சந்தோஷத்தானா?


பதில்: அல்ல. படைப்புகள் வாழ்வனுபவத்தைத் தாங்கியுள்ள வாழ்க்கையை நிறையத் தருகிறது என்கிற கணக்கின்படி, ஒருவனுக்கு அவனுடைய வாழ்க்கையைவிட படைப்புகள் விஸ்தாரமானது. படைப்பிலுள்ள வாழ்வனுபவம் ஒரு ஆழ்ந்த வாழ்வனுபவமாக இவன் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இவன் வாழ்வையே மாற்றவும் கூட செய்து விடுகிறது.

 

கேள்வி: அத்தகைய படைப்பைப் படைத்தல் தன்மயம் கொண்ட செயலா?

பதில்: எத்தகைய படைப்பாக இருந்தாலும் சரி, படைத்தல் என்பது தன்மயம் கொண்ட செயலாகவே இருக்கிறது. அந்த சந்தோஷத்திற்காகவேதான் அவன் படைக்கிறான். அந்தப் படைப்பை அத்தகைய உன்னதமாக்குவது, அவனுடைய கவிதானுபவத்தை சிதறாமல் செம்மையாக வெளிப்படுத்திக்காட்ட அவன் கண்டுள்ள படிம விவகாரம் தான்.

வாசக மனத்தில் மேற்படி கவிதானுபவம் ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லை. அவனுடைய வேலை தன்னுடைய கவிதானுபவத்தைச் செம்மையாக வெளிப்படுத்திக் காட்டக்கூடிய கருவிகளைக் கண்டுபிடித்துக் கொள்ளுதலேயாகும். சமூகத்தைப் புரட்ட என்றும், மனிதனைத் திருத்த என்றும் இயற்றப் படுகிற எந்த படைப்புகளும் கவித்வ நிலையை அடைந்த படைப்புகள் தரும் மனவெழுச்சியைத் தருவதில்லை என்பதைக் கவனியுங்கள்.

படைப்பவன், தன்மயமற்ற கவிதானுபவம் எனும் பானத்தை, தன்மயமான படைப்பு எனும் கோப்பையில் வைத்துக்கொடுக்கிறான். வாசகனோ கவிதானுபவத்தையே பருகுகிறான். அந்தக் கோப்பை ஒன்றுதான் படைப்பாளிக்குச் சொந்தம். அதில் அவன் பெருமை கொள்கிறான். கவிதானுபவம் வாசகன் மனதில் போய் சமூகத்தில் போய் என்ன செய்கிறது என்பது உண்மையில் படைப்பாளியின் உத்தேசமேயல்ல. அப்படி உத்தேசத்தோடு புறப்படுவதில் நிச்சயமாக கவித்வமே இருக்காது. அப்படி உத்தேசமிருந்தாலும், அவ்வுத்தேசம் அழிந்து கவிதையே வந்து நிற்கும். கவிதானுபவத்தின் இயல்பே எவ்வித உத்தேசத்திற்கும் அடங்காதது என்பதே இதன் ரகசியம்.

***

இது 1993ஆம் ஆண்டு 'காஞ்சனை' வெளியிட்ட 'கவிதை பற்றி' நூலில் இரண்டாம் பகுதி. நூலின் மொத்தம் ஐந்து பகுதிகள். முதல் பகுதியில் புவனா சந்திரன் கேள்விகள். கடைசி பகுதியில் சீனியம்மாள் (ஆர். ஆர். ஸ்ரீனிவாசம்மாள்) கேள்விகள். இடையில் உள்ளவை ஸ்வரம், உயிர்மெய், கனவு இதழ்களில் வெளியானவை. ஸ்வரம் இதழில் இதழில் வெளியானபோது ஸ்வரம் நந்நதலா, பிரம்மராஜன் ஆகியோரின் கேள்விகளுடன் வாசகர்களின் கேள்விகளுக்கும் தேவதேவனின் பதில்கள் பிரசுரமாகின. 1982ல் ஸ்வரம் இதழ் நின்றபின், 1984ல் 'உயிர்மெய்' இதழ் இந்த உரையாடலை மறுபிரசுரம் செய்தது, மேலும் தொடரவும் செய்தது. 1988ல் கனவு இதழில் மீண்டும் இவ்வுரையாடல் தொடர்ந்தது. இறுதியாக, சீனியம்மாளும் தேவதேவனும் நடத்திய உரையாடலும் சேர்க்கப்பட்டு 1993ல் நூல் வடிவம் கண்டது.

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

கவிதைப் பற்றி - தேவதேவன், அழசி ஈபுக்ஸ் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு
 
*** 
(நன்றி: அழசி ஸ்ரீனிவாசன்)

 

Share:

தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி… - ஜெயமோகன்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி வந்தடைந்தேன் என்பது உதவிகரமானது. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சாதாரணமாகக் கவிதை பற்றிப்பேசும் விமரிசகர்கள் அதன் குறைந்தபட்ச சாத்தியங்களைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். காரணம் அதுவே புறவயமானது என அவர்கள் நம்புகிறார்கள். கவிதையில் எதுவுமே புறவயமானதல்ல. எனவே ஒரு கவிதையிலிருந்து நான் போகக்கூடிய – அதாவது எழுதக்கூடிய அளவுக்குப் போகக்கூடிய – அதிகபட்சத்தை முன் வைப்பதே உதவிகரமானது.


தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்கவித்துவ நிலையிலும் கோர்க்கும் சரடு புறத்தருக்க நிலையிலும் அமைந்திருக்கும். கவிதையில் அபிரக்ஞை நிலையிலுள்ள பகுதிகளும் பிரக்ஞை நிலையில் ஆக்கப்பட்ட பகுதிகளும் சந்திக்கும் விதம் மிகவும் முக்கியமானதாகும். சிறிய கவிதைகளில் இவை ஒரு கணம் உரசி விலகுவது போலவும் நீண்ட கவிதைகளில் இவை புணர்ச்சி போல இணைந்து நெளிவதாகவும் படுகிறது. நீண்ட கவிதைகளில் இவ்விரு சரடுகளையும் கண்டடைந்து ஒன்றை மற்றொன்று அர்த்தப்படுத்துமளவு விரித்தெடுப்பது ஒரு வாசிப்புக்கலை. பிரக்ஞைநிலை வரிகள் படிமங்களைப் புழக்க தளத்துடன், கால இடத்துடன், தருக்கத்துடன், அர்த்த தளத்தின் திடத்துடன் இணைக்க முயல்வதையும், அபிரக்ஞை நிலை வரிகள் நிர்ணயிக்க முடியாத உணர்ச்சிவெளிப்பாடாக உளறலாக இருப்பதையும் காணலாம். தருக்கதளம் அல்லது பிரக்ஞைதளம் கவிதையின் சிதறலான விரிவைத் தொகுத்து அதன் தரிசன முழுமை நோக்கி இட்டுச் செல்வதாகவும் அமைகிறது.

‘ஆயிரம் மனிதர்களோடு நாம் அமர்ந்திருக்கையில்

மொத்த உலகத் தீமையின்

ஆயிரத்திலொரு பங்கு என் தலையை அழுத்துகிறது
நான்கு பேராக நாங்களிருக்கையில்
நான்கிலொரு பங்கு என் தலையில்
மூன்று பேராக நாங்களிருக்கையில்
மூன்றிலொரு பங்கு என் தலையில்
இரண்டு பேராக நாங்களிருக்கையில்
இரண்டிலொரு பங்கு என் தலையில்’

’காந்தப் பூதமொன்று வதைத்தது என்னை
மொத்த உலகத் தீமைக்கும்
மூலகாரணன் நான் என.’

’இந்தத் துயர மழை கோடானகோடி வயதான
இந்தப்பாறைகளின் இதய நெருப்பைத் தேடுகிறது
அமைதி கொண்டு துயர் மேகங்களின் நடுவிலிருந்து
எட்டிப்பார்க்கும் சூரியனின் காயங்களுக்கு
ஔஷதமாகின்றன.’

’இறுதிக் கண்ணீர்த் துளிகளை
அப்போதுதான் உதிர்த்து முடித்த
தாவரக் கடல்களின் பச்சை இலைக் கண்கள்.’

’ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
காற்று அலுப்பு நீங்குகிறது பச்சைக்கடல் பொங்குகிறது
மலை தன் பாரமிழந்து வெறும் புகை மண்டலமாகிறது
பாறையை ஊடுருவிக் கொண்டிருக்கும்
குருட்டு வண்ணத்துப்பூச்சிக்குக்
குறியாகிறது பாறையின் இதயநெருப்பு
ஒருபக்கம் பாலாகவும்
ஒருபக்கம் குருதியாகவும் வழிந்து கொண்டிருக்கும்
விசித்திர அருவிகளைத் தாண்டி அதுபோகிறது
குகையிருள்களில் உறைந்துபோன
கருப்புப் பெண்களை உசுப்பியபடி
தீமையின் வாள் எதிர்க்க
அது தன் உடல் பெருக்கி எழுகையில்
தாக்குண்டு உடல் சரிந்து
உறையாது ஓடும் தன் குருதிநதியின் கரையோரமாய்
அது போகிறது போகிறது
உயிர் பற்றியபடி, தன் உயிர் உறிஞ்சும் தாகத்திற்கு
உதவாத தன் குருதி நதியைக் கடந்தபடி
அது போகிறது போகிறது.’
(அது போகிறது, போகிறது)

இக்கவிதையில் நீளம் முன்பு குறிப்பிட்ட இரு தளங்களின் இணைவை நீண்ட முயங்கி நெளிதலாக மாற்றிவிடுகிறது.தமிழ்க்கவிதை வாசகன் இத்தகைய கவிதைகள் மீது சற்று பொறுமையின்மையைக் கொண்டள்ளான். அதற்கான உளவியல், கலாச்சார காரணங்கள் பல. முன்பு குறிப்பிட்டதுபோல அபிரக்ஞை நிலைவரிகளை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை உதறிவிட்டு இதைப் படிக்கும் விதத்தை நாம் தவிர்த்து விட வேண்டும். இக்கவிதையின் முதல் நான்கு வரிகள் ஒருவகையான பிரக்ஞை நிலையில்தான் உள்ளன. அதே சமயம் திட்டவட்டமான புறத்தருக்கமும் அவற்றில் இல்லை. தெளிவற்ற அக எழுச்சியைக் குத்துமதிப்பாகth தொட்டு மீட்ட முயல்கின்றன அவை. ஓடும் பறவை எழுவது போல.


‘ஏகாந்த பூதமொன்று வதைத்தது என்னை’ என்ற வரி சட்டென்று சுருதியில் இயைந்து எழுந்து அ-பிரக்ஞை நிலையில் சஞ்சரிக்கிறது. கனவுச்சாயல் கொண்டவையும், திட்டவட்டமான அர்த்தங்களைக் கூறிவிட முடியாதவையுமான படிமங்களின் அடுக்கு தொடங்குகிறது. அந்த எழுச்சி சட்டென்று இறங்கி


‘அப்போதுதான் உதிர்ந்து முடிந்த
தாவரக் கடல்களின் பச்சை இலைக்கண்கள்’


என்ற வரிகளில் ஒரு நெடுமூச்சுடன் இளைப்பாறல் கொள்கிறது. இந்தப் படிமம் பிரக்ஞைபூர்வமாக உருவாகும் ஒரு இடைவெளி என்று படுகிறது. அந்த இடைவெளியின் சிறு பிரகாசம் தொடர்ந்து படிமங்களில் மெல்ல சிரத்தையுடன் பேணி முன்னெடுக்கப்படுகிறது.


‘ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
காற்று அலுப்பு நீங்குகிறது’


என்ற வரிகள் கவிதையில் உறைந்து கனத்த குற்றவுணர்வின் இருண்மையை உதறும் முயற்சிகள் அன்றி வேறல்ல. அது மீண்டும் மேலெழும்.


‘ஒருபக்கம் பாலாகவும்
ஒருபக்கம் குருதியாகவும்.’..


என்ற வரிகளில் வந்து முடிகிறது. மீண்டும் கனவுத்தீவிரம் கொண்ட படிமங்களின் உதிரநதி.


‘… தன் உயிர் உறிஞ்சும் தாகத்திற்கு உதவாத
தன் குருதி நதியக் கடந்தபடி
அது போகிறது போகிறது…’


என உச்சம் கொண்டு முடிகிறது கவிதை.

இக்கவிதையில் முதல் மூன்று வரிகளிலும் வெளிப்படும் குற்ற உணர்வும் அதிலிருந்து எழும் வண்ணத்துப்பூச்சியும் பிற படிமங்களையெல்லாம் இணைக்கின்றன. முதல் வாசிப்பில் இக்கவிதை ஒன்றோடொன்று பொருந்தாத மூன்று பகுதிகளின் தொகுப்பாகப்படும். மொத்த உலகின் தீமையின் பாரம் விழுந்ததும் ஒரு சிரம். பிறகு துயரமழையின் ஈரம் பட்ட கோடானு கோடி வயதான பாறைகள். பிறகு வண்ணத்துப்பூச்சியின் ஆழத்துப் பயணம். ஆனால் முதலிரு பகுதிகளின் சாரமே வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பதையும், அதன் வருகைக்குப் பிறகு காற்று அலுப்பு நீங்குவதையும், பச்சைக்கடல் பொங்குவதையும், நாம் உணரும்போது கவிதை ஒருமை கொள்கிறது. வண்ணத்துப்பூச்சி பறந்து போகும் குகை – கோடானுகோடி வயதான பாறைகளின் இதயநெருப்பு தூங்கும் ஆழமன்றி வேறல்ல. அந்தப் பறவையின் பயணம் இக்கவிதையைத் தாண்டி எல்லைக்கு வெளியே உள்ள வெளியில் நகர்கிறது இறுதியில். தேவதேவனின் கவியுலகில் இத்தகைய தொகுப்புத்தன்மை கொண்ட பல கவிதைகள் உள்ளன. கவிதையின் மையச்சரடாக ஒரு படிமம் திட்டவட்டமாகத் தொடரும் கவிதைகள் அவற்றில் உண்டு. உதாரணம் ‘தொட்டபெட்டா’ மையச்சரடு உள்ளார்ந்த ஒட்டமாக இருக்க அதன் வெளிப்பாடுகளாக பல்வேறு படிமங்கள் மாறிமாறிவரும் கவிதைகள் உண்டு. உதாரணம் நதி, சிதை. கவித்துவ எழுச்சி கொண்ட பகுதிகள் மூலம் பிறபகுதிகளை விரிவடையச் செய்தும், பிரக்ஞையுடன் படைக்கப்பட்ட பகுதிகளை வைத்துக் கவித்துவ எழுச்சிகளைத் தொகுத்தும், உணர்வெழுச்சியின் இடைவெளிகளில் வரும் மௌனங்களை அர்த்தபூர்வமாக வாசித்தும் நாம் முழுமை செய்து கொள்ள வேண்டியவை இக்கவிதைகள்.


சித்தரிப்பின் வலிமையைச் சார்ந்து தங்கள் இருப்பை நிறுவிக்கொள்ளும் பல கவிதைகளைத் தேவதேவன் எழுதியுள்ளார். உணர்வுகள் நேரடி வெளிப்பாடு கொள்ளாமல் காட்சிச் சித்தரிப்பாகவோ நிகழ்வுச் சித்தரிப்பாகவோ வெளிப்படுகின்றன. அறிக்கையிடுதல் அல்லது நாடகத்தன்மை ஆகியவை இவற்றின் இயல்பாக உள்ளது. தமிழ்க் கவிதையில் நாம் பெரிதும் புழங்கும் வடிவம் டைரிக்குறிப்பு வகை. அவையே உடனடியாக நமக்கு உவப்பாக அமைகின்றன. காரணம் நாம் கவிதையைக் கவிஞனின் சுயத்தின் நேரடி வெளிப்பாடாகவே அறிந்துள்ளோம். உணர்ச்சிக் கவிதைகள் மூலம் உருவானதும், நவீனத்துவம் மூலம் வளர்க்கப்பட்டதுமான மனோபாவம் இது. இந்நிலையில் கவிதையின் நாடகத்தன்மையை நாம் சரிவர உள்வாங்க முடிவதில்லை. சங்ககாலம் முதல் நம் கவிதையில் இருந்து வந்துள்ள நாடக அம்சம் சமகாலக் கவிதையில் இல்லாமல் ஆகிவிட்டது. நாடகம் உணர்வுகளின் சந்திப்பு முனை, அது கவிதைக்கான மிகச்சிறந்த தருணமும் ஆகும். அங்கு தெரிந்த கங்கையும் யமுனையும் மட்டுமல்ல தெரியாத சரஸ்வதியும் வந்து சந்திக்க முடியும்.


அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி 1

‘சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழு நிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுழற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்தெழவும் அறிந்த மேதை

வெளியேயிருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது.
அரைக்கணம் தாமதித்திருக்குமா
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த குரலாக’

காட்சி 2

‘நான் உள்ளே நுழைந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் ஏசு
பட்டினிக் குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப் போலும்
ஒரு பார்வையை வீசிவிட்டு
ராட்டையை சுழட்டினார் காந்தி
அதீத துக்கத்தால் என் இதயம் வலிந்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது.’
(உருமாற்றம்)

இந்நாடகத்தில் வசனங்கள் குறைவு. மௌனமான உறைந்த சித்திரம் போலுள்ளது இது. கதாபாத்திரங்கள் மீது வர்ணனையாகப் பதியும் கவிஞனின் சொற்கள் இக்காட்சிக்கு விரிவை அளிக்கின்றன. வெளியேயிருந்து கனத்த துயருடன் உள்ளே நுழையும் குரல் தன் அவலத்தைச் காந்தியின் இனிய துயரமாக மாற்றிக் கொள்ளும் அந்த ஒரு கணமே நாடகாந்தம்,கவிதை. இரண்டாவது காட்சியின் பின்னணி வருணனை மூலம் காட்சி மாறுபட்டுள்ளது. புத்தரும் காந்தியும் ஏசுவும் தங்கள் தோற்றங்களிலிருந்து நழுவி விழுந்து மண்ணில் கிடக்கிறார்கள். இப்போது உள்ளிருந்து வெளியேறுவது ஓர் அவலக்குரல். இது இன்னொரு நாடகாந்தம். இவ்விரு உச்சங்களுக்கும் இடையே நீண்ட மௌன இடைவெளி உள்ளது. இரு தரிசனங்கள், இரு உலகங்கள், இருவகையான யதார்த்தங்கள். இரு உலகங்களினூடாகவும் ஊடுருவிச் செல்லும் அந்த அவலக்குரலை நாம் நமது காலகட்டத்தின் சாரமாக அடையவும் காண்கிறோம். தாகம் கொண்டு எரியும் அக்குரல் நீர் அருந்திய பழைய சுனைகள் தூர்ந்துவிட்டன. அது அணையாத நெருப்புடன் அலைய விதிக்கப்பட்டுள்ளது. நம் காலகட்டத்தின் தவிப்பும் துயரும் இக்கவிதையினூடாக வெளிப்படுகிறது.


படிமங்களுக்குப் பழகிப்போன தமிழ்வாசகனை இப்போது எழுதப்பட்டு வரும் நேர்கவிதை பலவகையிலும் தொந்தரவு செய்கிறது. சங்ககாலம் முதல் தமிழ் மரபில் இத்தகைய கவிதைகள் உள்ளன. பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற பிரபலமான பாடல் சிறந்த உதாரணம். நகுலனின் பல கவிதைகள் முன்னோடியானவை. ஏறத்தாழ நேர் கவிதைகளின் தளத்தைச் சேர்ந்தவை ஒற்றைப்படிமக் கவிதைகள். இவற்றை வாசகன் நேர் கவிதை என்று எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் படிமத் தன்மை கவனத்திலிருந்து தவறி விடக்கூடும். பலசமயம் கவிதையில் ஒரு படிமத்தை இன்னொரு படிமமே தெளிவுபடுத்துகிறது. ஒரேயொரு படிமம் மட்டுமுள்ள கவிதையில் கவிஞனின் உபரி விளக்கம் அதற்குத் தேவையாகிறது. (உதாரணம், பசுவய்யாவின் ‘பறக்கத் துடி’ எனும் கவிதை. ‘துடிப்பிலிருந்துதானே பற்றும் உயிர்’ என்ற இறுதி வரி கவிதைக்குள் நுழைவதற்கான வாசலாகும்.) உள்ளே நுழைய சமிக்ஞைகள் இல்லாத ஒற்றைப் படிமக் கவிதைகள் பலவற்றைத் தேவதேவன் எழுதியுள்ளார். அவருடைய தரிசன உலகு பற்றிய பொதுவான புரிதல் உள்ள ஒருவன்தான் எளிதாக அக்கவிதைகளில் நுழைய முடியும்.

‘வரைந்து முடித்தாயிற்றா?

சரி

இனி தூரிகையை

நன்றாகக் கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாக
வருடிக் கழுவி விடு
கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்.

சுத்தமாய்க் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டுப் போகாதபடி
எப்போதும் மேல்நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப் போட்டுவை
ஒரு குவளையில்.’
(தூரிகை)

தேவதேவன் கவிதைகளுடன் அறிமுகம் உடையவர்களுக்கு ‘வரைந்து முடித்தாயிற்றா’ என்ற வரி முக்கியம். (பொழுதுகளோடு நான்புரிந்த யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு உன்னருகே வருகிறேன்) தூரிகையை நன்றாகக் கழுவுதல் என்பது தேவதேவனுக்கு எப்போதும் தனிமையின் ஒரு பயணம். கழுவப்படாத வண்ணங்கள் சிறிதளவாவது மிஞ்சுவதாகவே என்றும் அத்தூரிகை உள்ளது. அதன் கூரிய நுனி எப்போதும் மேல்நோக்கிய வெளியில் இருக்க வேண்டும். இந்த ‘மேல்நோக்கிய பயணம்’ எப்போதும் தேவதேவன் கவிதைகளில் ஓர் இலட்சியக் கனவாக உள்ளது. பிரமிள் கவிதையில் நெருப்பும், தேவதேவன் கவிதைகளில் மரங்களும் சதா அதற்கான தவத்திலேயே ஆழ்ந்துளளன. இந்தத் தெளிவின் விரிவாக நாம் ‘மிருதுவான தூவிகள்’, ‘கழுவப்படாத வண்ணங்கள்’ ‘வரைந்து முடித்த ஓவியம்’ ‘பூமியில் புரண்டு பழுதுபடாதபடி வைத்தல்’ ‘வைக்கும் குவளை’ ஒவ்வொன்றையும் புதுப்புது அர்த்தத் தளங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

நாடகப் பாங்கான ஒரு காட்சியினூடாகப் படிமங்களைக் கலந்து கவிதைக்குரிய வெளியொன்றைத் தன் பல கவிதைகளில் தேவதேவன் அடைகிறார். அப்படிமங்கள் மூலமே நாடகம் நடைபெறுகிறது. நாடக உச்சம் ஒரு புதுப்படிமத்தின் பிறப்பாகவே நிகழ்கிறது.

‘இடையறாத இயக்கத்தின் மடியில்
(உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம்)
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்
அகாலத்திலிருந்து காலத்திற்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டைக்
கவனித்துக் கொண்டிருந்தது.
காபிபோட்டுத் தந்தது
சோறு சாப்பிட அழைத்தது
ஆக எங்கள் சீட்டுகள் விழுந்தது
வெறுமையின் மீது
காலாதீதத்தின் பிரமிப்புடன் சீட்டுகள்
எங்கள் சொற்களாயின எனினும்
வெல்ல வெல்ல எனத் துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை சுழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்றுக் கலையவே துடித்தன
ஒவ்வொரு வரிடமிருந்தும்
அவை சுழன்று விழுந்தன

அப்போது இப்போது எனச்
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒருவிதை
திடீரென வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டிற்று
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்களுடைய ஒரு மலர்’
(சீட்டாட்டம்)

ஆறு இதயங்களினாலான ஓர் இடம் இந்நாடக வெளி. அங்கு இடையறாத இயக்கம் அகாலத்திலிருந்து இறங்குகின்றன அச்சீட்டுகள். காரணம் காலம் புழக்க உலகமாக மாறி அவர்களைச் சூழ்ந்து சரளமாக இயங்கிக் கொண்டுள்ளது. சீட்டுகள் காலத்தைத் தாண்டுபவையாகவும் காலத்தை அளப்பவையாகவும் உள்ளன. வெல்லவும் தோற்கவும் துடிக்கும் சீட்டுகள் கழன்று விழும்போது சொற்களாகின்றன. ஏதோ ஒரு கணத்தில் புதைந்து காத்திருந்த விதையொன்று மலராகியது. அம்மலரின் ஆறு இதழ்களுக்குள் அவர்களுடைய சீட்டாட்டம் தொடர்கிறது.


மானுட உறவுகளின் பரஸ்பரப் போராட்டத்தை (வெல்ல வெல்ல என்றும், என்னை வெல்லு என்றும்) பரஸ்பரச் சார்ந்திருத்தலை அலுப்பை, முடிவின்மையை, சட்டென்று அவர்களை மீறி முளைக்கும் அபூர்வ தருணங்களை, அத்தருணத்தில் புது அர்த்தம் கொள்ளும் அந்த உறவுகளை இக்கவிதை கூறுகிறது போலும். ஒரு புரிதல் வசதிக்காக இக்கவிதையை அறுவர் கொண்ட ஒரு குடும்பச் சூழலாக உருவகிக்கலாம். வெல்லவும் தோற்கவும் துடிக்கும் சீட்டுகள் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் மாறி மாறி விழுந்தபடியேதான் உள்ளன. அது ஆறு இதயங்களின் உரையாடலும் கூட. ஊடே எதிர்பாராதவிதமாக முளைக்கும் அந்த மலர். அதனுள் தொடரும் அந்த சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி இல்லை. ஆட்டம் மட்டுமே உள்ளது.


இன்று எந்த ஒரு வாசிப்பும் பொழிப்புரையாக இருக்க முடியாது. வாசகனின் ரசனையுலகில் ஊடுருவ ஒருபோதும் விமரிசனம் அனுமதிக்கப்படக்கூடாது. இவ்வெல்லைக்குள் நின்றபடி சில ரசனைக் குறிப்புகள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன. என் ரசனையனுபவத்திலிருந்து முக்கியமாகக் கூறவேண்டிய விஷயம் ஒரு கவிஞனின் படைப்புலகு மீதான தொடர்ந்த சிரத்தை அவனுடைய கவிதைகளை உகந்த முறையில் ரசிக்க மிக அவசியமாகும் என்பதே. அவனுடைய ஒரு வரியை விரிவாக்க அவனுடைய மொத்தக் கவிதையுலகும் வரவேண்டும். பல காரணங்களால் கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்ட இன்று கவிதைகள் ஆங்காங்கே பிரசுரமாகும்போது இது சிரமம் தான். ஆனால் தொகுப்புகள் இம்முறையிலேயே அணுகப்பட வேண்டும். முதல்பார்வையில் கவனம் பெறும் கவிதைகள் பலசமயம் எளிய உத்தி சோதனைகளாகவோ, நமது வேரூன்றிய ரசனைமுறைகளைத் திருப்தி செய்பவையாகவோ இருக்கக்கூடும். தொடர்ந்த வாசிப்பில் விரிவதே சிறந்த கவிதை. தொடர்ந்து கவனம் இல்லாமல் நல்ல கவிதைகள் நம்மை எட்டாது போய் விடக்கூடும். கவிதை ரசனை என்பதன் முதல் பொருள் கவிதைமீதான சிரத்தை என்பதே.


இந்த நான்கு உதாரணங்களையும் இங்கு குறிப்பிடுவதற்கு விசேஷமான காரணம் உண்டு. அடர்த்தியான சுருக்கமான சுயக் குறிப்புகளாகவே நாம் கவிதையைக் கண்டு வருகிறோம். இவ்வடிவம் நவீனத்துவம் மூலம் உருவாகி வந்தது. தனிமனிதனின் சுயத்தை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்ற கோட்பாடு இதற்குப் பின்னணிக் காரணமாக உள்ளது. நான் என்பதை ஓர் மாறும் இடமாகவோ, பரவிச் செல்லும் குறிப்பீட்டுப் பரப்பாகவோ, நிலைத்தன்மை இல்லாத அடையாளமாகவோ அணுகும் பின் – நவீனத்துவ சிந்தனைகளுக்கும் சரி, நான் என்பது பேசுதளம் சார்ந்த தாற்காலிக உருவகம் மட்டுமே என்று கருதும் இந்திய (கீழை) மரபுச் சிந்தனைகளுக்கும் சரி, இவ்வடிவம் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.


சமகாலக் கவிதை ஒன்றை ஒன்று பற்பல வகைகளில் ஊடுருவும் கோடுகளினால் ஆனதாகவே இருக்க முடியும். இங்கு ‘நான்’ ‘நீ’ ‘காலம்’ என்று எவ்விதமான பொது உருவகங்களும் இருக்க இயலாது. கவிதைக்குக் கவிதை மாறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளாகவே அவை அடையாளப்படுத்தப்படும். இந்நிலையில் தன்னிலையை (நான்) உறைய வைத்தபிறகு எழுதப்படும் டைரிக்குறிப்பு வடிவக் கவிதைகள் பெரிதும் மறுபரிசீலனைக்குரியவை. மாறுபட்ட தன்னிலைகள் மோதும் களமாக கவிதையை வடிவமைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இறுக்கமும் ஒருமையும் கொண்ட கவிதை வடிவுக்குப் பதிலாக உள்ளூர முரண்பட்டு முட்டிமோதி முன்னகரும் வடிவங்கள் தேவையாகின்றன. அதாவது வடிவரீதியாக நமக்குத் தேவை ஒரு ‘புதுக் கற்பனாவாதம்’. அது பழைய கற்பனாவாதத்தின் தங்குதடையற்ற பெருக்காக இருக்க முடியாது. ஏனெனில் அது நவீனத்துவத்தைக் கடந்து வந்து விட்டான பிறகு நவீனத்துவம் உருவாக்கித் தந்த வடிவச் சிறப்புகள் சிலவற்றை எந்நிலையிலும் இழக்க முடியாது.


ஆக நாம் நவீனத்துவத்தின் கூர்மையுடன் கூடவே கற்பனாவாதத்தின் கொந்தளிப்பான இயக்கத்தையும் அடைய வேண்டியுள்ளது. அதற்குரிய வடிவங்களை அமைக்கும் முயற்சியின் சில சாத்தியங்கள் தேவதேவன் கவிதைகளில் உள்ளன. அவற்றில் சிலவே இங்கு குறிப்பிட்டவை. இவற்றை வாசிப்பதற்கான பயிற்சியின் முதல் தேவை நவீனத்துவ கவிதையின் ஒருமுகப்பட்ட இயக்கத்தை இவற்றில் எதிர்பாராதிருத்தலாகும். இவற்றின் சிக்கலை, சட்டென்று சுருதியிறங்கி தருக்கத்துக்குச் சரியும் இயல்பை, ஒன்றையொன்று மறுக்கும் விதமான ஊடேபாயும் படிமங்களை, பொருளில்லாத உளறலாக வரும் வரிகளை இவ்வடிவத்தின் விசேஷ இயல்புகளாகக் காணும் பயிற்சி நமக்குத் தேவை. அதே சமயம் முன்னோடி முயற்சி என்ற முறையில் கணிசமான கவிதைகள் அவை உத்தேசித்த இடத்தை அடைய முடியாது சரிவதையும், கணிசமான கவிதைகள் மடங்கி நவீனத்துவம் சார்ந்த ஒருமைக்குத் திரும்பியிருப்பதையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. நவீனத்துவத்தின் எல்லைகளை மீறி முன்னகரும் பயணத்தின் வெற்றி தோல்விகளாகவே தேவதேவன் கவிதைகளை நாம் காணவேண்டும். கணிசமான தோல்விகள் உண்டு எனினும் வெற்றிகள்தான் முக்கியமானவை, ஏனெனில் அவை முன்னோடியானவை.

***

(நன்றி: ஜெயமோகன்.இன், டிசம்பர் 20, 2012)

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

 

Share:

தேவதேவன்: கவிதைகள் கொண்டு மெய்நிலை சுட்டல் - கடலூர் சீனு

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
கற்றது
கவிதையெனில்...

கல்லாததென
எதுவுமில்லை.

எதைக் கற்றாலும், எவ்வளவு கற்றாலும், கற்காது மீதமுள்ள கடலளவின் முன் கற்றவை கைம்மண் அளவே என்கிறது கல்வி மரபு. எனில் உண்மையில் இனி கற்க ஏதும் இல்லை என்றொரு நிலை உண்டா? உண்டு என்கிறது மெய்யியல் மரபு.

கல்வி என்பது மானுடத்தின் ஒட்டுமொத்த இறந்தகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கிருந்து முன்னகர்ந்து 'இங்கே', 'இப்போது' எனும் நிகழ்காலத்துக்கு வந்து விட முடிந்தால், அப்போது நிகழும் 'ஆகுதல்' எனும் நிலையில், இனி கற்க ஏதும் இல்லை எனும் நிலையும் உள்ளுறைந்ததே என்பது அறிவில் அமர்ந்த அறவோர் சொல்.

வாசகனை இறந்தகாலத்தின்  அறிவு, அனுபவம் இவற்றிலிருந்து எழுந்து வந்து இங்கே இக்கணம் நிகழும் 'என்றுமுள்ள ஒன்றை' மொழி வழியே தொட்டுத் திறக்கும் அனுபவம் ஒன்றை கையளிக்க வந்ததே கவிதைக் கலை.

கவிதை உட்பட இலக்கிய வடிவம் அத்தனையும் கையாளும் உள்ளுறை கச்சா எல்லாம் அறுபடாத ஒற்றை வரலாற்றின்  வாழ்வின் தொடர்ச்சியில் இருக்கிறது. வெளிப்பாட்டு மொழியோ இவ்வனைத்தையும் கொண்டு இவ்வனைத்தையும் கடந்து 'அப்பால்' உள்ள ஒன்றை சுட்டி விடும் யத்தனம் கொண்டதாக இருக்கிறது. ஆம் கலை என்று மதிக்கத்தக்க  கவிதை உள்ளிட்ட எந்தவொரு இலக்கிய வடிவவும் மொழியாலானதுதான் என்றாலும் அது 'மொழிக்குள் மட்டுமே' முடிந்து போகும் ஒன்றல்ல.

எனில் இலக்கியம் கையாளும் தனித்துவம் கொண்ட இந்த மீ மொழிக்கு உள்ள  இத்தகு குணம் என்பது, பொதுவாகப் புழங்கும் பொது மொழியிலும் சாரமாக உள்ள ஒன்றா?

ஆம். காரணம் மானுடம் மொழியை இயற்கையில் இருந்தே பெற்றுக் கொண்டது என்கிறார் எமர்சன். மொழி ஒரு ஏணி போல, படிகள் வழியே 'இறங்கி' நம்மால் புழங்கும் தளத்துக்கு வர இயல்வது போலவே, படிகள் வழியே 'ஏறி' நம்மால் அறிதல் எனும் உயர் தளத்துக்கும் செல்ல முடியும்.

உலகில் உள்ள அத்தனை மொழிவெளிப்பாட்டு சாராம்சத்தை ஒரு கடல் என உருவகித்தால் அதை லாங் என்கிறது மொழியியல். அதில் இருந்து அலைகள் என எழும் (தமிழ், ஆங்கிலம் போல) அவ்வொரு தனித் தனி மொழியையும் பரோல் என்கிறது அம்மரபு. எமர்சனின் பார்வையை துணை கொண்டால் இந்த லாங் எனும் முழுமையை பரோல் எனக மாற்றும் ஒன்றென  'இயற்கை' யைக் காண இயலும்.

இயற்கையில் இருந்து எடுத்துக்கொண்ட மொழி வழியே, இயற்கையில் இருந்து வெகு தூரம் விலகி வந்து, தமக்குள் பேசிப்பேசி தன்னுள் சுருங்கி விட்டதா மானுடம்? அதை வினவுவதே தேவதேவனின் இக் கவிக்கூற்று.


இயற்கையே
மொழியாய் விரிந்துகிடக்கையில்

மனிதர்கள்

மொழியைப் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதானே

தோன்றிவிட்டது
பேச்சுக்கலை.

மொழி என்றல்ல 'மானுடம்' அடைந்த அனைத்துமே அது 'இயற்கயில்' இருந்து பெற்றுக்கொண்டதே என்கிறார் எமர்சன். இங்கே எமர்சன் சொல்லும் இயற்கை மற்றும் மானுடம் என்பது எதிரிடை என அமைந்தது அல்ல, முலையருந்தும் மகவுக்கும் அன்னைக்குமான உறவு.

இயற்கையிவிருந்து நூற்றாண்டுகளாக விலகி விலகி வந்து இன்று நாம் நின்றிருக்கும் எதிரிடை எனும் நிலையிலிருந்து மீண்டு, எமர்சன் பேசும் இயற்கையோடான அவ்வுறவை 'மீண்டும்' எய்த, செய்ய வேண்டுவது என்ன?

எதுவும் செய்யாதே. உடலாலோ மனதாலோ, அதை அதன் போக்கில் விட்டு, வெறுமனே கவனி என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. தனது உரை ஒன்றில் ஜிட்டு


"மெல்லிய தென்றல் நம்மை வருடுகயில் நாம் உணர்வது என்ன? காற்றுக்கு குறுக்கே  தடையாக நமது உடல் நிற்பதால் நமது உடல் உணரும் பௌதீக உணர்வு மட்டுமே அல்ல அது. அனைத்திலிருந்தும் சில கணங்கள் விடுபட்டு, அதன் பயனாக 'நம்மை நாமறியும்' கண நேர 'விடுதலை' அது"


இவ்வாறு கூறுகிறார்.

அதன் கவிதை வடிவம் போலும் தேவ தேவனின் இச்சொற்கள்.

அவனை ஒளிபெறச் செய்துவிட்டது

அவனை ஒளிபெறச் செய்துவிட்டது,

அவனைத் தொட்டுத் தழுவிச் சென்றது.

ஒரு மரத்தின் அத்தனை இலைகளுமா,

நிறைய மரங்களின்
நிறைய செடிகளின் நிறைய கொடிகளின்
கோடானுகோடி இலைகளும் கூடிக் கொஞ்சி இசைத்ததொரு காற்று!

நில விரிவின் முழுமை மொத்தத்தையும் வருடிச் செல்லும் காற்றே இக் கணம் நம்மையும் வருடுகிறது . அந்நில விரிவு எனும் முழுமையின் ஒரு பகுதியாக நாமும் மாறிவிடுகிறோம் .ஒளி கொள்கிறோம் எனும் உணர்வை அளிக்கும் கவிதை.

கண்ணால் காண்பது மட்டுமே இயற்கை அல்ல. நாம் காணும் இயற்கை நாம்  காண இயலா மகத்துவம் ஒன்றின் காண இயன்ற தோற்றம் மட்டுமே என்கிறார் எமர்சன். அந்த மகத்துவதைக் காண வழி உண்டா? உண்டு என்கிறார் எமர்சன். நம் இயல்பிலேயே நம்முள் பொதிந்திருக்கும் மகத்துவம் நோக்கிய தேவையும், புறக்கண்ணும் அகக் கண்ணும் அப்படி ஒரு அகப் புறப் பிரிவினையே இன்றி ஒத்திசைந்து இயங்குகயில் கிடைக்கும் 'முழுமைப் பார்வையும்' மகத்துவதைக் காண வழி செய்யும் என்கிறார்.


அந்த நிலை சுட்டும் தேவ தேவனின் கவிதைகளில் ஒன்று இது.

எண்ணங்களறுந்த


எண்ணங்களறுந்த ஓர் வேளைதான்,
திடீரென அப்போதுதான் அவன் அதைக் கவனித்தான்.

காற்று மரங்களோடு
உரையாடிக்கொண்டிருந்தது.

அறிவதற்கென்று ஒன்றுமேயில்லை.
காதல் மட்டுமே இருந்தது.

அது பாட விழைந்தது அமைதியும் அழகுமே அதனைச்
சீராட்டிக் கொண்டிருந்தன. சுற்றியிருந்தது மகத்தானதொரு வெளி.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் பல நூறு கொந்தளிக்கும் வினாக்கள் வழியே விரியும் தேடல் வெளி. அந்த நாவலின் கேள்விகளில் ஒன்று இது


அறிவு
அறியாமைக்குள் விரிகிறதா?

அல்லது

அறியாமை
அறிவுக்குள் ஒடுங்குகிறதா?

இந்த இரண்டையும் கடந்த அறிவு வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் ஒன்று விதை குறித்த படிமம்.

ஒரு விதை . அதை பல பத்து ஆற்றல்கள் கூடி முளைக்க வைக்கிறது. அது முளைத்து,துளிர்த்து, வளர்ந்து, காய்த்து,கனிந்து,உதிர்ந்து,பல நூறு விதைகளை சிதறடிக்கிறது.

ஒரு ஆத்மீக சாதகனின் மலர்ச்சி என்பது இப்படி இலைகள் பூத்து காத்து கனி என்று ஆவதற்கு ஒப்பானது. அக் கனி விழுந்து விதைகள் சிதறும் நிலையே ஆத்மீகப் பண்பாடு என்றாகிறது. விழுந்து சிதறும் தீஞ்சுவைக் கனியே குரு. அக்கனி வழி முளைக்கும் வித்துக்களே மாணவர்கள். உதாரணத்துக்கு குரு நித்ய சைதன்ய யதி எனும் கனியின் பல பத்து விதைகளில் ஒன்றே ஜெயமோகன். அத்தகு கனி எதுவோ அக்கனி குறித்த தேவ தேவனின் கவிதை இது.


உள்ளிருக்கும் கனி உயிர்க்க உயிர்க்க ஒவ்வொரு இதழாய் உதிர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மலர் ஒரு கனிக்காகவே.

ஃ என்பதன் கீழ் இடது புள்ளியை அகம் கொண்ட மனிதன், வலது கீழ் புள்ளியை, உடலாக அம்மனிதன் உள்ளிட்ட ஒட்டு மொத்த புறம், மேல் புள்ளியை அறுதி உண்மை என வகுத்துக் கொண்டால். இந்தப் பாதையில் கலைகளும், தான், பிரபஞ்சம், பிரபஞ்ச காரணம் எனும் முக்கூட்டு நிலை பாதையில் தத்துவமும் பயணிக்கிறது.

வரையறுக்க இயலா ஒன்றை எந்த எல்லை வரை சென்று வரையறை செய்ய இயலுமோ அதை செய்வது தத்துவம் என்றால், வரையறுக்க இயலா ஒன்றை எந்த எல்லை வரை சென்று அதை அவ்வாறே 'சுட்ட' இயலுமோ அதை செய்வதே கலை. கீழ்கண்ட தேவ தேவனின் கவிதையை அதன் உதாரணம் என்று சொல்லலாம்.

இருக்கிறது


இருக்கிறது மட்டுமே
இருக்கிறது

அதுவும்

காணும்போது மட்டுமே இருக்கிறது.

அது
இருக்கிறது என்பதுதான் முதலில் நாம் அறிந்தாக
வேண்டியது, அடுத்ததுதான் காண்பது என்றில்லாமல்,

காண்பதுவும் அதுவும் வேறு வேறில்லா ஒன்றாக அது இருக்கிறது.


ஒரு எல்லைக்கு மேல் இத்தகு கவிதைகளை விளக்கக் கூடாது. காரணம் இத்தகு கவிதைகள் என்பது நிலவை சுட்டும் விரல் போல, நிலவுதான் முக்கியமே அன்றி விரல் அல்ல.

கலைகளின் எல்லையும் அதுதான். கலை வழியே எவரும் ரமணர் ஆக முடியாது. ஆனால் ரமண நிலை எனும் மெய் ஞானத்துக்கு இணையான விவேக ஞானத்தைக் கைக்கொள்ள கலைகளின் வழியே இயலும். ஆகவே மேலான கலைகள் எல்லாமே நிலவை சுட்டும் விரல்கள்தான்.

நிலவை சுட்டும் விரல் போன்றவை இக் கவிதைகள் என்பதால், நவீன இலக்கியத்தின் 'புழங்கு தள' கவிதைகளை மட்டுமே அறிந்த வாசகர்கள் இவையெல்லாம் கவிதைகள்தானா என்று ஐயப்படக் கூட சாத்தியம் உண்டு. தேவ தேவன் வாசகருக்கு இத்தகு சந்தேகம் எழாது. தனக்கும் தனது கவிதைகளுக்கும் இடையே இடைவெளியே அற்றவர் தேவ தேவன். கவிஞனாக நின்று அவர் இடும் காற்புள்ளி கூட கவிதை என்றே ஆகும்.

உடல் வளர்க்க, வயிற்றுக்கு சோறனுப்ப, வாய்க்குள் திணிக்க பருக்கைகளைப் பற்ற மட்டுமே பிறந்திருக்கும் கோடானு கோடி விரல்களில், நிலவைச் சுட்ட எழும் சில பத்து அபூர்வமான விரல்களில் ஒன்று தேவ தேவனுடையது. அவ்விரலுக்கு என் அன்பு முத்தங்கள்.

*** 

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

ஒவ்வொரு துளியும் அமுதம் - ஜெகதீஷ் குமார்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. அதன் இடைவெளியற்ற களி நடனம், கணந்தோறும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உன்னதமான பேரிசை ஆகியன அவர்களை உவகைக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வுவகையிலிருந்து பெருகுகின்றன கவிதைகள். ஆனால் தூய உயிராக இயற்கையை அணுகி அறிதல் என்பது, இப்பேரிருப்பின் ஓர் அங்கமெனவே தன்னை உணர்ந்த, அல்லது தன்னுள்ளேயே இவ்விருப்பின் துடிப்பை உணர்ந்த ஓர் உள்ளத்தால் மட்டுமே சாத்தியமானதாகும். 

சில வேளைகளில் பேரிருப்பின் நடனத்தை மட்டும் காண வாய்க்கும் சிலருக்கு, எந்த மகத்தான இசைக்கு இந்த ஒத்திசைவின் நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலாமல் போய்விடுகிறது. அவ்விசையை அனுபவிக்க முடியாதபடி புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர் தடுத்துக் கொண்டு இருக்கிறது. எந்தச் செவிகளையும் எட்டாமலேயே இந்த உன்னத இசை வியர்த்தமாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் புலம்புகிறான் கவிஞன். ஆனால் அவ்விசையைச் செவி வழி நுகரும் வழி அவன் அறிவான். 

புலன்களின் விழிப்பும், உள்ளத்தின் அமைதியுமே இயற்கையை அதன் முழுமையில் தரிசிக்கத் தேவையான தகுதிகள். பிறர் முட்டி மோதியும் தகர்க்க முடியாத அந்தக் கண்ணாடிச் சுவர், உள்ளத்தின் பேரமைதியில் புலன்கள் விழித்துக் கொண்ட ஒருவனின் தொடுகைக்கு நொறுங்கி விடுகிறது. பிறகென்ன? இசை வெள்ளம் பெருகி எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுகிறது. சுவர் உடையும் அந்த மாயத்தருணத்தை தன் எளிய கவிமொழியில் சிறைபிடித்து, பிரபஞ்சத்தின் ரகசியத்தை நமக்கு இக்கவிதையில் அளித்திருக்கிறார் கவிஞர்.

ஒற்றை மரம்


ஒரு மேற்கத்திய இசை நடத்துநனைப் போல்
உணர்ச்சியுடன் கைகளை அசைத்து அசைத்து
உருகிக்கொண்டிருந்தது தனித்த வேப்பமரம் ஒன்று

வாத்ய கோஷ்டி ஏதும் எதிரே இல்லை!

வியர்த்தம் வியர்த்தம் எனக் கரைந்தது
அதன் கிளைகளூடே ஒரு காகம்

ஆச்சர்யத்துடன் அந்த மரத்தை நெருங்கினேன்
அது எழுப்ப விரும்பும் இசையைக்
கேட்க விரும்பியவன் போல் –

தன்னுள்ளே ஏராளமான வாத்யங்களுடன்
தானே இசைத்துக்கொண்டுமிருந்தது அது!

அந்த இசையைத்தான்
இன்னும் என் செவிகள் எட்டவில்லை
காரணம்?
புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர்!
ஆயினும் என் மனம் குதூகலித்தது
நான் கேளாத அந்த இசைக்கு
அந்த மரத்தின் உறுப்புக்கள் அனைத்தும்
நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு

திடீரென்று ஓர் அமைதி,
அந்தக் கண்ணாடிச் சுவரின் தொடுகை
அதை உடைத்துக்கொண்டு ஒரு வெள்ளம்
என் செவியையே மூழ்கடித்து
அடித்துச் சென்றுவிட்ட இசைவெள்ளம்

***

கவிஞர் தேவதேவனின் கவிதைகள் கவிமனம் கொண்ட வாசகரிடத்து நேரடியாகவே உரையாடுபவை. எளிமையான உருவம் என்ற சட்டகத்தை அணிந்தபடி, ஆனால் நுணுகிப்பார்க்கும் வாசகனுக்கு ஒரு கலைடாஸ்கோப் போல பலவிதங்களில் பொருள்களை அளித்துக் கொண்டே இருப்பவை. ஒவ்வொருவரும் அவரவர் மனத்தின் சூட்சுமத்தன்மைக்கேற்ப தேவதேவன் கவிதைகளின் பல்வேறு தளங்களுக்குள் நுழைந்து அனுபவிக்க முடியும். பின்வரும் கவிதை அவ்வகையைச் சார்ந்தது. இக்கவிதை எனக்கென அளித்த பிரத்யேக அனுபவத்தையே நான் இங்கு பகிர விழைகிறேன். வேறொரு வாசகர் இக்கவிதையை வேறொரு வகையிலும் அனுபவிக்க இடமிருக்கிறது.

ஞானியர் கூற்றுப்படி இப்பிரபஞ்சம் ஒரு தோற்றமே. மாயை என்று அதை  அழைப்பர். இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்கு (அல்லது இருப்பதுபோல அது காட்டும் தோற்றத்துக்கு) மூலம், இருப்பெனவும், உணர்வெனவும் சதா உள் நின்று அறிந்து கொண்டிருக்கும் ‘நான்’ எனும் அந்த நிலையே. நானே இங்கிருப்பவை அனைத்துக்கும் மூலகாரணம் என்று அறிந்து எல்லாத் தளைகளிருந்தும் விடுபட்டவனே ஞானி. நான் எனும் அந்த இருப்பின் ஒவ்வொரு துளியிலும் ஊறும் ஆனந்தத்தைப் பருகியபடி திளைப்பவன் அவன். அந்த நிலையை அடைய கவி நமக்கு விடுக்கும் அறைகூவலே இக்கவிதை.

முழுக்க முழுக்க படிமங்களால், உருவகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது கவிதை. உள்ளங்கைகளின் பாதுகாப்பில் வரும் சுடர் என, ஒரு குடம் தண்ணீரை ஏந்தி அலைகளில் அசைந்து வரும் படகு என்பது மிகுந்த மனவெழுச்சி தரும் படிமம். குடத்தின் ஒவ்வொரு துளி நீரும் அமுதம். அது மிதந்து வருவதோ பாலை நடுவில் உள்ள கடலின் மீது.  கடல் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. நான், எனது என்ற பற்று காரணமாகவே, பதற்றம் மிகுந்து,  உண்மைப் பொருளாய் ஒளிர்விடும் குடத்து நீர்,  மாயத்தோற்றமென எங்கும் நிறைந்திருக்கும் கடல் நீருடன் கலந்து விடுகிறது. மாயையுடன் நான் எனும் உண்மைப்பொருளைக் கலந்து விடுவதே எல்லாவற்றையும் இழந்து விடுவதற்குச் சமம். அதுவே சகல துயரங்களுக்கும் காரணம். அவற்றிலிருந்து விடுபடுதல் எங்கனம்?  தன்னையே ஒரு சூரிய அடுப்பாக மாற்றிக்கொள்வதன் இழந்தவற்றை மீட்டுவிட முடியுமா? அல்லது அந்த தண்ணீர்க் குடமாகவே தன்னை உணர்வதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபட முடியுமா? இதன் விடை அறிந்தவர்களுக்கு வினாக்களே அற்றுப் போய்விடுகின்றன. பின் குடத்தின் நீரே கடலையும் சமைத்திருக்கிறது என்று அறிந்து, அன்பின் இடையறாத முத்தங்களை அனுபவிக்க முடிகிறது.


***

அன்பின் முத்தம்
பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

நல்விருந்து - பைலார்க்கஸ்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் குறித்து எனக்கு ஒரு மயக்கம் உண்டு. அவற்றின் இருப்பில், பயன்படும் இசைவில் என பல்வேறு விஷயங்களை முன்னிட்டு அவை எனக்காக பெரும் தொண்டாற்றி வருவது போலொரு நினைப்பு. நான் பெருவிருப்புடன் அணிந்துவந்த ஒரு சட்டைமீதும் அப்படியொரு பற்று உண்டு. தேவதேவனிடமும் அப்படி ஒரு சட்டை இருக்கிறது.

சட்டை


என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)

எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது

நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்

தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?

அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்

 (பூமியை உதறியெழுந்த மேகங்கள், 1990)

 
தேவதேவனே கூறும் ஒரு நிகழ்ச்சியின் வழியாக இந்தக் கவிதையின் உள்ளனுபவத்தை வாசகரும் நெருங்கலாம். தேவதேவன் வீட்டில் ஒரு ஜன்னல் கதவு காற்றில் அசைந்து க்ரீச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் அந்தக் கதவின் சட்டத்தை இழைத்து, எண்ணெய் இட்டு இரண்டு மணிநேரம் போராடி, க்ரீச்சிடல் இல்லாமல் இயங்க வைத்திருக்கிறார். ஜன்னல் அமைதியாக இயங்கத் தொடங்கிய அத்தருணம் அவரை நெகிழச்செய்கிறது. வீட்டில் அனைவரிடமும் அந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொள்கிறார். மனிதர்களுக்கான பொருட்கள் என்ற இடத்திலிருந்து எழுந்த ஒருவன் தன்னை பொருட்களுக்கான மனிதனாக உணரும் தருணத்தைத் சொல்லும் கவிதை இது.


***

இது தேவதேவனின் பிற்காலக் கவிதைகளில் ஒன்று. ஒவ்வொரு நாளையும் 'வாழ்வென்னும் கோயிலின் பெரிய திருவிழா'வாகக் காணும் கவிஞனின் வாழ்வை அழகாகச் சித்தரித்த தேவதேவனின் தனித்துவமான கவிதை. கவிதை பற்றியும் கவிஞன் பற்றியும் தேவதேவன் எழுதியிருக்கும் பல கவிதைகளில் இக்கவிதைக்கு முக்கியமான இடத்தை வழங்கவேண்டும். அவரது 'காவியம்' என்ற கவிதையில் வரும்


'திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தீ
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?'

என்ற தவிப்பு இந்தக் கவிதையில் ஓர் தரிசனமாக வளர்ந்திருக்கிறது.

குன்றாத காதலுடன்


கோடையின் முடிவில்
குளிர்தரு சோலையில் நின்றுகொண்டு
மந்தமாருதத்தை எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்,

மந்த மாருதத்தின்
இறுதித் தேன்இரவில் நின்றுகொண்டு
கார்மேக விண்ணழகையும்,
மழையையும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்,

மழையின் முடிவில்
பசுமை அலை வீசும் வயல்வெளிகளில் நின்றுகொண்டு
மார்கழியை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்,

மார்கழியின் முடிவில்
பிரியமனமில்லாததோர் வைகறையில் நின்றுகொண்டு
வசந்த கோடையினை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்,

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு."

(அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது, 2017)

இக்கவிதையில் பருவங்களின் சுழற்சிக்குள் அந்தக் கவி மட்டும் எப்போதும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் நின்றிருப்பது ஓர் உன்னதமான உயர்ந்த இடத்தில். ஒவ்வொரு பருவத்தின் வனப்பிலும் லயத்திருக்கும் அவன் குன்றாத காதலுடன் வரும் ஒவ்வொரு பருவத்தையும் எதிர்நோக்கியபடியும் இருக்கிறான். இக்கவிதையின் உச்சம் முடிவில் வரும் குறளில்தான் அமைகிறது. தன் கவிமனத்தால் செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கிறான் கவிஞன். ஒவ்வொரு பருவத்திலும் நல்விருந்து வானத்தவர்க்கு.

*** 

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

What is meant by poetry? - கவிஞர் மதார்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
கவிஞர் தேவதேவன் வீட்டில் ஓர் ஆம்பல் குளம் உண்டு. வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளை ஆம்பல் குளத்திற்குள் கையை நனைக்கச் சொல்லி அதன் குளிர்ச்சியை உணரச் சொல்வார். உடனே நான்கைந்து மீன்கள் ஓடிவந்து குழந்தைகளின் கையில் அழுக்கு எடுக்கும். 'கூச்சமா இருக்கு' என்று சிரிக்கும் குழந்தைகளைச் சுட்டிக்காட்டி சொல்வார் "இவ்வளவுதான். இந்த chillness யை உணரவைத்தால் அதுதான் poetry". 

அந்த chillness ஐ எப்போதுமே தேவதேவனின் கவிதைகளில் உணர முடியும். தேவதேவனின் 'வீடும் மரத்தடியும்' என்கிற பின்வரும் கவிதை அந்த குளிர்ச்சியை நோக்கியே வரிகளின் வழி செல்கிறது. சொல்லப் போனால் தேவதேவனின் எல்லா கவிதைகளுமே அத்தகையது தான். 

***

வீடும் மரத்தடியும்


ஒரு பாலையில் போய் குடியிருக்கிறேன்.
காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில்
தங்கிக்கொள்கிறேன்; மாலையில் கிழக்கில்.
வீட்டிற்குள் எனது கற்புடைய மனைவி.
வெப்பம் தாளாத உச்சி வேளை
வீட்டுள் போய் புணர்ந்து பெற்ற குழந்தைகள்
வெளியே நிழல்தேடி அலைகின்றன

விதைகள் சேகரித்து வந்தன குழந்தைகள்
பாலையெல்லாம் சோலையாக்கத்
துடிதுடிக்கும் விதைகள்

இன்று
வீட்டின் முன்னே ஊமையாய் வளர்கிற மரத்துக்குக்
காற்று, பேசக் கற்றுக்கொடுத்துவிட்டது
பேசக் கற்றுவிட்ட மரம்
அனைவரையும் தன்னகத்தே அழைக்கிறது
மனைவியும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்
வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்
மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்.


***

இயந்திர கதியில் பாடத்திட்டத்தை முடிக்க பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிக்கு புதிதாக ஒரு ஆங்கில ஆசிரியர் வருகிறார். What is meant by poetry? என்ற தலைப்பில் பாடநூலில் சில பக்கங்கள் வருகின்றன. மாணவன் ஒருவனை வாசிக்கச் சொல்கிறார், அவன் வாசிக்கிறான். 

"கவிதையின் தரத்தைக் கணக்கிட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம், perfection ஐ கிடைமட்டக் கோட்டில் (vertical) வைக்கவும். Importance ஐ செங்குத்துக் கோட்டில் (horizontal) வைக்கவும். இரண்டின் அளவைப் பொறுத்தும் அதாவது perfection ஐயும் importance ஐயும் பெருக்க கவிதையின் தரத்தை நாம் கணக்கிடலாம். அதற்கேற்றபடி அதனை ரசித்து மகிழலாம்"

மாணவர்கள் அனைவரும் நோட்டுப் புத்தகத்தில் அளவுகோலை வைத்து perfection க்கும் importance க்கும் graph வரைந்து shade அடிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் சிரிக்கிறார், நாம் என்ன ஒரு பைப்பின் அளவையா கணக்கிடுகிறோம்,இது கவிதை. சொல்லிப் பார்க்கும் வாய்ப்பாடோ, செய்து பார்க்கும் கணிதச் சூத்திரமோ அல்ல. மேலே வாசித்த பக்கத்தை கிழியுங்கள் என்கிறார். வகுப்பறை முழுதும் கிழித்துத் தள்ளுகிறது. நேரடியாக வால்ட் விட்மனின் கவிதையை பின் வாசிக்கத் துவங்குகிறார். 

Dead poets society திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. கவிஞர் தேவதேவனும் ஓர் பள்ளி ஆசிரியர் தான். அவரது காலகட்டத்தில் கவிதையில் வடிவம் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதற்கு பின்வரும் காட்சியையே உதாரணமாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. தான் நம்பும் ஒரு கவிதையையே அவர் அன்று தொட்டு இன்று வரை கவிதையாக எழுதி வருகிறார். தேவதேவனின்  பின்வரும் கவிதை கவிதைக்கான சூத்திரங்களற்றது. கவிதையே சூத்திரங்களற்றது. 

***

பள்ளி இடைவேளையில்


பாவாடை மறைப்புள் உட்கார்ந்திருக்கும்
பெண்குழந்தை
தன் உடலிலிருந்து
திரவக் கத்திபோல்
பூமிக்குள் பாயும் நீரின்
மர்ம இசையை
உற்றுக் கேட்கிறாள்

மறைவற்று
ஒன்றுக்கை
இயக்கும் குறும்புச் சிறுவன்
நீரூற்றாய்ப் பொங்கி
மேல் நோக்கித் தெளிபடும்
நீரின் அழகை
உற்று ரசிக்கிறான்

பிடிபடாத ஒன்றின் இரகசிய இயக்கத்தைப்
பார்த்தபடி இருக்கிறேன் நான்

*** 

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

தேவதேவன் கணங்கள் - தமிழ்மணி

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
தேவதேவனின் உலகில் வாழ்வின் அத்துணை தருணங்களும் இருக்கின்றன. பறவைகள், மலர்கள், மலைகள், கடல், சூரியன் என்று ஆகப்பெரிய அம்சங்கள் அவரின் விரல் நுனியில் குடியிருக்கின்றன. மென்னுணர்வின் பொருட்டு மேலெழும் அழகியல் நிரம்பிய கவிதைகள் மட்டுமே அவரால் படைக்க முடியும் என்கிற பொதுப்புத்தி பலரிடத்தில் உண்டு. அழகியலுக்குள் அமைந்த அரசியல் கவிதையும் அவரால் எழுத முடியும். அப்படி ஒரு கவிதை உண்டு.

மானுடத்தின் மீது நம்பிக்கையிழக்கும் போதெல்லாம் அங்கொரு உயிரற்ற மற்றும் உயிருள்ள ஏதோ ஒன்றின் இருப்பு நம்மை நிலைநிறுத்தி வைக்கும். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு  உலகில் எதுவுமே சொந்தமில்லாமல் சமூக கூட்டிலிருந்து தூக்கியெறியப்படும் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த இடர்களை எப்படிக் கடக்க முடியும்?

ஒரு பூவின் மலர்ச்சி அவனின் பின்னிருந்து முன் நகர்த்தும்; அந்தப் பூதான் அவனது நிலம்; அவனது வானம்; அவனது உடைமை. இனத்தேசியம், மொழித்தேசியம் கடந்து உலவுகின்ற வாய்ப்பினை ஒரு சிறு மலரின் மலர்ச்சியில் அடையை முடியும் என்கிறது இக்கவிதை.

***

சின்னஞ் சிறிய மலர்

குத்தவைத்து
குனிந்து பார்க்கவைத்தது அவனை
இத்துணை அழகிய பூமியையும்
இத்துணை பெரிய வானத்தையும்
சொந்தமாக்கிக் கொண்ட புன்னகையுடன்
புல்லில் ஒரு சின்னஞ் சிறிய மலர்
பெண்ணின் மூக்குத்தி அளவேயானது.

அவனோ தனது சக மனிதர்களாலேயே
தாழ்த்தப்பட்ட ஒருவன்
எல்லையற்ற துகள்களும்
வலிகளுமானவன்
அவனுக்குத் தன் ஊரும் சொந்தமில்லை
இந்த பூமியும் சொந்தமில்லை
இந்த வானமும் சொந்தமில்லை

எல்லாம் ஒரு கணம் முன்புதான்.

***

நாம் இந்த உலகின் மையத்தை நோக்கி நகரவேண்டும் அல்லது பால்வெளியை நோக்கி. என்னைப் பொறுத்தவரை நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்சத்தின் சிறுதுகள் தான். " மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட பேச்சே வாழ்வு" என்கிறார் ஜோசப்  பிராட்ஸ்கி. இங்கு வாழ்வே கணங்களால் கட்டமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புதான்.  ஒவ்வொரு கதவிற்கு பின்னும் நம்மை வியப்பூட்டுகிற, எதிர்பார்க்காத கணங்கள் ஒளிந்திருக்கும். நம் மனம் பல வேறாக கணங்களைப் பொருத்தி இயங்கும். சிலபொழுது மீனாக, சிலபொழுது பறவையாக, சிலபொழுது பொழுதுகளாக, பாறையாக, ஆகாசமாக என சுழன்றடிக்கும். மரிப்பதற்கு முன்பு வரை நாம் கொண்டிருக்கும் அடையாளங்களை நாமே உருவாக்கியிருப்போம். மரித்த பின் வந்து ஒட்டும் அடையாளங்களோ ஜனரஞ்சகம் அவர்களின் தலையிலேயே ஏற்றிக் கொள்வது ஆகும். அதுவே காலகாலத்திற்கு நம் ஆன்மாவைத் தொடரும்.

துள்ளல்


நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்.
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை.
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்.
மேலும் ஒரு துள்ளலில் மரணம்.
மரித்த கணமே பறவை.



இந்தக் கவிதையில் இறப்பெய்திய மீனின் ஆன்மா பறவைக்குள் சென்றுவிட்டது அல்லது இறகு முளைத்து பறந்துவிட்டது. மரிப்பதற்கு முன்னும் பின்னும் இருந்த கணங்கள் வேறு வேறு. ஆனால் கணங்களே வாழ்வின் நகர்வை நிச்சயிக்கின்றன, தேவதேவனும்தான்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு



Share:
Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive