தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் |
அந்த chillness ஐ எப்போதுமே தேவதேவனின் கவிதைகளில் உணர முடியும். தேவதேவனின் 'வீடும் மரத்தடியும்' என்கிற பின்வரும் கவிதை அந்த குளிர்ச்சியை நோக்கியே வரிகளின் வழி செல்கிறது. சொல்லப் போனால் தேவதேவனின் எல்லா கவிதைகளுமே அத்தகையது தான்.
***
வீடும் மரத்தடியும்
ஒரு பாலையில் போய் குடியிருக்கிறேன்.
காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில்
தங்கிக்கொள்கிறேன்; மாலையில் கிழக்கில்.
வீட்டிற்குள் எனது கற்புடைய மனைவி.
வெப்பம் தாளாத உச்சி வேளை
வீட்டுள் போய் புணர்ந்து பெற்ற குழந்தைகள்
வெளியே நிழல்தேடி அலைகின்றன
விதைகள் சேகரித்து வந்தன குழந்தைகள்
பாலையெல்லாம் சோலையாக்கத்
துடிதுடிக்கும் விதைகள்
இன்று
வீட்டின் முன்னே ஊமையாய் வளர்கிற மரத்துக்குக்
காற்று, பேசக் கற்றுக்கொடுத்துவிட்டது
பேசக் கற்றுவிட்ட மரம்
அனைவரையும் தன்னகத்தே அழைக்கிறது
மனைவியும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்
வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்
மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்.
***
இயந்திர கதியில் பாடத்திட்டத்தை முடிக்க பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிக்கு புதிதாக ஒரு ஆங்கில ஆசிரியர் வருகிறார். What is meant by poetry? என்ற தலைப்பில் பாடநூலில் சில பக்கங்கள் வருகின்றன. மாணவன் ஒருவனை வாசிக்கச் சொல்கிறார், அவன் வாசிக்கிறான்.
"கவிதையின் தரத்தைக் கணக்கிட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம், perfection ஐ கிடைமட்டக் கோட்டில் (vertical) வைக்கவும். Importance ஐ செங்குத்துக் கோட்டில் (horizontal) வைக்கவும். இரண்டின் அளவைப் பொறுத்தும் அதாவது perfection ஐயும் importance ஐயும் பெருக்க கவிதையின் தரத்தை நாம் கணக்கிடலாம். அதற்கேற்றபடி அதனை ரசித்து மகிழலாம்"
மாணவர்கள் அனைவரும் நோட்டுப் புத்தகத்தில் அளவுகோலை வைத்து perfection க்கும் importance க்கும் graph வரைந்து shade அடிக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் சிரிக்கிறார், நாம் என்ன ஒரு பைப்பின் அளவையா கணக்கிடுகிறோம்,இது கவிதை. சொல்லிப் பார்க்கும் வாய்ப்பாடோ, செய்து பார்க்கும் கணிதச் சூத்திரமோ அல்ல. மேலே வாசித்த பக்கத்தை கிழியுங்கள் என்கிறார். வகுப்பறை முழுதும் கிழித்துத் தள்ளுகிறது. நேரடியாக வால்ட் விட்மனின் கவிதையை பின் வாசிக்கத் துவங்குகிறார்.
Dead poets society திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. கவிஞர் தேவதேவனும் ஓர் பள்ளி ஆசிரியர் தான். அவரது காலகட்டத்தில் கவிதையில் வடிவம் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதற்கு பின்வரும் காட்சியையே உதாரணமாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. தான் நம்பும் ஒரு கவிதையையே அவர் அன்று தொட்டு இன்று வரை கவிதையாக எழுதி வருகிறார். தேவதேவனின் பின்வரும் கவிதை கவிதைக்கான சூத்திரங்களற்றது. கவிதையே சூத்திரங்களற்றது.
***
பள்ளி இடைவேளையில்
பாவாடை மறைப்புள் உட்கார்ந்திருக்கும்
பெண்குழந்தை
தன் உடலிலிருந்து
திரவக் கத்திபோல்
பூமிக்குள் பாயும் நீரின்
மர்ம இசையை
உற்றுக் கேட்கிறாள்
மறைவற்று
ஒன்றுக்கை
இயக்கும் குறும்புச் சிறுவன்
நீரூற்றாய்ப் பொங்கி
மேல் நோக்கித் தெளிபடும்
நீரின் அழகை
உற்று ரசிக்கிறான்
பிடிபடாத ஒன்றின் இரகசிய இயக்கத்தைப்
பார்த்தபடி இருக்கிறேன் நான்
***
தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு
வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு
0 comments:
Post a Comment