Showing posts with label நகுலன். Show all posts
Showing posts with label நகுலன். Show all posts

தியானம்: ஐந்து கவிதைகள் - கடலூர் சீனு

மானுடம் கண்ட மகத்தான கவிதைகளில் ஒன்று, ரிக் வேதத்தின் ஸ்ருஷ்டி கீதம். நான்காயிரம் வருடம் கடந்தும் புதுமையும் தீவிரமும் குன்றாத அக்கவிதையை எழுதியது ஒரு ரிஷி, முனி, ஞானி. அங்கே துவங்கி பல உபநிஷத் கவிதைகள், கீதை தந்த கிருஷ்ணன், பாரதம் தந்த வியாசன், வால்மீகி, சங்கரர், தமிழ் நிலத்தின் சைவ வைணவ பக்தி இயக்க ஆளுமைகள் துவங்கி குணங்குடி மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை மகத்தான கவிதைகள் தந்த பலர் அடிப்படையில் ஞானியரும் கூட. 

பாரதியில் துவங்கும் நவீன கவிதை மரபின் வரிசையில் மகத்தான கவிதை எழுதிய பலர், அத்தகு கவிதை எழுதும் அந்த உச்ச கணத்தில், அந்த ஒரே ஒரு கணம் படைப்பாளி என்ற நிலையிலிருந்தும் மேலெழுந்து ஞானிகள் கொண்ட அனுபூதி நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். பாரதி முதல் பிரமீள் தொடர்ந்து தேவதேவன் வரை அது அவ்விதம்தான்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் கடலூர் சீனு ஆகிய நான் ஒரு ஞானி அல்ல. ஆனால் சில வருட யத்தனங்கள் வழியே வந்து சென்ற சிற்சில தியான அனுபவங்கள் அதன் சில நிலைகளை அறிந்தவன்.  அந்தப் பயணத்தில் நான் சந்திக்க நேர்ந்த சன்யாசிகளில் பெரும்பாலானோர் காவி கட்டி தாடி வளர்த்த ஞானியர் வார்த்தைகளை அந்த ஞானியர் போலவே பேசும் வெற்று ஆசாமிகள்.

அதே நிலைதான் நவீன  கவிதையிலும். இன்றுவரை தமிழில் எழுதப்படும்  நவீன கவிதைகளில்  கவிதைகளை நடிக்கும் போலி கவிதைகளே அதிகம். அதே பிரச்சனைதான் இத்தகு மெய்மை அனுபவம் தியான நிலைகளை சார்ந்து எழுதப்படும் கவிதைகளிலும் தொடர்கிறது. உதாரணத்துக்கு நகுலனின் கீழ்கண்ட கவிதை.


நான் ஒரு உடும்பு

நான் ஒரு கொக்கு

நான் ஒரு ஒன்றுமில்லை.


(நகுலன்)

யாருமில்லாத இடத்தில்

என்ன நடக்கிறது?

எல்லாமும்தான்.


எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்.

போன்ற எந்த ஆழமும் அற்ற அவரது எளிய எண்ண தெறிப்புகள் எல்லாம் மிகுந்த பரவசத்துடன் கொண்டாடப்பட்ட சூழலில் அவரது இந்த கவிதையும் அதே பரவசத்துடன் அனைவராலும் தூக்கி சுமக்கப் பட்டது. நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த புதிதில் நானும் இத்தகு கவிதைகளை   'ஐய்யோ மனுஷன் என்னமா சொல்லிப்புட்டாரு' என்று வியந்திருக்கிறேன்.

இந்த கவிதையில் முதல் வாசிப்பில் கிடைப்பது  'நான் 'ஒரு ஊர்வனவாக  இருந்து ஊர்ந்து, பறப்பனவாக எழுந்து பறந்து, ஒன்றுமில்லாமல் காணாமல் போவது. அடுத்த வாசிப்பில் உள்ள உடும்பு உறுதியை குறிக்கிறது. உறுதியான தவம். கொக்கு மிக மிக பொறுமையான காத்திருப்பை குறிக்கிறது. ஞானத்துக்கான காத்திருப்பு. ஞானம் தொடும் கணம் அந்த நான் ஒன்றுமில்லாமல் போகிறது. 

இந்த கவிதையில் உள்ள முதல் கோணல் இது எந்த நிலையிலும் அந்த கவிஞன் கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடு அல்ல என்பது. இரண்டாவது கோணல் இதில் உள்ள ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டு. அது முடிந்ததும் பிறகு என்ற கேள்விக்கு இந்த கவிதை வசம் எந்த பதிலும் இருக்காது. அது முன்னரே செத்து விட்டிருக்கும். மூன்றாவது இது கவிதை வடிவில் பூடகம் போல சொல்லப்பட்ட ஒரு மொழிக் குட்டிக்கரணம் மட்டுமே. இதை இன்று கூகிள் கூட எழுதும். 

தியானம் சார்ந்த, மெய்மை சார்ந்த தமிழின் நல்ல கவிதைகள் என்பது இத்தகு போலிகளை கடந்தே அடையவேண்டியது உள்ளது.


மெய்மை நிலை குறித்த கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று மரபார்ந்த பின்புலத்தில் தொல் படிமங்களை கையாள்வதன் வழியே பயணிப்பது. உதாரணம் பிரமிளின் தெற்கு வாசல் போன்ற கவிதைகள். இரண்டாவது வகை இத்தகு விஷயங்களை உதறி நேரடியாக அன்றாடத்திலிருந்து துவங்கி பேரியற்கை எனும் மனம் கடந்த அப்பால் நிலையை சுட்ட முயலும் கவிதைகள். உதாரணம் தேவ தேவன் கவிதைகள். இரண்டாவதன் உதாரணமாக ஒரு கவிதை.

புத்தகத்தை மூடு

விளக்கை அணை


உன் அறிதுயிலில் உணரப்படட்டும்


உன் மேஜையோரத்து

கொசுபத்தி போலவோ

ஊதுபத்தி போலவோ


இந்தப் பிரபஞ்சமெங்கும்

நிறைந்துகொண்டிருக்கும்


உறக்கமென்பதிறியா

விழிப்பொன்றின்

மாண்புகள்.


(தேவதேவன்)

சிறு வயதில் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று, ஒரு ஊதுபத்தியை ஏற்றிவைத்து அதன் மேல் ஒரு சிறிய கண்ணாடி காலி மீன் தொட்டியை கவிழ்த்து வைத்து, காற்று அசையாத அதற்குள் இழை போலும் மெல்ல மெல்ல ஊதுபத்தி புகை வியாபித்து நிறையும் காட்சியை அசையாது அமர்ந்து ரசிப்பது. எனக்குள்ளும் அந்த ஊதுபத்தி புகை போலும் ஏதோ ஒரு பரவசம் நிறையும்.

இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கொண்டிருக்கும் உறக்கம் என்பதை அறியா அந்த மாண்பிற்கு நம்  மேஜையோர ஊதுபத்தி புகையில் இருந்தே பாதை சமைக்கிறது இக்கவிதை. (புத்தகத்தை மூடு,) அறிவால் அல்ல, (விளக்கை அணை) புறக் கண்களால் அல்ல, அரிதுயில் கொள்ளும் உள்விழி அதைக்கொண்டே காண முடிந்த மாண்பு அது. 

வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து

ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது


மனவெளியும் நிலவொளியில் குளிர

செவிப்பறை சுயமாய் அதிர

மண்ணில் ஒருபோதும் கேட்டிராத ஓசை உவகைகள் எழும்பின 

பாஷை உருகி ஓடிற்று


ஒரு

சொல் மிச்சமில்லை


என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது


ஒரு கணம்தான்


மறு கணம்

லாரியின் இரைச்சல் 

எதிரே நாற்காலி.


(சுந்தர ராமசாமி.)



கண நேரம் அடையும் இந்த ஆத்மீக பரவசத்தை ஓஷோ சட்டோரி என குறிப்பிடுகிறார். அந்த ஒரே ஒரு கணத்துக்கு பிறகு அந்த மனிதன் வாழ்வில் பிறகு ஒருபோதும் இந்த அனுபவம் நிகழாமலேயே கூட போகலாம். இது காரண காரிய தொடர்பின் ஒரு பகுதி அல்ல என்பதே பிரதான காரணம்.

//என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது//

கவிதையை அதன் உயர் தளத்துக்கு எடுத்து செல்லும் வரிகள் இவை.

இவையெல்லாம் கவிக்கு எல்லாம் சரியாக இருந்ததால் நிகழ்ந்த ஒன்றல்ல. மூளையில் ஒரு மெல்லிய நரம்பு அறுந்ததால் அதாவது ஒரு சிறிய பிழை ஏற்பட்டதால் நிகழ்ந்த ஒன்று. இதுதான் இத்தகு நிலைகள் மீது சுந்தர ராமசாமியின் பார்வை. 

இந்த காலம் இடம் இருப்பு கடந்த அனுபவ மண்டல பரவசம் எல்லாமே ஒரே ஒரு கணம்தான். மறுகணம் லாரி ஓசை வழியே நிகழ் காலம் வந்து விட்டது, எதிரே இடம் வந்து விட்டது, நாற்காலி வழியே இருப்பு வந்து விட்டது. 

இதற்கு முன்பான அந்த கணம். மூளையில் ஏதோ ஒரு சிறிய நரம்பு அறுந்த அந்த ஒரே ஒரு கணம், அதுதான் வாழும் கணம்.


தியானத்தில்

ஒரு கவலை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது.


நாகம்

இறக்கி வைத்த விஷக்கல்.


நான் என் தியானத்தால்

அதை

உண்டு உண்டு

செரிக்க முயன்றேன்.


அது இன்னும் கடினமாகி

கடினமாகி

நெற்றி நடுவில்

நீலமாய்ப் பூரித்தது.


நான்

என் சிறிய கவலைகள் எல்லாம் தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும் பாம்புக்குட்டிகள் போல்

அதை நோக்கி நெளிந்து செல்வதைப் பார்த்தேன்.


அம்மா

நான் என்ன செய்வேன்.


புவிமேல்

நானொரு மாபெரும் கவலைத் துளி.

(போகன்)



தியான அனுபவங்களில், உள்ளே நூறு பௌர்ணமிகளின் ஒளி வெள்ளம் நிறைவது, செவிக்குள் இனிய ஒலிகள் கேட்பது, நெற்றிக்குள் நீலம் ஒளிர்வது இப்படி பல இனிய தடயங்கள் கிடைக்கும். இவை பற்றி பதஞ்சலி யோக சூத்திரங்கள் நிறைய பேசுகிறது. கூடவே தியான அனுபவம் என்பது அகம் உள்முகமாக இருளுக்கும் ஒளிக்குமாக ஊசலாடும், ஆனந்தத்துக்கும் துயரத்துக்குமாக அல்லாடும் நிலையையும் கொண்டது. 

இதில் தவறான முறையில் சாதகனின் குண்டலினி எழ நேர்ந்தால் அவனை பீதி கிளர்த்தும் சித்திரங்கள் வேறு துரத்தும். தகுந்த குரு இல்லையேல் இத்தகு விஷயங்களில் இருந்து மீளாது, ஒளியில் இருந்து தவறி இருளில் விழவே வாய்ப்பு மிகுதி. 

தியான சாதகன் மட்டுமே அடைய நேரும் மற்றும் ஒரு துயர் உண்டு. இந்த உயிர் இந்த பிரக்ஞை இந்த உடலால் எல்லைகட்டபட்டமை கொண்டே தவிர்க்க இயலாது. அதன் உள்ளுரயாக அமையும் துயர் அது. அதில் விழுந்தவனுக்கும் மீட்சி அரிதே. இத்தகு விஷயங்கள் மீதான கவிதை என மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்

பூந்தோட்ட மலர்களிலே 

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி


வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல் நோக்கிப் பறந்து


நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது


முதல் கணம்

உவர்த்த  சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.

(பிரமிள்)

உலகின் உயிர்ராசிகள் ஒவ்வொன்றும் அதற்கென வகுத்துவைத்த சூழல் வெளியில்தான் வாழ்கிறது. மனிதனை தவிர வேறு எவற்றாலும் இதை மீற முடியாது. அந்த வகையில் பட்டாம்பூச்சி கடலுக்கான உயிர்ராசி அல்ல. அது அங்கே போனதற்கு அதன் இயங்கு தளத்துக்கு மீறிய ஆற்றலே காரணம். சைவம் உள்ளிட்ட பல மரபுகளில் இதை இவ்விதம் செய்தால் ஞானம் எய்தி விட முடியும் எனும் நிலை என்பது கிடையாது. செய்ய வேண்டியதை செய்து விட்டு ' அவன் ' அருள் வேண்டி காத்திருக்க வேண்டியதுதான். நமது முயற்சி அல்ல, அவனது அருளே நாம் எய்தும் ஞானத்துக்கு மூலம். 

மேற்கண்ட கவிதையை, லெளகீகம் விட்டு தன் செயலாக அன்றி புற ஆற்றலால் ஆத்மீகத்துக்குள் சென்று விழும் ஒரு தன்னுணர்வு அடையும் அனுபவம் குறித்த கவிதையாகவும் வாசிக்கலாம்.

( எல்லா நல்ல கவிதைகளும் வாசிப்பவர் வாழ்வுப் பின்புலம், கலாச்சார வேர், ரசனைக் கோணம் சார்ந்து, பல்வேறு அர்த்த சாத்தியங்களை, கற்பனை சாத்தியங்களை அளிக்க வல்லவயே. எனவே என்னுடைய வாசிப்பு என்பது அந்த வரிசையில் ஒரு கோணம் மட்டுமே அன்றி இக் கவிதைகள் மீதான இறுதி வியாக்யானம் அல்ல)


***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மஞ்சள் நிறத்திலொரு கவிதை - லக்ஷ்மண் தசரதன்

எங்கோ ஒரு மூலையில் அவரை பார்த்திருக்கக் கூடும். ஒரு கிழவர் தனக்குத்தானே பேசிக்கொண்டும்,  பேரப் பிள்ளைகளை நினைத்துக் கொண்டும் இருப்பார். அவரிடம் என்னெவல்லாம் கிடைக்கும் என நினைத்தால், பல நினைவுக்குப்பைகள் இருக்கலாம். என்றோ ஒரு நாள் அவரை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளிய கோபம் இருக்கலாம். கடைசி வரை தனக்கு பிடிக்கும் என தேநீர் காய்ச்சிய மனைவி பற்றித் தோன்றலாம். தாழ்வாரத்தில் ஈஸி சேரில், வெற்று மார்புடனும், வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்துக் கொண்டு, பக்கத்தில் இருந்திருக்க வேண்டிய மஞ்சள் நிறப்பூனை எங்கே சென்றது என்று யோசித்துக்கொண்டிருக்கலாம். எல்லா ஊரிலும் ஒருவர் இருப்பார். அவரைக்கண்டு அவரைப் போலவே அவரின் நண்பர்களும் இருந்திருக்கலாம். அவரில் ஒருவராகத்தான் நகுலன் இருந்திருக்கக் கூடும். 

கவிதைகளில் கொப்பளிக்கும் "நான்" வண்ணங்கள் மிக அடர்த்தியாகவே கைகோர்த்துக்கொண்டு வருகிறது. எப்போதும் தன்னையும், தன் முன்னே இருந்திருக்க வேண்டியவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார். முன்னே இருப்பவை மட்டுமில்லாமல் தனக்குள் இருந்திருக்கும் அத்தனையயும் வெளியே வைத்துக்கொண்டே இருக்கிறார். அவை வெளியே வரும் போதெல்லாம் அதனுடன் ஒரு கேள்வியையும் இணைக்கிறார். இந்தக் கவிதை அதை மிகத்தெளிவாக சொல்கிறது, 

நாம் இருக்கிறோம் 

என்னவாய் இருக்கிறோம் 

எனக்குத் 

தெரியவில்லை

உனக்கு? 

அனைவரிடமும் பல்கிப்பெருகும் எண்ணங்களில் ஒருமை இருப்பதையும், அதனுள் தானும் இருப்பதையும் உணர்கிறார். ஆனாலும் அதன் விசாரணையில் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு தான் இந்தக் கவிதை. விசாரணை முடியவேண்டும் என்ற உத்தேசம் இல்லை. எனக்கு தெரியவில்லை என்று முடித்திருக்கலாம். இன்னொருவரை அழைத்துக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான். 

ஆனால், நகுலன் கேட்கும் "உனக்கு" என்பது கவிதை படிக்கும் வாசகரை என நினைக்கலாம். அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. எழுதும் நேரத்தில் நகுலனிடம் தோன்றிய வெற்று தனிமை,  இன்னொருவரை அனிச்சையாய் வர வைத்திருக்கலாம். இந்தக் கவிதையை ஒரு திருமண மண்டபத்தில், பெரும் கூச்சலில் எழுதி இருக்க வாய்ப்பில்லை. ஒரு மதிய நேரத்தில், வெம்மையின் தனிமை அதன் பெரும் தாண்டவத்தை நகுலனின் முகத்தில் ஆடிய நேரத்தில் எழுதி இருக்கலாம்.  தனிமைகளின் அடுக்குகளில் எப்பொழுதும் சிக்குண்ட ஒரு மனது அவரின் கவிதைகளில் எப்பொழுதும் தென்படுகிறது.

எனக்கு யாருமில்லை

நான் கூட

சந்தி பிரித்து எழுதப்பட்ட ஒரு அசாத்தியமான வாழ்க்கையில், எங்கோ ஒரு நொடியில் எப்படியோ இழந்து விட்ட தன்னை மீட்டு எடுக்க முனையும் ஒரு சிறு வார்த்தைக் கவிதை. இந்தக் கவிதையை சுற்றி சுற்றி ஓடிப்பார்த்தால், மிச்சமிருக்கும் மூச்சு கடந்து விட்ட பின்னரும், இதிலிருக்கும் அமைதி அடர்த்தியாக அமர்கிறது. சுற்றி சுற்றி ஓடும் திறன் தேவைப்படுகிறது. நான்கு சுவர்களால் சூழப்பட்ட அறையிலும், நான்கு திசைகளால் மூடப்பட்ட நம் இருப்பையும், எட்ட நின்று பார்க்கும் நான்கு சொல் கவிதை. கவிதைகளில் எழும் தற்சுழலில் எப்படியாவது இன்னொருவர் தலை காட்டுவதுண்டு.  

அப்படி ஒன்றில் அவரின் அம்மா எழுந்து வருகிறார். 

அம்மாவுக்கு 

எண்பது வயதாகி விட்டது 

கண் சரியாகத் தெரிவதில்லை 

ஆனால், அவன் சென்றால் 

இன்னும் அருகில் வந்து 

உட்காரக் கூப்பிடுகிறாள் 

அருகில் சென்று உட்கார்கிறான் 

அவன் முகத்தைக் கையை 

கழுத்தைத் தடவித் 

தடவி அவன் உருக் கண்டு 

உவைகயுறுகிறாள் 

மறுபடி அந்தக் குரல் ஒலிக்கிறது 

'நண்பா, அவள் 

எந்தச் சுவரில் 

எந்தச் சித்திரத்தைத் 

தேடுகிறாள்?'

இதன் கடைசியில் சில்லு சில்லாக உடைகின்ற அம்மா இருக்கிறார். உடைந்து போகும் அதே நேரத்தில் மகனும் உடைந்து போகிறார். குரல் வழியே வெளிவரும் நண்பரும், இப்படி நிகழும் விபத்தை ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், வாசலில் வந்து போகும் பால்காரைரப் போல பேசிவிட்டு போகிறார்.  சித்திரம் என சொல்லப்படும் பகுதி எழுதப்படாத ஒரு கவிதையாகத்தான் விரிகிறது. சொல்லப்படாத ஒன்றும், எழுதப்படாத ஒன்றும் தான், தன்னைத் தாேன விரித்துக்கொண்டும் அகழ்ந்து கொண்டும் போகும். சில நேரங்களில் மிகத்தெளிவாக சொல்லியும் விடுகிறார். பெயர்களும் வருகிறது.  துரைசாமியிடம் தேடினால் பல படிமங்களில் சுசீலா தோன்றுவார். சுசீலா என்ற பெயரின் உச்சரிப்பின் இடையே வெளிவரும் ஊதல் ஒலி தான் நகுலனின் கவிைதகள். எப்பொழுது தேடினாலும், நகுலனின் கவிதைகளில் சுசீலா இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களில் அவரே எழுதி இருப்பார், பல நேரங்களில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.  

நான் 

வழக்கம் போல் 

என் அறையில் 

நான் என்னுடன் 

இருந்தேன் 

கதவு தட்டுகிற மாதிரி கேட்டது 

"யார்?" 

என்று கேட்டேன். 

"நான்தான் 

சுசீலா 

கதைவத் திற" என்றாள் 

எந்தச் சமயத்தில் 

எந்தக் கதவு 

திறக்கும் என்று 

யார்தான் சொல்ல முடியும்? 

நான் என்னுடன் இருந்தேன் என்பதில் இருக்கும் நகுலனை வெளியே கொண்டு வரும் உத்தி தான் இந்தக்கவிதை. சுசீலா திறக்கிறார். நகுலனும் திறந்திருப்பார். பேசி இருந்திருப்பார். மகிழ்வோ,  கண்ணீரோ, அதன் முடிவு முக்கியமில்லை.

கேள்வியுடன் முடியும் கவிைதகளில் இன்னொரு கவிதையின் ஆரம்பம் இருக்கும். அது எந்தக்கவிதை என்பதில் பல குழப்பம் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதையாகத்தான் இருக்கும் என நகுலன் நினைத்திருக்கலாம். 

இப்பொழுதும் 

அங்குதான் இருக்கிறீர்களா 

என்று 

கேட்டார் 

எப்பொழுதும் 

அங்குதான் இருப்பேன் 

என்கிறார் 

முன்பிருந்த கவிதையும், இந்தக் கவிதையும் இணைகிறதா? ஆம் எனவும் கூறலாம், இல்லை எனவும் நிறுவலாம். ஆனாலும் நகுலனின் பல கவிதைகளில் ஒன்றின் பின் ஒன்றும் ஒன்றுடன் ஒன்றும் பிணைந்திருக்கிறது. 

நினைவு ஊர்ந்து செல்கிறது 

பார்க்க பயமாக இருக்கிறது 

பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை 

பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றவரின் குரல்களாகத் தான் நகுலனின் கவிதைகள் நிற்கின்றன.  தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இன்றும் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கும் தனிமையின் குரல் தான் நகுலன்.

***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

நகுலன் கவிதைகள் வாங்க

***

Share:

கவிதைகளில் நான் - கடலூர் சீனு

நான் ஒரு
உடும்பு

ஒரு
கொக்கு

ஒரு
ஒன்றுமே இல்லை.

சமீபத்தில் ஒரு நண்பர் நகுலனின் இந்த கவிதையை அனுப்பி, இதில் நான் என்பது முதலில் உடும்பு, கொக்கு என்று உருவகம் செய்யப்பட்டு பின்னர் ஒரு ஒன்றுமில்லை என்றாகும் நான் என்பதன் ஆர்க் இருக்கிறது. அது மட்டும் புரிகிறது. இந்த உடும்பு, கொக்கு இதெல்லாம் என்ன? இது எதன்பொருட்டு கவிதை ஆகிறது என்று வினவி இருந்தார்.

அவருக்கு  நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளில் இந்த 'நான்' என்பதன் இருப்பு, வெளிப்பாடு அதன் தன்மை குறித்து சற்றே விளக்கி அதன் பின்புலத்தில் அந்தக் கவிதையைப் பொருத்தி பதிலளித்தேன்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின், கவிதைகளின் முன்னோடியான பாரதியின் 'நான்' கவிதையில் வரும் நான் இந்திய மரபின் மாயாவாத, வேதாந்த, அத்வைத மரபின் சாரம் கொண்டது. பக்தி இயக்கம் போல, பாரதிக்கு பின்னர் எழுந்த நவீனத் கவிதை அலையின் கவிதைகளுக்கு புதுக்கவிதை என விமர்சகர் க.நா.சு பெயரிட்டார். அதில் இந்த 'நான்' 'எனது' எனும் நிலைகள் எல்லாம் அது கொண்டிருக்கும் தனித்துவம் வழியே  புனைவாக்கத்துக்கு, விமர்சன உரையாடலுக்கு எத்தகு செழுமை சேர்க்கிறது என்று தனது பார்வையை இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் சிறு நூலில் க நா சு விவரித்திருப்பார்.

அந்த வகையில் பாரதிக்குப் பிறகு 'நவீனத்துவம்' முகிழ்ந்த நவீனத் தீவிர தமிழ்க் கவிதை பலவற்றில் தொழிற்பட்ட 'நான்',  பாரதி கவிதைகளில் தொழிற்பட்ட 'நான்' அளவே, அதன் பிறகான நவீனத்துத்தின் அதன் தத்துவார்த்த நோக்கின் செறிவு கொண்டதா என்று அவதானித்தால், பதில் அந்த தொடர்பு மிகுந்த பலகீனமாது என்பதே.

(இதன் பொருள் ஒரு கவிஞனோ புனைவாளனோ தத்துவக் கல்வி கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தல் அல்ல. ஒரு கலைஞனின் அகம், அவன் காலக்கட்டத்தின் வாழ்வு வரலாற்று ஓட்டம், பண்பாட்டு அசைவு இவற்றுடன் எந்த ஆழம் வரை வேர்கொண்டு நிற்கிறது என்பதன் மீதானது)

பெரும்பாலான நவீன கவிதை கையாளும் 'நான்' அதில் வெளிப்படும் தன்னிலை, ஆத்மீக நோக்கு, இருத்தலியல் வாதை போன்றவற்றுக்கு, புறவயமாக மேலை மரபில் ஒரு நெடிய வரலாறு உண்டு. இப்போது புதிய பதிப்பில் கிடைக்கும் ரஷ்யாவின் எம்.இலியீன்; யா.செஹால் இணைந்து எழுதிய பாலர்களுக்கான நூல் முன்னர்  ராதுகா பதிப்பகம் வெளியிட்ட 'மனிதன் எங்ஙணம் பேராற்றல் மிக்கவன் ஆனான்' எனும் நூலில் அதன் இறுதி அத்தியாயம் 'நாம்' எனும் நிலையில் இருந்து 'நான்' எனும் நிலைக்குப் பிரிந்த வரலாற்று தருணத்தில் முடியும். அந்த தருணம் பண்டைய கிரேக்க பெண் கவியான சாபோ எழுதிய "காலத்தால் நான் மறக்கப்பட மாட்டேன் என்பது காவியத்தின் தெய்வங்கள் எனக்கு அளித்த வாக்குறுதி" எனும் வரிகளால் அடிக்கோடிடப்படும். அங்கே துவங்கிய, நாம் எனும் தொகுப்பில் இருந்து உதிரியாகி பல கோடி  'நான்' 'எனது' என்பதன் பரிணாம வளர்ச்சி 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவவாதி ழேனே தெகாரத் வழியே வேகம் கொள்கிறது. அவரைத் தெரியாதோர் கூட அவர் சொல்லிச் சென்ற ' நான் சிந்திக்கிறேன்.  ஆகவே நான் இருக்கிறேன்'  எனும் சொற்றொடரை அறிந்திருப்பார்கள் அதன் வழியாகவே அவரது தாக்கத்தை அறியலாம். அதன் பிறகு வரும் நியுட்டன் காண்ட், நீயேட்ஷே, ஹைடெகர், என்று ஒரு நிறையின் உரையாடலின் வழியே முழுத்ததே இருத்தலியல் தத்துவம்.

கவிதைகளோ கதைகளோ பெரும்பாலான நவீனத் தமிழ்ப் புனைவுகளில் நான் என வெளிப்பட்டது மேற்சொன்ன சிந்தனை மரபின் புறவய வீச்சோடு எந்த உரையாடலும் நிகழ்த்தாத, அக வயமான ஆழத்தின் இருந்து எழுந்த பாய்ச்சலின் விளைவான நான் மட்டுமே.

இதன் பகுதியே மேற்கண்ட நகுலனின் கவிதை. அது ஒரு எளிய கவிதை. குறும்புக்கார குரங்கு, தந்திரக்கார நரி என்பதை போல,   இக்கவிதையில் வைப்பு முறைப்படி 'நான்' உடும்பு கொக்கு என்று வருகிறது. உடும்பு உறுதியான பிடிக்கும், கொக்கு காத்திருத்தலுக்கும் இணை சொல்லப்படுபவை. கொக்கு என்றதுமே மனதில் ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு சித்திரமே எழும். அர்ஜுனன் தபசு சிலையில் அர்ஜுனன் அவ்வாறுதான் நிற்கிறான். உடும்பு போன்ற பிடி கொண்டு வைராக்கியத்துடன் தவம் செய்கிறான். வரம் வேண்டி காத்திருக்கிறான் கொக்கு போல. ஆக அந்த கவிதை அளிக்கும் கற்பனை சாத்தியம் என்பது இதுவே. தவம் செய்யும் நான் உடும்பு,தியானம் செய்யும் நான் கொக்கு, தவத்தின் தியானத்தின் முடிவில் இவற்றை செய்த அந்த நான் ஒரு ஒன்றுமில்லை.

இந்த கவிதையின் பலவீனம் நான் மேலே கூறிய பலவீனம்தான். விவேகானந்தர் எழுதிய ராஜ யோகம் நூலை வாசித்த ஒருவர் இந்த கவிதையை ஒரு புன்னகையுடன் புறக்கணித்து விடுவார். கொஞ்சம் உத்வேகம் கொண்டவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் நான்கு நூல்களை கருத்தூன்றி வாசித்தால் இதை போல நாற்பது கவிதைகளை எழுதி விடுவார். ஏற்கனவே வேறு ஒன்றால் சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையாலும் சொல்லி வைப்போம் என்று கவிதை சொல்ல வந்தவன் அல்ல கவிஞன். ஒவ்வொன்றிலும் உள்ள, இதில் இந்த விஷயத்தை வேறு வகை இன்றி கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்ற திமிரும் நிலையைக் கவிதை கொண்டு பற்ற வந்தவனே கவிஞன்.

அப்படி இதன்பொருட்டு 'நான்' 'எனது' 'எனக்கு' ஆகியவை கையாளப்பட்ட நல்ல கவிதைகளும் தமிழில் சில உண்டு. உதாரணத்துக்கு ஆனந்தின் கீழ்கண்ட கவிதை.


ஒரு இலை உதிர்வதால்
 மரத்துக்கு ஒன்றுமில்லை

 ஒரு மரம் படுவதால்
 பூமிக்கு ஒன்றுமில்லை

 ஒரு பூமி அழிவதால்
 பிரபஞ்சத்துக்கு   ஒன்றுமில்லை

 ஒரு பிரபஞ்சம்
 போவதால்
 எனக்கு ஒன்றுமில்லை.

***

இந்தக் கவிதையில் உள்ளதும் ஒரு இருத்தலியல் சித்தரிப்புதான். இலை துவங்கி பிரபஞ்சம் வரை எல்லாமே போய்க்கொண்டு இருக்கிறது. சென்று மறைந்துகொண்டிருக்கிறது. இதில் 'எனக்கு' ஒன்றுமில்லை என்று சொல்லும் 'எனக்கு' எவருடையது?

பிரபஞ்ச காரணத்துடையது அந்த 'எனக்கு'. இன்னும் வசதி தேவை எனில் கடவுளின் 'எனக்கு' அது. இந்த பாவனை இந்த தலைகீழாக்கம் வாசகனுக்கு அளிக்கும் மன விகாசம் அலாதியானது. அனைத்தையும் ஆக்கி, இயக்கி, அழிக்கும், பெருநியதியன் என்றாகி அதன் தன்னிலை பாவத்தை ஒரு கணம் அனுபவிக்கத் தருகிறது இக்கவிதை.

இதே போல் இருத்தலியல் தத்துவம் சுட்டும் இந்த வாழ்வு இன்ன விதமாக இருக்கிறது எனும் நிலையை, கலாப்பூர்வமாக சித்தரித்துக் காட்டிய சில அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணத்திற்கு கீழ்கண்ட யுவன் சத்திரசேகர் கவிதை ஒன்று.


வார்த்தைகளின் சிதையில்
ஞானிகளும் விஞ்ஞானிகளும் எரிந்த
சாம்பல் மேட்டில்
எருக்கலஞ் செடியாய் எழுகிறது
இந்த விநாடி.

பேதமின்றிப் பரவும் இருளை ஊடுருவி
தற்செயலாய்
மிகத் தற்செயலாய் அமைந்த பிறவிப் பயனால் மினுக்குகின்றன
மின்மினிப் பூச்சிகள்.

முன்னெப்போதும் பார்த்திராத பூமியின் பரப்பை நோக்கி
காற்றுக் கூரையைப் பொத்தலிட்டு
விரைந்திறங்கும் விண்கல் பாதிவழியில் அவிகிறது ஓலைக் குடிசைக்குச் சற்று மேலே.

 

***

நேற்று வரை இந்த நான், இந்த வாழ்க்கை, இந்த புறம் இத்தகையது என்று வகுத்துச் சொன்ன கோடி கோடி வார்த்தைகள் இங்கே உண்டு.  அதைச் சொன்னவர் இரண்டு சாரர். ஒரு சாரர் அக வய நோக்கில் 'கண்டு சொன்ன' ஞானியர். மற்றொரு சாரர் புற வய நோக்கில் 'ஆய்ந்து சொன்ன' விங்ஞானிகள். இருவரின் வார்த்தைகளின் சிதை மேட்டில் எழுகிறது அந்த எருக்கலஞ் செடி.

இருத்தலியலின் சூத்திரங்களில் ஒன்று  'இருத்தல் என்பது மரணத்தை நோக்கிய இருப்பே' என்பது.

(மீண்டும் இங்கே, ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையிலும் சொல்லிப்பார்த்த  நகுலனின் பலவீனமான கவிதை ஒன்று இங்கே நினைவில் எழுகிறது.


இருப்பதற்கென்றே வருகிறோம்

இல்லாமல் போகிறோம்.

எனும் கவிதை அது)

அப்படிப்பட்டவர்களின் வார்த்தைகளையே சிதை மேடாக்கி, அதில்  எருக்கலஞ் செடி எழுவதோ 'இந்த வினாடியில்'.

எதிர்காலம் என்பது முடிவற்ற சாத்தியங்கள் கொண்ட திறந்த வாசல்.

இறந்தகாலம் என்பது அதில் ஒரே ஒரு சாத்தியம் மட்டுமே நிகழ்ந்து முடிந்த மூடப்பட்ட வாசல்.

எனில் நிகழ்காலம் என்பதன் பண்பு என்பது எதிர்காலத்தின் முடிவற்ற சாத்தியங்களை கொண்ட திறந்த கதவை, இறந்த காலத்தின் ஒற்றை சாத்தியத்தை மட்டுமே அது எதுவோ அதை தேர்வு செய்து அந்த கதவை மூடுவதே. நிச்சயமான அத ஒரே சாத்தியம் என்பது மரணம் மட்டுமே. இந்த நிகழ் கணத்தில் எழுந்த எருக்கு அது.

பாரபட்சமின்றி கவியும் இருள் எனும் ஆசிரியரின் பிரகடனம் இருத்தலியல் துயர் ஒன்றின் கவித்துவ வெளிப்பாடு. இந்த இருளில் மின்னும் மின்மினிகளுக்கு சுயம்ப்ரகாசம் வந்தது எங்ஙனம்? இங்கே நிகழும் பெருந்திட்டத்தின் அதன் நியதிகளின் ஒரு பகுதியாக அல்ல, இங்கே நிகழும் தற்செயல் பெருக்கின் கோடானு கோடி தற்செயல்களில் முற்பிறவி பயன் போன்ற தற்செயல்களில் ஒன்றாக கிடைத்த ஒளி அது.

இரவின் இந்த மின் மினிக்கும் எரிந்தபடி வீழ்ந்திறங்கும் விண் கல்லுக்கும் உள்ள எதிரிடை, அந்த விண் கல் நாம் தலைக்கு மேலாக கட்டி வைத்து, அதை நம்பி உண்டு புணர்ந்து உறங்கி வாழும்  எளிய வீட்டின் கூரைக்கு மேல் அதில் விழுவதற்கு முன் சற்றே முன்பாக அவித்து போகிறது.

டினோசர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் அவை இப்போது இல்லை. நமக்கும் இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போகும் போது நாமும் இருக்கப் போவதில்லை.

மேற்சொன்ன யுவனின் கவிதை முன்பே சொல்லப்பட்டுவிட்டவற்றை கவிதையிலும் சொல்லிப்பார்ப்போம் என்று சொல்லிப்பார்த்த நகுலன் கவிதை போன்றது இல்லை என்பது முதல் வாசிப்பிலேயே உணர்ந்துகொள்ள முடியும். வரிசைகட்டி செல்லும் எறும்புகள் வரிசை ஊடே, அதன் தொடர்பு இழையை விரல் கொண்டு தேய்த்து அழித்தால், அவை எறும்புகள் என்றில்லாமல் தனித்தனி எறும்பு என்றாகி தவிக்குமே, அப்படி ஒரு தவிப்பை ஒரு கணம் வாசகருக்கு அளிக்கும் (வரிசையின் தடம் அழிக்கும் விரல் போல செயல்படும்) கவிதை இது.

தத்துவத்துக்குக் கால் வலிக்கும்போது அது கவிதையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் என்றொரு முற்சொல் இங்கே உண்டு. அப்படி ஒரு நிலையின் கலைச் சான்று மேற்கண்ட கவிதை.

***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive