பயணத்தில் பிறந்த கடவுள்
பருவத்திற்கு
முந்தி வந்து கன்னம் தொட்ட
முதல் பருவுக்கு மஞ்சள் முகம்
முதல் பரிசு தந்திருக்கும் பேரழகே
இரவும் பகலும் திரண்டிரு நாட்களாக
புருவங்களுக்கிடையில் குளிர்ந்து மிதக்கும்
விழிகளின் நடுஜாமத்திலிருந்து பாயும்
உன் ஓரப்பார்வைகளின் கதிர்விரல்கள்
கழற்றியிழுக்கின்றன காமத்தின் கபட கவசங்களை.
காத்துக்கொள்ளச் சிரமப்படுகிறேன்.
வீடியோவில் கரையும் திரைப்படக் காட்சி தெளிக்கும் வண்ண ஒளியில்
அபாயச் சங்கிலியாக துப்பட்டாவைப் பிடித்திழுத்ததும்
நின்று புறப்படும் பெருமூச்சு ரயில்களில்
ஏறவோ இறங்கவோ நிர்ப்பந்திக்கக்கூடாது என்னை நீ.
உன்னை முன்னிட்டு
பிறந்தநாள் சிரிப்புடன் எல்லாப் பயணிகளையும்
அன்புடன் வரவேற்ற ஓட்டுநர்,
பயணச்சீட்டின் பின்புறம்
மிச்ச பாக்கியை ஹைக்கூவில் எழுதி
நீட்டிய நடத்துநர்,
ஜன்னலோரம் சாக்கிட்டு நின்று
குண்டு மல்லிக் கூடையை
புஷ்பக விமானமாக்க சிந்தித்த
பூ வியாபாரி
இவர்களில் ஒருவனே நானும்.
இருப்பினும்...
உறக்கத்தைப் புடைத்துப் புடைத்து
இமைகள் துவண்ட இளம்பெண்ணே
முச்சந்தியிலிருக்கும்
நெடுஞ்சாலைக் காவல் மாடனுக்கு
காணிக்கை நாணயத்தை
இருக்கையிலிருந்தே எம்பி
என் நெஞ்சில்தான் எறிந்திருக்கிறாய்
மறக்கக் கூடாது.
என் இறக்கம்வரை உன் அருளால்
கடவுளாயிருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.
- ஜெ. பிரான்சிஸ் கிருபா
('வலியோடு முறியும் மின்னல்' தொகுப்பு பக்கம்: 72)
பிரமாதமாக ஆரம்பம் கொள்கிறது கவிதை. முதல் நான்கு வரிகளும் அந்த இளம்பெண்ணைப் பற்றிய எழிலார்ந்த வர் ணனை. கற்பனாதீதத்தின் உச்சம் இது. தவறொன்றும் இல்லை. அழகுதெய்வத்தை எவ்விதம் அறிமுகப்படுத்துவது. இவ்விதம் இருப்பது இந்தக் கவிதைக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கிறது.
அடுத்த நான்கடிகளும்கூட அருமையான வர்ணனைதான். பேரழகியைக் கண்ட கிறக்கத்திலும் மயக்கத்திலும் பேசும் மொழிகள்.
பிறகுள்ள ஐந்து வரிகளும் அவனுடைய மேலுமான நிலை மைகளை விவரித்து, வேண்டுகோளில் நிறைவடைகின்றன. அந்தச் சூழலில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், வந்து நிற்கும் பூவியாபாரி ஆகியோர் எப்படியெல்லாம் அதிசயமாய் மாறிப் போய் விடுகிறார்களோ அதைப் போலவேதான் அவனும் என் பதைப் பதினொரு அடிகளில் விளக்குகிறது.
என்றாலும், அவன் கடவுளாய் இருக்கக் கடமைப்பட்டவனா கிறான். எவ்வாறு. அவள், முச்சந்தியிலிருக்கும் நெடுஞ்சா லைக் காவல் மாடனுக்கு இருக்கையிலிருந்து எம்பி எறிந்த காணிக்கை நாணயம் அவன் நெஞ்சில் விழுந்து விட்டதனால். “இருப்பினும்” என்பதற்குப் பின்னுள்ள இரு வரிகளும் வர்ண னையுடன் கூடிய விளி (முன்னிலையில்) தொடரும் பத்தடிக ளுமே கவிதையை நிறைவடையச் செய்வதாய் இருக்கின்றன.
அவனைக் கடவுளாக்கி விட்டாள், அவள், தன்னை அறி யாமலேயே கடவுளான பிற்பாடு காமம் கொள்ள முடியுமா, கருணை கொள்ளத்தான் முடியும். காத்து நிற்கத்தான் இய லும்
ஓர் எதார்த்த நிகழ்வுதான், ஒரு தருணம்தான் கவிதை விஷ யம். கவிஞனின் கைவண்ணத்தில், சொல்முறையில், கற் பனை நவிற்சியில் கட்டான கவிதையாக வடிவு கொண்டு
விடுவதைக் காணலாம். பேருந்துப் பயணப் பின்புலம், அந் தப் பெண் குறித்த வர்ணனை, சூழல், தன்பாடு, தன்நிலை அனைத்துமே சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பிரான்சிஸ் கிருபா, அடிப்படையிலேயே 'ரொமான்டிக்' கவி ஞர்தான். 'ரொமான்டிசிஸம்' அற்புதமாக வாய்த்திருக்கிறது அவருக்கு. இன்னும் கூட அந்த அம்சத்தை பிரான்சிஸ் வளர்த்தெடுத்துச் செல்லலாம்.
நவீன தமிழ்க்கவிதையில் ஆகச்சிறந்த 'ரொமான்டிக்' கவி தைகள் என்று பார்த்தால், மொத்தத்தில் முப்பதுகூடத் தேறாது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏன் இப்படி நவீனத்துவமே 'ரொமான்டிக்' மனநிலையை அனுமதிக்காது என்பதா, இல்லை, ஒருவேளை, 'ரொமான்டிசிஸுமாக எழுதுவது நவீனகவிதையாகாது என்று நமது நவீனகவிஞர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்களா, அல்லது, நவீனகவிஞர்களே 'ரொமான்டிக்'காக இருக்க மாட்டார்களா. எது எப்படியோ முன் னைத் தமிழில் உள்ளவைபோல, நவீனதமிழில் 'ரொமான் டிக்' கவிதைகள் கணிசமான அளவில் இல்லை என்பதே உண்மை.
நம்முடைய அகப்பாடல்களில் உள்ளமிழ்ந்த 'ரொமான்டிசி ஸம்' உண்டுதான். மிகைக்கூற்றாக இராது என்பது வேறு அக வாழ்வைச் சொல்கையில் எவ்வாறு ரொமான்டிக்காக இல்லா மல் இருக்க முடியும். தன்மையாக, அளவாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம் சங்கத்தில், காமத்துப்பாலில் அநேகம் குறள்கள் ரொமான்டிக்கானவைதாம். சிலம்பில், கோவலன், கண்ணகியைப் பாராட்டிப் பாராட்டிப் பேசுவதும் சரி, 'கானல் வரி' யும் சரி ரொமான்டிக்கானவைதாம். கம்பனின்
கவிதைகளில் ரொமான்டிசிஸத்தின் உச்சத்தைக் காணலாம். முழுக்கமுழுக்க ரொமான்டிக் கவிஞன் அவன்.
பக்தி இலக்கியத்தில் நாச்சியார் திருமொழி பூராவும் ரொமான் டிசிஸம்தான். பெரியாழ்வார் பாசுரங்கள் வேறொரு வகை யில். திருநாவுக்கரசு சுவாமிகளும் மாணிக்கவாசகரும் அகத் துறைப் பாடலன்ன எழுதியவையெல்லாம் ரொமான்டிக்கான வையே. சிற்றிலக்கிய வகையில் பெரும்பாலானவையும் இத் தன்மை வாய்ந்தவையே. 'தனிப்பாடல் திரட்டி'ல்கூட இப்படிப் பல கவிதைகள் உண்டு. பாரதியின் 'கண்ணன்பாட்டு' என்ன. கண்ணதாசன் இதில் மன்னன்.
ந பிச்சமூர்த்தி கவிதைகளில் நல்ல ரொமான்டிக் கவிதைகள் இருக்கின்றன க. நா. சு.வின் முதல் கவிதையே அப்படித்தான். பிரமிளின் பாலியல் கவிதைகள், இன்னும் சில கவிதைகள் அனைத்துமே உச்சபட்ச ரொமான்டிக்கானவை. ஆத்மாநா மிடமிருந்தும் எடுத்துக்காட்டலாம். கலாப்ரியா, தேவதேவன், சுகுமாரன், சமயவேல் கவிதைகளிலிருந்து நிறையவே உதார ணம் கூறலாம்.
யூமா வாசுகி ஒரு தொகுதியே இப்படி எழுதியிருக்கிறார். சம காலக் கவிஞர்களில் லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராம சுப்ரமணியன் கவிதைகள் பலவற்றில் இப்பண்பைப் பார்க்க லாம். எங்கே, எப்படி, எப்போது இந்தக் கண்ணி விடுபட்டுப் போயிற்று. இப்போது என்ன ஆயிற்று.
நவீன கவிதையின் இயல்புக்கு ஏற்ற மாதிரியான ரொமான் டிசிஸத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. நவீனகவிதை ஏற் றுக்கொள்கிறாற்போல, ரொமான்டிக்காக எழுதுவதை ஒதுக்க வேண்டியதில்லை. கவிதையில், வலிந்து எதையும் திணிக் கவும் வேண்டாம். ஓர்மையாக எந்த ஒன்றையும் கழிக்கவும் வேண்டாம்.
இங்கே எடுத்துக்காட்டிப் பேசும் கவிதைகள் யாவுமே திட் டமிட்டோ தீர்மானித்தோ யோசித்தோ கையாண்டதில்லை. பார்த்ததும் படித்ததும் மனசில் பதிந்தவையே ஆகும். ஒரு கட் டுரையாக எழுதலாமே என்று நினைத்தபோது இவை தற்செ யலாய் வந்து இடம்பிடித்துக் கொண்டன என்பதே நிஜம் தவிரவும், இவை எல்லாமே இயல்பானவையாகவும் எளிமையாக வும் இருப்பதுகூடத் தேர்ந்தெடுத்துக் கொண்டதனால் அல்ல என்பதும் உண்மையே. உள்ளம் விரும்புவதே எழுத்தில் வந்தி ருக்கிறது என்று வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம்தான்.
எளிமை, இயல்பு, நேரடித்தன்மை ஆகிய தன்மைகளோடு அபூர்வமான, அற்புதமான, அதிசயம் போலான கவிதை கள் சாத்தியம் என்பதற்கும் இந்தப் பத்துக் கவிதைகளையே உதாரணமாகச் சொல்ல முடியும். இப்படி இருக்கையில், படி மம், புனைவு, புதிர்த்தன்மை இருண்மை, மயக்கம், மாயம், சோதனை முயற்சி இன்ன பிற அம்சங்கம் கொண்டு ஏன் கவி தைகள் எழுதப்படுகின்றன என்ற நியாயமான கேள்வி வரும். பதிலும் இருக்கிறது.
இப்படி இப்படியான தன்மைகள் எல்லாமும் கவிஞனின் மனோபாவம், மனோதர்மம் சார்ந்தவைதாம். தான் எழுதும் கவிதை வித்யாசமானதாக இருக்க வேண்டும் என்று கவி ஞன் ஒருவன் கருத உரிமையுண்டு. 'கவிதை ஏன் ஒரேமாதிரி இருக்கவேண்டும்' என்று இன்னொரு கவிஞன் நினைத்துப் பார்த்திருக்கலாம். எதார்த்தத்தில் எழுதுவது வேறொரு கவி ஞனுக்கு சுலப சாத்தியமாகப் பட்டு, 'இதை எழுத நான் வேண் டியதில்லை' என்று அவன் எண்ணலாம். சித்துவேலை செய்து பார்ப்போமே என்றுகூட சிந்திக்கலாம், மற்றொரு கவிஞன். அலங்காரங்கள் இருந்தால் அழகாக இருக்குமே என்று பிறிதொருவன் ஆசைப்பட்டிருக்கலாம். வண்ணங்கள் சேர்த்தால் வடிவாயிருக்காதா என விரும்பிச் செய்திருக்கலாம். இதுவரையிலும் யாரும் தொடாத உயரத்தில் தன் கவிதையை ஏற் றிவைத்துப் பார்க்க உளம்கொண்டு வலிந்து வருவித்திருக்க வேண்டும். மொழியின் உச்சபட்ச எல்லையை அடைந்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் இயற்றியிருக்க வேண்டும். கவி தையின் அதிகபட்ச சாத்தியங்களை எய்திவிட வேண்டும் என்ற வேட்கையில் கட்டியிருக்கலாம். மழையின் பொழிவை எப்படி வகைப்படுத்துவீர்கள். அருவி விழுவதை யார் தீர்மா னிக்க இயலும். ஆற்றின் போக்கை எவர் நிர்ணயிக்க முடியும். தீயின் ஜ்வாலைகளை வகுத்துவைக்க ஆகுமா. காற்றின் வீச் சைக் கட்டுப்படுத்துவது நடக்கக்கூடியதா என்ன.
நிலத்தின் சத்துவமும் சாரமும் எப்படியெப்படியோ அப்படியப்ப டிதான் கண்டுமுதலும் மேனிகாணலும்.
வானம் வைத்திருக்கும் சூரிய - சந்திரர்கள், பிற கோள்கள், நட் சத்திரங்கள், மேகங்கள் இவற்றையெல்லாம் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துப் பார்க் கக்கூட சாத்தியப்படாது.
கவிமனம் போலக் கவிதை.
பொருத்தமான மேற்கோளுடன் கட்டுரை நிறைவடைகிறது:
"கவிதை ஒரு மோகனமான கனவு” என்பார் புதுமைப்பித்தன். மாபெரும் கனவு. இந்தப் பிரபஞ்சத்தையே அளக்க முயலும் கனவு. எனவே பிரபஞ்சத்திற்குள்பட்ட எல்லாமும் கவிதைக் கான விஷயங்களாகின்றன.
"அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம் வாழ்க் கையின் அர்த்தத்தைத் தேடுவதாகக் கவிதை வெளிப்பட வேண்டும். விவரிக்கும்போது அது, கவிதை அல்லாத ஒன்றாகிவிடுகிறது. உணர்த்துதல் மொழிசார்ந்த விஷயமாத லால், சொற்பிரயோகத்தில் கவிதை தீவிர கவனம் கொள்கி றது. பழக்கத்தில் உள்ள சொற்களைக் கூர்மைப்படுத்துகிறது. தனக்கான மொழியைத் தேடிக் கொள்கிறது. நல்ல கவிஞன், அதிலிருந்து அவனுக்கான கவிதைமொழியை உருவாக்கிக் கொள்கிறான்.
"விவரிப்பை விடுத்து, உணர்த்துவதை முதன்மைப்படுத்துவ தால், நவீனகவிதை செறிவான வடிவம் கொள்கிறது. இந்தச் செறிவு, பூங்காக்களில் வெட்டிவிடப்படும் செடியைப் போன் றதல்ல; இயல்பாகக் கிளைத்து வளரும் மரம் போன்றது. இவ்வாறு, ஒருவிதமான கச்சிதமான அமைப்புக்கொண்டதாக கவிதை அமைகிறது. இதனால், இன்றைய கவிதை, பன்மு கத்தன்மை கொண்டதாகிறது. அதேசமயம், பன்முகத்தன்மை கொண்டால் மட்டும்தான் கவிதை என்றும் ஆகிவிடாது.
"கவிதைக்குப் பல முகங்கள், பல குரல்கள் உண்டு. இது கவிஞனின் ஆளுமை சார்ந்தது. அவன் உணர்த்த முனை யும் அனுபவத்தின் தன்மை சார்ந்தது. இதனால் ஒரு கவி ஞனிடமேகூடப் பல குரல்களையும் கேட்கலாம். அந்தக் கவி தைக்குரல், உயிர்த்துடிப்புக் கொண்டதாக இருக்க வேண்டும். உண்மையின் குரலாக இருக்கவேண்டும் பாவனையும் வேஷ மும் கொண்ட குரல், எத்தனைதான் இனிமையானதாயினும், அலங்காரமானதாயினும் ஒருபோதும் கவிதையாகாது.
கவிதை என்றும் புதியதாக இருக்கவேண்டும். கவிஞனின் தனித்துவம், வித்தியாசமான பார்வை, மொழிப்பிரயோகம், இந்தப் புதுமை கவிதையில் கைகூடுவதற்கான காரணங்கள் எனலாம்."
***
ஜெ. பிரான்சிஸ் கிருபா தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment