அலைகளை எண்ணுபவன்
உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே
கடற்கரைக்கு வருகிறான்.
கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும்
தேயிலைப் பையெனத் தொலைவில்
அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன்.
அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும்
ஈரமணலில் உட்கார்ந்து அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான்.
பின்னர் எண்ணத்தொடங்குகிறான்
ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு..
வந்துகொண்டே இருக்கின்றன அலைகள்
மிகத்தனிமையான அலைகள்.
***
கண்ணாடிக் குவளை
மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப
நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது
என ரகசியமாக எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக்
கணத்தில் கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த
காட்சியைப் பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில்
என் அடுத்த எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.
***
ஓராயிரம் மாலைப் பொழுதுகள்
கிளையிலிருந்து மதிலுக்கு வந்துநிற்கிறது அணில்
என்ன விழுந்துகொண்டிருக்கிறது என்றே
அதற்குத் தெரியவில்லை
ஆனாலும் சொல்கிறான்:
"கவனமாக இரு,
நான் பிறந்ததிலிருந்தே
ஏதோவொன்று
கீழே விழுந்துகொண்டிருக்கிறது.
கவனமாக இரு... கவனமாக இரு..."
பின் கிரிக்கெட் மைதானத்தில்
உயரத்திலிருந்து
இறங்கிவரும் பந்தினைப் பிடிப்பவனைப்போல
தன் குட்டியூண்டு கைகளை
உயர்த்திப்பிடித்தபடி
நின்றுகொண்டிருக்கிறான்
நானும் நிற்கிறேன்
ஒருவேளை அவன் தவறவிட்டால்
பாய்ந்து சென்று பிடித்து
இந்தப் பிரபஞ்சத்தை
ஆட்டமிழக்கச் செய்வதற்காக.
***
சாவதானம்
பூங்காவில் இருக்கையின்மீது
ஒரு இலை
விழுகிறது.
சற்றுநேரத்தில் இன்னொரு இலை.
முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும்
இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்.
இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து
பூங்காவின் சாவதானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்குத் தெரியும்,
இன்னும் கொஞ்சநேரத்தில்
இந்நகரின் மீது ஜோடியாகப் பறப்பார்கள்,
நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்.
***
வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்
***