எப்போதுமே நம் மனதிற்கு நெருக்கமானவை கவிதைகள் வீரான் குட்டி கவிதைகள். அவை படிவங்களைக் கொண்டிருக்கின்றன. எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிவங்கள், உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுவற்ற எளிய உணர்வுகள் இவற்றை தாங்கி நிற்கின்றன இவரது கவிதைகள். இதனாலேயே இவரை படிமங்களின் கவிஞர் என்று கூறலாம் என்று தன்னுரை தந்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் சுஜா.
அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிரிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது என்று ஜெயமோகன் 'எளிமையெனும் எனும் விடுதலை' எனும் தலைப்பில் வாழ்த்துரை தந்திருக்கின்றார்.
கேள்
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்:
அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்
என்று ஆம். ரத்தினமாவதற்கும் முத்தாவதற்கும் எவ்வளவு காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று உதடுகள் இருந்தால் சொல்லியிருக்கும் என்று சொன்ன அவர், அன்போடு ஒரு கை தொடும் அந்த நேரமே அவை நிகழ்ந்து விடும் என்று வாஞ்சையுடன் வருடி விடுகிறார்.
ரூமிக்கு
காயங்கள் பட்டாலென்ன உதடுகளுடன்
எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா?
புல்லாங்குழல் பாடுகிறது
மூங்கிலில் துளையிட்டு புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். அந்த மூங்கிலில் துளை இடுவதென்பது ஒரு தனி கலை. தேர்ந்த மூங்கில் எடுத்து அதில் லாவகமாக துளையிட்டு புல்லாங்குழலாக்குவர். இத்தகைய காயங்களை தாங்கிய அது நம்முடைய உதடுகளுடன் எப்போதும் வசிக்க முடியுமா? அந்த வலியினைத் துறந்து ஆனந்தமாக பாடுகிறது புல்லாங்குழல் என்கிறார். வலியையும் ஆனந்தத்தையும் ஒரு சேர கூறுவதில் வீரான்குட்டி நம்மை ஆள்கிறார்.
பிடியில்
உறைந்து கட்டியாகிய
தண்ணீரில் இருந்த
மீன்குட்டியை
சூரியன் வந்து திறந்துவிட்டது.
திரும்பிப் போகையில்
தண்ணீர் சூரியனோடு போய்விட்டது
இனி அந்தக் குட்டியை
யார் கவனிப்பார்?
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால் என்பார் வைரமுத்து. இங்கே உறைந்து கட்டியாக இருக்கின்ற தண்ணீரின் உள்ளே உறைந்த மீன் குட்டியை சூரியக்கதிர்கள் விலக்கி அதனை நீந்த விடுகிறது. சூரியன் தன் கடமையை முடித்து திரும்பிப் போகையில் அந்த தண்ணீர் வெம்மையை இழந்து மீண்டும் குளுமைக்கு மாறி விடுகிறது. இப்போது மீண்டும் மறைந்து போன அந்த மீன்குட்டியை யார் கவனிப்பார்? என்று கவலை கொள்ள வைக்கிறார். இது அழகியலோடு இணைந்த நுட்பமான படிமம் சார்ந்த கவிதை.
வீணாக
சுயரூபம்
நீட்டியும்
குறுக்கியும் ஆடும்
நிழலின்
விளையாட்டை
அற்பமாக
நினைக்க வேண்டாம்
எப்போதும்
ஒருவனின்
கீழேயே
இருக்க வேண்டி வந்ததன் துக்கத்தை
மறப்பதற்கு
அது
முயற்சி செய்து கொண்டிருக்கலாம்
வெயிலில் நாம் போகும் போது. நம் நிழல், நம் அசைவிற்கேற்ப நீண்டும், குறுகியும், ஆடி அசைந்தும் போவதுண்டு. அந்த நிழலை கண்ணுற்றவர் எப்போதும் தமக்கு கீழேயே அது இருக்கிறதே என்று ஏங்கி அதன் துக்கத்தை நீக்குவதற்காக அது முயற்சி செய்கிறது என்று தேற்றுகிறார். இது ஒரு படிம நிலைக் கவிதை. மனித வாழ்வியலோடு இதனை பொருத்திப் பார்த்தால் எப்போதுமே நாம் கீழே இருக்க வேண்டிய நிலையிலேயே இருப்போமோ என்பதை துறந்து முயற்சி செய்தால் மீண்டு வரலாம் என்ற தன்னம்பிக்கையைப் பேசுவதாக அமைகிறது.
ஒவ்வோர் இலையும்
நாம் இங்கிருந்து கொண்டு
பூமியின் எல்லா மரங்களிலும்
எத்தனை இலைகள் என்று
எண்ணத் தொடங்குகிறோம்
இலைகள் எவ்விதத்திலும்
ஒத்துழைப்பதில்லை
அவற்றிற்கு அதொன்றும்
முக்கியமில்லை.
ஒவ்வோர் இலையும்
அதனதன் அதீத தனிமையில்
உதிரும் போதுதான்
நாமதைத் தெரிந்து கொள்கிறோம்
அவ்வளவு தான்.
பூமியினுடைய எல்லாம் மரங்களிலும் உள்ள இலைகளையும் எண்ணத் தொடங்குவதென்பது அத்தனை எளிதல்ல. அதேபோல வீழும் ஒவ்வொரு இலையும் அதனதன் தனிமையைச் சுமந்து கொண்டு விழுகின்றன என்ததத் தெரிந்து கொண்டாலே போதும், அந்த வலியை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும்.
உங்கள் கடைசி கோடாரிக்கு அப்புறமும் எங்கள் முதல் இலை உதிராமல் தான் இருக்கும் என்று நிறைவு செய்திருக்கும் 'எங்கள் முதல் இலை' என்னும் கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.
***
வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...
***
0 comments:
Post a Comment