இந்த கவிதையில் மிக அனாயசமாக தொன்மத்துள் புழங்குகிறார் கவிஞர் விக்கிரமாத்தியன். ஒரு கவிதைக்குள் தொன்மத்தையும், நவீனத்தையும், சலிப்பையும், பிரபஞ்சத்தின் அசைக்க வியலா நிரந்தரத்தையும் பேசுகிறார். கிழக்கை நம்பிக்கை தருகிறது என்கிறார்.தென் திசை வர வேண்டிய இடம் என்கிறார். மேற்கு ஆறுதல் தரும் என்கிறார். கவிதையை முடிப்பதோ திசை முடிவுக்கு தெரிவதோ ஆகாச நீல நிறம் என்கிறார். இந்த கவிதை நமது மரபார்ந்த குத்து வரிசை சண்டை போல நம்மை தாக்குகிறது. மெது மெதுவாக காலை எடுத்து,தொடையில் தட்டி, வலது காலை எடுத்து எதிரியின் முகத்தில் எகிறி தாக்குவது போல நம்மை தாக்குகிறது. விக்கிரமாதித்யன் கவிதைகளில் ஓரு அரிய தன்மை உண்டு.
கவிதையின் ஒரு பத்தி தரையில் படுத்திருக்கும். அடுத்த பத்தி தொன்மத்தின் தோள் பிடித்து நடக்கும்.அடுத்த பத்தி அன்றாட யதார்த்தத்தில் புரளும். அடுத்த பத்தி சட்டென்று தரையில் கிடக்கும் பறவை சடாரென விழித்து சூரியனை நோக்கி பறப்பதை போல என்றென்றைக்குமான உன்மையை நோக்கி பறக்கும். நாம் ஓரு கணம் அந்த பிரகாசத்தை தாங்க முடியாமல் கண்களை சுருக்கி கொள்வோம். பென்குவின் பறப்பது போன்ற சித்திரம் அது.இந்த கவிதை அப்படியான கவிதை. தாவி தாவி உயரத்தில் உயரத்தில் பறக்கிறது.
***
ஆகாசம் நீலநிறம்
கிழக்கு வந்து
கூப்பிட்டுப் போகும்
சிந்திச் சீரழித்ததை
சேர்த்து விடலாமென்று
நம்பிக்கை தரும்
நல்லபுத்தி சொல்லும்
மேற்கு
கொஞ்சம் ஆறுதலாக
காத்திருக்கச் சொல்லும்
முடியாதென்றால்
போய்த் தொலையென்று கோபிக்கும்
தெற்கு
மனத்துக்குள் நினைக்கும்
‘வர வேண்டிய இடம் தப்பி
போவதுதான் முடியுமோ இனி’ யென்று
நிச்சயத்துடன் எதிர்பார்த்திருக்கும்
வடக்கு
திரும்பத்திரும்ப அழைத்து
தொந்தரவு செய்யும்
“இப்போதைக்கு
என்னிடம் வந்து இரு” வென்று
கட்டாயப் படுத்தும்
திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்
ஆகாசம்
நீல நிறம்
- விக்ரமாதித்யன்
***
மன்னார் கோவில் தமிழ் கவிதையில் ஆபூர்வமாய் ஒலிக்கும் குரல்.கோவிலின் அழகை துல்லியமாய் பேசும் இக்கவிதை." வணங்காவிட்டாலும் பரவாயில்லை.வண்ண வடிவ சுதையழகை வந்திருந்து பார்க்க கூடாதா" என்கிறது.மகத்தான அழகை பார்க்கும் தோறும் கலைஞனுக்கு கால காலமாய் தோன்றும் கேள்வி அது.மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபஸ் சிற்பம் அன்றாடம் ஆயிரக் கணக்கான செல்பிகளாய் குளிக்கிறது.இதையா அந்த சிற்பி உங்களிடம் எதிர் நோக்குவது இதையா? காலத்தை உறைய. வைத்தவனின் முன் கண நேரமெனும் உறைந்து நிற்க கூடாதா.அர்ஜுனன் மட்டுமா அங்கு தபஸ் செய்கிறான்.சிற்பியும் தானே.மாபெரும் கலை பொக்கிஷங்களின் காலத்தின் புழுதி படிக்கிறது.மனிதர்கள் மிக சுலபமாக கடந்து போகிறார்கள்.கோவில் கலையழகின் முன் நாத்திக,ஆத்திக விவாதத்திற்கு அர்த்தமுண்டா.தெய்வத்தை தொழ வேண்டாம்.அதன் சிற்பியை தொழு நீ என்கிறது இக் கவிதை.ஓரு கவிஞனின் மனம் மகத்தானதை காணும் பொழுது அப்படித்தான் பதை பதைக்கும்.
***
மன்னார்கோயில்
சிதிலப்பட்ட கோபுர முகட்டிலிருந்து
புறாக்களும் கிளிகளும் கவலையறியாது
பறந்துபோய் வருகின்றன ஜிவ்வென்று
முதல் மெத்தையில்
சிதேவி பூதேவியோடு
இருந்த கோலத்தில்
இரண்டாவது அடுக்கில்
பைநாகப் படுக்கையில்
கமலத்திருவிழியுடன் அறிதுயிலில்
இறங்கிவந்து பார்த்தால்
ஏக அலங்காரத்தில்
நின்ற கோலத்தில்
ஒரே
ஒரு வருத்தம்
வழிபடத்தான் ஆளில்லை
வணங்காவிட்டாலும் போகிறது
வண்ணச்சுதை வடிவழகை
வந்திருந்து பார்க்கக்கூடாதா
எந்தவகையில் சேர்த்தி
காக்கும் கடவுளுக்கே
இந்தகதி வந்தவிதி
- விக்ரமாதித்யன்
***
கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்