ஒரு கவிதை எவ்வாறு அர்த்தப்படுகிறது? ஒவ்வொரு கவிதையனுபவத்திற்கும் பிறகு ஏற்படும் வியப்பு இது. கவிதையனுபவத்தை பகுத்தாய்வது என்னைப் பொறுத்தவரை வெறும் மூளை விளையாட்டல்ல. அவ்வனுபவத்தை துளித்துளியாக மீண்டும் அனுபவிக்கும் முயற்சிதான். என் வாசிப்பின் அனுபவத்திலிருந்து ஒன்றை கூற முடியும். எனக்குக் கவிதை தரும் அனுபவம் அடிப்படையில் சொற்கள் சார்ந்தது. கருத்துக்கள், படிமங்கள், உணர்வுகள் ஆகியவை பதச்சேர்க்கையின் விசேஷ இயல்பு மூலம் வெளிப்படும் தருணத்தில் மட்டுமே அவற்றைக் கவிதை என உணர என்னால் முடிந்திருக்கிறது. ஒருவகையில் இவ்வனுபவம் மிகமிக அந்தரங்கமானது. இன்னொரு வகையில், எல்லா அந்தரங்கமான விஷயங்களையும் போலவே, சர்வஜனத் தன்மை கொண்டது. ஏதோ ஒருவகையில் எனக்கிணையான அனுபவப்புலம் உடையவர்களிடம் மட்டுமே என்னால் கவிதைபற்றி பேசமுடியும்.
கவிதைகளை நான் சொற்கூட்டங்களாகவே ஞாபகம் வைத்துள்ளேன். பெரும்பாலான கவிதைகளுக்கு மையவரியாக ஒன்றை நான் உள்வாங்கிக் கொள்வதுண்டு. இவ்வரிகளை ஒட்டி, இவ்வரியால் பிரகாசமாக்கப்படும் வரிகளாக, மொத்த கவிதையையும் அர்த்தம் முற்றாக மறைந்த நிலையில் கூட என்மனதில் ரீங்காரமிடும் சொற்கூட்டங்களை உருவாக்காத ஒன்றை கவிதை என்று என்னால் ஏற்கமுடியாது. கவிதையின் பிற இயல்புகள் பற்றிய அனைத்து விசாரணைகளையும் இங்கிருந்தே நான் தொடங்குகிறேன்.
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு.
மரக்கிளையினை
நீச்சல்குளத்தில் துள்ளும் பலகையென மதித்து
அங்கிருந்தும் தவ்விப் பறக்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி
சுரீரெனத் தொட்டது அக்கடலை, என்னை,
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன்
வீட்டை
ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
- தேவதேவன்
இக்கவிதையை நான் முதலில் படித்தபோது ஆரம்ப வரிகள் புனைவின் தளத்தில் நகர்ந்ததை உணர்ந்தேன். சொற்களின் வழியாக காற்றிலும், ஒளியிலும் நீந்தும் சிறு பறவையொன்றின் மனப்பிம்பம் எழுந்தது. ‘மரணமற்ற பெருவெளிக்கடலை’ வாசித்தபோது குருவி என்ற சித்திரம் பல்வேறு அக உருவகங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அதை ஒரு படிமம் என்று கூறலாம். அப்படிமத்தின் சாத்தியத்தை விரிவுறச் செய்யும் வரிகள் பின்பு தொடர்ந்தன. கடைசி நான்கு வரிகள், ‘ஓட்டுக் கூரையெங்கும் ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும் உள் அறைகளெங்கும் சிரிப்பும் அழுகையும் மரணங்களும்’ சட்டென்று அதுவரை அன்னியமாக இருந்த ஓர் ஒளிமிக்க பிரதேசத்திற்கு இழுத்து வந்து என்னை நிறுத்தின. மனதின் மிக ஆழத்தில் இனம் தெரியாத ஒரு சலனத்தை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் அவ்வரிகளில் மனம் கவிவதையும் மந்திரம் போல அவ்வரி உள்ளூர ஓடுவதையும் உணர்ந்தேன். அதன் பிரகாசம் முந்தைய வரிகளில் பிரதிபலித்தபடியே விரிவதை அறிந்தேன். மொத்தக் கவிதையுமே தீவிரமான அனுபவத்தைத் தருவதாக மாறிவிட்டது.
இந்நான்கு வரிகளும் கவிதையின் ‘உடலில்’ இருந்து அலாதியாக வேறுபட்டு நிற்பதைக் காணலாம். முதல் வித்தியாசம் இதன் தாளக்கட்டு தான். இவ்வரிகளை மனம் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது மனதின் ஆழத்தில் அந்தத்தாளம் எதிரொலி எழுப்புகிறது. பிறவரிகள் சித்தரிப்புத்தன்மையையும் அதற்குத் தேவையான தகவல்களையும் (நீச்சல்குளத் துள்ளுபலகை) தொகுத்துக் கூறும் ஒழுங்கையும் கொண்டிருக்கும்போது இந்நான்கு வரிகளும் தாங்கள் இசைத் தன்மைக்கு மட்டுமே கட்டுப்பட்டிருக்கின்றன. நேர்பொருள் என்று பார்த்தால் இவற்றின் செறிவு மிகக்குறைவு. அல்லது பொருட்படுத்தத்தக்க அர்த்தமேதும் இவற்றுக்கு இல்லை. இருந்தும் இவை பிரகாசமாக உள்ளை நிரப்புகின்றன. கவிதையின் உடல், குத்துவிளக்கு. சிற்ப நுட்பங்கள். உலோக எழில். நம்பிக்கையின் சாயல் தரும் கிளர்ச்சி. ஆனால் சுடர் ஏற்றப்பட்டதும் குத்துவிளக்கு இன்னொன்றாக ஆகிவிடுகிறது. அதன் அத்தனை நுட்பங்களும் அச்சுடருக்காகவே என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அச்சுடரே அது என்று தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த வரிகளை சிற்பத்தின் விழிகள் எனலாம்.
இந்நான்கு வரிகளில் ஒளி, நிழல், உதிர் சருகு, சிரிப்பு, அழுகை, மரணம் என்ற ஆறு சொற்களே முக்கியமானவை. ஒவ்வொரு சொல்லும் தன்னளவில் ஓர் ஆழ் படிமம் (ஆர்கிடைப்) என்று கூறப்படுவதுண்டு. தனிமன உணர்வுகள், பாரம்பரியமான அனுபவப் பின்புலங்கள், இன்னும் எண்ணற்ற நுண்ணிய அம்சங்களால் செறிவூட்டப்பட்ட தனிப் பிரபஞ்சங்களே ஒவ்வொரு சொல்லும். ஒரு கவிதை சொற்களை அடுத்தடுத்து வைப்பது வழியாக ஒரு பிரபஞ்சத்தின் ஒளி இன்னொன்றின்மீது பிரதிபலிக்கும்படிச் செய்கிறது. இவ்வாறாக அவை ஒவ்வொன்றும் புத்தொளி பெற்று அதுவரை நாம் ‘அறியாத’ புதிய அனுபவச் சாயலொன்று அச்சொற்கள்மீது ஏறுகின்றது. இவ்வாறு உருவாகும் முடிவின்மையே கவிதையனுபவத்தில் நம்மை பிரமிக்கவைக்கும் அம்சம். பரஸ்பரம் பிரதிபலித்து ஒளியேற்றும் ஆறு வைரப்படிகங்கள் என்று உவமை கூறலாம். ஒவ்வொரு சொல்லுடனும் இணைந்துள்ள உணர்வுப்பின்புலத்தின் ஒரு சிறு பகுதி நமது அன்றாட வாழ்வு சார்ந்தது. அப்பகுதியை மட்டுமே நாம் தர்க்க பூர்வமாகவும் அறிவுசார்ந்தும் அறிய முடியும். மற்றபடி ‘என்னவோ தெரியவில்லை அச்சொல்லைக் கேட்டாலே ஒரு இது’ என்ற அளவில்தான் அவ்வனுபவப் பிரபஞ்சத்தை நாம் அறிந்திருப்போம். இன்னொரு சொல்லின் ஒளி அச்சொல்மீது விழும்போது நம் உள்மனம் அறிந்த ஒன்று வெளிமனத்திற்குத் தெரியவருகிறது போலும். ஏனெனில் எந்த மகத்தான கவிதையும் நாம் ஏற்கனவே ‘அறிந்த ஒன்றையே திரும்பச் சொல்கிறது. ஒரு கவிதை நமக்குக் காட்டிய ஒன்றை எவ்விதமான நிரூபணமும், தருக்கமும் இன்றி அப்படியே நாம் ஏற்பது இதனால் தான். கவிதை நம்முன் தன்னைத் திறக்கும் கணத்தில் நாம் அடையும் பரவசம் ‘ஆம் இதுதான்’ என்ற சொற்கள், அல்லது ‘இது என் கவிதை’ என்ற அறிதல் ஆகும்.
தேவதேவனின் இவ்வரிகளில் ‘ஒளி - சிரிப்பு’, ‘நிழல் - அழுகை’, ‘சருகு - மரணம்’ என்ற இணைவுகள் உள்ளன. ‘ஒளி – நிழல் - சருகு’, ‘சிரிப்பு – அழுகை - மரணம்’ என்ற இணைவுகளும் உள்ளன. இவையிரண்டும் ஓரளவு வெளிப்படையாகத் தெரியும் சொல்லிணைவுகள், இந்த ஆறு சொற்களும் தங்களை எப்படி வேண்டுமானாலும் இடம்மாற்றி பிரதிபலித்துக் கொள்ள முடியும். இவ்வரிகள் நம்முள் ஊறும்தோறும் புது சாத்தியங்கள் விரிகின்றன.
ஒவ்வொரு படைப்பையும் நாம் படிக்கும் போது நம்மையறியாமலேயே – நமது அகமனதின் மூலம் – அதை நுண்ணிய அலகுகளாகப் பிரித்துக் கொள்கிறோம். நமது உள்ளார்ந்த படைப்புசக்தி அதைக்கொண்டு நமது அனுபவ – உணர்வுக் கூறுகளினாலான ஏறத்தாழ இணையான ஒரு படைப்பை உருவாக்கிக் கொள்கிறது (நவீன விமரிசனத்தின் இந்த அணுகுமுறையே புரியாதவர்களால் அபத்தமாகவும் எந்திரத்தனமாகவும் செய்யப்பட்டுள்ளது.) இவ்வாசிப்பை நமது தருக்க மனத்தால், புழக்க அர்த்தத்தை மட்டும் சொற்களுக்கு அளித்து, ஒருபோதும் செய்யலாகாது. அது கவிதையின் பிணத்தை மட்டுமே நம்மிடம் சேர்க்கும். பிறகு தமிழில் பரவலாக செய்யப்பட்டதுபோல பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியது தான்.
தேவதேவனின் மேற்குறிப்பிட்ட வரிகளில் கூரை, அறை என்ற இரு சொற்களும் பரஸ்பரம் பிரதிபலிக்கின்றன். பிற ஆறு சொற்கள் உருவாக்கும் அனுபவப் பிரபஞ்சங்களை இவை மீண்டும் மீண்டும் பகுத்தும் இணைத்தும் பிரதிபலிக்கின்றன. நமது தருக்கத்திற்கு இப்பிரதிபலிப்புகள் தரும் பல்வேறு அர்த்தங்களை தொகுத்துக் கொள்ள முனைவது கவிதையை விளக்க முயலும் பழைய பண்டிதர்களிடமே நம்மை கொண்டு போய் சேர்க்கும். கவிதை என்பது முற்றிலும் அகமனம் சார்ந்த ஓர் இயக்கம் ஆகும். ஆகவே அதற்கு நிலைத்த தன்மை இல்லை. எனவே அதை வரையறுத்து நிறுத்துவது சாத்தியமல்ல.
இந்நான்கு வரிகள் எனக்களித்த பிரகாசம் குருவியெனும் படிமத்தை பிரம்மாண்டமானதாக ஆக்குகிறது. கவிதையின் சொற்களனைத்தும் கண்ணாடிகளாக ஆகி அக்குருவியை பிரதிபலிக்கின்றன. மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி எழும் குருவி. என் வீட்டைத் தன் வீடு ஆக்கிய குருவி. திருப்தியுறாது சன்னலுக்குத் தாவிய குருவி. மரத்தையும் உதறிக் காற்றில் எழுந்த குருவி. ஒளியில் பெரும் பளீருடன் நீந்தும் குருவி. உயிரின் ஆனந்தப் பெருமிதம் வழியும் குருவி. கூரையையும் உள்ளறைகளையும் அறிந்த குருவி. ஒளியிலும் சிரிப்பலும் நிழலிலும் அழுகையிலும் சருகுகளிலும் மரணத்திலும் சிக்காத குருவி.
“பறவையையே குழந்தை முதலில் பார்க்கிறது” – ’குரு நித்யசைதன்ய யதி’யின் ஒரு வரி. பறவையை நாம் பார்க்கும்போது என்ன நடக்கிறது? நம்முள்ளிருந்து மிகச்சாராம்சமான ஒன்று எழுந்து வானில் நீந்துகிறது. அனைத்தையும் உதறி ‘விட்டு விடுதலையாகி’ அது ‘மரணமற்ற பெருவெளிக் கடலில்’ களிக்கிறது. நாம் பறவையைப் பார்ப்பதில்லை நம்மிலிருந்து பிரிந்து எழுந்த அந்த சாரத்தையே பார்க்கிறோம், ‘விண்ணில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பறவையைத் தொடரும் விழி ஒரு இடத்தில் நின்று விடுகிறது. அதற்கப்பாலும் பறக்க அந்தச் சிறு குருவியால் முடியும். மொழியினூடே கவிஞன் அந்தத் தத்தளிப்பையே பதிவு செய்கிறான். தனது அறியமுடியாமையின் துயரின் முதல் விளிம்பை அவன் தொடும் போது அவன் சொற்தடங்களைப் பின்பற்றி நமது அறியமுடியாமையின் துயரின் விளிம்பி நாமும் தொடுவதே கவிதைவாசிப்பின் கடைசி சாத்தியம். இக்கவிதையை எழுதி முடித்துவிட்டேன் என ஒருபோதும் கவிஞன் கூறுவதில்லை. ஆகவே இக்கவிதையை வாசித்து முடித்துவிட்டேன் என வாசகனும் கூற முடியாது தான். மொழியெனும் மரக்கிளையில் அமர்ந்து வானில் எழத் தவித்துத்தவ்வும் சிறுகுருவியே கவிதை. அதைப் பார்த்து உடன் தவித்துத் தவ்வுவதே வாசிப்பு.
(நன்றி: உள்முகம், கவிதைக்கான காலாண்டிதழ்)
***
உள்முகம் ஜூன், 1997 இதழில் வெளிவந்தது.