கவிதை-புரிதல் - ‘கவிதையில் இருண்மை’ - கவிஞர் அபி

15. புரிந்துகொள்ள முடியாத அல்லது மிகக்கடினமான கவிதையை ‘இருண்மைக் கவிதை’ (obscurity) என்று வகைப்படுத்துவது வழக்கமாகியிருக்கிறது. பொருள் மயக்கம் (ambiguity) என்ற இன்னொரு சொல்லும் புழங்குகிறது. புரியாத கவிதைகள் எல்லாவற்றுக்குமே இது பொருந்துமா என்பதைப் பார்க்க வேண்டும். வழமையான பார்வை உள்ளவர்கள் நவீனப் படைப்பை அணுக முடியாமலும், சிலசமயம் அணுக விரும்பாமலும் இருக்கும் நிலைக்குப் படைப்பாளிகளைக் காரணமாக்குகிறார்கள். “நவீன வாழ்வின் குழப்பங்கள், எளிதில் நெருங்க முடியாத அறிவியல் வளர்ச்சி, கலை அன்றாட வாழ்விலிருந்து பிரிந்து நிற்கும் நிலை – இவைகளால் எரிச்சலுறும் கவிஞன் இவற்றின் மீதான் தன் எதிர்மறையான தீர்ப்பை உணர்த்தும் உத்தியாகவே இருண்மையைப் பயன்படுத்துகிறான்” – இது எஃப்.டபிள்யூ. துபீ சொன்னது. “பல துறைகளிலும் கவிஞன் செலுத்தி வந்த ஆதிக்கம், இன்று வெவ்வேறு தனித்தனித் துறை வல்லுநர்களிடம் போய்விட்டதனால், தனக்கென்று தகுதியான ஒரு தனித்துறையை நிறுவும் முயற்சியில் கவிதையை இருண்மையாக்கினான்.” – இது ஜான் க்ரோவே ரன்சம் சொன்னது. இந்தக் கருத்துக்கள் ‘கவிதையில் இருண்மை என்பது எதிர்மறை நோக்கம் கொண்டது; வேண்டுமென்றே வலிந்து செய்யப்படுவது’ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. இது ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட கருத்து.

16.  இருண்மைக்கான நியாயங்களை – நவீன வாழ்விலிருந்தும், அறிவுத்துறைகளிலிருந்தும் பிரம்மராஜன் போன்றோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நடப்புக் கால வாழ்வின் சிக்கல்களால் விழும் முண்டு முடிச்சுகளைச் சிக்கலாகவே வெளியிடுகிறான் கவிஞன் ஒரு கவிதை:  

‘இரவு வந்ததும் விடிகாலையின் கறுப்புப் பால் அருந்துகிறோம்

வானத்தில் ஒரு சவக்குழி தோண்டுகிறோம்
தேவைக்கு அதிகமான இடம் உண்டு அதில்
வீட்டில் ஒரு மனிதன்
தான் வரையும் பாம்புகளுடன் விளையாடுகிறான்’

 பால் செ லானின் ‘சாவின் சங்கீதம்’ என்ற இந்தக் கவிதை ஹிட்லரின் மரணக் கூடாரம் (Death Camp) பற்றியது. இந்தப் படிமங்கள் சாவை விளக்காமல் சாவின் பயங்கரத்தை அனுபவப்படுத்துகின்றன. வாழ்வின் இருளை இருள்கொண்டே எதிரொலிப்பவை, இந்த மாதிரிக் கவிதைகள். வாழ்நிலைகளின் சிக்கலை கவிதை பிரதிபலிக்கிறது என்பது உண்மையானால், அந்த வாழ்வை வாழ்வோர்க்கு அக்கவிதை புரியவேண்டும் தானே என்று கேட்கலாம். கவிஞனது படைப்புலகின் நியதியில் அந்தச் சிக்கல்கள் என்னவிதமான மாற்றுவடிவு கொள்கின்றன என்பதைக் கூர்ந்த பார்வையில் தான் உணர முடியும்.

17.  புதிய தத்துவக் கண்ணோட்டங்கள், மனோதத்துவ விரிவு, அறிவியல், வாழ்வின் மீது படியும் வித்தியாசமான பார்வைகள் – இவைகளின் நுழைவும் கவிதை கடினமாயிருப்பதற்குக் காரணம். பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத இசை, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளின் நுணுக்க விவரங்கள் கவிதைகளுக்குள் ஊடுருவியிருக்கின்றன. இந்த விவரங்களைப் புரிந்து கொண்டால் இந்தக் கவிதைகள் ஓரளவு புரிந்துவிடும். E = mc2 என்ற சூத்திரம் புரிந்தால் அந்தத் தலைப்பில் உள்ள பிரமிளின் கவிதை புரியும். பிராய்டின் அடிமனம் பற்றிய விளக்கங்கள் தெரிந்தால் பிரமிளின் ‘அடிமனம்’ கவிதை புரியும், ‘நில்; பின்னால் திரும்பு, திரும்பிநட, இருட்டு, கோடிக்காலக் கூட்டிருட்டு’ என்று தொடரும் சி. மணியின் கவிதையில் ‘கோடிக்காலக் கூட்டிருட்டு என்னவென்று புரிய வேண்டுமானால் யுங்கின் தொகை நனவிலி (Collective Unconcious) கோட்பாடு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய குரூரங்களின் வித்து ஆதிமனிதக் குரூரம் என்பதை உணர்ந்தால், ‘மலையேறுகிற பிள்ளைகள் (தள்ளிவிடு) மண்டை நொறுங்க விழட்டும் அடிவாரத்தில் செம்பருத்தி பூக்கும்’ என்ற கலாப்ரியாவின் கவிதை புரியும்.

உன் பெயர்

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத்தரச் சொல்லும்
விநோதக் கோரிக்கை

எனும் சுகுமாரனின் கவிதையில் காதறுக்கும் விஷயம் பிடிபடவில்லை. ஓவியமேதை வான்கா தன் காதலிக்குத் தன் காதை அறுத்துக் கொடுத்த வரலாறு தெரியும்போது சுகுமாரனின் கவிதையில் இருண்மை என்று ஒன்றும் இல்லை எனக் காணலாம். இது மாதிரி பிற அறிவுத்துறைத் தொடர்புகள், வெளியுலக விவரங்களின் துணை கொண்டு புரிந்துகொள்ள முடியும் கவிதைகளிக் கழித்துவிட்டால் இருண்மைக் கவிதைகளின் அளவு குறையலாகும்.

18.  வேறு சில கவிதைகள் வாசிப்பில் மிக எளியவையாகத் தோன்றும், எனினும் ஏதோ ஒரு கணத்தில் வாசகனை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்று சுழற்றிவிடும். 

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே?
அது
சற்றைக்குமுன்
பறந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தின் இந்தக் கவிதையில் காலம் திடீரென இடமாகக் காட்டப்படுகிறது. காலத்தின் இடம் ஒருவகை ஸ்தூலமாக அனுபவமாகிறது. ஒருவிதமான உள்தர்க்கம் கவிதையில் செயல்படுகிறது. கவிஞனின் வித்தியாசமான பார்வையில் கிட்டிய அனுபவம் – இதற்கு மேல் இந்தக் கவிதையில் என்ன விஷயம், செய்தி? எதுவுமில்லை. இது மாதிரிக் கவிதைகள் மனசை அசைத்துச் சலனப்படுத்துகின்றன. சிந்தனையைப் பீடித்திருக்கிற வழக்கமான தர்க்கம் தளர்கிறது; ஒரு சுதந்திரத்தன்மை உண்டாகிறது.

19.  படைப்பாளியின் சிலரின் மிகத் தனித்தன்மையான மன இயக்கம் படைப்பில் செயல்படும் போது, அந்த இயக்கம் புரியாததன் இருள், கவிதையிலிருந்ஹ்டு எழுந்து வாசகனைக் கவிகிறது, நிச்சயமாக மொழி வடிவத்துக்கும் சிந்தனை வடிவத்துக்கும் முந்தைய நுட்ப உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். அருவமும், மௌனமும் அகாலமும் அகாதமுமாகிய முடிவிலிகள் கவிதைக்குள் பிரவேசிக்கின்றன. அதனால் கவிதை முன் – பின் அற்றதாகி விடுகின்றது. ஆராய்ச்சிக்கும் தேடலுக்கும் அகப்படாதவற்றை, கவிஞனே கூடத் துல்லியமாக உணர்ந்திராதவற்றை அவனுடைய உள்ளுணர்வின் துணைகொண்டு கவிதை வெளிக் கொண்டு வருகிறது. நாம் அவன் எழுத்தி உணரும் இருளை அவனும் தான் உணர்கிறான். அபியின் ‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’, ‘வடிவங்கள்’ போன்ற கவிதைகளில் அருவம் பசித்திருக்கக் காணலாம். ‘தன்வாழ்வு’ என்பதைத் தன்னிலிருந்து விலக்கிவைத்துப் பார்த்து, அதன் தன்னிச்சை இயக்கங்களைக் காடுவதன் மூலம் அதனுள் பொதிந்திருக்கிற வரம்பற்ற ஆனந்த சுதந்திரத்தைக் கவிதை அருவ வடிவமாகவே அனுபவப்படுத்த முயல்கிறது. ‘வடிவங்கள்’ கவிதை முற்றிலும் பொருள்களிலிருந்து அவற்றின் வடிவங்களைப் பிரித்துக் காணும் முயற்சி. ஆத்மாநாமின் ‘இல்லாத தலைப்பு’ என்ற கவிதை ‘நான்’ என்பதன் உண்மையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியில் “நான் இல்லை” என்று முடிகிறது. தயக்கமாகவேனும் வாசகனைத் தலையசைக்கச் செய்கிறது கவிதை. பொதுவாகவே கவிதைகளில் இடம்பெறும் நான் – ‘நீ’ க்கள் அல்ல. “O One O none O no one O yes” என்று கவிஞன் விளிப்பது யாரை? யாராகவும் இல்லாதவனை! அதாவது இல்லாதவனை! கவிஞன் தனக்கு முன்னால் ஒரு சூனிய ‘முன்னிலை’யைக் காண்கிறான். கவிஞனுடைய அபரிமிதமான சுதந்திரம், எதேச்சையாக அனுபவங்களை அவனுக்குத் தருகிறது. மர்ம முடிச்சுகள் என்றாலும் அவை நமக்கு நமது போக்கில் அனுபவமாகாதிருப்பதில்லை.

இந்தத் தரத்துக் கவிதைகள் பற்றி டி.எஸ்.எலியட், “நாம் உள்நுழைந்து பார்க்காத நமது இருப்பின் அடி ஆழத்தை உருவாக்குவதாகிய, ஆழ்ந்த, பெயர் கூறப்படாத உணர்ச்சிகளைப் பற்றிய உணர்வைக் கவிதை நமக்கு அடிக்கடி எழுப்பலாம்” என்று விளக்குகிறார். பிரமிளின் ‘உன் (பெயர்)’ என்ற கவிதை:

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத் தானே விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்து
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்பெயரின் முத்தங்களை
உதறி உதறி அழுதது இதயம்
பெயர் பின் வாங்கிற்று
அப்பாடா என்று அண்ணாந்தேன்
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று இடையறாத உன் பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு’

இங்கே ‘உன், என்’ யார்? ‘சொல் பெயர்’ என்ன? ‘ரத்தப்பெருக்கு’ ஏன்? காதல்? இருக்கலாம்; வேறேதேனும் உறவு? இருக்கலாம். புறத்திலிருந்து அகத்தினுள் புகுந்த ஏதோ கலவரம் இருக்கலாம். ஆன்மிகத்தில் ஒரு மோதல் நிலை? இருக்கலாம் தான். படிமங்கள் அனைத்திலும் எலியட் சொன்ன ‘பெயர் கூறப்படாத உணர்ச்சி’ நிலவிக் கொண்டிருப்பதை உணரலாம்.

20.  அறியாமை என்பதை அறிவின் எதிர்ப்பதம் என்று வைத்திருக்கிறோம். உண்மையில் அறிவைத் தூண்டுவதும், அறிவால் துலக்கமாவதும் அறியாமை. அறிவின் திருப்பங்களில் நின்று பார்க்கும் போதெல்லாம் எட்டித் தெரியும் அடிவானம் தான் அறியாமை. “அறிதோறு அறியாமை கண்டற்று” என்று வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார். இந்த இருள், இந்தத் தெளிவின்மை படைப்பின் ஊற்று. கவிதைக்கு மிக அருகில், மானுட வாழ்வின், பிரபஞ்சத்தின் அநாதிகள் குவிந்து கிடக்கின்றன. அதனால், கவிதையின் இருண்மை என்பது வாழ்வின் இருண்மைதான். “இருளென்பது குறைந்த ஒளி” என்றார் பாரதி. அதுதான் இருளைக் காணச் செய்கிறது. உண்மையான கவிஞன் செயற்கையாக இருண்மை காட்டுவதில்லை. பத்திரிக்கைச் செய்தித் தலைப்புகளின் வெட்டுத் தொகுப்பைக் கவிதையாகக் காட்டுவதுபோன்ற துடுக்குத் தனங்களைச் சம்பந்தப்பட்ட கவிஞர்களின் சோதனை முயற்சியாகக் கொள்ளலாமேயன்றி இருண்மையின் அடையாளங்களாக அவற்றை நாம் அங்கீகரிக்க மாட்டோம்.

21.  இனி, கவிதை மற்றும் விமர்சனத்தின் புதிய பிரிவு ஒன்றைத் தொடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. ‘பன்முகப் பொருளாக இருக்கிற இலக்கியத்துக்கு முழுமையான அர்த்தம் என்று ஒன்றுமே கிடையாது; இலக்கியப் பொருளின் மீது அர்த்தத்தை இடுவது என்பது, நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதாகும்; இலக்கியப் பொருள் ஏற்படுத்தித் தரும் பரந்த வெளியில் அலைந்து, திரிந்து, உடைத்துக் கொண்டிருப்பதே, இந்தச் சிறையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்ளும் புரட்சிகரச் செயல்பாடாகும்’ என்று ரோலான் பார்த் காட்டிய வழியில், பிரம்மராஜன் கவிதைகள் சிலவற்றைக் கட்டுடைத்து ‘அர்த்தம்’ கொள்ள வைக்கிறார் நாகார்ஜூனன். இது அமைப்பியல் வழிமுறை.

‘கலை உளி துயில் கல்’ என்ற கவிதை:

‘நீங்கள் அறிந்த பாடலின் பாடலை
நிலா ஈர்ப்புக் கடல் அலை
கேட்பதில்லை நீங்கள்
புரிந்த பிரமிக்கும் ஓவியத்தை நீங்கள்
பார்த்ததில்லை
நீங்கள் மலை மட்டிலா மகிழ்வில் சிலை
அற்புத பொற்பத நிமிஷ அருகாமையை புரிந்ததில்லை நீங்கள்
கலை உளி துயில் கல்
சுக்கலாகிய மிகச் சிக்கலான விபத்தை
நீங்கள்
நினைப்பதில்லை
அமைதியின் அமைதியை
சுமையின் சுமையை – மனதில் மனதை.’
இதைக் கட்டுடைக்கிறார் விமர்சகர்:
“அறிந்த பாடல் புரிந்த ஓவியம் மகிழ்வுசிலை
கேட்கிறோம் பார்க்கிறோம் புரிகிறோம் நினைக்கிறோம்
நிலா ஈர்ப்புக் கடல் அலை அற்புதப் பொற்பதச் சிலை
சுக்கலாகிய மலை
கல்லுளிக் கலை
பாடலின் பாடல் அமைதியின் அமைதி சுமையின் சுமை மனதில் மனது
கேட்பதில்லை பார்ப்பதில்லை புரிந்ததில்லை நினைப்பதில்லை
சிக்கலாகிய விபத்து
களி துயில் கலை’

வேறு வேறு இடங்களிலிருந்து சொற்களை வெட்டி ஒட்டிக் கொடுக்கிறார். ‘கலை வடிவத்தை நாமறியோம். நம் நிலை என்ன களிதுயிலா? என்று ஒட்டுமொத்தக் கருத்துரையும் தருகிறார்.

22.  அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகள் பலர் புரிந்து கொள்ளாதவை. எனினும், மேற்காட்டிய உடைத்தலைப் பொறுத்துச் சில கேள்விகள் எழக்கூடும். பிரித்து, ஒட்டி வெவ்வேறு வகையாகப் பொருள் காணக்கூடும் என்றால், கவிஞர் பிரக்ஞை பூர்வமாக, முதலில் எளிதாயிருந்ததைப் பிரித்து வேறுவேறு இணைப்புகளில் பொருத்தினார் என்று எண்ணத் தோன்றுகிறதே! இது சரியா? நச்சினார்க்கினியரின் மாட்டேறு உத்தியைப் பெரிதுபடுத்தியது போலிக்கிறதே? கவிதை முழுமையாகச் சொற்கட்டுக்குள் வாசகனை அலைக்கழிக்கிறதே, அதுதான் அவனுக்குக் கிட்டும் அனுபவமா? கவிதைக்கு அர்த்தம் கிடையாது என்று சொல்லிவிட்டு அர்த்தப் படுத்துவதற்காகப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்கிற விமர்சகரின் நோக்கம் என்ன? கவிதையின், கவிஞனின் குறைபாடு இங்கே ஒன்றும் இல்லை. பிரம்மராஜனின் உண்மையான தீவிரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, அவரது கவிதைகளை நெருங்குவதற்கான அணுகல் முறையை இன்னும் எவரும் எடுத்துக் காட்டவில்லை என்பதே உண்மை. ஆகவே இக்கவிதைகளின் புரிதலுக்காகக் காத்திருப்பதில் அலுப்படைய வேண்டியதில்லை.


23.  இருளை விலக்கும் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்திய பிறகும் புரியாதவை இருந்தே தீரும்; புதிய வழிமுறைகளைக் காலம் உருவாக்கித்தரும். வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியவில்லை என்பதும் சமமான வருத்தங்களே. கவிதை அழகுணர்ச்சிக் கிளர்ச்சிகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டதன்று. மானுட அனுபவத்தின் கணக்கற்ற மூலைகளில் சஞ்சரிப்பதும் அதன்மூலம் மனிதனை மனிதனுக்குமுன் நிறுத்துவதுமாகிய இயக்கம் கவிதைக்குரியது. ஆகவே அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் முயற்சியும், மனிதனுடைய கடமைகளாகின்றன.

- முற்றும் 

(நன்றி தீராநதி - இதழ் செப்டம்பர் 2004)

***

கவிஞர் அபி தமிழ்.விக்கி பக்கம்

Share:

’எளிய’ கவிதையின் இன்றைய குரல் - கடலூர் சீனு

 1

ஒருமுறை கவிஞர் லிபி ஆரண்யாவுடன் புத்தக சந்தை ஒன்றில் கடை கடையாக நுழைந்து கைக்கு கிடைத்த புதகங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் கையில் எடுத்துப் புரட்டும் ஒவ்வொரு நூல் குறித்தும் லிபி பகடியாக (அது உண்மையும் கூட) ஏதேனும் சொல்லிக் கொண்டே வந்தார்.

பாரதியார் உடன் நிகழ்ந்த தருணங்கள் குறித்து எழுதிய ஒரு ஆளுமையின் நூலை புரட்டிப் பார்க்கையில் லிபி "வெறும் 120 பக்கம்தான் இருக்கு அப்படின்னா இந்தாளு சொல்றது உண்மையாத்தான் இருக்கும்". என்றார் இப்படியே தொடர்ந்த நடையில் நான்  மொழிபெயர்ப்பு கவிதைகள் நூல் ஒன்றை எடுத்து புரட்டுகையில் " நல்ல கவிதைகள் ஆனா பாருங்க, இதையெல்லாம் கவிதைன்னு ஒத்துக்கிட மாட்டாங்க. எளிமையான வெளிப்பாடா இருக்கு .அதை விட  படிச்ச உடனேயே புரிஞ்சிடுது" என்றார் லிபி. 

இந்த 2022 இல் நிலவரம் இன்னும் சரிவை நோக்கி சென்றிருக்கிறது. தீவிர × கேளிக்கை எதிரிடை, பேதம் அழிந்து வருகிறது. விளைவு கலை போதம் அற்ற எவரும் கலை முன்னால் வந்து நிற்கும் நிலை இன்று. பொது சமூக ஊடகத்தில் கவி க. மோகனரங்கன் மொழியாக்கத்தில் மேரி ஆலிவர் எழுதிய, நான் கவலைப்படுகிறேன் எனும் தலைப்பு கொண்ட பஷீரிய அழகியல் கொண்ட எளிய வெளிப்பாடு கொண்ட, நேரடி கவிதை ஒன்றுக்கு நான் கண்ட எதிர்வினைகள் கொண்டிருந்த அறியாமை திகைக்க வைப்பவை. எளிய வெளிப்பாடு கொண்ட கவிதைகள் சந்தேகிக்கப்படும் தீவிர வாசிப்பு சூழல், எத்தனை எளிமை கொண்டிருந்தாலும் அது கவிதை என்று கூட அடையாளம் காண இயலாத பொது வாசிப்பு சூழல். இந்த சூழல்தான் பிறகெப்போதையும்விட 'நல்ல' கவிதைகள் குறித்து பேச வேண்டிய சூழலாகிறது.

ஒரு பண்பாட்டுச் சூழலில் ரசனை மதிப்பீட்டின் வழியே திரண்டெழுந்து முன் நிற்கும் நல்ல கவிதைகளுக்கு (குறிப்பாக நவீன கவிதைகள்) சில பொதுப் பண்புக் கூறுகளை காணலாம்.

  1. அதன் உணர்வு தளத்தின் உண்மையும் தீவிரமும்.
  2. மொழியால், சொற்சேர்க்கையால், படிமங்களால் வடிவ வெளிப்பட்டால் அது கொண்டிருக்கும் புதுமை.
  3. அது கிளர்த்தும் அர்த்த, கற்பனைச் சாத்தியங்கள்.
  4. அது கொண்டிருக்கும் பிறிதொன்றில்லாக் கூறு.
  5. காலத்தை உதறி என்றுமுள்ள காலத்தைத் தொட்டு காலாதீதம் கொள்ளும் கூறு.

இந்த வரிசையில் 'புரியும் தன்மை' என்பது ஏன் இல்லை?  இங்கே இந்த 'புரிதல்' எனும் நிலை குறித்து சற்றே அணுகிப் பார்ப்போம். புரிதல் எனும் நிலை எப்போதும் அறிவார்ந்த தளத்தை சார்ந்தது. புதிதாக ஒன்றை நாம் எதிர்கொள்கையில் அதன் தனித் தன்மை பொதுத்தன்மை வழியே அதை வகுத்து வைத்து நமது இறந்த கால அறிவு சேகரத்துடன் அதை பொருத்தி அர்த்தம் அளித்து அடையாளம் காணும் நிலையையே நாம் (மிக பொதுவான வரையறை) புரிதல் என்கிறோம்.

கவிதை போன்ற நுட்பம் கூடிய கலை அம்சங்களில் இதே செயல்முறையை பிரயோகிப்பது என்பது அக் கலையை அதன் நோக்கை செயற்களத்தை குறுக்கி அதனை சாரம் இழக்க செய்யும் ஒன்றாகவே சென்று முடியும். கவிதையில் எப்போதும் புரிதல் என்பதற்கு இணையாக அனுபவம் என்ற தளமும் தொழிற்படுகிறது. புரிதலும் அனுபவித்தலும் என்ற ஜோடி சிறகுகள் கொண்டு பறக்கும் பறவையே கவிதை வாசித்தல் எனும் கலை. ஆகவே இந்நிலை வழியே கண்டால், வாசகன் இக்கவிதை புரியவில்லை என்று சொல்வதன் வழியாக இக்கவிதை தனக்கு அனுபவம் ஆகவில்லை என்பதையும் சேர்த்தே சொல்லுகிறான் என்பதே பொருள்.

கவிதை பெரும்பாலும் அது அக்கணம் நேரும் அனுபவம் எனும் உடனடி நிலையை தனது இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் மொழி, சொற்சேர்க்கை, படிமங்கள் என அனைத்தும் கொண்டு கவிதை இலக்காக்குவது இந்த உடனடித் தன்மையையே. இதில் புரியாமை என்பது இரண்டு தன்மைகள் கொண்ட கவிதைகள் வழியே நிகழ்கிறது. ஒன்று கலை என்றாகாத கவிதைகள். மற்றொன்று கலை வெற்றி கூடிய கவிதைகள். கலை என்று ஆகாத கவிதைகளில் உள்ள முதல் சிக்கல் அதன் போலி உணர்வை ஒருமையற்ற படிமங்களை கொட்டி நிறுத்தி அதை கவிதை என்றாக்கும் முயற்சியில் உள்ளது. பிரமிள் சுகுமாரன் போன்ற ஆளுமை மிக்க கவிகளின் கவிதைகளில் அதன் உணர்வு தீவிரம் எனும் தழலுக்கு அக் கவிதைகளில் எழுந்து வரும் படிமங்கள் யாவும் ஒருமை கொண்டு நெய்யாகிச் சொறிவதை காணலாம். இரண்டாம் தர போலி கவிதைகளில் இது நேர் எதிர் விகிதத்தில் அமையும். அடுத்து எதிர் கவிதைகள் போன்ற புதிய புதிய மோஸ்தர் குப்பைகள் எல்லாம் இந்த முதல் வரிசையில் சேரும்.

நேர் மாறாக கலை வெற்றி கூடிய கவிதைகளில் (பொதுவாக) முதல் வாசிப்பில் எழும் புரியாமையே அதன் கலை வெற்றியை தீர்மானிக்கும் கூறுகளில் ஒன்றாக அமைகிறது. கால காலமாக கவிதையின் பேசு பொருளான அதே காதல்தான் அதே தனிமை ஏக்கம்தான் அதே மலர்தான் அதே நிலாதான் இன்று இக்கணம் அது ஒரு புதிய கவிதையில் எழுகையில் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? காரணம் நல்ல கவிதைகள் நாம் 2000 வருடங்கள் கடந்து வந்து, இதுவரை அறிந்து வைத்திருக்கும் அதே உணர்வுகளை, மலரை, நிலவை இதுவரை நாம் அறிந்து வைத்திருக்காத புத்தம் புதிய கோணம் ஒன்றில் தொட்டுத் திறந்து காட்டுகிறது என்பதே. மொழி கொண்டு படிமங்கள் கொண்டு கவிதை 'இக்கணம்' திறந்து காட்டும் புத்தம் புதிய அவ்வனுபவம் அதை 'இக் கணமே' வாசகன் கண்டு பரவசம் எய்தும் நிலை இதையே கவிதை அனுபவம் என்கிறோம்.

இத்தகு கவிதைகளை நமது 'அனுபவ' வட்டத்துக்குள் கொண்டு வருவது, அடர் வனத்தில் குறிப்பிட்ட அபூர்வ பறவை ஒன்றை கண்டவர் அதை பிறருக்கு சொல்வது போல, ஒவ்வொரு மரமாக கிளையாக சொல்லி சொல்லி அவர் நம்மை வழி நடத்த, குறிப்பிட்ட புள்ளி வருகையில் அவர் கண்ட அபூர்வ  பறவையை நாமும் 'கண்டு' விடுவோம். கவிதை ரசனைப் பட்டறைகள் அதன் பொருட்டே. எளிய கவிதைகள் என்று வருகையில் ( ஒரு புரிதலுக்காக அவ்வாறு வகைப்படுத்திக் கொள்கிறோம் )  இசையின் சில கவிதைகள், முகுந்த் நாகராஜன் அவர்களின் பல கவிதைகள் இவை எல்லாம் கண் மூடி நா நீட்டி நிற்கும் நம் நாவில் நாமறியா கணத்தில் விழும் மலைத் தேனின் சொட்டு போல . 'அது' என்ன?  'நாம்' என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் அறிவு தீர்மானிப்பதற்குள் கணத்திலும் கணப் பொழுதில் உணர்வு தீர்மானித்து விடும். பட்டரையே தேவையில்லை முற்றிலும் புதிதான 'எல்லாமே' அறியப்பட்டு அனுபவிக்கப்பட்டு விடும்  இப்படி கவிதை அளிக்கும் புத்தம் புதிய உடனடி அனுபவ தளத்தை உடனடியாக வாசக அனுபவத்துக்குள் கொண்டுவந்து விடுபவை என்று இத்தகு கவிதைகளை சொல்லலாம். இத்தகு 'எளிய' கவிதைகளின் மற்றும் ஒரு முக்கிய கவி ஆளுமையாக தனது டிப் டிப் டிப் எனும் முதல் தொகுதி வழியே உருவெடுத்திருக்கிறார் கவிஞர் ஆனந்த் குமார்.

2

முகுந்த் நாகராஜன் கவிதைகள் போலவே ஜெயமோகன் அவர்களால் கண்டு சொல்லப்பட்டு குறுகிய காலத்திற்குள் பரவலாக வாசக பரப்புக்குள் அறியப்பட்டு கொண்டாடப் பட்டவை ஆனந்த் குமார் கவிதைகள். டிப் டிப் டிப் தொகுப்பு  முகுந்த் நாகராஜன் கவி உலகு போன்றே புத்தம் புதிய உணர்வு அடங்கிய எளிய வெளிப்பாடு கொண்ட கவிதைகள். அதே சமயம் இத் தொகுப்பு வழியே முகுந்த் நாகராஜனுடன் ஆனந்த் குமாரை ஒப்பிட்டு திறன் நோக்கிப் பார்க்கையில் சுவாரஸ்யமான ஒரு படிமம் மனதில் எழுகிறது.

யானையை கற்பனை, உணர்வு என்று கொண்டால் அங்குசத்தை தர்க்கம்,செய் நேர்த்தி என்று கொள்ளலாம். முகுந்த் கவிதைகளில் உள்ள யானையோடு பாகனாகிய முகுந்த் கூடவே வருகிறார். பாகன் கையில் அங்குசம் இருக்கிறது. டிப் டிப் டிப் தொகுப்பிலும் யானையோடு பாகன் ஆனந்த் கூடவே வருகிறார். அங்குசத்தை யானை கையிலேயே கொடுத்துவிட்டு, கை வீசியபடி.

டிப் டிப் டிப் கவிதை தொகுப்பு கொண்ட ஆதார உணர்வு நிலைக்கு வெளியிலான கவிதைகளிலும் ஆனந்த் குமார் அவ்விதமே இருக்கிறார். உதாரணம் கீழ்கண்ட கவிதை.

ஓர் உடல்
பின் ஈருடல்
பிரிந்து பிளந்து பலவாகிப் பெருகி
கொட்டித் தீர்க்கும் பெருமழை.

யாரும் பார்க்காத ஒரு துளி
சரியாக உடைத்தது ஒளியை.

சிதறித்தெறித்து அண்டமெல்லாம்
ஒழுகியது பகல்.

இந்தப் பகலை
ஒரு தளிர்முனை
தாங்கி நிற்பது போலவே
இருளை விரலேந்திச்
சுழற்றுது சுடர்.


எழுந்து பறக்கும் கற்பனையை கொந்தளிக்கும் உணர்வினை எல்லைகட்டி நிறுத்தும் விசையை இக் கவிதை தனக்குள்ளேயே இருந்து கண்டடைந்து எடுத்துக்கொண்டதை போலொரு மயக்கம்.

எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும் என்பதைப் போலவே ஆனந்த் குமாரின் பிற கவிதைகளில் இருந்து கல்பற்றா நாராயணன், இசை, சுகுமாரன் என்று பிற கவிகளை நோக்கி பயணிக்க முடியும். உதாரணமாக பிரமிள் சுகுமாரன் கவிதைகளுக்கு வாசகரை செல்லத் தூண்டும் தனிமையின் ஏக்கத்தின் நிராசையின் கொதிப்பில் எழுந்த  இக் கவிதை.

ஒரு அன்பைக் கொண்டு
ஒரு அன்பின்மையை
நிகர்செய்ய முடியுமா?

வற்றும் காதலின் பாழ்நிலம்
பாளங்களாய் பிளந்து காட்டுகிறது
இருளின் ஆழத்தை

அதையும் நிரப்புமா
ஆறெனப் பெருகும்
உன் காதல்?

வெடிப்பின் ஆழத்தில்
சிறு முள்ளென
ஈரம் ஊற்றெடுத்தால்
மூழ்குமோ
வெயிலில் கனத்த
இந்த வெளி.


ஒரு முறை உத்தராகண்டில் ஃப்படா எனும் கிராமத்தில் பொன்னொளிர் காலையில்  மலைச்சரிவு ஒன்றை நோக்கி நின்றிருந்தேன். சரிவு எங்கும் பருவம் தப்பிப் பூத்த வண்ண வண்ணப் பூக்கள், எழுந்து பறந்து அமரும் வண்ண வண்ண பறவைக் கூட்டம். சரிவின் கீழே ஆழத்தில் அறுந்து விழுந்த பாலத்தை மோதி ஒலித்து ஓடும் கங்கை. ஒரு உளமயக்கு தருணத்தில் அந்தச் சரிவே ஒரு மாபெரும் ஒற்றை மலர் என்று தோற்றம் அளித்தது. அவ்வனுபவத்துக்கு இணையான போன்சாய் அனுபவம் இந்த காதல் திணை குறித்த கவிதை.

காதலர் அமர்ந்த இடம் சுற்றி
ஒரு மலரின் வாசனையென
விரிகிறது
இன்னொருவர் அமராத
சிறு எல்லை.

சாலை சுழித்துப் போகுமந்த
நகரப்பூங்காவின் மதியத்தில்
அந்த மலருக்குள்ளே பூக்கிறது
ஒவ்வொரு முத்தத்திற்கும்
ஒவ்வொரு மலர்.
 

காதலின் பித்தை எழுதிக் காட்டத்தான் கவிதை எனும் வடிவே தோன்றியது என்பதைப்போல எத்தனை எத்தனை காதல் கவிதைகள். எழுதி எழுதி எழுதி இன்னும் வரும் காலம் முழுக்க எழுதினாலும் புதிதாகவே இருக்கிறது காதலின் பித்து.

மீட்டாதது.

நீண்டு கிடக்கும்
பியானோ
இரவா
பகலா
எதை நீ
தேர்ந்தாய்

தேய்ந்து ஒலிக்கிறது
இசை – நீ
தொட்டதா
விட்டதா
எதை நான்
கேட்டேன்.

வாரம் மாதம் என நீளும் நாட்களின் வரிசையில் அதன் பகலையும் இரவையும் பியானோவின் கட்டைகள் என்றாகி தொட்டும் விட்டும் தெய்வீக இசை கிளர்த்தும் அந்தக் காதலின் பொன் விரல்.

பித்தெழச் செய்வது அவ்விரல் தொட்டெழுப்பிக் கேட்ட சங்கீதமா? அவ்விரல் தொடாமல் விட்டெழுப்பிய கேளாச் சங்கீதமா?

எல்லாமே மாயையென்றாகி, கற்பனையில் சிறகு விரிந்த வானை உதிர்த்து, யதார்த்தம் எனும் புழுதி மண்ணில் கால் பதிக்கும் உணர்வை பேசும் இக் கவிதை.


இந்த நாள்
அதுபோலவே இல்லை
இந்த இடம்
மொத்தமாய் மாறிவிட்டது
நீயும் நானும்தான்
ஆனாலும் வேறெங்கெல்லாமோ
இருக்கிறோம்.
'இங்குதான் உனைச் சந்தித்தேன்'
என எப்படிச் சொல்வது.

விரல்கள் நதியைத்
தொடுகையில்
அறிவது எதை
நதியின் எடையை
நதியின் வழியை
விடு எனும் சொல்லை
தனக்கேயான
ஒருகண நதியை.

உண்மை, நன்மை, அழகு என்றொரு வரிசையை பேசுகிறது இந்திய மரபு. உணர்வுகளின் உன்னத நிலை வழியே காணக் கூடுவது அது. உன்னதமடையா கச்சா நிலையில் அதே உணர்வு காம குரோத மோகம் என்று வெளிப்படுகிறது. கவி ஆனந்த் குமார் உலகு மலர்கள் பறவைகள் குழந்தைகள் தந்தைமை தாய்மை காதல் மட்டுமே கொண்ட ஒன்றல்ல, அதே அளவு முக்கியத்துவம் கொண்ட தீவிர காம க்ரோத மோக உணர்வை சுட்டிய கவிதைகளும் அங்கே உண்டு. உதாரணமாக காமம் குறித்த இக்கவிதை

இதழ்களால் அள்ளி
கைகளால் விழுங்குகிறாய்

ஒன்றாக முடியாத
உடல்களின் வேதனையைத்தான்
தூரமிருந்து‌ நோக்குகிறாயா

பற்றி எரியும் நெருப்பினுள்
இன்னொரு தீபத்தை
எப்படி ஏற்றுவது
படர்ந்த பிரபஞ்சத் தீயினை
அடுத்த திரிக்கு
எப்படி மாற்றுவது

ஈரம் மினுங்கும்
உன் கண்களில்
இதழ் பதிக்கிறேன்

உதிராத மலரொன்றை
எடுத்துச் செல்கிறது
வாசம்.


குரோதம் குறித்த இக்கவிதையை, இதை நிகழ்த்துபவன் வாலிபன் எனக் கொண்டால், வயோதிகன் எனக் கொண்டால், பதின் வயதை தொடா சிறுவன் எனக் கொண்டால் ஒவ்வொரு சாத்தியத்தின் உள்ளும் இக் கவிதை வழியே வாசகன் அடையக் கூடிய ஒன்று திடுக்கிடச் செய்வது.

அவன் ஒரு புழுவைக் கொன்றான்


எந்தவித குரூரமோ
எந்தவித கருணையோ இன்றி

ஒரு புழுவை
அவன் நசுக்கிக் கொன்றான்.

அது வெயிலில் கிடந்து தவிப்பதைக் காணச் சகியாமல் அல்ல

தனது உணவிலோ தேகத்திலோ ஊர்ந்ததால் அல்ல

காரணத்தின் மெல்லிய காற்றுபோலும் தீண்டாத

தவறுதலின் சிறிய ஓசை கூட கேட்காத

ஒரு ஏகாந்த தருணத்தில்

சின்னப் புன்னகையோ
சிறுதுளி கண்ணீரோ இன்றி

முழு விழிப்புடன்

மிக நிதாதனமாக

அவன் அந்தப் புழுவைக் கொன்றான்.


இந்த உலகையே அள்ளி உண்ட பின்னும் நிறையாத விழைவின் மோகத்தின் விசையை அது கொண்டு சேர்த்த பாழ் நிலத்தின் வெறுமையை பேசும் இக் கவிதை.

மலையெனக் கருதி

இருளை

பாதிவரை எறிவிட்டேன்.

இடரும் ஏதன் தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.

வழியென்பது ஒன்றேதான், மேலே.

விடிய
நான் தொட்டது
பாழ்வெளியின் பெருமூச்சு.

எனக்குத் தெரியும்
ஏறுவதை விட
இறங்குவது
கடினம் என.

ஆனாலும்

மலையில்லாத
உச்சியிலிருந்து

எப்படி இறங்க?


போலிக் கவிதைகளும், இரண்டாம் நிலைக் கவிதைகளும் சுனாமி போல வந்து அறைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், நல்ல கவிதை என்பது வானவில் போல அபூர்வமானது. வானவில்லின் செய் நேர்த்தி இயற்கையின் விதிகளில் உள்ளது. அவ்விதிகள் போலும் அபூர்வ கவிதைகளின் படைப்பு உள்ளம்.


ஒரு இயற்கை ஆவணம் ஒன்று கண்டேன். கலிபோர்னியா அருகே ஒரு தேசிய பூங்காவின் பேரருவி. செயற்கை ஒளிகள் ஏதும் இல்லை. நள்ளிரவு. முழுமதி. நெடுங்காலம் காத்திருந்து அந்த ஆவணம் எடுத்துக் காட்டியது. முழுமதி ஒளியில் பேரருவியில் எழுந்த வெண்ணிற வானவில்லை.

சில படைப்பு உள்ளம் இந்த வெள்ளை வானவில் போலும் அபூர்வத்திலும் அபூர்வம். அத்தகு படைப்பு உள்ளத்தின் வெளிப்பாடே ஆனந்த் குமார் வழியே கவிதைகள் என நிகழ்ந்திருக்கிறது.

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெரும் கவி ஆனந்த் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

*** 

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

ஆடல்வெளி - பாலாஜி ப்ருத்விராஜ்

சாயல்


உனக்கு அப்படியே

அவளின் சாயல்
அப்படியே அல்ல
ஒரு பக்கம்
ஒரு பக்கமல்ல
ஒரு பக்கத்தின் ஓரம்
அதுவும் கொஞ்சம்
திரும்பி நின்றால்
கண்களைத்
தழைத்துக்கொண்டால்
மாலை ஒளியில்
அல்ல
நிழல் விழும்பக்கம்
முகம்
முகத்தின் கோடுகள்கூட அல்ல
விழிகள் மீது
இமைகளில் வளைந்து
மேலேறிச் சுழலும் மயிர்களோ
அல்ல அதுவல்ல
நடையல்ல குரலல்ல
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
கொஞ்சம் விலகிச்சென்றால்

கவிதை வாசிப்பனுவத்திற்கான உதாரணமாக ஆனந்த்குமாரின் இவ்வரிகளைக் கூறமுடியும். ஒரு கவிதையை ‘புரிந்துகொள்ளும்’ முன் வரிகளில் இருந்து நேரடியாக எழும்பும் உணர்வு முந்திக் கொண்டு நம்மை வந்தடைகிறது. அதன் பிறகே அர்த்தப்படுத்தி மனதிற்குள் ஒரு ஒழுங்கை அளிக்கிறோம். ஒரு நல்ல கவிதையை விளக்கும்போது நாம் செய்வதெல்லாம் மனதில் பதிந்த அந்த “சாயலைக்” கூறவே முற்படுகிறோம். அதற்கு நிகரான வாழ்க்கை தருணங்கள் வழியாகவோ அதைப் போன்ற வேறு கவிதை வரிகள் வழியாக அந்த சாயலைக் கொண்டுவரமுயல்கிறோம். ஆனால் எவ்வளவு விளக்கினாலும் கொஞ்சம் விலகித் தான் நிற்கிறது. ஒரு கவிதைத் தொகுப்பைக் குறித்து எழுத முற்படும்போது ஏற்படும் சிக்கல் இதுதான்.


இலக்கியத்தின் தூய வடிவமாகக் கவிதையை குறிப்பிடுவார்கள். அது உணர்வுகளைக் கிளப்பி ஒரு அனுபத்தை அளித்து நகர்ந்து விடுகிறது. அவ்வனுபவத்தை ஒட்டியே அக்கவிதை நமக்கு பொருள்படுகிறது. ஒரு கவிதையை நான் புரிந்துகொள்வதற்கு நேரெதிராக இன்னொருவர் அதை அணுகலாம். ஆனால் அனுபவங்கள் வேறுவேறாக இருப்பினும் சிறந்த கவிதையை அடையாளம் காண்பதில் இலக்கிய வாசகர்களுக்கு இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இருந்ததில்லை. பிரமிளின் “காவியம்” கவிதை அளிக்கும் அனுபவம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும் அது சிறந்த கவிதையென்பதில் மாற்றுக் கருத்து இருந்ததில்லை. ஆகவே ஒரு கவிதைத் தொகுப்பை பற்றி எழுத முற்படுகையில் அதிலுள்ள சில சிறந்த கவிதைகளை சுட்டிக்காட்டி பொதுவான தளத்தில் எவ்வகையான கவிதைகளை எழுதியுள்ளார் என்பதை மட்டும் கூறலாமென நினைக்கிறேன்.


‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை தொட்டுக் காட்டி தன் கவித்தருணத்தை நிகழ்த்துகிறது. என் வாசிப்பில் இதையே அவரது அடிப்படை கவிமனம் என்பேன். இதிலிருந்துதான் அவரது அனைத்து விதமான கவிதைகளும் எழுகின்றன. மேலும் இதை தன் சரியான மொழிநடையால் சொல்லிணைவுகளால் வெளிப்படுத்தும்போது அவ்வனுபவத்தை நம்மில் நாம் நிகழ்த்திக் கொள்கிறோம். இந்த அம்சமே ஒரு கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது என நினைக்கிறேன். ஒரு பாடலை அதன் நேர்த்திக்காக மீண்டும் மீண்டும் கேட்பது போல கவிதையின் வரிகளை பிரித்தும் சேர்த்தும் மனதில் சொல்லி ரசித்துப் பார்க்கிறோம். இவ்வகைக் கவிதைகளில் எனக்குப் பிடித்த இரண்டைக் கீழே கொடுத்துள்ளேன்.

திரை நோட்டம்
அடுக்களை திரைச்சீலைக்குப்
பின்னால் தெரிகிறது
அம்மாவின் கால்கள்

போகிறது வருகிறது
நிற்கிறது யோசிக்கிறது
அது வட்டமிட்டெழுப்புகிறது
அன்றைய
நிகழ்தலின் வாசனையை

சட்டென திரைவிலக்கி
அருகில் வரும்
முதல்வாய் சுவைக்கும்வரை
நின்று பார்க்கும்
ஆட்டத்தை சமைத்த
பாதங்கள்

திரைக்குப் பின்னிருக்கும் அம்மாவின் அசைவை கதக்களியோடு இணைப்பதில் இக்கவிதையின் உச்சம் நிகழ்கிறது. ஒரு எளிய லௌகீக வாழ்க்கைத் தருணத்திற்குள் ஒளிந்திருக்கும் கலைத்தருணம் தொட்டுக் காட்டப்படுகிறது. அக்கவியோடு கொஞ்ச நேரம் நாமும் அக்கணத்தில் திளைக்கிறோம். என்னவிருந்தாலும் அது அன்னையின் பாதமல்லவா? அக்கனிவின் ஊற்றிலிருந்து தானே அந்த லீலையும் சுரந்து வர முடியும்.

பரிசு
கைக்குள் மூடி வைத்து
எடுத்துவருகிறான்
எனக்கொரு பரிசை
கைகளை உடலாலே
ஏந்தி வருபவன்போல்
மிகமிக கவனமாக
நடக்கிறான் அவன்

மர்மம் தாளாமல்
வழியில் நின்றவன்
ஒருமுறை
லேசாய் திறந்து
பார்த்துக் கொள்கிறான்
தானே மறைத்துவைத்த
ஆச்சரியத்தை

இக்கவிதையில் இருக்கும் எளிமையின் அழகு நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்கச் செய்வது. பேசுபொருளும் கூறுமுறையும் சரியாக இணைந்து கொண்ட கவிதை. ஒரு எளிய சிறுவனிலிருந்து இவ்வுலகைப் படைத்த கடவுள் வரை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். சிருஷ்டி கர்த்தாவே தன் சிருஷ்டியின் மர்மத்தை கண்டு வியக்கும் கணம் இக்கவிதையில் உள்ளது. கலைஞர்களும் தன் படைப்பை பார்த்து அவ்வாறுதானே வியக்கிறார்கள்!

இரண்டாம் வகைக் கவிதைகளில் மெல்ல விலகி வெளிச்செல்லும் ஒரு பயணம் இருக்கிறது. இவ்வகைக் கவிதைகளும் நேர்க்காட்சியின் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதில் இருந்து கொஞ்ச தூரம் செல்கிறது. சிந்தனையின் தூரம், உணர்வின் தூரம், கற்பனையின் தூரம் அவற்றில் நிகழ்கிறது. அதற்குப் பின் வெளிப்படும் சொற்கள் தன்னை கவிஞன் என்று உணர்பவனிடமிருந்து வருபவையாக உள்ளன. அந்தத் தாவல் சரியான தருணத்தில் நிகழும் போது காற்றுபோல அதை ஏந்திக் கொண்டு கவிதை பறக்க ஆரம்பிக்கிறது.

“அம்மா இப்போதெல்லாம்
அவளின் அம்மாவைப்போல்
ஆகிவிட்டாள்
எதையும் கையில் எடுப்பதில்லை
தொட்டுத்தான் பார்க்கிறாள்
நடப்பாள் ஆனால்
ஒரு பக்கம்
சரிந்த நடை
கோவிலைச் சுற்றும்போது
கோவிலைச் சுற்றவென்றே
சரித்த நடைபோல

சுற்றி முடியப் போகும்
ஒரு நாணயத்தைப்போல
அவள் சுற்றுகிறாள்
விட்டத்தை
குறைத்துக் குறைத்து
அவள்
நடுவிற்கு வருகிறாள்”

கோவில் பிராகரத்தை சுற்றும் அம்மாவின் நேர்க்காட்சியில் ஆரம்பிக்கும் கவிதை முடிக்கையில் மிகப்பெரிய ஒன்றோடு சென்று இணைந்து கொள்கிறது. இதில் நமக்கு அனுபவமாது ஒரு அம்மாவின் வாழ்க்கையல்ல காலந்தோறும் இங்கு வந்து நிகழ்ந்து மறைந்து கொண்டிருக்கும் பெண்களின் நிரையை. துளியில் ஆரம்பித்து கடலில் முடிகிறது இக்கவிதை.


“வண்டியின் பின்னால்
அமர்ந்திருக்கும் அவர்
ஒரு குழந்தையைப்போல்
அணைத்துப் பிடித்திருக்கிறார்
அந்தத் தென்னங்கன்றினை

மரங்கள் தன்மீது
பறக்கும் சாலையை
தைசாய்த்து பார்த்துப்போகிறது
குட்டித் தென்னை

நிமிர்ந்து வளர்ந்து
நிலத்தில் கால்சிக்க
ஓர்நாள்
காற்று தலைவீசும்
ஒரு பெருமழைக்கு முன்,
கண்மூடி
நினைத்துப் பார்க்குமோ
இந்தப் பயணத்தை?”

முந்தைய கவிதைக்கு நேரெதிர் தருணத்தை பதிவு செய்யும் கவிதை. முன்னது அடுங்குதலின் கணத்தை சொல்வதென்றால் இது இளமையின் ஒளியை அதன் மதிப்பை உணர்த்தும் கவிதை. சிறு பதியனுக்குள் மட்டுமே இருக்கும் தென்னங்கற்றின் அறிதல் கணத்தைக் காட்டுகிறது. நம் வேர்கள் பலப்பட்டு உடல் உறுதிகொள்ளும் போது நினைவில் ஒரு இனிய நினாவாக சல்லிவேர்களுடன் பறந்து திரிந்த காலங்கள் எப்போதும் இருக்கின்றன.

மூன்றாம் வகை கவிதைகளில் மேற்கூறிய விலக்கம் முழுமையாக நிகழ்ந்திருக்கிறது. அனைத்து வகையிலும் தன்னை கவிஞன் என்கிற உணர்வு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. இவை ஒருவகையான “கவிக்கூற்று” தான். கவிஞனின் மேடையில் இருந்துதான் இச்சொற்கள் உதிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் ஆச்சரியமாக அப்படியான நின்றிருக்கும் ஆளுமைக்கு எந்த பொறுப்பதிகாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கும் அந்த இயல்பான கள்ளமின்மையே மையம் கொண்டுள்ளது.


இனியது
இன்று என் ஒருவனுக்கு மட்டும்
சமைத்த உணவு
அவ்வளவு சுவையாய் வந்துவிட்டது
நான் கூரைமேல் நின்றுகொண்டு
ஊரையே அழைக்கிறேன்
“சாப்பிட வாருங்கள்”

ஒரு இனிய இசை
கேட்டவுடன்
நட்பின் அத்தனை முகங்களுக்கும்
அதை பகிர்கிறேன்

ஒரு புதிய மலரைப் பார்த்தவுடன்
சுற்றிச் சுற்றி படம் பிடிக்கிறேன்
அதை மேலும்மேலும்
மலர்களாக்குகிறேன்

எல்லாவற்றையும் அல்ல நண்பர்களே
இனிய ஒன்றை பலவாய் பெருக்கும்
இனிய ஒன்றையே பெருக்குகிறேன்

கழற்றக் கழற்ற முளைக்கிறதே
என் தலையிலும் ஒரு கிரீடம்


இக்கவிதை முழுமையாக ஒரு கவிஞனின் சொற்களாக இருந்தாலும் கூடவே அவனுக்குள் இருக்கும் இயல்பான குதூகலிப்பையும் உணர்கிறோம். தன் வீட்டின் கூரையில் அமர்ந்து கொண்டு உரக்கக் கூவியழைக்கும் உணர்வுப் பீரிடல் இதில் பதிவாகியுள்ளது. இரண்டும் சேர்ந்து இக்கவிதையை இதன் தலைப்பிற்கு ஏற்றது போலவே இனியதாக மாற்றுகிறது. முடிவில்லாமல் முளைக்கும் கிரீடம் கொண்ட தலையை நாம் ஒருக்கணம் கண்டுகொள்வது இக்கவிதையின் வெற்றி.


வளரும்வரை பொறு
நீ வீணே
வந்துவந்து
வானைப் பார்த்து
திரும்பாதே
மொத்த நட்சத்திரங்களையும்
ஓர் அறையில்
நான்தான்
பூட்டிவைத்திருக்கிறேன்
அதன் சுவிட்ச்
இப்போது எனக்கு எட்டவில்லை
சேரில்
அம்மா உட்கார்ந்து இருக்கிறாள்.


இக்கவிதையில் இருப்பவன் அம்மாவிற்கு அடங்கியிருக்கும் சிறுவன். அதேசமயம் அவன்தான் மொத்த நட்சத்திரங்களையும் தன் அறையில் அடைத்து வைத்திருக்கிறான். அவன் விரல்பட்டு திறக்க மொத்தக் நட்சத்திரக் கூட்டமும் காத்திருக்கிறது. ஆனால் அதற்கு அம்மா கொஞ்சம் மனசு வைத்து தான் அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து எழ வேண்டும். “வளரும் வரை பொறு” எனக் கூறுகிறது கவிதைத் தலைப்பு. ஆனால் அவன் வளரும் போது மற்றொரு சிறுவன் அந்த நட்சத்திரங்களைக் கவர்ந்து சென்று விடுவான் என்பது நமக்குத் தெரியும்.

மொத்தமாக இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கையில் ஒரு பெரிய ஆசுவாசம் நம்மில் எழுகிறது. வாழ்க்கை ஒன்றும் அத்தனை இருண்டதோ இம்சையானதோ அல்ல. நமக்குக் கொஞ்சம் விளையாடத் தெரிந்தால் மிகப் பெரிய ஆடல்வெளியாகும் இந்தப் பிரபஞ்சம். அதைப் பல்வேறு வகையில் ஆடிக்காட்டி நமக்குத் தெரிவிக்கிறது இக்கவிதைகள். விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் ஆனந்த்குமாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

கவிதை விதைத்தல் - பாலாஜி ராஜூ

கவிஞர் ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' கவிதைத் தொகுப்பை சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் வாங்கினேன், தன்னறம் நூல்வெளி வெளியீடு, எண்ணிக்கையில் 97 கவிதைகள். முதல் கவிதையிலேயே மனதை வசீகரித்துவிட்ட தொகுப்பு ('கிச்சிலிக்கான் பூச்சி'), மறுவாசிப்புகளில் நினைவில் அகலாத பல கவிதைகளையும், வரிகளையும் என்னில் விதைத்திருந்தது. 'விதைத்தல்' என்ற பதத்தை இங்கு சற்று அழுத்தமாகவே முன் வைக்கிறேன். ஒரு கவிதை நம்மில் ஏற்படுத்தும் விளைவென்ன? கவிதைகளின் காட்சிகளோ, சில வரிகளோ, படிமங்களோ நம் அன்றாட நிகழ்வுகளில் ஒரு இனிய வன்முறையாக இடைபுகுந்து நம்மைத் திகைக்கச் செய்பவை, ஒரு புன்முறுவலை உதடுகளில் வரைந்துவிடுபவை, பல நேரங்களில் ஆழமான சிந்தனைகளில் நம்மை ஆழ்த்தும் வல்லமை கொண்டவை, ஒரு கவிஞன் நம்மில் விதைக்கும் விதைகளின் நல் விளைவுகளவை. 

ஆனந்த்குமாரின் கவிதைகள் எளிமையான மொழியில் நம்மிடம் உரையாடுபவை. வாசகனாக கவிதைகளின் மொழிச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அதன் மையத்தை நோக்கி எந்தவிதச் சிதறல்களும் இல்லாமல் மனதைக் குவிக்கமுடிகிறது. பல கவிதைகள் எளிமையான ஒரு சித்திரத்தை நம்முன் நிறுத்தி, சில வரிகளில் கவித்துவ உச்சத்தை அடைந்து, முழுமையான வாசிப்பனுபவம் அளிப்பவை.

மலர் கொய்தல்

'ஊதி அணைக்கக்
கூடாதென்றிருந்தாள் அன்னை
கடவுளர்முன்
ஒரு குழந்தையைப்போல்
வீற்றிருக்கிறது தீபம்'
என்று துவங்கும் கவிதை எரிந்துகொண்டிருக்கும் தீபத்தை அணைக்கவேண்டிய சூழலைச் சொல்லி,
'மலரைக் கொய்வதுபோல்
விரல்களால் பிடித்தேன்
சுடவில்லை
எரிகிறது
சொல்லென மாறாத
சுடர்.'

என்று கடைசி மூன்று வரிகளில் ஆழமான வேறொரு தளத்துக்கு இடம்பெயர்கிறது. 'எரிகிறது சொல்லென மாறாத சுடர்' என்ற வரிகளை ஒரு நாள் முழுக்கப் பலமுறை சொல்லிக்கொண்டிருந்தேன், மந்திரம்போல் என் உதடுகள் இந்த வரிகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தன. மொழி கடந்த ஒரு அக அனுபவம் மூலம் எரியும் சுடரை உணர்ந்துகொள்ளும் ஒரு மனதின் எழுச்சியாக இந்த வரிகளை வாசிக்கிறேன். இதேபோல் 'பாதி உயிர்' என்ற கவிதையில் உள்ள 'நோயென மாறாத வலி' எனும் வரிகளும் நம்மைச் சீண்டிக்கொண்டே இருப்பவை.

ஒரு கவிஞன் உருவாக்கும் கவிதைகளில் அவன் வாழும் சூழல் இடம்பெறுவது இயல்பானது. தமிழில் அருவக் கவியுலகின் பிதாமகர் என்று அறியப்படும் கவிஞர் அபியின் கவிதைகளில்கூட அவர் வாழும் தெருக்களும், அவருடைய ஊரின் மலையும், பள்ளி மைதானமும் வந்துவிடுகிறது. 

ஆனந்த்குமாரின் கவிதைகளில் பால்கனித் தோட்டத்தில் ரோஜாப் பதியன்களுக்கான இடைவெளிகளைக் கண்டுகொண்டேயிருக்கும் அம்மும்மாவும் ('அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்'), நெடுஞ்சாலைப் பயணத்தின் வேகத்தடையொன்றில் நிதானிக்கும் தன் மகனை அர்த்தமாகப் பார்க்கும் அம்மாவும் ('அம்மாவுக்கு வேகம் பிடிக்காது'), அன்றைய நிகழ்வுகளை வளையல்களால் நிகழ்த்திக்காட்டும் மனைவியும் ('அணி'), சந்தன மாரியம்மனுடன் பிணக்குகொண்டு வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு முதுகு காட்டி நிற்கும் ஆச்சியும் ('பதில்'), அம்மும்மாவின் மாத்திரைகள் பொதிந்த பிளாஸ்டிக் குமிழ்களை உடைக்கும் குழந்தையும் (டிப் டிப் டிப்) வந்துவிடுகிறார்கள். ஆனந்த்குமார் எனும் கவிஞன் ஒரு தந்தையாக, மகனாக, கணவனாக, சினேகம் மிக்க அண்டை வீட்டுக்காரராகப் பல கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம், அவை நம்முடைய கற்பனைகயைத் தீண்டி பலபடிகள் எழுந்துவிடும் கவித்துவம் அடர்ந்த கவிதைகளுமாகின்றன.

'இன்றும்
பொழுது சாய்ந்தே
வீடு திரும்புகிறேன்

மாறும் அந்தியின்
நிறங்களைச் சொல்லும்
விளையாட்டை
குழந்தையுடன் ஆடுகிறேன்
இங்கிருந்தபடி'
என்று வீடடையத் துடிக்கும் ஒரு தந்தையின் வரிகளாகத் தொடங்கும் இந்தக் கவிதை,
'வீடு போய் சேர்கையில்
உறங்கும் குழந்தை
கொஞ்சம் வளர்ந்திருப்பான்'

என்று முடிகிறது. நாம் உலகில் காணும் எல்லாமே நுண்ணிய அளவில் மாறிக்கொண்டிருபவையே. இங்கு தந்தை, குழந்தை எனும் பிம்பங்களைத் தாண்டி வாசித்தால், 'மாற்றம்' எனும் ஒற்றைச் சொல் மலைபோல் எழுந்துகொள்வதைக் காணலாம். 'உறங்கும் குழந்தை வளர்ந்திருப்பான்' எனும் கடைசி வரிகளை ஒரு தந்தையின் ஆற்றாமையாக மட்டுமே நான் வாசிக்கவில்லை, 'மாற்றம்' எனும் பிரபஞ்சத்தின் அழியா விதியின் முன் பணிவாக நின்று அரற்றும் ஒரு மனிதனின் வரிகளாகவும் வாசிக்கிறேன்.

ஆனந்த்குமாரின் பல கவிதைகளில் நேர்மறைத்தன்மையும், மகிழ்ச்சியும் அடிநாதமாக விரவிக்கிடக்கிறது. கவிதைகளில் தற்சுட்டுதலும், உக்கிரமும் தவிர்க்க இயலாத பண்புகள், ஆனந்த்குமாரின் பெரும்பாலான கவிதைகள் இந்தப் பண்புகளின் நேரெதிர்த் திசையில் நின்றுகொண்டு புத்துணர்வான வாசிப்பனுபவங்களை அளிக்கின்றன.

பலாப்பழம்

'வைத்துப் பார்த்திருந்து
ஒருநாள் பனிக்குடம் போல்
உடைந்தது அதன் மணம்'

ஒரு குட்டி டப்பாவில்
கொஞ்சம் அடைத்து
இப்போது உங்கள் வீட்டு
அழைப்பு மணியை
அழுத்துவது நான்தான்.'
இனியது –
'இன்று என் ஒருவனுக்கு மட்டும்
சமைத்த உணவு
அவ்வளவு சுவையாய் வந்துவிட்டது'

ஊரையே அழைக்கிறேன்
"சாப்பிட வாருங்கள்". '

இங்கு 'பலாப்பழ மணம்' எனும் மகிழ்ச்சியை நம்மில் ஏந்தி வருபவராக, சமைத்த ருசியான உணவைப் பகிர்ந்துகொள்ள அழைப்பவராக ஆனந்த்குமார் எனும் கவிஞர் வெளிப்படுகிறார்.

'டிப் டிப் டிப்' தொகுப்பின் கவிதைகளில் சிறந்தவை என்று குறைந்தது பத்துக் கவிதைகளையேனும் என்னால் சுட்டமுடியும். கட்டுரையின் அளவு கருதி இந்த ஒரு கவிதையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்,

சொல். அருள். போதை

'அர்த்தம் முளைக்கிறது
மலையென
சொல் அதன்மீது
ஊர்ந்தேறும் கம்பளிப்பூச்சி

காலம் அவிழ்க்கிறது
மாயமூட்டையின்
ஒரேயொரு முடிச்சை
மிக மெதுவாக

அர்த்தம் நழுவ
சொல் எழுகிறது.
சிறகசைப்பின் திசைகளெங்கும்
வீசிப்பறக்கிறதது
தாங்கவொண்ணா வண்ணங்களை'.


சொல், 'அர்த்தம்' என்பதன் கட்டுக்கோப்பான வேலிகளை உடைத்துக்கொண்டு சிறகடித்துப் பறக்கும் ஒரு அனுபவ வெளியைச் சொல்ல இந்தக் கவிதை எத்தனிக்கிறது. ஒரு குழந்தையின் உலகில் உள்ள மொழி(யற்ற) சுதந்திரத்தையும், வழமையான பயன்பாடுகள் தாண்டிய கட்டற்ற கற்பனை விரிவையும் இந்தக் கவிதையின் இன்னொரு பிரதியாக வாசிக்கலாம், ஒரு கவிஞனின் ஆழ்மன ஓட்டங்களில் மொழி அதன் பாவனைகளை விடுத்து நிர்வாணமாக இயங்கும் தன்மையைச் சொல்வதாகவும். கவிஞர் அபி 'கவிதை புரிதல்' கட்டுரையில் இந்தக் கோணத்தை விரிவாக எழுதியிருக்கிறார்.

கவிஞர் ஆனந்த்குமாரின் கவியுலகம் மேன்மேலும் விரிவடையவும், 2022ம் வருடத்திற்கான குமரகுருபரன் விருது பெற்றமைக்காகவும் அவரை மனமார வாழ்த்துகிறேன்.

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்












Share:

கவிஞனின் வேலை - கவிஞர் மதார்

உயிர் வாழ கவிஞனுக்கு ஒரு வேலை தேவை. அது அவனுக்கு பிடித்ததாகவும் சமயங்களில் பிடிக்காததாகவும் அமையக் கூட வாய்ப்பு உண்டு. தமிழ் கவிஞர்களில் தாங்கள் செய்யும் வேலையை கவிதைக்குள் கொண்டு வந்து எழுதிய கவிஞர்கள் குறைவுதான். பெரும்பாலான கவிஞர்கள் கவிதையை புற வாழ்வின் விடுதலையாக கருதியதால் அதை எழுத விரும்பவில்லை. சில கவிஞர்கள் எழுதியும் இருக்கிறார்கள். விக்ரமாதித்தனின் கவிதைகள் நாடோடி கூறுகளுடன் அவரது பயணத்தையும் கூறுபவை.

ரத்தத்தில்
கை நனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
 
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
 
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு.

தேவதேவன் பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு அதை கவிதைகளிலும் எழுதியிருக்கிறார். லக்‌ஷ்மி மணிவண்ணன் தனது கடைக்கு வாடகைப்பணம் செலுத்தும்போது இவர்களுக்கும் சேர்த்தே செலுத்துகிறார்.


நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்

மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
வைத்து விடுவேன்

அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான் அவர்கள்
நினைக்கிறார்கள்

நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது

எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்

இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக
இருக்கும்


இதுபோல சில உதாரணங்களைச் சொல்லலாம். கவிஞன் என்றாலே நல்லவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பதை சுகுமாரன் தன் கவிதைகளில் எழுதியபோது நான் ஆசுவாசமடைந்தேன் என இசை ஒரு உரையில் குறிப்பிடுகிறார். ஆக இன்றுள்ள கவிஞர்கள் அதை எழுதவும் செய்கிறார்கள். 

கவிஞர் ஆனந்த் குமார் புகைப்படக்காரர். அவரது புற வாழ்வு - விடுபட, விடுதலையடைய என எந்தச் சிக்கலும் அற்றது. எனவே அவர் தனது பாதையை கவிதைகளில் திறந்து வைக்கிறார். அவரது பெரும்பாலான கவிதைகளில் 'நகருதல்' மேல் அவருக்கு உள்ள ஈடுபாடு தெரிகிறது. இது புகைப்பட கலையில் அவர் கற்றதாகவே இருக்க வேண்டும். அகிரா குரசோவின் படங்களில் நகரும் பொருட்களே கதை சொல்லும் என்பார்கள். அசையும் தீ, ஓடும் நதி, குதிக்கும் மனிதன், காற்றிலாடும் புல் என அசைதலுக்கு சாத்தியங்கள் பல. ஆனந்த் குமாரின் டிப் டிப் டிப் தொகுப்பில் குளத்தை தூக்கிக் கொண்டு ஊர் நகர்கிறது. குதிரை வீரன் நகர முற்படுகிறான். ஓடும் நதியில் ஒரு துளி துள்ளும் இடம் என நிறைய இடங்களைக் கூறலாம். ஆனால் அவர் கவிதைகளில் வெறுமனே புகைப்படங்கள் எடுத்தல் என்பதை தாண்டி கவிதை செல்லக் கூடிய, அடையக்கூடிய பாதையையும் அவர் அடைகிறார்.



வழி


அறிந்திருந்த ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு அறியாத ஊருக்கு கிளம்பிச்சென்றேன்.

நான் வந்திறங்கியபோது உடல் கிளம்பிவிட்டதைச் சொன்னது பாதை மறித்துக்கிடந்த மலர்கள்

சுடுகாட்டிற்கு எப்படி வழி கேட்பதெனத் தயங்கி ஒளிரும் மஞ்சள் பூக்களை பின்தொடர்ந்தேன்

நடுவேயொரு
கோவிலின் வாசலுக்கு மட்டும்
இடைவெளி விட்டு
தொடர்ந்தது பூக்களின் வழித்தடம்

குறுகிய தெருக்களுள் சென்ற பூக்களின் வண்ணம் மாறிற்று இப்போது அரளி இதழ்கள் என்னை
அழைத்துச் சென்றன

அமைதி தவழும் ஒரு தோட்டத்துள்
இறங்கிச் சென்றது
பூவிரிப்பு
அதன் ஒழுக்கில் இறங்கி
திரும்பிக் கண்டேன்

எரிந்தணைந்து நீர்தெளித்து குளிரத்துவங்கியிருந்த அவர் வீட்டை

கவிஞனின் வேலை அவனது புறவாழ்வு அவனது கவிதைகளில் ஆற்றும் பங்கை ஆனந்த் குமாரின் கவிதைகள் நமக்கு காட்டுகின்றன.

*** 

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

குறைவும் பித்தும் - ரம்யா

பெளர்ணமிக்கு முந்தயதும் பிந்தயதுமான நாளிலேயே முழுமதியன் எனவே வானில் உருமயக்கிக் கொண்டிருப்பான் மதியன். சிறுபிறை தெரியும் நாட்களிலேயே கூட அவன் கருமையின் வளையத்தைக் கண்டுகொண்டு அவனை முழுமையாக தரிசித்துக் கொண்டிருப்பேன். என்றுமே அவன் முழுமையாக இருப்பதாகக் கூட எனக்கு பிரமை உண்டு. 

பூரணமான வாழ்வு, காதல், நட்பு, உறவுகள், உணர்வுகள் என்பது எப்போதுமே மாயம் என்று நான் கருதுவதுண்டு. சிறுபிழையுள்ள முகம், சிறுபிழையுள்ள கலை, சிறு பிழையுள்ள சமையல், சிறுபிழையான வார்த்தைகள், சற்றே வெளிப்படுத்தவியலா உணர்வுகள் தான் வாழ்வை இனிமையாக்குகின்றன என்று தோன்றும். 

கலையிலும் இதைச் சொல்வார்கள். எப்போது எக்கணம் நிகழ்ந்ததென்று அறியாமல் ஏதோ சிறுபிழை ஒன்றாலேயே அது பூரணமடைகிறது. என் வாழ்விலும் குறையாகக் கருதும் அத்துனை நிகழ்வுகளையும் நினைத்துக் கொண்டேன். அவற்றால் தான் அது நிறைவடைந்திருக்கிறது. அந்தப்பிழையின் அழகை விளக்கக் கூடிய கவிதையிது.

***

"பெளர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் சிந்திவிட்டே குடிக்கிறான்
பாதிகேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்

ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென”

***

கச்சிதமாக வாழ்ந்தவள் தான் நானும். மிக கூரிய நோக்கும் பாதையும் இளமையில் நம்மை ஒருமுகப்படுத்துகிறது. பொருளியல் ரீதியாக ஏதோ ஒன்றை நிலையாக ஈட்டுவதற்கு அவை உதவி புரிகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் எப்போதும் நம்முள் ஒத்திசைவில்லாமல் அதிர்ந்து கொண்டிருக்கக்கூடிய தாளமொன்று அவற்றை மீறும் நேரத்தை கூர்ந்து நோக்குகிறது. கணக்குகளும், முன் முடிவுகளுமின்றி அனைத்து மானுடர்களிடமும் குழந்தையாய் கதைத்து ஏமாற்றமடையும் ஒரு கிறுக்குத்தனத்தையும் அது ரசிக்கிறது. 

ஏமாற்றுபவர்கள் மேல் பரிவு கொள்ளச் செய்யும் பைத்தியக்காரத்தனமது. கச்சிதமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மேல் பரிதாபம் கொள்ளச் செய்யும் கிறுக்குத்தனம். கச்சிதமாக வாழச்சொல்பவர்களின் சட்டகத்திலிருந்து சற்றே விலகி நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் செய்யும் பைத்தியக்கார விளையாட்டுகளையே மனம் இன்று விரும்புகிறது. ஆம் பைத்தியமல்லாதவர்களுடன் வாழ முடியாத ஒரு கிறுக்குத்தனம் வந்து சேர்ந்திருக்கும் இந்த என் வாழ்வின் காலகட்டத்தில் என் புழுக்கத்தை உணர்ந்து எழுதிய கவிதையாக இதை அணைத்துக் கொள்கிறேன்.

***

“பைத்தியமல்லாதவர்களுடன் வாழ்வது
கச்சிதமான
கனசதுரங்களுக்கிடையே வாழ்வது போல
அதன் கூர்முனைகளுக்கிடையில்
அவ்வளவு எளிதாய்
புழங்கமுடிவதில்லை

மொட்டைமாடி சிக்கலில்லாத
இடம்தான்
சேர்த்துவைத்தால்
பொருந்திவிடுமென
சின்னச்சின்ன வீடுகள்

வந்தவேலை முடிந்தால்
கீழே போக வேண்டும்
அதற்குமுன்
லயமின்றி ஆடும்
துணிகளின் நடுவில்
ஒரு குட்டி மேகத்தையும் சேர்த்து
க்ளிப் போட்டுவிட்டு
போவோம்”

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்


Share:

குழந்தைமையும் வீடும் - விக்னேஷ் ஹரிஹரன்

ஆனந்த் குமாரின் கவிதைகளுள் வெளிப்படும் குழந்தைமை என்பது ஒரு விதத்தில் உலகின் ஒழுக்கங்களுக்கு எதிரான ஒரு எதிர்வினையே. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் தொடர்ந்து தன் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டே இருக்கும் சமூகத்திற்கான எதிர்வினையாகவே அவரது கவிதைகளின் குழந்தைமையை கருதலாம். ஆனால் ஒரு துளியும் கசப்பில்லாத எதிர்வினை அது. ஒழுக்க விதிகளை கேள்விக்குள்ளாக்கி முஷ்டி உயர்த்தியோ, விரக்தி அடைந்தோ எதிர்வினையாற்றாமல் கொஞ்சம் தலையை சாய்த்து உலகத்தை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதன் வழியே உலகின் ஒழுக்கங்களில் இருக்கும் கோணல்களைக் கண்டு சிரிக்கும் எதிர்வினையே ஆனந்த் குமாரின் கவிதைகள். அப்படி தலை சாய்த்து பார்க்கும்பொழுது மட்டுமே தெரியும் உலகமே வளைந்து கோணலாக நடக்கும் ஒரு கோமாலித்தனம்தான் என்று. இந்த கோணல் உலகத்தை குழந்தைமையால் மட்டுமே நேராக நிறுத்த முடியும்.

***

இந்த உலகம்
வளைந்திருக்கிறது
இந்த உலகின்
ஒவ்வொரு துளியிலும்
ஒரு வளைவிருக்கிறது
இதில் நேராக
நாம் ஒன்றை வைக்கிறோம்
அது நேராக நிற்க
கொஞ்சம் வளைந்திருக்க வேண்டியிருக்கிறது
நேராக பிறந்துவிட்ட
ஒரு சாப்பாட்டு மேஜை
இப்போது
தள்ளாடுகிறது இந்த
வளைந்த உலகின் மீது
ஒருபக்கம் காலைவைத்து
ஒற்றை அழுத்து
சாப்பிட்டு முடியும் வரை
இந்த உலகை நான்
நிமிர்த்திப் பிடித்தேன் 

***

நவீன தமிழ் கவிதையில் கடலுக்கு நிகராக பயன்படுத்தப்பட்ட மற்றொரு படிமம் வீடு. மனித மனமாக, சிறையாக, உலகமாக நவீன கவிதையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வீடு மருவரையரை செய்யப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதும், முடிந்தால் சிறகடித்துப் பறந்துவிடுவதுமே கவிதையின் நோக்கமாக இருந்திருக்கிறது. அல்லது வெளியுலகத்திற்கு நிகரான ஒரு தனியுலகமாக வீடு செயல்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் கவிஞர் ஆனந்த் குமாரின் இக்கவிதையில் வீடு என்னும் படிமம் மேற்கூறப்பட்ட எந்த வகையில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தலைவலி மருந்தின் வாசனையை சுமந்து வரும் சிறு தென்றலின் ஆசுவாசத்தில் அது மலை மீது பறக்கத் தொடங்கிவிடுகிறது. ஆனந்த் குமாரின் கவிதைகளில் இருக்கும் குழந்தைமையும் எடையின்மையும் வாசிக்கும் எவரும் உணரக்கூடியதே. அந்த குழந்தைமை உயர் கவித்துவமாக மாறுவது இத்தகைய தருணங்களில்தான். வீட்டைவிட்டு பறந்துசெல்லும் கவிதைகளின் வெளியில் வீட்டை பறக்க அழைக்கும் குழந்தைமை அளிக்கும் ஆசுவாசம் அலாதியானது. தலைவலி மருந்தின் வாசனையிலும், வெக்கைக்கு நடுவே வீசும் சிறு தென்றலிலும் வீட்டை விட்டு ஒரு நொடியில் இறகு போல் பறக்க முயல்வது நம் அனைவருக்கும் இயல்புதான். ஆனால் ஒரு குழந்தை மட்டுமே அந்த எடையின்மையை தன் மொத்த வீட்டிற்கும் அளித்துவிட முயற்சிக்கும். அக்குழந்தைமையின் முன் பௌதீக உலகத்தின் காலமும், இடமும், சூழலும் பணிவதுதானே இயல்பு.

***

மலைமேல் பறக்கும் வீடு
அம்மாவின் தலைவலி மருந்தை
இந்த மதியத்தில் யாரோ
திறந்துவிட்டார்கள்
வெக்கையின் காதில் கேட்கிறது
யூக்காலிப்டஸ் மந்திரம்
வியர்த்துக்கிடக்கும்
முதுகில் குளிரேற்றுகிறது
வெறுந்தரை
ஒரு சிறிய காற்றுக்கு
மலைமேலேன உயர்ந்துவிட்டது
என் வீடு

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:
Powered by Blogger.

நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive