பூரணமான வாழ்வு, காதல், நட்பு, உறவுகள், உணர்வுகள் என்பது எப்போதுமே மாயம் என்று நான் கருதுவதுண்டு. சிறுபிழையுள்ள முகம், சிறுபிழையுள்ள கலை, சிறு பிழையுள்ள சமையல், சிறுபிழையான வார்த்தைகள், சற்றே வெளிப்படுத்தவியலா உணர்வுகள் தான் வாழ்வை இனிமையாக்குகின்றன என்று தோன்றும்.
கலையிலும் இதைச் சொல்வார்கள். எப்போது எக்கணம் நிகழ்ந்ததென்று அறியாமல் ஏதோ சிறுபிழை ஒன்றாலேயே அது பூரணமடைகிறது. என் வாழ்விலும் குறையாகக் கருதும் அத்துனை நிகழ்வுகளையும் நினைத்துக் கொண்டேன். அவற்றால் தான் அது நிறைவடைந்திருக்கிறது. அந்தப்பிழையின் அழகை விளக்கக் கூடிய கவிதையிது.
***
"பெளர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் சிந்திவிட்டே குடிக்கிறான்
பாதிகேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்
ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென”
***
கச்சிதமாக வாழ்ந்தவள் தான் நானும். மிக கூரிய நோக்கும் பாதையும் இளமையில் நம்மை ஒருமுகப்படுத்துகிறது. பொருளியல் ரீதியாக ஏதோ ஒன்றை நிலையாக ஈட்டுவதற்கு அவை உதவி புரிகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் எப்போதும் நம்முள் ஒத்திசைவில்லாமல் அதிர்ந்து கொண்டிருக்கக்கூடிய தாளமொன்று அவற்றை மீறும் நேரத்தை கூர்ந்து நோக்குகிறது. கணக்குகளும், முன் முடிவுகளுமின்றி அனைத்து மானுடர்களிடமும் குழந்தையாய் கதைத்து ஏமாற்றமடையும் ஒரு கிறுக்குத்தனத்தையும் அது ரசிக்கிறது.
ஏமாற்றுபவர்கள் மேல் பரிவு கொள்ளச் செய்யும் பைத்தியக்காரத்தனமது. கச்சிதமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மேல் பரிதாபம் கொள்ளச் செய்யும் கிறுக்குத்தனம். கச்சிதமாக வாழச்சொல்பவர்களின் சட்டகத்திலிருந்து சற்றே விலகி நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் செய்யும் பைத்தியக்கார விளையாட்டுகளையே மனம் இன்று விரும்புகிறது. ஆம் பைத்தியமல்லாதவர்களுடன் வாழ முடியாத ஒரு கிறுக்குத்தனம் வந்து சேர்ந்திருக்கும் இந்த என் வாழ்வின் காலகட்டத்தில் என் புழுக்கத்தை உணர்ந்து எழுதிய கவிதையாக இதை அணைத்துக் கொள்கிறேன்.
***
“பைத்தியமல்லாதவர்களுடன் வாழ்வது
கச்சிதமான
கனசதுரங்களுக்கிடையே வாழ்வது போல
அதன் கூர்முனைகளுக்கிடையில்
அவ்வளவு எளிதாய்
புழங்கமுடிவதில்லை
மொட்டைமாடி சிக்கலில்லாத
இடம்தான்
சேர்த்துவைத்தால்
பொருந்திவிடுமென
சின்னச்சின்ன வீடுகள்
வந்தவேலை முடிந்தால்
கீழே போக வேண்டும்
அதற்குமுன்
லயமின்றி ஆடும்
துணிகளின் நடுவில்
ஒரு குட்டி மேகத்தையும் சேர்த்து
க்ளிப் போட்டுவிட்டு
போவோம்”
***
ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்
0 comments:
Post a Comment