ரீல்க டுயினோ - சைதன்யா

நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்… 

(Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel Ordnungen?)


என்று தொடங்குகிறது டுயினோ எலஜிக்கள் (Duino Elegies) என்னும் கவிதை தொகுப்பு. ஒரு கடற்கரை ஓர நடையின் போது இந்த முதல் வரி காற்றில் எதிரொலித்ததாக Rilke ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். ரெய்னர் மரிய ரீல்க (Rainer Maria Rilke) டுயினோ (Duino) என்னும் இத்தாலி கடற்கரையில் அமைந்த பழமையான கோட்டையில் இருந்து கொண்டு 1912இல் எழுத துவங்கிய துயர் பாடல் தொகுப்பு டுயினோ எலஜிக்கள் என்ற பெயரில் 1922 இல் வெளியானது. பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு இது. நடுவில் போர்களால் எழுத்து தடைபட்டு பின் உச்சபடைப்பூக்கத்தில் ஓரிரு வாரங்களில் மொத்த தொகுப்பையும் எழுதி பின் ஆரபியஸ் பாடல்கள் (Sonnets to Orpheus) என்ற தொகுப்பையும் எழுதி முடித்தார். 

டுயினோ எலஜிக்கள் பல முக்கியமான கலைஞர்கள் தத்துவவாதிகள் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கிய கவிதை தொகுப்பு.

 


அக்காலக்கட்டம் (20ஆம் நூற்றாண்டின் துவக்கம்) இயற்கையை பரிணாம வளர்ச்சிக் கொள்கையால், மனித மனதை பிராய்டின் Ego மற்றும் Id என்னும் கருதுகோள்களால், ஆன்மாவை Nietzsche யின் Will to power என்னும் கருத்தால் என அனைத்துமே விளக்கப்பட்டு வந்த வரலாற்று புள்ளி. உலகத்தை நம்மால் முழுத்தறிந்து கொள்ள முடியும் என்ற தோற்றத்தை இவை உருவாக்கியிருந்தது. ஆனால் இவ்வாறு இங்குள்ள அனைத்தும் மனிதனால் விளக்கப்படவேண்டி இருப்பது என்பது அவன் இவ்வுயிருலகில் எவற்றையும் தனதாக உணர்வதில்லை என்பதால். 

ஒருபோதும், ஒரு தருணத்திலும், பூக்கள் முடிவில்லாமல் திறக்கும் அந்தத் தூய வெளி நம் முன் விரிவதில்லை...

“கடவுள் இறந்துவிட்டார்” என்றார் நீட்சே. ஆனால் அதற்கு கடவுள் இல்லை என்று அர்த்தமல்ல. கடவுள் இல்லாத உலகில் வாழும் ஒருவன் அவ்வெறுமை உணர்வை அடைவதில்லை. கடவுள் இறந்துவிட்டார் என்று கூறுவதில்லை. அவன் வாழும் உலகு அவனுக்கானது. அணுக்கமானது. கைக்குள் அடங்குவது.

ரீல்கவின் duino elegies இல் மீண்டும் மீண்டும் வருவது உலகின் ஒரு பகுதியாக தன்னை ஒருபோதும் உணர முடியாத மனிதன். 

மிருகங்கள் கூட அறிகின்றன விளக்கப்பட்ட இவ்வுலகிடமிருந்து  நாம் எவ்வளவு தொலைவில் உள்ளோம் என்று…

நம்மால் அறிய முடிவது இத்தொலைவை மட்டுமே. இத்தொலைவு சுட்டுவது நம்மை விட்டு என்றென்றைக்குமாக அகன்று நிற்கும் கடவுளின் அம்சத்தை. Rilke வின் உலகு கடவுள் அற்ற உலகல்ல. தேவதூதர்களை மட்டுமே நமக்கு காட்டி நிற்கும் அணுக முடியாத முடிவிலி அது. Elegy என்னும் கவிதை வடிவம் துக்க பாடலுக்கானது. ஏதோ ஒன்றின், ஒருவரின் இழப்பை கூறும் பாடல்கள் அவை. Rilke டுயினோ மலைமுகட்டில் நின்று உணர்ந்த வெறுமையும் இழப்புணர்வும் என்ன? 

இக்கவிதைகளில் வருவது மனிதன் இன்மையை நோக்கி விடுக்கும் அழைப்புகள். எதிர்க்குரல் எதிர்பாராது அவன் வீசியெறியும் அழைப்புகள். 

செவிகொள், என் இதயமே, முன்பு துறவிகள் மட்டுமே கேட்டது போல, கேள்…

(Höre, mein Herz, wie sonst nur Heilige hörten)

கேள்வி புலனாக மட்டுமே தன்னை முழுமையாக மாற்றி கொள்ள விழைகிறார் இவ்வரிகளில். இவரிகள் ஐரொப்பாவில் 13,14 ஆம் நூற்றாண்டுகளில் செழித்து வளர்ந்திருந்த மறைஞான பாடல்களை நினைவு படுத்துகின்றன. அந்த மரபின் சாயல் இக்கவிதைகளில் அனைத்திலும் காணலாம். ஆனால் கடவுள் இங்கெங்கும் இல்லை. 

தேவ தூதர்கள் மட்டுமே வருகிறார்கள். அவர்களும் மரபான கிறிஸ்தவ குறியீடாக அல்ல. டுயினோ எலஜிகளின் தூதர்கள் அழகு, சீர்மை என இவ்வுலகை கடந்த கடவுளின் அம்சங்கள். தங்கள் உலகை விட்டு இங்கும் அங்கும், உயிருலகத்திலும், இறந்தவர்களின் உலகங்களிலும் பரவி திரிபவர்கள்.  நம்மால் அணுக முடியாத உச்சங்கள். அவ்வுலகில் உள்ளவற்றில் இருந்து நாம் எதை அள்ளுவது? அள்ளிக்கொண்டு எங்கு செல்வது? என்று கவிஞன் கேட்கிறான் ஒரு இடத்தில். 

... அழகு என்பது வேறொன்றுமல்ல 

பயங்கரமான ஏதோ ஒன்றின் தொடக்க புள்ளி. அதை நாம் சகித்துக் கொள்கிறோம், ரசிக்கிறோம் 

ஏனென்றால் அது நம்மை முற்றழிக்க மறுத்து விலக்கத்துடன் நோக்கி நிற்கிறது…

அவனை முற்றழிக்கவும் மறுக்கும் ஈவிரக்கம் அற்ற ஒன்றாக அதை காண்கிறான் கவிஞன். இவ்வுணர்வு நிலைகள் அனைத்துமே மரபான மறைஞான உணர்வு நிலைகள் தான். ஆனால் இங்குள்ள அனைத்தின் வெறுமையை அறிந்தபின் எழுபவையாக உள்ளன. அவற்றில் ஒரு சிறு திரிபு உள்ளது. ஒரு உருகுலைவை உணரமுடிகிறது.  இதனை counter sublime என்று கூறுகிறார்கள். 

நீட்சே மனிதனின் இறுதி இலக்கற்ற தன்மையைக் ஒருவன் உணர்ந்தால், அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அதன்பின் வீண் என்றாகிவிடும் என்கிறார்.  ஒரு மலர் மலர்ந்து வீணாகி விழுவதை போல், மனிதகுலம் வீணாகி மடிவதை போல், இங்குள்ள ஒவ்வொருவரின் சுயமும் வீண் என்பதை உணர்வது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வு. ஆனால் அவ்வுணர்வை கவிஞனை தவிர யாராலும் தாங்கிக்கொள்ள இயலாது. கவிஞர்களுக்கோ தங்களை எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வதென்று தெரியும் என்று கூறுகிறார். இலக்கின்மையை உணர்ந்த பின் ஒரு கவிஞன் கூறும் ஆறுதல்கள் இப்பாடல்கள் என்றெடுத்து கொள்ளலாம். என்றாலும் இவை எவ்வகையிலும் தன்னை விடுவிக்காது என்றறிந்த பின் அவன் தனக்கு கூறிக்கொள்வது தான். 

கவிஞனாக மாறும் தருணத்தில் மானுடன் தேவதைகளின் எல்லைக்குள் உலவுகிறான். ஆனால் அங்கும் தன்னை முழுதாக அளிக்க முடிவதில்லை. தேவ தூதர்களில் ஒருவன் தன்னை அவனது மார்போடு அணைத்து கொண்டாலும் அவனது மேலும் தீவிரமான இருப்பில் (stärkere Dasein) தான் மூழ்கிவிட கூடும் என்கிறான் கவிஞன். சுயத்தின் அழிவின் மூலம் இங்குள்ள எல்லைகளை கடந்து செல்வதை குறித்து கூரும் இடங்களும் வருகின்றன. 

புவியில் இல்லாமல் ஆவது, எவ்வளவு விசித்திரமானது…. கற்றுக்கொள்ள துவங்கும் முன்னரே நாம் கைவிடும் நெறிகள்

...

விசித்திரமானது. நம் விழைவுகளை நாம் விழையாமல் ஆவது…

நாம் ஒரு திரளாக கண்ட அர்த்தபடுத்தபட்ட  உலகம் சிதறி வெவ்வேறு திசைகளில் செல்வது…

இன்மைக்கும் இருப்புக்கும் நடுவில் அவ்வளவு தெளிவான கடக்க முடியாத எல்லை ஒன்றை Rilke காணவில்லை. அவை இரண்டும் கலக்கும் ஒரு புள்ளியை மீண்டும் மீண்டும் சென்று தொட முயல்கிறது இக்கவிதைகள். வெவ்வேறு கண்ணோட்டத்தில். வெவ்வேறு உணர்வு நிலைகளுடன். 

நம் காதலிடமிருந்து விடுபட்டு நடுக்கத்துடன் தொடர வேண்டிய காலம்…

நாணின் இறுக்கத்திலிருந்து தப்பி அதிர்ந்து வெளியேறும் அம்பு 

தன்னை விட தீவிரமான ஒன்றாக மாறிவிட்டுருக்கும் அத்தருணத்தில் …

அம்பு வில்லில் இருந்து அகன்று விசை கொண்டு அதிரும் அத்தருணம், தன்னை பற்றி கொண்டிருந்த ஏதோ ஒன்றை உதறி இன்னும் தீவிரமான ஒன்றாக மாறும் தருணம். இத்தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளும் அருவமான உணர்வுகளை இது போன்ற மிக கூர்மையான படிமங்களால் சுட்டுகின்றன.

சிதறுண்ட அருவமான படிம குவியலாக மேலோட்ட வாசிப்பில் இக்கவிதைகள் காட்சியளிக்கின்றன. ஆனால் அவற்றை இணைக்கும் அடித்தளம் இவை அனைத்தும் எங்கிருந்து எழுகின்றதோ அது. 

அதில் நம் சாயல் அல்லது சாரம் சிறிதேனும் உள்ளது என்னும் கனவு. 

நாம் இவ்வுலக வெளியில் கரைகையில் அதில் நம் சாயல் சிறிதேனும் தென்படுமா? தேவதைகள் தங்களிடமிருந்து வெளிப்படுவதை மட்டுமே மீண்டும் நுகர்கிறார்களா, அல்லது சில சமயங்களில், ஏதோ ஒன்றின் பிழையால், நம் சாரத்தின் ஒரு தடயம் ஒன்று அங்கிருக்குமா? 


***


Share:

உலராத கண்ணீர் - கமலதேவி

கேட்பாரற்றுக்

கிடக்கும்

பழங் கோயிலின்

இடிபாடுகளில்

இள முலைகள் துள்ள

தனித்துத் திரிந்த

ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன்

தனக்குப் பயமில்லை

தான் தனித்தில்லை

என்றாள் அவள்

இங்கு பறவைகள் இருக்கின்றன

என்றாள்

நூற்றுக்கணக்கில்

பிறகு 

ஊழிவரும்வரை

 உறங்க முடியாத தெய்வங்கள்

ஆயிரக்கணக்கில்


காலத்தில் உறைந்த விழிகளை

மூட முடியாமல்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன

எப்போதும்

எல்லாவற்றையும்

என்று சிரித்தாள்.

அது வீசப்பட்டது போல

பெருகி வெளியங்கும் நிறைந்தது

அந்த சிரிப்பின்

முடிவில்

வைரம் போல் மின்னும்

இரண்டு கூர்க் கொடும்பற்களை

நான் ஒருகணம் பார்த்தேன்

அஞ்சி

ஓவென்று அலறினேன்

அவள்

வாய்மீது விரல் வைத்து

அஞ்சாதே

என்று புன்னகைத்த போழுது

யாரோ எய்தது போல

இளவெயில் நிறத்தில்

ஒரு பட்டாம்பூச்சி இறங்கி

அவள் உதடுகள் மேல் அமர்ந்தது.

நான் அது சிறகுகள் அசைய அசைய

மது உண்பதைப் பார்த்தேன்.

அப்போது

ஒரு புத்தனின் கண்கள்

அவளிடம் இருந்தது

அல்லது

முலை கொடுக்கும் தாயின் கண்கள்

ஆனால்

ஒரு ஓவியத்தின் கண்கள்

மாற்றபட்டாற் போல்

சட்டென்று

அவன் கண்கள் சாய்ந்து சோம்பிற்று

எனது வெறும் கைகளைக் கண்டு

எனக்கென

ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா

உன் தோட்டத்தில்

என்று வான் நோக்கி கூவினாள் அவள்

அது கேட்டு

கோபுரங்கள் நடுங்கின.

பின்

புனல் போல் இளகும்கண்களுடன்

புகை கலைவது போல

மெல்லிய மழைக்கம்பிகள்

ஊடே நுழைந்து நுழைந்து

அவள் என்னை விட்டு

விலகி கருவறைக்குள் போவதை

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்

செய்வதற்று

ஒரே ஒரு பூவில்

இருந்தது

அவள் சாஸ்வதம்.


 - கவிஞர் போகன் சங்கர்

சொல் அர்த்தமாவதில் கற்பனை மற்றும் உணர்தலின் பங்கு முக்கியமானது. கற்பனையாலும் உணர்தலாலும் கவிதைக்கு ஒரு ‘கான்க்ரீட்’ தன்மை இல்லாமலாகிறது. கவிதை என்றில்லை இலக்கியமும் கலையும் எவ்வாறு உணரப்படுகிறது என்பது ஆதாரமானது. உடலுக்கு உயிர் போல..கவிதைக்கு உணர்தல் இருக்கிறது. இந்த உணர்தலால் தான் எல்லாக்கலைகளும் காலத்தால் புதியதாகிறது. 

கவிஞர் போகன் சங்கரின் இந்தக்கவிதை ஒரு சிறு தெய்வம் பற்றியது. இடிபாடுகளாகிப்போன கோவிலின் தெய்வத்தை கவிமனம் சந்திக்கும் தருணம் இந்தக்கவிதையில் உள்ளது. அந்த சந்திப்பு புறநிகழ்விலிருந்து சென்று தொட்ட அக நிகழ்வாக இருக்கலாம். ஒரு கனவாக இருக்கலாம். மனதிற்குள் உள்ள நினைவாகவும் இருக்கலாம். 

கவிமனதிலிருந்து இறங்கி சொல்லில் அமரும் அது தன்னை இத்தனை விதவிதமாக காட்டுகிறது.முதலில் சிறுபெண்,அங்கு திரியும் பறவைகளில் ஒரு பறவை, கோபம் கொண்ட யச்சி, புத்தன், அன்னை, மழை, ஒரு சிறு பூ என்று அந்த தெய்வம் இந்தக்கவிதையில் வரும் சூழலில் உள்ள ஒவ்வொன்றிலும் உள்ளது. இத்தனையாகவும் தன்னை காட்டும் அது மறுபடியும் சென்று மனதில் அமர்ந்து கொள்கிறது. மனதிலிருந்து எடுத்து பார்க்க தயங்கும் ஒன்று அது. ஆறாத கோபமும் கருணையும் என்று இரு முகங்கள் கொண்டது. சிறுபெண், யட்சி என்று நாம் உணரும் இரு நிலைகள். 

சிறுதெய்வங்கள் அனைத்துமே இந்த உணர்வுகளை அளிக்கக்கூடியவை.  கவிதையின் இறுதியில் பெய்யும் மழையும் அந்த சிறு பெண் கேட்கும் பூவும் என்ன? 

ஒரே ஒரு பூவில் உள்ளது அவள் சாஸ்வதம் என்று கவிதை முடிகிறது. அவளுக்கு தரப்படாத அந்த ஒரே ஒரு பூவால் தெய்வமானவள் அவள். அவள் இதழில் பட்டாம்பூச்சிக்கு தேனாய் இருப்பது அதுவே. 

மழைக்குள் காலகாலமாய் தன்னை மறைக்கும் அவள் புகுந்து கொள்ளும் இருள் கவிந்த கருவறையில் உள்ளது ஆயிரம் காலத்து காயாத கண்ணீரும் குருதியும். அவள் எண்ணப்பட முடியாதவள். 

***
Share:

கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும் - தேவதேவனஂ

கட்டுரை பற்றி 

சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் எழுதியிருப்பேன். கவிதைகளை எழுதத் தொடங்கி ஆழ்ந்துவிட்டேன். தொடர்ந்து அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதுதான் கவிதையின் மதம் என்று சொல்வேன். இந்த ஒன்றரை மாதத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகள்! கட்டுரையைத் தொடரவே மனமில்லை.

எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.

ஒருமுறை சுந்தரராமசாமி சொன்னார். எழுத்திலும் இது பதிவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்: “நடக்கத் தெரியாதவன் தனக்கு நாட்டியமாடத் தெரியும் என்பது போன்றது, ஆர்வக்கோளாறுகளால் தங்களைக் கவிஞர்களாக எண்ணிக் கவிதை எழுதுவது.”

தான் அறிந்த ஒரு விஷயத்தை அழகிய ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார் சு.ரா. அவர் இவ்வாறு உரைநடையையும் கவிதையையும் விவரிக்கும்போதே கவிதை பற்றிய அவரது பார்வையும் வெளிப்பட்டிருப்பதையே நான் கவனித்தேன். நான் அதனை உரைநடைக்கே ஏற்றுகிறேன். மேலும் கவிதை முதன்மையாக ஒரு கலை அல்ல என்பதே இன்று நமது பார்வை. கவிதையை அடைந்துவிட்டவனுக்கு, ஒரு காவியத்தைக் கண்டடையாத நிலையில், உரைநடையின் ஒரு சொற்பெருக்கு ஓர் ஆற்றலிழப்பாக மட்டுமே முடிந்துவிடும் ஆபத்து உண்டு. காவியங்களோ அபூர்வம். அபூர்வமான காவியங்கள் கவிஞனின் முதிர்ந்த ஆளுமையினின்று பிறப்பவை. அவனும்கூட விரிவான ஒரு வெளிப்பாட்டுமுறையை மேற்கொள்ளும் நிலையில் தனது கவிதை வாழ்வையும் கவிதைக் கணங்களையும் பெருவாரியாக இழந்துவந்தே செயல்படுகிறான். நான் ஒரு கட்டுரை எழுதத் தொடங்கிய நிலையில் கண்டதும்கூட இதுதான்.

எத்துணை பெரிய ஞானியானாலும் மேதையானாலும் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரே அமர்ந்து கூர்ந்து கேட்கும் எந்த மனிதனையும்விட அப்போது உயர்நிலையில் இருப்பதில்லை.

இரண்டும் (உரையும் கேட்டலும்) முடிந்தபிறகே பதிந்துபோன அவர் உரையும் பல்லாயிரம்பேர் பல்லாயிரம்முறை, பல காலமும் கேட்க இயலும் வாய்ப்பினாலேயே சிறந்து நிற்கிறதே ஒழிய அவரால் அல்ல. அவர் கனன்ற அந்த உரைக்குப் பிறகும் எப்படி எப்படி இருக்கிறாரோ அதைப் பற்றியிருப்பதுவே அவர் சிறப்பு. அதன் பெருமைகள் எந்த மனிதனையும் சாராது. அந்தப் பொருளின் மெய்மையினாலேயே கனன்று கொண்டிருக்கக் கூடியதே ஒழிய அதில் ஒரு மனிதன் இல்லை. எந்த ஒரு மனிதனும் இல்லை. இந்தப் போக்கிலான ஒரு கலை/வெளிப்பாடுதான் மனித வாழ்வைவிட மேம்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. அவ்வளவுதான்.

கவிதையின் மதம் சுட்டும் கவித்துவ மனநிலை ஒவ்வொரு கணமும் தன் மவுனத்தையே ஒரு வெற்றுப்பாத்திரமாகத் தாகத்துடனும் விழிப்புடனும் ஏந்திக்கொண்டிருப்பது. மய்யமான கருத்துகளையும் சிந்தனைகளையும் வைத்துக்கொண்டிருக்கும் மனிதன் ஒன்றைத் தொட்டவுடன் அங்கிருந்தும் தன் எண்ணங்களையே பல்வேறு அனுபவங்களோடும் விரித்துவிரித்துப் பெரும்பெரும் நூல்களை எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், ஆய்வுகளாகவும். கவிதையின் முன் இவைகள் இரங்கத்தக்கவைகளாகவே இருப்பதையும் நாம் காணலாம். கவிதை தவிர்த்த எல்லா இயல்களுமே தம் இயல்பிலேயே மீட்பு அறியாச் சுழல்களாகவே இருக்கின்றன.

‘சூர்ய ஒளியில் மிதந்துகொண்டிருக்கும் அசைவிலாத மிகப்பெரியதான ஓர் ஏரியில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு படகு போன்றது ஒரு கவிதை’

எழுதிக்கொண்டிருக்கும்போதே மேலே உள்ள ஒரு வரியை ஒட்டிய மற்றொரு வரியாக எழுதப்பட்டுள்ளது இது. இந்த இயக்கத்தில் எதுவும் மறைந்துகொண்டிருக்கலாம். சவால் என்னவெனில் ஒன்று மெய்மையாக இருக்கும்பட்சத்தில் அதை நாம் வாழ்ந்து வளர்ந்தாக வேண்டும். நிரூபித்தாக வேண்டும். கவிதைக்குக்கூட இந்த அழகுக்காட்சி போதாது. வாழ்வோ ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாய்க் கேட்கும். அடங்காது. கொடுக்கத் தெரிந்தவனுக்கே அதுவும் கொடுக்கும், கவிதையும் மேன்மைமிக்கதொரு வாழ்வும் வேறுவேறல்லாதே இந்த நெருக்கம், அண்மை. கலை என்ற சொல்லை ஒருக்காலும் ஏற்காது மட்டுமல்ல; பெயர் எதையும்கூட ஏற்காது என்பதே மெய்மை. இதனால்தான் திணறுகிறார்கள் நம் அறிஞர்கள்.

நமது புரிதல்கள்

நாம் வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டுள்ளோமோ அதன்படியேதான் கவிதையையும் வரையறுக்கிறோம். முதலாவதாக நமது உயிரின் அசைவுகளைக்(காண்பதும் காண்பிப்பதுமே) கவிதை என்கிறோம். குப்பைத் தொட்டியாகிவிட்ட நமது அகத்தின் அசைவுகளைக் கவிதை என்கிறோம். காட்சியாகவும் படிமமாகவும், உருவகமாகவும், குறியீடாகவும், புதிர்களாகவும், புகைமூட்டங்களாகவும் தென்படும் இயற்றப்படும் எல்லாமே நம் எண்ணங்கள்தாம் என்பதையே அறியாத பேதமையுடன்தான் தான் எனும் தன் அகத்திலிருந்தே சற்றும் விடுபடமுடியாமல் தன் துயர்வலியையும் கவிதைகளாகப் புனைகிறோம். இவற்றில் முதன்மையாகச் செயல்படுவது வாழ்வுபற்றிய நமது புரிதல்கள்தாம். நமது முதிர்ச்சியற்ற தன்மையை நாமே அறியாத நிலையில் நமக்கு ஏற்பட்ட போர்களை, சச்சரவுகளை, துயரங்களை, வலிகளை, கவிதை என்கிறோம். உயிரின் இயற்கையான அசைவுகளுக்கு இணையானதாக்கப் பார்க்கிறோம். விடுதலையையும் கண்டடைதலையும் தேடும் ஏக்கத்தையும் தவிப்பையும் ‘காதலை’யும் பக்தியையும் கவிதையெனக் கொண்டாடி மகிழத் தொடங்கிவிடுகிறோம். பசியாறாத, தாகம் தணியாத இந்த வறுமை, அறத்தையும் சமன்நிலையும் உலகில் இயற்ற முடியாத கையறுநிலையை உடையதே என்பதையறியாத கொடுமை உதறப்படும்போதே விடுதலையையும் கண்டடைதலையும் கொள்ளும் இதயத்தின் வெளிப்பாட்டைத் தவறவிட்டுவிடுகிறோம். நமது துயரக் கலைகளுக்கெல்லாம் அப்பால்வெளியில் மவுனமாகக் காத்திருக்கும் மெய்மையையும் கவிதையையும் வெகுசிலரே காண்பவர்களாயிருக்கிறார்கள்.

நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர். வந்தடையவேண்டிய சீரியதோர் இடம் என ஒன்றுண்டு. அதுவே கவிதையினதும் வாழ்வினதும் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். நிச்சயமாக அது ஒரு கலையையோ பொழுதுபோக்கையோ, புலனனுபவச் சுவையூட்டலையோ முதன்மையாகக் கொண்டிருக்காது. அதேசமயம் என்னவானாலும் வாழ்வு என நாம் கண்கூடாகக் காண்பது இந்தக் குப்பைகளும் இதன் சச்சரவுகளும்தானே என்பதால் இவற்றின்மீது நாம் வீசும் வாள் போன்ற கூரான பார்வை அவசியம். இத்தகைய பார்வையுடையவனே கவிஞன் என வேண்டும். மனிதன் என வேண்டும்.

தான் தொட்டதையெல்லாம் மலர வைக்கவேண்டிய மனிதன் தொட்டதையெல்லாம் பிரச்னையாக்கிவிடுகிறான். இதுவரை மனிதகுலவரலாற்றில் மலர்ந்திருக்கும் எந்த இயற்கையையும் அறியத் தவறியவனாய் வழிநடப்பவன், மலரும் எந்தச் செயல்பாட்டையும் தன்னலத்தால் பிரச்னையாக்கிக் காலமெல்லாம் போரிலும் துயரிலும் வாழக்கற்றவன். அதன் ஊற்றுக்கண்ணை அறியாது, அறிய விரும்பாத, முனையாத ஒரு தடித்தனத்தில் வாழவும் கற்றவன். பெருஞ்செல்வந்தன் போலவும், அதிகாரி போலவும், அறிஞர்கள், கலைஞர்கள், தத்துவஞானிகள், மாமனிதர்கள் எனும் பெயரில் உதடுபிதுக்கும் பெருமிதத்தில் திரிகிறவர்களையெல்லாம் நம்மைச் சுற்றித் தாராளமாகக் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்?

நாம் எத்தகைய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம் என்பது நாம் எத்தகைய மனிதனாக இருந்துகொண்டு விரும்புகிறோம், முயன்றுகொண்டிருக்கிறோம் என்பதில்தானிருக்கிறது. இதற்கெல்லாம் முன்பாக இந்த உலகம் சரியில்லை. அறமின்மையும், சமமின்மையும், வறுமையும், போரும், வலியும் துயர்களுமான இது மாற்றப்பட்டே ஆகவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை மிகத்தீவிரமாக நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதைப் பொறுத்திருக்கிறது.

இதுவும் காலம்காலமாகவே மேம்போக்கான ஓர் அரசியல் மற்றும் கொள்கைகளால் தோற்றுப்போனதையும் நாம் அறிவோம். வாழ்வுமுழுமை நாம் இதுவரையும் கண்டடையாதது. இவற்றிற்கெல்லாம் மேலாக, தீமையின் ஊற்றுக்கண்கள் நாம் அறியாதவையாக இருப்பது. எந்தக் கருத்துகளோடும், கொள்கை கோட்பாடுகளோடும் நம்பிக்கைகளோடும் நமக்குள்ள உறவு ஆபத்தானவையே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? மனிதர்களோடு நமக்குள்ள உறவு என்ன? இயற்கையோடு? ஆழம்காண அழைக்கும் அதன் பார்வைக்குள் செல்லாது நுண்ணுணர்வுகள் எனப்படும் மெல்லிய அசைவுகளோடும் நெகிழ்ச்சிகளோடும் மட்டுமே நின்றுவிட்ட நம் குறைவாழ்வின் அபூர்வ தருணங்களையும், அபூர்வ தருணங்களின் தோற்றத்தையும், ‘அபூர்வ’ எனும் அந்த வார்த்தையிலேயே உள்ள கொடுமையையும்கூட மறைக்கும்படியான நம் மூடத்தனத்தின் மந்தத்தனத்தையும்கூட அறியாதவர்களாய் நாம் கவிதையையும் வாழ்வையும் இங்கே இயற்றிக்கொண்டிருக்கிறோம்.

வெட்கமில்லாமல், சூடு சுரணையில்லாமல் காலம்காலமாகவே கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அற்புதம் என்கிறோம். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, வழிகாட்டிகளை நாமே நம் வறிய மடத்தனங்களால் உருவாக்கிக்கொண்டு வருகிறோம்?

ரிஷிமூலம்

ரிஷிமூலம் என்று நம் முன்னோர்கள் தப்பிக்கப் பார்த்ததெல்லாம் சொன்னால் நம்பவே முடியாத அதன் அளவினாலும், பண்பினாலும் எளிமையாலுமான அசைவுகள்தாம் என்பதாலும், அவை எவையுமே பிறருக்கு எந்தவகையிலும் பயன்படாது என்பதாலும்தான்.

எனது ஆங்கில வாசிப்பின் குழந்தைப்பருவத் தொடக்ககாலம். ஆங்கில மொழியின் சொற்றொடர் அமைப்பின் விசித்திர நிலைகளை நன்கு அறிந்துகொண்டேன். எனினும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால் பொருள் அறியப்படாத சொற்கள் அதில் அதிகமாகவே இருக்கக் கண்டேன். அகராதியைப் புரட்டிப்புரட்டியே முதன்மையான சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வேன் என்றாலும் அநேகச் சொற்களை ஊகத்தின் அடிப்படையிலேயே தாண்டிச் சென்றுவிடுவதுண்டு. ஆனால் கவிதையை அப்படிச் செய்வதில்லை. பொருள்புரியாத எல்லாச் சொற்களையும் அடிக்கோடிட்டுவிட்டு காகிதத்தில் குறித்துக்கொண்டு அப்புறம் அகராதியைத் திறந்து அத்தனை சொற்களின் பொருளையும் பார்த்து எழுதிக்கொள்வேன். அதன்பிறகே நான் கவிதையை வாசித்துப் புரிந்துகொள்வேன். கிட்டத்தட்ட அநேகக் கவிதைகளையும் நானே மொழிபெயர்த்துப் படித்தேன் என்று சொல்ல வேண்டும். கவிதையைத் தவிர்த்த – முக்கியமாக – நாவல்களை வாசிக்கையில் பொருள் புரியாத சொற்களை ஊகித்தபடித் தாண்டிச் சென்றதைப் பின் எப்போதாவது பார்க்க நேர்கையில் என் ஊகம் சரியாக, ஏறத்தாழ, இருந்ததையும் சரிந்ததையும் பார்த்திருக்கிறேன்.

எத்தனை முறைதான் அகராதியைப் புரட்டிக்கொண்டேயிருப்பது. தாகூரின் Stray Birds வாசிக்கையில் – அவரே அந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் – எளிமையான சின்னச்சின்ன அந்தக் கவிதைகளை மற்ற கவிதைகளைப் போலில்லாமல் – அறவே அகராதியைப் பயன்படுத்தாமலேயே புரட்டி வாசித்தேன். இடையில் ஆங்காங்கே அபூர்வமாய்த் தென்பட்ட சொற்களை நானே உரைநடையில் செய்ததைப்போலத் தாண்டித்தான் சென்றேன். அப்படித் தாண்டிச் சென்ற சொற்கள்தாம் ’Timid thoughts’. அதை நான் ஊகித்துக் கடந்த பொருள் ’மிக மெல்லிய எண்ணங்கள்’ பிற்காலம் ஒரு நாள் Timid என்ற சொல்லின் உண்மையான பொருளை நான் அறிந்துகொண்டபோது உண்டானது எனக்குள் ஒரு புதிய வெளிச்சம்தான். இப்போது எனது கையிலிருக்கும் அந்த நூலின் (பழைய புத்தகக்கடையில் கண்டுபிடித்து வாங்கியது. கெட்டி அட்டைபோட்ட macmillan பதிப்பு) அந்தக் கவிதை:

Timid thoughts, do not afraid of me

I am a poet.


பயங்கொள்ளி எண்ணங்களே

பயப்படாதீர்கள் என்னைக் கண்டு

யான் ஒரு கவி.


அன்று நான் ஊகித்திருந்த பொருள்:


“மிக மெல்லிய எண்ணங்களே

அஞ்சாதீர்கள் என்னைக் கண்டு

நான் ஒரு கவிஞன்.”

தாகூர் அரவணைக்கும் ஒரு தாயன்பைக் கவிதையாகக் காட்டுகிறார். தேவதேவனோ மனிதனைக் கண்டே அஞ்சி இந்த உலகைவிட்டே ஓடி ஒளிந்துகொள்ளத் துடிக்கும் மிக மெல்லிய எண்ணங்களை அறிந்தவராயிருக்கிறார். இதிலுள்ள பயங்கொள்ளித்தனம் இன்னொரு புதிய வியப்புதான் அல்லவா? மேலும் எண்ணங்களின் இயற்கையைத்தான் அவர் அறிந்துகொண்டாரோ?

நான் எனது எண்ணங்களுக்குள் ஆழ்ந்தவனாய்ச் சிந்திக்கத் தொடங்கினேன். அது எதைப்பற்றிய ஒரு கண்டடைதல் என்றே தெரியவில்லை. கோழையான பயங்கொள்ளி எண்ணங்கள் மெல்லியதானதோ மென்மையானதோ அல்ல, மாறாக பேரளவான தீமைகளையும்கூட விளைவிக்கக்கூடிய, நம் அகக்கண்ணுக்கும் நன்றாகத் தெரியக்கூடிய அருவுரு உடையவையே என்றிருந்தது. நான் அப்போது கண்ட மெல்லிய எண்ண அசைவுகளோ அந்த அகக்கண்ணுக்கும்கூடத் தென்பட மறுக்கும் மிக மெல்லிய உருஉடையவை. இங்கே வாழும் உயிர்களோடு தாமும் ஓர் உயிராய் வாழமுடியாத அளவுக்கு மெல்லியவை. காட்டின் புதர்களுக்குள் மறைந்துவாழும் குட்டிமுயல் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு உவமையே. எண்ணங்களால் நெருங்கவே முடியாத ஒரு உண்மை அது. பயம் என்ற சொல்தான் சரியான சொல்லா? இதை வெளிப்படுத்துவதற்குரிய பருவடிவான ஒரு பொருளும் பூமியில் இல்லையாயிருக்க எப்படி அதனை ஒரு மனிதனால் வெளிப்படுத்த முடியும். இன்னும் துல்லியமாகவும் உண்மையாகவும் சொல்வோமானால் உயிர்வாழ அஞ்சுவதற்குக்கூட அவசியமில்லாமலேயே அழிந்துவிடக்கூடிய மிக மெல்லிய உயிர் அது. கூர்ந்து கவனித்தால் எக்கணமும் அழிந்துவிடத் தயாராயிருக்கும் நொய்மையையே வடிவமாகக் கொண்டது. அதனாலேயே அற்புதமான ஒரு குணபாவத்தைக் கொண்டதாயிருக்கிறது. எதையும் தன் உள்ஏற்கும் விரிவு, பார்வை, கவனம். எல்லாவற்றிற்கும் ஒரு கணம் முன்புதான் மெல்லிய ஓர் அசைவாய் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணங்கள்தாம் அவை. பயம் என்ற சொல்லாகப் பிறந்துவிடுவதும் இதுதானா? சம்பிரதாயமாகவேதான் தற்கால, தற்காலிக ஒரு மொழியில் ஒரு கவிஞனுடைய எண்ணங்கள் இவை என்று நான் சொல்வேன். மவுனம் என்றோ, மவுனத்தை நெருங்கிவிட்ட ஒன்று என்றோ, எந்தச் சொற்களாலும் சொல்ல முடியாத ஓர் உணர்வுநிலையை நாம் ஏதோ ஒருசில சொற்களில் சொல்கிறோம் அவ்வளவே. ஒரே சமயம் மிக எளிதில் சிதைந்துவிடக்கூடியதாகவும், எத்தகைய ஆற்றலாலும் சிதைக்கமுடியாப் பேராற்றலுடையதாகவும் இருக்கும் ஒன்று அது. இவற்றைக் குறித்து நான் மிக ஆழமாக யோசித்தவைகளையே இன்னும் இன்னும் எனச் சற்று விரித்துவிரித்துச் சொல்லிவிட்டேன். ஆனால் வாசகர்களாகிய உங்களுக்கு நான் என் வாழ்க்கையின் ஒரு காலத்தருணத்தைச் சொல்லவே இங்கே விழைந்துள்ளேன்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

கடவுளின் மதம் நூல் வாங்க...

Share:

காதலெனும் துறவு - சக்திவேல்

ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே. ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் ஒட்டுமொத்த பிரக்ஞையுமாகும் என்று நவ வேதாந்திகள் விளக்கமளிக்கிறார்கள். தத்துவத்தின் மேற்படி ஆழ் அடுக்குகளுக்குள் செல்லாமல் பொதுவாக நின்று பார்த்தாலும் நம் பிரியத்திற்குரிய முதன்மை மனிதர் நாமன்றி யாருண்டு!

ஆயினும் நம்முன் உங்கள் பிரியத்திற்குரிய முதன்மை நபர் யார் ? என்ற கேள்வி சட்டென்று முன்வைக்கப்பட்டால் என்னென்ன பதில் சொல்வோம். இந்த கேள்வியை நாமனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் சந்தித்திருப்போம். சமூகம் கற்பித்தப்படி, நமது வளர்ப்பு சூழ்நிலைகளுக்கேற்ப அம்மா, அப்பா, பிள்ளைகள், அக்கா, தம்பி, கணவன், மனைவி, தாத்தா, பாட்டி, அத்தை என ஏதோ ஒரு உறவின் பெயர் உச்சரிக்கப்படும். எங்காவது நான் என்று அறுதி உறுதியுடன் சொல்லிய ஒரு நபரை பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பாலும் அந்த புண்ணியவான்கள் நம் கண்களுக்கு தட்டுப்படுவதில்லை. இப்படி நமது பிரியத்திற்குரியவர் என்று நாம் சொல்லும் உறவினரை காயப்படுத்தாமல் அல்லது அவரால் காயப்படுத்தப்படாமல் இருக்க முடிகிறதா ? நமது நேசத்திற்குரியவரின் குரல்வளையை கடித்து குருதி குடிக்க வெறியெழும் தருணமொன்று அமையாத மானிடர் புவியில் அரிது தான். கல்பற்றா நாராயணனின் விதிப்பயன் கவிதை அந்த தருணத்தை நோக்கி குவிவது.

விதிப்பயன்

மகன் இறந்த ஓர் அன்னை

யுதிஷ்டிரனை அணுகி

ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள்

பதிலுக்கு யுதிஷ்டிரன் சொன்னான்

உற்றவரின் ஆசையின்படி அன்றி

மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை

எந்தக் கொடுந்துயரும்

நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே

நினைக்காதது நடக்குமளவுக்கு

பெரிதல்ல இவ்வுலகம்

நினைத்துப்பார்

எப்போதோ நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்.

ஆனால் அதுஞ்

அவள் நினைவுகூர்ந்து சொன்னாள்

அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல

அடுத்தக் கணமே என்னை நானே

கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்

தெய்வமே நான் சொன்னதென்ன என்று

தீயிலிருந்து விரலெடுப்பதுபோல

அச்சொல்லில் இருந்து என்னை

இழுத்துக் கொண்டிருக்கிறேன்

பெற்றதாயின் சொல்லல்லவா

பலிக்காதென்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்

நான் எப்போதும் வேண்டி கொண்டிருந்த எதுவுமே

கேட்கபடாமல்

இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா ?

எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்கவழியில்லாத

பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத

கலப்பற்ற, அவசரமான

ஒரு வேண்டுகோள்

அதுவும் ஒரு பெற்றதாயின் விண்ணப்பம்

எப்படி கேட்கப்படாது போகும் ?

அந்த அன்னை சொல்லாததனால் போலும்

இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை.

பாழடைந்த கிணறுகள் கெட்ட கனவுகளை எழுப்புவதை போல கவிதை மர்ம உறுப்புகளின் அந்தரங்க நரம்புகளில் கைவைத்து அழுத்துகிறது. விதி எப்போதும் அப்படித்தான் வேலை செய்கிறது என்பது வேறு விஷயம். அன்றாடத்தில் எப்போதெல்லாம் மனிதர்கள் எல்லாம் விதி என முணுமுணுக்கிறார்களோ அப்போதெல்லாம் விடலை பையன்கள் முரட்டு தடியன்களால் விதையழுத்தம் பார்க்கப்பட்ட பாவத்தை அவர்களின் முகங்களில் காணலாம். கவிதை அதற்கு குறைவாக எதையும் செய்துவிடவில்லை. தடியன்களை போல மாறா புன்னகையுடன் தானும் வேலையை செய்கிறது. ஒரு விஷயம், தடியன்களுக்கும் விடலை பருவம் உண்டு என நினைப்பெழுந்தால் சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம்.

வாசித்து வெகுகாலம் கழித்து விதிப்பயனை விதிவசத்தால் நினைவிலிருந்து எடுத்தால் - அந்த விதிவசம் என்ன என்று அறிய ஆவல் கொள்ளும் வாசகர்களுக்கு சொல்லி கொள்வதாவது, சனியிடம் பிள்ளையார் சொன்ன கதையாக நாளை வரும் கட்டுரைக்கு காத்திருக்கவும் - யுதிஷ்டிரனுக்கு பதிலாக அந்த அன்னை புத்தருக்கு முன் நின்றிருந்தாள். நினைவு மாறுவது சில சமயம் கவிதையை உயர்த்தவும் கூடும் என்றாலும் இங்கே யுதிஷ்டிரன் என்பதற்கு மாற்றே இல்லை. எல்லா தருணத்திலும் தன் நெஞ்சுக்கு உண்மை உரைத்த ஒருவனிடம் அல்லவா, நீதி கோர முடியும். ஆனால் நீதி நமக்கு நம்மை காட்டுவதோடு நின்று விடுகிறது. ஞானம் நாமாகி வந்த பிறிதொன்றையும் சுட்டி அமைகிறது. அங்கே தான் புத்தர் வருகிறார். புத்தர் எப்போதும் கௌதம சித்தார்த்தராகவே இருக்க வேண்டும் என நினைத்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் குரு நித்ய சைதன்ய யதியின் கவிதைக்கு செல்வோம். 

வானில் வளியாக

வளியில் தீயாக

தீயில் நீராக

நீரில் நிலமாக

உன்னில் காதல் 

கொண்டிருக்கிறேன் 

ஒரு தனிக்கவிதையாக எங்கோ இயற்கை நிலக்காட்சி தோற்றத்தின் முன் அமர்ந்து குரு எழுதியிருக்க கூடிய கவிதை என தோன்ற வாய்ப்புகள் மிகுதி. இயற்கையில் உறையும் பெருங்காதலை பற்றி பாடுவதால் நம்முள் அப்படி பிம்பம் எழுகிறது - குறைந்தபட்சம் என்னுள். பின்கதை சுவாரசியமானது. தனது அக சிக்கல்களை சொல்லி எழுதிய சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பிரத்யேகமாக அவரை நோக்கி எழுதப்பட்ட கவிதை அது. ஒருவகையில் துறவியின் கவிதைகள் எல்லாவற்றிலும் உறையும் துறந்த தன்மையை, என்றுமுளதாக அமையும் தன்மையை நோக்கி எளிதில் எழுவதாக தோன்றுகிறது. 

இக்கவிதையை ஒட்டி கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களிடம் பேசி கொண்டிருந்த போது அவர் வள்ளலாரின் பின்வரும் கவிதையை கூறினார்.

தானாகித் தானல்ல தொன்று மில்லாத்

தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி

வானாகி வளியனலாய் நீரு மாகி

மலர் தலைய உலகாகி மற்று மாகித்

தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்

தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற

நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை

நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.

நித்யாவின் கவிதை சார்புநிலைகளின் ஊடே சாராதிருக்கும் பிணைப்பில்லா பற்றுடன் நின்றாடும் வேட்கையை கூறுகிறதெனில், மறுபக்கம் வள்ளலாருடையது இங்கனைத்துமாகி நாமாகி நடமிடும் முழுமுதலின் கருணையை எண்ணி நெகிழ்கிறது. நம் பிரியத்திற்குரிய நபர் பிறரென்று திரையிட்டு சமயத்தில் அவரையும் வதைத்து நம்மையும் சுட்டுக்கொள்ளும் நமக்கு இவை தருவது தான் என்ன ? மலரை பார்க்கையில் நம்முள்ளும் ஒன்று மலர்கிறது அல்லவா ? அந்த சுட்டுதலை போல. ததாகரரின் வான் நோக்கிய சுட்டுவிரலாக ஒருகணம் ஆழத்தை நடுங்க செய்து மீளமைப்பவை. 

அதே கேள்வி, உங்கள் பிரியத்திற்குரிய முதன்மை நபர் ? 

***


***
Share:

வாழ்வைத் திருடும் திருடர்கள் - மதாரஂ

கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள், கோவில்கள், பரிகார நிலையங்கள். இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் நினைவுக்கு வரும். அவை கொடுமுடியின் ரயில்வே சிக்னல் கேட்டுகள். கொடுமுடியின் கோவிலும், பரிகார பூஜைகளும் பிரசித்தி பெற்றவை என்பார்கள். கொடுமுடி கோவிலுக்கு வர வேண்டுமானால் மூன்று வழிகளில் வரலாம். அதில் இரண்டு ரயில்வே சிக்னல் கேட்டு வழிகள். ஒன்று நுழைவுப் பால வழி. வெள்ள நாட்களில் நுழைவுப் பால வழி நீரால் மூழ்கியிருக்கும். அந்த நாட்களில் இரயில் கேட்டு வழியைத்தான் மக்கள் நம்பியிருப்பர். சரியாக, ஏதோ அவசர வேலையாக செல்லும்போதுதான் ரயில்வே கேட்டுகள் வீம்பு காட்டி மூடி நிற்கும். ரேஷன் கடைகளில், வங்கிகளில், மருத்துவமனைகளில் காத்து நிற்பதைப் போலவே கொடுமுடிக்காரர்கள் ரயில்வே கேட்களில் காத்து நிற்பர். இந்த வரிசைகள் கேட் திறக்கும் நேரம் "கள்சைவரி" ஆகிவிடும். அது என்ன கள்சைவரி என்று கேட்கிறீர்களா?

கள்சைவரி


உரசிக்கொள்கிறார்கள்

இடித்துக்கொள்கிறார்கள்

தள்ளிக்கொள்கிறார்கள்

வரிசைகள்


உரசிக்கொள்ளாதீர்கள்

இடித்துக்கொள்ளாதீர்கள்

தள்ளிக்கொள்ளாதீர்கள்

வரிசைகள்


கடைசி ரேஷன் தாள்

கடைசி திரையரங்க டிக்கெட்

கடைசி நுழைவுச் சீட்டு

கள்சைவரி

அப்படி ரயில்வே கேட்டுகளில் காத்திருந்த பொழுதுகள் ஏராளம். ரயில்வே கேட் மூடும்போதும், திறக்கும்போதும் அதிக தடவைகள் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு சினிமா இயக்குநர் கிளிப் தட்டுவது போல இருக்கும். மூடிய ரயில்வே கேட்டின் இன்னொரு புறத்தில் சினிமா சூட்டிங் நடக்குது போல என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டதுண்டு.

மூடிய ரயில்வே கேட்டில் ரயில் வருவதற்குள் நடப்பவர்கள் அங்குமிங்கும் நடந்து கடந்து விடுவார்கள். அப்படி கடப்பவர்களை பார்க்கும்போது ரயில் திடீரென வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் ஏனோ மனம் அவர்களுக்காக ரகசிய பிரார்த்தனையை என்னிடம் சொல்லாமலேயே செய்ய ஆரம்பிக்கும்.(கடப்பவர்களுக்கு தெரியும் தான், இருந்தும் ஏனோ மனது கிடந்து அடித்துக் கொள்ளும்). அப்படி கடப்பவர்களை தொடர்ந்து பார்த்து வரும்போது அவர்கள் யாரையோ ஏமாற்றிவிட்டு குடுகுடுவென குழந்தைச் சிரிப்புடன் ஓடுகிறார்கள் என்று ஒரு நாள் தோன்றியது. யாரை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்? அதைக் கண்டறிய இந்தக் கவிதையை எழுதிப் பார்த்தேன்.

மூடிய ரயில்வே கேட்டில்

இன்னும் ரயில் வரவில்லை

அதற்குள் நடப்பவர்கள்

அங்குமிங்கும்

நடந்து விடுகிறார்கள்

துயிலும் மரணத்தை எழுப்பாமல்

வாழ்வைத் திருடும் திருடர்கள் போல

வாகனத்தில்

அமர்ந்திருக்கும் எனக்கு

க்ராசிங்கின் 

இரண்டு பக்கமும்

வாழ்வுள்ளது

இருந்தும்

ஒரு பேராசையில்

வாகனத்தை பூட்டிவிட்டு

வாழ்வை கொஞ்சம்

திருடிவிட்டு வருகிறேன்

இது முன் எப்போதோ எழுதிய கவிதை. தொகுப்பில் இடம்பெறவில்லை. இப்போது இதை வாசிக்கும் கணம் சமீபத்தில் ரயில் க்ராசிங்கில் இறந்த இரண்டு சிறார்கள் நினைவில் வந்து போகிறார்கள். 

வாழ்வைத் திருடும் திருடர்களை வாழ்வு திருடாதிருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (9) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (216) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (9) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (216) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive