கவிதை புரிதல் - கவிஞர் அபி

 1.   புரியாதவைகளும், இனிப்புரிய இருப்பவைகளும் தான் நிரந்தமாக மிக அதிகமாக நம்மை எதிர்கொள்கின்றன என்ற எளிய உண்மையை முன்வைத்துத் தொடங்கலாம். கருத் தோட்டங்களையும் பார்வைகளையும் மாற்றி மாற்றி வைத்து நடைபெறுகின்ற அலகிலா விளையாட்டு மைதானத்தில் கவிதைக்கென்று இருக்கின்ற ஒரு மூலையில் பிரவேசிக்கலாம். இருளும் மர்மமும் கிளர்ச்சியும் இன்பமும் மனிதனை உருமாற்றும் மந்திரமும் அடங்கிய மூலை.

2.    இன்றைய கவிதைகளில் சில அல்லது பல புரியவில்லை என்பது பெரிதாகச் சொல்லப்படும் குறை. கவிதை மட்டுமா புரியவில்லை, வசனத்திலும் புரிந்துகொள்ள முடியாதவை இருக்கின்றன. உலக இலக்கிய வகை அனைத்திலும் புரிந்துகொள்ள முடியாத படைப்புகள் நிறையவே இருக்கின்றன. இன்றைய கவிதை மட்டுமன்று, பழங்கவிதைகளிலும் புரிந்துகொள்ள முடியாதவைகள் இருக்கின்றன. “திருமந்திரம்” புரிகிறதா? யோக தத்துவ விளக்கங்கள் கிடைத்தால் புரிந்துகொள்ள முடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வாழ்வின் மிக இயல்பான பகுதிகளைத்தான் சொல்கிறது சங்க இலக்கியம், புரிகிறதா? திணை, துறை, கொளு என்னும் மரபு இலக்கணம். உரைகள் இவற்றின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. அந்த உரைகளும் கூடக் கவிதையில் உள்ள கருத்துக்களை அடைய மட்டுமே வழிகாட்டுகின்றன. கவிதையை அடைய வழிகாட்டுவதில்லை. பிரிவின் தனிமைத் துயரைத் தாங்கிக் கொள்ள முடியாத குறுந்தொகைத் தலைவி தன் தவிப்பை வெளிபடுத்த “நள்ளென்றன்றே யாமம்” தொடங்குகிறாள். உரையாசிரியர், “யாமம் நள் என்னும் ஓசையை உடையதாயிருக்கிறது” என்று பொழிப்புரை சொல்லி நகர்கிறார். வாசிப்பவனும் புரிந்துகொண்டு விட்டது போல அடுத்தடுத்த வரிகளில் ஓடிக் கவிதையைக் கடந்து விடுகிறான். நள்ளிரவுப் பொழுதும், தனித்த மனமும் ஒன்றினுள் ஒன்றாகக் கலவையாகிவிட்ட ரசாயனத்தைக் கவிஞன் பார்த்திருக்கிறான். பொழுது அவளுக்குள் நுழைந்துவிட்டது. மனசு வெளியேறி வியாபகமாகி இருளில் துழாவுகிறது. இன்னதென்று புரியாத மனஓசை, இன்னதென்று புரியாத இருள் ஓசையாகிவிட்டதை எத்தனை பேர் அனுபவத்தில் உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். அர்த்த வரம்புக்கு உட்பட்ட சொல்லால் சூழலின் தகிப்பைச் சொல்ல முடியாது எனக்கண்டு அர்த்தமற்ற “நள்” என்னும் இடைச்சொல்லின் மூலம் கவிதையைச் சாதித்த கவிஞனை எத்தனைபேர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

3.    எந்தக் காலம் என்று இல்லை; எல்லாக் காலத்திலும் புரிந்துகொள்ளக் கடினமான கவிதைகள் இருந்தே தீரும். வாசிக்கிற எல்லாருமே கவிதைகளைப் புரிந்து கொண்டிருந்தார்கல் என்று சொல்லக்கூடிய காலம் ஒன்று இருக்கவும் முடியாது.

4.        நவீன இலக்கியம் கலை இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஒரு கண்டனமாகச் சொன்னவர்களுக்குச் சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் சூடாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். “ரோஜாவின் அர்த்தம் என்ன என்ற செடியைக் கேள்”, “உனக்கு Calculus புரியுமா?” இந்த பதில்களில் “நீ அர்த்தம் தேடும் முறை அபத்தமானது”, “முயற்சி பயிற்சிகளால் உன்னைத் தகுதிப் படுத்திக் கொள்”, “எவ்வளவு முயன்றும் படைப்பாளியின் உலகம் உனக்கு எட்டாதென்றால் நெருக்கம் நிகழக் காத்திரு. இல்லையேல் விட்டுவிடு” என்ற கண்டிப்புகள் இருந்தன.

5.   ‘புரிந்துகொள்ளுதல்’ என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சிலருக்குச் சில கவிதைகள் புரியும். இவை புரியாத வேறு சிலருக்கு இவர்களுக்குப் புரியாதது புரியும். கவிஞனோ, பதிப்பாளரோ தரும் அடிக்குறிப்புகள் முன்னுரைகள், விமர்சனங்கள் கவிஞனுடனான நேர்ப் பேச்சு இவையெல்லாம் கவிதையை ஓரளவு புரிந்துகொள்ளும் வாயில்கள் தாம். கவிஞனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளும் முயற்சியிலும் ஒரு சிக்கல் உண்டு. கவிதை எழுத்து வடிவில் வெளியாவதற்கு முன்பு கவிஞனின் மனசுக்குள் இருந்த கவிதைக்கும் வடிவு பெற்ற பிந்தைய கவிதைக்கும் இடையே விலகல் இருப்பதுகண்டு சஞ்சலத்தில் இருக்கும் கவிஞன் தனது அச்சு வடிவக் கவிதையை வேறு ஆள் பார்ப்பது போல்தான் பார்க்க நேர்கிறது. இந்தக் காரணத்தால்தான் நல்ல கவிஞர்கள்கூடத் தங்கள் கவிதைகளை விளக்க முடியாத தவிப்புக்கு உள்ளாகிறார்கள். காணப்படுவதனிலும் கூடக் காணமுடிந்தது கொஞ்சந்தான் என்பது கலைஞனின் அனுபவம். கு.ப.ராஜகோபாலனின் கவிதை வரி, “கண்கவர்வது காண்பதற்குக் குறைவுதான்” இதைத்தான் சொல்கிறது. இந்த அவதிகளால் கவிஞன் தரும் விளக்கம் மற்றவர்களுக்கோ, அவனுக்கோ பெரிதும் பயன்படும் என்று சொல்ல முடியாது. கவிதையைத் தவிர வேறு துணைத் தொடர்பு கிடைக்காதவர்கள், உடனடியாகப் புரியாவிட்டாலும் காலப் போக்கில் வாழ்வும், வாசிப்பு அனுபவங்களின் வழி பிறகு புரிந்து கொள்ள முடியும். பலநாள் புரியாதிருந்தது எந்தக் காரணமும் இல்லாமல் ஏதோ மின்வெட்டிச் சட்டென்று புரிந்து கொள்ளுதல் உண்டு.

6.    கவிதை சொற்களால் அமைவதே. அயினும் மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. கவிதை நிலையான ஒரே அர்த்தமுடையது என்ற கொள்கை புரண்டு போய்விட்டது. பல்வேறு அர்த்த விசிறல்களில் கவிஞன் என்ன அர்த்தம் கருதினான் என்பதே ஒரு புதிர்தான் என்கிறா வில்லியம் எம்ப்ஸன். உரையாசிரியர்கள் அவரவர்கள் கண்ட அர்த்தங்களைச் சொல்கிறார்கள். வாசகர் அனைவர்க்கும் சார்பாளனாக உரையாசிரியன் கவிதைக்குள் இயங்க முடியாது. உரைகள் காலத்தின் ஒருபகுதியில் முளையடித்துக் கவிதையைக் கட்டிப்போடுகின்றன. மொழி வேறு – கவிதை வேறு என்ற உண்மை புலப்படாததால் வந்தது இந்தக் குழப்பம். கவிஞன் மொழியின் சொற்களைக் கொண்டு கவிதையின் சொற்களை உருவாக்குகிறான். அந்த மொழி அர்த்த நிர்ணயங்களுக்கு முந்திய ஆதிமொழி. (ஆதி மனித மொழியல்ல; அர்த்தத்திற்குச் சிக்காதபடி அடியோட்டத்திலிருந்து அவ்வப்போது எழும்பிவரும் ஆதிமொழி) மனசுக்குள்ளிருந்து மனசுக்குள் வெளிக்காற்று படாமல் பாயத் தெரிந்த மொழி. மொழி மெல்லசைவுகளோடு மூச்சுவிஉம் அழகை அந்த ரூபத்தில்தான் காணலாம். சொல், இங்கே சொல்வதர்கும் சொல்லாதிருப்பதர்கும் பயன்படுவதாகிறது. பிரபஞ்சப் பேரியக்கத்தைச் சாட்சியாய் நின்ரு பார்த்த பாரதி, “உண்பது நன்று; உண்ணப்படுவதும் நன்று; அழித்தல் நன்று; அழிக்கப்படுவதும் நன்று” என்பதில் “அர்த்தம்” காணமுடியுமா? குறிப்பிட்ட அர்த்தம் தரும் சொற்கள் கூடக் கவிதையில் தமது அர்த்தங்களை இழந்து அசைச்சொல் போல் ஆகி த்வனிகளால் நிரம்பித் தெரிகின்றன. ஆக அர்த்த மதிப்பினால் அல்லாமல் அனுபவ மதிப்பினால் உயிர்த்திருப்பவை தாம் கவிதையின் அனுபவ மதிப்பை உணர்வது தான். லா.ச.ரா சொல்கிறார்: “காண்பதும் கண்டதில் இழைவதுமன்றிக் கவிதையில் புரியவேண்டியது என்ன இருக்கிறது?”

7.    ஒருவகையில் எதிலும் முழுமையான புரிதல் நிகழும் வாய்ப்பு உண்டா என்பது சிந்தனைக்குரியது. பிறரைப் புரிந்து கொள்கிறோமா? தன்னைப் புரிந்து கொள்ளுதல் வாய்க்கிறதா? பேச்சு, எழுத்து, மௌனம் எதன் மூலமாகவும் பூரணமான Communication சாத்தியமாவதில்லை. குறிப்பாகக் கவிதையின் Communication மேலும் சிக்கலானது. கவிதையில் ஒன்று மற்றொன்றாகவேதான் போய்ச் சேரும். இடம், காலம் கவிஞனுடைய – வாசகனுடைய மன அமைப்புகள் இவற்றுக்கேற்ப வேறு வேறு “மற்றொன்று” கவிஞனின் உணர்வு அப்படியே வாசகனுக்கு இடம் மாற்றப்படுகிறது என்பது தவறாகிப் போன பழைய நம்பிக்கை. ஆழ்ந்திருக்கும் கவியுளத்தை அது ஆழ்ந்திருக்கிறது என்ற அளவில் மட்டுமே காணலாம். அந்த ஆழம் எத்தகையது என்று கேட்டால் வாசகன் தனது ஆழத்துக்குப் போய், அதைத்தான் பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு வாசகனை அவனது ஆழத்துக்குள் செலுத்தவே கவிதை பயன்படுகிறது. கவிஞனின் கவிதை வாசகனுள்ளிருக்கும் கவிதையை எழுப்புகிறது. ஆகவே கவிதை மூலம் வாசகன் அடைவது அவனது சொந்த அனுபவமே. கவிதை மூலம் அவன் காண்பது அவனது கவிதையே. படிப்பே படைப்பு ஆகிவிடுகிறது. கவிதை புரிதல் என்பது இப்படிதான்.


“மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மன்வெளியும் நில்வொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உவகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒருசொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை
திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்தது
ஒருகணம் தான்
மறுகணாம்
லாரியின் இரைச்சல்
எதிரே காலி நாற்காலி”

பசுவய்யாவின் “வாழும் கணங்கள்” என்ற இந்தக் கவிதையில் ஒருகண நேர உன்னத அனுபவம் சொல்லப்படுகிறது என்பதில் வாசகர் அனைவருக்கும் ஒரே கருத்து இருக்கும். ஆனால் அது என்ன மாதிரி அனுபவம் என்பதில் ஒருவரும் இன்னொருவரும் ஒன்றுபடமுடியாது. அவரவர் சுயமாக உள்ளே தேடவேண்டியதாகிறது. இந்தத் தேடலில் தன்னுள் இருந்து தான் காணாதிருந்த “புதிய” வேறு தளங்களைத் தரிசனம் காண நேரலாம். மனவிரிவு நேரலாம். புலன்களைச் சம்பந்தப்படுத்தியே புலன்களைத் தாண்டிய அனுபவத்துக்கு அழைக்கிறது கவிதை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

8.    அடுத்து கவிதையை அணுகும் முயற்சி எப்போது அனுபவப்படுதலில் முடியும் என்ற கேள்வி. அறிவாளி, விமர்சகன், படைப்பாளி போன்றவர்கள் தங்களுள் இருக்கும் அறிவு-அனுபவத் தடைகள் தாண்டித்தான் வேறொன்றை அணுகமுடியும். வாசிப்பின் தொடக்கமே சிலருக்குச் சிரமம் தந்துவிடக்கூடும். கவிதையின் இருப்போ குழந்தைமைக்கு மிக அருகில்; அறியாமைக்கு மிக அருகில். பெரியவர்களுக்கு இல்லாத பாவனாசக்தி குழந்தைகளுக்கு உண்டு. ஸ்தூலம்-சூட்சுமம், உண்மை-கற்பனை என்று பேதப்படுத்திக் கொள்ளாத அறிவின் தீட்டுப்படாத சுத்த அறியாமையின் செல்வம் அவர்களுக்கு உண்டு. படைப்புச் செயலைக் குழந்தை விளையாட்டோடு இணைத்துப் பேசிய ஃபிராய்டை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதனால் வாசகன் கவிதையைச் சரியாகத் தொடவேண்டுமானால் தனது குழந்தைப் பருவத்துக்குத் திரும்புவது நல்லது. அழுக்கற்ற பிஞ்சு விரல்களால் தொடுவதுதான் கவிதையைப் புரிந்து கொள்வது.

9.    ஒவ்வொரு துறை அறிவும் அந்தந்தத் துறை வல்லுநர்களுக்குப் புரியும். அதுபோலக் கவிதையும் அந்தத் துறை வல்லுநர்களுக்குப் புரியும், வல்லுநரின் தகுதி என்ன? கவிதையிடம் தன்னைப் படிக்கக் கொடுத்துவிடும் கள்ளம் கபடமற்றா தூய எளிமைதான் (Innocence).

10.    இன்னுமொன்று, புரிந்து கொள்ளல் என்பது தீர்மானத்துக்கு வருதல் அன்று. அப்படியே தீர்மானம் ஏதாவது முண்டி எழுந்தால் அது நம்முடையது; கவிதையுடையது அன்று. ஏற்புக்கும் மறுப்புக்கும் இடைவெளியை முற்றிலும் அழித்துவிட்டு நிற்கிறது கவிதை. இதை உணர்தல் கவிதையை அனுபவப்படுதலாக விளையும். “ஆம் – இல்லை என்பவைகளைப் பிளவுபடாமல் வைத்துக்கொள் – keep yes and no unsplit” என்றான் ஒரு கவிஞன்.

11.    கவிதை முடிவடைவதில்லை; காலவெளியில் நீண்டு தொடர்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஞ்ஞானம் இன்று காலாவதியாகிய போதும். சங்கக் கவிதை இப்போதும் நம் வாழ்வியலுடன் தொடர்புகொண்டு இமைத்துக் கொண்டும் உயிர்த்துக் கொண்டும் இருக்கிறது. அதனால் கவிதைக்கும் அதன் புரிதலுக்கும் காலவரம்பு கிடையாது. அன்றன்றைய புரிதலை கவிதை அனுமதிக்கிறது.

12.    ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கவிதை பெயரும் போது, வெவ்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும்போது புரிந்துகொள்ள முடியாமை என்பது அதிக அளவில் இருக்கும். ஜெர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஒருவர் தாம் மொழிபெயர்த்தவைகளில் பல கவிதைகள் தமக்குப் புரியவில்லை என்றார். அதாவது, மொழிபூர்வமான ”அர்த்தம்” புரியவில்லை. அர்த்தம் தாண்டிய அனுபவத் தூண்டுதல் அர்த்தம் தாண்டிய ஒன்றாக மொழிபெயர்ப்பாகியிருக்கிறது.

13.    எல்லாரும் வாழும் வெளிச்ச உலகில், பருப்பொருள்களில் சூழலில், பொதுவான கலாச்சாரப் பின்னணியில் தான் கவிஞனும் வாழ்கிறான். ஆனால் அவனது படைப்புலகம் தனியானதொரு அருவ உலகமாக இருக்கிறது. இதேமாதிரித் தனித் தன்மையான மன அமைப்பைக் கொண்ட வசனப் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். கவிதையில் காணுமளவு இருண்மை அந்த வசனப் படைப்புகளில் காண்பதில்லை. நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், உரையாடல், பின்னணிக் களங்கள் என்று பருப்பொருள் உலகிடையே இயங்குவதால் அந்தப் படைப்பாளிகளை – படைப்புக்களைப் புரிந்து கொள்வது சாத்தியமாகிறது. “கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயா?” என்று பேசும் லா.ச.ரா வின் கதாநாயகனின் உணர்வுகள் கதை முழுதும் விரவியிருப்பதைக் கொண்டு இந்தப் பேச்சின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. “வெற்று வெளியில் உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள்” என்று மௌனி எழுதும்போது கதையின் சூழலில் சுசிலாவின் அருவத்தை அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது.

14.    கவிஞனுக்குக் கவிதைக்குள் இந்த மாதிரி வசதிகள் இல்லை. அருவத்தை அருவமாகவே காட்டும் கலையை முதலில் ஏற்றுக் கொண்டால் தான், புரிந்துகொள்ள முயலமுடியும். கவிஞன் வேண்டுமென்றே பருப்பொருள் உலகைத் துறந்திருக்கிறான். அவன் கவிதை, வாழ்வைப் புறக்கணிக்கிறது. வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது வாழ்க்கையை ஏதோ சட்டைப்பைப் பொருளாக நினைத்துக் கொள்கிறவர்களின் கூற்று. மார்க்சிய விமர்சகரான ஞானி, “கவிதை எல்லோருக்கும் புரிகிறமாதிரிதான் இருந்து தீர வேண்டியதில்லை புரிதலுக்கான முயற்சியை உயர் அளவில் செய்தால்தான் மார்க்சியம் புரிகிறமாதிரி, கவிதை, இலக்கியம், நவீன ஓவியம், கர்நாடக சங்கீதம், மேல்நாட்டு இசை முதலியவையும் புரியும்.” என்று இத்தகைய கவிதைகளுக்கு ஆதரவாக வாதாடியிருப்பதைக் குறிப்பிட வேண்டும். மார்க்சியப் புரட்சிக் கவிஞரான பாப்லோ நெரூடாவின் “சாவு-தனியாக” என்ற கவிதை வழக்கமான புரிதல் முறைக்கு உட்படுமா என்று பார்க்கலாம்.


“எலும்புகளுள் இருக்கிறது மரணம்
ஒரு தூய ஓசைபோல்
தனதுநாய் இல்லாத ஊளைபோல்
சவப்பெட்டிகள் செங்குத்தான மரண ஆற்றில் ஏறிச் செல்கின்றன
கல்பதிக்காத விரலுமில்லாத ஒரு மோதிரம் போல்
கதவைத்தட்ட வருகிறது
எனக்குத் தெரியாது எனினும் அதன்பாடல் ஈர
வயலட் பூக்களின் நிறம்தான் என எனக்குத் தோன்றுகிறது
சாவின் முகமும் பச்சை நிறம்
அதன் வெறிப்பும் பச்சை நிறம்”


இந்தக் கவிதை சாவைக் குறிக்கிறது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. “தூய ஓசை”, “நாய் இல்லாத ஊளை”, “கதவைத் தட்டும் மோதிரம்” என்ற படிமங்கள் மரணம், கவிஞனுக்கு அனுபவமான விதத்தைத்தான் குறிக்கின்றன. சாவின் பாடல் ஈரவயலட் பூவின் நிறமுடையது என்பதையும், சாவின் நிறம் பச்சை என்பதையும் நெரூடாவின் உள்மனம் கண்டு சொல்கிறது. மரணம் நம்முள் இதே படிமங்களை கருத்தமைவுகளைத்தான் எழுப்ப வேண்டுமென்பதில்லை. ஆனால் சாவுக்கு ஓசையும் பாட்டும், நிறமும் உண்டு என்பதை நமக்குள் உணர்ந்து ஏற்கிற மனோபாவத்தை இக்கவிதை ஏற்படுத்திவிடுகிறது. “நமது புரிதல்” நிகழ்கிறது.

தொடரும்…

(நன்றி தீராநதி - இதழ் ஆகஸ்ட் 2004)


***

கவிஞர் அபி தமிழ்.விக்கி பக்கம்


Share:

சுகுமாரன் கவிதைகள் - பாலாஜி ப்ருத்விராஜ்

கவிதைக்கேயுரிய விந்தை ஒன்றுண்டு. அது எந்த அளவு கூறுமுறையில் புறவயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வாசிப்பில் அந்தரங்கத் தன்மை கொள்கிறது. விலக விலக நெருங்கும் கண்ணாடி பிம்பம் போல நிகழ்வது கவிதைச் செயல்பாடு. கீழே உள்ள சுகுமாரன் கவிதை அப்படியான ஒன்று. இதன் மையப்பேசுபொருளின் நுண்மை விளக்கமுடியாதது. ஆனால் அதை எந்த மயக்கமும் அற்ற எளிய நேரடி சொற்களால் சென்று கவிஞர் தொடுகிறார். அதன் மூலம் அந்த நுண்மையை நாம் உணர்கிறோம்.

எந்த ஆர்ப்பாட்டமும் அற்ற சாதாரணச் சூழலில் ஒரு சிறப்புத் தருணம் நிகழ்கிறது. சட்டென நம்  வாழ்வில் தோன்றும் பொற்பாதங்களை நாம் காண்கிறோம். அன்று செவ்வாய்க்கு மறு நாளாக இருந்தாலும் அது புதன்கிழமையாக இருப்பதில்லை. அந்த எழுச்சியை ததும்பலை இக்கவிதை முதல் வாசிப்பில் நமக்கு ஏற்படுத்திகிறது. ஆனால் அடுத்தடுத்த வாசிப்பில் மேலுமொரு அடுக்கை கண்டுகொள்கிற்றோம். உண்மையில் அந்த பொற்கணம் நிகழ அப்படியான சூழல் வேண்டிருக்கிறது. நம் வீடு லௌகீக வருகையாளர்கள் இன்றி காலியாக இருக்கவேண்டியுள்ளது. நம் வீட்டைச் சுற்றி நீலவால் குருவியும் தேன்சிட்டும் உரிமையோடு பிராது சொல்லும் இடத்தில் தான் அந்த பாதம் காலெடுத்து வைக்கிறது. 

***

செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல

வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ
உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ
எப்போதாவது யாராவது வருவார்கள்
என்பதைத் தவிர்த்தால்
வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர
வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு

அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும்
அபூர்வமாக நுழைவதுண்டு

விடிந்ததும் காற்றின் வெளிச்சம்
வீட்டைப் பிரியாத பூனையின் காதலன்
காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி
முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று
விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி
தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று
பிராது சொல்லும் தேன்சிட்டு
மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை
அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக்
கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு
இவையெல்லாம் தற்செயல் வருகைகள்

இன்று
வெய்யிலின் இளநீர் வாசனையோடு
கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும்
நட்டநடுப் பகலில்
மூடிய கதவைக் கடந்து
யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன்
கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன்
யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை
எனினும் யாரோ வந்து
வீடு முழுவதும்
ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய்
தாழிட்ட கதவுக்கு இப்பால்
வாசல் நிலையருகில் தரையில்
ஒரு ஜோடிக் காற்சுவடுகள்
ஆரஞ்சு ஒளியுடன்
விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன்

அப்போது முதல்தான்
இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில்
ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன்
அன்று
செவ்வாய்க்கு மறு நாள், ஆனால்
புதன்கிழமை அல்ல.

- சுகுமாரன்

***

முந்தைய கவிதைக்கு நேரெதிரான தருணத்தை பேசுகிறது இக்கவிதை. உள் நுழைதல் முதல் கவிதையென்றால் வெளியேறுதால் இரண்டாவது கவிதை. அனால் ஒரு நுட்பமான வேறுபாட்டை நாம் பார்க்க முடிகிறது. இந்த இரண்டாவது கவிதை முழுவதும் இறந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அனைத்து இழப்புகளும் அதை நீங்கிய பின்னான நினைவுகூறுதல் மூலமே பேருருவம் கொள்கிறது. வீட்டில் இருக்கும் போது பறவையாக இருந்த ஒன்று வெளியேறிய பின் கானகமாக மாறும் விசித்திரத்தை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. அந்தப் பறவையின் அபூர்வத்தை அது பறந்து சென்ற பின் தான் உணர்கிறோம்.

சுகுமாரனின் புகழ்பெற்ற கவிதைகள் அனைத்தும் தனது வார்த்தை கணத்தால் அர்த்தச் செறிவுகளால் எடை கொண்டிருப்பது. தீவிரத்தையும் அவரது கவிதையையும் பிரிக்க முடியாதது. ஆனால் இக்கவிதைகள் முற்றிலும் வேறுவகையாக நிகழ்கின்றன.  இவற்றின் எடையின்மையால் அழகு கொண்டிருக்கிறன. ஒரு சொல்லாட்சி உண்டு. இறுகிய பனிகட்டிதான் உருகும் போது மிகத்தெளிந்த நீரைத் தரும். அப்படியான கவிமனத்தின் உருகுதல் தான் இவ்விரண்டு கவிதைகளும். அதுவே இக்கவிதைகளை மேலும் கூர்ந்து வாசிக்கச் செய்கிறது.

***

அறைவனம்

பிறகு விசாரித்தபோது தெரியவந்தது:
‘அது கானகப் பறவையாம்
அடிக்கடி தென்படாதாம்
அபூர்வமாம்’

எப்படியோ
அறைக்குள் வந்து சிறகு விரித்தது

அலமாரியில் தொற்றி
அது யோசித்த போது
புத்தகங்கள் மக்கி மரங்கள் தழைத்தன

நீர்ப்பானை மேல் அமர்ந்து
சிறகு உலர்த்தியபோது
ஊற்றுப் பெருகி காட்டாறு புரண்டது

ஜன்னல் திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள் கரைந்து காற்றுவெளி படர்ந்தது

நேர்க்கோடாய் எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்த்து வானம் விரிந்தது.

அறையைப் பறவை
அந்நியமாய் உணர்ந்ததோ
பறவையை அறை
ஆக்கிரமிப்பாய் நினைத்ததோ?

என்னவோ நடந்த ஏதோ நொடியில்
வந்த வழியே பறவை பறந்தது பறவை

அது
திரும்பிய வழியே திரும்பிப் போனது
அதுவரை அறைக்குள்
வாழ்ந்த கானகம்.

- சுகுமாரன்

***

Share:

லட்சுமி மணிவண்ணன் கவிதைகள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

யதார்த்தமான வாழ்க்கை தருணங்களை கவிதை வரிகளில் வாசிக்கும் போது நமக்கு ஒரு துணுக்குறல் ஏற்படும். அந்த அதிர்ச்சியில் இருந்தே அந்த கவிதை நம் மனதில் நீட்டித்துக் கொண்டிருக்கும்.

என் அப்பா தன் இருபதாவது வயதில் வியாபாரம் தொடங்கினார். அறுபது வரை வியாபாரம் செய்துக் கொண்டேயிருந்தார். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு தொழில்கள் ஒவ்வொன்றும் தோல்வியடைய ஒவ்வொரு காரணங்கள் காரியங்கள். அதற்கு மேலும் தொழில் முறை சோசியராக இருந்தார். இவர் ஜோசியம் பார்த்து தொடங்கிய தொழில் எதுவும் வெற்றிக் கூடவில்லை. ஆனால் அப்பாவிடம் ஜோசியம் கேட்டவர்கள் யாரும் இதுவரை சோடைப் போகவில்லை.

நம்மில் பலர் இத்தகைய தருணத்தை கடந்துவந்திருக்க கூடும். அத்தனை பேரும் இத்தகைய தருணத்தை கடந்த பின்பும் ஒவ்வொரு முறையும் இதிலுள்ள புதிர் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டேயிருக்கிறது. லட்சுமி மணிவண்ணன் இந்த கவிதை வாசித்த போதும் அதே புதிரின் அதிர்ச்சி.

***

தங்கம்மை ஹோட்டல்
என பெயர் வைத்ததால்
தப்பித்தான்
என்கிறார்
அதன் பக்கத்தில்
ஹோட்டல் வைத்து அழிந்தவர்
இருபது
வருடங்களுக்குப் பிறகு

***

ஆண் பெண் அல்லது கணவன் மனைவி உறவில் உள்ள மர்மம் என்பது அது முற்றிலும் அறிய முடியாது என்பது தான். அறிய அறிய அதில் மர்மம் கூடிக் கொண்டே போகும். ஆனால் காலம் தோறும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அதனை அறிய முற்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு துளி புரிதலை அடைந்துவிட முடியும் என்று. இந்த கவிதை கணவன் மனைவி உறவின் ஐம்பது/அறுபது ஆண்டு சுழற்சியைப் பற்றி பேசுகிறது. அதன் மர்மம் கரைந்து கரைந்து எழுவது போல் எழுந்து எழுந்து கரைகிறது. அந்த சுவர் எந்த மாற்றமும் இன்றி வேறொரு இடத்தில் மீண்டும் அலங்கரிக்க தொடங்குகிறது.

***

அவளுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு

அவனை அழித்துக் கொண்டான்

அவனுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு

அவளும் அழித்துக் கொண்டாள்


ஒவ்வொரு நாளாக வாழ்ந்து இருவரும் 

இதனை சாதித்துக் கொண்டார்கள்

ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக

அழித்து இப்படி வந்து சேர்ந்தார்கள்

ஐம்பது ஆண்டுகள் ஓடிற்று


அழித்து முடித்த பின் அரவணைத்து நிற்கிறார்கள்

தன்னை அழித்து உருவான

சுவர்

தன்னை அழித்து கரைந்த சுவரும்

கூட


இப்படித்தான் கரையக் கரைய

எழும்பிய இந்த சுவர்

எழும்ப எழும்பக்

கரைந்தது

***

லட்சுமி மணிவண்ணன் விக்கி பக்கம்

Share:

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்

சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளுள் மிக முக்கியமான கவிதை இது. முழுக்க முழுக்க படிமங்களால் கட்டமைக்கப்பட்ட கவிதையின் ஆழத்தில் இருப்பது இருத்தலியலின் துயரம். காமமும், தனிமையுமான புற்றில் காத்திருக்கும் நம் காத்திருப்பின் பாம்புகளுக்கு ஒவ்வொரு நாளும் நம்மையே உணவாக்கி இறந்து, மீண்டும் எறும்பாக மறு பிறப்பெடுத்து ஓயாது உழைத்து அப்புற்றுகளை கட்டுகிறோம். அந்த புற்றுகளுக்குள் மீண்டும் காத்திருப்பின் பாம்புகள் குடிபுகுந்துவிடும் என்று தெரிந்தும் அந்த புற்றிற்குள் வைத்து ஒரு சீனிப்பறலை உண்டுவிட முயன்று மறிக்கிறோம். பசி, மறு பிறப்பு, காமம், காத்திருப்பு, உண்பவை, உண்ணப்படுபவை என்று அனைத்துமே கவிதையில் மாறிக் கொண்டே இருக்கின்றன. எஞ்சுவதோ ஒரு அபத்த நாடகம்தான். முற்பிறவியில் நம் பாம்புகளுக்கு உணவான நாம் மறுபிறவியில் பாம்பாகவில்லை. மாறாக சீனிப்பறல்களை சேமிக்க புற்று கட்டும் எறும்பாகிறோம். 

***

உன் எறும்புகள் இறந்துகொண்டிருக்கின்றன

தனிமையும் காமமும் புற்றென

வளர்ந்துகிடந்தது

புற்றிலுள்ள

காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண

உன்னையே புற்றுக்குள் திணித்தாய்

பாதி உள் நுழைந்தும்

பாதி பிதுங்கியும்

விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி

மூச்சுத்திணறி இறந்தும் போனாய்

சாக்லேட்டை உண்பதுபோல

உன்னை உண்டன எறும்புகள்

பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை

இந்தப் பிறவியில்தான்

நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்

ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த

உன் எறும்புகள்

நிச்சயமின்மையின் மழையில்

இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன‌

சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை

புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்

***


மோசமான நியாபகம் பனியென இறங்குகையில் இலையெனத் துடிக்கும் உடல்கள் நம்முடையவை. அவற்றிற்கான இனிய இந்த நொடியின் கதகதப்பை தீயிட்டுக் கொளுத்தி குளிர் காய்கிறது உலகம். இந்த நொடியின் விடுதலையை அடைந்துவிட போராடும் அவ்வுடல்களை தீர்வுகளின் எதிர்காலமும் மீண்டும் நிகழும் கடந்த காலமும் சிறை வைக்கின்றன. எது விடுதலை என்று தேடிக் கண்டடைந்து பிரிக்க முடியாத அதன் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கையில் அந்த பணியோ கருணையின்றி வதைக்கிறது. அந்த விடுபடலை அடைவது அத்தனை சுலபம் இல்லையே. அனைத்திற்கும் தீர்வுண்டு என்று போதிக்கும் ஞானிகளிடம், எதற்கும் தீர்வு தேவையில்லை, என் விடுதலையின் முடிச்சுகளுக்கும், என்று எப்படிச் சொல்வது. எல்லாம் திரும்ப நிகழ்வது என்று கூறும் ஞானிகளிடம் எல்லாம் திரும்ப நிகழ்வதென்றால் அவற்றுக்கான தீர்வுகள் ஞானிகளிடம் ஏற்கனவே இருக்கிறதே பின்பு இந்த நொடிக்கு என்ன பொருள்? என்று எப்படிக் கூறுவது. நிகழ்காலம் மட்டுமல்ல கடந்த காலமும் காலாதீதமானதுதான். கூடவே இரக்கமற்றது.

***

இலை நடுங்கும் பனி

மோசமான ஞாபகம் மாதிரி

பனி இறங்குகிறது

இலைகளும் வீடற்ற உடல்களும்

குளிரால் துடித்தன

சகலத்திற்கும் தீர்வுண்டு என

அறிவித்தார்கள்

ஞானிகள்

அறிவுஜீவிகள்

கூடவே

எல்லாம் திரும்ப நிகழ்பவை

என்பதும் வாதத்தில் சேர்க்கப்பட்டது

முன்னர் நிகழ்ந்தவற்றிற்கே

ஒரு நியாயமும் இதுவரை இல்லை

என்றது இன்னொரு தரப்பு

புலப்படா சுழலில்

யாருக்கும் புரியாத மொழியில்

நாங்கள் விடுதலையின்

முடிச்சுகளை அவிழ்த்து அவிழ்த்து தோற்றோம்

இலைகளும் உடல்களும்

பனியில் நடுங்கியடி இருந்தன

***


Share:

பாபு பிருத்விராஜ் கவிதைகள் - மதார்

அறைக்கு திரும்பும் ஓவியர் வான்கா தனது காலணிகளை ஓவியமாகத் தீட்டும் ஒரு காட்சி eternity's gate திரைப்படத்தில் வரும். இந்த காட்சியை பார்த்ததும்  நட்ஹாம்சனின் 'பசி' நாவலின் நாயகன் என் நினைவுக்கு வந்தான். அவன் தான் வான்காவாக அந்த காலணியை வரைகிறான் என்று உள்மனம் சொன்னது. பசிக்கும் ஓவியத்துக்கும் என்ன தொடர்பு?

ஒருவேளை இப்போது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்தால் வான்காவை மனதில் நிறுத்தித்தான் அதைச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. "பசியின் நிறம்" என்ற தலைப்பு இந்தக் கவிதையை முழுமையாக்குகிறது. பாபு பிரித்விராஜின் தூரிகை வான்காவின் தூரிகையாக, நட்ஹாம்சனின் தூரிகையாக ஆகிறது.

***

பசியின் நிறம்

சுற்றிலும் நிறைந்து வழியும்
வண்ணக்கோப்பைகள்
பொழுதை ஒருவாறு
தீட்டிக் கொண்டிருந்தேன்
உச்சிப்பொழுது
மெல்ல மெல்ல,
கருமை கொண்டது.
மயக்கத்தில் லேசாக
துலங்கியது
ஓவியம்.

*** 

'நிலா பார்த்தல்' என்ற தலைப்பை முதன்முதலில் வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு அது. எனக்கு பிடித்த கவிதை தொகுப்புகளின் தலைப்புகளில் அதுவும் ஒன்று. இதை விட நேரடியாக, அழகாக ஒரு கவிதைத் தொகுப்புக்கு தலைப்பிட முடியாது. 'நிலா பார்த்தல்'. நிலா பார்த்தலுக்கு நிகரானது கடல் பார்த்தல். பாபு பிரித்விராஜின் இந்தக் கவிதையில் ஒரு வரி வருகிறது.

"ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்" 

இப்போது யோசித்தால் அலை என்பது வேறொன்றாவதை கவனிக்கலாம். பாபு பிரித்விராஜின் 'இம்மொழி பெருங்கூடு' தொகுப்பில் கடல் பற்றியும் பறவைகள் பற்றியும் நிறைய கவிதைகள் வருகின்றன. அதில் இது அழகான ஒன்று.

***

அலைகளில்
மிதந்து வரும்
சிறு மேகத்துண்டென
மூழ்காத
தன்னிழலை
சிறகமர்த்தி
காப்பாற்றியது
அப்பறவை

ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்

***

 

Share:
Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive